மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 16 ஆகஸ்ட், 2014தொடர்கதை: கலையாத கனவுகள்

முந்தைய பதிவுகளைப் படிக்க... 74. திடுக்... திடுக்.. நிமிடம்

முன்கதைச் சுருக்கம்

கிராமத்து ஏழைக் குடும்பத்துப் பையனான ராம்கி, கல்லூரி ரவுடி வைரவனின் தங்கை புவனாவைக் காதலிக்கிறான். சில காரணங்கள் இவர்களது காதல் வெளிச்சத்துக்கு வர இரண்டு பக்கமும் பிடி இறுகுகிறது. நாட்கள் நகர நகர ராம்கியின் அம்மா கொஞ்சம் இறங்கி வருகிறாள். புவனாவுக்கு அது கொஞ்சம் சந்தோஷத்தைக் கொடுத்தது. நாட்கள் நகர... தங்களது காதல் குறித்து வைரவனிடம் சொல்கிறாள். காதல் விவகாரம் பூதகரமாக ஒவ்வொரு பக்கமும் கிளம்ப, ஒவ்வொருத்தரும் ஒவ்வொருவிதமாக சிந்திக்க இருவரும் யாருக்கும் தெரியாமல் கிளம்பும் முடிவை நண்பர்களுடன் எடுக்க, புவனாவின் அப்பாவோ மாப்பிள்ளை வீட்டை அழைக்க முடிவு செய்தார்.

இனி...

திர் முனையில் வைரவன் பேசியதும் "மாப்ள எல்லாம் ரெடிடா... அந்த சேவியரும் ராம்கிப்பயலும் தங்கியிருக்கிற அட்ரஸ் எல்லாம் கலெக்ட் பண்ணிட்டேன். ரெண்டு நாள்ல நம்ம பையன் ஒருத்தன் ஆளை அடையாளம் காட்ட திருப்பூர் போறான். ஆளைக் காட்டிட்டாப் போதும்... காணாப் பொணமா ஆக்கிடுவானுங்களாம். இப்பச் சந்தோஷம்தானே...."

"ம்..."

"என்னடா சுரத்தில்லாம ம்ன்னு மட்டும் சொல்றே... எம்புட்டு வேலை பாத்திருக்கேன் தெரியுமா? எல்லாம் புவனாவுக்காகத்தான்டா... எப்போ நிச்சயதார்த்தம் வச்சிக்கலாம்ன்னு யோசிச்சு வை... இந்த வாரத்துக்குள்ள அவனை பரலோகம் அனுப்புன சந்தோஷத்தை உன்னோட கிராண்டா பகிர்ந்துக்கிறேன்..."

"இல்ல மாப்ள அது வந்து..."

"என்னடா இழுக்கிறே..?"

"இல்ல... புவனா உனக்குத்தான்... அதுல மாற்றமில்லை... அந்தப்பய முன்னாடி எனக்கொரு உதவி செஞ்சிருக்கான். அவனோட உசிரை எடுக்கணுமான்னு யோசிக்கிறேன். "

"என்னடா.... ஏற்பாடு பண்ணினதுக்கு அப்புறம் இப்படி பேசுறே... வீட்ல எதாவது பிரச்சினையா?"

"சீச்சீ... அதெல்லாம் இல்ல.... புவனாவை உனக்கு கட்டி வைக்கிறது என்னோட பொறுப்பு... கொஞ்சம் பொறு... அவனை மிரட்டி விட்டுடலாம்... உயிரை எல்லாம் எடுக்க வேண்டாம்... "

"இல்லடா... இனி... அதை தடுக்கிறதுக்கு... போட்டுட்டுப் போயிக்கிட்டே இருக்கலாம்..."

"இங்க பாரு இளங்கோ... உங்கிட்ட நாந்தான் போடச் சொன்னேன்... இப்ப நாந்தான் வேண்டான்னு சொல்றேன்... நாஞ் சொன்னதை செஞ்சியன்னா உனக்கும் புவனாவுக்கும் நான் கல்யாணம் பண்ண ஏற்பாடு பண்ணுறேன்... அதைவிட்டுட்டு போடுவேன்... வெட்டுவேன்னு சொன்னியன்னா எனக்கும் ஆள் இருக்கு... அம்புட்டுத்தான் சொல்வேன்..."

"இப்ப என்னங்கிறே... அவனை ஒண்ணுஞ் செய்ய வேண்டாம் அம்புட்டுத்தானே... அட்வான்ஸ் கொடுத்த காசு போகும்... சரி விடு... விட்டுடுறேன்..."

"நீ எம்புட்டு செலவழிச்சியோ அதை நாந்தாரேன்... ஆனா இனி ராம்கி பக்கம் தலை வச்சிக் கூடப் படுக்காதே..."

"சரிடா... கல்யாண விஷயம் சீக்கிரம் பேசுடா..."

"அதை நான் பாத்துக்கிறேன்..."

"ம்..." என்றபடி போனை வைத்த இளங்கோ தனது நண்பனிடம், "சே... அன்னைக்கு போடுடான்னு சொன்னான்... இன்னைக்கு வேண்டாங்கிறான்..."

"வைரவன் இப்ப போட வேண்டான்னு சொன்னானா.... இதைத்தானேடா நானும் உங்கிட்ட சொன்னேன்... ஒரு உயிரை எடுக்கிறது பாவமில்லையா... உனக்கென்ன புவனா வேணும்... அதான் அவன் பாத்துப்பேன்னு சொல்லுறானுல்ல... விடு... "

"என்ன எக்கேடு கெட்டாலும் புவனா எனக்கு வேணும்... அதுக்காகத்தான் இப்ப இதை நிப்பாட்டப் போறேன்... ஆனா வைரவன் என்னை ஏமாத்தப் பார்த்தா அவனுக்கு நாந்தான்டா எமன்..." என்று கத்தினான்.

தே நேரம்...

"இப்ப சந்தோஷமா... அந்தப் பையனுக்கு இனி ஒண்ணும் ஆகாது..."

"நான் சொன்னதுக்காக போன் பண்ணி நிப்பாட்டிட்டே... சந்தோஷம்... ஆனா உன்னைய கொல்ல ஆள் அனுப்புனவனை வச்சி காப்பாத்துனவனைக் கொல்லச் சொல்லியிருக்கே.... ரவுடிப்பயலுக்கு உந்தங்கச்சிய கட்டித்தாரேன்னு சொல்லியிருக்கே... ஏன்டா... உனக்குள்ள இவ்வளவு கொடூரமான குணம் எங்க இருந்துடா வந்துச்சு... உங்கப்பன் காட்டுக் கத்தாக் கத்தினாலும் ஒரு உயிரை எடுக்கிற அளவுக்குப் போகமாட்டாரு.... ஆனா நீயி என்னோட வயித்துலயாடா பொறந்தே... இம்புட்டுக் கொடூரத்தை வச்சிக்கிட்டு... உன்னைய பெத்ததுக்கு இப்ப வருந்துறேன்டா..."

"அம்மா... புவனாவை வேற சாதிக்காரனுக்கு கட்டிக் கொடுக்க எனக்குப் பிடிக்கலை... அவ எங்கிட்டயே அவனைக் கட்டிக்குவேன்னு சொன்னா... அதான் அவளையும் அடிச்சேன்... அவனையும் கொல்லச் சொன்னேன்..."

"சீ... வெக்கமாயில்ல... உன்னைய பெத்தமாதிரித்தானேடா அவனையும் அந்தப் பொம்பள கஷ்டப்பட்டுப் பெத்திருப்பா... அப்பனில்லாம அவனை வளர்த்துப் படிக்கவச்சி அவனை நல்ல நிலையில பாக்கணுமின்னு அவ கண்ட கனவையெல்லாம் அழிக்க நினைச்சிருக்கியேடா... "

"இங்க பாருங்கம்மா... நீங்க சொன்னீங்கன்னு அவனை விட்டுட்டேன். இனி புவனா கல்யாண விசயத்துல நீங்க சொல்றதை நான் கேப்பேன்னு மட்டும் கனவு கானாதீங்க..." என்றபடி வெளியேறினான் வைரவன்.

"என்னங்க என்னமோ மாதிரி இருக்கீங்க?" என்ற மனைவியிடம் "இல்லம்மா... இந்தப் புள்ளங்களைச் சேத்து வைக்கலாம்ன்னு புவனாவோட அண்ணன் அப்பாக்கிட்ட பேசினேன்... பலனில்லை.. எனக்கென்னவோ நம்ம ராம்கியை எதுனாச்சும் பண்ணிருவானுங்களோன்னு மனசுக்குள்ள ஒரு பயம் வந்திருச்சு..." என்றார் தமிழய்யா.

"அதெல்லாம் ஒண்ணும் பண்ண மாட்டாங்கங்க. சரி வரலைன்னா நாம கூட்டியாந்து ரெண்டு பேரையும் கட்டி வைப்போம்..."

"என்னம்மா பேசுறே... பெத்தவங்க சம்பந்தம் இல்லாம அதுகளைக் கூட்டியாந்து கட்டி வைக்கிறது நல்லதில்லை... நமக்கும் பிள்ளைங்க இருக்காங்க..." 

"சரி... அப்ப அதுக சேர வேற என்ன வழி?"

"யோசிக்கலாம். அதுகள பழக வச்ச கடவுள் சேர ஒரு வழியைக் காண்பிக்காமலா போயிடுவான்..." என்றபோது போன் அடித்தது. போனை எடுத்தவள் கொஞ்ச நேரம் பேசிவிட்டு "இந்தாங்க நம்ம ராம்கிதான் பேசுறான்" என அவரை அழைத்தாள்.

"என்னய்யா எப்படியிருக்கீங்க..? தொழிலெல்லாம் எப்படியிருக்கு?"

"நல்லாயிருக்குய்யா... அவசர வேலையா ஊருக்கு வந்தேன்... வந்ததுல இருந்து அலைச்சல்... நாளைக்கு காலையில கிளம்புறேன்... "

"சரிய்யா... உடம்பைப் பார்த்துக்கங்க... நான் புவனா அண்ணன் அப்பாக்கிட்ட பேசினேன்... சரியா வரலை..."

"அது விஷயமாத்தான் உங்ககிட்ட பேசக் கூப்பிட்டேன். முதல்ல எனக்கு உங்க ஆசிர்வாதம் வேணும்ய்யா..."

"என்னதம்பி... உங்களுக்கு எங்க ஆசிர்வாதம் எப்பவும் உண்டு... சொல்லுங்க..."

"புவி வீட்ல பிரச்சினை போய்க்கிட்டு இருக்கு... அதனால..."

"அதனால..."

"அவளைக் கூட்டிக்கிட்டு எங்கிட்டாவது போயிடலாம்ன்னு பார்க்கிறேன் ஐயா..."

"இங்க பாருங்க... இதெல்லாம் வேண்டாம்... பேசிப் பார்ப்போம்..."

"இல்லய்யா... முடிவு பண்ணிட்டோம்... இனிப் பேசிப் பயனில்லை... பசங்க பிளானெல்லாம் போட்டுட்டாங்க..."

"ஓ... எல்லாம் பேசி முடிச்சிட்டுத்தான் கூப்பிடுறீங்க இல்ல... சரி... இதனால வரப்போற பின் விளைவுகளை யோசிச்சீங்களா? எதையும் எடுத்தோம் கவிழ்த்தோமுன்னு செய்யக்கூடாதுய்யா..."

"அப்படியெல்லாம் இல்லைய்யா.... அம்மா ஒத்துக்கிட்டாங்க... எங்க பக்கம் எல்லாரும் ஓகே... அவங்க பக்கம்தான் பிரச்சினை... அதான் இந்த முடிவு... இதைவிட்டா புவி எனக்கில்லாமப் போயிடுவாய்யா..."

"அதுக்காக..." 

"என்னங்க நீங்க... பிள்ளைங்க வாழப்போறேன்னு சொன்னா வாழ்த்துறதை விட்டுட்டு.. இங்க போனைக் கொடுங்க..." என்று வாங்கியவள் "தம்பி நீங்க செய்யப் போறதுதான் சரி... உங்க ரெண்டு பேருக்கும் எங்களோட ஆசி எப்பவும் இருக்கும்" என்றாள்.

"ரொம்ப சந்தோஷம் அம்மா... " என்றபடி போனை வைத்தான் ராம்கி.

"எண்ணன்னே... திடீர் மாற்றம்.?" என்றபடி சகலைக்கு எதிரே அமர்ந்தார் புவனாவின் சித்தப்பா.

"இல்ல கொஞ்சம் விசாரிச்சேன்... ஓகேன்னு பட்டுச்சு... அதான் உன்னை வரச்சொன்னேன்... வந்து பாக்கட்டும்... பிடிச்சிருந்தா ஜாதகம் பாப்போம்... எல்லாம் நல்லாயிருந்தா சட்டுப்புட்டுன்னு ஒரு நல்ல நாள்ல கல்யாணத்தை வச்சிருவோம்.

"நமக்கிட்ட சம்பந்தம் வச்சிக்க அவனுக வேண்டான்னா சொல்லுவானுங்க... நான் இப்பவே நேர பொயிட்டு வந்துடுறேன்... ஆமா அத்தாச்சிக்கு தெரியுந்தானே..." என்றார் மெதுவாக.

"ம்... அவளுக்கிட்ட சொல்லாமயா... புவனாவுக்கும் ஓகேதான்... என்ன படிச்ச படிப்புக்கு வேலை பாக்கணுமின்னு நிக்கிது... அதை அவங்ககிட்ட சொல்லிடலாம்..."

"அம்புட்டுத்தானே... மாப்பிள்ளை நம்ம பொண்ணு கழுத்துல தாலியக் கட்டட்டும் அப்புறம் பாருங்க... நம்ம சொல்லுறதுக்கு தலையாட்ட வச்சிருவோம்..." என்று சிரித்தார் சித்தப்பா.

ரண்டு நாட்களுக்குப் பிறகு...

புவனா தொலைக்காட்சி பாத்துக் கொண்டிருந்தாள். அம்மா அடுப்படியில் வேலையாக இருந்தாள். அப்பா கடைக்கும் வைரவன் ஊர் சுற்றவும் சென்று விட்டார்கள். அப்போது போன் அடித்தது. புவனா போனை எடுத்து "அலோ" என்றாள்.

"அடியேய் நான் மல்லிகா பேசுறேன்... சொல்லுறதைக் கவனமாக் கேளு... நாளைக்கு காலையில பதினோரு மணி வாக்குல உங்க கம்மாய் கரைப் பக்கம் வா... அங்க அண்ணாத்துரையும் சரவணனும் காரோட நிப்பானுங்க... சரியா?" என்று அவள் பேசிக் கொண்டே போக புவனாவின் இதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்தது.

(புதன்கிழமை தொடரும்)
-'பரிவை' சே.குமார்.

3 கருத்துகள்:

 1. ம்...........ஏற்பாடெல்லாம் கரெக்டா பண்ணிட்டாங்க.பார்ப்போம்.............

  பதிலளிநீக்கு
 2. திகிலுடன் தொட்ர் அருமையாக சுவாரசியமாக தொடர்கின்றேன் ஐயா!

  பதிலளிநீக்கு
 3. புவனாவின் இதயம் மட்டுமா வேகமா துடிக்குது ?எங்கள் இதயமும்தான் !சீக்கிரம் தொடருங்கள் !
  த ம 2

  பதிலளிநீக்கு

நட்பின் வருகைக்கு நன்றி..!

பகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...