மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

திங்கள், 25 ஆகஸ்ட், 2014

மனசின் பக்கம் : வெயிலுக்கு அஞ்சான் கலைக் குழந்தை

ங்கு சுட்டெரித்த வெயிலின் கடுமை இரண்டு நாட்களாக குறைந்திருக்கிறது. காலையில் வேர்க்க விறுவிறுக்க நடந்து செல்லும் நிலை மாறி கொஞ்சம் காற்று அடிக்கிறது. மதியம் வரும் போதும் அந்தளவுக்கு சூடு இல்லை என்றே சொல்லலாம். போன வாரத்தில் இரண்டு நாட்கள் 52 டிகிரிக்கும் மேல் இருந்தது. மாலையில் வெப்பக்காற்றின் தன்மையும் கொஞ்சம் மாறியிருக்கிறது. முன்னர் வெளியே சென்றால் மழையில் நனைந்தது போல்தான் அறைக்குத் திரும்ப வேண்டும். தற்போது அடிபம்பில் தண்ணீர் அடித்துப் பிடித்துக் குளித்தது போல் பட்டும்படாமலும்தான் வேர்க்கிறது. 

லையாத கனவுகள் தொடர்கதையை நாமும் தொடர் எழுதிப் பார்க்கலாம் என விளையாட்டாய் ஆரம்பித்து 77 பகுதிகள் வளர்ந்து விட்டது. இந்தத் தொடரைப் பொறுத்தவரை ஒரு சிலரின் ஊக்கத்தின் பேரில்தான் இத்தனை பகுதிகளைக் கடந்திருக்கிறது என்பது உண்மை. இன்னும் இரண்டு மூன்று பகுதிகளில் முடித்து விடலாம் என்று நினைத்திருக்கிறேன். இந்தத் தொடரை முன்கூட்டியே திட்டமிட்டு நகர்த்தவில்லை என்று பதிவிடுகிறேனோ அப்போதுதான் அந்தப் பகுதியை எழுதுவேன். இதுவரை இரண்டு பகுதிகளைக் கூட ஒரே நேரத்தில் எழுதியதில்லை.  பெரும்பாலும் இரவில் பதிவிடுவதால் சமையல் முடித்து சாப்பிட்டு படுக்கப் போகும் போது எழுதி அப்போதே பதிவிடுவேன். இதில் எழுத்துப் பிழைகள் இருக்கலாம்... கதை கூட பல இடங்களில் ஏற்ற இறக்கங்களைச் சந்தித்திருக்கலாம். ஒரு சிலருக்கு கதையின் போக்கு பிடிக்காமல் கூட இருக்கலாம். இப்படி எத்தனையோ இருக்கலாம்கள் இருந்தாலும் இது எனது கன்னி முயற்சிதான். கதைக்கு எனது சகோதரர்கள் யோகராஜா, தனிமரம் நேசன், கரந்தை ஜெயக்குமார் ஐயா, மேனகா சத்யா அக்கா மற்றும் சிலர் தொடர்ந்து ஊக்கம் கொடுத்து வருகிறார்கள். இவர்களைத் தவிர குடந்தையூர் சரவணன் அண்ணன் உள்ளிட்ட சிலரிடம் கதை குறித்த உண்மையான கருத்தைக் கேட்டிருக்கிறேன். கலையாத கனவுகள் எல்லோர் மனதையும் தொட்டதா இல்லையா என்பதை உறவுகளின் விமர்சனங்கள் மூலமாகத் தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.

ங்கள் ஊரில் விவசாய நிலம் எல்லாம் கருவை மரங்கள் நிறைந்து பார்க்கவே பரிதாபமாகக் காட்சியளித்தது. கடந்த சில வருடங்களாகவே பக்கத்து ஊர் கோவில் மாடுகளுக்குப் பயந்தே விவசாயம் செய்யாமல் விட்டு விட்டதால் வந்த வினை இது. கண்மாய் நிறைந்தாலும் வாய்க்காலில் தண்ணீர் ஓடி வருடங்களாகிவிட்டது. இப்போது கருவை மரங்களை ஒழிக்கும் இயக்கம் ஒன்று எங்கள் ஊரில் கருவை மரங்களை வெட்டி தூரைப் பறித்து எடுத்துச் செல்கிறோம் என வந்திருப்பதாக அம்மா சொன்னார்கள். எப்படியோ விவசாய நிலங்கள் கருவையின் பிடியில் இருந்து மீட்கப்பட்டால் சரி.

சூர்யாவின் அஞ்சானுக்கு வலையுலகம் கொடுத்த வரவேற்பில் அதிர்ந்து போய் அந்தப் பக்கம் போகாமலே அஞ்சி ஒதுங்கியாச்சு. ஒரு நல்ல நடிகனுக்கு ஏன் மாஸ் ஹீரோ ஆகணுமின்னு ஆசை. இதெல்லாம் நமக்கு சரியா வராதுன்னு தெரிஞ்சிருந்தும் நடிச்சிட்டு அப்புறம் பேட்டியில எல்லாரும் படத்தைப் பார்த்துட்டுப் பேசுங்கன்னு சொன்னா எப்படி... விரும்புறவன் பணம் கொடுத்துப் பார்க்கப் போறான்... நீங்க படம் எடுத்துட்டுட்டீங்கன்னு எங்க காசுல படம் பாத்து அது குப்பையா இருந்தாலும் வசூல் வேட்டை காட்டணும்ன்னா எப்படிங்க சிவக்குமாரின் புதல்வரே. இதுல லிங்குச்சாமி அவர்கள் இது குழந்தைகளுக்கான படம்ன்னு வேற போட்டி கொடுக்கிறாரு... சமந்தாவை உரிச்சி வச்சிருக்கிறதும்... பொட்டுப் பொட்டுன்னு சுடுறதுமா குழந்தைகளுக்கான படம்.? இதை நான் கேக்கலை... படம் பார்த்த நண்பர் ஒருவர் என்னிடம் கேட்டார். அவரது கேள்வி நியாந்தானுங்களே.

ன்று நண்பர் ஒருவருடன் பேசும் போது எனக்கு இன்னொரு குழந்தை வேணும்ன்னு ஆசைங்க... ஆனா என்னோட மனைவிக்கு விருப்பமில்லை... அவளைப் பொறுத்தவரை ஜாலியா இருக்கணும்... சும்மா குழந்தை குட்டீங்கன்னு பெத்துக்கிட்டு கஷ்டப்படக்கூடாதுன்னு சொல்லுவா... முதல் குழந்தையே ரொம்ப யோசனையோடதான் பெத்துக்கிட்டா.... இப்ப நானும் சரி ஒண்ணு போதும்ன்னு முடிவுக்கு வந்துட்டேன்னு சொன்னார். ரெண்டாவது வேணுங்க... இப்பவே பசங்களுக்கு உறவு முறையெல்லாம் மறந்துருச்சு.... ஒண்ணு மட்டும் வச்சிருந்தா பின்னால அதுக்கு உறவுகளே இல்லாமப் போயிடும்... கூட ஒண்ணு இருந்தா கஷ்டமோ நஷ்டமோ நமக்குன்னு ஒரு உறவு இருக்குன்னு உரிமையோட பேச முடியும் என நான் சொன்னதும் உண்மைதாங்க... ஆனா என்னோட மனைவிக்கு அதுல விருப்பம் இல்லைங்க என்றவர் அதற்கு மேல் எதுவும் பேசவில்லை.

சென்ற வாரத்தில் பஹத் பாசில் நடித்த 'கடவுளின் சொந்த நாடு (God's Own Country) படம் பார்த்தேன். ஒரு தீர்ப்பு நாளில் நடக்கும் மூன்று கதைகள்தான் படம். மூன்று கதைகளும் ஒரு புள்ளியை நோக்கி நகர்கின்றன. ஆரம்பத்தில் மெதுவாகச் செல்லும் கதை அதில் பயணிக்கும் கார்களைப் போல மெல்ல மெல்ல வேகமெடுத்தது. மிகப் பிரமாதம் என்று சொல்லும் அளவுக்கு இல்லாவிட்டாலும் படம் பார்க்கலாம் ரகமே. பஹத்துக்கு இதில் அதிகம் நடிப்பில்லை என்றாலும் இது போன்ற சிறிய கதாபாத்திரங்களை துணிந்து ஏற்று நடிக்கிறார் என்பது பாராட்டுக்குரியது. மலையாளத்தில் இன்னும் சில வருடங்களில் மிக முக்கியமான நடிகராக இருப்பார் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

-மனசு தொடர்ந்து பேசும்
-'பரிவை' சே.குமார்.

7 எண்ணங்கள்:

Menaga Sathia சொன்னது…

மனசின் பக்கம் அனைத்தும் நெஞ்சை தொட்டது...

உண்மையில் சொல்ல போனால் தொடர்கதையை எப்போ வரும்னு புதன்,சனி 2 நாள் காத்திருப்பேன்,இப்போ தொடர் மிகவிறுவிறுப்பாக செல்கிறது,அடுத்து என்ன ஆகுமோன்னு ஒரு எதிர்பார்ப்பு வருது..

அஞ்சான் படம் பக்கமே போகவில்லை முகநூல் கருத்துகளை பார்த்துவிட்டு..

நீங்கள் சொல்லிய மலையாள படத்தை பார்க்கிறேன்...

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

தங்கள் நண்பரின் ஆதங்கம் நியாயமானது

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

tha ma +1

ஸ்ரீராம். சொன்னது…

கலவையான செய்திகள் படித்தேன். ரசித்தேன். உங்கள் ஊர் வெய்யில் பயமுறுத்துகிறது. இந்நாட்களில் நிறைய பேர்கள் ஒரு குழந்தை போதும் என்று விட்டு விடுகிறார்கள்தான்!

Yoga.S. சொன்னது…

சில மனதைத் தொட்ட நிகழ்வுகள்,சில ஆதங்கங்கள்,.........அஞ்சான்.......ஐயோ!!!!!!!!!!!!நன்று&நன்றி குமார் பகிர்வுக்கு.

J.Jeyaseelan சொன்னது…

ப்ரண்ட்ஸோட அஞ்சான் போனோம், எப்டி இந்த கதையல்லாம் சூர்யா தேர்ந்தெடுத்தாருன்னு தெரில, செம மொக்க. இதுல இது லிங்குவோட நாலாவது கதையாம், அப்போ அந்த மூணு??? பதிவு அருமை சார்...

Kasthuri Rengan சொன்னது…

தாய்மை சுமையாகி போனது நமது வாழ்வியல் பாணிகள் எவ்வளவு சுயநலமாய் இருக்கிறது என்பதற்கு ஒரு சோற்றுப் பதம்..

அஞ்சான் ஒருமுறை பார்க்கலாம் படம் தான்.

தொடர்கள் தொடரட்டும்