மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

ஞாயிறு, 30 ஜூன், 2019

மனசின் பக்கம் : அறை மாற்றம்

மீண்டும் அறை மாறும் படலம் அரங்கேறியிருக்கிறது.

ஏழெட்டு மாதங்களில் அறை மாறுதல் என்பது இந்தப் பதினோரு வருடத்தில் இதுவே முதல்முறை... எப்படியும் இரண்டு வருடங்களுக்குக் குறையாமல் ஒரு அறையில் தங்கித்தான் பழக்கம்... இந்த முறை அதற்கான வாய்ப்பு இல்லாது போனதற்கு நாங்களே காரணம் ஆனதுதான் வேதனையான விஷயம். 

இந்த அறைக்கு வந்தபோது அறை குறித்தும் எங்கள் வீட்டுக்கு எதிரே இருப்பவர்கள் குறித்தும் பதிவாக்கியிருந்தேன். பால்கனியுடன் கூடிய நல்ல அறை, அருகே நண்பர் ஒருவர் வேலை செய்யும் சைவ ஹோட்டல், நண்பர்களின் பூக்கடை, சுற்றிலும் சூப்பர் மார்க்கெட் என நல்லதொரு அறையாகத்தான் இருந்தது. விடுமுறை தின மாலை நேரங்கள் பூக்கடை அருகே அரட்டையில் கழிந்தது.

இந்த அறைக்கு வந்தது முதல் பாத்ரூம், கிச்சன் பிரச்சினை என்பது இல்லவே இல்லை. ப்ரிட்ஜ், வாசிங்மெசின் என எல்லாமே அவர்களதுதான். வீட்டின் முதலாளி இருவர் என்பதாய்த்தான் அறிய முடிந்தது. ஒருவர் நாங்கள் இருந்த வீட்டில் மற்றொரு அறையில் நண்பர்களுடன்... மற்றொருவர் ஷார்ஜாவில் குடும்பத்துடன்... எங்களுடன் இருந்த முதலாளி மிகவும் நல்லவர்... பழக்கத்துக்கு தங்கமானவர் என்பதால் அந்த அறை நமக்கு ரொம்ப மகிழ்வளிக்கக் கூடியதாய் அமைந்தது.

எனது நண்பருடன் வேலை பார்க்கும் இரண்டு மலையாளிகள் அறைக்கு வந்தபோது எந்தச் சிக்கலும் இல்லாமல் எப்பவும் போல்தான் நகர்ந்தது. அமீரகத்தின் தற்போதைய தேக்கநிலை எல்லாக் கம்பெனிகளுக்கும் வேலை இல்லாத நிலையில் கொண்டு வந்து வைத்திருக்கிறது. பல கம்பெனிகள் ஆட்குறைப்பு செய்து விட்டன... சில கம்பெனிகள் சம்பளம் கொடுப்பதில் சிக்கல் வர ஆரம்பித்துவிட்டது. எங்கள் கம்பெனி எல்லாம் 27,28-ல் சம்பளம் என்ற நிலையில் இருந்து 10-ஆம் தேதி வரை வந்துவிட்டார்கள். ஆகஸ்ட்டுடன் முடியும் புராஜெக்ட்டுக்குப் பின்னர் இதுவரை வேற புராஜெக்ட் எதுவும் கிடைக்கவில்லை. நான்காண்டுகளாக ஊதிய உயர்வு இல்லை... இந்த வருடமும் வரவில்லை என்பதால் மோதிக் கொண்டுதான் இருக்கிறேன் என்றாலும் வேறு கம்பெனிகளிலும் வேலை கிடைக்கும் என்ற நிலை சுத்தமாக இல்லாததால் கொஞ்சம் நம் நிலையை நினைத்து அடக்கி வாசிக்கத்தான் வேண்டியிருக்கிறது. 2020 மாறும் என்று சொல்லி மாற்றத்தை நோக்கி நகர்கிறார்கள்... மாறும் என்ற நம்பிக்கை இப்போது இல்லை என்பதே உண்மை.

சரி விஷயத்துக்கு வருவோம்... மூவர் ஒரே கம்பெனி என்பதால் சம்பளம் வருவதில் சிக்கல் வந்தபோது வாடகையை பத்தாம் தேதிக்குள் கொடுப்பதிலும் சிக்கல் வர ஆரம்பித்தது. அது ஒரு மாத இடைவெளிக்கும் காரணமாக மாறிவிட, ஆரம்பத்திலேயே ஒரே கம்பெனி ஆட்கள் வேண்டாம் என நான் சொல்லியும் நண்பருக்கு அலுவலகத்தில் கொஞ்சம் உதவியாக இருக்குமே என்ற காரணத்தால் மலையாளிகளைக் கொண்டு வந்துவிட்டோம், இப்போது எப்படி அவர்களை வெளியேற்றுவது என்பதில் நண்பருக்குக் குழப்பம். 

படுத்த படுக்கை, போட்ட ஆடைகள் என சுத்தமில்லாத படுக்கைகளைப் பார்க்கும் போது வந்த கோபத்தில் ஒருநாள் நான் சத்தம்போட உடனே இப்படித்தான் இருப்பேன்... என்னோட படுக்கையில் எது கிடந்தால் உனக்கென்ன எனத் தர்க்கம் பண்ணினான். நானோ நீ உடனே அறையைக் காலி பண்ணிக்க என்றேன். நண்பர்தான் சமாதானம் பேசித் தொடரச் செய்தார். வாடகைப் பிரச்சினையும் தொடர்ந்தது.

ஒருநாள் சாப்பிடும் போது போதையில் மூவருக்குள்ளும் தர்க்கம் ஓட, இறுதியில் எனக்குத் தமிழன்மாரைக் கண்டாலே பிடிப்பதில்லை என ஒரு மலையாளி வார்த்தையை விட, நண்பர் ஒன்றும் சொல்லாமல் விவாதத்தை முடித்துக் கொண்டார். அடுத்த இரண்டு நாளில் ஒரு மதியவேளையில் சாப்பிடும் போது வாடகைப் பிரச்சினை இருக்குடே... அஞ்சு பேரு வைக்க வேண்டான்னு ஓனர் சொல்லுறான்.. நீ போயிக்க என ஒரு மலையாளியிடம் சொன்னார் நண்பர். உடனே இருவரும் அடுத்த மாதம் போகிறோம் என்றார்கள். மலையாளிகளை நாங்கள் போகச் சொன்னது வாடகை கொடுப்பதில் இருந்த சிக்கலால்தான்... மற்றபடி தமிழன்மாரைப் பிடிக்கலை... இந்தி வேண்டாம் என்ற விவாதங்களால் அல்ல... அது நிறை போதையில் நிதானமில்லாமல் வந்தது என்பதை அறிவோம். 

நம்ம ஊர்க்காரன் ஒருவன் இருந்தான்... திருமணம் ஆகாத தினக்குடி என முன்னரே சொல்லியிருக்கிறேன். அவன் அறையை விட்டுப் போறேன் என்றெல்லாம் சொல்லவில்லை... மாதக் கடைசியில் வாடகையும் கொடுக்காது... ஊருக்குப் போறேன்... வந்து கம்பெனி அறையில் தங்கிக்குவேன் எனச் சொல்ல, வாக்குவாதம் முற்றி... பின்னர் அவன் முடிஞ்சதைப் பாத்துக்க என ரொம்ப மரியாதையாகப் பேச, நம்ம சுயமரியாதையும் சிவகங்கை மண்ணுக்குன்னு உள்ள ஒரு கோபமும் எந்திரிச்சி, அதுவரை வாங்க தம்பி எனச் சொன்ன வாய் 'போடா நாயே வெளியே...' எனச் சொல்லியது. அதன் பின் அவன் வேலை செய்த கணிப்பொறி கடையிலும் போய் போலீஸ் கேஸ் கொடுக்கப் போறேன்னு சொல்லிட்டு வந்தேன். இங்கு கொடுக்க வேண்டியதை அவன் எங்காவது கொடுப்பான் என்ற நினைப்புடன் தொலையட்டும் என விட்டு விட்டு அறை வாடகைப் பிரச்சினைக்காக ஆட்கள் தேடியபோது கிடைப்பது குதிரைக் கொம்பானது.

நாங்கள் இருவர் மட்டுமே அறையில் என்ற நிலையில் முழுவாடகையும் எதிர்பார்த்தார்கள்... கொடுக்க வேண்டியது கட்டாயம்... முடியாது என்று சொல்ல முடியாத நிலை... உறவினர் அறைக்கு வந்தவருக்கு அங்கு அந்தச் சூழ்நிலையில் (மாதத்தின் பாதியில்) இடமில்லை என்பதால் பதினைந்து நாட்களுக்கு மட்டும் எங்கள் அறைக்கு வந்தார். அப்படியும் வாடகை முழுவதும் கொடுக்க முடியாது என்பதாலும் அடுத்த மாதம் (ஜூன்) மீண்டும் இருவரும் மட்டுமே என்பதாலும் அறை மாறிக் கொள்கிறோம் எனச் சொல்லிவிட்டோம். இந்த மாத வாடகையில் எங்கள் இருவருக்குமாய் 500 திர்ஹாம் நஷ்டம். வேறென்ன செய்ய முடியும்..?

இதில் இன்னொரு பிரச்சினையும் வர ஆரம்பித்தது... அறை நாமெடுத்திருந்தாலும் ஆட்கள் இல்லை என்பதால் பெங்காளிகளை அறையில் ஏற்ற நினைத்து நினைத்த நேரத்தில் ஆட்களைக் கொண்டு வர ஆரம்பித்தார்கள். அது போக ஷார்ஜாவில் இருப்பவன் 'அந்தப் பணம்...' என வாட்ஸப்பில் இரவு ஒரு மணிக்கும் ரெண்டு மணிக்கும் வாய்ஸ் மெஜேஸ் அனுப்ப ஆரம்பித்தான். இப்படி ஒரு இடத்தில் இருத்தல் நலம் பயக்காது என்பதாலேயே நிம்மதியான இடம் வேண்டுமென காலி பண்ணிக்கிறோம் எனச் சொல்லிவிட்டோம்.

அறை தேடி ஒருவழியாக பிடித்து விட்டோம்... கோவா குடும்பம் இருக்கும் வீடு அது... ஒரு அறையில் பாகிஸ்தானிகள் இருக்கிறார்கள் என்றார். நாங்கள் இப்போது அறையாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆட்கள் கிடைத்தால் மட்டுமே அறையாக எடுப்போம்... அதுவரை ரெண்டு கட்டில்கள் போதுமெனச் சொல்லிவிட்டோம். எங்களுக்கு அந்த அறையைக் காட்டியது சகோதரர் ராஜாராமின் நண்பர் ஒருவர்... நல்ல இடம்... பத்தாம் தேதிக்குள் வாடகையைச் சரியாகக் கொடுத்துவிட்டால் வருடக்கணக்கில் தங்க முடியும்... எந்தப் பிரச்சினையும் இருக்காது என்று தோன்றுகிறது. 


முன்னர் தங்கியிருந்த அறைக்கு உறவினர் திரும்ப அழைத்தார். அவர் அறையில் மூன்று கட்டில்கள் காலியாகத்தான் இருக்கிறது என்றாலும் சிலபல பிரச்சினைகளால்தான் உறவுகளுடன் இருக்க வேண்டாமென ஒதுங்கி வந்தோம்... மீண்டும் போய் பிரச்சினை என்றால் என்ன செய்வது...? தள்ளியிருத்தலே உறவைப் பேணும் என்பதால் வரவில்லை என்று சொன்னதில் அவருக்கு வருத்தமே. புரிந்து கொள்வார் என்ற நம்பிக்கையுடன் தள்ளியே இருப்போம் என்பதாலே இந்த அறை... கொஞ்சம் தூரம்தான் என்றாலும் அறை நன்றாக இருப்பதால் பிடித்தாகிவிட்டது.

தொடரும் வாழ்க்கைச் சிக்கல்கள் எல்லாம் புதிய அறைக்குச் சென்ற பின்னாவது தீரட்டும் என்ற எண்ணம் மனசுக்குள்...

பார்க்கலாம்... வாழ்க்கை எப்படி நகரப் போகிறதென....
-'பரிவை' சே.குமார்.

சனி, 29 ஜூன், 2019

பிக்பாஸ் - சோகமழை

 பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ள பதினைந்தாவது போட்டியாளர் ரேஷ்மா. வேலைனு வந்துட்டா வெள்ளைகாரன் படத்தின் புஷ்பா என்ற கதாபாத்திரம் மூலம் பிரபலமானவர் நடிகை ரேஷ்மா.
(ரேஷ்மா)
முதல் வாரமென்பதால் அடிச்சிக்கவும் மாட்டானுங்க... நாமினேசனும் இல்லை... மீராவை இறக்கிவிட்டும் குளம் கலங்காமலேயே இருக்கு... சரி சோகத்தைச் சொல்லி மக்களை அழ வைத்து மக்கள் மத்தியில் பிக்பாஸ்க்கு ஒரு பேரை வாங்கிவிடலாமென, ஒருவர் மூணு சீட்டெடுத்து அதில் இருக்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொல்லணும்ன்னு சொல்லி, ஆட்டையை ஆரம்பிச்சி வச்சாரு... ஆனா குடுவைக்குள்ள இருக்க பேப்பர்ல நாலே நாலு கேள்வி அதுவும் சோகக் கேள்வி என்பதாய் சீட்டெழுதி பார்வையாளர்களை சீட்டிங் பண்ணியிருந்தார் பிக்பாஸ்... இதெல்லாம் எப்பவும் நடப்பதுதானே.

எல்லாருக்கும் வந்த கேள்வி உங்களால் மறக்க முடியாத நாள், உங்களுக்குத் துரோகம் செய்தவர்கள் இப்படியான கேள்விகள்தான். எல்லாருமே மேடையேறி அழுதபடியே கதைகளைச் சொன்னார்கள். மோகன் வைத்யா காது கேளாத, ஊமைப்பெண்ணான தன் மனைவியின் கதையை, அவர் இரயில் விபத்தில் பலியான சோகத்தைச் சொல்லி அழுதார். இந்த சோகக்கதையை கொஞ்சம் கொஞ்சமாக அடிக்கடி சொல்லியிருக்கிறார் என்றாலும் மனைவியின் மறைவு குறித்துச் சொல்லும் போது அவருக்கு எதிரே இருந்தவர்களுக்கு மட்டுமின்றி பார்த்துக் கொண்டிருந்த நமக்கும் அழுகை வந்தது.

ரேஷ்மாவின் சோகக்கதையில் முதல் மகன் பிறக்குமுன்னே முதல் கணவனுக்கும் தனக்கும் ஒத்துவரவில்லை என்பதால் விவாகரத்துப் பெற்றதாகவும், உடன் பிறப்புக்கள் ஒதுக்கிய நிலையில் அம்மா, அப்பாவின் ஆதரவோடு வாழ்ந்ததாகவும், அதன் பின் ஒரு ஆங்கிலேயனைக் காதலித்து பெற்றோர் எதிர்ப்புடன் திருமணம் செய்து கொண்டு அவனிடம் அடி வாங்கிப் பெற்ற அவஸ்தை, பிரசவ வேதனையுடன் கார் ஓட்டி மருத்துவமனை சென்றது... அப்போது பிள்ளை வெளியில் வர ஆரம்பித்தது... எட்டு வயதான மூத்தமகனின் உதவி மட்டுமே தனக்கு அந்த நேரத்தில் துணையாய் இருந்தது... இப்போது மகன்களுக்காக வாழ்வது என போராட்ட வாழ்க்கையைச் சொல்லி அழுதார். என்ன பெண் இவள்... எத்தனை போராட்டங்கள்... என எல்லாரையும் அழ வைத்தார்.

தர்ஷன் போர் மேகம் சூழ்ந்த இலங்கையில் வாழ்ந்த கதை சொல்லி அழுதார். சேரன் முதல் மகள் பிறப்பின் போது பணமில்லாத நிலையில் பட்ட கஷ்டத்தைச் சொன்னார்.  அபிராமி ஐம்பது லட்சம் சம்பாதிக்கும் மாப்பிள்ளை வேண்டுமென்றார்... அதுவும் கவினைப் பார்த்தே எல்லாம் சொன்னார்... எல்லாம் கவினுக்குத்தானா என யாரோ கேட்க, அவனைத்தான் அப்பவே ஒதுக்கிட்டேனே என்றார். ஓவராய் உடலை அலட்டி அலட்டிப் பேசினார். 'என்ன உடம்பு ரொம்ப ஆடுது' எனக் கேட்ட மதுமிதாவிடம் 'உனக்கு வாயாடுதுல்ல' என்றார். இவரின் அலட்டல்... ரொம்ப அதிகமாகத் தெரிந்தது.

மதுமிதா அப்பா இல்லாத கதையைச் சொல்லி, அதனால் பட்ட கஷ்டங்களைக் கேவிக்கேவி அழுதபடி சொன்னார். எல்லாரும் பெண் குழந்தைகள் என்ற நிலையில் அம்மா வளர்க்கப்பட்ட பாட்டைச் சொன்னார். நம்மைச் சிரிக்க வைப்பவர்கள் வாழ்க்கையில் ரொம்ப கஷ்டப்பட்டவர்களாய்த்தான் இருப்பார்கள் என்பார்கள். சாப்ளினின் வாழ்க்கையில் அவர் அதிகம் கஷ்டப்பட்டிருக்கிறார். ஆச்சி மனோரமாவின் வாழ்க்கை சந்தோஷமானதாக அமையவில்லை. நாகேஷ் கூட கடைசி காலத்தில் மகன் ஆனந்தபாபுவால் ரொம்ப அல்லல்பட்டார். 

மதுமிதாவின் கதையின் தொடர்ச்சியாய் அப்பா இல்லாத வலி எப்படிப்பட்டதென அபிராமி படுக்கை அறையில் தோழிகளுடன் பேசிக் கொண்டிருந்தார். படிப்புக்கான கட்டணம் கட்ட, அம்மாவைப் பிரிந்திருக்கும் அப்பாவுக்கு போன் பண்ணின போது ஆத்தாளும் மகளும் மறுபடியும் எங்கிட்டயே வந்துட்டீங்களான்னு சிரித்ததால் அதன் பின் கட்டணத்துக்குப் பணம் கேட்காமல் தானே உழைத்து அதன் மூலம் படித்த கதையைச் சொன்னார். பெரிய கண்கள் விரிய, கண்ணீர் சிந்த அபிராமி உண்மையாகவே வலியைச் சொல்லிக் கொண்டிருந்தது... பார்க்க வருத்தமாக இருந்தது.

சரவணன் ரெண்டு கல்யாணம் பண்ணுன கதையைச் சொன்னார்... பங்காளிகள் பகையாளிகள் ஆனதையும் சொன்னார். பொட்டச்சி காசுல சாப்பிட்டு குடிச்சிக்கிட்டு இருந்தேன்னு சொன்னார். இப்ப பொட்டச்சிங்க சம்பாதிக்கிறாங்க சித்தப்பு... அவங்க காசுல உக்காந்து சாப்பிட்டா தப்பில்லை... காலங்காலமா அவங்க வீட்டுக்குள்ளயே கிடக்கணுமா என்ன... அப்புறம் என்னை பொட்டையின்னு சொன்னானுங்க டேய் எனக்கு ஒரு பையன் இருக்கான்டா... நான் பொட்டையில்லைடான்னு செவ்வாழை காலரைத் தூக்கிவிட்டுச் சொன்னார். இவர் கதைக்கும் ஒரே அழுகாச்சிதான். பிள்ளை இல்லை என்பதால் ரெண்டாம் கலியாணம் என்ற பத்தாம்பசலித்தனத்தை யாரும் கேள்வி கேட்கவில்லை. ஆண்டவருக்கே மூன்றல்லவா... அப்புறம் எப்படி கேள்வி கேட்பது..?

வனிதா தன் மகன் பிறந்தகதை, அவன் இப்ப பிரிஞ்சிருக்கிற கதை சொல்லி அழுதார்... கவின் தன் குடும்பம் பட்ட அவமானத்தை, வேதனையை, ஊர் ஊராக அம்மாவைக் கூட்டிக்கொண்டு அலைந்ததைச் சொல்லி அழுதார். இப்படி ஆளாளுக்கு அழுகாச்சிக் கதைகளே சொன்னார்கள்... அழுதார்கள்... குடும்ப உறுப்பினர்கள் எல்லாம் அழுதார்கள்... 

பாத்திமா பாபு, சாக்சி எல்லாம் கதை சொன்னார்களாம்... என்னமோ தெரியலை இணையத்துல அதெல்லாம் காணோம்... நல்லவேளை ரொம்ப அழுகுறதைப் பார்க்க வேண்டியதில்லைதானே. 

இடையில் மோகன் - சாண்டி மோதல்... ஏதோ மிகத்தவறான வார்த்தைப் பிரயோகம் சாண்டியிடமிருந்து வந்திருக்கிறது... அது சாதீய தாக்குதல் போலானது என்பதை உணர முடிகிறது. பிக்பாஸூம் அதை காட்டவில்லை... காட்டினால் பிரச்சினைகள் பெரிதாகலாம். மோகன் - சாண்டி சமாதானத்தின் போது என்ன பண்றது... என்னை 'குடுமி, அங்கவஸ்திரம், தர்ப்பைப்புல்லுன்னு வளர்த்துட்டா' என்றார். சமாதானம் கழிவறைக்குள் நிகழ்ந்தது. சுபமாய் முடிந்தது. 

அழுகைகள் எப்போதும் மனதைப் பாதிக்கும் என்பதால்தான் பிக்பாஸ் அழுகுற மாதிரி கேள்விகளைக் கேட்டிருக்கிறார் என்றாலும் நீ அழுது ஆர்ப்பாட்டம் பண்ணிட்டியா அப்ப நானும் அழுவேன் என்பதாய்த்தான் இருந்தது ஒருவரை மிஞ்சிய ஒருவரின் நடிப்பு. இதற்கிடையே மீரா, அபிராமிக்கு ஏதோ உரசல்... சண்டை... அழுகை... பாத்திமா பாபுவின் தேற்றுதல்... அபிராமி தண்ணி கொடுத்தல் என அது ஒரு பக்கம்.

சண்டையே போடமா இருந்தா எப்படி... வனிதா இருக்கும் போது வசமா மாட்டினா விடுவாரா... ஊக்கைப் போட சொன்ன கதையை ஊதிப் பெரிசாக்கி அடித்து ஆடியிருக்கிறார்... ஆமா வீட்டுக்குள்ள செம சண்டை... ஆனா யாருக்கும் உடையலை மண்டை.

பதிவின் நீளம் கருதி அடுத்த பதிவாய்....'வீட்டுக்குள் சண்டை' வரும்.

பிக்பாஸ் தொடரும்.
-'பரிவை' சே.குமார்.

வெள்ளி, 28 ஜூன், 2019

பிக்பாஸ் - வெடிக்கலையே...

Image result for பிக்பாஸ் சீசன்-3 அபிராமி
பிக்பாஸ் சீசன்-3 முதல் வாரம் என்பதால் எல்லாருமே ரொம்ப அன்பா இருக்காங்க... வந்தவுடனே அபிராமிக்கு கவின் மீது காதல் வந்தது. அது சரவணன் மீனாட்சி நாடகத்தை அம்மா பார்க்கும் போது கவினைப் பார்ப்பதற்காகவே உட்கார்ந்திருக்கும்போது வந்த கிரஷாம்.... எப்படியெல்லாம் காதல் வருது பாருங்க... ம்... நாமதான் இந்தக் கிரஷெல்லாம் குடிக்காமலேயே வாழ்க்கைக்குள்ள இறங்கிட்டோம்.

கவினுக்கும் முகனுக்கும் லாஸ்வியா மீது காதல் கலந்த பார்வை இருக்கத்தான் செய்யுது...  தமிழகமும் இலங்கையுமா... இல்லை இலங்கையும் மலேசியாவுமான்னு போகப் போகத் தெரியும். அதை அபிராமியிடம் சொல்லாமல் எங்கூட கொஞ்ச நாள் பழகினா இவனெல்லாம் சரிவர மாட்டான்னு  நீயே விலகிப் போயிருவேன்னு சொல்லி, கவின் மெல்லக் காதல் வலையில் இருந்து விடுபட்டது போல் நடித்தாலும் திரைக்கதையில் இந்தக் காதல் நூறுநாள் ஓடுமென்றால் கவின் அதில் நடித்துத்தான் ஆகவேண்டும். கவின்-அபிராமி, முகன்-லாஸ்லியா என்பதெல்லாம் பெரியபாஸின் கையில் இருக்கும் திரைக்கதையில்தான் இருக்கிறது.

பொங்கலுக்காக ஒரு பெரிய பொங்கல் வைத்தார்கள்... வனிதா வாயில் பொங்கல் வைத்தார். சாக்சி என்னைப் பேச விடுங்கன்னு பாவமாக் கேட்டுப் பார்த்து கிடாவெட்ட இடங்கிடைக்காமல் தவித்தார். 'நான் விரும்பும் இயக்குநர்' சேரன் நீண்டதொரு லெக்சர் கொடுத்தார் என்றாலும் அது அல்ஜீப்ரா நடத்தும் கணக்கு வாத்தியாரின் நிலையாய் ஆனது. இப்படியே போனால் முதல் நாமினேசன் நான் விரும்பும் இயக்குநராய்த்தான் இருப்பார்.

பாத்திமா பாபு தமிழில் செய்தி வாசித்து ஷோபனா ரவி, சந்தியா இராஜகோபாலன் வரிசையில் அழகிய தமிழுக்குச் சொந்தக்காரராய் இருந்தவர், ஆங்கிலத்தில் மட்டுமே அதிகம் பேசுவது கொடுமை. போன சீசனில் யாராவது ஆங்கிலத்தில் பேசினால் நீச்சல் குளத்தில் ஒருவர் இறங்கி நிற்க வேண்டுமென சட்டமெல்லாம் போட்டார்கள். பேசவே வராத ஐஸ்வர்யாவைக் கூட தமிழில் பேச வைத்தார்கள். இப்போது நிகழ்ச்சி முழுக்க குறிப்பாக பெண்கள் பேசுவது எல்லாமே ஆங்கிலம்தான்... எந்த தண்டனையும் இல்லாமல், தமிழில் சப் டைட்டில் போடுகிறார்கள். வாழ்க தமிழ்... வளர்க தமிழ்... கமலஹாசன் மட்டும் புரியாத செந்தமிழில் பேசுவார் வார இறுதிகளில்.

மொக்கை நடனம் சொல்லிக் கொடுக்கச் சொல்லி மோகன் வைத்யாவுக்கு ஒரு டாஸ்க்... அவரும் இளைஞராய் மாறி நடனம் சொல்லிக் கொடுத்து வயதானாலும் பொதுவெளியில் தனக்கு வாழக்கிடைக்காத வாழ்க்கைய இங்கு இருப்பவர்களுடன் வாழ்ந்து மகிழ்ச்சியாய் இருப்போமே என்ற எண்ணத்துடன் ஜாலியாய் வலம் வருகிறார்... இது மனசுக்கு மட்டுமின்றி உடலுக்கும் நயம் பயக்கும்... அப்படியே தொடர்தல் நலம்... இப்படியே நாட்களைக் கடத்துங்கள் மோகன்ஜி.

புதிதாக களம் புகுந்த மாடலிங் மீரா மிதுனைப் பார்த்ததும் பாண்டவ பெண்கள் அணியின் அபிராமி, தனக்கும் மீராவுக்கும்மான தனிப்பட்ட பிரச்சினையை வீட்டுக்குள் மீட்டெடுக்கிறார். போர் வெடிப்பது போல் ஒரு பிரளயம் ஆரம்பிக்கிறது. பிக்பாஸ் ஆஹா... டிஆர்பி எகிறப் போகுதுன்னு துண்டை விரிச்சி உக்கார்ந்தா... அது பதத்துப் போன தீபாவளி வெடி மாதிரி புகைஞ்சிக்கிட்டே இருக்கு. கிச்சனில் சாப்பிட்ட கீரைப் பாத்திரத்தை எடுத்து வைக்கவில்லை என அபிராமி கத்த, மெல்லப் பேசு... கத்தாதே என மீரா சொல்ல... எங்கே வெடி பெரிதாய் வெடிக்கப் போகுதுன்னு பார்த்தா அப்பவும் வெடிக்கலை... லேசா 'புஸ்...புஸ்...' மட்டுமே. இந்தவாரத் தலைவி எப்படியும் வெடிக்க வைப்பேன் என அதைக் கையில் எடுத்து, எங்கிட்டே நீ புகார் கொடுத்தேன்னு நான் அவளைக் கேக்குறேன்னு சொர்ணாக்கா 2.0 மாதிரி வர்றாங்க... சண்டையின் சூடு அடுப்பில் வைத்த பால்பாத்திரம் மாதிரி மெல்லக் கூடுது... எங்கே பால் பொங்கிருமோன்னு பார்த்தா... வேகமாப் பேசாதீங்க... உங்களுக்கு பீபீ வரும்ன்னு மீரா சொல்லி... கண்கள் மட்டுமே பொங்க அழுகையுடன் அந்தச் சண்டை பிசுபிசுத்துப் போயிருச்சு... தலைவிக்கு அவமானம்... பாவம் பிக்பாஸ் திரைக்கதையை மாற்ற வேண்டிய சூழல்.

நான் எம்ஜியார் காலத்துல இருந்து நடிப்பைப் பார்த்தவ... எங்கப்பன் எனக்கு இந்த மாதிரி நடிக்கிறவங்களை நம்பக் கூடாதுன்னு சொல்லித் தந்திருக்கான்... நான் ஒரு இயக்குநருக்கு அசிஸ்டெண்ட் தெரியுமா... அப்படி இப்படின்னு தலைவி வனிதா அள்ளி விடுறாங்க... இவங்க நடிப்பைத்தான் நாம பார்த்திருக்கோமே... நடிப்பால் கெட்டவர்தானே ராஜ்கிரண்... தெரியாதா என்ன... இந்த வீட்டுக்குள் சொர்ணாக்காவின் ஆட்டம் இப்பத்தான் ஆரம்பமாயிருக்கிறது. இனி அடித்து ஆடுவார் என்று எதிர் பார்க்கலாம்.

சாண்டி டான்ஸ் ஆடுறேன்னு கொல்றதுடன் மட்டுமில்லாமல் பேசியே கொல்லுறான். இவனையெல்லாம் வீட்டில் எப்படித்தான் சமாளித்தார்களோ... திறமை இருக்கவன் ஒரு இடத்தில் இருக்கமாட்டான்னு சொல்லுவாங்க... நானும் பல பேரைப் பார்த்திருக்கிறேன்... இவன் அந்த ரகம்தான்... எப்பா பிக்பாஸ் இவனுக்கு முதல்ல திரைக்கதையை மாத்துங்க... லாஸ்வியா மேல இவனுக்கும் கொஞ்சம் 'அது' இருக்கு... இழுத்து இழுத்துப் பார்க்கிறான்... ஆனாலும் லாஸ் ஆகாம மெல்ல எஸ்கேப் ஆயிடுது...சாண்டி வெளியில் இருந்து பையன் பார்த்துக்கிட்டு இருக்கான் என யாராவது சொல்லித் தொலையுங்கள்.

தர்ஷன் இன்னும் அடித்து ஆடவில்லை... போன சீசனில் கமலாகாமேஷ் பேரன் மும்தாஜை அம்மா... அம்மான்னு கட்டிப்பிடிச்ச மாதிரி இவன் பாத்திமா பாபுவை கட்டிப் பிடிக்கிறான். அம்மா மகன் அடிதடி ஸ்கிரிப்ரட் ஒண்ணு இந்நேரம் தயாராகி இருக்கும்... அம்பதாவது நாளுக்கு மேல் இருவரும் இருந்தால் கண்டிப்பாக அரங்கேற்றப்படும்.

மீராவின் நடையே அழகாய்த்தான் இருக்கு... பின்னே சூப்பர் மாடல் அல்லவா...? அபிராமியுடனான பகை, அபிராமிக்கு துணையாய் இருக்கும் பாண்டவர் பெண்கள் அணியில் நால்வர்... தலைவி வனிதா... ஏன் பாத்திமா கூட இவரை அடுத்த வாரம் முதல் தொடர்ந்து நாமினேட் செய்ய வாய்ப்பிருக்கு என்றாலும் மக்களால் காப்பாற்றப்படுவார் என்றே தெரிகிறது. அதேபோல் அபிராமியை பிக்பாஸ் அவ்வளவு சீக்கிரம் வெளியேற்ற மாட்டார். 

ஊர்ல வேலைக்குப் போகாம சாப்பிட்டு வேப்ப மரத்தடியில உக்காந்து போறவன் வர்றவனையெல்லாம் வேடிக்கை பார்த்துக்கிட்டு, நமக்கெதுக்கு இந்த வம்புதும்பெல்லாம்ன்னு இருப்பான் பாருங்க... அவன மாதிரி ஒரு மூலையைக் கொடுத்து உக்கார்ந்திருக்கிறார் சரவணன். சித்தப்பு ரொம்ப நூதனமாப் பொழச்சுக்கப்புன்னு சொல்லி விட்டிருப்பானுங்க போல. பிக்பாஸ் சரக்கு கொடுப்பாரோ..?

கவின், முகன், தர்ஷன் மூவருமே காதல் மன்னர்கள்... கவினை அபிராமி காதலிப்பது குறித்த பேச்சில் வனிதா யார் அந்த புட்டிக்கண்ணாடியான்னு கேட்கிறார்... பர்ஸ் வாயை விட புட்டிக்கண்ணாடி அழகாய்த்தானே இருக்கிறார்... வேட்டையனாக தமிழக பெண்களின் இதயங்களைக் கவர்ந்தவந்தானே அவன்... அப்படி வீழ்ந்த ஆயிரத்தில் ஒருத்தியாய்த்தான் அபிராமி நிற்கிறாள்... அபிராமி என்ற பிரபலம் பொதுவெளியில் எனக்கு கவின் மீது ஒரு கிரஷ் எனச் சொல்ல முடிகிறது. அதை கூட இருப்பவர்கள் ஏற்றுக் கொண்டு அவனுடன் காதல் செய்ய சில நாடகங்களையும் சொல்லித்தர முடிகிறது. எத்தனையோ அபிராமிகள் கிராமங்களில் வேட்டையனை வெறித்தனமாக லவ்விக் கொண்டுத்தான் இருக்கிறார்கள். கிராமத்து அம்மாவிடம் கவினை நான் லவ் பண்றேன்னு சொல்லியிருந்தா செருப்பால் அடி வாங்கியிருப்பாள். எது எப்படியோ தன் மகளென்றால் எந்த வனிதாக்களும் பாத்திமாக்களும் இப்படிச் சொல்லிக் கொடுக்க மாட்டார்கள் அல்லவா..?. 

இந்த ஓவியா டான்ஸ் ஆடி ஆரம்பிச்சி வச்சிச்சு... இப்ப பள்ளிக்கூடத்துல காலையில வாய்ப்பாடு சொல்ற மாதிரி தூங்குறவங்க அப்படியே ஓடியாந்து தாவிக்குதிச்சி ஆடணும்ன்னு பிக்பாஸ் சட்டம் போட்டுட்டாரு... காலையில சின்ன டவுசரும் பனியனுமாய் அவங்க ஆடுறது... ம்.. இளவட்டத்துக்கு பிளஸ்... குடும்பத்தோடு பார்த்தா மைனஸ்.

கொசுறு : பாத்திமாபாபு ஏன் இவ்வளவு மேக்கப் போட்டுக்கிட்டு தசாவதாரம் கமல் மாதிரி இருக்காருன்னுதான் தெரியலை... மேக்கப் இல்லாத அபிராமி பார்க்க அழகாத்தானே இருக்கார்... சிறுசைப் பார்த்து பெருசு கத்துக்கிட்டாச் சரி.

மீராவைக் களத்தில் இறக்கியும் பருப்பு வேகலையேன்னு யோசிச்ச பிக்பாஸ் இந்த வாரத்துக்கான டாஸ்க் என மூன்று சீட்டெடுத்து அதில் உள்ள கேள்விக்குப் பதில் சொல்லச் சொல்லியிருக்கிறார். எல்லாருக்கும் ஓரே மாதிரி சோக ராகம் பாடும் சீட்டுத்தான்...

அதனால் பிக்பாஸ் வீட்டுக்குள் ஆரம்பமாகியிருக்கிறது சோகமழை...

பதிவு நீளமாப் போகுது... மழை பெய்யட்டும் சென்னையிலும்... பிக்பாஸ் அரங்குக்குள்ளும்... 

மொத்தமாக அடுத்த பதிவில் வாசிப்போம் சோககீதம்...

பிக்பாஸ் தொடரும்...
-'பரிவை' சே.குமார்.

புதன், 26 ஜூன், 2019

மனசின் பக்கம்: கிறுக்கிய கதைகளில் கொஞ்சம்

ரொம்ப நாளைக்குப் பிறகு இந்த மாதம் சில கதைகள் எழுதும் வாய்ப்புக் கிடைத்தது. அதில் இரண்டு கதைகள் போட்டிகளுக்கு அனுப்ப எழுதி அனுப்பியும் வைத்தாச்சு.

சில கதைகளை கிராமப் பின்னணி தவிர்த்து எழுதி பார்த்தேன். பரவாயில்லையின்னு தான் தோணுது... ஆனாலும் நாம கிராமப் பின்னணி கதைக்குத்தான் லாயக்கு என்பதையும் உணரமுடிகிறது.

முழுக்கதையும் இங்கு பகிர்வதில்லை என்பதால் இங்கு கதைகளில் கொஞ்சமே கொஞ்சமாய் ... எல்லாக் கதைகளையும் இங்கு பகிரவில்லை... பகிர்ந்ததில் எந்தக் கதை உங்களை கவரும் விதத்தில் இருக்கு...  எது நல்லாயிருக்காதுன்னு தோணுதுன்னு சொல்லுங்க.

'தஸ்ரின்' என்றொரு கதை (இங்கு பகிரப்படவில்லை) தினமணி ரம்ஜான் சிறப்பு மலருக்கு அனுப்பினேன். கதை தெரிவானதா  இல்லையா தெரியலை. யாரேனும் அந்த மலர் வாங்கி இருந்தால் பார்த்து சொல்லுங்க.

இனி கதைகளில் சில பாராக்கள்...


குடிகாரன்

சாமிநாதனின் 'வேலவா' துணிக்கடை வாசலில் சரிந்த நிலையில் அமர்ந்திருந்தான் அவன்.

வயசு முப்பதைந்துக்குள்தான் இருக்கும் அவனுக்கு.... தாடியும் மீசையும் லேசாக நரைத்திருந்தது.

சட்டை, பேண்ட் எல்லாம் மண்ணில் விழுந்து புரண்டதில் கலர் மாறியிருந்தது.

தலைமுடி எண்ணையைப் பார்த்து மாதங்கள் ஆகியிருக்கலாம்.

உடம்பில் சில காயத்தின் தழும்புகள் இருந்தன.

சுப்பிரமணி கடையின் முன் சைக்கிளை நிறுத்தியபோது ஏறிட்டுப் பார்த்துவிட்டு தலை குனிந்து கொண்டான் அவன்.

அவன் நகர்ந்தால்தான் கடை ஷட்டரைத் தூக்க முடியும்.

"ஏய்... ஏம்ப்பா... அங்கிட்டுப் போய் உட்காரு..." மிரட்டுவது போல் சொன்னான் சுப்பிரமணி.

ஏறிட்டுப் பார்த்துவிட்டு மீண்டும் குனிந்து கொண்டான்.

"ஏய்... இங்கேரு... உன்னைத்தான் சொல்றேன்.... நகண்டு உக்காருப்பா... கடை திறக்கணும்..." சற்றே கோபமாய்ச் சொன்னான் சுப்பிரமணி.

செண்பா 

பக்கத்தில் அமர்ந்து 'சாரி' என்றான்.

தலை தூக்கி அவனைப் பார்த்தாள். கண்ணீரில் குளித்த கண் சிவந்திருந்தது.

அவளின் உதடு துடித்தது.

"ஏய்... ப்ளீஸ்.." என்றான் கெஞ்சலாய்.

அவனை முறைத்தவள் சேலைத் தலைப்பால் முகம் துடைத்தாள்.

உதட்டில் ஒரு காயம்... ரத்தத்தை வெளியேற்றியிருந்தது.

அது காய்ந்து போயிருந்தது.

அவன் கையால் உதடு தொட்டான்... தட்டி விட்டாள்.

"அதான் சாரின்னு சொல்றேனுல்ல..." மெல்லப் பேசினான்.

விரக்தியாய்ச் சிரித்தாள்.

"இது நடந்திருக்கக் கூடாது... பட்... தவறுதலா.." மெல்ல இழுத்தான்.

"தவறுதலா...? அதெப்படி எல்லாம் நடத்திட்டு... சாரியும்... தவறுதலா நடந்திருச்சுன்னும் சொல்ல முடியுது இந்த ஆண்களால்..." கோபமாய்க் கேட்டாள்.

நாகர்

கம்மாய்க்கரையை நோக்கிப் போனபோது ஆளாளுக்கு ஒவ்வொரு காராஞ்செடிக்குப் பின்னால் அமர்ந்து வெளிய இருந்தது ஞாபகத்தில் ஆடியது. காராஞ்செடிகள் இன்னும் இருந்தன... அமரத்தான் இடமில்லாது முட்கள் மண்டிக்கிடந்தது.

கம்மாய்க்கரை ஏறினால் ஒரே கருவை மரங்கள்... பாதையே இல்லை... மாடுகள் நுழைந்து சென்று கருவைக்காய் பொறக்கித் தின்ன பாதை மட்டுமே வழியாய், முள் உடம்பில் கிழிக்க அந்த வழியாக  நாகரின் ஒரம்பா மரம் நோக்கி நடந்தேன். 

அருகே செல்லச் செல்ல ஆட்கள் இந்தப்பக்கம் வருவதேயில்லை என்பது அப்பட்டமாய்த் தெரிந்தது. மாட்டெருக்களைத் தவிர மனிதக் கழிவுகள் எதுவும் இல்லாதிருந்தது. கண்மாய்க்குள் அமர்ந்து குடித்துவிட்டு யாரோ தூக்கிப் போட்டிருந்த சரக்குப் பாட்டிலொன்று சிதறிக் கிடக்க, அதனருகே கரையான் அரித்த சிகரெட் பாக்கெட் ஒன்றும் கிடந்தது.

நரி ஒன்று செத்து அழுகிப் போய் எலும்புகள் தெரியக் கிடந்தது. அதன் நாற்றம் காற்றோடு கலந்திருந்தது.

சில பாம்புச் சட்டைகள் கிடந்தன. பாம்புகள் நிறைய இருக்கலாம். 

நான் படிக்கும் காலத்தில் நின்ற சாய்ந்த பூவரசமரம் இருந்ததற்கான அறிகுறியே இல்லாமல் மஞ்சநெத்தி ஒன்று நின்று கொண்டிருந்தது... ஆனால் அந்தப் பூவரசு மட்டுமில்லாமல் அவளும் என் மனதுக்குள் வந்தாள். அவள்...ஆம்... பெத்து மாமா மகள் லதாவும் ஞாபகத்தில் வந்தாள். 

வீடு

"ஏம்ப்பா... ஊருக்கு வந்தாப்போனா ஒரு வீடு வேணாமாப்பா..." மெல்லக் கேட்டார் சின்ராசு.

"இப்பவே அங்கிட்டு வர்றதில்லை... ஏதோ நல்லது கெட்டதுக்குத்தான் வந்துட்டு ஓடியாறோம்... அங்க வந்து தங்குற அளவுக்கு வசதி வாய்ப்பு எதுவும் இல்லையில்ல... பிள்ளைகளுக்கு எல்லாம் நகரத்து வாழ்க்கை பழகிப் போச்சு... இனி அதுக அங்க வந்து தங்குங்களா என்ன.. ஏசியில்லாம உங்க பேரம்பேத்திக தூங்க மாட்டாங்க சித்தப்பா... இனி யாரு சித்தப்பா வரப்போறா... மராமத்துப் பாத்து வைக்கிற அளவுக்கு அந்த வீட்டுல என்ன இருக்கு... உங்க மருமக அப்பாதான் கடல் மாதிரி வீடு கட்டி, சென்ட்ரல் ஏசி போட்டு வச்சிருக்காரே... அதுக்கும் நம்மூருக்கும் எவ்வளவு தூரம்..? பசங்க அங்க தங்குறதைத்தான் விரும்புவாங்க.... அங்கிட்டுத் தங்கிட்டு ஊர்ல வந்து சொந்தபந்தத்தைப் பாத்துட்டு வந்தாப் பத்தாதா..."

"இல்லப்பா... இருந்தாலும்... அண்ணன் வாழ்ந்த வீடு... நாங்க பொறந்த வீடு... அந்த ஞாபகார்த்தத்துக்காச்சும்..." இழுத்தார்.

"ஞாபகமா வச்சி... என்ன பண்ண... அட ஏஞ்சித்தப்பா... அப்பா இருக்கும் போதே சுவரெல்லாம் பெயர்ந்து விழுந்துச்சு.. இப்பவே உத்தரம், கைமரமெல்லாம் கரையான் அரிச்சிருக்கப் போவுது... பூட்டுத் தொறவா இருந்தாலும் பரவாயில்லை... அப்பா சாவுக்கு அப்புறமா பூட்டிகத்தானே கிடக்கு..."

"ஏய்... அப்படிச் சொல்லாதேப்பா... எல்லாம் வைரம் பாஞ்ச மரங்க... அவ்வளவு சீக்கிரத்துல கரையான் புடிச்சிடாது... அதுபோக ஒந்தம்பி பொண்டாட்டி அப்பப்ப தொறந்து கூட்டி அள்ளிட்டுத்தான் வருது... பூட்டுத் தொறப்பா இல்லைன்னு சொல்லாதே.... நாங்க பாத்துக்கிட்டுத்தான் இருக்கோம்... என்ன ஒட்டடை அடிக்காம கை மரமெல்லாம் ஒட்டடை படந்து கிடக்குதாம்.. ஒரு ஆளு விட்டியன்னா... சுத்தம் பண்ணப் போறான்..."

வசந்தி

வசந்தியின் இறப்புச் செய்தியோடுதான் அன்றைய பொழுது விடிந்தது.

என்னால் அந்தச் செய்தியை சுலபமாகக் கடந்துவிட முடியவில்லை.

மரணமடையக் கூடிய வயதொன்றும் இல்லை அவளுக்கு என்பது மனசுக்குள் மீண்டும் மீண்டும் சுழன்று கொண்டேயிருந்தது.

எனக்கும் அவளுக்கும் ஒரு சில வயது வித்தியாசம்தான். ...

மூன்று மாதத்திற்கு முன்னர்தான் நான் அம்பதைத் தொட்டிருந்தேன்.

அம்பது வயதுக்குள் அவளுக்குச் சாவு.

ஏற்க முடியவில்லைதான் என்றாலும் இருபத்தஞ்சி வயதில் கூட அட்டாக்கில் சாகின்ற காலமாகிவிட்டதே.

யாருக்கு எப்போன்னு யாருக்குத் தெரியும்.

விதி வந்தால் போக வேண்டியதுதானே...

அவள் பிறந்த வீட்டில் எல்லாரும் கூடியிருந்தோம்.

'என் மகளை அள்ளிக் கொடுத்துட்டேனே... என்ன செய்வேன்.." புலம்பினார் எழுபத்தைந்து வயதைக் கடந்த சீனிச்சாமி.

'நாம்பெத்த சீமையே...' எனக் கதறினாள் வசந்தியின் தாய்.

பார்க்க பரிதாபமாக இருந்தது. இழப்புக்களைச் சுமக்கும் முதுமைகளின் வலியை சொல்லில் கடத்திவிட முடியாதுதானே.

ஊரே அழுதது.... அழுகைச் சத்தம் ஊரை தாண்டிக் கேட்கக் கூடும்.

"என்னாச்சுன்னு ஏதாச்சும் தெரியுமா...?" மெல்லக் கேட்டேன் அவளின் அண்ணனிடம்.

வீராப்பு

"வாங்க சித்தப்பா... என்ன கருக்கல்ல வந்திருக்கீக... ஏ... ராஜாத்தி சித்தப்பாவுக்கு காப்பி போடு..."

"காப்பியெல்லாம் வேணாந்தா.... இப்பத்தான் குடிச்சிட்டு வாரேன்... ஏஞ் செலுவம்... எங்காதுக்கு அரசபுரசலா ஒரு சேதி வந்திருக்கு... ஓனக்கு எதுவுந் தெரியுமா...?"

"என்ன சேதி சித்தப்பா..?"

"எல்லாப் பக்கமும் பேசுறாய்ங்க... நீ தெரியாதுங்கிறே... எங்க ஒம்மவன்..."

"ம்.... அதுவா...? தெரியிஞ் சித்தப்பா... என்ன செய்யச் சொல்லுறீய..?"

"அப்ப ஒத்துக்கிறியா...? ஏழு பங்காளிக்குன்னு ஒரு மொற இருக்குடா... நாளாப்பின்ன ஊரு, நாட்டுக் கூட்டத்துல நம்மளுக்கு மதிப்பிருக்குமா..?"

"என்ன பண்ண சித்தப்பா... சொல்லிப் பாத்தாச்சி... அடிச்சிப் பாத்தாச்சி... செத்துருவேன்னு மிரட்டுறான்... என்னய என்ன செய்யச் சொல்லுறீய...."

"என்ன செய்யச் சொல்லுறீய... என்ன செய்யச் சொல்லுறீயன்னா... நீயே கட்டி வப்பே போல..."

"இந்தாங்க மாமா காப்பி..." என காபியை நீட்டியவளிடம் "அதான் வாணாமுன்னு சொன்னேனுல்ல... ஏம் போட்டே... செரி குடுத்தா...." என்றபடி வாங்கிக் கொண்டார்.

"அவுகளும் சொல்லிப் பாத்தாச்சு... அடிச்சி மெரட்டியெல்லாம் பாத்துட்டாக... அவளத்தான் கட்டுவேன்... இல்லேன்னா ரெண்டு பேரும் வெசத்தக் குடிச்சிட்டு செத்துப் போவோமுன்னு மிரட்டுறான்.... இதுக்கா பெத்து வளத்தோம்... என்ன செய்யுறதுன்னு தெரியல மாமா..." சேலை முந்தானையால் வாயைப் பொத்திக் கொண்டாள். கண்ணீர் தாரைதாரையாக கன்னத்தில் ஓடியது.

மூத்தவள்

"உங்களுக்கு எத்தனை தடவை சொன்னாலும் அறிவே வராதா..?" வந்ததும் வராததுமாக நிலைப்படியைப் பிடித்தபடி கத்தினான் ஆறுமுகம். பதில் சொல்லாது உக்கார்ந்திருந்தார் மூர்த்தி.

மகனின் சத்தம் கேட்டு அடுப்படியில் இருந்து ஈரக்கையை முந்தானையில் துடைத்தபடி வந்த லெட்சுமி, "ஏய் எதுக்குடா வாசல்ல நின்னு கத்துறே... எதுவாயிருந்தாலும் வீட்டுக்குள்ள வந்து பேசு" என்றாள் சத்தமாக.

"வாசல்ல நின்னு கத்துறதால உங்க கவுரவம் கொறஞ்சி போகுதாக்கும்... ஏங்கத்துறேன்னு என்னையக் கேக்குறியே... என்ன பண்ணுனாருன்னு அவரைக் கேட்டியா... நீ எப்படிக் கேப்பே... மேயுற மாட்டைக் கெடுக்குற நக்குற மாடு மாதிரி அந்தாளைக் கெடுக்குறதே நீதானே... எதையும் கேட்டுக்காதே..." நின்ற நிலையில் இருந்து மாறாமல் கத்தினான்.

தெருவில் ஒரு சில தலைகள் தன் வீட்டையே பார்ப்பதைப் பார்த்த லெட்சுமி 'இங்க என்ன ஆடுதுன்னு பாக்குறாளுக' என்று முணங்கியபடி "அப்பா... நான் நக்குற மாடாவே இருக்கேன்... நீ முதல்ல உள்ள வா.. வாசல்ல நின்னு கத்தாம"

"எங்கிட்ட கத்து... அவருக்கிட்ட எதுவும் கேக்காதே..." என்றபடி உள்ளே வந்தான் ஆறுமுகம்.

"அவரு என்ன பண்ணுறாரு... எங்கே போறாருன்னு எனக்கென்ன தெரியும்... நீயும் அடியுமில்லாம முடியுமில்லாமப் பேசுறே..."

-'பரிவை' சே.குமார்.

செவ்வாய், 25 ஜூன், 2019

பிக்பாஸ் சீசன்-3 ஆரம்பம்

Image result for பிக்பாஸ் சீசன் - 3

பிக்பாஸ் சீசன் - 3 ஆரம்பிச்சதும் 'இதெல்லாம் பார்த்துக்கிட்டு...' என ஒரு சாரார் சொல்ல ஆரம்பித்து விட்டார்கள்... சொல்வதெல்லாம் உண்மைகளையும் தினம் தினம் அழுது கொண்டே நகரும் நாடகங்களைப் பார்ப்பதைவிட இது ஒன்றும் தவறில்லை என்பதே என் எண்ணம். 

இங்கு அலுவலகம், அதை விட்டால் அறை என்ற வாழ்க்கையில் ஊருக்குப் பேச, சமைக்க, சாப்பிட... இது தவிர்த்து வெறேன்ன இருக்கு பொழுது போக்க... எல்லாம் முடித்து கட்டிலில் முடங்கும் போது தூக்கத்தத்துக்கு முன் ஏதோ ஒன்று அது சினிமாவோ... யூடிப் வீடியோக்களோ அல்லது டிவி ஷோக்களோதானே பார்க்க வேண்டியிருக்கிறது. முகநூல் நேரங்கொல்லியில் கிடப்பதைவிட பிக்பாஸ் பார்ப்பதொன்றும் தவறில்லை.

பிக்பாஸ் பிடிக்காதவர்கள் தொடர்ந்து வாசிக்க வேண்டாம் என்று நினைக்கிறேன்...

பிக்பாஸ் தொகுப்பாளன் என்பது கமலுக்கு கிடைத்த மிகப்பெரிய பிளாட்பாரம்... சென்ற சீசனிலேயே அரசியல் பேசியவர் கட்சி ஆரம்பித்த பின்னர் விடுவாரா என்ன இந்த முறை அதிக அரசியல் இருக்கும் என்பதை முதல் நாள் போட்டியாளர்கள் அறிமுகத்திலேயே மய்யமாக நின்றுதான் களமாடினார்.

லாஸ்லியா இலங்கைத் தமிழில் பேசச் சொன்னதும் இலங்கைத் தமிழென அரசியல் பேசினார். அத்துடன் லாஸ்லியா இலங்கைத் தமிழ் விடுத்து நம்ம தமிழுக்கு மாறிவிட்டார்.

பிக்பாஸ் - இது சமூகத்தின் பிரதிபலிப்பு என்று கமலும் பிக்பாஸூம் அடிக்கடி சொல்கிறார்கள். அப்படியென்ன சமூகத்தின் பிரதிபலிப்பு இருக்குன்னுதான் தெரியலை... பிரபலங்களை மட்டுமே கொண்டு வந்து கூண்டில் அடைக்கிறார்கள்... இதில் சாதாரண மனிதனின் குரல் எங்கே ஒலிக்கிறது என்பதுதான் தெரியவில்லை. 

குட்டை டவுசரும்... காலையில் ஆடும் குத்தாட்டமும்... கட்டிபிடி வைத்தியமும்தான் சமூகத்தின் பிரதிபலிப்பு என்று நினைத்துவிட்டார்கள் போலும். இதைச் சொல்லி மக்களை ஏமாற்றப் பார்க்கிறார்கள்.

தண்ணிக்கும் சமையல் எரிவாயுவுக்கும் கட்டுபாடு விதித்திருக்கிறார்கள்... தொலைக்காட்சிகளில் முதல் முறையாக என்பது போல் பிக்பாஸில் முதல் முறையாக என்று சொல்லி எரிவாயுவுக்கு மீட்டரும்... தண்ணிக்கு லிட்டர் கணக்கும் கொண்டு வந்திருக்கிறார்கள்.

வந்திருப்பவர்களில் பாதிப்பேர் சீசன் - 3 யை சிறப்பாக கொண்டு செல்வார்களா என்பது சந்தேகமே.

சரவணனை பொன்னம்பலத்துக்குப் பதிலாக கொண்டு வந்திருப்பது போல்தான் தெரிகிறது... மனிதர் ரொம்ப அசட்டையாக இருப்பது போல் காட்டிக் கொள்கிறார்... ஆனால் பிக்பாஸ் இருக்க விடமாட்டர் என்பது வரும் நாட்களில் அறியலாம்.

பாத்திமா பாபுவைப் பொறுத்தவரை நானே நாட்டாமை செய்ய வேண்டுமென எல்லாத்துக்கும் விளக்கம் கொடுக்கிறேன் என கழுத்தறுப்பு செய்ய ஆரம்பிக்கிறார்... அம்மாவென எல்லாரும் அழைக்கிறார்கள்... மும்தாஜ், காயத்ரி வரிசையில் இவரும் இருக்க வைக்கப்படலாம் என்றே தோன்றுகிறது. இருப்பினும் முதல் முறை என்பதால் என்ன ஏது என்று ஆராயாமல் கைதட்டுவது தவறு என்று அவர் சொன்னது ஏற்க்கக் கூடிய ஒன்று. நாம் எப்போதும் யோசிக்காமல்தானே கை தட்டுகிறோம்... திரையில் தனுஷ் உதடு முத்தம் கொடுக்கும் போது கைதட்டுபவர்கள்தானே நாம்...

காதல் கண்ணீர் இல்லாமல் பிக்பாஸா..? 

அதெப்படி கோழிகளையும் சேவல்களையும் ஒரு கூட்டில் அடைத்து விட்டு காதல் களபரம் இல்லாமல் விட்டுவிட முடியும்...?

அதற்கான முயற்சியாய் முதல்நாளே பலமான திரைக்கதை எழுதிட்டாங்க... அபிராமிக்கு கவின் மீது கிரஷாம்... என்னங்கடா டேய்... வந்த உடனேயா என்று தோன்றினாலும் 100 நாள் சுவராஸ்யத்துக்கு காதல் இல்லையென்றால் எப்படி..? ஆரம்பிச்சிட்டாங்க என ரசிகர்கள் ஆர்ப்பரிக்க வேண்டாமா..?

டிஆர்பிக்காகவும் தமிழின உணர்வுக்காவும் இலங்கையில் இருந்து இருவர்... அரசியலாகட்டும் ஊடகங்களாகட்டும் இலங்கையை நம் சுயலாபத்துக்காக மட்டுமே பயன்படுத்த நினைப்பது வேதனைக்குரியது... வெட்கப்பட வேண்டியது 

மலேசியாவில் இருந்து வந்திருக்கும் பாடகர் முகன்ராவ் கூட டிஆர்பிக்கானவர்தான்... வெளிநாட்டவர் மூவரும் அவ்வளவு சீக்கிரத்தில் வெளியேற்றப்பட மாட்டார்கள் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ..?

சாண்டி ரொம்ப ஓவராகத்தான் நடிக்கிறார்... சொல்லி விட்டிருப்பார்கள் போல... முகவாயில் அடிபட்டு நாலு தையல் என்றார்கள். நாலு மணி நேரத்தில் காயத்தின் வடுகூட தெரியாமல் தையல் பிரிக்கப்பட்டிருப்பது ஆச்சர்யப்பட வைத்தது. அப்படியொரு வைத்திய முறையை ஏழைபாழைகளும் பயன்படுத்தும் விதத்தில் வெளிக்கொண்டு வரலாம் விஜய் டிவி.

லாஸ்லியாவை முகன்ராவ் லவ்வும் நாள் விரைவில் வரும்... நேற்றே பய வட்டம் போட்டுட்டான்.

கவின் மீது அபிராமி மட்டுமின்றி சாக்சியும் லவ்வக் கூடும் என்றும் தோன்றுகிறது. 

சீசன்-3 முக்கோணக் காதலில் மூழ்கலாம்... மூழ்கலாம் என்ன மூழ்கலாம்... கண்டிப்பாக முக்கோணக் காதல்தான்.

வைத்யா இளைஞர்களுடன் ரொம்ப இயல்பாய் இருப்பது சிறப்பு. 

நான் விரும்பும் இயக்குநர் சேரன், சாண்டி ஆடச் சொன்னதற்கு இறங்கி ஆடினார்... பாத்திமா பாபு விளக்கம் கொடுத்தபோது இந்த திட்டத்துக்குத்தான் கை தட்டினோம் என்றார். சேரனைப் பொறுத்தவரை இவர்களுடன் எப்படி இணைந்து பயணிப்பார் என்று தெரியாது. முதல் வாரத்தில் கூட நாமினேசன் செய்யப்படலாம்.

எல்லாருடைய எதிர்பார்ப்பும் வனிதா விஜயகுமார் மீதுதான்... வெளியில் குடும்பத்தினரை ரோட்டுக்கு இழுத்தவர்... பிக்பாஸ் வீட்டுக்குள் அடித்து ஆடாமலா இருப்பார்... பாத்திமாவுக்கு ஒருபடி மேலே வில்லியாக இருப்பார் என்பதில் சந்தேகமில்லை... எப்போது விஸ்வரூபம் எடுப்பார் என ஆவலுடன் காத்திருக்கலாம். 

கணவனுடன் சேர வேண்டுமென நித்யா வந்தது போல் மகன் புரிந்து கொள்ள வேண்டும் என வனிதா சொல்லியிருக்கிறார். அவன் புரிந்து கொள்ளும்படி சக போட்டியாளர்களுடன் இவர் நடந்து கொள்ள வேண்டுமே... நடப்பாரா..?

ஜாங்கிரி மதுமிதா.... சாமியெல்லாம் கும்பிட்டு ஸ்லோகம் சொல்லி நுழைந்திருக்கிறார்... அவர் காமெடிப் பீசா... இல்லை கர்ஜிப்பாரா என்பதை போகப்போகத்தான் வெளிக்காட்டுவார்... ஆனாலும் ரொம்ப சாமர்த்தியமாக விளையாடுவார் என்பது மட்டும் நிச்சயம்.

துள்ளுவதோ இளமை ஷெரினை அப்படியே மனதில் வைத்திருந்தால் பிக்பாஸ் தேடிப்பிடித்து அதெப்படி 18 வருசமா ஷெரினை அதே முகத்தில் மனசுக்குள் வைத்திருப்பீர்கள்... இன்றைய முகத்தைப் பாருங்கள் என கண்ணில் காட்ட, சத்தியமாக இதுதான் ஷெரின் என பெயரைச் சொல்லும் வரை நம்ப முடியவில்லை. காலம்தான் எத்தனை மாற்றங்களை நம் உடலில் கொண்டு வந்து விடுகிறது.

எத்தனை பெண்கள் இருந்தாலும் பிக்பாஸ் திரைக்கதைப்படி முகன்ராவ், கவின் மட்டுமே காதல் நாயகர்களாக இருக்க முடியும்... தர்ஷன் ஒதுக்கியே வைக்கப்படலாம் என்றாலும் பிக்பாஸின் எழுச்சி மற்றும் வீழ்ச்சியைப் பொறுத்து திரைக்கதையில் மாற்றம் செய்யப்படலாம்.

மொத்தத்தில் இந்த பிக்பாஸ் - அடித்து ஆடுமா தெரியாது... கண்டிப்பாக ஆப்கானிஸ்தானுக்கு எதிராக தோணி ஆடியது போல் ஆட விடமாட்டார் பிக்பாஸ் என்று நம்பலாம். 

சண்டையில்லேன்னா எப்படி... இந்நேரம் திரைக்கதையில் எத்தனை மாற்றம் செய்தாரோ...?

எல்லாமே முன் கூட்டியே சொல்லிக் கொடுத்துத்தான் நடக்கிறது... என்னோட நண்பன் அங்க வேலை பார்க்கிறான்... அவன் முதல்நாள் இரவே அடுத்தநாள் எப்படி நடிக்க வேண்டும் என திரைக்கதை கொடுக்கப்படும் என்று சொன்னான் என நண்பர் ஒருவர் சொன்னார். இது முழுக்க முழுக்க எழுதப்பட்ட கதைதான் என்பதை எல்லாரும் அறிவோமே.... அதை அங்கு வேலை பார்ப்பவர்தான் சொல்ல வேண்டுமா என்ன... சுவராஸ்யமாய் போகுதா... அது போதும் நமக்கு... 100 நாள் பார்க்கலாம்.

ஆண், பெண் படுக்கை அறைகளுக்கு இடையே தடுப்பு இல்லை... தடுப்பு இருக்கும் போதே சீசன் 2-ல் மகத் பண்ணியதை நினைவில் கொண்டு பிக்பாஸ் இம்முறை தடுப்பெல்லாம் எதுக்குடா... என்ன வேணுமின்னாலும் செய்யுங்கடா... எனக்கு டிஆர்பி வேணும் என்ற முடிவுக்கு வந்துவிட்டார் போல.

தங்கள் டிஆர்பிக்காகத்தானே ஊடகங்கள் நடிகர் சங்கத் தேர்தலின் போது தீவிரமாக நேரடி ஒளிபரப்புச் செய்தார்கள். மக்கள் பிரச்சினைகளின் போது முன்னும் பின்னும் மூடிக் கொண்டுதானே இருப்பார்கள். அதனால்தான் சுரேஷ்குமார் என்பவர் 'தமிழக வேசி ஊடகங்கள்' என டுவிட்டரில் டிரண்ட் ஆக்கியிருக்கிறார். என்ன செய்தாலும் நாம திருந்தப் போறோமா என்ன... பிக்பாஸும் டிஆர்பி பின்னேதான் ஓடுவார் என்பதில் யாருக்கேனும் மாற்றுக் கருத்து உண்டா... 

மதுமிதா சொல்வது போல் இந்த முறை லெக்பீஸ்கள் அதிகம்தான்... குழந்தைகளுடன் பார்க்க முடியாத பிக்பாஸாகத்தான் இது இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.


ஓவியா ஆர்மி போல பலருக்கு ஆர்மிகள் முளைக்கத் தொடங்கிவிட்டன... 

எல்லாரையும் சாக்சியை விட லாஸ்லியா கவர்வார் என்றே தோன்றுகிறது.

கவினுக்கும் சாண்டிக்கும் வெற்றி யாருக்கு என்பதில் பெரிய போட்டியிருக்கும்.

ஐஸ்வர்யாவைக் காப்பாற்றியது போல் சாக்சி, ரேஷ்மா, அபிராமி மூவரில் ஒருவரை பிக்பாஸ் காப்பாற்றி இறுதிவரை இழுத்து வருவார்.

பாத்திமா, வனிதா இருவரும் அடித்து ஆட பயன்படுத்தப்படுவார்கள்.

என்னதான் சொன்னாலும் பிக்பாஸ் நிகழ்ச்சியைத் தொகுக்க கமலைத் தவிர சிறப்பான ஒருவர் கிடைப்பது அரிது.

சீசன் 2-ல் பார்த்த கம்பீர கமல் இதில் மிஸ்ஸிங்... தேர்தல் அலைச்சல் அவரின் தேகத்தில் தெரிகிறது... அந்தக் கம்பீரக் குரல் கூட உடைந்திருக்கிறது... வரும் நாட்களில் உடலிலும் குரலிலும் கம்பீரம் கூடும் என்று நம்புவோமாக.

இந்த முறை பிக்பாஸ் வீடு சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

பிக்பாஸ் பதிவுகள் அடிக்கடி வரும்.
-'பரிவை' சே.குமார்.

ஞாயிறு, 23 ஜூன், 2019

சிறு தெய்வங்கள் (அகல் கட்டுரை)

Picture

கிராமங்களில் காணலாம் இவர்களை... பெரும்பாலும் கல், பிடித்து வைத்த மண், மரங்களே இவர்களாய் நம் கண் முன்னே. சில இடங்களில் உருவத்துடனும் பல இடங்களில் உருவமற்றும் இருப்பார்கள். கிராமத்தை ஒட்டிய பெரிய கோவில்களிலும் இவர்களைக் காணலாம்... அதிகமாய் யாராலும் கும்பிடப்படாமல் தனித்து இருப்பார்கள்.

இந்தத் தெய்வங்களுக்கு பூசாரி என்றெல்லாம் ஒருவர் இருப்பதில்லை... ஊருக்குள் யாரேனும் ஒருவர் அந்தப் பணியைச் செய்வார். முனீஸ்வரன், அம்மன், கருப்பர் போன்றவர்களுக்கு வேளார் என்று சொல்லக் கூடியவர்கள் முக்கிய தினங்களில் பூஜை செய்வார்கள். மற்ற நாட்களில் எல்லாம் உள்ளூர் ஆட்கள்தான்.

பெரிய கோவில்களில் தெய்வத்தைக்காண காசு கொடுத்துக் காத்திருந்தாலும் மக்கள் கூட்டத்தின் அளவைப் பொறுத்துத்தான் தரிசனத்தின் நிமிடங்கள் அமையும். இங்கு அப்படியில்லை... நம் எதிரே சிறு தெய்வம் இருக்கும்... நாம் அதனருகில் அமர்ந்து பேசிக்கொண்டிருப்போம்.

பெரும்பாலான கிராமங்களில் அம்மன் கோவில்கள் முதலில் மண் மேடையில்தான் உருவாகியிருக்கின்றன. ஒரு மண் மேடையின் மீது சின்னதாய் மண் பீடம் என்பதே ஆதி உருவாய்... அதன் பின்னான வருடங்களில் ஊர் மக்களின் முன்னெடுப்பில் ஒரு சிறிய ஒட்டுக் கொட்டகைக்குள் அம்மன் பீடமாய்.. அதற்குப் பெயர் அம்மாமடை (அம்மன் மேடை) என்பதாய்...

எங்கள் ஊரில் கூட அம்மன் கோவில் அப்படித்தான் உருவாகியிருக்கிறது. எங்க அண்ணன் வயதொத்தவர்கள் சிறிய மேடை அமைத்து சாமி கும்பிட்டிருக்கிறார்கள். அதுவே பல வருடங்களுக்குப் பிறகு ஒரு ஓட்டுக் கொட்டகையாய்... சுற்றிலும் கம்பி அடைத்து.. அதற்குள் அம்மன் பீடம் வைத்து... முன்பக்கம் சிறிய கொட்டையும் கட்டப்பட்டிருக்கிறது.

கோவிலுக்கு அருகே வீடு என்பதால் கோவில் சாவி எங்க வீட்டில்தான் இருக்கும். செவ்வாய், வெள்ளி எங்க அண்ணன் சாம்பிராணி போடுவார்,.. பின்னர் அக்கா... அதன் பின் நான்... தம்பி எனத் தொடர்ந்தது. இப்போது நாங்கள் யாரும் அங்கில்லை என்பதால் வேறொருவர் செவ்வாய், வெள்ளி சாம்பிராணி போடுகிறார். சாம்பிராணி போடுவதில் பால் வேறுபாடெல்லாம் பார்க்கவில்லை அம்மன்... பொங்கல் என்றால் முதல்நாள் இரவு வயது வந்த பெண்கள்தான் உள்ளே ஏறிக் கோலம் போடுவார்கள்.

ஊராரின் முன்னெடுப்பில் பிள்ளையார், முருகன் இணைய, ஓட்டுக் கொட்டகை சில வருடங்களுக்கு முன்னர் சிறிய கோபுரத்துடன் கூடிய கோயிலாக மாறியது. கிராமத்துக் கோவில்களில் அம்மன்கள் பெரும்பாலும் உருவமாய் இருப்பதில்லை. பீடமாய்த்தான் இருக்கும். பீடத்தின் வடிவங்கள் மாறும்... அதன் அமைப்பு பெரும்பாலும் ஒரே மாதிரித்தான் இருக்கும். எங்க ஊரில் கருப்பர்கள் (பெரிய கருப்பன், சின்னக் கருப்பன்) இருவரும் ஒரு கோவிலுக்குள் பீடமாய்த்தான் இருக்கிறார்கள்.

இந்த சிறு தெய்வ வழிபாட்டிலும் சண்டைகள் இருக்கத்தான் செய்யும். சில கிராமங்கள் சேர்ந்து ஒரு தெய்வத்தைக் கும்பிடுவார்கள். வருடம் ஒருமுறை திருவிழா... அதன் தொடர்ச்சியாய் கூத்து, கரகாட்டம், ஒயிலாட்டம், எருது கட்டு அல்லது மஞ்சுவிரட்டு என திருவிழா களைகட்டும். இதற்குள்ளும் எங்க ஊருக்குத்தான் முதல் மரியாதை தரணும் என வீண் பிடிவாதங்கள் எழுந்து அதுவே சண்டையாகி திருவிழாவே காணாமல் பூட்டிக்கிடக்கும் கோவில்களையும் காணலாம். எடுத்துச் செலுத்த ஆளில்லாமல் சிதைந்த கிடக்கும் கோவில்களையும் காணலாம்.

எங்க ஊர் ஐய்யனார் கோவிலில் எருதுகட்டு வருடா வருடம் சிறப்பாக நடக்குமாம்... எங்களுக்கு விவரம் தெரிந்தது முதல் நடப்பதில்லை. மேலே சொன்னது போல் இரு ஊர் மரியாதைப் பிரச்சினைதான் காரணம். அதேபோல் கருப்பர் கோவிலில் அவரைக் குலதெய்வமாக வழிபடும் பல ஊர்ப் பங்காளிகள் சேர்ந்து கிடா வெட்டு சிறப்பாக நடத்துவார்களாம். எங்களுக்குத் தெரிய கிடா வெட்டு இல்லை என்றாலும் வருடம் ஒருமுறை கூடி சாமியாவது கும்பிட்டார்கள். அதிலும் பிரச்சினை என்றாக அவரவர் ஊரில் கருப்பனுக்கு கோவில் கட்டி சாமி கும்பிட ஆரம்பித்துவிட்டார்கள். இப்படித்தான் சிறு தெய்வங்கள் வழிபாடுகளில் சிக்கல்கள் வழிவழி தொடர்கின்றன... தீர்க்கப்படாமலே. 

பங்காளிகளுக்கென்று குலதெய்வம் போக சிறுதெய்வம் அதாவது வீட்டுச்சாமி என்று ஒன்று இருக்கும். இது பெரும்பாலும் உருவமற்ற பெண் தெய்வமாக இருக்கும். அந்தப் பங்காளிகள் வகையில் சில தலைமுறைக்கு முன்னர் பிறந்து மரித்ததாகவோ அல்லது வழிவழியாக கும்பிட்டு வருவதாகவோ இருக்கும்.

இந்தத் தெய்வங்களுக்கு வருடம் ஒருமுறை கோழிப்பூஜை, படையல், கருப்பட்டி பணியாரம், பால்சோறு என சிறப்பாக பூஜை போடுவார்கள். இந்த வீட்டுச்சாமிகள் வழிபாட்டில் பெரும்பாலான இடங்களில் பெண்களே பூஜை செய்வார்கள்... சில இடங்களில் வாயைக் கட்டிக் கொண்டு செய்வதையும் காணலாம்.

இந்த வீட்டுச்சாமி கும்பிடுவதிலும் பங்காளிச் சண்டையால் குழப்பம் வருவதுண்டு. எங்க வீட்டுச்சாமியான உமையவள் (உமையரம்மத்தா சொல் வழக்கு) கூட இப்போது அவரவர் இல்லத்தில் வைத்துத்தான் கும்பிடுகிறோம். பெரும்பாலான வீட்டுச்சாமிகளுக்குப் படைக்கப்படுபவை அவர்கள் தவிர் மற்றவர்கள் சாப்பிடக்கூடாது என்ற கட்டுப்பாடு கொண்டவைதான். மிச்சமிருந்தாலும் நாய், நரி சாப்பிடாமல் மண்ணுக்குள் புதைக்க வேண்டும்.

மரங்களில் வைத்துக் கும்பிடப்படும் சிறுதெய்வங்களின் கதை சுவராஸ்யமானவை. பெரும்பாலும் அது ஏதோ ஒரு வகையில் காவல் தெய்வமாக இருக்கும். மரத்தில் ஆணி அடித்தோ அல்லது குங்குமம் மட்டும்  வைத்தோ கும்பிடப்படும் தெய்வங்கள் இவை. மரம் பட்டுப் போதல் அல்லது ஏதாவது ஒரு வகையில் சாய்ந்து போதல் நிகழும் பட்சத்தில் அருகிருக்கும் மரம் சாமியைத்  தாங்கும். அரிதாக அந்த மரத்துடன் காணாமல் போன தெய்வங்களும் உண்டு. மக்கள் செல்ல வழியில்லாத கருவைகள் நிறைந்து மறந்து போன தெய்வங்களும் உண்டு. எங்கோ இருக்கும் தெய்வத்துக்கு ரோட்டில் சிதறு தேங்காய் உடைத்துக் கும்பிடும் நிகழ்வும் உண்டு. 

இன்று பரபரப்பாக இருக்கும் பெரிய தெய்வங்களின் கோவில்களில் நின்று மனசார வேண்டிக்கொள்ள அவகாசம் கிடைப்பதில்லை. வரிசையில் வருபவர்களின் எண்ணிக்கையைப் பொறுத்தே கும்பிடும் கால நேரத்தின் அளவிருக்கும் அதுவும் 'போ.. போ...' என்று விரட்டும் காவலர் இல்லாத பட்சத்தில் மட்டுமே நிகழும். அதுபோக சாமியைப் பார்க்க பணம் என்ற முறைக்குள் கோவில்கள் வந்த பிறகு சாமிகளுடனான நெருக்கம் குறைந்து போய்விட்டது என்பதே உண்மை. பெரிய கோவில்களில் பரபரப்பில்லாத கோவில்களில் காசு வாங்காத கோவில்களில் நீண்ட் நேர சாமி தரிசனம் கிடைக்கும்.

சிறுதெய்வங்களுடன் நாம் 'நம் கஷ்டத்தைச் சொல்லி அழலாம்... 'நீ என்னைக் காப்பாத்திட்டேடா என சந்தோஷத்தில் கட்டி அணைக்கலாம்... 'இப்படி ஏமாத்திட்டியே' எனத் திட்டலாம்... தொட்டுக் கழுவலாம்... மேல் துண்டால் துடைக்கலாம்... குளித்து ஈரத்துண்டோடு கரையிலிருக்கும் தெய்வத்தை வேண்டலாம்... நினைத்த நேரத்தில் கும்பிடலாம்.. நீண்ட நேரம் அங்கிருக்கலாம்... மனநிறைவோடு திரும்பலாம்.

கிராமங்களில் காவல் தெய்வங்களாய் இந்த சிறுதெய்வங்கள்தான் காத்து நிற்கும். முனியய்யாவும் கருப்பரும் காவல் தெய்வமாய் எல்லாக் கிராமத்திலும் இரு வேறு திசைகளில் எழுந்தருளியிருக்கும். பல கிராமங்களில் கல்லில் மஞ்சளும் குங்குமமும் கொட்டி வைத்து ஏதோ ஒரு பெயரில் சாமி கும்பிடுவதைப் பார்க்கலாம்.
'
'அந்தப் பக்கம் போகதே அங்கிட்டு வனப்பேச்சி இருக்கா...', இந்தா இந்த பனங்காட்டுக்குள்ளதான் வில்லுக்கம்பு வெள்ளச்சாமி இருக்காரு... ராத்திரியில வானத்துக்கும் பூமிக்கும் வெள்ள உருவமா நிப்பாரு...', 'கம்மாக்கரை ஒரம்பா மரத்துல நாகரை வச்சிக் கும்பிடுறாக...' என உருவமற்ற தெய்வங்களுக்கு எல்லாம் உயிரூட்டி வைத்திருக்கும் கிராமங்களில் கருப்பர், அய்யனார், முனியய்யா தவிர பல பெயர் தெரிய சிறு தெய்வங்கள் காணாமலே போய்க் கொண்டிருக்கின்றன என்பதும் உண்மை. இன்னும் இரண்டு தலைமுறைகளில் பெரும்பாலான சிறுதெய்வங்கள் பற்றித் தெரியாமலே போகக்கூடும் என்பதும் உண்மையே.
-'பரிவை' சே. குமார்.

புதன், 19 ஜூன், 2019

'தடீச்சா பிரதா'வுக்கான அணிந்துரை

கோதரர் முனைவர் நௌஷாத்கான் அவர்கள் நான்கு புத்தகங்கள் (2 கவிதை, 2 சிறுகதை) வெளியிட்டிருக்கிறார்கள். இத்துடன் 25 புத்தங்கள் வெளியிட்டிருப்பதாகச் சொன்னார். இந்தக் கடினமான சூழலிலும் அவர் எழுத்தின் மீது கொண்ட ஆர்வத்துக்கும் எடுக்கும் முயற்சிகளுக்கும் வாழ்த்துக்கள். தன் எழுத்துக்கென தான் 12 மணி நேர உழைப்புக்கு வாங்கும் சொற்ப சம்பளத்தில் பெரும் பணத்தை செலவு செய்வதற்கு அதன் மீதான காதல்தான் காரணம். அவருக்கு வாழ்த்துக்கள்.

அவர் எழுதிய 'தடீச்சா பிரதா' என்ற சிறுகதைத் தொகுப்புக்கு நான் எழுதிய அணிந்துரை. இந்த அணிந்துரையில் நான் வாசிப்பாளனே என்று ஆரம்பித்த முதல் பாராவுக்கு நண்பர்கள் மத்தியில் பெருத்த எதிர்ப்பு எழுந்தது என்றாலும் அதுதானே உண்மை. கதைகளைவிட நௌஷாத்தின் எழுத்து இன்னும் பலமானதாக மாற வேண்டும் என்பதையும் அவசரப்படாமல் நிதானமாய் நகரும் பட்சத்தில் அவர் நினைத்த, தான் விரும்பும் தனக்கான இடத்தை அடையலாம் என்பதே என் எண்ணம் என்பதையும் அணிந்துரையிலும் சொல்லியிருக்கிறேன்.

புத்தகங்களை வாசித்து எழுதச் சொன்னார். தற்போது கரன் கார்க்கியின் மரப்பாலத்தில் நின்று கொண்டிருக்கிறேன். அது முடித்தபின்னர் நௌஷாத்தின் புத்தக வாசிப்பும் அதன் தொடர்ச்சியாய் மனசின் எண்ணமும் எழுத வேண்டும்.

படத்தைக் CLICK செய்து பெரிதாக்கி வாசிக்கவும்.



வாசித்து இருப்பீர்கள்...  தங்கள் மனதில்பட்ட கருத்தைச் சொல்லுங்கள். நன்றி.

-'பரிவை' சே.குமார்.

வெள்ளி, 14 ஜூன், 2019

மனசு பேசுகிறது : நட்பும் எழுத்தும்

ன் வாழ்க்கை எப்போதுமே நட்புக்கள் சூழத்தான் இருக்கிறது. உறவுகளுடன் உரசல் இல்லையென்றாலும் நட்புக்களே படிக்கும் காலம் முதல் இன்று வரை தொடர்ந்து என்னை நகர்த்திக் கொண்டிருக்கிறது. இப்படியான நட்புக்கள் கிடைத்திருப்பது வரமே.

உடல் நலமின்மையால் பேசும்போது இருமிக் கொண்டே பேசியதைக் கேட்டதும்  உங்களிடம்தான் முதல் காப்பியை கொடுப்பேன் எனத் தன்னுடைய நான்கு புத்தகங்களைத் தூக்கிக் கொண்டு இரவு பத்தரை மணிக்கு மேல் என்னைத் தேடி வருகிற நௌஷாத்தின் கைகளில் பேரிச்சைப் பழமும் இருமலுக்கான டானிக்கும். இதெல்லாம் எதற்கு... நான் அணிந்துரை எழுதிய புத்தகத்தை மட்டும் நட்புக்காகப் பெற்றுக் கொள்கிறேன்... மத்ததற்கெல்லாம் பணம் கொடுத்து வாங்குகிறேன் என்றதும் அதெல்லாம் இல்லை என நான்கு புத்தகத்தையும் கொடுத்து வாசியுங்கள்... உங்க கருத்தை எழுதுங்க... மற்றவர்களுக்கும் வாசிக்கக் கொடுங்க என்றான். வாசித்து எழுத வேண்டும்.

இரவு டிபன் அவனுடன்... அவனேதான் பில் பணமும் கொடுப்பேன் என நின்று கொடுத்தான். புத்தகங்கள் கொடுத்ததைவிட மருந்தோடு வந்த மனசுக்கு நான் என்ன கைமாறு செய்யப் போகிறேன்..?


முதல் தொகுப்புக்காக தெரிவு செய்த கதைகளைப் பலருக்குக் கொடுத்தேன். அதில் சிலரே வாசித்து தங்கள் கருத்தைச் சொன்னதுடன் அதை முகநூலிலும் பகிர்ந்து கொண்டார்கள். வாசிக்காதவர்களைப் பற்றிச் சொல்ல எதுவும் இல்லை... இங்கு வேலை... வேலை என ஓடிக் கொண்டிருக்கும் போது வாசிக்க முடியாமல் போகலாம்... ஆனால் வாசித்த அந்த சிலரை என் எழுத்து ஈர்த்திருப்பதில் எனக்கு மகிழ்ச்சி.

அப்படித்தான் தங்கை சுடர்விழியிடமும் கொடுத்தேன். இரண்டே நாளில் வாசித்து தன் கருத்தைச் சொன்னதுடன் அவர் பங்குக்கு முகநூலில் எழுதியிருந்தார். அது உங்கள் பார்வைக்கு...

தீபாவளி முதல் சமையல் சிறுகதை வரையிலும் அப்படி ஒரு மண் மனம். பல கதைகள் அடுத்த கதைக்கு நகர விடாமல் அப்படியே கட்டிப் போட்டது. அதன் தாக்கம் இன்னும் மனதை விட்டு அகலவில்லை. குறிப்பாக தீபாவளி, அப்பாவின் நாற்காலி, செல்வம், காத்திருந்த உயிர், மனச்சுமை, சமையல் போன்ற கதையின் தாக்கம் சற்று அதிகம் தான். 

நீங்கள் பல தளத்தில் பயணித்தாலும் தொடர்ந்து மண், மக்கள் சார்ந்த உங்கள் எழுத்துக்கள் தொடரட்டும். 

நாம எப்படி வாழ்ந்தோம் வளர்ந்தோம் என்று மறந்து போன போது உங்களை போன்றோரின் எழுத்துக்கள் எல்லாவற்றையும் கண் முன்னே நிறுத்துகிறது. 

இது தான் நாம், இவ்வளவு தான் வாழ்க்கை என்ற எண்ணத்தை தருகிறது. 

வாழ்த்துகள் அண்ணா.  புத்தகம் வெளியான பின்னர் இன்னும் விரிவாக எழுதுகிறேன்.

ராஜாராம் எனக்கு எப்பவுமே சிறப்பு... என் கதைகளை எல்லாம் கேட்டு வாங்கி வாசித்துக் கருத்துத் தெரிவிப்பவர். இந்த நாவல் இங்கு தொடராக பகிரப்பட்டு பாதியில் நிறுத்தப்பட்டது. முடிக்க வேண்டும் என்ற முனைப்போடு எழுதி, முதலில் தம்பியும் கவிஞருமான கரூர் பூபகீதனிடம்தான் கொடுத்தேன். வாசித்துவிட்டு என்னுடன் பேசிய போது என் வாழ்க்கையில் சந்தித்த நிகழ்வை அப்படியே படம் பிடித்தது போல் இருக்கிறது அண்ணா என்று சொன்னார். அதை ஒருமுறை ராஜாராமிடம் சொன்னதும் அந்தக் கதையைக் கொடுங்க வாசிக்கணும் எனக் கேட்டார்... தர்றேன் என்று சொன்னேனே தவிர அனுப்பவில்லை... கறுப்பி வாசித்து முடித்ததும் எனக்கு நெருஞ்சியும் குறிஞ்சியும் வேண்டுமென விடாப்பிடியாய் நின்று வாங்கி வாசித்து இதோ அவரின் நீண்ட கருத்தையும் முகநூலில் போட்டிருக்கிறார்... புத்தகம் ஆக்குதல் என்பது ரெண்டாம்பட்சம்தான்... வாசித்ததும் அழுதேன்... என் வாழ்கையைப் பிரதிபலிக்கிறது என்பதான வார்த்தைகளை பெறும் தகுதியில் இருக்கும் எழுத்து என்னுள் தொடர்ந்தால் போதும் நான் இன்னும் நிறைய கிராமத்து மனிதர்களுடன் உலாவுவேன். இராஜாராமின் பார்வை கீழே...

நெருஞ்சியும்_குறிஞ்சியும் சிறு நாவல் பற்றி.......

மீண்டும் மண் மணம் மாறாத கிராமத்திற்குள் சென்று வந்துள்ளேன், வேலாயுதம், கோபக்கார மனுசன் அதக்க போயில இல்லாமல் இருந்துருவார் போல சாதிய விட்டுட்டு வாழவே மாட்டாரோனு தோனுகிற அளவுக்கு தோளில் தூக்கிச் சுமக்கிறார்., பொதுவாக யாருமே தூக்கிச் சுமப்பதில்லை அதுதான் உண்மை...

அமந்துபோய் கெடந்தாலும், அத ஊதி பொகய விட எங்கிட்டாவது இருந்து ஒருத்தன் வருவான். அந்த மாதிரியில்லாம கூடவே பஞ்சநாதன் வருகிறார்., ஒரே சாதிக்காரர் என்பதால் கூடவே வச்சுகிட்டாரோ என்னவோ வேலாயுதத்தின் கோபத்திற்கும், அனுதாபத்திற்கும் ஒரு நிதானியாக வருகிறார். சவுந்தரம், வேலாயுதத்தின் மனைவி என்னதான் சாதி முறுக்கு, வேகம், கோபம்னு இருந்தாலும் இவருக்கு மனைவியிடம் பணிந்தே போகிறார். 

மூத்தமகன், தன் விருப்பதிற்கு வேறொரு சாதி பெண்ணை கல்யாணம் செய்து கொள்கிறார். ஆகையால், கடைசி வரை தன் குடும்பத்தில் சேரவே கூடாதென ஒதுக்கியே வைக்கிறார். ஏதாவது, சுப துக்க காரியங்களை காரணமாக வைத்து குடும்பத்தில் சேர்க்க மனைவியும், மகளும், சிறிய மகனும் பலவாறு முயற்சி செய்கிறார்கள், பஞ்சநாதனும் வீட்டுக்கு வரும்போதெல்லாம் ஓதுகிறார். இதற்கெல்லாம் வேலாயுதம் இசைந்தாரா, இல்லையா என அருமையாக நகர்த்தியிருக்கிறார் எழுத்தாளர் அண்ணன் குமார் அவர்கள்.

இக்கதையினூடே இன்னொரு கதையாக அக்ரஹாரமும் அதில் மெல்லியதாக பயணிக்கும் காதலுமென நேர்த்தியாக செல்கிறது. எங்கும் தொய்வில்லா கதை நகர்வு, சொல்லும் விதம் வழக்கமான வட்டாரச்சொல் தாண்டி அக்ரஹார மொழிநடையும் சிறப்பாக இருக்கிறது. 

சில இடங்களில் கலங்கித்தான் போகிறது விழிகள், வாசிப்பைத் தாண்டி சில நிகழ்வுகள் கண்முன்னே விரியும்பொழுது... வார்த்தைகள் இல்லை. எல்லோருக்கும் இதே பாதிப்பைத் தருமா என்றால் தெரியாது, ஆனால்! இதை வாசித்த அண்ணன் குமார் அவர்களின் நண்பரும், நலன் விரும்பியுமான பூபகீதன் அவர்கள் இக்கதையை வாசித்துவிட்டு தன் சொந்த அனுபவங்கள் நினைவில் வந்ததாக சொன்னாராம். எப்பொழுதும் போல எந்தக் களத்தில் கதை சொன்னாலும் தன் பாங்கையும், மண்ணின் மணத்தையும் விட்டு விலகாமல் பயணித்திருக்கிறார். 

இதுபோன்ற கதைகள் கண்டிப்பாக நூலாக வரவேண்டும். அண்ணன் குமார் அவர்களின் கதைகள் அதிகமாக வாசித்தவன் என்ற முறையில் திட்டவட்டமாக சொல்வேன், அவர் எந்தக் களமும் இறங்கி எழுதக்கூடிய திறனுள்ள ஆகச்சிறந்த கதை சொல்லியும் கூட.... மிக விரைவில் அண்ணனின் ஒரு சிறுகதை தொகுப்பு வெளிவர இருக்கிறது., அதைத் தொடர்ந்து இன்னும் வெளிவராத சிறுகதைகளும், நாவல்களும் இருக்கிறது, இவைகள் விரைவாகவே நூல்களாக வரவேண்டுமென வேண்டி வணக்கமும் வாழ்த்தும்...

நேற்று இரவு போனில் நீண்ட நேர உரையாடல் எழுத்தாளரும் அண்ணனுமான யூசுப் (கனவுப்பிரியன்) மற்றும் கவிஞரும் தம்பியுமான பிரபு கங்காதரனுடனும்... கிட்டத்தட்ட ஒருமணி நேரத்துக்கு மேல் சிறப்பாக நகர்ந்தது. நான் அதிகம் பேசவில்லை... ஆனால் இருவரின் வாசிப்புத் திறமையும் அது குறித்தான பேச்சும் என்னை வியப்பில் ஆழ்த்தியது. சின்ன மன வருத்தம் எனக்கும் யூசுப் அண்ணனுக்கும் சிறு கோடாய் நின்று கொண்டிருந்தது. அது நேற்றைய பேச்சில் அறுந்து விட்டது போன்ற உணர்வு. எப்பவும் அன்போடு பேசும் கனவு அண்ணனைக் கண்டேன் நேற்றைய போனில்... எங்களை இணைத்து பெரும் கதையாடல் நிகழ்த்திய பிரபுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்.

படிக்கும் காலத்தில் நிறைய நட்புக்கள்... தம்பியோட சைக்கிள்ல போன எதுக்க வர்றவனெல்லாம் கையைத் தூக்குறான்... பழக்கம்தான் நிறைய வச்சிருக்கு என எங்கம்மாதான் சொல்லும். அப்படியான நட்புக்கள்தான் நான் கலங்கி நின்ற போதெல்லாம் கை கொடுத்தன... இப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கின்றன.

இவர்களையெல்லாம் நட்பாய்... உறவாய்... பெற நான்தான் கொடுத்து வைத்திருக்க வேண்டும்... இந்த நட்புக்கள் என் இறுதிவரை தொடரவேண்டும் என்பதே என் வேண்டுதலும் ஆசையும்...

எல்லாருக்கும் நன்றி உறவுகளே.
என்றும் நட்புடன்,
-'பரிவை' சே.குமார்.

செவ்வாய், 11 ஜூன், 2019

மனசின் பக்கம் : படைப்புக்கள்

ரொம்ப நாளைக்குப் பிறகு 'மனசு'க்குள் வருகிறேன். என்ன எழுதுவது என்பதே மிகப்பெரிய கேள்விக்குறியாய்... சிலவற்றைக் கிறுக்கலாம் எண்ணத்தில் தோன்றும் வண்ணமாய்...

முதலில் எங்கள் பிளாக்குக்கு நன்றி... தொடர்ந்து கேட்டு வாங்கிப் போடும் கதையில் எனக்கும் இடமளிப்பதற்காக... இரண்டு வாரம் முன்னர் பகிரப்பட்ட 'கோபம்' கதையின் முடிவு குறித்தான கருத்துப் பரிமாற்றங்கள் மிகச் சிறப்பாக இருந்தது. நானும் கூட இப்படியான முடிவு இருந்தால் நல்லாயிருக்கும் என வேறொரு முடிவையும் சுடச்சுட (!) கருத்துப் பகுதியில் நீண்ட கதையாகப் பகிர்ந்திருந்தேன் என்றாலும் முந்தைய முடிவில் எனக்கு மாற்றமில்லை. 

வீட்டில் கூட குழந்தைகள் சேட்டை பண்ணும் போது அடித்து விட்டாலோ திட்டி விட்டாலோ சமாதானம் என்று வரும் போது சாக்லெட்டோ, பணமோதான் கொடுக்கப்படும். அதற்கு லஞ்சம் என்ற அர்த்தம் வருவதில்லை. இந்தாளு லஞ்சமே வாங்க மாட்டாரு... ஆனா வீட்டில் கொடுக்கிறார் என்றெல்லாம் யாரும் பேசுவதில்லை... இது தொட்டுத் தொடரும் ஒரு சமாதான முறைதான். அப்படியாகத்தான் அது எனக்குத் தோன்றியது. இருப்பினும் நட்புக்களின் கருத்துக்கான மரியாதையாக இப்படியிருந்தால் என மாற்றமும் செய்தேன்.. அது பலருக்குப் பிடித்ததில் மகிழ்ச்சியே. மேலும் மனதில் உள்ளதைச் சொல்லும் மிக நீண்ட கருத்துக்கள் அங்கு கிடைப்பதில் உள்ளார்ந்த மகிழ்ச்சி.

கதையின் நீளம் குறித்து ஜீவி ஐயா அவர்கள் சொல்லியிருந்தார்கள். கதை நாயகனின் கோபத்தைக் காட்டவே கொஞ்சம் நீட்டி எழுத வேண்டியிருந்தது என்றாலும் எனது கதைகள் பெரும்பாலும் நீளமானவையாகவே அமைகின்றன. இனி எழுதும் கதைகளை ஐயா சொன்னது போல் எழுத முயற்சிக்கணும்... நன்றி ஐயா.

எனக்கு வாய்ப்புக் கொடுக்கும் ஸ்ரீராம் அண்ணாவுக்கு நன்றி.

தேன்சிட்டு மின்னிதழில் எனது கவிதை வெளியாகியிருந்தது. அதன் ஆசிரியர் குழுவுக்கும் நண்பர் தளிர் சுரேஷ்க்கும் நன்றி. கவிதை ரொம்ப நல்லாயிருக்கு என அவரின் நண்பர் கணேசகுமாரன் என்பவர் சொன்னதாய் சொன்னார். அந்த நண்பருக்கும் நன்றி.

முத்துக்கமலத்தில் இரண்டு கவிதைகள் வெளியானது... அதில் விவசாயியின் வேதனை என்ற கவிதை, சிறந்த கவிதையாக தேர்ந்தெடுக்கப்பட்டு கவிநேசன் அவர்கள் வழங்கும் புத்தகப் பரிசைப் பெற்றிருக்கிறது. முத்துக்கமலம் ஆசிரியர் குழு, திரு. கவிநேசன் ஆகியோருக்கு நன்றி.

(கதை எழுதுறதை விட்டுட்டு கவிதைப் பக்கம் போயிடலாமோ😊)

முனைவர் நௌஷாத்கானின் 'தடீச்சா பிரதா' என்ற சிறுகதைத் தொகுப்புக்கு அணிந்துரை எழுதியிருக்கிறேன் என்பதை முந்தைய பதிவில் சொல்லியிருக்கிறேன். புத்தகம் வந்துவிட்டது. அன்பின் காரணமாக புத்தகமெல்லாம் வெளியிடாமலே இருவருக்கு (குடந்தை சரவணன் அண்ணனின் திருமண ஒத்திகைக்கு முதல் அணிந்துரை) அணிந்துரை எழுதியது உண்மையிலேயே மகிழ்வாய் இருக்கிறது. என் மீது நம்பிக்கை வைத்திருக்கும் நட்புக்களுக்கு நன்றி.

(அணிந்துரையில் உள்ளதை உள்ளபடி எழுதியிருந்தாலும் அதை அப்படியே பிரசுரித்து, தனியாக நாலு நல்ல வார்த்தை எழுதி வாங்கி அட்டையில் போட்டுக் கொண்டார் நௌஷாத், அந்தக் குணம் பாராட்டுக்குறியது.)

ரண்டு சிறுகதைகளை நாவலாக்கும் முயற்சியில் இறங்கி ஒன்றை (கறுப்பி) முடித்து விட்டேன். முழுக்க முழுக்க அபுதாபியில் நடக்கும் கதை... 50% உண்மையும் 50% கற்பனையும் கலந்து எழுதிய குறுநாவல் என்று சொல்லலாம். அமீரகத்தில் பெண்களின் வாழ்க்கையை, வலியைப் பேசும் நாவலாய் இது அமைந்திருக்கிறது. எப்பவும் நான் எழுதும் கதைகள் முதலில் எனக்குப் பிடிக்க வேண்டும் என்று நினைப்பவன்... கலையாத கனவுகள், வேரும் விழுதுகளும், குறிஞ்சியும் நெருஞ்சியும் வரிசையில் கறுப்பி மனசுக்கு மிக நெருக்கமாய் வந்திருக்கிறது.

கறுப்பி
"அவளின் அழுகை சிவாவிற்கு உறக்க வராமல் புரண்டு புரண்டு படுக்க வைத்தது... ஒரு பெண்ணின் கண்ணீர்தான் எத்தனை வீரியமானது..? அது ஒரு மிகப்பெரிய ஆயுதம்... அந்த ஆயுதம் எப்படிப்பட்டவனையும் சாய்த்து விடக்கூடியதே என்பதை அவன் அறிவான்... அம்மா, அக்கா, தங்கை, அண்ணி, தோழி என எத்தனை பேரின் கண்ணீரை அவன் பார்த்திருக்கிறான். அந்தக் கண்ணீர்கள் எல்லாமே வலியை மட்டுமே பிரதிபலிக்கவில்லை. பல நேரங்களில் நினைத்ததைச் சாதித்துக் கொண்ட கண்ணீராய்த்தான் இருந்திருக்கின்றன... இருக்கின்றன... ஆனால் இவளின் கண்ணீர் வலியை மட்டும்தான் கொட்டியது.

எத்தனை வலி இருந்தால் அப்படி அழுதிருப்பாள்..? "

இப்படியாக ஆரம்பித்து....

“ச்சிவ்வா...” என கத்திக் கொண்டே இன்னும் வேகம் கூட்டினாள் அந்த அரபிப் பெண் லீமா..

அவள் முஸ்லீமோ இவன் இந்துவோ அல்ல....

அவர்கள் நட்பை... மனிதர்களை... நேசிக்கும் நல்ல நண்பர்கள்...

ஹசனைப் போல்... அன்பைப் போல் மனிதர்கள் இந்த நட்பைக் கொச்சைப் படுத்தலாம்.

பாலை மண்ணுக்குத் தெரியும் இந்த  நட்பின் வீரியம்...

அது இவர்களை ரசிக்க ஆரம்பித்தது....

காரின் வேகம் இருநூறைத் தொட்டிருந்தது...

காற்றும் மணலும் காதலுடன் குழாவ ஆரம்பித்திருந்தன...

சூரியனைப் பாலை மெல்ல விழுங்கிக் கொண்டிருந்தது.

அவர்களின் பயணம் எங்கே என்பது தெரியாது... ஆனால் பறந்து கொண்டிருக்கிறார்கள்... வாழ்வை ரசித்தபடி.

இப்படியாக முடிகிறது.

இடையில் மலாமா, லீமா, யமுனா என்ற மூன்று பெண்களின் வாழ்க்கையை வலியோடு பேசுகிறது. புத்தகமாக்கும் எண்ணம் இருக்கிறது. காலம் கனிகிறதா என்று பார்க்கலாம்.

ஷார்ஜா புத்தக கண்காட்சி- 2019க்கு முதல் சிறுகதைத் தொகுப்பு நண்பர்களின் முயற்சியால் வருகிறது. அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது. கதைகள் எல்லாம் எங்கள் பிளாக், அகல், தேன்சிட்டு, கொலுசு, முத்துக்கமலம், காற்றுவெளி போன்றவற்றில் வெளியானவைதான். மனசு தளத்தில் பகிரப்பட்ட கதைகள்தான் என்றாலும் கொஞ்சம் பட்டி, டிங்கரிங் எல்லாம் பார்த்துக் கொடுத்திருக்கிறேன். நட்புக்காகவெல்லாம் அணிந்துரை தரமாட்டேன் வாசித்து எனக்குப் பிடித்தால் மட்டுமே அணிந்துரை தருவேன் என திரு. முத்துநிலவன் ஐயா சொல்லியிருக்கிறார். அவரைக் கவரும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அவரைக் கவர்ந்து அணிந்துரை கிடைத்துவிட்டால் கண்டிப்பாக வாசிப்பவரையும் கவரும் என்ற நம்பிக்கை இருக்கு. பார்க்கலாம்.

நன்றி.
-'பரிவை' சே.குமார்.

சனி, 1 ஜூன், 2019

மனசு பேசுகிறது : முகிலினி

Image result for முகிலினி

முகிலினி...

எழுத்தாளர் இரா.முருகவேள் அவர்களின் எழுத்தில்...

யார் இந்த முகிலினி...? 

கதையின் நாயகியா..? கதையின் களமா..?

ஆம் நாயகியும் இவளே... களமும் இவளே... இவளின் இருபுறமும் மூன்று தலைமுறைகள் ஆடிய ஆட்டத்தின் வரலாறே எழுத்தாய்...

அறுபதாண்டு கால வரலாற்றை இத்தனை செய்திகளுடன் அந்தந்த காலகட்ட அரசியல் பின்னணியுடன் நிழல் கதாபாத்திரங்களுக்கு மத்தியில் நிஜ கதாபாத்திரங்களையும் இணைத்துச் சொல்லுதல் என்பது எளிதல்ல... அப்படியான வாழ்க்கையை மிகச் சிறப்பாகச் சொல்லியிருக்கிறார் ஆசிரியர்.

சிறிய நாவல்களில் இருக்கும் ஈர்ப்பு எப்போதும் பெரிய நாவல்களில் இருப்பதில்லை... அதுவும் மிகப்பெரிய நாவலின் பக்கங்களைக் கடத்துதல் என்பது அது நம்மை ஈர்த்தால் மட்டுமே சாத்தியம்.

சில நாவல்களில் ஆசிரியரின் மேதாவித்தனம் நம்மை ஆரம்பத்திலேயே மூடி வைக்கச் சொல்லிவிடும்... சில நாவல்கள்தான் ஆசிரியரின் எழுத்து நடை நம்மை அதற்குள் மூழ்கடித்து வைக்காது வாசிக்கச் சொல்லும். இது இரண்டாவது ரகம்... கீழே வைக்க விடாமல் வாசி... வாசி... என ஈர்க்கும் ரகம். 

இரா. முருகவேள் அவர்களின் எழுத்தை முதல் முறை வாசிக்கிறேன்... செய்திகளே அதிகம் என்றாலும் சோர்வடையவோ, அயற்சி கொள்ளவோ விடாத அசாதாரண எழுத்து நடை... ஈர்ப்பு... அப்படியொரு ஈர்ப்பு... வியப்பில் ஆழ்த்தும் நடை.

487 பக்கங்களை ஒரே மூச்சில் வாசித்து முடிக்கச் சொல்லும் புத்தகம் ஆசிரியரின் வெற்றி.

மூன்று தலைமுறைக் கதைகள் என்றாலும் தொடர்ச்சியாய் அவர்களின் வாழ்க்கைக்குள் பயணிக்கும் கதையும் அல்ல... இப்படியாக இருந்தார்கள்... இப்படியாக வாழ்ந்தார்கள் என்ற கதையை மட்டும் சொல்லிச் செல்லும் கதையும் அல்ல... அதையும் தாண்டி விரிவாய் பேசும் கதை. 

எவ்வளவு செய்திகள்... எத்தனை விளக்கங்கள்.... 

பஞ்சாலை குறித்து... 

அணை கட்டுதல் குறித்து... 

விவசாயம் குறித்து... 

கழிவு நீர் குறித்து... 

போராட்டங்கள் குறித்து... 

இன்னும் இன்னுமாய்...

கொள்ளை... கொலை... வழக்கு... வெற்றி... இயற்கை விவசாயம்... ஆர்கானிக் உணவுகள்... பஞ்சம்... பசி... நோய்.... இடையில் காதலும் என நிறையப் பேசியிருக்கும் கதைக்குள்... 

எண்ணற்ற விவரங்கள்... விவரணைகள்... விளக்கங்கள்... 

இந்த நாவலுக்கான ஆசிரியரின் உழைப்பை பக்கத்துக்குப் பக்கம் பார்க்க முடிகிறது. அவருக்கு உதவியாய் இருந்தவர்கள் என நிறையப் பேரை நன்றியுடன் நினைவு கூர்ந்திருக்கிறார்.

கோவை சரஸ்வதி மில்லில் வேலை செய்யும் ராஜூ, தனது நிறுவனம் இத்தாலி நிறுவனத்துடன் இணைத்து ஆரம்பிக்க இருக்கும் புதிய மில்லான டெக்கான் ரேயான் கட்டுமானப் பணிக்குப் போன இடத்தில் மலை முகடுகளோடும் அதனுடன் உறவாடும் மேகக்கூட்டத்தோடும் கொஞ்சி விளையாண்டு குதித்தோடி வரும் பவானியால் கவரப்படுகிறார்... 

பவானி என்ற வடசொல் அவருக்குப் பிடிக்கவில்லை... அழகிய தமிழில் தனக்குப் பிடித்த மாதிரி...  முகில்களுக்குள் குதித்தோடு வருபவளை முகிலினி என்று அழைத்து மகிழ்கிறார். ஆம் அவர் வைத்த பெயர்தான் முகிலினி. முகிலினி மீதான அவரின் பாசம் மூன்றாம் தலைமுறையான அவரின் பேரன் கௌதம் வரை தொடர்கிறது. 

குடும்பமே தங்களது விடுமுறை நாட்களை முகிலினியோடு உறவாடி மகிழ்கிறது. ராஜூவின் பேரன் கௌதம் வர்ஷினியைக் காதலித்தாலும் முகிலினி மீதான காதல் குறையவில்லை. அதனாலேயே தன் முதல் கேசில் வெற்றி பெற்று திருமணம் நிச்சயமான பின் ஒரு மழை இரவில் முகிலினியைத் தேடிப் போய் மழையோடும் அவளோடும் இரவைக் களிக்கிறான். 

இந்த நேரத்தில் இங்கு என்ன பண்ணுகிறாய் என்கிறாள் முகிலினி... உனக்குத் திருமண அழைப்பிதழ் கொடுக்க வந்தேன் என்றதும் அவள் ஓ வெரிகுட் என்கிறாள். அந்த இடத்தில் முகிலினிக்கு எல்லா மொழியும் தெரியும் என்ற சொல்லாடல் வேறு. அதன் பின் அவள் உன் வருங்கால மனைவி எப்படியிருப்பாள் என்று கேட்க, உன்னைவிட அழகாக என்று சொல்கிறான். அந்தளவுக்கு அவனுக்கு முகிலினி மீது காதல்... அது நமக்குள்ளும் தொற்றிக் கொள்கிறது.

முகிலினி கலகலவெனச் சிரித்தபடி அவனுடன் அவன் வீடு வரை வந்ததாய் கதையை முடித்திருப்பார்.

அணை கட்டுவதில் ஆரம்பிக்கும் கதையில் ராஜூ சைக்கிளிலில் பயணிப்பார்... அப்படியே தொடரும் கதை... பேரன் கௌதம் அவளுடன் உறவாடி மகிழ்வதுடன் முடிந்திருக்கும். இதற்குள் ஏகப்பட்ட வாழ்க்கைக் கதைகள் வந்து போய்க் கொண்டிருக்கும்.

ராஜூ, ஆரான், கஸ்தூரிச்சாமி, சௌந்தரராஜன், சௌதாமினி, மரகதம், மணிமேகலை, கிருஷ்ணகுமார்,  பொன்னாத்தா, மாரிமுத்து, ராஜ்குமார் பாலாஜி, லதா, சந்துரு, திருநாவுக்கரசு, வர்ஷினி, மூர்த்தி... என இன்னும் நிறையப் பேர் வாழ்ந்திருக்கும் வாழ்க்கைக்கதைதான் இது.

அவன்... இவன் என்று ஆரம்பித்து அவர்... இவராகி... அந்த அவர் இவர்கள் மறைந்து... அல்லது இனி உழைக்க வயதில்லை என ஒதுங்கி... அடுத்த தலைமுறை எழுந்து... உழைத்து... இன்னும் சிறப்பாக வாழ்ந்து... இப்படியாக பவானி ஆற்றங்கரையில் பயணிக்கும் கதைக்குள்தான் எத்தனை விதமான செய்திகள்... எல்லாம் தேதி... பைல் நம்பர் என அத்தனை தரவுகளுடன்.

பொங்கிப் பெருகி ஓடி வரும் பவானிக்குள் ஆலைக் கழிவுகளை இறக்கிவிட்டு... அவளைக் கறுப்பாக்கி... அதனால் மக்களுக்கும் கால்நடைகளுக்கும் வரும் நோய்கள்... சாவு...

ஆலைக் கழிவுகளை ஆற்றில் கலக்கக்கூடாது என வெடிக்கும் போராட்டங்கள்... தடியடி... வழக்குகள்...

ஆலையை இழுத்து மூடும்போது வேலை பார்த்தவர்கள் சாப்பாட்டுக்கு பட்ட பாடு... அவர்களின் வேதனை...

அரிசி கிடைப்பதில் இருக்கும் சிக்கல்... கோதுமைக்கான அலைச்சல்...

ஆற்றுப் பகுதியில் விவசாயம்... மீன் பிடித்தல்...

மூடிய ஆலைக்குள் செப்புக்கம்பிகளையும் மோட்டார்களையும் திருடி விற்றல்... ஒரு கட்டத்தில் அழிஞ்ச கம்மாயில் மீன் பிடிப்பது போல் ஆக... 

போலீஸ் பாதுகாப்பு...

கைது... தப்பியோட்டம்... தலைமறைவு... 

போலீஸ் சொல்லி, அவர்களுக்கு கமிஷனுடன் மீண்டும் திருட்டு...

திருட்டின் விளைவாக ஒரு கொலை...

அதன் பின்னான நீதிமன்ற வாதங்கள்...

இயற்கை விவசாயம்...  ஆர்கானிக் காய்கறிகள்... அதனுள் இருக்கும் முதலாளித்துவ அரசியல்...

வக்கீல் சந்துருவுக்கும் வர்ஷினிக்குமான காதல்...

என கதை நகர்த்தல் மிகச் சிறப்பாய்....

அருமையானதொரு நாவல் முகிலினி.

வெள்ளைக்காரனிடம் மாட்டியிருந்த நாம் இப்போது அரசியல் கொள்ளைக்காரர்களிடம் மாட்டிச் சீரழிக்கிறோம்.

ஆரம்பகால மக்களுக்கான அரசியலும் அதன் பின் முதலாளிகளுக்கு பாதுகாப்பாய் நிற்கும் அரசியலும் இதில் பேசப்பட்டிருக்கு.

பக்தவச்சலம், காமராஜர், அண்ணா, கருணாநிதி, எம்ஜியார், அம்மா என அத்தனை பேரின் அரசியல் காலமும் இந்த அறுபதாண்டு கதைக்குள்....

ஒரு உண்மைக் கதையை... உண்மையான கதாபாத்திரங்களை வைத்து... அதனுடன் கதை மாந்தர்களையும் உலவ வைத்து, போராட்டங்கள், அடிதடி, பஞ்சாலை, நீர் மாசு என எல்லாவற்றையும் ஆதாரத்துடன் பேசியிருப்பதில் முகிலினி வெற்றி வாகை சூடியிருக்கிறது என்றால் அத்தனை மாலைகளும் இவ்வளவு உழைத்த, இவ்வளவு செய்திகளை எழுத்தாக்கிய ஆசிரியர் இரா. முருகவேளுக்குத்தான் விழ வேண்டும்.

செய்திகளே அதிகமென்பதால் இங்கு விரிவாகப் பேசவில்லை... வாசியுங்கள் நாவல் உங்களுடன் பேசும்.

முகிலினி மிக அருமையானதொரு நாவல்.

கண்டிப்பாக வாசிக்க வேண்டிய நாவல்.
-'பரிவை' சே.குமார்.