மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

புதன், 30 அக்டோபர், 2019

மனசு பேசுகிறது : இணையத்தில் பொங்கல் வைக்காதீர்

பாடல்கள் தொடர் எழுதலாம் இல்லைன்னா பிகில், கைதின்னு விமர்சனம் எழுதலாம்ன்னு யோசிச்சப்போ, இந்தத் தீபாவளிக்கு நம்ம கதைகள் சில மின், இணைய இதழ்களில் வெளிவந்து மகிழ்வைக் கொடுத்தது. அதனால அதோட லிங்கை இணைப்போம்ன்னு முடிவு பண்ணி எழுத ஆரம்பிக்கும் போது சுஜித் பற்றியும் அதன் பின்னான முகநூல், டுவிட்டர், வாட்ஸப் அரசியல் பற்றியும் கொஞ்சம் எழுதலாம்ன்னு தோணுச்சு.

இந்த வருடத் தீபாவளி பெரும் சோகத்துடன் முடிவடைந்து இருக்கிறது. சுஜித்தின் போராட்டமும் சுஜித்துக்கான போராட்டங்களும் தோல்வியில் முடிந்து பெரும் சோகத்தையே விதைத்திருக்கிறது. பாவம் அந்தப்பிள்ளை அது கருவறை இருட்டு அல்ல.. கல்லறை இருட்டு என்பது தெரியாமலேயே உள்ளுக்குள் இருந்திருக்கிறான்... பிஞ்சு மனசுக்குள் என்ன என்ன நினைத்திருக்கும்..? எத்தனை பயந்திருக்கும்...? இனிமேலும் வேறு எக்குழந்தைக்கும் நடக்கக்கூடாத கொடுமை இது... இந்த விஷயத்தில் அரசின் சட்டங்கள் இன்னும் கடுமையாக்கப்பட வேண்டும்.

அதிமுக அரசு மீது எப்போதும் நம்பிக்கை இருப்பதில்லை... அவர்களை விரும்புவதுமில்லை என்றாலும் அமைச்சர் விஜயபாஸ்கர் அங்கயே இருந்தது... கூடவே காங்கிரஸின் ஜோதிமணியும் இருந்தது... அரசின் துரித நடவடிக்கைகள் என அரசு அதனால் முடிந்த எல்லாமே செய்து கொண்டுதான் இருந்தது... அவர்களைக் குறை சொல்ல, அரசியலாக்க இதில் ஒன்றுமேயில்லை என்பதை முதலில் உணருங்கள்.

ஆழ்குழாய்க்குள் விழுந்த குழந்தையை எடுக்க நம்மிடம் அவ்வளவு அதிநவீன இயந்திரங்கள் இல்லை என்றாலும் கடும் பாறையையும் துளைத்துத்தான் முயற்சித்தார்கள்... அங்கே உழைத்தவர்களுக்கு எல்லாம் சுஜித் தங்களின் குழந்தையாகத்தான் தெரிந்தானே தவிர, மாற்று மதத்தானாக இல்லை என்பதை உணருங்கள். சமூக வலைத்தளமும், ஜியோவின் அளவில்லா இணையத்தள வசதியும் இருப்பதால் எதை வேண்டுமானாலும் எழுதாதீர்கள். யாருமே பிஞ்சுக் குழந்தையைக் கொன்று அரசியல் செய்ய நினைக்க மாட்டார்கள் என்பதை உணருங்கள். வீட்டுக்குள் படுத்து விட்டத்தை முறைத்துக் கொண்டு பொங்கிப் பொங்கல் வைக்காதீர்கள்.

சங்கிகளின் செயலென்றும் பிரதமர் சொல்லித்தான் நிகழ்ந்ததென்றும் அதிமுக டில்லியின் கட்டுப்பாட்டில் இருக்கிறதென்றும் கிறிஸ்தவக் குழந்தை என்பதால் இந்தப் பாரபட்சம் என்றும் ஆளாளுக்குக் கதை கட்டிக் கொண்டே போவதை முதலில் நிறுத்துங்கள்... இதில் என்ன வேதனை என்றால் படித்தவர்களும், நம் நட்பில் இருப்பவர்களும் இதையே சொல்வதுதான். இதில் பலர் மதம் சார்ந்து நிற்கிறார்கள். பின்ன என்னத்தைப் படித்தார்கள் இவர்கள்..?

அவனவனுக்கு ஆயிரம் விஷயம் இருக்கு அரசியல் பண்ண... பச்சைக் குழந்தையைக் கொன்றுதான் அரசியல் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் எவனுக்குமில்லை... ஒரு ஓட்டுக்கு இப்போது கொடுப்பதை அடுத்த முறை இரட்டிப்பாக்கினால் இங்கு பொங்கும் நீங்களும் சுயமிழப்பீர்கள் என்பதை மறக்காதீர்கள். அரசியல்வாதிகள் மீது காழ்ப்புணர்ச்சி இருக்க வேண்டியதுதான்... அதற்காக அதை இந்தச் சிறுவனின் மரணத்தில் கொட்டித் தீர்க்காதீர்கள். மதக் கழிவுகளை மக்காத குப்பையெனக் கொட்டாதீர்கள். 

நிகழ்வு நடந்த இடத்தில் பலர் இரவு பகலாக உறக்கம் துறந்து... குடும்பம் மறந்து... தீபாவளி மறந்து தங்கள் பணியைச் செய்து கொண்டிருந்தார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அங்கே குழந்தையை மீட்கப் போராடியவனுக்கும் சுஜித் போல குழந்தை இருந்திருக்கலாம்... அதுவும் அப்பா தீபாவளிக்கு ஏன் வரவில்லை என ஏங்கியிருக்கலாம்... நிகழ்வின் இடத்தில் கூட இல்லாமல் எங்கோ ஓரிடத்தில், அடுத்த மாநிலத்தில், அடுத்த நாட்டில் அமர்ந்து கொண்டு அள்ளி வீசாதீர்கள் உங்கள் கள்ளிப்பால் வார்த்தைகளை.

தங்கள் வீட்டில் சிறுகுழந்தை இருக்கும் போது அந்த ஆழ்குழாயை மூடி வைக்க வேண்டும் என்ற சிறு எண்ணம் கூட இல்லாமல் இருக்கும் நம்மை முதலில் திருத்த முயற்சிப்போம். பிறகு நாட்டுக்கு வருவோம்... அங்கே பார்... இங்கே பார்... ரஷ்யாவைப் பார்... அமெரிக்காவைப் பார்... நீ ஜப்பானில் பிறந்திருக்கலாம்... தாய்லாந்தில் பிறந்திருக்கலாம் என்றெல்லாம் என்னென்னவோ எழுதுகிறீர்களே... அந்தப் பாலகன் விழுந்தது முதல் போராடியவர்களைக் கேலி பண்ணுவது போலில்லையா உங்களின் பொங்கல். எந்த விஷயத்துக்கும் பொங்கும் முன் முதலில் யோசியுங்கள்... சரியெனப்பட்டால் பொங்குங்கள்... எதையும் ஆளாளுக்குப் பேசுவதன் மூலம் சரியாக்கப் பார்க்காதீர்கள்.

அடிபட்டு கிடக்கும் ஒருவன் முன் நின்று செல்பி எடுத்து அதைப் பகிர்பவர்கள்தாம் நாம் என்பதை உணருங்கள். இங்கே இருவர் சண்டையிட்டு ஒருவர் மரணித்தபோது சண்டையை விலக்கி விடாமல் வீடியோ எடுத்த அறை நண்பர்கள் அத்தனை பேரையும் தூக்கிச் சிறையில் போட்டார்கள்... அது முடியுமா நம்நாட்டில்...? 

இங்கே பத்திரிக்கையில் எந்தச் செய்தி வரணும் எது வரக்கூடாது என்பதையெல்லாம் அரசு முடிவு செய்யும்... நம்மூரில் இஷ்டத்துக்கு எதுவும் எழுதலாம்... கேட்டால் பத்திரிக்கை சுதந்திரம்... இங்கே அரசுக்கு எதிராக ஒரு வார்த்தை கூட பேச முடியாது... நாம பிரதமரையும் நாட்டையும் எவ்வளவு இழிவாக வேண்டுமானாலும் பேசலாம்... 

முதலில் நமக்கு இருக்கும் சுதந்திரத்தை நல்ல விஷயத்துக்குப் பயன்படுத்துங்கள். விஷத்தைக் கக்கி வீரியமாக்கப் பயன்படுத்துவதை நிறுத்துங்கள்.

சுஜித் காப்பாற்றப்படாமல் போனதற்கு மதமோ மனிதர்களோ காரணமில்லை... பெரும் முயற்சியில் ஏற்பட்ட தடைகளும் குழறுபடிகளுமே காரணம் என்பதை உணருங்கள்... இதில் மதத்தை நுழைத்து மனிதத்தைக் கெடுக்காதீர்கள். 

தயவு செய்து வீட்டில் உக்கார்ந்து கொண்டு வீர் வசனங்களை எழுதாதீர்கள்... மண்ணுக்குள் மல்லுக்கட்டிய மனிதர்களை மனதில் நினையுங்கள்... உங்கள் வாந்தியை உங்களோடு வைத்துக் கொள்ளுங்கள்... இணையத்தில் துப்பித் தொலையாதீர்கள்.

சுஜித்... 

சென்று வா மகனே என்று சொல்ல மனசு வரவில்லையடா... வென்று வருவாய் என்றல்லாவா நினைத்திருந்தோம்... வேதனையையே கொடுத்துச் சென்றுள்ளாய்... வலிக்கிறதடா மகனே... உன் இழப்பும் அதனை அரசியலாக்கும் மதமூடர்களின் செயல்களும்.

மீண்டும் பிறந்து வா மகனே...

*****

தேன்சிட்டு மின்னிதழ் தீபாவளிச் சிறப்பிதழில் எனது சிறுகதை 'வெட்டிச்செலவு' வெளிவந்திருக்கிறது.

சிறுகதைகள்.காம் தளத்தில் எனது 'காத்தாயி' சிறுகதை சமூகநீதி என்னும் கதைத் தொகுப்புக்குள் பகிரப்பட்டிருக்கிறது.

அகல் மின்னிதழ் தீபாவளி சிறப்பிதழில் எனது 'தீபாவளிச் சிந்தனைகள்' என்னும் கட்டுரை வெளிவந்திருக்கிறது.

மின்கைத்தடி இணைய இதழின் தீபாவாளி சிறப்பு மலரில் சிறப்புச் சிறுகதையாக எனது 'ஜீவநதி' என்னும் கதை வெளிவந்திருக்கிறது. ஜாம்பவான்களின் எழுத்துக்கு இடையே என் கதையும்... இதற்கென இரண்டு நாட்களுக்கு முன்னரே போஸ்டர் தயார் செய்து அதை முகநூல் பக்கத்தில் பகிர்ந்து  கொண்டார்கள்... முதல் முறை எழுத்தாளனாய் போஸ்டருக்குள் சிரித்ததும் நல்லாத்தான் இருந்தது...

எங்கள் பிளாக்கில் கேட்டு வாங்கிப் போடும் கதையில் என் 'கருப்பர்' பகிரப்பட்டிருக்கிறது.

எங்கள் பிளாக் தவிர மற்ற சிறுகதைகள் இங்கு (மனசு தளத்தில்) எழுதியவைதான் என்பதால் மீண்டும் பகிரவிரும்பவில்லை. அகல் கட்டுரை அடுத்த பதிவாய்...

மகிழ்வான தீபாவளிதான் எழுத்தைப் பொறுத்தவரை... குடும்பத்துடன் கழிக்க முடியாத மன வருத்தமான தீபாவளிதான் எப்போதும் போல... கூடுதல் வலியாய் சுஜித்தும்...

என்ன சொல்ல... கடக்க வேண்டியவை ஆயிரம் இருக்கு... கலைய வேண்டியவையும் ஆயிரம் இருக்கு... அதை நோக்கிப் பயணிப்போம்... அதைவிடுத்து என்ன வேண்டுமானாலும் பேசலாம் என எண்ணப்படி எதையும் அள்ளியெறிய வேண்டாம்... நாமெல்லாம் ஒருதாய் மக்கள் என்பதை மறக்காதீர்கள்... மதத்தைச் சுமக்காதீர்கள்... மனிதத்தைச் சுமந்து பயணியுங்கள்... சுஜித்தின் மீளாத்துயரை உங்கள் அரசியலுக்குப் பயன்படுத்தாதீர்கள்.
-'பரிவை' சே.குமார்.

சனி, 26 அக்டோபர், 2019

மனசு பேசுகிறது : சோளகர் தொட்டி

Image result for சோளகர் தொட்டி
'நான் பிணம்'

'நீயும் கூடத்தான் மாதேஸ்வரா...'

இந்த இரண்டு வரிகளும் போலீஸ் மிருகங்களின் காமப்பசிக்கு இரையான மாதியின் மனசுக்குள் வெடித்துப் பிறந்து இன்னும் என் மனசுக்குள் சுழன்று சுழன்று அடித்துக் கொண்டிருக்கிறது. சோளகர் தொட்டி மக்களின் வாழ்க்கையில் இருந்து வெளிவர முடியாமல் தடுமாறும் மனசுக்குள் இந்த வரிகள் அடிக்கடி மேலெழுந்து தாக்கிக் கொண்டேயிருக்கின்றன. அந்தத் தாக்கத்தில் தனித்து நிற்கிறேன்... வேறேன்ன செய்ய..?

படிக்கும் காலத்தில் டீக்கடை தினத்தந்தியில் எப்படியும் ஒரு போட்டோ வரும். அந்தப் போட்டோவுக்குக் கீழே போலீஸ் தேடுதல் வேட்டையில் வீரப்பனின் கூட்டாளிகள் இருவரோ மூவரோ நால்வரோ கொல்லப்பட்டார்கள் எனப் போடப்பட்டிருக்கும். அதைப் பார்த்து நம்ம போலீஸ் திறமைசாலிகள்டா... சந்தனமரம் வெட்டுறவனைச் சுட்டுக் கொன்னிருக்காங்க பாருங்கன்னு பெருமை பேசித் திரிந்திருக்கிறோம், ஆனால் உடைகள் தைத்து அப்பாவிகளுக்கு இட்டு அவர்களைக் கொன்று அவர்களின் உடலருகில் நாட்டுத் துப்பாக்கியைப் போட்டு வைத்து... ச்சை... என்ன மனிதர்கள் இவர்கள்... இவர்களால் எப்படி அப்பாவி மக்களைக் கொன்று மகிழ முடிந்தது. இவர்கள் கொன்றோம்... கொன்றோமென மார்தட்டியதெல்லாம் அப்பாவிகளின் பிணத்தின் மீது நின்று என்பது இந்நாவலை வாசிக்கும் போதுதான் தெரிகிறது, ரொம்பவே வலிக்கிறது.

வனத்துடன் வாழ்க்கையைப் பிணைத்துக் கொண்டு தங்களின் நிலத்தில் ராகியைப் பயிரிட்டு, விளைவித்து மணிராஜனைக் கும்பிட்டு தங்கள் வாழ்க்கையை மகிழ்வாய் நகர்த்தி வாழும் மக்களின் நிலங்களை மெல்ல மெல்லப் பிடுங்கி, ஒரு கட்டத்தில் அவர்களை வனத்திற்குள்ளும் செல்லக் கூடாதென தடை விதித்து வனத்தோடன வாழ்வாதாரத்தைப் பறித்து, அடுத்த வேளை சோற்றுக்கு என்ன பண்ணுவது என தவிக்க விட்டு வேடிக்கை பார்த்திருக்கிறது அரசு இயந்திரமும் பணம் படைத்த சமூகமும். ஒரு ஒற்றை மனிதனை வேட்டையாடுகிறோம் என இரு மாநில அரசுகள் சேர்ந்து மலைசாதி மக்களின் கிராமங்களை எல்லாம் பாடாப்படுத்தி மகிழ்ந்திருக்கிறது .

வனம் எங்களுக்கானது... அதனுடன் நாங்கள் தலைமுறை தலைமுறையாய் உறவு வைத்திருக்கிறோம். அங்கிருக்கும் உயிரினங்களும் மரங்களும் எங்களின் உறவுகள் என்று வாழ்பவர்களை, சந்தன மரத்தை வெட்டக் கூடாது என அதிலிருந்து ஒரு சிறு துண்டு கூட எடுத்தறியாத மக்களை, தங்கள் வயிற்றுப் பாட்டுக்கே வழி தெரியாமல் திண்டாடும் மக்களை, வீரப்பனுக்கு உதவினாய்... அவனுடன் மரம் வெட்டினாய்... என்றெல்லாம் சொல்லி அழைத்துச் சென்று சித்திரவதை செய்யும் கொடுமைகளை வாசிக்க வாசிக்க அது கொடுக்கும் வலியில் சுவாசிக்க மறந்து போய் மனங்கொள்ளாமல் நிறைந்து நிற்கும் வேதனையை எப்படி வெளிப்படுத்துவது என்று தெரியாமல் புத்தகத்தின் பக்கங்களில் அடிக்கடி விக்கி நிற்க வேண்டியிருக்கிறது.

தன்னுடைய முகாமுக்கு வன விலங்குகளாலோ அல்லது வீரப்பனாலோ பாதிப்பு வரக்கூடாதென தொட்டி ஆண்களை எல்லாம் தரையில் தட்டிக் கொண்டு இரவெல்லாம் முகாமைச் சுற்றிச் சுற்றி நடந்து வரச் சொல்லும் கர்நாடக காவல்துறை அதிகாரியின் திமிரும், காட்டுக்குள் செல்ல மூட்டைகளைத் தூக்கிக் கொண்டு முன்னே நடக்கச் சொல்லும் தமிழக காவல்துறை அதிகாரியின் திமிரும் ஒன்றுதான். இவர்கள் எல்லாம் காக்கி உடைபோட்டதும் மனச்சாட்சியை தூக்கி வீசிவிடுவார்கள் போல. இவர்களைப் பொறுத்தவரை எந்த ஊராக... மாவட்டமாக... மாநிலமாக இருந்தாலும் குணமும் செயல்பாடுகளும் ஒன்றுதான். அதில் எந்த மாறுதலும் இல்லை.

வீரப்பன் வேட்டை என்ற பெயரில் பெண்களை வேட்டையாடி மகிழ்ந்திருக்கிறார்கள். இவர்களின் இந்த வேட்டைக்காகத்தான் அரசு பணத்தை செலவு செய்திருக்கிறது. சோளகர்தொட்டி என்பது இந்த வேட்டையில் சிறுதுளிதான். மாதி, சித்தி, மல்லியைப் போல் எத்தனை பெண்கள் இவர்களால் சீரழிக்கப்பட்டிருப்பார்கள். தங்களின் வெறியைத் தீர்த்துக் கொள்ள அப்பாவிப் பெண்களை விசாரணை என்ற பெயரில் அள்ளிக் கொண்டு போய் மிருகங்களாய் மாறிக் கொடுமை செய்திருக்கிறார்கள். ஒரே இரவில் எத்தனை மிருகங்கள் ஒரு சிறு பெண்ணை வேட்டையாடியிருக்கிறது. அந்த வேலைக்குப் போனதும் மனித மனம் ஏன் மாறிவிடுகிறது. தன்னிடம் இருக்கும் அதிகாரம் என்னும் போதையால் எவனையும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற எண்ணம் ஏன் ஏற்படுகிறது..? சுபாஷைத் தவிர வேறு ஒருத்தனுக்குக் கூட அந்தப் பெண்கள் தெய்வமாய், தாயாய், சகோதரியாய்த் தெரியவில்லையே ஏன்..? மிருகங்களுக்கும் இவர்களுக்கும் என்ன வித்தியாசம்..? அவை கூட சில நேரங்களில் நல்லவையாக இருக்கின்றன... ஆனால் இவர்கள்...?

ரதி வேறு ஒருவனைக் காதலித்து ஓடிவிட்டாள் என்னும் போது வருத்தப்படும் அந்த மக்களுடன் பெண்ணைப் பெற்றவனாய் நானும் வருந்தி நிற்பதுபோல்தான் எனக்குத் தோன்றியது. இந்தப் பெண் ஏன் இப்படிச் செய்தாள் என்றே நினைத்தேன், ஆனால் மல்லியின் அப்பனைத் தேடி லிங்காயத்து வளைவுக்குப் போய் அவளையும் அவள் கணவனையும் விசாரணைக்கு அழைத்துச் சென்று மல்லியைச் சூறையாடும் போதும், சோளகர் தொட்டிக்குள் புகுந்து மாதியையும், சித்தியையும் அள்ளிக் கொண்டு போய் அம்மாவையும் பொண்ணையும் ஒரே இரவில் தங்களின் வெறிக்கு இரையாக்கிக் கொள்ளும் போதும், புட்டனின் மனைவி ஈரம்மாளை அவளது வீட்டில் வைத்தே சூறையாடும் போதும் ரதியாவது இந்த மிருகங்களிடமிருந்து தப்பித்தாலே என்று சத்தமாய்ச் சொல்லத் தோன்றியது.

மாதேஸ்வரன் கோவிலுக்குப் பின்னே தற்காலிக முகாமில் பெண்களையும் ஆண்களையும் படுத்தும் கொடுமைகளைப் படிக்கப் படிக்க, அந்த வரிகளை அவ்வளவு எளிதாகக் கடந்து செல்ல முடியவில்லை. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை உருளைகளில் கட்டித் தூக்கி மின்சாரம் வைத்து கத்தி ஓட, உருள விட்டு சந்தோஷிக்கும் காட்டுமிராண்டிகளின் செயல்கள் மனதைப் பதைபதைக்க வைத்தது. அதுவும் நிர்வாணமாக்கி, காதில்... மார்பில்... பிறப்புறுப்பில் என கிளிப்புக்களைப் பொருத்தி செய்யும் கொடுமைகளில் அவர்கள் அலறும் அலறல் இன்னும் காதுக்குள் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது. மாதேஸ்வரனோ மணிராஜனோ ஏறெடுத்துக் கூடப் பார்க்கவில்லை. அந்த மிருகங்கள் அவர்களைப் படுத்தியெடுத்தும் படுத்து மகிழ்ந்தும் சந்தோஷமாகத்தான் அடுத்த நாளை நோக்கி நகர்கிறார்கள்.

போலீஸ் காவலில் இருக்கும் கர்ப்பிணிப் பெண் பிரசவ வலியால் துடிக்கும் போது மனித மிருகங்கள் உதவி செய்யாத நிலையில் மல்லி அவளுக்கு உதவித்  தொப்புள் கொடியை வெட்டக் கத்தி கேட்டும் கிடைக்காத நிலையில் வாயால் கடித்துத் துண்டிப்பது, மாதிக்கு மாதவிலக்காகி ரத்தப் போக்குடன் தவிப்பதும் அப்போதும் கூட இரக்கமில்லாமல் கரண்ட் வைப்பது, அங்கு அடைத்து வைத்திருக்கும் பெண்களின் மார்பைப் பிடித்து இழுப்பது, பிறந்த குழந்தையை வீரப்பனுக்கு பிறந்தது எனச் சொல்லிச் சிரிப்பது, வீரப்பனுடன் படுத்தேதானே எனக் கேட்பது, ஈவு இரக்கமின்றிப் பிறந்த குழந்தையைக் கொல்வது என மிருகங்களாய் மாறியவர்களைப் பற்றிப் படிக்கும் போதே பதற வைக்கிறது. 

இத்தனை கொடுமைகளையா இவர்கள் செய்தார்கள்..? 

இவர்களுக்கு எந்த ஒரு அழிவும் வரவில்லையா..? 

இவர்களின் குடும்பங்கள் இப்போது சந்தோசமாக இருக்கிறதா...?

ஏன்ற எண்ணம் தோன்றியபோது இவர்கள் எல்லாம் ஏதோ ஒரு வகையில் துன்பத்தை அனுபவிக்க வேண்டும் என மனசு வேண்டிக் கொண்டது. 

ஆண்களை அடித்துக் கையை உடைத்து, காலை உடைத்து, புழு வைத்துப் போன புண்களுடன் எல்லாருடனும் அடைத்து வைத்து, தங்களின் வேட்டையில் சிலரைக் கொன்றோமென மாநில அரசிடமும் மக்களிடமும் மார்தட்டிக் கொள்ள, எதுமறியாதவர்களுக்கு வீரப்பனின் உடையைப் போல் தைத்துப் போட்டு அழைத்துச் செல்லும் போது உயிர் பயத்தில் அவர்கள் தவிப்பதும், உறவுகள் அழக்கூட முடியாமல் வேடிக்கை பார்ப்பதும் வெறெங்கும் நடக்காத கொடுமைகள். அதுவும் சரசுவின் புருஷனை அவளுக்கு முன்னே உடை மாற்றி அழைத்துச் சென்று மாலை திரும்பி வந்து தாலியைக் கழட்டிடு எனச் சொல்லும் போதெல்லாம் இவர்களுக்கு இருதயமே இல்லையோ என்ற கேள்வி எழுந்தது.

துரையன், அவன் மகன் ராஜூ, மனைவி சாந்தா, மணியக்காரன் மாதப்பா என நிலத்தை அபகரிக்கும் கும்பல் சற்றே விலகி நிற்க, சிவண்ணா, கொத்தல்லி, பேதன், சிக்குமாதா, புட்டன், ஜோகம்மா, கெப்பம்மா, கரியன், ஜடையன், தம்மையா, மாதி, ஈரம்மா, மல்லி, சித்தி, ரதி, சின்னத்தாயி  என சோளகர் மொழி பேசும், வனத்தையும் நல் மனத்தையும் சொத்தாகக் கொண்ட அந்த மக்கள் நம்மோடு அருகிருந்து பேசுவது போலவும், சோளாகர் மொழியில் 'எப்பாவு நோகுவாக... நாகர்தாபு மினியாக... ஓ லயித்தி.... எல்ல பித்தி...' எனப்பாடுவது போலவும் பீனாச்சியை வாசித்தும் தப்பை அடித்தும் மலைஜாதி நடனம் ஆடுவது போலவும் மனசுக்குள் காட்சிகள் விரிந்து கொண்டே இருக்கிறது. இப்போதும் மனசுக்கு நெருக்கமாகிப் போன மனிதர்களாய் அவர்கள் மாறி நிற்கிறார்கள்.

இந்த மக்கள் பட்ட பாட்டை, வேதனையை, வலியை அவர்களுடன் பத்தாண்டுகளுக்கு மேலாகப் பழகி, அவற்றுள் சிலவற்றையாவது பதிய வேண்டும்... அப்படிப் பதியாமல் விட்டுவிட்டால், பின்னொரு காலத்தில், தான் சுமக்க இயலாத அவை கற்பனையாகக் கூட கருதப்படும் என்பதால் சோளகர் தொட்டி என்ற நாவலாக்கியிருக்கும் ஆசிரியர் ச.பாலமுருகனை எப்படிப் பாராட்டுவது..? இந்த நாவலை வெளிக் கொண்டு வருவதற்குள்ளோ அல்லது வெளிக்கொண்டு வந்த பின்னோ அவர் எப்படியான பிரச்சினைகளைச் சந்தித்திருப்பார்...? அப்பாவிகளைச் சூறையாடிய காவல்துறை தனது கேவலமான செய்கைகளை அவரிடம் காட்டாமல் இருந்திருக்குமா..? இது மட்டுமே அந்த மக்கள் பட்ட வேதனையின் முதலும் கடைசியுமான  ஆவணமெனச் சொல்லப்பட்டிருக்கிறது. இது போதாது இன்னும் இவர்களின் வலிகளைப் பதிவு செய்து வைக்க வேண்டும். ஒரு தனிமனிதனைத் தேடுகிறோம் என அரசு அதிகார மையம் செய்த கேவலங்களை இன்னும் இன்னும் எழுதித் தள்ள வேண்டும். இதைப் பார்த்தேனும் இனி வரும் காவலர்கள் மனிதர்களாய் வரவேண்டும்.

ஒரு வரலாற்றை எழுதுவதற்கு அவர்களுடன் வாழ்ந்து அதிலிருக்கும் உண்மையை, உள்ளது உள்ளபடி சொல்வதற்கு மிகப்பெரிய தைரியம் வேணும். அது பாலமுருகனுக்கு நிறையவே இருந்திருக்கிறது. வாசிப்பவரைத் தன்னுள் ஈர்க்கும் எழுத்து ஒரு எழுத்தாளனுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதம் அது இவருக்குக் கிடைத்திருக்கிறது. வலிகளை நம்முள் கடத்திக் கொண்டே சென்றாலும் கீழே வைக்க விடாமல் இழுத்துக் கொண்டே சென்ற எழுத்தில் எங்கும் அலங்காரமில்லை. உண்மைகளை நாவலாக்கும் போது அதன் உண்மைத் தன்மையை அப்படியே கொண்டு வரவேண்டும் என்றால் அந்த இடங்களுக்குப் போய், அதைப் பற்றி அறிந்து எழுதும் போதுதான் அந்த நாவலின் உயிர் உச்சமாகும். அதைத்தான் இந்த சோளகர் தொட்டி பெற்றிருக்கிறது. பாலமுருகன் பாராட்டுக்குரியவர்... இவரைச் சந்திக்க நேர்ந்தால் நிறைய விஷயங்களை உள் வாங்கிக் கொள்ள முடியும். காலத்தின் கையில்தானே எல்லாமே இருக்கிறது.

சோளகர் தொட்டி மனதிடத்துடன் வாசிக்க வேண்டிய ஒரு வாழ்க்கைக் கதை. வாசிக்கும் போது உங்கள் கண்களில் கண்ணீர்த் திரையிடும். அந்தக் கண்ணீர்த் திரைக்குள் மாதி, சித்தி, மல்லி, சரசெனப் பல சகோதரிகள் ஓலமிடுவார்கள். அந்த ஓலத்தில் 'நான் பிணம்... நீயும் கூடத்தான் மாதேஸ்வரா...' என்ற வார்த்தைகள் உங்களைச் சுற்றிச் சுற்றி வரும். இத்தனை கொடுமைகள் நிகழ்ந்த போது வீரப்பன் வேட்டையில் நம் காவல்துறையும் கர்நாடக காவல்துறையும் சேர்ந்து சிறப்பாய்ச் செயல்படுகிறார்கள் என மார்தட்டிக் கொண்டிருந்தவர்களில் நாமும் ஒருவராய் இருந்திருந்தால் நாமும் கூட பிணம்தான்.

ஆம்... மலைஜாதி மக்கள் அனுபவித்த வேதனை எழுத்தாளார் பாலமுருகன் சொல்லியிருப்பது போல, பாறையை விட கனமானவை, இருளை விட கருமை மிக்கவை, நெருப்பை விட வெப்பமானவை...

வலியைக் கொடுத்த நாவல் சோளகர் தொட்டி, புனைவு... அபுனைவு, வரலாறு, எழுத்தாளர் எழுதும் புதுவரலாறு எனப் பல நாவல்களைப் படித்துக் கடந்து வந்திருந்தாலும் இதைப் படிக்கும் போது ஏற்பட்ட வலி விரைவில் மறையாது.

வாழ்த்துக்கள் பாலமுருகன் எனச் சொல்ல வலிக்கிறது... வனம் மட்டுமே அறிந்த வாழ்க்கையைச் சொல்லியிருக்கிறீர்கள்... அந்த மனிதர்களின் ஆன்மாக்கள் உங்களை வாழ்த்தும்.
-'பரிவை' சே.குமார்.

வியாழன், 24 அக்டோபர், 2019

என்னைக் கவர்ந்த பாடல்கள் - 4

முந்தைய பதிவுகளை வாசிக்காதவர்கள் வாசிக்க... 1   2   3

சென்ற பதிவில் ஸ்ரீராம் அண்ணன் தனது கருத்தில் 'பொய்யின்றி மெய்யோடு நெய் கொண்டு போனால்' பாடலும் ரொம்பப் பிடிக்கும் என்று சொல்லியிருந்தார். உண்மைதான்... பாடலின் வரிகள் கேட்பதற்கு அவ்வளவு இனிமையாக இருக்கும். எனக்கும் ரொம்பப் பிடித்தமான பாடல் அது. அந்தப் பாடலில் இருந்து சில வரிகள்...

'அவனை நாடு அவன் புகழ் பாடு
புகழோடு வாழ வைப்பான் ஐயப்பன்
உன்னை புகழோடு வாழ வைப்பான் ஐயப்பன்
இருப்பது காடு வணங்குது நாடு
அவனைக் காண தேவை பண்பாடு
ஐயப்பா ஸ்வாமி ஐயப்பா
ஐயப்பா சரணம் ஐயப்பா!'


சின்ன வயது முதல் முருகன் மீதுதான் காதல்... அது ஏன்னு எல்லாம் தெரியாது... ஆனாலும் அவர் மீது தீராத தொடரும் பக்தி இப்ப வரைக்கும்... அப்பா முருகா என்ற வார்த்தை உட்காரும் போது, எழும் போது, தும்மல் வரும் போது என எதைச் செய்தாலும் அப்பா முருகா என்ற வார்த்தை இல்லாமல் இருக்காது. 

படிக்கும் போதெல்லாம்... படிக்கும் போதென்ன இப்போதும் சில நேரங்களில் 'அப்பா... முருகா... என்னை மட்டும் காப்பாற்று...' என்று சொல்வேன். அதென்ன உன்னை மட்டும்ன்னு பக்கத்தில் இருப்பவர்கள் கேட்டால் 'என்னை மட்டும் என்றால்... நான் ஒரு பத்துப் பேருக்கு உதவுவேன்... பத்துப் பேர் நூறு பேருக்கு உதவுவான்... நூறு ஆயிரமாகும்... ஆயிரம் லட்சமாகும்... இப்படியே உதவிகள் போய்க் கொண்டே இருக்கும்... முருகா எல்லாரையும் காப்பாத்துன்னு சொன்னா அவர் எப்படிக் காப்பாற்றுவார்' என்றதும் போதும்ப்பா உன்னோட நல்ல எண்ணம் என எழுந்து போய்விடுவார்கள்.

எங்க பக்கம் பழனிக்கு அதிகம் பேர் நடந்து போவாங்க.... தேவகோட்டை நகரத்தார் காவடிக்கு பழனியில் தனி மரியாதை உண்டு. கூட்டம் கூட்டமாய் பழனிக்கு நடந்து போகும் போது சபரிமலைக்குச் செல்வோர் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக உயர ஆரம்பித்தது. கார்த்திகை மாதம் காவி வேட்டியைப் பார்ப்பதைவிட கருப்பு வேட்டி அதிகமானது. அப்போதும் நமக்கு முருகன்தான்... மார்கழி மாதம் அதிகாலையில் யாரேனும் ஐயப்பன் பாட்டுக் கேசெட் போட்டால் ஓடிப்போய் முருகன் பாடலை மாற்றி விட்டுட்டு வருமளவுக்கு முருகன் வெறியன் நான்.

பழனிக்கு ஆறு வருடம் நடைப் பயணம்... ஒவ்வொரு தடவையும் ஒவ்வொரு அனுபவம்... அதையெல்லாம் தனிப்பதிவாக எழுதலாம். மறக்க முடியாத நடைப்பயணம் அது.... மீண்டும் ஒரு முறையேனும் நடந்து செல்ல வேண்டும் என்ற ஆவல் இப்போதும் மனசுக்குள்... நடக்கும் என்று நம்புகிறேன்.

முருகன் பிரியத்தில் இருந்த போதும் கல்லூரியில் வேலை பார்க்கும் போது சபரிமலைக்குப் போகலாம் என எங்கள் இயற்பியல்துறை பேராசிரியர் எம்.எஸ். அழைத்ததும் நானும் முருகனும் முதல்முறை சபரிமலைக்கு மாலை போட்டோம்... முதல் பயணம் ரொம்ப வித்தியாசமான அனுபவத்தைக் கொடுத்தது. 

மழை பெய்து கொண்டிருக்கும் போது பம்பையில் குளித்தது... 

லேசான தூறல் இருக்கும் போதே மலையேற ஆரம்பித்தது... 

ஒரு சில இடங்களில் மேலிருந்து கீழ் நோக்கிப் பயணித்த தண்ணியால் மலைப்பாதை வழுக்கிய போதும் பாதுகாப்பாய் நடந்து சன்னதி அடைந்தது... 

லேசான மழை பெய்யும் போதும் நடைபெற்ற படி பூஜையை நனைந்து கொண்டே பார்த்தது... 

மழையோடு பஸ்மக் குளத்தில் குளித்து மகிழ்ந்தது.... 

அடித்துப் பெய்யும் மழை நேரத்தில் ஒரு நாள் முழுவதும் மலையில் அறை எடுத்துத் தங்கியது...

ஐயப்பனுக்கு அபிஷேகப் பொருட்கள் ஊரில் இருந்தே வாங்கிக் கொண்டு போய் அபிஷேகம் செய்து அருமையான தரிசனம் செய்தது என எல்லாமே வித்தியாசமான அனுபவமாய் அமைந்தது. 

நான்கு முறை சபரிமலைக்குச் சென்றிருக்கிறேன். மலையேறியதும் கூட்டமில்லை என்றால் நேரடியாக ஐயப்பனைப் பார்க்க முடியும். நம்ம ஊரில் போல சாமியை அருகில் பார்க்க 100, சற்று தள்ளி நின்று பார்க்க 50, வரிசையில் பார்த்தபடி கடக்க 10, கூட்டத்தில் நசுங்கி, நீந்தி காலையோ தலையையோ அல்லது ஐயரின் பின்புறத்தையோ பார்த்துச் செல்ல தர்ம தரிசன வரிசை என்பதெல்லாம் கேரளாவில் இல்லை. தெய்வத்தின் முன் அனைவரும் சமமே. இங்கு பிரபலம் என்றால் மட்டுமே சாமிக்கு கை கொடுக்கலாம். அத்தியின் தரிசனத்தில் காணவில்லையா... ஏற்றத்தாழ்வுகளை.

படியேறியதும் கண் முன்னே காட்சி தந்த  ஐயப்பனின் அந்த அழகிய குட்டிச் சிலை மனசுக்குள் வந்து அமர்ந்து கொள்ள, பள்ளிக் கட்டு சபரிமலைக்கு என்னும் பாடலும் முருகனின் பாடல்களுடன் எனக்குள் வந்து அமர்ந்து கொண்டது. அதேபோல் மலையில் நடை திறக்க, நடை அடைக்க மட்டுமின்றி பெரும்பாலும் அதிகமாய் ஒலித்துக் கொண்டிருக்கும் யேசுதாஸ் அவர்களின் ஹரிவராசனம் பாடல் எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் பாடல் இல்லையா அது.

'சரணகீர்த்தனம் பக்தமானசம்
பரணலோலுபம் நர்த்தனாலசம்
அருணபாசுரம் பூதநாயகம்
ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா'

இந்த வரிகளை யேசுதாஸ் அவர்களின் குரலில் கேட்டுக்கேட்டு ஐயப்பனைத் தரிசித்த நாம் ஒரு மழலையின் குரலில் கேட்போமே...ஐயப்பனில் இருந்து மீண்டும் முருகனுக்குப் போவோம்... 

'வள்ளி மணவாளா குஞ்சரி மணாளா
வள்ளி மணவாளா குஞ்சரி மணாளா
குஞ்சரி மணாளா - தேவ குஞ்சரி மணாளா
வண்ண மயில் வாகனா முருகா முருகா  
வேலவா வேலவா வேல் முருகா வா வா
சூராதி சூரா சுப்ரமணிய தேவா – சிவ
சுப்ரமணிய தேவா
ஷண்முக சரவணா முருகா முருகா'

வேலவா... வேலவா.... வேல் முருகா வா... வா.. என்ற இந்த முருகனின் பாடலை சிறுமிகள் மிக அழகாகப் பாடியிருப்பார்கள். எனக்கு இந்தப் பாடலும் வீடியோவும் ரொம்பப் பிடிக்கும்... அதையும் கேட்கலாம்.


குறையொன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா பாடல் ரொம்பப் பிடிக்கும்... பெரும்பாலும் கச்சேரிகளில் இது போன்ற பாடல்களைப் பாடும் போது கொலையாய்க் கொன்னு எடுத்துருவாங்க... ஒன்னு ராகம் ஒட்டாது... இல்லைன்னா இசை ஒட்டாது... நான் எல்லாரையும் சொல்லவில்லை.... எங்காவது ஒரு சிலர் மிகச் சிறப்பாய் பாடுவார்கள்... பாடியிருப்பார்கள்.

அப்படித்தான் இராமநாதபுர மாவட்டத்தில் இருக்கும் ஒரு கிராமத்துத் திருவிழாவில் தஞ்சை சின்னப்பொண்ணு கச்சேரி... ஆமா சின்னப்பொண்ணு நாட்டுப்புறப்பாட்டுல்லன்னு தோணலாம்... எந்தக் கச்சேரி என்றாலும் ஆரம்பத்தில் சாமிப்பாடல்கள்தான்... அந்தக் கச்சேரியில் ஒரு இளம்பெண் தான் பாடிய பாடல்களை எல்லாம் சிறப்பாகவே பாடினார். இந்தப் பாடலைப் பாடுபவர் வராததால் நான் முதன் முதலில் பாடுகிறேன் என்று சொல்லித்தான் பாடினார்... அவ்வளவு அருமையாகப் பாடியிருப்பார். என்னிடம் அந்த வீடியோ ரொம்ப நாள் இருந்தது. அடிக்கடி கேட்கும் பாடலாகவும் அது இருந்தது. தேடினால் கிடைக்கவில்லை. கிடைத்தால் பகிர்கிறேன்.

அந்தப் பாடலில் இருந்து சில வரிகள்...

'கண்ணுக்குத் தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா
கண்ணுக்குத் தெரியாமல் நின்றாலும் எனக்குக்
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா'

இப்ப நாம சித்ரா அவர்கள் பாடிய மறை மூர்த்திக் கண்ணனைக் கேட்போம்.

அப்படியே புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களையும் கேட்டுவிடலாம்... ரசித்துக் கேட்டு கண்ணனை நினைத்து உருக வைக்கும் பாட்டு இது... சில வரிகள் இங்கே...

'குருவாயூர் தன்னில் அவன் தவழ்கின்றவன் - ஒரு
கொடியோடு மதுராவை ஆள்கின்றவன்
திருவேங்கடத்தில் அவன் அருள்கின்றவன் - அந்த
ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொள்கின்றவன் - அந்த
ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொள்கின்றவன்'


சரி அப்படியே வைக்கம் விஜயலட்சுமி பாடிய 'பொம்ம பொம்மைதா' பாடலையும் கேளுங்கள்... இந்தப் பாடலைப் பெங்களூர் ரமணியம்மாள் பாடிக் கேட்டிருக்கிறோம்... மறக்கக் கூடிய குரலா அந்தக் கணீர்க்குரல்... அதே பாடலை விஜயலெட்சுமி எப்படிப் பாடியிருக்கிறார் என்று கேளுங்கள் / பாருங்கள்... நிச்சயம் உங்களுக்குப் பிடிக்கும்.

விஜயலெட்சுமி பாடிய, பழனிபாரதியின் வரிகளான 'காற்றே காற்றே நீ மூங்கில் துளைகளில் கீதம் இசைப்பதென்ன..' கேட்காதவர்கள் யாரும் இருக்கமாட்டீர்கள் என்று நினைக்கிறேன். எனக்கு ரொம்பப் பிடித்தபாடல் அது. திரையிசைப் பாடல்கள் பகிர்வில் அது குறித்து விரிவாய்ப் பார்க்கலாம்.

இப்ப பொம்ம பொம்மைதாவைக் கேட்போம்.


எந்தச் செயலையுமே கணபதியைத் தொடங்கி ஆரம்பிக்கணும்... அப்படித்தான் அரம்பித்து கணபதியிலேயே முடிந்திருக்கிறது சாமிப் பாடல்கள் குறித்த பகிர்வுகள். 

இத்துடன் சாமிப் பாடல்கள் குறித்தான பகிர்வு முடிந்தது. அடுத்த பதிவு முதல் பிடித்த திரையிசை, நாட்டுப்புறப் பாடல்கள் குறித்துப் பார்ப்போம்.

பாடல் தொடரும்.
-'பரிவை' சே.குமார்.

செவ்வாய், 22 அக்டோபர், 2019

மனசு பேசுகிறது : எழுதிய கதைகளில் சில வரிகள்

தாவது எழுதலாமென... தொரட்டி, அம்புலி, தண்ணீர் மத்தன் தினங்கள் விமர்சனம், என்னைக் கவர்ந்த பாடல்கள் - 4 , சிறுகதை என எதையாவது எழுதலாமென காலையில் இருந்து முயல்கிறேன்... 

பிரச்சினைகளும் மனச்சோர்வும் எதையும் எழுதவிடாமல் தடுத்துக் கொண்டே போகின்றன... ஒன்றை ஆரம்பித்து அழித்து விடுகிறேன்... மற்றொன்றை ஆரம்பிக்கிறேன்... அடுத்த வரி என்றில்லை வார்த்தை கூட சரியாக அமையாமல் அதையும் அழித்துவிட்டு வெறும் நோட்பேடை வெறித்துக் கொண்டிருக்கிறேன்.

நிகழ்வுகளும் பிரச்சினைகளுமே எழுத்தைத் தீர்மானிக்கும் என்பதை நான் எப்பவுமே ஏற்றுக் கொள்வதில்லை... அப்படியான சூழல்களை உடைத்து என்னால் எழுத முடியும்... அப்படி எழுதிய கதைகள்தான் வீராப்பும், இணையும்... இரண்டுமே பாராட்டுக்களைப் பெற்றுக் கொடுத்தன... ஆனால் மேற்சொன்ன இரு காரணிகளும் சில நேரங்களில் எழுத்தைத் தீர்மானிக்கும் என்பதையும் இன்று உணர்ந்தேன்.... எதுவுமே எழுத முடியாமல்... வேலை அதிகமில்லாத ஒரு நாளை சும்மா இருந்தே தீர்த்திருக்கிறேன்.

அப்ப எதாவது பதிவு போடலாம்ன்னு யோசிச்சப்போ சமீபத்தில் எழுதிய சிறுகதைகளில் இருந்து எப்பவும் போல் சில பாராக்களைப் பகிர்வோமென மனசு சொல்லியது... அதான் இங்கே...

வெண்ணெய்யும் சுண்ணாம்பும்

"சின்னவன் விஷயமா எங்கிட்ட ஒண்ணும் பேசாதே... படிச்சித்தான் தொலையலைன்னாலும் பணங்காசு இருக்கவன் வீட்டுல பொண்ணெடுப்போம் அந்த வகையிலயாச்சும் நல்லா இருக்கட்டும்ன்னு பார்த்தா, இவரு அங்கயும் வில்லங்கம்தான் பேசுனாரு... சுந்தரவல்லி அத்தை யாருமில்லாம நாலு பொண்ணுகளை வச்சிக்கிட்டு சிரமப்பட்டுக்கிட்டு இருக்கு... அங்கதான் கட்டுவேன்னு என்னைய எதுத்துக்கிட்டு நின்னு ஒண்ணுமில்லாதவ வீட்டுல இருந்து ஒரு ஏப்புராசியக் கட்டிக்கிட்டு வந்துச்சு... எங்கூடப் பொறந்தவ மேல எனக்கில்லாத அக்கறை இவனுக்கென்ன வந்துச்சு... அந்த வீட்டுக்கு மூத்த மாப்பிள்ளை இவுக... இவுக போயித்தான் மூணு பொட்டச்சிகளக் கரையேத்தியிருக்காக... இவுகளால எனக்கென்ன ஆச்சு... இப்ப எம்புட்டுக் கடன் வாங்கி வச்சிருக்காகன்னு தெரியலை... அதான் சனியன் தொலையட்டும்ன்னு அந்த வீட்டுக்கே புள்ளயா விட்டுட்டேனே... இனி அவுகளுக்குச் சொத்துச் சேர்த்து நானென்ன பண்ணப் போறேன்..." தட்டில் கை கழுவினார்.

"அவன எங்கயும் புள்ள விடலங்க... நல்லது கெட்டது எல்லாத்துக்கும் அவன் இங்கதான் வந்து நிக்கிறான்... நம்மளை விட்டுத் தள்ளிப் போகவும் இல்லை... நம்மளைத் தள்ளி வைக்கவும் இல்லை... நல்லா யோசிச்சிப் பேசுங்க... மூணு பொட்டப்புள்ளய கரையேத்தியிருக்கான்னு சொன்னீங்களே... அது மூணு இல்லங்க அஞ்சு... ஆமா அஞ்சு பொட்டப்புள்ளங்களைக் கரையேத்தியிருக்கான்... அவனால எனக்கென்ன ஆச்சுன்னு கேட்டீங்களே...நம்ம வீட்டு ரெண்டு பொட்டைக்கும் யார் செலவு பண்ணுனா... பெரியவன் படிச்சிக்கிட்டு இருந்தான்... உங்களுக்கும் சரியான வேலையில்லை... அப்ப இவன்தானே வெளிநாட்டுல போயி வேல பாத்துக் கரையேத்துனான்... அவ்வளவு ஏன்... பெரியவன் படிச்சிருக்கான்... சம்பாதிக்கிறான்னு சொன்னீங்களே... அவன் படிச்சதுக்கு செலவு பண்ணுனது யாருங்க... நீங்க மட்டும்தானா... சொல்லுங்க பார்ப்போம்... இப்பவும் பெரியவன் அவனோட வாழ்க்கைக்கு எது தேவையோ அதுக்காக மட்டும்தான் உங்ககிட்ட வந்து நிக்கிறான்... வேற என்ன பெரிசா நமக்கோ இல்ல கூடப்பொறந்ததுகளுக்கோ செஞ்சிட்டான்னு சொல்லுங்க பார்ப்போம்... கல்யாணத்துக்கு முன்னால கஷ்டப்பட்டு சம்பாதிச்சதையெல்லாம் எங்கே... யாருக்காகச் செலவு பண்ணுனான்..? கூடப் பொறந்ததுகளுக்காக இங்கதானே எல்லாத்தையும் போட்டான்... இப்பவும் கூடப் பொறந்ததுக வீட்டுல நல்லது கெட்டதுன்னா அவன்தானே முன்னாடி நிக்கிறான்... பெரியவன் இல்லையே... இன்னைக்கி நெலமைக்கு பணங்காசு இல்லைன்னாலும் அவன்தாங்க பெரிய மனுசன்..." கண் கலங்கினாள்.

பெத்த சுமை (ஒரு போட்டிக்கு அனுப்பியிருக்கிறேன்)

"போ அப்பத்தா... நீ ஏன் அங்க போயி ஆறு மாசம் இருக்கணும்... போய் பார்த்துட்டு வந்துட வேண்டியதுதானே... இங்க உனக்கென்ன பிரச்சினை...?"

"வா... வெளியில போவோம்..." என பேத்தியை அழைத்துக் கொண்டு வெளியில் நின்ற வேப்பமரத்தடிக்குக் கூட்டி வந்து "இது அப்பாக்களோட முடிவும்மா... அப்பத்தா என்ன செய்ய முடியும் சொல்லு..?" என்றபோது லெட்சுமிக்குக் கண் கலங்கியது.

"என்ன முடிவு இது..? பாசத்தைப் பங்கு போடுவாங்களா..?" பொட்டில் அடித்தாற்போல் கேட்டாள் பனிரெண்டு வயதான ஸ்ரீதாரிணி.

"ம்... உங்கய்யா செத்த வீட்டுக்குள்ள ஒருத்தனே என்னை வச்சிக்க முடியாதுன்னு நீ ஆறு மாசம்... நான் ஆறு மாசம்ன்னு பேசி முடிச்சிட்டானுங்க... நான் என்ன சொல்ல முடியும்... உங்கய்யா இருக்கவரைக்கும் நான் மகாராணி... இப்ப உங்கப்பனுகளுக்கு தேவையில்லாத ஒரு பொருள்... நீ வச்சிக்க.... நீ வச்சிக்கன்னு மாறி மாறிக் கூறு போட்டானுங்க... கடைசியில ஆறு மாசக் கணக்குக்கு வந்தானுங்க...” கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்.

"அழாதீங்க அப்பத்தா..."

"ம்... நல்லாப் படிக்கணும்... நல்ல புள்ளைன்னு பேரெடுக்கணும் சரியா..?"

"ம்... நீங்க இங்க இல்லைன்னா எனக்கிட்ட ஸ்கூல்ல நடந்ததெல்லாம் யாரும் கேக்க மாட்டாங்க அப்பத்தா... நீங்க சொல்ற மாதிரி கதை சொல்ல மாட்டாங்க... தலை குளிச்சா தொடச்சி விட மாட்டாங்க... எல்லாத்துக்கும் அம்மா திட்டிக்கிட்டே இருப்பாங்க... அப்பா எதையும் கேக்கவே மாட்டாங்க... நீங்க இல்லைன்னா எனக்கு ரொம்பப் போரடிக்கும் அப்பத்தா..."

குதிரையெடுப்பு

குதிரையெடுப்பு அன்னைக்கு மட்டும் மழையில்லாமப் பாத்துக்க தாயின்னும் வேண்டிக்கிட்டாங்க.

தேவகோட்டை சிலம்பணி பிள்ளையார் கோவிலைச் சுற்றி குதிரைகள் நிறுத்தப்பட்டிருந்தன... ஒவ்வொரு குதிரையையும் நால்வர் தூக்கத் தயாராய் காத்திருந்தார்கள்.

பூஜாரி இடமிருந்து வலமாகத் தீபம் காட்டியபடி வந்தார்.

'அதென்ன தீபம் அங்கியிருந்து காட்டினாத்தானா... இங்கயிருந்து காட்டினா சாமி ஏத்துக்காதா...?' என வலப்பக்க கடைசியில் நின்ற கண்ணன் அருகிலிருந்த வீராச்சாமியிடம் கேட்டான்.

'இதெல்லாம் ஒரு குத்தமாடா... அவரு பொறகாரம் வார முறையில காட்டுறாரு... எங்கிட்டிருந்தோ காட்டட்டுமே... பேசாம இருங்கடா... பிரச்சினையை இழுத்துறாதீக...' என அடக்கினார்.

காரைக்குடி அருளானந்து டிரம்செட்டின் அடி ஊரையே குலுக்கிக் கொண்டிருந்தது... ஆடாதவர்களையும் அந்த அடி ஆட வைத்தது. ஏய் முத்துப்புள்ளக்கிட்ட புள்ளைய வாங்கிக்கங்க... அவ ஆட ஆரம்பிச்சிருவா... அப்புறம் புள்ளைய விட மாட்டான்னு ஒரு பெரிய மனுசி கத்திக்கிட்டே போக, சில இளவட்டங்கள் 'த்தாத்தா... த்தாத்தா...' என தப்புக்கு ஏற்ப ஆடினார்கள்.

யூசுப் பாய் வானத்தை விட்டுக் கொண்டே முன்னே நடந்தார். குதிரைகள் ஒவ்வொன்றாய்  தூக்கப்பட்டு... ஊர்வலமாய் கோவில் நோக்கி நகர ஆரம்பித்தன.

இத்தனை வருசமில்லாத திருவிழா என்பதால் கூட்டம் அலை மோதியது.. பிள்ளையார் கோவிலில் இருந்து பெரியநாயகி அம்மன் கோவில்வரை நிறைபெருக்காக ஆட்கள்... 

அவர்களுக்கு இடையே 'பாம்...பாம்' என்றபடி ஐஸ் வண்டிகள்... 

வழி நெடுக தண்ணீர் மோர் பானகப்பந்தல்கள்...

சாக்லெட், சுவிட் கொடுக்கும் செட்டியார்கள்...

பொங்கல் புளியோதரை கொடுக்கும் பெரும் பணக்காரர்கள்...

வழியெங்கும் புதிதாய் முளைத்த வளையல், அல்வா, பாத்திர, சர்பத் கடைகள்...

பூ மாலைக் கடைகள்.. கூடையில் பூ விற்கும் கிழவிகள்... 

பொறி உருண்டை விற்பவர்கள்...

ஊசி, பாசி விற்கும் குறவர்கள்...

மண்பானை விற்பனைக் கடைகள்...

பிளாஸ்டிக் பொருட்கள் விற்கும் கடைகள்....

ஒரு வழியாகக் குதிரைகள் கோவிலை வந்து அடைந்து வரிசையாக வைக்கப்பட்டன... 

கதைகள் எப்படியிருக்கு... நல்லாயிருக்கும்ன்னு தோணுதா...? 

-'பரிவை' சே.குமார்.

சனி, 19 அக்டோபர், 2019

அமீரக எழுத்தாளர் குழுமம் 'வாசிப்பை பகிர்ந்து கொள்வோம்'

மீரக எழுத்தாளர் குழுமத்தின் மூன்றாவது மாதாந்திர 'வாசித்ததைப் பகிர்ந்து கொள்வோம்' நிகழ்ச்சி ஜெஸிலா அவர்களின் 'ப்ரோ ஆக்டிவ் எக்ஸல் சேப்டி கன்சல்டன்சி' நிறுவனத்தில் வெள்ளி (18/10/2019) மாலை நடைபெற்றது. சென்ற மாதக் கூட்டத்துடன் ஒப்பிடும் போது இந்த முறை கூட்டம் கொஞ்சம் அதிகமே. நிறைய நண்பர்கள் வந்திருந்தார்கள்.


எப்பவும் போல் ஆசிப் அண்ணன் நிகழ்வை ஆரம்பிக்க, முதல் ஆட்டக்காரராய் பிலால் இறங்கினார் வாடி வாசலுடன்... வாடி வாசல் என்பது நமக்கெல்லாம் மிக நெருக்கமானதுதானே... மஞ்சுவிரட்டு / சல்லிக்கட்டு / ஏறு தழுவுதல் என எத்தனையோ பெயர்கள் இருந்தாலும் வாடி வாசல் வழி வரும் மாட்டை வீரர்கள் விரட்டிப் பிடிப்பதும் அப்படிப் பிடித்தவருக்குப் பரிசுப் பொருட்களை அள்ளிக் கொடுப்பதும் நாம் பார்த்து ரசித்ததுதானே... ஆம் சி.சு. செல்லப்பாவின் வாடிவாசல் நாவல் குறித்துத்தான் பிலால் பேசினார். மாடு பிடிப்பதில் இருக்கும் அரசியல், ஒரே சாதி என்றாலும் பணமும் வசதியும் அவர்களுக்குள்ளேயே மேல் கீழ் என்னும் அந்தஸ்த்தைக் கொடுத்திருப்பதை, இன்னும் மேலூர் பக்கம் மாடுபிடித்தபின் அவர்களுக்குள் நிகழும் பகைகள் என வாடிவாசல் நாவலுடன் தான் பார்த்து வளர்ந்த, இப்போதும் பார்த்துக் கொண்டிருக்கும் சில நிகழ்வுகளையும் இணைத்து மிக அழகாகப் பேசினார். அதிகமாய் நேரமெடுக்காமல் தனக்கு ஒதுக்கிய நேரத்துக்குள் சொல்ல வந்ததை மிகச் சிறப்பாக சொல்லி அமர்ந்தார். நிகழ்வு முடிந்து சாப்பிடும் போது இது குறித்து இன்னும் விரிவாய்ப் பேசினார்... சிறப்பு.

ஆசிப் அண்ணன் பேசும் போது இங்கு ஆரம்பித்து, அங்க நகர்ந்து, அப்படியே அந்தப் பக்கம் போய், மறுபடியும் இந்தப் பக்கம் நகர்ந்து பேசி முடித்தார் பிலால் என்ற போது அவருக்கு முன்னே ஒரு மாடு இருந்ததே... அதைப் பார்க்கலையா என்றார் சுரேஷ்.

அடுத்துப் பேச வந்தவர் தெரிசை சிவா... இவர் ஒரு நல்ல கதை சொல்லி... சென்ற முறை நாவலை எடுத்துப் பேசியதால் மணி அடித்தும் நிறைய நேரம் எடுத்துக் கொண்டேன் என்பதால் இந்த முறை சிறுகதையுடன் வந்திருக்கிறேன் என்று சொன்னாலும் கதையை ஆரம்பத்தில் இருந்து முடிவு வரை சொல்லிச் சென்றதால் இந்த முறையும் அதிக நேரமே எடுத்துக் கொண்டார் என்ற போதிலும் நல்லதொரு கதையைச் சொன்னார். ஆட்களே வராத கோவிலுக்கு ஒரு சாமியார் வருகிறார்... அவருடன் இரண்டு கிளிகளும் வருகின்றன... அந்தக் கிளிகள் சிவா எனச் சொல்ல ஆரம்பிக்க, நிறையக் கிளிகள் வர ஆரம்பித்து எல்லாம் சிவா... சிவா என்று சொல்ல கூட்டமே இல்லாத கோவிலுக்கு கூட்டம் வர, வருமானம் இல்லாமல் இருந்த குருக்கள் வருமானத்தைப் பார்க்க ஆரம்பிக்க, சாமியாரை மக்கள் கொண்டாடுவதைப் பொறுக்காத குருக்கள் சரசாங்கிற பெண்ணைப் பற்றி சாமியாரிடம் சொல்ல, அவர் சிவா... சிவா...ன்னு அந்தப் பேச்சை மறுக்க, கொஞ்ச நாளில் கிளிகள் சரசான்னு சொல்ல ஆரம்பிக்க, ஒவ்வொன்றாய் சாமியார் கொல்ல, ஒரு நாள் சாமியார் சரசா யாருன்னு பார்க்கப் போய் காணாமல் போகிறார் என்ற கதையைத் தன் பாணியில் அழகாய்ச் சொல்லி முடித்தார்.

தெரிசை சரசா... ச்சை சிவா மிக அழகாக கதை சொன்னார்... நாவல் எடுத்தால் அதிக நேரமெடுக்கும் என்பதால் கதை எடுத்தார்... நேரமும் எடுத்துக் கொண்டார் என்றார் ஆசிப் அண்ணன். 

முழுக்கதையையும் விரிவாய்ச் சொல்லும் போது ஏற்படும் சிக்கல் இது...  வாசித்ததை... அது குறித்த பார்வையை... எழுத்தாளரை... அது தன்னைப் பாதித்த விஷயத்தை... அதனுடன் தொடர்புடைய நிகழ்வைச் சொல்லிச் சென்றால் இன்னும் சிறப்பாக இருக்கும். அடுத்த முறை நேரத்துக்குள் முடிப்பார் என்று நம்புவோமாக.

அடுத்துப் பேச வந்தவர் சசி அண்ணன்... இவர் எடுத்துக் கொண்டது மலையாள எழுத்தாளர் எழுதிய சிறுகதை, சிறுகதை என்பதைவிட எழுத்தாளரின் வாழ்வில் நிகழ்ந்த நிகழ்வை, சசி அண்ணன் மிகச் சிறப்பாகப் பேசுபவர் என்பதால் கேட்பவர்களை ஈர்த்தார். தீக்காயத்தால் முகம் முழுவதும் சிதைந்த பெண்ணொருத்தி எழுத்தாளரைச் சந்திக்கும் போது பெயர் சொல்லி அழைக்கிறாள்... அவருக்கு யாரெனத் தெரியவில்லை... என்னை மிரட்டி முத்தம் வாங்கினாயே ஞாபகம் இருக்கா என்றதும் அந்த ஞாபகத்துக்குள் போய் அந்தப் பெண்ணை படிக்கும் காலத்தில் காதலிக்கப்போய் பட்ட அவமானத்துக்காகப் பலி வாங்க படகில் செல்லும் போது கழி முகத்தில் படகை நிறுத்தி எனக்கு முத்தம் கொடுக்கவில்லை என்றால் படகைக் கவிழ்த்து விடுவேன் என்று மிரட்டி  முத்தம் வாங்கியதை நினைத்துப் பார்க்கிறார். பின்னர் அவளுடன் வீடு போய் அவளின் கதையைக் கேட்டு கையில் வைத்திருக்கும் பணத்தைக் கொடுத்தால் தவறாக நினைத்து விடுவாளோ என எண்ணி, அவளிடம் ரகசியம் பேச வேண்டுமெனச் சொல்லி அவளின் கருகிய முகத்தில் முத்தம் கொடுத்து திரும்பிப் பார்க்காமல் நடக்கிறார். இதை சசி அண்ணன் ரசனையோடு சொன்னது சுவையாய் இருந்தது... தீக்காயமோ முத்தமோ உறுத்தவில்லை... இதை தமிழில் மொழி பெயர்த்தவர் வம்சி சைலஜா அவர்கள்.

அடுத்துக் களமிறங்கிய தீபக் மா.கிருஷ்ணன் அவர்களின் படைப்புலகு பற்றிப் பேசினார். மா.கிருஷ்ணனைப் பற்றி நாம் அதிகம் அறிந்ததில்லை... அவரை அறிந்து கொள்ளும்படி அவரின் புத்தகங்களை வைத்துச் சொல்லி, மிகச் சிறப்பானதொரு அறிமுகத்தைக் கொடுத்து, காட்டு விலங்குகளை போட்டோ எடுத்தவர்களுக்கு... எடுப்பவர்களுக்கு முன்னோடி கிருஷ்ணன் என்பதைச் சொல்லி, அவரின் புத்தகங்கள் குறித்தான பார்வையை முன் வைத்து, பத்தி எழுத்தாளர் கிருஷ்ணன் என்பதையும் கிட்டத்தட்ட 45 ஆண்டு காலம் ஒரு பத்திரிக்கையில் தொடர்ந்து பத்தி எழுதியவர் என்பதையும் சொல்லி மிகச் சிறப்பானதொரு அறிமுகத்தைக் கொடுத்தார் தீபக். உண்மையில் சிறப்பானதொரு பேச்சு... சிறுகதை, நாவல் என்று எடுத்துக் கொள்ளாமல் ஒரு எழுத்தாளரைப் பற்றிப் பேசியது சிறப்பு. அவரின் பேச்சில் மகிழ்ந்த சுரேஷ் மீண்டும் ஒரு முறை கைதட்டலாமே என்றது அவரின் பேச்சுக்குக் கிடைத்த மரியாதை.

இவரின் பின்னே பேச வந்தவர் வேல்முருகன்... தியோடர்  பாஸ்கரன் பற்றி, சூழலியல் பற்றி, விரிவாய்ப் பேசினார்... முதல் முறை பேசுகிறேன் என்பதால் பேப்பரில் எழுதி வைத்துக் கொண்டு வந்திருக்கிறேன் என்று சொல்லியே ஆரம்பித்தார்... தியோடர் பாஸ்கரும் நமக்குப் புதுசுதான்... என்னென்னவோ சொன்னார்... அவர் வைக்கும் தலைப்புக்கள் எல்லாம் கவி நயத்துடன் அழகாய் இருப்பதைச் சொன்னார்... அவர் எழுதுவதில் கூட அழகும் சுவையும் இருக்கும் என்றார். அவரின் புத்தகத்தில் தலைப்புக்கள் பற்றி எல்லாம் சொன்னார். குறிப்பாக மா.கிருஷ்ணனின் சிஷ்யப்பிள்ளை இவர் என்பதையும் சொன்னார். மா.கிருஷ்ணனை சந்தித்தது குறித்து தியோடர் எழுதியிருப்பது நாம் சாதாரணமாகப் பேசுவது போல்தான் இருக்கும்... எழுத்துக்காக அழகியல் எல்லாம் அவர் சேர்ப்பதில்லை என்றார். பூங்காவுக்கும் சரணாயலத்துக்குமான வித்தியாசம் குறித்துப் பேசினார். சரணாலயத்தில் சத்தம் போடுகிறவர்கள் யாரென்று பார்த்தால் அது இந்தியர்கள்தான் என்பதையும் சொன்னார். கொஞ்சம் அதிக நேரம் எடுத்துக் கொண்டார்... எப்போது சந்தித்தாலும் நிறைய விஷயங்களைப் பேசி, நம்மை வியப்பில் ஆழ்த்தும் வேல்முருகனின் கன்னிப் பேச்சு கவனிக்கத்தக்கதாய் இருந்தது.

திரு. நூருல் அமீன் அவர்கள் முல்லா சஃபி குறித்துப் பேசினார். முல்லா கதைகளை நாம் நகைச்சுவையாய் மட்டுமே கேட்டுப் பழகியிருக்கிறோம். அவர் தாய் கோழியைக் கொன்று சாப்பிட்டதால் தவிக்கும் குஞ்சுகளுக்கு கருப்பு பட்டையை கழுத்தில் கட்டி ஊர்வலம் நடத்திய கதையையும், திருடன் திருடிக் கொண்டு போக அவனுடன் போய் அவன் வீட்டில் போய் படுத்துக் கொண்டு நாம வீடு மாத்தி வந்திருக்கோமா என்று கேட்ட கதையையும், திருட வர்றவனுக்கு ஒண்ணுமே இல்லையேன்னு பீரோவுக்குள்ள ஒழிந்து கொண்ட கதையையும் சொல்லி, முல்லா கடத்தல் பண்ணுவதைக் கண்டு பிடிக்க முடியாமல் போக, அவர் பெரும் பணக்காரராய் இருக்க, ஓய்வுக்குப் பின் அவரைப் பார்க்கும் போலீஸ் அதிகாரி என்ன கடத்தினீர்கள் என்று கேட்க, கழுதைதான் கடத்தினேன் நீங்க எல்லாத்தையும் சோதித்தீர்கள்... ஆனால் கழுதையை சோதிக்கலை என்றார் என்ற கதையைச் சொல்லி முல்லா குறித்துப் பேசினார். கணீர்க்குரல், அருமையான பேச்சு அமீன் அண்ணாச்சிக்கே உரியது. சிறப்பான பேச்சு.

முஹைதீன் பாட்சா பேச வந்தது எஸ்.ராவின் கூழாங்கற்கள் பேசுகின்றன குறித்து... இது முழுக்க முழுக்க ஜென் கவிதைகள் குறித்தது... நிலா கீழே இருந்தது, கடல் மேலே இருந்தது, நிலா என்னருகில் படுத்திருந்தது என்பது போன்ற கவிதைகள்... சற்றே சிரமமான ஒரு காரியம் இது குறித்துப் பேசுதல் என்பது... பாட்சா நிறைவே சிரமப்பட்டார்... இடையிடையே வீடியோ எடுக்கும் செல்போனும் சத்யாகிரகம் பண்ண, வீடியோ சரியாகும் வரை அதே பொசிசனில் நின்று தொடர்ந்து பேசினார்... சில வார்த்தைகள் திரும்பத் திரும்ப வந்து விழுந்தன... அவரின் ஆர்வத்துக்கு கூழாங்கல் ஆதரவு கொடுக்கவில்லை... அடுத்த முறை நல்லதொரு கதையுடன் வருவார் என்று நம்பலாம்.

அய்யனார் விஸ்வநாத் பேசியது சம்பத் கதைகளைக் குறித்து... சம்பத் மரணத்தையே தேடியிருக்கிறார்... அவரின் கதைகள் எல்லாம் மரணத்தையே பேசுகின்றன. ஒரு நாவலில் நாயகன் தன்னுடைய மரணத்தைப் பற்றியே பேசுகிறான்  என்றெல்லாம் சொன்னார். பெரும் எழுத்தாளர்கள் மரணத்தைப் பற்றியே பேசுகிறார்கள் என சுரேஷ் கூட இடையில் சொன்னார். அவரின் இறப்புக்குப் பின்னேதான் அவர்களின் கதைகள் தொகுக்கப்பட்டதாகவும் அதற்குக் கூட  அவரின் குடும்பத்தார் ஒத்துக் கொள்ளவில்லை என்றும் அவரின் நண்பர்தான் விடாமுயற்சியால் கொண்டு வந்தார் என்றும் சொன்னார். சம்பத்தின் கதைகளை வாசிக்க வேண்டும் என்ற ஆவலை உண்டாக்கிய பேச்சு... அய்யனார் எப்போதும் போல் சிறப்பாகவே பேசினார்.

இடையில் ருவைஸ் தமிழ்ச்சங்கத்தில் இருந்து வந்திருந்த நண்பர்கள் அறிமுகப் படுத்தப்பட்டார்கள்... அவர்கள் குறித்த சிறு அறிமுகப் பேச்சின் பின் ஒரு நண்பர், நாம் சிறு வயதில் கேட்டிருந்த குரு, மாம்பழம், குழந்தை இல்லாத பெண் கதையை விரிவாய்ச் சொன்னார்... இந்தக் குரு, அந்தக் குரு என இரண்டு குருக்களைப் பற்றிச் சொன்னார்... ஆரம்பத்தில் புரிந்த கதை போகப்போக எந்தக் குரு அந்தப் பெண்ணின் கணவர், எந்தக் குரு குளிக்க வந்தவர் என்ற குழப்பம் எழுந்தது. தயார் பண்ணிக் கொண்டு வரவில்லை என்று சொன்னார்...  தன் பாணியில் சிறப்பாகவே கதையைச் சொன்னார்... முன்முடிவுகள் இல்லாமல் இறங்கியதால் வரும் பிரச்சினையே அவருக்கும் இருந்தது... ஆனாலும் மேடையில் கதையைச் சொல்ல நினைத்த ஆர்வம் போற்றுதலுக்குரியது. ஜனவரி விழா குறித்தும் பேசினார்கள்... ருவைஸில் இருந்து வந்து கலந்து கொண்டமைக்கு வாழ்த்துக்கள் மூவருக்கும்.

இறுதியில் பேச வந்த கௌசர் எஸ்.ராவின் உறுபசி பற்றிப் பேசினார். ஒரு மரணத்தைப் பற்றியும் மரணித்த சம்பத் வாழ்ந்த விதத்தைப் பற்றியும் பேசும் கதை அது... அதனுடன் தன் அப்பாவின் மரணத்தை இணைத்து, நாமும் மரணித்து விடுவோமோ எனப் பயந்து, துரத்தும் பிரச்சினைகளின் முடிவு மரணமாய் இருக்குமோ என்ற யோசனையில் ஒரு வாரம் முன் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்ததையும் சொன்னார். பாதித்த நண்பனின் மரணத்தைச் சொன்னார். பாலாஜி அண்ணன் இதையா வாசிக்கிறாய் வேண்டாம் என்று சொன்னதாகவும் சொன்னார். சில நேரங்களில் மரண பயம் என்பதைவிட சூழ்ந்திருக்கும் பிரச்சினைகளால் அப்படி ஒன்று நிகழ்ந்தால் குடும்பம், குழந்தைகள் என்ற எண்ணம் எனக்குள் எழத்தான் செய்கிறது. மரண பயம் என்பதைவிட மரணத்தின் பின்னான நம் நிழலில் வாழ்வோரின் நிலை என்னாகும் என்ற பயமே மனசுக்குள்... கௌசர் பேசி முடித்ததும் பாலாஜி அண்ணன் கட்டிப் பிடித்து ஆற்றுப் படுத்தினார்.

இதன் தொடர்ச்சியாய் கனவு அண்ணன் இப்படியான கதைகளை எழுதுபவர்களைக் கொல்ல வேண்டும் என்று நினைப்பவன் நான்... அது இப்படி... இது அப்படின்னு எப்பவுமே அகச்சிக்கலை விலாவாரியாக எழுதுவதில்தான் சிக்கலே இருக்கிறது. சங்கீதா துணி துவைத்தாள்... சமையல் பண்ணினாள்ன்னு எழுதி கடைசியில சங்கீதாவைக் கொன்னுடுறானுங்கன்னு சொன்னார்.... அவர் சொன்ன பெயர் சங்கீதாவா சுசிலாவான்னு ஞாபகத்தில் இல்லை... ஆனா அவரின் பேச்சு ரசிக்கும்படியாக இருந்தது. எஸ்.ரா. இத்தனை கட்டில் இருந்தது, இவன் இதைச் சாப்பிட்டான் என்றெல்லாம் எழுதியிருக்கிறார் இது அவருக்கு வரமா, சாபமான்னே தெரியலைங்கிற மாதிரி கௌசர் பேசியிருந்தார். அதன் தொடர்ச்சியே கனவு அண்ணனின் பேச்சு.

அமீரகத்தில் இருந்து பணி நிறைவு பெற்று ஊருக்குச் செல்ல இருக்கும் அமீன் அண்ணாச்சிக்கு குழுவின் சார்பாக பொன்னாடை போர்த்தப்பட்டது. ஷார்ஜா புத்தக விழாவில் வெளியிடப்பட இருக்கும் ஆசிப் அண்ணா, அய்யனார், யூசுப் (கனவு) அண்ணா, ஜெஸிலா ஆகியோரின் புத்தக அட்டைப் படங்கள் திரையிடப்பட்டன. அட்டையில் சொல்லப்பட்டிருக்கும் முக்கிய குறிப்பு வாசிக்கப்பட்டது. அதில் ஓர் என்று இருப்பது தவறு என யூசுப் அண்ணனிடம் சுரேஷ் சொன்னார். பிழை திருத்தம் அட்டைப் படத்தில் இருந்து இனிதே தொடங்கியது.

எல்லாருக்கும் நிகழ்வு நடக்கும் போது சமோசா, வடை, டீ கொடுக்கப்பட்டது. பாலாஜி அண்ணன் எப்பவும் போல் விழாவை மிகச் சிறப்பாக நடத்தி முடித்தார் தொடர்ந்த தலைவலியுடன்... ஆசிப் அண்ணன் சிறப்பாகத் தொகுத்தளித்தார்... இடையில் தனது ஒரு புத்தகத்தைக் காணும் என்பதையும் பதிவு செய்து கொண்டார். எழு ராஜாக்களின் நகரம் புத்தகம் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.

எப்பவும் போல் சுபான் அண்ணா வளைத்து வளைத்துப் போட்டோ எடுத்தார்.  இரவு உணவு சாப்பிட்டே ஆக வேண்டும் என பிலால் வற்புறுத்தி அழைத்துச் சென்றார். நல்ல சாப்பாடு... அதன் பின்னே பயணம் அபுதாபி நோக்கி... அறைக்கு வந்து சேரும் போது இரவு 2 மணி.

பல பிரச்சினைகள் நிறைந்திருந்தாலும் மன நிறைவைக் கொடுக்கும் ஒரு வெள்ளியாய் நேற்று மாலை அமைந்தது. அதற்காக நட்புக்கள் அனைவருக்கும் நன்றி.

நேற்றைய முடிவில் சின்னச் சின்ன மன வருத்தங்கள்... இதெல்லாம் நிகழாமல் ஒரு குழுமம்  ஒத்த எண்ணங்கள் கொண்டவர்களால் இரண்டாண்டுகளாய் நகர்ந்து வந்திருக்கிறது... வருத்தங்களை எல்லாம் கடந்து செல்வோம்... கடக்க வேண்டிய தூரம் இன்னும் அதிகமிருக்கிறது. 

எனக்குக் கிடைத்த நேற்றைய பாடம் நண்பர்கள்தானே அழைக்கிறார்கள் என எந்த ஒரு வாட்ஸ் அப் குழுமத்திலும் இணையக் கூடாது என்பதே... சிறு பிரச்சினை.... பேசித் தீர்க்க வேண்டியதை... தீர்க்காமல்... தனித்தனியே பேசிக் கொண்டு போவதுடன் மூன்று நிகழ்வுகளை ஒரு புள்ளியில் இணைத்துப் பேசியதால் குழுமத்தில் இருந்தோம் என்பதை, மற்ற நண்பர்கள் குறித்த தவறான பேச்சு நிகழ்ந்த இடத்தில் இருந்தோம் என்பதாய் ஆக்கி விட்டிருந்தது. 

என்னைப் பொறுத்தவரை அந்த இடத்தில் இருந்தேன் என்றால் ஆம் இருந்தேன் என்று சொல்லிவிட்டுப் போயிருப்பேன். நான் அங்கு இல்லவே இல்லை என்று சாதித்து ஒன்றும் ஆகப் போவதில்லியே. ஆனால் நாம் இல்லாத இடத்தில் நிகழ்ந்ததில் நாமும் இருந்ததாய்ச் சொன்னதுதான் கஷ்டமாய் இருந்தது. மற்றபடி அந்தக் குழுமத்தில் யார்யார் இருந்தீர்கள் என்ற கேள்விக்கு முதலில் கைதூக்கியவன் நானே...  நான் கிட்டத்தட்ட பதினைந்து எழுத்தாளர் குழுமத்தில் இருக்கிறேன். 

எது எப்படியோ உறவுகளின் குழுமங்களுக்குள் அடைபடாமல் நகர்வதைப் போல் இனி வரும் நட்புக் குழுமங்களையும் ஒதுக்கிப் பயணித்தலே நலம் என்ற முடிவை எடுக்க வைத்தது நேற்றைய நிகழ்வு. ஊர்ல சொல்லுவாங்க நொங்கு தின்னவன் தப்பிச்சிப் போக கொதம்பை நக்கியவன் மாட்டிக்கிட்டான்னு அந்தக்கதைதான் நேற்று நிகழ்ந்தது. பிரச்சினை என்ன... என்ன நிகழ்ந்தது என்பதை பிலால் புரிந்து கொண்டார்... பாலாஜி அண்ணன் வருத்தமுடனே சென்றதுதான் கஷ்டமாக இருந்தது.

நேற்றைய நிகழ்வில் செல்போன்களின் தொல்லை அதிகமாகவே இருந்தது... ஒரு நிகழ்ச்சிக்குச் செல்கிறோம் என்னும் போது சப்தத்தையாவது குறைத்து வைத்துக் கொள்ளலாம். அப்படி அவசரமான போன் என்றால் வெளியில் போய் பேசியிருக்கலாம்... பலர் உள்ளே உட்கார்ந்தே பேசினார்கள்... அடிக்கடி சிலர் எழுந்து போனார்கள்... அது பேச்சாளர்களை மட்டுமல்ல... அமர்ந்து கேட்டவர்களுக்கும் தொந்தரவாகவே இருந்தது. பலரின் பேச்சு தடைபட்டது... கவனிக்கவும் முடியவில்லை.

சொல்ல மறந்துட்டேன்... வேள்பாரியின் தொடர்ச்சியாய் சுந்தர் பேசி அனுப்பிய வீடியோ திரையிடப்பட்டது... சப்தம் குறைவாக இருந்த காரணத்தால் யாரும் கவனிக்க முடியவில்லை... எனவே அடுத்த கூட்டத்தில் திரையிடலாம் என நிறுத்தி வைக்கப்பட்டது.

எப்பவும் எல்லாரும் இணைந்து ஒரு போட்டோ எடுக்கப்படும் நேற்று அப்படி நிகழவில்லை...  மன நிறைவான கூட்டம் சின்ன மன வருத்தத்துடனே முடிவுக்கு வந்தது. வரும் கூட்டங்களில் இந்தச் சின்னச் சின்ன பிரச்சினைகள் களையப்பட்டு மகிழ்வுடன் நகரும் என்று நம்பலாம்.

எது எப்படியோ எப்பவும் போல் மிகச் சிறப்பான நிகழ்வு... அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
-'பரிவை' சே.குமார்.

வியாழன், 17 அக்டோபர், 2019

மனசு பேசுகிறது : ஆயிஷாவைத் தேடி சந்திப்பும் இரு சினிமாவும்

சென்ற வெள்ளியன்று அலைனில் இருந்து அபுதாபிக்கு பிரபு வந்திருந்ததால் மாலை நண்பர்கள் ஒரு சந்திப்பு வைத்துக் கொள்ளலாமே என யோசித்து, நீண்ட நாட்களுக்குப் பிறகு நடக்க இருக்கும் நண்பர்களின் சங்கமம் என்பதால் தேநீருடன் கூடிய ஒரு சிறு சந்திப்பைத் தன் வீட்டிலேயே வைத்துக் கொள்ளலாம் என்றார் வேல்முருகன். அதன்படி நாங்கள் மாலை அங்கு சென்றோம்.

இரண்டு மணி நேரத்துக்கு மேலான பேச்சு.. வாசித்த கதைகள், தன்னைக் காண 100 ரூபாய் கேட்ட எழுத்தாளர், ஷார்ஜா புத்தகவிழா, சினிமாக்கள் என எல்லாவற்றையும் கலவையாய் பேசி மகிழ்ந்தோம். நல்லதொரு காபியும் கொறிச்சிக்க பக்கோடாவும் திருமதி. வேல்முருகனின் கைப்பக்குவத்தில் அதீத சுவையுடன் அருமையாய் இருந்தது. பிரச்சினைகளில் உழலும் மனசுக்கு இதமானதொரு சந்திப்பு.

Image result for மகாமுனி

ர்யா நடித்த மகாமுனி நல்ல பிரிண்ட் வந்ததும் பார்க்கலாமென நினைத்திருந்த படம்... இரண்டு நாள் முன் பார்க்க வாய்த்தது. தொய்வில்லாமல் நகரும் திரைக்கதையால் தொடர்ந்து பார்க்க முடிந்தது. 

ஆஹா... ஓஹோன்னு சொல்லுமளவுக்கெல்லாம் கதையில்லை... தமிழ்ச்சினிமாவின் அரதப்பழசான கதைதான்... பிள்ளைகளைத் தவிக்கவிட்டு அம்மா எங்கே சென்றாள் அப்படின்னு ஆராய்ச்சி செய்யக்கூடாது ஏன்னா இது பிறவியைத் தேடலை... அதே ரவுடி... அதே அடியாள்... தனக்குப் பிரச்சினை என்றதும் அடியாளைப் பலி கொடுக்கும் அதே அரதப் பழசான கதைதான்...

ஆர்யா நல்லா நடிக்கும் நடிகன் என்பதால் இரு பாத்திரமும் சிறப்பாக இருந்தது. நாயகிகள் இருவருமே தங்கள் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருந்தார்கள். விறுவிறுப்பு இல்லையென்றாலும் போராடிக்காமல் போகிறது மகாமுனி. பார்க்கலாம்.

Image result for actor nani's kutralam

குற்றாலம் அப்படின்னு பேர் மாற்றம் செய்யப்பட்ட நாணி நடித்த தெலுங்குப் படம். ரவுடியான அண்ணனுக்குத் தெரியாமல் காதலிக்கும் தங்கை... வம்பு, சண்டை என்றால் காததூரம் ஓடும் கதாநாயகன்... தெலுங்குப் படத்துக்கே உரிய பலி வாங்கத் துடிக்கும் வில்லன், என்கவுண்டர் போலீஸ், பலி வாங்கலின் தொடர்ச்சியாய் தேடப்படும் போலீஸின் குழந்தைகள், அவர்களை ஹைதராபாத்துக்கு கூட்டிச் செல்லும் கதாநாயகன் இப்படியாக நகரும் கதையில்... பாலகிருஷ்ணா படத்தை ஒட்டி வச்சி, ரஜினி வசனத்தை மொபைலில் வச்சி என் தலைவன் சூப்பர்ஸ்டார்டான்னு சொன்னானுங்க... 

பெயர் போடும்போது SPECIAL THANKS - அப்படின்னு போடுற போதெல்லாம் SPECIA THANKS-ன்னு போட்டானுங்க... எதுவும் நியூமராலஜியா இருக்குமோ..? 

மொக்கைப் படத்தையும் கொஞ்சம் காமெடி, கொஞ்சம் காதல், கொஞ்சம் வில்லத்தனம்ன்னு வச்சி பார்க்க வச்சானுங்க... உலகமே பயப்படுற வில்லன்னு ஒருத்தனை சிங்கப்பூர்ல இருந்து இறக்கி படம் முழுவதும் சிறையில் வைத்துக் காமெடி பண்ணுனானுங்க... தமிழ்ப்படுத்தப்பட்டாலும் 'ஏய்...','ஊய்' எனக் கத்தும் தெலுங்குப்படமாக இல்லாமல் இருந்தது சிறப்பு... 

லுவலகத்தில் மதியம் சாப்பிடும் போது நண்பர் ஒருவர் பேஸ்புக்கில் தன் முன்னாள் காதலியைத் தேடுவதாகவும் கிடைக்கவில்லை என்றும் சொன்னார். அவரைக் காதலித்து வீட்டுக்குத் தெரிய வந்ததாலேயே வெளிநாட்டுக்கு வந்தது, வேறு திருமணம். கிடைத்திருக்கும் அருமையான துணைவி, ஓரளவு பொருளாதாரத்தில் மேம்பட்ட வாழ்க்கை என எல்லாவற்றுக்குமே அவர் தன்னைப் பிரிந்து சென்றதுதான் காரணம் எனவே அவருக்கு நன்றி சொல்ல வேண்டும் என்றார். 

அவர் பிரிந்ததாலேயே இவ்வாழ்க்கை என்ற முடிவுக்கு எப்படி வந்தீர்கள் எனக் கேட்டதும் அவரைக் கட்டியிருந்தால் இது நடந்திருக்காது என்பது எனக்குத் தோன்றும் எண்ணம் என்றார். உங்களைக் கட்டாமல் அவர் போனதால் அவருக்கு நல்ல வாழ்க்கை கிடைத்திருக்கலாம்தானே என்றதை ஒத்துக்கொள்ளவே இல்லை அவர்... அவர் மனதில் அந்தப் பெண் ஏழ்மை நிலையில்தான் இருப்பாள் எனப் பதிந்திருக்கிறது.... அதை எப்படி நம்மால் மாற்ற முடியும்...?

முடிஞ்சா ஆயிஷான்னு அடிச்சித் தேடிப்பிடிச்சித் தாங்க... நான் முயன்று என்னால் முடியவில்லை என்றார். அவரின் மகளுக்குத் திருமணம் ஆகிவிட்டது... இப்போது பழைய காதல் மனசுக்குள் மணியடிக்கிறது பாருங்கள்... இதிலிருந்து என்ன தெரிகிறது... காதலை மறந்துட்டேன்... இப்ப அதை நினைக்கிறதேயில்லை என்பதெல்லாம் வாய் வார்த்தைகள்தான்... காதல் கடைசி வரை இதயத்துக்குள் உலா வரத்தான் செய்யும்.

ஆயிஷாவைத் தேட முடியவில்லை.... வேணும்ன்னா ஆயிஷாவைத் தேடின்னு ஒரு கதை எழுதலாம்....
-'பரிவை' சே.குமார். 

புதன், 16 அக்டோபர், 2019

என்னைக் கவர்ந்த பாடல்கள் - 3

வாசிக்காதவர்களுக்காக... என்னைக் கவர்ந்த பாடல்கள் - 1 2

முதல் இரண்டு பதிவுகளுக்கும் நல்ல வரவேற்புக் கிடைத்திருப்பதில் மகிழ்ச்சி... சிறப்பாக எழுதியிருக்கிறேனா என்றால் இல்லை என்றுதான் சொல்வேன்... மிகச் சிறப்பாக எழுதணும் என்ற எண்ணத்துடன்தான் இந்தப் பதிவை ஆரம்பித்தேன்... தற்போதைய மனநிலை கொடுக்கும் அழுத்தத்தால் எண்ணிய எண்ணப்படி எழுத முடியவில்லை என்றுதான் தோன்றுகிறது. வரும் பதிவுகளில் கொஞ்சம் மெனக்கெடல் செய்ய முயல்கிறேன்.

இந்தப் பதிவு நாட்டுப்புறப் பாடல்கள் குறித்தான நினைவுகள் என்பதாய் போன பதிவிலேயே சொல்லியிருந்தேன். சென்ற பதிவு பக்திப்பாடல்கள் என்றதால் பிரதிலிபியில் சகோதரி கண்மணி மற்ற மதப் பாடல்கள் குறித்தும் எழுதுங்கள் என்று கேட்டிருந்தார். அதற்காக இதிலும் சில பாடல்கள்கள் குறித்தான் நினைவுகள் பக்தி மயமாய்...

நமக்கு எப்பவுமே இந்த சாதி, மதச் சனியன்கள் மீது பெரும் ஈடுபாடெல்லாம் இல்லை... தற்போதைய நாட்டு நடப்புகள் சற்றே ஈடுபாட்டைக் கொடுத்து விடுமோ என்றுதான் தோன்றுகிறது. ஏனென்றால் முகநூலில் மற்ற மதத்தைக் கேலி செய்வதைக் காணும் போதெல்லாம் மனசுக்குள் வருத்தமே மேலிடுகிறது. நான் என் மதம் சார்ந்தவைகளுக்கு முழு உரிமை கொடுப்பேன் என்பவர்கள் மற்ற மதத்தின் தெய்வங்களை எள்ளி நகையாடுதல்... மற்ற மத கோட்பாடுகளைக் கேலி செய்தல் என்பது வருத்தமான விஷயமே. திருந்தாத ஜென்மங்களுக்காக வருந்தி என்ன செய்வது எனக் கடக்க நினைத்தாலும்... நம் மத உணர்வு மெல்ல மேலெழத்தான் செய்கிறது... தடுக்க முடியவில்லை.

நான் எப்பவுமே நல்ல சாப்பாடு கிடைக்குதுன்னா எங்க வேணுமின்னாலும் போகும் ரகம்தான்... சாதியாவது... மதமாவது... மண்ணாங்கட்டியாவது... வயிறு நிறைய வாய்க்கு ருசியா செஞ்சு போடுறியா... 'அது போதும் எனக்கு... அது போதுமே'ன்னு பாடிக்கிட்டு கிளம்பும் நண்பர்கள் எனக்கு வாய்த்தது சேவுகன் அண்ணாமலைக் கல்லூரியில்.

நாங்க பத்துப்பேர் வகுப்பில் இருந்த ரகுவரன் குழுவிலும் இணையாமல்... நாசர் குழுவிலும் இணையாமல் இரண்டு குழுவுடனும் மய்யமாய் மூன்றாண்டுகள் பயணித்தவர்கள். பத்துப் பேரின் வீட்டுக்கும் திருவிழா, விஷேசங்களுக்குப் போய் மூன்று நான்கு நாட்கள் இருந்து மூக்கு முட்டத் தின்னு தீர்த்தவனுங்க நாங்க.... இராமேஸ்வரம் போக திருவாடானையில் நண்பன் ஆதியின் வீட்டில் தங்கி ஐயர் வீட்டுச் சாப்பாட்டை தினமும் மதியம் சாப்பிட்டிருந்தாலும் என்ன செய்ய எனக் கேட்டு அம்மா செய்து கொடுத்ததை ஒரு பிடிபிடித்தவர்கள் நாங்கள்.

எங்களுக்கு வகுப்பில் மட்டுமின்றி மற்ற துறை நட்புக்களும் உண்டு... மிகப்பெரிய கூட்டமாய்த்தான் கல்லூரிக்குப் போவோம்... வருவோம்... நிறைய வம்பிழுப்போம் என்றாலும் எங்கள் ஆசிரியர்களின் செல்லப் பிள்ளைகள் நாங்கள்... அந்தப் பாசம்தான் இப்போது வரைக்கும் ஆசிரியர்கள் மனதில் நாங்கள் இருக்கக் காரணம்... அடிதடி நடந்தால் இங்க என்ன வேடிக்கை... ஒண்ணு வகுப்புக்குள்ள போங்க... இல்லேன்னா வீட்டுக்குப் போங்க... இங்க எதுக்கு நிக்கிறீங்கன்னு எங்க கே.வி.எஸ். சார் வந்து சொல்லிட்டுப் போவார். ஆமா ஆசிரியர்கள் விரும்பிய மாணவர்கள் நாங்க.

ஆமா இப்ப எதுக்கு இதெல்லாம்...?

பாட்டுப் பகிர்வுதானே போடணும்... பக்கம் பக்கமா என்னைப் பற்றி எழுதக் கூடாதுதானே...

எனக்கு கிறிஸ்தவ நண்பர்கள் அதிகம்... இப்பவும் எப்பவும்.... என் மனைவியிடம் கேட்டால் சொல்வார் பல விஷயங்களை... ஏன்னா அவருக்கு எல்லா விபரமும் தெரியும்... நானெல்லாம் எப்பவும் முருகனை அழைப்பவன்... என் மனைவி தும்மினால் அழைப்பது ஏசப்பாவை... ஏன்னா அவங்க படிச்சதும் கிறிஸ்தவப் பள்ளியான ஓசிபிஎம். நாமளும் படிச்சது தே பிரித்தோவுல... பசங்க வீட்டுக்கு அருகே இன்பேண்ட் ஜீசஸ்ல...

நானும் முருகனும்.... இப்ப இவர் நாங்கள் படித்த சேவுகன் அண்ணாமலைக் கல்லூரியில் தமிழ்த்துறைப் பேராசிரியர்... படிக்கும் போது கல்லூரியில் வேறு வேறு துறை என்றாலும் ஏதோ ஒரு புள்ளியில் இணைந்தோம்... மனசு கையெழுத்துப் பிரதி நடத்தினோம்... இருவரும் உணர்வில் வேறாக எப்போதும் நின்றதில்லை... இருவரும் ஒன்றே....

என் கல்லூரி நாட்கள் பெரும்பாலும் இவனுடைய (மரியாதை நட்புக்குத் தேவையில்லை) வீட்டில்தான்... ஆரம்பத்தில் இங்கயெல்லாம் சாப்பிடுவியாய்யான்னு கேட்ட முருகனின் அம்மா அப்புறம் விதவிதமாச் சமைச்சிப் போட்டாங்க... எங்க போனாலும் ஒண்ணாத்தான் சுத்துவோம். அது ஐயா வீடா இருந்தாலும் சரி... அரசியல் கூட்டமா இருந்தாலும் சரி...

அப்ப முருகன் சுபமங்களா, தாமரை, செம்மல்ர் மூன்றுக்கும் ஏஜெண்ட்... புத்தகம் வந்ததும் சைக்கிளில் எடுத்துக் கொண்டு தேவகோட்டையில் வீதி வீதியாய்ச் சென்று புத்தகம் வாங்கும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் வீடுகளில் கொடுத்து வருவோம். அப்போது அருள்சாமி ஐயா, சவரிமுத்து ஐயா வீட்டிலெல்லாம் எங்களுக்கு அம்மாக்கள் தீனி போடாமல் விடுவதில்லை. உங்களுக்காக அம்மா இந்தப் பழத்தைப் பறிக்காமல் மரத்திலே போட்டு வைக்கச் சொன்னாங்க என்றபடி அருவாக் கம்பெடுத்துப் பறித்துக் கொடுப்பார் சவரிமுத்து ஐயா.

ரெண்டு பேருக்கும் மனசு சரியில்லை என்றால் நாங்கள் தேர்ந்தெடுக்கும் இடம் எங்கள் தேவகோட்டை சரஸ்வதி வாசகசாலை சர்ச்தான்... மெழுகுவர்த்தியுடன் போவோம்... ஏற்றி வைத்துவிட்டு நீண்ட நேரம் அமைதியாய் அமர்ந்திருப்போம்... மனக்கவலை தீர்ந்தது போல் ஒரு எண்ணம் எழும் போது கிளம்பிவிடுவோம். இது அடிக்கடி நிகழும் நிகழ்வுதான் கல்லூரிக் காலத்தில்.

நிறையப் பாடல்கள் பிடிக்கும்... எப்பவும் மறக்க முடியாத பாடல் என்றால் அது

'மாதா உன் கோவிலில் மணிதீபம் ஏற்றினேன் 
தாயென்று உன்னைத்தான்
 பிள்ளைக்கு காட்டினேன் மாதா  
மாதா உன் கோவிலில் மணிதீபம் ஏற்றினேன்

மேய்ப்பன் இல்லாத மந்தை வழிமாறுமே
மேரி உன் ஜோதி கண்டால் விதி மாறுமே 
மெழுகுபோல் உருகினோம் கண்ணீரை மாற்றவா - மாதா...'


இது அச்சாணி என்ற படத்தில் இளையராஜா இசையில் எஸ்.ஜானகி பாடிய பாடல். இதே பாடலை நான் கடவுள் படத்திலும் இளையராஜா பயன்படுத்தியிருப்பார். அதில் அம்மா உன் பிள்ளை நான் என்றொரு பாடலும் இதே மெட்டில் வரும். எனக்கு அந்தப் பாடல் ரொம்பப் பிடிக்கும். பாடல் வந்த சமயத்தில் திரும்பத் திரும்பக் கேட்டிருக்கிறேன்.... வலி நிறைந்த வரிகள் ராஜாவின் இசையோடு கலந்து வரும் போது நம்மையும் கலங்க வைக்கும். முழுப் பாடலையும் பகிர ஆசைதான்... வீடியோவாய்ப் பார்த்தல் சிறப்பு என்பதால் பாடலில் இருந்து சில வரிகள் இங்கே.

'காவல் இல்லாத ஜீவன் கண்ணீரிலே
காவல் இல்லாத ஜீவன் கண்ணீரிலே
கரை கண்டிடாத ஓடம் தண்ணீரிலே
தரையிலா துயருக்கோர் கரைபோட்டுக் காட்டவா நீயே...'


பழனி, திருச்செந்தூர் போன்ற கோவில்களுக்குப் பாதயாத்திரை செல்வது போல் வேளாங்கண்ணிக்கும் பாதயாத்திரை செல்வார்கள். அப்போதெல்லாம் தேவகோட்டையில் இருந்து எங்கள் ஊர் வழிதான் பயணிப்பார்கள்... பயண தூரத்தைக் குறைக்க வயல்களினூடே நடந்து போவார்கள். சில நேரம் ஊரில் தங்கிச் செல்வார்கள். இப்போதெல்லாம் வயல்கள் கருவைகளின் ராஜ்ஜியத்தில் இருப்பதால் ரோடு வழியேதான் பயணப்படுகிறார்கள்.

ஒரு மேடையில் லியோனி எல்லாப்பயலும் பழனிக்கு நடக்குறானுங்கன்னு எங்காளுங்க வேளாங்கண்ணி நடக்க ஆரம்பிச்சிருக்கான்னு கிண்டல் பண்ணுவார். அதுக்கும் நாம் சிரித்திருப்போம். அவரவர் நம்பிக்கை அவரவருக்கு... அதைக் கேலி செய்வதில் என்ன கிடைத்து விடப்போகிறது. நான் பழனிக்கு ஆறாண்டுகள் பாதயாத்திரை சென்றிருக்கிறேன்.... சபரிமலை நான்கு ஆண்டுகள்... திருப்பரங்குன்றம் ஒரு ஆண்டு.... நடப்பது எனக்குப் பிடிக்கும்... முருகனையும் அதிகம் பிடிக்கும்.

நாங்கள் குடும்பமாய் வேளாங்கண்ணிக்கு செல்வோம்... மாதாவைக் கும்பிடுவோம்... என் மகள் குட்டியாய் இருக்கும் போது... இப்பவும் குட்டிதான்... பதினோராவது படிக்கும் குட்டி... எல்லாருக்கும் பாப்பாதான் அவர்... ஐயா, ஆயா, அப்பா, அம்மா, ஏன் தம்பிக்கு கூட இப்பவும் பாப்பாதான். மண்ணில் முட்டி போட்டே நடந்து போய் வழிபாடு செய்தார்.... இறுதி வரை எழவேயில்லை.

எனக்குப் பிடித்த இன்னொரு பாடல்...

'நீலக் கடலின் ஓரத்தில்
நீங்கா இன்ப காவியமாம்
காலத் திரையில் எழில் பொங்கும்
கனக கருணை ஓவியமாம்
நீலக் கடலின் ஓரத்தில்
நீங்கா இன்ப காவியமாம்
காலத் திரையில் எழில் பொங்கும்
கனக கருணை ஓவியமாம்'


'கேளுங்கள் தரப்படும்... தட்டுங்கள் திறக்கப்படும்... இயேசு கேளுங்கள் கிடைக்கும் என்றார்' என்ற பாடல் உள்ளிட்ட நிறையப் பாடல்கள் எனக்குப் பிடித்தமானவை... பேசினால் இன்னும் நிறையப் பேசலாம் என்றாலும் இஸ்லாமியக் கீதங்கள் பற்றியும் பேச வேண்டும் என்பதால் இங்கிருந்து மதம் மாறி அங்கே போகலாம்.

இப்ப நமக்குச் சோறு போடுறதே ஒரு இஸ்லாமிய நாடுதான்... இங்கிருக்கும் உறவுகள் எல்லாம் பெரும்பாலும் இஸ்லாமியர்களே... அது தமிழனாக, மலையாளியாக, லெபனானியாக, எகிப்தியனாக, பாலஸ்தீனியனாக, சிரியனாக, பெங்காலியாக, பாகிஸ்தானியாக... யாராகவோ இருந்தாலும் எல்லாருமே மனிதர்களாய் இருப்பதுதான் முக்கியம். இங்கே எல்லாரும் அன்போடும் நட்போடும் இருக்கிறார்கள்... பேதங்கள் பெரும்பாலும் இல்லை... பிழைக்க வந்த இடம் என்பதால் கூட இருக்கலாம்... தமிழனுக்குள்தான் பேதங்கள் இருக்கு இங்கும்.

இஸ்லாமியப் பாடல்கள் என்றால் அந்தக் கம்பீரக் குரல், வசீகரிக்கும் குரல், மைக் இல்லாமலேயே தூரத்தில் இருப்பவனும் கேட்கும் விதமாகப் பாடக் கூடிய நாகூர் ஹனிபாவை மறக்க முடியுமா..? என்ன குரல் அது...? சினிமாவிலும் இவரின் பாடல்கள் தனி முத்திரை பதித்தன... இளையராஜா இவரை ஓரளவுக்குச் சிறப்பாகப் பயன்படுத்திக் கொண்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.

எத்தனை பாடல்கள் இருந்தாலும் இந்தப் பாடலைக் கேட்கும் போது இது எல்லா மதத்துக்கும் பொறுத்தமான பாடல்தானே என்று தோன்றும்... அதில் வரும் 'அல்லாவின் பேரருளை நம்பி நில்லுங்கள்' என்ற வரியில் அல்லாவுக்குப் பதில் சிவனை, முருகனை, பெருமாளை, கிருஷ்ணனை, கருப்பனை, மாரியைக் , காளியை, மாதாவை, இயேசுவை என யாரை வேண்டுமானாலும் பொருத்திப் பாடிப்பாருங்கள்.... எல்லாத் தெய்வத்துக்கும் உகந்த பாடலாய்த்தான் இருக்கும். முன்பு அடிக்கடி கேட்க்கும் பாடலாகவும் இது இருந்தது.

'இறைவனிடம் கையேந்துங்கள் அவன்
இல்லையென்று சொல்லுவதில்லை
பொறுமையுடன் கேட்டுப்பாருங்கள் அவன்
பொக்கிஷத்தை மூடுவதில்லை
இறைவனிடம் கையேந்துங்கள் அவன்
இல்லையென்று சொல்லுவதில்லை'

இங்கே நாகூர் ஹனிபா பாடிய பாடலுக்குப் பதில் அதே பாடலின் வித்தியாசமான வேறொரு வீடியோவைப் பகிர்ந்திருக்கிறேன்.


எஸ்.பி. பாலசுப்பிரமணியனும் நாகூர் ஹனிபாவும் இணைந்து பிரபு - குஷ்பு... குஷ்பு சார்... ராணி அட்டைப் படத்தில் வரும் குஷ்பு போட்டோவை பைத்தியமாய் கட் பண்ணி வைத்திருந்தவங்க நாங்கள்லாம்... வருஷம்-16 எத்தனை தடவை பார்த்திருப்போம்... ஏன் சின்னத்தம்பி, பாண்டித்துரை... அம்புட்டுப் போட்டோவையும் சமீபத்தில்தான் பீரோவில் இருந்து எங்கப்பா, வெறும் பேப்பரா வச்சிருக்கான் பாருத்தான்னு அள்ளி மனைவியிடம் கொடுக்க, அவர் அதைப் பார்த்து நமக்குப் போன் போட்டு ரொம்பச் சந்தோசமாய்ப் (?) பேசிட்டு, த்தூன்னு ஒரு சத்தம் மட்டும் கொடுத்துட்டு கிழித்து ஊரணிக்குள் அள்ளிப் போட்டுட்டார்... ஏங்க குஷ்பு வெறும் பேப்பராங்க... ம்... பொங்கலப் பொங்கல வைக்க மஞ்சள மஞ்சள் எடு தங்கச்சி தங்கச்சி தங்கச்சி....

சரி விஷயத்துக்கு வருவோம்... இளையராஜா இசையில் தர்மசீலன் படத்தில் பாடிய பாடல் வரிகள் சில...
'எங்குமுள்ள அல்லா
பேரைச் சொல்லு நல்லா
நன்மைகள் மாத்திரம் கிடைக்கும்....

மேடு பள்ளம் இல்லா
பாதை தரும் அல்லா
பார்வையில் நிம்மதி பிறக்கும்...'

பாலு மகேந்திராவின் ராமன் அப்துல்லான்னு ஒரு படம்... அருமையான படம் அது... அதிலும் நாகூர் ஹனிபாவைப் பயன்படுத்தியிருப்பார் இளையராஜா, உன் மதமா என் மதமாங்கிற பாட்டு அது. அருமையான பாடலும் கூட. மதம் பிடித்து அலைபவர்கள் கேட்க வேண்டிய பாடல்... இப்பத்தான் சாதியும் மதமும் இணைய வெளிகளில் எல்லாம் தலை விரித்து ஆடுகிறதே... இணையம் வளர்ச்சிக்கு வித்திட்டதைவிட சாதீய வீழ்ச்சிக்குத் தண்ணீர் வார்த்துக் கொண்டுதான் இருக்கிறது.

'உன் மதமா என் மதமா ஆண்டவன் எந்த மதம்
நல்லவங்க எம்மதமோ ஆண்டவன் அந்த மதம்
அட போங்கடா போங்கடா போங்கடா
பொல்லாத பூசலும் ஏசலும் ஏனடா
கூட வாங்கடா வாங்கடா வாங்கடா
சொல்லாத சங்கதி சொல்லுறேன் கேளடா
அந்த ஆண்டவன் தான் கிறிஸ்துவனா...
முஸ்லிம்மா... இல்ல ஹிந்துவா...'


ஊரில் இருக்கும் போது பள்ளி வாசலுக்கும் நமக்குமான தொடர்பு பிள்ளைங்களுக்கு உடல் நலமில்லை என்றால் மிளகு மந்திரித்து கயிறு கட்டி வருவதற்காகச் செல்லுதல், படிக்கும் காலத்தில் நண்பர் கொண்டு வந்து கொடுக்கும் நோன்புக் கஞ்சி குடிப்பது என்ற வகையில்தான் இருந்தது. இங்கு வந்தபின் நிறைந்திருக்கும் பள்ளிகள், தொழுகைக்காய் போடப்படும் 'அல்லாஹூ அக்பர் அல்லா' பாடல் எனத் தினம் தினம் ஒரு நெருக்கத்தோடு நகர்கிறது. நோன்பு நேரத்தில் நோன்புக் கஞ்சி தினமும் பிரியாணி எப்போதேனும் கிடைக்கிறது.

Image result for grand mosque

அமீரகத்தில் அபுதாபியில் இருக்கும் பெரிய பள்ளிக்கு உள்ளே சென்று சுற்றிப் பார்த்து வர முடிகிறது. அதன் அழகை ரசிக்க முடிகிறது. எஸ்.ராமகிருஷ்ணன் வந்திருந்தபோது அவருடன் பெரிய பள்ளிக்குள் அவர் பேசிக் கொண்டே நடக்க, நாங்கள் கேட்டுக்கொண்டே நடந்தோம்.

அப்படியே நம்ம ஹனிபா செம்பருத்தி படத்தில் பாடிய 'கடலிலே தனிமையில் போனாலும்' பாடலையும் கேளுங்க.... எனக்கு ரொம்பப் பிடித்த பாடல் இது.


பாடல் தொடரும்.
-'பரிவை' சே.குமார்.

ஞாயிறு, 13 அக்டோபர், 2019

என்னைக் கவர்ந்த பாடல்கள் - 2

வாசிக்காதவர்களுக்காக... என்னைக் கவர்ந்த பாடல்கள் -1 

****************
ப்பவுமே... எதை ஆரம்பித்தாலும் சாமி கும்பிட்டு ஆரம்பிப்பதே பழக்கம் என்பதால் கவர்ந்த சினிமாப் பாடல்கள் பற்றிப் பார்க்கும் முன் பிடித்த சாமிப் பாடல்களைப் பற்றியும் பார்க்கலாம்தானே...

ஊர்ல திருவிழான்னாலே ஒரு வாரத்துக்கு மைக்செட் கட்டுவார்கள் என்ற சந்தோஷம் பள்ளி செல்லும் நாட்களின் அதிகமாகவே இருக்கும்... குழாய் ரேடியோவில் போடப்படும் பாடல் தூரத்தில் வரும்போதே கேட்கும் என்பதால் பாட்டுப் போட்டாச்சுடான்னு ஓடிவருவோம்... அந்த ஒரு வாரமும் காலையிலும் மாலையிலும் பிடித்த பாடலைப் போடச் சொல்லி மைக்செட் போடுபவரின் அருகிலேயே அமர்ந்திருப்போம்.

அப்போதெல்லாம் எங்க ஊரில் திருவிழா என்பது கேள்விக்குறிதான்... இருப்பதெல்லாம் சித்தப்பன் பெரியப்பன் என்றாலும் செவ்வாய்க் கூட்டம் என்பது பெரும்பாலும் பிரச்சினையில்தான் முடியும். அதை உடைத்து திருவிழா என்பது வருடாவருடம் கொண்டாட வேண்டும் என்பதை நாங்கள்தான் கொண்டு வந்தோம். இங்கே நாங்கள் என்பது பசங்க... பயலுக பேசுறதைக் கேட்டு ஆடுறீங்க என போன வருடம் இறந்து போன எங்க சித்தப்பா ஒருத்தர் சொல்லிக் கொண்டே இருப்பார் என்றாலும் திருவிழா என்பது தடையில்லாமல் நடந்து கொண்டுதான் இருந்தது.

எந்த ஊர் அம்மன் கோவில் திருவிழா என்றாலும் எல்.ஆர்.ஈஸ்வரியின் 'செல்லாத்தா செல்ல மாரியாத்தா...', 'அங்காளம்மா எங்க செங்காளம்மா...', 'ஏற்காடு வாழ்ந்திருக்கும்...', 'ஆடும்கரகம் எடுத்து ஆடி வருவோம்...', 'கற்பூரநாயகியே கனகவள்ளி...', 'தாயே கருமாரி... எங்கள் தாயே கருமாரி...' இப்படி எத்தனையோ பாடல்கள் அம்மன் திருவிழாக்களில் அணி வகுக்கும். அதுவும் பால்குடம், பூக்குழி என்றால் இந்தப் பாடல்கள் இல்லாமல்  சாமி வருமா என்ன..? கோவிலின் கூட்ட நெரிசலில் செல்லாத்தாவைக் கேட்டு எத்தனை ஆத்தாக்கள் ஆடியிருப்பார்கள். 


எங்க ஊரில் திருவிழாவே பெரிய விஷயமாய் இருந்த சூழலில் திருவிழாவை ஒரு பிரச்சினையுடன் நடத்தி முடித்த பின் மார்கழி மாதம் முழுவதும் காலையில் பொங்கல் வைத்து சாமி கும்பிடுவது என நாங்கள் முடிவு செய்தோம். அதற்கான முயற்சியில் இறங்க, அப்பவும் பயலுக ஆட்டம் போடுறானுங்க... இவனுகளும் அவனுக பின்னாடி நிக்கிறானுங்கன்னு ஒரு சிலர் கிளம்பி எதிர்த்து நின்னார்கள்... எதிரிகளாய்த் தெரிந்தது பசங்கதான்.

ஊர்க்கூட்டம் சரிவரலைன்னு நாட்டு அம்பலம் வீட்டு வரைக்கும் கொண்டு போய் அதுவும் முடியாத நிலையில் போலீஸ் வரைக்கும் கொண்டு போக,  அங்கும் பசங்க செய்வதில் தவறென்ன இருக்கு எனக் கேட்க, மீண்டும் ஆட்களைக் கொண்டு மைக்செட் போட வந்தவரைக் கூப்பிட்டு மிரட்ட, ஊர்ல போடச் சொன்னாங்க நான் போட்டேன்... அவங்க சொன்னா அவுத்துடுறேன்னு அவர் ஒத்தை வரியில் சொல்லி முடிச்சிட்டார்.

அன்னைக்கு அவர் சொன்ன அந்த வார்த்தைகள்தான் அவரை உயர்த்திக் கொண்டு வந்தது. அவர்தான் இனி நம்மூருக்கு என எங்கள் மனதில் நிறுத்தியது. ரெண்டு குழாய் ரேடியோவுடன் பரியன்வயல் மாரிக்கு கட்ட வந்தவர் இன்று தேவகோட்டையில் பெரிய மைக்செட் உரிமையாளராய் இருக்கிறார். எங்க ஊர் திருவிழா மட்டுமின்றி வீட்டு விசேசங்களுக்கும் இன்றுவரை அவர்தான்... கணக்குப் பார்த்து அவரும் வாங்குவதில்லை. நாங்களும் கொடுப்பதில்லை. அன்னைக்கு எங்களுடன் நின்றார்...இன்றும் நாங்கள் அவருடன் இருக்கிறோம்.

விஷயத்துக்கு வருவோம்...

மார்கழி மாதத்துக்கு ரேடியோ கட்டியாச்சு... தினம் பொங்கல் வைக்கணும்... சாமி கும்பிடணுமே... என்ன செய்றது..? காலையில் யாரை எழுப்பி பொங்கல் வைக்கச் சொல்வது...? யார் இதைச் செய்ய முன் வருவார்கள்..? ஒரு மாதக் குளிரில் சில நேரம் மழையும் பெய்யும் அதிகாலையில் தினமும் சரி வரச் செய்துவிட முடியுமா..?  விவசாய நேரம் வேறு... யோசித்தோம்.

யாரையும் கேட்பதில்லை... நாமே செய்வோமென வீட்டுக்கு வீடு வசூலித்த காசை வைத்து தினமும் காலையில் நாங்களே பொங்கல் வைத்தோம்... அருகிலிருக்கும் கூத்தாடி முத்துப் பெரியநாயகி அம்மன் கோவில் மாடு வயலுக்கு வந்து மேய்ந்து விட்டுப் போகாமல் பெரும்பாலானோர் வயலில் காவலிருந்தாலும் நாலு மணிக்கே பொங்கல் வைக்க எழுந்து குளித்து வரும் நாங்களும் போய் பார்த்துக் கொண்டே சாமிக்கு என்ன செய்யணுமோ அதைச் செய்தோம்..

தினமும் ஆறு மணிக்கெல்லாம் மணி அடித்தோம்... மழை அன்றைக்கு குடை பிடித்துக் கொண்டு பொங்கல் வைத்திருக்கிறோம்... அப்புறம் அடுத்தடுத்த வருடங்களில் ஊர் அதை எடுத்துக் கொண்டது... தினம் ஒரு குடும்பம் என ஆனது. சீட்டுப் போட்டு யார்யார் என்றைக்கு என்பதை எழுதி ஒட்டினோம். இப்போது எல்லாரும் வெளியில் என்பதால் வேளார் வந்து செய்து செல்கிறார்... மார்கழி மாத சாமி கும்பிடுதலும் தொடர்கிறது. இப்பக் கோவிலுக்கு என மைக்செட் வாங்கி விட்டதால் அதிகாலை 4.30 மணிக்கெல்லாம் யாரேனும் ஒருவர் பாடலைப் போட்டுவிடுவார்.

தினமும் காலையில் மைக்செட்டில் பிள்ளையார் பாடல்தான் முதல் பாடலாய் ஒலிக்கும்... 
'ஒன்பது கோளும் ஒன்றாய்க் காண
பிள்ளையார்பட்டி வரவேண்டும்...
அங்கு கற்பகம் என்னும் கடவுளின் மெய்யில்
உறையும் அவரைத் தொழ வேண்டும்...'


என்ற பாடல் எப்பவும் முதல் பாடலாய் வரும்.  எனக்கு இப்பவும் பிடித்த பாடல் இதுதான். அடிக்கடி கேட்கும் பாடலாகவும் இருக்கிறது. கேட்கும் போது மனதுக்கு ஒரு திருப்தி கிடைக்கும்... மகாநதி ஷோபனா பாடிய பிள்ளையார் பாடல்களும் அருமையாக இருக்கும்.. அவையும் தொடர்ந்து ஒலிக்கும். சாமி கும்பிடப் போகிறோம் என்றால் கந்தர் சஷ்டி கவசம்தான். அதே நடை முறைதான் இப்போதும்...
'துதிப்போர்க்கு வல்வினை போம்... 
துன்பம்போம்... நெஞ்சில் பதிப்போர்க்குச் 
செல்வம் பலித்துக்-கதித்தோங்கும்
நிஷ்டையுங் கைகூடும்... 
நிமலரருள் கந்தர் சஷ்டி கவசம் தனை...'

அப்படின்னு பாட ஆரம்பித்தாலே ஒரு சுகம்தான் மனசுக்குள் இல்லையா... அதுவும் நாமும் அதைப் பாடிக்கொண்டே கேட்பது வித்தியாசமான சுகம். எனக்கு மிகவும் பிடித்தவர் முருகன்... எதற்கெடுத்தாலும் முருகான்னுதான் வாயில் வரும். தினமும் பலமுறை அழைத்து விடுவேன் முருகனை... நல்லாத்தான் முருகா போடுறே... ஆறாவதாய்ப் பிறந்ததனால ஆறுமுகம்ன்னு வைக்கணும்ன்னு உங்கய்யா (அம்மாவின் அப்பா) சொன்னாரு... உங்கப்பாதான் குமாரசாமின்னு வச்சாரு... நான் உன்னைய பள்ளியில் சேர்க்கும் போது சாமி எதுக்குன்னு தள்ளி வச்சிட்டு குமார்ன்னு சேர்த்தேன்... அதான் முருகா... முருகான்னு சொல்றே போலன்னு அம்மா இப்பவும் சொல்வாங்க. 

எந்தக் கோவில் என்றாலும் தேக்கம்பட்டி சுந்தர்ராஜனின் 'அங்கே இடிமுழங்குது...' பாடலை... ஸ்பீக்கரில் போடும் போது ஆடாதவனையும் ஆடவைக்கும் இல்லையா..? அந்தக் குரலும் இசையும்... அந்தப் பாடலை இதுவரை எத்தனையோ பேர் பாடி விட்டார்கள்... இன்று வரும் கிராமியப் பாடகர்கள்  இந்தப் பாடலையும் ஆக்காட்டி பாடலையும் கண்டிப்பாகப் பாடும் பாடலாக ஆக்கி வைத்திருக்கிறார்கள். திருவிழாக்களில் வைக்கப்படும் கிராமிய இசை நிகழ்ச்சிகளில் இது பிரதானமான பாடலாக இருக்கிறது.

எங்களுக்கு அழகர் கோவில் குலதெய்வம் என்பதால் பதினெட்டாம் படிக் கருப்பரும் எங்கள் குலதெய்வமாய்... அவர் மீது பயம் கலந்த தனிப்பாசம் உண்டு. இந்த முறை சென்றபோது சிறு கதவின் வழி உள்ளே பார்த்தபோது எவ்வளவு பெரிய அருவா... இவ்வளவு அருவா இருக்கு என ஆச்சர்யப்பட்டான் விஷால்.

சில நேரங்களில் மனசு நல்லாயில்லை என்றால் முருகன் பாடலுடன் கருப்பரின் பாடல்களைத் தேடித்தேடிக் கேட்பேன். அப்போதெல்லாம் இந்தப் பாடல்தான் முதலாவதாய் ஓடும்... தேக்கம்பட்டியாரின் குரல் கருப்பனை நம்முன்னே இழுத்து வந்து நிறுத்தும் அல்லது நம் கண்ணுக்குள் கருப்பனைக் காட்டும். கருப்பர் சாமி ஆடுபவர்கள் இந்தப் பாடலைக் கேட்டால் துள்ளி ஆட அல்லவா செய்வார்கள்... பிடித்து நிறுத்த முடியாமல் திணற வைத்துவிடும் பாடல் அல்லவா இது.
'அங்கே இடி முழங்குது - கருப்பசாமி
தங்க கலசம் மின்னுது...
அங்கே இடி முழங்குது - மகாலிங்கம்
மாளிகபாறை கருப்பசாமி தங்க கலசம் மின்னுது...
வெள்ள நல்ல குதிர மேலே
வீச்சருவா கையிலேந்தி வேட்டையாட
வாரார் அங்கே கோட்ட கருப்பசாமி...'


பெரும்பாலும் கோவில் பூக்குழிகளின் போது இந்தப்பாடல்தான் ஒலிக்கும்... கருப்பர் அழைப்பின் போதும் இதே பாடல்தான்... இப்போது எப்படி அழகர் வைகையில் எழுந்தருளும் போது வாராரு... வாராரு அழகர் வாராரு பாடல் ஒலிக்கிறதோ அதைப் போல இந்தப் பாடல் சாமி அழைக்கும் இடங்களில் எல்லாம் ஒலிக்கும்.

எங்க ஊர் மாரியம்மன் கோவில் இப்போது கோபுரத்துடன் பிள்ளையார் முருகனுடன் சற்றே பெரிய கோவிலாய் கட்டப்பட்டுவிட்டது. முன்பு ஓட்டுக் கொட்டகைதான்... எங்க அக்கா, அண்ணன் என மாறி மாறி வெள்ளி செவ்வாய் சாம்பிராணி போடுவார்கள். அதன் பின் நான் ரொம்ப நாள் பூசாரி வேலை பார்த்தேன். பீடம்தான் அம்மன்... சிலையாக இல்லை... பீடத்தைக் கழுவுவதற்கு அவ்வளவு பிடிக்கும். அதிலொரு மகிழ்ச்சி.

அப்பறம் சமீபத்தில் பிரபலமான குலசை முத்துராமன் எழுதிய காளியம்மன் பாடல்... இப்ப எல்லாத் திருவிழாவிலும் அடிக்கடி போடப்படும் பாடலாக மாறியிருக்கிறது. சாமி வர வேண்டும் என்றால் இந்தப் பாடலைப் போடலாம் என்ற வரிசையில் இதுவும் அமர்ந்திருக்கிறது.

'கூப்பிட்டா ஓடிவருவளா...
நம்ம காளியம்மா குதி போட்டு ஆடிவருவாளா...
அவ கூப்பிட்டா ஓடிவருவாளா
நம்ம காளியம்மா குதிபோட்டு ஆடிவருவாளா...
ஏய் சின்னஞ்சிறுபிள்ளை போல இருப்பவள்
சேதுபதியை நடுவில் வச்சவ...
தன்னை மறந்துமே தலைகுனிஞ்சவ
தாயமங்களம் மாறி அவ
கூப்பிட்டா ஓடிவருவாளா...'


இந்தப் பாடலை நாடகக் கலைஞர் பபூன் ராதாகிருஷ்ணன் பெரும்பாலான மேடைகளில் பாடி, கூத்துப் பார்க்க வந்திருப்பவர்களைச் சாமியாட வைத்து விடுவார்.

சொல்ல மறந்துட்டேன் பாருங்க... மருதமலை மாமணியே முருகையா பாடலை குழாய் ரேடியோவில் போட, தூரத்தில் இருந்து கேட்டிருக்கிறீர்களா... அப்படிக் கேட்டால் அவ்வளவு அருமையாக இருக்கும். அருமையானதொரு பாடல் இல்லையா அது..?

இன்னும் இன்னுமாய் நிறைய சாமி பாடல்கள் இருக்கின்றன... எல்லாவற்றையும் எழுத முடியாது... அடுத்த பதிவில் என்னைக் கவர்ந்த நாட்டுப்புறப்பாடல்கள் பற்றிப் பார்ப்போம்.

பாடல் தொடரும்.
**********************
மின்கைத்தடியில் எனது மூன்றாவது சிறுகதை பகிரப்பட்டிருக்கிறது. இணை என்னும் இச்சிறுகதையும் எப்பவும் போல் வாழ்க்கையைத்தான் பேசுகிறது. வாசித்து தங்கள் கருத்தை அங்கும் இங்கும் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி.

-'பரிவை' சே.குமார்.