மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

செவ்வாய், 30 ஜனவரி, 2018

முருகா..! முருகா..!!

Image result for முருகன்

முருகன் மீது ஏனோ ஒரு காதல் அன்றும் இன்றும் எப்போதும்...

முருகனை சீமான் முப்பாட்டன் என்று சொன்ன பின்னால் வந்த காதல் அல்ல இது... சிறு வயது முதலே அவன் மீது தீவிரக் காதல். 

பள்ளியில் படிக்கும் போது முருகன் படங்களைச் சேகரிப்பதும்... ராணி முத்து காலண்டரில் இருக்கும் முருகனை, காலண்டர் முடிந்த பின்னர் எடுத்து பத்திரப்படுத்தி வைப்பதும் கல்லூரி செல்லும் வரை தொடர்ந்தது.

இந்த பத்திரப் படுத்துதல் இப்போதும் தொடர்கிறது. அன்று படங்களை வெட்டி எடுத்துச் சேகரித்தேன். இன்றோ இணையத்தில் அழகிய முருகனைக் கண்டாலோ... முகநூலிலோ... வாட்ஸ் அப்பிலோ பார்த்தாலோ உடனே சேமித்து வைத்து விடுகிறேன். பத்துமலை முருகன் வரை நம்ம சேமிப்பில்.

ஊரில் மாரியம்மன் இருக்கு, முனீஸ்வரர் இருக்கிறார்... கருப்பரோ சின்னக் கருப்பர் பெரிய கருப்பர் என இருவராய்... ஐயனாரும் இருக்கிறார். நாச்சியம்மத்தாவும் குடி கொண்டிருக்கிறார். இன்னும் சிலரும் இருக்கிறார்கள். கல்லூரியில் படிக்கும் காலத்தில் மாரியம்மன் கோவிலுக்குள் விநாயகரும் முருகனும் இடம் பிடித்துக் கொண்டார்கள்.

முருகன் மீது அப்படி என்ன காதல்...?

ஒருவேளை குமார் என்ற பெயர் முருகன் மீது ஒரு ஒட்டுதலை ஏற்படுத்திவிட்டதோ..?

பெரும்பாலும் என் நட்பு வட்டத்தில் அதிகம் முருகன் பெயர் கொண்டவர்களாகவும் அமைவது எப்படி... ஆச்சர்யமே... ஆம் என் ஆருயிர் நண்பனாய் இருந்தவனும்... இப்போது நண்பனாய்த் தொடர்பவனும் முருகனே.

சிறுவயதில் முருகன் மீதான காதலால் ஐயப்பனை வெறுத்தவனும் நான்தான்... பின்னர் ஐயப்பன் மீதும் பற்றுதல் ஏற்பட்டு நான்காண்டுகள் நடைப்பயணம் மேற்கொண்டவனும் நான்தான். 

பழனிக்கு நடைப் பயணம்... ஆஹா.. அது ஒரு அற்புத அனுபவம்.... ஆறாண்டுகள் நடைப்பயணம் மேற்கொண்டு முருகனைத் தரிசித்து வந்த அந்த நாட்கள் மறக்க முடியாதவை...

லட்சோப லட்ச மக்களில் நானும் ஒருவனாய் உறவுகளுடன் முருகனைக் காண பழனி மலை நோக்கி நடந்த நாட்கள் எத்தனை ஆனந்தத்தைக் கொடுத்தன என்பதை அனுபவித்தவர்களால் மட்டுமே ரசித்துச் சொல்ல முடியும்.

தேவகோட்டையில் இருந்து ஏழு நாள் நடை பயணம்... தேவகோட்டையில் இருந்து கிளம்பும் செட்டியார்கள் காவடிக்கு வழி நெடுக வரவேற்பும் , பழனியில் தனி மரியாதையும் இருக்கும். ஆனால் காவடியுடன் நடந்து செல்ல நம்மளால் முடியாது. அவர்கள் பயணத் திட்டப்படித்தான் நடப்பார்கள்...

நாங்க ஐந்தாவது நாள் காலை பழனி அடிவாரத்தில் இருப்போம்... சண்முக நதிப் பயணம் முடித்து மலையேறினால் சாமி கும்பிட்டு அங்கிருந்து இரவு தங்கத் தேர் பார்த்து பின்னர்தான் இறங்குவோம்.

இரவுச் சாப்பாட்டை முடித்துவிட்டு பேருந்து நிலையம் சென்று பேருந்தில் ஏறி அமர்ந்தால் குன்றக்குடியைக் கடக்கும் போது இறங்கி சாமி கும்பிட்டுச் செல்லலாம் என்று தோன்றினாலும் சரி ரெண்டு நாள் கழித்து வந்து கும்பிட்டுக்குவோம் என்று மனதிற்குள் முருகனை வணங்கி வீட்டுக்கு ஆறாவது நாள் அதிகாலை சென்றால் என்னடா பூசத்துக்கு நடந்து பொயிட்டு இப்ப பூசத்துக்கு முன்னாடி திரும்பிட்டீங்கன்னு வீட்டில் கேட்பாங்க.

எங்களுக்கு முன்னோடி எங்க அண்ணன் குரூப், மூணு நாளில் பழனிக்கு போய் நாலாவது நாளில் வீட்டிற்கு வந்த சாதனையாளர்கள். அதை எங்க ஊரில் யாராலும் முறியடிக்க முடியவில்லை. மனுசனுங்க மூணு நாளும் நடந்துக்கிட்டே இருந்திருக்கானுங்க...

முருகனைப் பார்த்தாலே மனசுக்குள் அவ்வளவு சந்தோஷம்... அதுவும் அந்த இராஜ அலங்காரத்தில்... ஆஹா... காணக் கண் கோடி வேண்டும்.

போன விடுமுறையில் விஷாலுக்கு மொட்டை போட பழனிக்குச் சென்றோம். மாமாவின் நண்பர் ஒருவரின் உதவியால் கூட்டத்தில் மாட்டாமல் முருகனை... அந்த இராஜ அலங்காரத்தில் அருகில் நின்று பார்த்து மகிழ்ந்தோம்... ஆஹா... என்ன ஒரு அற்புத தரிசனம் அது.

எப்பவும் முருகன் மீது தீராத காதல் எனக்கு.

அது ஏனோ தெரியலை... ஒரு வேளை  சீமான் சொல்லும் ரத்த சம்பந்தமாக இருக்கலாமோ என்னவோ... ஆனாலும் முப்பாட்டன்... இப்பாட்டன் எல்லாம் எனக்கு அவனில்லை... அவன் எனக்குள் எப்போதும் இருக்கும் ஒருவன்... 

அதிகாலை எழும்போது 'அப்பா முருகா' எனத்தான் எழுவேன்... நாள் முழுவதும் தும்பினாலும்... உட்கார்ந்தாலும்... எழுந்தாலும்... எல்லாவற்றுக்கும் முருகாதான்... 

நாளை தைப்பூசம்.... இன்று முருகனின் நினைவு அதிகமாய்...

மதியம் அலுவலகத்தில் பறவை முனியம்மா என் காதுக்குள் 'காவடியாம் காவடி' பாடிக் கொண்டிருந்தார்.

ஒரு வாரமாக எதுவும் எழுத மனமில்லை... இரண்டு நாள் முன்னர் அறம் மற்றும் அருவி குறித்து எழுத ஆரம்பித்து பாதி எழுதிய போது ஒரு சிறு பிரச்சினையால் சேமிக்காமல் எழுதியது ஸ்வாகா ஆக, நேற்று மீண்டும் அதே பதிவை எழுதிய போது பாதியில் அயற்சியாகி என்னத்த எழுதினோம் என்று படுத்துவிட்டேன்.

இன்று முருகனைப் பற்றி எழுத வேண்டும் என்ற நினைப்புடன் சமைத்து விட்டு வந்து உட்கார்ந்தால் பதிவு தயாராகிவிட்டது.


'அப்பா முருகா... என்னை மட்டும்... இல்லப்பா 
எல்லாரையும் காப்பாத்துப்பா...'

-'பரிவை' சே.குமார்.

சனி, 20 ஜனவரி, 2018

மனசு பேசுகிறது : மாமல்லனும் பரஞ்சோதியும்

ந்தப் பதிவு 'சிவகாமி ஏமாற்றப்பட்டாளா?' என்ற கட்டுரை அகலுக்கு எழுதுவதற்கு முன்னர் எழுதியது. சில நாட்களாகவே எதிலும் ஒட்டுதல் இல்லை... வலைப்பக்கம் அதிகம் வரவில்லை... யாருக்கும் கருத்து இடவில்லை... எதுவும் எழுதவில்லை... சில கதைகள் எழுத நினைத்து எதிலும் நாட்டமின்றி... என்னவென்று சொல்ல முடியாத ஒரு மனநிலையில்தான் மனசு இருந்தது.

இன்னும் அப்படித்தான் நகர்கிறது... இந்த வெளிநாட்டு வாழ்க்கை மீதான காதல் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து வெறுப்பை உமிழ்ந்து கொண்டிருக்கிறது வாழ்க்கை.

இன்று காலை கணிப்பொறியில் பலவற்றை அழித்தபோது இந்தக் கட்டுரையும் அதில் வர, வாசித்துப் பார்த்து 'அட... எழுதியதை மறந்து விட்டோமோ' என்று நினைத்த போது சரி வலைப்பூவில் பதியலாமே... நாமும் இருக்கிறோம் என்பதை அவ்வப்போது பதியும் பதிவு மூலமாவது வலை உறவுகளுக்குச் சொல்வேமே என இங்கு பகிர்ந்தாச்சு.

அப்புறம் விஷால் பிறந்த தினத்துக்கு வாழ்த்துச் சொன்ன அனைவருக்கும் நன்றி. அவன் சார்பாகவும் நன்றி. உங்கள் வாழ்த்து அவனை நல்லவனாய் வளர்க்கட்டும்.

இனி கட்டுரைக்குள்....

Image result for சிவகாமியின் சபதம்

சிவகாமியின் சபதத்தில் எத்தனையோ கதாபாத்திரங்கள் இருந்தாலும் மனசுக்குள் ஒட்டிக் கொள்ளும் கதாபாத்திரங்களில் என் மனதில் முன்னணியில் நிற்பவர்கள் பரஞ்சோதியும் மாமல்லன் என்ற நரசிம்மவர்மப் பல்லவனும்தான்.

முரடனாக இருப்பதாலும் கல்வி அறிவு இல்லாததாலும் தன் மகளைக் கட்டிக் கொடுக்க மாமன் ஒத்துக்கொள்ளமாட்டான் என்பதால் கல்வி பயில சோழ தேசத்தின் திருச்செங்காட்டாங்குடியில் இருந்து காஞ்சிக்கு வரும் பரஞ்சோதி, காலத்தின் கோலத்தால் மகேந்திரவர்ம பல்லவரின் அன்புக்குப் பாத்திரமாகி அவரின் நேசத்துக்குரிய படைத்தலைவனாகி, பின்னாளில் பல்லவ இளவரசனான மாமல்லனின் நண்பனாகவும் சேனாதிபதியுமாகி  இரண்டாம் புலிகேசியை வென்ற போரில் முக்கியமானவராகிறார்.

மாமல்லனோ அப்பாவின் மீது அதீத பாசம் கொண்ட இளவரசனாய் இருந்து... தன்னை அப்பா போர்க்களத்துக்குப் போக விடமாட்டேங்கிறாரே... அரண்மனையில் பெண்களுடன் இருக்கச் சொல்லிவிட்டாரே என்று மனசுக்குள் குமைந்து கிடப்பவர், சேனாதிபதியாய் பரஞ்சோதி வந்த பின்னர் துர்வநீசனை எதிர்த்து படையுடன் போகச் சொல்லி மன்னரின் ஆணை வந்த பின் வெறி கொண்ட வேங்கையாய் பயணித்து...  தன் தந்தையின் சாவுக்கு காரணமான... சிவகாமியை தூக்கிச் சென்ற இரண்டாம் புலிகேசியை வாதாபியில் போய் வென்று வாதாபி கொண்டான் என்ற பட்டப் பெயர் பெறுகிறார்.

பரஞ்சோதி தன்னந்தனியாக கிளம்பி வரும்போது அவர் பின்னே பயணித்த மனசு, அவர் சிறையில் அடைபட்ட போது அவரோடு அடைபட்டு... விந்தியமலைக்கு குதிரையில் புறப்படும் போது அவருடன் பயணப்பட்டு... புலிகேசியிடம் ஓலையுடன் மாட்டிக் கொள்ளும் போது மாட்டி... பின்னர் மகேந்திரவர்மரிடம் படைத் தலைவனாகும் போது அந்த படைத் தலைவனோடு பயணப்பட்ட மனசு...  போரை வெறுத்து சிவபக்தராய் அவர் மாறும் வரை அவர் பின்னே தொடர்கிறதா..? என்ற கேள்வி எழும்போது என்னைப் பொறுத்தவரை இல்லை என்றுதான் சொல்ல முடிகிறது.

ஏன் தொடரவில்லை... தம்பி கலியுகம் தினேஷ் கூட பரஞ்சோதி பின்னே பயணித்தேன் என்று சொன்னானே... பின் ஏன் நம் மனம் பயணிக்கவில்லை...?

பொன்னியின் செல்வனில் வந்தியத் தேவன் பின்னால் பயணித்த மனசு... உடையாரில் இராஜராஜசோழன் பின்னால் பயணித்த மனசு... சாண்டில்யனின் நாவல்களில் பெரும்பாலும் கதை நாயகர்களுடன் பயணித்த மனசு... இதில் மட்டும் ஏன் நாயகனான பரஞ்சோதி பின்னே பயணிக்கவில்லை... என்று யோசித்தால்... அந்த யோசனையின் பின்னே மாமல்லன். ஆம் மாமல்லனேதான்.

சிவகாமியைக் காதலிக்கிற... அப்பாவின் பேச்சுக்கு மறு பேச்சுப் பேசாத... இளவரசன் மாமல்லன்... ஒரு சாதாரண காதலனாக, அப்பாவின் மீது நேசம் கொண்டவராக இருக்கும் வரை தமிழ்ப்பட நாயகன் போலத்தான் தெரிகிறார். ஆதர்ஷ நாயகனாக இல்லை.  எப்போது துர்விநீசனை புறமுதுகிட்டு ஓடச் செய்கிறாரோ... காஞ்சிக் கோட்டை பாதுகாப்பில் அவரின் திறமையை இரண்டாம் புலிகேசி வியந்து நோக்குகிறானோ அப்போது அதுவரை பரஞ்சோதி பின்னே பயணித்த மனசு மெல்ல மெல்ல மாமல்லன் பின்னே பயணிக்க ஆரம்பிக்கிறது.

ஒருவர் காதலியின் சபதத்துக்காக ஒரு அரசனை வெற்றி கொள்ள ஒன்பதாண்டுகள் படை பலத்தை திரட்டி, இங்கிருந்து வாதாபி நோக்கிச் சென்று தன் தோழனும் சேனாதிபதியுமான பரஞ்சோதியின் திறமையைப் பயன்படுத்தி வெற்றி பெறுகிறான் என்றால் எப்படிப்பட்ட வைராக்கியமான மனசு அவருக்கு இருந்திருக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்குகிறது. 

அப்படி நினைத்தாலும்... தன் தந்தை சொன்னார் என்பதற்காக காதலியைக் காப்பாற்ற படையெடுத்துச் செல்வதாக கதையின் போக்கில் இருந்தாலும் தன் தந்தையின் மரணத்துக்கு காரணமாய் இருந்தவனை வெல்ல வேண்டும் என்ற வெறியே அவருக்குள் உண்மையில் இருந்திருக்க வேண்டும். அந்த வெறி கொடுத்த வேகம்தான் வாதாபி வரை செல்லச் சொல்லியிருக்கிறது. காதல் இரண்டாம்பட்சம்தான் என்பதே என் எண்ணம். அதுவும் சிவகாமி கதாபாத்திரம் என்பது நாவலின் சுவை கூட்டத்தான் இல்லையா...

மல்லர்களை வென்று மாமல்லன் என்ற பட்டப்பெயர் பெற்றிருந்த போதிலும் தன் தந்தையின் ஆணைப்படி துர்விநீசனை வென்று தன் வெற்றித் தீபத்தை ஏற்றி வைத்த மாமல்லர் வாதாபியை தீக்கிரையிட்டு அங்கு தன் சிங்கக் கொடியை பறக்க விட்டதில் தீபத்தை மேலும் அழகாக எறிய வைத்து தன் வாழ்நாளில் தோல்வியே காணாத இந்திய மன்னர்கள் 12 பேரில் ஒருவராய் திகழ்ந்திருக்கிறார். நரசிம்மவர்ம பல்லவனைப் பற்றி செய்திகள் அறியும் விதமாக தேடியபோது கிடைத்த விபரம் இது. இராஜராஜன், ராஜேந்திரன் போல் இவரின் வீரமும்தான் எத்தகையது என்ற வியப்பு நமக்குள் ஏற்படுகிறது.

தான் கட்டிக் கொள்ள நினைத்த திருவெண்காடு நங்கையை மகேந்திரரின் ஆசியுடன் திருமணம் செய்து கொள்கிறார் பரஞ்சோதி, ஆனால் மாமல்லனோ உயிருக்கு உயிராய் காதலித்த நாட்டிய மங்கை... ஆயனச் சிற்பியின் மகள் சிவகாமி, வாதாபிச் சிறையில்  இருக்கும் போது தந்தையின் சொல்லைத் தட்ட முடியாமல் பாண்டிய இளவரசி வனமாதேவியை மணமுடிக்கிறார். இந்த இடத்தில் மாமல்லனைவிட பரஞ்சோதி உயர்ந்து நிற்கிறார்.

வாதாபி நோக்கிச் செல்லும் போது மாமல்லருடன் பலர் இருந்தாலும் மாமல்லரின் புத்தி சாதூர்யமும் பரஞ்சோதியின் திறமையும் சேர்ந்தே வாதாபி கொண்டான் என்ற பட்டத்தை மாமல்லருக்குப் பெற்றுத் தருகிறது. இந்த வெற்றி வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றியாகும். தமிழர்கள் வீரத்திலும் தீரத்திலும் நிகரில்லாதவர்கள் என்பதை பறைசாற்றும் வெற்றியாகும். காஞ்சிக்கு தேடி வந்து வெல்ல முடியாமல் நட்பு போற்றி, கேவலமாக நடந்து கொண்ட புலிகேசியை அவன் தலைநகரில் வைத்துச் சாய்த்து வெற்றி கொள்ள எவ்வளவு தைரியம் இருந்திருக்க வேண்டும்.

ஆரம்பத்தில் பரஞ்சோதியுடன் பயணிக்கும் மனசு பின்னர் மாமல்லருடன் பயணித்து வாதாபி நோக்கிச் செல்லும் போது இருவருடனும் பயணிக்கிறது,

வாதாபி போருடன் சிவனடியாராகிவிடும் பரஞ்சோதி பின்னாளில் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராக, சிறுதொண்டராக மாறும் போது நம் மனதில் நிறைந்து நிற்கிறார் என்றாலும் மாமல்லர் தன் வீரத்தாலும் திறமையாலும் அவரோடு இணைந்தே நம்முள் நிற்கிறார்.

மொத்தத்தில் மாமல்லர் பாதி, பரஞ்சோதி பாதியாய் பயணித்து இருவரோடும் கதையின் முடிவில் இணைய வைக்கிறது கல்கியின் எழுத்து.

****

பிரதிலிபி போட்டியில் இருக்கும் கட்டுரை வாசிக்க 'இங்கு' சொடுக்குங்கள்.

-'பரிவை' சே.குமார்.

செவ்வாய், 16 ஜனவரி, 2018

வாழ்வின் வசந்தம் விஷால்


வாழ்க்கையில் சில நிகழ்வுகள் நம்மை மகிழ்ச்சியில் திளைக்க வைப்பதுடன் வாழ்வின் மற்றொரு கட்டத்துக்கு நகர்த்திச் செல்லும். அப்படியான நிகழ்வுகளின் பின்னே நாம் வாழ்வில் சாதித்து விட்டோம் என்ற எண்ணத்தைப் பெருமையுடன் எழச் செய்து சாதித்த மகிழ்வை புன்னகையாய் பூக்க வைக்கும்.

படிக்கும் காலத்தில் எந்தக் கவலையும் இன்றி வாழ்க்கை நகரும். என்ன நடந்தா என்ன... அது நல்லதா...கெட்டதா... என்பதெல்லாம் குறித்து ஆராய்வதில்லை... திருவிழாக்கள் எல்லாம் ஒரே ஆட்டம்... ஏதாவது ஒரு இறப்பு என்றால் சோகம் சுமந்து பதறி வரும் முகங்களை வேடிக்கை பார்ப்பதற்காகவே இழவு வீட்டின் முன்னே காத்திருக்கச் சொல்லும் அவ்வளவே... மற்றபடி எந்த மகிழ்வையும் எந்தக் கவலையையும் அதிக நேரம் சுமப்பதில்லை... அடுத்தடுத்து கடந்து போய்க் கொண்டே இருப்பதிலேயே மனசு குறியாக இருக்கும். 

வெட்கமா அப்படின்னா என்ன என்று கேட்ட வைத்த வயதில் எதை நோக்கி நாம் பயணிக்கப் போகிறோம் என்பதைக் குறித்தெல்லாம் சிந்தனை வருவதில்லை. பள்ளியில் மழை வருவது போல் இருந்தால் கிராமத்துப் பிள்ளைகள் போகலாம் என்றதும் புத்தகப் பையை தலைமை ஆசிரியரின் அறையில் வைத்து விட்டு மறக்காமல் சத்துணவுத் தட்டை எடுத்து தலையில் கவிழ்த்துக் கொண்டு நடந்த நாட்களில் இந்தப் பத்தியின் ஆரம்பத்தில் சொன்ன வெட்கம் என்பது இல்லவே இல்லை.

வெட்கம், வேதனை, வருத்தம், மகிழ்ச்சி, வாழ்வு குறித்தான அடுத்த கட்ட நகர்வுகள், பயம் என எல்லாமே குடும்பஸ்தனாய் மாறிய பின்னர்தான் அதிகமாகின்றன இல்லையா...? தனிக்காட்டு ராஜாவாகத் திரிந்தவனை மனைவி என்ற ஒருத்தி வந்த பின் தன்னை நம்பி ஒரு ஜீவன் வந்திருக்கு... இதுவரை எப்படியோ நகர்ந்த வாழ்வில்... அப்பாவின் சம்பாத்தியத்தில் நகர்ந்த வாழ்வில்... செலவுக்கு அப்பாவிடமோ அம்மாவிடமோ நைச்சியமாகப் பேசி வாங்கி செலவு செய்த நிலையில் மனைவிக்குப் பூ வாங்க அம்மாவிடமா பணம் கேட்க முடியும் என்ற யோசனை தோன்ற வாழ்வில் முதல் முதலாய் தன்னை நம்பி வந்தவள் மனம் கோணாது நடக்க வேண்டும் என்ற எண்ணம் தலை தூக்க ஆரம்பிக்கும் இல்லையா... அதுதான் வாழ்வின் அடுத்தடுத்த நிகழ்வுகளுக்கான ஆரம்பம்.

இப்ப எதுக்கு வேதாந்தம் அப்படின்னு நினைக்கிறீங்களா...? வேதாந்தம் இல்லைங்க... எல்லாம் காரணமாத்தான்... எப்படி ஆரம்பிப்பது என்பதாய் எழுந்த எண்ணத்தின் முடிவில் வாழ்க்கையில் சில நிகழ்வுகள் என இப்படியாய் ஆரம்பித்தேன் அவ்வளவே.

வெளிநாட்டு வாழ்க்கையில் ஊருக்குப் பேசும் அந்த சில மணித்துளிகளே சந்தோஷத்தைத் தரும் என்பதை அனுபவித்தவர்கள் கண்டிப்பாக உணர்ந்திருப்பார்கள். இன்றைய நிலையில் வீடியோவாய் பார்த்துப் பேசுவது என்பது வரப்பிரசாதமே. ஸ்கைப்பில் மணிக்கணக்கில் பேசி... மகிழ்வாய்... கோபமாய்... என எல்லா அவதாரமும் எடுத்து பேசி.. மனைவி, குழந்தைகளுடன் அளவளாவி முடித்து வைத்து சாப்பிட்டுப் படுக்கும் போது மனசுக்கு ஒரு நிம்மதி.

அப்படியான நிம்மதிக்கும் இங்கு ஆப்பு வைத்து விட்டார்கள். ஸ்கைப்பையும் முடக்கி விட்டார்கள். இவர்கள் ஒரு ஆப் தருகிறார்கள். மாதம் 50 திர்ஹாமுக்கு ரீசார்ஜ் பண்ணிக் கொள்ள வேண்டும். இந்த ஆப்பை ஊரிலும் தரவிறக்கிக் கொள்ள வேண்டுமாம். சிலர் அது நல்லாயிருக்கு என்கிறார்கள்... பலர் சரியில்லை என்கிறார்கள். 2018 பிறந்த உடனே வரியும் இது போன்ற முடக்கமும் மொத்தமாய் எல்லாரையும் முடக்கி வைத்து விட்டது. 

தினமும் விஷாலுடன் எதாவது பேசுவது மனசுக்கு நிம்மதியாய் இருக்கும். அவனைப் பொறுத்தவரை அடுத்தடுத்து வார்த்தைகளில் விளையாடுவதில் கில்லாடி. அது எங்க குடும்பத்துக்கே உரியது. எங்கம்மா சிரிக்காமல் படக்கென பதில் சொல்வார். அதேபோல்தான் இவனும்... தரித்திரமில்லாமல் பேசுது பாருங்க என்று சொல்லும் மனைவி,  உங்க வாரிசு எப்படியிருக்கும் என்று சேர்த்தும் சொல்வார்.

பாப்பா வயிற்றில் இருக்கும் போது நாங்கள் ஒரு சிறு வீட்டில் வாடகைக்கு இருந்தோம். தேவகோட்டை கல்லூரியில் வேலை. மற்றவர்கள் வந்து பார்த்துச் சென்றாலும் ஒன்பதாவது மாதம் வரை நான்தான் பார்த்துக் கொண்டேன். பாப்பா பிறந்தது மதுரையில்... மனைவிக்கு ஆபரேசன் என்ற போது ஏற்பட்ட படபடப்பின் பின்னே கண்ணீர் பெருக்கெடுத்தது.

விஷாலைப் பொறுத்தவரை, அவன் வயிற்றில் இருக்கும் போது என்னை அபுதாபிக்கு விரட்டி விட்டுட்டான். காரைக்குடியில் வாடகை வீட்டில் வாழ்க்கை. பாப்பாவும் மனைவியுமாய் தனியாய்... பக்கத்தில் மனைவியின் சித்தி வீடு என்பதால் அவர்கள் பார்த்துக் கொண்டார்கள். மனைவியின் ஆயாதான் அதிகம் எங்கள் குடும்பத்தைப் பார்த்துக் கொண்டவர்கள். 

காரைக்குடியில்தான் பிறந்தான் விஷால்... என்ன நேரத்துல பிறந்தியோ என்று திட்டினால் ஜனவரி-17 என்று சொல்லுவான். ஆம் இன்று அவனின் பிறந்தநாள். அவன் பிறந்த அன்று  செய்தி போன் வழியாக வந்த போது அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அருகிருக்க முடியவில்லையே என்ற வலியும் கூடவே இருந்தது. மனைவிக்கு இரண்டாவதாய் ஆபரேஷன்... ரொம்பக் கஷ்டமாக இருந்தது.

ஆச்சு 9 வருடங்கள்... வெளிநாட்டு வாழ்க்கை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. எப்போது ஊரில் போய் செட்டிலாவது என்ற எண்ணத்தைச் சில நாட்களாக மனசுக்குள் இன்னும் தீவிரமாக்கி  நகர்கிறது. இன்று கூட உங்களைப் பொங்கலுக்கு வரச் சொன்னேனுல்ல ஏன் வரலை என்று சண்டை போட்டான்.

சில நாட்கள் முன்னர் விழுந்ததில் காலில் சின்னதாய் ஒரு கிராக் என்றாலும் மிகப்பெரிய கட்டிட்டு நடக்காமல் இருந்தவன், பொங்கலுக்காக கட்டை சிறியதாகப் போட்டதால் கொஞ்சம் நடந்து திரிந்திருக்கிறான். நடக்காதடா என்று சொல்லும் போது அலோ... அலோ.... கேக்கலையே... என்று சொல்லி போனை அவங்க அம்மாவிடம் கொடுத்துவிட்டு எஸ்கேப் ஆனான். இது இன்றும் நேற்றும் பல முறை நிகழ்ந்தது.

சுறுசுறுப்பானவன்... துறுதுறுப்பானவன்... வேகமானவன்... எல்லா வேலைகளையும் நான் செய்கிறேன் என முன் நின்று செய்ய நினைப்பவன்... ஒன்பது வயது கடந்து பத்தாவது வயதில் அடியெடுத்து வைக்கிறான். ஆண் பிள்ளைகள் அம்மா பிள்ளை என்பார்கள்... இவனோ அப்பா பிள்ளை... தினமும் அவனிடம் ஒரு சில வார்த்தைகள் பேசாவிட்டால் அந்த நாள் வெறுமையாய் நகரும்.

எம்.ஜி.ஆர். பிறந்தநாளில் பிறந்தவன் என்பதால் தகதன்னு இருப்பான்னுல்லாம் சொல்லலை ஆனால் எங்களை விட அவன் கலர் சற்று தூக்கல்தான்... அடிக்கிற சிவப்பில்லை என்றாலும் அழகான சிவப்புத்தான் அவன். எல்லாருக்கும் பிடித்தவனாய் இருப்பது கடினம்... இப்போது அவன் எல்லாருக்கும் பிடித்தவனாய் இருக்கிறான். இப்போது போல் எப்போதும் இருக்க வேண்டும்... அதற்கு இறையருள் வேண்டும்.

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் செல்லம்...

எங்க அன்பு மகனுக்கு உங்களின் வாழ்த்துக்களையும் ஆசிகளையும் வேண்டி...
-'பரிவை' சே.குமார்.

ஞாயிறு, 14 ஜனவரி, 2018

கிராமத்து நினைவுகள் : பொங்கல் நினைவுகள்

பொங்கல்...

பள்ளிக் காலத்திலும் கல்லூரிக் காலத்திலும் ஏன் திருமணத்துக்கு முன்னும் அதன் பின்னான சில காலங்களும் கொடுத்த இனிப்பின் சுவையை மனதில் சுமந்து உதட்டில் வடுவாய் ஊறும் ஆசையை மெல்லத் தள்ளி பொங்கலா அப்படின்னா என்று கேட்பவர்களிடம் ஒரு வெற்றுச் சிரிப்பை உதிர்த்து மனம் நிறைந்த வேதனையுடனே இன்றைய காலை நகர்ந்தது.

எதற்காக இந்த வாழ்க்கை...? இதில் சாதித்தது என்ன...? கடன் இல்லாமல் இருக்கிறோமா...? கவலை இல்லாமல் இருக்கிறோமா..? என்றெல்லாம் எண்ணிப் பார்த்தால் இதுவரை கடந்து வந்த ஒன்பது ஆண்டுகள் என்னைப் பார்த்து ஏளனமாய்ச் சிரிக்கிறது. 


காலையில் எங்க முனியய்யா கோவிலில் பொங்கல் வைத்த பின் மாலைகளில் சிரிக்கும் அவரை மனைவி செல்போனில் விழுங்கி வாட்ஸ் அப் மூலமாக எனக்கு அனுப்பிய போது அதைப் பார்த்ததும் அங்கிருக்க முடியாத நிலை நினைத்து... இந்த வாழ்க்கையை நினைத்து... கண்ணீர்தான் வந்தது. 

இன்று முழுவதுமே மனதில் நிம்மதி என்பதே இல்லாமல் அலைந்து கொண்டே இருந்தது. இந்த வாழ்க்கையை தூக்கி எறிந்து விட்டு விருமாண்டியில் 'போய் புள்ள குட்டியை படிக்க வையுங்கடா' என கமல் சொல்வதைப் போல் போய் புள்ளைகளோட, குடும்பத்தோட வாழும் வரை சந்தோஷமாக வாழ்வோமே... எத்தனை காலம் இங்கிருந்தாலும் கடன் நம்மை விட்டு விலகப் போவதில்லை ஆனால் வாழ்க்கையில் நிறைய இழப்புக்கள் நம்மைப் பார்த்து பரிதாபமாகச் சிரித்துக் கொண்டுதான் இருக்கும் என்றே தோன்றியது.

எங்க ஊரில் மார்கழி மாதத்தில் மாரியம்மனுக்கு காலையில் பொங்கல் வைத்து சாமி கும்பிடும் வழக்கத்தை நாங்கள்தான் கொண்டு வந்தோம். முதல் வருடம் மைக் செட் கட்டியபோது எத்தனை பிரச்சினைகள்... போலீஸ் ஸ்டேசன் வரை சென்று வந்தோம் என்றாலும் அன்று ஆரம்பித்து வைத்து மழையில் குடை பிடித்தபடி நாங்கள் செய்த பொங்கலின் தொடர்ச்சியாய் இன்று வரை அது தொடர்வதில் மகிழ்ச்சி. மார்கழி மாதம் முடிந்து தை முதல்நாள் முதல் பொங்கல் மாரியம்மனுக்கே.

அடுத்ததாக எங்கள் ஊர் கண்மாயில் காவல் தெய்வமாய் நிற்கும் எங்க முனீஸ்வரனுக்கு ஊரில் பாதிப் பேர் பொங்கல் வைப்போம். கோவில் பொங்கல்களில் எல்லாருடைய பொங்கப் பானைகளிலும் கொஞ்சம் கொஞ்சம் எடுத்து சாமிக்குப் படைத்து அதில் நெய், வெல்லக்கட்டி எல்லாம் போட்டு வைத்திருந்து தீபம் பார்த்த பின் அந்த பள்ளையச் சோறை வாங்கிச் சாப்பிட்டால் ஆஹா என்ன சுவை... என்ன சுவை... பள்ளையச் சோற்றுக்கு தனி சுவைதான்... அதுவும் கோவில் பொங்கல்கள் எப்போதும் சுவை அதிகம்.

அதன் பின் வீட்டுப் பொங்கல்... முன்னெல்லாம் வயலில் இருந்து கதிர், அருகம்புல் எல்லாம் பிடிங்கி வந்து பொங்கல் வைப்போம். இப்போது வயல்களில் கருவை மரங்களின் ஆட்சியாகிவிட்டது. தண்ணீர் ஓடிப் பாய்ந்த வாய்க்கால்கள் இருந்த இடம் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து சில இடங்களில் வயலில் கட்டிய வீடுகளுக்கு பாதை ஆகிவிட்டது. இன்னும் சில காலம்தான் எல்லா வயல்களும் ஒன்றாகிவிடும். ஊடு வரப்புக்கள் எல்லாம் உயிரை இழந்து கொண்டிருக்கின்றன.

வீட்டுப் பொங்கல் என்பது இப்போது எங்களுக்கு இரண்டாய்.... தேவகோட்டையில் அதிகாலையில் மனைவி பொங்கல் வைத்து விட்டுத்தான் ஊருக்குப் போனார். அங்கு முனியய்யா கோவில் பொங்கல் முடித்ததும் மாலைதான் வீட்டுப் பொங்கல் வைத்தார்கள்... இரவு நாச்சியம்மத்தா கோவில் பொங்கலுடன் முதல்நாள் பொங்கல் முடிவுக்கு வந்துவிடும்.

மறுநாள் மாட்டுப் பொங்கல்....

அப்பல்லாம் வீட்டுக்கு நாலஞ்சி மாடு நிக்கும்... ஆடுகள் இருக்கும்... எல்லாமே மாறிப் போச்சு... மாடுகளும் இல்லை... ஆடுகளும் இல்லை... பல வீடுகளில் மனிதர்களும் இல்லை.

காலையில் எழுந்ததும் மாடுகளுக்கு புது மூக்கணாங்கயிறு இட்டு புது பிடி கயிறு போட்டு... குளிப்பாட்டி... அதுவும் கம்மாய் நிறைந்து கிடக்கும் காலத்தில் எல்லாரும் ஒன்றாய் மாடுகளை நீச்சி... வைக்கோல் வைத்து தேய்த்து அழுக்கைத் தண்ணீரில் கரைத்துவிட்டு முனியய்யா கோவில் குங்குமத்தை எடுத்து அழகழகாய் பொட்டிட்டு வீட்டில் கட்டி வைப்பதுண்டு. பலர் மாட்டின் கழுத்தில் துண்டுடன் கரும்பையும் கிழங்கையும் பொங்கத் தாலிச் செடியையும் கட்டி வைப்பார்கள்... சிலரோ வீட்டுச் சுவற்றில் அடித்த காவியின் மீதத்தை மாட்டின் கொம்பிலும் உடம்பிலும் பூசிவிடுவார்கள்.

'ஏப்பா... ஏய்... எப்ப பொங்க வச்சி திரும்பி வர்றது... பத்தரை மணி வரைக்கும் ராகு காலம்ப்பா... வெயில்லயா போயி வச்சிக்கிட்டு நிக்கிறது... எளவரசுக  வாங்கப்பா போயி  பொங்கக் குழி சுத்தம் பண்ணிட்டு வருவோம்' என்றபடி சித்தப்பா மம்பட்டியுடன் வருவார். அவர் பின்னே அரிவாள், மம்பட்டி என ஆளாளுக்கு ஒன்றுடன் பாதையை சரி செய்தபடி கருப்பர் கோவிலை அடைவோம்.

கருப்பர் கோவிலின் முன்னே 'இன்னைக்கு எங்கிட்டுப்பா சூலம்' எனக் கேட்டு நீண்ட அடுப்பு வெட்டிவிட்டு... முள்களை எல்லாம் சுத்தம் செய்து படையல் போட வீடு போல் கட்டங்கள் இட்டு... 'ஏப்பா நீ நாலு பக்கமும் வாசப்படி வெட்டுப்பா... நீ உள்ள வெட்டிக்கிட்டு வாப்பா நிக்காம... ஏம்ப்பா கொஞ்சப் பேரு வைக்கப் பிரி போட்டு போட்டு மாவிலை வேப்பலை கொண்டாந்து தோரணம் கட்டுங்க... ரெண்டு பேரு தோரணத்துக்கு கம்பு ஊனுங்கப்பா... புள்ளக நிக்க கொஞ்சம் நெலல்ல சுத்தம் பண்ணி வைங்கப்பா... இங்க முடிச்சிட்டு கருப்பர் கோவிலச் சுத்தி நெருஞ்சி முள்ளா இருக்கு... கொஞ்சம் சுத்தம் பண்ணுங்கப்பா என்ற குரல்களின் ஓசைக்கேற்ப வேலைகள் நடக்கும்.

எல்லாம் தயார் செய்து வந்த உடன் 'ஏம்பா... பொங்க வைக்க கிளம்புங்கப்பா என்றதும் பொருட்கள் நிறைந்த கூடை, தண்ணீர்க்குடம், முள்ளுக்கட்டு என ஆளுக்கு ஒன்றாய் தூக்கிச் சென்று வரிசையாய் வைத்து எல்லாரும் வைத்ததும் பொங்கல் வைக்க ஆரம்பித்து எல்லாருடைய பானையும் பொங்கியதும் சங்கு ஊதி, மாடுகளைப் பிடித்துக் கொண்டு போய் கருப்பர் கோவில் முன்னே கட்டி, கருப்பர் கோவில் முன்னே இருக்கும் தூபக்காலில் தேங்காய் நாறு, பூவரசம் பட்டை என இட்டு தீவைத்து சாம்பிராணி போட ரெடி பண்ணி, பெரிய கருப்பர் சின்னக் கருப்பருக்கு தண்ணீர் வைத்து கழுவி பொட்டிட்டு... துண்டு கட்டி... பூமாலைகள் போட்டு ஐயாக்கள் பூஜைக்கான வேலையில் இறங்க, அர்ச்சனைக் கூடைகள் வரிசையாய் வந்தமரும்.

புறமடைத்தண்ணி... இப்பல்லாம் இல்லை... புறமடைத் தண்ணியெல்லாம் அப்போ எடுத்தாந்து அதை மந்திரித்து பொங்கலோ பொங்கலெனச் சொல்லி, மாடுகளுக்கும் மனிதர்களுக்கும் அந்த நீரைத் தெளித்து... தீச்சட்டி எடுத்து... திட்டி சுற்றி அதில் போட்டு... மூன்று சுற்றுகளுக்குப் பின் பொங்கல் வைத்த பொங்கக் குழி தாண்டி உடைத்து எல்லாரும் விழுந்து கும்பிட்டு...  படையல் சோற்றைப் பிசைந்து எல்லாருக்கும் கொடுக்க, அதை மாடுகளுக்கு தின்னக் கொடுத்து.. கேலிக்காரர்களின் முகத்தில் மிளகாயுடன் தேய்த்து மகிழ்ந்து மாடுகளை வீட்டுக்குக் கொண்டு சென்று உலக்கையைப் போட்டு தாண்ட வைத்து கசாலையில் கட்டிவிட்டு மீண்டும் கருப்பர் கோவில் வந்து சாமி கும்பிட்டு எல்லாருமாக கிளம்பிப் போய் வீட்டில் பொங்கலுடன் மதிய விருந்தையும் ஒரு கட்டுக் கட்டிட்டு கரும்புடன் மாரியம்மன் கோவிலுக்கோ அல்லது சிராவயல் மஞ்சுவிரட்டுக்கோ கிளம்பி விடுவார்கள்.

அன்று மாலை மீண்டும் மாரியம்மன் கோவிலில் கொப்பிப் பொங்கல்... பெரும்பாலான வீடுகள் கலந்து கொள்ள, மீண்டும் ஒரு மாட்டுப் பொங்கல் தோரணையுடன்... குழந்தைகளின் ஆட்டம்... பெரியவர்களின் அரசியல் பேச்சுக்கள்... இளைஞர்களின் கேலி கிண்டல்கள்... இளவட்டக் கல் தூக்குதல்... என மகிழ்வாய்... சில வருடமாக விளையாட்டுப் போட்டிகளும் இவற்றுடன் இணைய குதூகலமாய் பொங்கல் தினம் நகரும்.

இதை எல்லாம் அனுபவிக்காமல் ஆறு மணிக்கு எந்திரிச்சி... நம்ம டயத்தில் குளித்து... அவசரமாக அலுவலகம் சென்று... வேலை... வேலை என சாப்பாடு மறந்து... மாலை திரும்பி... என்ன சமையல் செய்வதென யோசித்து... சமைத்து... ஊருக்குப் பேசி... சாப்பிட்டு... கணிப்பொறியில் ஏதோ ஒன்றைப் பார்த்து.... படுத்து... மீண்டும் ஆறு மணி... குளியல்.... என நகரும் வாழ்க்கை வெறுப்பையே தருகிறது.


பொங்கல் நினைவுகளுடன் பொங்கும் மனதை தேற்றியபடி படுக்கையை விரிக்கிறேன்... அடுத்த வருடமேனும் குடும்பத்துடன் குதூகலப் பொங்கல் வைக்க வேண்டும் என்ற ஆவலுடன்....

ஆசைகள் எப்போது நிராசைகள் ஆவதில்லை... எப்போதேனும் ஆகலாம்... அந்த எப்போதேனும் நம்மிடம் வராமல் இருக்கட்டும். 
-'பரிவை' சே.குமார்.   

நினைவிலே கரும்பு - அகல் பொங்கல் சிறப்பிதழ் கட்டுரை

என் உறவுகளுக்கும் நட்புக்களுக்கும் இனிய 
பொங்கல் நல் வாழ்த்துக்கள்.
(எங்க முனியய்யா கோவிலில் பொங்கல் வைக்கும் போது மனைவி எடுத்து அனுப்பிய போட்டோ)

நினைவிலே கரும்பு
 ரும்பு...

இதில்தான் எத்தனை வகைகள் செங்கரும்பு... ராமக்கரும்பு... ஆலைக்கரும்பு என ஒவ்வொன்றும் ஒவ்வொரு சுவையாய்

சிறுவயதில் கரும்பு என்ற வார்த்தையே இனிக்கத்தானே செய்தது நமக்கு.

பொங்கல் என்பது இனிப்பின் சுவையுடன் கரும்பின் சுவை உணர்த்தும் ஒரு பண்டிகைதான் இல்லையா...

கிராமங்களில் தீபாவளியை விட பொங்கலுக்கே மிகுந்த முக்கியத்துவம் உண்டு. காரணம் விவசாயியின் மகிழ்வின் விளைச்சல்தானே பொங்கல். புத்தரிசி... கலப்பை... மண்வெட்டி... உலக்கை... மாடுகள்... பொங்கலின் சுவையில் எல்லாமே விவசாயம் சார்ந்தவையாய் இருக்கும். 

சந்தோஷத்தின் மொத்தக் குத்தகையில் தீபாவளிக்கு பட்டாசு... மாரியம்மன் திருவிழாவுக்கு கரகம், கரகாட்டம்... சிவராத்திரிக்கு காவடி, பொரி உருண்டை... தேரோட்டத்துக்கு மாம்பழம்... என பகுக்கப்பட்டிருப்பதின் தொடர்ச்சியாய் பொங்கலுக்கு மஞ்சுவிரட்டு, செங்கரும்பு என்பதாய் எப்போதும்.

பொங்கல் வருவதற்கு முன்னர் கார்த்திகை, மார்கழியிலேயே வாரச் சந்தைக்கு வந்து விடும் கரும்பு... பொங்கல் முடிந்த பின்னரும் சில வாரங்கள் சந்தையில் களமாடும். பள்ளிக்கூட வாசலில் மிட்டாய் கடை விரித்து வைக்கும் ராஜாத்தி அக்காவின் கடையில் ஒரு சாக்கில் புதிதாய் படுத்திருக்கும் சிறிது சிறிதாக வெட்டப்பட்ட கரும்பு.

சந்தைக்குச் செல்லும் அம்மா காய்கறிகள், மீன் எனப் பிடித்து வரும் சந்தைச் சாமான் கூடையில் நாலைந்து துண்டுகள் கரும்பு சிரித்துக் கொண்டிருக்கும். தூரத்தில் வரும்போதே தலைகாட்டும் கரும்பின் சுவை நாக்கில் தெரிய கண்கள் சிரிக்கும்.

ஆளுக்கொன்றாய் அம்மா கொடுக்க, அடிக்கரும்புக்குத்தான் சுவை அதிகம் என்பதால் தம்பிக்கும் எனக்கும் மல்யுத்தம் நடப்பதுண்டு. அக்கா கொடுப்பதைச் சுவைக்கும். சட்டையில் வடியாம தின்னுங்கடா... கறை புடிக்கும் என்ற அம்மாவின் கத்தல் சட்டை செய்யப்படாது. சட்டையில் முத்து முத்தாய் சிதறியிருக்கும் கடித்த கரும்பின் நீர் கறையானால் என்ன என்பதாய் நக்கல் செய்யும்.

மேல்நிலைப் பள்ளி காலத்தில் நான், அக்கா, தம்பி என நாங்கள் மூவருமே ராஜ்ஜியத்தில்... மற்றவர்களில் ரெண்டு அக்கா திருமணம் முடிந்து... அண்ணன்களோ சம்பாத்தியத்தின் பின்னே... பெரியண்ணனின் வரவு கரும்புடனும் எங்களுக்கான உடைகளுடனும் இருக்கும் என்றாலும் மாட்டுப் பொங்கல் முடிந்த பின் வருவதே அவருக்கு வாடிக்கையாய்.

பள்ளி நாட்களில் பொங்கலுக்குச் சாமான் வாங்க ஆரம்பிக்கும் அப்பா எப்போது கரும்பு வாங்கி வருவார் என்ற காத்திருப்பு மனசுக்குள் பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருக்கும்.  பெரும்பாலும் பொங்கல் சிறப்புச் சந்தை தினமே வீட்டுக்கு கரும்பின் வரவு தினமாய் இருக்கும்.

அடுத்தடுத்த வீடுகளில் கரும்புக் கட்டு வந்து இறங்கும் போதெல்லாம் 'அவுக வீட்டுல கரும்பு வாங்கிட்டாங்க...’ ‘இவுக வீட்டுல கரும்பு வாங்கிட்டாங்க' என்ற வார்த்தைகள் வாய்க்குள்ளயே வண்டியோட்டும். சத்தமாகக் கேட்டு அம்மாவிடம் திட்டோடு அடியும் வாங்க வேண்டியிருக்குமே என்பதால் வார்த்தைகள் வலுவிழந்த புயலாய்த்தான் வரும்.

ஒரு கட்டுக் கரும்பு... பள்ளிக்காலத்தில் பனிரெண்டு கரும்பு கட்டுக்கு என்றிருந்தது பின்னாளில் பத்தாகிப் போனது... எல்லாம் முதலாளித்துவம் என்பதுடன் லாப நோக்கமே பிரதானமாய்.

ஒரு கட்டுக் கரும்பை சைக்கிள் ஹாண்ட்பாரில் கட்டி, பின்னால் ஹேரியரோடு கட்டப்பட்ட அதன் தோகை ரோட்டில் இழுபட, அப்பா சைக்கிளை ஓட்டிக் கொண்டு வரும்போது கொல்லைக் காட்டில் மாடு மேய்த்துக் கொண்டிருக்கும் மனசுக்குள் செங்கரும்பு இனிக்க 'டேய்... எங்கப்பா கரும்பு வாங்கிட்டுப் போறாங்கடா...' என்று குதூகலமாய்ச் சத்தமிடச் சொல்லும்.

அப்படி நாம் பார்க்கத் தவறிய நாட்களில் எவனாவது ஒருத்தன் 'டேய் உங்கப்பா ஒரு கட்டுக் கரும்பு வாங்கிட்டுப் போறாருடா' என்று கத்துவான். அவன் குரலில் ஒரு கட்டு என்பது ஆச்சர்யத்துடனும் மிகுந்த அழுத்தத்துடனும் வரும். அதன் பின்னான நாட்களில் மாடு மேய்க்கப் போகும் போது எப்பவும் போல் துண்டும் சிறிய மூங்கில் கம்பும் கையிருக்க  புதிதாய் நீளமாய் வெட்டிய கரும்பும் சேர்ந்து கொள்ளும். அதில் யாருக்கேனும் மரத்தில் அடித்து ஒடித்துக் கொடுக்கப்படும். பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் படிச்சிருக்கோமே... நடைமுறைப் படுத்தலைன்னா எப்படி.

மாடு மேய்த்து வீட்டுக்குப் போகும் போது தோகையெல்லாம் வெட்டி விட்டு திண்ணையில் இரண்டு உத்தரங்களுக்கு இடையே வரிசையாக போட்டு வைத்திருப்பார். டேய் கரும்பெடுத்து வெட்டிச் சாப்பிடுங்கடா என்று சொன்னதும் ஆமா வந்ததும் வராததுமாய் உடனே திங்கணுமாக்கும்... அப்புறம் திங்கலாம் என அம்மா சொல்லிக் கொண்டிருக்கும் போதே ஒரு கரும்பு ஆளுக்கு ரெண்டு மொளி என வெட்டப்பட்டு கடித்து இழுக்கப்பட்டுக் கொண்டிருக்கும்... நடுநாயகமாய் குப்பைத் தகரமும் சக்கைகளைச் சுமக்க... எனக்கு ரெண்டு மொளி வெட்டுங்கடா என அப்பாவும் இணைந்து கொள்வார்.

கரும்பு தனியே தின்பதில் என்ன சுகம் வந்து விடப் போகிறது. எல்லாருமாய் கோவிலில் கூடி தின்பதில்தான் மொத்த சுகமும் அடங்கியிருக்கும். நாம் ரெண்டு மொளி வெட்டிக் கொண்டு போனால் மற்றவர்கள் நாலு மொளி வெட்டி பெரிய தடிபோல் கொண்டு வந்து தின்ன ஆரம்பிப்பார்கள். நாம சீனி வெடி போடும் போது சிலர் சாணிக்குள் அணுகுண்டு வைப்பது போல. மாரியம்மன் கோவிலைச் சுற்றி கரும்புச் சக்கைகள் மல்லிகைப் பூவை இரைத்ததுபோல் கிடக்கும்... என்னை விடுடா என்று அது கதறும் வரை மெல்லப்படும் சக்கைகள் சற்றே மஞ்சள் கலந்த பூவாய்.

Image result for கரும்பு

பெரும்பாலான வருடங்களில் தை மாதத்தில் வயல்களில் அறுவடைக்குத் தயாராய் வயலில் தண்ணீர் காய வேண்டிய நிலையில் கதிர் தன் தலை சாய்த்து ஆடிக் கொண்டிருக்கும். ஒரு சில வருடங்களில் மட்டுமே பொங்கலுக்கு முன்னர் கதிர் அறுப்பு முடிந்திருக்கும். கதிர் அறுக்காத காலத்தில் வீட்டுப் பொங்கலன்று பிள்ளையார் பிடிக்க அருகம்புல்லும் பொங்கப்பானையில் கட்ட நெல் கருதும் வயலில் போய் பறித்து வருவோம்.

தொலைக்காட்சிகள் பொங்கலை நடிகர் நடிகையோடு கொண்டாட ஆரம்பித்த போது அருகம்புல்லும் நெல் கருதும் பறிக்கச் செல்ல முக்கலும் முணங்கலும் கூடியதையும் நீ போ மாட்டியா நாந்தான் போகணுமாவென சண்டைகள் முளைத்ததையும் சொல்லித்தான் ஆகவேண்டும். சாணியில் பிடித்து அருகம்புல் தலை சூடிய பிள்ளையாருக்கு முன்னே கரும்பும், கிழங்கும் இடம் பிடித்துக் கொள்ளும். பொங்கல் வைத்து இறக்கியதும் அந்தக் கரும்புக்கு ஒரு நாய்ச் சண்டையே நடக்கும்.

வீடு வாசலில் அதிகாலை எழுந்து அக்கா போட்ட சிரிக்கும் பொங்கல் கோலத்தில் கரும்பும் கலராய்த் தெரியும். அதற்கு கலர் கொடுத்தவன் நாந்தான் என்பதில் சந்தோஷம் மிளிரும். மறுநாள் மாடு போட்டு கலர் கொடுப்பதுண்டு. மாடு வரைவதில் என்னைவிட தம்பி கில்லாடி. அவனின் மாட்டுக்கே மவுசு அதிகம்.

வீட்டுப் பொங்கல் சாதாரணமாகக் கழிய மாட்டுப் பொங்கலே விஷேச தினமாய் மாடுகளுக்கும் மனிதர்களுக்கும்...

மாட்டுப் பொங்கலன்று மாட்டுக்கு புது மூக்கணாங்கயிறு போட்டு, தண்ணீர் நிறைந்து கிடக்கும் கண்மாயில் மாடுகளை நீச்சி... அதுவும் வாலைப் பிடித்து தண்ணீருக்குள் நீஞ்ச வைப்பதில் நமக்கும் மாட்டுக்கும் சந்தோஷமும் சுகமும் கூடுதலாய்...

மாட்டைக் குளிப்பாட்டியதும் கண்மாய்க்குள் வின்னி மரமும் பூவரச மரமும் பிண்ணிப் பிணைந்து கிடக்க, அருகே நின்ற முனியய்யாவின் குங்குமத்தை எடுத்து மாட்டுக்கு பொட்டிட்டு... அதுவும் அழகழகாய் வைத்து வீட்டுக்குக் கொண்டு வந்து புதுக்கயிறு போட்டு... கழுத்தில் துண்டு கட்டி தயாராக கட்டி வைத்திருப்போம்.

பலர் சிறு துண்டுக் கரும்பை ரெண்டாய் வெட்டி கயிற்றில் கட்டி, அதனிடையே பனங்கிழங்கும் இணைத்து மாட்டின் கழுத்தில் கட்டி வைத்திருப்பார்கள். காவியைக் கலந்து கையை அதில் நனைத்து மாட்டின் மீது கைக்கோலம் போட்டு வைப்பார்கள். கொம்புக்கு காவி அடிப்பார்கள். எங்களுக்கு காவி அடிப்பதும் கரும்பு கட்டுவதும் எப்போதும் பிடிப்பதில்லை. அதனால் கொம்புக்கு எண்ணெய் தேய்த்து வழவழப்பாக வைப்பதுடன் சரி.

ஊர் கூடி பொங்கல் வைக்கும் இடத்தில் பொங்கக் குழி தாண்டவும் திட்டிக்குழி சோறு தீட்டவும் மாடுகளைக் கொண்டு வந்து மரத்துக்கு மரம் கட்டி வைத்திருப்போம்... இந்தச் சோறு கேலிக்கார உறவு முறைக்குள்ளும் தீட்டிக் கொள்ளப் படுவதும் உண்டு. அதுவும் வரமிளமாய் மட்டுமே கையில் எடுத்து முகமெல்லாம் தீட்டப்படுவதும் உண்டு. 

கட்டப்பட்டிருக்கும் மாட்டின் கழுத்தில் இருக்கும் கரும்புகளும் கிழங்குகளும் களவு போகாமல் பார்த்துக் கொள்வதற்கென சிலர் மாட்டிடமே நிற்பார்கள். அப்படியும் அவர்கள் அசந்த நேரத்தில் அது களவாடப்படும். யார் கையில் கிடைக்கிறதோ அவர் அதை மற்றவர் முன்னிலையில் வைத்துச் சுவைத்துச் சாப்பிடும் போது பார்த்துக் கொண்டிருப்பவரின் தொண்டைக்குள் கரும்பின் சுவை மெல்ல இறங்கும் உமிழ் நீராய்.

பொங்கல் முடிந்த பின்னரும் இரண்டு மூன்று நாட்களுக்கு கரும்பு தின்னும் நாட்களாய்த்தான் இருக்கும்... கரும்பை மென்று... மென்று... வயிறெல்லாம் தண்ணீராய் நிறைந்து நிற்கும்... சாப்பாடு வேண்டாமெனச் சொல்லி திட்டு வாங்க வைக்கும்.

தெரியாத வயதில் அறியாமல் கரும்பைத் தின்றதும் தண்ணீரைக் குடித்து வாயெல்லாம் வெந்து போய்க் கிடந்ததும் உண்டு. அதே போல் தோகையை கையில் எடுத்து இழுத்து அதிலிருக்கும் சொணையானது கையெல்லாம் முள்ளு முள்ளாய் ஓட்டிக்கொள்ள அவஸ்தைப் பட்டதும் உண்டு.

கரும்பெல்லாம் முடிந்த பின்னர் கரும்பைத் தேடும் வாய்க்கு வேண்டாமென ஒதுக்கிப் போட்ட தூர்க்கரும்பும் தோகைப் பக்கம் இனிக்காதென வெட்டிப் போட்டவையும் தேடிப் பிடித்து சுவைப்பவையாய் அமையும்.

பள்ளி நாட்களில் ஒரு கட்டுக் கரும்பு பத்துவதில்லை... இன்னும் வேண்டும்... இன்னும் வேண்டுமென மனசு சொல்லும். அதுவே காலங்கள் மாற, ஆறு கரும்பு போதுமா என்பதில் ஆரம்பித்து நாலு போதுமுல்ல... யார் இங்க திங்கிறா என்றாகி ஒரு கட்டத்தில் கரும்பு விக்கிற விலையில ஒரு கட்டு வாங்க முடியுமா..? என்ற சொல்லோடு இரண்டில் வந்து நின்றது.

அக்காக்கள் அண்ணன்களின் குழந்தைகளுக்கு கரும்பை வெட்டிக் கொடுக்கும் போது அதை நாலாக வெட்டித் தோலை உறித்து சிறுசிறு துண்டுகளாக்கி கொடுப்பதுண்டு. அப்படித் தின்பதில் அவர்களுக்கு மகிழ்ச்சி... அதில் சில துண்டுகளை நம் வாய் விரும்புவதில் நமக்கும் மகிழ்ச்சி.

கரும்பைக் கடித்து இழுத்த இழுப்பில் ஆடிக் கொண்டிருந்த பல் விழுந்த அனுபவமெல்லாம் உண்டு. அளவுக்கதிகமாகத் தின்று புளிச்ச ஏப்பம் வர வயிறு சரியில்லை என படுத்திருந்த நாட்களும் உண்டு.

மாடு மேய்க்கச் செல்லும்போது செட்டியார் தோட்டத்தில் ஆலைக் கரும்பை களவாண்டு தின்ற களவாடிய பொழுதுகளும் ஞாபகச் சுவற்றில் இன்னும் அழியாமல்.  கரும்பு மட்டுமா... எவ்வளவு இளநீர்... ஓடி ஓடி வந்து குடித்த நாட்கள் எளிதில் மறந்துவிடுமா..?

அப்பா வெளியூரில் இருந்த காலத்தில் அம்மா சந்தைக்கு நடந்து போக சலிப்படைந்த தினங்களில் பழகும் போது முழங்காலில் பெற்ற காயம் தழும்பாக இருந்தாலும் சைக்கிளை தலை கீழாக ஓட்ட அறிந்து வைத்திருந்த நாமே சந்தையில் காய்கறி வாங்கும் பாக்கியவானாய்... அன்று பழகியதுதான் இன்று கை கொடுக்கிறது.

கரும்பு வாங்குவதும் நாம்தான் என்றான நாட்களில் ஒரு கட்டுக் கரும்பை அப்பாவைப் போல் ஹேண்ட்பாரில் கட்டி, சைக்கிளை ஓட்டிக் கொண்டு வந்த போது இருந்த மகிழ்ச்சியை என்னவென்று சொல்வது. கரும்புக் கட்டோடு சரளை ரோட்டில் சைக்கிள் சரச்சரவென பயணிக்கையில் சைக்கிளை மிதிக்கும் காலில் ஒரு மிதப்பு இருக்கும். அதை அனுபவித்தவர்களுக்கு அதன் சுவை அறியும்.

கல்லூரியில் படிக்கும் போது நண்பனுடன் சேர்ந்து கரும்புக் கடை போடலாம் என முயற்சி செய்து பின் நமக்கு சரி வராது என ஒதுங்கிய நிலையில் தன் சொந்தங்களுடன் நண்பன் ஒரு லாரி கரும்பை இறக்கினான் விற்பனைக்காக... 

மூங்கில் கம்புகள் கட்டப்பட்டு அதில் சாய்ந்து கரும்புகள் தோகை விரித்து ஆடிய அந்த கரும்புக் கடையில் கேஷியராய் அமர்ந்து பணத்தை வாங்கி சாக்கிற்குள் போட்டு சில்லரை கொடுத்து... அது ஒரு கானாக்காலம்... வீட்டுக்குச் செல்லும் போது நாப்பது ரூபாய் மட்டும் கொடுத்து நல்ல கரும்பாய் பத்தையெடுத்துக் கட்டிக் கொண்டு போக வாய்த்த தருணம் நினைவில் என்றும் அழியாதது.

தீபாவளிக்கு எப்படி வெடித்த வெடியின் பேப்பர்கள் இறைந்து கிடக்குமோ அப்படித்தான் கடித்துத் துப்பிய கரும்புச் சக்கைகள் ஊரெங்கும் நிறைந்து கிடக்கும். இரண்டு நாட்களுக்குப் பிறகு அக்காக்கள் கோவிலைச் சுற்றிக் கூட்டி அள்ளி தீவைத்து சுத்தம் செய்வார்கள்.

கரும்பின் அடிப்பாகத்தை ஊன்றி வைத்து தண்ணீர் ஊற்றி கரும்பு வளர்த்ததும் உண்டு... அது கொஞ்ச நாள் பச்சை காட்டி பின் நம் ஆசையில் மண்ணள்ளிப் போட்டு  காய்ந்து போனதும் உண்டு.

கரும்பென்றால் எத்தனையோ நினைவுகளை நம்முள்ளே சுவையாய் இறக்கிச் செல்லும். இப்போது பொங்கலுக்கு ஊருக்குப் போவதில்லை என்பதால் கரும்பின் சுவை கைவிட்டுப் போய்விட்டது.  கரும்பின் மீதான காதலால் ஊருக்குப் போகும் போது கரும்பு ஜூஸ் விற்கும் வண்டியைப் பார்த்தால் நம் வண்டி மெல்ல அதனை நோக்கி நகரும். ஒரு கிளாஸ் குடிக்கலாம் என்ற ஆசை இரண்டு கிளாசிலோ மூன்று கிளாசிலோ தழும்பி நிற்கும்.

இங்கும் கரும்புத் துண்டுகள் விற்பனைக்கு வருகின்றன. ஒரு கட்டுக் கரும்பு சாப்பிட்டவனுக்கு ஒரு மொளிக் கரும்பு என்பது பெரியதாய்த் தெரியும் என்றாலும் யானைப்பசிக்கு சோளப்பொறி என்பதாய்தான் தோன்றும். அதைவிட அதன் விலை நம்மை மெல்ல விலகிப் போகச் சொல்லும். செங்கரும்பின் சுவை தந்த சந்தோஷ நாட்களை மனசுக்குள் சுமந்தபடி கரும்பைக் கடந்து நடந்து விடுவேன்... கரும்பு அந்த இடத்திலே இருக்கும் யாரேனும் தன்னை கூட்டிப் போவார்கள் என்ற ஆவலுடன்.

இங்கு எல்லாம் கிடைக்கும் என்றாலும் விலைதான் நம்மை வியக்க வைக்கும்... ஊரில் நொங்கு வெட்டி கூடைக் கணக்காய் குடித்து மகிழ்ந்திருப்போம்... இங்கு ஒரு நொங்கின் விலை ஊரில் ஆயிரம் ரூபாயாய்.... எல்லாமே இப்படித்தான் என்பதால் நாம் பார்வையாளனாய் கடப்பதும் ஒரு சுகமே.

செங்கரும்பின் சுவை அறியாத நாவுண்டோ...?

செங்கரும்பின் பின்னே எத்தனை நினைவுகள் இனிப்பாய்... சுவையாய்... பேசினால் இன்னும் சுவைக்கலாம் செங்கரும்பாய்... 
-'பரிவை' சே.குமார்.


வெள்ளி, 12 ஜனவரி, 2018

என் வரலாற்றுப் பார்வை - அகல் மின்னிதழ் கட்டுரை

சிவகாமி ஏமாந்தாளா..? ஏமாற்றப்பட்டாளா..?

சிவகாமி ஏமாந்தாளா..? அல்லது ஏமாற்றப்பட்டாளா..?

இப்படி மொட்டையாக் கேட்டா... எந்தச் சிவகாமி..? அவள் எதில் ஏமாந்தாள்..? அல்லது யாரால் ஏமாற்றப்பட்டாள்..? என்ற கேள்வி எழத்தானே செய்யும்.

இவள் பல்லவ சாம்ராஜ்யத்தின் மதிப்புமிகு சிற்பியான ஆயனச் சிற்பியின் மகள் சிவகாமி.

இந்தச் சிவகாமி, மாமல்லன் என்ற பட்டப் பெயர் பெற்ற நரசிம்மவர்மப் பல்லவனைக் காதலித்தவள்.

ஆம்... சிறு வயதில் ஒன்றாக விளையாடி, பதின்மத்தில் நட்பு காதலாக நரசிம்ம பல்லவனை தீவிரமாக்க் காதலித்தவள்... பரதக் கலையில் சிறந்தவள்...  ஆயனச் சிற்பி செதுக்கிய சிற்பங்களெல்லாம் இவளின் அபிநய வடிவம் தாங்கி நின்றவைதான். மகேந்திர பல்லவருக்கு மிகவும் பிடித்த ஆடலரசி... இவளின் நாட்டியம் உலகெங்கும் பேசப்பட வேண்டும் என்று ஆசைப்பட்டவர் அவர். ஆனாலும் காதல் என்று வரும்போது...? அதுவும் தான் கண்டு வைத்திருக்கும் கனவுக்குப் பங்கமாக தன் மகனையே காதலித்தாள் என்றால்...?

சிவகாமியின் காதலுக்குள் போகும் முன் கொஞ்சமாய் பொதுப்பார்வை பார்த்துச் செல்வோமே. காதல் என்பது வெற்றி பெறுவதை விட அதிகம் தோல்வியைத்தான் தழுவி வருகிறது என்பது அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை தொடரும் சோகம்தானே. என்னதான் முற்போக்கு எண்ணம் கொண்டவர்களாக இருந்தாலும் தங்கள் பிள்ளையின் காதல் என்று வரும்போது முற்போக்கு பிற்போக்காகி விடுவதுண்டு. காதலித்துத் திருமணம் செய்தவர்கள் கூட தங்கள் பிள்ளைகளின் காதலுக்கு பச்சைக் கொடி காட்ட யோசித்ததை ஏன் அதைக் கிள்ளியெறிந்ததைப் பார்த்திருக்கிறேன்.

இன்றைய காதல்கள் ஆணவக் கொலைகளுக்குள் சிக்கிக் கிடக்கிறது... மேலும் பதின்ம வயதுக் காதல்கள் பல  உடல் பசியைத் தீர்த்துக் கொள்வதுடன் முடிந்து விடுவதும் உண்டு... சில உயிரை எடுப்பதும் உண்டு...  

காதல் சாதிக்குள் நிகழ்ந்தால் சந்தோஷம்... அதுவே சாதி மாறும் போது சங்கட்டம். அந்த சங்கட்டமே மரணம் வரை விஸ்வரூபம் எடுக்கும். அப்படியிருக்க ஒரு சாம்ராஜ்யத்தை ஆண்ட ராஜாக்களின் காதல்களில் பிரச்சினைகள் இல்லாமல் எப்படியிருக்கும்..? எத்தனையோ அரசுகள் பெண் காதலால் வீழ்ந்ததுண்டு அல்லவா..?

அப்ப சிவகாமியின் காதல்...?

ஆம் அவளின் காதலுக்கும் பிரச்சினை வரத்தான் செய்தது... அதுவும் நரசிம்மவர்மனின் அப்பா மகேந்திரவர்மரால்...

சிவகாமியின் நடனத்தின் மீது அதீத விருப்பம் கொண்ட மகேந்திரருக்கு தன் மகன் மீது அதீத விருப்பம் கொண்டிருக்கும் சிவகாமியை எப்படி வெட்டி விடுவது என்பது குறித்து தீவிர சிந்தனை ஏற்படுகிறது. அதற்குக் காரணம்... தான் அமைத்த சாம்ராஜ்யத்தை தன் மகனும் அவனுக்குப் பின்னான வாரிசுகளும் கட்டிக் காக்க வேண்டும் என்பதால் அவரின் விருப்பம் சிவகாமியைத் தவிர்க்க வேண்டும் என்பதாய்த்தான் இருக்கிறது.

அவரின் ஆசையும் சரியானதுதானே...? சோழர்களை தங்களுக்கு கப்பம் கட்ட வைத்து, பாண்டியர்களைத் தங்களைச் சீண்ட முடியாத அளவிற்கு பயமுறுத்தி வைத்து சேரர்களையும் பல்லவர்களை எதிர்க்க வேண்டும் என யோசிக்கக் கூட நினைக்க விடாமல் வைத்திருப்பதுடன் வடக்கே மிகப்பெரிய அரசனான ஹர்ஷவர்த்தனன், புலிகேசி என எல்லாருக்கும் பல்லவன் என்றால் ஒரு பயத்தை உண்டாக்கி வைத்திருக்கும் நிலையில் அந்தச் சாம்ராஜ்யம் ஆண்டாண்டு காலத்துக்கு அதன் தன்மை இழக்காது இருக்க வேண்டும் என்றால் சிலவற்றைச் செய்துதானே ஆக வேண்டும். அதுதானே ராஜ தந்திரம்.

ராஜாக்களின் தியாகங்கள் நாட்டு மக்களுக்கானது மட்டுமல்ல... தங்கள் நாட்டைக் கட்டிக் காக்கவும்தானே... அப்படியிருக்க மகேந்திரர் நினைத்தது எப்படித் தவறாகும்..?

பாண்டியனின் மகளை நரசிம்மவர்மன் மணம் முடித்துக் கொண்டால் பாண்டியனின் உறவு தனது ராஜ்யத்தைக் கட்டிக்காக்க உதவியாக இருக்குமே... அப்படியிருக்க இந்த சிற்பி மகளைக் கட்டிக் கொண்டால் போருக்கு கிளம்பி வரும் புலிகேசிக்கு ஒருவேளை பாண்டியன் உதவி செய்யும் பட்சத்தில்... சில சிற்றரசர்களும் அவர்களுக்கு உதவியாகும் பட்சத்தில்... தங்களுக்கு கப்பம் கட்டும் சோழ அரசும் எதிராக எழும் பட்சத்தில்... காஞ்சி மட்டுமல்ல, பல்லவ ராஜ்யமே சுனாமிக்குள் சிக்குமே என யோசிக்கக் கூட முடியவில்லை என்றால் அவன் எப்படி மிகப்பெரிய அரசனாய்... தந்திரசாலியாக... மாறுவேடம் போட்டு எதிரி கண்ணில் விரலை விட்டு ஆட்டுபவனாக இருந்திருக்க முடியும்...?

மாமல்லனை விழுந்து விழுந்து காதலிக்கிறாள்... அவனும் சிவகாமியை மனதார காதலிக்கிறான்... அவளைப் பார்க்காது அவனால் இருக்க முடியாது.... அவளை குளக்கரையிலும் அவளின் வீட்டிலும் காணும் போதெல்லாம் அவர்களின் கண்கள் ஆயிரம் காதல் பேசுகின்றன. அந்த இடத்தில் தமிழ் சினிமா காதல் என்றால் சுவிட்சர்லாந்துக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் காதல் பறவைகள் பறந்து இருக்கும். ஆனால் இது ராஜ காதல் என்பதால் அழகிய பூங்காக்களிலும் சிற்பக் கூடத்திலும் காஞ்சி வீதியிலும் காதலாய் கசிந்துருகுகிறது.

காதலைப் பிரிக்க புலிகேசியின் படையெடுப்பு உதவியாய் அமைய அதைப் பயன்படுத்தி காதலர்களைப் பிரிக்கிறார். பிரிக்கிறார் என்பதை விட பிரிக்கும் முயற்சிக்கு விதை இடுகிறார். இந்த இடத்தில் அவர் செய்யும் செயல்கள் நம் நம்பியாருக்கும் ரகுவரனுக்கும் பிரகாஷ்ராஜூக்கும் முன்னோடியாய்... எப்படிப் பிரித்தாலும் மகன் சிவகாமியை விட்டு விலக மாட்டான் என்பதை அறியும் போது எப்படி இந்தக் காதல் மோகத்தை உடைத்தெறிவது என யோசித்து தன் படைத்தலைவன் பரஞ்சோதியையும் பயன்படுத்திப் பார்க்கிறார். மாமல்லனின் காதல் எப்போதும் போல் துளிர்த்துக் கொண்டுதான் இருக்கிறது.

சிவகாமிக்கு வில்லனாய் வருகிறான் புலிகேசி... தன் வில்லன் சிவகாமிக்கு வில்லனாகியதில் மகேந்திரனுக்கு மனதுக்குள் மகிழ்ச்சி என்றாலும் ஆடலரசி என தான் போற்றியவள் புலியிடம் மாட்டியிருப்பதில் அவருக்கு மிகுந்த வருத்தம். அவளை அப்படியே விட்டுவிட்டால் அந்த அழுக்கு எப்பவும் பல்லவர்கள் மீது தங்கி விடுமே என்பதால் அவளை மீட்க வேண்டும் என்று நினைக்கிறார்.

ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பார்களே... அப்படி மரணப் படுக்கையில் இரண்டு மாங்காய் அடிக்கிறார்...  தன் ராஜ்யத்தை காக்கும் விதமாக பாண்டிய இளவரசியை மகன் கட்டிக்கொள்ள வேண்டும் என்று வரம் வாங்கிக் கொண்டு சிவகாமியை எப்படியேனும் மீட்டுக் கொண்டு வர வேண்டும் என்றும் சொல்லிச் சாகிறார்.

Picture
(போட்டோவுக்கு நன்றி அகல்)
இப்ப சிவகாமிக்கு வருவோம்...

பெண் புத்தி பின் புத்தி என்று நிரூபித்தவள் இவள்... தன் காதலைப் பிரிக்க மன்னர் எடுக்கும் முயற்சிகளை அறிந்திருந்த போதும் தனக்குக் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளத் தவறிய பேதை இவள். இவளுக்கு ஆடலரசி என்ற கர்வம் உண்டு... நரசிம்மன் தன்னை விடுத்து வேறு பெண்ணைக் கட்டமாட்டான் என்று நம்பியதில் தமிழ் சினிமாவின் இரண்டாவது கதாநாயகி இவள். பெரும்பாலும் தமிழ் சினிமாவின் இரண்டாம் நாயகி உயிரை விடுவாள். இவளோ புலிகேசியின் உயிரை வாங்குகிறாள் அவ்வளவுதான் வித்தியாசம் என்றாலும் மீண்டும் சொல்கிறேன் பெண்புத்தி பின்புத்திதான்.

தன்னைத் தேடி வந்து என்னுடன் வாவென நரசிம்மன் அழைத்த போது வர மறுத்து வாதாபி எரிய வேண்டும்... புலிகேசி மடிய வேண்டும் என வசனம் பேசுகிறாள்... தன் காதலன் தன்னைத் தேடி பல மைல் கடந்து வந்து என்னுடன் வந்து விடு அன்பே என்று நிற்கும் போது எந்தப் பெண்தான் நான் இங்குதான் இருப்பேன்... நீ என்னைக் கொண்டு வந்தவனின் ரத்தத்தை இந்த மண்ணில் வடிய விடு... அப்போதுதான் வருவேன் என்று சொல்வாள்...?

இவள் சொல்கிறாள்... இதுதான் சிவகாமியின் சபதமாம்... 

என்னய்ய சபதம் வேண்டிக் கிடக்கு... தன் வாழ்க்கையைப் பார்ப்பதை விட சபதம் பெரிதா... ஒருவேளை சிவகாமி என்றாவது ஒருநாள் புலிகேசியை வென்று வாதாபியை தீக்கிரையாக்க வேண்டும் என்று சொல்லி நரசிம்மனுடன் வந்திருந்தால் மகேந்திரர் மகனிடம் வரம் கேட்கும் போது காதல் வென்றிருக்கும்... மகேந்திரரின் வில்லத்தனமும் முடிவுக்கு வந்திருக்கும். சிவகாமியும் பல்லவ பேரரசின் அரசியாகியிருப்பாள்.

அப்படி ஆகியிருந்தால் பல்லவ பேரரசு என்ன ஆயிருக்கும்...?

நரசிம்மன் சதா சர்வ காலமும் போராடிக் கொண்டிருக்க வேண்டியிருந்திருக்கும். பாண்டியன் சேரனுடன் சேர்ந்து மோதியிருப்பான்... சோழன் பார்த்தீபன் வெகுண்டெழுந்த வேளையில் அவனுக்கு மற்றவர்களும் உதவியாய் இருந்திருப்பார்கள். இராஜராஜன் காலத்தில் புகழ்பெற்ற சோழப் பேரரசு பார்த்தீபன் காலத்திலேயே வளர்ச்சிப் பாதையில் பயணித்திருக்கும். வாதாபி எரிந்ததற்கு புலிகேசியின் வாரிசு எவனாவது ஒருவன் கிளம்பி வந்திருப்பான். ஆனால் இதெல்லாம் நடக்கவில்லை... காரணம் சிவகாமியின் காதல் மரணித்ததால் நரசிம்மனின் பாதை மாறியது என்பதுதானே.

சபதமிட்டு ஏறத்தாழ ஒன்பது ஆண்டுகளுக்குப் பின்னர்தானே வாதாபி எரிகிறது... சிவகாமி சிறை மீட்கப்படுகிறாள். இளம் வயதில் சிறை சென்றவள் இளமை கடந்துதான் மீட்கப்படுகிறாள். நரசிம்மன் இளவரசனாய் இருக்கும் போது சிறை பிடிக்கப்பட்டவள்... தன்னைத்தானே சிறைக்குள் வைத்துக் கொண்டவள் மீட்க்கப்படும் போது அவனோ ஒரு நாட்டின் மன்னனாய்... பாண்டிய வானமாதேவியின் கணவனாய்... இரு குழந்தைகளின் தந்தையாய்... மாறியிருக்கிறான்.  சிவகாமி இன்னும் மாறாதிருக்கிறாள்... இளவரசன் நரசிம்மனின் காதலியாய்.

சிவகாமி போட்ட சபதத்தின் காரணமாக புலிகேசியை எதிர்த்துப் போனான் என்று நினைத்தாலும் அந்த சபதத்தை மட்டும் தூக்கிச் செல்லவில்லை அவன். தன் தந்தையைக் கொன்ற புலிகேசியை பலிக்குப்பலி வாங்கவே அவன் பெரும்படையுடன் செல்கிறான். அப்படிப்பட்ட வெறியோடு சென்றவனின் மனசுக்குள் சிவகாமியின் காதலும் ஒரு பக்கத்தில் இருக்கத்தான் செய்கிறது.

சிவகாமியைப் பொறுத்தவரை காதல் தோல்விதான்... ஏமாற்றப்பட்டவளதான்... அரச குடும்பம் எப்பவும் இப்படித்தான்... தன் நினைவில் நரசிம்மன் தாடி வளர்த்து யோகதாசாக இருக்கவில்லைதான்... தன்னை மீட்டுக் கொண்டு வரும் போது ஒரு மன்னனாகத்தான் வருகிறான் என்பதை அவள் உணரும் தருணத்தில் தன்  காதல் முறிந்ததை அறிந்து, அந்த வலியின் உச்சத்தில் நரசிம்மன் தன்னை ஏமாற்றிவிட்டதாக மனசு துடித்திருக்கலாம்.

ஆனால் நரசிம்மனைப் பொறுத்தவரை... சிவகாமியின் காதலை விட வானமாதேவியின் உறவால் பாண்டியனின் உறவு... அதன் காரணமாக தன் சாம்ராஜ்யப் பாதுகாப்பு.... எவரை எதிர்த்து நின்றாலும் வெற்றி மாலை.... பல்லவ சாம்ராஜ்யத்தின் மிகச் சிறந்த பேரரசன்... எதிரிக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவன்.... இப்படியான ஒரு நிலையை அடைய சிற்பியின் மகளை இழந்தது தவறில்லைதானே.

சிவகாமியைக் கட்டியிருந்தால் அவளின் ஆடல் கலையில் கட்டுண்டு காஞ்சியையும் இழந்திருப்பான் நரசிம்மன்... அப்படியெல்லாம் நடக்காமல் வரலாறு வாழ்ந்திருக்கிறது. ஆம் பல்லவ வரலாறு அதன் பின்னும் பல நூறு ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறது.

எப்படிப் பார்த்தாலும் சிவகாமியைப் பொறுத்தவரை அவள் ஏமாந்தாள்... ஏமாற்றப்பட்டாள் என்றாலும் ஒரு பெரிய சாம்ராஜ்யத்தைக் கட்டிக்காக்க இந்தக் காதல் முறிக்கப்பட்டதில்... முறிபட்டதில் யாருக்கும் வருத்தமில்லை. 

நரசிம்மன் கூட மனைவி மக்களுடன் சந்தோஷமாகத்தான் வாழ்ந்திருக்கிறான். காதல் தோல்வியை தூக்கிச் சுமக்காததால்தான் தன் வாழ்நாளில் தோல்வியைச் சந்திக்காத பனிரெண்டு மன்னர்களில் ஒருவனாய்  அவனால் திகழ முடிந்திருக்கிறது... எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாய் விளங்க முடிந்திருக்கிறது.

சிவகாமி பல்லவ அரசி ஆவதைவிட  நடன அரசியாகத் திகழ்ந்ததே சரியானது... அவள் ஏமாந்தாள்... அல்லது ஏமாற்றப்பட்டாள் என்பதைவிட ஒரு சாம்ராஜ்யம் அமையக் காரணமாக இருந்தாள் என்றே நினைத்துக் கொள்வோம்.

-------------------------

கல் பொங்கல் சிறப்பிதழில் எனது 'நினைவிலே கரும்பு' என்ற கிராமியக் கட்டுரை வெளியாகியிருக்கிறது. வெளியிட்ட அகல் மின்னிதழ் ஆசிரியர் குழுவுக்கு நன்றி.

நினைவிலே கரும்பு வாசிக்க இங்கு சொடுக்குங்கள்.
-'பரிவை' சே.குமார்.