மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

புதன், 15 ஜனவரி, 2014

தொடர்கதை: கலையாத கனவுகள் -43

முந்தைய பதிவுகளைப் படிக்க...



---------------------------------

43.  திருமணமும்  சிக்கலும்

முன்கதைச் சுருக்கம்: 

கிராமத்து ஏழைக் குடும்பத்துப் பையனான ராம்கி, கல்லூரி ரவுடி வைரவனின் தங்கை புவனாவுடன் நட்பாக பழகுகிறான்.  அண்ணனும் மச்சானும் சிங்கப்பூர் செல்ல, வாழ்க்கை கொஞ்சம் மாற்றமான பாதையில் செல்ல ஆரம்பிக்கிறது, மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைத்ததும் காதல் இன்னும் இறுக்கமாகிறது. சீதாவின் திருமணப்பேச்சு மீண்டும் சூடு பிடித்தது. அக்கா சீதாவின் திருமணத்திற்கு புவனா உள்ளிட்ட நண்பர்களை அழைத்திருந்தான். புவனா வீட்டில் அவள் மீதான சந்தேகத்தின் காரணமாக மாப்பிள்ளை பார்க்கும் எண்ணம் எழுத் தொடங்கியது.

இனி...

ராம்கியுடன் கூட்டமாக பசங்க வந்து கொண்டிருக்க அவனுக்கு இணையாக புவனா நடந்து வந்து கொண்டிருந்தாள். "ஏழெட்டுக் குட்டிக வாராளுகளே... அதுல எவக்கா எங்குடி கெடுக்க வந்த சிறுக்கி" என்றாள்.

"அதுதான் வெள்ளத்தோலுக்காரின்னு சொன்னேனே... அந்தா பச்சைக்கலர் பட்டுச்சேலை கட்டிக்கிட்டு ராமுகூட உரசிக்கிட்டு வர்றா பாரு... அவதேன்.."

"இந்தாப் போறேன்... அந்தச் சிறுக்கியை இப்ப ஒண்ணும் கேக்க முடியாது... இந்த களவாணிப் பயலை நாலு வாங்கு வாங்கிட்டு வாறேன்..."

"அடி இந்தச் சிறுக்கி... புரிஞ்சுதேன் பேசுறியா? நாலு சாதி சனம் வந்திருக்கிற இடத்துல அவனை திட்டப் போறியா... நல்லாயிருக்குடி... கலியாணத்துக்குன்னு அவனோட படிக்கிறவங்களைக் கூட்டியாந்திருக்கான்... அதுக முன்னாடி சத்தம் போட்டு அசிங்கப்படுத்திடாதே... அவனைக் கேக்குறவிதமாக் கேளு..."

"என்னக்கா புள்ளையையும் கிள்ளி விட்டுட்டு தொட்டியையும் ஆட்டிக்கிறே... சரி கலியாணம் முடியட்டும் அந்த பயலுக்கு இருக்கு... இப்ப பக்கத்துல போயி வாங்கன்னு கேட்டுட்டு... அந்தச் சிறுக்கியும் எப்படியிருக்கான்னு பாத்துட்டு வாரேன்..."

"ம்... போ.... நாஞ் சொன்னதா காட்டிக்காதே..." என்றதும் ராம்கியை நோக்கி நாகம்மா வேகமாக நடந்தாள்

"என்னடா மச்சான்... ஐயா வரலையா? சொன்னியல்ல..." என்றபடி சேவியர் அமர அனைவரும் அருகருகே அமர்ந்தனர். புவனா சரவணனுக்கு கொஞ்சம் தள்ளி அமர்ந்து கொண்டு அருகில் வந்து அமரும்படி ராம்கிக்கு கண்ணைக் காட்டினாள்.

"என்னடா கேள்வி இது.... அய்யாவுக்கு சொல்லாமயா.. அய்யாவும் அம்மாவும் வந்துட்டு வேற கல்யாணத்துக்குப் போகணுமின்னு போய்ட்டாங்க... நான் அவங்களுக்கு மகன் மாதிரி தெரியுமில்ல" என்றபடி சரவணனை தள்ளிக்கச் சொல்லி அவளுக்கு அருகில் அமர்ந்தான்.

"தெரியும்... தெரியும்... புவனா நீ இனிமே ஐயாவை மாமான்னு கூப்பிடு... இவனுக்கு அப்பா மாதிரியாம்..." என்றான் பழனி.

"ஏய்... உதைபடப்போறே..." என்று புவனா சொல்லும் போது "வாங்கப்பா... வாங்கம்மா..." என்று வாயெல்லாம் பல்லாக வந்தாள் நாகம்மா.

"அம்மா இவனுக எல்லாம் அடிக்கடி வந்திருக்கானுங்க... அதனால உங்களுக்குத் தெரியும்" என்று ராம்கி சொல்ல "எம்புள்ளகள எனக்குத் தெரியாதா என்ன... என்னப்பா" என்று ராம்கியைப் பார்த்துக் கேட்டாள் நாகம்மா. ராம்கி சிரித்தபடி தொடர்ந்தான். "இது மல்லிகா, இது கவிதா, இது..." என்று ஒவ்வொருவராக அறிமுகம் செய்தவன் "இவங்க புவனா" என்றதும் அவளை நன்றாகப் பார்த்தாள்.

புவனாவை மீண்டும் ஒரு முறை பார்த்தவள் 'அம்மாடி... என்ன அழகு... அம்மனாட்டமுல்ல இருக்கா... பட்டுல அம்புட்டு அழகா இருக்காளே... அதான் படிப்பு படிப்புன்னு கெடந்தபய மாறிட்டானோ...' என்று நினைத்தவள் ' கட்டுன வமாதிரியில்ல ஒரசிக்கிட்டு நிக்கிறா... என்ன தகிரியம்...' என்று நினைத்துக் கொண்டே அங்கிருந்து அகன்றாள்.

சாப்பிட்டு விட்டு வந்ததும் "எல்லாரும் மாப்பிள்ளை வீட்டுக்கு பொயிட்டு வரலாம்... பக்கத்துலதான்..." என்றான் ராம்கி.

"இல்ல ராம்கி... லேட்டாயிடும் நாங்க கிளம்புறோம்... " என்றாள் மல்லிகா.

"ஏன் மல்லிகா?"

"ராம்... இனி அங்க இங்க எல்லாம் சுத்தினா லேட்டாகும்... வீட்ல சத்தம் போடுவாங்க... நாங்க கிளம்புறோம். வேணுமின்னா உங்க பிரண்ட்ஸை கூட்டிக்கிட்டுப் போங்க... " என்றாள் புவனா.

"என்ன புவி... நீ என் கூட இருப்பேன்னு பார்த்தா... உங்கூட இருக்கணுமின்னுதான் அங்க கூப்பிடுறேன்... ப்ளீஸ்டா..."

"இல்ல ராம்... சித்தப்பா வேற காலையில ஏறுக்கு மாறா பேசிக்கிட்டு இருந்தாரு... அம்மாக்கிட்ட என்ன போட்டுக் கொடுத்துட்டுப் போனாரோ... வேண்டாம்.... கிளம்புறோம்... எதாயிருந்தாலும் காலேசுல பேசிப்போம்...." என்றவள் அருகே வந்து "இந்தச் பச்சைக் கலர் பட்டுச் சேலை எப்படியிருக்குன்னு சொல்லவே இல்லை... இந்தக் கலர் பிடிக்கலையா?" என்றாள்.

"ஏய்... என்னப்பா நீ... தேவதை மாதிரி இருக்கே... இன்னைக்கெல்லாம் எங்கூடவே இந்தத் தேவதையை வச்சிக்கணுமின்னு நினைச்சேன்... நீ போறேங்கிறே..."

"நான் கேட்டத்தான் சொல்லணுமாக்கும்... நாம ரெண்டு பேரும் ஒண்ணா நிக்கிற போட்டோவை அழகா ரெண்டு பிரிண்ட் போட்டுடுங்க... எனக்கொண்ணு... உங்களுக்கொண்ணு... சரியா... அப்ப நாங்க கிளம்புறோம்."

"சரி...பை.... பார்த்துப் போங்க..."  என்றபடி உள்ளே சென்றான்.

திருமணம் முடிந்து பெண் மாப்பிள்ளை மறுவீடு மூன்றாவது வீடெல்லாம் முடித்து திருமணச் சந்தோஷங்களைச் சுமந்து நாட்களை நகர்த்த, ராசுவிடம் நாகம்மா மெதுவாக பேச்சை ஆரம்பித்தாள்.

"தம்பி... ஒரு வழியா சீதை கலியாணத்தை முடிச்சிட்டோம்... இனி அண்ணன்கிட்டச் சொல்லி ஒனக்கொரு பொண்ணு பாக்க வேண்டியதுதான்..."

"என்னம்மா... இப்பத்தான் ஒரு பெரிய செலவை முடிச்சிருக்கோம்... இதுக்கே அங்கிட்டு இங்கிட்டு கடனை வாங்கி வச்சிருக்கோம். மாமா வீட்ல கொடுத்ததால கொஞ்சம் செலவு கம்மியாச்சு... இல்லேன்னா ரொம்பச் சிரமம்... இப்ப எனக்கென்ன அவசரம்... ராம்கி படிப்பை முடிக்கட்டும்... அப்புறம் பார்க்கலாம்..."

"அதுக்காக வயசு ஏறிக்கிட்டே போகுமுல்ல... ஆமா முத்து மாப்ள திருந்திட்டாருல்ல..."

"ஏம்மா... அதுசரி அவனுக்குத்தான் கட்டணுமின்னு நின்னிய... இப்ப இப்படிக் கேக்குறீங்க?"

"இல்ல பொண்ணோட வாழ்க்கையில... என்னதான் சொந்தமுன்னாலும் நாளைக்கு அவ கண்ணைக் கசக்கிக்கிட்டு வந்து நிக்கப்படாதுல்ல... பெத்த மனசு படக்குப் படக்குன்னு அடிச்சிக்கிது..." கண்ணீர் கன்னத்தில் இறங்க சேலை முந்தியால் துடைத்தவள் அதிலே மூக்கைச் சிந்தினாள்.

"அவன் திருந்தித்தான் இருந்தான்... வேதாளம் முருங்கை மரம் ஏறாம இருக்கணும்... ஆமா இந்த ராமுப்பய எங்க இன்னும் காணோம்."

"காலேசு போனாக... இப்பல்லாம் இப்புடித்தானே வர்றாக... ஆமா... அன்னைக்கு... அதான்டா கலியாணத்தன்னைக்கு அவனோட படிக்கிற பயக குட்டிகல்லாம் வந்தாங்களே... அதுல ஒருத்தி பச்சக்கலர்ல பட்டுச்சேல கட்டி வந்தாளே பாத்தியா?"

"எல்லாப் பொண்ணுங்களும் பட்டுலதான் வந்தாங்க.. யாருன்னு ஞாபகம் இல்லை... அதுக்கு என்ன இப்போ...?"

"அட நல்லா செவப்பா இருந்தா... பச்சப்பட்டுல அம்மனாட்டம் இருந்தாடா..."

"ம்..... தெரியலம்மா... சொல்லு... இப்ப அவளுக்கு என்ன..."

"அவள உந்தம்பி லவ்வோ கிவ்வோ பண்ணுறானாம்..."

"அட ஏம்மா... இதை யாரு கிளப்பிவிட்டா..."

"முத்தம்மா ரெண்டு பேரையும் காரக்குடியில வச்சிப் பாத்திருக்கு... நம்ம சீதை கலியாணத்துல அவ பின்னாடியேதான் திருஞ்சான்..."

"அவன் அப்படில்லாம் இல்லம்மா... யாரோ சொல்லுறாகன்னு நீயும் பேசிக்கிட்டு... சும்மா இரும்மா... ஊராவீட்டுப் பிள்ளைய தப்பா பேசிக்கிட்டு..." என்று எழுந்து சென்றான்.

"ம்க்கும்... இவனுக்கு அவனை எதுவும் சொல்லப்படாது..."  என்றபடி போனை எடுத்தவள் நம்பரை அழுத்தி "அலோ... ஆரு... அண்ணனா... எப்புடியிருக்கீங்க... சீதை என்னண்ணே பண்ணுறா... சும்மா இருக்காளா?" என்றாள் வாஞ்சையுடன்.

"ஒம்மவ நல்லா இருக்கா... பேசுறியா... கூப்பிடவா?"

"அப்புறம் பேசுறேன்... உங்ககிட்ட கொஞ்சம் பேசணுமிண்ணே... அத்தாச்சி பக்கத்துலயா இருக்கு..."

"யாருமில்லத்தா... என்ன விஷயம் சொல்லு..."

"ஒண்ணுமில்லேண்ணே... உங்க சின்ன மாப்ள ஒருத்திகூட பழகுறதா பேச்சு வருது... அந்தப்புள்ள அன்னைக்கு கலியாணத்துக்கு கூட வந்திருந்துச்சு..."

"யாரோ சொன்னாகன்னு நாம அவனை சந்தேகிக்க முடியுமா?"

"யாரோ இல்லேண்ணே... நம்ம முத்தக்காதான் காரக்குடியில ரெண்டு பேரையும் பாத்திருக்கு... நெருப்பில்லாம புகையாதுண்ணே..."

"ம்..."

"பயமா இருக்குண்ணே... நம்ம கஷ்டத்தைப் போக்க படிக்கிறான்னு நினைச்சா நம்மள சந்தி சிரிக்க வச்சிடுவானோன்னு பயமா இருக்குண்ணே..." குரல் உடைந்தது.

"ஏய்... கழுத... எதுக்கு இப்ப அழுவுறே... ஆத்தில வெள்ளமா போயிருச்சி... அவங்கிட்ட கேட்போம்..."

"ம்... பெரியவனுக்கிட்ட சொன்ன என்னையத்தானே திட்டுறான்... வேற ஆருக்கும் தெரிய வேனாண்ணே... நீங்க வந்து கொஞ்சம் விசாரிங்கண்ணே..."

"சரி... நான் காலையில வாறேன்.... நாளக்கி சனிக்கிழமைதானே வீட்டுலதானே இருப்பான்... வந்து பேசிக்கிறேன்... நீ எதுவும் அவனுக்கிட்ட கேக்காதே... செரியா... வச்சிடவா..."

(சனிக்கிழமை தொடரும்)
-'பரிவை' சே.குமார்.

3 எண்ணங்கள்:

துரை செல்வராஜூ சொன்னது…

காதலால - கலங்கின கண்ணும் மனசும் கொஞ்சமா!..

Unknown சொன்னது…

ம்................எப்பிடியோ,ஒவ்வொரு கிணறா தாண்டிக்கிட்டிருக்காக.இப்போ மாமன் வந்து,என்ன கேள்வில்லாம் கேக்கப் போறாரோ.........ஹூம்!

தனிமரம் சொன்னது…

அருமையான சுவாரசியத்துடன் தொடர் ஆவலுடன் அடுத்த பதிவை நாடி!