மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 31 ஜனவரி, 2015

தொடர்கதை : வேரும் விழுதுகளும் (பகுதி - 19)

முந்தைய பகுதிகள் : 


பதினெட்டாவது பகுதியின் இறுதியில்...

"அட ஏண்ணே நீ வேற... அந்த ஆளைக் கூட்ட நானா... வேணுமின்னா அண்ணனைக் கூட்டிக்கிட்டு போ..."

"அவரு சட்டையைப் பிடிச்சி முத இடத்துல இருக்கது நீதானே... நீதான் வர்றே... சரி காலாகாலத்துல போய் படுங்கத்தா... விடியக் காலையில வீட்டுக்கு வந்திருக்க மருமகளுக எல்லாம் எட்டு வீடு விட்டெறியிற மாதிரி கோலம் வேற போடணும்... அதுவும் எம்பொண்டாட்டி கோலம் போட்டா எங்க வீட்டு வெள்ளக்கோழி குப்பையைக் கெளறுன மாதிரியே இருக்கும்... ஆத்தி... என்னைய்யா என்னைய பேசுறேன்னு வந்தாளும் வந்துருவா... சரி... குமரேசா... காலையில போவோம்..." என அந்த இடத்தைக் கலகலப்பாக்கிச் சென்றான். 

இனி...

பொங்கல் அன்று காலை அனைத்து வீட்டு வாசலிலும் கலர்க்கலராய் பொங்கல்பானைக் கோலத்துடன் விடிந்தது. குளித்துவிட்டு ஈரத்துண்டால் தலையைச் துடைத்தபடி வந்த கண்ணதாசன், வாசலில் நின்று வேப்பங்குச்சியால் பல் விளக்கிக் கொண்டிருந்த குமரேசனைப் பார்த்து "நீ இன்னும் குளிக்கலையாடா... இப்படியே கம்மாய்ப் பக்கம் போயி வெளிய தெருவ பொயிட்டு நல்லா விழுந்து குளிச்சிட்டு வரலாமுல்ல... எப்பவும் பைப்புத் தண்ணியிலதானே குளிக்கிறே...?"

"இந்தாப் போகணும்... ஆமா நீ என்ன அதுக்குள்ளயும் குளிச்சிட்டு வந்துட்டே... அத்தாச்சி வேற வேலை எதுவும் சொல்லலையா...?"

"கிண்டலா... காலையில பொங்க வைக்கிறதுக்கு முன்னாடி சின்னத்தானைப் போயி பாக்கணுமின்னு பேசினோம்... தெரியுமில்ல... அதான் அவசரமா குளிச்சிட்டு வந்தேன்... பத்து மணிக்கு மேல பொங்க வைக்க நல்ல நேரமாம்... அதுக்குள்ள பொயிட்டு வந்திடலாம்... நீ வெரசா குளிச்சிட்டு வா..."

"ஆமா... அந்தாளைப் பாக்க நல்லநாள் அன்னைக்குப் போகணுமாக்கும்?"

"இங்க பாரு குமரேசா... எதையுமே தள்ளிப்போடாம முடிக்கணும்... போ குளிச்சிட்டு வந்து கிளம்பு..."

"ஏண்ணே... அப்பாதான் சொல்றாருன்னா நீயும் அவரு மாதிரியே பறக்குறே... பொங்க முடிஞ்சதும் போயி பாத்தா என்ன... அடுத்தநாளே பிரிச்சாத்தானா...?"

"அப்புறம் நீங்க வேலையின்னு ஓடிருவீங்க... மறுபடியும் எதாவது விசேசமுன்னாத்தான் வருவீங்க... அத்தோட சின்னத்தானை இன்னைக்குப் போனா பாக்குறது சுலபம்... நாளைக்கு மாட்டுப் பொங்க முடிஞ்சி போனா... அவரு எங்கயாச்சும் போயிருவாரு... நானும் சிராவயல் மஞ்சரட்டுக்குப் பொயிட்டு ராத்திரித்தான் வருவேன்... அதெல்லாம் சரியா வராது... இன்னைக்கே போவோம்... போ... வளவளன்னு பேசாமா..." என்றவன் அவனின் பதிலுக்கு காத்திருக்காமல் வீட்டுக்குச் சென்றான்.

'ஆமா... அப்பாவுக்கு வாச்ச நல்ல மகன் கண்ணதாசண்ணே... அவரு சொன்ன தட்டவே மாட்டாரு..' என்று முணங்கியவன் "அபி... சோப்பு டப்பாவை எடுத்துக் கொடு... குளிச்சிட்டு வாறேன்..." என்றான்.

"சாப்பிடு கண்ணா..." என்றாள் சித்ரா.

"இல்லத்தாச்சி... சாப்பிட்டேன்... எங்க குளிக்கப் போனவன் இன்னும் வரலையா?"

"வரலை... உக்காரு... இப்ப வந்துரும்..." 

"அவருக்கு அங்க போக இஷ்டமே இல்லை மாமா... எல்லாருக்கிட்டயும் கடுப்படிக்கிறாரு..." என்றபடி வந்தாள் அபி.

"என்ன பண்றது அபி...சின்னத்தான் பண்றது சரியில்லைதான்... இருந்தாலும் நாமதானே அனுசரிச்சிப் போக வேண்டியிருக்கு... மணி அண்ணன் வந்தா எதாவது பேசிரும்... இவன்னா கொஞ்சம் கோபமில்லாம பேசுவான்..."

"ஆமா... அவருக்கு முணுக்குன்னு கோவம் வந்துரும்... இதுன்னா கொஞ்சம் அனுசரிச்சிப் பேசும்..." என்றாள் சித்ரா.

"கண்ணா... அங்கன போயி சண்டகிண்ட போடப்படாது... இன்னக்கி நல்ல நாளு... அவரு எது சொன்னாலும் பேசாம இருந்து நாம போன காரியத்தை முடிச்சிட்டு வரணும்... உனக்குச் சொல்லத் தேவையில்லை... ஆனா குமரேசன் எதாவது சொல்லி பிரச்சினையை பெரிசாக்கிறாம..." என்றபடி கையில் பொங்கல் பானையில் கட்டுவதற்காக நெல் கதிருடன் வந்தார் கந்தசாமி.

"அது நா பாத்துக்கிறேன் சித்தப்பா..."

"ஆமா... எம்புள்ளக எல்லாத்தையும் விட்டுட்டுப் போயி நிக்கணும்... அவரு ஒண்ணு சொன்னா இவனுக ஒண்ணு சொல்லுறது மாதிரித்தான் இருக்கும்... அதுக்காக சொரணை கெட்டுப் போயா நின்னுட்டு வரமுடியும்... கண்ணா... உங்க சித்தப்பனைக் கூட்டிக்கிட்டுப் போ... மாப்ள கால்ல விழுந்து கூட்டியாருவாரு... அந்தாளு என்னவோ ரொம்ப நல்லவரு மாதிரி..." பொங்கப் பானைக்கு கோலமிட்டபடியே பேசினாள் காளியம்மாள்.

"இவோ ஒருத்தி... அவனுகளை கொம்பு சீவி விட்டுக்கிட்டு... நல்ல நாளு பெரிய நாளுல்ல போயி அடிச்சிக்கிட்டு நின்னா நல்லாவா இருக்கும்... அங்க இருக்கது நம்மபுள்ள... அதுக்கு பிரச்சினை வரணுமாக்கும்..." என்றவர் "இந்தா கண்ணா... உனக்கும் சேத்துத்தான் பறிச்சிக்கிட்டு வந்தேன்... " என்று நெல்கதிரைக் கொடுத்தார்.

"அதெல்லாம் ஒண்ணும் பிரச்சினை வராது சித்தப்பா... சின்னம்மா நீ கொஞ்சம் சும்மா இரு... அடிச்சிக்கிட்டா அப்படியே இருக்க முடியுமா... எல்லாம் சரியாக வேணாமா... அபி அவன் வந்ததும் சீக்கிரம் கிளம்பச் சொல்லு... சாப்பிட்டு கூப்பிடச் சொல்லு..." என்றபடி வீட்டுக்குச் சென்றான்.

"வாண்ணே.... வாடா... ஆச்சர்யமா இருக்கு... குமரேசன் எங்க வீட்டுக்கு வந்திருக்கான்..." என்று வரவேற்ற கண்மணி, "உக்காருங்க..." என்று சேரெடுத்துப் போட்டாள்.

"இந்தா தண்ணி குடிங்க... பொங்கன்னக்கி வந்திருக்கீக...? ஏதாவது விசேசமா?" என்றாள்.

"என்ன விசேசம்? அதெல்லாம் ஒண்ணுமில்ல... சும்மா அப்படியே பாத்துட்டுப் போவோமுன்னு வந்தோம்... ஆமா எங்க அவரைக் காணோம்..."

"இன்னருதி இங்கதான் இருந்தாக... இப்பத்தான் குளிக்கப் போனாக... வந்துருவாக..." என்றவளின் முந்தானையைப் பிடித்துக் கொண்டு நின்றவனிடம் "மாமாடா... யாரு வந்தாலும் பேசதுக... கொலு மாடுகளாட்டம்... ஏட்டி... அடி... சுவேதா.... டிவியைக் கட்டிக்கிட்டு அழு... இங்க வந்து பாரு... ஆரு வந்திருக்காகன்னு..." என்று உள்ளே பார்த்துக் கத்த, சுவேதா 'எதுக்கும்மா கத்துறீக...?" என்று வெளியே வந்தாள்.

இருவரையும் பார்த்தவள் லேசாக சிரித்தாள், "என்ன மருமவளே... எப்பவும் இந்தச் சிரிப்புத்தானா? மாமான்னு சொன்னா முத்து உதிந்திருமாக்கும்... நல்லபுள்ளக..." என்ற கண்ணதாசன், "இந்த மாமாவை பாத்து ரொம்ப நாளாச்சுல்ல... மாமான்னு சொன்னா என்ன...?" என்றான் குமரேசனைக் காட்டி.

"இங்க வாத்தா..." என்று குமரேசன் சுவேதாவை அழைக்க, வேகமாக வந்து அவன் மடியில் அமர்ந்தாள். 

"ஆமா... நாளைக்கே குத்த வைக்கிற மாதிரி இருக்கே... நல்லாத்தான் அவன் மடியில போயி உக்கார்றே...? இறங்கி உக்காரு..." மகளைக் கடிந்தாள் கண்மணி.

"வயசுக்கு வந்தாலும் அதுக நம்மவுட்டுப் புள்ளைகதானே... எதுக்கு திட்டுறே..?" என்றபடி அவளின் தலையை வருடினான்.

"எங்க மாமா... நா உக்கார்றேன்... உங்களுக்கு என்ன... வேணுமின்னா நீங்க உங்க மாமா மடியில போயி உக்காருங்க... என்ன மாமா..." என்றாள்.

"முத்து உதிந்திருமான்னு கேட்டது தப்புத்தான்... என்னமா பேசுது..." எனச் சிரித்தான் கண்ணதாசன்.

"ஆமா எம்மாமன் மடியில உக்காரணுமின்னா சுடுகாட்டுக்குப் போனாத்தான்..." என்றாள் கண்மணி.

"கழுத... நல்லநாளு அதுவுமா பேச்சைப் பாரு... சின்னப்புள்ள மாமனைப் பார்த்த சந்தோஷத்துல பேசுது... அதுக்குப் போயி... உங்களுக்கெல்லாம் பேசத் தெரியுதா..." உரிமையோடு திட்டினான் கண்ணதாசன்.

அதுவரை அவற்றை எல்லாம் அம்மாவின் சேலைத் தலைப்புக்குள் நின்று பார்த்துக் கொண்டிருந்த சங்கர் மெதுவாக குமரேசனிடம் வந்து மடியில் அமர சுவேதாவைத் தள்ளினான்..

"பாரு... என்ன இருந்தாலும் ரத்த பாசமுல்ல... தெரியாத மாதிரி நின்னுக்கிட்டிருந்தான்...." என்ற கண்ணதாசன் "ஆத்தா... நீ... இங்க வாடா... அவன் உக்காரட்டும்..." என சுவேதாவை தனது மடிக்கு மாற்றினான்.

"காயமெல்லாம் ஆறிடுச்சாடா... அபிக்கு எப்படியிருக்கு?"

"மாறிடுச்சு... அவளுக்கு கையில மட்டும் இன்னும் காயம் இருக்கு..." என்றான்.

"வாப்பா... நீ சின்னவந்தானே.... என்ன காலையில கிளம்பி வந்திருக்கிகளே... நீ இவ பெரியப்பன் மவன் கண்ணந்தானே... என்னப்பா ஒன்னையவும் இங்கிட்டு ஆளையே காணோம்..." என்றபடி அவளின் மாமியார் எங்கிருந்தோ வந்தாள்.

"வேல அயித்தை... எங்கிட்டும் போறதில்லை... நல்லாயிருக்கீகளா?" குமரேசன் எதுவும் பேசாமல் இருக்க, கண்ணதாசந்தான் பேசினான்.

"நல்லாத்தானிருக்கேன்.... எனக்கென்ன..? என்ன ஓல கொண்டாந்திருக்கீக..." என்றபடி வெத்தலையை அதக்கினாள்.

"சும்மாதான் வந்தோம்..."

"அதுக்கு வேற வேலையில்ல... நம்ம வீட்டுச் சனத்தைப் பார்த்தா பத்திக்கிட்டு வரும்... நீங்க பேசாம காபியைக் குடிங்க..." என்றாள் கண்மணி மெதுவாக.

"மாமா கூட வாரீகளா?" என்று குமரேசன் கேட்டுக் கொண்டிருக்கும் போதே... வீட்டுக்குள் நுழைந்த ரமேஷ், அவர்களைப் பார்த்தபடி கொடியில் துண்டைக் காயப்போட்டான்.

"அத்தான்..." சொன்னது கண்ணதாசன்.

"ம்..." என்றபடி வேட்டியை எடுத்துக் கட்டினான்.

"என்னங்க தம்பி வீட்டுக்கு வந்திருக்கான்... நம்ம வீட்டுக்கு வந்தவுகளை நாமதான் வாங்கன்னு சொல்லணும்... வாப்பான்னு ஒரு வார்த்தை சொல்லுங்க... குறைஞ்சிடமாட்டோம்..." என்று அவனருகில் போயி காதைக் கடித்தவள் அவனின் ஈரக்கைலியை வாங்கி கொடியில் போட்டாள்.

"என்ன விஷயமா வந்திருக்காங்களாம்..?" மனைவியிடன் கேட்டபடி தலையில் எண்ணெய் தேய்த்தான்.

"அதை நீங்களே கேளுங்க...?"

"அத்தான்...." குமரேசன் மெதுவாக அழைத்தான்.

"யாருக்கு யாருடி அத்தான்.... அத்தான் நொத்தானுன்னு... இங்க எதுக்குடி வந்தான்..?" கத்தியவன் கையிலிருந்த எண்ணெய்ப் பாட்டில் வாசலில் போய் விழுந்தது.

(வேரும் விழுதுகளும் வளரும்)
-'பரிவை' சே.குமார்.

வெள்ளி, 30 ஜனவரி, 2015

நண்பேன்டா : V.J. (எ) V.J. விஸ்வநாதன்.


ன்றைய நண்பேன்டாவில் எனது அருமை நண்பர் திரு. V.J. விஸ்வநாதன் அவர்களுடனான நட்பைப் பற்றி பகிர்ந்து கொள்ளப் போகிறேன். வெங்கி குறித்த பகிர்வைப் படித்தவர்கள் இவரைப் பற்றி கொஞ்சம் தெரிந்து கொண்டிருக்கலாம். ஏனென்றால் நாங்கள் மூவரும்தான் ஒன்றாக சென்னையில் சுற்றியவர்கள்.

தினமணியில் வேலைக்குச் சேர்ந்த போது வெங்கி என்னிடம் 'இங்க விஜே(V.J.)ன்னு ஒருத்தர் இருக்கார். எந்த நேரமும் வேலைதான். ரொம்பப் பேசமாட்டார். எல்லா வேலையையும் இழுத்துப் போட்டுச் செய்வார். பெரும்பாலும் இரவுப் பணிக்குத்தான் வருவார்' என்று சொல்ல, 'அது யாருய்யா அப்படிப்பட்ட ஆளு' என்றேன். 'நீ இரவுப் பணிக்கு வரும்போது அவரோடதான் வேலை செய்யிற மாதிரி இருக்கும். அப்போ பார்த்துப்பே' என்றான். அந்த நாளும் வந்தது.

ரொம்ப உயரமும் குள்ளமுமாக இல்லாமல் ஒரு சிவப்பு உருவம் வந்து அமர்ந்தது. என்னைப் பார்த்து லேசான ஒரு புன்னகை. வேறெதுவும் கேட்கவுமில்லை... பேசவுமில்லை... வேலையில் எதாவது கேட்டால் சொல்வதுடன் சரி... முதல் நாள் இப்படியே போச்சு... இரண்டாம் நாள் 'சாப்பிட வாரீங்களா?' என்றார். நாம விடுவோமா... ஆளைக் கபக்கென்று பிடிக்க, பின்னான நாட்களில் அவரை நம் பக்க இழுத்தோம்... கொஞ்சம் கொஞ்சமாக அவரைப் பற்றி அறிந்து கொள்ள முடிந்தது. ஆச்சாரமான பிராமணக் குடும்பத்தில் மூத்த பையன். திருமணமாகி ஒரு பெண் குழந்தை. அப்பா, அம்மா, தம்பியுடன் முகப்பேரில் சொந்த வீட்டில் வாழ்க்கை. எம்.எஸ்.சி. எம்.எட்., படித்தவர் பத்திரிக்கையில் நீயூஸ் எடிட்டராக ஏழெட்டு வருடமாக பணியாற்றுகிறார் என அறிந்தோம். வெங்கியும் அவரு வீட்டுக்கு ஒரு தடவை போயிருக்கேன்ய்யா... அப்புறம் போனதில்லை என்றான். 

அவருடன் ஜாலியாய் பேச ஆரம்பித்ததும் நான் அவரிடம் கேட்ட கேள்வி, 'ஏங்க இவ்வளவு தூரம் படிச்சிட்டு இங்க குப்பை கொட்டுறீங்களே?' என்பதுதான். அதற்கு அவர் சொன்ன பதில், 'வேற எங்கயும் வேலை கிடைக்கலை... இதுல முன்ன நல்ல சம்பளம்... நல்ல பெயர் இருந்தது... ஆனா இப்ப சம்பளம் எல்லாம் கூட்ட மாட்டேங்கிறாங்க... பாலிடிக்ஸ் வந்துருச்சு... நீங்க இங்க எதுக்கு வந்தீங்க... சீக்கிரம் எதாவது வேலை தேடி கிளம்பிருங்க' என்பதுதான். நான் சிரித்துக் கொண்டே 'பத்திரிக்கையில் வேலை பார்க்கணுங்கிறது எனக்கு ஆசை.... கொஞ்ச நாள் அப்புறம் ஆசை தீர்ந்திரும்... பொட்டியைக் கட்ட வேண்டியதுதான்..' என்றேன்.

பின்னான நாட்களில் எங்கள் மூவரின் நட்பும் இறுக்கமானது. மூவரின் அரட்டையும் வேலை செய்யுமிடத்தில் தொடர ஆரம்பித்தது. நான் தி.நகரில் இருந்து வருவேன். வெங்கி அம்பத்தூரில் இருந்து வருவான். இவரோ முகப்பேர். வேலை முடிந்ததும் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருப்போம். சில நாட்கள் இவரின் டிவிஎஸ் எக்செல்லை தள்ளிக் கொண்டே பேசிக்கிட்டு வருவார். பலநாள் அதில் பெட்ரோல் தீர்ந்து தள்ளிக் கொண்டே வருவார். எங்களின் நட்பு இறுக்கமான போதுதான் குடும்பத்தை சென்னை அழைத்துச் செல்ல நாங்கள் வீடு தேடினோம். இந்தக் கதை வெங்கி குறித்த பகிர்வில் சொல்லி விட்டதால் இங்கு வேண்டாம்.

வீடு அமைந்தது அவர் வசித்த முகப்பேர் கிழக்கில்... அதுவும் இரண்டு தெருக்கள் தள்ளி... என்ன உதவி என்றாலும் ஓடோடி வருவார். நாங்களும் அவர் வீட்டுக்குச் செல்ல ஆரம்பித்தோம். அங்கு அவரின் மனைவி ஏதாவது சாப்பிடக் கொடுப்பார். இவரும் சாப்பிட்டே ஆக வேண்டும் என்று பிடிவாதமாக நிற்பார். அவர்கள் வீட்டில் எங்களை அவர்களில் ஒருவராக நினைக்க ஆரம்பித்தனர். என் மனைவி, ஸ்ருதியுடன் அவர்கள் வீட்டிற்கு அடிக்கடி போய் வர ஆரம்பித்தோம். என் மனைவிக்கு விஜே என்றால் ரொம்பப் பிடிக்கும்.

மனைவி ஊருக்குச் சென்ற வேளைகளில் இங்கு வந்து சாப்பிடுங்க... கடையில சாப்பிடாதீங்க என்று சொல்லி வற்புறுத்துவார். நமக்கு சொந்தச் சமையல் தெரியும் என்பதால் சமைத்து விடுவேன். நானே செஞ்சு சாப்பிட்டிருவேன் விஜே... எதுக்கு உங்களுக்கு சிரமம் என்றாலும் விடமாட்டார். வாங்க... வாங்க என வீட்டு வாசலில் வண்டியை வைத்துக் கொண்டு நிற்பார். 

இருவருக்கும் ஒரே நேரத்தில் பணி என்றால் ஒரு வண்டியில் போய்விட்டு இரவு வரும்போது அவர் வீதியின் ஆரம்பத்தில் இறக்கிவிட்டு வருவேன். பக்கத்தில் இருக்கும் கோவில்களுக்கு எல்லாம் அழைத்துச் செல்வார். 'இந்தாளோட நடந்தா நாம பாட்டுக்கு பேசிக்கிட்டு போக வேண்டியதுதான்ய்யா... மனுசன் டக்குன்னு நின்னுகுவார் என்று வெங்கி அடிக்கடி சொல்வான்...' அப்படித்தான் நடக்கும்... நடந்து போய்க்கிட்டு இருக்கும் போதே நின்னுடுவாரு... நாம பாட்டுக்கு நடந்து போய்க்கிட்டே இருப்போம்... அப்புறம் என்ன விஜே என்றால் மறுபடியும் வேகமாக வருவார். அப்புறம் நின்றுவிடுவார். அது மட்டும்தான் எங்களுக்கு புரியாத புதிர்.

ஒரு முறை நாங்கள் மூவரும் வண்டியில் போக, மூணு பேர் போறீங்கன்னு போலீஸ்காரர் மறிக்க, வண்டியின் வேகத்தைக் குறைத்தேன்... அதற்குள் பின்னால் இருந்த இவர், வேகமாக ஓட்டுங்க குமார், புடிச்சா காசு பறிச்சிருவான் என்றதுதான் தாமதம்... கிராமத்து ஒற்றையடிப் பாதையில் வண்டி ஓட்டிய அனுபவம் இருந்ததால அவருக்கிட்ட மெதுவாப் போயி சட்டென வேகம் பிடித்து சந்து பொந்துக்குள் எல்லாம் நுழைந்து மெயின் ரோட்டை அடைய பின்னால் எம்.80யில் விரட்டுறேன் என வந்தவரைக் காணோம். 'ஆத்தாடி... என்னய்யா நீ, நான் சொன்னதும் இப்படி ஓட்டிட்டே... எனக்கு பயமாப்போச்சு... விரட்டி வந்த அந்த ஆள் பிடிச்சிருந்தா நமக்கு டின் கட்டியிருப்பான்' அப்படின்னு சொன்னார். 'நாமதான் பிரஸ் அட்டை வைத்திருக்கோமுல்ல... அதைக் காட்டியிருப்போமே...' என்றதும் 'அப்புறம் ஏன் வேகமாக ஓட்டியாந்தே... காட்டியிருக்கலாமே' என்றார். 'ம்... மூணு பேர் போறதுக்கெல்லாம் பிரஸ்ன்னு காட்டுன்னா நீயே இப்படிப் பண்ணுவியான்னு மேல நூறு போட்டுக் கொடுக்கச் சொல்வாரு' என்றதும் சிரித்துக் கொண்டார்.

குடும்பச் சூழல்... அவரின் நிலமை... வேற எங்கயாச்சும் வேலைக்குப் போகணும்... மரியாதை இல்லை குமார் என  அவர் வாழ்க்கையை மறைக்காது நிறையப் பேசுவார். தினமும் சினிமா எக்ஸ்பிரஸில் ஏதாவது ஒரு படத்தோட கேலரி அல்லது நடிகையோட கேலரி போடுற பணி அவருக்கு இருக்கும். 'என்னய்யா வேலை... எப்ப வந்தாலும் எதாவது ஒரு கேலரி போடச் சொல்லி கொல்லுறானுங்க... நீங்க எல்லாம் நீயூஸ் எடிட் பண்றதோட போயிருறீங்க...' என்று புலம்புவார். 'நீங்க போடுற போட்டாதான் நல்லாயிருக்காம் விஜே' எனச் சொன்னதும் 'ஆமா... நடிகைகளோட கவர்ச்சி போட்டோவை தேடித்தேடி போடுற இது ஒரு பொழப்பு' எனப் புலம்புவார்.

சென்னையில் இருக்கும் வரை எனக்கு உதவிய மனிதர்களில் இவரும் ஒருவர். எந்த உதவி என்றாலும் யோசிக்காமல் செய்வார். வேலையை விட்டுப் போகணும்... போகணும்... என்று இன்னும் அதே அலுவலகத்தில்தான் இருக்கிறார். இரண்டு பெண் குழந்தைகள்... அன்பான மனிதர்... நல்ல திறமை... ஆங்கில அறிவு இருந்தும் இதுவே போதும்... இனி வேறு வேலை எதற்கு என்று நினைத்து விட்டார் போல... மரியாதை இல்லை... கேவலமாப் பேசுறானுங்க என்றாலும் அந்த வேலை அவருக்குப் பிடித்து விட்டது. வாழ்க்கைச் சக்கரமும் நன்றாகத்தான் பயணிக்கிறது. எப்போதாவது பேசுவேன்... ஆனால் இன்னும் என்னுள் இருக்கிறார்... எங்கள் அன்பு எப்போதும் தொடரும். சென்ற முறை சென்னை சென்ற போது போய் பார்த்துப் பேசி வந்தேன்.  மனிதர் இன்னும் மாறவில்லை... அவரின் குணங்களும் மாறவில்லை...

நண்பா என்பதைவிட எனக்கு ஒரு சகோதரனாய் இருந்தவர், வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

நண்பேன்டா தொடரும்.
-'பரிவை' சே.குமார்.

வியாழன், 29 ஜனவரி, 2015

கிராமத்து நினைவுகள் : கோயில் மாடுகள்


நாங்க படிக்கிற காலத்துல எங்க ஊர் வயல்களெல்லாம் பச்சைப் பசேல்லுன்னு வெளஞ்சி நிக்கும். எந்தப் பக்கம் திரும்பினாலும் பயிராகத்தான் இருக்கும். தை மாத ஆரம்பத்தில் அனைத்து வயல்களும் வெளஞ்சி நிக்கும். பாக்கவே அவ்வளவு சந்தோஷமா இருக்கும். இப்பல்லாம் விவசாயம் இல்லாம கருவை மண்டிக்கிடக்கிற வயல்களைப் பார்க்கும் போது ரொம்ப வருத்தமாத்தான் இருக்கு. 

பள்ளியில் படிக்கும் காலத்தில் எங்கள் ஊர் விவசாயம் என்பது நாற்றங்காலில் நாற்றுப்பாவி அது வளர்ந்ததும் குறிப்பிட்ட நாட்களில் அதைப் பறித்து சிறு சிறு முடிகளாகக் கட்டி, நூறு நூறாக எண்ணி (அதை ஒரு குப்பம் என்போம்) ஒவ்வொரு வயலுக்கும் எத்தனை குப்பம் வேண்டுமோ அதை பிரித்து வைத்து மறுநாள் விடியற் காலையில் நாற்றங்காலில் தண்ணீருக்குள் இருக்கும் நாற்று முடிகளை எடுத்து வரப்பில் அடுக்கி தண்ணீர் வடிய வைத்து, அங்கிருந்து நடவேண்டிய வயலுக்கு தூக்கிச் சென்று நடுவதற்கு தோதாக நாற்று முடிகளை வயலெங்கும் வீசி வைப்போம்... அப்புறம் நடவு, கருநடை திரும்புதல், பொதி கட்டுதல், கதிர் என வளர்ந்து களம் வந்து சேரும்.

கல்லூரிக்கு வந்த சமயத்தில் நாற்றுப்பாவி நடவு செய்யும் வேலை அதிகம் இருப்பதோடு கண்மாய் நிறைந்தால் மட்டுமே அதைச் செய்ய முடியும் என்பதால் மழை ஆரம்பித்ததும் வயலை உழுது அதில் விதையை வீசி முளைக்க வைத்து, பின்னர் களை எடுத்து, உரமிட்டு விவசாயம் செய்ய ஆரம்பித்தோம். இங்க விவசாயம் எப்படிப் பண்றதுங்கிறது கதையில்லை. இதை முன்னரே ஒரு கிராமத்து நினைவில் பகிர்ந்த ஞாபகம் இருக்கு. கட்டுரைத் தலைப்பு என்ன கோவில் மாடுகள்... வாங்க அதுக்குள்ள போவோம்.

எங்க ஊருக்கு பக்கத்துல இருக்கிற தாழைக் கண்மாய் ஓரத்தில் இருக்கும் கோவில்தான் கூத்தாடி முத்துப் பெரியநாயகி அம்மன் கோவில். இந்த அம்மனைப் பற்றியும் ஒரு கதை இருக்கு. அதை பின்னர் ஒரு பதிவில் பார்ப்போம். அந்தக் கோவிலில் நேர்த்திக் கடனாக விடப்படும் மாடுகள் அதிகம். அந்த மாடுகள் எல்லாம் பராமரிப்பின்றி தாங்களாகவே வாழ்வை நடத்தி வருகின்றன என்பதால் பெரும்பாலும் பகல் நேரத்தில் கோவிலுக்கு அருகிலோ அல்லது நாடகமேடையிலோ படுத்திருக்கும். அதுவும் விவசாய காலங்களில் மட்டுமே அவைகளை அப்படிப் பார்க்க முடியும். மற்ற நாட்களில் எங்கிருக்கின்றன எப்போ வருகின்றன என்பதெல்லாம் தெரிவதில்லை. இரவு உணவு வேட்டைக்குக் கிளம்பிவிடுவார்கள்.

இவர்களின் டார்க்கெட் என்னவென்றால் கதிர் பால் பிடித்து பொதி கட்டுகிற சமயத்தில் இருக்கும் வயல்கள்தான். வந்து இறங்கிவிட்டால் அவ்வளவுதான் அந்த வயல் சுத்தமாக அழிக்கப்படும். நாங்க பக்கத்து ஊருங்க... எங்க ஊருக்கு வரும்ன்னு சொல்லலாம்... பத்துக் கிலோ மீட்டருக்கும் அந்தப்பக்கம் கூட ஆட்டுக்காரனுங்க கெடை போடுற மாதிரி கிளம்பிப் போயி சாப்பிட்டு வருவார்கள்.

ஒரு முறை மாடுகளின் அழிவு ரொம்ப இருக்கு என்று அவற்றை பராமரிக்கச் சொல்லி கோவில் நிர்வாகத்திடம் கண்டதேவியைச் சேர்ந்தவர்கள் எடுத்துச் சொல்லியும் பலனில்லை என்பதால் மாடுகளை விரட்டி வலை வைத்துப் பிடித்தார்கள். அதன் பின்னர் அந்த வயல்கள் எல்லாம் விளையவே இல்லை என்பது தனிக்கதை. இதை நாங்களும் பார்த்திருக்கிறோம்.

எங்க ஊர் வயல்களிலும் இவர்கள் இறங்காமல் இல்லை. நல்ல விளைஞ்சிருக்கு... இந்த வருசம் சாப்பாட்டுக்கு பஞ்சமில்லைன்னு நினைச்சிக்கிட்டு இருக்கும் போது ராவோட ராவா வந்து வேலையை முடிச்சிட்டுப் போயிருவாங்க. எங்க வயல் ஒரு கால் ஏக்கர் இருக்கும். வீடுகளுக்குப் பக்கத்துலதான் அந்த வயல்... நல்லா விளையிற வயல்... ரெண்டு வருசம் தொடர்ந்து ரெண்டு ரெண்டு முறை சாப்பிட்டுட்டுப் போயிருச்சுங்க... அப்புறம் வெறும் வைக்கோல்தான் மிச்சம். ஆனா அவங்ககிட்ட ஒரு நேர்மை உண்டு. இன்னைக்கி ராமசாமி வயல்லதான் சாப்பாடுன்னா கடந்து வரும் வயல்களில் வாய் வைக்க மாட்டார்கள். வரப்பில் வந்து வரப்பிலே சென்று விடுவார்கள். வயலில் இறங்க வேண்டிய சூழல் வந்தால் பயிரில் வாய் வைக்காமல் நடந்து சென்று விடுவார்கள்.

கோவில் மாடுகளின் தொந்தரவு அதிகம் இருந்ததால் பயிர் பால் பிடிக்கிற நேரத்துல ஆளாளுக்கு வயல்களின் ஓரத்தில் கொட்டகை போட்டு அங்கு படுத்திருப்பார்கள். எங்கப்பா எங்களின் புளியஞ்செய் ஓரத்தில் ஒரு கொட்டகைபோல் தயார் செய்து அதில் கட்டில் போட்டு வைத்திருப்பார். அதில்தான் இரவில் மாட்டுக்கு காவலாகப் படுத்து இருப்பார். அதற்கு இரண்டு செய் தாண்டித்தான் எங்க ஊர் சுடுகாடு. அவரு அங்க போயி படுக்கும் போது எங்களுக்குப் பயமா இருக்கும். ராத்திரி சாப்பிட்டுட்டு கைவிளக்கு, கையில் ஒரு மூங்கில் கம்பி, தலையில் இருக்கிக் கட்டிய மப்ளர், உடம்பில் போர்த்தியிருக்கும் கம்பளி என அவர் கிளம்பிவிடுவார்.

சித்தப்பா, ஐயா, மச்சான், மாமான்னு வீட்டுக்கு ஒரு ஆள் அவங்க அவங்க வயல்கிட்ட படுத்து இருப்பாங்க... இரவெல்லாம் திடீர் திடீர்ன்னு கையில் வைத்திருக்கும் தகரத்தை ஒருத்தர் தட்ட ஆரம்பித்தால் ஒவ்வொருத்தாராக தட்டி மொத்தமாகத் தட்டுவார்கள். இது இரவில் நாலைந்து தடவை நடக்கும். அதிலும் மீறி மாடு வரும்போது 'ஆய்... ஊய்... ' என கத்த, எல்லாப் பக்கமும் சத்தம் கேட்கும். அப்படியிருந்தும் சில நாட்களில் அதிகாலை நேரத்தில் வந்து தங்கள் வேலையைக் காண்பித்துச் சென்றுவிடுவார்கள்.

பின்னர் ஊரே சேர்ந்து எல்லா வயல்களையும் சேர்த்து சுற்றி அடைப்பதென முடிவு செய்து இரண்டு வருடம் அடைத்து விவசாயம் செய்தோம். அதிலும் முதலில் கன்றுக்குட்டியை தாவிச் செல்ல வைத்து அது உள்ளிருந்து 'அம்மே...'ன்னு கத்த ஒவ்வொருத்தரா தாவிக்குதிச்சி வர ஆரம்பிச்சாங்க... இந்தக் குரூப் ஒதுக்கிய ஒரு கோவில் காளை ஒன்று எங்கள் ஊருக்குள்ளேயே ரொம்ப நாள் திரிந்தது. ரொம்ப நல்லவரு... யாரையும் குத்தவோ விரட்டவோ மாட்டாரு... அவரு பாட்டுக்கு மாரியம்மன் கோவில் பக்கமா நிப்பாரு... படுப்பாரு... நைட்டுல வயலுக்குள்ள போயி கொஞ்சம் வேலையைக் காட்டிட்டு வருவாரு....

இப்படி கோவில் மாட்டுக்குப் பயந்து பயந்து விவசாயம் செய்த நிலமையில் வயலில் சென்று பார்க்க வயது இடங்கொடுக்காததால் பெரியவர்கள் எல்லாம் விவசாயம் செய்ய விரும்பவில்லை. இப்போ எங்க ஊரில் பெரும்பாலும் வயசானவங்க இருப்பதால் அவர்களால் இந்த மாடுகளுடன் போராட முடியவில்லை என்பதே உண்மை. இப்போ விவசாய நிலங்கள் எல்லாம் கருவை மண்டிக் கிடக்க, இப்போ ரிலையன்ஸ் மூலமாக எல்லா கருவைகளையும் வெட்டி சுத்தம் பண்ணிக் கொடுத்திருக்கிறார்கள்.

அப்பா, ஊரில் இல்லாத இரவுகளில் நானும் தம்பியும் வயல் பார்க்க சென்ற கதை, களத்து மேட்டில் அப்பா சாப்பிட்டு வரும் வரை நானும் அவனும் அந்த இருட்டுக்குள் அமர்ந்திருந்த கதை எல்லாம் இருக்கு... நேரம் இருக்கும் போது பார்ப்போம்.

இன்னும் கோவில் மாடுகள் மற்ற ஊர்களில் இன்னும் தங்கள் வேலையைத் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. கோவில் நிர்வாகம் இன்னும் எந்த ஒரு முடிவும் எடுக்கவில்லை.

மீண்டும் வேறு ஒரு நினைப்போடு தொடரும்...
-'பரிவை' சே.குமார்.

செவ்வாய், 27 ஜனவரி, 2015

சிறு கவிதைகள் சில...


னைத்த மழை
சந்தோஷத்தைக்
கொடுக்கவில்லை...
ஒழுகும் அரசுப் பேருந்து..!

*

ரங்களை மட்டுமின்றி
விலங்குகளையும் இழந்து
விதவையானது காடு..!

*

ந்தோஷத்தில்
குதிக்கும் மீனின்
கண்ணுக்குத் தெரியவில்லை
காத்திருக்கும் கொக்கு..!

*

சாதிச் சங்கப்
பலகைகள் தாங்கி
சமத்துவபுரம்..!

*

ழையில் நனைந்த
உன்னால்
நனைந்தது மனசு..!

*

முழங்கிய வானம்
இசைக்க வில்லை...
ஏக்கத்தில் விவசாயி..!

*

ரணத்தை நோக்கி
பைக்கில் பயணம்...
அறியாமல் பிராய்லர்...!

*

குழந்தையாய்
குதூகலித்தது மனசு...
எதிரே ஐஸ்வண்டி..!

******
இன்னும் வரும்...
-\பரிவை' சே.குமார்

திங்கள், 26 ஜனவரி, 2015

நூல் அறிமுகம் : வாழ்வின் விளிம்பில்

லைப்பூக்களில் 70 வயதுக்கு மேல் நிறைய இளைஞர்கள் வலம் வருகிறார்கள். அப்படிப்பட்ட இளைஞரில் ஒருவர்தான், எல்லாரும் G.M.B. என்று அன்போடு அழைக்கப்படும் மதிப்பிற்குரிய ஐயா திரு. G.M. பாலசுப்ரமணியம் அவர்கள். தனது இத்தனை வருடகால வாழ்க்கை அனுபவத்தில் கண்டு, கேட்டு நினைவில் நிறுத்திய செய்திகளை வைத்து அழகான சிறுகதைத் தொகுப்பைக் கொடுத்துள்ளார். எழுத்துக்கு வயது ஒரு தடை அல்ல என்பதை அவரின் சிறுகதைகள் அழகாய்ப் பிரதிபலிக்கின்றன.

இந்தப் புத்தகம் என் கைக்குக் கிடைத்து கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் இருக்கும் என்று நினைக்கிறேன். அண்ணன் கில்லர்ஜி அவர்கள் மதுரை வலைப்பதிவர் மாநாட்டுக்குச் சென்று வந்து சில நாட்களில் கரந்தை ஜெயக்குமார் ஐயா அவர்களின் கரந்தை மாமனிதர்கள் என்ற நூலோடு ஐயாவின் தொகுப்பையும் என்னிடம் கொடுத்தார். கரந்தை மாமனிதர்களை வாசித்து மனதில் பட்டதைச் சொன்ன எனக்கு இதை வாசிக்க சரியான சமயம் அமையவில்லை.

காரணம்... எங்களைப் போன்ற சாதாரணமானவர்களின் கதைகள் என்றால் வாசித்துப் போவது சுலபமாக இருக்கும். ஆனால் இதை ஆழ்ந்து வேறு எதுவும் இடையூறு கொடுக்காத நிலையில் வாசிக்க வேண்டும் என்பதை முதல் கதையின் மூன்று பக்கத்தைப் படிக்கும் போதே புரிந்து கொண்டேன். அந்தச் சூழல் அதற்கு மேல் என்னைத் தொடர விடவில்லை. அனுபவித்து வாசிக்க வேண்டிய கதைகள் இவை... சும்மா வாசித்துச் சென்றால் அந்தக் கதை பேசும் வாழ்வியல் கதை நமக்கு புரியாது என்பதை அறிந்ததால் அப்படியே வைத்து விட்டேன்.

நேற்று அலுவலகத்தில் பணி இல்லை.... எட்டு மணி நேரம் சும்மா இருப்பதா? என்ன செய்யலாம் என பேக்கை எடுத்தால் அபுதாபி போகும் போது வாசிக்கலாம் என எடுத்து வைத்து வாசிக்காமலே வைத்திருந்த வாழ்வின் விளிம்பில் என் கண்ணில் பட பொறுமையாக வாசிக்க ஆரம்பித்தேன். முடிவில் ஐயாவைப் பற்றி பெருமைப்பட வைத்தது. இவைகள் சாதாரண சிறுகதை போல் பேசிச் செல்லவில்லை... மாறாக ஒற்றயடிப் பாதையில் வளைந்து நெளிந்து போவது போல் பயணித்து நம் கண் முன்னே விருட்சமாய் காட்சியைத் தாங்கி நிற்கின்றன.

ஐயாவின் கதைகளைப் பற்றிச் சொல்லி அதை விமர்சிக்கும் அளவுக்கு எனக்கு வயசும் இல்லை... இந்த அளவுக்கு எழுதும் திறமையும் இல்லை.... வளைந்த வெள்ளை மீசைக்குள் சிரிக்கும் அவரின் சிந்தையில் விளைந்த வாழ்வின் விளம்பில் என்ன சொல்லியிருக்கிறதோ அதை இங்கு அப்படியே பார்ப்போம்....

பின்னட்டையில் ஐயாவைப் பற்றி இந்த நூலை வெளியிட்ட தேவகோட்டை மண்ணின் மைந்தர் திரு. தமிழ்வாணன் அவர்களின் மணிமேகலைப் பிரசுரம் "தன்னுடைய அறுபதாவது வயதைக் கடந்தபின் கண்ணாடி ஓவியங்களும் தஞ்சாவூர் ஓவியங்களும் வரையக் கற்றுக் கொண்டவர், அதில் தான் ஒரு ஏகலைவன் என்று பெருமைப்படுகிறார்" என்று சொல்லியிருக்கிறது. இந்த வயதில் இவ்வளவு சிறப்பாக எழுதும் ஐயா ஓவியத்தில் ஏகலைவன் என்றால் எழுத்தில் வள்ளுவன் என்றே சொல்லலாம்.

அணிந்துரையில் திரு. தஞ்சாவூர் கவிராயர்  சொல்லியிருப்பதைப் பாருங்கள். "இக்கதைகள் எந்தப் பத்திரிக்கையிலும் பிரசுரமானவை அல்ல... ஆகக்கூடியவையும் அல்ல. பத்திரிக்கை கதைக்கான இலக்கணமோ உத்தியோ இன்றி எழுதப்பட்ட கதைகள் இவை." ஆம் இவர் சொல்லியிருப்பது உண்மைதான். பெரும்பாலான கதைகள் வாழ்வியலைப் பேசுவதால் கதையா கட்டுரையா என்றே எண்ணத் தோன்றுகிறது. மிகச் சிறப்பாக ஒவ்வொரு கருவும் எடுத்தாளப்பட்டிருக்கிறது.

மேலும் அவர், "ஜி.எம்.பி. எழுத எடுத்துக் கொண்டிருக்கும் விஷயங்களில் நினைப்பதைச் சொல்ல முயற்சித்திருக்கிறார். ஆனால் அவை சிறுகதை என்ற வடிவத்துக்குள் அடங்க மறுக்கின்றன. ஏன் அடங்க வேண்டும்? பத்திரிக்கைக் கதைகளைப் படித்துப் படித்து மழுங்கி விட்ட வாசக ரசனைக்கு இக்கதைகள் உரியவை அல்ல. வாழ்க்கையின் ரகசியங்களை அதன் ஆழ அகல பரிமாணங்களைக் கூர்ந்து பார்த்து திகைத்து நிற்கும் மனிதனுடன் இக்கதைகள் பேசுகின்றன." என்கிறார். முற்றிலும் உண்மையே. சிறுகதை என்ற நினைப்போடு வாசிப்பவருக்கு இவை முற்றிலும் வித்தியாசமாகத் தெரியும்... வாழ்வியல் கதையை கட்டுரை போல் அழகாய் சொல்லியிருக்காரே என வாசிப்பவருக்கு நிச்சயமாக இது வித்தியாசமான வாசிப்பு அனுபவத்தைக் கொடுக்கும் என்பதில் மாற்றுக் கருத்துக்கே இடமில்லை.

வாழ்த்துரையில் எழுத்தாளர் ஹரணி அவர்கள், "ஒவ்வொரு கதையும் வாழ்வின் ஒவ்வொரு சுவையை உணர்த்துபவை. சில கதைகள் இயல்பாய் இருக்கின்றன. சில கதைகள் அதிர்ச்சியூட்டுகின்றன. சில கதைகள் நம்மை கசிய வைக்கின்றன. சில கதைகள் வலியேற்படுத்துகின்றன" என்று குறிப்பிடுகிறார். அனுபவித்துப் படிக்கும் போது இவர் கூறிய அத்தனை சுவைகளையும் அறியலாம்.

மொத்தம் 16 கதைகள், ஊரில் பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ் என்று வாழ்த்துவார்களே அப்படி முத்தான பெருவாழ்வை அளிக்கும் அழகிய கதைகள் பதினாறை வாழ்வின் விளிம்பில் என்ற தலைப்பின் கீழ் கொடுத்திருக்கிறார்கள். இனி கதைகள் பேசும் வாழ்க்கையில் இருந்து சில வரிகள் நீங்க வாசிக்க.

வாழ்வின் விளிம்பில்... புத்தகத்தின் தலைப்புத்தான் முதல் கதை. இது சாவைப் பற்றி பேசும் கதை... இதை படிக்கும் போது இதற்குள் வரும் கதைகள் எதுவுமே சிறுகதை என்னும் குறுகிய வட்டத்துக்குள் வராது என்பதை அறிந்து கொள்ள முடியும். அதில் உங்கள் பார்வைக்காக சில வரிகள்...

"சாக பயமாக இருக்கிறதா?"

"பயமா... நிச்சயமாகத் தெரியவில்லை. இறந்து போனால் மறுபடியும் என் மனைவி மக்கள் உற்றார் சுற்றார் இவர்களை எல்லாம் பார்க்க முடியாதே. அவர்கள் அன்பினைக் கொடுத்து அன்பினைப் பெற முடியாதே.... அட... நீ இருந்தால் அல்லவா கொடுக்கவோ பெறவோ முடியும்... நீயே இல்லாவிட்டால் என்னாகும்... இருந்து என்ன சாதிக்கப் போகிறாய்...?" தொடர்ந்து வாசிக்கும் போது அவன் இறப்பைக் கண்டு பயந்தானா இல்லை இறந்தானா என்பதை அறியலாம்.

"கண்ணா, படித்தவன் நீ. குழந்தை பெறுவதோ முடியாமல் போவதோ, உடல் சார்ந்த விஷயங்கள். இன்று மருத்துவம் வளர்ந்திருக்கும் நிலைக்கு, காரணங்களை எளிதில் தெரிந்து கொள்ளலாம். அம்மாஜியும் அப்பாஜியும் ஏதுவும் செய்ய முடியாது." என குழந்தைப் வேண்டி போலிச் சாமிகளின் அடியொற்றிப் போகும் மூடர்களைப் பற்றி கேள்விகளே பதிலாய் என்னும் கதை பேசிக் கொண்டு போகிறது.

ஏறி வந்த ஏணியோ கஷ்டப்பட்டு குடும்பத்துக்காக உழைத்த மனிதனைப் பற்றி நினைக்காத மனைவி, மக்களைப் பற்றி பேசுகிறது. அதில் "ஒரு பஸ்ஸில் ஏற வேண்டியது. அது போகாத இடத்துக்கு டிக்கெட் கேட்பது,  கண்டக்டரிடம் திட்டு வாங்கி அடுத்த நிறுத்தத்தில் இறங்கி விடுவது, இப்படியே இவ்வளவு தூரம் வந்து விட்டதாகச் சொல்லி சிரித்தான். எனக்குப் பாவமாக இருந்தது" என இல்லாமையைப் பேசுகிறது.

மனசாட்சியிலோ, "மாலதி, விரும்பியோ விரும்பாமலோ நாம் மணந்து இதுவரை சேர்ந்தும் வாழ்ந்தாகிவிட்டது. உனக்கு என்மேல் வெறுப்பு ஏற்பட்டுப் பலனில்லை. ஒரு சமயம் நாம் விவாகரத்து செய்து கொள்ளலாம். இந்த சமுதாயத்தில் நாம் விரும்பினால் பிறகு மறுமணம் செய்து வாழலாம்." என ஆண்மையற்ற கணவன் சொல்லி, அதன் பின்னான வாழ்வில் அவர்கள் இழப்பது எதை என்பதை ஆணித்தரமாகச் சொல்கிறது.

அனுபவி ராஜா அனுபவியோ வேறு மாதிரி வாழ்க்கையை கண் முன் காட்டுகிறது. "சுந்தா, கஷ்டத்திலும் இல்லாமையிலும் இருந்தே பழகிவிட்ட எனக்கு, நான் சம்பாதிக்கும் காசை செலவு பண்ண மனசு வரமாட்டேங்குது. ஐயோ... எவ்வளவு கஷ்டப்பட்டு சம்பாதிச்சது, இதை செலவு செய்யலாமா, நமக்குத் தேவைதான் என்ன... உடுக்க ஏதோ துணியும் உயிர் வாழ உணவும் போதாதா..?" என்கிறார் சிறுவயதில் அப்படி வாழணும் இப்படி வாழணும் என்று ஆசைப்பட்ட சதாசிவம்.

வாழ்ந்து கெட்ட சித்தப்பாவின் குடும்பத்தைப் பற்றி பேசுகிறது வாழ்க்கை ஒரு சக்கரம், அதில் கதை சொல்லிப் போகும்போது,

"யார் அந்தப் பையன்? தெரிஞ்சவனா?"

"என் சித்தப்பா சேதுமாதவன் பிள்ளை அவன், 'ஆஹா... ஓஹோ'ன்னு இருந்தவர் அவர். இப்ப என்ன்டான்னா பிள்ளைகள் பீச்சில் சுண்டல் விக்கிறார்கள்." என விரிகிறது.

"புடவை கொடுப்பவர் என் தங்கையை அவர் வீட்டுக்கு கூட்டிக் கொண்டு போவாரா?"

"ஏஏஏய்ய்ய், அதெல்லாம் பதுவில்லை (வழக்கமில்லை). அவர் நம் வீட்டில் சம்பந்தம் வைப்பதே பெருமை அல்லவா." எனப் பணம் படைத்தவர்களின் உடல் பசிக்கு ஏழைகள் உணவாவதைச் சொல்லி அதற்கான முடிவையும் கண் முன்னே நிறுத்துகிறது  இப்படியும் ஒரு கதை.

கணவன் மனைவி உறவில் திருப்தி கிடைக்காத மனைவி, கணவன் அவளின் நச்சரிப்பால் ஊரை விட்டே ஓடிவிட அண்ணன் நண்பனின் மூலம் வடிகால் தேடுகிறாள். அந்த வாழ்க்கையும் நீடிக்கவில்லை. இதற்கு காரணம் என்ன... எங்கே தவறு நடந்தது என நம்மைக் கேள்வி கேட்கிறது எங்கே ஒரு தவறு என்ற சிறுகதை.

இப்படி ஒவ்வொரு கதையைப் பற்றியும் பேசிக்கொண்டே போகலாம். அப்புறம் பதிவின் நீளம் பல பக்கங்களைத் தாண்டிவிடும் என்பதால் மேலே சொன்ன கதைகள் பேசியதைப் போலத்தான் 'விபரீத உறவுகள்', 'சௌத்வி க சாந்த் ஹோ', 'லட்சுமி கல்யாண வைபோகம்', 'அரண்டவன் கண்ணுக்கு', 'பார்வையும் மௌனமும்', 'விளிம்புகளில் தொடரும் கதை', 'கண்டவனெல்லாம்...', 'நதி மூலம் ரிஷி மூலம்' என்ற மற்ற கதைகளும் பேசிச் செல்கின்றன.

"உள்ளத்து உணர்ச்சிகளுக்கு வார்த்தைகளால் உயிர் கொடுத்தால் உண்மையில் ஜொலிக்கும்" என இந்தத் தொகுப்பின் ஆசிரியர் ஐயா. திரு. G.M. பாலசுப்ரமணியம் அவர்கள் தனது என்னுரையில் கூறியிருக்கிறார். இது முற்றிலும் உண்மையே என்பதை ஒரு கருவை... தன் உள்ளத்துக்குள் உதித்த வார்த்தைகளால் சிறுகச் சிறுக உயிர் கொடுக்கும் போது ஒரு எழுத்தாளன் அதன் ஜூவாலையை உணர முடியும். 

சகோதரர் ரூபன் அவர்களின் சிறுகதைப் போட்டிக்காக ஒரு கதை எழுதிய போது அவரக்ள் சொன்ன 350 வார்த்தைகளையும் மீறி 800 வார்த்தைகளுக்கு மேல் செல்ல, அதை அங்கும் இங்கும் குறைத்து 400 வார்த்தையாக்கி வாசித்த போது அதன் முழுமை முற்றிலும் இல்லை... இங்கே ஐயா சொன்னது போல் என் கதையில் நான் கொடுத்த உயிரை அங்கும் இங்கும் எடுத்ததால் அதில் உணர்வுகள் இன்றி தவித்தது. அதை எப்படி யோசித்தேனோ அப்படியே எழுதலாம் என வைத்து விட்டு மற்றொரு கருவை உருவாக்கி முடிந்தளவு ஜொலிக்க வைத்து அனுப்பியிருக்கிறேன்.

ஐயாவின் இந்தத் தொகுப்பை யாருக்கேனும் புத்தகம் பரிசளிக்க நினைக்கும் பட்சத்தில் நினைவில் கொள்ளலாம். அனைவரும் ஆழ்ந்து வாசிக்க வேண்டிய மிகச் சிறப்பானதொரு சிறுகதைத் தொகுப்பு.  ஐயாவின் சிறுகதைகள் இன்னும் பல புத்தகங்களாக வேண்டும் என வாழ்த்தி, இந்த வயதிலும் இளைஞனாய் திகழ்ந்து இணையில்லாப் படைப்புக்களை வழங்கும் அவரை வணங்குகிறேன்.

புத்தகம் கிடைக்கும் இடம்:

சிறுகதைகள் : வாழ்வின் விளிம்பில்
ஆசிரியர் : G.M. பாலசுப்ரமணியம்
பதிப்பகம் : மணிமேகலைப் பிரசுரம்
தி.நகர், சென்னை -17.
இணையதளம் : www.tamilvanan.com
மின்னஞ்சல் : manimekalai1@dataone.in

புத்தகத்தின் விலை : 60 ரூபாய் மட்டுமே.

மீண்டும் ஒரு தலைப்பில் அடுத்த வாரம் பேசுவோம்.
-பரிவை' சே.குமார்.

ஞாயிறு, 25 ஜனவரி, 2015

மனசின் பக்கம்: ஐய்யய்யோ ஆம்பள... ஆஹா மீகாமன்

தினைந்து நாள் மட்டுமே அலைனில் வேலை என்று சொன்னவர்கள் ஒரு மாதம் ஆக்கிவிட்டார்கள். இதில் என்ன கொடுமை என்றால் பதினைந்து நாள்தானே என்று நண்பர் ஒருவர் மூலம் ஒரு அறையில் தங்கியாச்சு. அறையில் இருக்கும் மனிதர்கள் அனைவரும் நல்லவர்களே. அறையின் கதவை சாத்த முடியாது. எனவே கணிப்பொறி உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை எல்லாம் ஸ்கூல் பையன் போல் தூக்கிச் சுமக்கிறேன். அபுதாபி வந்ததில் இருந்து சொந்தச் சமையல்தான். ஹோட்டல் சாப்பாடு என்பது நமக்கு பிடிக்காத விஷயம். இந்த ஒரு மாசமாக ஹோட்டல் சாப்பாடு என்பது விருப்பமின்றியே எனக்குள் இறங்குகிறது. 

இந்நிலையில் இன்று காலை போன் செய்து அவன் இன்னும் வரவில்லை. நீ அவன் வரும்வரை அங்கயே இருன்னு சொன்னான். சும்மாவே கோவம் மூக்கு மேல நிக்கும். கட்டி ஏறியாச்சு... இப்ப அவனுக்கிட்ட இனி எவனுக்காகவும் நான் மாறி வரமாட்டேன். அவன் வந்தா அங்கயே நிறுத்து... நான் இந்த புராஜெக்ட் முடியிற வரைக்கும் இங்கயே இருக்கேன்னு சொல்லியாச்சு. இப்ப நீ என்னோட பிரதராக்கும்.... அவனாக்கும் இவனாக்கும்ன்னு சொன்னான்... ஒண்ணும் வேண்டாம் ராசா... நான் இங்கயே இருக்கேன்... அங்க வேலை இருக்கு இங்க வேலை இருக்கு நீ வேணுமின்னு இந்த அலைன் புராஜெக்ட் முடியிற வரைக்கும் சொல்லாதேன்னு சொல்லிட்டேன். எப்பவும் கோபம் வரும்... இன்னைக்கு கொஞ்சம் அதிகமாயிருச்சு... அடுத்த மாசத்துக்கு மெஸ் இருக்கும் அறையாகப் பார்த்து தங்கப் போகணும்... ஹோட்டல் சாப்பாடு இனி தொடர வேண்டாம்...

----------------


ந்த வார விடுமுறையில் அபுதாபி போனபோது 'மீகாமன்' படம் பார்த்தேன். என்ன விறுவிறுப்பான கதை... படத்தின் கதையை கொன்று சென்ற விதத்தில் இயக்குநர் கலக்கி இருக்கிறார். ஆர்யாவை ரொம்ப ரசிப்பதில்லை என்றாலும் இதில் அவரின் நடிப்பு சொல்லும் படி இருந்தது. சில இடங்களில் நம்பமுடியாத வகையில் காட்சிகள் இருந்தாலும் கதையின் போக்கிலும் படத்தின் விறுவிறுப்பிலும் அதெல்லாம் ஒரு பொருட்டாகத் தெரியவில்லை. ஹன்சிகா கூட அழகுப் பொம்மையாக வந்து போகாமல் கொஞ்ச நேரமே வருவதற்கு கிடைத்த கதாபாத்திரத்தில் நல்லாவே நடித்திருந்தார். மீகாமன் விறுவிறுப்புக்குப் பஞ்சமில்லாத படம்.

----------------

சென்ற வாரம் பெய்த மழைக்குப் பிறகு இங்கு குளிர் ரொம்ப அதிகமாக இருக்கிறது. மாலை வேளைகளில் வெளியில் சென்றால் பல்லெல்லாம் தந்தி அடிக்கிறது. இதிலிருந்து தப்பவே வெள்ளி, சனி அபுதாபிக்குச் சென்று வந்தேன். அங்கும் குளிர் இருக்கத்தான் செய்தது என்றாலும் இந்தளவுக்கு இல்லை. குறிப்பாக வெதுவெதுப்பான தண்ணீரில் நிறைய நேரம் குளிக்க முடிந்தது. இங்கு காலையில் குளிரக் குளிர தண்ணீர் ஊற்றுவது என்பதே படிக்கும் காலத்தில் ஞாயிற்றுக்கிழமை அம்மா வலுக்கட்டாயமாக குடிக்க வைத்த வேப்பெண்ணைய்யை விட கசக்கிறது. 

----------------


புதாபியில் இருந்து திரும்பும் போது இரண்டு மணி நேரம் என்ன செய்யலாம் என ஆம்பள படத்தை மொபைலில் ஏற்றிக் கொண்டு வந்தேன். அன்பே சிவம் கொடுத்த சுந்தர்.சிக்கு என்னாச்சுன்னு தெரியலை. ஹரி படம் போல சுமோவெல்லாம் பறக்குது. பறந்தாலும் பரவாயில்லை பறக்கும் சுமோவின் பேனட்டில் அநாயாசமாக நம்ம விஷால் (எங்க வீட்டு விஷால் இல்லை... நடிகர் விஷால்) உக்காந்து வாறாரு. பறந்து தரைக்கு வர்ற வண்டி சும்மா கிர்ரு....கிர்ருன்னு சுத்துது ஆனா தலைவர் அப்படியே அட்னக்கால் போட்டுக்கிட்டு உக்காந்திருக்காரு... ஸ்... அபா... முடியலை.... ஆம்பள... விட்டா நம்ம சாம்பாலைத்தான் கொடுப்பாங்க போல... 

ஹன்சிகா அழகுப் பொம்மையாக வந்து நாலு பாட்டுக்கு ஆடுது... ஐய்யோ மிடில... மிடில... கொஞ்சமாச்சும் ரசிகனுங்களை யோசிச்சுப் படமெடுங்கப்பா... திருட்டு வீசிடியை ஒழிப்பேன் சவால் விட்டுக்கிட்டு எம்படம் திருட்டு வீசிடி வந்தா அதை யார் எடுத்தான்னு கண்டுபிடிச்சு போலீசுல ஒப்படைப்பேன்னு வேற சொன்னாரு... இதை திருட்டு வீசிடியில பாக்குறதுக்குமா ஆள் இருக்கு... 

----------------

நானும் ஒவ்வொரு முறையும் திட்டமிடுவதும் அதை செயலாக்காமல் விடுவதும் எனத்தான் எல்லாமே தொடர்கிறது. இந்த முறை போடும் திட்டப்படி மனசு வலைத்தளத்திலாவது செயல்படலாம் என்ற எண்ணத்தில் இனி மனசில்...

ஞாயிறு        -      மனசு பேசுகிறது / மனசின் பக்கம்
திங்கள்   -      பல்சுவை (சினிமா / நூல் விமர்சனம் / படித்ததில் பிடித்தது)
செவ்வாய்   -      கவிதை / ஹைக்கூ
புதன்              -      சிறுகதை / கட்டுரை
வியாழன்    -      கிராமத்து நினைவுகள் / வாழ்க்கை
வெள்ளி       -       நண்பேன்டா / வெள்ளந்தி மனிதர்கள்
சனி                -      தொடர்கதை

மேற்குறிப்பிட்ட வரிசைப்படி தொடங்கலாம் என இன்று பிள்ளையார் சுழி போட்டாச்சு. சில நாட்கள் எழுத முடியாத சூழல் வந்தால் அன்று என்ன பதிய இருந்தேனோ அது அடுத்த வாரமே பதியப்படும் அடுத்த நாளில் பதியப்படமாட்டாது. பார்ப்போம்... இது எத்தனை நாளைக்குத் தொடர்கிறது என்பதை... இருப்பினும் எங்கள் பிளாக் ஸ்ரீராம் அண்ணன் போல இன்று இதுதான் என பதிவை பகிர வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறேன்.

----------------


கேபிள் அண்ணாவின் 'தொட்டால் தொடரும்' குறித்த விமர்சனங்கள் படம் நல்லாயிருக்கு என்று சொல்லும் போது வலைப்பதிவராய்... விமர்சகராய்... வசனகர்த்தாவாய்... நடிகராய்... பரிணமித்த கேபிள் அண்ணா இயக்குநராய் முத்திரை பதித்து விட்டார் என்று சந்தோஷப்படுகிறது மனசு. இங்கு தொட்டால் தொடரும் எப்போது வரும் என்பது தெரியவில்லை... எப்படியும் பார்த்து விடுவோம்... வாழ்த்துக்கள் கேபிள் சங்கர் அண்ணா.... தொடரட்டும் உங்கள் வெற்றி நடை.

மனசின் பக்கம் அடுத்த வாரம் வரும்...
-பரிவை' சே.குமார்.

சனி, 24 ஜனவரி, 2015

தொடர்கதை : வேரும் விழுதுகளும் (பகுதி - 18)

முந்தைய பகுதிகள் : 


பதினேழாவது பகுதியின் இறுதியில்...

"அப்பா... எதுக்கு இப்ப இதெல்லாம்?" குமரேசன் கேட்டான்.

"இரு வாறேன்... பொங்க முடிஞ்சதும் நம்ம அங்காளி பங்காளிகளை வச்சி இடத்தை எல்லாம் ஒழுங்கு பண்ணிருவோம்... இனியும் போட்டு இழுக்க வேண்டாம்... சொத்தை பிரிச்சிக்கிட்டா அவனவனுக்கு என்ன பண்ணனுமோ அதைப் பண்ணிக்குவீங்கதானே.... இனி என்னால வெவசாயம் பாக்க முடியாது.... கண்ணதாசனைப் போட்டு இழுக்க முடியாது... அவனுக்கு அவனோட வேலை பாக்கவே செரியா இருக்கும்... பாவம் புள்ள இந்தத்தடவை நெல்லை வீடு கொண்டாந்து சேக்க எம்புட்டுக் கஷ்டப்பட்டான்... இதுதான் இறுதி முடிவு... இதில் மாற்றமில்லை... மாட்டுப் பொங்க முடிஞ்ச மறுநாள் சொத்தைப் பிரிக்கிறோம்... என்ன செரியா?" என்று கந்தசாமி கேட்க, அனைவரும் மௌனமாய் அமர்ந்திருந்தனர்.

இனி...

மாட்டுப் பொங்கலுக்கு மறுநாள் சொத்தைப் பிரிக்கிறோம் என அப்பா ஆணித்தரமாகச் சொன்னது மணிக்கும், குமரேசனுக்கும் வருத்தமாய் இருந்தது.

"இப்ப அதுக்கு என்னப்பா அவசரம்... அது பாட்டுக்கு கிடக்கட்டும்... நானும் தம்பியும் இங்க வந்து விவசாயம் பாத்துக்கிட்டு இருக்கப் போறோமா என்ன.. உங்க காலத்துக்கும் இப்படியே சந்தோஷமாப் போகட்டுமே..."

"ஆமாப்பா... அண்ணன் சொல்றதுதான் சரி... இப்ப அவசரமா பிரிச்சி என்ன பண்ணப் போறோம்... முதல்ல உங்களுக்கு சரியாகட்டும்..."

"நீங்க ரெண்டு பேரும் சங்கட்டப்படுறது எனக்குப் புரியிதுப்பா... வயக்காட்டையும் கொல்லக்காட்டையுந்தான் பிரிக்கணுங்கிறேன்... இந்த வீட்டையோ.. உங்க உறவையோ பிரிக்கணுமின்னு சொல்லலையே..."

"இல்லப்பா... பிரிவுங்கிறது இப்ப வேண்டாமே..."

"இங்க பாருங்கப்பா... என்னோட நிலமை நல்லாயில்லைங்கிறது உங்களுக்குத் தெரியுதோ இல்லையோ எனக்கு நல்லாத் தெரிய ஆரம்பிச்சிருச்சு... கண்ணோட சொத்தப் பிரிச்சிக் கொடுக்கிறதுதான் நல்லது. நாளைக்கி எதாவது ஆயிட்டா.... அப்புறம் கெழவன் இருக்கும் போதே இந்தப் பயலுகளுக்கு சொத்தைப் பிரிச்சிக் கொடுத்திருந்தா இன்னைக்கி இப்படி நடக்குமான்னு பேசுவானுங்க..."

"அப்ப நாங்க அடிச்சிக்கிட்டு நாறுவோமுன்னு சொல்றீங்களா மாமா?" படக்கென்று கேட்டாள் சித்தா.

"நீ ஏத்தா அப்புடி எடுத்துக்கிறே...? எப்படியிருந்தாலும் சொத்துன்னு பிரிக்கும் போது மனக்கசப்பு வரத்தான் செய்யும். என்னோட கண்ணு முன்னால பிரிச்சிக் கொடுத்தா எனக்கு ஒரு சந்தோஷம்... அது போக ஒரு கண்ணுல வெண்ணெய்யும் இன்னொரு கண்ணுல வெளக்கெண்ணெய்யும் வக்கிறவன் நானில்லை..."

"நீங்க சொல்றது சரிதாப்பா... ஆனா... "

"என்னப்பா நீயி... ஆனா... ஆவன்னான்னு... இதான் செரியான யோசனை... ஏலா... நீ ஒண்ணுமே பேசாம உக்காந்திருக்கே... இந்த முடிவு செரியா... இல்லையா சொல்லு..."

"ஆம்பளைக பேசும் போது நா என்னத்தைச் சொல்றதுக்கு இருக்கு... இம்புட்டு நாளு அவரு கெடந்து இழுத்துக்கிட்டு கெடந்தாருப்பா... இனி அவரால எல்லாத்தையும் போட்டு இழுக்க முடியாது. பிரிச்சிக்கிட்டு பங்கு பாவத்துக்கு விட்டு வெவசாயம் பண்ண வையிங்க... அம்புட்டுத்தான்...."

"அம்மா.... அவருதான் உடம்பு சரியில்லைங்கிற வருத்தத்துல பேசுறாருன்னா... நீயும் சேந்து பேசுறே...?" கோபமாய்க் கேட்டான் குமரேசன்.

"எதுக்கு இப்ப கோபப்படுறே... அவ சொன்னது செரிதானே... என்னால அலைய முடியாது... சும்மா போட்டாலும் வேலிக்கருவை மண்டிப் போயிரும்... பங்குக்கு விட்டுடலாம்..."

"மொத்த வயலையும் பங்குக்கு விட்டா போட ஆளில்லையா என்ன... பிரிச்சி விட்டாத்தான் போடுவானுங்களா... என்னப்பா நீங்க... இப்ப உங்களுக்கு சொத்தைப் பிரிக்கணும்... அம்புட்டுத்தானே... " குமரேசன் கோபமானான்.

"ஏங்க... எதுக்கு கோபப்படுறீக... நம்மதானே பேசிக்கிட்டு இருக்கோம்... மாமா சொல்றதுலயும் நியாயம் இருக்குல்ல... அவங்க பாத்த வரைக்கும் ஒண்ணா இருந்துச்சி... இப்ப பாக்க முடியலைன்னு பிரிச்சி விடுறேன்னு சொல்றாங்க... நாம முடிஞ்சா விவசாயம் பண்ணுவோம்... இல்லேன்னா கண்ணதாசன் மாமாக்கிட்ட சொல்லி பங்குக்கு போடச் சொல்லுவோம்..." குமரேசனின் கோபத்தை மாற்றும் விதமாக பேசினாள் அபி.

"நீ வேற... இதைப் பிரிச்சித்தான் நாம கோட்டை கட்டப் போறமாக்கும்... மாமனாருக்கு ஏத்த மருமக... கொஞ்ச நேரம் சும்மா இரு... வயசானவருக்குத்தான் என்ன பேசுறோம்ன்னு தெரியலை... உனக்குமா?" என்று மனைவியின் வாயை அடைத்தான்.

"இங்க பாரு கொமரேசா... உங்கண்ணன் இடம் வாங்க கடன வாங்கி வச்சிருக்கான். அது நமக்குத் தெரியாதுன்னு நெனச்சிக்கிட்டு இருக்கான்... வாங்குற சம்பளத்துல எப்புடி கடனக் கட்டுவான்... இப்ப நம்ம கொல்லக்காட்டுப் பக்கம் முத்தையாத் தேவரு செட்டியாரு தோட்டத்துக்கு எடத்தை வித்துட்டாரு... அடுத்து நம்ம எடந்தான்  இருக்கு... செட்டியாரும் ரெண்டு தடவை கேட்டுட்டாரு... நல்ல வெலக்கி வாங்கிக்கிறேன்னு சொல்லி விட்டிருக்காரு.. அதை பிரிச்சிக்கிட்டு அவனோட பாகத்தை வித்தா அவனுக்கு கடனடையுமில்ல... இல்லேன்னா ரோட்டுக்கு வடபுறம் பிளாட்டுப் போட்டுக்கிட்டு வாறானுக... அந்த மாதிரி நம்ம கொல்லக்காட்டை பிளாட்டுப் போட்டுக்கூட விக்கலாமுல்ல.... இதைவிட நல்லாப் போகுமே...."

"அப்பா இடம் வாங்குனதை உங்ககிட்ட சொல்லக்கூடாதுன்னு இல்ல... கடன வாங்கி வாங்கணுமாடான்னு திட்டுவீங்கன்னுதான்...." மணி மெதுவாக இழுத்தான்.

"எனக்கு அதுல வருத்தமில்லைப்பா... எம்புள்ளக நல்லாயிருந்தா எனக்குப் பெருமைதானே... இங்க சுத்துப்பட்டு ஊருல எல்லாரையும் எனக்குத் தெரியும்... எதுனா ஒரு வெசயமின்னாலும் எங்காதுக்கு வந்திரும்... அப்படித்தான் உன்னோட எட வெசயமும் எனக்கு வந்திச்சி.... நீங்க இருக்க எடத்துல வேணுமின்னா எனக்கு பழக்கமான மனுசங்க இல்லாம இருக்கலாம்... இந்த ஏரியாவுல எனக்கு தெரியாத ஆளுகளே இல்லைன்னு சொல்லலாம்.."

"பிரிக்காம அண்ணன் அதை செட்டியார்க்கிட்ட கொடுத்து காசு வாங்கி கடனை அடைக்கட்டும். நா என்ன வேணாமின்னா சொல்லப் போறேன்..."

"அப்படியில்லப்பா... இன்னைக்கு மாம்பூ வாசனையா பேசிருவோம்... நாளப்பின்ன பங்காளி சண்டையின்னு வரும்போது நரம்பில்லாத நாக்கு பட்டுன்னு பேசிப்புடும்... அது நல்லாயிருக்காதுல்ல..."

"மாமா... நா மாமாவுக்கு கொடுக்குறதுக்கு சண்டை போடுவேன்னு பாக்குறீகளா? வேணுமின்னா மாமா வித்துக்கட்டும்... எங்களுக்கு ஆட்சேபணை இல்லைன்னு நாங்க கையெழுத்துப் போட்டுத் தர்றோம்..." என்றாள் அபி.

"ஏத்தா இப்புடி ஒரு வார்த்தை பேசிப்புட்டே... நா பெத்த புள்ளைகள தப்பா நெனச்சாலும் உன்னைய நெனப்பேனா... காலம் வரும்போது செய்ய வேண்டியதை செய்யனுமாத்தா..." என்று அவர் சொன்னதும் சித்ராவின் முகம் சுருங்கிப் போனது.

"என்ன தீவிரமா ஏதோ மேட்டர் ஓடிக்கிட்டு இருக்கு போல.." என்று கேட்டுக் கொண்டே சாப்பிட்டுக் கழுவிய கையை துண்டில் துடைத்தபடி வந்தமர்ந்தான் கண்ணதாசன்.

"வாப்பா... செரியான நேரத்துலதான் வந்திருக்கே...." என்றபடி விவரத்தைச் சொன்னார் கந்தசாமி.

"சித்தப்பா இது நல்ல முடிவாச்சே.... இதுக்கு எதுக்கு பிரச்சினை." என்றான் கண்ணதாசன்.

மணியும் குமரேசனும் தங்களது தரப்பு வாதங்களைச் சொல்ல, சிரித்த கண்ணதாசன் "இங்க பாருண்ணே... அப்பா கண்ணோட இது இது இன்னாருக்குன்னு எழுதிக்கிட்டு மொத்தமா அப்பா பாத்தாலுஞ்சேரி இல்ல குத்தகைக்கு விட்டாலுஞ்சேரி... ஒரு பிரச்சினை ஓயுமில்ல..."

"ஆமா நீயும் அவருக்கு சால்ரா போடு..."

"எதுக்குடா கோபமாகுறே...? அவருக்கு மொத அட்டாக்கு வந்தாச்சு... அவரு பயப்படுறதுலயும் ஞாயம் இருக்குல்ல... நாளைக்கி அங்காளி பங்காளி வந்து பேசினாலும் அவரு இருந்து பேசுற மாதிரி இருக்குமா சொல்லு.... ஏந்த்தா அபி இவனுக்கு சுறுக்குன்னு கொழம்பு வச்சி ஊத்துறியோ பொசுக்குன்னு கோவம் வருது..." என அபியிடம் கேட்டு எல்லாரையும் சிரிக்க வைத்தான்.

"கோமாளிப்பய வந்தான்னா சபையை சிரிக்க வைக்காம போகமாட்டான்..." என்றாள் காளியம்மா.

"சின்னம்மா நீ என்ன சொல்றே...? வேணுங்கிறியா வேணாங்கிறியா...?"

"அவரு கண்ணோட பண்ணிடுங்கன்னுதான் சொல்றேன்..."

"அப்பறம் என்ன ஜனாதிபதியே ஓகே பண்ணியாச்சு... இனி சித்தப்பாவை மாத்த முடியாது.... பொங்கலுக்கு அடுத்த நாள் சொத்து பிரிபடுது..."

"ஆமா கண்ணா... அங்காளி பங்காளிகளை வச்சிப் பிரிச்சிடலாம்.. அப்புறம் பொம்பளப்புள்ளங்க வீட்டுக்காரங்களும் இருக்கதுதான் நல்லது. இப்ப அதுகளுக்கும் சொத்துல விருப்பப்பட்டுக் கொடுக்கிறாங்க... இவனுக விரும்பினா கொடுக்கட்டும்..."

"அது அவங்க விருப்பம் சித்தப்பா... அப்புறம் பெரியத்தான் வந்துருவாரு... சின்னத்தானை பிகு பண்ணுவாருல்ல...."

"அன்னைக்கி இவனுக பேசாம இருந்திருந்தா... இப்ப அவரும் வரப்போக இருப்பாருல்ல..." என்றார் கந்தசாமி.

"அப்ப நாங்கதான் பிரச்சினைக்கு காரணமா...? அவரில்லையா..?" மணி கோபமாக் கேட்டான்.

"அவரு ஆத்தா பேச்சைக் கேட்டுக்கிட்டு அன்னைக்கி ஆடுனாரு... நம்ம புள்ளையப் போட்டு அடிச்சாரு... இவனுக கேட்டானுங்க... அதை எம்புள்ளைக கேக்கக்கூடாதுன்னு சொல்றிகளோ?"

"ஏய்... கேக்கக் கூடாதுன்னு சொல்லல... வாழ்க்கையில முன்னப்பின்ன இருக்கத்தான் செய்யும்... பொண்ணக் கொடுத்த நாமதான் அடங்கிப் போயிருக்கணும்..."

"என்னங்க பேசுறீங்க... பொட்டப்புள்ள கண்ணக் கசக்கிக்கிட்டு வந்து நிக்கயில கூடப்பொறவனுகளுக்கு ரோசம் வரத்தானே செய்யும்..."

"நாந்தப்புன்னு சொல்லல.... இந்தா மூத்தவன் சண்டை போட்டான்... சின்னவன் சட்டையைப் புடிச்சான்... இன்னைக்கி நம்ம புள்ளைய நல்லாத்தானே வச்சிருக்காரு... எல்லாம் நாளாக நாளாக சரியாகும் அனுசரிச்சிப் போத்தான்னு நான் சொன்னேன்... எங்க கேட்டீக..."

"இப்ப என்னங்கிறீங்க... அவரு காலுல போயி விழுந்து கூட்டியாரணுங்கிறியளா...? அடிபட்டு கட்டுப் போட்டுக்கிட்டு வந்து நிக்கிறேன்... ஒரு வார்த்தை கேக்கலை..."

"கொமரேசா... நம்ம கோபந்தான் நிறைய விஷயத்துல நமக்கு எதிரி... அதைப் புரிஞ்சிக்க... அன்னைக்கி உங்கக்கா கண்ணக் கசக்கிக்கிட்டு வந்து நிக்கிதுன்னு அவரோட சண்டை போட்டு சட்டைய புடிச்சே... உங்கக்கா அவரு கூடத்தானே வாழுது.... இல்ல அத்துக்கிட்டு வந்திருச்சா?"

"சித்தப்பா..."

"இரு கண்ணா... நம்ம பிள்ளைக்காக சண்டை போட்டீக... சரி... நல்லது கெட்டதுல அனுசரித்தானேப்பா போகணும்... இப்படியே முறுக்கிக்கிட்டு நின்னா ஒட்டாமலே போயிருமேப்பா..."

"சரி சித்தப்பா... இப்ப என்ன சின்னத்தானை கூட்டியாரணும் அம்புட்டுத்தானே... நாளைக்கி காலையில பொங்க வைக்கிறதுக்கு முன்னால நானும் குமரேசனும் ஒரு எட்டு பொயிட்டு ஓடியாறோம்... அவரு கையைக் காலைப் பிடிச்சி வீட்டுக்கு வரச்சொல்றோம் போதுமா..?"

"அட ஏண்ணே நீ வேற... அந்த ஆளைக் கூட்ட நானா... வேணுமின்னா அண்ணனைக் கூட்டிக்கிட்டு போ..."

"அவரு சட்டையைப் பிடிச்சி முத இடத்துல இருக்கது நீதானே... நீதான் வர்றே... சரி காலாகாலத்துல போய் படுங்கத்தா... விடியக் காலையில வீட்டுக்கு வந்திருக்க மருமகளுக எல்லாம் எட்டு வீடு விட்டெறியிற மாதிரி கோலம் வேற போடணும்... அதுவும் எம்பொண்டாட்டி கோலம் போட்டா எங்க வீட்டு வெள்ளக்கோழி குப்பையைக் கெளறுன மாதிரியே இருக்கும்... ஆத்தி... என்னைய்யா என்னைய பேசுறேன்னு வந்தாளும் வந்துருவா... சரி... குமரேசா... காலையில போவோம்..." என அந்த இடத்தைக் கலகலப்பாக்கிச் சென்றான். 

(வேரும் விழுதுகளும் வளரும்)
-'பரிவை' சே.குமார்.

வியாழன், 22 ஜனவரி, 2015

மனசு பேசுகிறது : துளிர் விடும் விதைகள்

கோதரி கவிதாயினி வி.கிரேஸ் பிரதிபா அவர்களின் துளிர் விடும் விதைகள் கவிதைத் தொகுப்பைப் படிக்கும் வாய்ப்பு அண்ணன் கில்லர்ஜி அவர்களின் மூலமாகக் கிடைத்தது. வாசித்தபோது இது துளிர் விடும் விதைகள் அல்ல துளிர் விடும் (க)விதைகள் என்றுதான் தோன்றியது.

அறிவியல் கலந்து தமிழ்க் கவிதைகள் புனைவது என்பது எல்லாருக்கும் வாய்க்கப் பெற்ற கலை அல்ல. அதை மிக நேர்த்தியாகச் செய்திருக்கிறார். கவிதைகள் வாசிக்கும் போது அறிவியலையும் தெரிந்து கொள்ள முடிவது சிறப்புத்தானே.

முன்னுரையில் பட்டிமன்றப் பேச்சாளரும் எழுத்தாளரும் வலைப்பதிவருமான திருமிகு. முத்து நிலவன் ஐயா அவர்கள், "இவரது தமிழ்ப்பற்று ஆங்காங்கே சில புதிய தமிழ்ச் சொற்களை அறிமுகப்படுத்து நான் வேறெந்த தமிழ்க் கவிதைத் தொகுப்பிலும் காணாத புதுமை" என்று சிலாகிக்கிறார். உண்மைதான் நிறைய இடங்களில் புதிய வார்த்தைகளைத் தேடிப்பிடித்து பயன்படுத்தி அதற்கான பொருளையும் சொல்லி நமக்கு புரிய வைத்திருக்கிறார்.

முகவுரையில் கவிஞரும் திரைப்பட உதவி வசனகர்த்தாவுமான திரு. லவ் குரு (ரேடியோ ஜாக்கி) அவர்கள், "தமிழை நேசிக்கிறார், பெற்றோரைப் பூஜிக்கிறார், நாட்டைக் கொண்டாடுகிறார், இயற்கையைச் சிதைக்காதே என சமூக அக்கறையோடு யாசிக்கிறார். புலரும் பொழுதைப் பாடுகிறார், மலரும் மலரைப் பாடுகிறார், நெடிதுயர்ந்த மரத்தைக் கட்டிக்கொண்டு காதலிக்கிறார், கூடவே கனவுக் கணவனுக்காக கட்டளைகள் இடுகிறார். என்னளவில் நான் உணர்வது இந்தக் கவிதைகள்தான் கிரேஸ் பிரதிபா... கிரேஸ் பிரதியா தான் இந்தக் கவிதைகள்" என வியந்திருக்கிறார். உண்மையில் அப்படித்தான் தொகுத்திருக்கிறார்.

அணிந்துரையில் பிரபல எழுத்தாளரும் மதுரை பாத்திமாக் கல்லூரியின் முன்னாள் தமிழ்ப் பேராசிரியையுமான திருமதி. எம்.ஏ. சுசீலா அவர்கள், " எல்லாருக்கும் பரவலாக அறிமுகமான பொதுவான செய்திகளை மொழி ஆர்வத்தோடு கவிதை வடிவில் வெளிப்படையாக நேரிடையாகத் தரும் வகை சார்ந்தவை கிரேஸின் கவிதைகள்" என்று சொல்லியிருக்கிறார். அவர் சொல்வது போல் பெரும்பாலான கவிதைகள் நமக்குத் தெரிந்த விஷயங்களை கவிதையாக்கிப் பேசுகின்றன.


முற்றிலும் வித்தியாசமாய் தமிழ், வாழ்த்துக்கள், இயற்கைச் சூழல், காதல், இயற்கை, சமூகம், தாய்மை, படைப்பு, வாழ்க்கை எனப் பகுத்து கவிதைகளைத் தொகுத்திருக்கிறார். தலைப்புக்கேற்ப கவிதைகள் அழகாய்த் துளிர் விடுகின்றன.

மிழ் என்னும் விதையில் சில கவிதைகளை துளிர்க்க விட்டிருக்கிறார். அதில் 'இன்னுயிர்த் தமிழ் அன்றோ?' என்னும் கவிதையில்,

"பல மொழி கேட்பினும்
அயல் மொழி பயன்படுத்தினும்
இன்னுயிராய் குருதியோடு கலந்தது தமிழன்றோ?" 
எனக் கேட்கிறார். 

அவர் கேள்வியில் இருக்கும் நியாயம் சரிதானே... இப்படித்தான் 'தமிழ்கொண்டே சென்றிடுவாய்', 'அரிய இலக்கியம் படித்து' என்ற கவிதைகளிலும் தமிழுக்கு கவி பாடியிருக்கிறார்.

வாழ்த்துக்களில் அப்பாவுக்காக, அம்மாவுக்கா, நட்புக்காக, தமிழ் புத்தாண்டுக்காக கவிதை எழுதியிருக்கிறார். அதில்,

"என்னைச் செதுக்கிய சிற்பியே
நீ இல்லாமல் நான் வெறும் கல்லே...
என்னை உருவாக்கிய குயவனே
நீ இல்லாமல் நான் வெறும் மண்ணே...!"
என அப்பாவை பற்றியும்

"அவள் செய்வதெல்லாம் கணக்கு இல்லாதவை
அவள் செய்வதெல்லாம் ஈடு இல்லாதவை"
என அம்மா பற்றியும் கவி பாடியிருக்கிறார்.

யற்கைச் சூழலில் காகம் பாட்டிலில் கூழாங்கல்லைப் போட்டு குடித்த கதையை வைத்து எழுதிய கவிதையில் இப்படிக் கேட்கிறார்.

"கூழாங்கல் எங்கே?
பானையும் எங்கே?
தண்ணீரும் எங்கே? எங்கே?"
என நம்மைப் பார்த்து கேள்வி கேட்கிறார்.

"ஒரு கரண்டி கழுவ
ஒரு சட்டி தண்ணியா?
என்றேன் நான்

அடப்போம்மா
நீதான் பூமியைக் காப்பாற்றப் போறியா?
என்றாள் அவள்

நான்தான் இல்லை
நானும்தான்
என்றேன் நான்"

என நானும்தான் என்னும் கவிதையில் தண்ணீர் சிக்கனத்தால் பூமியைக் காக்க முடியும் என்று சொல்லியிருக்கிறார்.

காதல் என்னும் கூட்டுக்குள் நிறைய கவிப் பறவைகள், ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாய் ரசிக்க வைக்கின்றன. 'கனவுக் கணவனே' என்னும் கவிதையில்

"முதிர்ந்து நடுங்கும் பொழுது கை கோர்க்க வேண்டும்
கண்கள் சுருங்கும் பார்வையிலும் காவியம் பேச வேண்டும்" 
என்றும்

'உன்னிடம் வந்ததை' என்னும் கவிதையில் இதயம் உன்னிடம் வந்ததை அறிவாயா என்று கேட்கும் அவர் 
"என் புன்னகையும்
என் விழிகளும்
பிடிக்கும் என்றாய்
கண்ணாடி முன் சிரித்துப் பார்க்கிறேன்
எண்ணிக்கையில்லாமல்
கண்களைச் சுழற்றிச் சுழற்றியே பார்க்கிறேன்
என்னை அறியாமல்" 
என்று காதல் வயப்பட்டதை கவிதை ஆக்கியிருக்கிறார்.

யற்கை என்னும் இன்பத்துக்குள் 'உனைக்கண்டு உவக்கும் உயிரிவள்' என்னும் கவிதையில்
"பயணங்களில் சில நாள்
பலகணியில் சில நாள்
தோட்டத்தில் சில நாள்
சாளரத்தில் சில நாள்
உப்பரிகையில் சில நாள்
உனைக் கண்டு உவக்கும் உயிரிவள்" 

என்று பல பெயர் கொண்ட நிலாவை எனக்குப் பிடிக்கும் என்பதை அழகாய் காட்சிப்படுத்துகிறார்.

மூகத்தில் ஓநாய்கள் உலவும் சமூகமடி தோழி எனவே நீ விழிப்பாய் இருடி தோழி எனச் சொல்கிறார். அதில்.

"வலை விரிப்பார் வஞ்சகர் என அறிந்தும்
கலை மானாய்ச் சென்று மாட்டுவது ஏன் தோழி? 
என்கிறார்.

"தலைக்குப் பூ வாங்கினாயே அம்மா
தலைக்கவசம் ஏன் வாங்கவில்லை?" 

என்று 'தலைக்கவசம் குடும்பக்கவசம்' என்னும் கவிதையில் விபத்தில் இறந்த அம்மாவைப் பார்த்து குழந்தை கேட்பதாய் கேட்கிறார்.

தாய்மையில் மழலை உண்ணும் அழகை மகிழ்வான கவிதை ஆக்கியிருக்கிறார். அதில்,

"மூக்கின் மேலிரண்டு கன்னத்தில் நான்கு
வாயில் ஒன்று என்றுண்ணும் மழலைக் கண்டு உவந்து
சிலையாய் நின்றால் தாய் இடையிடாமல்" 

என கிண்ணத்துச் சோற்றை தரையில் கொட்டி அள்ளிச் சாப்பிடும் அழகைச் சொல்கிறார்.

டைப்பில் 'கவிதை - கணிதம்' எனும் தலைப்பில் ஒரு கவிதை, அதில்,
"படைப்பு
மெய்யோ பொய்யோ - சொல்லலாம்
கணிதம்
மெய்பிக்க வேண்டும் - சொன்னதை" 
என்கிறார். 

எவ்வளவு அழகான சிந்தனை, யோசித்துப் பாருங்கள் கவிதையில் ஆழம் புரியும்.

'வாழ்க்கையில் வானவில்லாய்' என்னும் தலைப்பில்

"துன்பம் தள்ளும் வேளையிலே
தன் நிலை குலையாமல் மிளிர்ந்திட்டால்
பின் வருமே ஓளிவீசும் வெற்றி" 
என்கிறார்.

இப்படி அழகான கவிதைகளைத் தொகுத்து தனது முதல் தொகுப்பைக் கொண்டு வந்திருக்கும் சகோதரி கிரேஸ் பிரதிபா அவர்களை வாழ்த்துவோம் நண்பர்களே... அனைவரும் அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகம் இது.

அப்புறம் இது மனசு அல்லவா... மனதில் பட்டதை சொல்ல வேண்டாமா... திருமதி சுசிலா அம்மா தனது அணிந்துரையில் கவிதையில் அழகியலிலும் வடிவ நேர்த்தியிலும் கூடுதல் கவனம் செலுத்தினால் கவிதைகள் தரத்தில் இன்னும் மேம்படக்கூடும் என்று சொல்லியிருக்கிறார். கவிதைகளைப் படித்தபோது என் மனதிலும் தோன்றியது இதுதான். பல கவிதைகள் நீளமான வரிகளாய் கவிதைக்கான நேர்த்தி இன்றி வசனம் போல் இருக்கின்றன. 

என்னைக் கவிதை எழுதச் சொன்னால் வசனமாகத்தான் எழுதுவேன்... அதை நீட்டி மடக்கி கவிதை என ஆக்கி வைப்பேன். அப்படியெல்லாம் இவர் செய்யவில்லை என்றாலும் புத்தகத்திற்கான கவிதைத் தொகுப்பில் எதற்காக கவிதை போல் மடக்கி மடக்கி எழுதாமல் நீளநீள வரிகளாய் போட்டிருக்கிறார் என்று தெரியவில்லை. அது மட்டுமே சற்று குறையாய் தெரிகிறது. மற்றபடி துளிர் விடும் விதைகள் மூலம் ஒரு அருமையான கவிஞரை பதிவுலகம் எழுத்துத்துறைக்கு அளித்திருக்கிறது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அடுத்த தொகுப்பில் இந்தக் குறைகளை நிவர்த்தி செய்து சிறப்பாக கொண்டு வருவார் என்று நம்பிக்கையுடன் சொல்லலாம்.

எனக்கு ஹைக்கூ வகைக் கவிதைகள் ரொம்பப் பிடிக்கும் என்பதை கீதா அக்கா அவர்களின் கவிதைத் தொகுப்பான ஒரு கோப்பை மனிதம் பற்றிய பகிர்வில் 
சொல்லியிருந்தேன். இவரது கவிதைகளில் கிடைத்த ஒரே முத்து...

"அஞ்சல் ஆவணம்
அனைத்தும் கணினியில்
தொலைத்து விட்டேனே
கையெழுத்தை..."

அஹா.... அருமை... அருமை... என்னைக் கவர்ந்த இந்தக் கவிதை தங்களையும் கவரும் என்று நினைக்கிறேன்..

அகரம் பதிப்பக வெளியீடான துளிர் விடும் விதைகள் கவிதைத் தொகுப்பு ரூ.100 மட்டுமே.

கவிதாயினி கிரேஸ் பிரதிபா அவர்களின் வலைத்தளம் தேன்மதுரத்தமிழ் 
  
மனசு தொடர்ந்து பேசும்
'பரிவை' சே.குமார்.