மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வியாழன், 31 டிசம்பர், 2015

மனசு பேசுகிறது : 2015-ன் சந்தோஷங்களும் வலிகளும்

(எங்க ஊர் மாரியம்மன்)

லகெங்கும் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் அரங்கேறி வருகின்றன... சில நாடுகளில் புத்தாண்டு பிறந்து விட்டது. பல நாடுகள் புத்தாண்டை எதிர்நோக்கி நிமிடங்களை கடத்திக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் பதிவராய் இருக்கும் எல்லாரும் தங்களுக்கு கடந்து செல்லும் ஆண்டு என்ன செய்தது என்றும் வரும் ஆண்டில் நான் என்ன செய்ய இருக்கிறேன் என்று பதிவுகளைத் தட்டிய வண்ணம் இருக்கிறார்கள். நானும் இந்த ஜல்லிக்கட்டில் கலந்துக்கவில்லை என்று வரலாறு நம்மை பேசும் அல்லவா..? அதனால நாமளும் கொஞ்சம் திரும்பிப் பார்ப்போம்.

கடந்து சென்ற வருடங்களில் சில நல்லவைகள் நடந்திருக்கின்றன... சில கெட்டவைகள் நடந்திருக்கின்றன. இருப்பினும் வாழ்க்கையில் வலிகளும் சந்தோஷங்களும் கொடுத்துத்தான் அனைத்து ஆண்டுகளும் கடந்து செல்கின்றன.  மேலும் வயதும் கூடிக்கொண்டே போகிறது ஆனால் சாதித்து விட்டோம் என்றெல்லாம் சந்தோஷிக்க முடியவில்லை என்றாலும் இன்னும் நம் வாழ்வை நாம் அழகாய் கடந்து கொண்டுதான் இருக்கிறோம் என்பதே சந்தோஷம்தான். சரி வாங்க எனக்கு 2015 செய்தது என்ன... வாழ வைத்ததா... அல்லது வீழ்த்தியதா என்பதைப் பார்ப்போம்.


சந்தோஷங்கள்:

முதலில் சொல்ல வேண்டியது நிறைய நட்புக்களைப் பெற்றுத் தந்தது இந்த 2015.

இங்கு வந்தது முதல் மனைவி, குழந்தைகளை இங்கு கூட்டிவர வேண்டும் என்ற ஆவலை ஒரு மாத விசிட் மூலமாக நிறைவேற்றி வைத்தது இந்த 2015.

பல வருடங்களாக எழுதி வந்தாலும் என்னை எழுத்தாளனாய் பலருக்கு அடையாளம் காட்டியது இந்த 2015.

என்னுடைய சிறுகதைகளுக்கு ஒரு அங்கிகாரத்தைப் பெற்றுத் தந்தது 2014 என்றால் மிகையானது. அப்படியிருக்க கலந்து கொண்ட போட்டிகளில் எல்லாம் வெற்றி பெற்று என்னை இன்னும் வளர வைத்தது இந்த 2015.

என்னாலும் கட்டுரைகள் எழுத முடியும் என்று காட்டி, அதற்கு தொடர்ந்து பரிசுகளைப் பெற வைத்தது இந்த 2015.

கஷ்டப்பட்டாலும் கவலைப்பட்டாலும் எங்கள் ஊரில் வீட்டுப் பணி ஆரம்பிக்க வைத்தது  இந்த 2015.

பாக்யா வார இதழில் ஏழெட்டு மாதங்களாக மக்கள் மனசு பகுதியில் எனது கருத்துக்களும் தொடர்ந்து வர வைத்தது இந்த 2015.

'வேரும் விழுதுகளும்' என்ற கிராமத்து தொடர்கதைக்கும் 'கொலையாளி யார்?' என்ற திகில் குறுநாவலுக்கும் சிறப்பான வரவேற்ப்பை பெற்றுக் கொடுத்து நானும் தொடர்கதைகள் எழுதலாம் என்று நினைக்க வைத்தது இந்த 2015.

வெள்ள அரசியலில் வெகுண்டெழுந்து அரசியல் கட்டுரைகள் எழுத வைத்து, அது நல்லாயிருக்கு தொடர்ந்து  எழுது என்று நண்பர்கள் சொன்னதால் நாமு ம்எழுதலாமோ என்று சிந்திக்க வைத்த இந்த 2015.

எங்கள் பகுதி குறைகள் குறித்து என் மனைவி சொன்ன கருத்தை போட்டோவுடன் பத்திரிக்கையில் வர வைத்தது இந்த 2015.

பதிவர் எழுத்தாளர் மகேந்திரன் அண்ணனை சந்திக்க வைத்து அவருடன் தம்பியாய் நட்போடு இருக்க வைத்தது இந்த 2015.

அண்ணன் கில்லர்ஜி அவர்களை சென்ற வருடத்தின் இறுதியில் சந்தித்தாலும் என் குடும்பத்தில் ஒருவராய் என்னோடு ஒருவராய் இணைத்து வைத்தது இந்த 2015.

அன்பின் ஐயா திரு. துரை. செல்வராஜ் அவர்களையும் அவர்களின் மகள், மாப்பிள்ளை, பேத்தி  என ஒரு அன்பான குடும்பத்தினை சந்திக்க வைத்து அந்த அன்பு நட்பை தொடர வைத்தது இந்த 2015.

அன்பு ஐயா முத்துநிலவன் அவர்களை சந்திக்கவில்லை என்றாலும் அவரின் மகனைச் சந்திக்கும் வாய்ப்பை பெற்றுத் தந்தது இந்த 2010

வசீகரமாய்... கவித்துவமாய்... வாசிப்போரை ஈர்க்கும் விதமாய்  எழுதும் துபாயில் இருக்கும் தேவா சுப்பையா அண்ணன் அவர்களுடன் சென்ற ஆண்டில் பழகியிருந்தாலும் நேரில் சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது இந்த 2015.

சேனையில் இணைந்து அங்கிருப்பவர்களுடன் உறவாய் நட்பு மலர்ந்த போது உடன் பிறந்தவர் போல் நேசங்கொண்ட நிஷா அக்காவைக் கொடுத்தது இந்த 2015.

பாரதி நட்புக்காக அமைப்பில் 2012-ல்  திரு. டெல்லி கணேஷ் அவர்களின் பேசியதை பகிர்வாக்கியிருந்தேன். அவருக்கும் அது தெரிய வர எனக்கு அப்போதே மின்னஞ்சல் அனுப்பி பாராட்டினார். இந்த முறை பாரதி விழாவுக்கு வந்தவர் என்னைக் குறிப்பிட்டுக்  கேட்டு என்னுடன் போட்டோ எடுத்துக் கொள்ள வைத்தது இந்த 2015. 

மேலும் அபுதாபியில் இருக்கும் முகநூலில் எழுத்தில் பன்முகம் காட்டும் அண்ணன் கனவுப்பிரியன், அகல் ஆசிரியர் நண்பர் சத்யா, 'பாக்யா' எஸ்.எஸ்.பூங்கதிர் சார், பிரதிலிபி நண்பர்கள் என எழுத்து வட்டத்தை விரிவுபடுத்தியது இந்த 2015.

உறவுகளைப் புரிந்து கொள்ள வைத்தது இந்த 2015.

உண்மையான நட்புக்களை எனக்கு அளித்தது இந்த 2015.

ஈவண்ட் மேனேஜ்மெண்ட் நடத்தும் பிஸியான நிஷா அக்காவின் கருத்துக்கள் எல்லாமே அருமையாக இருக்கும். அதை வைத்து அவரை நச்சரித்து வலைப்பூவுக்குள் இழுத்துவிட்டு வேடிக்கை பார்க்க வைத்தது இந்த 2015.

(எங்க ஊர் முனியய்யா)

வலிகள்:

குடும்பத்தைப் பிரிந்து இருக்கும் வாழ்க்கையை தொடர வைத்தது இந்த 2015.

கடன்களின் பிடியில் இன்னும் இன்னுமாய் தொடர வைத்தது இந்த 2015.

சிறுகதைத் தொகுப்பு, தொடர்கதையை புத்தகமாக்கும் முயற்சி என 2014 ஆசைகளை நிராசையாகவே ஆக்கி வைத்தது இந்த 2015.

வேலை மாற்றம் தொடர்பான ஆசையைக் காட்டி அதை அப்படியே விட்டு வைத்தது இந்த 2015,  (வருடக் கடைசியில் மீண்டும் நட்பின் மூலமாக துளிர்க்க வைத்துச் செல்கிறது...  பூக்கிறதா... அல்லது புஸ்வானமாகிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்)

எனது கதையை குறும்படம் ஆக்க வேண்டும் என்று குடந்தையூர் சரவணன் அண்ணன் அவர்கள் சொல்லிக் கொண்டே இருக்க, 2014ம் போய் 2015ம் கடந்து விட்டது.

விஷாலின் சேட்டைகளை ரசிக்க வைத்தாலும் அவன் விழுந்து தலையில் தையல் போட வைத்த நிகழ்வைக் கொடுத்தது இந்த 2015.

யாரோ வைத்த தீ-க்கு நாங்கள்தான் நெருப்புக் கொடுத்தோம் என்று சொல்லி எங்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கி, எல்லாரும் வேண்டும் என்று நினைக்கும் எங்களை இவர்கள் வேண்டாம் என்று ஒதுங்க வைத்தது இந்த 2015.

உறவுகளின் கேலிப் பேச்சுகளால் மனவலியை அவ்வப்போது அளித்துக் கொண்டே வந்தது இந்த 2015.


நனவாக விரும்பும் எண்ணங்கள்....

சிறுகதைத் தொகுப்பு அல்லது வேரும் விழுதுகளும் தொடர்கதையை நாவலாக்குவது என்ற எண்ணத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற ஆவல்.

இன்னும் நிறைய கதைகள் நிறைவாய் எழுத வேண்டும்.

எங்கள் மண்வாசனையுடன் கதைகள் எழுத வேண்டும்.

மனசு தளத்தில் எப்பவும் போல் தொடர்ந்து எழுத வேண்டும்.

நான் விரும்பியபடி இப்போது முயற்சிக்கும் அந்த வேலை தடையில்லாமல் கிடைக்க வேண்டும்.

கடன்கள் அடைந்து நாட்கள் சந்தோஷமாய் நகர வேண்டும்.

என் சுக துக்கங்களைப் பகிர்ந்து கொள்ளும் காயத்ரி அக்கா, என்னைப் பிரதிபலிக்கும் என் அன்பு நண்பன் தமிழ்க்காதலன் மற்றும் நான் தொடரும் என்னைத் தொடரும் நட்புக்கள் அனைவரின் அன்பும் இன்று போல் என்றும் தொடர வேண்டும்.

சில கனவுகள் இன்னும் நனவாகாமலே வருடாவருடம் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன... அவை இந்த வருடத்திலாவது நனவாக வேண்டும் என்பது ஆவா... ஆசை உயிர்ப்பெறுமா... அல்லது 2017க்கு நகர்த்தி வைக்கப்படுமா என்பதை வரும் ஆண்டின் வசந்தங்கள்தான் சொல்ல வேண்டும்.


அனைவருக்கும் 
இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள். 
மலரும் ஆண்டு மகிழ்ச்சியையும் வளர்ச்சியையும் தரும் ஆண்டாக அமையட்டும். 
-'பரிவை' சே.குமார்.

புதன், 30 டிசம்பர், 2015

பசங்க 2 - ஒரு பார்வை

து படத்திற்கான விமர்சனம் அல்ல... ஒரு அழகான, அருமையான... தங்கள் குழந்தைகள் படுத்துகிறார்கள் என்று சொல்லும் பெற்றோர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் குறித்தான என் எண்ணத்தின் வெளிப்பாடு மட்டுமே என்பதை ஆரம்பத்திலேயே சொல்லிவிடுகிறேன்.


இந்தக் கதையை எடுத்து அதை கொஞ்சமும் தொய்வில்லாமல், அறிவுரை சொல்லுகிறேன் பேர்வழி என்று ஆவணப்படம் போல் ஆக்காமல் மிகத் தெளிவாக, அழகாக, ஒரு அருமையான படமாகக் கொடுத்த இயக்குநர் பாண்டிராஜ் அவர்களுக்கும் தயாரித்த சூர்யா அவர்களுக்கும் முதலில் எனது வாழ்த்துக்கள்.

கவின், நயனா போன்ற குழந்தைகளை இப்போது எல்லாருடைய வீட்டிலும் பார்க்கலாம். கேள்வி மேல் கேள்வி கேட்கும் குழந்தைகள் இப்போ நிறைய இருக்கிறார்கள். இவன் எங்கிட்டே கேள்வியே கேட்டுக் கொல்லுறான் என்று புலம்புவதும் ஒரிடத்தில் நிற்க மாட்டேங்கிறான்... ஆடிக்கிட்டே இருக்கான்... எதையாவது நோண்டிக்கிட்டே இருக்கான் என்று கத்துவதும் இன்றைய பெற்றோர்களில் பெரும்பாலோனரின் செயலாகத்தான் இருக்கிறது. ஏன் அப்படிப்பட்ட பெற்றோர்களில் நாமும் ஒருவராகத்தான் இருக்கிறோம் என்று சொல்வதில் தவறொன்றும் இல்லையே.

கவினுக்கு நடனம் பிடிக்கும், நயனாவுக்கோ புனைவுலகில் சஞ்சரித்து கதைகள் சொல்லப் பிடிக்கும்.  இந்த இரண்டு குழந்தைகளுக்கும் கட்டுப்பாடுகள் நிறைந்த பள்ளிகளுக்கும் ஒத்துப் போகவில்லை. இவர்கள் இருவரும் பெற்றவர்கள் முதல் பள்ளி ஆசிரியர்கள் வரை கேள்விகளைக் கேட்டு கேட்டு அவர்களை வெறுப்பேற்றுகிறார்கள். மேலும் இவர்களுக்குப் பிடித்ததை மட்டுமே ஈடுபாட்டோடு செய்கிறார்கள். இவர்களால் இவர்கள் பெற்றோர்கள் படும்பாடு சொல்லி மாளாது.

இவர்களின் செயல்களால் ஒவ்வொரு பள்ளியிலும் பிரச்சனையாகி மாற்றுச் சான்றிதழைக் கொடுத்து விடுகிறார்கள். குழந்தைகளில் பெற்றோர் சொல்வது போல் மாற்றுச் சான்றிதழை மட்டும் கொடுக்காமல் அதனோடு சேர்த்து அந்த வியாதி, இந்த வியாதி என வியாதிகளையும் சேர்த்து சொல்லி அனுப்பி விடுகிறார்கள். இந்த நிலையில் ஒருவரும் ஒரே பள்ளியில் சேர்க்கப்பட்டு... ஒரே குடியிருப்பிலும் தங்குகிறார்கள். அங்கு இவர்கள் அடிக்கும் லூட்டியும் பள்ளிக்கூடத்தில் அடிக்கும் லூட்டியும் கலகல.


ஒரு கட்டத்தில் பெற்றோர்கள் குழந்தைகளை வைத்து மேய்க்க முடியாமல் ஹாஸ்டலில் கொண்டு போய் விட, குழந்தைகள் இனி தப்புச் செய்ய மாட்டோம் என்று அலறும்போது உண்மையில் வலிக்கிறது. பின்னர் அவர்கள் அங்கிருந்து வந்தார்களா..? திருந்தினார்களா...? அவர்களுக்குப் பிடித்ததை செய்தார்களா...? என்பதை எல்லாம் மிக அழகான திரைக்கதை நகர்த்தலுடன் சொல்லியிருக்கிறார் இயக்குநர்.

சோட்டா பீம் பாடல் குழந்தைகளைக் கவரும்.  இன்றைய பள்ளிக் கல்வி முறை, தனியார் பள்ளிகளின் பணத்தாசை, பெற்றோரின் தனியார் பள்ளி மோகம் என எல்லாவற்றையும் பேசியிருக்கிறது படம். பிள்ளைகளைச் சேர்க்க அப்ளிகேசன் வாங்குவதற்காக காத்திருக்கும் பெற்றோரும், அதில் அரசுப் பள்ளி ஆசிரியர் நிற்பதும் நடைமுறை உண்மை. சென்னையில் இருக்கும் போது டிவிஏ பள்ளியில் அப்ளிகேசன் வாங்க முதல் நாள் மாலையில் இருந்தே வரிசையில் நிற்பார்கள். என் நண்பனும் அவனின் மனைவியும் முதல் நாள் முதல் அடுத்த நாள் வரை வரிசையில் நின்றும் இருவரும் இந்தப் பணி பார்க்க வேண்டும்... இத்தனை கிலோ மீட்டருக்குள் வீடு இருக்க வேண்டும் என்றும் சொல்லி அப்ளிகேசன் கொடுக்கவில்லை. இது நான் கண்ணால் பார்த்த உண்மை. இரவெல்லாம் பணியில் கிடந்து உறங்கி காத்திருந்த பெற்றோரைப் பார்க்கும் போது சிரிப்பைவிட கடுப்பே வந்தது.

சூர்யா... துறுதுறுவென தங்களுக்கென்று ஒரு உலகம் ஏற்படுத்தி அதில் சஞ்சாரித்து சந்தோஷப்படும் குழந்தைகளின் பெற்றோருக்கு அறிவுரை சொல்வதோடு அந்தக் குழந்தைகளுக்கு வித்தியாசமான டிரிட்மெண்ட் கொடுக்கும் மருத்துவராக வருகிறார். அளவான நடிப்பு... அவரின் மனைவியாக வரும் அமலா பால், குழந்தைகளின் மனம் அறிந்த ஆசிரியையாக வருகிறார். அழகாவும் இருக்கிறார்... நல்லாவும் நடித்திருக்கிறார்.

வசனங்கள் எல்லாமே அருமை... இதில் முத்துநிலவன் ஐயாவின் முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே என்ற புத்தகத்தின் சில கருத்துக்களையும் ஐயாவின் அனுமதியுடன் இயக்குநர் பயன்படுத்தி இருப்பதாக ஐயா தன்னோட தளத்தில் பசங்க குறித்து எழுதிய பதிவில் எழுதியிருக்கிறார். படத்தின் இசை படத்தோடு ஒன்றிப் போகிறது.


'பசங்க கெட்ட வார்த்தை பேசுவதில்லை... 
கேட்ட வார்த்தைகளையே பேசுகிறார்கள்.'

'ஏம்ப்பா... எங்க ஸ்கூலுக்கும் அந்தக் ஸ்கூலுக்கும் என்ன வித்தியாசம்..? 
அங்க படிக்கிறவங்க தமிழ்ல கெட்ட வார்த்தை பேசுவாங்க... இங்க படிக்கிறவங்க இங்கிலீஸ்ல கெட்ட வார்த்தை பேசுவாங்க'

'எப்படி மாமா இருக்கு பிரேக் பாஸ்ட்...
இங்க பாரும்மா  சமைச்சிக்கிட்டே இரு... நான் சாப்பிட்டுக்கிட்டே இருக்கேன்... என்னைக்கு நல்லா இருக்கோ அன்னைக்கு சொல்றேன்...
உனக்கு எப்படிடா இருக்கு?
சூப்பர் அம்மா
நீங்க நல்லாயில்லைன்னு சொன்னீங்க அவன் நல்லாயிருக்குங்கிறான்...
டேய்
சும்மா இருங்க டாடி உங்களை முறைக்கிறாங்க... நான் சொன்னா அடிச்சாலும் பரவாயில்லை... கடிக்கிறாங்க...'

'நம்ம காலத்துல ஒயின்ஷாப்பை தனியார் நடத்துனாங்க... 
பள்ளிக்கூடத்தை அரசாங்கம் நடத்துச்சு... 
ஆனா இன்னைக்கு 
ஒயின்ஷாப்பை அரசாங்கம் நடத்துது... 
பள்ளிக்கூடத்தை தனியார் நடத்துறாங்க...'

'நாங்க ஸ்கூலை நம்புறவங்க இல்லை 
பெத்த பிள்ளைங்களை நம்புறவங்க...'

'ஒவ்வொரு ஸ்கூல்லயும் டிசியோட சேர்த்து அவனுக்கு ஒரு நோயையும் கொடுத்து விடுறாங்க... போதும் மேடம்'

'வேணாம் வித்யா...
பையனா இருந்தா...?
யாரா இருந்தாலும் வேண்டாம்... 
ஒண்ணை வச்சிக்கிட்டே நம்மால மேய்க்க முடியலை...'

'ஏழரைன்னா என்னப்பா?
அது ஒண்ணும் இல்லைப்பா... இனி எழரை வருசத்துக்கு அப்பாவுக்கும் அம்மாவுக்கும்தான்  டவுசர் கிழிகிழியின்னு கிழியப்போகுது...
அப்ப என் டவுசர் கிழியாதுல்ல'

'எதுக்குப்பா எல்லாரும் வரிசையில நிக்கிறாங்க.. வாங்கப்பா நாம் வேற ஸ்கூலுக்குப் போகலாம்.
இதுதான் இருக்கதுலயே பெஸ்ட் ஸ்கூல்... எல்லாரும் புள்ளைங்க பர்ஸ்ட் மார்க் வாங்கணுமின்னு ஆசை... எனக்கும்தான்
இருக்கது ஒரு பர்ஸ்ட் மார்க்தானேப்பா... அப்புறம் எப்படி எல்லாருக்கும் கிடைக்கும்' 

இப்படி இன்னும் நிறைய.... நிறைய வசனங்கள் நச்சென....


இந்த நயனாவும் கவினும் கலந்த கலவைதான் எங்க விஷால்... இவனை முதலில் ஆஸ்டல்ல கொண்டு போய் விடணும் என்று சொல்லும் என் மனைவி, சிரித்தே மழுப்பும் நான்... இப்படியாகத்தான் எங்கள் வாழ்க்கை நகர்கிறது. என் மனைவி இன்று படம் பார்த்துவிட்டு சொன்ன வார்த்தை 'அப்படியே நம்ம விஷாலை திரையில் பார்க்கிற மாதிரி இருந்தது' என்பதுதான். ஆன எங்க ஹீரோ அவங்க அம்மாக்கிட்ட என்ன சொன்னாராம் தெரியுமா..? 'ஆஸ்டல்ல கொண்டு போய் விட்டோடனே அழுகை வந்துருச்சி.. அப்புறம் பேய் கதை சொன்னாங்களா நானும் சிரிச்சிட்டேன்' என்பதே மாலையில் போனில் சொல்லிச் சிரித்தார்.

நயனா(வைஷ்ணவி)வின் பெற்றோராக கார்த்திக் - பிந்து மாதவி, கவின்(நிஷேஷ்) பெற்றோராக முனீஸ்காந்த் -வித்யா இவர்கள் நால்வரும் நடித்திருக்கிறார்கள் என்பதைவிட சேட்டை செய்யும் அந்தக் குழந்தைகளோடுடன் போராடும் வாழ்க்கையை அப்படியே வாழ்ந்திருக்கிறார்கள். திருட்டுப் பழக்கம் உள்ள முனீஸ்காந்த் மகனின் கடிகாரம் உள்பட சின்ன சின்ன பொருட்களை சுடுவதும் அதை விட முடியாமல் தவிப்பதும் கலக்கல். சமுத்திரக்கனி ஒரே சீனில் வந்தாலும் பேசும் வசனங்கள் எல்லாமே நெத்தியடி.

அரோவ்கெரோலியின் இசையும் பாலசுப்பிரமணியத்தின் ஒளிப்பதிவும் அருமை... குழந்தைகளை வைத்து தனியார் பள்ளிக்கூடங்கள் செய்யும் கல்வி வியாபரத்தை மிகத் தெளிவாக சுட்டிக்காட்டியிருக்கிறார். ஒரு சூப்பர் ஹீரோவையும் அமலா பால் போன்ற நடிகையையும் வைத்துக் கொண்டு குழந்தைகள் உலகத்துக்குள் வாழ்ந்து காட்டுவது என்பதும் சாதாரண வேலையில்லை... அதை பாண்டிராஜ் மிகச் சிறப்பாக செய்திருக்கிறார். சிம்புவிடன் இது நம்ம ஆளு என்று மாட்டிக் கொண்டு தவிக்கும் இயக்குநர் இது போன்ற படங்களை எடுக்கும் இயக்குநர்கள் இல்லாத குறையை இன்னும் பல படங்கள் எடுத்து தீர்த்து திரையுலகில் தனக்கென ஒரு இடத்தைப் பிடிக்கலாம்.


மொத்தத்தில் பசங்க 2 குழந்தைகளுக்கான படம் அல்ல... இது பெற்றோர்களுக்கான பாடம்.
-'பரிவை' சே.குமார்.

செவ்வாய், 29 டிசம்பர், 2015

மார்கழிக் கோலங்கள் - 1

மார்கழி மாதம் என்றாலே வீடுகளின் வாசல்கள் எல்லாம் வண்ணங்களில் ஜொலிக்கும் அழகிய கோலங்களை சுமந்து சிரிக்கும். பெரும்பாலான பெண்களுக்கு மார்கழி மாதம் முழுவதும் வீட்டு வாசலில் விதவிதமான கோலங்கள் வரைந்து அதில் பொறுமையாய் பார்த்துப் பார்த்து கலர்க் கொடுத்து ரோட்டில் போவரை எல்லாம் ரசிக்க வைப்பதில் அலாதிப் பிரியம். 


நாங்கள் பள்ளியில் படிக்கும் காலத்தில் எங்க அக்காக்களெல்லாம் மார்கழி மாதம் வருவதற்கு முன்னரே கலர்பொடி பாக்கெட்டுக்களை வாங்கி வந்து அதில் மணல் கலந்து டப்பாக்களில் கொட்டி வைப்பார்கள். கிராமங்களில் எல்லா நாளும் கலர்  கொடுக்க மாட்டார்கள். மாதத்தில் சில நாட்கள் கொடுப்பார்கள். பொங்கலன்று கொடுப்பார்கள்... அவ்வளவே... விதவிதமாய் கோலங்கள் வரைந்து பத்திரப்படுத்தி வைத்த நோட்டுக்களை மார்கழி மாதம் மட்டுமே எடுப்பார்கள். முதல்நாள் இரவே நாளைக்கு என்ன கோலம் வரைவது என்பதை முடிவு செய்து,  எத்தனை புள்ளி எத்தனை வரிசை என்று பார்த்து ஒரு முறை போட்டுப் பார்த்துக் கொள்வார்கள். மறுநாள் வாசலைக் கூட்டி, அதில் சாணம் தெளித்து (இப்பல்லாம் தண்ணிதான்) அழகாய் புள்ளி வைத்து கோலமிட்டு கலர்க் கொடுத்து நிமிரும் போது அவர்களின் கைவண்ணம் அதில் அழகாய்த் தெரியும்.


அப்போதெல்லாம் கோலத்திற்கு கலர் கொடுக்கப் போவதுண்டு. எங்கள் ஊர் மாரியம்மன் கோவிலில் எங்க வீட்டில்தான் கோலம் போடுவார்கள். எனவே தினம் இரண்டு கோலம் போடுவதால் கோவிலில் போட்டுவிட்டு வீட்டிற்கு போடுவதற்குள் கோவிலில் நானும் தம்பியும் கலர் கொடுத்து விடுவோம். அப்புறம் நாங்க வீட்டு வாசலுக்கு வர, அக்காவோ அண்ணியோ கோவில் கோலத்தின் மேல மறுபடியும் கோலப்பொடியால் விளிம்பிவிட்டு வருவார்கள். ஒரு சில நேரங்களில் நாங்கள் கலர் கொடுக்க எழுந்திரிக்க மாட்டோம். படுத்துக்கிட்டு தூக்கம் வருதுன்னு பிகு பண்ணுவோம். அவர்கள் கெஞ்ச... நாங்க மிஞ்சிவிடுவோம்.

பெரும்பாலும் பொங்கலன்று பொங்கப்பானை போடுவதெல்லாம் நாங்களாகத்தான் இருக்கும். கரும்பு, மஞ்சள் கொத்து  அது இதுன்னு எல்லாம் நாங்களே வரைவோம். மாட்டுப் பொங்கலன்று தம்பி அழகாய் மாடு வரைந்து விடுவான். பின்னர் பொங்கல் வாழ்த்துக்கள் என்று அழகாய்(?) வேறு எழுதுவதுண்டு. 


இப்படிப் போன கோல நாட்களில் என் மனைவியின் வருகைக்குப் பின் எங்கள் வீட்டுக் கோலங்கள் இன்னும் உயிர்பெற்றன. இவர் தினமும் கோலம் போட்டு கலர் கொடுப்பதற்காகவே மூன்று மணிக்கெல்லாம் எழுந்து விடுவார். எங்க வீடு, தேவகோட்டை, சென்னை, காரைக்குடி என குடியிருந்த வீடுகள், தற்போது தேவகோட்டையில் இருக்கும் எங்க வீடு என எல்லா இடங்களிலும் இவரது கோலம் பிரபலம். காரைக்குடியில் இருந்து வீடு காலி பண்ணி வந்த அடுத்த வருடம் பக்கத்து வீட்டு ஆண்டி போன் பண்ணி நித்யா நீ இல்லாம நம்ம ஏரியாவுல மார்கழி மாதமாவே இல்லை என்று சொன்னார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

விதவிதமாய் கோலங்கள் வரைவதில் கில்லாடி... புள்ளி வைத்து... புள்ளி வைக்காமல் என அழகோவியமாய் கோலம் வரைந்து கலர் கொடுத்து வாசலுக்கு அழகை கொடுத்து விடுவார். அவருக்கு கோலம் போடுவதில் அலாதிப் பிரியம்... அதுவும் பாக்கெட் கலர்பொடி வாங்கமல் கலர்களை வாங்கி வந்து இவரே கலந்து டப்பாக்களில் நிரப்பி வைப்பார்... மார்கழி மாதம் முழுவதும் கலர் கோலம் மட்டுமே போடுவார்,.


அதிகாலையில் எழுந்து பனியில் கோலம் போடுவதற்கு என்னிடம் தினமும் திட்டு வாங்குவார். இப்பவும் ஊரெல்லாம் திருட்டு பயம் இருக்குன்னு எழுந்திரிக்காதே என்று இங்கிருந்து கூவினாலும் கேட்பதில்லை.... இந்த முறை விஷால் நான் சொல்வது போல்  உங்களுக்கு என்ன கிப்டா கொடுக்கப் போறாங்க, பீவர்தாம்மா வரும்ன்னு மழலையில் திட்ட, உங்க மகன் அப்படியே உங்களை மாதிரியே இருக்கான்... நான் கோலம் போடப்போனா நீங்க திட்டுற மாதிரி இப்ப இந்த ஆம்பளை திட்டுறாருன்னு சொல்லிச் சிரிச்சாங்க. இப்ப வீட்ல சின்னக்குமார் மிரட்டல் விட ஆரம்பிச்சிருக்கார்.


இடத்திற்கு ஏற்றார் போல் சுருக்கி விரித்து கோலம் போடுவதில் கில்லாடி... எங்க வீட்டில் என்ன கோலம் போட்டிருக்கிறார் என்று பக்கத்து வீட்டார் எல்லாம் வந்து பார்த்து ஒருநாள் போடவில்லை என்றாலும் என்னாச்சு என்று கேட்கும் அளவுக்கு காரைக்குடியிலும் சென்னையிலும் வைத்திருந்தார். தேவகோட்டையில் ஒதுக்குப்புறமாய் வீடு... இன்னும் அதிகம் வீடுகள் வரவில்லை... எதிரே இருக்கும் மூன்று வீட்டாரும் கோலமா... அப்படின்னா என்ன என்று கேட்கும் ரகம். இருந்தும் எங்க வீட்டில் கோலம் கலக்கிக் கொண்டுதான் இருக்கிறது,

என் மனைவி போடும் கோலங்களை இனி என் எழுத்தில் இந்த மாதம் முழுவதும் அப்ப அப்ப பகிர்ந்து கொள்ளவிருக்கிறேன் என்பதையும் இங்கு சொல்லிக் கொள்கிறேன். போன வருடம் முகநூலில் பகிர்ந்தேன்... இந்த முறை என் மனசில்...

 
இங்கு பகிரப்பட்டிருக்கும் கோலங்கள் அனைத்தும் இந்த மார்கழியில் எங்க வீட்டில் விளைந்தவையே.... இவற்றை விற்கும் எண்ணம் என்னிடம் இல்லை... அதற்கான உரிமையும் என்னிடம் இல்லை... அதெல்லாம் இதன் ஓனரிடமே... விரும்பினால் அவரிடம் கேட்டுக் கொடுக்கப்படும்... யாரும் சொல்லாமல் தூக்கிக் கொண்டு போக வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். என்ன பண்றது... அம்மணியோட கைவண்ணமுல்ல... அப்படித்தான்... கோபப்படாதீங்க.... அப்ப அடுத்த மார்கழிக் கோலங்கள்ல சந்திப்போம்.


-'பரிவை' சே.குமார்

திங்கள், 28 டிசம்பர், 2015

குறுந்தொடர்: பகுதி - 16. கொலையாளி யார்?

முன்கதை


தொழிலதிபர் தணிகாசலம் ஊட்டியில் வைத்து கொடூரமான முறையில் கொலை செய்யப்படுகிறார். அவரை யார் கொலை செய்தார் என்பதைக் கண்டுபிடிக்க தனது விசாரணையைத் தொடங்கும் இன்ஸ்பெக்டர் சுகுமாரன், வேலைக்காரி முதல் மதுரையில் அவரது வாரிசுகள் வரை விசாரித்து இவளா... இவனா... அவனா... என மாற்றி மாற்றி சந்தேகித்து கொலையாளி டாக்டர் சிவராமந்தான் என முடிவுக்கு வந்து அவரை வரவைத்துக் கேட்க, உண்மையைச் சொல்ல ஆரம்பிக்கிறார்.

இனி...

சிவராமன் தன் மனைவிக்கும் நண்பனுக்குமான உறவு குறித்து சொல்லிவிட்டு அழுததைப் பார்த்து மூவரும் பேசாமல் அமர்ந்திருந்தனர். அவர்கள் முகத்தைப் பார்த்தவர் தலைகுனிந்தபடியே மீண்டும் தொடர்ந்தார்.
“இவங்க பழக்கம் எனக்கு எப்படித் தெரிந்ததுன்னு நீங்க யோசிக்கலாம். லதாதான் எங்கிட்ட இதைச் சொன்னா... நான் நம்பலை... ஏன்னா எனக்கு என்னோட மனைவி மேல அம்புட்டு நம்பிக்கை அதனால அந்தப் பொண்ணை அடிக்கப் பொயிட்டேன்... உடனே அவ நான் சொல்றது பொய்யின்னா நாகராஜ் அண்ணங்கிட்ட கேளுங்கன்னு சொன்னா... அவனுக்கிட்ட கேட்டா பதில் சொல்லாம மழுப்பினான்... காரணம் தணிகாசலம் கொடுக்கிற சரக்கும் காசும் அவனை அவனுக்கு விசுவாசமா இருக்கச் சொன்னுச்சு... உண்மையைதெரிஞ்சிக்க அவனை நானும் பணத்தால அடிச்சேன்... எல்லாம் சொல்லிட்டான்... எனக்கு என்ன செய்யிறதுன்னே தெரியலை.... பட் எனக்கு ரெண்டு பேரும் வேணும்... அதனால எதுவும் தெரிஞ்சது மாதிரி காட்டிக்காம இவனுக்கிட்ட என்னோட நட்பை தொடர்ந்தேன். என் மனைவிக்கிட்டயும் எதுவும் கேட்கலை. ஆனா லதாவும் வடிவேலும் மாறி மாறி தகவல் சொல்ல ஒரு கட்டத்துல என் மனைவிக்கிட்ட மனம் விட்டுப் பேசினேன்... கெஞ்சிப் பார்த்தேன்... அழுது பார்த்தேன்... ஆனா அவ திருந்தலை....”

“திருந்தலைங்கிறதுக்காக கொலை வரைக்கும் போவீங்களா?” என்றார் சுகுமாரன்.

“கொஞ்சம் பேச விடுங்க சார்” என்றபடி சிவராமன் தொடர, மூவரும் அமைதியாய் கேட்க ஆரம்பித்தனர்.

“சம்பவம் நடந்த அன்னைக்கு இரவு நான் ஒரு முக்கியமான ஆபரேசனுக்காக ஆஸ்பிடல்ல இருந்தேன்... இவன் எனக்குப் போன் பண்ணி இங்க வாறீயான்னு கேட்டான்...  இல்லை முடியாதுடான்னு சொல்லிட்டேன். கொஞ்ச நேரத்துல என் மனைவி போன் பண்ணி பிரண்ட் வீட்டுக்குப் போறேன் காலையிலதான் வருவேன்... நீங்க வந்து செக்யூரிட்டிக்கிட்ட சாவி வாங்கி வீட்டைத் திறந்து படுத்துக்கங்கன்னு சொன்னா... அவ பேச்சை நம்பினேன்... ஆனா அவ வந்தது இங்க... ஏன் சார் என்னைய நம்பிக்கை துரோகின்னு சொன்னீங்கதானே... இப்பச் சொல்லுங்க சார் நான் நம்பிக்கைத் துரோகியா இல்லை அவங்களா..?”  என்று சுகுமாரனைப் பார்த்துக் கேட்க, அவர் வாயடைத்துப் போய் அமர்ந்திருக்க, வருண்தான் “சாரி அங்கிள்” என்றான்.

“எதுக்குப்பா சாரி... நீ தப்புப் பண்ணலையே...” என்று சிரித்தவர் மீண்டும் பேச ஆரம்பித்தார். “ராத்திரி 10 மணிக்கு மேல இருக்கும் நாகராஜ் போன் பண்ணி சார் உங்க ஓய்ப் இங்க வந்திருக்காங்க... நீங்க வந்தா கையும் களவுமாப் பிடிக்கலாம்ன்னு சொன்னான்... அவனே நான் கேட்டைத் திறந்துதான் வச்சிருக்கேன்... மெயின் கதவு சாவி சன்னல்கிட்டதான் இருக்கும்... வந்ததும் எனக்கு மிஸ்டு கால் கொடுங்க... நான் ஐயாவோட அறைக்கதவைத் தட்டினா சந்தேகம் வராது அப்படின்னு சொன்னான். ஆனா எனக்கு அவங்க முன்னாடிப் போயி நிக்க மனசு வரலை... இவ்வளவு சொல்லியும் திருந்தாதவளை அங்கபோய் பார்த்து சத்தம் போட்டா அவனுக்கு முன்னால என்னைய நீ ஒண்ணத்துக்கும் ஆகாத ஆம்பளை அதனாலதான் நான் இப்படிப் பண்றேன்னு சொல்லிட்டான்னா... ரொம்ப யோசிச்சேன்... ஒண்ணும் தோணலை... என்னைப் பொறுத்தவரை என்னோட தொழிலை ரொம்ப மதிக்கிறவன்... அதனால ஆபரேசனை முடிச்சிட்டு எந்த முடிவாயிருந்தாலும் எடுக்கலாம்ன்னு ஆபரேசன் தியேட்டருக்குள்ள பொயிட்டேன். முடிச்சிட்டு வெளிய வந்தப்போ சூடா டீ கொடுத்தாங்க... அந்தச் சூழல்ல அது தேவையா இருந்துச்சு... எங்கயும் போகம அங்கே உக்காந்து இருந்துட்டு காலையில போகலாம்ன்னு முடிவு பண்ணினேன்...” பேச்சை நிறுத்தி தண்ணீர் பாட்டிலைப் பார்த்தவர் கொஞ்சம் படபடப்பாய் இருப்பது போல் தெரிந்தது.

“இருங்க அங்கிள் நான் தண்ணி எடுத்துக்கிட்டு வாறேன்...” என்று வருண் எழுந்திரிக்க, “என்ன வருண் உங்கப்பாவை கொன்னவரை அன்பா உபசரிக்கிறீங்க... உங்க இடத்துல நான் இருந்தா இந்நேரம் தூக்கிப் போட்டு...” பொன்னம்பலம் பேச்சை நிறுத்தி அவனைப் பார்க்க வருண் சிரித்தபடி, “இல்ல சார்... எனக்கு அங்கிளை நல்லாத் தெரியும்... எங்களுக்கு எல்லாமும் அவர்தான்... பட் சந்தர்ப்பச் சூழ்நிலை இப்படி நடந்திருக்கு... அப்பா பண்ணுனது பெரிய துரோகமில்லையா... அப்ப எங்க அம்மாவுக்கும் அப்பாவுக்கும் என்ன வித்தியாசம் இருக்கு... எனக்கு அங்கிள் மேல கோபமே வரலை சார்...” என்றபடி சென்றவன், சிறிது நேரத்தில் உள்ளே வந்து அவரிடம் தண்ணீரைக் கொடுத்தான். வாங்கிக் குடித்தவர் மீண்டும் தொடர்ந்தார்.

“அந்த நேரத்துல என் மனைவிக்கிட்ட இருந்து போன்... என்னடா இப்ப போன் வருதுன்னு பதட்டத்தோட எடுத்தேன்... எதிர்முனையில அவ அழுதுக்கிட்டே இங்க வரச்சொன்னா...அவனுக்கு என்னாச்சோ ஏதாச்சோன்னு பதறிப் போய் கேட்டேன்... நாந்தான் அவரைக் கொன்னுட்டேன்னு அழுதுக்கிட்டே சொன்னா... எனக்கு உலகமே சுத்துற மாதிரி இருந்துச்சு... எப்படியோ நிதானித்து கார்ல போறது நல்லது இல்லையின்னு முடிவு பண்ணி ஆஸ்பத்ரிக்கு பக்கத்துல இருக்க ஆட்டோ ஸ்டாண்ட்ல ஆட்டோ பிடிச்சு பக்கத்துத் தெரு முக்குல இறங்கி பதட்டத்தோட இங்க நடந்து வந்தேன். நாகராஜ் சொன்ன மாதிரி வெளிக்கேட்டை திறந்து வச்சிருந்தான். எனக்கு நாகரஜை கூப்பிட எண்ணமில்லை... இந்தக் கொலை என்னோட மனைவி பண்ணினதுன்னு அவனுக்கு தெரியக்கூடாதுன்னு நினைச்சேன். அதனால என் மனைவிக்குத்தான் மிஸ்டு கால் கொடுத்தேன். வேகமாக கதவைத் திறந்தவ என்னைப் பார்த்ததும் அழுதுக்கிட்டே எம்மேல சாஞ்சா... அவளைத் தேற்றி, உள்ளே போய் பெட்ரூம்ல பார்த்தா அங்க என் நண்பன் கத்திக் குத்து வாங்கி பிணமாக் கிடக்கான். அப்புறம் அவகிட்ட விசாரிச்சா... இவ என்னென்னமோ சொன்னா... எனக்கு அதெல்லாம் காரணம் இல்லைன்னு தோணுச்சு... அந்தச் சூழல்ல அதுக்கு மேல துருவித் துருவி கேட்க எண்ணமில்லை...  சரி விடுன்னு சொல்லிட்டு கையோட கொண்டு வந்திருந்த கிளவுசை மாட்டி எந்த ஒரு ஆதாரமும்  கிடைக்காத அளவுக்கு அவகிட்ட கேட்டுக்கேட்டு அவ கைபட்ட எல்லா இடத்தையும் சுத்தமாக்கிட்டு அவசரமா வெளியேறி அடுத்த தெருப்பக்கமாப் போயி அந்த நேரத்துல எங்கயோ சவாரி பொயிட்டு வந்த ஆட்டோவைப் பிடிச்சி வீட்டுக்குப் பொயிட்டேன்.”

“அப்ப நீங்க கொலை செய்யலை... கொலையாளி உங்க மனைவி... அவங்க கொன்னதற்கான காரணம் சொல்லலை... என்னங்க இது கேக்குறவன் கேனையன்னா கேப்பையில நெய் வடியிதுன்னு சொல்லுவாங்களாம்... எங்களைப் பார்த்தா கேனையன் மாதிரியாவா இருக்கு” பொன்னம்பலம் கோபமாய்க் கேட்டார்.

“நான் சொல்றது உண்மை சார்… அவ வீட்டுக்கு போனதும் புலம்பிக்கிட்டே இருந்தா… ரெண்டு பேருமே தூங்கலை... காலையில லோக்கல் டிவியில செய்தி வந்திருச்சு… அவ ரொம்ப படபடப்பா இருந்தா… அப்பத்தான் கையைப் பார்த்தது போல என்னோட மோதிரமும் அங்க மிஸ் ஆயிடுச்சுன்னு சொன்னா… எனக்கு ரொம்ப ஷாக்காயிடுச்சு… போலீஸ் வரலைன்னாக்கூட போய் தேடிப் பாக்கலாம்… இப்ப எப்படின்னு யோசிக்கும் போது நாகராஜ் போன் பண்ணினான்… அவனுக்கிட்ட என் மனைவி அங்கிருந்து இரவே வந்துட்டா… நான் வீட்டுக்கு வரும்போது வீட்ல இருந்தா… போலீஸ்கிட்ட இது விவரம் எதுவும் சொல்லாதே… உன்னை கவனிக்கிறேன்னு சொல்லிட்டு இங்க வந்தேன்… உங்களைப் பார்த்தேன்… உங்ககிட்ட கேட்டு உள்ள போயி பாடியைப் பாக்குறமாதிரி மோதிரத்தை தேடினேன் கிடைக்கலை… என் மனைவிக்கிட்ட எடுத்து அது எதுக்கு நமக்குன்னு தூக்கிப் போட்டுட்டதாச் சொல்லிட்டேன்…. அவளும் நம்பிட்டா… கொலை நடந்த மூணாவது நாள் அவ கொஞ்சம் நார்மலானா… வேற எங்கயாச்சும் போயிடலாம்ன்னு சொன்னா… சரியின்னு சொன்னவன் கொலைக்கான காரணத்தை மெதுவாக் கேட்டேன். அவ என்னோட நெஞ்சில சாஞ்சு அழுதுக்கிட்டேன் சொன்னா… நான் ரொம்ப உடைஞ்சிட்டேன்… அவனோட பிஸினஸூக்காக இவளை யூஸ் பண்ணியிருக்கான்… கண்டவன் கூடவும்… நானும் வருணோட அம்மாவும் சும்மாதான் சொன்னோம்… அப்பல்லாம் அவன் இப்படி இல்லை… அவனுக்கு இப்பத்தான் பிஸினஸ் வெறி… அதுக்காக என்னோட மனைவியை பயன்படுத்தி இருக்கான… இவளை பணத்தாலயும் நகையாலையும் மயக்கிப் போட்டு வச்சிருந்திருக்கான்… இந்தத்தடவை இவ எதிர்க்க, எல்லாத்தையும் வெளியில சொல்லிடுவேன்னு சொல்லி மிரட்டியிருக்கான்… ஆதாரமெல்லாம் இருக்கும்ன்னும் சொல்லியிருக்கான்… இன்னும் என்னென்னவோ சொல்லியிருக்கான் என்னால அதையெல்லாம் இப்பச் சொல்ல முடியாது ப்ளீஸ்… அதுக்கப்புறம் இவ சமாதானம் ஆன மாதிரி பேசி சிரிச்சு… அவன் தூங்குறதுக்கு முன்னாடி சாப்பிடுற அந்த தூக்க மருந்தை அளவுக்கு அதிகமாக் கொடுத்திருக்கா… குடி போதையில அவனும் குடிச்சிட்டு படுக்க, இவ பொறுமையா உக்காந்திருந்து குத்திட்டா… தைரியமா வெளியில போயிடலாம்ன்னு நினைச்சவ கொலை… ரத்தம்… தனிமை… இரவுன்னு பயந்து என்னைக் கூப்பிட்டுருக்கா…”

“ஓகே மிஸ்டர் சிவராமன்… உங்க மனைவி பண்ணின கொலைக்கு நீங்க உடந்தை… ரெண்டு பேரையும் தூக்கி உள்ள போடணும்… உங்க மனைவி இப்ப ஹாஸ்பிடல்லயில்ல… என்ன செய்யிறது…?” என்றார் சுகுமாரன்.

சிவராமன் சிரித்தபடி, “நான்தான் கொலை பண்ணினேன்னு சொல்லிடுறேன்னு புலம்புனவளை பாத்ரூம்ல தள்ளிவிட்டு தலையில அடிபட வச்சவனே நாந்தான் சார்… அவ இப்ப மரணத்தோட வாசல்ல… என்னோட கணக்குப்படி நாளைக்காலையில விடியும் போது அவ உயிரோட இருக்கமாட்டா…”

“அடப்பாவி… நீ என்னய்யா மனுசன்...” பொன்னம்பலம் சொல்ல, “என்ன அங்கிள் இப்படிப் பண்ணீட்டிங்க…?” என்றான் வருண்.

“மன்னிச்சிடு வருண்… சார்… என்னைய கைது பண்றீங்களா..? நாங்க பண்ணுன தப்புக்கான முடிவை நானே எடுத்துட்டுத்தானே வந்திருக்கேன்…” என்று சிரித்தார் சிவராமன்.

“வாட்?” சுகுமாரன் கேள்விக்குறியோடு பார்த்தார்.

“எஸ் இன்ஸ்பெக்டர்… தப்புப் பண்ணுனவன் தண்டனை அனுபவிக்கணும்…. ஐ ஆம் எ டாக்டர்… சொசைட்டியில பெரிய மனுசன்… ஆனா பொண்டாட்டியோட தவறான நடத்தையால, நண்பனோட நம்பிக்கை துரோகத்தால இன்னைக்கு இந்த நிலமையில வந்து நிக்கிறேன்… என் மனைவி இறந்துருவா… அதுக்கப்புறம் எனக்கு ஜெயில், கோர்ட், தீர்ப்புன்னு அலைய மனசில்லை… அவளுக்கு அப்புறம் நான் யாருக்காக வாழணும் சொல்லுங்க… அதனால எனக்கு நானே தீர்ப்பு எழுதிக்கிட்டேன்…”

“என்ன சொல்றீங்க அங்கிள்?” வருண் பதட்டமாய்க் கேட்டான்.

“எஸ் வருண்… நான் டாக்டர்…. எதைச் சாப்பிட்டா நம்மளை மெதுவாக் கொல்லும்ன்னு தெரியும்… அந்த மாதிரி ஒரு மருந்தை வரும்போது குடிச்சிட்டுத்தான் வந்தேன்… இன்னும் கொஞ்ச நேரத்துல மயக்கத்துக்குப் போயிருவேன்… என்னைக் காப்பாத்தணும்ன்னு நினைக்காதீங்க… அது வேண்டாம்… இனி அது உங்களால முடியாது... சோ எனக்காக ஒண்ணே ஒண்ணு செய்யிங்க… நான் மயங்குறதுக்குள்ள என்னோட ஹாஸ்பிடல் கூட்டிக்கிட்டுப் போங்க... ப்ளீஸ் வருண்… என்னை என் மனைவிக்கிட்ட கூட்டிக்கிட்டுப் போ… அவ பக்கத்துலதான் என்னோட உயிர் போகணும்… அவன்னா எனக்கு உயிர் தெரியுமா…? எங்க ரெண்டு பேரையும் ஒண்ணா வச்சி நீதான் கொள்ளி வைக்கணும்… ஏன்னா நீ என்னோட மகன் மாதிரி… ஜ லவ் யூ சோ மச் மைடியர் சன்… நாங்கதான் உங்கப்பாவை கொன்னோம்ன்னு தர்ஷிகாவுக்கு தெரிய வேண்டாம் ப்ளீஸ்… அந்தக் குழந்தைக்கு கடவுள் துணை இருக்கட்டும்...” என்ற சிவராமனின் கைகளை கண்ணீரோடு பற்றிக் கொண்டான் வருண்.

சுகுமாரன் ஒன்றும் பேசாமல் பொன்னம்பலத்தைப் பார்க்க, அவரோ சிவராமனுக்காக வருத்தப்பட்டபடி 'முதல்ல அந்த மோதிரத்தை கொண்டு போயி ஏதாவது கோயில் உண்டியல்ல போடணும்' என்று நினைத்துக் கொண்டார்.
-சுபம்’

(தொடர்ந்து வாசித்து தங்கள் கருத்துக்களைச் சொல்லி எனது எழுத்தை ஊக்குவித்த அனைத்து நட்புக்களுக்கும் நன்றி.... முடிவு குறித்து தங்கள் கருத்தில் நிறை குறை எதுவாக இருந்தாலும் சொல்லுங்கள்... முதல் க்ரைம் தொடர்... உங்கள் கருத்துக்கள் என்னை திருத்திக் கொள்ள உதவும்.... நன்றி)

-‘பரிவை’ சே.குமார்.

ஞாயிறு, 27 டிசம்பர், 2015

குறுந்தொடர்: பகுதி - 15. கொலையாளி யார்?

முன்கதை


தொழிலதிபர் தணிகாசலம் ஊட்டியில் வைத்து கொடூரமான முறையில் கொலை செய்யப்படுகிறார். அவரை யார் கொலை செய்தார் என்பதைக் கண்டுபிடிக்க தனது விசாரணையைத் தொடங்கும் இன்ஸ்பெக்டர் சுகுமாரன், வேலைக்காரி முதல் மதுரையில் அவரது வாரிசுகள் வரை விசாரித்து இவளா... இவனா... அவனா... என மாற்றி மாற்றி சந்தேகித்து கொலையாளி டாக்டர் சிவராமந்தான் என முடிவுக்கு வந்து கேசை முடிக்கும் விதமாக சிவராமனிடம் எதற்காக கொலை செய்தீர்கள் என நேரிடையாக விசாரணையை ஆரம்பிக்க அவரும் உண்மையைச் சொல்வதாய் சொல்கிறார்.

இனி...

சிவராமன் சொல்கிறேன் என்று சொன்னதும் அவர் என்ன சொல்லப்போறார்... எதுக்காக கொலை செய்தார் என அறியும் ஆவலுடன் மூவரும் அவர் முகம் நோக்க, கண்ணீரைத் துடைத்துக் கொண்டவர் டீப்பாயின் மேலிருந்த தண்ணீரை எடுத்துக் குடித்துவிட்டு ஒரு செருமலுடன் ஆரம்பித்தார்.

“நானும் தணிகாசலமும் நெருங்கிய நண்பர்கள் என்பது உங்களுக்குத் தெரியும்... எனக்குத் தெரியாம அவனோ... அவனுக்குத் தெரியாம நானோ எந்த ஒரு காரியமும் செய்ததில்லை... ரெண்டு பேருக்கும் இடையில எந்த சீக்ரெட்டும் இல்லை. அவனுக்கு ஒர்க் டென்சன் அதிகம்... அதைவிட வருண், தர்ஷிகா குறித்த கவலை ரொம்ப அதிகம்... அவங்களை நல்லபடியா வளர்க்கணும்... அம்மா இல்லாம வளர்ற பசங்க... நாளைக்கு அப்பனோட வளர்ப்பு இப்படித்தான் இருக்கும்ன்னு யாரும் சொல்லிடக்கூடாதுன்னு எங்கிட்ட பேசுறப்போ எல்லாம் புலம்புவான்... வருணோட அம்மா நம்பிப் போனவனோட சரியான வாழ்க்கை அமையாம எங்கிட்ட வந்து என்னை அவரைச் சேத்துக்கச் சொல்லுங்கண்ணே... நான் வேலைக்காரியாவாச்சும் அந்த வீட்ல இருக்கேன்னு அழுதுச்சு.... நான் அவனுக்கிட்ட வந்து பேசினப்போ அவன் ஒத்துக்கலை... முடியவே முடியாது... அவ திரும்பி வந்தா பிள்ளைகளோட எதிர்காலம் பாழாப்போயிரும்ன்னு சொல்லிட்டான்... இவன் சொன்னதுலயும் நியாயம் இருந்துச்சு... ஏன்னா மன்னிச்சு ஏத்துக்கிறேன்னு சொன்னவனை வேண்டான்னு சொன்னவ... இப்ப வாறேன்னு சொன்னா.... அவன் பிடிவாதக்காரன்... முடியாதுன்னு முடிவாச் சொல்லிட்டான்... நானும் அவகிட்ட சொல்லிட்டேன். அவ இன்னமும் தானா ஏத்துக்கிட்ட வாழ்க்கையை கஷ்டத்தோடதான் வாழ்ந்துக்கிட்டு இருக்கா...” பேச்சை நிறுத்தினார்.

“எதுக்காக கொலை பண்ணினீங்கன்னு கேட்டா தேவையில்லாத கதை எல்லாம் எதுக்கு சார்... அதான் வருணோட அம்மா தன்னோட தலையில மண்ணள்ளிப் போட்டுக்கிட்டாங்கன்னுதான் நாங்க விசாரிச்சதுலயே தெரிஞ்சிக்கிட்டோமே அப்புறம் எதுக்கு அந்தக் கதை... நம்ம கதைக்கு வாங்க...” என்றார் சுகுமாரன்.

சிவராமன் லேசாக புன்னகைத்தபடி “எல்லாம் சொன்னாத்தான் எதுக்காக இந்தக் கொலையின்னு உங்களுக்குத் தெரியும். குறிப்பா நான் எப்படி.. அவன் எப்படின்னு தெரியும்... அதனால முழுசா என்னைச் சொல்ல விடுங்க... ப்ளீஸ.” என்றார்.

“சரி... சொல்லுங்க...”

“அவன் ஏத்துக்க மாட்டேன்னு சொன்னதுல அவளுக்கு இவன் மேல கோபம்... அதைத் தீத்துக்க வருணுக்கிட்ட அவனைப் பற்றி தப்பாச் சொன்னா...” வருண் சிரிக்கவும் பேச்சை நிறுத்தி அவனைப் பார்த்தார்.

“என்ன அங்கிள் சிரிக்கிறான்னு பார்க்கிறீங்களா..? அவங்க சொன்ன அதையேதானே நீங்களும் சொன்னீங்க...” என்றான் வருண்.

“ம்... சொன்னேன்... காரணம் உங்கப்பன் எனக்குச் செய்த நம்பிக்கை துரோகத்துக்கு உங்களை அவனுக்கிட்ட இருந்து பிரிச்சி அந்த வேதனையை அனுபவிக்க வைக்கணுமின்னு நினைச்சேன்... ஆனா உங்கிட்ட சொன்னதுக்கு அப்புறம் வேற மாதிரி முடிவு வந்திருச்சு.... என்ன செய்யிறது...”

“சரி அதை விடுங்க... அது இப்ப முக்கியமில்லை... கொலைக்கான காரணத்தைச் சொல்லுங்க...”

“ஒவ்வொன்னாச் சொல்லி வாறேன்... அப்பத்தானே உங்களுக்கு விவரம் புரியும்... வருணோட அம்மாவுக்கும் பிள்ளை மனசுல நஞ்சை விதைச்சு அவனை விட்டுப் பிரிச்சி தவிக்க விடணுங்கிறதுங்கிற என்னோட அதே எண்ணம்தான்... ஆனா அது நடக்கலை... அவளோட கணவன் இவனை மிரட்டி பணம் பார்க்க முயற்சித்தான்... ஆனா அதையும் முறியடித்து அவனைக் காத்தவன் நான்... அவனுக்கு இந்த வீட்டை வாங்கிக் கொடுத்தவன் நான்... அவனோட வேலை டென்சன் குறையட்டுமேன்னு இங்க மாசாமாசம் வந்து தங்கச் சொன்னவன் நான்... இப்படி அவனுக்காக எல்லாம் செஞ்ச நான் அவனுக்கிட்ட எதையும் மறைக்கலை... ஆனா அவன்...”

“என்ன சார்.... என்னமோ நடிகருக்கு இயக்குநர் கதை சொல்ற மாதிரி ரொம்ப பொறுமையா சொல்றீங்க... உங்ககிட்ட கொலைக்கான காரணத்தைத்தான் நாங்க கேக்குறோம்... சும்மா வளவளன்னு பேசுறீங்க... பட்டுன்னு சொன்னாத்தானே சார்... கொலை ஒரு சுவராஸ்யமா இருக்கும்... அதைவிட்டுட்டு... சரி... சரி... எதுக்காக குத்துனீங்க... எப்படி குத்துனீங்க... எப்படிச் செத்தார்ன்னு பட்டுன்னு போட்டு உடைங்க...” பொன்னம்பலம் கோபமாய் பேசினார்.

“ம்... அவன் இங்க வர்றது ரெஸ்ட் எடுக்க மட்டுமில்லை... என் மனைவியோட கூத்தடிக்கவும்தான் என்பதை நான் அறியலை.... ரெண்டு பேருக்கும் இடையில சாதாரண இருந்த நட்பு வேற மாதிரி உறவில போயி முடிஞ்சிருச்சு... அவனுக்கு பொண்டாட்டி இல்லை... இவ அவன்கிட்ட சிரிச்சிப் பேசினதுல மயங்கிட்டான்... அவனோட பணமும் பகட்டும் இவளை அவனோட ஆசைக்கு அடிமையா மாத்திருச்சு...”

“என்ன சார் கதை விடுறீங்க... நீங்க பெரிய டாக்டர்.... நல்ல சொத்துப் பத்து... ஊட்டியில அரைகிரவுண்டுல சும்மா அழகான பங்களா கட்டி வச்சிருக்கிங்க... ஒண்ணுக்கு மூணு கார் வச்சிருக்கீங்க... கூப்பிட்டா ஓடி வந்து வேலை பார்க்க வேலையாட்கள்... அப்புறம் எப்படி அவங்க.... இதை நம்பச் சொல்றீங்களா..?”

“உண்மை சார்... இதுதான் உண்மை... என் மனைவியைப் பற்றி நான் எதுக்கு இப்படிச் சொல்லணும்... எங்கிட்ட எல்லாம் இருக்கு சார்... எல்லா வசதியும் இருக்கு... ஆனா எங்களுக்கு குழந்தை இல்லை சார்... குறிப்பா அவளைச் சந்தோஷப்படுத்துற சக்தி எனக்கு இல்லை சார்... ஒரு ஆக்சிடெண்டுல எதை இழக்க்கூடாதோ அதை இழந்துட்டேன்... இது எங்க மேரேஜ் முடிஞ்சி அஞ்சாறு வருசத்துல நடந்த விபத்து.... அதுக்கப்புறம் நாங்க கணவன் மனைவிதான்... கணவன் மனைவிக்குள்ள இருக்க வேண்டிய அந்த சந்தோஷம் எங்களுக்குள் இல்லை... இவன் இங்க வர... பேச... அவளுக்கு நகைகள் பரிசாக் கொடுக்க... எனக்குத் தெரியாம அவ சந்தோஷத்தை தேடிக்கிட்டா... இவ்வளவுக்கும் அவளும் ஒரு டாக்டர்... அதுவும் அரசாங்க டாக்டர்... இவன் இங்க வரும்போதெல்லாம் பகல்ல ஹாஸ்பிடல் போகமல் இவன் கூட சுத்தியிருக்கா...  மாசாமாசம் அவன் இங்க வர்றபோது இவ லீவு போட்டுட்டு அவன் கூட இருந்திருக்கா... இதெல்லாம் எனக்குத் தெரியாம நடந்திருக்கு.... அவன் இவளுக்காகத்தான் இங்க அடிக்கடி வந்திருக்கான்... அது எனக்குத் தெரியக்கூடாதுன்னுதான் இரவுல என்னை இங்க வரவச்சி பாரின் சரக்கால குளிப்பாட்டியிருக்கான்.... நான் அவனை ரொம்ப நம்பினேன்... ஆனா அவன் எனக்குத் தெரியாம... எங்கிட்ட நல்லவனா இருந்துக்கிட்டே நம்பிக்கைத் துரோகம் பண்ணிட்டான்...” அதற்கு மேல் பேசாமல் சிவராமன் வாய்விட்டு அழுதார். 

வருண் அப்பாவா இப்படின்னு நினைத்து குழப்பத்தில் அமர்ந்திருக்க, கொலை செய்தது இவர்தான் என முடிவாகிவிட்டது என்ற நினைப்பில்  அவர் அடுத்து என்ன சொல்லப் போறார் என கேட்கும் ஆவலில் சுகுமாரனும் பொன்னம்பலமும் சிவராமனை நோக்கினர். 

(பதிவின் நீளம் கருதி கிளைமேக்ஸ் நாளை பதியப்படும்... ஹி...ஹி... திட்டாதீங்க... சஸ்பென்ஸை நீட்டிக்கணுமில்ல)

-'பரிவை' சே.குமார்.

சனி, 26 டிசம்பர், 2015

குறுந்தொடர்: பகுதி - 14. கொலையாளி யார்?

முன்கதை

தொழிலதிபர் தணிகாசலம் ஊட்டியில் வைத்து கொடூரமான முறையில் கொலை செய்யப்படுகிறார். அவரை யார் கொலை செய்தார் என்பதைக் கண்டுபிடிக்க தனது விசாரணையைத் தொடங்கும் இன்ஸ்பெக்டர் சுகுமாரன், வேலைக்காரி முதல் மதுரையில் அவரது வாரிசுகள் வரை விசாரித்து இவளா... இவனா... அவனா... என மாற்றி மாற்றி சந்தேகித்து கொலையாளி டாக்டர் சிவராமந்தான் என முடிவுக்கு வந்து கேசை முடிக்கும் விதமாக வருண் மற்றும் பொன்னம்பலத்துடன் சிவராமனை பார்க்க ஊட்டிக்கு விரைகிறார்.

இனி...


ட்டி.

தணிகாசலம் கொலை செய்யப்பட்ட வீட்டில் வருண், சுகுமாரன் மற்றும் பொன்னம்பலம் அமர்ந்திருந்தனர்.

“வருண்... டாக்டர் சிவராமனுக்கு போன் பண்ணி இங்க வரச்சொல்லுங்க...” என்று சுகுமாரன் சொன்னதும் அவருக்குப் போன் செய்தான் வருண்.

“என்னப்பா வருண்... வந்துட்டியா..?” எதிர்முனையில் சிவராமன்.

“வந்துட்டேன் அங்கிள்...”

“நான் இப்போ ஹாஸ்பிடல்ல இருக்கேன்... இங்க வாறீயா... வேண்டாம்... நீ வீட்டு வாசல்ல வெயிட் பண்ணு... நான் உடனே கிளம்பி வாறேன்... பிரஷ் பண்ணி குளிச்சிட்டு போலீஸ் ஸ்டேசனுக்குப் பொயிட்டு அப்புறம் நாம் ஹாஸ்பிடல் வரலாம்...”

“இல்ல அங்கிள்... நான் இப்போ நம்ம பண்ணை வீட்லதான் இருக்கேன்... இன்ஸ்பெக்டரும் இருக்கார்... இங்க வந்திருங்களேன்...”

“அங்கயா...?” என்று கொஞ்ச நேரம் யோசித்தவர் “சரி... வாறேன்...” என்றபடி போனைக் கட் பண்ணினார்.

டீ வாங்கிக் கொண்டு வந்து கொடுத்த நாகராஜ், “தம்பி வீட்ல எல்லாச் சாமானும் இருக்கு... அந்தப் பொண்ணு லதாவுக்கு போன் பண்ணி சமையலுக்கு ஏதாச்சும் வாங்கிக்கிட்டு வரச்சொல்லவா... வந்து சமைச்சிக் கொடுத்துட்டுப் போகும்...” என்றான்.

“வேண்டாண்ணே... வெளியில சாப்பிட்டுக்குவோம்...” என்றதும் “சரி தம்பி” என்றபடி வெளியேறினான்.

சிறிது நேரத்தில் சிவராமனின் கார் வந்து நிற்க, வருண் மரியாதை நிமித்தமாக வாசலுக்குச் சென்றான். அதிலிருந்து இறங்கிய சிவராமன் ரொம்பச் சோர்வாகத் தெரிந்தார்.

“வாங்க அங்கிள்... என்ன ரொம்ப டல்லா இருக்கீங்க...”

“என்னப்பா பண்ணச் சொல்றே... உங்க அத்தை விழுந்துல இருந்து எனக்கு சரியான தூக்கமில்லை... எங்களுக்கு ஒண்ணுன்னா பாக்க யார் இருக்கா சொல்லு... அவளுக்கு நான்... எனக்கு அவ... அதுதானே எங்களுக்கு விதிச்ச வாழ்க்கை...” என்றபடி உள்ளே நுழைந்தவர் “வாங்க சார்” என்றபடி சோபாவில் அமர்ந்திருந்த சுகுமாரனுக்கும் பொன்னம்பலத்துக்கும் கை கொடுத்துவிட்டு எதிரே அமர்ந்தார்.

“சொல்லுங்க சார்... ஏதாவது துப்பு கிடைச்சதா..?”

“துப்பா... ஆளையே நெருங்கிட்டோம் சார்...” என்றார் பொன்னம்பலம்.

“ஆளையே நெருங்கிட்டீங்களா...? அப்ப பிடிக்க வேண்டியதுதானே... ஆமா கொலைகாரன் யார்...? எதுக்காக கொலை செய்தான்...?” சிவராமன் பதட்டமில்லாமல் கேட்டதும் அவர்கள் மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

“என்ன சார் முழிக்கிறீங்க...? எவனா இருந்தாலும் பிடிச்சி உள்ள போட வேண்டியதுதானே...?” என்றதும் வருண் எழுத்து அறைக் கதவை தாழ்ப்பாள் போட்டு விட்டு “பிடிச்சி உள்ள போட்டுடலாம்... ஆனா அதுக்கு முன்னாடி எதுக்காக கொலை பண்ணினேன்னு கொலைகாரன் சொல்லணுமில்ல...” என்றான்.

“கொலைகாரன் சொல்லணுமின்னா... இங்க நாமதானே வருண் இருக்கோம்... இதுல யாரு.... கொலை...” கொஞ்சம் யோசனையோடு பேச்சை நிறுத்தியவர் “அப்ப நாந்தான் கொலைகாரானா...? அதுக்குத்தான் இங்க வரச்சொன்னீங்களா..? என்னப்பா சொல்றீங்க..?”

“நடிக்காதீங்க சார்... இங்க உங்களுக்கு யாரும் ஆஸ்கார் அவார்டு தர மாட்டாங்க...” என்றார் சுகுமாரன்.

“இன்ஸ்பெக்டர்... நா.. நான்...”

“இங்க பாருங்க... நீங்கதான்னு நாங்க முடிவு பண்ணியாச்சு.... வருணோட அம்மா, அவங்க அப்பா பத்தி தப்புத்தப்பா சொன்னதுல கூட ஒரு நியாயம் இருக்கு... ஆனா நீங்க எதுக்கு அவருக்கிட்ட தணிகாசலத்தைப் பற்றி தப்புத்தப்பாச் சொல்லணும்... அதுபோக தர்ஷிகாவுக்கு வாங்கின மாதிரி வைர மோதிரம் நண்பனோட மனைவியான உங்க  மனைவிக்கு தணிகாசலம் எதுக்கு வாங்கிக் கொடுக்கணும்... இன்னும் நிறைய கேள்விகள் இருக்கு.... சமுதாயத்துல நல்ல பேர் எடுத்திருக்கிற டாக்டர் நீங்க... உங்க தொழிலுக்குன்னு ஒரு மரியாதை இருக்கு... நீங்களே நடந்ததைச் சொல்லிட்டா கோர்ட்டு கேஸ்ன்னு அலைய வேண்டி இருக்காது... இல்லேன்னா...”

“இன்ஸ்பெக்டர் என்ன இது.... இப்படி இங்க வரவச்சி என்னைய குற்றவாளி ஆக்குறீங்க... ஏம்ப்பா வருண் நீயும் இவங்க கூட சேர்ந்து பேசுறே...?”

“அங்கிள்.... இவங்க சந்தேக வட்டத்துல முதல்ல தர்ஷிகா... ஏன்னா அப்பா கொலை செய்யப்பட்ட இந்த வீட்ல இருந்து வைர மோதிரம் எடுத்திருக்காங்க... அப்புறம் அம்மா சொன்னதையும் நீங்க சொன்னதையும் சொல்லப்போய் நான்... என்னைய கொலைகாரன்னு முடிவே பண்ணி கைது பண்ண நினைச்சாங்க... அதுக்கப்புறம்தான் நீங்க எதுக்கு அப்பா பத்தி தப்புத்தப்பாச் சொல்லணும்... அப்பா எதுக்கு ஆண்டிக்கு வைர மோதிரம் வாங்கிக் கொடுக்கணும்... அதை நீங்க வாங்கச் சொல்லி வாங்கினாரா... இல்ல ஆண்டிக்கு தனிப்பட்ட முறையில வாங்கிக் கொடுத்தாரான்னு சந்தேகம் வர இப்ப உங்க்கிட்ட வந்திருக்கோம்... உண்மையைச் சொல்றதும் மறைக்கிறதும் உங்ககிட்ட்தான் இருக்கு... ஆனா மறைக்க மாட்டீங்கன்னு நம்புறேன்... ஏன்னா அப்பா செத்துப் பொயிட்டாரு... இது சொத்துக்காக நடந்த கொலையோ முன்விரோதக் கொலையோ இல்லை... நம்பிக்கைத் துரோகம்... உங்களை நம்பித்தானே அவரு இங்க வந்தாரு... சொல்லுங்க... இதை நீங்கதான் செஞ்சீங்கன்னு சொல்லிட்டீங்கன்னா கேசை நானோ வாபஸ் வாங்கிட்டு போயிடுவேன்... இங்க அப்புறம் நான் வரப்போறதில்லை... இந்த வீட்டையும் வித்துட்டு ஊட்டிக்கு ஒரு கும்பிடு போட்டுட்டு போயிடுவேன்... உங்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்கணுமின்னு எல்லாம் எனக்கு எண்ணமில்லை அங்கிள்... உங்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுத்து அது தர்ஷ்க்கு தெரிஞ்சா அவ இன்னும் உடைஞ்சிருவா... எனக்கு அவதான் முக்கியம்... பட் எங்கப்பாவை எதுக்காக கொன்னீங்கன்னு எனக்குத் தெரியணும்... அதுவும் இப்பவே தெரியணும்...”

வருண் உணர்ச்சிப் பெருக்கோடு பேசி முடிக்கவும் அவனைப் பார்த்த சிவராமன் தனது எதுவும் பேசாமல் அமர்ந்திருந்தார்.

“இங்க பாருங்க சார்... இங்க நாம நாலு பேர்தான் இருக்கோம்... நடந்ததைச் சொல்லுங்க... இனி மறைச்சிப் பலனில்லை... இங்க வேண்டாம் ஸ்டேசனுக்குப் போவோம்ன்னு நினைச்சீங்கன்னா அங்க போயிடுவோம்... ஆனா அங்க விசாரணை முறை வேற மாதிரி இருக்கும்... வருண் உங்களை அப்படி எல்லாம் விசாரிக்க கூடாதுன்னு சொன்னதாலதான் இங்க உக்காந்து விசாரிக்கிறோம்....”

நன்றிப் பெருக்கோடு வருணைப் பார்த்த சிவராமன் வேகமாய் “வே... வேண்டாம்... சொல்லிடுறேன்... நான் சொல்லிடுறேன்...” என்றபோது அவரது கண்களில் இருந்து கண்ணீர் வேகமாக கன்னத்தில் இறங்கியது.

(நிறைவுப் பகுதி நாளை)

-‘பரிவை’ சே.குமார்.

வெள்ளி, 25 டிசம்பர், 2015

சினிமா : தங்கமகன்

டந்த சில வாரங்களாக தொடரும் அளவுக்கு அதிகமான அலுவலகப் பணி கொடுக்கும் சோர்வின் காரணமாக எழுதுவது குறைந்து விட்டது. மேலும் அறைக்குத் திரும்பி சமைத்து சாப்பிட்டு அமரும் போது முதுகுவலியின் சுமை அதிகமாவதால் படுத்துக் கொண்டே பலரின் எழுத்துக்களை வாசித்தாலும் கருத்து இடுவது என்பது இயலாமலே போய் விடுகிறது. நேற்று முதல் நாளை வரை விடுமுறை என்பதால் கொஞ்சம் வாசிக்கவும் கருத்திடவும் முடிகிறது. இருப்பினும் இனி தொடர்ந்து வாசிக்கவும் கருத்துப் பரிமாறவும் முடியும் என்று நினைக்கிறேன்.

தமிழக வெள்ளச் சேதத்தில் அரசின் மெத்தனமும் அந்த மெத்தனத்தால் மக்கள் மனதில் பதிந்துவிட்ட ஆணித்தரமான அரசை அகற்றும் எண்ணத்தைப் போக்கும் விதமான காய் நகர்த்துதலும் பார்க்கும் போது ஏற்படும் வேதனையானது மனசில் எழுத அமரும்போது பெரும்பாலும் அரசியல் பகிர்வுகளாகவே வருகிறது. நம்ம பாட்டுக்கு அம்மாவுக்கு எதிராக எழுதப்போய் நம்ம சைட்டை தூக்கிட்டா நம்ம வாழ்வாதாரம் போயிடுமில்லையா... அதனால சினிமா பதிவு எழுதாதே என்று என் அன்பு நண்பன் சொல்லிக்கொண்டே இருந்தாலும் எண்ண மாறுதலுக்காக இந்தப் பதிவு சினிமாப் பதிவுதான்... கொஞ்சம் நம்மளும் ரிலாக்ஸ் ஆகிக்குவோமே... என்ன நாஞ்சொல்றது..?


சரி வாங்க தங்கமகனைப் பார்ப்போம்... இது மாமானார் நடித்த தங்கமகன் இல்லை மாப்பிள்ளை நடித்த தங்கமகன்... சரி வளவளன்னு பேசாம படம் நல்லாயிருக்கு... நல்லாயில்லையின்னு நீயும் ஏதாவது சொல்லிட்டுப் போ... நாங்க அதைப் பார்த்து முடிச்சிட்டு பசங்க-2 பாத்துட்டோம்ன்னுதானே சொல்ல வாறீங்க... என்னங்க பண்றது கொஞ்சம் ரிலாக்ஸாக நமக்கு ஒரு பதிவு வேணுமில்ல... அதான்...  சரி வாங்க தங்கமகனைப் பாக்கலாம்.

தன் அப்பாவின் மீது விழுந்த பலி, அவரை தற்கொலை பண்ணிக் கொள்ள வைக்கிறது. அப்பாவின் தற்கொலைக்கு காரணம் என்ன..? அவர் மேல் விழுந்த பலிக்கு யார் காரணம்..? என்பதை தங்கமகன் அலசி ஆராய்ந்து சுபமாய் முடிப்பதே இந்தத் தங்க மகன்.

தனுஷ்... நடிக்கத் தெரிந்த நடிகன்... கல்லூரி மாணவனாய் மீசையில்லாமல் சதீஷூடன் சேர்ந்து அடிக்கும் லூட்டியாகட்டும், எமியை விரட்டி விரட்டி அவர் பின்னே அலைந்து காதலிப்பதிலாகட்டும் மனிதர் கலக்கியிருக்கிறார். துள்ளுவதோ இளமைக்கால தனுஷை மீசையில்லாமல் காட்ட முயற்சித்திருக்கிறார்கள். அதில் நடிப்பில் எப்பவும் போல் பட்டையைக் கிளப்பியிருந்தாலும்  அந்த முகத்தைப் பார்க்கும் போது கொஞ்சம் பரிதாபமாகவே தெரிகிறது. திருமணம் முடிந்து குடும்பத் தலைவனாய், அப்பாவின் மறைவுக்குப் பின் குடும்ப பாரத்தைச் சுமக்கும் போது மீசையுடன் வரும் தனுஷ்... கலக்கல்.

எமி... தனுஷைக் காதலிக்கிறார். இதழோடு இதழ் பதித்து முத்தம் கொடுக்கிறார். தண்ணி அடித்துவிட்டு தனுஷை அறைந்து ரகளை செய்கிறார். அந்தக் கதாபாத்திரத்துக்கு அழகாய் பொருந்திப் போகிறார். மேலும் தனுஷைப் பிரிந்து அவரின் அத்தை பையனுக்கே மனைவியாகப் போகிறோம் என்று தெரிந்ததும் நாம உறவுக்காரங்களாகப் போறோம்... எதையும் மனதில் வைத்துக்காதே என தனுஷிடம் பேசுகிறார். கணவன் செய்யும் செயல்களை எதிர்க்கிறார்... ஒரு கட்டத்தில் கணவனை எட்டி அறைந்தும் விடுகிறார்... அவரின் நடிப்புக்கு ஆண்ட்ரியாவின் இரவல் குரல் சும்மா சூப்பாரா பொருந்தியிருக்கு.


சமந்தா... இவரை பெரும்பாலான படங்களில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு உரித்துக் காட்டுவார்கள். இதில் சேலை கட்டி, மூக்குத்தி போட்டு  கணவனின் மனசைப் புரிந்து கொண்ட, நடுத்தர வர்க்கத்து மருமகளாக நடித்திருக்கிறார். அவருக்கான இடத்தை அழகாய் நிரப்பியிருக்கிறார். 

ராதிகா... தனுஷின் அம்மாவாக வாழ்ந்திருக்கிறார். மகனிடம் செல்லமாய் எகிறுவதாகட்டும், கணவனிடம் பேசுவதாகட்டும், கணவனை இழந்து தவிப்பதாகட்டும். தன் கணவனின் சாவுக்கு காரணமானவன்  யார் என்று தெரிந்ததும் அவனை விடாதே என்று மகனிடம் சொல்வதாகட்டும்... ராதிகாவுக்கா நடிக்கச் சொல்லித் தரணும்.

கே.எஸ்.ரவிக்குமார்... ஒரு பாசமுள்ள அப்பா, எதையும் மறந்து விட்டு புலம்பும் கதாபாத்திரம். அதனாலேயே சிக்கலில் மாட்டி உயிரை விடுகிறார். அவரின் முகம் அவருக்கு வயதாகிவிட்டதை பறை சாற்றுகிறது. அவருக்கே உரிய எகத்தாளமான பேச்செல்லாம் இல்லாமல் அப்பாவாகவே வாழ்ந்து மடிகிறார். இனி வரும் படங்களில் அப்பா கதாபாத்திரத்தில் இவரை அதிகம் பார்க்கலாம்.

சதீஷ்... இவர்தான் படத்தின் காமெடியன். இவரை நம்பி காமெடி டிராக் பண்ணுவது என்பது கடினம்தான் என்றாலும் இவருடன் தனுஷூம் இணையும் போது கலக்கல்தான்... இவர்களின் வசனங்களே படத்தின் ஆரம்பக் காட்சிகளை கலகலப்பாய்க் கொண்டு போகிறது. இடைவேளைக்குப் பின்னான படத்தில் இவர் அதிகம் தலைகாட்டவில்லை.


அப்பாவின் சாவுக்கு காரணமான வில்லனாக வந்து திருந்தும் அத்தை பையனாக நடித்திருப்பவர் பரவாயில்லை ரகமே. முக்கிய வில்லனாய் வரும் ஜெயப்பிரகாசத்திற்கு நடிக்க வாய்ப்பில்லை. அப்படியே எம்.எஸ்,பாஸ்கரும்... இவர்கள் எல்லாமே கொடுத்த வேலையைச் செய்திருக்கிறார்கள்.

தனுஷ் வீட்டிற்கு வரும் எமியை சமந்தாவும் ராதிகாவும் தங்கும்படி வற்புறுத்த அவர் படுப்பதற்காக தனுஷ் ரொம்ப சிரத்தையுடன் பெட்டை சரிசெய்வதும், அதன்பின் வெளியில் படுத்திருக்கும் தனுஷ் அருகே வந்து சமந்தா படுத்ததும் 'இங்க கொசுக்கடிக்கும் நீ எதுக்கு இங்க வந்தே' என்று கேட்க, 'உங்களோட கேர்ள் பிரண்ட் அங்க நிம்மதியாத்தான் தூங்குறா' என்று சமந்தா சொன்னதும் அதை மறந்து 'நீதான்டி என்னோட உயிர் ஐ லவ் யூடி' என்று சொல்வார் தனுஷ். உடனே 'ஐய்யய்யோ இப்பத்தான் லவ் யூ எல்லாம் வருது' என்று சமந்தா சீண்டவும் 'நீ அது கூட சொல்லலையே' என்று தனுஷூம் பதிலுக்கு சீண்டுவார். உடனே சமந்தா 'லவ் யூ... லவ் யூ...' என்பாரே பார்க்கலாம்... செம.

எமியை விரட்டும் தனுஷிடம் 'உன் பேர் என்ன..?' என்று எமி கேட்க, 'தமிழ்' என்றதும் 'அப்ப உங்க அப்பா பேரு என்ன இங்கிலீஸா?' என்று கிண்டலடிப்பார். இதெல்லாம் கேட்ட வசனம்தான் என்றாலும் படத்தில் பார்க்கும் போது உதட்டில் புன்னகை துளிர்க்கத்தான் செய்கிறது.

முதல் பாதி படம் ரகளையாய் போனாலும் இரண்டாம் பாதி செண்டிமென்ட் கலவை கொஞ்சம் அதிகமாகி சீரியல் கணக்காத்தான் இருக்கிறது. இருப்பினும் தனுஷின் உடம்புக்கு மீறிய மாஸ் காட்சிகள் இல்லாமல் பயணிப்பதால் சீரியஸ் குடும்பக் கதையாக பயணித்தாலும் பரவாயில்லாமல் நகர்கிறது. அனிருத்தின் இசையில் பாடல்கள் ஓகே ரகம். பின்னணி இசையில் வேதாளத்தில் பாத்திர பண்டங்களை உருட்டி ஆக்ரோஷித்து இருந்தது போல் இல்லாமல் இதில் கொஞ்சம் பரவாயில்லாமல் பண்ணியிருக்கிறார்.


காதல், குடும்பம், செண்டிமென்ட் என பயணிக்கும் கதையில் தனுஷின் நடிப்பில் தொய்வே இல்லை... மனிதர் அடித்து ஆடியிருக்கிறார். தமிழை அழிக்க முடியாது என்றெல்லாம் பஞ்ச் பேசுகிறார். மச்சானுடன் மோதும் காட்சிகளில் கலக்கியிருக்கிறார். ரசிகர்கள் விரும்பும் தனுஷின் ஆட்டம் இதில் குறைவு என்றாலும் அவர் இதுபோன்ற குடும்ப செண்டிமென்ட் படங்களிலும் அவ்வப்போது நடித்தால்தான் அவரின் மாஸ் நடிப்பை விட தனுஷிற்குள் இருக்கும் நடிகனின் நடிப்பை பார்த்து ரசிக்க முடியும். அதை இதில் அருமையாக செய்திருக்கிறார்.

இயக்குநர் வேல்ராஜ், வேலை இல்லாப் பட்டதாரி அளவுக்கு நிறைவாய் கொடுக்கவில்லை என்றாலும் நல்லாவே எடுத்திருக்கிறார். மனிதருக்கு காதலில் நிறைய அனுபவம் இருக்கும் போல வசனங்களில் களம் கட்டி ஆடுவதுபோல் எமி-தனுஷ் போர்ஷனில் சும்மா அடித்து ஆடியிருக்கிறார். அந்த முத்தக் காட்சியில் கமலை மிஞ்சிவிட்டார் தனுஷ்... காதல் அனுபவம் இல்லாத இயக்குநரால் இப்படி எல்லாம் எடுக்க முடியுமா என்ன.. பின்பாதிக் கதையின் இழுவையைக் குறைத்திருக்கலாம். சமந்தா வாயைத் திறக்காமல் பேசுவது ஏன்னு தெரியலை... நல்லா பிரியாப் பேச விட்டிருக்கலாம்... எதுக்கு கஷ்டப்பட்டு பல்லைக்கடிச்சிகிட்டு பேசணும்.

Thanga Magan Review

படத்தின் குறைகளை எல்லாம் பார்க்காது தனுஷ் படம் என்று பார்த்தால் தங்கமகன் ரொம்ப நல்லாவே இருக்கு. தனுஷை மாஸாகப் பார்த்தவர்களுக்கு இழுவையாகத் தெரியலாம்... எனக்கு பிடித்திருந்தது. தங்கமகன் தனுஷின் வெற்றிப் படங்களின் எண்ணிக்கையில் கூடுதலாய் ஒன்று என்றுதான் சொல்லவேண்டும்.

-'பரிவை' சே.குமார்.

வியாழன், 24 டிசம்பர், 2015

மனசு பேசுகிறது : மாற்றம்... முன்னேற்றம்... சகாயம்


மிழ்நாட்டில் இந்த சிம்புவின் பாட்டுப் பிரச்சினை விஸ்வரூபம் எடுக்கும் முன்னர் வெள்ளப் பிரச்சினை விஸ்வரூபமாய் வேர் விட்டு வளர்ந்து நின்றது. அதிலும் குறிப்பாக ஆளுங்கட்சியின் செயல்பாடுகளால் விரக்தியான மக்கள் ஆளும் அரசை வீட்டுக்கு அனுப்பியே தீருவோம் என்றும்... தமிழகத்தின் அடுத்த முதல்வராய் சகாயத்தை ஆக்குவோம் என்றும் தென்கோடியில் இருந்து வடகோடி வரை வரிந்துகட்டிக் கொண்டு முழக்கமிட்டார்கள். ஆனால் இப்போது அது என்னாச்சுன்னு நமக்குத் தெரியுந்தானே..? காற்றில் பறந்த பட்டமாய் காணாமல் போய்விட்டது. இதுதான் தமிழன்... நம்மளோட முழக்கம் எல்லாமே அந்த நேரத்துக்கானதுதான்... பற்ற வைத்த புஸ்வானமாய் சீறி... அடங்கிய புஸ்வானமாய் மாறி... வேறொரு செய்தியின் பின்னாலோ... அல்லது பிரபலத்தின் பின்னாலோ மாங்கு மாங்கென்று ஓட ஆரம்பித்து விடுவோம். அந்த ஓட்டத்தைக் கூட நிறைவாய் ஓடமாட்டோம் ஏனென்றால் நமக்கான அடுத்த செய்தியோ நிகழ்வோ எதிரே புதிதாய் எழுந்து நிற்க, அதன் பின்னே நம் ஓட்டத்தைத் திருப்பி பயணிக்க ஆரம்பித்துவிடுவோம்.

வெள்ளப் பிரச்சினையையும் மறந்தாச்சு... அம்மாவையும் மறந்தாச்சு... இதுதானே அம்மாவுக்குத் தேவை... இதற்காகத்தானே எதைப் பிரச்சினை ஆக்கலாம் என காய்களை நகர்த்துகிறார்கள். நாட்டில் வெள்ளத்திற்குப் பிறகு தீர்க்கப்பட வேண்டிய... அவசியம்  மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் ஆயிரம் கிடக்க, சிம்புவைப் பிடிக்க தனிப்படைகள் அமைப்பதும் அதன் பின்னே ரொம்பத் தீவிரமாய் இயங்குவதும் எதற்காக...? அரசு இந்த பாடல் விவகாரத்தை இவ்வளவு பெரிதாக ஆக்குவது எதற்காக..? யோசித்தால் கிடைக்கும் விடையென்ன... மக்கள் மனதில் ஆளும் அரசு மீதான அவநம்பிக்கை விதை நன்றாக துளிர்விட்டுவிட்டது. அது கிளைகள் விரித்து மரமாகும் முன்னர் முளையிலேயே கிள்ளி எறிந்தால்தான் சுயநலமில்லாத, நம்மையே உறவாய்க் கொண்ட யாருமில்லாத அம்மா இந்த முதல்வர் பதவியை தக்கவைத்து அதில் சுயநலமே இல்லாமல் அமர்ந்து பொதுநலத்தோடு ஆட்சி செய்யலாம் என்பதுதானே.

சிம்பு பாடிய பாடல் குறித்த விவாதங்களும் கட்டுரைகளும் ஏராளமாய் வந்து விட்டன. தவறான பாடல்... தான் வெளியிட வில்லை என்றாலும் அப்படி ஒரு பாடலைப் பாடி இணையத்தில் பதிந்து வைத்திருப்பதிலேயே சிம்புவின் மனம் என்ன என்பதை அறிய முடிகிறது. இன்று சிம்பு கெட்டவனேதான் என்று நாம் அடித்துப் பேசினாலும் இலங்கைத் தமிழர்களுக்காக கல்லூரி மாணவர்கள் போராடியபோது அவர்களோடு அமர்ந்து போராடியவன்தான் இந்த சிம்பு. பலப்பல கெட்ட விஷயங்களில் முன்னோடியாக இருந்தாலும் சில நல்ல விஷயங்களும் செய்தவன்தான்... இந்தப் பாடல் விவகாரத்தை எப்படி முடிக்க வேண்டுமோ அப்படி முடிக்காமல்  இதை இன்னும் பெரிதாக்குவதில் மேலே சொன்னது உள்பட இன்னும் நிறைய அரசியல் காரணங்கள் இருக்கு... அதில் ஒன்றுதான் சகாயம்... ஆம் அவரை முதல்வராக்குவோமென ஒலிக்கும் குரல்களால் எங்கே சகாயம் அவர்கள் நிர்பயா வழக்கில் விடுதலை செய்யப்பட்ட காமக் கொடூரனுக்கு பணம் கொடுத்து அதோடு தையல் மிஷினும் கொடுக்கும் முன்னர் இருந்த நல்ல கெஜ்ரிவாலாக ஆகிவிடுவாரோ...? காசுக்கு மயங்கி... சாரயத்தில் உழன்று... சுயமிழந்த தமிழன் எங்கே டெல்லிக்காரன் போல விழித்துக் கொண்டு விடுவானோ ..? என்றெல்லாம் சிந்தித்ததின் விளையே இந்த பாடல் விவகாரம் பட்டிதொட்டி எல்லாம் இவ்வளவு சீரியஸாக மாறக் காரணம் என்பதையும் நாம் எல்லாரும் அறிவோம்.

இதேபோல்தான் சில மாதங்கள் முன்பு மதுக்கடைகளை மூடச் சொல்லி பிரச்சினைகள் எழுந்து அதற்காக உயிரிழப்புகள் நிகழ்ந்த போது அரசின் மீதான மக்களின் கோபம் எழுச்சியடைந்திருந்த நேரம், அரசையும் அம்மாவையும் காப்பாற்ற கையில் எடுக்கப்பட்டதுதான் இளங்கோவன் பேசிய பேச்சு... அதைப் பெரிதாக்கி... அதைப் பற்றியே பேச வைத்து மதுக்கடைகளை மூடச் சொன்னவர்களின் வாயை மூட வைத்துவிட்டார்கள். இப்போது மதுக்கடைகளை அடைக்க வேண்டும் என்ற கோஷம் எல்லாம் போயே போச்சு... அது குறித்து பாடிய கோவனும் இந்த ஆண்டி வேண்டாம் என்று அந்த அய்யாவைக் கும்பிட்டு அரசியல் பண்ணுகிறார் என்பது வேறு விஷயம். இன்றைய நிலையில் வெள்ள நிவாரணத்தில் அரசின் செயல்பாடு, மக்களுக்கு நிதி கிடைக்குமா என்ற எண்ணங்களை எல்லாம் மழுங்கடிக்கச் செய்து இந்தப் பிரச்சினையை மக்கள் மனதில் இன்னும் ஆழமாய் பதிவேற்றம் செய்கிறார்கள். இப்போது நாமோ நமக்கான தீர்வுகள் என்ன என்பதை எல்லாம் மறந்து சிம்பு பின்னே பயணித்துக் கொண்டிருக்கிறோம். இதைவிடக் கொடுமை மழை வெள்ளத்தில் பால் நூறு ரூபாய் என்று கூப்பாடு போட்டதை மறந்து தனுஷின் தங்கமகனுக்கு பாலாபிஷேகம் பண்ணிக் கொண்டிருக்கிறோம்.  எதையும் நாம் சரிவரச் செய்யாமல் நாட்களை நகர்த்திக் கொண்டிருக்கிறோம். நாங்கள் இப்படித்தான் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்துக் கொண்டிருக்கிறோம்.

இது சிம்புக்கான பதிவு அல்ல... சிம்புக்கான தண்டனை கண்டிப்பாக கிடைக்க வேண்டும். ஆனால் இதற்காக வரிந்து கட்டி களம் இறங்கும் பெண்ணீயவாதிகளில் சிலர் நாகரீகம் என்றால் என்ன விலை என்ற விதத்தில்தான் கட்டுரைகளாய் பொங்குகிறார்கள். அவன் சொன்னதைவிட இவர்கள் கட்டுரையில் இன்னும் ஆழமாய்த்தான் சொல்லியிருக்கிறார்கள். கொற்றவையின் கட்டுரை யாராலும் படிக்கவே முடியாத அளவுக்கு மிகவும் அருவருக்கத்தக்க வகையில் எழுதப்பட்டிருக்கிறது. இவரைப் போன்ற பெண்ணீயவாதிகளை தனது கட்டுரையில் கிழிகிழி என்று கிழித்திருக்கிறார் மனதோடு மட்டும் கௌசல்யா அக்கா. இவரின் கட்டுரையைப் படித்தால் பெண்ணீயவாதிகளின் பிதற்றல்களையும் அதனால் அவர்கள் யாரைத் தரம் தாழ்த்துகிறார்கள் என்பதையும் அறிய முடியும்.

எந்த ஒரு பிரச்சினையிலும் நாம் மாற்றம் வேண்டும் முன்னேற்றம் வேண்டும் என்று பொங்குவோம்... ஆனால் அதில் நிலைத்து நிற்க மாட்டோம். இன்று இந்தப் பிரச்சினை... நாளை அந்தப் பிரச்சினை... நாளை மறுநாள் வேறு ஒரு பிரச்சினை என மாடு நுனிப்புல் மேய்வது போல மேய்ந்து கொண்டே பயணிப்போம். எதிலும் தீர்க்கமான முடிவு எடுக்கும் மனநிலை நம்மிடம் இல்லை என்பதைவிட ஆளும் அரசு நம்மை முடிவெடுக்க விடாதபடி காய்களை நகர்த்திக் கொண்டே இருக்கிறது என்பதே உண்மை. வெள்ளத்தில் விழித்தோம் என்று நினைத்தால் இன்னும் கண்களைத் திறக்காமல்தான் நாம் கத்திக் கொண்டிருக்கிறோம்.

சகாயம் அவர்கள் வரவேண்டும் என்று எல்லாப் பக்கமும் பேசுகிறோம். அவரை விட நல்லவர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள் அவர்களை எல்லாம் நமக்குத் தெரிவதில்லை. சகாயம் அவர்களுடன் பணிபுரிந்தவர்களிடம் கேட்டால் தெரியும் என்று ஜாக்கி சேகர் அண்ணன் எழுதியிருந்தார். உண்மைதான்... எல்லா அலுவலகங்களிலும் லஞ்சமே வாங்காத சகாயங்கள் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். நமக்குத் தெரிந்த இந்த சகாயம் லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்தச் சொன்னவர்,.. கிரானைட் ஊழலை கிண்டிக் கிழங்கெடுப்பவர்... சுடுகாட்டில் படுத்து உண்மையை கண்டறிந்தவர்... இவரைப் போன்ற இறையன்பு, சைலேந்திர பாபு போன்ற பலரும் ஒன்றாய் இணைந்து தமிழகத்தை வழி நடத்த வேண்டும் என்பதே அனைவரின் ஆசை. அதற்காக நாம் சகாயம்... சகாயம்... என்று அவரை முன்னிறுத்த, ஆட்சி அதிகாரத்தை காத்துக் கொள்ள எல்லாம் செய்யும் அரசியல் அநியாயவாதிகள் அவரை ஏதாவது செய்துவிட்டால்..? யோசிக்க வேண்டிய விஷயம் இது.

இது அரசியல் தீவிரவாதிகள் நிறைந்த இடம்... கடலூருக்குப் போன வெள்ள நிவாரணப் பொருட்களை பறித்த கவுன்சிலர்களை எல்லாம் நாம் முகநூல் வீடியோக்களில் பார்க்கவில்லையா...? அதைப் பார்த்த பக்கத்து மாநிலத்துக்காரன் நம்மை கேலி செய்து சிரிக்கவில்லையா..? அப்படிப்பட்ட அல்லக்கைகளின் முன்னே சகாயம் அவர்கள் எப்படி நான் வழி நடத்த வருகிறேன் என்று சொல்ல முடியும்... அப்படியே அவர் முன்னே வந்தாலும் அவரை வாழவிட்டு விடுவார்களா இவர்கள். எனவே அவர் அவராகவே இருக்கட்டும். மாற்றம் முன்னேற்றம் எல்லாம் நம்மால் கொண்டு வர முடியும். இருபெரும் திராவிடக் கட்சிகளை விடுத்து சாதிக் கட்சிகளை தவிர்த்து நம்மால் நல்லதொரு அரசியல் தலைவர்களை அடையாளம் காட்ட முடியும். அதைச் செய்து காட்டுவோம். பாட்டின் பின்னே நின்று தங்களைக் காத்துக் கொள்ள பகீரத முயற்சிகள் எடுக்கும் அரசுக்குப் பாடை கட்டுவோம். நல்ல விஷயங்களில் நம் எண்ணங்களை திசை திருப்புவோம்... 'பீப்'போடு பயணிக்காமல் புத்துணர்வோடு பயணிப்போம். நாளைய தமிழகம் கண்டிப்பாக மாற்றமும் காணும் முன்னேற்றமும் காணும்.

ஆ... ஊன்னா ஊரை விட்டுப் போறோம் சகிப்புத் தன்மை இல்லை என்று புலம்பும் நடிகர்களை தலைவர்களாக்கிப் பார்க்க ஆசைப்படும் நம் எண்ணத்தை முதலில் மாற்றுவோம்... தலைவா நீ வந்தால்தான் தரங்கெட்ட தமிழத்தை தரமாய் மாற்றுவாய் என நடிக்க வந்த பிற மாநில நடிகர்களை பார்த்து கூவிக்கூவி அழைப்பதை நிறுத்துவோம். முதலில் நடிகனின் கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்யும் நம்மின் சிறந்த பண்பாட்டை(?) களைந்து எறிவோம். வாழ வந்தவர்கள் நம்மை ஆண்டது போதும்... வந்தாரை வாழ மட்டும் வைப்போம்.... நம் வாழ்வை அடமானம் வைக்க வேண்டாம்... நம்மை நாமே ஆள்வோம்... தமிழனாய் வாழ்வோம்.
-'பரிவை' சே.குமார்.