மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 9 ஏப்ரல், 2011

சுவடுகள் (நிறைவுப் பகுதி)

எல்லாரும் நல்லாயிருக்கீங்களா... கொஞ்சம் உடல் நலமின்னையும் அதிக வேலைப்பளுவும் வலைப்பூவினை வாசம் செய்ய விடாமல் தடுக்கின்றன... விரைவில் வருகிறேன்... அதுவரை மறக்காமல் இருக்க இந்தப் பதிவு... எப்பவும் போல் எல்லாரும் வாங்க... படிங்க... நான் உங்கள் வலைப்பூக்களுக்கு சில நாளில் வருகிறேன்...

சுவடுகள் முதல் பகுதி படிக்க


அதே நேரம்...

வேகமாக வந்து கொண்டிருந்தவன், கைக்குழந்தையுடன் பேருந்து நிறுத்தத்தில் நின்ற பெண்ணைப் பார்த்ததும் வண்டியின் வேகத்தைக் குறைத்து அவளருகில் வண்டியை நிறுத்தி "கவிதா..?" என்றான்.

"ஆமா நீங்க..." என்று புருவத்தை சுருக்கியவள், "யேய்... நவீன் எப்படிடா இருக்கே" என்றாள்.

"நல்லாயிருக்கேன். கல்யாணம் ஆயிடுச்சா..."

"கையில புள்ளையோட நிக்கிறேன்... கல்யாணம் ஆயிடுச்சான்னு கேக்கிறே..."

"எங்களை எல்லாம் மறந்துட்டேயில்ல... கல்யாணத்துக்குக்கூட கூப்பிடலை... சரி... குட்டி பேரு என்ன..."

"லாவண்யா"

"லாவ்... நல்ல பேரு... சந்தோஷமாயிருக்கேல்ல..."

"சந்தோஷமா இருக்கேன்டா... அவரு இங்க கெமிக்கல் பிசினஸ் பண்றாரு... நல்ல வருமானம்... அம்பத்தூர்ல வீடு. அவரு வந்து பிக்கப் பண்ணிக்கிறேன்னாரு. அதான்டா இங்க நிக்கிறேன்."

"இப்ப வருவாரா லேட்டாகுமா?"

"இல்ல வந்துடுவாரு?... எதோ அவசரமா போற போல"

"ஒண்ணும் அவசரமில்லை... சும்மாதான்... ஒண்ணு கேட்டா தப்பா நினைக்க மாட்டியே?"

"என்ன..?"

"காலேசு முடிஞ்சதுக்கு அப்புறம் சந்துருவ பாத்தியா..?"

"இல்லடா... பாக்கலை..." முகம் மாறியது.

"சாரி... கேட்டதுக்கு மன்னிச்சுக்க..."

"இதுல என்ன மன்னிக்கிறதுக்கு இருக்கு... நான் காலேசுக்கு வந்த புதுசுல எனக்கு நீ லவ் லெட்டர் குடுத்தே ஞாபகம் இருக்கா?"

"ஆமா... அதுதான் ரிஜெக்ட் ஆயிடுச்சே... "

"உன்னைய ஒதுக்கி அவனை காதலிச்சேன்... பட், அவன் அந்தப் பிரச்சினையில நடந்துக்கிட்ட விதம் பிடிக்கலை. அத்தோட ரெண்டு பேரும் பிரிஞ்சதுதான் அப்புறம் பாக்கவேயில்லை"

"இருந்தாலும் அவன் மேல தப்பில்லையில்ல..."

"இல்லதான்... ஆனா மனசுக்குள்ள சில கீரல் விழுந்தாச்சு... அப்புறம் வாழ்க்கை முழுவதும் அந்தக் கீரல் இருந்துக்கிட்டே இருக்கும் இல்லையா? இப்ப என்ன மறந்து அவனும் சந்தோஷமா இருப்பான்ல."

"அவன் உன்னைய மறந்திருப்பான்னு எப்படி சொல்றே... அப்ப நீ அவனை மறந்துட்டியா?"

"..."

"சொல்லு... பதிலக் காணோம்..."

அவள் குனிந்த தலை நிமிர்ந்தபோது கண்களில் கண்ணீர். "சாரிடி.. நீ சொன்னதால கேட்டேன். சரி விடு... அப்பா அம்மால்லாம் நல்லாயிருக்காங்களா?"

"நீ கேட்டது தப்பில்லடா... எதுக்கு பேச்சை மாத்துறே.... பேசலாம்... எனக்கு அவன் ஞாபகம் வராத நாளே இல்லடா... அன்பான கணவர், அழகான குழந்தையின்னு ஆன பின்னாலயும் எம் மனசுக்குள்ள அவன் இருக்கான்டா... யாராவது சந்துருன்னு கூப்பிட்டா என்னையறியாம திரும்பி பாக்கச் சொல்லுதுடா... ஒவ்வொரு வருசமும் ஜனவரி பதினஞ்சு அவன் பேர்ல அர்ச்சனை பண்றதை இன்னும் நிப்பாட்ட முடியலைடா... அப்புறம் நான் எப்படிடா அவனை மறக்கிறது..." பொது இடம் என்பதால் வந்த அழுகையை கஷ்டப்பட்டு கட்டுப்படுத்திக் கொண்டாள்.

"சாரிடி... உன்னோட உள் மனசு சோகத்தை நான் அதிகமாக்கிட்டேன்..."

"இல்லடா... இதெல்லாம் யார்கிட்டயாவது சொல்லி அழணுமின்னு ரொம்ப நாளா எனக்குள்ள இருந்துச்சு. இதே ஒரு தோழியா இருந்தா தோள்ல சாஞ்சு அழுது என்னைக் கொஞ்சம் ஆசுவாசப்படுத்தியிருப்பேன். நீ தோழனாயிட்டே உங்கிட்ட என் பாரத்தை எறக்கி வைக்க முடியும். இப்ப நான் அழுதா இந்த சமூகத்தோட பார்வையே வேற மாதிரி இருக்கும். அதனால வந்த அழுகைக்குகூட அணைதான் போட முடியுது."

"சரி... அவனை பாக்கணுமின்னு ஆசையிருக்கா?"

"இல்லடா... அவனை சாகுற வரைக்கும் பாக்கக்கூடாதுன்னு நினைக்கிறேன். அவங்கிட்ட என் நெனப்பு இருந்தாலும் குடும்பம் குழந்தையின்னு ஆயிட்டா கொஞ்சம் மாறுவான். அப்புறம் கால ஓட்டத்துல ரெண்டு பேருமே நினைவுகளை பொக்கிஷமாக்கி வாழ்ந்து பழகிடுவோம். நான் தினமும் தெய்வத்துக்கிட்ட வேண்டுறது என்ன தெரியுமா... சந்துருவ மட்டும் என் கண்ணில் காட்டிடாதே... நான் சாகுற வரைக்கும் அவனைப் பாக்கவே கூடாதுன்னுதான்... நானும் நம்ம நண்பர்கள் பலரை இந்த சென்னையில பாத்துட்டேன். அவனும் இங்கதான் எங்காவது இருப்பான்னு மனசுக்குள்ள ஓடுது. என் பிரார்த்தனையோ என்னவோ இன்னைக்கு வரைக்கும் பாக்கலை. இனியும் பாக்க மாட்டேன்னு நினைக்கிறேன்."

"சரிடி... எல்லாத்தையும் மறந்து சந்தோஷமா இரு. உன் மொபைல் நம்பர் சொல்லு. நான் கால் பண்றேன். அப்புறம் ஒரு நாள் உன் ஹஸ்பண்டோட எங்க வீட்டுக்கு வா... பாத்தோம் பேசினோமுன்னு இல்லாம நம்ம நட்பு இனி தொடரட்டும்... என்ன"

"கண்டிப்பா வாரேண்டா... அப்புறம் ஒருவேளை நீ சந்துருவ சந்திக்கிற வாய்ப்பு வந்தாலும் என்னைய பத்தி சொல்லிடாதேடா... ப்ளீஸ்... அவனுக்கு நான் இங்க இருக்கது தெரிய வேண்டான்டா..."

"சத்தியமா சொல்ல மாட்டேன்... போதுமா... "

"ரொம்ப நன்றிடா... எப்ப கல்யாணம் பண்ணப்போறே?"

"கூடிய சீக்கிரம்... இப்ப என் ஆளைத்தான் பாக்கப் போறேன்..."

"நினைச்சேன் உன்னோட டிரஸிங் பாத்துதான் அவசரமான்னு கேட்டேன்... சென்னையில சேட்டு பொண்ணு எதுவும் மாட்டிருச்சா?"

"சீ... இல்லடி... நம்ம கூட படிச்ச அகிலாதான்... இப்ப இங்கதான் இருக்கா..."

"யாரு நம்ம பட்டா... ரெண்டு பேரும் வெளியில சொல்லாமலே இருந்தீங்களா... ஆனா பசங்க உன்னை கேலி பண்றதை பாத்திருக்கேன்... ஓ.கே. எஞ்சாய்... சீக்கிரம் கல்யாண சாப்பாடு போடுங்க..."

"சரி... கிளம்புறேன்டி... இன்னொரு நாள் பேசலாம்."

******************

அந்த பார்க் முன்பாக வண்டியை நிறுத்தினான் நவீன்,அவனுக்கு அருகில் வண்டியை நிறுத்திக் கொண்டிருந்தாள் அகிலா.

"நீங்க சீக்கிரம் வாரவுங்க... நான் இடையில முக்கியமான பிரண்டப் பாத்தேன்... அதான் லேட், இல்லேன்னா நாந்தான் எப்பவும் போல பஸ்ட்."

"நானும் தான் பிரண்டைப் பாத்தேன்... இல்லேன்னா எப்பவே வந்திருப்பேன்... சரி வா... அப்படி யாருடி முக்கியமான பிரண்ட்"

"சொன்னா நம்பவே மாட்டே... நம்ம சந்துருவப் பாத்தேன். எங்க ஏரியாவுலதான்டா இருக்கான். இன்னைக்குத்தான் பாக்குறேன். நல்ல வேலையில இருக்கானாம். இன்னும் கல்யாணம் பண்ணிக்கலை... அவங்கிட்ட கவிதா நினைப்பு இருக்கு. ஆனா இல்லாத மாதிரி பேசுறான்..."

"நானும் தான் கவிதாவை..." டக்கென்று நிறுத்தினான்.

"கவிதாவை..."

"இது அந்தக் கவிதா இல்லை... காலேசுல படிக்கிறப்போ கவிதான்னு கையெழுத்துப் பிரதி நடத்துனானே சுபாகர் அவனைப் பாத்தேன்னு சொல்ல வந்தேன். சரி வா உள்ள போலாம்" என்றபடி பேச்சை மாற்றினான்.

-'பரிவை' சே.குமார்.