மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 30 ஜனவரி, 2010

நிகழ்காலங்கள் - -முனைவர். மு.பழனி இராகுலதாசன்

எனது (கல்வித்)தந்தை பேராசிரியர் முனைவர் மு.பழனி அவர்கள் சிறந்த சிந்தனையாளர். இவரது பெயருடன் புத்தரின் மகன் பெயரை இணைத்து பழனி இராகுலதாசன் என்ற பெயரில் எழுதி வருகிறார். தேவகோட்டை ஸ்ரீசேவுகன் அண்ணாமலை கல்லூரியில் தமிழ்த்துறை பேராசிரியராகவும் துறைத் தலைவராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது எளிமையும் மற்றவர்களுக்கு உதவும் குணமும் மாணவர்களிடம் இவர் மீது மரியாதையை உருவாக்கியது.

இவர் மிகச்சிறந்த எழுத்தாளர், இவரது நிகழ்காலங்கள் என்னும் சிறுகதை தொகுப்பு 1989 ஆம் ஆண்டு தமிழ்நாடு கலையிலக்கியப் பெருமன்றத்தின் "ஜீவா விருது" பெற்றது. சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்மாள கல்லூரித் ((தன்னாட்சி) தமிழ்த்துறையில் இந்த சிறுகதைத் தொகுப்பு பாடநூலாக்கப்பட்டுள்ளது.

எனது பேராசான் தான் பிறந்த நெடுங்குளம் கிராமத்தில் இருக்கும் வாய்ப்பை தேவகோட்டை சேவுகன் அண்ணாமலைக் கல்லூரி பறித்தாலும் (ஏறத்தாழ முப்பது வருடம் பேராசிரியர் பணி) தனது கிராமத்தின் மீதும் அங்குள்ள மக்கள் மீதும் மிகுந்த மரியாதை கொண்டவர்.

கவிஞர் மீராவின் 'அன்னம் விடு தூது' பத்திரிக்கையில் 'கேள்வியும் நானே பதிலும் நானே' என்னும் பகுதியில் ஒருமுறை பதில் அளிக்கும் போது 'எனது நெடுங்குளம் கிராமத்து மண்ணும் மக்களுமே எனக்கு எழுதக் கற்றுக் கொடுத்தவர்கள். அவர்களது வயல்வெளி வாழ்க்கையை இலக்கியப் படுத்தும் சிறிய முயற்சியே எனது படைப்புகள்' என்று கூறியிருந்தார்.

இவரது கதைகளை அதிகம் பிரசவித்த பெருமை 'தாமரை' மற்றும் 'செம்மலர்' இதழ்களையே சாரும். தனது எழுத்தால் காசு பார்க்க விரும்பாத இலக்கியவாதிகளுள் இவரும் ஒருவர். குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் மதிக்கும், நேசிக்கும் மனிதர் எங்கள் பேராசான் . சிவகங்கை மாவட்டத்தில் நடக்கும் கலை இலக்கியப் பெருமன்ற விழாக்களில் கலந்து கொள்ளும் அடிகளார் அய்யா குறித்து பேசாமல் இருந்ததில்லை.

அய்யாவின் அரவணைப்பில், அவரது நிழலில் ஒதுங்கும் வாய்ப்பு கிடைத்ததால் நாங்களும் ஏதோ எழுதுகிறோம். எங்களை எழுத்தாளராக்கிப் பார்த்த சந்தோஷம் அவருக்கு மட்டுமே உண்டு. கல்லூரியில் படித்த போது நான் எழுதிய கவிதைக்கு 'கட் அவுட் நிழலுக்கு கீழே' என்று தலைப்புக் கொடுத்து தாமரைக்கு அனுப்பி வைத்து பிரசுரமானபோது முதல் முறை அச்சில் பார்த்த என்னை விட அதிகம் சந்தோஷப்பட்டவர் என் அய்யாதான்.

எனது ஒவ்வொரு வளர்ச்சியிலும் என் பொற்றோரின் பங்கைவிட அதிகமானது அய்யாவின் பங்கு என்றால் மிகையாகாது. இன்றும் நான் அவர் அருகில் இல்லாவிட்டாலும் சில நாட்களுக்கு முன்னர் 'தினத்தந்தி' ஞாயிறு மலரில் நான் எழுதிய கதையைப் படித்து (நான் அவரிடம் சொல்லவே இல்லை) எனது மனைவியிடம் கதை படித்தேன் நல்லாயிருந்த்ததுன்னு சொல்லுங்க என்றவர், அவரது நிகழ்காலங்கள் புத்தகத்தில் 'தினத்தந்தி கதை படித்தேன் நன்று' என்று எழுதி கையொப்பம் இட்டு கொடுத்திருந்தார். அந்த புத்தகம் உறவினர் ஒருவர் மூலமாக அபுதாபி வந்துவிட்டது.

அதில் இருந்து ஒரு கதை உங்கள் பார்வைக்கு.... (ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்தானே)

யில் இறகுகளையும் பிலிம் துண்டுகளையும் தீப்பெட்டிப் படங்களையும் சிலேட்டுக் குச்சிகளுக்கு விற்பனை செய்து கொண்டும் , வாங்கிக் கொண்டுமாய்த் தீவிரமான வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த வகுப்புப் பையன்களை வாத்தியாரின் கடுமையான அதட்டல்குரல் நிமிர்ந்து பார்க்கச் செய்தது.

"ரெண்டு ரெண்டு எருவராட்டி எல்லோரும் கொண்டாந்தீங்களா?"

நாற்காலியில் சாய்ந்து, குத்துக்காலிட்டுக் கொண்டு, குடும்பப்பாசம் நிறைந்த ஒரு 'வாராந்தரி'யின் அட்டையைப் பார்த்தபடியே சத்தம் போட்ட வாத்தியாரைப் பையங்கள் எல்லோரும் ஏககாலத்தில் தலைதூக்கிப் பார்த்தார்கள்.பாடம் சம்பந்தப்பட்டதோ, அல்லது ஊர்-உலக விவகாரம் சம்பந்தப்பட்டதோ, அவர் கேள்வி கேட்டு உறுமுகிற காலங்களில் 'கூட்டுக்குரல்' கொடுத்துத்தான் அவர்களுக்குப் பழக்கம்.

இப்போதும் அப்படித்தான் பலமான குரலில் மொத்தமாய் "கொண்டந்திருக்கோம் சார்" என்று கூட்டிமுழங்கிவிட்டு அடங்கினார்கள். குரல் கீழ்நிலைக்கு வந்து அடங்குகிற கடைசி நேரத்தில் , அவரவர் எருவாட்டிகளைப் பத்திரப்படுத்தியிருக்கும் அவரவர் இடங்களைக் கடைக்கண்ணால் பார்த்து வைக்கப்பட்ட இடங்களில் வைக்கப்பட்ட மாதிரியாகவே அவையெல்லாம் இருப்பதை உணர்ந்து திருப்தியும் கொண்டார்கள்.

ஏககாலத்தில் எல்லோரும் கூக்குரலிட்டாலும் சத்தம் போட்டு ஒப்புக் கொண்டால் மட்டும் ஆயிற்றாக்கும்.அவருக்கு ஒவ்வொருவராய் விசாரித்து உறுதி செய்து கொண்டால் அன்றித்திருப்தி ஏற்படாது. சன்னமாய், ஒல்லியாய் ஆனால் உறுதியாய், நீளமாய் இருக்கிற மூங்கில் பிரம்புக் குச்சியை பீமசேனனின் கம்பீரத்தைல் தாங்கி ஒவ்வொரு பையனுக்கும் முகத்துக்கு நேராய், ஏதோ பொட்டு வைக்க நீளும் ஒரு விரலைப் போல் நீட்டி, "நீ கொண்டாந்தியா?" ...ம்...ம்... அடுத்து நீ... ம்... ம்..." என்று தானாகவே முணங்கிக் கொள்வார் விசாரணையும் பழுது ஆகாமல் பத்து நாளுக்கொரு தரமாவது ஏதாவது ஒரு 'கழுதை' சும்மாவந்து நின்று அகப்பட்டுக் கொள்ளும்.

இன்றைக்கும் அப்படித்தான்.

பிரம்பின் முனை ஒவ்வொருவரின் முகம் நோக்கி நகர, நகர ஒவ்வொரு விநாடியும் ரொம்பவும் உஷ்ணம் கலந்த அமைதியில் நகர்ந்து... கடைசியில் அழகிரிக்கு நேராய் வந்து நின்றது...

"நீ கொண்டாரலையா?"

'இல்லை' என்பதன் அடையாளமாய் அவனுடைய தலைமட்டும் பக்கவாட்டில் இப்படியும் அப்படியும் லேசாக அசைந்தது. அடுத்த கணங்களில் என்ன நிகழப் போகிறது என்பது ஒவ்வொரு 'கழுதைக்கும்' தெரிந்திருந்ததால், எல்லோரும் நிசப்தமாய் இருந்தார்கள். அதை நெஞ்சுக்குள் நினைத்துப் பார்க்கையில் தலையசைக்கவும் நிதானமிழந்து புடிச்சு வச்ச சிலை மாதிரி நின்று விழித்தான்.

"திருட்டு ராஸ்கோல்... யாராவது இப்படி நிப்பேன்னு எனக்குத் தெரியுமே... கழுத்தறுக்கத்தானே நீயெல்லாம் இங்கவாரே... நீ படிச்சது போதும்..ஓடிப்போயி ஒழுங்கா ரெண்டு எருவராட்டி வாங்கியா... அப்பத்தான் சோறு... இல்லாட்டி இல்லே..."

நாற்காலியில் இரண்டு கைகளிலும் தன் கைகளை ஊன்றி எழுந்து நின்று, அவர் உறுமி இளைத்து ஓய்கையில் அவன் வெளியேறி இருந்தான்.

--------------------------------அவிழ்கிற மாதிரியும், அவிழாதது மாதிரியுமாய்ப் பாவலாக்காட்டிக் கொண்டிருக்கிற கால் சட்டையை இறுக்கிப் பிடித்துக் கொண்டு ஓடினான் அழகிரி. தினமும் பள்ளிக்கூடம் புறப்படுகையில் மூளிச்சிலேட்டும், முன்பின் அட்டை கிழிந்த, இலவசமாய்க் கிடைத்த தமிழ்ப்புத்தகமும், புழுக்கைக் குச்சிகளும் மறக்காமல் எடுத்துக் கொள்வதோடு இரண்டு எருவராட்டிகளும் எடுத்துக் கொண்டுதான் புறப்படுவான், இன்றைக்கென்று புறப்படுகையில் எப்படியோ மறந்துபோய் வந்து, வாத்தியாரின் ருத்ரதாண்டவத்தையும் தரிசித்து விரட்டப்பட்டதை நினைக்கையில் அழுகையாய்ப் பொங்கியது அவனுக்கு.

'நந்தனின் புலைப்பாடியைப் போல, ஊருக்குத் தீட்டும் பட்டுவிடக்கூடாது' என்று தள்ளி, வயல்வெளிக்குள் ஒரு தீவு போல, - ஒரு திட்டுப்போல காட்சி தருகின்ற குடிசைகளுக்கு அவன் போக வேண்டும். இந்நேரம் போனால் குடிசையில் ஆத்தா இருக்கிறதோ எங்கேனும் வேலை வெட்டிக்குப் போயிருக்கிறதோ தெரியவில்லை.

குடிசைகளுக்கு அருகாமையில் நெருங்குகிறபோதே அழகிரியின் கண்கள் தன் குடிசைவாசலில் பதிந்தன. வாசலில் முள் படல் கட்டியிருந்தது. கிட்டத்திலே வந்து படலுக்குள் ஊடுருவி 'ஆத்தா இருக்கா' என்று பார்த்து 'இல்லை' என்று தெரிந்ததும் , சுற்றிலும் குடிசைச் சனங்கள் வேறு யாராவது இருக்கிறார்களா என்று பார்த்தான். பெரும்பகுதி சனங்கள் வேலைக்குப் போயிருந்தார்கள். வேப்பமரத்தடியில் ஏறுமுக வெயிலின் கதகதப்பை அனுபவித்தபடி சப்பட்டை போட்டு, மடியை விரித்துக் கொண்டு பேன்சீப்பில் 'வரட்டு' 'வரட்டு'ன்னு போன் இழுத்துக் கொண்டிருந்தாள் ஆவாரங் கிழவி.

"ஆயா" என்று குரல் கொடுத்தான் அழகிரி.

டேபிள் விளக்கின் 'ஷேடோ'வில் சுற்றிலும் தொங்குகிற மாதிரி, தலையைச் சுற்றி ஒருசாண் நீளத்தில் பரந்து, வடிந்து கிடக்கும் செம்பட்டை முடியை விலக்கிக் கொண்டு கிழவி பார்த்தாள்.

"யாரு... அழகிரியா, என்னடா... பள்ளிக்கூடம் போகலியா?"

"போனேன்"

"வந்துட்ட?"

"இன்னிக்கு எருவாட்டி கொண்டு போகல்லே; எடுக்க வந்தேன்"

"எருவாட்டி இல்லாட்ட என்னா?"

"சோறு போட மாட்டாக"

"எருவாட்டி கொடுத்தா சோறு போடுவாங்களா?"

"ஆமாம்"

"ரெண்டு ரெண்டு எருவாட்டி தினம் நான் கொண்டாந்து போட்டா... எனக்கும் சோறு போடுவாங்களா?"

அழகிரி மெதுவாகச் சிரித்துக் கொண்டான்.

"ஏ... பயபுள்ள என்னா சிரிக்கிறே?"

"ஒனக்கெல்லாம் போட மாட்டாக, படிக்கிறவுங்களுக்குத் தான் போடுவாக"

"ஆமா... ஆத்தாவைக் காணோமே, எங்க?" - என்று பிரச்சினைக்கு வந்தான் அழகிரி. அதற்குமேல் நீட்டி முழங்கிப் பேசிக் கொண்டிருக்க இரண்டு பேருக்குமே சுவாரஸ்யம் இல்லாதது மாதிரித் தோன்றியது. ஆவாரங்கிழவிக்குப் பேன் பிடுங்கி எடுத்தது."நாசமத்துப்போன பேனுச்சனியன் வேற... அய்யாவூட்டுக்குச் சாணி சகதி அள்ளப் போயிருப்பா" என்று சொல்லிவிட்டுச் சீப்பைப் போட்டு இழுக்க ஆரம்பித்தாள்.

வாசலின் கருவேலமுள்படல் பழைய சேலையின் கரைக்கோட்டுத் துணியால் கட்டப்பட்டிருந்தது நல்ல சிகப்பு நிறத்தில் ஏதோ ஒரு திறப்புவிழாவுக்குக் கட்டப்பட்டிருந்த புதிய ரிப்பன் மாதிரித் தெரிந்தது. ஆத்தா எப்பவும் ரொம்பப் பதனம்தான். 'ரிப்பன் வெட்டாமல்' திறப்புவிழா நடத்தி உள்ளே போக வேண்டும். முடிச்சுகளை அவிழ்த்துவிட்டுப் படலை வெளிப்பக்கமாய் இழுத்துத் திறந்த கொண்டு உள்ளே போனான் அழகிரி. சுற்றிலும் பார்வையை ஓடவிட்ட அழகிரிக்கு குடிசையின் உள்புறம் அலாக்காகத் தெரிந்தது அவ்வள்வு விசாலம்;தட்டி வைத்த எருக்கள் சொல்லி வைத்த மாதிரி ஒன்றிரண்டு கூட இல்லை ஆத்தா யாருக்காவது காசுக்கு விற்றிருப்பாளோ?...

--------------------------------

ஊருக்குள் பாளையத் தேவரய்யா வீட்டில் தான் அழகிரியின் ஆத்தாவுக்கு வேலை. பத்துச் சோடி மாட்டுக் கொட்டத்தைத் தினமும் பளிங்குபோலச் சுத்தப்படுத்த வேண்டும். குப்பைகளைக் குவித்து தரம்பிரித்து நாற்றங்காலுக்குத் தனியாகவும் வீட்டுக்குப் பின்புறமாய் தோட்டத்தில் காய்கறிச் செடிகளுக்குத் தனியாகவும் குவித்து வைத்து வரவேண்டும். மாடிப்படி வழியே மேலே ஏறி, பழையதானிய வகையறாக்களை உலரவைத்து அள்ளிப் போட்டு வர வேண்டும். ஊருக்கு அப்பால் இருக்கிற ஓடைக் கரைத் தோப்பிலிருந்து உரியா மட்டைகளை அள்ளிக் கொண்டு வர வேண்டும். வயல் வரப்புகளில் நிமிர்ந்து நிற்கிற கருவேல மரங்களின் காய்களை உலுக்கிப் பொறுக்கிச் சாக்குகளில் நிரப்பிக் கொண்டுவந்து, ஆடுகளுக்கு மழைக்கால உணவாய்ச் சேமித்து வைக்க வேண்டும். மூன்று மைல் தொலைவில் இருக்கிற ரைஸ்மில்லுக்குத் தலைச் சுமையாய்க் கொண்டு போய் மாவரைத்து அல்லது பச்சை நெல் அரைத்து கொண்டு வர வேண்டும். பெரிய அய்யாவுக்குக் கைக் குத்தல் என்றால் அலாதியான பிரியம். குந்தானியில் போட்டு நெல்குத்தி அடுக்க வேண்டும். இவையெல்லாம் ஒரே நாளில் அவள் பார்க்கிறதில்லை என்றாலும் நாள் முழுவதும் அவளை வாட்டி வதைக்கிற வகையில், சில வேலைகள் தினமும் முழுமையாய் இருக்கும்.

சக்கரமாய்ச் சுழன்று பார்த்துவிட்டு மாட்டுத் தொழுவத்தின் வைக்கோல் கட்டின் மீது, பெருமூச்சு விட்டு 'உஸ்' என்று தலைசாய்க்கிற நேரத்தில் நேரத்தில் எஜமானி அம்மாளின் மூக்கில் வியர்த்துவிடும். "நல்லா இருக்குடி" படுக்கையைப் பாரு படுக்கைய... அய்யாவுக்கு பெரண்டைத்துவயல் அரைச்சு வச்சு எத்தனை நாளாச்சு... ஓடக்கரையில போயி 'பிடிச்சபிடி' பறிச்சுக்கிட்டுவா" என்று உத்தரவு போட்டு விடுவாள்.

சேலைத் தலைப்பில் வேலையை முடிந்து கொண்டிருக்கிற எஜமானியம்மாளோடு பொழுதெல்லாம் அலக்குடுத்துக் கொண்டிருந்தாலும், தினம் நாலு எருவாட்டி சேர்ப்பதில் கவனமாக இருப்பாள் அவள். வயல் வெளிகளில் அவள் நடமாடுகையில் 'ஊர்காலி'கள் போட்டிருக்கும் சாணக் குவியலை எடுத்துச் சேர்ப்பாள் யாரோ ஒரு காண்ட் ராக்டருக்கு வசதிக்கு வழிகாலாய் அமைந்து, விரிசலாய் சொர சொரப்பு தட்டி நிற்கும் பாலத்தின் சுவர்களிலோ, ஆலமரத்தின் தூரிலோ இப்படி எங்கேயாவது ஓரிடத்தில் அகலமாய்-பெரிதாய்-எருவாட்டிகளைத் தட்டி விரல்கள் பதிய வைத்திருப்பாள். மூன்று நாட்கள் கழித்து, நினைவாய் கூடையை எடுத்துக் கொண்டு தட்டிய எருவாட்டிகளை திரட்டும் போது, சுமாராக ஒரு கூடைக்கு நிரம்பி இருக்கும். அவனுக்குத் தினம் இரண்டு இரண்டு எருவாட்டிகள் போக மிச்சம் கிடப்பதில் அவள் வெற்றிலை பாக்குமென்று கொள்வாள்.

அன்றைக்கு மதியத்துக்குள் ஒருசாக்கு நிறைய கருவேலங்காய்களைச் சேகரித்து வரவேண்டும் என்று விதித்திருந்தார்கள். வாங்கரிவாளைக் கருவேல மரத்துக்குள் கொடுத்துக் கொக்கிபோல் மாட்டிக்கொண்டு உலுக்கி உலுக்கிக் காய்களைத் தட்டிக் கொண்டிருந்தாள். பலம் கொடுத்து - மூச்சுக் கொடுத்து 'ம்...ம்...ம்...' என்று இரைந்து, ஏதோ மல்லுக்கட்டிக் கொண்டிருப்பது போல் இழுத்துக் கொண்டிருந்தாள் அவள். அவளுக்கு வாழ்க்கையே ஒரு மல்லுக்கட்டாய், மரணவிளையாட்டாய்ப் போன பிறகு வேறு என்னதான் செய்வது? தான் நிற்கும் வயல் வரப்பில், தனக்குப் பின்னால், ஏதோ நிழலாடுவது மாதிரி அவளுக்குத் தோன்றியது.

காய்கள் உலுக்கும் மும்மரத்தில் கவனிக்காமல் விட்டு விட்டால், உலுக்கி வைத்திருக்கிற காய்களை வழியில் போகிற ஆடுகள் வந்து களவாணித்தனமாய்த் தின்று விடும்... அப்படித்தான் ஆடு ஏதேனும் தின்ன வருகிறதோ என்று நினைத்தச் சீற்றம் கொண்டவளாய் "எந்தப் பய ஆடு?... ஓனக்கா உலுக்கி வச்சிருக்கேன்...?" என்று சப்தமிட்டுத் திரும்புகையில் அவளுக்குத் திகைப்பாய் ஆகிவிட்டது...

நீருக்குள் மூழ்கி எழுந்தது மாதிரி வேர்வை சொட்டச் சொட்ட, அவிழ்கிற மாதிரியும் அவிழாதது மாதிரியுமாய் பாவலாக் காட்டிக் கொண்டிருந்த கால்சட்டையைப் பிடித்துக் கொண்டு அழகிரிதான் வந்து நின்றான்.

வயிற்றுமணியை வாய்நிறையக் கூப்பிட்டு அன்பொழுக அணைத்துக் கொள்ளுவதற்கு வறுமை ஒரு குறுக்கீடாக இருக்க முடியுமா? மரத்துக் கிளையில் கொக்கிபோலப் பிடித்துக் கொண்டிருந்த வாங்கரிவாளை விட்டுவிட்டு வாயூரக் கூப்பிட்டாள்.

"அழகிரி, நிய்யா... ஏன்யா இங்க வந்தே? பள்ளிக்கூடம் போகல?"

அவனை அருகே அழைத்து அணைத்தபடி வயல் வரப்பில் உட்கார்ந்தாள். கருவேல் மரம்போல் பரட்டையாய் காற்றாடிப் போய்க்கிடந்த தலையை நீவிவிட்டாள். மடியில் உட்கார்ந்து கொண்ட அழகிரி, அவள் முகம் பார்த்துச் சொன்னான்.

"இன்னிக்கு எருவாட்டி கொண்டுபோக மறந்துட்டேன் ஆத்தா, வாத்தியாரு எடுத்துக்கிட்டு வாடா, எடுத்துக்கிட்டு வந்தாத்தான் சோறுன்னு சொல்லிட்டாரு..."

"அப்புறம்?"

"வீட்டுக்குப் போனேன் நிய்யி இல்ல. வீட்டுக்குள்ளயும் போயிப்பார்த்தா அங்கயும் எரு இல்ல..."

அப்போதுதான் அவளுக்கு நினைவு வந்தது. அழகிரி பள்ளிக்கூடம் போனபிறகு வீட்டிலே இருந்த எருவாட்டியை எல்லாம் அள்ளிவந்து கடைக்காரர் வீட்டிலே போட்டுவிட்டு வெத்திலை பாக்கு புகையிலை வாங்கிக் கொண்டு வந்தது எல்லாவற்றையும் நினைத்துப் பார்த்துக் கொண்டாள். பள்ளிக்கூடம் போன அழகிரி வழக்கம் போல் எடுத்துப் போயிருப்பான் என்றும் , மறுநாளைக்கு வேண்டியதை அன்றைக்கு சாயங்காலம் சேகரித்துக் கொண்டுவிடலாம் என்றும் நினைத்து அனைத்தையும் அள்ளிக் கடையில் போட்டுவிட்டதை இப்போது நினைக்கையில் அவளுக்குத் துக்கமாய் வந்தது.

"நான் இங்கே நின்னது உனக்குத் தெரிஞ்சதாய்யா?"

"கம்மாய்க் கரையில் நின்னு பார்த்தேன். நிய்யி வாங்கரிவா போட்டு இழுத்தது தெரிஞ்ச்சுச்சு, கட்டியிருக்கிற சேலையும் நல்லா அடையாளம் தெரிஞ்சசது ஆத்தா. போனதுக்கும் போன பொங்கலுக்கு வாங்குனதுதானாத்தா இந்த மஞ்சச்சேலை. தூரத்துல இருந்து பார்க்கிறப்போ நல்லா தெரிஞ்சுதுத்தா..."

அழகிரி சின்ன வயசானாலும் சுட்டிப்பயல்; கெட்டிக்காரன் அவன் கொஞ்சிப் பேசுகிற பிஞ்சு அழகில் அவள் சில நிமிடங்கள் தன்னை இழந்து போனாள். தான் வருடாந்திரமாய்கட்டிக் கொண்டிருக்கிற... இப்போது தான் பெற்றெடுத்த பிள்ளைக்குத் தன்னைத் தொலைதூரத்திலிருந்து அடையாளம் காட்டிய அழுக்கேறிய பழுப்பு மஞ்சள் சேலையை ஒருமுறை பார்த்துக் கொண்டாள். அப்போது அவளது நெஞ்சு அழுதது அதன் பிரதிபலிப்பாய் கண்கள் பனித்தன. கண்களில் நிறைந்த நீரை அவனுக்குத் தெரியாமல் அவள் மறைத்துக் கொண்டு சொன்னாள்.

"அழகிரி, அந்தா... அந்தப் பனைமரத்தூரில் ரெண்டு எருவாட்டி தட்டிவச்சிருக்கேன் எடுத்துக்கய்யா" என்று சுட்டிக் காட்டினாள்.

"சின்னதா, பெரிசாத்தா?"

"சொமாரா இருக்கும் ஏன்யா அப்படிக் கேக்குறே?"

"சின்னதா இருந்தா வாத்தியாரு திட்டுறாருத்தா... அன்னிக்கு ஒருநா கொண்டுபோனது சின்னதா இருந்துச்சு... அதுக்கு "ஏண்டா திங்கிற வட்டி மட்டும் அகலமா பெரிசா வச்சிருக்கே... எரு மட்டும் இத்துணூண்டு கொண்டார"ன்னு

திட்டினாருத்தா..."

அவள் ஆற்றாமல் பெருமூச்சுவிட்டாள். சிறிது நாழிகைக்கு அதுவே பதிலாக இருந்தது. அது அவனுக்குப் புரியாது என்று நினைத்தவளைப்போலப் பேசத் தொடங்கினாள்.

"அழகிரி நேரமாச்சு...எருவாட்டிகளை எடுத்துக்கிட்டுப் புறப்படுப்பா..."

அவிழ்கிற மாதிரியும் அவிழாதது மாதிரியுமாய்ப் பாவலா காட்டுகிற கால்சட்டையை ஒரு கையிலும்... எருவாட்டிகளை ஒரு கையிலுமாய்ப் பிடித்துக் கொண்டு ஓட்டமாய் ஓடினான் அழகிரி...

வயிற்றுக்குள் வளர்ந்த மாதங்களில், உதைத்து விளையாடிய அந்த பிஞ்சுக்கால்கள் இப்போது வறண்ட பூமியை உதைத்துக் கொண்டு சோற்றுக்காக டுவதைப் பார்க்கையில் நெஞ்சுக்குள் யாரோ நெருப்பை அள்ளிக் கொட்டியதுபோல் இருந்தது அவளுக்கு, சிறிது நேரம் அவள் மரமாய் நின்று போனாள்.

--------------------------------
ஊருக்குள் நுழைந்து, இரண்டு மூன்று தெருக்களைக் கடந்து மேற்குக் கடைசியில் இருக்கும் பள்ளிக்கூடத்துக்கு வரவேண்டும். அழகிரி தாவி வந்து கொண்டிருந்தான். நடுத்தெருவில் ஓடி, அதன் கீழ்முனையில் திரும்பிவிட்டால், பள்ளிக்கூடத்து வேப்பமரம் கண்ணுக்குத் தெரியும். இதோ... வந்தாயிற்று தெருவின் கீழ்முனையில் திரும்பி வேப்பமரத்து உச்சியில் பார்வையை பதித்து ஓடுகையில்...

யாரோ கூப்பிடுவது மாதிரி அரையும் குறையுமாகக் கேட்டது. அதற்கெல்லாம் செவிசாய்க்காமல் "நேரமில்லை என்னைப்போய் ஏன் கூப்பிடுகிறார்கள்" என்ற நினைப்பில் மேலும் அவன் கால்கள் தாவும்போது...

"ஏலே படுவா மவனே... எங்கடாப்பா இந்த ஓட்டம் ஓடறே...பிரசண்டு அய்யா கூப்பிடுறாகளே, கேக்கலே... பெரிய கோட்டையைப் பிடிக்கப் போற மாதிரி ஒரே கதியா எடுக்கிறியே ஓட்டம்... நில்லுடா" என்று ஊர்ப் பிரசண்டு அய்யாவுக்காக, அவருடைய சகலவிதமான 'யாவாரங்களுக்கும்' அதிகாரப் பூர்வமாய் வேலைசெய்யும் ஒரு 'ஏசண்டு' உறுமியது.

அழகிரி ஒருகணம் ஸ்தம்பித்து நின்றுவிட்டான். நின்று, குரல் வந்த திக்கில் அவன் முகம் திரும்புகையிலும் கூட, ஒருகால் முன்னும் இன்னொருகால் பின்னுமாய் 'சடன்பிரேக்' நிலையில் நின்றான். தன்னை யாரும் கூப்பிடவில்லை என்று தெரிந்தால் அவன் இதற்குள் நாலு எட்டு வைத்திருப்பான். அவனையன்றி அங்கே வேறு யாரை அதிகார மிரட்டலோடு குரலுக்குரியவர்கள் கூப்பிடப்போகிறார்கள்?

தெருத் திண்ணையில் 'பிரசண்டு அய்யா' ஜிப்பாவும் துண்டுமாய்த் திண்ணையைஅலங்கரித்துக் கொண்டிருந்தார். மிதியடிகளைக் கழற்றிக் கொள்ளாமலேயே, கால்மேல் கால் போட்டுக் கொண்டு உட்கார்ந்திருந்த தோற்றத்தில் 'பிரசண்டு' என்றவுடன், "இந்தியாவின் முதல் குடிமகனுக்கும் 'பிரசண்டு' என்றுதானே பெயர்" என்று பாமரத்தனமாய் தன்னையும், டெல்லி மனிதரையும் இணைத்துப் பார்த்துக் கிளுகிளுத்துப்போன அறியாமை பிரகாசமாய்த் தெரிந்தது. வீதி வழியே 'வரும்' 'போகும்' பசுமையான பெண்களை அவர் 'வேடிக்கை' பார்த்துக் கொண்டிருந்தார்.அதுதான் அவருக்கு மிகவும் முக்கியமான வேலை, என்றைக்கோ - எப்போதோ - எவனோ வாங்கிக் கொடுக்கப்போகும் மெட்ராஜ் ஓட்டல் பிரியாணிக்காக இப்போதே பல் குத்திக் கொண்டிருந்தார்.

"எங்கடா போறே?"

"பள்ளிக் குடத்துக்கு"

"கையில என்ன?"

"எருவாட்டி"

"எதுக்கு?"

"சாப்பிட"

அட்டகாசமாய்ச் சிரித்தார் பிரசண்டு, "அடடே, எருவைப் போய் யாராவது சாப்பிடுவாங்களா?... பாளையத் தேவரு வீட்ல வேல பாக்குறாளே குஞ்சம்மா, அவ மகன் தானடா நிய்யி...?"

'ஊர்ப் பெரிய மனுசரான பிரசண்டு' சோக் அடித்ததை அழகிரி புரிந்து கொண்டான். அவனுக்கு எரிச்சலாய் வந்தது. அவரைக் குத்திக்காட்டுவது போல் எதையாவது மறுதலிக்க அவனுக்கு விருப்பமே என்றாலும், ஏனோ வேறு எதுவும் சொல்லாமல், தனக்குத் தெரிந்த விளக்கத்தைச் சொன்னான்:

"இந்த எருவாட்டியைக் கொடுத்தாத்தான் வாத்தியாரு மத்தியானச் சோறு போடுவாரு..."

"ஹே... அதச்சொல்றியா, சரி... எருவாட்டிய இங்ஙன போடு, இந்தா... காசு, கடையில அஞ்சு ஆனை வாங்கியா."

ஏதோ தனக்கு ஒரு வாய்ப்பு க் கிடைத்திருப்பது மாதிரி ஒருகணத்தில் நினைத்துக் கொண்ட அழகிரி, நமட்டுச் சிரிப்பை சிரமப்பட்டு மறைத்து, விழுங்கிக் கொண்டே கேட்டான்.

"ஆனையா?"

"ஆமாண்டப்பா ஙொப்பன் மகனே, நான் கேட்டேன்னு கேக்குறயாக்கும்... ஆனைன்னா... ஆனையில்ல, சிகரட்டு" என்றார் பிரசண்டு.

அழகிரி கடைக்குப் போனான். ஒதுங்கி... ஒதுங்கி... நிற்பவர்களுக்கெல்லாம் ஓரமாய் நின்று கொண்டு, அப்புறமாய்... கடைக்காரருக்குக் கேட்கிற மாதிரி, "பிரசண்டு அய்யாவுக்கு அஞ்சு ஆனைச்சிகரட்டு" என்று இரைந்தான். கடைக்காரர், தனது மரியாதையை பிரசண்டு அய்யாவுக்குச் சமர்ப்பிக்கிறதுக்கு அடையாளமாய், அஞ்சு ஆனைகளைத் தனியே உதிரியாய்க் கொடுக்காமல், ஒரு புதுப் பெட்டியை உடைத்து, அஞ்சு ஆனைகளை எடுத்து வைத்துக் கொண்டு மீதி அஞ்சுடன் பாக்கெட்டாகக் கொடுத்தனுப்பினார். "அய்யாகிட்ட சொல்லுடா, புதுசா ஒடச்சுக் கொடுத்தார்"னு என்று ஒரு சேதியும் சொல்லியனுப்பினார்.

ஆனைகளைச் சேர்ப்பித்துவிட்டு, எருவாட்டிகளை எடுத்துக் கொண்டு, வேப்பமரத்து உச்சியை வெறித்து பார்த்து, அவன் பள்ளிக்கூடத்தை நோக்கி ஓடுகையில் ஏதோ ஒரு மணி அடிப்பது அவனுக்குக் கேட்டது. வந்திருந்த பசியால் அவனுக்கு பத்தும் பறந்து போயிருந்த போதிலும், அந்த மணிச்சப்தம் அன்றைய அவனுடைய வயிற்றுப் பிரச்சினையோடு சம்பந்தப்பட்டிருப்பதால், அவனுடைய கேள்விப் பொறி உஷார் நிலையிலேயே இருந்திருக்கக் கூடும்...

சாப்பாட்டு வேளை முடிந்திருக்குமோ...? இந்த மணி... வகுப்புகள் தொடங்குவதற்கான மணி போலிருக்கிறது. ஓட்டமாய்... தாவுதலாய் எவ்வி, எவ்வி ஓடிவந்த அழகிரி பள்ளிக்கூடத்தின் வாசலில் கால்வைத்து உள்ளே பார்த்தான். அடுத்த நொடியில் பள்ளிக்கு வெளியே பார்த்தான். மதியச் சாப்பாட்டை முடித்த பிறகு வழக்கமாகப் பையன்கள் எல்லாம் கை அலம்பிக் கொள்ளப் பக்கத்து வாய்க்கால் பக்கம் போவார்கள். ஓடும் நீரில் கை அலம்பி, தட்டுக்களையும் கழுவி சிறிது நேரம் கப்பல் விளையாடி, பிறகு தட்டுக்களில் நீரை நிரப்பிக் கொண்டு திரும்புவார்கள். தட்டின் நீருக்குள் முகம் பார்த்து தூரத்தில் தெரியும் வான் பார்த்து... சூரிய ஒளியையும் பார்த்து, விளையாடிக் கொண்டே வந்து, பள்ளி வாசலில், தட்டுத் தண்ணீரை கால்களில் ஊற்றிக் கழுவிக் கொண்டு உள்ளே ஓடிப் போவார்கள். இந்த வாடிக்கையான விளையாட்டில், அதோ அழகிரியின் நண்பர்கள் தட்டின் நீரில் முகம் பார்த்து... வருகிறார்கள்.

அவர்களைப் போல், இனி நாளைக்குத்தான் விளையாடி... தட்டுத் தண்ணீரில் முகம் பார்க்கலாம் என்பதை நினைக்கையில் ... கண்கள் குளமாகி, கண்ணிமைகள் படபடத்தன. மழைக்காலத்தின் தந்திக் கம்பிகளைப் போல் கண்ணீர் கொட்டியது அவனுக்கு.

-முனைவர். மு.பழனி இராகுலதாசன்

நன்றி: தாமரை (செப்டம்பர் 1978)

வெள்ளி, 22 ஜனவரி, 2010

வெற்றுடம்புடன் விளைநிலம்ன்று கதிர்களால் காதலிக்கப்பட்ட எம் வயல்கள் இன்று கருவேல மரங்களின் கட்டுப்பாட்டில்... எங்கு நோக்கினாலும் வயல்களும் விவசாய காலத்தில் பயிர்களுமாக காட்சியளித்த எங்கள் கிராமத்தின் அடையாளம் தொலைந்து வெகு காலமாகிவிட்டது. அடுத்த வயலைக் காணமுடியாத அளவுக்கு கருவேல மரங்களும்... மக்கிய முள்ளுமாய்.

ஒரு காலத்தில் எங்கள் ஊரில் எல்லோர் வீட்டிலும் காளை மாடு இருக்கும். பருவ மழை தொடங்கியதும் ஏர் பிடித்து வயலில் உழுது தொளி அடித்து நாற்றுப் பாவி விடுவோம். மழை அதிகரித்து கண்மாய் நிறைந்தால் அந்த வருடம் பஞ்சமில்லை என்ற நிம்மதி. அதுவும் கண்மாக்குள் இருக்கும் முனியய்யா கோவில் வன்னி மரத்தைச் சுற்றிப் பெருகி முனியய்யாவின் இருப்பிடம் தண்ணீருக்குள் மறைந்தால் கண்டிப்பாக நல்லா விளையும் என்ற நடைமுறை கணக்கு ஒன்று உண்டு.

பார்த்துப் பார்த்து உரமிட்டு பயிர் வளர்ந்ததும் அதைப் பறித்து நடுவார்கள். அதற்கு நாற்றுப் பறித்தல் என்று பெயர். பயிரை பறித்து சிறுசிறு முடிகளாக கட்டி, வேறொரு இடத்தில் பெண்கள் நடுவார்கள். அதற்கு நடவு என்று பெயர். நடவுக்கு வரும் பெண்களுக்கு விதவிதமான சமையல், காபி, பலகாரம் எல்லாம். ரோட்டோரத்தில் நாற்று முடி ஒன்றை வைத்து பாட்டுப்பாடி காசு வாங்கும் அந்தப் பெண்களின் சந்தோஷம்... எவ்வளவு பணம் கொடுத்தாலும் கிடைக்காது.

பயிர் வளர வளர அதை பார்த்துப் பார்த்து சந்தோஷப்பட்ட அந்த தினங்கள்... இப்ப நினைத்தாலும் மனசுக்குள் மழைக்காலம். நட்ட பயிர் நேரே நிமிர்ந்து வளர ஆரம்பித்தால் கருநடை திரும்பிருச்சு என்றும் கருக்கூட ஆரம்பித்தால் பொதி கட்டிருச்சு என்றும் விவசாயிகள் ஒருவருக்கு ஒருவர் பேசிக்கொள்ளும் அந்த சந்தோஷ தருணங்கள் இப்போது எங்கள் கிராமத்தில் இல்லை.

கதிர் அறுத்து... கட்டு சுமந்து... நெல் அடித்து... அதை தூற்றி... பிணையல் விட்டு... வைக்கோலை... வைக்கோல் படப்பு என்று அழைக்கப்படும் இடத்திற்கு கொண்டு செல்லும் வரையான அந்த இனிய நிகழ்வுகள் இனி திரும்ப வராது.

பசுமையான இந்த வாழக்கையை எனக்கு அளித்த கிராமம் இன்று பசுமையிழந்து... பொட்டில்லாத முகமாக பொலிவிழந்து கிடக்கிறது. காரணம்... இயந்திரமாகிவிட்ட உலகத்தில் வயலை உழ மணிக்கு இவ்வளவு காசு என்று டிராக்டர்கள் குவிந்துவிட்டன. அதனால் மாட்டிற்கான தேவை குறைய, வீடுகளில் மாடும் குறைந்தது.

நாற்றுப்பாவி நட்டு... எதுக்கு ரெட்டைச் செலவு டிராக்டரை விட்டு உழுதுட்டு விதச்சு விட்டா அறுக்குறதுக்கும் மிஷின் வந்தாச்சு அப்புறம் என்ன ஆளைத்தேடி அலைய வேண்டாம் என்ற எண்ணம் எங்கள் ஊரில் எல்லோர் மனதிலும் வந்த நேரம் விவசாய வேலை குறுகினாலும் விவசாயம் மடியவில்லை என்ற எண்ணம் அதிக நாட்கள் சந்தோஷத்தைக் கொடுக்கவில்லை.
அதிக விலை கொடுத்து உரங்களை வாங்கி பயிருக்கு இட்டு பொதியான சமயத்திலோ அல்லது கதிர் அறுக்கும் சமயத்திலோ பக்கத்து ஊரில் இருக்கும் கோயில் மாடுகள் நாசமாக்க, நாங்கள் அடைந்த அந்த துக்கம் இன்னும் கண்ணுக்குள் நிற்கிறது.

அதற்காக வயல்களில் குடில் அமைத்து மார்கழிக் குளிரில் எங்கப்பா உள்பட விவசாயிகள் எல்லாம் அவர்களது வயல்களில் இரவில் போய் படுத்தது காவல் இருந்தது. அதுவும் அருகில் சுடுகாடு இருக்க எங்கப்பாவும் சின்னய்யாவும் தத்தம் வயல்களில் இரவு நேரத்தில் படுத்த அந்த நாட்கள் அவர்களுக்கு விவசாயத்தின் மீது இருந்த காதலை பறை சாற்றியது. அப்பா இல்லாத நாட்களில் அம்மா என்னையும் தம்பியையும் போய் பார்த்து வரச்சொல்வார்கள். போவோம் என்றா நினைத்தீர்கள் பாதி தூரம் போய் டார்ச லைட்டை அடித்துப் பார்த்துவிட்டு ஒடி வந்து விடுவோம்.

கோயில் மாடுகளை நிர்வாகம் ஒன்றும் செய்யாத காரணத்தால் கொஞ்சம் கொஞ்சமாக விவசாயம் கரைந்தது. இன்று விளைநிலங்கள் எல்லாம் வேலிக்கருவை என்று செல்லமாக அழைக்கப்படும் கருவேல மரங்களின் காடாக மாறிவிட்டது.

ஒரு காலத்தில் முப்போகம் விளைந்த் வயல்கள் இப்போது முள்கள் சூழ்ந்து பரிதாபமாய்....

காரணம்... இளைஞர்கள் எல்லாம் வேலை தேடி வெளி நாடுகளில் தஞ்சம்... ஓடி ஓடி விவசாயம் செய்தவர்கள் எல்லாம் காலத்தின் கட்டாயத்தில் முதிர்ச்சி என்னும் விவசாயத்தில்... பலர் பூமி விவசாயம் பொய்த்ததால் மேலே போய்விட்டார்கள். என்ன செய்ய...

பணம் இருக்கும் தோட்ட விவசாயிக்கு மின்சார சலுகை வழங்கும் அரசு சிறிய விவசாயிகளை கண்டு கொல்வது இல்லை என்பதே நிதர்சன உண்மை. உரத்திற்கு மானியம் என்பார்கள் ஆனால் மானியம் யாருக்கு என்பது அவர்களுக்கே வெளிச்சம். சினிமாக் காரனுக்கு தமிழ் பேர் வச்சா வரி விலக்கு கொடுக்கும் அரசு, விவசாயம் செய்தால் என்ன தருகிறது?

விவசாயம் எப்படி செய்வது என்பது விவசாயியின் மகனான எனக்குத் தெரியும் என்பது சந்தோஷம் ஆனால் என் வாரிசுகளுக்கு...?

நகரத்தை ஒட்டி இருக்கும் விளை நிலங்களெல்லாம் வீடுகளாக மாறி வரும் வேளையில் கிராமத்து நிலங்கள் பயனின்றி பாழ்பட்டு வருகின்றன.

என் சிறுவயதில் அழகிய சிற்றூறாக இருந்த என் கிராமம் போன்ற பல கிராமங்கள் இன்று பொலிவிழந்து எதோ ஒரு காட்டிற்குள் இருப்பது போன்ற பிரமையை ஏற்படுத்துகின்றன என்பதே உண்மை.

காலப் போக்கில் விவசாயம் என்றால் என்ன என்பது கல்வெட்டில் மலர்ந்தாலும் ஆச்சரியமில்லை.

-சே.குமார்.

செவ்வாய், 19 ஜனவரி, 2010

விவாகரத்து சுனாமியில் காதல் திருமணங்கள்


காதல்... இந்த மூன்றெழுத்து இன்று உலகின் மூலைமுடுக்கெல்லாம் பரவிக்கிடக்கிறது என்பது எல்லோரும் அறிந்ததே. வசதிகள் அற்ற கிராமத்திலும் வயல்வெளிகளில் வாய்க்கால் நீராக ஓடிக்கொண்டுதான் இருக்கிறது. அந்தக்கால காதல்களில் கண்ணியம் இருந்தது ஆனால் இந்தக்கால காதலில் அது சற்று குறைவு என்பதே உண்மை. இருப்பினும் காதல் என்பது எல்லா காலத்திலும் எல்லா இடத்திலும் ஒன்றாக பயணிக்கும் காட்டாறுதான்.

காதல் காலமாற்றத்தில் பல பரிமாணங்களைப் பெற்று எவரெஸ்டாய் வளர்ந்துள்ளது. அந்தக்காலத்தில் காதலிப்பதே பெரிய குற்றமாக கருதப்பட்டது.

காதலுக்கு மனிதர்கள் மட்டுமல்ல... ஜாதி, மதம் எல்லாமே எதிராக இருந்தன. அப்போது காதலில் ஜெயிப்பது என்பது காதலித்தவர்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது என்று காதலித்து திருமணம் செய்து நல்ல நிலையில் இருக்கும் எனது நண்பனின் அப்பா அடிக்கடி சொல்லுவார். அப்படி ஜெயித்தவர்கள் வாழ்க்கையில் தோற்றதில்லை என்பார். அதற்கு அவரே நல்ல உதாரணம். அவர் பேரன் பேத்தி எடுத்து விட்டாலும் இன்றும் கணவன் மனைவிக்குள் இருக்கும் நேசம், பாசம், காதல் குறிப்பாக விட்டுக் கொடுக்கும் தன்மை எல்லாம் அவர் மீதான மரியாதையை எனக்குள் சிம்மாசனம் இட்டு அமர்த்தியுள்ளது.

காதலுக்கு மனிதர்கள் மட்டுமல்ல... ஜாதி, மதம் எல்லாமே எதிராக இருந்தன. அப்போது காதலில் ஜெயிப்பது என்பது காதலித்தவர்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது என்று காதலித்து திருமணம் செய்து நல்ல நிலையில் இருக்கும் எனது நண்பனின் அப்பா அடிக்கடி சொல்லுவார். அப்படி ஜெயித்தவர்கள் வாழ்க்கையில் தோற்றதில்லை என்பார். அதற்கு அவரே நல்ல உதாரணம். அவர் பேரன் பேத்தி எடுத்து விட்டாலும் இன்றும் கணவன் மனைவிக்குள் இருக்கும் நேசம், பாசம், காதல் குறிப்பாக விட்டுக் கொடுக்கும் தன்மை எல்லாம் அவர் மீதான மரியாதையை எனக்குள் சிம்மாசனம் இட்டு அமர்த்தியுள்ளது.

நாம் அன்றைய காதல் பற்றியும் காதலர்கள் பற்றியும் இங்கு பார்க்கப் போவதில்லை. இன்றைய காதல் திருமணங்களும் விவாகாரத்துகள் குறித்துத்தான் பார்க்கப் போகிறோம்.

இன்று, காதல் என்பது பள்ளிக்கூடத்திலேயே ஆரம்பித்து விடுகிறது. அதுவும் பள்ளிக்கு கட் அடித்து விட்டு பார்க்கிலும் பீச்சிலும் திரையரங்கிலும் காதலிக்கிறார்கள். இந்த காதல் எவ்வளவு தூரம் போகும் என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம். ஆனால் கண்டிப்பாக படிப்பு ஊத்திக்கும் என்பது உண்மை.

கல்லூரி மற்றும் வேலை செய்யும் இடங்களில் காதல் கொள்ளும் ஜோடிகள் கல்யாண பந்தத்தில் இணைவதற்கு இப்போது எதிர்ப்புகள் குறைந்து விட்டன என்பது நிதர்சனம். அதனால் காதல் கல்யாணங்கள் பெருகிவிட்டன. வீட்டிற்கு தெரியாமல் கல்யாணம் பண்ணிக் கொள்ளும் காதல் ஜோடிகள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

ஆனால், காதலிக்கும் போது இனிக்கும் உறவு திருமணத்திற்குப் பிறகு கசப்பது ஏனோ தெரியவில்லை. இன்று பெரும்பாலான காதல் திருமணங்கள் சில நாட்களில் விவாகாரத்தை நோக்கி போவது என்பது தவிர்க்க முடியாததாகிவிட்டது.

எனது நண்பரின் தம்பி காதலித்து அண்ணனுக்கு முன்னரே எதிர்ப்பிற்கு இடையே திருமணம் செய்து கொண்டார். பின்னர் வீட்டிலும் ஏற்றுக்கொள்ள, சந்தோஷமாக சென்ற காதல் வாழ்வின் அடையாளமாக அழகிய குழந்தை ஒன்று பிறந்த்து. சந்தோஷமாக சென்ற அவர்களுக்குள் பிரச்சினை என்னும் சுனாமி எட்டிப்பார்க்க, தினம் தினம் சண்டை... மாமியார் வீட்டில் சண்டை போட்டுக் கொண்டு தாய் வீடு செல்வது பின்னர் திரும்பி வந்து மீண்டும் சண்டையிடுவதும் வாடிக்கையாகிவிட,சண்டையின் முடிவாக தாய் வீட்டிலே தங்கிவிட்டாள்.

அவளை அழைக்க நண்பனின் தம்பி பலமுறை சென்றும் காதல் மனைவியோ மனம் இரங்கவில்லை. கோபம் கொண்ட காதல் கணவன் கை நீட்டிவிட்டான். பிரச்சினை பூதகரமாகிவிட்டது.

நண்பருக்கு இந்தியாவில் இருந்து போன் மேல் போன் இரண்டு பக்க நியாயங்களும் செல்பேசி வழியே அவரது காதுக்குள் நுழைந்து அவரது மண்டையை சூடாக்கியது. வேலை செய்யமுடியாமல் அவர் கவலைகளை சுமந்தபடி, அவரது நிலைகண்டு நான் கேட்ட போது சொன்னதுதான் இந்தக் கதை.

அவர் தன் தம்பி மாமனாரின் நலம் விரும்பி ஒருவருக்கு போன் செய்து யாரிடமும் சொல்லாமல் நடந்த திருமணம் என்பதால் என் தம்பி எங்களிடம் சொல்ல முடியாமல் தவிக்கிறான். அதே போல் அந்தப் பெண்ணும் அவனை முழுவதும் நம்பி வந்தவள், எங்கள் குடும்பத்தில் ஒருத்தி, அவளது மனதில் உள்ளதை கேளுங்கள் ஒத்துவந்தால் பாருங்கள் இல்லை வெட்டி விட்டுவிடுங்கள். இல்லை எங்கள் தம்பி மீது தவறு என்று நினைத்தால் தூக்கில் தொங்க விடுங்கள் என்று சொல்லிவிட்டார்.

எனக்கு அவர் மீது கோபம் வந்தது. இவரிடம் இதற்கு முடிவு என்ன என்று கேட்டால் இருவரது வாழ்வையும் முடிக்கஸ் சொல்கிறாரே என்று. ஆனால் நான் அவரிடம் கேட்கும் முன்னரே அவரே தொடர்ந்தார்.

வேற என்ன சொல்லமுடியும் சொல்லுங்கள், அவனிடம் படித்துப் படித்துச் சொன்னேன்... ம்... காதல் கண்ணை மறச்சுடுச்சு, கேட்க மறுத்துட்டான். அந்தப் பெண்ணிடமும் எங்கள் குடும்பம் வசதியில்லாதது அவனை நம்பி வந்திட்டு பின்னால வருத்தப்படக்கூடாது என்றேன். அவளும் கேட்கலை... ஒரு நாள் கல்யாணத்தைப் பண்ணிக்கிட்டாங்க. என்ன செய்ய காதலிக்கும் போது நல்லது மட்டுமே தெரியும் காதலர்களுக்கு திருமண வாழ்க்கையில் நல்லது தெரியாமல் போய்விடுகிறது என்றாரே பார்க்கலாம். அதில் உண்மை இருக்கத்தானே செய்கிறது.

இப்ப நண்பரின் தம்பி வாழ்க்கை விவாகாரத்தை நோக்கி... பாவம் அந்தக் குழந்தை... அதன் எதிர்காலம்...??????.

இது போல் நிறைய காதல் திருமணங்கள் நீதிமன்றங்களின் நிழலில். புரிந்து காதலித்தால் வாழ்க்கை இனிக்கும். புரியாவிட்டால் மனங்களுக்குள் பிரிவினை...

இன்றைய காதல்கள் காதலிக்கும் போது பசுமையாகவும் திருமணத்திற்குப் பின் பாலைவனமாகவும் மாற யார் காரணம்?

காதல் என்பது மனங்களின் மனசாட்சியாக இருந்தால் காதல் திருமணங்கள் கண்டிப்பாக இனிக்கும். இன்றைய உலகில் காதல் திருமணத்திற்கு எதிர்ப்புகள் குறைந்து விட்டன. ஆனால் காதல் திருமண விவாகாரத்துக்கள் பெருகிவிட்டன.

காதலிக்கும் போதே பிளஸ் மைனஸ் தெரிந்து காதலித்தால் கண்டிப்பாக கடைசி வரை காதல் இனிக்கும்.

-சே.குமார்

புதன், 13 ஜனவரி, 2010

இளமைப் பொங்கல்


பொங்கல்... நினைத்தாலே தித்திக்கும் ஒரு திருநாள்... பட்டணத்தில் வசிப்போருக்கு எப்படியோ என்னைப் போன்ற விவசாய குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு பொங்கல் ஒரு மகிழ்வான திருநாள். அந்த இனிய திருநாளை கடந்த இரண்டு வருடமாக கொண்டாட முடியாமல் அரபு நாட்டில் பணம் என்னும் மோசக்காரனின் வலையில்...

ம்... இந்த தினத்தில் என் பொங்கல் அனுபவங்களை எழுதலாமே என்று நினைத்து திரும்பிப் பார்த்ததன் விளைவே இந்த கட்டுரை. இதை எழுத உட்கார்ந்த போது உடன் பிறப்புகள் மற்றும் ஊர் சொந்தங்களுடன் பொங்கல் கொண்டாடிய மகிழ்ச்சி.

பொங்கல் என்றால் பள்ளிக்கு குறைந்தது மூன்று நாட்கள் விடுமுறை கிட்டும். விடுமுறைக்கு முதல் பள்ளியில் மாலை மாவுருண்டை, முறுக்கு எல்லாம் சத்துணவு மூலம் கொடுப்பார்கள். நல்லாயிருக்கோ இல்லையோ நாளை பொங்கல் என்ற தித்திப்பில் இனிக்கத்தான் செய்யும்.

முதல் நாள் இரவே மறுநாள் பொங்கல் வைக்க இருக்கும் அடுப்பு, பானைகள், வீடு முழுவதும் அக்கா, அம்மா எல்லோரும் கோலம் போடுவார்கள். அவர்களுடன் அவர்களுக்கு இணையாக கோலம் போட்ட சந்தோஷம் இன்னும் மனசுக்குள் உதட்டில் ஒட்டிய பொங்கச்சோறாய்..!

காலையில் எழுந்து குளித்து ரெடியாகும் போது அப்பா, 'தம்பி வயலுக்கு போய் நெல்மணியும் அருகம்புல்லும் பறிச்சுக்கிட்டு வாடா' என்றதும் சிறுவயதில் வயலுக்கு ஓடி பறித்து வந்த சந்தோஷம் இன்னும் குற்றாலச் சாரலாய்..!

அருகம்புல் பிள்ளையார் பார்வையில் நெல்மணியை பானையின் கழுத்தில் கட்டி வீட்டு வாசலில் அடுப்பு வைத்து பொங்கல் வைத்தபோது பால் பொங்கிவரும் சந்தோஷம் மனசுக்குள் இன்றும் பொங்கியபடி..!

கேலி முறைக்காரர்கள் (அத்தை மாமா பசங்க) 'என்ன பால் பொங்குச்சா... கால் வீங்குச்சா...' என்று கேட்கும் அந்த சந்தோஷ வார்த்தைகள் இன்னும்
மனசுக்குள் இளமையாய்..!

தை முதல் நாள் வீட்டுப் பொங்கல் முடிந்து மறுநாள் நமக்காக வாழ்வை அர்ப்பணிக்கும் உயிரினங்களான மாட்டுப் பொங்கல். அப்பா... எங்கள் கிராமத்தில் மட்டுமல்ல எல்லா கிராமத்திலும் மாட்டுப் பொங்கல் சிறப்பான சந்தோஷமான திருநாள்.

எங்கள் ஊர் கருப்பர் கோவில் எதிரே ஊர் மொத்தமும் கூடி பொங்கல் இட்டு மகிழும் அந்த சந்தோஷம் வேறு எதிலும் இல்லை. காலையில் கண்மாயில் அனைத்து வீட்டு மாடுகளும் குளிப்பாட்ட கூடி நிற்கும். மாட்டை குளிப்பாட்டி புது மூக்குக்கயிறு, பிடிகயிறு போட்டு கொம்பில் காவி அடித்து உடம்பு முழுவதும் பொட்டு வைத்து கரும்பு, பனங்கிழங்கு கட்டி பொங்ககுழிக்கு கொண்டு செல்ல தயார் செய்வோம்.

தற்போது டிராக்டர்கள் மற்றும் அறிவியல் வளர்ச்சியாலும் வைத்து பார்க்க முடியாத காரணத்தாலும் பல வீடுகளில் மாடுகள் இல்லை.

காலை பத்து மணிக்கு பொங்கல் வைக்கும் இடத்தை சுத்தம் செய்ய கிளம்புவோம். மண்வெட்டி, அருவாள் எடுத்துக் கொண்டு பாதை சுத்தம் செய்து பொங்கல் குழி தயார் செய்து இருபுறமும் கம்பு நட்டு வைக்கோல் பிரி விட்டு மாவிலை, வேப்பிலை சொருகி கட்டி வைப்போம். பின்னர் பொங்கல் வைக்கும் இடத்தின் மேலபுறத்தில் கட்டம் போட்டு வைப்போம். அதற்கு வீடு என்று பெயர்.

பின்னர் அனைவரையும் கிளப்பி வரிசையாக கருப்பர் கோவில் நோக்கை பயணிப்போம். அங்கு பொங்கலிட்டு இறக்கி வைத்து விட்டு மாடுகளை பிடித்துக் கொண்டு வர வீட்டிற்கு வருவோம். அப்போது புதுத்துணி அணிந்து கொள்வோம்.

மாடுகளை மரங்களில் கட்டிவிட்டு கருப்பருக்கு அலங்கார வேலை நடக்கும். பின் மரக்காப் படியில் புறமடை (கண்மாயில் இருந்து வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக கட்டப்பட்டிருக்கும் மதகின் பின்புறம்) தண்ணீர் எடுத்து அதில் எல்லார் வீட்டு பொங்கலிலும் கொஞ்சம் எடுத்துப் போட்டு எங்கள் பெரிய ஐயா சீனி எதோ மந்திரம் சொல்லி மந்திரிப்பார். அவர் இறப்புக்குப் பின்னர் எங்க அப்பா அந்த பணியை செய்கிறார். என்ன சொல்வீர்கள் என்று கேட்டால் எல்லோரும் நல்லா இருக்கணுமுன்னு சொல்லுவேன் என்பார்.

முன்பு தயார் செய்த வீட்டில் நாலு மூலையிலும் பரங்கிப்பூ வைத்து உள்ளே பறங்கி இலை போட்டு எல்லார் வீட்டுப் பொங்கலும் எடுத்துப் போட்டு பரங்கிக்காய், அவரைக்காய் எல்லாம் போட்டு தயார் செய்த கறியை கொட்டி கிளறி வைத்துவிட்டு மாடுகளுக்கு திட்டிக்குழி சோறு தீட்ட கிளம்புவோம்.

சித்தப்பாவும், வேறு ஒருவரும் மந்திரித்த தண்ணீரை எடுத்துக் கொள்ள, நெருப்பு போட்ட மண்பானையை இளையர் வீட்டு ஐயா எடுத்துக் கொள்வார். "பட்டி பெருகப் பெருக... பால் பானை பொங்கப் பொங்க... பொங்கலோ பொங்கல்..." என்று கத்தியபடி மாடுகளுக்கு சோறு தீட்டப்படும்.

மூன்று சுத்து முடித்து திட்டிக்குழியின் அருகில் பானை உடைக்கப்படும் அனவரும் விழுந்து கும்பிட்டு விட்டு திட்டிக்குழி சோறு வாங்கி கேலிக்காரருக்கு தீட்டுவது உண்டு. நிறைய மிளகாய் இருக்கும் அதை அப்படியே முகத்தில் தேய்த்து.... அப்பா... அது ஒரு சந்தோஷ தருணம்.

வருடா வருடம் ஓட்டு வீட்டு மாமாதான் எல்லோரிடமும் அதிகம் மிளகாய் பூச்சு வாங்குவார். பின்னர் சந்தோஷமாக சாமி கும்பிட்டு வீட்டுக்கு வருவோம்.

சாப்பிட்டதும் அருகில் நடக்கும் மஞ்சு விரட்டு அல்லது எருதுகட்டு பார்க்க குழுவாய் சைக்கிளில் பயணம்.

இனிப்பின் முடிவில் ஆதங்கம்:

படிக்கும் காலத்தில் பொங்கல் வாழ்த்து அட்டைகளை ஒருவருக்கு ஒருவர் அனுப்பி, தபால் காரரின் வருகைக்காக காத்திருந்து வாங்கி பிரித்துப் படித்து அடைந்த சந்தோஷம் செல்பேசியில் வரும் ஒற்றை வரி வாழ்த்திலோ இணையத்தில் அனுப்பப்படும் வாழ்த்து மெயில்களிலோ கிடைக்காமல் போய்விட்டதே.

எல்லோரும் கூடி கொண்டாடிய பொங்கல் வேலை நிமித்தம் தனித்தனியே குக்கரில் கொண்டாடப்படும் ஒரு நாளாகிவிட்டதே.

விளைத்துச் செழித்த வயல்களெல்லாம் கருவேல மரங்கள்...
நிறைந்து கிடந்த கண்மாய் வெடிப்புக்களோடு...

இளமைப் பொங்கல் மீண்டும் வர... எலோரும் இன்புற்றிருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்.

-சே.குமார்.

சனி, 9 ஜனவரி, 2010

துபாய்: உலகின் உயர்ந்த கட்டிடத்தின் அருகில்...சில நாட்களுக்கு முன் உலகின் உயர்ந்த கட்டிடமான ப(பு)ர்ஸ் துபாய் (இப்ப ப(பு)ர்ஸ் கலீபா - BURJ KHALIFA) பல்வேறு நாடுகளில் இருந்து வந்த 6000க்கும் மேற்பட்ட வி.ஐ.பிக்கள் முன்னிலையில் திறப்புவிழாக் கண்டது. இது குறித்து வலை நண்பர்கள் பலர் பதிவு எழுதி இருக்கிறார்கள்.

நம்ம கட்டுரை அது குறித்து மட்டுமல்ல, ஒரு நாள் துபாய் பயணம் குறித்த சில தகவல்கள் பற்றிய கட்டுரை இது. நேற்று (வெள்ளி) விடுமுறை தினம் என்பதால் காலையில் மெதுவாக எழுந்து குளித்துவிட்டு காலை சாப்பிட ஏதாவது செய்யலாம் என்று நினைத்த போது வாரவாரம் செய்யும் உப்புமா மனதிற்குள் வந்து மிரட்டியது. எனக்கு உப்புமா என்றால் 'உப்பு'மாதான். எனவே அறையில் இருந்த மக்ரூணியை (நம்ம சேமியா போல் பெரிய சைஸ்) தயார் செய்தேன்.


அப்போது அண்ணாவிடம் இருந்து போன் துபாய் கோவிலுக்குப் போக வேண்டும் ரெடியாகு என்றார். வேகமாக சாப்பிட்டுவிட்டு அறை நண்பர்களை சாப்பிடச் சொல்லிவிட்டு அவசரமாக அறையிலிருந்து இறங்கினேன்.

சிறிது நேரத்தில் அண்ணா குடும்பம் அவர்களது காரில் வந்தது அவர்களுடன் நான் ஏறிக்கொண்டேன். மற்றொரு நண்பரின் காரில் விசிட்டில் வந்திருக்கும் இலங்கை நண்பரின் குடும்பம் வர துபாய் நோக்கி பயணித்தோம்.


காலை 12 மணிக்கு கோவிலுக்கு சென்றோம். துபாயில் இருக்கும் சிவன் கோவில், இது ஒரு கட்டிடத்தில்தான் இருக்கிறது. கோபுரங்கள் உயர்ந்த கோவில் அல்ல. நாங்கள் சாமி கும்பிட சென்றபோது அங்கே ஐயப்ப குரு பூஜை நடந்தது. அதில் சில நிமிடங்கள் இருந்து தீபம் பார்த்துவிட்டு வெளியே வந்தோம்.

ஐயப்ப பூஜை காரணமாக சாம்பார் சாதம், தயிர் சாதம் எல்லாம் கொடுத்தார்கள் வாங்கி சாப்பிட்டுவிட்டு அங்கிருந்து தேரா துபாய் செல்லும் படகில் ஒரு திர்ஹாம் கொடுத்து பயணம் செய்து சந்தோஷப்பட்டனர் இலங்கை நண்பரின் குடும்பத்தினர்.

பின் அங்கிருந்தி கிளம்பி திருமணத்திற்காக இந்தியா செல்ல இருக்கும் நண்பரை பார்த்து வாழ்த்துச் சொல்வதற்காக கராமா சென்றோம். அவரை பார்த்துவிட்டு கிளம்ப நினைத்தபோது அவர் சாப்பிட்டுவிட்டுதான் போகணும் என்று கட்டாயப்படுத்த அஞ்சப்பரில் பிரியாணி சாப்பிட்டோம்.அங்கிருந்து கிளம்பி துபாய் மால் போகலாம் என்று வந்தால் வரும்வழியில் நிதிமையம் அருகில் வந்தபோது துபாய் மெட் ரோ இரயிலில் பயணித்துப் பார்க்கும் ஆசை வந்தது. உடனே பார்க்கிங்கில் காரை நிறுத்திவிட்டு சாலையை கடக்க அமைக்கப்பட்டிருக்கும் நடை மேடை (முழுவதும் குளிர்சாதன வசதியுடன் அழகாக அமைக்கப் பட்டிருக்கிறது) மூலம் ஸ்டேசனை அடைந்தோம். அங்கிருந்து விமான நிலையம் சென்று திரும்ப நுழைவுச்சீட்டு வாங்கி இரயிலில் ஏறினோம்.


இயக்குவதற்கு மனித சக்தி இல்லாமல் தானே இயங்கும் இரயில் அது. துபாயின் சுற்றுவட்டாரத்தை பார்த்தபடி பயணிக்கும் அருமையான பயணம். விமான நிலையத்தில் இறங்கி சுற்றிவிட்டு மீண்டும் திரும்பினோம்.

நேராக துபாய் மால்... அதற்கு அருகில் உலகின் மிக உயர்ந்த கட்டிடமான ப(பு)ர்ஸ் கலீபா. அருகில் சென்று ரசித்தோம்... அண்ணாந்து பார்த்தால் அப்பா...... தலை சுத்துது போங்க. அருகில் இருக்கும் வானளாவிய கட்டிடங்களெல்லாம் புழுக்களாய். அய்யோ... கொள்ளை அழகு.


 அந்த அழகை கொள்ளை கொள்ளும் விதமாக அதற்கு எதிரே நீர் நிறைத்து சிறிய குளம்போல் அமைத்து அதில் அழகான நீரூற்று  (நல்ல தமிழில் இப்படி சொல்லலாமா...? சொல்லுங்களேன்-Water Foundain) அமைத்து ஒவ்வொரு பதினைந்து நிமிடத்திற்கும் ஒருமுறை பாடல் ஒன்று ரம்மியமாய் ஒழிக்க இயக்கப்படுகிறது. அப்போது தண்ணீர் உயரக்கிளம்பி நடனமிடுவது கண்கொள்ளாக்காட்சி. இதை ரசிக்க கூட்டமாய் பல்வேறு மொழி பேசும் மக்கள். நாங்கள் வர மனமில்லாமல் மூன்று முறை ரசித்தோம் என்றால் பாருங்களேன்.

ப(பு)ர்ஸ் கலீபாவுக்கு எதிரே அழகிய ஓட்டல் ஒன்று அலங்கார விளக்கின் ஒளியில் அப்ஸரசாக காட்சியளித்தது என்னைக் மிகவும் கவர்ந்தது.


ஒருவழியாக துபாய் மாலுக்குள் நுழைந்தோம். மி........கப் பெ........ரிய மால், நேரமின்மை காரணமாக ராட்சஸ மீன் தொட்டியில் வளர்க்கப்படும் மீனை மட்டும் ரசித்துவிட்டு கிளம்பினோம்.

அபுதாபி சாலையை பிடித்து வரும்போது மின்னொளியில் பொருளாதார சிக்கலில் சிக்கித்தவித்தாலும் அழகிய மின்னொளியில் அழகாய்தான் இருந்தது துபாய். விரைவில் சிக்கலில் இருந்து மீள வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.


அபுதாபி எல்கையை அடைந்த போது தாய்வீட்டிற்கு திரும்பும் புதுமணப்பெண் போல் மனசுக்குள் மகிழ்ச்சி.அபுதாபி சாலையில் இருக்கும் அட்நாக் பெட் ரோல் பங்கில் சாப்பிட்டுவிட்டு அண்ணா குடும்பமும் இலங்கை நண்பர் குடும்பமும் ஒரு காரில் பயணிக்க, நானும் அறை நண்பரும் குளிர் காற்றை அனுபவித்தபடி அறைக்கு திரும்பும்போது இரவு 11மணியாகியிருந்தது.

குறிப்பு: ப(பு)ர்ஸ் எதற்காக என்றால் சிலர் பர்ஸ் கலீபா என்றும் சிலர் புர்ஸ் கலிபா என்றும் அழைப்பதால் எது சரி என்ற விவாதம் வரவேண்டாமே என்பதால்தான்.

-சே.குமார்

வெள்ளி, 1 ஜனவரி, 2010

2009 எப்படி....? - கற்பனை கலாட்டா

2010ல் நாம்... கடந்து போன 2009 நமக்கு சந்தோஷம், சோகம், நட்பு, காதல், விபத்து, ஆச்சரியம் என பலவற்றை கொடுத்திருக்கலாம். எனவே சந்தோஷம் அதிகம் பெற்றவர்கள் இது போல் வருடம் இனி வருமா? என்று வாழ்த்துவார்கள். சங்கடங்களை அனுபவித்தவர்கள் அப்பா தொலைந்தது என்று நிம்மதிப் பெருமூச்சு விடுவார்கள். என்னதான் இருந்தாலும் 52 வாரங்கள் நம்முடன் உறவாடிய வருடம் அல்லவா...? அதற்கு மரியாதை செலுத்தும் விதமாக சில நண்பர்களிடம் 2009 எப்படி என்று கேட்டோம். அதற்கு அவர்கள் அளித்த பதில் இதோ...

போலீஸ்காரர்: நமக்கு 2009 'மாமூலா' போச்சுங்க. அதிக வரவும் இல்லை... அதிக செலவும் இல்லை. அதனால 'மாமூல்' வாழ்க்கை பாதிக்கலைங்க.

அர்ச்சகர்: என்ன இப்படி கேட்டுட்டேள்... பகவானுக்கு எத்துன 'தீபம்' மாதிரி நல்லா ஷேமமா இருந்தது. 'அஞ்சு பத்து' கூடக்குறைய இருந்தாலும் பகவான் கஷ்டப்படவிடலை.

டாக்டர்: என்ன தம்பி கேட்டே... எங்கே ஒரு தடவை நல்லா மூச்சை இழுத்துவிட்டு கேளு. ம்... அப்படித்தான், நமக்கு 'குளோரோபாம்' கொடுத்த நோயாளி மாதிரி சில நாளும் 'இனிமா' கொடுத்த நோயாளி மாதிரி பல நாளும் ஓடுச்சு. மொத்தத்துல நல்ல வருஷம்.

வக்கீல் : என்ன இந்த வருஷம் நல்ல வருமானம் இல்ல. அதனால மனைவி கேட்ட பொருட்களை வாங்கி கொடுக்க முடியாம 'வாய்தா' வாங்க வேண்டியதாப்போச்சு.

முடிதிருத்துபவர்: நம்மளை 2008 மாதிரி சுத்தமா 'மொட்டை' அடிச்சுடலை சாமி. ஆனா என்ன காலேசு பசங்க 'கிருதாவை' ஏத்தி எறக்குற மாதிரி ஏத்தம் ஏறக்கம் இருந்துச்சு.

டிரைவர்: ஆரம்பத்துல 'பர்ஸ்ட் கியர்ல' போச்சு அப்புறம் பிக்கப் ஆகி சும்மா 'டாப் கியர்ல' போச்சுல்ல... இடையில 'வேகத்தடையே' இல்லையில்ல.

கல்லூரி மாணவன்: இந்த வருஷம் நமக்கு நல்லாயில்லை பாஸ். காதல்ல 'அரியர்', படிப்புல 'அரியர்'ன்னு மப்பாத்தான் போச்சு.

தையல்காரர்: என்ன அண்ணாச்சி. இந்த வருஷம் பரவாயில்லைங்க. பட்ஜெட்டுல 'பிட்' விழுகலை. அதனால செலவுல அதிகம் 'கத்திரி' வைக்கலை.

இனிப்பக உரிமையாளர்: சுவீட்டான வருஷமுங்க... 'அல்வா' மாதிரி தித்திப்பா போனாலும் இடையில 'முறுக்கு' மாதிரி கரமுர இருக்கத்தான் செய்தது. கஷ்டமில்லா வாழ்க்கை இனிக்காதுங்களே.

விவசாயி: இந்த வருஷம் நல்லா தண்ணி விட்ட 'பயிர்' மாதிரி பசுமையா இருந்துச்சுங்க. பிள்ளைக்குத்தான் சரியா 'உரம்' போடலை... கல்யாணத்துக்கு அப்புறம் ஏர்ல பூட்டுன 'மாடு' மாதிரி பொண்டாட்டி பின்னால பொயிட்டான்.

ஆசிரியர்: இந்த வருசத்துல சில 'கழித்தல்'களும் பல 'கூட்டல்'களும் இருந்தது. அப்பப்ப பெருக்கலும் இருந்துச்சு.

கிரிக்கெட் வீரர்: சில நாள் 'டெட்பால்', சில நாள் 'பவுன்சரு'ன்னு போனாலும் பல நாள் நல்லா போச்சு. மொத்தத்துல இந்த வருசம் 'டுவெண்டி20' மாதிரி போச்சுங்க.

நடிகர்: இந்த வருஷம் சில்வர் சூப்ளின்னு சொல்ல முடியாது. ஆனா 'பிளாப்' ஆகலை.

பிச்சைக்காரர்: என்னத்தை சொல்ல சில்லறைத்தனமான வருஷம்.

செய்தி வாசிப்பவர்: ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் இந்த ஆண்டு நல்ல ஆண்டாக இருந்ததாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கல்லூரி மாணவி: 2009...? வாவ்.... சூப்பர்..... ரியல்லி கிரேட் இயர்யா... ஹி....ஹி....ஹி........ (தமிழ்ல பேச போன பொண்ணுதான்... அந்த நேரம் பார்த்து ஒரு பய வந்துட்டான்).

சரிங்க....... போதுமுங்க...... பேட்டி முடிஞ்சுருச்சு.......... மறக்காம ஓட்டுப் போடுங்க முடிஞ்சா கருத்துச் சொல்லுங்க.

சே.குமார்.