மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 25 பிப்ரவரி, 2017

மனசு பேசுகிறது : கன்னி மாடம்

சாண்டில்யனின் கதைகளில் இரண்டு நாயகிகள்... அவர்களைப் பற்றிய வர்ணனைகள் சற்று கூடுதலாகவே இருக்கும். இவற்றை சற்றே தள்ளி வைத்து விட்டுப் பார்த்தால் ஒரு வரலாற்று நிகழ்வை சான்றுகளுடன் எடுத்துச் சொல்லி அதில் உண்மையான கதாபாத்திரங்களுடன் அவரின் கற்பனைக் கதாபாத்திரங்களை உலவச் செய்து அருமையான நடையில் கதையை நகர்த்தி போர்க்களக்காட்சிகளை  நம் கண் முன்னே நிறுத்தி வாசித்து முடிக்கும் போதும் நம் மனசுக்கு ஒரு நிறைவைக் கொடுக்கும் விதமாக எழுதியிருப்பார். அந்த நிறைவுதான் அவரின் நாவல்களை தொடர்ந்து வாசிக்க வைத்துக் கொண்டு இருக்கிறது.
Image result for கன்னி மாடம்
கன்னி மாடத்தின் கதை நடந்தது பனிரெண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில்... பாண்டியர்களுக்குள் தயாதி சண்டை ஏற்பட்டு பாண்டிய நாடு இரண்டாகப் பிரிந்து இது இரண்டு தலைமுறைகளைப் பாதித்து நீண்ட காலம் நீடித்தது. நெல்லையில் குலசேகர பாண்டியனும் மதுரையில் பராக்கிரம பாண்டியனும் ஆண்டு வந்தனர். அவர்களின் தயாதி சண்டை, ஒரு கட்டத்தில் போரில் வந்து நிற்க, குலசேகரன் பராக்கிரமன் மீது படை எடுத்தான். பராக்கிரமனோ தன்னையும் நாட்டையும் காத்துக் கொள்ள சிங்களத்து உதவியை நாடினான்.  இலங்காபுரி அரசன் அனுப்பிய இலங்காபுர தண்டநாயகன் தலைமையிலான படை வந்து சேருமுன்னர் பராக்கிரமனை கொன்று மதுரையைப் பிடித்தான் குலசேகரன், அவனிடமிருந்து தப்பியோடினான் பராக்கிரமனின் மைந்தன் வீரபாண்டியன். தண்டநாயகனோ குலசேகரனை வென்று மதுரையை தன்வசமாக்கி வீரபாண்டியனை அரியணையில் ஏற்றி வைத்ததுடன் அவனை வைத்தே பாண்டிய நாட்டை சிங்களத்தின் ஒரு பகுதியாக்கிக் கொள்ளத் திட்டமிட்டான். அதனால் மக்களைத் துன்புறுத்தி, பயிர் பச்சையை அழித்து, தமிழர்களை சிறைப் பிடித்து சிங்களத்துக்கு வேலைக்கு அனுப்பியதுடன் இலங்கை நாணயத்தை பாண்டிய நாட்டில் புழங்க வைத்தான்.
குலசேகரனோ சோழர்களின் உதவியை நாடினான்... ராஜராஜன், ராஜேந்திரன் காலங்களில் இலங்கை மட்டுமல்ல பல தேசங்களை தங்கள் வசம் வைத்திருந்த வீரம் நிறைந்த, கலைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்த, தமிழகம் மூவேந்தர்களால் பிளவுபட்டுக் கிடக்கக் கூடாது என்று நினைத்த சோழ சாம்ராஜ்யத்தின் அப்போதைய அரசனாக் இரண்டாம் இராஜாதிராஜன், அவனுக்கு உதவவும் சிங்களத்தின் பிடியில் இருந்து தமிழர்களைக் காக்கவும் தமிழகத்தில் நுழைந்து ஆட்டம் போடும் சிங்களத்தின் கொட்டத்தை அடக்கவும் நினைத்தான். அதற்காக பல்லவராயன் சகோதர்களான தனது முதன் மந்திரி மற்றும் படைத்தலைவன் இருவரையும் நியமித்தான். அவர்கள் இலங்காபுர தண்டநாயகனை வென்று தமிழகத்தையும் தமிழர்களையும் எப்படிக் காத்தார்கள் என்ற வரலாறு இலங்கையின் இராஜபரம்பரை நூலான மஹாவம்சத்திலும் தமிழ்நாட்டு சாசனங்களிலும் காணப்படுவதாகவும். மேலும் நீலகண்ட சாஸ்திரியார் சோழர்களைப் பற்றிய தனது சரித்திரப் புத்தகத்தில் தெளிவாக எழுதி இருப்பதாகவும் தனது முன்னுரையில் சொல்லியிருக்கிறார் சாண்டில்யன்.
இந்த சரித்திர பின்னணியை களமாக்கி அதில் பெரும்பாலான வரலாற்றுப் பாத்திரங்களுடன் அபராஜிதன், கார்குழலி, சிங்களத்துப் பைங்கிளி, அடிகளார் என சில கற்பனைப்  பாத்திரங்களை உலவ விட்டு கதை சமைத்திருக்கிறார் சாண்டில்யன். அவர் சமைத்த கதை மிகவும் விறுவிறுப்பாய், வாசிக்கும் ஆவலைத் தூண்டும் விதமாய் இருந்தது என்பது உண்மையே... 
கன்னி மாடம் என்பது அரண்மனைப் பெண்டிர்கள் தங்கியிருக்கும் ஒரு இடம். அங்கு ஆண்கள் செல்லக்கூடாது என்ற சட்டம் உண்டு. அதை மீறினால் அவர்களின் தலை துண்டிக்கப்படும் என்பதாய் சொல்லப்படுகிறது. பாண்டிய நாட்டு எல்லைக்கருகில் மழவராயன் என்னும் சிற்றரசன் பழைய கோட்டையை பழுது பார்த்து வைத்திருக்கிறான். அந்தக் கோட்டையை கன்னி மாடம் என்ற பெயரில் பாண்டியர்களுடன் போர் வந்தாலும் பயன்படுத்தும் விதமாக மிகவும் பாதுகாப்பானதாக, தீடீர் போர் ஏற்பட்டாலும் உள்ளிருப்பவர்களை விரைவில் அணுக முடியாத வண்ணம் யாரும் அறியாத சுரங்கப்பாதை வசதியுடன் அமைத்திருப்பதுடன் அங்கு தம் மகள் கார்குழலியை அவளை சிறுவயதில் இருந்து பார்த்துக் கொள்ளும் அடிகளாரின் பாதுகாப்புடன் தங்கவைத்திருக்கிறான்.
வீரபாண்டியன் சிங்களத்துப் பைங்கிளியின் மயக்கத்தில் கிடங்க, இலங்காபுர தண்ட நாயகனோ தமிழர்களை அடிமைப்படுத்தி, துன்புறுத்தி வருகிறான். இவர்களிடம் இருந்து நாட்டை மீட்க, ரகசியமாய் கூடுகிறார்கள் நிஷதராஜன், வங்கார முத்தரையர், கருணாகரத் தேவன் மற்றும் காரி... இவர்களின் இந்த ரகசிய பேச்சில் முக்கியமானவனாகவும் அவனால்தான் முடியும் என்றும் நம்பும் மனிதனாக வீரபாண்டியனின் உறவினனும் மதுரையின் சேனாதிபதியுமான அபராஜிதன் இருக்க, ரகசிய இடத்துக்கு வரும்  அபராஜிதனோ வீரபாண்டியனை எதிர்க்க மறுக்கிறான். மக்கள் நலனுக்காக என்று சொல்லி, அவர்கள் உண்மையை விளக்க, சம்மதிக்கலாமா வேண்டாமா என்ற குழப்ப நிலையில் விவாதிக்கும் போது குதிரைகள் வரும் குளம்பொலி கேட்கிறது.
அவர்களைத் தேடி தண்டநாயகனின் வீரர்கள் அந்த ரகசிய இடம் வர, கருணாகரத் தேவன் தவிர மற்றவர்கள் தப்பியோடி... சண்டை இட்டு... காட்டுக்குள் இருந்து வெளியாக நிஷதராஜனும் முத்தரையரும் மாட்டிக் கொள்ள அபராஜிதனுக்கு ஏற்பட்ட வேல்காயத்துடன் அவனும் காரியும் மழவ நாட்டு எல்லையில் இருக்கும் படை வீரர் கூடாரம் வர, அது இலங்காபுரனின் தலைமையில் தங்கியிருக்கும் பாண்டியர் படை என்பதையும் அங்கு தண்டநாயகனுடன் சிங்களத்துப் பைங்கிளியான மாதவியும் இருக்கிறாள் என்பதையும் அறிகிறார்கள். மாதவியின் சூழ்ச்சியில் வீழாமல் அங்கிருந்து தப்பி, கன்னிமாடத்தின் முன்னே இருக்கும் காட்டில் வந்து ஓய்வெடுக்க, கார்குழலி மற்றும் அடிகளாரால் பார்க்கப்பட்டு... அபராஜிதனை அடிகளார் யாரென அறிந்து கொண்டாலும் அவன் சொல்லக்கூடாது என்று கேட்டுக் கொண்டதற்கிணங்க கார்குழலிக்கு யாரெனச் சொல்லாமல் மறைத்து விடுகிறார். கார்குழலியே அபராஜிதனுக்கு சிகிச்சை அளித்து யாருக்கும் தெரியாமல் கன்னி மாடத்தில் தங்க வைக்கிறாள், மறுநாள் மழவராயன் அங்கு வர, குலசேகரனும் கார்குழலியை தன் மகனுக்கு கேட்டு வருகிறான். அபராஜிதனும் காரியும் யாரும் அறியாமல் அங்கிருந்து தப்பி மதுரை வர, நிஷதராஜன் மற்றும் முத்தரையர் தலைகள் வெட்டப்பட்டு கோட்டை மீது கம்பியில் சொருகப்பட்டு கழுகுகள் கொத்தித் தின்று கொண்டிருப்பதைக் கண்டு திகைக்கின்றனர்.
பின்னர் நடக்கும் நிகழ்வுகளில் மாதவி அபராஜிதனை மயக்கப் பார்க்க, வீரபாண்டியன் கார்குழலியை திருமணம் செய்து கொள்ள விரும்பி அபராஜிதனை தூதுவனாக்க நினைக்க, அவனோ மனசுக்குள் கார்குழலியை மது, மாது என்றிருக்கும் இவனுக்கு மணமுடிப்பதா என்று தவிக்கிறான். ஆனாலும் பாண்டிய நாட்டை சிங்களவர் பிடியில் இருந்து காக்கவும், தமிழர்களைக் காக்கவும் இது அவசியமென அவனுடன் வாதாடும் கருணாகரத் தேவன், அதற்கான ஓலையுடன் சென்று காரியத்தை முடித்து வர, மழவராயன் அரண்மனைக்குச் செல்லும் வீரபாண்டியன், கார்குழலி அழகில் மயங்கி மது போதையில் அவளிடம் தகராறு செய்ய, அடிகளார் அந்த நேரத்தில் வந்து காக்க, கார்குழலி மணமோ குலசேகரன் மகனையோ வீரபாண்டியனையோ நினைக்காமல் அபராஜிதனை நினைக்கிறது. கார்குழலி காதலிக்கிறாள் என்று அடிகளார் சொல்லும் ஒரு பொய்யால் அவர் வீரபாண்டியனால் துன்புறுத்தப்பட்டு, பொறுக்க முடியாமல் அவள் காதலிப்பது அபராஜிதனை என்று சொல்லிவிட, மாதவி, கார்குழலி என இருவரையும் மயக்கிவிட்டானே என்ற கோபத்தீயில் அபராஜிதனை நாடு கடத்துகிறான் வீரபாண்டியன். அத்துடன் தன்னைச் சந்திக்க வந்த அண்ணன் பல்லவராயனிடம் சோழர்களுடன் போருக்கு அழைப்பும் விடுத்து விடுகிறான்.
நாடு கடத்தப்பட்ட அபராஜிதன், மழவநாடு செல்ல, அந்த சமயத்தில் குலசேகரன் மகன் விக்கிரம பாண்டியன் அடிகளாரின் ஆணைக்கிணங்க கள்ளுக்கடையான் எனப்படும் மார்க்கீயன் உதவியுடன் கார்குழலியை கன்னி மாடத்துக்கு கடத்திச் செல்கிறான். அவளைக் காக்க அங்கு வருகிறான் அபராஜிதன், அவளைக் கொண்டு செல்ல போர் கோலம் பூணுகிறான் வீரபாண்டியன். அபராஜிதன் தான் யார் என்று சொல்லாமலே கன்னி மாடத்தை தன் கைப்பிடிக்குள் கொண்டு வருவதுடன் கார்குழலியுடனான காதலும் இறுக்கமாக, விக்கிரம பாண்டியனுக்குள் நெருப்பு மூள்கிறது. அந்த நெருப்பு தனக்கு எதிரியானாலும் எதிரிக்கு எதிரி நண்பன் என்ற முறையில் வீரபாண்டியனுக்கு உதவ, அதை எப்படி அபராஜிதன் உடைத்து கன்னி மாடத்தையும் கார்குழலியையும் காத்து வீரபாண்டியனை புறமுதுகிட்டு ஓட வைக்கிறான் என்பதை விரிவாய் சொல்லி, அதன் பின்னர் அபராஜிதனுடன் அண்ணன் பல்லவராயன் வந்து இணைய, காரி, மார்க்கீயன் மற்றும் கருணாகரத் தேவனின் உதவியுடன் இலங்காபுரனையும் இலங்கையில் இருந்து வரும் மற்றொரு படைத்தலைவனான ஜகத்விஜயனையும் தனது தந்திரத்தால் தோற்கடித்து தலைகளை வெட்டி கோட்டையில் சொருகி தன் நண்பர்களான நிஷத ராஜனையும் முத்தரையரையும் கொன்றதற்கு பலி தீர்த்துக் கொள்கிறான். சிங்களத்துப் பைங்கிளியான மாதவியோ அபராஜிதனை மயக்க நினைத்து முடியாமல் போக கண்ணீருடன் மீண்டும் இலங்கைக்குச் செல்கிறாள். 
கன்னி மாட மீட்புக்குப் பிறகு இலங்கையின் தண்டநாயகன் மற்றும் படைத் தலைவனுடனான் போர், ஜகத்விஜயனை மயக்கி, தன் காரியத்தை சாதித்துக் கொள்ள நினைக்கும் மாதவி செய்யும் தந்திரங்கள், தொண்டியில் கருணாகரத் தேவன் ஜகத்விசயனை ஏமாற்றி சிறை செய்வது, பொன்னமராவதியில் எழும் புரட்சி என மற்றொரு கதைக்களத்துக்குள் பயணித்த அனுபவத்தைக் கொடுத்து என்றால் மிகையில்லை.  மதுரை குலசேகரன் கைக்கு வந்ததும் அபராஜிதனை விட்டு மழவராயன் இறப்புக்குப் பிறகு அந்த சிற்றரசை ஆட்சி செய்து வரும் கார்குழலியிடமிருந்து மழவநாட்டைப் பெற்று சோழர்கள் வசம் கொடுக்கச் சொல்கிறார் பல்லவராயன், அவன் மறுக்க சிறை செய்யப்படுகிறான். கருணாகரத் தேவர் கார்குழலியிடம் தூது செல்ல, தன் காதலுக்காக நாட்டை விட்டுக் கொடுத்து காதலனைச் சிறை மீட்கிறாள் கார்குழலி. அவர்களின் திருமணம் பல்லவராயர்கள் தலைமையில் மதுரையில் சிறப்பாக நடக்க, கன்னி மாடத்தை சீதனமாக கார்குழலியிடம் கொடுத்துவிடுகிறார் பல்லவராயர்.
இந்த நாவலுக்குப் பின்னர் சேரன் செல்வி வாசித்தேன்... அதிலும் ஒரு வீரபாண்டியன்... கன்னி மாட வீரபாண்டியன் சிங்களவனுக்கு இடமளித்தான் என்றால் சேரன் செல்வி வீரபாண்டியனோ முகமதியர் தமிழகத்தில் காலூன்ற உதவி செய்கிறான். அவனை எதிர்த்து முகமதியரின் தமிழக காலூன்றலையும் தடுக்கின்றான் சேரன் ரவிவர்ம குலசேகரன். பெரும்பாலான கதைகளில் வீரபாண்டியன் என்றே வருவதும் அவனது செயல்கள் மாறி மாறி இருப்பதுமே குழப்பம்... சரி விடுங்க... வேறு வேறு வீர பாண்டியர்களாக இருப்பார்களோ என்னவோ.... எது எப்படியோ கன்னி மாடம் படிக்க படிக்க ஆவலைத் தூண்டும் கதை என்றால் சேரன் செல்வி கீழே வைக்க விடாமல் படிக்க வைத்தது. அது குறித்து மற்றுமொரு பகிர்வில்...
-'பரிவை' சே.குமார்.

புதன், 22 பிப்ரவரி, 2017

6. என்னைப் பற்றி நான் - மதுரைத்தமிழன்

ன்னைப் பற்றி நானில் ஆறாவது முகமாய் தன்னைப் பற்றி விரிவாய் சொல்லியிருக்கிறார் 'அவர்கள் உண்மைகள்' மதுரைத் தமிழன் அவர்கள்... இவருடைய தளத்தில் பெரும்பாலும் பலரின் கருத்துக்கள் விரிவாய் இருக்கும். நான் பெரும்பாலும் சுருக்கமாய் ரெண்டு வரிக்குள்ளோ, ரெண்டு வார்த்தைக்குள்ளோ முடித்துக் கொள்வேன். இவரின் தளத்தை தொடர்ந்து வாசித்தாலும் பல நேரத்தில் கருத்து இடுவதும் இல்லை... இவரின் தளமின்றி தற்போது பெரும்பாலான தளங்களை வாசித்து விடுகிறேன். கருத்து இடமுடியாமல் அலுவலகம், சமையல் பணி, ஊருக்குப் பேசுதல் பின்னர் எப்படா சாப்பிட்டுப் படுப்போம் என நினைவு வர, படுத்துக் கொண்டே வாசித்துவிடுவேன்... கருத்து இட முடிவதில்லை.

மதுரைத் தமிழன் அவர்களுடன் பதிவு குறித்து கருத்துப் போரோ... முகநூல் அரட்டையில் விவாதமோ செய்ததில்லை... அவர் கலாய்க்கும் அரசியல் பதிவுகள் எனக்கு ரொம்பப் பிடிக்கும். பெரும்பாலும் அரசியல்வாதிகள் குறிப்பாக மறைந்த அம்மா, கலைஞர், ஸ்டாலின், வைகோ என காமெடியாக எதாவது படம் தேடினால் அதில் கிடைப்பது இவர் எடிட் பண்ணின படங்களாக எனக்கு அமையும். குறிப்பாக தேர்தல் சமயத்தில் எழுதிய பதிவுகளில் பகிர்ந்த படங்கள் பெரும்பாலும் இவர் பகிர்ந்த படங்களே.

எழுத்தின் தொடர்பால் என்னைப் பற்றி நான் குறித்துச் சொல்லி அதற்கு தங்கள் பதிவு வேண்டும் என்று சொல்லிக் கேட்டதும் உடனே அனுப்பிக் கொடுத்தார். சென்ற வாரம் பகிர்ந்த கில்லர்ஜி அண்ணாவின் பதிவு வந்த ஒரு மணி நேரத்தில் இவரின் பதிவும் வந்தது. கேட்டதும் அனுப்பிக் கொடுத்த அண்ணாவுக்கு நன்றி.

இருவருக்கும் அதிகம் தொடர்பு இல்லை என்றாலும் புகுந்த வீட்டுத் தொடர்பு இருக்குல்ல அது போதும்ல்ல... அவரு செங்கோட்டையில் பிறந்து மதுரையில் படித்து வளர்ந்திருக்கிறார். என் மனைவி பிறந்தது மதுரை... அதனால ரெண்டு பேருக்கும் புகுந்த வீடு ஒண்ணுதானே... முகம் பார்க்காமல்... குரலைக் கேட்காமல்... ஏதோ ஒரு பந்தம் நம்மை இணைத்து வைக்க, அவரைப் பற்றி முழுமையாக அறிக் கொடுத்திருக்கிறார். வாசியுங்கள்... அதே அக்மார்க் மதுரைத் தமிழனின் குறும்பு எழுத்தில் கண்டிப்பாக உங்களைக் கவரும்...


பொதுவாக அடுத்தவர்களைப்பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வம் மனிதர்களுக்கு உண்டு அதன் அடிப்படையிலே பல வார இதழ் நாளிதழ்கள் செயல்படுகின்றன. மேலும் அவைகள் தனிப்பட்டவர்ளை பற்றி கிசு கிசுப்பு என்ற பாணியில் பல கட்டுக்கதைகளை அவிழ்த்து விடுகின்றன. ஆனால் வலைப்பதிவர் மனசு குமார் அப்படி அல்லாமல் வலைப்பதிவர்களை பற்றி வாரம் தோறும் பதிவர்களையே 'என்னைப்பற்றி நான்' என்று கேட்டு வாங்கி பதிகிறார். அவர் என்னிடம் கேட்டு கொண்டதற்கிணங்க என்னை பற்றிய உண்மையாண தகவல்களில் எனது பேங்க் அக்கவுண்ட் . ,எனது பழைய மற்றும் இன்னாள் காதலிகள் போன்ற விஷயங்களை தவிர்த்து எழுதி இருக்கிறேன்

என்னைப்பற்றி என்று  சொல்லும் போது உயிரும் உடலும் தந்த அம்மா, அப்பா  வழிகாட்டியாக விளங்கிய  அண்ணன், ஆசிரியர்கள், வாழ்க்கையைச் செதுக்கிய & வாழவைத்த புத்தகங்கள், உயிர் நண்பர்கள் என்று பலதும் மனதில் முட்டிக்கொண்டு நிற்கின்றன. இதில்  எதை முதலில் சொல்வது எதை அடுத்துச் சொல்வது என்று தீர்மானிக்க இயலாத வண்ணம் அனைத்தும் ஒன்றை ஒன்று போட்டி போட்டுக் கொண்டு வரிசையில் இணைந்து நிற்பதை எப்படி  பிரித்து எதை முதலில் எழுதுவது எதை அடுத்து எழுதுவது என்பது விளங்கவில்லை. அதனால் மனம் போன போக்கில் எழுதுகிறேன்.

தமிழகத்தில் குற்றலாத்திற்கு அருகில் உள்ள செங்கோட்டை என்னும் ஊரில் பிறந்தவன் நான் அதனால் என்னை செங்கோட்டை சிங்கம் என நினைத்து கொள்ள வேண்டாம் குற்றாலத்தில் இருந்து தப்பி வந்த குரங்காவே கருதி கொள்ளுங்கள் (குரங்காக உங்களை கருதவில்லை நீங்கள் குரங்குதான் என்றுதான் நாங்கள் சத்தியம் பண்ணுகிறோம் என்று நீங்கள் முனுமுனுப்பது என் காதில் விழுகிறது) குற்றால குரங்காக இருந்த நான் அழகர்கோவில் குரங்காக மாறிவிட்டேன் அதுதானங்க மதுரைக்காரானாக மாறி மதுரையில் வளர்ந்தேன்.  அதன் பின் சென்னைவாசியாகி  கடைசியில்  அமெரிக்கா வாசியாகிவிட்டேன்

என் குடும்பத்தை பற்றி: எங்கள் வீட்டில் நாலு காளை மாடுங்க மட்டும் அதில் நாந்தன் கடைக்குட்டி என் மனைவி வீட்டில் மூன்று பசுமாடுக்கள் அதில் என் வீட்டாம்மா இரண்டாவது. நாங்கள் இருவரும் வேறு வேறு மதத்தை சார்ந்தவர்கள்.  நான் படித்தெல்லாம் என் மனைவி மதம் சார்ந்த் பள்ளிகளில் என் மனைவி படித்தது எல்லாம் என் மதம் சார்ந்த பள்ளிகளில். நாங்கள் இருவரும் ஒன்றாக படித்தவர்கள் அல்ல ஆனால் சென்னையில் ஒன்றாக மியூசிக் அகடமி அருகில் உள்ள நிறுவனத்தில் ஒன்றாக வேலை பார்த்தவர்கள், அங்கு நான் வேலை பார்க்கும் போது அங்குள்ள வேறு ஒரு பெண்ணைக் காதலித்தேன் என் மனைவியோ என்னை காதலித்தாள் கடைசியில் என் காதலை பிரித்து தன் காதலை நிறைவேற்றிக் கொண்டாள். நானும் இந்த காதலுக்கு சம்மதித்ததுக்கு காரணம் "நீ விரும்பும் பெண்ணை கல்யாணம் பண்ணிக் கொள்வதைவிட உன்னை விரும்பும் பெண்ணைக் கல்யாணம் பண்ணிக் கொண்டால் வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்" என்று ஒரு பெரிய மனுசன் சொன்னான் என்பதை படித்து அதன்படி நடந்து கொண்டேன், இப்ப அப்படி சொன்னவனை தேடிக் கொண்டிருக்கிறேன் மவனே அவன் மட்டும் என் கையில் கிடைத்தால்  ஒரு வழி பண்ணிவிடுவேன். ஆ ஒன்று சொல்ல மறந்துவிட்டேன் எங்கள் குடும்பம் வசித்தது எல்லாம் பிராமணர்கள் வாழும் குடியிருப்பு பகுதிகளில் அல்லது பிராமணர்கள் வீட்டுக்கு அருகில் அதுபோல என் மனைவி குடியிருந்த பல பகுதிகளில்  அதற்கு அப்போசிட்டாகத்தான்.

 நான் காதல் கல்யாணம் பண்ணிக் கொண்டதற்கும் என் மனைவி பண்ணிக் கொண்டதற்கும் சில உண்மையான காரணங்கள் இதுதானுங்க... எனக்கு ஆரேஞ்ச்டு மேரேஜ்ஜில் மாலை போட்டு ஊர்வலமாக வந்து எல்லோருக்கும் மத்தியில் உட்கார்ந்து உறவினர்கள் நண்பர்கள் மத்தியில் ஒரு சுட்டிக்காட்டும் பொருளாக இருக்க விரும்பவில்லை அது போல என் மனைவி யாருக்கோ வரதட்சணை கொடுத்து அடிமையாக போக விருப்பம் இல்லாதவள் . இந்த காரணங்கள்தான் எங்களை இணைத்து கல்யாணம் வரைக்கும் கொண்டு சென்றது இதுதான் நாங்கள் இருவரும் காதல் கல்யாணம் பண்ணியதற்கான  உண்மையான காரணம். நாங்கள் ஒன்றும் சமுகபுரட்சி பண்ணவேண்டும் என்று கருதி கல்யாணம் பண்ணவில்லை.

நாங்கள் இருவரும் மதம் ஏதும் மாறவில்லை அவரவர்கள் மதத்தில்தான் இன்று வரை இருக்கிறோம் எங்கள் குடும்பங்களிலும் அது பிரச்சனைகளாக இருக்கவில்லை  எங்கள் காதல் வாழ்க்கை இன்று வரை நல்லபடியாக இருக்க எங்கள் வாழ்க்கையில் யாரையும் குறுக்கிட அனுமதிப்பதில்லை எங்கள் குடும்பத்தார்கள் யாராவது எங்கள் இருவரில் யாரையாவது குறை சொல்ல அனுமதிப்பதில்லை. இதுவரை அப்படி யாரும் முயற்சித்ததில்லை அப்படி முயற்சித்தாலும் அவர்களை தயவு தாட்சண்யம் பார்க்காது தூக்கி ஏறிந்துவிடுவோம். மேலும் எங்கள் உறவினர்கள் நண்பர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் எங்கள் வீட்டில் தங்கும்  போது அவர்களது மத பழக்க வழக்கங்களை முழுமனதோடு செய்ய நாங்கள் என்றும் துணையாகவே இருப்போம். உதாரணமாக இந்து உறவினர்கள் நண்பர்கள் வந்து தங்கும் பொது இன்று அமாவாசை விரதம் இருக்கணும் அல்லது திதி பண்ணனும் பூஜை பண்ணனும் என்றால் அவர்களுக்கு தேவையானதை வாங்கி கொடுப்போம் இல்லை இஸ்லாமிய கிறிஸ்துவ உறவுகள் வந்தால் அவர்கள் விரும்பியவாறு தொழுகை நடத்தவோ அல்லது பைபிள் படித்து பிரார்த்தனை செய்ய விரும்பினால் அதற்கும் பைபிள் கொடுத்து பிரார்த்தனை செய்ய வழி செய்வோம் அது போல நண்பர்களுடன் சேரும் போது அவர்களின் வழிபாட்டு தளங்களுக்கும் எந்த ஒரு வேற்றுமை இன்றி சென்று வருவோம்

எங்களுக்கு இரு குழந்தைகள் ஒரு பெண் குழந்தையும் ஒரு ஆண் நாய்குட்டியும் எங்கள் வீட்டு நாய்குட்டியும் எனது குழந்தை போலத்தான் அந்த நாய்குட்டி என் கூட ஒரே பெட்டில்தான் தூங்குவான் எங்கள் வீட்டில் மிகமிக அதிகம் செல்லம் கொண்டவனும் அவனே. ஆ... ஒன்று சொல்ல மறந்துவிட்டேன் நான் PETA உறுப்பினரோ அல்லது ஆதரவாளனோ அல்ல

கல்லூரி படிப்பு படித்து முடித்துவிட்டு சென்னைக்கு வரும் வரையில் வீட்டிற்கு வெளியே தண்ணீர் கூட குடிப்பது கிடையாது ஆனால் சென்னைக்கு வந்த பின் எல்லாம் அப்படியே மாறிவிட்டது சென்னைக்கு வந்த பின் மஞ்சள் காமாலை வந்து அது குணம் ஆகிய சில மாதங்களுக்கு பிறகு உடல் அடக்கடி சோர்ந்து போன போது ஒரு மலையாளி நண்பரால் பீர் எனக்கு அறிமுகப்படுத்தப்பட்டது அதன் பின் என் கூட வேலை பார்த்த பார்ட் டைம் பெரியவர்கள் கூட சேர்ந்து அவர்கள் என்னைவிட வயதில் மூத்தவர்கள் ஒருவர் நியூ காலேஜ் புரபசர், ஒருவர் கோத்தாரி எக்ஸ்போர்ட் கம்பெனியில் பெரிய பதவி வகித்தவர், ஒரு சேல்ஸ் டாக்ஸ் ஏ,சி.ஒ, இன்னொருவர் நான் வேலை பார்த்த கம்பெனியின் இரண்டாம் ஸ்தானத்தில் இருந்தவர் என் அண்ணனுடைய நண்பர் மற்றும் சில நண்பர்களோடு தினமும் இரவு சரக்கு அருந்தி விட்டு மவுண்ட் ரோட், பாரிஸ் நுங்கம்பாக்கம் இப்படி பல இடங்களில் ராக்கோழிகள் போல அலைந்து ஹோட்டலுக்கு சென்று சாப்பிடுவோம் அந்த பழக்கம் இங்கே அமெரிக்கா வந்ததும் அடியோட சில ஆண்டுகள் மாறி சரக்கு அடிப்பதே இல்லாமல் போயிற்று காரணம் கூட சேர்ந்து அடிப்பவர்கள் துணையில்லாததால் அதன் பின் என் மனைவியின் ஆபிஸ் நண்பர்கள் பழக்கம் ஆயினர் அதன் பின் வார விடுமுறையில் ஒரு நாள் சேர்ந்து அடிக்கும் பழக்கம் ஏற்பட்டது அதன் பின் நாங்கள் எல்லோரும் இங்கு பிரிந்து வேறு மாநிலங்கள் சென்ற பிறகு அந்த பழக்கம் சிலகாலம் தடைபட்டதும் அதன் பின் புது நண்பர்களுடனும் வீட்டிற்கு அருகில் குடி இருக்கும் குடும்பத்தினருடன் பார்ட்டிகளின் போது அருந்தும் பழக்கம் இருக்கிறது இப்போது அதுவும் மிக குறைந்துவிட்டது

எனக்கு பிடித்த பொழுது போக்கு வலைத்தளத்தில் அரசியல் தலைவர்களை நையாண்டி செய்வது அடுத்தபடியாக நண்பர்களை வீட்டிற்கு அழைத்து அவர்களுக்கு என் கையால் சமைத்து கொடுத்து உண்று  குடித்து மகிழ்வது லாங்க் டிரைவ் பண்ணுவது, சிறுவயதில் எனக்கு மிகவும் பிடித்தது புத்தகங்கள் படிப்பது பாடப் புத்தகங்கள் அல்ல .பிடிக்காதது விமானப்பயணம், போனில் பேசுவது.

உணவு வகைகளில் நான் வெஜ் எப்போதாவது சாப்பிடுவது ஃபிஷ் பிரை மற்றும் எக் மட்டும் பிரியாணி பிடிக்கும் ஆனால் அதில் உள்ள சிக்கன் அல்லது மட்டனை எடுத்து வைத்து விட்டு சாப்பிடுவேன் அதுவும் எப்போதாவதுதான் சாப்பிடுவேன், சாப்பிடத்தான் மாட்டேனே தவிர நான்வெஜ் மிகவும் நன்றாக சமைப்பேன் அதிலும் பிரியாணி மிக அருமையாக சமைப்பேன் மாதத்திற்கு ஒரு நாள் குழந்தைக்காக மாமிக்கு தெரியாமல் வீட்டில் சமைப்பதுண்டு. சமைப்பதில் அதிக ஆர்வம் உண்டு அதுவும் அமெரிக்கா வந்த பின்.தான்.

மனிதர்களின்  காலில் விழுந்தும் வணங்கமாட்டேன் விழுந்து வணங்கியது எல்லாம் மத வழிபாட்டு தளங்களில் மட்டுமே . யாரிடமும் வாக்குவாதம் செய்ய மாட்டேன் என் கருத்துதான் சரி என்று யார் மேலும் திணிக்க மாட்டேன் எதிரில் உள்ளவர்கள் தவறான கருத்தைச் சொன்னாலும் அதை மறுத்துப் பேசமாட்டேன் ஆமாம் நீங்கள் சொல்வது சரிதான் என்று சொல்லி நகர்ந்து விடுவேன். யாரையும் வெற்றி கொள்ள வேண்டும் என நினைப்பதில்லை. யாரையும் வாதத்தில் ஜெயித்து ஒன்றும் ஆவப்போவதில்லை என்பதுதான் காரணம். வாதம் சண்டை போடுவது என்றால் மனைவியிடம் மட்டுமே. பூரிக்கட்டை விவகாரம் எல்லாம் பதிவிற்க்காக மட்டுமே நேரில் கிடையாது சிறு வயதில் இருந்து இன்று வரை என்னிடம் பழகிய யாரும் என்னை மோசம் என்று சுட்டிக்காட்டியது கூட கிடையாது அப்படி ஒரு முகராசி அதனால் என்னை நல்லவன் என்று நினைத்துவிட வேண்டாம் .என்னை நல்லவன் என்று எல்லோரும் நம்புவதால் அப்படியே நடந்து கொண்டிருக்கிறேன் அதுமட்டுமல்ல கெட்டது செய்ய சூழ்நிலை ஏதும் வாய்க்கவில்லை என்பது உண்மை. மனைவி மிகவும் அமைதியான டைப், என் மனைவி மட்டும் விஜய் டிவியில் நீயா நானாவில் கலந்து கொண்டால் டி ஆர் பி ரேட் சும்ம பிச்சுகிட்டு போவும் அதற்கு நான் உறுதி இப்படி சொல்ல காரணம் தமிழில் எந்த படம் வந்தாலும் கண்ணீர் விட்டு அழாமல் படம் பார்த்தது இல்லை

இந்த சுயபுராணம் போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா?

அன்புடன்
மதுரைத்தமிழன்

****************
தன்னைப் பற்றி விரிவாய்... விவரமாய்... நகைச்சுவை கலந்து சொல்லியிருக்கும் மதுரைத் தமிழன் அண்ணாவைப் பற்றி அறியாதவர்கள் அறிந்திருப்பீர்கள். இதுவரை ஆறு வாரங்களைக் கடந்துவிட்டேன்.  அடுத்த வாரத்துக்கு எதாவது ஒரு உறவிடம் இருந்து பகிர்வு வரும் என்ற நம்பிக்கையுடன்...

நன்றி.
-'பரிவை' சே.குமார்.

திங்கள், 20 பிப்ரவரி, 2017

சிறுகதை : நிழல் தேடும் உறவுகள்

பிரதிலிபி போட்டிக்கு அனுப்பிய சிறுகதை இது... வாசிப்பவர்களின் எண்ணிக்கையில் பரிசுக்குரிய கதை தேர்வு என்பதால் நம் கதையை வாசிக்க அதிக நண்பர்கள் இல்லாத காரணத்தால் 5000, 6000 வாசிப்பாளர்களைப் பெற்ற கதைகளுக்கு மத்தியில் சரியாக 1000 பேரால் வாசிக்கப்பட்டு ஐந்து நட்சத்திர வாக்கையும் பெற்று ஆறு கருத்துக்களையும் வாங்கி மனநிறைவை அளித்தது. அக் கதையை பலர் வாசித்திருப்பீர்கள்... வாசிக்காதவர்களுக்காக....

நிழல் தேடும் உறவுகள்

"ந்தக் கசாயத்தைக் கொஞ்சம் குடிச்சிட்டுப் படுங்களேன்..." கயிற்றுக் கட்டிலில் இழுத்துப் போர்த்திக் கொண்டு படுத்திருந்த கணவன் கொம்பையாவை எழுப்பினாள் செல்லம்மா. மெல்ல போர்வை விலக்கி நோக்கியவர் "இப்ப வேணாம்... அப்புறம் குடிக்கிறேன்..." என்று மீண்டும் மூடிக் கொண்டார்.

"அட... இஞ்சருங்க... எந்திரிச்சி குடிங்க... காச்ச நெருப்பா இருக்கு... இதக்குடிச்சா காச்ச குறையிங்கிறேன்..." எனப் போர்வையை இழுத்தாள்.

"ம்ம்ம்ம்ம்ம்.... சும்மா கெடக்க விடமாட்டெ... கசாயத்தை குடிங்க... கழுத மூத்தரத்தைக் குடிங்கன்னு..." முணங்கியபடி மெல்ல எழுந்து உக்கார்ந்து அவள் நீட்டிய போகாணியை வாங்கி ஒரே மடக்கில் குடித்தார்.

"அதயும் குடிக்க வண்டியதுதானே... அதுவும் மருந்துதானாம்..." என்றபடி அவரின் கழுத்தில் கை வைத்துப் பார்த்த செல்லம்மா, "காச்ச நெருப்பா இருக்கு... பெரியவனை வரச்சொல்லி ஊசி போட்டுக்கின்னு வந்தா நல்லது... எளவெடுத்த மழ வேற நையி.. நையின்னு பேஞ்சிக்கிட்டு இருக்கு..." என்றாள்.

"ஏய் நேத்துத்தானே ஊசி போட்டுக் கொண்டாந்து விட்டுட்டுப் போனான்... பின்ன இன்னக்கிம் வான்னு சொன்னா... அவனுக்கு வேல இல்லயா... அதான் மாத்தரை இருக்குல்ல... குடிச்சிப் பாக்கலாம்... செரியாகும்..."

"ஆமா செரியாகுது செரி... சின்னவன்னா விவரமா இருப்பான்... மூத்தது ஒரு கொலு... உங்களுக்கு வெள்ளச்சாமி டாக்டருதான் செரியா வருவாரு... ஒரு ஊசி போட்டாப் போதும்... வெள்ளச்சாமிக்கிட்ட போங்கன்னு சொல்லிவிடுறேன்... அது ராமசாமிக்கிட்ட கூட்டிக்கிட்டு போயிருக்கு..."

"அட அவன ஏந்திட்டுறே இப்போ... வெள்ளச்சாமி வரமாட்டாருன்னு சொன்னாங்க... அதான் ராமசாமி நல்லாப் பாப்பாருப்பான்னு அங்ஙன கூட்டுக்கிட்டு போனான்... செரி விடு ரெண்டு பேரும் சாமிதானே... எதோ ஒரு சாமி நல்லாக்குன்னாச் செரிதானே"

"குன்னிக்கிட்டு கெடக்கும் போதும் கிண்டலு மட்டும் கொறையாது... ரெத்தத்துல ஊறுனதுல..."

"ஆமா... இவுக போட்டு வளத்தாகல்ல... மாராத்தாவோட ரத்தம்டி... அப்புடித்தான் இருக்கும்..."

"இப்ப பொறப்பப் பத்தி பேச வரலை... அதான் மாராத்தா மவனுக்குன்னு செஞ்சிச்சே... ஒரு ஆட்டுக்கல்லக் கூட தரமாட்டேன்னுதான் சொன்னுச்சு... அன்னக்கி அடிச்சிக்கிட்டு நிக்கல... செரி பழங்கத இப்பெதுக்கு... பேசி வரவா போகுது... செரி... செரி... படுங்க... மத்தியானத்துக்கு ரசம் வைக்கிறேன்..."

"இந்தா நடந்ததை பேசாதே... நாம நல்லால்லையா... இல்ல நம்ம புள்ளகுட்டி நல்லால்லையா... விட்டுட்டு வேலயப்பாரு... ரசமெல்லாம் வேணாம்... கொஞ்சமா கஞ்சி வச்சி பருப்புத் தொவைய அரச்சி வையி போதும்... காச்ச சாப்புடுற மாதிரியா இருக்கு... வாயெல்லாம் கசக்குது..."

"அதெல்லாம் நெனச்சா... வவுறு எரியுது... கட்ட மண்ணுக்குள்ள போற வரைக்கும் மறக்காது... செரி... படுங்க..."

கொம்பையா காய்ச்சல் தலைவலின்னு படுத்ததே கிடையாது... விவசாயம் பார்த்து உரமேறிப்போன உடம்பு... விவசாய டயத்துல காலையில எருமைத்தயிரும் ஊறுகாய் சேர்த்துக் கலக்கிய நீராகாரத்தை ரெண்டு சொம்பு குடிச்சிட்டு வயல் வேலைக்குப் போனாருன்னா... பதினோரு மணிக்குத்தான் வீட்டுக்கு வருவாரு... செல்லாயி ஊத்திக் கொடுக்கிற கஞ்சியை ரெண்டு தட்டு சாப்பிட்டுட்டு முருகன் சுருட்டை பத்த வச்சிக்கிட்டு வாசல்ல நிக்கிற வேப்பமரத்தடியில உக்காந்திருப்பார். சில நேரம் துண்ட விரிச்சி அங்கனயே சின்னத் தூக்கமும் போடுவார்... மறுபடியும் மண்வெட்டியை தூக்கிட்டு வயலுக்குப் போனா, மத்தியானச் சாப்பாட்டுக்கு மூணறை, நாலு மணிக்குத்தான் வருவார். வரும்போதே கம்மாயில குளிச்சி துண்டைக் கட்டிக்கிட்டு வேட்டியை அலசி தோள்ல போட்டுக்கிட்டுத்தான் வருவாரு... சாப்பிட்டு ஒரு தூக்கம்... ஆறு மணிக்கு காபி குடிச்சிட்டு டிவி பாக்கவும் பக்கத்து வீட்டு முத்துச்சாமி கூட நாட்டு நடப்பு பேசவுமா இருக்கவருக்கு எட்டு மணிக்கெல்லாம் சாப்பாடு வேணும்... ஒன்பது ஒன்பதரைக்கு கயிற்றுக் கட்டிலைத் தூக்கி வேப்ப மரத்தடியில் போட்டுத் தூங்க ஆரம்பிச்சிருவாரு.

விவசாயம் இல்லாத சமயத்துல செட்டிய வீட்டு கணக்கு வழக்கு பாக்கப் போயிருவாரு... செல்லையாவோட லாட்ஜ் வருசக் கணக்கு இவருதான் பாப்பாரு.... எதாவது வேலை பாத்துக்கிட்டே இருப்பாரு... சும்மா வீட்ல உக்காந்துக்கிட்டு ஊர்க்கதை பேசிக்கிடு இருக்கிறது அவருக்கு சுத்தமாப் பிடிக்காது... ஒண்ணுமில்லேன்னா சமையல் வேலைக்குப் போற கார்மேகம் கூட கிளம்பிடுவாரு...

கொம்பையா இந்த வயசிலும் கம்பு அருமையாச் சுத்துவாரு.... அவரு எதாவது திருவிழாவுல கம்பு சுத்துறாருன்னு கேள்விப்பட்டா சுத்துப்பட்டு ஜனமெல்லாம் கூடிரும்...அவ்வளவு லாவகமாச் சுத்துவாரு... வேட்டியை வரிஞ்சி கட்டிக்கிட்டு இடது வலதுன்னு கை மாத்தி கம்பு சுத்துற அழகே தனி. முன்னால பின்னாலன்னு கம்பு மேஜிக் காட்டும்... அவரை எதிர்த்து ஆடுறவனோட கண்ணுல விரலை விட்டு ஆட்டிருவாரு... அவரு தம்பி கருப்பனுக்கு கம்பெல்லாம் சுத்த வராது... ஆனா காவடி ஆட்டத்துல அவரை அடிச்சிக்க முடியாது. வருசா வருசம் சித்ரா பௌர்ணமிக்கு ஊரில் இருந்து குன்றக்குடிக்கு முப்பது காவடிக்கு மேல போகும்... எல்லாரும் கால் போட்டு ஆடுவாங்க.... இவங்க காவடி வருதுன்னால ரோடெல்லாம் ஜனங்க காத்திருக்கும்... நெடுக ஆட்டம்தான்... அதிலும் கருப்பன் கால் போட்டு ஆடுறது மட்டுமில்லாம... காவடியை முதுல சுத்த விடுவார்... அவ்வளவு அழகா, லாவகமா காவடி ஆடுறவங்களை இப்ப பார்ப்பது அரிதாகிவிட்டது... இந்த வயசிலும் காவடி ஆடுவார்... இப்பல்லாம் தூக்கிட்டு நடக்கிறதில்லை... ஆனா கோவிலில் இருந்து கிளம்பும் போதும் குன்றக்குடி மலை அடிவாரத்தில் ஒரு ஆட்டம் போட்டுருவார்.

கொம்பையாவுக்கு நாலு பிள்ளைங்க... நாலு பேரையும் படிக்க வச்சாரு.. இப்போ நாலு பேரும் அரசாங்க உத்தியோகத்தில்... முத்தவன் கணேசன் ஸ்டேட் பேங்க்ல இருக்கான்... அடுத்தது பிரேமா கவர்மெண்ட் ஹைஸ்கூல் டீச்சர்... சுந்தரி ஆர்ட்ஸ் காலேசுல லெக்சரர்... கண்ணன் கவர்மெண்ட் ஹையர் செகண்டரி ஸ்கூல் வாத்தியார்... ‘பிள்ளைகளை நல்லா படிக்க வச்சி கவர்மெண்ட் உத்தியோகமும் பாக்க வச்சி, மரியாதையான குடும்பங்கள்ல சம்பந்தமும் பண்ணிப்புட்டே...’ என்று யாராவது சொன்னால்... 'வேற என்ன சந்தோஷம் இருக்குங்கிறேன்... நம்ம வயல் வெளஞ்சி நின்னாத்தானே நமக்குச் சந்தோசம்... என்ன பெரிசா செஞ்சிபுட்டேன்... கவர்மெண்ட்டு ஸ்கூல்லதானே படிக்க வச்சேன்... காசு பணமா செலவு பண்ணினே... எல்லாம் அதுக மாமன மாதிரி நல்லாப் படிச்சிச்சுக... அம்புட்டுத்தான்' என்பார். அவரோட மச்சினன் குழந்தைவேலு அந்தக்காலத்துல டாக்டரேட் பண்ணுனவர்... திருச்சி பெல்லுல பெரிய பதவியில இருந்தவர். மூணு வருசத்துக்கு முன்னாலதான் திடீர் மாரடைப்புல மரணம் அடைந்தார்.

கருப்பனுக்கு நாலு பொண்ணுங்க... ரெண்டு பயலுக... சின்னவனுக்குத்தான் வாழ்க்கை சரியா அமையலை... மத்தவங்க எல்லாருமே வசதி வாய்ப்போடத்தான் இருந்தாங்க... சின்னவனைக் குறித்த கவலை கருப்பனுக்கு இருக்கோ இல்லையோ கொம்பையாவுக்கு எப்பவும் உண்டு... 'பாசக்காரப்பய அவனோட வாழ்க்கை இப்படி ஆகிப்போச்சு... சொன்னதைக் கேட்டிருந்தா இன்னைக்கு அவனும் நல்லாயிருந்திருப்பான்' அப்படின்னு செல்லாத்தாக்கிட்ட அடிக்கடி புலம்புவார்.

இழுத்துப் போர்த்திக்கொண்டு படுத்திருந்தவர் எழுந்து உக்காந்தார்... சில்வர் பாத்திரத்தில் இருந்த சுடுதண்ணியை குனிந்து எடுத்துக் குடித்தார். நெஞ்சைத் தடவி விட்டுக் கொண்டார். கட்டிலில் இருபக்கமும் கை ஊன்றி மூச்சை உள்ளிழுத்தபடி அமர்ந்திருந்தார்.

"எந்திரிச்சிட்டீங்க... ஏ... ஒரு மாதிரி ஒக்காந்திருக்கீக... இப்ப காச்ச கொறஞ்சிருக்கா..? காபி போட்டுத் தரவா...?" எனக் கேட்டபடி அவரின் கழுத்தில் கைவைத்துப் பார்த்த செல்லம்மா. "இப்பக் கொஞ்சம் பரவாயில்ல... சூடு கொறஞ்சிருக்கு... காபிய குடிச்சிட்டு சத்த இழுத்துப் போர்த்திக்கிட்டு படுங்க... நல்லா வேர்த்தா காச்ச கொறையும்" என்றாள்.

"கொமட்டிக்கிட்டு வருது... காபி குடிக்கவா...? அதெல்லாம் வேணாம்... சத்த ஒக்காந்திருந்துட்டு படுக்குறேன்... எங்க படுத்தாலும் தூக்கம் வருதாக்கும்.... சும்மா பொரண்டு பொரண்டு படுத்துக்கிட்டு கெடக்க வேண்டியிருக்கு..."

"ஓமட்டுதா...? வாந்தி வருதா...? எந்திரிச்சிப் போயி வாசப்பக்கம் ஒக்காருங்க..."

"கொமட்டுதுன்னுதான் சொன்னேன்... வாந்தியெல்லாம் வரலை..."

"கசாயம் ஆவலையோ என்னமோ..?"

"இப்பத்தான் புதுசா குடிக்கிறேன் பாரு... சின்னப்புள்ளயில எங்காத்தா கலக்கிக் கொடுத்ததுதானே... அதெல்லாம் இல்ல... காச்ச... படுத்தே கெடக்கவும் ஒரு மாரிக்கா இருக்கு..."

"பெரியவனுக்கு போன் பண்ணி ஆட்டோ வரச்சொல்லவா..? போயி ஒரு ஊசி போட்டுக்கின்னு வந்துருவோம்..."

"இந்த மழயிலயா... சும்மாவே நம்மூருக்கு வரணுமின்னா ஆட்டோக்காரனுக ஆனவெல கேப்பானுங்க... இப்ப வரச்சொன்னா சொத்தையே எழுதிக் கேப்பானுக... அதான் மாத்தரை இருக்குல்ல... நாளக்கி போலாம்..."

"ஆமா சொத்தெழுதி கேக்குறாக... கூடக்கொறச்சித்தான் கேப்பானுக... அதுக்காக ஓடம்புக்கு பாக்காம இருக்க முடியுமா? ஒங்களுக்கு எதுனாச்சும் வந்துச்சின்னா நாந்தே கஷ்டப்படணும்... புடுங்கி எடுத்துருவிய..." என்றவள் வாசக்கதவு திறக்கும் சத்தம் கேட்டு எட்டிப் பார்த்துவிட்டு "ஒங்க தம்பி வாராவ..." என்றாள்.

"எதுக்கு இப்போ மழயில வாறான்..." என்றார்.

"அவருக்கிட்ட கேளுங்க எனக்கிட்ட கேட்டா..." என்றவள் குடையை மடக்கி கதவோரம் வைத்த கருப்பனைப் பார்த்து "வாங்க.. மழயில விழுந்து வாறிய..." என்றாள்.

"என்ன மொளக்கவா போறோம்...? அண்ணனுக்கு முடியலன்னு சொன்னானுவ காலயில வந்துட்டுப் போலான்னு பாத்தா மழ... பெஞ்சமின்னு இல்லாம விட்டமின்னு இல்லாம நசநசன்னு ஒரு வேல பாக்க விடுதில்லை... கரண்டுமில்ல... குர்றான்னு எம்புட்டு நேரம் ஒக்காந்திருக்கது... அதான் மழயப்பாத்தா செரி வராதுன்னு இங்கிட்டு வந்தேன்... காச்ச குறைஞ்சிருச்சா...? ஊசி போட்டும் இன்னும் நிக்கலியா..?" என்றபடி அண்ணனின் அருகில் அமர்ந்தார்.

"இப்ப பரவாயில்லப்பா... அப்ப மாதிரியா இப்ப வர்ற காச்சலெல்லாம் மூணு நாளு நாளக்கி இருக்குதுல்ல... செரியாகும்... ஒங்க அத்தாச்சி கசாயம் வச்சிக் கொடுத்தா... கொஞ்சம் பரவாயில்ல... மாத்தரை இருக்கு... மூணு நாளக்கி குடிக்கச் சொன்னானுவ... ரெண்டு வேளதானே குடிச்சிருக்கு... நாளக்கி எந்திரிச்சி வண்ணாங்குண்டுக்கு ஒரம்போட போயிறலாம்... நீ எதுக்கு மழயில வந்தே... ரொம்பத் தூரத்துலயா இருக்கே... வெட்டரிச்சதும் வந்திருக்கலாமில்ல... ஏய் காபி போடு..."

"இப்பத்தான் காபி போட்டுக் கொடுத்தா... அவளுந்தான் வாரமின்னு சொன்னா... மழயில நாந்தேன் வேண்டான்னு சொல்லிட்டேன்... மொதல்ல ஒடம்பப் பாருங்க... அப்புறம் ஒரம் போடலாம்.."

"அவ இந்த மழயிலயா..? எதுக்காம்..? அப்புறம் அவ இழுத்துக்கிட்டு படுக்கவா..? காச்ச கொறஞ்சிட்டா நானு அங்கிட்டு வரப்போறேன்... சின்னவன் போன் பண்ணினானா... என்னாச்சாம்..? சரி வருமாமா..?"

"எங்கிட்டு சரியாவுதுண்ணே... அன்னைக்கி நாம அம்புட்டுச் சொன்னோம்... அவதான் வேணுமின்னான்... செரின்னு கட்டி வச்சோம்... இப்போத்தானே அவுக சொயரூபம் தெரிஞ்சிருக்கு அவனுக்கு..."

"அதுக்காக... நம்மபுள்ளய அவனுக என்ன வேணுமின்னாலும் பேசுவானுங்களாமா..? பிடிக்கலைன்னா அத்துவிட்டுட்டு போவட்டும்... அவனுக்கு ரெண்டாங் கலியாணம் பண்ணி வப்போம்... பொண்ணா கெடைக்காது..."

"நாம பேச முடியாதுல்லண்ணே... அவன புள்ளயின்னு அந்த வீட்டுக்கு விட்டாச்சுல்ல... நம்ம கையில இருந்தா நாம எறங்கலாம்... அவனுக வீட்டோட இருக்கவனுக்கு நாம என்னத்தை போயி பேசுறது..."

"நல்லாருக்கே... நீ பேசுறது... அன்னைக்கு அவ வேணுமின்னான்... படிச்சிருக்கா... பாக்க நல்லாத்தேன் இருக்கான்னு வீட்டோட மாப்ளய இருக்கணுமின்னு சொன்னப்போ செரின்னு ஒத்துக்கிட்டு கட்டி வச்சோம்... அதுக்காக இன்னைக்கி அடிமை மாதிரி நடத்துனா... கட்டுனவ கூட ஆத்தாப்பன் பேச்சை கேக்குறான்னா இவனெதுக்கு அங்க கெடக்கான்... என்ன அப்பனாத்தா சோத்துக்கு வழியில்லாமயா கெடக்கீக... நாம ஒண்ணும் அவனுக்களுக்கு கொறச்சலா இல்லை... அவன கெளம்பி வரச்சொல்லு..."

"இல்லண்ணே... மூத்தவனுக்கிட்ட கேட்டதுக்கு அவன் இங்க வரச்சொல்லி... சொத்தப் பிரிச்சிக் கொடுப்பியளான்னு கேக்குறான்... அதான்..."

"ஓ... பெரியவுகளுக்கு பொறப்பு படுற கஷ்டந் தெரியல... சொத்து பெருசாப்போச்சு... இந்தா ஊர்ல பல பேரு வெவசாயம் பண்ணாம கருவ மண்ட விட்டுட்டானுங்க... நாளக்கி நம்ம காலத்துக்கு அப்புறம் நம்ம வயலுகளும் கருவ மண்டித்தான் கெடக்கப் போகுது... இந்த சொத்த வச்சி என்ன பண்ணப் போறானாம்.."

"...."

"இங்கேரு... புள்ளவிட்டுட்டா அத்தோட போச்சுன்னு இல்ல... அவனும் நம்ம புள்ளதான்... அவனுக்கு சொத்து சொகமெல்லாம் தேவயில்ல... ஆத்தாஅப்பனோட ஆறுதலான வார்த்தைதான் தேவ... அவன இங்கிட்டு கெளம்பி வரச்சொல்லு...  புள்ள விட்டுட்டா கடம முடிஞ்சிருச்சுன்னு நினைக்கிற முட்டாள்தனத்தை நம்மளப் பெத்தவங்க மாதிரி நீயும் பண்ணாத... சொத்த ஆரு கேட்டா... புள்ள போறவனுக்கு அங்க ஒரு சொகமான வாழ்க்க அமயலைன்னா வெளியில சொல்ல முடியாம மனசுக்குள்ள அடக்கி வச்சி தவிக்கணும்... அதெல்லாம் அனுபவிச்சாத்தான்டா தெரியும்...  முதல்ல அவனை இங்க வரச்சொல்லு... பேசுவோம்... அதுக்கப்புறம் ஒரு முடிவெடுப்போம்..."

"செரி... முதல்ல ஒடம்பப் பாருங்க... அப்புறம் அவனப்பத்தி யோசிக்கலாம்..."

"ஏ... இது சாதாரண காச்சதானே... அவனோட பிரச்சினதான் எனக்கு மனசுக்குள்ள எப்பவும் அறுத்துக்கிட்டே இருக்கு... எல்லாரும் நல்லா இருக்கானுவ... தெரிஞ்சி போயி அங்கன விழுந்து கஷ்டப்படுறான்... படிச்சிம் முட்டாப்பய... ஒரு மனுசனுக்கு நிம்மதியில்லன்னா பாக்குற வேலகூட சொமையாத் தெரியும்...  தெனந்தெனம் மனசு தண்ணியில கெடந்து குத்துன முள்ளு கொடுக்கிற வேதனய விட அதிகமான வேதனய அனுபவிக்கும். இதெல்லாம் ஒனக்குப் புரியாது... முதல்ல அவன இங்க வரச்சொல்லு... மத்தத நா பாத்துக்கிறேன்..." என்றவரிடம் சிறிது நேரம் பேசிவிட்டு கருப்பன் கிளம்பிச் செல்ல, ‘சொத்து பத்துன்னு பேசுறவனுகளுக்கு உறவோட நிழலைத் தேடுற மனசு தெரியாமப் போயிருதே... வேதனைக்கு மருந்தா உறவைத் தேடுற மனசு எப்படி இவர்களுக்குத் தெரியும்’ என்று நினைத்துப் பெருமூச்சு விட்டார் தன் அம்மா பிறந்த வீட்டில் ஆண் வாரிசு இல்லாத காரணத்தால் அங்கு பிள்ளை வந்த கொம்பையா.

மழை இன்னும் பெய்து கொண்டிருந்தது பெருமழையாய்....
-'பரிவை' சே.குமார்.

வெள்ளி, 17 பிப்ரவரி, 2017

மனசு பேசுகிறது : சிற்றிதழ்கள் உலகம்


ன்று சிற்றிதழ்கள் என்னும் ஒரு பக்கம் மெல்ல மெல்ல அழிந்து வரும் நிலையில் அவற்றை மீண்டும் உயிர்ப்பிக்கும் முயற்சியில் மிகத் தீவிரமாக இருப்பவர்தான் அலைனில் இருக்கும் அன்பின் ஐயா பெரம்பலூர் கிருஷ் ராமதாஸ் அவர்கள். இதற்கான முயற்சியாய் சிற்றிதழ்களைத் தொகுப்பதும் அவை குறித்து விரிவாய் முகநூலிலும் தனது வலைப்பூவிலும் எழுதி சிற்றிதழ் ஆசிரியர்களை ஊக்குவிப்பதில் எனக்குத் தெரிந்து மிக முக்கியமானவர் ஐயாதான். சிற்றிதழ்களை பரவலாய் வெளிவரச் செய்து அவற்றின் உயிர்ப்பை பிரகாசமாக்கும் முயற்சியில் தீவிரமாக இருக்கிறார். அதன் ஒரு முயற்சியாக ஜனவரி மாதத்தில்  'சிற்றிதழ்கள் உலகம்' என்னும் சிற்றிதழை ஆரம்பித்து இருக்கிறார். முதல் இதழின் வெளியீடு எல்லா நாட்டிலும் நண்பர்களால் நிகழ்த்தப்பட்டது.


சிற்றிதழ்கள் எதுவானாலும் அவற்றின் பிடிஎப் அவர் கைக்கு கிடைத்ததும் நண்பர்களுக்கு எல்லாம் அனுப்பிக் கொடுப்பார். அப்படி அவர் அனுப்பும் பலரில் அடியேனும் ஒருவன். எத்தனையோ இதழ்களை எனக்கு அனுப்பியிருக்கிறார். அவற்றை வாசித்தாலும் அவற்றைக் குறித்து இதுவரை நான் அவரிடம் பேசவில்லை என்பது எனக்கு வருத்தமே. ஒருவர் நமக்கு தொடர்ந்து அனுப்பும் போது அதுகுறித்தான நமது பார்வை என்ன என்று அறியும் ஆவல் அவருக்கு கண்டிப்பாக இருக்கும், அப்படியிருக்க நாம் அது குறித்து பேசவில்லை என்றால் நமக்கு அவர் அனுப்பும் இதழ்கள் மீது ஆர்வமில்லை என்றுதான் எடுத்துக் கொள்வார்கள். ஐயாவுடன் முகநூலின் மூலமாக நிறைய பேசியிருக்கிறேன் ஆனாலும் இதழ்கள் குறித்து அவருடன் பேசவில்லை என்பதே உண்மை.

சிற்றிதழ்கள் உலகம் வெளியாகும் போது என்னை அபுதாபியில் நண்பர்களை வைத்து வெளியிட்டு போட்டோ அனுப்பச் சொன்னார். நானும் புத்தகத்தை பிரிண்ட் எடுத்து வந்தேன். கனவுப் பிரியன் அண்ணாவுடன் சேர்ந்து செய்யலாம் என்று நினைத்திருந்தபோது சல்லிக்கட்டு பிரச்சினை வர, களத்தில் இருந்த நண்பனுடன் தொடர்பில் இருந்த நிலையில் புத்தக வெளியீடு பற்றி யோசிக்கவில்லை. சிற்றிதழ்கள் உலகம் குறித்து எழுத வேண்டும் என்று நினைத்திருந்து சில எதிர்பாராத சுனாமியால் பல பிரச்சினைகளைச் சந்தித்து பழைய அறையில் இருந்து வெளியாகி புதிய அறைக்குச் சென்ற சூழலில் எழுத முடியாமல் அடுத்தடுத்து பல நிகழ்வுகள், பண நெருக்கடி பிரச்சினைகள் எழ, முகநூலில் ஐயாவின் பகிர்வுகளைப் பார்க்கும் போதெல்லாம் அபுதாபியில் வெளியிட்டு போட்டோ அனுப்புங்கள் என்று சொன்னவருக்கு நாம் கொடுத்த மரியாதை இதுதானா என்று மன வருத்தம் கொண்டது உண்மை. இனிமேல் அதை வெளியிட்டு போட்டோ எடுத்து அனுப்புவது சரியல்ல... காரணம் உலகளவில் சிற்றிதழ்கள் உலகம் பிரபலமாயாச்சு... 

சிற்றிதழ்கள் இப்போது பரவலாய் வர ஆரம்பித்திருக்கின்றன... நிறைய சிற்றிதழ்கள் இலங்கையிலிருந்தோ... உலக நாடுகளில் புலம்பெயர்ந்திருக்கும் இலங்கைத் தமிழர்கள் மூலமாகவோ வருகின்றன என்று நினைக்கிறேன். சிற்றிதழ்கள் கவிதை, கட்டுரைகளுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றன. கதைகளுக்கும் வாய்ப்பளிக்க வேண்டும். ஐயா தனது இதழில் சிறுகதைகளுக்கு வாய்ப்புக் கொடுத்திருந்தார். அதுவும் அவர் நடத்திய சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற கதை முதல் இதழில் வெளியாகியிருந்தது. இதழ் மிக சிறப்பாக வந்திருந்தது. இதழ் குறித்தான விரிவான பார்வை ஒன்றைப் பகிரத்தான் ஆசை... அது குறித்து எழுதவே எண்ணியிருந்தேன். இப்போதைய சூழல் வாசிப்பின் மீதும் எழுத்தின் மீதும் இன்னும் பற்றற்ற நிலையையே அளித்திருக்கிறது, அதனால்தான் வாசிப்பில், எழுதுவதில் சிறு தடங்கல்.


கல்லூரியில் படிக்கும் போது 'மனசு' அப்படின்னு கையெழுத்துப் பிரதி நடத்தி, கல்லூரியில் ஆசிரியர், மாணவர்களிடம் மனசுக்கு செல்வாக்குப் பெற்று வைத்திருந்தோம். மிகச் சிறப்பான இதழாக 12 காப்பிகள் போட்டோம். கையினால் எழுதி, அதை பிரிண்ட் எடுத்து புத்தகமாக்கி வெளியிட்டு வந்தோம். ஆறு நண்பர்களின் கூட்டு முயற்சியால் மிகச் சிறப்பான இதழாக மனசு வெளியானது. அப்போது எங்கள் கல்லூரியில் ஏகப்பட கையெழுத்துப் பிரதிகள்... சீனியர்ஸ், ஜூனியர்ஸ் என ஆளாளுக்கு புத்தகம்... நூலகத்தில் எல்லா இதழ்களும் இருக்கும். இதழாளர்களுக்குள் போட்டியும் இருந்தது. நவநீ, கவி'தா', ரோஜா என இன்னும் இன்னுமாய் பல இதழ்கள். கவி'தா' இதழ் நடத்திய நண்பர் பரக்கத் அலி சிறுகதைப் போட்டி வைத்து அதில் தேர்வான கதைகளைத் தொகுத்து புத்தகமாக்கி வெளியீட்டு விழா எல்லாம் வைத்தார். இப்போது கல்லூரியில் அப்படி கையெழுத்துப் பிரதிகள் இருக்கான்னு தெரியலை. மனசுங்கிற பேர் என் மனசுக்குள் ஓட்டிக் கொள்ள என் வலைப்பூவும் 'மனசு' ஆனது,

சிற்றிதழ்கள் உலகம் மிகச் சிறப்பான சிற்றிதழாய் வெளிவர வாழ்த்துவதுடன் இன்னும் நிறைய படைப்புக்களுக்கும் சிற்றிதழ்களுக்கும் அது வாசல் திறந்து விட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

அவரின் வலைப்பூ... சிற்றிதழ்கள் உலகம்

சிற்றிதழ்கள் உலகம் இதழை வாசிக்க விரும்பும் நண்பர்கள் எனக்கோ அல்லது ஐயாவின் தளத்திலோ விருப்பம் தெரிவித்து மின்னஞ்சல் முகவரி அனுப்பினால் உடனே அனுப்பி வைக்கப்படும்.
-'பரிவை' சே.குமார்.

புதன், 15 பிப்ரவரி, 2017

5. என்னைப் பற்றி நான் - கில்லர்ஜி

ன்னைப் பற்றி நான் என்னும் பகுதியை தொடர்ந்து பகிரும் விதமாக உறவுகள் கொடுக்கும் ஊக்கத்தின் தொடர்ச்சியாய் இந்த வாரம் இந்தப் பகுதியை அலங்கரிப்பவர் அன்பின் அண்ணன் கில்லர்ஜி.

கில்லர்ஜி...

பெரிய மீசைக்குச் சொந்தக்காரர்... அந்த மீசை கொடுக்கும் பயத்தைத் தாண்டி பாசத்தை... நேசத்தை... கொட்டிக் கொடுக்கும் மனிதர். அபுதாபியில் எழுத்தின் மூலமாகத்தான் இணைந்தோம். அடிக்கடி என்னைத் தேடி வந்த ஜீவன் அவர்.  இப்போது அவரும் ஊரில் செட்டிலாகிவிட, நம்மைத் தேடி வரும் உறவு இல்லாத நிலை என்றாலும் இத்தனை வருட கஷ்டங்களுக்குப் பிறகு குடும்பத்துடன் சந்தோஷத்துடனும் நிம்மதியுடனும் வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

இதுதான் எழுதுவேன் என்றில்லாமல் எல்லாமும் கலந்து கட்டி எழுதுவதில் கில்லாடி கில்லர்ஜி... இவர் வைக்கும் தலைப்புக்கள்தான் மிகப் பிரபலம். இவர் எழுதிய முதல் புத்தகத்தின் பெயர் கூட வித்தியாசமாய்... ஆம் அதன் தலைப்பு 'தேவகோட்டை தேவதை தேவகி'.

ரசிக்க... சிரிக்க... சிந்திக்க... வைக்கும் பதிவுகளுக்குச் சொந்தக்காரர்... இவரின் தளத்தின் பெயர் ஆங்கிலத்தில் 'KILLERGEE'  என்றிருந்தாலும் அதன் கீழே 'பூவைப் பறிக்கக் கோடாரி எதற்கு?' அப்படின்னு நம்மைப் பார்த்துக் கேட்டிருப்பார். அவரைப் பற்றிய அறிமுகத்தில் கூட 300 ஆண்டுகளுக்கு முன்பே பிறந்து... வாழ்ந்து... என்று ஆரம்பித்து எழுதியிருப்பார். இவரின் தேவகோட்டை தேவதையை வாசித்தும் இன்னும் நூல் அறிமுகம் எழுதவில்லை என்ற மனக்குறை எனக்கு உண்டு. அவர் புத்தகம் வெளிவந்துவிட்டாலும் இன்னும் அதற்கான விழாவினை வைக்காமல் இருப்பதால் விழா வையுங்கள் எழுதுவேன் என்று அவரிடம் சொன்னபடி தள்ளிப் போய்க் கொண்டிருக்கிறது.

என்னைப் பற்றி நானில் அவர் என்ன சொல்றார்ன்னு பார்க்கலாம் வாங்க... கில்லர்ஜியின் எழுத்து மனசு தளத்தில் உங்கள் வாசிப்புக்காக...


மிழ் வாழ ! அந்தத் தமிழோடு நாமும் வாழ !

வணக்கம் நட்பூக்களே... நலமா ?

‘’நாந்தாங்கோ கில்லர்ஜி‘’ எல்லோருக்கும் தெரியும் என்று நினைக்கிறேன் (எல்லோருக்கும் தெரிய நீயென்ன அப்பா டக்கரா ? என்று கேட்காதீர்கள்) என்னைப்பற்றி எழுத நண்பர் ‘’மனசு ‘’ சே. குமார் அவர்கள் கேட்டு மாதங்களாகி விட்டது நான் என்னத்தை எழுதுவது ? ச்சே இவரு ‘’மனசு‘’ல ஏன் நாம் நினைவுக்கு வந்தோம் ? என்றே தோன்றுகிறது காரணம் என்னை நானே இந்த ராச்சியம் முழுவதும் தேடுகின்றேன் விடையோ பூச்சியம்.

பிறவிப்பயனற்ற இவ்வுலக வாழ்வைக் கடத்திச்செல்லும் ஜந்து நான் இருப்பினும் இந்த ஜடத்திற்கும் சில கடமைகள் இருக்கின்றது எனது செல்வங்களை ஒரு நிலைப்பாட்டில் கொண்டு சென்று நிறுத்த வேண்டுமே... காரணம் இது மனிதம் தொலைத்து விட்ட மனிதர்கல் நிறைந்த கான்கிரீட் காடு.

உலக மக்கள் அனைவரும் மனித நேயத்துடன் வாழ வேண்டும் என்ற பேராசைக்காரன் நான் இது தவறென்றே... பல நேரங்களில் தோன்றுகிறது காரணம் குடும்ப உறுப்பினர்களையே இந்த வட்டத்துக்குள் கொண்டு வர முடியாத நான், வீட்டை விட்டு, தெருவை விட்டு, ஊரை விட்டு, மாவட்டத்தை விட்டு, மாநிலத்தை விட்டு, நாட்டை விட்டு, உலகத்தையே அடக்கி ஆள நினைக்கின்றேனே... இது பேராசை இல்லையா ? எனக்கும், ஜார்ஜ் புஷ்ஸுக்கு என்ன வித்தியாசம் ?

ஒரேயொரு வித்தியாசம்தான் நான் நினைப்பது பொதுநலமான நன்மையை வேண்டி... அவர் நினைத்தது..... ? ? ?

உலகிலேயே மிகக் கொடுமையான விடயம் என்ன தெரியுமா ?
செய்யாத தவறுக்கு பழி ஏற்பது இது நான் உலகை அறிந்தநாள் முதல் இறைவன் எனக்கு அளித்த பெருங்கொடை.
நான் ஒரு இடத்திற்கு நடந்து செல்லும்போது... எனது கிரகம் எனக்கு முன் ஹெலிகாப்டரில் போய் கயிறு கட்டி இறங்கி நின்று என்னை வரவேற்கிறது.

நான் யாருக்கும் கெடுதல் நினைப்பதையே மிகப்பெரிய பாவச்செயலாக கருதுபவன் என்னால் பலனை அடைந்தோர் எனக்கு செய்த கைமாறு தீமைகளே... இதில் அதிகப்படியான வாக்குகள் எடுத்து முன்னணியில் வந்து கொண்டு இருப்பவர்கள் எனது உடன் பிறந்தோர்.

நான் சுயநலவாதியாக மட்டும் வாழ்ந்திருந்தால் ? நிச்சயம் நான் இன்று கோடீஸ்வரன் காரணம் அவ்வளவு செல்வம் ஈட்டி இருக்கின்றேன் மன்னிக்கவும் அவ்வளவு செல்வம் ஈட்டி இருந்தேன் என்பதே சரி. என்னைத்தான் உயர விடவில்லை என்னை சதித்தவர்களும் உயர வில்லை. என்பது மற்றொரு வேதனை. பாசம் என்னை வழுக்கி விட்டது வேறென்ன சொல்வது ?

நான் இன்றைய தேதிவரை இந்த சமூகத்தில் பழகியவரை அரேபியர்கள் முதற்கொண்டு நான் பொய்யே சொன்னாலும், இவன் சொல்வது உண்மையாகத்தான் இருக்கும் என்று ஆணித்தரமாக நம்புவார்கள் அந்நிலையிலேயே என் வாழ்க்கை இன்றுவரை கடந்திருக்கின்றது இந்த நம்பிக்கையை நான் எனது இறுதி யாத்திரை வரை கொண்டு செல்வேன். அதேநேரம் எனது குடும்பத்தார் நான் சத்தியம் செய்து உண்மையை சொன்னாலும் பொய் என்னும்போது எனது மனநிலை எப்படியிருக்கும் ? என்னைக் கோபக்காரனாகவும் மாற்றுவது இந்த சூழலே...

இருப்பினும் நான் வாழ்வில் கடைசிவரை மறக்க முடியாத நண்பரும் உண்டு நட்பை நம்புவதற்கு ஓர் எடுத்துக்காட்டு ஒரு மனிதன், மற்றொரு மனிதனை எவ்வளவு பணம்வரை நம்பலாம் ? இதில் ஒவ்வொருவருக்கும் ஒரு எல்லை இருக்குமல்லவா ? இந்த நண்பர் நான் இந்தியா வரும் பொழுதெல்லாம் அவருடைய வங்கி அட்டையையும், கடவுச் சொல்லையும் எவ்வளவோ மறுத்தாலும் தேவைப்படும் வைத்துக் கொள்ளுங்கள் என்று திணிப்பார் இந்தியா வந்ததும் முதல்வேலையாக வங்கி இயந்திரத்தில் பரிசோதிப்பேன் அவரது தொகை கோடியை நெருங்கியே இருக்கும், அவரின் இந்த நம்பிக்கையை நான் காப்பாற்ற வேண்டுமல்லவா... அவரைவிட நான் சிறந்தவன் என்று பெயர் எடுக்க வேண்டுமே... வழி ? ? ? கடைசிவரை ஒருமுறைகூட நான் பணம் எடுத்துக்கொண்டதே இல்லை மீண்டும் திரும்பக்கொண்டு போய் கொடுப்பேன் நான் ஜெர்மன் நாட்டுக்கு செல்லும் போதும் கொடுத்தார் ஃப்ரான்ஸ் நாட்டில் இந்திய ரூபாய்க்கு ஆயிரம் ரூபாயில் அங்காடியில் பொருள் வாங்கினேன். அதுவும் அவர் பரிசோதிக்க சொல்லியிருந்ததால் நட்பூக்களே நான் இதைக் குறிப்பிட காரணம் தெரியுமா ? உறவுகளைவிட நான் நட்பை நேசிக்கின்றேன் அவையே எனக்கு நிம்மதியை தருகின்றன... அபுதாபியில் ஒரு அமைப்பே என்னை நம்பி பணத்தை கொடுத்து இருந்ததே... நாளைய எனது இறுதிநாளில் உறவுகளை விட நட்புகளின் கூட்டம் எனக்கு அதிகம் வரும் என்பது எனது திண்ணமான எண்ணம் அந்த நட்புக்கு சொந்தக்காரர் யார் தெரியுமா ? அபுதாபியில் இருக்கும் பரமக்குடி இனிய நண்பர் திரு. M. சோலைராஜ் அவர்கள்.

படிக்காத நான் அரபு நாட்டுக்கு சென்றதும் நான் படித்துக்கொண்ட முதல் பாடம் இனி இந்த சமூகத்தில் வாழ்வதற்கு, உயர்வதற்கு வேண்டியது மொழியறிவு என்பதே... மொழிகள் படிப்பதை ஆரம்ப காலங்களில் ஒரு வேலையாகவே கருதினேன் இன்றைய வலைப்பூ சிந்தனை போன்று அன்று மொழிச்சிந்தனை. எனது கூற்றுப்படி மொழியே என்னை வாழ வைத்தது என்றால் அது மிகையில்லை. இதிலும் ஒரு குறையுண்டு அது சைனா மொழி பழக வேண்டும் என்பது அதற்கான சாத்தியம் குறைந்தே இருந்தது இருப்பினும் இனியெனும் கணினி மூலம் முயன்று வருவேன்,

மொழி பழகுவதில் வேடிக்கையான நிகழ்வுகளும் நிகழ்திருக்கின்றது ஆரம்ப காலத்தில் கம்பெனியில் வேலை செய்யும் பொழுது பிலிப்பைன்ஸ் நாட்டு பெண்களிடம் தகாலன் மொழியும் பழகினேன் ஓரளவு சமாளித்து பேசி விடுவேன் பழகத்தொடங்கும் பொழுதே... திடீரென எனக்கு ஞானோதயம் வந்து இந்த பெண்கள் அனைவரும் நம்மிடம் அன்பாக பழகுகின்றார்களே... இவர்களை நம்மை அத்தான் என்ற தமிழ் வார்த்தையில் அழைக்க வைத்தால் என்ன ? நம்மால் தமிழ் பிலிப்பைன்ஸ் சென்றும் வாழட்டுமே என்று தோன்ற... எனது கில்லர்ஜி என்ற இனிமையான பெயரை அத்தான் என்று மாற்றி சொன்னேன் அதன்படி ஒரு சில பெண்களைத் தவிர அனைத்து பெண்களும் என்னை அத்தான் என்றே அன்புடன் அழைத்தார்கள் இப்படி அழைத்தது ஒருவர், இருவர் அல்ல சுமார் 120 பெண்கள் சில பெண்கள் என்னை கூயா என்று அழைப்பார்கள் கூயா என்றால் அண்ணன் என்று பொருள் அந்த ஒரு சிலரை ஏன் கூயா என்று அழைக்க வைத்தேன் ? எவ்வளவு காலம் ? சுமார் ஒன்றரை வருடமாகி விட்டது ///பலநாள் திருடன் ஒருநாள் மாட்டுவான்/// என்ற தில்லாலங்கடி சுவாமிகளின் வாக்கு பொய்யாகுமா ? மேலாளர் (தமிழர்) வரும்பொழுது அத்தான் என்று அழைக்க மாட்டினேன். எப்படி ? எல்லாவற்றையும் இதில் சொல்ல முடியுமா ? வேறுவழி பதிவுதான் பிறகு வாங்கோ,,, எனது தளம்,

சாதனை
என்றால் எமது வாழ்வில் ஒன்றே ஒன்றுதான் இதை ஆசை நிறைவேறியது என்றும் சொல்லலாம் ஆம் மீசை அரபு நாட்டில் பெரிய மீசை வைக்ககூடாது அதுவும் இவ்வளவு பெரிய மீசை அதுவும் அரசு அலுவலகத்தில் தினம் அரேபியர்களோடு பழகிக்கொண்டு.... ? கடைசிவரை நான் உறுதியாக இருந்தேன் எனக்கு பிடித்தபடி எல்லாம் மீசை வைத்தேன் ஹிட்லர் மீசைதான் இன்னும் வைக்கவில்லை. பல நண்பர்களும் சொல்வார்கள் இந்தியாவில் போய் வைத்துக்கொண்டால் என்ன.... எதற்கு வம்பு ? அவர்களிடம் நான் எப்போது ? இங்கு இருபது வருடம் வாழ்ந்து விட்டேன் இந்தியாவில் கிழவன் ஆன பிறகு வைத்து என்ன பயன் ? கிழவன் ஆன பிறகு மகனுக்கு கொடுத்து விடுவேன் இதுதானே தொன்று தொட்டு நமது மரபு, ஆம் இந்த மீசையை வைத்துக்கொண்டு நான் எவ்வளவு போராடி இருப்பேன் என்பது அன்பின் ஜி குவைத் மன்னர் திரு. துரை செல்வராஜூ அவர்களுக்கும், அபுதாபி திரு. ‘மனசு‘ சே. குமார் அவர்களுக்கும் தெரியும். மீசை என்ற கலையை பராமரிப்பதைவிட மீசை எதிர்ப்பாளர்களை மீசையால் குத்தி கிழிப்பதே பெரிய வேலையாக இருந்தது,

மற்றபடி தற்போது முன்பு போல மொழிகளை படிக்க காலச்சூழலும், மனமும், மூளையும் தயங்குகிறது மறதியும் அவ்வப்போடு எட்டிப்பார்த்து நகைக்கின்றது காரணம் நான் வலைச்சர ஆசிரியராக இருந்தபோதே.... வயது பதினாறை தாண்டி விட்டதே..

நல்லது நண்பர்களே எமது எழுத்தையும் ஆர்வமுடன் படித்து கருத்திடும் அனைத்து நட்பூக்களுக்கும் எனது நன்றிகளை உரித்தாக்குகிறேன் உங்களால், உங்களின் உண்மையான கருத்துகளால் எனது எழுத்து வளர்கிறது அது இன்னும் எழுச்சி பெற்று புரட்சி செய்யும்.

நண்பர் ‘’மனசு‘’ சே. குமார் அவர்களுக்கு... 

இதற்கு மேல் எழுத இந்த வெறும்பயலிடம் ஒன்றும் இல்லை ஆகவே தாங்களாகவே... கில்லர்ஜி நல்லவரு, வல்லவரு, பெண்டு எடுக்கிறதுல என்று விளம்பரம் கொடுத்தாலும் நான் தவறாக நினைக்க மாட்டேன் காரணம் கடலை மிட்டாய்க்குகூட தொலைக்காட்சியில் பெண்களை வைத்து விளம்பரம் செய்யும் காலமிது இந்த வாய்ப்புக்கு நன்றி கூறி கடைசிவரை விடையே தெரியாமல் விடை பெறுவது.

உங்கள் கில்லர்ஜி தேவகோட்டை. 15.02.2017

தமிழ் வாழ ! அந்தத் தமிழோடு நாமும் வாழ !

******************

நான் கேட்டதும் எனக்கு அனுப்பிக் கொடுத்த உறவுகளுக்கும் இந்த வாரம் தன் கருத்தைப் பகிரக் கொடுத்து உதவிய கில்லர்ஜி அண்ணனுக்கும் நன்றி. இன்னும் பலரிடம் கேட்க வேண்டும். இதுவரை கேட்டவர்களில் விருப்பமுள்ளவர்கள் அனுப்பித்தந்தால் அடுத்தடுத்து மற்றவர்களிடம் கேட்க முடியும்... முடிந்தவர்கள் அனுப்புங்கள்.

அடுத்த புதன் மற்றொரு வலை ஆசிரியரின் எழுத்தோடு சந்திப்போம்.
-'பரிவை' சே.குமார்.

செவ்வாய், 14 பிப்ரவரி, 2017

மனசு பேசுகிறது : பிரியமான தோழி

நேற்று அரசியல் பதிவு எழுதலாம் என்றும் பிரதிலிபி சிறுகதைப் போட்டிக்கு எழுதிய கதையை பகிரலாம் என்றும் இரு வேறான எண்ணங்கள் மனசுக்குள் இருந்தது. மனமும் சசிகலா போல் அமைதியின்றி தவித்தது... அதற்கான காரணமும் என்னவென்று தெரியவில்லை. சரி அதை விடுங்க... எந்த ஒரு நிகழ்வும் நமக்கான நன்மைக்கே என்று நினைத்துக் கடந்து சென்று விடுவேன். நல்லது நிகழும் என்ற நம்பிக்கையோடு பயணிப்பதே நலம் பயக்கும் அல்லவா?  அதை விடுங்க... பிரதிலிபி சிறுகதைப் போட்டிக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டுவிட்டன. கதைகள் தேர்வு வாசகர்களின் வாசிப்பின் அடிப்படையில் என்பதாய்த்தான் அவர்களின் தேர்வு இருக்கும்... சிலரின் கதைகள் ஐயாயிரம் ஆராயிரம் பேர் வாசிக்க பலரின் கதைகள் ஐநூறு பேரைத் தாண்டலை. நாம ஆயிரத்தைத் தொட்டோம். இது சரியான தேர்வு முறை அல்ல என்பதை முன்பே ஒரு முறை சொல்லியிருந்தேன். சில நல்ல கதைகள் முந்நூறு நானூறு பேர் மட்டுமே வாசித்திருந்ததைப் பார்க்க முடிந்தது. அதற்குக் காரணம் அவர்கள் வரிசைப்படுத்தியதை முதல் நாளில் இருந்து அப்படியே வைத்திருந்ததே.... வாரம் ஒருமுறை ஏனும் வரிசையில் மாற்றம் செய்திருந்தால் ஒருவேளை முந்நூறு நானூறு பேரால் வாசிக்கப்பட்ட கதைகள் இன்னும் அதிகம் பேரால் வாசிக்கப்பட்டிருக்கலாம். இனிமேலாவது வரும் போட்டிகளில் இதை அவர்கள் செய்யலாம். அப்படிச் செய்தால் இன்னும் போட்டியில் போட்டியிருக்கும்.

இப்பல்லாம் எந்த பதிவை எழுதினாலும் அதை ஆரம்பிக்காமல் வேறு எங்கோ பயணப்பட்டு மீண்டும் பதிவுக்குள் வருவது போல் இருக்கிறது. இன்று காதலர் தினம்... சசிகலாவுக்கு வழக்கில் தீர்ப்பு... பணம் பேசாமல் நீதி பேசினால் நல்லது... பாவம் காதலர் தினம் கொண்டாட மெரினாவுக்குச் செல்லும் காதலர்கள் பாடுதான் திண்டாட்டம். இப்ப நம்ம பகிர்வும் காதலர் தினத்துக்கானதுதான். என்னது...? காதலா...? தினமா..? இதெல்லாம் தமிழன் பண்பாடு இல்லையே அப்படியிப்படின்னு சொல்லி சுத்த தமிழனா இருந்தா... மறத் தமிழனா இருந்தா.... வீரத் தமிழனா இருந்தா... சோழன் பரம்பரையா இருந்தா... பாண்டியன் வாரிசா இருந்தா... இதை எல்லாம் விட ஒரு அப்பனுக்குப் பொறந்திருந்தா காதலர் தினம் கொண்டாடாதேன்னு எல்லாம் எங்கிட்ட சொல்லாதீங்க... நான் தினம் தினம் நேசிக்கும் என் மனைவிக்கு காதலர்தின வாழ்த்துச் சொல்வதில் மேலே சொன்ன எதுவும் தேவையில்லைதானே...? அன்பின் பிடிக்கும் அடக்கும் வாழ்வில் எல்லாம் அவளே என்ற நிலைதான் என் நிலை.... பிரிவு என்பது நிரந்தரம் அல்ல... தற்போதைய பிரிவு வாழ்வின் நிமித்தம் எனினும் இன்னும் எங்களுக்கும் அன்பின் துளிகளை அதீதமாக்கிக் கொண்டுதான் இருக்கிறது.

திருமணத்தின் போது குமார் பெரிய வேலையிலும் இல்லை... கல்லூரியில் சொற்ப சம்பளத்தில் பணி... ஒரு அட்லஸ் சைக்கிள் பயணத்துணைவனாய்.... மதுரையில் செல்லமாய் வளர்க்கப்பட்டு என்னுடன் இணைந்த பின்னர் நாங்கள் தேவகோட்டையில் குடியிருந்த வீடு... மிகப்பெரியது ஆமாம் ஒரு சிறிய ஹால், சின்ன கிச்சன் அதனருகே பாத்ரூம்... புது வீடு... ஆனால் ரொம்பச் சிறியது என்றாலும் வீட்டின் முன்னே சின்னதாய்... அழகாய் ஒரு தோட்டம்... பாப்பா பிறந்து நடக்கும் வரை அந்த வீடுதான்... அதற்கு இடையில் ஒரு முறை துபாய்க்கு விசிட்டிங்கில்... வேலை தேடி தினம் தினம் அம்பது அறுபது கம்பெனிகளில் பயோடேட்டா கொடுத்துக் கொடுத்து மூன்றாம் மாத முடிவில் அதைப்படி... இதைப்படி... என பலரின் அறிவுரைகளோடு மீண்டும் ஊருக்கே பயணம்... இதில் எல்லாவற்றிலும் எனக்குத் துணையாய்... தோழியா... என் மனைவி என்னோடு. ஊருக்குத் திரும்பிய பின்னர் கல்லூரி வேலையும் இல்லை என்பதால் சென்னைக்குப் பயணம்... அங்கு சின்னச் சின்னதாய் நகர்ந்து தினமணியில் உட்கார்ந்த போது குடும்பமும் என்னோடு சென்னையில்.... அங்கும் பெரிய அளவிலான வாழ்க்கை இல்லை என்றாலும் மனைவி, மகளின் அன்பில் நனைந்த வாழ்க்கை. பாப்பா எல்கேஜி வேலம்மாவில் படித்து யுகேஜி போகும் போது மீண்டும் அபுதாபி பயணம்... குடும்பம் காரைக்குடியில் வாடகை வீட்டில்... அதன் பின்னான நகர்வுகளில் எல்லாம் என்னை வழி நடத்தி மற்றவரின் முன்னால் நாங்களும் கடனை வாங்கினாலும் கஷ்டப்பட்டாலும் உயர்ந்து நிற்க வைத்தது எல்லாம் என் மனைவிதான் என்பதே சத்தியமான உண்மை.

தேவகோட்டையில் வீட்டுப் பணி... விஷால் எல்.கே.ஜி படிக்கும் போது ஆரம்பிக்கப்பட, குழந்தைகளை பள்ளிக்கு கிளப்பி விட்டு விட்டு காரைக்குடியில் இருந்து தேவகோட்டைக்கு ஸ்கூட்டியில் பயணித்து வீட்டுப் பணிகளை மேற்பார்வை செய்து மூணு மணிக்கு விஷாலுக்கு ஸ்கூல் விடும் என்பதால் அதற்குள் வந்து... அடுத்த நாள் பயணித்து... ரொம்பக் கஷ்டப்பட்டு தேவகோட்டையில் எங்களுக்கு என ஒரு வீடு உருவாவதில் சாப்பாடு, நல்லது கெட்டது எல்லாம் துறந்து உடல்நலம் சரியில்லாமல் போய் ஐசியூவில் வைத்திருந்து... அதற்குக் கூட நான் போகவில்லை என்ற கோபம் இப்பவும் உண்டு என்றாலும் கோபம் இருக்கும் இடத்தில்தானே குணம் இருக்கும். அப்புறம் எங்க பரியன்வயலில் எங்க வீடு தம்பிக்கு கொடுக்கப்பட, வீடு கட்டும் சூழல் உருவாகி எங்கள் முன்னே பூதகரமாக நிற்க, கையில் இருப்பு இல்லாத நிலையிலும் தைரியமாக இறங்கி அங்கும் சிறு வீடாயாச்சு... இப்ப கடன்களும் வட்டிகளும் வங்கியில் இருக்கும் நகைகளும் எங்கள் முன்னே மிகப்பெரிய சுமையாக நின்றாலும் எப்பவும் போல் இதழில் புன்னகையுடன் மீண்டு வருவோம் என்ற நம்பிக்கையோடு என்னை வழி நடத்திக் கொண்டிருப்பவர் என் மனைவிதான்.

எந்த வேலைக்கு மலைப்பதில்லை... எல்லாவற்றிற்கும் முன்னால் நிற்பார்... எல்லாருக்கும் நேரம் காலம் பார்க்காது வேலை செய்வார்.... அவர் செய்யும் உதவிகளே எங்கள் பிரச்சினைகளை பின்னுக்கத் தள்ளி வைத்திருக்கிறது. நன்மை செய்பவரை காயப்படுத்திப் பார்ப்பதில் நம்மவர்கள் எப்பவுமே கில்லாடிகள் அல்லவா.. அப்படியான கல்லடிகள் கிடைத்துக் கொண்டே இருந்தாலும் அதையெல்லாம் மனசுக்குள் புதைத்துக் கொண்டு புன்சிரிப்போடும்... கலகலப்பான பேச்சோடும் எல்லா உறவுகளையும் அரவணைப்பதில் அவருக்கு முன்னே நான் எல்லாம் தள்ளித்தான் நிற்க வேண்டும்.

எதுக்கு இதெல்லாம் அப்படின்னு பாக்குறீங்களா...? எல்லாம் காதலர் தினத்துக்குத்தான்... இங்கிருந்து என்னத்தை பரிசாக் கொடுக்கப் போறோம்.. எழுத்துதான் நமக்கு வரம்... அந்த வரத்தின் மூலமாக ஒரு வாழ்த்து அவ்வளவே...

என் அன்பான... பிரியமான... நேசத்துக்குரிய... காதலிக்கு... மனைவிக்கு... தோழிக்கு என் இனிய காதலர் தின வாழ்த்துக்கள்.

கீழே இருக்கும் அன்பு திரைப்படப் பாடல் எங்களுக்கு ரொம்ப ஸ்பெஷல்... என்ன ஸ்பெஷலா அது சஸ்பென்ஸ்... பாட்டை மட்டும் கேளுங்க... வரட்டா...

-'பரிவை' சே.குமார்.

சனி, 11 பிப்ரவரி, 2017

மனசு பேசுகிறது : கூத்து

ற்பொழுது தமிழகத்தில் நடக்கும் கூத்துக்களை உலகமே பார்த்து சிரித்துக் கொண்டிருக்கிறது. ஒரு பெண்ணின் ஆசைகள் அதிகமாகும் போது என்ன நிலைக்கு அவர் செல்வார் என்பதையும், எப்படியும் சம்பாதிக்க வேண்டும் என்பதால் மக்களால் மக்களுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் எவ்வளவு கேவலமான செயல்களைச் செய்கிறார்கள் என்பதையும், இன்றைக்கு இணைய வசதி சிறிய கிராமம் வரைக்கும் சென்ற பிறகும் கூட இன்னும் மக்கள் 1990 ஆம் ஆண்டிற்கு முன்னான காலத்தில் இருக்கிறார்கள்... இருப்பார்கள் என்ற நினைப்பில் கொடுக்கும் பேட்டிகளையும், சிறை வைக்கப்பட்டதை அறிந்த காவல்துறையும், நீதிபதிகளும் ஏன் கவர்னரும் கூட அதை விசாரிக்கிறோம் என்று சொல்வதையும் பார்க்கும் போது தமிழகம் ஏதோ ஒரு சுழலுக்குள் சிக்கி நிற்கிறது என்பது மட்டும் தெள்ளத் தெளிவாகிறது. தற்போதைய முதல்வர் நல்லவர் என்பதாய் தெரிவது காட்சிப் பிம்பம்தானே ஒழிய சுத்தத் தங்கம் என்பதெல்லாம் இல்லை. இன்றைய நிலையில் மக்கள் மனதில் தானே பொதுச்செயலாளர், தானே முதல்வர், நான் நினைத்தால் எதையும் செய்வேன், பணம் கொடுத்தால் எதையும் தனதாக்க முடியும் என்ற மமதை மறைந்த முன்னாள் முதல்வரைப் போலே அவரின் பின்னால் நின்றவருக்கும் வந்திருப்பதை, அவரின் அரசியல் ரவுடியிஸத்தை மக்கள் விரும்பவில்லை என்பது மட்டும் தற்போதைய முதல்வருக்கான ஆதரவாய் மலர்ந்து கொண்டிருக்கிறது. எது எப்படியோ இவரா, அவரா என்ற நிலையில் மத்திய அரசு தனது நிலையை தற்போதைய சூழலில் தமிழகத்தில் பலமானதாக ஆக்கிக் கொள்ள முயல்கிறது. அதற்காக பின்வாசல் வழி நுழைய பிரயத்தனப்பட்டுக் கொண்டிருக்கி அப்படி ஆகும் பட்சத்தில் தமிழகம் தன் சுயம் இழக்கும் என்பது உண்மை. இந்தக் கூத்து என்ற தலைப்பு அரசியல் பேச இல்லை என்பதால் தலைப்புக்குள் போயிடலாம்.

Image result for கரகாட்டம்

தமிழர்களின் பாரம்பரியக் கலைகள் எல்லாம் மெல்ல மெல்ல கவர்ச்சி என்னும் காலனிடம் அகப்பட்டு அழிந்து கொண்டிருக்கின்றன என்பதை நாம் அறிவோம். இதைப் பற்றி மனசு தளத்தில் சில வருடங்களுக்கு முன்னர் கட்டுரை ஒன்று எழுதியிருந்தேன். கரகாட்டம் என்பது காம ஆட்டமாகி ரொம்ப வருடமாகிவிட்டது. கரகம் என்னும் புனிதம் ஆபாசப் பேச்சுக்களாலும் ஆபாச நடனங்களாலும் தன் சுயத்தை இழந்து நிற்கிறது. முன்னெல்லாம் கரகம் வைத்து ஆடும் பெண்கள் விரசமில்லாத ஆட்டம் ஆட, குறவன் குறத்தி ஆட்டத்தில் கூட ஆபாசம் என்பது ஊறுகாயாக இருந்து வந்தது. அது அப்படியே மாறி கரகம் ஆடும் பெண்களில் ஆரம்பித்து குறவன், குறத்தி, பபூன் என எல்லாருமே ஆபாசத்துக்குள்ளும் அருவெறுப்பான பேச்சு மற்றும் ஆட்டத்துக்குள்ளும் இறங்கிவிட கரகாட்டம் காம ஆட்டமாகிவிட்டது.

கரகாட்டம் மட்டுமின்றி ஆடல் பாடல் என்று ஒரு நிகழ்ச்சி, அதைக் கேட்கவே வேண்டாம்... சினிமாவில் இருக்கும் குத்து பாட்டுக்களை எல்லாம் தொகுத்து. ஆபாசத்துடன் நேரடியாக அரங்கேற்றுவதே இந்த ஆடல்பாடல்கள்... கேவலத்தின் உச்சம்... பல இடங்களில் பொறுக்க முடியாத போலீசார் பாதியிலேயே நிகழ்ச்சிகளை முடித்துக் கொள்ளச் சொன்ன நிகழ்வுகளும் உண்டு. தேவகோட்டைப் பகுதியில் ஆடல் பாடல் நடத்த தடை விதித்திருந்தார்கள். இப்போதும் அந்த தடை இருக்கா என்று தெரியவில்லை. ஆடல்பாடல் தடை வந்தபோது முளைத்ததுதான் கிராமிய தெம்மாங்கு, கிராமிய ஆடல்பாடல் என்ற போர்வையில் இடையிடையே குறவன் ஆட்டம் அது இது என ஆபாசப் பேச்சுக்களையும் ஆட்டத்தையும் திணித்து வைத்துவிட்டு மண்ணின் மனம் மாறாமல் ஆபாசம் இன்றி நடக்கும் கிராமிய இசை நிகழ்ச்சி, எங்களுக்கு பாதுகாப்பளிக்கும் காவல்துறைக்கு நன்றி என்று பேசியபடியே ஆடல்பாடலின் பாதியை அழகாய் கிராமிய என்னும் சொல்லுக்குள் அடக்கிவிடுகிறார்கள். 

இவற்றில் எல்லாம் இருந்து சற்றே விலகி வள்ளி திருமணம், அரிச்சந்திர மயானகண்டம், சத்தியவான் சாவித்திரி, அர்ச்சுணன் தவசு, பவளக்கொடி, முத்தாளம்மன், வீரபாண்டிய கட்டப்பொம்மன் என புராணங்களும் வரலாறுகளும் மேடை நாடகமாக (எங்க பக்கமெல்லாம் கூத்துன்னுதான் சொல்வோம்) நடத்தப்பட்டு வருகிறது. திருவிழாக்களில் சந்தோஷமான நாடகம் என்றால் அது வள்ளி திருமணமாகத்தான் இருக்கும் மற்றதெல்லாம் ஏதோ ஒரு சோகம் கலந்திருக்கும் என்பதால் மகிழ்ச்சியான திருநாளில் லோகிதாஸன் இறந்ததையும் சத்தியவான் இறந்ததையும் வச்சி சரி வராதுப்பா... வள்ளி திருமணம் வச்சிடலாம்... அதுலதான் முருகன் மானைத் தேடிப்போயி வள்ளியை கல்யாணம் பண்றதோட மங்களமா முடிப்பாங்கன்னு சொல்லி அதிகமாக நடத்தப்படும் நாடகம் வள்ளி திருமணம்தான். பிரார்த்தனை நாடகம் என்றால் வள்ளி திருமணத்துக்கே முதலிடம்.

இந்த நாடகங்களும் கரகாட்டம், ஆடல்பாடல்களுடன் போட்டி போட முடியாத ஒரு நிலை வந்தபோது பபூன், டான்ஸின் பேச்சும் ஆட்டமும் கரகாட்டத்துக்கு இணையாக மாறிப்போனதுதான் வேதனை... நாடகமும் அழியும் சூழல் வரும்போது ராஜபார்ட் என்று சொல்லக்கூடிய முக்கிய கதாபாத்திரங்கள் கூட ஆபாசமாக பேச வேண்டிய சூழல், இதிலும் சிலர் விதிவிலக்காய் இருந்திருக்கிறார்கள்  குறிப்பாக வள்ளி திருமணம் என்றால் முருகன், வள்ளி, நாரதர் மூவருமே முக்கியம். அதிலும் வள்ளியும் நாரதரும் நடத்தும் தர்க்கத்துக்காகவே நாடகம் பார்ப்பவர்கள் இருந்தார்கள். இன்றும் இருக்கிறார்கள். இன்னார் வள்ளி, இன்னார் முருகன் என்றால் தர்க்கம் சூப்பரா இருக்கும்ப்பா கண்டிப்பா போகணும் என்று நாலைந்து மைல்களுக்கு அந்தப்பக்கம் நாடகம் நடந்தாலும் போய்விட்டு வருவார்கள். அடுத்தநாள் அதைக் குறித்து சிலாகித்துப் பேசுவார்கள். நாரதரும் வள்ளியுமே ஆபாசமாக பேசும் நாடகங்கள் இப்போது அதிகம். அதுவும் பபூன் இப்போ எல்லாருடனும் நடிக்கும் காட்சிகள் இருப்பதால் ஆபாச பேச்சுக்கு பஞ்சமிருப்பதில்லை.

நாடகங்களில் உண்மையான சண்டைகளும் அரங்கேறுவதுண்டு... தர்க்கம் ஆரம்பித்து விறுவிறுப்பாக நடக்கும் போது ஒருவருக்கு ஒருவர் சரமாரி கேவலமாக பேச ஆரம்பித்து வாடா... போடா... வாடி... போடியில் எல்லாம் முடிந்ததுண்டு. அரிச்சந்திர மயானகண்டம் நடக்கத்தில் காமராசு என்ற பேராசிரியர் நடிக்கிறார் என்றால் அவ்வளவு கூட்டம் கூடும் அவருடன் நடிக்க பெரும்பாலும் சிவகாமி என்பவர்தான் வருவார். இருவருக்குமான சுடுகாட்டு தர்க்கம் அவ்வளவு அருமையாக இருக்கும். அதேபோல் வள்ளி என்றால் கரூர் இந்திராவுடன் நடிக்க அவருக்கு இணையான நாரதர் போட வேண்டும். அவர் சிலருடன் நடிக்கவும் மாட்டார். இவர்கள் கூட ஒரு சில நாடகங்களில் தர்க்கத்தின் முடிவில் கோபப்பட்டு வெளியேறிய நிகழ்வுகளையும் கேள்விப்பட்டதுண்டு.  நாடகங்களில் பபூன்-டான்ஸின் நடனங்கள் தற்போது ஆபாசத்தின் உச்சமாகிவிட்டன. எல்லாம் காலத்தின் கோலம் என்றாலும் நமது கலைகள் எல்லாம் அழிந்து வருவது வருத்தத்துகுறியது.

இரண்டு நாள் முன்னர் இணையத்தில் உலாவியபோது வள்ளி திருமணம் நாடகம் நாரதர் முத்து சிப்பியின் தர்க்கம் அப்படின்னு ஒண்ணு கண்ணில் பட கொஞ்ச நேரம் பார்க்கலாமே என்று பார்த்தால் உடம்பு குண்டுதான்... ஆனால் குரல் ஆஹா... எல்லாப் பாடல்களையும் மிக அழகாகப் பாடுகிறார். நாடக நடிகர்கள் இப்படி பாடுவது அபூர்வம்... அவரின் தர்க்கம் உண்மையிலேயே பாராட்டணும்.. புராணக்கதைகளை எல்லாம் சொல்லி... அட யார்ரா இந்த குண்டு நாரதர் என்று தேட,  காரைக்குடிக்காரர்... பெரும்பாலும் நாடக நடிகர்கள் சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டத்தில்தான் அதிகம் இருப்பார்கள். அவரின் தர்க்கங்களாக தேடிப் பார்த்ததில் பெரும்பாலும் அவருடன் தர்க்கம் பண்ணியவர் வள்ளி கலைமகள்... கரூர் இந்திராவைப் போல் இவரும் கலக்கலாக தர்க்கம் பண்ணுகிறார். நாரதருக்கு இணையாக கேள்வியும் பதிலும் என ரொம்ப அருமையாக இருந்தது. இவர்களின் தர்க்கத்துக்காகவும், நாரதரின் பாடல்களுக்காகவும் ஒரு ரசிகர் கூட்டம் வரும் என்பதையும் அறிய முடிந்தது. அழிந்து வரும் கலைகளை இவர்களைப் போன்றோர் இன்னும் முட்டுக் கொடுத்து தூக்கி நிறுத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

முத்துச் சிற்பி - கலைமகள் தர்க்கம் காண...


ஆபாசத்தின் பிடியில் கலைகள் சிக்கி ரொம்ப நாளாகிவிட்டது... நாம ஆபாசம், அருவெறுப்பு என்று கூச்சலிட்டாலும் சின்னக்குழந்தைகளை 'நேத்து ராத்திரி யம்மா'ன்னு பாட வச்சி தமிழகத்தின் தங்கக் குரலைத் தேடும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ரசித்து என்னம்மாப் பாடுது பாருன்ன்னு சொல்ற உலகத்துலதான் இருக்கோம். இனி ஆபாசமில்லாத கிராமிய கலைநிகழ்ச்சிகளை நடத்துவது என்பது கடினம் என்றாலும் இவர்களைப் போன்ற நல்ல கலைஞர்களைக் கொண்டு நம் கிராமங்களில் நிகழ்ச்சியை நடத்தலாமே.

'டேய் கூத்துப் பாக்க வாறீயா... நாரதர் முத்துச் சிப்பியாம்... வள்ளி கலைமகளாம்... பபூன் டான்ஸ் ராதாகிருஷ்ணநும் மணிமேகலையுமாம்' என்று எங்க ஏரியாவில் யாராவது ஒருவர் சொல்லிக் கொண்டிருக்கலாம். ஆமா ராதாகிருஷ்ணன் - மணிமேகலை யாருன்னுதானே கேக்குறீங்க... இணையத்தில் தேடுங்க...
-'பரிவை' சே.குமார்.

புதன், 8 பிப்ரவரி, 2017

4. என்னைப் பற்றி நான் - கரந்தை ஜெயக்குமார்

லையுலகில் நான் நேசிக்கும் ஐயாக்களில் ஒருவர்... ஊர் பெயரை தன்னோடு இணைத்துக் கொண்டவர்கள் மீது எனக்கு தனிப்பட்ட பிரியம் உண்டு. அதுவும் ஐயா மீதான நேசத்தை இன்னும் நெருக்கமாக்கியது. இதுவரை இணையம் மூலமே தொடர்பில் இருக்கிறோம். நான் அவர் பதிவுகளுக்குச் செல்லாவிட்டால் கூட என் பதிவுகளுக்கு  கருத்திடுவார். மிகச் சிறந்த எழுத்தாளர் ஐயா... ஆசிரியர்... கரந்தை ஜெயக்குமார் அவர்கள்.

வரலாற்று நிகழ்வா... நூல் விமர்சனமா... அதை ஆரம்பிக்கும் விதமும் முடிக்கும் விதமும் வேறு யாரும் எழுத முடியாத வகையில் அமையும். அவ்வளவு நேர்த்தியாக ஆரம்பித்து மெல்லப் பயணித்து சொல்ல வந்ததை இடையில் நகர்த்தி நம்மை ஈர்க்கும் விதமாக எழுதக்கூடியவர். 

பார்வை இருந்தும் குருடாய் இருக்கும் மனிதர்கள் மத்தியில் பார்வை இல்லாத நிலையில் தனிமனிதனாய் அமெரிக்காவில் படித்து ஆய்வு மேற்கொண்டு பல இன்னல்களுக்கு இடையில் சாதித்து உயர்ந்த வெற்றிவேல் முருகன் குறித்து ஐயா எழுதிய கட்டுரையை அனைவரும் கண்டிப்பாக வாசிக்க வேண்டும்.

'என்னைப் பற்றி நான்' விவரம் சொல்லி மின்னஞ்சல் அனுப்பியதும் கொஞ்சம் வேலையாக இருக்கிறேன் அனுப்புகிறேன் என்று பதில் அனுப்பி பின்னர் எனக்கு அனுப்பி வைத்தார். அந்த அன்புக்கு நன்றி.

இனி ஐயா அவரைப் பற்றி மீட்டிய வீணை... எனை மீட்ட வலை உங்கள் பார்வைக்கு...எனை மீட்ட வலை

ரந்தை.

நான் பிறந்தது கரந்தை
தவழ்ந்தது கரந்தை
நடந்தது கரந்தை
படித்தது கரந்தை
பணியாற்றுவதும் கரந்தை.

எனக்குத் தமிழ்ச் சொல்லிக் கொடுத்தது கரந்தை
என்னுள் தமிழ் உணர்வை ஊட்டியது கரந்தை
ஏடெடுத்து எழுதக் கற்றுக் கொடுத்ததும் கரந்தை

கரந்தை என் உலகு.

இவ்வுலகிற்கு உள்ளேயே வலம் வந்த எனக்கு, உழைத்தது போதும் என்ற ஞானத்தை ஊட்டியதும் கரந்தை.

இருபது வருடங்களுக்கும் மேலாக, குடும்பம் என்பதைத் துறந்து, எனக்கும் மனைவி மக்கள் இருக்கிறார்கள் என்பதையும் மறந்து, ஓயாது உழைத்திருக்கிறேன், ஊர் ஊராய் சுற்றியிருக்கிறேன்.

தன்னலமற்றுத்தான் உழைத்திருக்கிறேன்.

யாசகம் என்று எதையும் இதுவரை யாசித்ததில்லை.

சலுகைகள் எதையும் அனுபவித்ததில்லை.

ஆயினும் பல கசப்பான நிகழ்வுகள். 

என்றென்றும் ஆறாத மனக் காயங்கள். 

இதயத்தை ரணமாக்கி உதிரத்தை உதிர வைத்த, வேதனைமிகு வார்த்தைகள்.

என்னை யோசிக்க வைத்தன.

யோசித்தேன்.

கரந்தை மண்ணில் அமர்ந்து யோசித்தேன்.

கரந்தையே எனக்கு போதிமரமும் ஆனது.

கரந்தை உன் உலகாயிருக்கலாம், ஆனாலும் நின் மனைவி மக்களுக்கு, நீதான் உலகு.

பொட்டில் அறைந்தாற்போல் புரிய வைத்தது.

புது உலகின் வழி திறந்தது.

எழுந்து நடந்தேன்.

ஆயினும் ஓய்வு நேரங்கள், என்னை வாட்டி வதைத்தன.

ஓய்வின்றி உழைத்துவிட்டு, ஓரிடத்தில் அமர்ந்திருப்பது மனதுள் வெறுமையை வளர்த்தது.

கரந்தை என்றால் மீட்டல் என்று ஒரு பொருளுண்டு.

தமிழையே மீட்டெடுத்த கரந்தை, என்னை மீட்காதா, கரை சேர்க்காதா.

கரந்தை எனை மீட்டது, கரை சேர்த்தது.

இணையம் என்னும் வற்றாத தமிழ்க் கடலின் கரையில் என்னை நிறுத்தியது.

என் பெயருடன், தன்னையும் இணைத்து, வலைப் பூ என்னும் படகில் ஏற்றி, எழுதுகோலைத் துடுப்பாய் தந்தது.

இணையக் கடலில் துடுப்பைச் சுழற்ற, சுழற்ற, திரும்பும் திசையெல்லாம், நேசம் தவழும் பாசமிகு வரவேற்புகள்.

வட்டம், மாவட்டம், மாநிலம், நாடு என்ற எல்லைகளைக் கடந்த உறவுகள், நேசக் கரம் நீட்டி அரவணைத்துக் கொண்டன.

உடன் பிறந்த சகோதரி இல்லையே, என்ற என் நெடு நாளைய ஏக்கம், பஞ்சாய் பறந்து போனது.

பல்வேறு நாடுகளில் இருந்தும், காற்றில் மிதந்து வரும், எண்ணற்ற உடன் பிறவாச் சகோதரிகளின் பாச மழையில் நனைகின்றேன்.

நண்பர்கள்.

முகமறியா இணைய நண்பர்களின் குரலை, அலைபேசி வழி, கேட்கும் பொழுதெல்லாம் உள்ளம் குளிர்ந்து போகிறது.

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் ஜெயக்குமாரா என நெஞ்சம் நெகிழ்ந்து போகிறது.

இணையம் என் இதயம்.

கரந்தை மண், 
கந்தக மண் - தமிழுணர்வு 
வெப்பமாகத் 
தகிக்கின்ற மண்.
                                               -ஈரோடு தமிழன்பன்

***************

ஐயாவின் எழுத்தை வாசித்திருப்பீர்கள்... அவரைக் குறித்து அறிந்திருப்பீர்கள்... அய்யாவுக்கு தங்களின் மேலான கருத்துக்களை வழங்குங்கள்.

'என்னைப் பற்றி நான்' என வலை ஆசிரியர்கள் தொடர்ந்து பேசுவார்கள்.

-'பரிவை' சே.குமார்.