மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

புதன், 12 பிப்ரவரி, 2014

தொடர்கதை: கலையாத கனவுகள் - 49

முந்தைய பதிவுகளைப் படிக்க...


                      பகுதி-43     பகுதி-44    பகுதி-45      பகுதி-46    பகுதி-47
------------------------------------------------

49.  தேடும் கண்கள் வாடுதே

முன்கதைச் சுருக்கம்

கிராமத்து ஏழைக் குடும்பத்துப் பையனான ராம்கி, கல்லூரி ரவுடி வைரவனின் தங்கை புவனாவுடன் நட்பாக பழகுகிறான்.  அண்ணனும் மச்சானும் சிங்கப்பூர் செல்ல, வாழ்க்கை கொஞ்சம் மாற்றமான பாதையில் செல்ல ஆரம்பிக்கிறது, மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைத்ததும் காதல் இன்னும் இறுக்கமாகிறது. சில காரணங்கள் இவர்களது காதலை வெளிச்சமிட ராம்கிக்கு புவனாவின் சித்தப்பாவாலும் அவளைக் கட்டிக்கொள்ளத் துடிக்கும் ரவுடி மணியாலும் கத்திக் குத்து விழ, காதலின் வேகத்தில் சித்தப்பாவை எதிர்க்கும் புவனா, தனக்கு அண்ணன் வைரவன் ஆதரவாய் இருப்பதைக் கண்டு நம்பாமல் நம்புகிறாள்.

"டேய் ராசு அவன் எங்க கெளம்புறான்... இம்புட்டு அவசரமா?" சின்னவனிடம் நேரடியாகக் கேட்காமல் பெரியவனிடம் கத்தினாள் நாகம்மா.

"எங்க போவான் காலேசுக்குத்தான்... ஏன் நீ கேக்கமாட்டியா?" சேவிங் பண்ணிக் கொண்டிருந்த ராசு முகமெங்கும் சோப்பு நுரையுடன் கேட்டான்.

"எதுக்கு காலேசுக்கு... அவளப் பாக்குறதுக்கா... போலும் போலும் இவுக படிச்சிக் கிழிச்சது... காலேசுக்கும் போவேணாம்... ஒரு மசுருக்கும் போ வேணாம்..."

"ஏம்மா... தேவையில்லாம பேசுறீங்க... மூணு வருசம் நெருக்கி முடிஞ்சிடுச்சு... இன்னும் கொஞ்ச நாள் அவன் படிப்பை முடிச்சிடுவான்... சும்மா அவனை நொய்யி நொய்யின்னு திட்டிக்கிட்டே இருக்காதீங்க..."

"ஆமா... பள்ளிக்கொடத்துக்கு போறதுக்கு முன்னாடி பயறு பயறுன்னு சொன்ன புள்ள போனதுக்கு அப்புறம் பசரு... பசருன்னு சொன்னுச்சாம்... அப்படித்தான் இருக்கு இவுக கதை... படிச்சி நல்ல நெலமைக்கு வந்து நம்ம குடும்பத்தை தூக்கி நிறுத்தும்ன்னு பார்த்தா இது எவகூடவோ சுத்தி அடி உதையின்னு வாங்கிக்கிட்டு திரியுது... இங்க பாரு ராசு... நீ ஊருக்குப் போனதும் எதாவது ஏற்பாடு பண்ணி இந்த நாயை அங்கிட்டு இழுத்துக்க... இது இங்க இருந்தா நமக்கு புள்ளையா இருக்காது..."

"அம்மா... அதது நடக்கும் போது நடக்கும்... விடுங்க... டேய் நீ ஏன்டா முகத்தைத் தூக்கி வச்சிக்கிட்டு நிக்கிறே... போ... போனமா வந்தமான்னு இரு.... நம்ம வீட்டு நிலமையை நெனச்சிப்பாரு... இன்னும் ஒரு வாரந்தான் நானும் ஊருக்குப் போயிருவேன்... அம்மாவுக்கு அணுசரனையா இருக்கப்பாரு... போ... பிரச்சினை எதுவுமின்னா பேசாம வீடு வந்து சேரு... புரியிதா?" என்று அம்மாவின் கத்தலுக்கெல்லாம் சத்தம் காட்டாமல் நின்ற ராம்கியைப் பார்த்துச் சொன்னான்.

"ம்..." என்றபடி படியிறங்கியவனின் முதுக்குப்பின்னால் நாகம்மா " நம்ம சீத கலியாணத்துக்கு அவ புதுப்பொண்ணு மாதிரி மினுக்கிக்கிட்டு வரும்போதே நெனைச்சேன்... அன்னைக்கே அவள நாலு வார்த்தை நறுக்குன்னு கேட்டு விட்டிருக்கணும்... குடி கெடுத்த முண்டை..." என்று சத்தமாகச் சொன்னாள். அவளின் கடைசி வார்த்தை ராம்கியை கோபமாகத் திரும்ப வைத்தது. அவன் எதாவது சொல்லி அம்மா கத்த ஆரம்பித்து விடுவாளோ என்று பயந்த ராசு "அம்மா... சும்மா இருக்க மாட்டியளா... அவ குடி கெடுக்க வந்தாளா இல்ல இவன் அந்தக் குடி கெடுக்கப் போனானா... சும்மா ஏம்மா... இந்தப் பேச்சை விடுங்க" என்று கத்தவும் ராம்கி எதுவும் பேசாமல் சைக்கிளை எடுத்தான்.

"என்னயவே அடக்குடா... உங்கப்பன் மாரியே எதுவும் பேச விடாம அடக்கு... இந்தப் பய நம்ம குடும்பத்தை தூக்கி நிறுத்துவான்னு பார்த்தா என்னென்னமோ நடக்குது... ஒரு எடுபட்ட சிறுக்கிக்காக என்னையவே எதுத்தெரிஞ்சு பேசுறான்... எல்லாம் நா வாங்கி வந்த வரம்... வாக்கப்பட்டு வந்து என்ன சொகத்தைக் கண்டேன்.... புருஷனை சாகக் கொடுத்துட்டு நா எம்புட்டுக் கஷ்டப்பட்டு உங்களை எல்லாம் வளத்தேன்னு அந்த மாரிக்குத்தான் தெரியும்... இன்னைக்கு குழாயி மாட்டுனோன்ன ஆத்தா கசப்பாத் தெரியிறாயில்ல..." என்றவள் வழிந்த கண்ணீரை துடைத்தபடி சேலை முந்தானையில் மூக்கைச் சிந்தினாள்.

"அம்மா இப்ப என்னாச்சு... அவன் அப்படியெல்லாம் போயிட மாட்டான்... ஏதோ பழகிட்டான்... எல்லாஞ் சரியாகும்... எதுக்கு அழுகுறீக... அவன விட்டுப் பிடிப்போம்... நம்ம வழிக்கு வராம எங்க போகப்போறான்..." என்று அம்மாவுக்கு ஆறுதலாகப் பேசினான் ராசு.

"இன்னக்கி இந்தப் பயலுக்குத் தெரியாம அந்த தமிழய்யாவைப் போயிப் பாக்குறோம்..."

"அவரைப் பாத்து...?"

"பாத்து என்ன பாத்து... அந்தாளுக்கு இவனோட வெசயம் தெரியாம இருக்காது... என்ன ஏதுன்னு கேட்டுட்டு வருவோம்..."

"அம்மா எதுக்கு தேவையில்லாத வேலை... அவரு என்ன பண்ணுவாரு...?"

"எதுடா தேவையில்லாத வேலை... அவரப் பாத்து பேசணும்... நீ வரலைன்னா நான் நடந்து போறேன்..."

"சரி வாறேன் போகலாம்..."

ல்லூரிக்குள் வைரவனின் வண்டி நுழைந்த போது பின்னால் இருப்புக் கொள்ளாமல் இருந்த புவனாவின் கண்கள் ராம்கியைத் தேடின... வகுப்பறை வாசலில் அவன் எப்போதும் நிற்கும் மரத்தடிப் பக்கமாக பார்வையைச் செலுத்தி அவனைத் தேடினாள். மற்றவர்கள் அங்கு நின்று கொண்டிருக்க ராம்கியைக் காணோம். அவர்களிடம் அவன் எங்கே என்று கேட்கலாம் என்று நினைத்தால் வைரவன் எதாவது சொல்வானோ என்ற பயம் வேறு... சரி அவன் இறக்கிவிட்டுட்டு போகட்டும் அப்புறம் கேட்டுக்கலாம் என்று நினைத்தபடி படபடப்புடன் அமர்ந்திருந்தாள்.

வைரவனின் வண்டியில் புவனா வருவதைப் பார்த்ததும் சரவணன் மெதுவாக "என்ன மாப்ள புவனா வீட்டுல விவரம் எல்லாம் தெரிஞ்சு அவளுக்கு செக்யூரிட்டி போட்டுட்டானுங்க போல... புதுசா வைரவன் வண்டியில வர்றா பாரு..." என்று அண்ணாத்துரையிடம் கேட்டான்.

"எனக்கும் அப்படித்தான் தெரியுது... ஆனா வைரவனுக்கும் ராம்கிக்கு நடந்த கத்திக்குத்துக்கும் சம்மந்தம் இருக்காதுன்னு நினைக்கிறேன்... சரி சரி... ஆழந்தெரியாம மச்சான் இறங்கிட்டான்... இனி நீச்சித்தான் கரையேறணும்.... என்ன நடந்தாலும் நடக்கட்டும்... எல்லாம் நன்மைக்கேன்னு நினச்சிப்போம்..."

"ம்... ஆனா எனக்கு ராம்கி குடும்பத்தை நெனச்சா கருக்கருக்குன்னு இருக்கு மாப்ள" என்றான் அறிவு.

"என்ன பண்றது... ராம்கி இனி இவள விட்டுட்டு வரவே மாட்டான்... பாக்கலாம்... எல்லாம் நல்லபடியா நடக்குதான்னு..." என்றபோது பெண்கள் ஓய்வறைப் பக்கமாக சென்ற வைரவனின் வண்டி அவர்களை நோக்கித் திரும்பியது.

"டேய் அவன் இங்கதான் வர்றான்... எதுவும் பேசாதீங்க... ஒண்ணும் சொல்ல வேண்டாம்... குறிப்பா புவனாக்கிட்ட எதுவும் பேசாதீங்க... நம்ம நாளா அவளுக்குப் பிரச்சினை வரக்கூடாது. வைரவனின் வண்டி அவர்களருகில் வந்து நின்றது. இறங்குவதா வேண்டாமா... இவர்களிடம் பேசுவதா வேண்டாமா... என்று இருதலைக் கொள்ளியாகத் தவித்த புவனா வைரவன் ஏதாவது சொல்வானோ என்ற நினைப்பில் வண்டியை விட்டு இறங்காமல் அமர்ந்திருந்தாள்.

"வாங்கண்ணே... " என அண்ணாத்துரை சொல்ல மற்றவர்கள் வராத புன்னகையை முகத்தில் கொண்டு வந்தார்கள். சரவணன் மெதுவாக புவனாவைப் பார்த்தான். அவளது வேதனை முகத்தில் தெரிய அவனுக்கு மனசு கனத்தது.

"என்னங்கடா மாநாடா... ஆமா எங்க ராம்கி...?" எதுவுமே தெரியாதது போல் கேட்டான் வைரவன்.

"நாங்க என்ன மாநாடுன்னே போடப்போறோம்... சும்மா பேசிக்கிட்டு இருந்தோம்...  ராம்கி இன்னும் வரலை... இனிமேத்தான் வருவான்னு நினைக்கிறேன்..." என்றான் பழனி.

"ம்... எப்பவும் உங்க கூடத்தானே வருவான்... இன்னைக்கு வரலையா என்ன..."

"தெரியல... எப்பவும் வந்துருவான்... இன்னைக்குக் காணோம்..." இழுத்தான் சரவணன்.

"ஏன் என்னாச்சு..."

"தெ... தெரியலண்ணே..."

"என்னடா கத்திக்குத்து பலமா விழுந்திருச்சா?" வைரவன் படக்கென்று கேட்கவும் 'ஆள்வச்சி குத்துனதும் இல்லாம பின்னாடி வலியோடு ஒருத்தி இருக்க கேள்வியைப் பாரு... எட்டிக்கிட்டு ஒண்ணு விட்டா...' என்று நினைத்த அண்ணாத்துரை பின்னாலிருந்த புவனாவின் கலங்கிய கண்களுக்குள் கோபத்தை அடக்கினான்.

"அது... அது..." சரவணன் வார்த்தைகளை முழுங்கினான்.

"எல்லாம் எனக்குத் தெரியும்... அந்த மணிப்பயலோட எங்க குடும்பத்து ஆளு ஒருத்தர் சேந்துதான் இப்படி ஒரு அநியாயத்தை செஞ்சிட்டாங்க... அவனைப் பார்த்து பேசிட்டுப் போகலாம்ன்னுதான் வந்தேன்... நீங்கதான் அவனை காப்பாத்துனீங்கன்னும் தெரியும்... ஏன்டா மறைக்கிறீங்க... அண்ணா வேற என்ன மொறைக்கிறான்... நாந்தான் அடிச்சிருப்பேன்னு நினைக்கிறீங்களா? என்னய காப்பாத்துனவன்டா... அவன நான் எப்படிடா அடிப்பேன்.... ஆமா வருவானா... இல்ல வரமாட்டானா..?"

"சாரிண்ணே நாங்க உங்கள தப்பா நினைச்சிட்டோம்... அவனுக்கு காயம்...." அதற்கு மேல் பேசாமல் புவனாவைப் பார்த்த அண்ணாத்துரை அவளது உதடுகள் துடிப்பதைப் பார்த்ததும் மேற்கொண்டு சொல்வோமா வேண்டாமா என்று யோசிக்க அவனது கையைப் பிடித்து அமுக்கிய சரவணன் "காயம் ரொம்ப பெரிசில்லண்ணே... வந்துருவான்..." என்றான்.

"சரி... வந்தா சொல்லுங்க... நான் அப்புறம் வாறேன்..." என்று வண்டியை எடுக்க புவனாவின் மனசு அந்த மரத்தையே சுத்த கட்டை மட்டுமே அங்கிருந்து நகர்ந்தது. எங்கே திரும்பி அவர்களைப் பார்த்தால் அழுதுவிடுவோமோ என்று நினைத்தவள் தலையைக் குனிந்தபடி அமர்ந்து கொள்ள, கண்ணீர் அருவி கரைபுரண்டது.

வைரவனின் வண்டி பெண்கள் ஓய்வறைப் பக்கமாகப் போக,  ராம்கியின் சைக்கிள் கல்லூரிக்குள் நுழைந்தது.

(சனிக்கிழமை தொடரும்)
-'பரிவை' சே.குமார்.

2 எண்ணங்கள்:

Unknown சொன்னது…

ஹூம்......................என்னமோ,எல்லாம் நல்லபடியா முடிஞ்சா சர்தான்!

தனிமரம் சொன்னது…

திகுலுடன் அடுத்த அங்கம் நோக்கி!