மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

ஞாயிறு, 30 நவம்பர், 2014

தொடர்கதை : வேரும் விழுதுகளும் (பகுதி - 10)

முந்தைய பகுதிகள் : 


ஒன்பதாவது பகுதியின் இறுதியில்...

"ஏலா... பேரப்பிள்ளைக வருதுக பாத்துப் பாத்து சமச்சிப் போடணும்... ஆமா சொல்லிப்புட்டேன்... பெரிய மாப்ள கடல கொண்டாந்து கொடுத்தாருல்ல... அதை நல்லா காய வையி... வந்ததும் அவிச்சிக் கொடுக்கணும்... பொரியரிசி வறுத்து வையி... சத்துமாவுக்கு அரச்சிக்கிட்டு வாறேன்... வந்தா பெசஞ்சி திங்கிங்க... என்ன இந்த அயிசுப் பெட்டிதான் இல்ல... இருந்தா அம்புட்டையும் வாங்காந்து அடஞ்சி வச்சிடலாம்... எடுத்து எடுத்து சாப்பிட்டுக்குங்க..." என கந்தசாமி பேசிக் கொண்டே போக, 'பார்றா இந்தக் கெழவனை... எம்புட்டு சந்தோஷம்... அதுக வந்துட்டு போற வரைக்கும் இவரோட ஆட்டம் தாங்க முடியாதே...' என்று மனதுக்குள் நினைத்த காளியம்மாள். "ஆமா... அதுக வந்து டிவியைக் கட்டிக்கிட்டு அழப்போகுதுக... என்னமோ உங்க கூட வயலுக்கு வந்து கருதறுக்க ஒதவப் போற மாதிரி குதிக்கிறீக..." என்றாள் நக்கலாக.

"என்ன இப்புடிச் சொல்றே.... அதுக இங்க வர்றதே சந்தோஷம்தானே..." என்று சிரித்த போது "சித்தப்பா உங்களுக்கு வெசயந் தெரியுமா?" என்றபடி வந்தான் கண்ணதாசன்.

இனி...

சித்தப்பா உங்களுக்கு வெசயந் தெரியுமா என கண்ணதாசன் கேட்டதும் என்ன என்பது போல் புருவத்தை உயர்த்தினார் கந்தசாமி.

"மணி அண்ணன் காரைக்குடியில ஒரு எடம் வாங்குதாம்..."

"என்ன நம்ம மணியா... காரைக்குடியிலயா...?"

"ஆமா... அதோட மச்சின வீட்டுக்குப் பக்கத்துலயாம்..."

"இதாரு உனக்குச் சொன்னா..."

"அந்த இடம் கொடுத்த விஷயமா முத்து மாமா மகன் எடப்புரோக்கராத்தானே இருக்கான்... அவனுக்கு எப்புடியோ விவரம் தெரிஞ்சி எங்கிட்ட உங்கண்ணன் காரைக்குடியில இடம் வாங்குறாராமேன்னு கேட்டான்..."

"அவனுக்கிட்ட அம்புட்டு பணமில்லையே... எப்படி வாங்கினான்..."

"ஆமா... இல்லயில்லயின்னு சொல்லிக்கிட்டு அங்கிட்டு சேத்து வச்சிருப்பாக... எந்தப் புத்துக்குள்ள எந்தப் பாம்பிருக்குமின்னு நமக்கா தெரியும்... வந்த மவராசி எப்புடிப்பட்டவ..." காளியம்மா குமுறினாள்.

"உங்க வர்க்கந்தானே... அதுவா இப்ப முக்கியம்... அவனுக்கிட்ட காசு இருக்கு இல்ல...நம்மக்கிட்ட ஒரு வார்த்தை சொல்லியிருந்தா இங்கிட்டு பொரட்டிக் கொடுத்திருக்கலாமுல்ல... நம்ம புள்ளக நல்லா இருந்தா நமக்குத்தானே அழகு... என்ன கண்ணா நாஞ்சொல்றது..."

"சரித்தான் சித்தப்பா... அதுக்கிட்ட பணமிருக்க வாய்ப்பில்லைதான்.... சின்னவன் கொடுத்திருப்பானோ என்னவோ..?"

"கொமரேசன் இப்பத்தானே பேசினான்... கொடுத்திருந்தா சொல்லியிருப்பானே... வேற யாருக்கிட்டயும் கடன கிடன வாங்கி பின்னாடி செரமப்படப் போறான்... என்ன ஏதுன்னு விசாரி கண்ணா.... நாளைக்கி கடங்காரன் பிரச்சன அது இதுன்னு வந்தா எப்படி தாங்குவான்..." புலம்பினார்.

"ஆமா... மவனுக எதுவும் சொல்றதில்லை... இவுக கெடந்து குதிப்பாக... கண்ணா இவர பஸ்சுடாண்டுல கொண்டு போயி விடு ஒரு எட்டு மூத்தவன் வீட்டுக்குப் போயி விசாரிச்சி பணம் ஏற்பாடு பண்ணிக் கொடுத்துட்டு வரட்டும்..." காளியம்மாவின் கோபம் வார்த்தையில் தெரிந்தது.

"அட விடு சின்னம்மா... அண்ணன் எப்படி அம்புட்டுப் பணம் பொரட்டுச்சின்னு அவரோட பெத்த மனசு பதறுது... நம்மக்கிட்ட கேட்டிருந்தா நாங்கூட பிரசிடெண்டுக்கிட்ட கேட்டு கைமாத்தா வாங்கியிருப்பேன்... அது யாருக்கிட்டயும் சொல்லல... அதுவா சொல்லாம விடப்போகுது... எல்லாம் நம்ம வீட்டுக்கு வந்ததுதான் செய்திருக்கும்..."

"ஆமா... ஆமா... இம்புட்டு வினையா வருவான்னு நெனைக்கவேயில்லை..."

"விடு சின்னம்மா... நம்ம பல்லக் குத்தி நாமளே மோந்து பாக்கலாமா.. விடு..."

"நல்லாச் சொல்லுப்பா... நம்ம வீட்டுக்கு வந்த மருமவ முந்திப் பிந்தி இருந்தாலும் நாமதான் அனுசரிச்சிப் போகணும்... இவ சும்மா நொய்யி நொய்யின்னு கத்திக்கிட்டே இருப்பா... ஒருநா இல்லாட்டி ஒருநா அவ திருந்தி வருவா.. அப்படியேவா இருக்கப்போறான்னு சொன்னா கேக்கமாட்டா..."

"ஆமா என்னையவே நொன்ன சொல்லுங்க.. உங்களுக்கு இங்க இருக்க இந்த மைனரு வேற சப்போட்டு..."

"அட விடு சின்னம்மா... அவருக்கு சப்போட்டெல்லாம் பண்ணல... அது நம்ம சொந்தமாப் போச்சு... அன்னியமா இருந்தா சண்டை சச்சரவுன்னு கெடக்கலாம்.. சொந்தத்தைக் கொண்டாந்துட்டு அடிச்சிக்கிட்டுக் கிடந்தா நல்லாவா இருக்கும்... அவரு சொல்றது சரிதானே... விட்டுட்டு வேலையைப் பாருங்க..."

"இரு கண்ணா... மூத்தவனுக்கு போன் பண்ணிக் கேக்கலாம்..."

"வேண்டாஞ் சித்தப்பா... அதுதான் சொல்லலையில்ல... விட்டுடுங்க..."

"அப்படியெல்லாம் விட்டுட முடியாது... அவஞ் சொல்லாட்டியென்ன நாம கேட்டா கொறஞ்சா போயிருவோம்... இரு போனைப் போடுறேன்.." என எழுந்து போனார்.

"இந்தக் கெழவனுக்கிட்ட ஒரு சேதி சொன்னா உடனே அதக் கேக்காட்டி தல வெடிச்சிரும்... இப்ப அவ ரெண்டு கத்துக் கத்தவும் கப்சிப்புன்னு வச்சிட்டு வருவாரு பாரேன்..."

"அலோ யாரு..." தோரணையாக கேட்டாள் சித்ரா.

"நாந்தாத்தா மாமா பேசுறேன்..."

"ம்... சொல்லுங்க... சும்மாயிருக்கீகளா...?"

"எங்களுக்கென்ன நல்லாத்தான் இருக்கோம்.. நீங்க எப்டியிருக்கீக..? பேத்தியா நல்லா இருக்காளா?"

"ம்.. எல்லாரும் நல்லாருக்கோம்... என்ன வெசயம்..? அவுக வெளிய பொயிட்டாக.... வந்தோடனே பேசச் சொல்லவா..."

"சும்மாதாந்தா போன் பண்ணுனேன்.... ஆமா உங்க அண்ணமூட்டுக்குப் பக்கத்துல எடம் வாங்கியிருக்கீகளாமே... ?"

"இப்பத்தான் ஒரு எடம் வாங்கலான்னு பேசுனோம்... அதுக்குள்ள வத்தி வச்சி வயிறெரிய வச்சிட்டாங்களா?"

"ஏந்தா இப்புடிப் பேசுறே...? பெத்த புள்ளக நல்லா இருக்கதப் பாத்து பெத்த வயிறு குளிரத்தாந்தா செய்யும் எரியாது... காசு பணத்துக்கு செரமப்பட்டிருப்பானே... நம்மகிட்ட சொல்லியிருந்தா எதாவது சரி பண்ணிக் கொடுத்திருக்கலாமேன்னுதான் கேட்டேன்... கேட்டது தப்புன்னா மன்னிச்சுக்கத்தா..."

"ஆத்தாடி... மன்னிப்பு அது இதுன்னு இப்ப எதுக்கு பேசுறீக... எடம் வாங்குன வெவரமெல்லம் உங்க பிள்ளக்கிட்ட கேட்டுக்கங்க... எனக்குத் தெரியாது..." என போனை படக்கென வைத்தாள்.

கொஞ்ச நேரம் போனை காதில் வைத்தபடியே நின்ற கந்தசாமி ஒன்றும் பேசாமல் கட்டிலில் வந்து அமர்ந்தார்.

"என்ன சித்தப்பா... அண்ணன் பேசுச்சா... ?"

"அவே வெளிய பொயிட்டானாம்... மருமவதான் பேசினா..."

"என்ன சொன்னா?" காளியம்மா கேட்டாள்.

"என்னத்த சொல்றா... எப்பவும் போல எடுத்தோங் கவுத்தோமுன்னுதான் பேசுறா..."

"இதுக்குத்தான் சொன்னேன்... கேட்டாத்தானே... நாயி பேயி எல்லாம் இன்னைக்கு நம்மளப் பேசுது..."

"விடு சின்னம்மா... அதுக்குத் தெரிஞ்சது அம்புட்டுதான்... விடுங்க சித்தப்பா... இனி இது வெசயமா யாருக்கிட்டயும் பேசாதீக... சொன்ன சொல்றாக... சொல்லாட்டி போறாக..."

"நமக்கிட்ட சொல்லாட்டியும் பரவாயில்ல... மாப்ள இந்த வீட்டுக்கு மூத்தபுள்ளையா இருந்து எல்லாம் பாக்குறாரு.. அவருக்கிட்ட ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாமுல்ல... அவருக்கு தெரிஞ்சா வருத்தப்பட மாட்டாரா..."

"நல்ல கத சித்தப்பா... பெத்தவுகளுக்கே சொல்லல... இது வீட்டுக்கு வந்த மாப்ளக்கி சொல்லுமாக்கும் விடுங்க... விட்டுட்டு வேலயைப் பாருங்க..." என்றபோது "என்னங்க சாப்புட வாறீகளா?" என அவனது மனைவி குரல் கொடுக்க, "சரி சித்தப்பா... அப்பறமா வாறேன்" எனத் துண்டை உதறி தோளில் போட்டுக் கொண்டு எழுந்தான்.

ண்டியில் போய்க்கொண்டிருந்த குமரேசனின் மொபைல் தொடர்ந்து அடித்துக் கொண்டே இருக்க, 'இவ ஒரு தடவ அடிச்சி எடுக்கலைன்னா இப்படித்தான் அடிச்சிக்கிட்டே இருப்பா... என்னமோ தல போற மாதிரி' என மனைவியைத் திட்டிக் கொண்டே வண்டியை ஓரமாக நிப்பாட்டி போனை எடுத்துப் பார்த்தான். அதில் அண்ணன் வீட்டு நம்பர் வரவும் எடுத்து "சொல்லுண்ணே?" என்றான்.

"நாந்தான் பேசுறேன்..." எதிர்முனையில் சித்ராவின் குரல் கணீர் என்றது.

"சொல்லுங்கண்ணி... என்ன விஷயம் நீங்க போன் பண்ணியிருக்கீக... மாகா சும்மாயிருக்காளா?"

"எல்லாரும் நல்லாத்தானிருக்கோம்.. எங்கள யாரு நிம்மதியா இருக்க விடுறா...?"

"ஏன்... என்னாச்சு... அண்ணன் எதாவது திட்டுச்சா?"

"அஹ்ககஹா... ஒண்ணுமே தெரியாத மாதிரி பேசுறீக... தொட்டியையும் ஆட்டி விட்டுக்கிட்டு பிள்ளயையும் கிள்ளி விடுறீக... "

"என்ன... என்ன அண்ணி குதர்க்கமா பேசுறீக... புரியிற மாதிரி பேசுங்க..."

"என்னத்த புரியிற மாதிரி பேச... பொண்டாட்டி பணக்காரின்னு காட்ட அவ அப்பனுக்கிட்ட காசு வாங்கிக் கொடுத்தா... நீங்க உடனே உங்கப்பனுக்கிட்ட சொல்லி ஏவங்கேக்கச் சொல்லியிருக்கீக..."

"அண்ணி... எனக்கு இந்த மாதிரி வேல எல்லாம் பிடிக்காது... எங்கிட்ட பணமில்லைன்னு சொல்லிட்டேன்... அவளாத்தான் மாமாவுக்காக நாங்கேக்குறேன்னு சொல்லி வாங்குனா... இதுல எஞ்சம்பந்தம் எதுவுமில்ல... அப்பாக்கிட்ட இது பத்தி நான் பேசவே இல்லை..."

"அப்புறம் நீங்க சொல்லாம எவுக சொன்னாக... அவருக்கு கனவுல வந்துச்சோ... பத்தவச்ச ஒடனே இங்க போனப்போட்டு கேக்குறாரு அந்த மனுசன்.... நாங்க நல்லாயிருந்துறக் கூடாதே... சொல்லியிருந்தா அவுக பணம் பொரட்டிக் கொடுத்திருப்பாகளாம்... என்ன வச்சிருகாக  அங்க... அஞ்சுக்கும் பத்துக்கும் பொறங்கையை நக்கிக்கிட்டு நிக்கிறாக... பேச வந்துட்டாக பேச... இனி ஆரு எங்க விசயத்துல மூக்க நொழச்சாலும் மானத்தக் கெடுத்து மாட்ட விட்டு ஓட்டிருவேன் ஆமா..."

"இப்ப எதுக்கு தேவையில்லாத பேச்சு... நாஞ் சொல்லல... அபியும் சொல்லியிருக்க மாட்டா... எங்களுக்குத் தெரியாது... "

"அப்ப எவஞ் சொன்னான்... எந்த மயிராண்டி அந்தாள தூண்டிவிட்டான்..."

"என்ன ரொம்ப ஓவராப் பேசுறே.... எங்கண்ணன் பொண்டாட்டிங்கிறதுக்காக மரியாதையாப் பேசுறேன்... இதே வேற ஆளா இருந்தா என்ன பேசுவேன்னு தெரியாது...  எந்த மயிராண்டி சொன்னானோ அந்த மயிராண்டிக்கிட்ட உன்னோட வாய் சவடாலை வச்சிக்க... எங்கப்பன் ஆத்தாவை நாங்க பொறங்கையை நக்கிக்கிட்டு தெருவில திரிய விடலை..." எனக் கத்திவிட்டு போனை கட் பண்ணினான்.

அவள் பேசிய வார்த்தைகள் அவனை தீயாய்ச்சுட அவனுக்குத் தெரியாமல் அபி எதுவும் சொன்னாளா என போன் செய்து கன்பார்ம் செய்து கொண்டான். பின்னர் அண்ணனின் மொபைலுக்கு கூப்பிட்டான்.

"என்னப்பா... சொல்லு..." அவனுக்கே உரிய பாசத்தோடு கேட்டான் மணி.

"உங்கிட்ட கொஞ்சம் பேசணும்... முடியுமா?" எப்பவும் போல் நலம் விசாரிக்காமல் நேரிடையாக கொஞ்சம் கோபமாகக் கேட்டான் குமரேசன்.

"என்னடா எதாவது பிரச்சினையா...? குரல் ஒரு மாதிரி இருக்கு...? என்னாச்சு...?" பதற்றாமாய்க் கேட்டான் மணி.

(வேரும் விழுதுகளும் வளரும்)
-'பரிவை' சே.குமார்.

சனி, 29 நவம்பர், 2014

தலைமுறை நேசம்

ப்பத்தா இறந்து விட்டாள் என ஊரிலிருந்து போன் வரவும் அப்படியே தரையில் அமர்ந்து கதறி அழுதாள் செல்வி. அவளது அழுகுரல் கேட்டு வெளியிலிருந்து வேகமாக அறைக்குள் ஓடி வந்த அவளது தோழி "ஏய்... என்னாச்சுடி..?" என்று பதறினாள். பதில் சொல்லாது அழுதவள் தோழியின் தொடர்ந்த கேள்விக்கு அழுகையினூடே பதில் சொன்னாள். சற்று நேரம் பேசாமலிருந்தவள் "சரி நீ டாக்டருக்கிட்ட சொல்லிட்டுக் கிளம்பு... நான் பாத்துக்கிறேன்" என்று சொல்ல, "இல்ல ராத்திரி நேரத்துல நீ மட்டும் தனியா... அதுவுமில்லாம அப்பா கூட காலையில வான்னுதான் சொன்னார். சொந்த பந்தமெல்லாம் வந்து எடுக்க.." மேலே பேச முடியாமல் அழுகை அடைத்தது. "ஏய் அழுகாம கிளம்புற வேலையைப் பாரு... சொந்த பந்தம் வந்து சாயந்தரம் அடக்கம் பண்ணுனாலும் நீ விடியக் காலையில அங்க இருக்கலாம்... இந்த ராத்திரியில போறதுதான் நல்லது. காலையில வரைக்கும் அழுதுக்கிட்டே கெடப்பே... கிளம்பு முதல்ல..." என்று சொல்ல, டாக்டரிடம் விவரம் சொல்லி வேகவேகமாக அறைக்குச் சென்று கிளம்பி இதோ ராமேஸ்வரம் செல்லும் பேருந்தில் ஓடிவந்து ஏறி காலியாக இருந்த இருக்கையில் சன்னலோரமாக அமர்ந்து கொண்டாள். அழுகை மட்டும் அடங்கவே இல்லை... கண்ணீர் வடிந்து கொண்டே இருந்தது. 

'அப்பத்தா... என் உயிர்... உயிரு என்னை விட்டுப் போயிருச்சே... 'என நினைத்து நினைத்து அழுதாள். சட்டென அழுகை கேவலாய் வெடிக்க, இருந்த நாலைந்து பேரும் அவளைத் திரும்பிப் பார்க்க, தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு வெளியே பார்க்கலானாள்.

சாதாரணமாக குழந்தைகள் எல்லாமே ஆயா வீட்டுப் பக்கம்தான் பாசமாக இருப்பார்கள். அப்பத்தாக்களும் ஆயாக்களாக இருக்கவே விருப்பம் கொள்கிறார்கள். ஒரு சில அப்பத்தாக்கள் என்னதான் ஊட்டி ஊட்டிக் கொடுத்தாலும் பாசம் என்ற தராசில் அவர்கள் பக்கம் எப்பவுமே கீழிறங்குவதில்லை... இதற்கு செல்வியுடன் பிறந்த இரண்டும் விதிவிலக்கல்ல. ஆனால் செல்வி மட்டும் விதிவிலக்கு... அவளுக்கு சின்ன வயசு முதலே அப்பத்தாதான் எல்லாமே.... அப்பத்தாமேல அம்புட்டு பாசம் அவளுக்கு... விடுமுறைக்கு எல்லாரும் ஆயா வீட்டுக்கு கிளம்பினா இவள் மட்டும் அழுது ஆர்ப்பரித்து சொந்த ஊருக்குப் போயிடுவா.. அங்க என்னதான் இருக்கோ... நொப்பத்தா... நொப்பத்தான்னு கிடக்குறாக... வாடி ஆயா வீட்டுக்குப் பொயிட்டு வரலாம்ன்னு அம்மா சத்தம் போட்டாலும் கேட்கமாட்டாள். விடுமுறை முடிந்து திரும்பியதும் காஞ்சு கருவாடா வந்திருக்கே... சொன்னாக் கேட்டாத்தானே என்று கத்துவாள். ஆனால் செல்வி எதையும் காதில் வாங்கிக் கொள்ளமாட்டாள். இவுக எல்லாம் அப்படியே புசுபுசு தகதகன்னு வந்திருக்காகன்னு நினைச்சு சிரிச்சிப்பா... என்னடி சிரிப்பு வேண்டிக் கெடக்கு... சிரிப்பு என அம்மா கோபமாகப் பார்த்தாள் சிரித்தபடி விளையாடப் போய் விடுவாள்.

அப்பத்தா கருப்பாயி... பேருதான் கருப்பாயி... நல்ல செவப்பா உயரமா இருக்கும். காது வளத்து தண்டட்டி போட்டிருக்கும். ரெண்டு பக்கமும் மூக்குக் குத்தி கல்லு வச்ச மூக்குத்தி பெருசா போட்டிருக்கும். வெயில்ல போனா அது டாலடிக்கிற அழகே தனிதான். அப்பத்தாவின் மூக்குத்தி மேல ஆசை வந்து வயசுக்கு வந்த பின்னால அடம்பிடிச்சு ஒரு பக்க மூக்கு குத்திக்கிட்டா... அதுல சின்னதா ஒரு கல்லு வச்சி மூக்குத்தி போட்டிருப்பா... அது செல்வியோட அழகான மூக்க இன்னும் எடுப்பாக் காமிக்கும். அந்த மூக்குத்தி எம் பேத்திக்கு நாந்தான் வாங்கிப் போடுவேன்னு அப்பத்தா ராமநாதபுரத்துக்கு கூட்டிப் போயி தன்னோட சிறுவாட்டுக் காசுல இருந்து வாங்கிக் கொடுத்தது. இப்ப எத்தனையோ ரகம் ரகமான மூக்குத்தி வந்திருந்தாலும் அவளுக்கு இந்த மூக்குத்திதான் பிடிக்கும். மூக்கை விட்டு கழட்டவே மாட்டா... அந்த நினைப்பு வந்ததும் மூக்குத்தியைத் தடவிக் கொண்டாள்.

"என்னம்மா எங்க போகணும்?" கண்டக்டர் கேக்கவும் "ராம்நாடு ஒண்ணு கொடுங்கண்ணே... " என்று சொல்லி காசை நீட்டினாள். டிக்கெட்டும் சில்லறையும் கொடுத்து விட்டு அங்கிருந்து அடுத்த ஆளிடம் நகர்ந்தார். 

"ஏம்ப்பத்தா... காது உனக்கு மட்டும் இப்படி இருக்கு.. இது என்ன இம்புட்டு பெரிசா நகை போட்டிருக்கே... உனக்கு நகைன்னா அம்புட்டு இஷ்டமா?"ன்னு சின்னப் பிள்ளையா இருக்கும் போது அப்பத்தா பக்கத்துல படுத்துக்கிட்டு அந்த ஓட்டைக் காதுக்குள்ள விரலை விட்டுக்கிட்டு சிரிப்பாள். "ஏய்... எங்க காலத்துல காது வளக்குறது பேசனு.. எங்கப்பாரு எல்லாரையும் காது வளக்கச் சொன்னாரு... எனக்கு மட்டுமா இருக்கு,.. பெரியப்பத்தா, சின்னப்பத்தா எல்லாரும் காது வளத்திருக்கோமா இல்லையா... இப்ப ஆரு காது வளக்குறா... கண்ட எடத்துலயும் குத்தி தோடு போடுறீய கேட்டா பேசனுங்கிறியா? என்று சொல்லிச் சிரிப்பாள். அந்தக் காதும் அதில் ஆடும் தண்டட்டியும்தான் அப்பத்தாவுக்கு அழகு. எப்போவாச்சும் தண்டட்டிய கழட்டி அழுக்கெடுக்கிறேன்னு சுடுதண்ணியில போட்டு வைக்கும். அப்போ பாத்தா அப்பத்தாவோட காது பாக்கச் சகிக்காது.

வெளியில் லேசான தூறல் விழ ஆரம்பிப்பது வண்டியின் வேகத்தில் சன்னல் வழியே அவள் மீது விழுந்த துளிகளில் தெரிந்தது. அப்பத்தா நினைவில் இருந்து மீண்டு சன்னலை அடைத்தாள். வெளியில் காற்று பலமாக இருந்தது. படிக்கட்டு வழியாக வந்த காற்று சிலீரென்று முகத்தில் தாக்கியது. பேக்கில் இருந்த சால்வையை எடுத்து இறுக்கிப் போர்த்திக் கொண்டவள் அப்படியே அப்பத்தா நினைவுக்குள் சென்றாள்.

"பாருத்தா ரொம்ப குளிருதுல்ல... கொண்டாந்த சொட்டரைப் போட்டுக்க... நாளைக்கு சொரங்கிரம் வந்துட்டா உங்காத்தாவுக்கு பதில் சொல்ல முடியாது." என அப்பத்தா கத்திக் கொண்டே இருந்தாலும் சொட்டர் போடாமல் கிராமத்துக் குளிர் காற்றை அனுபவிப்பதில் செல்விக்கு தனி சுகம். சின்னப் பிள்ளையில் இருந்து இப்போது வரை ஊருக்கு வந்தால் ஸ்வெட்டர் போடுவதே இல்லை. ஐயாவின் கத்தலுக்காக அவரின் மப்ளரை எடுத்து தலையில் சுத்திக் கொள்ளுவாள். "நாஞ்சொன்னா நீ எங்கே கேக்குறே..? ஆம்பளப் பிள்ளையாட்டம் இதை சுத்திக்கிறே... இனி மழக்காலத்துல் நீ இங்க வராதே.." என அப்பத்தா பொய்க் கோபம் கொள்ளுவாள். உடனே செல்வி கோவித்துக் கொண்டு வீட்டுக்கு வெளியில் இருக்கும் கோழிக்கூண்டு மேல போயி உக்காந்துருவா... அப்புறம் அவ வந்து கெஞ்சிக் கூத்தாடி ராக்கப்ப சாமி கதை சொல்லி ஒரு வழியாக சமாதானப்படுத்தி சாப்பிட வைக்கணும் படுக்கும் போது அப்பத்தா அருகில் படுத்தாலும் குளிரில் அவளின் வயிற்றுக்குள் சுருங்கி அவளது கண்டாங்கிச் சேலைக்குள் தன்னை மூடிக்கொள்ள அடைகாக்கும் கோழி போல் செல்வியை அணைத்துக் கொண்டு தூங்குவாள். அந்தக் கதகதப்பில் அவளுக்கு குளிரே தெரியாது.

"என்ன கருப்பாயிக்கா... ரெண்டு நாளா அங்கிட்டு வரக்காணோம்" என முத்தம்மா அப்பத்தா கேட்டபடி வந்து படியில் அமரும். "என்ன தெரியாத மாதிரி கேக்குறே... எங்க செலுவி வந்திருக்கா... அவள விட்டுட்டு அங்கிட்டு வந்தா புள்ள ஏமாந்து போயிறாது" என்றபடி செல்வியை இழுத்து மடியில் வைத்துக் கொள்வாள். "அதானே... பேத்திய பாத்துட்டாத்தான் எங்கள மறந்துருவியே" என்று சொல்லி பேச்சுத் தொடரும்... உண்மைதான்... சாயந்தரமான முத்தம்மா வீட்டுக்குப் போறவ அங்க வர்ற மத்த பெருசுகளோட ஊரு விஷயமெல்லாம் பேசிட்டு ஏழு மணிக்கு மேலதான் வீட்டுக்கு வருவா. ஆனா செல்வி வீட்டுக்கு வந்துட்டா அங்கிட்டு இங்கிட்டு எங்கிட்டும் போகமாட்டா... வாசல்ல பேத்தி விளையாடுறதை பாத்துக்கிட்டே உக்காந்திருப்பா... யாராவது பேத்திய எதாவது பண்ணிட்டா உடனே சண்டைக்குப் போயிருவா... அந்த ஒரு வாரம் பத்து நாளு அவளுக்கு உலகமே செல்விதான்.

பனிரெண்டாவது விடுமுறையில் அதைப் படிக்கணும் இதைப் படிக்கணுமின்னு அம்மா கத்த பத்துநாள் அப்பத்தாக்கிட்ட இருந்துட்டு வாறேன்னு சொல்லி அப்பாவிடம் சம்மதம் வாங்கி வந்திருந்தாள். பக்கத்து வீட்டு சண்முகத்துக்கு அவள் மீது ஒரு கண்ணு... இது இன்னைக்கு நேத்து இல்ல... பத்தாவது லீவுல வரும்போதே அவளிடம் தொட்டுப் பேசுவதையும்... தனியாக மணிக்கணக்கில் பேசுவதையும் விரும்பினான். சின்ன வயதில் இருந்து ஒன்றாக இருப்பவன் என்பதாலும் அப்போது அவன் எதற்காக தன்னிடம் நெருக்கம் காட்டுகிறான் என்பதும் அவளுக்கு புரியவில்லை.சென்ற முறை வந்தபோது தனியாக இருந்தவளிடம் லெட்டர் கொடுத்தான்... வாங்கிப் பார்த்துவிட்டு அவனைத் திட்டி விட்டு யாரிடமும் சொல்லாமல் விட்டு விட்டாள். இந்த முறை அவளிடம் அடிக்கடி என்னை விரும்புறியா இல்லையா... இல்லைன்னா மருந்தைக் குடிச்சி செத்துருவேன்னு மிரட்ட ஆரம்பிக்க, பயத்துல அப்பத்தாக்கிட்ட அவன் என்னை லவ் பண்ணுறேன்னு சொல்லி மிரட்டுறான்னு சொல்லி அழுதா... 

அம்புட்டுத்தான் அப்பத்தா காளியா மாறிட்டா... "எவன்டா அவே எம்புள்ளய லவ் பண்ணுறேன்னு சொன்னவே... எந்த எடுபட்ட சிறுக்கி மவே... ஏன்டா கூதரைக் கழுதை... படிக்கிற வயசுல லவ்வு கேக்குதோ லவ்வு... அதுவும் எங்கூட்டு ராசாத்திய" அப்படின்னு குதிச்சி ஊருக்கே தெரியிற மாதிரி பண்ணிட்டா. அதுக்கு அப்புறம் அந்தக் குடும்பமே பேச்சு வார்த்தை வச்சிக்கவே இல்லை. இப்ப சண்முகம் சென்னையில ஏதோ ஒரு சாப்ட்வேர் கம்பெனியில இருக்கான். சென்ற முறை பொங்கலுக்கு போனப்போ வந்திருந்தான்... என்ன செல்வி எப்படியிருக்கேன்னு கேட்டுட்டு பேசாம பொயிட்டான். அவன் பேசுனது தெரிஞ்சா அப்பத்தா மறுபடிக்கும் காளியா மாறிடும்ன்னு சொல்லவே இல்லை... எப்பவுமே செல்விக்கு அப்பத்தாவை அப்பத்தாவா பாக்கத்தான் ஆசை... பதரகாளியா இல்லை... 

வண்டி ஒரு ஊரில் நிற்க, சன்னலை மெதுவாக திறந்து பார்த்தாள். தெருவிளக்கு மசமசன்னு எரிஞ்சிக்கிட்டு இருந்தது. மழை லேசாக தூறிக் கொண்டிருந்தது. வண்டி கொஞ்ச நேரம் நிக்கும் பாத்ரூம் போறவுக... டீக்குடிக்கிறவுக... பொயிட்டு சீக்கிரம் வாங்க என கண்டக்டர் சொல்ல இருந்த சொற்பக் கூட்டமும் இறங்கியது. இது மாதிரி மோட்டல்களில் சுத்தமா எதுவுமே நல்லாயிருக்காது. ஆனா மூணு மடங்கு விலை வைத்திருப்பார்கள். டிரைவர் கண்டக்டருக்கு இலவச சாப்பாடு, காபி... அதனால இங்க நிப்பாட்டாம போக மாட்டாங்க... அவளுக்கு பாத்ரூம் போனால் தேவலாம் என்று தோணியது தலையில் சால்வையை எடுத்துப் போட்டுக் கொண்டு சில்லரையும் எடுத்துக் கொண்டு இறங்கினாள். வயிற்றில் இருந்த பாரம் இறங்கினாலும் மனப்பாரம் இறங்காமல் இருக்க மீண்டும் பஸ்ஸூக்குத் திரும்பியவள் தண்னீரை எடுத்துக் குடித்தாள். எப்பவும் கொறிக்க எதாச்சும் வாங்கிக்கிட்டு வருவா... இன்னைக்கு இருந்த மனநிலையில் அதுக்கெல்லாம் எங்க நேரம்... எடுத்தாந்தாலும் கொறிக்கும் மனநிலை வருமா என்ன... எப்பவும் தண்ணீர் மட்டும் பயணத்தில் மறக்காமல் எடுத்துச் செல்வாள். மீண்டும் வெளியில் பார்க்க ஆரம்பித்தாள்.

ஒரு வாரம் முன்னாடி அப்பத்தாவுக்கு முடியாம வந்து விழுந்த போது வேலைக்கு லீவு போட்டு விட்டு அப்பாவுடன் கிளம்பி வந்து இரண்டு நாள் இருந்து விட்டுத்தான் போனாள். எப்பவும் சுறுசுறுப்பாத் திரியும் அப்பத்தா, சிரிக்கச் சிரிக்க பேசிக்கிட்டு இருக்கும் அப்பத்தா, வெள்ளை முடியை அள்ளிக் கட்டிக்கிட்டு கண்டாங்கிச் சேலையை தூக்கிக்கட்டிக்கிட்டு அம்புட்டு வேலையையும் இழுத்துப் போட்டுப் பார்க்கும் அப்பத்தா, அன்னைக்கு கட்டில்ல... ஒத்த கை காலு வெளங்காம... வாயைப் பிடித்து இழுத்து பேச முடியாம கிடக்கதைப் பார்த்ததும் கதறி அழுதாள். அவள் அழுவதைப் பார்த்ததும் கண்ணாலே அழுகாதே என்றாள். இரண்டு நாளும் பக்கத்துலே இருந்தா... சித்தியும்.. அத்தையும் நல்லா பாத்தாங்க... அம்மாதான் வந்துட்டு பசங்க ஸ்கூலு அது இதுன்னு அப்பாவோட ஓடிட்டா... ஆனா செல்வி ரெண்டு நாள் அங்கதான் இருந்தா... சுருக்கம் விழுந்த கையை எடுத்து எடுத்து தனது கைக்குள் வைத்துக் கொண்டாள். இனி அப்பத்தா பிழைக்காது... எந்த நேரமும்  உயிர் போயிடும் என்பது தெரிந்ததும் அங்கயே... அந்த உயிர் போகும் போது பக்கத்துலயே இருக்க ஆசைப்பட்டா... ஆனா சித்தப்பாதான் நீ இங்க இருந்தா அதைப் பாத்துப்பாத்து அழுவே... அது உன்னையப் பாத்து அழுகும்... நீயும் சாப்பிட மாட்டே... அதுவும் சாப்பிடாது... அப்பத்தாவுக்கு ஒண்ணும் ஆகாது... அடுத்த கிடாவெட்டுக்கு எந்திரிச்சி அம்புட்டு வேலையும் பாக்கும் பாருன்னு வந்த அழுகையை மறச்சிக்கிட்டே செல்வியை அனுப்பி வச்சிட்டாரு.

ஒவ்வொரு சீட்டிலும் ஒவ்வொருவர் என தூங்கிக் கொண்டு வர, செல்விக்கு தூக்கம் வரவில்லை... வெளியே மழை இல்லை... இந்தப்பக்கம் மழை பேஞ்சிருக்காது போல... எப்ப ராம்நாட்டுப் பக்கம் நல்ல மழை பேஞ்சிருக்கு... காஞ்சு போன பூமிதானே... காரைக்குடி வரை அடித்துப் பேயும் மழை இப்பல்லாம் தேவகோட்டையில பேயிறதே அதிசயமா இருக்கு... அப்புறம் எப்படி திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம் தாண்டி இங்க போயப்போகுது என நினைத்துக் கொண்டாள். காரைக்குடியில்தான் வீடு இருந்தது என்பதால் அங்கிருந்து பஸ் பயணம் என்பது அவளுக்கு பழக்கப்பட்ட ஒன்றுதான். இப்போ நர்ஸ் படிப்பு முடித்து திருச்சியில் பணிக்கு அமர்ந்ததும் காரைக்குடி திருச்சிக்கு பயணிப்பது அவளுக்கு சாதாரண ஒன்றாகிவிட்டது. ஆனால் திருச்சியில் இருந்து ராமேஸ்வரத்துக்கு காரைக்குடியில் இறங்காமல் பயணிப்பது இதுதான் முதல் முறை. அதுவும் இரவு நேரப் பயணம்... ராமநாதபுரத்தில் இறங்கி அவளின் சொந்தக் கிராமத்துக்கு பேருந்தில் பயணிக்க வேண்டும். பஸ்ஸின் வேகத்தைப் பார்க்கும் போது இன்னும் அரை மணி நேரத்தில் போய் விடும் போல... அவளது ஊர்ப்பக்கம் போகும் பேருந்து அஞ்சு மணிக்குத்தான்... செல்போனில் மணி பார்த்தாள் மூணு பத்து ஆனது... எப்படியும் நாலு மணிக்குள் போயிடும்... ஒரு மணி நேரம் காத்திருக்கணும். பஸ்ஸ்டாண்டுலதானே என்ன பயம்? என்று நினைத்துக் கொண்டாள்.

எப்பவும் இவள் வருகிறாள் என்றால் விலக்கு ரோட்டில் அப்பத்தாவும் ஐயாவும் காத்திருப்பார்கள்... சின்ன வயதில் ஐயாவின் சைக்கிளில் அமர்ந்து கொள்ள, அப்பா, ஐயா, அப்பத்தா எல்லாரும் பேசிக்கொண்டே நடப்பார்கள். அவளா வர ஆரம்பித்த பிறகு அப்பத்தா இவளுக்காக காத்துக்கிட்டு இருக்கும்... இருவரும் பேசிக்கொண்டே நடப்பார்கள்... அப்பத்தா ஊர்ல நடந்த அம்புட்டுக் கதையும் சொல்லும்... அவ இவனை இழுத்துக்கிட்டு ஓடிட்டாடின்னு சொல்ல ஆரம்பிக்கும்... என்ன நினைக்குமோ தெரியாது... சரி கழுதை அதை விடு... நமக்கெதுக்குன்னு சொல்லி வேற கதைக்கு ஓடிடும்... ஆரம்பத்துல ஒண்ணுஞ் சொல்ல மாட்டா... இப்பல்லாம் அப்படிக்கதையை பாதியில நிறுத்துனா ஏம்பத்தா முழுசும் கேட்டா நானும் யாரையாச்சும் இழுத்துக்கிட்டு ஓடிடுவேன்னு பயப்படுறியான்னு சொல்லிச் சிரிப்பாள். நீ எங்க தங்கம்... உனக்கு அறுத்துப் போட்டாலும் அந்தப் புத்தி வாராதுடின்னு சொல்லி இறுக்கிப் பிடிச்சிக்கும். 

ஒரு வழியா ராமநாதபுரத்துல இறங்கி காத்திருந்து ஐந்து மணிக்கு கிளம்பி முதல் பேருந்தில் ஏற, ஏம்மா வள்ளியூர் வெளக்குல எறங்குறவங்க சில்லறையாக் கொடுங்க... அம்பது நூறுன்னு நீட்டுனா காலங்காத்தால எங்கிட்ட சில்லரை இல்லைன்னு கண்டக்டர் முன்னால கத்த, இந்த மாதிரி கிராமத்துப் பக்கக் போற பஸ்சுல கண்டக்டர்தான் பாவம்... இதுக அம்பது நூறைக் கொடுத்துட்டு அவரு போகயிலயும் வரயிலயும் அப்பு... மிச்சக்காசு தரணுமின்னு தொந்தரவு பண்ணுங்க... காலையில அவரு என்ன பண்ணுவாருன்னு நினைச்சிக்கிட்டே சில்லரையாக பொறக்கி வைத்துக் கொண்டாள். எப்ப ஊருக்கு வந்து திரும்பிப் போனாலும் பஸ்சுக்கு சில்லறையா வச்சிக்கன்னு அப்பத்தா சாமி உண்டியல்ல இருந்து சில்லரைக்காசை வெளக்குமாத்துக் குச்சிய விட்டு எடுத்துக் கொடுக்கும். எதுக்கப்பத்தா சாமி காச எடுக்கிறேன்னு கேட்டா... நம்ம சாமிதானே அப்புறம் சேத்துப் போட்டாப் போச்சுன்னு சொல்லிச் சிரிக்கும்... அந்த காசுல துணூரு வாடை இருக்கும்... என்ன பேத்தியா துணூரு தட்டுல இருந்து உங்க அப்பத்தா பொறக்கிக் கொடுத்தாளான்னு இந்த ரூட்ல போற விமலாவுல கண்டக்டரா இருந்த முத்து தாத்தா கேட்டுச் சிரிப்பாரு... அவரு செத்தும் ரெண்டு வருசமாச்சின்னு நினைக்கிறேன்... இந்த பஸ்ல ஓடியாந்து ஏறுறேன்னு கீழ விழுந்து செத்துப் பொயிட்டாரு. அவருக்கு விதிச்ச விதி பஸ்லதான்னு இருந்திருக்கு.

வள்ளியூர் வெளக்கு இறங்குறவங்க வெரசா இறங்குங்க என கண்டக்டர் கத்த... ஒரு சிலரோடு செல்வியும் இறங்கினா... அப்பத்தா காத்திருக்கும் புளியமரம் வெறுமை சுமந்து நிற்க, அந்த ஊரோ ஒரு மனுசியின் இழப்பைச் சுமந்து சோகமாய் தூரத்தில் தெரிய, ஒரு சில சமயம் அள்ளிக் கட்டிய கொண்டை அவிழ இடுப்பில் தூக்கிச் சொறுகிய சேலையில் முட்டி தெரிய ஓடிவரும் அப்பத்தா இன்று ஓடிவருகிறாளா எனப் பார்த்தாள்... தூரத்தில் நிழலாய் ஒர் உருவம் ஓடி வருவது போல் தெரிய 'அப்பத்தா' என பெருங்குரலெடுத்து அழுதாள்.

-'பரிவை' சே.குமார்.

(சிறுகதை இங்கு பதிவதை தவிர்த்து வந்தேன்... இரண்டு நாட்களுக்கு முன்னர் நண்பன்  சத்தம் போட உடனே  எழுதி சிறுகதை பதிவதில்லை என்ற விரத்ததை முடித்து இன்று பகிர்ந்தாச்சு...  நான் இப்படித்தான் எழுதணும் என சண்டை போட்ட நட்புக்கு நன்றி.)

வியாழன், 27 நவம்பர், 2014

தமிழ்க்குடில் நடத்தும் மகாகவி பாரதியின் 132 வது பிறந்தநாள் விழா போட்டிகள்

ன்புத் தோழமைகளுக்கு தமிழ்க்குடில் நிர்வாகிகளின் அன்பு வணக்கம். தாங்கள் அனைவரும் ஆர்வமுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ”மகாகவி பாரதியின் பிறந்தநாளை” முன்னிட்டு ”தமிழ்க்குடில் அறக்கட்டளை நடத்தும்” கவிதை, கட்டுரை, பெண்களுக்கான சிறப்பு கட்டுரை மற்றும் வரலாற்று கட்டுரை போட்டிகளின் விவரங்களைத் தங்களிடம் பகிர்வதில் மகிழ்ச்சியடைகிறோம். தோழமைகள் அனைவரும் பெருமளவில் பங்குகொண்டு போட்டியினை சிறப்பிக்க வேண்டுகிறோம்.


கவிதை போட்டி:

1. தலைப்பு : தாங்களே தங்களால் படைக்கப்படும் கவிதைக்குப் பெயரிட்டு அனுப்பலாம்.

2. கவிதையின் தன்மை: தங்களால் எழுதப்படும் கவிதை எந்தவகையினைச் சார்ந்தது என குறிப்பிடவும். (உ.ம்) புதுக்கவிதை, மரபுக்கவிதை,

3. 20 வரிகளுக்குக் குறையாமலும் 50 வரிகளுக்கு மிகாமலும் இருக்கவேண்டும்.

4. கவிதை வேறு எந்த போட்டிக்கோ, இதழுக்கோ அனுப்பப்பட்டதாகவோ அல்லது வேறு எங்கும் பதிவிடப்பட்டதாகவோ இல்லாமல், தமிழ்க்குடிலின் இந்தப்போட்டிக்காக மட்டுமே பிரத்தியேகமாக எழுதப்பட்டவையாக இருக்கவேண்டும். 

5. ஒரு கவிஞர் ஒரு கவிதை மட்டுமே அனுப்பவேண்டும். 

6. உங்களுடைய சொந்த படைப்பாக இருக்கவேண்டும்.


கட்டுரைப் போட்டி:

1. காமராசரை முதலமைச்சராக பெறாத தமிழ்நாடு… 

2. என் வாழ்வில் பெண் என்பவள். . .

3. உலகியலில் தமிழர் நாகரீகம் ஓங்கியது எங்ஙனம்..?

4. எனது பார்வையில் தொல்காப்பிய தமிழ்…

5. உலகக்கலைகளும், பாரதக் கலைகளும்.(ஓர் ஒப்பீடு)

6. தமிழகத்தில் அகத்தியலில் ஆணும், புறத்தியலில் பெண்ணும்.

7. போபர்ஸ் முதல் அலைக்கற்றை வரை

விதிமுறைகள்: 3 முதல் 10 பக்கங்களுக்கு மிகாமல் இருக்கவேண்டும்.

தமிழ்க்குடில் வழங்கிய தலைப்புகள் அல்லாது தங்களுக்கு விருப்பமான தலைப்பிலும் கட்டுரை எழுதலாம்.


சிறப்பு கட்டுரைப்போட்டி – பெண்களுக்கு மட்டும்

தமிழ்க்குடில் வழங்கியிருக்கும் தலைப்புகளில் தங்கள் சிந்தனையில் 3 பக்கங்களுக்குக் குறையாது கட்டுரை வடித்து அனுப்பவும்.

1. தாய்மை

2. பெண்மை

3. நான் படைக்க விரும்பும் சமூகம்

4. உயிரியல் பரிணாமத்தில் பெண்பாலினத்தின் பங்கு.

5. வயல் வெளியிலிருந்து வான்வெளி நோக்கி..(பெண்கள்)

6. பெண் விரும்பும் ஆணின் பரிணாமம் - காதலன், கணவன், மகன்…? 

7. பாரதி தேடிய புதுமைப்பெண்ணாய் நான்


வரலாற்று கட்டுரைப்போட்டி:

தென்னிந்திய மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளோடு தொடர்புடைய தமிழனின் தொன்மையான வரலாற்றுச் சுவடுகளை உலகமெங்கும் அறியச்செய்யும் எண்ணத்தில் இதுவரை வெளிவராத வரலாற்று உண்மைகளை வெளிக்கொணரும் ஒரு புதிய முயற்சி.

தாங்கள் வாழும் பகுதி அல்லது தங்கள் பகுதிக்கு அருகாமையில் உள்ள பகுதிகளில் கிடைக்கக்கூடிய அரிய தகவல்கள், அடையாளச்சின்னங்கள், ஆதாரங்கள் ஆகியவற்றை இணைத்து புகைப்படத்துடன் கூடிய கட்டுரையாக எழுதி அனுப்ப வேண்டுகிறோம்.

சங்ககாலம், மூவேந்தர் காலம் மற்றும் அதற்குப்பின்னான காலங்களில் செவிவழிச்செய்தி, கதைகள் மற்றும் வெளிக்கொணரப்படாத வரலாற்று உண்மைகள் சார்ந்த, ஏதேனும் ஒரு களத்தை எடுத்துக்கொண்டு இதுவரை வெளிவராத வரலாற்று உண்மைகளை அதற்கான சான்றுகளுடன் அனுப்பிவைக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

முக்கியக்குறிப்பு: தாங்கள் திரட்டியனுப்புகிற தகவல்கள் ஏற்கனவே வெளிக்கொணரப்பட்ட தகவலாகவோ, இணையத்தில் கிடைக்கக்கூடிய தகவலாகவோ இருக்கும்பட்சத்தில் பரிசுக்கு தகுதியற்றதாக கருதப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

படைப்புகள் வந்து சேரவேண்டிய இறுதி நாள் 05.12.14 

படைப்புகள் tamilkkudil@gmail.com என்ற மின்னஞ்சலில் மட்டுமே அனுப்பிவைக்கப்படவேண்டும். 

குழுமத்திலோ, நிர்வாகியின் தனிச்செய்தியிலோ தனித்த மின்னஞ்சலிலோ அனுப்பப்படும் படைப்புகள் போட்டிக்கு ஏற்கப்படமாட்டாது. முடிவுகள் அறிவிக்கப்பட்டபிறகு பதிவுகள் தமிழ்க்குடில் குழுமத்திலும், வலைப்பூவிலும் பகிரப்படும்

போட்டியின் முடிவு பாரதியின் பிறந்தநாள் அன்று வெளியிடப்படும்.


பரிசு விவரங்கள்:

1. வரலாற்று கட்டுரைப்போட்டி:

முதல் பரிசு: ரூ.3000/- மற்றும் தமிழ்க்குடில் வழங்கும் சான்றிதழ்

இரண்டாவது பரிசு: ரூ.1500/- மற்றும் தமிழ்க்குடில் வழங்கும் சான்றிதழ் 

மூன்றாவது பரிசு: தமிழ்க்குடில் வழங்கும் சிறப்பு பரிசு மற்றும் தமிழ்க்குடில் வழங்கும் சான்றிதழ்.


பரிசுத்தொகை என்பதை உங்கள் உழைப்பிற்கான எங்களுடைய சிறு அன்பளிப்பாக மட்டுமே கருதவேண்டுகிறோம். தங்களுடைய உழைப்பிற்கும், அறிவாற்றலுக்கும் முன்னால் இந்த பரிசுத்தொகை ஈடாகாது என்பதை நாங்கள் நன்கு உணர்ந்திருக்கிறோம். ஆயினும், மறைந்துகிடக்கும் நம் வரலாறுகள் நம் மக்களிடையே சென்றடையவேண்டும் என்ற ஆர்வத்திலும், அக்கரையிலும் இந்த முயற்சியை மேற்கொள்கிறோம். இந்த முயற்சியில் உங்கள் அனைவரது முழு ஒத்துழைப்பும், பங்களிப்பும் இருந்தால் மட்டுமே நம் வரலாறுகளை மீட்டெடுக்கமுடியும் என்கிற நம்பிக்கையை உங்கள் முன் வைக்கிறோம். நம் சமூகத்திற்கு நாம் செய்கிற சேவை என்கிற தார்மீக பொறுப்பின் அடிப்படையில் வரலாற்று ஆய்வாளர்களும், வல்லுநர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வரவேற்கிறோம்.


2. கவிதைப்போட்டி:

முதல் பரிசு: ரூ.1000/- மற்றும் தமிழ்க்குடில் வழங்கும் சான்றிதழ்

இரண்டாவது பரிசு: தமிழ்க்குடில் வழங்கும் சிறப்பு பரிசு  மற்றும் சான்றிதழ்

மூன்றாவது பரிசு: நூல் மற்றும் தமிழ்க்குடில் வழங்கும் சான்றிதழ்


3. கட்டுரைப்போட்டி:

முதல் பரிசு: ரூ.1000/- மற்றும் தமிழ்க்குடில் வழங்கும் சான்றிதழ்

இரண்டாவது பரிசு: தமிழ்க்குடில் வழங்கும் சிறப்பு பரிசு  மற்றும் சான்றிதழ்

மூன்றாவது பரிசு: நூல் மற்றும் தமிழ்க்குடில் வழங்கும் சான்றிதழ்


4. பெண்கள் சிறப்புக்கட்டுரை

முதல் பரிசு: ரூ.1500/- மற்றும் தமிழ்க்குடில் வழங்கும் சான்றிதழ்

இரண்டாவது பரிசு: தமிழ்க்குடில் வழங்கும் சிறப்பு பரிசு  மற்றும் சான்றிதழ்

மூன்றாவது பரிசு: நூல் மற்றும் தமிழ்க்குடில் வழங்கும் சான்றிதழ்.


இதை போட்டி என்று மட்டுமே எண்ணாமல், நமது தனித்திறமைகளை வெளிக்கொணரும் ஒரு முயற்சியாகவும், பயிற்சியாகவும் கொள்ள வேண்டுகிறோம்.

நம் தாய்மொழிக்கும், நம்முடைய அடுத்த தலைமுறைக்கும் நாம் ஆற்றும் கடமையில் ஒன்றென்பதை உணர்வோமாக. 

தமிழ்க்குடில் முகநூல் பக்கம் பார்க்க இங்கே சொடுக்குங்கள். 

அனைவரும் ஆர்வமுடன் கலந்து கொண்டு சிறப்பித்து தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.


என்றும் உங்களுடன்,
-தமிழ்க்குடில்.
நட்புக்காக...
-'பரிவை' சே.குமார்.

செவ்வாய், 25 நவம்பர், 2014

வேண்டுமடி மழை எனக்கு


மழை-
விவசாயிக்கு பருவ காலத்தில்
சந்தோஷத்தையும்...
அறுவடை காலத்தில்
வருத்தத்தையும் கொடுக்கும்...

மழை-
குடை விற்பவனுக்கு
சந்தோஷத்தையும்...
உப்பு விற்பவனுக்கு
வருத்தத்தையும் கொடுக்கும்...

மழை-
பள்ளிக் குழந்தைக்கு
சந்தோசத்தையும்
பெற்றவளுக்கு
வருத்தத்தையும் கொடுக்கும்...

மழை-
எருமைக்கு
சந்தோஷத்தையும்
பசுவுக்கு
வருத்தத்தையும் கொடுக்கும்...

சிலருக்கு சந்தோஷத்தையும்
சிலருக்கு வருத்தத்தையும்
கொடுக்கும் மழை...

அது
சாரலோ....
தூறலோ...
பெருமழையோ
எதுவாகினும்

ஒரு மழை நாளில்
மலர்ந்த நம் காதல்
நினைவுளை
நீர்க்குமிழிகளாய்
நீந்த விடுவதால்...

எப்போதும் வேண்டுமடி
மழை எனக்கு..!
-'பரிவை' சே.குமார்.

திங்கள், 24 நவம்பர், 2014

நண்பேன்டா : சந்தோஷ்


சென்னைக்கு வந்து நண்பர்களுடன் கோட்டூர்புரத்தில் தங்கியிருந்து பின்னர் தி.நகர் வேப்பேரி அம்மன் கோவிலுக்கு எதிரே நண்பன் ஒருவன் வைத்திருந்த அலுவலகத்தில் தங்க ஆரம்பித்தேன். அந்த இடம் அலுவலகம் போல் இருக்காது. அது ஒரு வீடுதான்... மாடியில் வீட்டு ஓனரும் அதற்கு மேலே சிலரும் குடியிருந்தார்கள். எங்கள் வீட்டிற்கு நுழையும் இடத்தில் ஒரு அடிபைப் வைத்து இருப்பார்கள். அதில் தண்ணீர் அடித்துப் பிடித்துத்தான் பாத்ரூமுக்கு பயன்படுத்த வேண்டும். அந்த வீடு காலையில் அலுவலகம்... மாலையில் தங்கும் இடம்.... நண்பன் குடும்பம் ஆதம்பாக்கத்தில் இருந்ததால் அவன் கிளம்பிவிட நான், சந்தோஷ், ராஜா, 2 ராஜேஷ் என ஐந்து பேர் தங்கியிருந்தோம். அந்த அலுவலகம் நடத்திய நண்பனும் நண்பேன்டாவில் வர வேண்டிய நண்பன்தான். ஆனால் இன்று பார்க்க இருப்பது சந்தோஷ் என்ற நடராஜனைப் பற்றி...

சந்தோஷ்... சின்னப் பையன்... அண்ணா என்றுதான் அழைப்பான். கம்ப்யூட்டர் டாக்டர் அவன்... அதாங்க ஹார்டுவேர் மெக்கானிக். சிரிக்கச் சிரிக்கப் பேசுவான்... மற்றவர்களிடம் இருக்கும் ஒட்டுதலைவிட என்னிடம் ரொம்ப பாசமாக இருப்பான். இவ்வளவுக்கும் நான் வரும் முன்னரே அவன் 2 ராஜேஷூடன் நெருக்கமாக இருந்தவன்தான்... என் நண்பனின் அறைக்கு எங்க ஊர் ராஜேஷ் மூலமாகத்தான் நான் வந்தேன். ஆரம்பத்தில் சிரிப்பான்... என்னங்க எப்படி வேலை போகுது என்பான்... அப்புறம் எதுவும் பேசமாட்டான்... கொஞ்ச நாளில் அண்ணா... அண்ணா... என ஒட்டிக் கொண்டான்.

மாலை ஆறு மணிக்கு பணி முடிந்து அறை வருவதற்கு ஏழு மணி ஆகிவிடும். அவனும் ஏழு எட்டு மணிக்குத்தான் வருவான். நல்ல திறமையான வேலைக்காரன்... கம்பெனியில் அவனை நன்றாக பயன்படுத்திக் கொள்வார்கள்... சம்பளம் என்று வரும் போது அவர்கள் கொடுப்பதுதான்... இவன் பெறுவதுதான்... இடையில் பெங்களூரில் ஒரு கிறிஸ்தவப் பள்ளி, தமிழகத்தின் மற்ற இடங்கள் என எல்லா இடமும் போய் வருவான். எங்கு சென்றாலும் இரவு மறக்காமல் என்னண்ணே பண்றீங்க... சாப்பிட்டீங்களா? அவனுக எங்கே? எனக் கேட்டு போன் செய்யாமல் இருக்க மாட்டான்.

பெரும்பாலும் இரவு அவர்கள் எல்லாருமே தண்ணி சாப்பிடுவார்கள்... நம்ம பயலுந்தான்... உக்காந்து குடிக்க ஆரம்பிச்சானுங்கன்னா பனிரெண்டு மணி வரைக்கும் ஓடும். இருந்த அஞ்சு பேர்ல நான் வெளியில் அமர்ந்து அருகே இருந்த பெட்டிக்கடை நண்பனிடம் புத்தகம் எடுத்து வாசித்துக் கொண்டிருப்பேன். இவர்கள் உள்ளே தண்ணி அடிப்பார்கள். நீ சாப்பிடுண்ணே... நாங்க அப்புறம் சாப்பிட்டுக்கிறோம் என்று சொல்லி விடுவார்கள். எங்கள் வீட்டிற்கு அடுத்து ஒரு ஒயின்ஷாப் அதனருகே ஒரு தள்ளு வண்டிக்கடை அங்கு இட்லியும் ஒரு ஆம்லெட்டும் சாப்பிட்டுவிட்டு வந்தாலும் இவர்கள் ஏதோ தீவிரமான விவாதத்தில் இருந்தபடி குடித்துக் கொண்டிருப்பார்கள்.

ஒருநாள்... எல்லோருமே நல்ல போதை... அதிலும் சந்தோஷ் நான் ஸ்டெடி... நான் ஸ்டெடியின்னு பின்னாடி நடக்கிறான்... இந்த இடத்தில் காரைக்குடியில் தங்கியிருந்த போது நிகழ்ந்த கதைதான் ஞாபகத்துக்கு வரும். அங்கயும் குடிதான்... நானும் மற்றொரு நண்பனும் வெளியே வராண்டாவில் உக்காந்திருக்க, உள்ளே தண்ணிப் பார்ட்டி ஜெகஜோதியா நடந்துச்சு... அப்புறம் என்னோட நண்பன் வந்து மாப்ள ரொம்ப ஓவராயிடுச்சு... நீங்க ரெண்டு பேரும் சாப்பிட எதாச்சும் வாங்கிட்டு வாங்கடான்னு சொல்ல ஸ்பெஷல் தோசை வாங்கியாந்து எல்லாரும் சாப்பிட உக்காந்தாச்சு. நாங்க ரெண்டு பேரும் சாப்பிட்டு எழுந்து விட்டோம். மற்றவர்கள் சாப்பாட்டோடு சண்டை போட்டுக் கொண்டிருக்க, போதை அதிகமான ஒரு நண்பர் நாஞ்ச் சால்ப்பிடுறேன்... ஆம்ம்ம்மா... இந்த்த்த்த்த டோசை எங்க்க்க வால்ங்குன்னே அப்படின்னு சொல்லிக்கிட்டே தோசைக்கு கீழ இருந்த பேப்பரை பிச்சு சாப்பிட ஆரம்பிக்க அடேய்... தோசையைத் தின்னுடான்னு சொல்லிப் பார்த்து ம்ஹூம் பலனில்லை... அவனைத் தூக்கி ஒரு பக்கமா படுக்கப் போட்டாச்சு. அப்பத்தான் அதுவரைக்கும் ஸ்டெடியா நின்னவன் எடுத்தான் பாருங்க வாந்தி... நானும் என்னோட நண்பனும் வாசனை தாங்க முடியாம ஓடி வெளிய வரண்டாவுல படுத்துக்கிட்டோம். இன்னொரு நண்பன் அந்தக் குடியிலும் எல்லாத்தையும் கழுவி துடைத்து பின்னர் படுத்ததாக காலையில் சொன்னான்.

சரி இந்தக் கதைக்கு வருவோம். அன்னைக்கு சந்தோஷ் புல்லா இருந்தான்... போதும்டான்னு மற்றவர்கள் சொன்னாலும் கேக்கலை... டேய் இன்னொரு பெக் ஊத்து அப்படின்ன் சொல்லி சண்டை போடுறான்... நான் வெளியில் இருந்து டேய் சந்தோஷ் என்னடான்னு கேக்கவும் டேய் அண்ணன் கோபப்படுது பாரு... சத்தம் போடாதீங்க... நீங்க தூங்குகண்ணே... இந்தா முடிஞ்சிருச்சு என குழறலாய் சொன்னான். பின்னர் சாப்பிட்டார்கள்... எப்பவும் எனக்குப் பக்கத்தில்தான் படுப்பான். அன்று நீ ரொம்ப போதையா இருக்கே அங்கயே படு என உள்ளே படுக்க வைத்தார்கள். படுத்து கொஞ்ச நேரம் இருக்கும்... எதோ ஒரு சத்தம் பார்த்தால் வாந்தி எடுத்து அப்படியே மயங்கிக் கிடக்கிறான்.. நான் எழுந்து வெளியே போய்விட்டேன். ராஜேஷ்தான் சுத்தம் செய்தான். அன்று இரவு பெரும்பாலான நேரம் வீதியில் கொசுக்கடியோடு வேடிக்கை பார்ப்பதில் கழிந்தது.

மறுநாள் மாலை வந்து அண்ணே என்றான்... என்ன நொண்ணே... போடா... போயி பாட்டில வாங்கியாந்து குடி அது மட்டுந்தானே உனக்கு வேணும்... அங்க அம்மா சாகக்கெடந்தாலும் உனக்கு குடிதான் முக்கியம்... மூக்கு முட்ட குடி... அப்புறம் வாந்தி எடுத்துக்கிட்டு அதுலே படுத்துக் கெட... என கோபமாகச் சொல்லவும் சத்தியமா இனி அதிகம் குடிக்க மாட்டேன்... என்று சொன்னான். அப்படியும் குடித்தான்... ஆனால் அளவோடு நிறுத்தியவன்... அப்புறம் வாரம் ஒரு முறைக்கு மாறினான். வாங்கும் சம்பளத்தை ஊருக்கு கொடுத்து விட்டு டைட்டான சூழலில்தான் வாழ்க்கை ஓடும். காலையில் பெரும்பாலும் சாப்பிடுவதில்லை. மதியம் அலுவலகத்து அருகே ஒரு சிறிய மெஸ்ஸில் சாப்பாடு... இரவு வண்டிக்கடை... ஒரு சில நாட்களில் தி.நகர் போலீஸ் ஸ்டேசனுக்கு எதிரே இருந்த காரைக்குடி மெஸ்... இப்படித்தான் ஓடியது வாழ்க்கை.

ஒரு சில நாட்களில் அவனிடம் காசிருக்காது... காசே இல்லைண்ணே... எதாவது ஐந்து பத்து இருந்தா கொடுங்கன்னு சொல்லி வாங்கிக்கிட்டுப் போவான். இரவு சாப்பிடப் போகும் போது காலையிலேயே காசில்லைன்னு சொன்னானே என போன் அடித்தால் நீ குடுத்த காசில சிகரெட் குடிச்சாச்சு... காசில்லண்ணே... வந்து  தண்ணியக் குடிச்சிட்டு படுத்துட வேண்டியதுதான் அப்படிம்ப்பான்.. சரி வா சாப்பிடப் போவோம் என்று சொல்லி அவனுக்காக காத்திருப்பேன். ஒரு சில நாள் நாம ஓட்டாண்டியா இருப்போம்... அன்னைக்கு சாயந்தரம் எனக்குப் போன் பண்ணி அண்ணே... உங்கிட்டதான் காசில்லையில்ல... நா இங்க கொஞ்சம் வாங்கியிருக்கேன்... இருண்ணே வந்திருறேன்.. சாப்பிடலாம் என்று சொல்லி வந்து சாப்பிடக் கூட்டிச் செல்வான். இப்படித்தான் எங்கள் நட்பு அண்ணன் தம்பியாக நகர்ந்து கொண்டிருந்தது.

பின்னர் குடும்பம் சென்னை வர, நான் அலுவலகத்துக்கு அருகே முகப்பேரில் வீடு பிடித்து இருந்தேன். வீட்டிற்கும் அடிக்கடி வருவான். காசநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவனது அம்மாவும் இறந்து போக, பெங்களூரில் ஒரு கிறிஸ்தவ பள்ளிக்கு சிஸ்டம் சர்வீசுக்காகச் செல்லுவான் என்று சொன்னேனல்லவா... அங்கு இவனின் வேலை பிடித்துப் போன அந்தப் பள்ளியின் சிஸ்டர் அழைத்துக் கொண்டே இருக்க, சில மாத தயக்கத்துக்குப் பின்னர் கிளம்பிவிட்டான். அங்குதான் இன்னும் வாழ்க்கை போய்க் கொண்டிருக்கிறது. எப்போதாவது மின்னஞ்சல் அனுப்புவான். போன் நம்பர் அனுப்பி கூப்பிடு என்பான்... கூப்பிட்டால் ரொம்ப நேரம் பேசுவான். என்னடா வயசாயிக்கிட்டே போகுது கல்யாணம் பண்ணலையான்னு ஒரு முறை கேட்டேன். இங்க ஒரு பொண்ணை லவ் பண்றேன் என்றான்... டேய் நட்டு லவ்வெல்லாம் பண்ண ஆரம்பிச்சிட்டியா என்றதும் போண்ணே எனச் சிரித்தான்.

பின்னர் ஒரு முறை பேசிய போது இப்பவே கல்யாணம் பண்ணிக்கன்னு சொன்னா... கொஞ்சம் ஸ்டெடி ஆயிக்குவோம்ன்னு சொன்னேன். அதுக்கப்புறம் ஒரு சின்ன பிரச்சினை... அத்தோட என்னைய விட்டு விலகிப் பொயிட்டா போனடிச்சாலும் எடுக்க மாட்டேங்கிறான்னு புலம்பினான். ரொம்ப சீரியஸா பேசவும்... நீ எப்பவும் ஸ்டெடிதானேடா எனச் சொன்னேன். அடப்போண்ணே... இப்பல்லாம் விட்டுட்டேன் தெரியுமா? என்றான். எனக்கென்ன தெரியும் உங்கூடவா இருக்கேன் என்று சொல்லிவிட்டு வீட்ல பொண்ணு பாக்கச் சொல்லுடா என்றதும் சொல்லிட்டேண்ணே... பாக்குறேன் பாக்குறேன்னு சொன்னானுங்க... இந்தத் தடவை போகும் போது மூணு பொண்ணு பாத்திருக்கோமுன்னு சொன்னானுங்க... பொண்ணு என்னடா பண்ணுதுன்னு கேட்டா... எல்லாமே மூணாங்கிளாஸ் படிச்சிட்டு மாடு மேய்க்கிதுக... அதுகள கட்டிக்கிட்டு... அதான் சொல்லாம கொள்ளாம எஸ்கேப் ஆயிட்டேன்னு சிரிச்சான்... உன்னைய நல்லா மேய்க்குங்கடான்னு சொன்னதுக்கும் சிரிப்பு.

இப்பக் கொஞ்ச நாளா போனும் இல்லை... மெயிலும் இல்லை... மறுபடியும் ஊடலான காதலியோடு கூடல் ஆயிருச்சோ என்னவோ... தன்னோட பசியோட என்னோட பசிக்கும் உணவாயிருந்தவன் சந்தோஷ்.... அண்ணன் அண்ணன் னு பாசத்துடன் மரியாதையும் கொடுத்தவன் சந்தோஷ்... கஷ்டம் என்று சொன்ன போதெல்லாம் எங்காவது பணம் புரட்டிக் கொண்டு வந்து கொடுத்து பின்னர் என்னிடமிருந்து திரும்பப் பெற்றவன் சந்தோஷ்... அம்மா... அம்மா என பாசமாய் அம்மாவுக்கு மருத்துவம் பார்த்தவன் சந்தோஷ்... எத்தனை வலிகள் இருந்தாலும் எந்த நேரமும் சிரிப்போடு இருந்தவன் சந்தோஷ்... எல்லாருக்கும் பிடிக்கும்படி வாழ்ந்தவன் சந்தோஷ்... அவனோட மனசுல புகுந்த அந்தப் பொண்ணு வாழ்க்கையிலும் அவனுடன் இணைந்து சந்தோஷமாக வாழணும்ன்னு இறைவனை வேண்டிக் கொள்கிறேன். 

நண்பேன்டா தொடரும்.
-'பரிவை' சே.குமார்.

ஞாயிறு, 23 நவம்பர், 2014

தொடர்கதை : வேரும் விழுதுகளும் (பகுதி - 9)

முந்தைய பகுதிகள் : 


பகுதி-1     பகுதி-2     பகுதி-3     பகுதி-4      பகுதி-5      பகுதி-6     பகுதி-7      பகுதி-8


---------------------------------

எட்டாவது பகுதியின் இறுதியில்...

"ம்... எனக்கும் தெரியிது.. எனக்கு உன்னை விட்டா ஆளில்ல... அவ அண்ணனும் கொஞ்சம் பணம் தர்றேன்னு இருக்காரு... பேசாம நம்ம சொத்துப்பத்து வீடுவாசல் எல்லாத்தையும் நீயே எடுத்துக்கிட்டு எனக்கு ஒரு வெல வச்சிக் கொடுத்துடு... " மனைவி சொன்னதை அப்படியே சொல்லி முடித்தான் மணி.

"என்னது நம்ம பரம்பரை சொத்துக்கு ஒரு வெல வச்சிக் கொடுக்கவா...?" அதிர்ச்சியாய் கேட்டான் குமரேசன்.

இனி...

குமரேசன் அதிர்ச்சியாய்க் கேட்டதும் "ஆமாடா... எனக்கு இடம் வேண்டாம்... அதுக்குள்ள பணத்தைக் கொடுத்துடு." என்றான் மணி.

"என்னண்ணே பேசுறே... அப்பா அம்மா காலத்து வரைக்கும் சொத்தைப் பிரிக்க வேண்டான்னு நீதான் சொன்னே... இப்ப என்னடான்னா எனக்கு காசு கொடுங்கிறே... அப்பா காலத்துக்குப் பின்னாடி நானோ நீயோ அங்க போயி விவசாயம் பண்ணுவோமா... சொல்லு... அது பாட்டுக்கு கிடக்கட்டும்..."

"ஆமா பிரிக்க வேண்டான்னு நாந்தான் சொன்னேன்... ஆனா எனக்கு இப்ப பணம் அர்ஜெண்ட்... ஒண்ணு நீ எடுத்துக்கிட்டு கொடு... இல்ல பொங்கலுக்குப் போகும் போது நாலு பெரியவுகளை வச்சி பிரிச்சி வித்துட்டு பணம் தாரேன்... ஒரு மாதத்துக்கு கை மாத்தா யார்கிட்டயாவது வாங்கிக் கொடு..."

"நம்ம கண்ணதாசண்ணனுக்கிட்ட கேளுண்ணே... அது ஊர்ல யார்க்கிட்டயாச்சும் பெரட்டித் தரும்... நா இங்க அம்புட்டுப் பணத்தை யார்கிட்ட பொரட்டுவேன்... நானும் டிரை பண்ணுறேன்... ஆனா கன்பார்மா வாங்கித் தாரேன்னு சொல்ல முடியாது... எதுக்கும் ஊர்ல கண்ணதாசண்ணனுக்கிட்ட பேசிப் பாரு..."

"அவனுக்கிட்டயா... நல்ல கதைடா..."

"ஏன்... அதுக்கிட்ட கேட்டா உடனே கிடைக்கும்... நா வீடு கட்டும் போது அதுதானே அவசரத்துக்கு பொரட்டிக் கொடுத்துச்சு... கேட்டுப் பாரு... எங்கயாச்சும் வாங்கித்தரும்..."

"ஆமா அவனுக்கிட்ட கேட்டு... உடனே அப்பாக்கிட்ட சொல்லி... வேண்டாம் விடு... உன்னால முடியாதுல்ல... விட்டுடு... நான் பாத்துக்கிறேன்..."

"அப்ப அப்பாவுக்குத் தெரியாம வாங்கப் பாக்குறியா?"

"இப்பத் தெரிய வேண்டான்னு பாக்குறேன்... ஏன்னா ஆரம்பத்துலயே அபசகுணமா எதாவது சொல்லுவாரு..."

"எப்படிண்ணே இப்படி மாறினே... அந்த வீட்டு மனுசங்க உன்னைய இந்தளவுக்கு கேவலமா மாத்திட்டாங்களா என்ன..."

"டேய்...??"

"கத்தாதேண்ணே... இனி பேச்சு தொடர்ந்தா வீணாவுல சண்டை வரும்... நா வைக்கிறேன்... என்னால இப்ப எதுவும் முடியாது... எங்கிட்டாச்சும் வாங்கப் பாரு..." என்று போனை வைத்து விட்டு பேசாமல் இருந்தான்.

"என்னங்க மாமாவுக்கு பணம் அர்ஜெண்டாமா?" மெதுவாகக் கேட்டாள் அபி.

"ம்... இடம் வாங்கப் போறாராம்..."

"எம்புட்டாம்..?"

"எங்கிட்டத்தான் மூணு லட்சம் கேட்டாரே.."

"ம்... இப்ப நாம இருக்க நிலமையில கொடுக்க முடியாதுதான்... அப்பாக்கிட்ட நான் கேட்டுப் பாக்கவா... பாவம் அவருக்கு நம்மள விட்டா வேற யாரு இருக்கா... உங்ககிட்ட உரிமையோட கேக்குறாரு... இதுவரைக்கும் எதுக்கும் கேட்டதில்ல... மகா படிப்புக்கு கூட வேண்டான்னுதான் சொன்னாரு... நாமதான் வலுக்கட்டாயமா அவளுக்கு பீஸ் கட்டுறோம்...  அப்பாக்கிட்ட கேட்டுப் பாக்குறேன்... கடனா வாங்கி கொடுப்போம்... சீக்கிரம் கொடுத்துட்டா வட்டியில்லாம கொடுத்துடலாம்... இல்லேன்னா கொறச்ச வட்டி கொடுக்கலாம்... என்ன"

அபியைப் பார்த்தவன் அவள் தலைகோதி சிரித்தான்.

"என்னங்க..."

"இல்ல சொந்தமுன்னு வந்த அண்ணிக்கும் உனக்கும் எம்புட்டு வித்தியாசம்? அதான் சிரித்தேன்"

"மறுபடிக்கும் இப்படியா பிறக்கப் போறோம்... வாழ்றது ஒரு தடவை மத்தவங்களுக்கு பாரமா இல்லாம நம்மாள முடிஞ்சதை செய்வோம்... நா அப்பாக்கிட்ட பேசி மாமாவுக்குன்னே சொல்லி வாங்குறேன்... சரியா"

"சரி... கேளு பாக்கலாம்... ஆனா இவரு அண்ணி கூட குடும்பம் நடத்தி டோட்டலா மாறிட்டாரு... அப்பாவுக்கு தெரியக்கூடாதுங்கிறார்... நல்லவேளை இடத்துக்கு வெல வச்சிக் கொடுடான்னு கேட்டவரு... எனக்கு பொம்பளப்புள்ள மட்டுந்தானிருக்கு... உனக்குத்தான் பய இருக்கான்... பிரிக்காம போட்டு நாளைக்கி அவந்தானே எடுத்துப்பான்னு சின்னபுத்தியா யோசிச்சிருவாரோன்னு பயந்தேன்... ஏன்னா நா மூணு பிள்ளைகளையும் ஒண்ணாத்தான் நினைக்கிறேன். இன்னைக்கும் மூத்தமக மகாதான்... அப்புறம்தான் திவ்யாவும் முகேஷூம்"

"என்னங்க நீங்க... அது அவங்களுக்கு தெரியாமலா இருக்கும்... ஏதோ சொல்லிட்டாரு விடுங்க... மாமாவா இப்படிப் பேசுறாரு... எல்லாம் அக்கா சொல்லியிருப்பாங்க... இவரு பேசுவமா வேண்டாமான்னு யோசிச்சிக்கிட்டே வாயை விட்டுட்டாரு... விடுங்க..."

"அதான் எனக்கு கஷ்டமாப்போச்சு... அவருக்கிட்ட எதுத்து பேசினதே இல்ல... அப்பாவுக்கு தெரியக்கூடாதுன்னு சொன்னதும் என்னை அறியாம வார்த்தையை விட்டுட்டேன்... அப்புறம் வீணாவுல சூடாக வேண்டான்னுதான் கட் பண்ணிட்டேன்..."

"சரி விடுங்க... மாமா அதெல்லாம் தப்பா நினைக்க மாட்டாங்க... கூப்பிட்டு சொல்லுங்க..."

"ம்க்கும்... நீயே பேசு... நா பேசினா எதாவது வில்லங்கம் வந்திரும்... அதுவும் அந்தப் பொம்பள எடுத்தா அப்புறம் ஒண்ணு கெடக்க ஒண்ணு பேசிப்புடுவேன்..."

"ஆஹ்கா... இந்த சண்டை எம்புட்டு நேரமின்னு பாப்போம்..." என்றபடி மொபைலை எடுத்தாள்.

தே நேரம்...

"என்ன உங்க தம்பி இல்லைன்னுட்டாரா?" கடுப்பாகக் கேட்டாள் சித்ரா.

"ம் அவனுக்கிட்ட இல்லையாம்... மாமனாருக்கிட்ட அவன் இதுவரைக்கும் பணமின்னு கேட்டதில்லையாம்... பேசினதில்லையாம்..."

"ஓ.... இருந்தாலும் கொடுக்க மாட்டாருங்க... என்னவோ மகாவுக்கு பணம் கட்டுறத நிப்பாட்டுனா எதுனாச்சும் சொல்லுவோமோன்னு தொடர்ந்து கட்டுறாரு... இனி வேண்டான்னு சொல்லிடுங்க... கடன ஒடன வாங்கி நாம கட்டிப்போம்... அவசரத்துக்கு ஒதவாத அண்ணந்தம்பி இருந்தா என்ன இல்ல..." அவள் முடிக்கும் முன்னர் "சித்ரா..." என்று கத்தினான்.

"எதுக்கு கத்துறீக..? சொன்னா என்ன தப்பு...? பெரியவுக அனுபவிச்சித்தானே சொல்லி வச்சாக... பொறந்த பாசத்துல எங்கிட்ட கத்துறாக..." மூக்கைச் சிந்தினாள்.

"இங்க பாரு... எனக்கு அவன் எல்லா விதத்துலயும் உதவித்தான் இருக்கான்... சின்ன அமொண்டா இருந்தா பொரட்டிக் கொடுத்திருவான். இது பெரிய அமொண்ட்... அவனும் இப்பத்தான் வீடு கட்டி லோனு அது இதுன்னு கட்டிக்கிட்டு இருக்கான்... அவனுக்கிட்ட கேட்டதே தப்பு... கண்ணதாசனுக்கிட்ட கேக்கச் சொன்னான்... அவனுக்கிட்ட பேசலாம்..."

"ஆமா உங்க தம்பி வூடு கட்டுனப்போ மாமனாரு கொடுக்காமயா கட்டிப்புட்டாரு... கண்ண மச்சானுக்கிட்ட கேக்காதீக... அது உங்கப்பாக்கிட்ட சொன்னா உடனே எதாவது சொல்லி கடுப்பேத்துவாரு..."

"அப்புறம் யாருக்கிட்ட கேக்குறது...?" என்றபோது போனடித்தது. நம்பரைப் பார்த்ததும் 'அவந்தான் கூப்பிடுறான்... இந்தா நீயே என்னன்னு கேளு..."

"நானு... உங்க தம்பிக்கிட்ட... எதுனாச்சும் பேசினா நாக்கப் புடுங்கிக்கிற மாதிரி நாலு வார்த்தை பேசிப்பிடுவேன். அப்புறம் நீங்க கத்துவீக... மகாவ என்னன்னு கேக்கச் சொல்லுங்க..." என்றாள்.

"மகா... இங்க வாடா... சித்தப்பா பேசுறான் என்னன்னு கேளு" எனக் கூப்பிட்டுக் கொடுத்தான்.

"அலோ சித்தப்பா..."

"ஏய் மகாக்குட்டி நா சித்தி பேசுறேன்..."

"அய் சித்தியா... எப்படியிருக்கீங்க... திவ்வி முகி என்ன பண்ணுறாங்க...?"

"நல்லா இருக்கேன்டா... ஆமா அப்பா எங்க... பேச மாட்டாராமா?"

"ஏய்... அப்படியெல்லாம் இல்ல சித்தி... சித்தப்பான்னதும் எங்கிட்ட பேசவாக்கும்ன்னு கொடுத்தாக... இருங்க கொடுக்கிறேன்..." என்றபடி "அப்பா சித்தி... உங்ககிட்டதான் பேசணுமாம்" என்று கொடுத்தாள்.

'ஆமா... இவுக என்ன பஞ்சாயத்தாரா? படிச்ச திமிரு... அதான் அவனைக் கட்டிக்குவேன்னு நின்னு கட்டுனா... அவளுக்கு தலயில நல்லா எழுதியிருக்கான்... நாந்தேன் இப்படி கஷ்டபட வேண்டியிருக்கு' என்று சித்ரா புலம்ப அவளை முறைத்தபடி போனை வாங்கி "என்னம்மா" என்றான்.

'ம்க்கும்... அம்மா போட்டுருவாக அம்மா....' சித்ரா முகவாயை தோளில் இடித்துக் கொண்டாள்.

"மாமா... நீங்க அப்பாக்கிட்ட பணம் கேக்கச் சொன்னீங்களாம்... அவுக அப்பாக்கிட்ட ரொம்ப பேச மாட்டாக... நா வேணுமின்னா கை மாத்த கேக்குறேன்... கொஞ்ச நாச்சென்டு கொடுக்குறதுன்னா குறைஞ்ச வட்டிக்கு கேப்போம்... உங்களுக்கு கொடுக்க எங்ககிட்டயும் இப்ப பணமில்லை... ரெண்டு பேரும் லோன் கட்டிக்கிட்டு வர்றது உங்களுக்குத் தெரியும்... அப்புறம் மத்த செலவெல்லாம் இருக்குல்ல மாமா... நீங்க மத்த வேலையைப் பாருங்க... அப்பாக்கிட்ட நா வாங்கித் தாறேன்..."

"அம்மாடி... உனக்கு தங்க மனுசும்மா... அவனைப் பத்தி எனக்குத் தெரியும்... என்ன பேச்சு கொஞ்சம் சூடான மாதிரி ஆயிருச்சு... கைமாத்தா வேண்டாம் வட்டிக்குன்னாலும் பரவாயில்லை... ரெண்டு மூணு மாசத்துல பொரட்டிக் கொடுத்துருவோம்..."

"அது பெரட்டிக்குவோம் மாமா... அவசரத்துக்கு அப்பாக்கிட்ட வாங்கிடலாம்...  டோண்ட் ஒர்ரி மாமா"

"ரொம்ப நன்றிம்மா... என்ன கோபமா இருக்கானோ..?"

"உங்க தம்பிதானே மாமா... அவரோட கோபம் எம்புட்டு நேரம்... நாளைக்கி போன் பண்ணி பேசிடுவாரு... அப்ப நான் வைக்கிறேன்..."

போன் கட்டானதும் "மவராசி... பணம் பெரட்டித்தாறேன்னு சொல்லிட்டா... உங்கண்ணனுக்கிட்ட கூப்பிட்டு மத்த காரியத்தை பாக்கச் சொல்லு..." என்றான் சந்தோஷமாக.

"அட பரவாயில்லையே... எல்லாருக்கும் நல்லவளா ஆயிடுறா..." என்றாள்.

"அதுக்கு மனசு வேணும்" என்றபடி அவளின் பதில் எப்படி இருக்கும் என்பதால் எழுந்து கொண்டான்.

"ஆமாமா... எங்களுக்கு அந்த  மனசில்லைதான்.... அது சரி என்ன பேசிப்பிட்டியன்னு உங்க தம்பியாரு கோவமா இருக்காராமாம்... சரி நமக்கு எடம் வாங்கணும்.. பணம் வாங்கிக் கொடுத்தா சந்தோஷம்தான்..." என்று சித்ரா சொல்லிக் கொண்டிருக்கும் போது பதில் சொல்லாமல் வெளியே கிளம்பினான்.

"அப்பா... குமரேசன் பேசுறேன்..."

"என்னப்பா... எல்லாரும் நல்லாயிருக்கீகளா?"

"இருக்கோம்... ஸ்கூல் லீவுக்கு அவுக மூணு பேரும் அங்கிட்டு வாறாகளாம்... கிளம்புறப்போ போன் பண்ணுறேன்... பஸ்ஸ்டாண்டுல வந்து ஆட்டோ வச்சி கூட்டிக்கிட்டுப் போங்க..."

"இங்க வருதுகளா... ரொம்ப சந்தோஷமா இருக்கு... " என்றவர் போனைக் காதில் வைத்தபடி காளியம்மாளைப் பார்த்து "ஏய்... ஏய்... சின்ன மருமவளும் புள்ளகளும் லீவுக்கு இங்க வருதுகளாம்.. பேரப்பிள்ளைக இங்க ஓடி ஆடி திரியப் போகுதுகன்னு நினைச்சா... எம்புட்டு சந்தோஷமா இருக்கு தெரியுமா... " சந்தோஷமாக கத்தியவர் எதிர் முனையில் மகன் சிரிப்பதைக் கேட்டதும் "ஏம்ப்பா... நீயும் ஒரு நா லீவு போட்டுட்டு வந்துட்டுப் போயேம்ப்பா... அம்மா கண்ணுக்குள்ளே நிக்கிறான்னு இன்னிக்கித்தான் சொல்லிக்கின்னு இருந்தா..."

"இப்ப முடியாதுப்பா... பொங்கலுக்கு வாறேன்..."

"ம்...சரிப்பா... வேல வேலயின்னு அலயாம உடம்பையும் பாத்துக்கப்பா... சொவரிருந்தாத்தான் சித்ரம் வரைய முடியும்..."

"ம்... சரிப்பா... அம்மாவைக் கேட்டேன்னு சொல்லுங்க..."

"இருப்பா அவகிட்ட ரெண்டு வார்த்தை பேசினியன்னா சந்தோசப்படுவா..." என்றவர் "இந்தா" என மனைவியிடம் கொடுத்தாள்.

"அப்பா... நல்லாயிருக்கியா" என பேச ஆரம்பித்து சில நிமிடங்கள் மகனுடன் பேசிவிட்டு போனை வைத்துவிட்டு வந்தாள். 

"ஏலா... பேரப்பிள்ளைக வருதுக பாத்துப் பாத்து சமச்சிப் போடணும்... ஆமா சொல்லிப்புட்டேன்... பெரிய மாப்ள கடல கொண்டாந்து கொடுத்தாருல்ல... அதை நல்லா காய வையி... வந்ததும் அவிச்சிக் கொடுக்கணும்... பொரியரிசி வறுத்து வையி... சத்துமாவுக்கு அரச்சிக்கிட்டு வாறேன்... வந்தா பெசஞ்சி திங்கிங்க... என்ன இந்த அயிசுப் பெட்டிதான் இல்ல... இருந்தா அம்புட்டையும் வாங்காந்து அடஞ்சி வச்சிடலாம்... எடுத்து எடுத்து சாப்பிட்டுக்குங்க..." என கந்தசாமி பேசிக் கொண்டே போக, 'பார்றா இந்தக் கெழவனை... எம்புட்டு சந்தோஷம்... அதுக வந்துட்டு போற வரைக்கும் இவரோட ஆட்டம் தாங்க முடியாதே...' என்று மனதுக்குள் நினைத்த காளியம்மாள். "ஆமா... அதுக வந்து டிவியைக் கட்டிக்கிட்டு அழப்போகுதுக... என்னமோ உங்க கூட வயலுக்கு வந்து கருதறுக்க ஒதவப் போற மாதிரி குதிக்கிறீக..." என்றாள் நக்கலாக.

"என்ன இப்புடிச் சொல்றே.... அதுக இங்க வர்றதே சந்தோஷம்தானே..." என்று சிரித்த போது "சித்தப்பா உங்களுக்கு வெசயந் தெரியுமா?" என்றபடி வந்தான் கண்ணதாசன்.

(வேரும் விழுதுகளும் வளரும்)
-'பரிவை' சே.குமார்.

சனி, 22 நவம்பர், 2014

ஜெயக்குமார் ஐயாவின் கரந்தை மாமனிதர்கள் - வாசிப்பு அனுபவம்

வாசிப்பனுபவம் கொடுக்கும் சந்தோஷத்தை மற்ற எதிலும் அனுபவிக்க முடியாது. தேடல் இருக்கும் மனிதனே சிறந்த எழுத்தாளனாக முடியும் என்று எங்கள் பேராசான் சொல்லுவார். கல்லூரியில் படிக்கும் காலத்தில் அவருடன் பழக ஆரம்பித்த பிறகுதான் கொஞ்சம் நல்ல புத்தகங்களை வாசிக்கும் அனுபவம் ஏற்பட்டது. பிரபல எழுத்தாளர்களின் கட்டுரைகள், எங்கள் ஐயாவின் சீனத்துக் கதைகள் மொழிபெயர்ப்பு மற்றும் பொன்னீலன், மீரா, அப்துல்ரஹ்மான், தோப்பில் முகமது மீரான் என பலரின் எழுத்துக்களை அவரால்தான் படிக்க முடிந்தது. 

என்னைப் பொறுத்தவரை பள்ளிக் காலங்களில் எல்லாம் குமுதம். ஆனந்த விகடன், பாக்யா, உதயம், க்ரைம் நாவல், பாக்கெட் நாவல் என்பவையே எனது வாசிப்பில் இருந்தன. கல்லூரிக்கு வந்த பின்தான் தாமரையும் செம்மலரும் சுபமங்களாவும் ஐயாவால் எனது வாசிப்பில் வந்தன. அப்படி வாசிக்க ஆரம்பித்து தாமரையில் கவிதையும் எழுதி எழுத்து வேட்கையையும் ஆரம்பிக்க காரணம் ஐயா. அவரின் வீட்டிற்குச் சென்றால் அவர் இருக்கும் அறைக்குள் எல்லாப் பக்கமும் புத்தகம் அடுக்கி இருக்கும். கீழே அவர் அமர்ந்திருக்கும் இடமும் வைத்தெழுதும் இடமும் தவிர்த்து எங்கும் புத்தகங்கள்... ஐயா எங்கே என்று நம்மளைத் தேட வைக்கும். அப்படி ஒரு சூழலில் அவருடன் அமர்ந்து படித்ததால்தான் இன்னும் எழுத்து என்னோடு உறவாடுகிறது போலும்.

My Photoபேச வந்த விசயத்தை மறந்தாச்சு பாத்தீங்களா..? ஐயா பற்றி பேசினால் அனைத்தும் மறக்கும் அப்படிப்பட்ட அன்பு அவரிடம் இருந்து எனக்குக் கிடைத்தது... கிடைத்துக் கொண்டிருக்கிறது. அவர் சொன்னது போல் என்னிடம் தேடல் எல்லாம் எப்போது இருந்ததில்லை. இப்போது இங்கு வந்த போது அந்தத் தேடல் இருந்த இடமும் தெரியவில்லை. இணையத்தில் எத்தனையோ நல்ல எழுத்துக்களை வாசிக்கிறேன் என்பதே சந்தோஷம் என்றாலும் புத்தகங்கள் மூலமாக வாசித்து அதன் ருசியை அறியும் நிலை இல்லாதது ரொம்ப வருத்தமான விஷயம். ஏன்னா புத்தகத்தில் வாசிப்பது என்பதற்கும் இணையத்தில் வாசிப்பதற்கும் எனக்கு நிறைய வித்தியாசம் தெரிகிறது.

கரந்தை ஜெயக்குமார் ஐயா அவர்களின் வலைப்பூவை வாசிக்க ஆரம்பித்து அந்த எழுத்தில் லயித்து அவரை நேசிக்க ஆரம்பித்து விட்டேன் என்பதே உண்மை. அவரின் எழுத்துக்கள் பலரையும் இழுக்க முதல் காரணமே அவரது தேடல்தான். கணித ஆசிரியராக இருந்து கொண்டு தமிழ் மீது கொண்ட காதலால் அவரின் தேடுதல் வேட்கை தொய்வின்றி தொடர்கிறது. அவரின் பதிவுகள் பல வரலாற்றைப் பேசும்... இனி வரும் காலங்களில் வரலாறாய் பேசும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

வலையில் தொடர்ந்து எழுதினாலும் அபுதாபி என்ற தீவில் இத்தனை வருடங்களாக தனித்து விடப்பட்டுத்தான் இருந்தேன். வலைப்பூ வாசம் மட்டுமே வாழ்வின் மகிழ்ச்சிகளில் ஒன்றாய் இருந்தது. அமீரகத்தில் இருந்து நிறையப் பேர் வலைப்பூவில் எழுதுகிறார்கள் ஆனால் யாரும் யாரையும் சந்திக்கும் நிலை இல்லை. இரண்டு வருடங்களுக்கு முன்னர் சகோதரி மலிக்கா, ஆசியா அக்கா என வலையில் எழுதும் பெண் சகோதரிகள் கூடி பேசி மகிழ்ந்தார்கள். ஆனால் அது பின்னர் தொடர்ந்ததா என்று தெரியவில்லை. ஆனால் ஆண் எழுத்தாளர்கள் யாரையும் யாரையும் சந்திக்கவில்லை. காரணம் ஓடிக்கொண்டிருக்கும் வாழ்க்கையில் காலை அலுவலகம் சென்றால் இரவுதான் திரும்புகிறோம். இதில் எப்படி ஒருவருக்கு ஒருவர் சந்திக்க முடியும்.

நான் தேவா அண்ணனின் தீவிர வாசகன். இதோ துபாயில்தான் இருக்கிறார். ஆனால் அவருடன் பேசியது கூட இல்லை... சில மாதங்களுக்கு முன்னர் தொடர்பில் வந்தார். இப்போது தொலைபேசி எங்களை இணைத்து வைத்துள்ளது. இப்படிப்பட்ட சூழலில்தான் அண்ணன்கள் கில்லர்ஜி மற்றும் மகேந்திரன் ஆகியோரின் தொடர்பு கிடைத்தது. எழுத்து குறித்துப் பேச இரண்டு உறவுகள் கிடைத்த சந்தோஷம் என்றும் மறக்காது. நேற்று கில்லர்ஜி அவர்கள் இரண்டு நூலுக்கு விமர்சனம் எழுதியிருந்தார். அவருக்கு இட்ட கருத்தில் எனக்கு அந்தப் புத்தகங்களைக் கொடுங்கள் வாசித்து விட்டு தருகிறேன் என்று சொல்லியிருந்தேன். உங்க பில்டிங்குக்கு கீழ நிக்கிறேன்... வாங்க என ஒரு மணி நேரத்திற்குள் அழைப்பு... அவசரமாக இறங்கிப் போனால் புத்தகங்களைக் கொடுத்து விட்டு இவற்றை நான் பொக்கிஷமாகப் பாதுகாப்பேன். புத்தகங்களை மடக்கி கிடக்கி ஏதும் பண்ணீறாதீங்க என்ற நிபந்தனையுடன் கொடுத்தார். அப்போது அவரின் புத்தக நேசிப்பு பிரமிக்க வைத்தது.

நீண்ட நாட்களுக்குப் பிறகு புத்தக வாசிப்பு... இன்று காலை ஜெயக்குமார் ஐயாவின் புத்தகத்தை எடுத்தேன்... வாசித்து முடித்தேன்... எனக்கு என்ன பொறாமைன்னா... நாட்டுல ரொம்பப்பேரு ஊரு பேரைச் சொல்லுறதுக்கே யோசிப்பானுங்க.... நமக்கு எந்த ஊருன்னு கேட்டா... அது தேவகோட்டைக்கு பக்கத்துலங்க... ஒரு ரெண்டு கிலோ மீட்டர் கிழக்கே என்று சொல்லுவாங்களே தவிர கடைசி வரை ஊரைச் சொல்ல மாட்டானுங்க.. ரொம்பக் கேட்டா அது ஒரு ஊரு... தேவகோட்டையிலதான் இருக்கோம் என்பார்கள். என்னைப் பொறுத்தவரை எங்கள் ஊர் எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஆனால் இவரோ அங்கு பிறந்து... தவழ்ந்து... வளர்ந்து... படித்து... அங்கேயே ஆசிரியராகி... தன்னை விளைவித்த மண்ணில் இன்று வித்தாக நிற்கிறார். நமக்கு அப்படி ஒரு கொடுப்பினை இல்லையேன்னு ஐயா மேல பொறாமை வரத்தானே செய்யும்.

ஐந்து கட்டுரைகள்... அதில் சொல்லியிருக்கும் ஐவரும் தமிழுக்காக வாழ்ந்தவர்கள். எத்தனை சிறப்பான மனிதர்களை இத்தனை சிறிய புத்தகத்தில் கொண்டு வந்திருக்கிறார் என்று நினைக்கும் போதே பிரமிப்பாக இருக்கிறது. கரந்தையில் பிறந்து அங்கு தமிழ்ச்சங்கம் வளர்த்து வானளாவிய புகழை அடைய வைத்த பிரமாக்கள் குறித்த தேடலில் நமக்கு அரிய செய்திகளை அழகாய்த் தந்திருக்கிறார். இந்தக் கட்டுரைகளை இவரது வலைப்பூவில் வாசித்திருக்கிறேன். அற்புதமான தேடல்... அருமையான புத்தகம்... காணாமல் போய்க் கொண்டிருக்கும் வரலாற்றில் சில பக்கங்களை தேடித் தேடி எடுத்து நமக்கு தெவிட்டாத பாலமுதாய் தந்திருக்கிறார்.

செந்தமிழ் புரவலர் தமிழ்வேள் த.வே. உமா மகேசுவரனார் என்ற முதலாவது கட்டுரை அவர் வேலை பார்க்கும் பள்ளியின் நிறுவனரும் கரந்தை தமிழ்ச் சங்கத்தின் முதலாவது தலைவராக இருந்த உமா மகேசுவரனார் பற்றியது. இவர் காலத்தில் தமிழுக்கு ஆற்றிய பங்கு, இவரின் பேச்சு மூச்சு எல்லாமே தமிழ் நிரம்பி இருந்தது என விரிவாகச் சொல்கிறார். இவரின் காலத்தில்தான் தூய தமிழ்ச் சொற்களைக் கொண்டு கரந்தை தமிழ் வழக்கு கொண்டு வரப்பட்டது என்றும் சொல்லியிருக்கிறார். 

இரண்டாவது கட்டுரை நேசமே சுவாசமாக... இதில் நட்பின் இலக்கணம் போற்றிய தமிழறிஞர்களைப் பற்றி சொல்லியிருக்கிறார். சேரமானும் சுந்தரரும் போல, கோப்பெருஞ்சோழனும் பிசிராந்தையாரும் போல, அவ்வையும் அதியமானும் போல இருந்த நட்பில் கவியரசு அரங்க. வேங்கடாசல்ம் பிள்ளை அவர்களைப் பற்றி சிலாகித்திருக்கிறார். தனது ஆசானான குயிலையா என்ற ஆர்.சுப்பிரமணிய ஐயருக்கு செலுத்தும் குருதட்சணையாக ஆசானாற்றுப்படை எழுதியவர் இவர். சாகும் தருவாயில் கூட கரந்தையில் இருந்து தனது சொந்த ஊரான மோகனூருக்கு சகோதரர் அழைத்தும் செல்லவில்லை என்பதைச் சொல்லி அவர் மகன் கரந்தை தமிழ்ச் சங்கம் மோகனூருக்கு வந்தால்தான் அப்பா அங்கு வருவார்கள் என்று சொன்னதாகச் சொல்லியிருப்பதில் இருந்து அந்த மனிதரின் தமிழ்ப்பற்று நமக்கு புலப்படுகிறதல்லவா?

கண்ணகியின் அடிச்சுவட்டில் ஒரு நீண்ட பயணம்.. என்ற கட்டுரையில் ஒரு மனிதர் தேடலுக்காக வாலிபத்தையும் வருடங்களையும் தொலைத்த நிகழ்வைப் பகிர்ந்திருக்கிறார். கண்ணகி பயணித்த பாதையில் பயணித்து தேடலைத் தொடங்கிய பேராசிரியர் சி. கோவிந்தராசனார் அவர்கள் ஏதோ சில நாட்கள் தேடலோடு நிறுத்தவில்லை... 17 ஆண்டுகள் மனிதர் கண்ணகியின் அடிச்சுவடை பற்றி நடந்து வேங்கைக் கானல் என்ற இடத்தில் சேரன் செங்குட்டுவனால் கட்டப்பெற்ற கண்ணகி கோவிலை கண்டு பிடித்தார். அதை தமிழகத்திற்கு கண்டெடுத்துக் கொடுத்த ஐயா கோவிந்தராசனார் 94 வயதில் அடியெடுத்து வைத்திருக்கிறார் என்று சொல்லியிருக்கிறார். காலப்பெட்டகம் ஐயா அவர்கள் இன்னும் பல ஆண்டுகள் நல்ல உடல் நலத்துடன் வாழ வேண்டும்.

கரந்தை காந்தி என்ற கட்டுரையில் உமா மகேசுவரனாரின் மைத்துனரான ச.அ.சாம்பசிவம் பிள்ளை பற்றிச் சொல்லியிருக்கிறார். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் பொதுப்பணித் துறை பணியாளராக இருந்து தமிழ் மேல் கொண்ட காதலால் ஆங்கிலேயரின் கீழ் அடிமை வாழ்வு வாழணுமா என காந்தி ஒத்துழையாமை இயக்கம் ஆரம்பித்த போது வேலையை உதறிவிட்டு கரந்தை தமிழ்ச் சங்கத்தில் ஐக்கியமானார். காந்தி மேலாடை துறந்த போது இவரும் துறந்திருக்கிறார். அன்று முதல் கரந்தை காந்தி ஆகிவிட்டார்.

அடுத்த கட்டுரை தமிழ் நாட்டுப் பெண்கள் மாநாட்டை நடத்தி அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்த மருத்துவர் கரந்தை தர்மாம்பாள் பற்றியது. பெண்கள் மாநாட்டிற்கு அவர்கள் அழைத்திருந்த ஆண் சிங்கம் ஈ.வெ.ராமசாமிக்கு பெரியார் என்ற பட்டத்தை அந்த மாநாட்டில் வைத்து இவர் கொடுத்ததையும் தமிழாசியர்களுக்கு நல்ல ஊதியம் கேட்டு இழவு வாரம் என்ற போராட்டத்தை இவர் நடத்தி வெற்ரி கண்டதையும் பகிர்ந்திருக்கிறார்.

மொத்தத்தில் கரந்தை மாமனிதர்கள் மிகச் சிறப்பான புத்தகம். அதுவும் ஐயாவின் வசீகரிக்கும் எழுத்தில் வாசிக்கும் போது இன்னும் சிறப்பாக இருக்கிறது. இதைப் படிக்கும் போது நாமெல்லாம் பொழுது போக்குக்காக எழுதும் போது இவரிடம் எத்தனை தேடல்... எப்படிப்பட்ட தேடல்... வரலாறை வாழ்விக்கச் செய்யும் மகத்தான தேடல் ஆச்சர்யப்பட வைத்தாலும் மனதிற்கு மகிழ்ச்சியைத் தருகிறது.

ஜெயக்குமார் ஐயாவுக்கு, இது விமர்சனப் பகிர்வு அல்ல... ஒரு மாணவனின் வாசிப்பனுபவம் மட்டுமே.

வெளியீடு :

பிரேமா நூலாலயம்
சிங்காரம் இல்லம்
48 ஏ, தமிழ் நகர் மூன்றாவது தெரு
மருத்துவக் கல்லூரி சாலை
தஞ்சாவூர்.

விலை : ரூ.50 மட்டுமே.

வலைப்பூ முகவரி : கரந்தை ஜெயக்குமார் 

-'பரிவை' சே.குமார்.