மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வியாழன், 31 மார்ச், 2016

வாக்காளர் அலப்பறை...5

"என்ன இந்தியா புட்டுக்கிச்சு போல..." சிரிப்போடு உள்ளே நுழைந்தான் அவன்.

"அட ஆமா மாப்ள... கொய்யால மூணு அவுட்டு மாப்ள... மூணுமா நோ பாலாப் போடுவானுங்க... முடிஞ்சது.... ஆட்டம் காலி... படுதா காலி மாப்ள..." கணிப்பொறியை ஆப் பண்ணியபடி சொன்னான் மதுரைக்காரன்.

"எனக்கு தெரியும்ல்ல... நம்மாளுக முன்னாடி ரன் அடிக்க முடியாம திணறுனாங்க... இன்னைக்கு ரன் அடிச்சானுங்க... ஆனா பவுலிங்ல திணறிட்டானுங்க..."

"ஆமா மாப்ள... இவனுக்க ஒரு சிக்ஸ் அடிக்கவே திணறுனானுங்க... அவனுக போடுற பாலை எல்லாம் சிக்ஸருக்கு அனுப்புனானுங்க... கேப்டன் கரையேத்துவாருன்னு பார்த்தா கவுத்துட்டாரு... நாளைக்கு ஆபீசு லீவாப் போச்சு... இல்லேன்னா பங்காளியும் பாகிஸ்தானியும் வச்சி வச்சி செய்வானுங்க...."

"கடைசி வரைக்கும் நம்பினேன் கேப்டன் கரை சேப்பாருன்னு..." என்றார் காரைக்குடியார்.

"நல்லா நம்புனீங்க... கேப்டனெல்லாம் கரை சேக்க முடியாதுங்க.... இன்னைக்கு அவனுக்கு விதிச்ச விதி நல்ல விதி அம்புட்டுத்தான்..." என்றார் அவர். அவர் இன்று ஏனோ சற்று சோகமாகவும் இருந்தார்.


"நம்பிக்கைத்தானேண்ணே வாழ்க்கை... சேப்பாருன்னு நம்புவோம்..." என்றபடி அவரருகில் அமர்ந்து "என்னாச்சுண்ணே... இன்னைக்கு ரொம்ப சோகமா இருக்கீங்க...?" என்றான்.

"கம்பெனியில புதிய புராஜெக்ட் இல்லை... ஒருவேளை ரெண்டு மாசத்துல வேலை இல்லைன்னு சொல்லிட்டானுங்கன்னா வாங்கி வச்சிருக்கிற கடனை எல்லாம் எப்படி அடைப்பேன்னு ரொம்ப கவலையா இருக்கு.... மத்தியானம் சாப்பிட கடைக்குப் போனா சாப்பாடே இறங்கலை... பத்தாததுக்கு மலையாளி வேற ரெண்டு மாசத்துக்குள்ள வேற எதாச்சும் நல்ல வேலையா தேடிக்க... இல்லேன்னா வீட்டுக்கு அனுப்பிடுவானுங்கன்னு சொல்லி வெறுப்பேத்துறான்... " புலம்பினார் அவர்.

"அட விடுங்க... எல்லாம் சரியாகும்... இன்னைக்கு கெயில் அவுட்டானது ஐந்து ரன்ல...எல்லாரும் என்ன நெனச்சோம் நாம வின் பண்ணி கோப்பையை வாங்கப் போவோம்ன்னு... ஆனா என்னாச்சு நம்மால முடியும்ன்னு ஆடுனானுங்க... ஜெயிச்சானுங்க... அதுதான் நம்பிக்கை... எல்லாம் நல்லா நடக்கும்... எப்பவும் போல ஜாலியா தேர்தல் விஷயம் பேசுங்க... நாளைக்கு லீவை வச்சிக்கிட்டு கிரிக்கெட் பார்த்து ஆளுக்கொரு பக்கமா சோகமா உக்காந்திருக்காம..." என்றான்.

"ஆமா... என்னத்தைப் பேசி என்ன பண்ண.... கோடிக்கோடியா பணம் பிடிக்கிறானுங்க... எப்படியிருந்தாலும் இந்த முறையும் ஜனநாயக முறையிலான தேர்தல் இல்லைங்க... காசுதான் ஜெயிக்கும்..."

"அது தெரிஞ்சதுதான்... தமிழன் காசுக்கு அடிமையின்னு மறுபடியும் புரூப் பண்ணப் போறானுங்க..."

"ஆமா... ஆமா... மாத்தி மாத்தி அவனுங்க கையில கொடுத்து வேடிக்கை பாக்குறானுங்க...."

"அதுக்குத்தான் இந்த முறை கேப்டனுக்கிட்ட கொடுங்கன்னு சொல்றோம்..." என்றார் காரைக்குடி.

"ஆமா... ஆளு எங்க இருக்காருன்னே தெரியலை... முதல்வர் கேண்டிடேட்ன்னா ஒரு கெத்து இருக்க வேண்டாமா...?" என்றான் மதுரை.

"அப்ப அன்புமணியாகிய நான்... அப்படின்னு தலையில மைக்கைக் கட்டிக்கிட்டு பேசுறாரே அவருக்குப் போடுங்க..." என்றான் அவன்.
"மாற்றம்... முன்னேற்றம்ன்னு சொல்லி ஜாதிச் சல்லிக்கட்டை கட்டவிழ்த்து விட்டு வேடிக்கை பார்ப்பானுங்க...அட ஏன் மாப்ள நீ..." தலையிலடித்துக் கொண்டான் மதுரை.

"அவனும் வேண்டாம்... இவனும் வேண்டான்னா அப்ப மறுபடியும் பதவி ஆசை பிடித்த ஐயாவோ... இல்லேன்னா எனக்கு உறவு இல்லை... சொத்து இல்லை... நான் அன்னக்காவடிங்கிற அம்மாவோதான் ஆளணும்..." கடுப்பாய்ச் சொன்னார் அவர்.

"விஜயகாந்த்தானுங்க சரியான ஆள்..." மீண்டும் காரைக்குடி

"அட அந்தாளை விடுங்க... இந்த சீமான்...?" மெல்ல இழுத்தான் மதுரை.

"சீமானா... அவனெல்லாம் சீன்லயே இல்லைங்க... நரம்பு வெடைக்க பேசினா மட்டும் போதாதுங்க... திறமையான பேச்சு இருக்கணும்... ஆ...ஊன்னா முப்பாட்டன் முருகன்னு சொல்றான்... பெரியாரைப் பின்பற்றி ஆரம்பகாலத்தில் பேசியபோது சிவலிங்கம் என்ன வடிவம்டா... சொல்ல முடியுமாடா... முட்டாப்பயலுகளேன்னு பேசினான்.... இதுல இன்னொரு காமெடி என்னன்னா என் இனமடா... என் தலைவன்டான்னு இலங்கையை வைத்து அரசியல் பேசுவான்... காமெடி பீசுகளெல்லாம் நாடாள முடியாது... படித்தவன் ஒருத்தன் வரணும்..." என்றார் அவர்.

"படித்தவன்னா... நீங்க டாக்டரை சொல்றீங்களா...? இல்லை வக்கீல் வைகோவை சொல்றீங்களா...?" என்றான் மதுரை.

"போன தேர்தல்ல வடிவேலுவை வச்சி காமெடி பண்ணுனானுங்க... அவரு இல்லையில்ல அதான் இந்தத் தேர்தல்ல வைகோ வடிவேலு ஆயிட்டாரு... என்ன பேசுறோம்... எதுக்கு பேசுறோம்... ம்ஹூம்.... எதுவும் தெரியலை... வாய்க்கு வந்ததை பேசுறாரு... விஜயகாந்த் போனதுல அவருக்கு கைகால் புரியலை..." என்றான் அவன்.


"எல்லாக் கட்சியும் மக்கள் நலக் கூட்டணி மேலதான் கல்லெறியுது... அப்ப பயம் இருக்குன்னுதானே அர்த்தம்..." இது காரைக்குடி.

"பயமிருக்கோ... இல்லையோ... முதல்வர் வேட்பாளர் சீன்லயே இல்லையே... முதல்ல முதல்வர் வேட்பாளரை சீனுக்கு வரச் சொல்லுங்க.... அப்புறம் பேசலாம் மக்கள் நலக்கூட்டணி பயம் காட்டுதா... இல்லை படம் காட்டுதான்னு..." என்றார் அவர்.

"ஏங்க இந்த தடவை மக்கள் நலக் கூட்டணி கணிசமான ஓட்டு வாங்கும்..." என்று எடுத்துவிட்டான் மதுரை.

"ஸ்டாலின் தேமுதிகவை பிரிக்க ஆக்சன் ஸ்டாலின்னோ என்னமோ ஒரு திட்டம் போட்டு கணிசமா பிரிக்க ஆரம்பிச்சாச்சாம்... தேர்தலுக்கு முன்னாலயே தேமுதிக ஆட்டம் காணுதா இல்லையான்னு பாருங்க..." என்றார் அவர்,

"ஆட்டமெல்லாம் காணதுங்க.. கேப்டன் ரொம்ப ஸ்டெடி... கட்சியை அழகா கரையேத்துவார் பாருங்க... அடுத்த முதல்வர் அவர்தான்..." இது மதுரை.

"இன்னைக்கு நம்ம தோனியே  திணறிட்டான்... இவரு கரையேத்துறாராம்... அட எங்க சும்மா... ஜோக்கடிக்காதீங்க.... நடக்குறதைப் பேசுங்க.... இந்தா தொண்ணூறு வயசுல கட்டுமரம் பிரச்சாரத்துக்கு கிளம்ப வேன் ரெடி பண்ணிருச்சு... அம்பது வயசுல என்ன பேசுறோம்ன்னு தெரியாம... என்ன செய்யிறோமுன்னு தெரியாம காமெடி பீசா இருந்து இன்னைக்கு அண்ணி... அப்படித்தான் சொல்றானுங்க... அதான் நானும் சொல்றேன்... பேசுது... அண்ணனை ஆளைக் காணோம்... இவரெல்லாம் நாடாண்டு... நாம நடுத்தெருவுலதான் நிக்கணும்..." என்றார் அவர்.

"அப்ப நீங்க சின்ன டாக்டர் வந்தா தமிழகம் சொர்க்க பூமியா மாறிடுன்னு சொல்ல வாறீங்க... அப்படித்தானே..." என்றான் அவன்.

"மாற்றம் தேவைங்க... அதுதான் சொல்றேன்..." என்றார் அவர்.

"என்ன மாற்றம்... சொர்க்கபூமியா இருக்காது... ஜாதி... ஜாதியின்னு... ஆளாளுக்கு வெட்டிக்கிட்டு செத்துப் போயி சுடுகாடா மாறிடும்..." என்றார் காரைக்குடி.

"அட ஏங்க நான் எதாவது பேசினா எல்லாரும் ஒண்ணு சேந்துப்பீங்க... எந்த கட்சிங்க ஜாதியை வைத்து அரசியல் பண்ணலை... பேசினா எதாச்சும் சொல்லுவீங்க... அதான் நான் பேசுறதில்லை... என்னை ஆளை விடுங்க... சாப்பிட்டு வாறேன்..." என்றபடி அவர் கிளம்பினார்.

"என்ன மாப்ள... இன்னைக்கு உப்புச் சப்பில்லாம முடிஞ்சிருச்சு... " சோகமாய்க் கேட்டான் மதுரை.

"கோர்த்து விட்டு அவரை பேச விடுவீங்கன்னு பார்த்தா.... எஸ்கேப் ஆயிட்டாரே..." என்றார் காரைக்குடி.

"அட விடுங்க... எல்லா நாளும் அவரு பேசுவாரா... மனுசன் வருத்தத்துல இருந்தாரு... அதான் நானும் ரொம்ப பேசலை... இப்ப கொஞ்சம் மனசு ரிலாக்ஸ் ஆயிருப்பாரு.... பாவம் கடன் அது இதுன்னு கஷ்டப்படுறாரு... புள்ளைங்க வேற காலேசு படிக்குதுங்க... மனசு வருந்தி... வருந்தி படுத்தாலும் தூக்கம் வராம ராத்திரியெல்லாம் புரண்டு புரண்டு படுக்குறாரு.... எதுக்குங்க அந்த மனுசனை ஏத்திவிட்டு... நாளைக்கு ரெண்டு திருவாலியத்தானுங்க வருவானுங்க... ஊத்திவிட்டு ஏத்திவிட்டுப் பார்ப்போம்... அப்ப பாருங்க ரகளையை..." என்றபடி எழுந்தான் அவன்.

படங்கள் : இணையத்திலிருந்து (நன்றி) 
(அட மூணு படம் மதுரைத் தமிழனோடது... இணையத்தில் சுட்டதுதான் என்பதால் திட்டமாட்டாருன்னு நம்புவோம்...)
-'பரிவை' சே.குமார்.

புதன், 30 மார்ச், 2016

நேசம் சுமந்த வானம்பாடி

“என்னங்க உங்கப்பாக்கிட்ட  இது வேணுமான்னு கேளுங்க... சும்மா பரண்ல தூக்கிப் போட்டு வச்சி என்னத்துக்கு இடத்தை அடச்சிக்கிட்டு கிடக்குது...” மருமகள் சுந்தரி, உள்ளிருந்து குரல் கொடுக்க “என்னது... ரேடியோதானே... அட அவரு ஆசையா வச்சிருக்காரு... கிடந்துட்டுப் போகுது போ” என்றான் பேப்பரில் இருந்து கண்ணை எடுக்காமல் சுதாகர்.

“ஆமா... பழசு பட்டையெல்லாம் சேத்துச் சேத்து வச்சிருக்கிறாரு... அவரு மாதிரித்தான் நீங்களும் இருக்கீங்க... பேப்பர் பேப்பரா சேத்து வச்சிக்கிட்டு...” என்று முணங்கியபடி பரணைச் சுத்தப்படுத்திக் கொண்டிருந்தாள் சுந்தரி.

இந்த உரையாடலைக் கேட்டபடி செடிகளுக்கு தண்ணி பிடித்துக் கொண்டிருந்தார் ராகவன்.  அவர்கள் பேச்சில் அடிபட்ட ரேடியோ... அவர் பள்ளியில் படிக்கும் போது அப்பா புதிதாக வாங்கி வந்த நேஷனல் ரேடியோ... நாலு கட்டை போடும் ரேடியோ... அது வீட்டுக்கு வந்த தினம் வீட்டில் இருந்த எல்லாருக்கும் அத்தனை சந்தோஷம். அதன் பின் அந்த ரேடியோ காலையில் தனது குரலை ஒலிக்க ஆரம்பித்தால் இரவு வரை இப்போது டிவியில் சேனல் மாற்றுவது போல் ஒவ்வொரு ஸ்டேசனாக மாற்றி மாற்றிக் கேட்பார்கள். அதுவும் ராகவன் ஒரு பாட்டுப் பைத்தியம்... இரவு ஒருபடப்பாடல் போடும் நேரத்தில் ரேடியோவைத் தூக்கிக் கொண்டு போய் தலைமாட்டில் வைத்துக் கொள்வார். அப்போது மட்டும் யார் என்ன சொன்னாலும் கேட்க மாட்டார். சில நேரங்களில் அதற்காக அப்பாவிடம் அடி கூட வாங்கியிருக்கிறார். இருந்தாலும் தலைமாட்டில் வைப்பதை மட்டும் அவர் விடுவதில்லை.

இப்படியாக நகர்ந்த நாட்களில் கட்டை தேய்ந்து விட்டது என்பதை ரேடியோவின் ஒலி கொஞ்சம் கொஞ்சமாக குறைவதை வைத்து அப்பாவிடம் கட்டை தீரப்போகிறது என்று சொல்லி வைப்பார்கள். அப்பா எப்பவும் எவரெடி பேட்டரிதான் வாங்கிப் போடுவார். மளிகைக் கடையை அடைத்துவிட்டு இரவு வரும் போது கையோடு நாலு பாட்டரி கொண்டு வந்துவிடுவார்.  காலையில் எழுந்ததும் ரேடியோவை எடுத்து சுத்தமாக துடைத்து, உள்பக்கமாக வாயல் காற்றை ‘பூத்... பூத்...’ என்று ஊதி தூசியை வெளியேற்றுவார். சின்ன வெள்ளைத் துணியில் தேங்காய் எண்ணெய் தொட்டு வரச் செய்து அதன் முன்பக்கம் எல்லாம் பளபளன்னு துடைத்து, இரண்டு இரண்டு கட்டைகளாக இணைத்துப் போடப்பட்டிருக்கும் பிளாஸ்டிக் பேப்பரை கத்திரியால் வெட்டி எடுத்து... மேல் முனையில் வைத்திருக்கும் சின்ன குழிழை நீக்கி கட்டையை ரேடியோவில் போட்டு ‘கர்...கர்...’ என்று சத்தம் வர மெல்ல ஸ்டேசன் மாற்றி வருவார். விவதபாரதியின் வர்த்தக சேவை என்றதும் ‘பாட்டுப் போடுவானுங்க’ என இவர் மெல்லச் சொல்வார். ‘எப்ப பாரு பாட்டு... இருடா... நாட்டு நடப்பு என்னன்னு செய்தி கேட்கலாம்...’ என மெல்ல மாற்ற திருச்சி வானொலியில் காலை ஏழேகால் மணிச் செய்தியை தனது கணீர்க்குரலில் சரோஜ் நாராயணசாமி வாசித்துக் கொண்டிருப்பார். சில சமயங்களில் அப்பா பாட்டரி கொண்டு வர மறக்கும் நாட்களில் வெயிலில் காய வைத்து ரேடியோக் கேட்பார்கள். ராகவன் வெயிலில் வைத்தே பாட்டுக் கேட்டிருக்கிறார்.

செடிகளுக்கு சீராய் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டே ரேடியோ நினைவில் மூழ்கியவர் தனக்குத்தானே சிரித்துக் கொண்டார். அந்த ரேடியோவில் ஒலிச்சித்திரம் கேட்பதற்காகவே அவரோட அத்தை மக, கமலம் வீட்டுக்கு ஓடியாரும். இவருக்கு அது மேல ஒரு ஆசை... மத்தவங்களை ரேடியோக்கிட்ட உக்கார விடமாட்டாரு... ஆனா கமலம் மட்டும் அவருக்குப் பக்கத்துல உக்காரலாம். ஆளு கருப்பாத்தான் இருக்கும். ஆனா தலைமுடி ரொம்ப நீளமா ஆளு அவ்வளவு அழகாத் தெரியும்... காதுல போட்டிருக்க தொங்கட்டான் அவளுக்கு தனி அழகுதான்... யாராச்சும் கமலத்தை கருப்பின்னு சொல்லிட்டாப் போதும் ராகவனுக்கு அப்படிக் கோபம் வரும்... நீ கருப்பி... உங்கப்பன் கருப்பி... உங்காத்தா கருப்பின்னு கத்துவாரு.... இவருக்குப் பயந்தே கமலத்தை மத்த பிள்ளைங்க எதுவும் சொல்லாதுக. டேய் வேணான்டா இவளைக் கேலி பண்ணினா... அந்தக் கருவாயனுக்கு வலுவா வரும்டான்னு மத்த பசங்க பேசிக்குவாங்க. அந்த ரேடியோதான் இவருக்கும் கமலத்துக்குமான அன்பை அதிகமாக உள்வாங்கியது. விடுமுறை தினங்களில் கமலமும் இவரும் ஒற்றைத் தலகாணியில் அங்கிட்டும் இங்கிட்டுமாக படுத்திருப்பார். இடையில் ரேடியோ ஒலித்துக் கொண்டிருக்கும்.  கமலத்தை நினைத்தவருக்கு ஏனோ மனசு வலித்தது. ‘ம்ம்ம்ம்ம்... ஆஹ்...’ என மூச்சை விட்டபடி தண்ணீரை நிறுத்தி விட்டு கை கால் கழுவி விட்டு வீட்டுக்குள் நுழைந்தார்.

அப்பாவின் மறைவுக்குப் பின்னர், ஆளாளுக்கு தனித்தனியாக குடும்பங்களுடன் விலகிப் போக, பழைய வீடு ராகவனுக்கு கொடுக்கப்பட, அவரின் அம்மாவும் இவர்களுடன் இருந்தாள். சொத்தைப் பிரிக்கும் போது இந்த ரேடியோ அப்பா ஞாபகமா எங்கிட்டே இருக்கட்டும் என்று வைத்துக் கொண்டார். ஆங்காங்கே உடைந்து ஒட்டி வைத்திருப்பார். முன்னைப் போல் அவ்வளவு சுத்தமாக ரேடியோ இயங்கவில்லை. கரகரன்னு சத்தம் வர ஆரம்பித்தது. அதன் ஓலியும் முன்னைப் போல இல்லை... அதனால் அதன் மீது இறுக்கமாக சணலைச் சுற்றி வைத்திருந்தார்.  இப்பத்தான் டிவி வந்திருச்சுல்ல இன்னும் ஏன்டா இந்த ரேடியோவை வச்சிக்கிட்டு இருக்கே என்று ஒரு முறை அம்மா சொன்னதுக்கு ஆமா அதுல பாக்குறதுக்கு... இதுல செய்தி கேட்கலாம்... வேளாண்மைச் செய்தி கேட்கலாம்... பழைய பாட்டுக் கேட்கலாம்.... என்று சொல்லிச் சிரிப்பார். அந்த ரேடியோ அவரின் அப்பா நினைவுக்காக மட்டுமின்றி அது அருகில் இருக்கும் போது தன் காதலைச் சொல்லாமலே சுந்தரத்தைக் கட்டிக்கிட்டுப் போய், பார்க்கும் போதெல்லாம் நீ கமலத்தை நான் கட்டிக்கிறேன்னு சொல்லியிருந்தா இன்னைக்கு வசந்தா இடத்துல நானிருந்திருப்பேன். சொல்லமாட்டேன்னு சொல்லிட்டியேன்னு புலம்புவா. அவளை நினைச்சாலே அவருக்கு மனசு வலிக்கும்.  அவளும் போய்ச் சேர்ந்து புல் முளைச்சிருச்சு. கமலம் நினைவு அவரை இம்சிக்க , வசந்தாவும் போட்டோவில் சிரித்துக் கொண்டிருந்தாள். கண் மூடி அமர்ந்திருந்தவரை ‘தாத்தா... இந்தாங்க தண்ணி...’ என்று பேரனின் குரல் எழுப்ப, அவன் கையிலிருந்த சொம்பை வாங்கி மடக்... மடக்கெனக் குடித்தார். கமலம் நினைவு கொஞ்சம் அடங்கியிருந்தது.

கால ஓட்டத்தில் வீட்டுக்குள் பிளாக் அண்ட் ஓயிட் டிவி போய் கலர் டிவி வர, இவரின் ரேடியோவும் தன்னோட மூச்சை நிறுத்திக் கொண்டது. இரண்டு பேரின் நினைவுகளைச் சுமக்கும் ரேடியோவை தூக்கிப்போட மனசின்றி ஒரு சாக்குப் பையில் கட்டி பரணில் தூக்கிப் போட்டு வைத்தார். இப்போ வீட்டுக்குள் பிளாட் டிவியும், ஆளாளுக்கு கம்ப்யூட்டரும், மொபைல் போனுமாக ஆகிவிட, பெரும்பாலான நேரத்தை வடிவேலோ அல்லது பாடல்களோதான் ஆக்கிரமித்திருக்கின்றன. மதிய நேரங்களிலும் இரவு கொஞ்ச நேரமும் மருமகள் பார்க்கும் நாடகங்கள்... அந்த நேரத்தில் யாரும் எதுவும் மாற்றமுடியாது. செய்திகள் பார்ப்பதே இல்லை. அதனால் இவர் டிவிப் பக்கம் போவதேயில்லை. மெல்ல எழுந்து உள்ளே போனார்.... பிள்ளைகள் எல்லாம் அவரவர் வேலையில் கவனமாக இருக்க... பாவம் சுந்தரி, மேலெல்லாம் தூசியோடு சுத்தம் பண்ணிக் கொண்டிருந்தாள். அந்த சாக்குப்பையைத் தேடினார். அது மீண்டும் அதன் இடத்தில் அமர்ந்திருந்தது. அவர் பார்க்க அதனுள் கமலமும் அப்பாவும் சிரிப்பதாகத் தெரிந்தது. அந்த ரேடியோவை அவரின் காதலியைப் போல் பார்த்தபடி, ‘நா வேணுமின்னா சுத்தம் பண்ணவாத்தா... ஒராளா கிடந்து கஷ்டப்படுறே’ என்றார். ‘இல்ல மாமா முடிச்சிட்டேன்... நீங்க போங்க... தூசிக்குள்ள வராம...’ என்றாள். உண்மையிலே தங்கமான மருமகள் அவள்... அதிர்ந்து ஒரு வார்த்தை பேசமாட்டாள்... மாமனாரை இதுவரை சுமையாக கருதியவள் இல்லை.

“மாமா... எதுக்கு மாமா... அந்த ஓட்டை ரேடியோவைக் கட்டி தூக்கிப் போட்டு வச்சிருக்கீங்க...  எவனாவது பழைய சாமான்காரனுக்கிட்ட தூக்கிக் கொடுக்கலாம்ல்ல...” என்றாள்.

“அது என்னத்தா பண்ணுது... அது பாட்டுக்கு இருக்கட்டுமே... என்னோட உயிர் அது... அதெல்லாம் உங்களுக்குப் புரியாது... அதுக்குள்ள நான் வாழ நினைச்ச வாழ்க்கை இருக்கு... ம்... இருந்துட்டுப் போகட்டுத்தா...” என்றபடி வெளியேறினார்.

பொங்கல் முடிந்து அடுத்த தீபாவளி வர்றதுக்குள்ள செப்டெம்பர் மாத முன்னிரவில் அவரின் மூச்சு நின்று போனது. எல்லாம் முடிந்து எல்லாரும் பறந்து போக, பரணில் மூட்டைக்குள் சோகமாய்க் கிடந்தது அந்த ரேடியோ. அடுத்த பொங்கலுக்கு தூசி அடித்த சுந்தரி அந்த ரேடியோவுக்குள் ஒளிந்திருக்கும் சொல்லப்படாத காதலைப் பற்றி அறியாமல்... ராகவன் அதன் மீது கொண்டிருந்த நேசத்தை அறியாமல் அதைத் தூக்கி பழைய சாமான்காரனிடம் கொடுத்துவிட, சைக்கிளின் பின்னால் இருந்த இரும்புப்பெட்டியின் ஒரு பக்கமாக கட்டப்பட்ட ரேடியோ சில நினைவுகளைச் சுமந்து பயணப்பட்டுக் கொண்டிருந்தது.

(பிரதிலிபி போட்டிக்காக எழுதிய கதை இது. அங்கு வாசித்த நம் உறவுகள் அனைவரையும் கவர்ந்த கதை இது. அங்கு கருத்திட்ட, மதிப்பெண் வழங்கிய அனைவருக்கும் மீண்டும் என் நன்றி. )

-‘பரிவை’ சே.குமார்.

திங்கள், 28 மார்ச், 2016

விசாரணை

திவுக்குள் நுழைவதற்கு முன்... கோவையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் எம். சந்திரக்குமார் அவர்களின் 'லாக்கப்' என்னும் நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட 'விசாரணை'... சிறந்த படம், சிறந்த துணை நடிகர் (திரு. சமுத்திரக்கனி) மற்றும் சிறந்த படத்தொகுப்பாளர் (மறைந்த எடிட்டர். திரு.கிஷோர்) என மூன்று தேசிய விருதுகளை பெற்றிருக்கிறது. வாழ்த்துக்கள் வெற்றிமாறன்.


டம் வெளியாகி பல விருதுகளைப் பெற்று தேசிய விருதும் வாங்கியாச்சு... இது படத்திற்கான விமர்சனப் பகிர்வு அல்ல... படத்தோடு சிலவற்றையும் பேசவே இப்பகிர்வு.

தமிழ் சினிமாவில் போலீஸ் கதைகள் என்றாலே அவற்றில் போலீசின் வீரதீர செயல்கள் மட்டுமே காட்டப்படும். எந்தப் படத்தை எடுத்துக் கொண்டாலும் வில்லனுடன் நேரடி மோதலில் ஈடுபட்டு, அதனால் வேலை இழந்து... குடும்பம் இழந்து... மீண்டும் எழுந்து வந்து ஜெயிப்பதாகக் காட்டுவார்கள். இதில் கமலஹாசனின் குருதிப்புனல் உள்ளிட்ட சில படங்கள் விதிவிலக்கு. 

விசாரணை... இதுவரை காட்டாத போலீசின் மறுபக்கத்தில் இருந்து கொஞ்சத்தை கண் முன்னே காட்சிப்படுத்தியிருந்தார் இயக்குநர் வெற்றிமாறன்.  இப்படி ஒரு கதையை கையில் எடுத்ததற்காக அவரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். இன்று நாம் போலீஸ் என்றாலே சாகசங்கள் நிகழ்த்தும் மனிதர்களாகத்தான் பார்க்கிறோம்... அதற்கு காரணம் இந்த சினிமாதான்... அவர்களைச் சிங்கங்களாகவும் சிறுத்தைகளாகவும் காட்டும் சினிமா அவர்களின் சங்கடங்களையும் அவர்களால் சாமானியன் படும் அவஸ்தைகளையும் படம் பிடிப்பதில்லை. எல்லாச் சினிமாவிலும் நாலு நல்ல போலீசுக்கு மத்தியில் வில்லனுக்கு உதவும் ஒரு கெட்ட போலீஸ் இருப்பதாகவே காட்டுவார்கள்... எல்லா நல்ல போலீசுமே தங்களுக்கு தேவை என்றால் கெட்டவர்களாகத்தான் இருப்பார்கள் என்பதை காட்டுவதில்லை... அந்த உண்மையை ஒரு சிறிய கதையின் மூலமாக வெளிப்படுத்திய படம்தான்  'விசாரணை'.

சின்னச் சின்ன காரணங்களால் வீட்டை விட்டு வெளியேறி, ஆந்திரா குண்டூரில் தங்க இடமின்றி பூங்கா காவலரைச் சரிக்கட்டி அங்கு படுத்துறங்கி பகலில் வேறு வேறு இடங்களில் வேலை பார்க்கும் 'அட்டக்கத்தி' தினேஷ், 'ஆடுகளம்' முருகதாஸ் உள்ளிட்ட நால்வரை ,ஒரு முக்கிய கேசை முடிக்கும் பொருட்டு சந்தேக கேஸ் எனச் சொல்லி பிடித்து வரும் ஆந்திரா காவல்துறை செய்யாத குற்றத்தை ஒப்புக் கொள்ளச் சொல்லி அடித்து துன்புறுத்துகிறது. ஆரம்பத்தில் ஒத்துக் கொள்ள மறுப்பவர்கள் தொடரும் நாட்களில் தொடரும் மரண அடிக்குப் பயந்து செய்யாத குற்றத்தை செய்தாகச் சொல்லி நீதிமன்றம் வரை போகிறார்கள்.

நீதிபதி முன்பு தினேஷ், போலீஸ் தங்களை துன்புறுத்தி செய்யாத குற்றத்தை செய்ததாக ஒப்புக் கொள்ள வைத்து கூட்டி வந்திருப்பதாகச் சொல்ல. நீதிபதியும் அவரது குரலுக்கு மதிப்புக் கொடுக்கிறார். அவர்கள் தமிழில் பேசுவதை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பதற்காக, தலைமறைவுக் குற்றவாளி கிஷோரைப் பிடிக்க அங்கு வந்திருக்கும் காவல்துறை அதிகாரி சமுத்திரக்கனி அழைக்கப்படுகிறார். அவர்கள் சொல்வதை அவர் எடுத்துச் சொல்லி தினேஷை எனக்குத் தெரியும் என்றும் சொல்கிறார். இதனால் அவர்கள் விடுதலை ஆகிறார்கள். தினேஷின் முதலாளி இங்கிருந்தால் உங்களை விடமாட்டானுங்க... ஊருக்கே போயிடுங்கன்னு சொல்ல. ஊருக்கு கிளம்ப ஆயத்தமாகும் போது அவர்களிடம் சமுத்திரக்கனி 'எனக்காக ஒரு வேலை செய்வீர்களா?' எனக் கேட்க, தங்களைக் காப்பாற்றியவர் அவர் என்பதால் இவர்களும் ஒப்புக் கொள்கிறார்கள். 

தங்களைக் காப்பாற்றி காவல்துறை அதிகாரிக்காக, நீதிமன்றத்தில் இருந்து கிஷோரைக் கடத்துகிறார்கள். தமிழகம் வரை அவர்களுடன் பயணித்து... தனது ஊர் வரும்போது நால்வரில் ஒருவர் இறங்கிச் செல்ல, மூவர் காவல் நிலையம் வரை வருகிறார்கள். அங்குதான் அவர்களுக்கு பிடிக்கிறது சனி... ஆயுத பூஜைக்காக காவல் நிலையத்தை சுத்தம் பண்ணிக் கொடுத்துட்டுப் போங்கடா என்று சொல்லவும் தட்டமுடியாமல் வேலையில் இறங்குகிறார்கள். இது ஒருபுறம் இருக்க, கிஷோரிடம் விசாரிக்கும் காவல்துறை, அவரை கட்டி வைத்து அடிக்கிறது. இவர்களுக்கு பொறி கலங்கிப் போகிறது. ஒரு கட்டத்தில் காவல்துறை குள்ளநரிகள் கிஷோருக்கு எதிராக செய்யும் செயல்களின் முடிவில் அவர் கொல்லப்படுகிறார். காதும் காதும் வைத்தது போல் அவரது வீட்டு மின்விசிறியில் தூக்கில் தொங்கவிட்டு வந்து முக்கிய அதிகாரிகள் சிலர் அவரைக் கொல்லச் சொன்ன பெரும்புள்ளியிடம் எப்படி கோடிக்கணக்கில் பணம் பார்க்கலாம் என பேச்சுவார்த்தையில் இருக்கிறார்கள் இது தெரியாமல் அந்த அறைக்கு அருகே டாய்லெட்டை சுத்தம் பண்ண வரும் இவர்களை மேலதிகாரி பார்த்து விடுகிறார். அதன் பிறகு எங்கே தாங்கள் பேசியதைக் கேட்டிருப்பார்களோ என்ற எண்ணத்தில் அவர்கள் எடுக்கும் முடிவு நம்மை உறைய வைக்கிறது.

காவல்துறையின் உண்மையான முகம் இதுதான்... ஒரு கேசை முடிக்க இவர்கள் எவனாவது ஒரு அப்பாவியை இழுத்துப் போடுவார்கள். திருவிழாக்களில் வீடுகளில் கொள்ளை அடிப்பவர்களுக்கும் இவர்களுக்கும் தொடர்பு இருக்கும் என்று சொல்வார்கள். அது சில நேரங்களில் உண்மைதானோ என்று தோன்றும். நண்பனின் மகள் கைக்குழந்தையாக இருக்கும் போது கோவில் திருவிழாவில் அதன் கழுத்தில் கிடந்த ஐந்து பவுன் தங்கச் சங்கிலி திருடு போயிருச்சு... திருவிழாக் கூட்டத்தில் நிறையப் பேரின் கழுத்தில் இருந்து அறுத்துக் கொண்டு போய்விட்டார்கள். கேஸ் கொடுத்திருந்தோம்... தினம் போவோம்... நாங்க என்ன சார் பண்றது... தேடிக்கிட்டு இருக்கோம்... கிடைச்சா கொடுத்துடப் போறோம் என்பார்கள். திடீரென ஒரு நாள் அழைத்து மூணு பவுன் சங்கிலியைக் கொடுத்தார்கள். 'என்ன சார் இது தொலைந்தது ஐந்து பவுன்... மூணு பவுன் தாறீங்க... இது எங்க நகை இல்லை' என்றதும் 'சார் கிடைக்கிறதை வாங்கிக்கங்க...  ஒண்ணுமே கிடைக்காம போறதுக்கு மூணு பவுனாச்சும் கிடைச்சதுன்னு சந்தோஷப்படுங்க... எங்களுக்கு ஒரு சிலருக்கு நகையைக் கொடுத்துட்டு கேசை முடிக்கணும்' என்றார் இன்ஸ்பெக்டர். அப்ப சிலருக்கு மட்டும் தொலைந்ததில் பாதி கொடுத்து கேசை முடித்து மிச்சத்தை விற்று பங்கிட்டுக் கொள்வார்களோ என்றுதானே எண்ணத் தோன்றுகிறது.


காவல் நிலையத்தில் மரியாதை என்ன விலை என்றுதான் கேக்க வேண்டியிருக்கும். அவர்களுக்கு வயசுக்கு மரியாதை என்பதெல்லாம் தெரியாது. அவர்கள் பதவி எதையும் செய்யும் பதவி என்பது போல் 'என்னய்யா...', 'வாய்யா', .இந்தா அப்படிப் போயி உக்காரு...', 'போயி ரெண்டு டீ வாங்கிட்டு வா', 'யோவ் ஒரு குயர் பேப்பர் வாங்கிட்டு வாய்யா', 'இந்தா ஐயாவுக்கு ரெண்டு பான்பராக்கும் ஒரு சிகரெட் பாக்கெட்டும் வாங்கிக்கிட்டு வா' என இப்படியான பேச்சுக்கள்தான் அதிகம். மரியாதை கொடுப்பதில் ஒரு சிலர்தான் விதிவிலக்கு. 

கல்லூரியில் படிக்கும் போது ஊர்த் திருவிழாவிற்காக காவல் நிலையத்தில் தெரிவிக்க வேண்டும் என்ற சம்பிரதாயத்துக்காக நானும் எனது சித்தப்பாவும் சென்றோம். தலைமை ஆசிரியரான சித்தப்பா, சாதாரண வேஷ்டி சட்டையில் நூறு சதவிகித கிராமத்து மனிதராக காட்சியளித்தார். எங்களுக்கு தெரிந்த போலீஸ் யாரும் இல்லை... இருந்தது ஒரே ஒருத்தர்... உள்ளே போனதும் 'என்னய்யா..?' என்றார் மிடுக்காய். 'ஐயா திருவிழாவுல கரகாட்டம் வைக்கிறோம்... அதான் ஐயாக்கிட்ட சொல்லிட்டுப் போகலாம்ன்னு வந்தோம்...' என்றார் சித்தப்பா. 'ஐயா இல்லை... எழுதிக் கொண்டாந்திருக்கியா?" என்றார் அவர், 'இல்ல... எழுதித்தாறேன்...' என்றவரை மேலும் கீழும் பார்த்து 'நீ எழுதுவியா...? சரி அங்க உக்காந்து எழுதிக்கொடு...'  என்றார் ஏளனமாய்... 'பேப்பர்....' என்று மெல்ல இழுத்தார் சித்தப்பா. 'ஆமா இங்க வாங்கி வைக்கிறாக... போ... போய் கடையில வாங்கிட்டு வா...' என்றார் கோபமாக... 'தம்பி வண்டி பெட்டிக்குள்ள பேப்பர் கிடக்கும் பாரு எடுத்துக்கிட்டு வா..' எனச் சொல்ல நான் எடுத்து வந்து கொடுத்தேன். 

எங்க சித்தப்பா பயங்கர கோபக்காரர், ஆனால் அங்கு எதுவும் பேசலை. நான் கூட 'என்னப்பா... இம்புட்டுப் பேச்சு பேசுறாரு..? நீங்க யாருன்னு சொல்ல வேண்டியதுதானே...?' என்றேன். 'சும்மா இருடா... நமக்கு காரியம் ஆகணும்... எழுதிக் கொடுத்துட்டு போய்க்கிட்டே இருப்போம்...' எனச் சொல்லி எழுதி அவரை பெயரை அழகாய் கையெழுத்து இட்டு, 'தம்பி நீயும் கையெழுத்துப் போடு' என்று என்னையும் கையெழுத்து இடச் சொல்லி அவரிடம் கொடுத்தார். வாங்கிப் பார்த்தவர் பேப்பரில் இருந்த எழுத்தையும், அவரின் கையெழுத்தையும் பார்த்து மெல்ல எழுந்தார். 'சார் நீங்க..?' என்றார். 'புளியால் கவர்மெண்ட் ஹைஸ் ஸ்கூல் ஹெச்.எம்' என்றதும் 'வந்ததும் சொல்லக்கூடாதா? நான் யாரோன்னு... உக்காருங்க சார்... சார் வந்ததும் நான் சொல்லிடுறேன்...' என்றார் பவ்யமாய். போலீசைப் பொறுத்தவரை இருக்கவனுக்கே மரியாதை... இல்லாதவனுக்கு எப்பவும் மரியாதை கிடைப்பதில்லை.  ரோட்டில் கையேந்து காசு வாங்குவார்கள் ஆனால் நம்மை மதிப்பதில் மட்டும் அவ்வளவு ஒரு கௌரவக் குறைச்சல் அவர்களுக்கு.

காவல்துறையோ ஆளும் அரசின் அடாவடிகளுக்கு எதிராக செயல்படும் சாமுவேல் போன்ற போலீஸாரைத் தட்டிக் கொடுக்க நினைப்பதில்லை, மாறாக அரசிற்கு உதவும் விதமாக அவர்கள் மீது துறைவாரி நடவடிக்கை எடுத்து அவர்களை காணாமல் போகச் செய்துவிடுவார்கள். இப்படிப்பட்ட காவல்துறையின் மறுபக்கத்தில் இன்னும் நிறைய இருக்க, வெற்றிமாறன் கையில் எடுத்திருப்பது விசாரணை என்ற பெயரில் நடக்கும் அவலத்தை... மிக நேர்த்தியாக சொல்லப்பட்டிருக்கும் கதையால் இது உலக சினிமா அளவிற்கு உயர்ந்து நிற்கிறது.

சில நாட்களுக்கு முன்னர் ஒரு பேட்டியில் 'இந்தப் படத்தில் தனுஷ் நடித்திருந்தால் படம் ஓடியிருக்காது... பப்பரப்பாவாக ஆகியிருக்கும்' என்று சொல்லியிருந்தார் வெற்றிமாறன். அது உண்மைதான்... பெரிய நடிகர்களுக்காக கதையில் சமரசம  செய்ய வேண்டி வரும்... மாஸ் காட்சிகள் வைக்க வேண்டி வரும்... இதெல்லாம் இல்லாமல சமூக நிகழ்வில் 1% மட்டுமே எடுத்தாட் கொண்டிருந்தாலும் ஒரு அவலத்தை கண் முன் காட்டியதற்காகவே இன்று விருதுகளில் உயர்ந்து நிற்கிறது. வெற்றிமாறனின் வெற்றியால் பூரிப்படைந்தாலும் இந்த அவலத்தை அரசு எப்போது கட்டுக்குள் கொண்டு வரும் என்ற கேள்வி எழாமல் இல்லை.

இந்தப் படத்தை வெற்றிமாறனும் தனுஷூம் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். பாடல்கள் இல்லாத படத்திற்கு பின்னணி இசை ஜி.வி.பிரகாஷ். பாரதி நாயகி என்றில்லாமல் இரண்டு மூன்று இடத்தில் மட்டும் வந்து செல்கிறார்.

இந்த பகிர்வு நல்ல போலீஸ்காரர்களுக்கானது அல்ல... 


விருதுகளால் கலைஞர்களுக்கு பெருமை என்பதைவிட விருதைப் பெற்றவர்களால் அந்த விருதுக்கு கௌரவம் கிடைக்க வேண்டும் அதுதான் சிறப்பான வெற்றி. அந்த வகையில் சிறந்த பின்னணி இசைக்காக (தாரை தப்பட்டை) அன்றும் இன்றும் என்றும் இசைராஜா திரு. இளையராஜா அவர்களுக்கும்... நல்ல மனிதன் மற்றும் தரமான படைப்பாளியான திரு.சமுத்திரக்கனி அவர்களுக்கும் கிடைக்கப் பெற்றதில் விருதுக்குப் பெருமை... வாழ்த்துக்கள்.


ம்ம மனம் கவர்ந்த ரித்திகா சிங் (இறுதிச் சுற்று)  சிறந்த நடிப்பு சிறப்புப் பரிசு பெற்றிருக்கிறார்... எல்லோரையும் அழவைத்தை மம்முட்டி நடிப்பில் வெளிவந்த பத்தேமாரி மலையாள மொழியில் சிறந்த படமாக தேர்வாகியிருக்கிறது. விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

-'பரிவை' சே.குமார்.

சனி, 26 மார்ச், 2016

தொடர்கதை : நெருஞ்சியும் குறிஞ்சியும் (பகுதி-10)

முந்தைய பகுதிகளை வாசிக்காதவர்கள் வாசிக்க...


பகுதி-1             பகுதி-2            பகுதி-3            பகுதி-4           பகுதி-5       பகுதி-6          பகுதி-7         
பகுதி-8       பகுதி-9      


சுபஸ்ரீயின் நட்பு அழைப்பை ஏற்பதா... வேண்டாமா... என்று யோசித்தவன், பலமான யோசனைக்குப் பின் ‘நண்பனுக்கு மனைவியாகப் போற பெண்... புத்திசாலி... நிறைய எழுதுபவள்... சமூக சிந்தனை கொண்டவள்... ஏற்பதில் தப்பில்லையே...’ என தனக்குத்தானே சமாதானம் செய்து கொண்டு அவளின் நட்பு அழைப்பை ஏற்றான்.

அதன் பிறகு தான் வந்த வேலையில் கவனம் செலுத்தினான். வேண்டிய செய்திகளை டவுன்லோட் பண்ணி பென்டிரைவில் ஏற்றிக் கொண்டு மணி பார்த்தான், வந்து ஒரு மணி நேரம் ஆகியிருந்தது. இண்டர்நெட் மையத்தின் ஓனர் இவன் படிக்கும் கல்லூரியின் முன்னாள் மாணவர்தான்... அதுவும் இவன் படிக்கும் அதே துறையின் மாணவர்தான். ஒரு மணி நேரத்துக்கு முப்பது ரூபாய் வாங்குவார்... இவன் ரெகுலராக வருபவன் என்பதால் இருபது ரூபாய் வாங்குவார். ஒரு மணி நேரத்துக்கு மேல் பத்து நிமிடம்... இருபது நிமிடம் என்றால் கண்டு கொள்ளமாட்டார். இவனும் இங்கு வரும்போது அவருக்கு பிரிண்டிங் வேலைகள் இருந்தால் வேர்டில் அலைன்மெண்ட் எல்லாம் பண்ணிக் கொடுப்பான். அதனால் இருவருக்குள்ளும் ஒரு அண்டர்ஸ்டாண்டிங்.

‘சரி கிளம்பலாம்... அப்பா வேறு லேட்டாப்போனா கத்துவாரு... தீவனம் வேற வாங்கிக்கிட்டு போகணும்... நாலு மணிக்கு முடியிற காலேசுல இருந்து உம்மவன் ஆறு மணிக்கு வர்றான் பாருன்னு அம்மாக்கிட்ட கத்துவாரு... அதோட விடமாட்டாரு... அங்க எவ கூட சுத்திட்டு வாறான்னு கேளுன்னு வேற ஊரே கேக்குற மாதிரி வாசல்ல உக்காந்துக்கிட்டு காட்டுக் கத்துவாரு... அவருக்கு காலேசுக்கு படிக்கப் போற பசங்க எல்லாரும் பொண்ணுங்க பின்னாடி சுத்துவானுங்கன்னு நினைப்பு... ‘ என்று நினைத்தபடி எழப்போனான்.

அவங்க ஊர் சுப்பையா இவனுக்கு மாமா முறை, அவரோட மக அன்னக்கொடியும் இதே காலேசுதான். அது நாலு மணிக்கு காலேசு விட்டா நாலரைக்கெல்லாம் வீட்டுல இருக்கும்.  அதே மாதிரி இவனும் வரணுமின்னு நினைப்பாரு... இவன் படிக்கிற துறையும் அவ படிக்கிற துறையும் வேற வேற... அதெல்லாம் அவருக்கு தெரியாது... ஊர் சுத்தக் கூடாது அம்புட்டுத்தான். அதனாலேயே முன்னெச்சரிக்கையா வரும்போதே அம்மாக்கிட்ட இன்னைக்கு எனக்கு பாட சம்பந்தமா கொஞ்சம் நோட்ஸ் எடுக்க வேண்டியிருக்கு...  கொஞ்சம் லேட்டாத்தான் வருவேன்னு சொல்லிட்டு வந்திருவான்... அப்பத்தான் அவரு பேசும் போது அம்மா இவனுக்கு சப்போர்ட்டா அவன் எங்கிட்ட சொல்லிட்டுத்தான் போனான்னு சொல்லும்.

'அம்மாக்கிட்ட சொல்லியாச்சில்ல...' என்று நினைத்தபடி மீண்டும் முகநூலுக்குள் நுழைந்தான். அங்கு ‘ஹாய்’ என உள்டப்பியில் வந்திருந்தாள் சுபஸ்ரீ. இவனும் பதிலுக்கு ‘ஹாய்’ என அடித்தான்.

‘என்ன சார்... எங்களையெல்லாம் சேர்த்துக்கமாட்டேன்னு சொன்னீங்க... பிரண்ட் ரிக்வெஸ்ட் கொடுத்த அரைமணி நேரத்துல அக்சப்ட் பண்ணிட்டீங்க...’

‘ம்... என்னோட தங்கை அபி சொன்னதால... நண்பனின் வருங்காலங்கிறதால...’

‘ஓ... அப்ப என்மேல பாசமில்லையில்ல... பரவாயில்லை... உங்க கவிதைகள்... சமுதாய கருத்துக்கள் எல்லாம் பார்த்தேன்... நல்லாத்தான் எழுதியிருக்கீங்க... எனக்கும் செலக்டிவ் பிரண்ட்ஸ்தான்... சும்மா மத்தவா போடுறதை ஷேர் பண்ணி விடுறதும்... ஷேர் பண்றவாளையும் எனக்குப் பிடிக்காது.  ஷேர் பண்ற மேட்டர் பயனுள்ளதா இருக்கணும்... அதைவிட்டுட்டு கண்டதையும் ஷேர் பண்ணுவா... இதுல டேக் வேற... எல்லாத்துலயும் நம்மளை டேக் பண்ணுவா... நாம கேட்டோமா... என்னை டேக் பண்ணுங்கோன்னு... அவா எழுதுறது நன்னாயிருந்தா நாம அவா வால்ல போயி படிக்கப்போறோம்... லைக் பண்ணப்போறோம்... அதான் பிரண்டா இருக்கோம்ல்ல... பின்ன என்னத்து டேக் பண்ணி... யாரு கருத்துப் போட்டாலும் நமக்கும் மணி அடிச்சிக்கிட்டு... ஐ டோண்ட் லைக்...’

நீண்டதாய் எழுதி அனுப்பியிருந்தாள். அதற்கு இவன் ‘ஆமாங்க’ என்ற ஒற்றைச் சொல்லை பதிலாக்கினான்.

‘நைட் பேசலாமா?’ என வினாவினாள்.

‘நைட்டா..?’ எனத் திருப்பினான்.

‘எதுக்கு இந்த பயம்...? பேசலாமான்னுதானே கேட்டேன்... ஓடிப்போலாமான்னு கேட்ட மாதிரி பயப்படுறீங்க... ஹி...ஹி...’ என அவனை ஓட்டினாள்.

‘இல்லைங்க வீட்ல சிஸ்டம் இல்ல... இண்டர்நெட் மையத்துலதான் இப்ப இருக்கேன்... கிளம்பணும்... அதான்...’

‘ஓ... சாரி... ஆத்துல இருப்பீங்கன்னு நினைச்சேன்...’ என அனுப்பியவள், ‘பாருங்க வீடுன்னு சொல்லாம ஆத்துன்னு சொல்லிட்டேன்’ என்றும் அடுத்து அனுப்பினாள்.

‘சரிங்க... டைம் ஆச்சு... கிளம்புறேன்.. பை... சீயூ...’ என டைப்பினான்.

‘என்னங்க அத்து விட்டுட்டுப் போறீங்க... கொஞ்ச நேரம் இருக்கலாமே...’ என அவளிடம் இருந்து உடனே திரும்பி வந்தது.

‘சாரிங்க... கொஞ்சம் வீட்டு வேலை இருக்கு... அதான்... இன்னொரு நாள் பேசலாம்...’ முடிக்கும் எண்ணத்தில் அனுப்பினான்.

‘எப்போ..?’ உடனே எதிர்புறம் இருந்து கேள்வி வந்தது.

‘பாக்கலாம்... எப்ப நான் இங்க வர்றேனோ... அப்ப நீங்க ஆன்லைனில் இருந்தா பேசலாம்...’ என்று அனுப்பியவன் இதற்கு மேல் இருந்தால் நேரமாகும் அப்புறம் வீட்டில் அர்ச்சனைதான் என்று நினைத்தபடி அவளின் பதிலுக்காக காத்திருக்காது கட் பண்ணி விட்டு எழுந்தான்.

அவன் மனசுக்குள் ‘இவளை பிரண்ட் ஆக்கியது தவறோ? சாட்டிங்கில் வந்து தொந்தரவு கொடுப்பாளோ..?  இவளால் பிரச்சினைகளை சந்திக்க நேருமோ?’ என்ற கேள்விகள் எழுந்து அடங்க மறுத்த.


ரவணன் வீட்டுக்கு அரிசி கொண்டு சென்ற வேலாயுதம், அன்று மாலையே கிளம்ப ஆயத்தமானார்.

“இப்ப என்னப்பா அவசரம்..? நைட்டு அன் டயத்துல போயி இறங்கி நம்ம ஊருப் பாதையில... அந்த இருட்டுக்குள்ள போகணுமாக்கும்... காலையில போகலாம்ல்ல...’ என்றான் சரவணன்.

“ஆமா மாமா... நைட்டு இருங்க... மத்தியானமும் ஒண்ணும் சமைக்கலை... நைட்டுக்கு சிக்கன் வாங்கி குழம்பு வைக்கிறேன்...”

“அதெல்லாம் வேண்டாந்த்தா... உங்க அயித்த தனியா இருப்பா... இன்னும் வயல் வேல முடிஞ்சி வீடு வாசல்லாம் சுத்தம் பண்ணாம போட்டது போட்டபடி கிடக்கு... காலையில எல்லாத்தையும் சுத்தம் பண்ணனும்... இப்பப் போனா சரியா இருக்கும்...

இருங்க ஐயா... காலையில போகலாம்...” டிவி பார்த்துக் கொண்டே கத்தினாள் பேத்தி ப்ரீத்தி.

“இல்லடா... ஐயாவுக்கு வேலை இருக்குல்ல...”

“போங்கய்யா... எப்பவுமே நீங்க இப்படித்தான்.... அப்பத்தாவையும் கூட்டியார மாட்டீங்க... இதே அத்தை வீட்டுக்கு மட்டும் அடிக்கடி போவீங்க...” என கோபமாய்ச் சொன்னாள் ப்ரீத்தி.

“அதெல்லாம் இல்லடா... அத்த வீடு பக்கத்துல இருக்கா... சைக்கிள்லயே போயிருவோம்... இங்க பஸ்ல வரணுமில்ல... அப்பத்தாவுக்கு உடம்புக்கு முடியலையில்ல... அதான் வரலை... நீ லீவுக்கு வா... செரியா.... இப்ப என்ன நா ராத்திரிக்கு இங்க இருக்கணும் அவ்வளவுதானே... செரி... இருக்கேன்...” என்றபடி அவளருகே அமர்ந்தார்.

இரவு சமையலுக்கு வாங்கிக் கொண்டு வந்த சரவணன், அவருக்கு பிடித்த நிஜாம்லேடி புகையிலை பாக்கெட்டுகள் சிலவும் வாங்கி வந்து கொடுத்தான். ஊருக்கு கொண்டு போக என சில பொருட்களும் வாங்கி வந்திருந்தான். ஊர் விஷயங்கள் குறித்து அவருடன் பேசிக் கொண்டிருந்தபோது “அப்பா அண்ணனை குடும்பத்தோட ஒரு கல்யாண வீட்டுல வச்சிப் பார்த்தேன்” என்றான்.

உடனே வேலாயுதம் “நீ பேசினியா?” என கோபமாகக் கேட்டார்.

(அடுத்த சனிக்கிழமை தொடரும்...)

-‘பரிவை’ சே..குமார்.

வெள்ளி, 25 மார்ச், 2016

மனசின் பக்கம் : போட்டிகள் நிறைந்த பிறந்தநாள்

நமக்கு நாமே
வேலை அதிகம் என்பதால் வேலை நாட்களில் இரவில் எப்படியும் நண்பர்களின் அன்றைய பகிர்வுகளை வாசித்து விடுவேன் என்றாலும் கருத்து இடுவதில்லை. அதற்கான காரணம் என்னவென்றால் அனைவரும் அதிகாலையில் வேலைக்கு செல்ல வேண்டும் என்பதால் பதினோரு மணிக்கு விளக்கு அணைக்கப்பட வேண்டும் என்ற எழுதாத சட்டம் அறையில் இருப்பதே. வெள்ளிக்கிழமை விடுமுறை என்பதால் அந்த வாரத்துக்கான பெரும்பாலான பதிவுகளுக்கு கருத்து அளித்து விடுவேன். இந்த நிலை இன்னும் ஒரு மாதத்திற்கு தொடரலாம்... எனவே பொறுத்துக் கொள்ளுங்கள் மக்களே..! 

வெற்றி நமதில்லை
பிரதிலிபி கொண்டாடப்படாத காதல்கள் போட்டிக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டுவிட்டன. வெற்றி பெற்ற எழுத்தாளர்களுக்கு வாழ்த்துக்கள். இந்த முறையிலான தேர்வு சரியாக வருமா என்று தெரியவில்லை. கொடுக்கப்படும் மதிப்பெண்களை வைத்தும் வாசித்தவர்களை வைத்தும் தேர்ந்தெடுக்கும் முறை சரிதானா தெரியவில்லை. நானெல்லாம் யாருக்குமே ஓட்டுப் போட முடியவில்லை... அவர்களிடம் தனிப்பட்ட முறையில் மின்னஞ்சல் பண்ணிக் கேட்டபோது உங்களுக்கு நீங்களே வாக்களிக்க முடியாது. மற்றவர்களுக்கு அளிப்பதில் பிரச்சினை இல்லை என்றார்கள்... ஆனாலும் முடியவில்லை. அப்படித்தான் என் நண்பர்கள் சிலரும் எனக்கு வாக்களிக்க முடியவில்லை என்றார்கள். 20 மதிப்பெண்கள் வாங்கிய இந்து என்பவர் முதல் பரிசை தட்டிச் சென்றிருக்கிறார். எனக்கு கிடைத்தது 13 மதிப்பெண்கள் எனது கதை அதிக மதிப்பெண்கள் வரிசையில் நாலாவது இடம் என்று நினைக்கிறேன். நிறைய நல்ல எழுத்தாளர்களின் எழுத்துக்களுக்கு ஒரு மதிப்பெண் கூட கிடைக்கவில்லை என்பதும் சிலரின் எழுத்து வாசிக்கப்படக்கூட இல்லை என்பது மிகப்பெரிய வேதனை... இப்படிப்பட்ட முறையிலான போட்டித் தேர்வுகளில் நல்ல எழுத்துக்கு அங்கீகாரம் கிடைப்பதில்லை.. அதற்கு மாறாக அதிக நண்பர்களை முகநூலில் வைத்திருப்பவர்களே வெல்ல முடியும்... பிரதிலிபி இனி வரும் போட்டிகளில் இந்த முறையிலான தேர்வை மாற்றி அமைத்தால் நல்லது. ஒரு மதிப்பெண் கூட கிடைக்காத நல்ல எழுத்துக்காரர்கள் போட்டிகளை தவிர்க்க ஆரம்பித்து விடுவார்கள். நான் இங்கு சொல்ல விரும்புவது எனக்கு அங்கு கருத்திட்ட... மதிப்பெண்கள் அளித்த அனைத்து உறவுகளுக்கும்... மேலும் கதை ரொம்பப் பிடித்துப் போய் அதற்கென தனிப்பதிவு இட்ட அன்பின் ஐயா. துரை. செல்வராஜூ அவர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. அந்தக் கதையை விரைவில் இங்கு பகிர்கிறேன்.

போட்டிகள் சில
கோதரர் ரூபன் அவர்கள் உலகளாவிய கவிதைப் போட்டிக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். தொடர்ந்து போட்டிகள் நடத்தி ஊக்குவிக்கும் அவரையும் அவருடன் இணைந்து செயலாற்றும் கவிஞர் யாழ்பாவாணன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள். போட்டி குறித்து அறிய "கவிதைப் போட்டிசொடுக்குங்கள்.

பிரதிலிபியில் மீண்டும் ஒரு போட்டி அறிவித்திருக்கிறார்கள். இந்த முறை வேலை பளுவின் காரணமாகவும் சில சொந்த விஷயங்களாலும் எழுதும் எண்ணம் இல்லை. அது குறித்து அறிய "கதை/கவிதை/கட்டுரைசொடுக்குங்கள். 

ரூ 1,00,000 பரிசுத் தொகை அறிவித்திருக்கும் உலகளாவிய சிறுகதை மற்றும் ஒரு போட்டி குறித்து அறிய தேனம்மை அக்காவின் சும்மா தளத்திற்கு சும்மா ஒருமுறை போய் பாருங்கள். அங்கு செல்ல இங்கு  "சும்மா" கிளிக்குங்கள்.

இப்படியும் உறவு
மூன்றே மூன்று வருடம் தனக்கு ஆசிரியையாக இருந்தவரை தாயாக நினைத்த ஒரு தேவதை... ஆசிரியரை விட்டு வெகு தொலைவு சென்ற பின்னரும் அவரை மட்டும் நினைவில் இருந்து நீக்காமல் பேசி உறவை நீடித்த பாசமலர்... பத்தாம் வகுப்பு படித்து வந்த அந்த புல்லாங்குழல்... தனக்கு உடம்பு முடியாத சூழலில் அங்கிருந்து பயணப்பட்டு தமிழகம் வந்து ஆசியரைக் கண்டு அவரை கட்டிப் பிடித்து தோளில் சாய்ந்து உயிரை விட்டிருக்கிறது. இதைப் படிக்கும் போது என்னால் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை. இது குறித்து விரிவான கட்டுரை எழுத எண்ணம் பார்க்கலாம். அதற்கு முன்னர் எங்கள் மதுரையின் மைந்தர் கூட்டாஞ்சோறு  திரு. எஸ்.பி. செந்தில் குமார் சார் எழுதியிருக்கும் இந்தப் பதிவை வாசியுங்கள். அந்த மாணவி உங்கள் மனசுக்குள் சிரிப்பாள்... அதை நீங்கள் கண்களின் வழியாக கண்ணீராய் வெளியேற்றுவீர்கள். 


அண்ணிதான் தலைமை
தேர்தல் களம் சூடு பிடிக்கிறது... மக்கள் நலக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக அறிவித்திருக்கும் விஜயகாந்த் பொதுக்கூட்டங்களில் அதிகம் பேசமாட்டார் என்று சொல்லியிருக்கிறார்கள். அவர் பேசாமல் இருப்பதே நல்லது எனத் தோன்றுகிறது. என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் எதையாவது பேசி வைப்பதற்கு இன்னொரு ஜெயலலிதாவாக உருவாகிவரும் அண்ணியார் (நான் சொல்லலைங்க... அப்படித்தான் கூப்பிடுகிறார்கள்) பேசட்டுமே. இன்று நண்பர் ஓருவருடன் பேசும் போது நான் சொன்னேன் ஐயாவை அரியாசணத்தில் அமர்த்தினோம்... அப்புறம் அம்மாவை அமர்த்தினோம்... நாம எல்லாருமே உறவுகளுக்காக உயிரைக் கொடுப்பவனுங்கதானே அண்ணியையும் அமர்த்திப் பார்ப்போமே என்று சொன்னதும் சிரித்தார். எல்லாக் கட்சிகளும் பண்ணும் அடாவடியில் அதிக இடங்கள்  கிடைக்காவிட்டாலும் ஜெயலலிதாதான் ஆட்சியைப் பிடிப்பார் போலத் தெரியுது.

ஏமாற்றுவதே வேலை
மிழகத்தின் தங்கக்குரலுக்கான தேடல்ன்னு சொல்லிட்டு ஒரு பாடகரைக் கொண்டு வந்து... அவர் நல்லா பாடலைன்னு சொல்லி வெளியேற்றி... மீண்டும் வாய்ல்கார்டு முறையில் உள்ளிழுத்து முதல் பரிசையும் கொடுத்திருக்கிறார்கள். விவரம் வெளியில் தெரிந்து ஆளாளுக்கு பேசியதும் எஸ்.பி.பியையும் பாட வைப்போம் என்று எகத்தாளமாகச் சொல்கிறார்கள். அப்புறம் எதுக்கு அதுக்கு தமிழகத்தின் தங்கக் குரலுக்கான தேடல்ன்னு வைக்கணும்... தமிழகத்தின் பிறமொழிப் பாடகர்களுக்காக தேடல்ன்னு வைக்கலாமே... எது எப்படியோ மற்ற பரிசுகளை வென்றவர்கள் முதலாமவரை விட நல்லாப் பாடத் தெரிந்தவர்கள் தமிழர்கள் என்பதாலேயே இரண்டாம் மூன்றாம் இடங்களுக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள் என்பது வெட்ட வெளிச்சமாகியிருக்கிறது. இதைப் பற்றி அதிகம் பேச விரும்பவில்லை... காரணம் நான் இந்த செல்லக்குரல்... தங்கக்குரல்... எல்லாம் பார்ப்பதில்லை.

சந்தோஷம்
ருக்கு வருவதற்கான நாளெல்லாம் பார்த்து ஆயிற்று... ஆனாலும் எங்க ஆளு 'ஓகே' அப்படின்னு ஒற்றை வார்த்தை சொல்லாமல் இன்னும் மௌனம் சாதிக்கிறான். எது எப்படியோ மே-12ஆம் தேதி இரவு நம்ம ஊரு மண்ணை மிதித்து விடுவேன் என்று நினைக்கிறேன். குழந்தைகள் வேறு டிக்கெட் போட்டாச்சா... டிக்கெட் போட்டாச்சா... என நச்சரிக்க ஆரம்பித்து விட்டார்கள். போட்டு விடலாம்... இந்த முறையாவது நட்புக்களை எல்லாம் கண்டிப்பாக சந்திக்க வேண்டும் என்ற ஆவலோடு இருக்கிறேன்... முயற்சிக்கணும்... முயற்சி திருவினை ஆக்கும் அல்லவா..?

வாழ்த்துங்க
நாளை எங்க செல்ல மகள் ஸ்ருதியின் பிறந்தநாள்... உங்கள் ஆசிர்வாதத்தையும் அன்பையும் கொடுங்கள்.

(சென்ற வருடம் அபுதாபி வந்திருந்த போது 
 எடுத்த போட்டோ)


-'பரிவை' சே.குமார்.


வியாழன், 24 மார்ச், 2016

வாக்காளர் அலப்பறை...4

வன் அறைக்குள் நுழையும் போது இந்தியா - பங்களாதேஷ் கிரிக்கெட் போட்டி டிவியில் ஓடிக் கொண்டிருக்க, அறை நண்பர்கள் சுவாராஸ்யமில்லாமல் ஊருக்குப் பேசிக் கொண்டும்... கணிப்பொறியில் விவாத மேடைகள் பார்த்துக் கொண்டும் இருந்தார்கள்.

"என்னாச்சு... இந்தியா ஜெயிக்காதுன்னு பேசிக்கிட்டானுங்க..." என்றபடி டிவிக்கு முன் போய் ஸ்கோர் பார்த்தான்... "அது சரி... பாலைவிட பத்து ரன்தான் அதிகமிருக்கு... அப்ப இன்னைக்கு இந்தியாவுக்கு சங்குதான்" என்றான்.

"அதேதான் நானும் சொல்றேன்... பவுலிங் பிட்சுன்னு நம்மாளுங்க சொல்றாங்க... அதே பவுலிங் பிட்சுலதானே அவனும் விளையாடுறான்... அவனுக்கு மட்டும் சிக்ஸர் போருன்னு போகுது... நம்மாளுக பயலுக கிட்டிப்புல்லு விளையாடுற மாதிரியில்ல ஆடுனானுங்க... தோக்கட்டும்...' என்றபடி விவாத மேடையோடு மேட்சையும் கலந்து பார்க்க ஆரம்பித்தார் அறை நிர்வாகி.

அறை நிர்வாகிக்கு பதில் சொல்லிக் கொண்டே டிரஸ் மாற்றி கை, கால் கழுவி விட்டு ஒரு கிரீன் டீயோடு வந்து அமர்ந்தான் அவன். மாட்ச் தோத்துருவானுங்கன்னு தோண, ஊருக்கு பேசலாம் என்று நினைத்தபடி கம்ப்யூட்டரை ஆன் செய்து விட்டு பக்கத்துப் பெட்டுப் பக்கமாக திரும்பினான். அங்கே அவர் எங்கிட்டு மழை பேஞ்சா எனக்கென்ன என மிகவும் சின்சியராக அவர் விரும்பும் கட்சி பரப்பிக் கொண்டிருக்கும் கொள்கையை ரசனையோடு பார்த்துக் கொண்டிருந்தார்.

அவனை பார்த்து விட்டு கவனிக்காதது போல அமர்ந்திருந்தார். அவர் கண்டிப்பாக 'இந்த ஏழரை வந்திருச்சு... இனி ஏதாவது பேசி நமக்கிட்ட ஏழரை இழுக்குமே' என மனதுக்குள் நினைத்திருப்பார் என்று நினைத்தவனுக்கு சிரிப்பு வர, அதை பெரிய செருமலாக மாற்றினான்.



"என்னங்க... அரசியல் ரொம்ப சூடு பிடிக்கிது போல..." என அவரை வம்புக்கிழுத்தான்.

'ஏய்யா... வந்ததும் ஆரம்பிக்கிறே...? கொஞ்ச நேரம் மேட்ச் பாக்க விடுய்யா...' என சைகையால் சொன்னார் அறை நிர்வாகி.

'கோர்த்து விடு மாப்ள... நம்ம பொழப்பு அதுதானே... இன்னைக்கு கிரிக்கெட்டுலதான் அடிச்சி ஆடலை... நீ அடிச்சி ஆடு... இப்பத்தான் பொண்டாட்டிக்கிட்ட சண்டை போட்டேன்... அந்த சூடு போக நீ அவருக்கு பத்த வச்சி விடு பரட்டை' என்பது போல் சிரித்தான் எதிர் பெட்டுக்காரன்.

"அட என்னங்கப்பா... ஆளாளுக்கு விடாம விவாத மேடை, நேர்படப் பேசு அது இதுன்னு பாக்குறீங்க... கருத்துச் சொல்ல மாட்டேங்கிறீங்க... பாக்யா மக்கள் மனசு மாதிரி... அறை நண்பர்கள் மனசை தெரிஞ்சிக்கலாம்ன்னு வந்தா நாத்தனாக்காரி முகத்தை திருப்பி வச்சிக்கிட்ட மாதிரி உக்காந்திருக்கீக..." என்றான் சத்தமாய்.

"அதான் சேந்துட்டானுங்களே... இனி என்ன பேச..." அவர்தான் ஆரம்பித்தார்.

'சனியன் சீட்டியடிச்சிட்டான்...' என்பது போல் நக்கலாய் சிரித்தான் எதிர் பெட்டுக்காரன்.

"என்னலே சிரிக்கிறே... பொண்டாட்டிக்கிட்ட சிரிக்க முடியலை... அங்க இருந்துக்கிட்டு உன்னைய இங்க சிரிக்க விடாமப் பண்ணுறா பாரு... அதான்யா... அம்புட்டுப் பேரும் கூட்டணி அது இதுன்னு புலம்ப... இருக்கா... இல்லையான்னே தெரியாம வீட்டுக்குள்ள இருந்துக்கிட்டே உள்ளடி வேலை எல்லாம் பாக்குது பாரு தமிழகத்தை காக்க வந்த கொம்மா... அது மாதிரிடா மாப்ள எந்தங்கச்சி..." எனச் சொல்லி சிரித்தான்.

"காஞ்ச ஓலையைப் பார்த்து பச்சை ஓலை சிரிக்க கூடாது மாப்ள... நாளைக்கு பச்சை ஓலையும் காயும் பாத்துக்க..."

"காயும் போது பாக்கலாம் இரு.." என்றவன், "இன்னைக்கு கேப்டன் டேயாமே... கலக்கிட்டாராமே..." என்றான். அவன் எப்பவும் விஜயகாந்துக்கு சப்போர்ட் பண்ற மாதிரி பேசுறதாலதான் அறைக்குள் சண்டை சூடு பிடிக்கும். அதனாலேயே அவன் கட்சிகள் விஜயகாந்துக்கு போட்டி போடுற மாதிரி அவரை முன்னிருத்துவான்.


"எனக்கு அப்பவே தெரியுங்க... இவன் அங்கதான் போவான்னு... அதுல வேற  முதல்வர் வேட்பாளராம்... என்ன கொடுமை பாருங்க..." என்றார் அவர்.

"இதுல என்னங்க கொடுமை இருக்கு... அவருக்கு திமுகவோட போக பிடிக்கலை... அதைத்தான் மக்களும் விரும்பினாங்க...அதான் மக்கள் நலக் கூட்டணிக்குப் பொயிட்டாரு... மக்கள் நலம் காக்க... அதுக்காக இதை சந்தர்ப்பவாத கூட்டணியின்னு மத்த கட்சிக்காரங்க சொல்ற மாதிரியில்ல நீங்களும் சொல்றீங்க?"

"தனியா நிக்கிறேன்னு சொன்னவன் நிக்க வேண்டியதுதானே... எதுக்கு அங்க போயி சேர்றான்... அப்ப அவனுக்கு பயம் வந்தாச்சுல்ல..."

"இந்த பயம் அவருக்கா... இல்லை நீங்க மாஞ்சு மாஞ்சு பாக்குறீங்களே அந்த கட்சிக்கா?"

"நான் எல்லாக் கட்சி பேச்சையும்தான் கேட்கிறேன்... நீங்க எதுக்கு ஒரு குறிப்பிட்ட கட்சியோட ஆள்ன்னு மட்டும் என்னை பாக்குறீங்க..."

"அப்படியா... எல்லா கட்சி பேச்சையும் கேக்குறீங்களா... சரித்தான்... ஆமா எல்லாக் கட்சியிலயும் தலையில மைக்கை மாட்டிக்கிட்டு ஒரு ஆள் பேசுறாரா என்ன... நான் கவனிக்கலையே..?" 

"அது... அது எதுக்குங்க இப்ப... பேரம் பேசி படியாம இப்ப அங்கிட்டுப் போயிருக்கான்... இவனெல்லாம் தமிழகத்தை காக்கப் போற முதல்வரா..? மதுவை ஓழிப்போம்ன்னு சொல்றவனுங்களோட முதல்வர் வேட்பாளர் மப்புல இருக்கவருல்ல..." சிரித்தார்.

"இருங்க... மத்த எந்தக் கட்சி வந்தாலும் மதுவையும் சாதியையும் ஒழிச்சிருமா?"

"ஆமா கிழிப்பானுங்க.. அதை வச்சித்தானே அரசியல் பண்ண முடியும்..." இடையில் புகுந்தார் அறை நிர்வாகி.

"நல்ல செயல் திட்டங்களோட வர்றவங்களுக்கு வாய்ப்பு கொடுக்கணுங்க... விஜயகாந்த் மாதிரி ஆளுங்களை அரசியல்ல இல்லாமப் பண்ணனும்..."

"ஒத்துக்கிறேங்க... விஜயகாந்த் நிலை இல்லாதவர்தான்... தண்ணி வண்டியாவும் இருக்கட்டும்... அந்தாளை தமிழக மக்கள் விரட்டி அடிக்கட்டும்... அப்படியே அம்மா, அய்யா... அப்புறம் சாதி அரசியல் பண்ற எல்லாரையும் விரட்டிட்டு மக்களுக்காக பாடுபடுற ஒருத்தரை தலைவராக்கட்டும்... அந்த ஒருத்தரை எங்க தேடுவீங்க... தேடித்தான் பிடிச்சிட முடியுமா... ஆ...ஊன்னா சகாயத்தை முன்னிருத்துவீங்க... அவரு மட்டும் இந்த பாழப்போன தமிழகத்தை சோலை ஆக்க முடியுமா என்ன...?"

"அதுக்குத்தாங்க இருக்கவங்கள்ல மக்கள் நலம் காக்கப்போற புதியவங்ககிட்ட ஆட்சியைக் கொடுங்கன்னு சொல்றோம்..."

"ஆமாங்க விஜயகாந்த் மட்டுமில்ல... வைகோ, திருமா, கம்யூனிஸ்ட் என யாருமே இதுவரை ஆட்சி செய்யலை... அவங்களும் புதியவங்கதானேங்க... இந்த முறை மக்கள் நலக் கூட்டணிக்கு ஆதரவு கொடுப்போம்..."

"அது எப்படிங்க... வைகோ திருமா எல்லாம் அரசியல்ல பழம் தின்னு கொட்டை போட்ட பெருச்சாளிங்க... களவாணிப் பயலுக கூட்டணிங்க அது... சந்தர்ப்பவாத கூட்டணி... நாளைக்கே அம்மா புகுந்து அத்து விட்டுரும் பாத்துக்கங்க..."


"அம்மா புகுந்தா ஆமை புகுந்த மாதிரியின்னு சொல்றீங்க... சரி விடுங்க... நான் ஒண்ணு கேட்டா தப்பா நினைக்க மாட்டீங்களே... உங்க தலைமை இருக்காரு பாருங்க... ரொம்ப சுத்தம் இல்லைங்களா... இதுவரைக்கும் கேவலமான அரசியல் பண்ணியதே இல்லை... சாதி அரசியல் பண்ணியதே இல்லை... மக்களுக்காக தன்னோட சொத்தை அழிச்சு அரசியல் பண்ணிட்டு இன்னைக்கு குடிசையில இருக்காரு இல்லீங்களா... அட ஏங்க சும்மா பேசிக்கிட்டு... எல்லாப் பயலும் ஒரே குட்டையில ஊறுன மட்டைதானேங்க ... இன்னைக்கு செண்ட் அடிச்சிக்கிட்டு லவ்பெல்லாகிய நான்னு சொன்னா...."

"நீங்க ரொம்ப பேசுறீங்க... உங்களுக்கு விஜயகாந்தை தூக்கிப் பேசணும்... அதுக்காகத்தானே அரசியல் பேச வாறீங்க..."

"ஆமா... அவரை நாந்தான் தூக்கணுமாக்கும்... அதான் எங்க போனாலும் அவரைத் தூக்க ஆள் போகுதுல்ல... அவரும் அடிக்கிறாரு... பக்கத்துல இருக்க ஆளுகளையும் அடிக்கிறாரு... நமக்கு எந்தக் கட்சியும் இல்லைங்க... மாட்ச் வேற சுவராஸ்யமாப் போகுது... என்ன மாப்ள லாஸ்ட் ஓவரா... எத்தனை ரன் தேவை...11 ரன்னா... பெங்காலி ஜெயிச்சிப்புட்டானுங்க போ... நாளைக்கு சைட்ல மஞ்சப்பொடிக ஆட்சியாவுல இருக்கும்... லீவைப் போட்டுற வேண்டியதுதான்.... அட என்ன இது இவனைப் போடச் சொல்றான்... அட நம்ம கேப்டன் கூட அட அண்ணன் சொல்ற மாதிரி புதிய ஆளுக்கு குடுத்துப் பாக்குறான்...  முயற்சி திருவினையாக்குமா..." எனச் சிரித்தபடி சீரியஸாக டிவியைப் பார்க்க ஆரம்பித்தான். 

அவர் மீண்டும் விவாதமேடைக்குள் நுழைந்திருந்தார்.

முதல் பந்து 1 ரன்... 

இரண்டாவது மூன்றாவது பந்தில் முறையே 4, 4...

"ம்க்கும்... புது ஆளு போடுறான் பாரு... முடிச்சிட்டானுங்க... 3 பால்ல 2 ரன்... பெங்காலிக குதிக்கப் போறானுக... வடிவேல் ஜோக்கு மாத்தி விடுங்கப்பா" என்றார் அறை நிர்வாகி.

"இருங்க... டைகர்லாம் குதிக்கிறதைப் பார்க்க வேண்டாம்..."

நாலாவது... ஐந்தாவது பாலில் விக்கெட்... 1 பால் 2 ரன்... மக்கள் நலக் கூட்டணி போல் பவுலருடன் தீவிர ஆலோசனையில்... 

கடைசிப் பந்து... 

தோனி, நேஹ்ரா ஐடியாப்படி வீசப்படுகிறது... பெங்காலி சுத்துறான்... 

'ஒண்ணு ஓடிருவானுங்க... மாட்ச் டை ஆகும்...' என பெட்டில் குத்தினான் எதிர் பெட்டுக்காரன்.

பந்து தோனி வசம்... பேட்ஸ்மேன் ஓட... எதிர் பேட்ஸ்மேன் எல்லைக்குள் வருவதற்குள் தோனி விரைந்தோடி ஸ்டம்பிங் செய்ய... 

மூன்றாவது நடுவரிடம் கேட்கப்படுகிறது...

திக்..திக்... நிமிடங்கள்....

மூன்றாவது நடுவர் அது அவுட்டுத்தாய்யா... எதுக்கு பயலுகளை படப்பட்டப்பா நிக்கச் சொல்லியிருக்கே... போகச் சொல்லுங்கிறேன்ன்னு சாலமன் பாப்பையா மாதிரிச் சொல்லிவிட....

பரபரப்பான போட்டியில் இந்தியா வெற்றி...


"அட புது ஆளு கூட ஜோரா இந்தியாவை காப்பாத்திட்டான்யா... அப்ப மக்கள் நலக் கூட்டணிக்கு ஓட்டுப் போடச் சொல்லுங்கப்பா... இந்த கேப்டன் இந்தியா மானத்தைக் காத்தது மாதிரி நம்ம கேப்டன் தமிழகத்தைக் காப்பாரு..." என்றான் சத்தமாக.

"ஆமா கிழிச்சாரு..." என்றார் அறை நிர்வாகி.

"மாப்ள மாட்ச் பாத்து படபடன்னு இருக்கு... இப்படியெல்லாம் ஜோக் அடிக்காதே படக்குன்னு போனாலும் போயிருவேன்... அப்புறம் உந்தங்கச்சிக்கு சண்டை போட ஆளில்லாமப் போயிரும்" என்றான் எதிர் பெட்... 

அவர் ஒன்றும் பேசாமல் கணிப்பொறி திரையைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தார். ஒருவேளை 'ஒளிமயமான தமிழகத்தை சமைப்போம்'ன்னு பேசியிருப்பானுங்களோ என்னவோ....

நன்றி இணையத்தில் இருந்து எடுத்த படங்களின் உரிமையாளர்களுக்கு...
-'பரிவை' சே.குமார்.

திங்கள், 21 மார்ச், 2016

வாழும் கதைகள்..!


சாமியாடி வீட்டு கமலமும் இல்லை...
அவளைக் காதலித்த சாமியய்யாவும் இல்லை...
கரை சேராத காதல் கதை மட்டும்
இன்னும் வாழ்ந்துக்கிட்டு இருக்கு...

மேலச் செய் விளையவும் இல்லை...
அதில் விவசாயம் செய்த பூமியும் இல்லை...
மூடை மூடையாய் விளைந்த கதை மட்டும்
இன்னும் வாழ்ந்துக்கிட்டு இருக்கு...

சொன்னதை கேட்கும் ராமுக் காளையும் இல்லை...
வளர்த்த ராமையாக் கோனாரும் இல்லை...
ராமு ஜல்லிக்கட்டில் சாதித்த கதை மட்டும்
இன்னும் வாழ்ந்துக்கிட்டு இருக்கு...

கீழவீட்டு வெள்ளச்சி எருமையும் இல்லை...
வளர்த்த வெள்ளையம்மாக்காவும் இல்லை...
வாளி வாளியாய் பால் கறந்த கதை மட்டும்
இன்னும் வாழ்ந்துக்கிட்டு இருக்கு...

அம்பலார் வீட்டு லோகிதாசும் இல்லை...
அவன் உயிரை எடுத்த அரசமரமும் இல்லை...
தூக்குப் போட்டுக்கிட்ட கதை மட்டும்
இன்னும் வாழ்ந்துக்கிட்டு இருக்கு...

சுடுகாட்டு ஒத்தப்புளியும் இல்லை...
உடுக்கடிக்கும் வேம்பையனும் இல்லை...
ஊரைக் கலக்கிய பேய்க் கதைகள் மட்டும்
இன்னும் வாழ்ந்துக்கிட்டு இருக்கு...

கம்மாய்க்குள்ள ஒரம்பா மரமும் இல்லை...
அருகிருந்த வற்றாக் கிணறும் இல்லை...
அங்கு நிகழ்ந்த காதல் கதைகள் மட்டும்
இன்னும் மலர்ந்துக்கிட்டு இருக்கு...

ஊர் கூடி ஆடு வெட்டும் திருவிழாவும் இல்லை...
கருப்பர் சாமியாடும் கருப்பையாவும் இல்லை...
அவர் அரிவாள் மீதேறி ஆடிய கதைகள் மட்டும்
இன்னும் வாழ்ந்துக்கிட்டு இருக்கு...

இப்படி... இப்படியாக...
இன்னும் நிறைய வாழ்க்கைக் கதைகள்
உலாவிக் கொண்டுதான் இருக்கின்றன...
தன்னை இழந்த கிராமங்களில்...!
-'பரிவை' சே.குமார்.

சனி, 19 மார்ச், 2016

தொடர்கதை : நெருஞ்சியும் குறிஞ்சியும் (பகுதி-9)

முந்தைய பகுதிகளை வாசிக்காதவர்கள் வாசிக்க...


பகுதி-1             பகுதி-2            பகுதி-3            பகுதி-4           பகுதி-5       பகுதி-6          பகுதி-7         பகுதி-8            



போன் அடிக்கவும் ‘யாரு இந்த நேரத்துல...’ என்று முணங்கியபடி போய் போனை எடுத்தார் வேலாயுதம்.

“அப்பா சரவணன் பேசுறேன்...” என்றது எதிர்முனை.

“என்னப்பா... சரவணா... எப்படியிருக்கே..? பேத்தியா... மருமவ எல்லாரும் நல்லாயிருக்காகளா...?”

“எல்லோரும் நல்லாயிருக்கோம்... நீங்க... அம்மா...”

“எங்களுக்கு என்னப்பா... நல்லாத்தானிருக்கோம்... வய வேல எல்லாம் முடிஞ்சிருச்சு... அக்காவும் அத்தானுந்தான் வந்து பாத்தாக... அக்கா இங்கதான் இருக்கு...”

“அப்படியா... அக்கா நல்லாயிருக்கா... பாப்பா எப்படியிருக்கு...?”

“எல்லாரும் நல்லாயிருக்காக...”

“அத்தான் இருக்காகளா..?”

“இல்லை கடைக்கிப் பொயிட்டாரு...”

“ம்... நாந்தான் அத்தானுக்கு போன் பண்ணனுமின்னு நினைச்சி பண்ணவே இல்லை...”

“அப்ப அப்ப பேசுப்பா... சரி வேற என்னப்பா...”

“அப்பா... நெல் அவிச்சிட்டீங்களா..?”

“ம்... இப்பத்தான் அம்மாவும் அக்காவும் அவிக்கிறாங்க... மூணு நாலு நாள்ல அரைச்சி கொண்டுக்கிட்டு வர்றேம்ப்பா...”

“அதுக்காக கேக்கலை... போன மாசம் நம்ம அரிசி முடிஞ்சி கடையில வாங்கினேன்... இன்னும் ரெண்டு மூணு நாள் வரும்... அதான் நீங்க கொண்டாருவீங்களா... இல்லை வாங்கணுமான்னு தெரிஞ்சிக்கத்தான் கேட்டேன். “

“கொஞ்சமா வாங்கிக்க... இந்த வாரத்துல கொண்டு வாறேன்...” என்றார்.

“சரிப்பா... அம்மாவைக் கேட்டேன்னு சொல்லுங்க....” என போனை வைத்தான்.

“போன்ல யாருப்பா.... சரவணனா...?” அவரிடம் அம்மாவுக்கு காபி போட்டு ஊற்றி வைத்த தூக்குச் சட்டியைக் கொடுத்தபடி கேட்டாள் செல்வி.

“ஆமா...”

“என்னவாம்...?”

“சும்மாதான்... நல்லாயிருக்கிகளான்னு கேட்டான்....”

“இருக்காதே... இந்த நேரத்துல பண்றான்னா எதாவது காரணம் இருக்கணுமே...”

“அரிசி எப்பக் கொண்டாருவீங்கன்னு கேட்டான்... அதான்...”

“அதானே பார்த்தேன்... ரொம்ப பாசமா இந்த நேரத்துல கூப்பிட்டிருக்கானேன்னு நினைச்சேன்...”

“அட நீ சும்மா இரு கழுத... சின்னமங்களச் செய்யி அறுத்ததுமே அவனுக்கு அரிசி கொண்டே கொடுத்துட்டு வாறேன்னு சொன்னேன்... உங்காத்தாதான் மடக்கரை செய்யில போட்டிருக்கது பொன்னி, அதைக் கொண்டேயிக் கொடுக்கலாம்ன்னு சொன்னா... பிள்ளை பாவம்... கடையில அரிசி வாங்கியிருக்கு...” என்றபடி நெல்லவிக்கும் மனைவிக்கு காபியை எடுத்துக் கொண்டு கிளம்பினார்.

‘பாவம் இந்த வயல்ல கஷ்டப்பட்டவன் இன்னைக்கு வருசம் பூராம் கடையிலதானே அரிசி வாங்கிச் சாப்பிடுறான்... அவன் தப்பே பண்ணியிருந்தாலும் மனசுக்குப் பிடிச்சவளைத்தானே கட்டியிருக்கான்... வாழ்த்துட்டு போகட்டும்ன்னு நினைக்காம... வெவசாய வேல செய்யாம வளர்ந்தவனுக்கு... பொண்டாட்டி பேச்சைக் கேட்டுக்கிட்டு இருக்கவனுக்கு அரிசியை தூக்கிக் கொண்டு போயி கொடுக்குறாராம்... ம்.. பெரியவனை என்னைக்கு இந்த வீட்டுக்குள்ள சேப்பாங்களோ தெரியலை...’ என்று மனசுக்குள் நினைத்து பெருமூச்சு விட்டபடி எரியாத விறகடுப்பை ஊதாங்குழல் வைத்து ஊதி எரிய வைத்துவிட்டு, புகையால் எரிந்த கண்ணை புடவை முந்தானையால் துடைத்துக் கொண்டே அம்மா வாசிக்கும் ராணிப் புத்தகதை எடுத்துக் கொண்டு சுவரில் சாய்ந்து அமர்ந்தாள் செல்வி.


யார் வீட்டுக்குச் சென்று வந்தாலும் அவனின் வீட்டாரின் அன்பு, உபசரிப்பு என ஒரு வார காலத்துக்கு திரும்பத் திரும்ப பேசுவது நண்பர்களின் வாடிக்கை... ‘டேய் அம்மா எங்களைக் கேட்டாங்களா...?’, ‘அண்ணன் என்ன சொன்னான்..?’,’அக்கா எதாவது சொன்னுச்சா...?’, என்று போய் வந்தவர்களும் ‘எல்லாரும் உங்களை மறுபடியும் இன்னொரு முறை அழைச்சிக்கிட்டு வரச் சொன்னாங்கடா...’ என கூட்டிப் போனவனும் திரும்பத் திரும்ப கேட்பதையும் சொல்வதையும் பார்க்கலாம். அப்படித்தான் சாரதி வீட்டு உபசரிப்பு, பாசம், நேசம் எல்லாம் ஓடிக் கொண்டிருந்தது.

கண்ணன் வயல் வேலை, கல்லூரி, நண்பர்களுடன் அரட்டை என எப்பவும் போல் சந்தோஷமாக இருந்தான். இடையில் ஒன்றிரண்டு முறை மட்டும் ‘ஏன்டா உங்க அத்தை பொண்ணு என்ன சொல்லுது?’ என்று சாரதியிடம் கேட்டான். ‘அவ ஆஸ்டல்ல இருக்காடா... காலேஜ் பொயிட்டா... இனி லீவுல வரும்போதுதான் உங்களைப் பற்றி எல்லாம் பேசுவா..?’ என்றான்.

“அடேய்... நான் எங்களைப் பற்றி என்ன சொன்னாங்கன்னா கேட்டேன்... உங்க லவ் பற்றி...” இழுத்தான்.

“லவ்வா... அது சரி... வீட்டுல  முடிவு பண்ணி வச்சிருக்காங்க... அவ்வளவுதான்... அவ எங்கிட்ட அதிகம் பேசமாட்டா... எப்பவாச்சும் பேஸ்புக்ல வந்து எதாவது கேப்பா அவ்வளவுதான்... அவ எங்க அபிக்குத்தான்டா ரொம்ப குளோஸ்... ரெண்டும் எப்பவும் சாட்டிங்லதான்....”

“என்னடா பேசுவீங்க...?” சிரிக்காமல் கேட்டான் அம்பேத்கார். அவர்களின் அரட்டை சாரதியையும் சுபஸ்ரீயையும் சுற்றிச் சுற்றி வந்தது.

“ஏன்டா... இன்னைக்கு ஓட்டுறதுக்கு ஆளே கிடைக்கலையா... பாவம்டா... அந்தப் பொண்ணுக்கு மண்டையில ஏறப்போகுது.”

“ஏன்டா... கட்டிக்கப் போறவனுக்கு இல்லாத கரிசனம் உனக்கெதுக்கு...” நக்கலாய்க் கேட்டான் பிரவீண்.

“ஓகே... தப்புத்தான்... நான் இண்டர்நெட் சென்டர் வரைக்கும் போகணும்.. அப்புறம் அப்பா மாட்டுக்கு தீவனம் வாங்கிட்டு வரச் சொன்னார்... லேட்டாப் போனா கத்துவாரு... “ என்றபடி கிளம்பினான்.

இண்டர்நெட் மையத்தில் முகநூல் கணக்கில் உள்ளே செல்ல, அவனுக்கு இரண்டு நண்பர் விண்ணப்பம் வந்திருந்தது. ‘ஆமா எவனாச்சும் அந்து முறிஞ்சவன் அனுப்பியிருப்பான்...’ என்று நினைத்தபடி அதைக் கிளிக்கினான். முதலாவது ஒரு அமைப்பு சார்ந்தது... அதை நீக்கினான். இரண்டாவது ‘சுபஸ்ரீ தட்சிணாமூர்த்தி’ என்றிருந்தது, அழகிய இரண்டு கிளிகள் புரோபைல் படமாக இருந்தது.. ‘ஏற்றுக் கொள்வதா...? வேண்டாமா...?’ என்ற யோசனையோடு மவுஸை நகர்த்தினான்.

(சனிக்கிழமை தொடரும்)
-‘பரிவை’ சே..குமார்.