மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வருத்தம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வருத்தம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 18 ஆகஸ்ட், 2017

அவசரம் ஏனோ..?

வரை எனக்கு முன்பின் தெரியாது... 

இங்கு நிறையப் பேர் எழுதுகிறார்கள் என்றாலும் ரெண்டு மூணு பேர் மட்டுமே உறவாய்... அப்படி ஒரு ஆறுதலாய் இருந்தவர் அன்பின் அண்ணன் கில்லர்ஜி... அவரும் ஊருக்குப் போய்விட இப்போது ஆறுதலாய், நம் சுக துக்கங்களைக் கொண்டு போய்ச் சேர்க்கும் இடமாக இருப்பவர் அன்பின் அண்ணன் யூசுப் (கனவுப் பிரியன்)... மற்றபடி பலர் திடீரென முகநூல் அரட்டையில் வருவார்கள்... போவார்கள்... அவ்வளவே... அப்படித்தான் அவரும் வந்தார். சிறுகதைப் போட்டிக்கு சிறுகதை அனுப்புங்கள் நண்பரே என முகநூல் உள்பெட்டியில் வந்தார்.

பின்னர் முகநூல் அரட்டை தொடர, அவரைப் பற்றி அறிய முடிந்தது... ஊர் பெரம்பலூர் என்றும் அலைனில் இருக்கிறேன் என்றும் சொன்னார். அவரது கவிதைகள் அவ்வப்போது ஏதேனும் ஒரு சிற்றிதழில் வெளிவர. அதைப் பகிர்ந்து கொள்வார். அவர் சிற்றிதழ்களின் காதலன் என்று அறிந்தபோதும் சிற்றிதழ்கள் சேகரிப்பு, அது குறித்தான பார்வை என அவரின் மனக்கிடங்குக்குள் அவ்வப்போது இணையவழி மூலமாக மூழ்கிய போதும் வெளிநாட்டு வாழ்க்கையில் எத்தனையோ போராட்டங்கள் இருக்கும் அப்படியிருக்கும் போது இத்தனைக்கும் இடையில் அவரால் சிற்றிதழ்கள் குறித்தான ஒரு ஆய்வையே மேற்கொள்ள முடிகிறதே என  வியந்தேன்.

அவருடன் இணைய வழி தொடர்பு மட்டுமே அதிகமிருந்தது. ஒரு முறை மட்டுமே போனில் பேசிய நியாபகம். அவர் நடத்திய சிறுகதைப் போட்டியில் என் கதைக்கு மூன்றாமிடம் கிடைத்தது. சிற்றிதழ்கள் உலகம் என்னும் சிற்றிதழ் இணைய வெளியில் கொண்டு வர இருப்பதாகச் சொன்னார், பின்னர் அதை அச்சிலும் கொண்டு வருகிறோம் என்றார். அதற்கு வாழ்த்துச் செய்தி வாங்கி அதை முதல் இதழில் பிரசுரித்தார். அடுத்த இதழில் சிற்றிதழ்கள் உலகம் குறித்து நான் இங்கு பகிர்ந்த பதிவை பகிர்ந்து கொண்டவர் மூன்றாவது இதழ் தயாராகும் முன்னர் இரண்டு கதைகள் அனுப்புங்க ஒண்ணை இதழிலும் மற்றொன்றை ஒரு போட்டிக்கும் பயன்படுத்திக் கொள்கிறேன் என முகநூல் மூலமாகக் கேட்டார். நானும் அனுப்ப முயற்சிக்கிறேன் ஐயா என்று சொன்னேன்.

மறுநாள் கதையை மெதுவா அனுப்புங்க அடுத்த இதழ்ல போடுவோம்... இப்ப அசோகமித்ரனைப் பற்றி ஒரு பக்கம் எழுதி அனுப்புங்க என்றார். அசோகமித்திரனைப் பற்றியா என்ற யோசனையோடு அவர் கேட்டதற்காக எழுதி அனுப்பினேன். அதை எனது போட்டோவுடன் பிரசுரித்தார். சிற்றிதழ்கள் உலகம் இதழை ஊரில் தனது மகள் மூலமாக எல்லாருக்கும் அனுப்பி வருவதாகவும் நீங்களும் கனவுப்பிரியனும் சந்தாதாரராக சேர்ந்து கொள்ளுங்கள் என்றும் சொல்ல, நாங்க இங்கயே பணம் தந்துடுறோமே என்ற போது இல்லை வங்கிக் கணக்கில் போடுங்க என்று சொல்லிவிட்டார். மிகச் சிறிய தொகைக்காக சேவைக்கட்டணம் தேவையில்லாமல் போகுமே மே மாதம் ஊருக்குப் போகும் போது அங்கு எனக்கும் அண்ணனுக்கும் பணம் போடுகிறேன் என்றதும் சரி உங்க முகவரி கொடுங்க இதழ் அனுப்பச் சொல்றேன் என்றார். பணம் போட்டதும் இதழ் அனுப்பலாம் என்றதற்கு அட பணம் என்னங்க பணம் முகவரி கொடுங்க என்றார் உரிமையாக.

ஊருக்குப் போய் திருவிழா, குழந்தைகள் என இணையப் பக்கமே வரலை. ஒருநாள் அலுவலக மின்னஞ்சல் பார்த்த போது முகநூல் உள்ளே போனால் இதழ் கிடைத்ததா என உள்பெட்டியில் கேட்டிருந்தார். அவர் அனுப்பிய... அனுப்பச் சொன்ன இதழ்கள் எதுவும் என் முகவரிக்கு வரவேயில்லை. இல்லை என்றதும் தாங்கள் கொடுத்த முகவரியில்தான் அனுப்பியிருக்கு... தபால்காரரை விசாரிங்க என்றார். சரி என்றவன் அதன் பின்னான வாழ்க்கைச் சிக்கல்கள்களில் சிதறி எல்லாம் மறந்தேன்... இதழுக்கு சந்தா அனுப்புதல் உள்பட.

பிரச்சினைகள் சூழ் உலகில் கில்லர்ஜி அண்ணாவைப் பார்த்து அவரின் தங்கை மறைவு குறித்துக் கூட கேட்கவில்லை... செல்வக்குமார் அண்ணனிடம் புதன்கிழமை வருகிறேன் என்று சொல்லி செல்ல முடியாத சூழல்... தமிழ்வாசியை மதுரையில் சந்திக்கிறேன் என்று சொல்லி மதுரையில் இருந்தும் பார்க்கவில்லை என்ற வருத்தம் இன்னும் மனசுக்குள்... கில்லர்ஜி அண்ணா தேவகோட்டையில் இருந்திருந்தால் சந்தித்திருக்கலாம். நான் ஊருக்கு கிளம்ப இருக்கும் அன்று பரம்பக்குடியில் இருக்கிறேன் மாலை சந்திப்போம் என்றார். நான் ஊருக்குப் போறேன் என்றதும் சரி போனில் பேசுவோம் என்று சொன்னார். ஆனால் மனைவியின் உடல்நிலை காரணமாக அன்றைய பயணம் பத்து நாட்கள் ஒத்திப்போடப்பட்டதை பிரச்சினைகள் சூழந்த நிலையில் யாருக்கும் தெரிவிக்கவில்லை என்பது என் தவறுதானே.

இங்கு வந்த பிறகு இன்னும் சில பிரச்சினைகள்... அவற்றில் எல்லாம் மூழ்கி முத்தெடுக்க முடியாமல் திணறிய நிலையில் சிற்றிதழ்கள் உலகம் மறந்தேன். அவரும் அழைக்கவில்லை... நானும் நினைக்கவில்லை. திடீரென ஒருநாள் வதிலை பிரபா அண்ணன் அவர்கள் பதிவின் மூலமாக உடல்நலமில்லாமல் துபை மருத்துவமனையில் இருப்பதாக அறிந்ததும் கனவுப்பிரியன் அண்ண்னுக்கு போன் செய்து விசாரிக்க, ஆமா உடல் நிலை சரியில்லாம  மருத்துவமனையில் இருக்கார் என்றார். எனக்கு மிகுந்த வருத்தம்... எப்படி இதழ்... இதழ்... என ஓடிய மனிதருக்கு என்னாச்சு...? என்ற குழப்பமான மனநிலை. பின்னர் என் பிரச்சினைகளின் பின்னேயான பயணத்தில் அவர் என்ன ஆனார்...? உடல் நலம் பெற்று பணிக்குத் திரும்பினாரா..? இல்லை ஊருக்குப் போய்விட்டாரா...? என்று சிந்திக்கவே இல்லை. ஊரில் போய் செட்டில் ஆகணும் என முன்பு ஒரு முறை சொன்ன நியாபகம்.

நேற்று அலுவலகத்தில் வேலை இல்லை... முகநூல் மேய்ந்தபோது அதே வதிலைப் பிரபா அண்ணன் அவர்கள் அவரின் இறப்பை பகிர்ந்திருந்தார். என்னால் நம்பவே முடியலை... நண்பரே என்னோட பிளாக்ல அதை வைக்கணும் இதை வைக்கணும் நீங்க ஹெல்ப் பண்ண முடியுமா? என மூன்று மாதம் முன்னால் கேட்டாரே... முதல் இதழின் அட்டைப் படம் எப்படியிருக்கு பார்த்துச் சொல்லுங்க...? என்று அனுப்பி வைத்தாரே... நிறைய இருக்கு அதை எல்லாம் பத்திரமாக பாதுகாக்க ஒரு ஹார்ட் டிஸ்க் வாங்கணும் என்றாரே... இன்னும் இன்னுமாய் நிறைய மனசுக்குள் சுழல கண்கள் கலங்கின. அவரின் சிற்றிதழ்கள் மேம்பாடு குறித்தான ஆசைகள் இனி என்னவாகும். சிலர் வதிலை பிரபா அண்ணாவை தொடரச் சொல்லி எழுதும் பதிவுகளை முகநூலில் பார்த்தேன். அவர் தொடர்ந்தால் சந்தோஷம்.

அன்பின் ஐயா கிரிஷ் இராமதாஸ் அவர்களே... ஏன் இந்த அவசரம்...? மனம் கனக்கிறது ஐயா... தாங்கள் என்னுடன் முகநூல் அரட்டையில் தட்டச்சிய வார்த்தைகளை இன்று காலையில் பார்த்தேனே... அவை அழியாமல் இருக்கின்றனவே ஐயா...

Image may contain: 1 person, text

ஐயாவின் பேரிழப்பால் பெரும் துயரில் ஆழ்ந்திருக்கும் அவரின் குடும்பத்தாருக்கு இறைவன் அமைதியைக் கொடுக்கட்டும்.

ஐயாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.

-'பரிவை' சே.குமார்

வியாழன், 18 டிசம்பர், 2014

மத மூடர்களே...

பிஞ்சுகளின் ரத்தம்
குடித்த மத மூடர்களே....

மனிதம் கொன்று
மதம் வளர்க்க
எந்த மதத்தில்
சொல்லியிருக்கிறது..?

அன்பை விதைக்கச்
சொன்ன இறைவன்
அழிவை ஆதரிப்பதாக
எப்போது சொன்னான்..?

தேவைகளுக்காக
போராட்டமா...
இல்லை
தேடி அழிக்கும்
போராட்டமா..?

உரிமைகளுக்காக
போராட்டமா...
இல்லை
உயிரை எடுக்கவே
போராட்டமா..?

எந்த மதமும்
மனித ரத்தம்
கேட்கவில்லையே..?

வாழ வேண்டிய
பிஞ்சுகளை
வாடச் செய்ய
எப்படி மனது
வந்தது..?

பிஞ்சுகளின்
கொஞ்சும் கண்கள்
கெஞ்சியும் கூட
நஞ்சு மனதில்
ஈரம் இல்லையா
முட்டாள்களே...?

கனவுகளைச் சுமந்த
வண்ணத்துப் பூச்சிகளை
ரத்த சேற்றில்
மிதக்க விட்ட மதம்
என்னடா மதம்..?

மதத்தின் பேரால்
செய்யும் செயல்களுக்கு
நியாயம் கற்பிக்க
ஒரு கூட்டம்...
அதை ஆதரிக்க
சில நாடுகள்...
வெட்கக் கேடு...!

கேவலம்...
ரத்த வாடையில்
மதம் வளர்க்க
நினைக்கும் மூடர்களே...
மனிதம் வளருங்கள்
மதம் நிலைக்கும்...
-'பரிவை' சே.குமார்.

திங்கள், 8 டிசம்பர், 2014

மனசு பேசுகிறது : குழந்தைகள் கவனம்


ழை நேரம்...

வீட்டுக்கு அருகில் தண்ணீர் தேங்கி இருக்கும்.

பூச்சி, பாம்புகள் ஊர்ந்து வரலாம்.

குழந்தைகளைப் பார்த்துக் கொள்வதில் கவனம் வேண்டும்.

அதுவும் குறிப்பாக நடக்க ஆரம்பிக்கும் குழந்தைகள் எங்காவது ஓடத்தான் நினைப்பார்கள்.

அவர்களுக்குத் தெரியாது என்ன கிடக்கும்... என்ன கடிக்கும் என்பது... அவர்களால் அதைச் சொல்லவும் முடியாது என்பது வேறு விஷயம்...

பள்ளிக்கு செல்ல ஆரம்பிக்கும் குழந்தைகளும் இப்படித்தான் இருப்பார்கள். ஒரு சிலர் ஓடுற பாம்பை பிடித்து விளையாண்டாலும் ஆச்சர்யமில்லை. எனவே குழந்தையின் மீது கவனம் வையுங்கள்.

இதை எதற்காகச் சொல்கிறேன் என்றால் ஒரு வருத்தமான நிகழ்வு... அம்மாவின் அசால்ட்டால் ஒரு இளம் குருத்து வளரும் முன்னே வாடிவிட்டது. இந்த வேதனையான நிகழ்வு எங்கள் அறை நண்பரின் குடும்பத்தில் நிகழ்ந்துள்ளது. அவரின் தம்பி மகனுக்குத்தான் இப்படி ஒரு மரணம்...

ஓடி ஆடும் பையன்... துறுதுறுப்பான பையன்... எல்லோரும் கொண்டாடும் பையன்... அதனால்தானோ என்னவோ தானும் கொண்டாட நான்கு வயதிற்குள் படைத்தவன் கூட்டிக் கொண்டு விட்டான் போலும்.

வாகனங்கள் அவ்வளவாக பயணிக்காத ஒரு சிறிய கிராமத்தில் அப்பத்தாவீடு, பெரியப்பா வீடு, சித்தப்பா வீடு என இரண்டு தெருவுக்குள் சொந்தங்கள் இருப்பதால் இங்கும் அங்கும் ஓடித் திரிந்தவன் அவன். எடுப்பார் கைப்பிள்ளையாய் எல்லோருக்கும் செல்லம்.

எப்பவும் போல் நேற்று முன்தினமும் சுற்றித் திரிந்திருக்கிறான். நாலு வயசுப் பையனை வெளியே சுற்ற விடுவதே தவறு என்பது ஏன் தெரியவில்லை அந்தத் தாய்க்கு. வெளியே சென்று வந்தவன் சோர்வாக இருக்கவும் சுத்திவிட்டு வந்ததால சோர்வாக இருக்கான் போலன்னு நினைத்து அவனுக்கு சாப்பாடு கொடுத்து படுக்க வைத்திருக்கிறார். தூங்காமல் கிடந்தவன் சிறிது நேரத்தில் வாந்தி எடுக்கவும் என்னமோ ஏதோ என்ற பதட்டமில்லாமல் எதாவது பூச்சி கீச்சி கடிச்சிருக்கும் என்று அருகில் இருக்கும் பூசாரியிடம் மந்திரித்து இருக்கிறார்.

அவன் உடம்பில் இருந்த விஷம் மந்திரத்துக்கு கட்டுப்படுமா என்ன... பையனின் நிலைமை இன்னும் மோசமாக உறவுகளிடம் சொல்லாமல் அவரது தம்பிக்கோ யாருக்கோ போன் செய்து அவர்கள் வந்து கூட்டிச் சென்று அரசாங்க மருத்துவமனையில் கொண்டு போய் காட்ட குழந்தை இறந்து விட்டது என்று சொல்லிவிட்டார்கள். என்ன செய்வது? அரசு மருத்துவமனை... இறந்து போன குழந்தையை கூறு போட்டுத்தான் கொடுப்போம் என்று சொல்லி விட்டார்கள். அரசாங்க மருத்துவமனைக்குச் சென்றதை தவறாகச் சொல்லவில்லை... நிலைமை ரொம்ப மோசம் என்று சொல்லும் போது தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கலாம் என்பதே எண்ணம். போஸ்ட் மார்டம் முடித்து நேற்றுத்தான் கொடுத்திருக்கிறார்கள். 

அம்மாவின் அசட்டையால் நான்கு வயது மகனை இழந்திருக்கிறார்கள். குழந்தை சோர்வாக இருக்கும் போது அதன் சட்டையைக் கழட்டி என்ன ஏது எதாவது பூச்சி கீச்சி கடிச்சிருக்கான்னு பாக்க வேண்டாமா? பூசாரியிடம் மந்திரிக்க வேண்டாம் என்று சொல்லவில்லை... இதுதான் கடித்தது என்று தெரிந்து மந்திரித்து இருந்தால் சரி... என்ன கடித்தது என்றே தெரியாமல் மந்திரிப்பது என்பது சரியானதா? இந்தக் காலத்தில் வீதிக்கு வீதி மருத்துவமனைகள் இருக்கும் போது மந்திரித்தல் தேவையா? பிள்ளை ரொம்பச் சோர்வாக இருக்கும் போது பக்கத்தில் இருக்கும் சொந்தங்களை விடுத்து தூரத்தில் இருக்கும் சொந்தத்துக்கு அழைப்பு விடுவது என்பது சரியானதா? என இங்கு நண்பர் புலம்பித் தீர்க்கிறார்.

மழலைப் பேச்சைக் கேட்டு மகிழந்த உள்ளம் இப்போ மயங்கிக் கிடக்கிறது. பெற்ற தகப்பனோ பதினைந்து நாளைக்கு முன்னால்தான் சௌதிக்கு அரபி வீட்டு டிரைவராக சென்றிருக்கிறார். விவரம் தெரிந்ததும் வர நினைத்து அரபியிடம் கேட்க, அவரோ செலவு தொகையைக் கொடுத்துவிட்டு முடித்துக் கொண்டு போ என்று சொல்லி விட்டார். எங்கள் அறை நண்பர் இங்கிருந்து பணம் புரட்டி தம்பிக்கு அனுப்ப, அரபி நேற்றுக் காலை அவசர அவசரமாக அவரின் விசாவை கேன்சல் செய்து இரவு விமானத்திற்கு ஏற்றிவிட்டுவிட்டார்.

இன்று காலை சென்னை வந்து... அங்கிருந்து பெரம்பலூர் போயி... அறுத்துப் போடப்பட்ட மகனை கண்ணாடிப் பெட்டிக்குள் பார்த்து கதறி, வழியனுப்பி வைத்து விட்டு அண்ணனிடம் அழுகிறார். என்ன செய்வது..? சொல்லும் ஆறுதல் வார்த்தைகள் இழந்த குழந்தையை மீட்டெடுக்குமா என்ன... வலிகள் மறக்கும் வலிமையை இறைவன் கொடுத்திருந்தாலும் இது மறக்க நினைக்கின்ற வலியா? மறக்கத்தான் முடியுமா? 

ஒரு உயிர் போனதற்கு யாரைக் குற்றம் சொல்வது... படரும் முன்னே பறித்த இறைவனைக் குற்றம் சொல்வதா? அல்லது பிள்ளையை பற்றி கவலை இல்லாத தாயைக் குற்றம் சொல்வதா? அல்லது பாலகன் என்று தெரிந்து கடித்து வைத்த பாம்பைக் குற்றம் சொல்வதா? வீட்டுக்கு ஓடிவரும் குருத்தை இனி இப்படி விடாதே எனச் சொல்லாத உறவுகளைக் குற்றம் சொல்வதா?இதில் யாரை குற்றம் சொல்லி என்ன செய்ய... அந்தப் பாலகம் பறந்து நாட்களில் மூன்று  முடிந்து விட்டது. அவன் ஓடி ஆடி விளையாண்ட வீதிகள் வெறிச்சோடிக் கிடப்பதை காணத்தான் முடியுமா..? பாம்பு கடித்திருக்கலாம் என்கிறார்கள்... என்ன கடித்தது என்பது அந்த பாலகனுக்குத்தான் தெரியும்... 

சம்பாரிச்சு பணம் அனுப்புகிறோம்... பிள்ளையை பார்த்துக் கொள்வதற்கு என்ன... அதைவிட வேறு வேலை என்ன இருக்கு என்று கேட்கிறார் நண்பர்... அவரின் கேள்வி சரிதானே... குடும்பம் விட்டு... நாடு விட்டு... இங்கு வந்து நாயாக வேலை பார்த்து... நல்ல உறக்கமின்றி... உணவின்றி... உடையின்றி குடும்ப நினைவுகளோடு நகரும் நாட்களில் எல்லாத்தையும் தொலைத்து வாழ்வது யாருக்காக...? எல்லாம் குடும்பத்திற்காகத்தானே... செலவுக்கு பணமில்லையா எவனிடமாவது வாங்கி அனுப்பிக் கொண்டுதானே இருக்கிறார்கள்... அப்புறம் என்ன..? தொலைக்காட்சி பார்த்தாலும் பிள்ளைகளை கண்கூடாக பார்க்க வேண்டாமா?

எத்தனை வேலை இருந்தாலும்... எவ்வளவு முக்கியமான வேலை இருந்தாலும் குழந்தைகளை தங்கள் அருகில் வைத்துக் கொள்ளுங்கள்.... இப்போ மழை நேரம்... தனி வீடாக இருந்தால் சுற்றிலும் செடி கொடிகள் இருந்தால் பூச்சிபட்டை வரத்தான் செய்யும். நாம்தான் கவனமாக இருக்க வேண்டும். அந்தக் குழந்தை இறந்த செய்தி கேட்டதில் இருந்து ரொம்ப வருத்தமாக இருக்கிறது.

வெளியில் விளையாடும் குழந்தைகளை கவனமுடன் பார்த்துக் கொள்ளுங்கள்... தண்ணிக்குள்ளோ, செடி கொடிக்குள்ளோ விளையாட அனுமதிக்காதீர்கள். நம் வாழ்வின் ஆதாரமே குழந்தைகள்தான்... அவர்கள் நமக்கு முக்கியம் என்பதைவிட நம் மூச்சே அவர்கள்தான் என்பதே உண்மை. எப்பவும் குழந்தைகளை கவனமாய் பார்த்துக் கொள்ளுங்கள்.

அந்தக் குழந்தையின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.

-'பரிவை' சே.குமார்.

வியாழன், 16 ஜனவரி, 2014

விஜய் டிவி நிகழ்ச்சி : பெண்களே வரம்பு மீறலாமா?

ன்று தொலைக்காட்சிகளும் பத்திரிக்கைகளும் இல்லாத இடமே இல்லை என்று சொல்லும் அளவுக்கு வளர்ந்திருக்கின்றன. இப்போதெல்லாம் பண்டிகை நாட்களில் தொலைக்காட்சிகள் சிறப்பு நிகழ்ச்சிகள் என்று அடிக்கும் கூத்துக்கு அளவே இல்லாமல் போய்விட்டது. 

இந்தப் பொங்கலுக்கு விஜய் தொலைக்காட்சியில் நடந்த கேவலமான ஒரு நிகழ்ச்சி குறித்து நம்ம முத்துநிலவன் ஐயா அவர்கள் தனது பகிர்வில் வருந்தியிருந்தார்கள். ஐயாவின் பகிர்வு பார்த்ததும் நானும் அந்த இணைப்பில் போய் பார்த்தேன். கேவலத்தின் உச்சம் அது. இன்று முகநூலில் கூட பல நண்பர்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார்கள்.



இந்த நிகழ்ச்சி பார்த்தபோது எனக்குத் தோன்றியது ஒன்றே ஒன்றுதான்... இவ்வளவு கேவலமாக ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடந்து கொள்ளும் இந்தப் பெண்களுக்கு குடும்பம் என்று ஒன்று இருக்கும்தானே... கூத்தடித்து விட்டுப் போனால் ஆஹா... மகளே குடும்பக் கௌரவத்தை காப்பாற்றிவிட்டாய் என  உச்சி முகர்ந்து திருஷ்டி சுற்றிப் போடுவார்களோ என்பதுதான்.

ஆணுக்குப் பெண் அடிமை இல்லை என்று சொல்கிறோம். உண்மைதான் இங்கு பெண்களை அடிமைப்படுத்திப் பார்க்க வேண்டும் என்ற நிலை எல்லாம் இப்போது இல்லை. இன்று எல்லாத் துறைகளிலும் பெண்கள் ஜெயிக்கிறார்கள்... ஜொலிக்கிறார்கள். இந்த வளர்ச்சி... வீட்டுக்குள் முடங்கிக் கிடக்காமல் பாரதி கண்ட புதுமைப் பெண்ணாக வீறு நடை போடும் இந்த எழுச்சி பாராட்டுதலுக்குரியது. 

உலகமெங்கும் பார்க்கப்படும் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இவ்வளவு கீழ்த்தரமாக படிக்கும் பெண்களால் நடந்து கொள்ள முடியுமா? முடியும் என்று நிரூபித்திருக்கிறது சிவகார்த்திகேயனை வைத்து விஜய் தொலைக்காட்சி வழங்கிய எங்க வீட்டுப் பிள்ளை என்ற பொங்கல் சிறப்பு நிகழ்ச்சி.

இந்தத் தொலைக்காட்சியில் அது இது எது என்ற நிகழ்ச்சி மூலம் பிரபலமாக சினிமாவுக்குள் போய் தொடர்ந்து மூன்று வெற்றிப்படங்களைக் கொடுத்து தமிழ்ச் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் சிவகார்த்திகேயன். அவரது உழைப்புக்கு கிடைத்த வெற்றி இது என்பது எல்லாரும் அறிந்ததே. தங்கள் தொலைக்காட்சி மூலமாக மிகப்பெரிய இடத்தை அடைந்த ஒருவரை வைத்து நிகழ்ச்சி நடத்தி தங்களது டி.ஆர்.பி ரேட்டிங்கை உயர்த்திக் கொள்ளச் செய்யும் நிகழ்ச்சிதான் இது என்பதும் எல்லாருக்கும் தெரியும். ஆனால் இந்த நிகழ்ச்சி மூலம் சிவகார்த்திகேயனை கேவலப்படுத்தியதுடன் நமது கலாச்சாரத்தையும் கழுவி ஊற்றிவிட்டார்கள்.

எத்தனையோ நல்ல நிகழ்ச்சிகளில் பெண்கள் இன்று கலக்கி வருகிறார்கள். ஆனால் இந்த நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயனுக்கு ஒரு பெண் பொங்கல் ஊட்டிவிட்டு விட்டு தனக்கும் ஊட்டிவிடு என்று அடம்பிடிக்கிறாள். இங்கு இவர்களை ஒருமையில் சொல்லவே தோன்றுகிறது. எனக்கு ஒருமையில் சொல்வதென்பது பிடிக்காத ஒன்றுதான் இருந்தும் அவர்களில் அநாகரீகச் செயலுக்கு மரியாதையாய் எழுத மனம் வரவில்லை. இன்னொருத்தியோ முறுக்கு மீசை வைத்துப் பார்க்கிறாள். ஒருத்தியோ இவற்றிக்கெல்லாம் மேலாக கன்னத்தைக் கிள்ள வேண்டும் என்று சொல்லி கிள்ளி... தொகுப்பாளினியில் வேண்டுதலுக்காக மீண்டும் ஒருமுறை கிள்ளுகிறாள். உடனே நான் மட்டும் கிள்ளினேன்... நீங்க என் கன்னத்தைக் கிள்ளுங்க என்கிறாள். அவரும் நாணிக் கோணி கிள்ளுகிறார்.

இதற்கெல்லாம் உச்சமாக அவர்கள் கேட்ட கேள்வி ஒன்று இருந்தது. அதற்கு சிவகார்த்திகேயன் சொன்ன பதிலும் அதற்கு அவர்களும் தொகுப்பாளினியும் அளித்த பதில் என ஆபாசத்தின் உச்சம். அதை இங்கு சொல்ல விரும்பவில்லை. நிகழ்ச்சி பார்த்தவர்களுக்குத் தெரியும். பார்க்காதவர்கள் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். இந்த சிறப்பு மிக்க கேள்வியை கேட்ட பெண் சிவகார்த்திகேயன் சரியான பதிலைச் சொல்லவில்லை எனச் சொல்லி அதற்குத் தண்டனையாக தன்னைத் தூக்கிக் கொண்டு சுற்றி வர வேண்டும் என்று விடாப்பிடியாக நிற்கிறாள். அவர் மறுக்க உடனே ஒரு பனியனில் லிப்ஸ்டிக் உதடை பதிய வைத்து அதை அணிந்து கொள்ளச் சொல்கிறார்கள். அபத்தத்தின் அரங்கேற்றம் இது.


சிவாவைப் பொறுத்தவரை வளர்ந்து வரும் நடிகர் என்றாலும் தாய் வீட்டில் செய்யச் சொன்ன நிகழ்ச்சி என்பதால் மனம் வருத்தத்துடன் செய்திருக்கலாம் என்று தோன்றினாலும் இதெல்லாம் செய்வோம் என நிகழ்ச்சிக்கு முன்னரே அவரிடம் சொல்லியிருப்பார்கள். அப்படிச் சொல்லியிருந்தால் ஒரு குழந்தைக்கு தந்தையான அவர் எப்படி இதற்கு ஒத்துக் கொண்டார். ஆனால் அவரும் என்னய வீட்டுக்குப் போக விடமாட்டீங்க போலவேன்னு எல்லாம் சொன்னார் என்றும் நாசூக்காக மறுத்தார் என்றும் நாம் அவருக்கு ஆதரவாகப் பேசலாம். சின்னக் குழந்தைகள் என்றால் பரவாயில்லை குமரிகளுடன் கூத்தடிப்பதற்கு நடிகனுக்கு சுதந்திரம் இருக்கிறது என்று நினைத்து கூத்தடித்தாரோ?

நடிகன் என்பவன் மனிதன் என்பதை ஏன் மறக்கிறீர்கள். ஒரு கூட்டம் நடிகனுக்கு கட் அவுட் வைத்து பாலாபிஷேகம் பண்ணிக் கொண்டு திரிகிறது. அதற்கு நடிகர் ஒருவரும் பாராட்டுப் பத்திரம் வாசிக்கிறார். குடும்பம் குழந்தை குட்டி என்று ஆனாலும் இதுபோல் நடிகனின் பின்னால் அலையும் கும்பலை என்னவென்று சொல்வது? இதே நிலைதான் இன்று இந்தப் பெண்கள் மத்தியிலும்... அவனைப் பிடிக்கும் என்றால் அவனது படத்தைப் பாருங்கள்... ரசியுங்கள்... வேண்டாம் என்று சொல்லவில்லை... தெரு நாய்களாக பொதுவெளியில் நடக்காதீர்கள். அசிங்கம் என்பது உங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் அது உங்கள் வாழ்க்கையை அடியோடு பிய்த்துப் போட்டுவிடும்.

உலகமே பார்க்கும் ஒரு நிகழ்ச்சியில் கட்டிப்பிடிப்பதும் முத்தமிடுவதும் என்பது நம் பண்பாடா என்ன... இப்படி கூத்தடித்ததை நீங்கள் பெருமையாகச் சொல்லிக் கொள்ளலாம்... உங்கள் உறவுகளும் சந்தோஷப்படலாம். திருமண வாழ்க்கைக்குப் பின் உங்கள் துணை இந்த கிளிப்பிங்கைப் பார்த்தால் என்னவாகும் யோசித்தீர்களா? இதெல்லாம் இருந்தால்தான் வாழ்க்கை சுவராஸ்யமாக இருக்கும் என்று அடித்துச் சொன்னீர்கள் என்றால் நாளை உங்கள் வாழ்க்கை நடுவீதியில் அல்லவா நிற்கும். சிந்தியுங்கள் பெண்களே... வெற்றி முழக்கமிடும் செயல்களில் முன் நில்லுங்கள்... நடிகனின் பின்னால் நாயாக அலையாதீர்கள்...இன்றைய சந்தோஷத்தைப் பார்க்காதீர்கள் நாளைய வாழ்க்கையையும் சேர்த்துப் பாருங்கள்.

இதே விஜய் தொலைக்காட்சியில் முன்பொருமுறை திவ்யதர்ஷிணி கமலஹாசனிடம் முத்தம் வேண்டும் என முத்தம் வாங்கினார். இங்கு நிகழ்ச்சியை நடத்தும் பெண்களுக்கு வேண்டுமானால் பணத்துக்காக எப்படி வேண்டுமானாலும் பேசலாம். ஆனால் கலந்து கொள்ளும் பெண்கள் வரம்பு மீறாமல் இருப்பதுதான் நல்லது. எந்த ஒரு காரியத்தையும் செய்துவிட்டு பின்னால் வருந்தி பலன் இல்லை. 


சில தினங்களுக்கு முன் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளர் பாடும்போது பார்வையாளர்கள் வரிசையில் இரண்டு குடும்பப் பெண்கள் ஆட்டம் போட்டார்கள். நிகழ்ச்சிக்காக சொல்லி ஆடினார்களா என்று தெரியாது. நடுவராக வந்திருந்தவர் சூப்பரா ஆடுனீங்கம்மா... குட் எண்டர்டெயின்மென்ட்... நான் ரொம்ப ரசிச்சேன் என்றார். அவர் ரசிக்கலாம்.... ஆனால் இதை பார்க்கும் உங்கள் சுற்றமும் நட்பும் கண்டிப்பாக ரசிக்காது. 

பெற்றோர்களே உங்கள் குழந்தைகளை நல்ல செயல்களில் தட்டிக் கொடுங்கள்... இது போன்ற கேவலமான செயல்களுக்கு தடை போடுங்கள்... ஒரு போதும் ஊக்குவிக்காதீர்கள்... தொலைக்காட்சிகளே தயவுசெய்து உங்கள் டி.ஆர்.பிக்காக நமது கலாச்சாரத்தையும் கன்னியத்தையும் கொச்சைப்படுத்தாதீர்கள்.

முத்து நிலவன் ஐயா அவர்களின் இடுகையைப் படிக்க  இங்கே கிளிக் பண்ணுங்கள்.

நம்மை உலகுக்கு காட்டிய அந்த உன்னத நிகழ்ச்சியைப் பார்க்க இங்கே கிளிக் பண்ணுங்கள்..

-'பரிவை' சே.குமார்.

ஞாயிறு, 30 ஜூன், 2013

மலேசியாவில் தமிழரை சித்திரவதை செய்த தமிழர்..!



காரைக்குடி வட்டத்தினை சேர்ந்தவர் கருப்பையா. இவர் மலேசியாவில் உள்ள தமிழருக்கு சொந்தமான உணவகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக புரோட்டா மாஸ்டராக பணிபுரிந்தார். இவருக்கு கடந்த ஆறு மாதமாக சம்பளம் வழங்கப்படாததால் தான் இந்தியா திரும்பவேண்டும் என்று சொல்லி சம்பளம் கேட்டார். ஒரு நாள் (5/6/13) வேலைக்குப் போகாமலும் இருந்துவிட்டார். 

ஆத்திரமுற்ற முதலாளி மறுநாள் (6/6/2013) தமது மற்றொரு அலுவலகத்திற்கு வரசொல்லி "நீதான் எனது பணம் Rm250000 (சுமார் 50 லட்சம்) திருடிவிட்டாய் அந்த பணத்தினை தந்தால் உன்னை அனுப்பிவைக்கிறேன்" என்று சொன்னாராம். அதிர்ச்சியுற்ற கருப்பையா இதனை மறுக்கவே அங்கு வைத்து அடியாட்கள் கொண்டு அடித்திருக்கிறார். 

மேலும் கருப்பையாவை ஒரு வீட்டிற்கு கொண்டு சென்று சங்கிலியால் கால் கைகளை கட்டிப்போட்டு தினசரி 21 நாட்கள் உடலில் கத்தியாலும், சுடுநீராலும், கம்பாலும் அடியாட்கள் கொண்டு தாக்கியிருக்கிறார். 

கருப்பையாவின் தந்தைக்கும், மலேசியாவில் உள்ள கருப்பையாவின் நண்பர்களுக்கும் போன் செய்து ஐம்பது லட்சம் கொடுத்தால் கருப்பையாவை விட்டுவிடுவதாகவும் மிரட்டியிருக்கிறார். எங்கிருந்தும் பணம் கிடைக்காது போகவே மிகுந்த சித்திரவதைக்கு உள்ளான கருப்பையாவை வெளியில் விட்டால் ஆபத்து என்றெண்ணி கொன்றுவிட முடிவு செய்திருக்கிறார் இந்த மலேசியத் தமிழன்.

இந்நிலையில் 27/6/2013 அன்று வரை சங்கிலியால் தனிமையில் பூட்டப்பட்டிருந்த கருப்பையா அன்று மாலை தனது உயிர் போய்விடும் நிலையில் கூக்குரலிட்டும் வீட்டின் கதவை முட்டி மோதியும் சத்தம் போட்டுள்ளார். சத்தத்தினை கேட்ட பக்கத்து வீட்டினர் வீட்டை உடைத்து கருப்பையாவை தப்பிக்க வைத்துள்ளனர்.

இன்று 28/6/2013 அன்று காலை இவரது தந்தை அழகு என்பவர் சிவகங்கை மாவட்ட ஆட்சியாளரிடம் தனது மகனை காப்பாற்றும்படி மனு கொடுத்தார். மலேசியாவில் உள்ள "தமிழர் பண்பாட்டு மனிதநேய மன்றத்தினர்" அவரை பத்திரமாக மீட்டு இந்திய தூதரகத்தில் ஒப்படைத்ததோடு காவல்நிலையத்திலும் புகார் செய்துள்ளனர். 

ஆனால் இந்த புகார் குறித்து இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் உடனடியாக தமிழக முதல்வரும், மத்திய அரசின் அமைச்சர்களும் உடனடியாக தலையிட்டு மலேசிய அரசினை குற்றவாளி மீது நடவடிக்கை எடுக்கும்படியும், அவர் நீதியிலிருந்து தப்பித்துவிடாமல் உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரியும் வேண்டுகோள் விடுக்க வேண்டும்.

மலேசிய அரசினை உடனடி நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழக அரசும், மத்திய அரசும் தலையிட வேண்டும்.

நன்றி : காரைக்குடி மக்கள் மன்றம்

-'பரிவை' சே.குமார்

புதன், 20 பிப்ரவரி, 2013

மன்னித்துவிடு பாலச்சந்திரன் - கார்ட்டூனிஸ்ட்.பாலா


2009 ஆரம்ப நாட்கள் ஈழப்போர் உச்சத்தில் இருந்த நேரம். அங்கிருந்து வரும் புகைப்படங்கள் விடீயோக்கள் போரின் கொடூரத்தை சொன்னது. அதில் கர்ப்பிணி ஒருவரின் வயிறு கிழிந்து அவரின் சிசுவின் பிஞ்சு கால் விரல்கள் வெளியே தொங்கிக்கொண்டிருந்த புகைப்படம் ஒன்றும் இருந்தது. 

என்னால் மறக்கவே முடியாத படம் அது. அப்போது என் மனைவியும் எழுமாத கர்ப்பிணியாக இருந்தார். அதனாலயே என்னை அந்தப் படம் மிகுந்த சித்திரவதைக்குள்ளாக்கியிருந்தது. அந்த சிசுவின் கால்விரல்கள் பிறந்திராத என் குழந்தையாக என்னைச் சித்திரவதை செய்தது. 

இன்றளவும் சிலபேர் மீது எனக்கு வன்மம் குறையாமல் இருப்பதற்கு அந்தப் படமும் ஒரு காரணம். 

இனிமேலும் தொடர்ந்து ஈழத்திலிருந்து வரும் புகைப் படங்களைப் பார்த்தால் மனப்பிறழ்வுக்குள்ளாகிவிடுவோம் என்ற அச்சத்தின் காரணமாக அவைகளைப் பார்ப்பதை தவிர்த்துவிடுவேன். 



சில மாதங்களுக்கு முன்பு மார்பில் துப்பாக்கியால் சுடப்பட்டுக் கொல்லப்பட்ட பாலச்சந்திரனின் படம் வெளியாகியிருந்தது. இப்போது சுட்டுக்கொல்லப்படுவதற்கு முன் உயிரோடு இருக்கும் பாலச்சந்திரனின் படம் வெளியாகியிருக்கிறது. 

தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது.. தனக்கு என்னாகும் என்பது பற்றியெல்லாம் ஏதும் அறிந்திராத அந்தப் பாலகன் ராணுவம் கொடுத்த பிஸ்கெட்டை சாப்பிட்டுக்கொண்டிருக்கிற அந்தப் புகைப்படத்தை பார்த்த தருணத்திலிருந்து 2009 காலகட்டங்களில் ஏற்பட்ட மன உளைச்சல் இன்று வந்தது. கொல்லப்பட்ட பாலச்சந்திரனின் படத்தை விடப் பிஸ்கெட் சாப்பிட்டுக்கொண்டு உயிரோடு அமர்ந்திருக்கும் இந்தப் படம் எனக்கு மிகுந்த வலியை கொடுக்கிறது.. 
அதுவும்.. அந்த வெறித்தக் கண்கள்... பாவிகளே.. எப்படி மனசு வந்தது.. அந்த குழந்தையை சுட்டுக்கொல்ல..

ஒரு சிறுவனைக்கூட விட்டு வைக்க முடியாதளவுக்கு வன்மத்தோடு இருக்கும் ஒரு இனவெறி அரசுடன் தமிழர்கள் சேர்ந்து வாழ வேண்டும் என்று இப்போதும் கூறி அறிவுஜீவிகள் சிலர் தங்கள் வாழ்வை செழிப்பாக்க கூடும். 

தலைவர் வருவார்.. ஐந்தாம் கட்ட ஈழப்போர் வெடிக்கும்.. என்று செத்துப்போன உங்களை வைத்து சிலர் பிழைப்பும் நடத்தக்கூடும். 

தம்பி.. உன் தந்தையிடம் சொல்.. இவர்களுக்கு மத்தியில் நாம் தமிழர்களாகப் பிறந்ததே அசிங்கம் என்று.. 

மன்னித்துவிடு பாலச்சந்திரன்.. 
நாங்கள் கையாலாகாத தமிழர்கள்.. 


நன்றி:  கார்ட்டூனிஸ்ட்.பாலா

-'பரிவை' சே.குமார்

திங்கள், 6 டிசம்பர், 2010

தமிழன் என்று சொல்லடா..!



"தமிழன் என்று சொல்லடா..!
தலை நிமிர்ந்து நில்லடா..!!"

நாங்கள் தமிழர்கள்... நாங்கள் வாழ்வதைவிட பலரை வாழ வைப்பவர்கள்... என்றுமே நாங்கள் உயரத்தில் இருக்க ஆசைப்பட்டதில்லை... உயரத்துக்கு கொண்டு செல்லும் ஏணியாய்த்தான் இருந்திருக்கிறோம்... இன்னும் இருப்போம்...

எங்கள் சாதனைகளை... மன்னிக்கவும் நாங்கள் எதையும் சாதித்ததில்லை அப்புறம் எப்படி சாதனைகள் என்று வரும். அதனால்... எங்கள் செய்கைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.... எனவே சற்றே உரக்கச் சொல்லுங்கள்...

"தமிழன் என்று சொல்லடா..."


* எங்கிருந்து வந்தார்கள் என்று நாங்கள் யோசிப்பதே இல்லை... அவர்களை வாழ வைத்து வேடிக்கை பார்ப்பது மட்டுமே எங்கள் வாடிக்கை...

* ஐயாவின் குடும்பம் ஆனந்தமாய் ஆள அடிப்பொடிகளாய் கொடிபிடித்து கோட்டைக்கு வெளியே கோவணத்துடன் பிரியாணி சாப்பிடும் பிரியமானவர்கள் நாங்கள்.

* அம்மா கொடநாடு போனால் என்ன கொலரடோ போனால் என்ன எப்போது வந்து எழுதி வைத்து படித்தாலும் மொட்டை வெயிலில் அமர்ந்து பள்ளிக் குழந்தைகளாய் பாடம் கேட்கும் பாசக்காரர்கள் நாங்கள்.

* இலங்கையில் தமிழன் செத்தால் என்ன... வாழ்ந்தால் என்ன... அதனால் அரசியல் நடத்தும் கதர் துண்டுகளின் காவடி சுமக்கும் பக்தர்கள் நாங்கள்.

* அம்பேத்கர் என்ற திரைப்படம் வந்ததா என்று வாய் பிளக்கும் நாங்கள் எந்திரன்களின் வெள்ளிவிழாவில் அபிஷேகம் செய்யும் அர்ச்சகர்கள் நாங்கள்.

* கோவிலுக்குப் போக நினைக்காதவர்கள்... ஆனால், குஷ்புவின் பெரிய மனசுக்காக கோவில் கட்டிய கொத்தனார்கள் நாங்கள்.

* பெற்றோரை எண்ணிப் பார்க்க நேரமின்றி நடிகனை காண காத்திருந்து அவன் பின்னே ஓடி உயிரைக் கொடுக்கும் வள்ளல்கள் நாங்கள்.

* கேரளத்து சேட்டன்களையும் பைங்கிளிகளையும் தலையில் தூக்கி வைத்து ஆடும் தாயுள்ளம் கொண்டவர்கள் நாங்கள்.

* தமிழன் கிறுக்கன் என்று சொன்னாலும் சிரித்துக் கொண்டே சொன்னவனை தூக்கி ஆடும் பரமாத்மாக்கள் நாங்கள்.

* கோடிகள் செலவழித்து சோறு போட்டால் யார் வீட்டுக் காசு என்று யோசிக்காமல் இன்னும் கொஞ்சம் ரசம் என்று கட்டுபவர்கள் நாங்கள்.

* ஊழல் செய்தவனை சாதியின் பெயரால் காப்பாற்ற நினைக்கும் கூட்டத்தில் குந்தி அமர்ந்து குதிப்பவர்கள் நாங்கள்.

* காவிரித் தண்ணீருக்காக ஐயா எழுதும் கடிதமும் அதற்குப்பின் முரசொலி கவிதையும் கண்டு சந்தோஷத்தில் கூத்தாடும் கூத்தாடிகள் நாங்கள்.

* காவிரி பிரச்சினையை வருண பகவான் தீர்த்தாலும் கடித்தத்தின் பலனால் தண்ணீர் திறக்கப்பட்டது என்றால் அடைமழையிலும் குடை மறந்து கை தட்டுபவர்கள் நாங்கள்.

* பாஸ்மார்க் வாங்கவில்லை என்றாலும் டாஸ்மாக் விடுமுறை என்றால் சந்துக்குள் சரக்கு வாங்க வரிசையில் நிற்கும் வல்லவர்கள் நாங்கள்.

* சிம்ரனின் இடையில் சிலகாலம்... தமன்னாவின் நடையில் சிலகாலம்... என காலத்தை கழிக்கும் கயவர்கள்... மன்னிக்கவும் கவிஞர்கள் நாங்கள்.

* குடும்பத்தை நினைக்க நேரமில்லாமல் மாதவனை மேடியாகவும் சிம்புவை சொம்புவாகவும் சுமப்பவர்கள் நாங்கள்.

* காசுக்கும், பிரியாணிக்கும் ஓட்டை விற்கும் உலகமகா அயோக்கி... மன்னிக்கவும்... மறுக்கா தப்பா டைப்பிட்டேன்... உலகமகா உத்தமர்கள் நாங்கள்.

* பக்கத்து வீட்டுக்காரருடன் நட்புறவு என்றால் என்ன என்று தெரியாத போதிலும் ஓபமா, மன்மோகன் நட்பு குறித்து ஓசி டீயில் ஒரு மணி நேரம் விவாதிப்பவர்கள் நாங்கள்.

* ஹாக்கியை நோக்காமல் கிரிக்கெட்டை தேசிய விளையாட்டாய் ஆக்கிய பெருமையில் அதிக பங்குதார்கள் நாங்கள்.

* எவனுக்காகவோ இறக்கும் இளைஞனுக்கு அவன் கொடுக்கும் பிச்சைக்காசை நோட்டீஸ் அடித்து விளம்பரப்படுத்தும் பொதுச்சுவர் நாங்கள்...




'எம் பெருமை இம்புட்டுத்தான்... எங்கப்பன் பெருமை கப்பல்ல வருது' அப்படின்னு எங்கள் பெருமையை சொல்லிக் கொண்டே போகலாம். அதெற்கெல்லாம் நேரமில்லை... வள்ளுவர் சிலைக்குப் பக்கத்தில் அனுஷ்காவிற்கு சிலை வைப்பதற்கும் அதன் திறப்பு விழாவிற்கு வருகை தர தானே முன்வந்து ஒத்துக் கொண்ட தானைத் தலைவர் தமிழகத்தின் நிரந்தர.... அவரிடம் விழா நிகழ்வில் பாராட்டு விழா ஒன்றை இணைப்பது குறித்து பேசவும் வேலையிருப்பதால் தமிழர்களின் சார்பாக சிறு குழுவை தலைமை ஏற்று அழைத்துச் செல்ல இருப்பதால் விடை பெறுகிறேன்....

அட அங்க யாருப்பா... அதுகுள்ள நோட்டீஸை எடுத்துக்கிட்டு அடை மழையில ஒட்டப் போறது.... மழை விடட்டுமப்பா... பாசக்கார பயபுள்ளங்க.... என்னைக்குத்தான் திருந்தப் போகுதே தெரியலை...

அப்ப வரட்டுங்களா....? தேர்தலப்போ பணம் வாங்க பக்கத்து பக்கத்துல நிக்கிற மாதிரி இருந்தா மத்ததை பேசிக்கலாம்... மறுக்கா ஒரு தடவை எல்லாரும் சத்தமா சொல்லுங்க...

"தமிழன் என்று சொல்லடா.... தலை குனி..."

அட யாருப்பா பாட்டை மாத்துறது... தேசிய கீதம் பாடும் போது தெரியலைன்னா வாய மட்டும் தொறந்து வச்சிருக்க மாதிரி நில்லுப்பா... மத்த ஆளுங்க கரெக்டா சொல்லுங்க...

நேரமாச்சி... ஐயா... அனுஷ்கா வூட்டுக்கு வேற போகனுமின்னாரு மறந்துட்டேன்... குவாட்டா... என்ன எளவு இது அடிக்கடி மன்னிக்க போட வைக்கிது... வரட்டாடாடா.....


-'பரிவை' சே.குமார்.

படங்கள் உதவிய கூகிளுக்கு நன்றி

வியாழன், 9 செப்டம்பர், 2010

இதயமே... இதயமே...

தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை தக்கவைத்துக் கொண்டிருந்தவர் முரளி. ரஜினி, கமல், விஜயகாந்த் என முன்னணிகள் மத்தியில் வெற்றிப்படங்களை கொடுத்தவர்களில் முரளியும் ஒருவர்.

பிறந்தது கர்நாடகம் என்றாலும்  தமிழ்ப்படங்களில் மட்டுமே நடித்தார். வேறு மொழிப்படங்களில் நடிக்கவில்லை. அம்மா தமிழ் நாட்டவர் என்பதால் தமிழ்நாட்டை தாய் நாடாக நினைத்தவர். தனது குடும்பம் பற்றியோ தன்னைப் பற்றியோ தவறான செய்திகள் வராமல் வாழ்ந்தவர்.

தமிழில் 1984ஆம் ஆண்டு சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் கே.பாலசந்தர் இயக்கத்தில் உருவான பூவிலங்கு படத்தில் அறிமுகமானார். இந்தப் படம் சூப்பர் ஹிட் ஆனதைத் தொடர்ந்து வெற்றி நாயகனாக வலம் வந்தார்.

தான் நடிக்கும் கதாபாத்திரம் என்னவோ அதை அப்படியே தனது நடிப்பில் கொண்டு வந்தவர் முரளி என்றால் மிகையாகாது. நடிகர் மோகன் படங்களில் பாடல்கள் எப்படி ஹிட் ஆகுமோ அது போல் இவரது படப் பாடல்களும் அனைவரும் ரசிக்கும்படி அமைந்தன.

பெரும்பாலான படங்களில் கல்லூரி மாணவராகவே நடித்துள்ளார். தனது மகன் அறிமுகமான பாணா காத்தாடி படத்தில் கௌரவ வேடத்தில் தோன்றினார். அதில் என்ன கதாபாத்திரம் தெரியுமா? மருத்துவக் கல்லூரி மாணவர். அதில் அவர் பேசும் வசனத்தில் "நான் இதயம் ராஜா, எம்.பி.பி.எஸ். நான் காம் ஆண்டு படிக்கிறேன்" என்பார். "இன்னமா காலேசு படிக்கிறாரு" என்று ஒருவன் சொல்வான். வயதானதே தெரியாத நடிகர்.

46 வயது மரணிக்கக் கூடிய வயதா..?. 'இதயமே... இதயமே... உன் மௌனம் என்னைக் கொல்லுதே..' என்று பாடி நடித்தவர், இதயவலியால் மரணமடைந்தார் என்னும் போது நமக்கு மனசு வலிக்கிறது.

மகன் நடிக்க வந்ததும் ஓய்வெடுக்க நினைத்திருப்பார் போல, ஆனால் நிரந்தர ஓய்வெடுப்பார் என்று குடும்பத்தார்கள் நினைத்திருக்க மாட்டார்கள்.

பூவிலங்கு, பகல் நிலவு, புது வசந்தம், நம்ம ஊரு பூவாத்தா, சாமி போட்ட முடிச்சு, இதயம், சின்ன பசங்க நாங்க, என்றும் அன்புடன், அதர்மம, என் ஆசை மச்சான், காலமெல்லாம் காதல் வாழ்க, பொற்காலம், காதலே நிம்மதி, தினந்தோறும், தேசிய கீதம், இரணியன், ஆனந்தம், கடல் பூக்கள், சுந்தரா டிராவல்ஸ் போன்ற படங்களை முக்கியமானவையாக சொல்லலாம்.

முரளி ஏராளமான விருதுகளை பெற்றிருந்தாலும் அவர் நடித்த கடல் பூக்கள் படத்துக்காக 2001ஆம் ஆண்டு தமிழக அரசின் விருது பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

எம்.பி.பி.எஸ். படித்துள்ள தனது மகளுக்கு மூன்று நாட்களுக்கு முன் சிறப்பான முறையில் நிச்சயதார்த்தம் செய்த முரளி அவரது திருமணத்தை கோலாகலமாக நடத்தத் திட்டமிட்டிருந்தாராம். ஆனால் அவரை அப்படி ஒரு சந்தோஷத்தை பார்க்க உனக்கு கொடுப்பினை இல்லை என்று காலன் கூட்டிச் சென்று விட்டான்.


நேற்றிரவு சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் நெஞ்சுவலிக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட முரளி இன்று காலை பிணமாகத் திரும்பினார்.

அவரது உடலுக்கு திரையுலக பிரமுகர்கள், உறவினர்கள், நண்பர்கள், ரசிகர்கள், ரசிகைகள் என தமிழகமே திரண்டு வந்து அஞ்சலி செய்கிறது. நாளை இந்தக் கலைஞனின் உடல் பெசண்ட் நகர் மின் மயானத்தில் எரியூட்டப்படுகிறது.

முரளிக்கு அஞ்சலி செலுத்திய சிவக்குமார், "முரளி வயசே ஆகாதவர். அவருக்கு மரணம் என்றால் அந்தக் கடவுளைத்தான் சபிக்க வேண்டும்" என்றார். அது உண்மையே...

முரளியின் மரணத்தால் வாடும் அவரது குடும்பத்துக்கு ஆறுதல் சொல்வதுடன் முரளி என்ற மகா கலைஞனின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம்.

முரளி நீங்கள் மறைந்தாலும், பொட்டு வைத்த வட்ட நிலாவிலும்... ஈரமான ரோஜாவேயிலும்... இன்னும் எத்தனையோ கீதங்களில் என்றும் எங்கள் மனதில் வாழ்ந்து கொண்டுதான் இருப்பீர்கள்.

-'பரிவை' சே.குமார்.

செவ்வாய், 7 செப்டம்பர், 2010

மனசின் பக்கம் - III

பேராசை பெருநஷ்டம்:

இந்த வார 'டீலா நோடீலா' நிகழ்ச்சியில் ஒரு பெண்மணி கலந்து கொண்டார். அவரது கணவர் வர்மக்கலை மூலமாக நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதாகவும் இதில் கிடைக்கும் பணத்தைக் கொண்டு அந்த தொழிலை மேம்படுத்த இருப்பதாகவும் சொன்னார். இலவசமாக மருத்துவம் என்ற அவர்களது நல்ல மனதுக்கு வாழ்த்துக்கள். ஆனால் நிகழ்ச்சியில் நடந்தது என்ன தெரியுமா?

ஆரம்பத்தில் அந்த அம்மா மிகப்பெரிய தொகை இருக்கும் பெட்டிகளை திறந்தார்கள். இருந்தும் அடுத்து வந்த சுற்றுகளில் நல்ல முன்னேற்றம் சிறு சிறு தொகைகள் வந்தன. அவருக்கான டீல் தொகையும் கூடி வந்தது.

கடைசிச் சுற்றுக்கு முந்தைய சுற்று முடிவில் அவருக்கு 17 லட்சமும் சில ஆயிரங்களும் பேங்கர் என்று சொல்லி அழைபேசியில் பேசுபவரால் டீலாக வைக்கப்பட்டது. இதற்கு நோடீல் கொடுத்தால், இருக்கும் இரண்டு பெட்டிகளில் அவரது கையில் இருக்கும் பெட்டியில் என்ன தொகையிருக்கிறதோ அது கிடைக்கும்.

அதுவரை விளையாண்டது போக மீதம் இருந்த தொகையோ ரூ.500 மற்றும் 50 லட்சம் மட்டுமே. பார்வையாளர்கள் வரிசையில் இருந்து டீல் என்ற குரல்கள் கேட்கத் துவங்கின. அவரது மாமியார் என்று நினைக்கிறேன், அவரும் போதும்மா என்கிறார். ஆனால் கணவன் மனைவிக்கு 50 லட்சம் கிடைத்தால் நல்லாயிருக்கும் என்ற ஒரு நப்பாசை.

இருவரும் கூடி ஆலோசித்தனர். கணவன் ஒரே முடிவாக நோடீல் கொடு என்றார். மனைவி கடிகார பெண்டுலமானர். இதுவா அதுவா என்ற குழப்பத்தில் இருந்தார். பின்னர் கணவனின் அன்புக் கட்டளை(?)க்கு இணங்கி நோடீல் கொடுத்துவிட்டார்.

தொலைக்காட்சிகளுக்கே உரிய சில பல நாடகங்களுடன் பெட்டியை திறந்தால் கேலரியில் உள்ள பெட்டியில் 50 லட்சம் இருக்க, அவரது பெட்டியில் வெறும் 500 ரூபாய் மட்டுமே. பின்னர் அழுகைகள், ஆத்திரங்கள் எல்லாம் வந்தன.

17 லட்சங்கள் எங்கே..? 500 ரூபாய் எங்கே..? மக்கள் சேவை செய்ய நினைத்தவர்கள் கிடைத்தது போதும் என்று போயிருந்தால்... 17 லட்சம் கையில்...  அவர்களது பேராசைக்கு கிடைத்த பரிசு... வெறும் 500 தானே.

கணவருக்கு வீட்டில் போய் என்ன கிடைத்திருக்கும் என்பது எல்லாருக்கும் தெரியும். இந்த சம்பவம் வாழ்நாளெல்லாம் அவர்களுக்குள் பிரச்சினையை ஏற்படுத்தாது என்பது என்ன நிச்சயம்?

போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து..!

*****

மனித நேயமற்ற அரக்கன்:

எங்களுக்கு சமையல் செய்து கொடுத்துவிட்டு இரவு வேலைக்கு செல்லும் கிளினிங் கம்பெனி அண்ணன் ஒருவர், அபுதாபி வந்து ஏறத்தாழ நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டது. எனவே ஊருக்கு செல்ல கடந்த மூன்று மாதமாக கம்பெனியில் கேட்டுக் கொண்டிருந்தார். அவர்களும் இழுத்தடித்தார்களே தவிர, விடுப்பு அளிக்க ஏனோ அவர்களுக்கு மனம் வரவில்லை.

அவருக்கு ஆறு மாதம் விடுப்பு இருந்தாலும் அவரது விசா டிசம்பரில் முடிவடைவதால் மூன்று மாதத்தில் வரவேண்டிய நிலை. அதனால் அவர்களிடம் தினமும் நச்சரிக்க, ஒரு கட்டத்தில் அவரது மேற்பார்வையாளர், 'எனக்கு ஒண்ணுமில்ல... நீ பெரிய ஆளுக்கிட்ட பேசு'ன்னு சொல்லிட்டு பங்களாதேஷ்க்கு ஆள் எடுக்க பொயிட்டான். இவரும் கம்பெனியில் பேச அவர்களும் போகச் சொல்லியாச்சு.

இங்கும் விமான டிக்கெட் கம்பெனிதான் கொடுக்க வேண்டும் என்ற விதி உண்டு. ஆனால் சில கம்பெனிகள் கொடுப்பதில்லை. (எங்க கம்பெனியிலும் இல்லை) அவரிடம் டிக்கெட் எடுத்துக் கொண்டு வந்து காட்டிட்டு பாஸ்போர்ட் வாங்கிக்க என்று சொல்லியுள்ளார்கள். ( டிக்கெட் தொகை அவர்கள் கொடுத்தது போல் கணக்கில் காட்டத்தான் டிக்கெட்டுடன் வரச்சொன்னது).

அந்த அண்ணனும் இன்று இரவு சென்னை செல்லும் விமானத்தில் டிக்கெட் எடுத்து மகளுக்கு திருமணம் வைக்க இருப்பதால் நண்பர்களிடம் கடன் வாங்கி நகைகள், வீட்டிற்கு தேவையான பொருட்கள், சாக்லெட், பிஸ்கட் பாக்கெட்டுக்கள் என எல்லாம் வாங்கி விட்டார். ஊருக்குச் செல்ல பார்சலெல்லாம் கட்டி ரெடியாயாச்சு.

நேற்று காலை கம்பெனிக்கு சென்று எல்லா வேலைகளையும் முடித்து பாஸ்போர்டை வாங்க காத்திருந்த போது பங்களாதேஷில் இருந்து வெள்ளியன்று திரும்பிய அவரது மேற்பார்வையாளன் கம்பெனிக்கு போன் செய்து அந்த ஆளுக்கு பாஸ்போர்ட் கொடுக்காதே... அவருக்கு மாற்று ஆள் இல்லை என்று சொல்லிவிட்டான். மேலும் அலுவலகத்திற்கும் வந்து தடுத்துவிட்டான். அவரும் எவ்வளவோ பேசியிருக்கிறார் ஆனால் அவன் செவி சாய்க்கவில்லை. இப்ப போகமுடியாது என்பதை மட்டுமே திரும்பத் திரும்ப சொல்லியிருக்கிறான்.

ஒரு கட்டத்தில் மனது உடைந்த அண்ணன் வேலையை ராஜினாமா செய்து விட்டார். இருந்து ஒரு மாத வேலை செய்ய வேண்டும் என்ற விதியின்படி அவரை வேலைக்கு வரச் சொல்லிவிட்டார்கள். இப்ப டிக்கெட் பணத்தில் பாதிதான் கிடைக்கும். வாங்கிய பொருட்களை பார்சலில்தான் போட்டுவிட வேண்டும். அவர் மனதொடிந்து போய் இருக்கிறார்.

அவரது ஆசைகளை நிராசையாக்கியவன் ஒரு அரபியோ, பாகிஸ்தானியோ, மலையாளியோ அல்ல... நம்ம தமிழன் தான்.

தமிழனுக்குத் தமிழன் எதிரிதான் என்பதை நிரூபித்துவிட்டான் பரதேசி.

*****

நான் பார்த்த படங்கள் ஒரு பார்வை:

நான் மகான் அல்ல: ஆரம்பத்தில் டீலக்ஸ் பஸ் போல் சென்ற படம் முடியும் போது கிராம்ங்களுக்கு செல்லும் டவுன்பஸ் போலாகிவிட்டது. கார்த்திக் வேலை தேடுவதும் காஜலை லவ்வுவதும் போர். நம்மளை மாக்கானாக்கும் படம்.

பாணா காத்தாடி: முரளியின் மகனும் கதாநாயகியும் நல்ல தேர்வு. பிரசன்னா வில்லன் என்றால் அவருக்கு மேல் ஒருவர் இருக்கிறார் என்று ஒரு இடத்தில் மட்டும் காட்டுகிறார்கள். வித்தியாசமான முடிவா வில்லன்கள் இருக்க கதாநாயகன் கொல்லப்படுகிறார். கதையை நகர்த்தத் தெரியாமல் நகர்த்தியிருக்கிறார் இயக்குநர். காத்தாடி பறக்கவில்லை.

குற்றப்பிரிவு: போலீஸ் ஸ்டோரி என்பதால் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லை. ஸ்ரீகாந்த், பிரித்விராஜ் நல்ல தேர்வு. போரடிக்காமல் போகிறது. சில குறைகள் இருந்தாலும் குற்றம் சொல்ல முடியாத படம்

களவாணி: கிராமத்துக் கதைக்களம், அலட்டலில்லாத அசத்தலான நாயகன், நாயகியுடன் வயல்களும் வரப்புகளும் நடித்துள்ளன. மீண்டும் பார்க்க வேண்டும் என்று மனசுக்குள் சொல்லிக்கொண்டே இருக்கும் படம். களவாணி உள்ளங்களை களவாடும்.

வம்சம்: நம்ம தலைவரின் வம்சம் நடித்த படம். வித்தியாசமான முயற்சி, கிராமத்துக் கதையாக இருந்தாலும் பலி வாங்கும் கதை என்பதால் வெட்டுக்குத்து நிறைந்துள்ளது. நாயகிக்கு நடிக்க நல்ல வாய்ப்பு... நாயகனுக்கு..? இயக்குநருக்கு கேமிராவுக்குள் ஐயா தெரிந்திருப்பார் போல பல இடங்களில் நாயகனுக்காக இறங்கிப் போயிருப்பது தெரிகிறது. வம்சம் வளராத குத்துச் செடி.

விருந்தாடி: அய்யோ... தியேட்டர் பக்கம் போயிடாதீங்க... அப்புறம் என்ன நடந்தாலும் நான் பொறுப்பில்லை சொல்லிப்புட்டேன்.

மனசின் பக்கம் தொடரும்.

-'பரிவை' சே.குமார்.

சனி, 28 ஆகஸ்ட், 2010

வாழ்க்கை வாழ்வதற்கே..!


எதோ வாழ்ந்தோம்... மறைந்தோம்... என்றில்லாமல் வரும் சந்ததியினர் இப்படி ஒருத்தர் இருந்தார் என்று சொல்லும்படியாக வாழ்ந்து மறைவதே பிறவியின் பேராகும்.

எத்தனை கஷ்டங்கள் வந்தாலும் போராடி வாழ்ந்து பார்க்க வேண்டும் அதை விடுத்து உயிரை மாய்த்துக் கொள்வதென்பது வடிகட்டிய கோழைத்தனம். கை, கால் ஊனமானவர்களெல்லாம் மன தைரியத்துடன் வாழ்ந்து காட்டும் போது குறையின்றி பிறந்த பலர் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்வது முட்டாள்தனமானது. ஊனம் என்று இகழாமல் அவர்களின் தைரியத்தையும் பக்குவப்பட்ட மனதையும் பார்த்து வாழ கத்துக்கொள்ள வேண்டும்.

எனது மைத்துனன் (மனைவியின் தம்பி) இறந்தது இன்றுடன் ஆறு வருடங்கள் ஆகிறது. வீட்டிற்கு ஒரே பையனான அவர் காதலுக்காக கயிரை நாடினார். யாருக்காக உயிரை மாய்த்துக் கொண்டாரோ அவள் குடும்பம் குழந்தை என்று நம் கண்முன்னே சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கிறாள். அவரை இழந்து இன்று வரை சந்தோஷம் இழந்து வாடுவது பெற்றவர்கள் மட்டுமே.

அவள் இல்லை என்றால் என்ன... தான் படித்த படிப்பு இருக்கு அதை வைத்து அவளுக்கு முன்னால் வாழ்ந்து காட்ட வேண்டும் என்று அவர் நினைத்திருந்தால் இன்று எதாவது ஒரு கம்பெனியில் பொறியாளராக இருந்திருப்பார்.

எனக்குத் தெரிந்த குடும்பத்தில் தனது தங்கை வேற்று சாதிக்காரனுடன் பழகியதை கண்டித்த சகோதரன், அவள் திருந்துவாள் என்ற நம்பிக்கையில் இருந்த நிலையில் ஒருநாள் அந்தப் பையனும் தன் தங்கையும் ஒன்றாக இருந்ததை பார்த்து விட்டான். தங்கையை எதுவும் செய்யவில்லை அதற்கு மாறாக தனது உயிரை மாய்த்துக் கொண்டுவிட்டான். அந்தத் தங்கை அந்த இளைஞனை கட்டாமல் வீட்டில் பார்த்த மாப்பிள்ளையை கட்டிக் கொண்டு சந்தோஷ வாழ்க்கை நடத்துகிறார்.

அண்ணனின் பேச்சை அன்றே கேட்டிருந்தால் அவனது வாழ்க்கை முடிந்திருக்காது. தங்கைகாக நாம ஏன் சாக வேண்டும் என்று சிந்தித்திருந்தால் அவனும் இன்று குடும்பம் குழந்தை என வாழ்ந்திருப்பான்.

இன்னொருவர் இவரது கதை சற்று வித்தியாசமானது... சகோதரர்கள், சகோதரி என பெருங்குடும்பத்தில் பிறந்த இவருக்கு படிக்கும் காலத்தில் படிப்பு வரவில்லை. வீட்டில் சாணி பொறுக்கவும் மாடு மேய்க்கவும் தன் காலத்தை ஓட்டியவர், திடீரென விஸ்வரூபம் எடுத்தார். எப்படி தெரியுமா? டுட்டோரியலில் சேர்ந்து 10, 12 முடித்தார். பின்னர் பி.ஏ. தொலைதூரக் கல்வியில் படித்தார். வீட்டில் எதோ பிரச்சினை சாவது என முடிவெடுத்து அதை செயல்படுத்தியும் கொண்டார்.

படிக்க வேண்டும் என்று போராடி வெற்றி பெற்ற இளைஞர் சாதரண பிரச்சினைக்காக உயிரை மாய்த்துக் கொள்ளவில்லை என்றால் இந்நேரம் தனது படிப்புக்கு ஏற்ற ஏதாவது வேலையில் இருந்து கொண்டு குடும்பம் குழந்தை என்றிருந்திருப்பார்.

இன்றைய உலகில் இளைஞர்களும் இளைஞர்களும் காதலுக்கும் பரிட்சை தோல்விக்கும் தங்கள் உயிரை தாங்களே மாய்த்துக் கொள்கிறார்கள். அது ஏன் என்று தெரியவில்லை. இவள் இல்லை என்றால் இன்னொருவள், இவன் இல்லை என்றால் மற்றொருவன், மார்ச் போனால் அக்டோபர் அதுவும் போனால் மறுபடியும் மார்ச் என்று வாழப் பழகிவிட்டால் எதற்கு உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டும்.

எனக்குத் தெரிந்த தோழர்கள் தோழியர் இருக்கிறார்கள். படிக்கும் காலத்தில் விழுந்து விழுந்து காதலித்துவிட்டு படிப்பு முடிந்ததும் இருவரும் சந்தோஷமாக பிரிந்து குடும்பம் குழந்தைகள் என்றான பின்னரும் எங்காவது சந்திக்க நேர்ந்தால் மனசுக்குள் காதலை மறைத்துக் கொண்டு 'ஏய்... நல்லாயிருக்கியா...?' என்று கேட்டு வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

எல்லாக் காதலும் தோற்பதில்லை... எல்லாக் காதலும் ஜெயிப்பதில்லை... ஜெயித்தவகளில் சிலர் சந்தோஷ வானில் பறந்தாலும் பலர் ஈகோ என்ற வளையத்துக்குள் சிக்கி சின்னாபின்னமாவதை பார்த்துள்ளோம். காதல் காலத்தின் கோலம் வாழ்க்கை காலத்தின் தவம்... காதல் இல்லாத மனசு இருக்குமா என்றால் சந்தேகமே, இருப்பினும் காதலுக்காக உயிரை விடுவது கோழைத்தனம்.
                              
                               "வாழ்க்கையே போர்க்களம்
வாழ்ந்துதான் பார்க்கணும்..."  என்றான் கவி.

தற்கொலை எண்ணங்களை தவிடு பொடியாக்கிவிட்டு வாழ்ந்து பாருங்கள். வாழ்க்கையின் அர்த்தம் புரியும். உங்கள் முடிவு மற்றவர்களுக்கு இன்பத்தை தராவிட்டாலும் துன்பத்தை விதைக்காமல் இருக்கட்டும்.

இந்த பதிவு மனசின் ஆதங்கம்தான். எனது மைத்துனரின் இழப்பு எங்களுக்கு ஒரு பேரிழப்பு. அதை யாரும் திருப்பித்தர முடியாது... அவரே திரும்பி எங்களுடன் வாழ வேண்டும் என்று நினைத்தாலும் நடக்குமா... இப்ப எங்களின் குழந்தைகள்தான் அவரின் பெற்றோருக்கு சந்தோஷத்தை கொடுக்கின்றன. இருப்பினும் அவர்களின் மனவலி குறையுமா?

எனவே தற்கொலை எண்ணத்தை தவிடுபொடியாக்கி வாழ்ந்து காட்டுங்கள். வாழ்க்கை சுகமாகும்... உங்களை இகழ்ந்தவர் உங்கள் வாழ்வு கண்டு மனசுக்குள் வருந்தும் காலம் வராமல் போகாது.

-'பரிவை' சே.குமார்

செவ்வாய், 24 ஆகஸ்ட், 2010

மனசின் பக்கம்... II

நண்பர்களே... கடந்த ஒருவார காலமாக வலைச்சர ஆசிரியனாய் இருந்ததால் உங்களது பதிவுகளுக்கு பின்னூட்டமிட முடியாத நிலையிலும் எனது பதிவுகளை படித்து பின்னூட்டமிட்ட உங்களுக்கு மிக்க நன்றி.

மாற்றுத் திறனாளி, இறைவனின் குழந்தை பதிவுலக நண்பர் அந்தோணி முத்து அவர்கள் கடந்த சில நாட்களாக உடல் நலமில்லாமல் மருத்துவமனையில் இருப்பதாக வலைச்சரம் சீனா ஐயாவின் பதிவு பார்த்தேன். அன்னார் பூரண குணம் அடைய வேண்டும் என்று இறைவனைப் பிரார்த்தித்தேன். ஆனால் இறைவன் அவரது கஷ்டங்களைக் கண்டு அவரைக் கூட்டிக் கொண்டு போய்விட்டான் போலும். ஆம் நேற்று இரவு நண்பர் டோண்டு வின்  தளத்தில் அவரது மறைவு குறித்து படித்தேன். மனசு வலிக்கிறது மக்களே... அன்னாரின் ஆன்மா சாந்தியடைய நாம் அனைவரும் பிரார்த்திப்போம்.

*****


உமா சங்கர்... நேர்மையின் உருவம். லஞ்சம் வாங்கி வாழ்க்கை நடத்தும் அதிகாரிகள் மத்தியில் கடந்த 27 வருடமாக நேர்மையான அதிகாரியாக வாழ்ந்து வரும் இவரை போலிச்சான்றிதழ் கொடுத்து வேலைக்கு சேர்ந்ததாக அரசு பதவி நீககம் செய்துள்ளது. பதவியில் சேர்ந்த போதோ அல்லது சில வருடங்களிலோ அவரது ஏமாற்று வேலையை கண்டுபிடித்திருக்கலாம். அப்படி கண்டுபிடிக்காத அரசாங்கம் அவசரம் அவசரமாக இப்ப முடிவெடுக்க காரணம் அவர் ஆளும் குடும்பத்தை ஆட்டம் காணச் செய்துவிடுவாரோ என்ற பயம்தான்.

நேர்மையான அதிகாரி என்ற முறையில் எல்லாரும் அவருக்கு ஆதரவளிப்போம். இதில் எனக்கு வருத்தமளித்த விபரம் அவர் இன்ன சாதிக்காரர் என்பதால்தான் இந்த நிலை என்று பதிவெழுதுவதுதான். இது ஏற்றுக் கொள்ள முடியாது. திறமைசாலியான நேர்மையான அதிகாரி எங்கிருந்து வந்திருந்தாலும் அவருக்கு ஆதரவளிப்போம். இங்கு எதற்கு சாதி?

எனக்குத் தெரிந்த சம்பவம் ஒன்று... தேவகோட்டையில் நான் படித்துக் கொண்டிருந்த காலத்தில் ஆக்கிரமிப்புக் கட்டிடங்களை இணை ஆட்சியராய் இருந்த திரு.ராகேஷ் குமார் யாதவ் அகற்ற உத்தரவிட்டதுடன் மட்டுமில்லாமல் தானே நின்று அந்தப்பணியை நடத்தினார். அவருக்கு எதிராக கிளம்பிய அரசியல் முதலைகள் அவருக்கு உடனடி மாறுதல் வாங்கினர். இவ்வளவுக்கும் ராகேஷ் குமார் அவர்கள் வட நாட்டில் இருந்து வந்தவர், தனது பெயரில் சாதியை ஒட்டிக் கொண்டவர்தான் இருந்தும் தேவகோட்டையில் இருந்த அனைத்து சமூக அமைப்புகளும் மனிதாபிமானமுள்ள மக்களும் போராடினர். ஜெயித்தது என்னவோ அரசியல்தான் என்றாலும் வாழ்ந்தது மனிதாபிமானம்தான். எனவே உமாசங்கர் அவர்களை பொதுவான மனிதராக பாருங்கள். தயவு செய்து அவரை சாதி என்ற வட்டத்துக்குள் இழுக்காதீர்கள் என்பதே என் வேண்டுகோள்.

*****


நண்பர் வெறும்பய  அவர்கள் ஒரு முக்கியமான, நெஞ்சை வருடும் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அது... பூஜா என்ற பூந்தளிரை கயவன் ஒருவன் கடத்தி வந்து கேரள பேருந்து நிலையங்களில் பிச்சையெடுக்க வைத்துள்ளான். அம்மா பசிக்குது... காசு போடுங்க என்று மழலையில் அழைத்து பிச்சையெடுத்த சிறுமியை மீட்டதுடன் மட்டுமல்லாமல் அவருடன் இருந்த பிச்சைக்காரனையும் கைது செய்து விசாரித்துள்ளார்கள். என்ன கொடுமை பாருங்கள் அவனும் வாய் பேச முடியாத ஊமை. அந்த பிஞ்சுதான் நாகலுப்பி என்ற ஊரில் பிறந்ததாகவும் அப்பா ராஜூ, அம்மா முன்னிதேவி என்றும் தெரிவித்துள்ளது. ஆனால் இது போன்றதொரு இடத்தை யாருமே கேள்விப்பட்டதில்லையாம். இப்ப அந்தத்தளிர் திருவேந்திரத்தில் இருக்கும் நிர்மலா சிசுபவன் என்ற மையத்தில் பாதுகாப்பாய் வைக்கப்பட்டுள்ளாள்.

குஞ்சைப் பிரிந்த கோழி, கன்றைப் பிரிந்த மாடு, குட்டியைப் பிரிந்த ஆடு இன்னும் பல ஐந்தறிவு ஜீவங்களின் பிரிவுத்துயரை நாம் பார்த்து வருந்தியிருக்கிறோம். ஒரு தாயின் பிரிவையும் சேயின் பிரிவையும் எத்தனை சினிமாக்களில் பார்த்து வருந்தியிருக்கிறோம். சினிமா என்பது மாயையாக இருந்தாலும் உண்மையில் அந்தத் தாய் மற்றும் சேயின் வலி எப்படியிருக்கும் என்பதை நாம் அறிவோம்.

அந்தக் குழந்தை பற்றிய விவரம் யாருக்காவது தெரிந்திருந்தால் தயவு செய்து நிர்மலா சிசுபவனுக்கு 0471 - 2307434 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு சொல்லுங்கள். இந்தப் பதிவை படிப்பதுடன் மட்டுமல்லாது உங்கள் வலைப்பூவிலும் உங்கள் நண்பர்களுக்கு மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ளுங்கள்.

விரைவில் தாயும் சேயும் இணைந்து 'ஆராரோ... ஆரிரரோ...' பாட இறைவனை பிரார்த்திப்போம்.

*****

கடைசியாக நம்ம தலைவர் (அதாங்க நம்ம வாரிசு விஷால்) இப்பதான் கொஞ்சமா பேச ஆரம்பிச்சிருக்காரு நிறைய சேட்டைகளுடன்... இப்பல்லாம் அவருக்கு மூடு வந்தா அம்மாகிட்ட செல்போனை எடுத்து கொடுத்து 'அம்மா... அப்பா..' என்று போன் செய்யச் சொல்கிறாராம். எனக்கு அடித்துக் கொடுத்ததும் "அப்பாபாபா..." என்று ஒரு அழுத்தமான வார்த்தைப் பிரயோகம். அதன் பின் அவர் 'பாப்பா...ஆஆஆ லீலீ' - அதாவது பாப்பா ஸ்கூலுக்கு போயாச்சு என்று சொல்கிறார் . நான் தம்பி என்றதும் 'ந்னா' - அதாவது என்ன என்று கேட்கிறார். பின் 'ஆ... லூலூ... காகக்க்ககக்க்க.... மீஜகக்ரியக்க' என்ற சைன மொழிகள். அவர்கள் அம்மா நித்யா சொல்லு என்றதும் 'நித்தா' என்றழைக்கிறார். பேர் சொல்லத்தானே பிள்ளை... அம்மா... இப்ப நித்தா ஆயாச்சு. எல்லாம் முடிந்து கடைசியில் செல்போனுக்கு முத்தம். (அப்பாவுக்கு முத்தமாம்). மனசுக்கு சந்தோஷமான நொடிகள் இது.

கொசுறு: தம்பியிடம் நான் பேசினால் மூத்த செல்லத்துக்கு மூக்கில் மேல் கோபம். அவர்தான் பேச வேண்டும் என்பது அவரது எண்ணம். அவர்களின் சண்டையும் சில நேரம் சந்தோஷிக்க வைக்கிறது பல நேரம் சிந்திக்க வைக்கிறது.

நன்றி நண்பர்களே... மீண்டும் அடுத்த மனசின் பக்கத்தில் சந்திக்கலாம்.

-'பரிவை' சே.குமார்

படங்கள் உதவி : நண்பர்களின் வலைப்பூக்கள்

வியாழன், 29 ஜூலை, 2010

மனசைப் பாதித்த சில...



பாலைவன வாழ்க்கையில் பெற்றதும் இழந்ததும் என்று மனோ சாமிநாதன் அம்மா அவர்கள் கட்டுரை எழுதியிருந்தார்கள் (படிக்க : பகுதி-1 , பகுதி-2.) அவர்களது கட்டுரையில் எல்லாமே இங்கு நடந்த, நடந்து கொண்டிருக்கிறவைகளைத்தான் அதில் தெரிவித்திருந்தார். அதன் தாக்கமாக நானும் சிலவற்றைப் பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.

சில நாட்களுக்கு முன்னர் எங்களால் சார் என்று அழைக்கப்படும் நாங்கள் மிகவும் மதிக்கும் கர்நாடகாவைச் சேர்ந்த இஞ்சினியர் ஒருவரின் வாழ்வில் நிகழ்ந்த அந்த சோகம் யாருக்குமே நிகழக்கூடாது என்பதே என் வேண்டுதல்...

அது....

அவர் ஏறக்குறைய இருபது வருடங்களுக்கு மேலாக இந்த பாலைவன பூமியில் இருக்கிறார். இடையிடையே குடும்பத்தையும் கொண்டு வந்து வைத்திருந்திருக்கிறார். நான் இங்கு வந்த பிறகு ஒருமுறை குடும்பத்தை கொண்டு வந்து வைத்திருந்தார். அவருக்கு ஆஸ்திக்கு ஒன்று ஆசைக்கு ஒன்று என இரண்டு பிள்ளைகள். இருவரையும் நல்லா படிக்கவைத்து வேலைக்கும் போகிறார்கள்.

அவரது பெண்ணுக்கு 23 வயது இருக்கும். இவர் ஒவ்வொருமுறை ஊருக்குப் போகும்போதும் மகளுக்கு நகைகள் வாங்கிக் கொண்டு போவார். ஊருக்குப் போனால் மகளை சென்னைக்கு அழைத்துச் சென்ற வேண்டும் என்கிற பட்டுப்புடவைகளை வாங்கி கொடுத்து மகிழ்வார்.

சில தினங்களுக்கு முன் எங்கள் வெள்ளிக்கிழமை விடுமுறைக்காக எங்கள் அறைக்கு வந்திருந்து பிரியாணி செய்து சாப்பிட்டு சந்தோஷமாக கழித்தார். மறு நாள் காலை அவர் கிளம்பும்போது ஊரில் இருந்து போன் வந்துள்ளது. மகளுக்கு உடலநிலை சரியில்லை என்று சொல்லி சாதாரண காய்ச்சல்தான் என்றதும் அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல சொல்லிவிட்டு தனது இருப்பிடத்துக்கு கிளம்பி இருக்கிறார். நிலமை சீரியஸ் என்று சில மணி நேரங்களில் மகன் போன் செய்யவும் அண்ணாவிடம் போனில் சொல்லியிருக்கிறார்.

அதன் பிறகு மருத்துவமனையில் குளுக்கோஸ் போடுவதாகவும் கவலைப்பட வேண்டாம் என்றும் மகன் போன் செய்ய, அவரும் அலுவலக வேலையில் ஐக்கியமாகிவிட்டார். இரவு அண்ணன் போன் செய்ய, காய்ச்சல் கொஞ்சம் சிவியராத்தான் இருக்காம். குளுக்கோஸ் போய்க்கிட்டு இருக்காம் என்றதும் அண்ணா நீங்க உடனே ஊருக்கு போங்கள் என்றார். அதற்கு இல்லப்பா இப்பதான் பொயிட்டு வந்தேன் சாதாரண காய்ச்சல்தானாம் சரியாயிடும் என்றார்.

'அன்று இரவு அவர் யாருக்காக இத்தனை வருடங்கள் இந்த பாலைவன பூமியில் சம்பாதித்தாரோ அந்த தங்கம்... அவரது இதயம்... நினைவில்லாத நிலையிலேயே மரணித்து விட்டாள். தங்கக் கிளியாக வளர்த்த தந்தை முதல் நாள் சென்றிருந்தால் தனது ஆசை மகளுடன் எதாவது பேசியிருக்க்கலாம். ஆனால் அவள் இறந்த பிறகு சென்ற தந்தைக்கு அவளின் உயிறற்ற உடலுக்கு கடன் செய்வதுமட்டுமே மிஞ்சியது. இதை விட கொடுமை என்ன இருக்க முடியும் சொல்லுங்கள்?



இந்த சம்பவம் குறித்து நான் தற்பொழுது செல்லும் கவர்மெண்ட் அலுவலகத்தில் தமிழ் நண்பருடன் பேசும்போது, அவர் சொன்ன தகவல் என்னை இன்னும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது...

அது...

அவர் இங்குள்ள கிளினிங் கம்பெனிக்கு வேலைக்கு வந்து ஆறு மாதத்தில் அப்பா இறந்துவிட இரவெல்லாம் அழுது காலையில் கம்பெனியில் கேட்டபோது, ' கிளினிங் கம்பெனியில் இரண்டு வருடத்துக்கு ஒருமுறைதான் விடுப்பு வழங்கப்படும். வந்த ஆறுமாதத்தில் எப்படி விடுமுறை கிட்டும்' என்று எதேதோ பேசி, நீ போய் என்ன செய்யப் போறே என்று அவரை விடவில்லையாம். இந்த தகவலை அவர் சொன்னபோது அவரது கண்களில் கண்ணீர் அணை கட்டியதை நான் பார்த்தேன்.

இங்கு படித்தவர்கள் அலுவலகங்களில் குளிர்சாதன அறைக்குள் அமர்ந்து வேலை பார்த்து நல்லா சம்பாதிக்கலாம். படிக்காமல் கட்டிட வேலைகளுக்கு வருவோர் அடிக்கும் வெயிலில் நாப்பது, அம்பது மாடி கட்டிடங்களில் வேலை செய்து குறைந்த சம்பளத்தை வாங்கி அதற்குள் இங்கும் செலவு செய்து, ஊருக்கும் அனுப்பி அவர்கள் படும்பாடு சொல்லிமாளாது.

இதில் இன்னொன்று இங்குள்ள நண்பர்கள் வார விடுமுறை என்றாலே எதோ தண்ணி அடிப்பதற்காகவே விடுவது போல் காலையில் இருந்து இரவுவரை பாட்டிலுடன் தான் குடும்பம் நடத்துகிறார்கள். தண்ணியடித்துவிட்டு இவர்கள் அடிக்கும் லூட்டியை ஊரில் இருக்கும் இவர்களது குடும்பம் அறிய வாய்ப்பில்லை.

முன்னர் தங்கியிருந்த் கட்டிடத்தில் நாங்கள் இருந்த பிளாட்டில் தங்கியிருந்த சென்னையைச் சேர்ந்த இளைஞர் குடி குடி என்று இருந்து மோசமான நிலைக்குப் போய் மருத்துவமனையில் காண்பித்தும் குடியை நிறுத்தாததால் ஒரு நாள் காலை பாத்ரூமிற்குள் சென்றவர் அட்டாக்கில் அதற்குள்ளேயே இறந்துவிட, போலீஸ் வந்து பாத்ரூம் கதவை அறுத்து எடுத்தது.

இதில் ஒரு கொடுமை என்னவென்றால் அவருக்கு திருமணமாகி ஆறே மாதம்... அதுவும் காதல் திருமணம். இவரது குடியால் இறந்தது இவரென்றால்... இருந்தும் அழிந்தது அந்த இளம்பெண்ணின் வாழ்க்கையல்லவா?

என்னடா இவன் ஒரே சோகமாக அடுக்குகிறானே என்று நினைக்காதீர்கள் நண்பர்களே... பணம் காய்க்கும் வெளிநாட்டு வாழ்க்கைக்குள் வெளிச்சத்திற்கு வராத இது போன்ற எத்தனையோ சோகங்கள் உண்டு.

இத்தனையும் கடந்து சம்பாதித்து ஊரில் உள்ளாவர்களை சந்தோஷமாக வைத்துக் கொள்கிறார்கள் என்பது எல்லோரும் அறிந்த உண்மை.

நண்பர் புலவன் புலிகேசி போபால் குறித்த பதிவுகளுக்காக போபால் என்ற வலைப்பூ ஒன்றை தொடங்கியுள்ளார். அதில் யார் வேண்டுமானாலும் போபால் கொடுமைகள் குறித்து எழுதலாம். அந்த வலைப்பூ படிக்க இங்கே சொடுக்கவும். வலைப்பூ குறித்த நண்பரின் விளக்கம் இங்கே.


-'பரிவை' சே.குமார்.



வெள்ளி, 22 ஜனவரி, 2010

வெற்றுடம்புடன் விளைநிலம்



ன்று கதிர்களால் காதலிக்கப்பட்ட எம் வயல்கள் இன்று கருவேல மரங்களின் கட்டுப்பாட்டில்... எங்கு நோக்கினாலும் வயல்களும் விவசாய காலத்தில் பயிர்களுமாக காட்சியளித்த எங்கள் கிராமத்தின் அடையாளம் தொலைந்து வெகு காலமாகிவிட்டது. அடுத்த வயலைக் காணமுடியாத அளவுக்கு கருவேல மரங்களும்... மக்கிய முள்ளுமாய்.

ஒரு காலத்தில் எங்கள் ஊரில் எல்லோர் வீட்டிலும் காளை மாடு இருக்கும். பருவ மழை தொடங்கியதும் ஏர் பிடித்து வயலில் உழுது தொளி அடித்து நாற்றுப் பாவி விடுவோம். மழை அதிகரித்து கண்மாய் நிறைந்தால் அந்த வருடம் பஞ்சமில்லை என்ற நிம்மதி. அதுவும் கண்மாக்குள் இருக்கும் முனியய்யா கோவில் வன்னி மரத்தைச் சுற்றிப் பெருகி முனியய்யாவின் இருப்பிடம் தண்ணீருக்குள் மறைந்தால் கண்டிப்பாக நல்லா விளையும் என்ற நடைமுறை கணக்கு ஒன்று உண்டு.

பார்த்துப் பார்த்து உரமிட்டு பயிர் வளர்ந்ததும் அதைப் பறித்து நடுவார்கள். அதற்கு நாற்றுப் பறித்தல் என்று பெயர். பயிரை பறித்து சிறுசிறு முடிகளாக கட்டி, வேறொரு இடத்தில் பெண்கள் நடுவார்கள். அதற்கு நடவு என்று பெயர். நடவுக்கு வரும் பெண்களுக்கு விதவிதமான சமையல், காபி, பலகாரம் எல்லாம். ரோட்டோரத்தில் நாற்று முடி ஒன்றை வைத்து பாட்டுப்பாடி காசு வாங்கும் அந்தப் பெண்களின் சந்தோஷம்... எவ்வளவு பணம் கொடுத்தாலும் கிடைக்காது.

பயிர் வளர வளர அதை பார்த்துப் பார்த்து சந்தோஷப்பட்ட அந்த தினங்கள்... இப்ப நினைத்தாலும் மனசுக்குள் மழைக்காலம். நட்ட பயிர் நேரே நிமிர்ந்து வளர ஆரம்பித்தால் கருநடை திரும்பிருச்சு என்றும் கருக்கூட ஆரம்பித்தால் பொதி கட்டிருச்சு என்றும் விவசாயிகள் ஒருவருக்கு ஒருவர் பேசிக்கொள்ளும் அந்த சந்தோஷ தருணங்கள் இப்போது எங்கள் கிராமத்தில் இல்லை.

கதிர் அறுத்து... கட்டு சுமந்து... நெல் அடித்து... அதை தூற்றி... பிணையல் விட்டு... வைக்கோலை... வைக்கோல் படப்பு என்று அழைக்கப்படும் இடத்திற்கு கொண்டு செல்லும் வரையான அந்த இனிய நிகழ்வுகள் இனி திரும்ப வராது.

பசுமையான இந்த வாழக்கையை எனக்கு அளித்த கிராமம் இன்று பசுமையிழந்து... பொட்டில்லாத முகமாக பொலிவிழந்து கிடக்கிறது. காரணம்... இயந்திரமாகிவிட்ட உலகத்தில் வயலை உழ மணிக்கு இவ்வளவு காசு என்று டிராக்டர்கள் குவிந்துவிட்டன. அதனால் மாட்டிற்கான தேவை குறைய, வீடுகளில் மாடும் குறைந்தது.

நாற்றுப்பாவி நட்டு... எதுக்கு ரெட்டைச் செலவு டிராக்டரை விட்டு உழுதுட்டு விதச்சு விட்டா அறுக்குறதுக்கும் மிஷின் வந்தாச்சு அப்புறம் என்ன ஆளைத்தேடி அலைய வேண்டாம் என்ற எண்ணம் எங்கள் ஊரில் எல்லோர் மனதிலும் வந்த நேரம் விவசாய வேலை குறுகினாலும் விவசாயம் மடியவில்லை என்ற எண்ணம் அதிக நாட்கள் சந்தோஷத்தைக் கொடுக்கவில்லை.




அதிக விலை கொடுத்து உரங்களை வாங்கி பயிருக்கு இட்டு பொதியான சமயத்திலோ அல்லது கதிர் அறுக்கும் சமயத்திலோ பக்கத்து ஊரில் இருக்கும் கோயில் மாடுகள் நாசமாக்க, நாங்கள் அடைந்த அந்த துக்கம் இன்னும் கண்ணுக்குள் நிற்கிறது.

அதற்காக வயல்களில் குடில் அமைத்து மார்கழிக் குளிரில் எங்கப்பா உள்பட விவசாயிகள் எல்லாம் அவர்களது வயல்களில் இரவில் போய் படுத்தது காவல் இருந்தது. அதுவும் அருகில் சுடுகாடு இருக்க எங்கப்பாவும் சின்னய்யாவும் தத்தம் வயல்களில் இரவு நேரத்தில் படுத்த அந்த நாட்கள் அவர்களுக்கு விவசாயத்தின் மீது இருந்த காதலை பறை சாற்றியது. அப்பா இல்லாத நாட்களில் அம்மா என்னையும் தம்பியையும் போய் பார்த்து வரச்சொல்வார்கள். போவோம் என்றா நினைத்தீர்கள் பாதி தூரம் போய் டார்ச லைட்டை அடித்துப் பார்த்துவிட்டு ஒடி வந்து விடுவோம்.

கோயில் மாடுகளை நிர்வாகம் ஒன்றும் செய்யாத காரணத்தால் கொஞ்சம் கொஞ்சமாக விவசாயம் கரைந்தது. இன்று விளைநிலங்கள் எல்லாம் வேலிக்கருவை என்று செல்லமாக அழைக்கப்படும் கருவேல மரங்களின் காடாக மாறிவிட்டது.

ஒரு காலத்தில் முப்போகம் விளைந்த் வயல்கள் இப்போது முள்கள் சூழ்ந்து பரிதாபமாய்....

காரணம்... இளைஞர்கள் எல்லாம் வேலை தேடி வெளி நாடுகளில் தஞ்சம்... ஓடி ஓடி விவசாயம் செய்தவர்கள் எல்லாம் காலத்தின் கட்டாயத்தில் முதிர்ச்சி என்னும் விவசாயத்தில்... பலர் பூமி விவசாயம் பொய்த்ததால் மேலே போய்விட்டார்கள். என்ன செய்ய...

பணம் இருக்கும் தோட்ட விவசாயிக்கு மின்சார சலுகை வழங்கும் அரசு சிறிய விவசாயிகளை கண்டு கொல்வது இல்லை என்பதே நிதர்சன உண்மை. உரத்திற்கு மானியம் என்பார்கள் ஆனால் மானியம் யாருக்கு என்பது அவர்களுக்கே வெளிச்சம். சினிமாக் காரனுக்கு தமிழ் பேர் வச்சா வரி விலக்கு கொடுக்கும் அரசு, விவசாயம் செய்தால் என்ன தருகிறது?

விவசாயம் எப்படி செய்வது என்பது விவசாயியின் மகனான எனக்குத் தெரியும் என்பது சந்தோஷம் ஆனால் என் வாரிசுகளுக்கு...?

நகரத்தை ஒட்டி இருக்கும் விளை நிலங்களெல்லாம் வீடுகளாக மாறி வரும் வேளையில் கிராமத்து நிலங்கள் பயனின்றி பாழ்பட்டு வருகின்றன.

என் சிறுவயதில் அழகிய சிற்றூறாக இருந்த என் கிராமம் போன்ற பல கிராமங்கள் இன்று பொலிவிழந்து எதோ ஒரு காட்டிற்குள் இருப்பது போன்ற பிரமையை ஏற்படுத்துகின்றன என்பதே உண்மை.

காலப் போக்கில் விவசாயம் என்றால் என்ன என்பது கல்வெட்டில் மலர்ந்தாலும் ஆச்சரியமில்லை.

-சே.குமார்.