மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

திங்கள், 27 மே, 2019

மனசு பேசுகிறது : அரியநாச்சியும் குருதி ஆட்டமும்

தென்னகத்து மக்களின் வாழ்க்கைக் கதைகளைப் பேசும் எழுத்தாளர் வேல ராமமூர்த்தி அவர்களின் எழுத்துக்கு வாசிப்பவரை ஈர்க்கும் திறன் அதிகம். அதுவும் அந்த மண்ணில் பிறந்து வளர்ந்தவர்கள் என்றால் அந்த அடிதடியும், வெட்டுக் குத்தும் நிஜத்தைப் பிரதிபலிப்பதை உணரலாம்.

ரத்தம்... ரத்தம்... ரத்தம்... கொலை, பழிக்குப் பழி என்பதுதான் வாழ்க்கை... இன்னும் அப்படித்தான் இருக்கிறது அந்த மண்.

சென்ற வாரம் ராமநாதபுரத்தில் கடை வீதியில் வைத்துக் கொலை, நேற்று சிவகங்கையில் நடைப்பயிற்சிக்குச் சென்றவன் வெட்டிக் கொலை... இந்த மண்ணில் ஒவ்வொரு விடியலும் ரத்தம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது.

அப்படியான ரத்தம் தோய்ந்த கதைகளை... அதன் களத்தை விட்டு விலகாமல் சொல்லி, நம்மையும் அவர்கள் பின்னே ஓட வைப்பதில் கில்லாடி ஐயா வேல ராமமூர்த்தி அவர்கள்.

அவரின் அரியநாச்சியும் குருதி ஆட்டமும் PDF - பாக வாசிக்கக் கிடைத்தது.

குற்றப்பரம்பரையிலும் பட்டத்துயானையிலும் ஈர்த்த எழுத்துக்காரர் என்பதால் வேகமாக வாசிக்க ஆரம்பித்தேன்.

அரியநாச்சியும் குருதி ஆட்டமும் அடித்து ஆடிப் போகும் போது அவசரமாய் முடிக்கப்பட்டு விடுகின்றன என்பது ஏமாற்றமே.

விரிவாகப் போக வேண்டிய கதைகள் விரைவாய் முடிக்கப்பட்டுள்ளன.

சினிமாவுக்கான நேர ஒதுக்கல் எழுத்தினைத் தின்றுவிட்டதை உணர முடிகிறது.

அரியநாச்சி

Image result for அரியநாச்சி

அரியநாச்சியின் அப்பா வெள்ளையத்தேவன் எதற்காகவோ கொலை செய்துவிட்டு தாயில்லாப் பிள்ளைகளைத் தன் சகோதரியிடம் விட்டுவிட்டு சிறை செல்கிறான். தனக்கு நிச்சயிக்கப்பட்டவன் மஞ்சுவிரட்டில் மாடு முட்டிச் சாக, கன்னித் தன்மையோடு திருமணம் செய்யாது விதவையாய் காலம் தள்ளிக் கொண்டிருக்கும் அயித்த வள்ளியிடம் வளர்கிறார்கள்.

நிறை சூழியான அரியநாச்சி ஜெயிலுக்கு அப்பாவைப் பார்க்க பூவாயி அத்தையுடன் வருவதில் ஆரம்பிக்கிறது கதை.

அரியநாச்சி திருமணம் முடித்து சென்ற வெள்ளாங்குளத்தில் அவளின் கணவன் சக்கரைத்தேவனுக்கு மதிப்பும் மரியாதையும் அதிகம். அதே மரியாதை அரியநாச்சிக்கும் கிடைக்கிறது. கொழுந்தன் சோலை அவளைத் தன் தாயாக நினைக்கிறான்.

தான் பார்த்துப் பார்த்து வளர்த்த தங்கை மாயழகியை சோலைக்கே கட்டி வந்து, தன் பக்கத்தில் வைத்து தாயைப் போல பார்த்துக் கொள்ள நினைக்கிறாள். அதற்காகத்தான் அப்பாவைச் சந்தித்து ஒப்புதல் பெற வருகிறாள். கூட்டத்தில் அவள் சொல்வது அப்பாவுக்குக் கேட்கவில்லை.

இதையறிந்த அவளின் தம்பி பாண்டியின் மனைவி குமராயி, பெண் வழிச்சொத்தெல்லாம் வெள்ளாங்குளம் போயிருமேன்னு மாயழகியை தன் தம்பி கருப்பையாவுக்கு கட்டி வைக்க கணவனுக்குத் தூபம் போடுகிறாள். அவளின் தூபத்துக்கு பாண்டி ஆட ஆரம்பிக்கிறான்.

பாண்டி அப்பாவைப் பார்த்து மச்சினனுக்கு கட்டப் போவதாய்ச் சொல்கிறான். அவர் அக்காவிடம் பேசிக்கப்பா என்கிறார். அவன் பேச மறுக்கிறான்.

அக்காவையும் மச்சானையும் அழைக்காமலே நிச்சயம் பண்ணுகிறான்... குடும்பப் பிரிவு பகையை வளர்க்கிறது, பாண்டி ஊர் இளவட்டங்களைக் கொழுவி விடுகிறான்.

லோட்டா காலையில் டீக்கடை மாலையில் சாராயக்கடை நடத்துகிறான். அங்குதான் இளவட்டங்கள் கூடிப் பேசுகிறார்கள். 

அக்கா வந்தால்தான் கழுத்தை நீட்டுவேன் என்கிறாள் தங்கை.

வள்ளி அயித்தையின் அழைப்பின் பேரில் திருமணத்துக்கு கணவன், கொழுந்தனுடன் வருகிறாள் அரியநாச்சி.

மாயழகியைப் பார்த்த சோலை, இந்த அழகியை விட்டுட்டனே எனப் புலம்பி லோட்டா கடையில் போய் மூக்கு முட்டக் குடிக்கிறான்.

பொண்ணும் மாப்பிள்ளையும் அமர, தாலி எடுத்துக் கொடுக்கப் போன அரியநாச்சிக்கு வலி வருகிறது.

ஊர்க் கிழவிகள் மருத்துவத்தில் குழந்தை பிறக்கிறது.

அக்காவுக்கு குழந்தை பிறந்ததும் மணமேடையில் இருந்து பார்க்க ஓடுகிறாள் மாயழகி.

தாலி ஏறாமப் பொண்ணு மணமேடையில் இருந்து எழுந்து போறது நல்லதில்லயேப்பா என்கிறார் திருமணத்தை முன்னின்று நடத்தும் ஊர்ப்பெரியவர் கோவிந்தத்தேவர்.

வயிறு முட்டக் குடித்துவிட்டு வரும் கொழுந்தனால் பிரச்சினை ஆரம்பிக்கிறது.

ஒருத்தரை வெட்டிக் கொ(ல்)ள்கிறார்கள்...

மணமேடை காத்திருக்க, மாறிமாறி வாழவெட்டியாகிறார்கள்...

இதெல்லாம் தெரியாமல் மகள் திருமணத்துக்கு விடுப்புக் கேட்டு கிடைக்காமல் விரக்தியில் இருக்கும் வெள்ளையத்தேவன் நன்நடத்தையில் அடுத்த வாரம் விடுதலை என்ற நிலையில் அரசு முன்னதாகவே விடுவிக்க மகிழ்வோடு ஊருக்குக் கிளம்புகிறார். 

வீட்டில் நடந்த எழவுகள் தெரியாமல்.

இதுதான் அரியநாச்சியின் கதை... ஆனால் இதை அவ்வளவு உயிர்ப்போடு சொல்லியிருக்கிறார்.  

அப்பா எதற்காக கொலை செய்தார் என்பதை மட்டும் இறுதிவரை சொல்லவில்லை. 

குருதி ஆட்டம்
Image result for குருதி ஆட்டம்

பட்டத்துயானையின் தொடர்ச்சியாய்...

பட்டத்துயானையில் நாடு கடத்தப்பட்ட அரியநாச்சியும் ரணசிங்கத்தின் மகன் துரைசிங்கமும் அந்தமான் தீவில் இருந்து மீண்டும் பெருநாழிக்கு வருகிறார்கள் அண்ணனை/ தகப்பனைக் கொன்றவர்களை பலிவாங்க.

ஊருக்குள் ரணசிங்கத்தின் சாவின் சாட்சியாய் இருக்கும் ஒரே ஒருவன் பூஜாரி தவசியாண்டி... ஊரை வெறுத்துக் காட்டுக்குள் மகள் செவ்வந்தியுடன் வாழ்கிறான்.

அவனின் உதவியுடந்தான் ரணசிங்கத்தை சூழ்ச்சியால் வீழ்த்தியவர்களை பழிவாங்கல் அரங்கேறுகிறது.

ரணசிங்கத்தை சூழ்ச்சியால் வீழ்த்திய உடையப்பனுக்கு ஆங்கில அரசாங்கம் அரண்மனையைக் கொடுத்திருக்கிறது.அந்த அரண்மனை வீட்டுக்குள் மற்றவர்கள் செல்வதென்பதும் அதைப் பற்றி பேசுதல் என்பதும் தடை செய்யப்பட்டு இருக்கிறது அல்லது மக்களே தங்களுக்குள் தடை போட்டு வைத்திருக்கிறார்கள்.

அதைப் பற்றி பேசப் போய் உடையப்பனிடம் வேலைக்காரனாய் மாட்டிக் கொல்லும் லோட்டா, படும்பாடு நகைச்சுவையாய்...

உடையப்பனின் மனைவியும் ரணசிங்கத்தின் அத்தை மகளுமான பொம்மி, ரணசிங்கத்தின் மரணத்தன்று பிள்ளையைப் பெற்றுவிட்டு இறந்துவிட, அவளின் மகன் கஜேந்திரனை கொலைகாரனின் காத்துப் படாமல் வளர்க்க பாட்டி வெள்ளையம்மா சென்னைக்கு கூட்டிப் போய்விடுகிறாள். பின் பெருநாழி வருவேயில்லை.

கப்பலில் வரும்போதே தன் அண்ணனைக் கொன்ற வெள்ளைக்காரன் ஸ்காட்டை கொன்று மீனுக்கு இரையாக்கும் அரியநாச்சி, இரை மாறிடுச்சுன்னு வருத்தப்படாதே உனக்கான இரை கரையில் இருக்கு என்கிறாள். 

ஸ்காட்டை கட்டித் தழுவிய அத்தையைத் தவறாக நினைத்த துரைசிங்கம், ஸ்காட்டை கடலுக்கு இரையாகக் கொடுத்ததைப் பார்த்து மண்டியிட்டு வணங்குகிறான்.

ஊர்த் திருவிழா என்னும் ஒரு புள்ளியில் இணைகிறார்கள் எல்லாரும்.... ஆனால் ஒருவருக்கு ஒருவர் பார்த்துக் கொள்ளவில்லை.

வைக்கோல் பிரி சுற்றி ஆடும் ஆட்டத்தில் யாரையும் வெட்டலாம்... கேசு இல்லை என்பதால் பழி வாங்க வைக்கோல் பிரி சுற்றப்படுகிறது.

பழியும் கொடுக்கப்படுகிறது,

அவ்வளவு தூரம் விறுவிறுப்பாய் பயணித்த கதை பழி வாங்கலை ஏனோ அவசரத்தில் அள்ளியெறியும் சோறு போல சிதறவிட்டுவிட்டார் வேலா.

கஜேந்திரனும் வேண்டும் என்று சொல்லும் அரியநாச்சி....

செவ்வந்தியை காதல் பார்வை பார்க்கும் கஜேந்திரன்....

செவ்வந்தி மீதான அரியநாச்சியின் பார்வையின் பின்னே இருக்கும் துரைசிங்கத்துக்கு மனைவியாக்கும் எண்ணம்...

நல்லாண்டி மகள் வனலெட்சுமி மீதான வெள்ளையம்மாவின் பார்வையின் பின்னே இருக்கும் கஜேந்திரனுக்கு மனைவியாக்கும் எண்ணம்...

தவசியாண்டியைக் கொல்ல உடையப்பன் ஏற்பாடு செய்த மனிதர்...

நல்லாண்டி வீட்டில் தங்கியிருக்கும் மாமியாரைப் பார்க்காத உடையப்பன்...

வெள்ளையம்மாளை நேருக்கு நேர் சந்திக்காத அரியநாச்சி...

அவசர கோலமாய் பழி வாங்கி தன் பசி தீர்த்துக் கொள்ளும் துரை சிங்கம்...

இப்படி இறுதியில் எல்லாமே சிதறிக்கிடக்கு... ஒன்றுக்கு ஒன்று இணையாமல்...

கதையை 'உச்சி ராத்திரி, உள்ளங்கை தெரியாத இருட்டு' என ஆரம்பித்திருப்பார். இந்த வரிகளே நம்மை கதைக்குள் இழுத்துச் செல்லும் அல்லவா..?

சினிமாவால் அதிக நேரம் ஒதுக்க முடியவில்லை... விரைந்து முடிக்க வேண்டிய சூழல் என்பதையும் ஆசிரியர் ஆரம்பத்திலேயே சொல்லிவிட்டார்.

இருந்தாலும் அதிரடியாக ஆடி வரும்போது கட்டை போட்டு ஆட்டையக் கலைக்கும் சிஎஸ்கே வீரர்கள் போல் முடிவு ஆகிவிட்டது வருத்தமே... வைக்கோல் பிரி காட்சிகளை இன்னும் கொஞ்சம் விரிவு படுத்தியிருக்கலாம்.

ஒரு நல்ல எழுத்தாளனை... மண் வாசனையைக் கொண்டாடுபவனை படைப்புலகம் விட்டுவிட்டது... சினிமா எடுத்துக் கொண்டுவிட்டது என்பதுதான் உண்மை.

இன்னும் நிறையப் படைப்பார் என்ற நம்பிக்கை இருந்தாலும் சினிமா விடுமா என்பதுதான் கேள்வியே.

இரண்டுமே வாசிக்க வேண்டிய நாவல்கள்தான்.
-'பரிவை' சே.குமார்.

ஞாயிறு, 19 மே, 2019

மனசின் பக்கம் : கறுப்பியில் கொஞ்சமாய்...

ழுதி முடித்திருக்கும் 'கறுப்பி' நாவலில் (குறு நாவல்) ஒரு பகுதி...

எப்படி இருக்குன்னு சொல்லுங்க...

************

னோ மனசுக்குள் யமுனா வந்தாள்.

இப்போது எங்கே இருப்பாள்…? ஊருக்குப் போயிருப்பாளா…? குடும்பம் குழந்தையின்னு சந்தோஷமா இருப்பாளா…? இல்லை இந்தச் சாக்கடையில்தான் இன்னும் கிடக்கிறாளா…? என்ற கேள்விகள் அவனுள் எழ, கணிப்பொறியை ஆப் பண்ணி வைத்துவிட்டு எழுந்தான்.

அறையின் ஏசிக்குள் பிரியாணியும் சரக்கும் கலந்த வாசனை அடித்தது.

குறட்டைச் சப்தம் மழைநாளில் அவன் ஊரில் இரவு நேரத்தில் வயல்களில் கத்தும் தொருக்கட்டையை ஞாபகப்படுத்தியது.

தண்ணீர்ப் பாட்டிலை எடுத்து ‘மடக்… மடக்…’கெனத் தண்ணீர் குடித்தான்.

ஏனோ தெரியவில்லை… சில வாரங்களாய் பிரியாணி சாப்பிட்ட பின் தண்ணீர் தாகமாய் இருக்கிறது. எதுவும் சேர்மானம் சரியில்லையோ என்னவோ… எவ்வளவு குடித்தும் அடங்கவில்லை… மீண்டும் தண்ணீர் பிடித்துக் குடித்தான்.

வயிறு நிறைந்தது… தாகம் அடங்கவில்லை.

மெல்ல வெளியில் வந்தான்.

ஹாலில் அன்பும் இலியாசும் தூங்கிக் கொண்டிருந்தனர்.

பால்கனிக்குப் போனான்… வெயில் அவனை விரட்டியடித்தது.

கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தான்.

வராண்டா வெறிச்சோடிப் போய்க் கிடந்தது… யாருமில்லை.

லிப்டில் கீழிறங்கி அருகிருக்கும் அபுதாபி மாலில் போய் சுற்றிவிட்டு வரலாமா எனத் தோன்றியது.

இந்த வெயில்ல… அங்க போகணுமா…? என்ற எண்ணம் அதற்குத் தடை போட்டது.

அதிக வெக்கையாக இருந்தது. ஏசியில்லாமல் ஒரு நிமிடம் கூட இருக்க முடியாது என்பதாய்ப்பட்டது. இந்த உடம்பு எப்படி மாறிவிட்டது என்று நினைத்துக் கொண்டான்.

மாடிப்படியில் போய் அமர்ந்தான்.

யமுனா ஞாபகத்துக்கு வந்தாள்.

பக்கத்தில் அவள் அமர்ந்திருப்பது போல் தோன்றியது.

தலையைச் சிலுப்பிக் கொண்டான்.

இதே போன்றோரு மாடிப்படியில்தானே அவளைப் பார்த்த கடைசித் தினத்தில்…

பெருமூச்சு விட்டான்.

எப்படியான வாழ்க்கைக்குள் மாட்டிக் கொண்டுவிட்டாள்.

அவளை அதிலிருந்து மீட்க வேண்டும் என்ற எண்ணம் ஏன் வரவில்லை.

அடுத்தவன் பொண்டாட்டிதானே என்பதாலா…?

அந்த வேலையை ஏற்றுக் கொண்டு விட்டாள் என்பதாலா…?

யாரோ ஒருத்திக்காக நாம் ஏன் போலீஸ் ஸ்டேசனுக்கு அலைய வேண்டும் என்பதாலா…?

யோசனைகள் அவனுக்குள் சுற்றிச் சுற்றி வந்தன.

ஊட்டிக்காரியும் சுதாகரும் இந்நேரம் என்ன செய்வார்கள்…? 

மனதை மாற்ற முயன்று தோற்றான்.

மீண்டும் யமுனா அந்த பச்சை நைட்டியில்…

படியில் இருந்து எழுந்தான்.

அவள் இழுத்து அணைத்து உதட்டோடு உதடு வைத்து முத்தம் கொடுத்தாள்.

அவளிடமிருந்து விலகி, வேகவேகமாக படியிறங்கி வெளியே போனான்.

அருகிலிருந்த சூப்பர் மார்க்கெட்டில் நுழைந்து ஒரு லைம் மிண்ட் சூஸ் எடுத்து காசு கொடுத்து விட்டு, குடித்துக் கொண்டே நடந்து பார்க்கை அடைந்தான்.

அந்த நேரத்தில் அங்கே சில குடும்பங்கள் குழந்தைகளுடன் வந்திருந்தார்கள்.

மொபைலில் மணி பார்த்தான் 4.45 ஆயிருந்தது.

ம்… மணி ஆச்சு… இனி கூட்டம் வரும் என்று நினைத்தபடி ஒரு சேரில் அமர்ந்து வேள்பாரியை வாசிக்க ஆரம்பித்தான்.

அவனக்கு இருபுறமும் யமுனாவும் மலாமாவும் வந்து அமர்ந்தார்கள்.

அவர்களின் மூச்சுக்காற்று அவனைச் சுட ஆரம்பிக்க, அவனுக்குத் மெல்லத் தலை வலி ஆரம்பித்தது.
***********
இது சற்றே என் பணியில் இருந்து மாறியிருக்கும்...


சில உண்மைகள் கலந்த கதை...

நல்லா இருக்கா?
-'பரிவை' சே.குமார்.

வெள்ளி, 17 மே, 2019

மனசின் பக்கம் : இப்தார் விருந்தும் இனிய கலந்துரையாடலும்


த்தாண்டு கால அமீரக வாழ்க்கையில் நண்பர்களுடன் இப்தார் விருந்து சாப்பிட்டது நேற்றுத்தான். ஆசிப் அண்ணனின் இல்லத்தில் அமீரக எழுத்தாளர் குழுமத்தின் நண்பர்கள் கிட்டத்தட்ட நாற்பது பேருடன் கொண்டாட்டமான இப்தார் நாளாக / இரவாக நேற்றைய தினம் அமைந்தது.

நோன்பு திறப்புக்குப் பின் மனம் திறந்த உரையாடல்கள் எப்போதும் போலில்லாமல் சற்றே வித்தியாசமாய்... அதிக நேரம் எடுத்துக் கொள்ளாவிட்டாலும் எல்லாருமே பேசினார்கள். ஒரு வருடத்துக்கும் மேலான நட்பு வட்டத்தில் நான் கூட நேற்று ரெண்டு நிமிடம் பேசியிருக்கிறேன்.

சிலர் ரம்ஜான் குறித்துப் பேசினார்கள்... சிலர் பொதுவாகப் பேசினார்கள். இரண்டு மணி நேரத்துக்கு இந்தப் பேச்சு கேலியும் கிண்டலுமாய் நகர்ந்தது.

சிறப்பு விருந்தினராய்க் கலந்து கொண்ட இலங்கையைச் சேர்ந்த எழுத்தாளர் காப்பியக்கோ ஜின்னா ஷர்புத்தீன் ஐயா அவர்களைப் பற்றிய அறிமுகத்தில் இதுவரை பதினோரு காப்பியங்கள் எழுதியிருப்பதாகச் சொன்னார்கள். 

அவர் பேசும் போது நியூசிலாந்தில் இருக்கும் மகன் வீட்டுக்குப் போனபோது நாலு சுவற்றுக்குள் இருக்க வேண்டிய சூழலில் வலைத்தளத்தில் தேடி ரவிவர்மாவின் ஓவியம் ஒன்றை எடுத்து அதுக்கு விமர்சனத்தை கவிதை வடிவில் யாப்பிலக்கணத்தில் எழுதி முகனூலில் பகிர்ந்தபோது பெரிய வரவேற்ப்பு இருந்ததாகவும் அதன் பின் அந்த ஓவியங்களுக்கு நிறைய எழுதி வைத்திருப்பதாகவும் சொன்னார்.

யாப்பு குறித்த வகுப்பை நான் எடுக்கிறேன்... நீங்க ஏற்பாடு செய்யுங்கள்... எனக்குப் பணமெல்லாம் தர வேண்டாம்... என்னை இந்த நிலைக்குக் கொண்டு வந்தது தமிழ்... அதை நாலு பேருக்குச் சொல்லிக் கொடுத்துச் செல்வதில்தான் எனக்கு மகிழ்ச்சியே என்றார்.

அவரிடம் ஆசிப் அண்ணன் சில புத்தகங்களை நினைவுப் பரிசாக கொடுத்தபோது... எனது மனைவி தீவிர வாசிப்பாளர்... இரவில் வாசித்துவிட்டுப் படுக்க அதிக நேரமாகும்... பெரும்பாலான நாட்களில் புத்தகத்தையும் கண்ணாடியையும் எடுத்து வைப்பது நானாகத்தான் இருக்கும் என்றார். இந்த வயதில் வாசிப்பின் மீதான அவர்களின் நேசிப்பு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

எப்போது எங்களின் வாசிப்புக்காக நிறைய புத்தகங்களை எடுத்துச் செல்வோம். அடிக்கடி இங்கு வருபவன் என்றாலும் தற்போதைய இலங்கைச் சூழலில் புத்தகங்களைக் கொண்டு வந்து அதில் ஏதேனும் சின்னதாய் வித்தியாசம் தெரிந்தால் அதிக பிரச்சினையைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்பதால் எதுவும் கொண்டு வரவில்லை... இந்தப் புத்தகங்கள் என் மனைவிக்கு வாசிக்கக் கிடைத்ததில் மகிழ்ச்சி என்றார்.

இலங்கையில் தமிழ்ச் சங்கத்தில் முப்பது ஆண்டுக்கு மேல் பொறுப்பில் இருப்பதாகவும் அதில் இருக்கும் ஒரே ஒரு முஸ்லீம் நாந்தான் என்றும் சொன்னவர், நாலைந்து தமிழ்ப் புரபஸர்கள் இருப்பதாகவும் அவர்களுக்கு எல்லாம் யாப்பு குறித்துச் சொன்னதாகவும்  சொன்னார்.

அவரின் பேராசிரியர் ஹோட்டலில் சாப்பிட்டுக் கை துடைக்க கொடுக்கப்படும் தினசரி கட்டிங் பேப்பரை கை துடைக்கும் முன் வாசித்துப் பார் என்று சொன்னதை இன்று கடைபிடிப்பதாகவும், தன் மனைவி புத்தகம் இல்லாததால் தமிழ் பேப்பரை வாங்கிக் கொடுங்கள் என வாங்கி வாசிப்பதாகவும் சொன்னார். 

இங்கு நிறையப் பேர் எழுத்தாளர்களாய் இருக்கிறீர்கள்... எழுத்தாளனுக்கு முக்கியம் வாசிப்பு... அதிகமாக வாசியுங்கள் என்று சொன்னார்.

ஆசிப் அண்ணன் எழுதிய ஒரு சிறுகதைக்கு தான் ரசிகன் என்றும் அவர் சிறுகதைகள் நிறைய எழுத வேண்டும் என்றும் சொன்னார். 

சும்மா வார்த்தைகளை மடக்கிப் போட்டு எழுதுதல் என்பது கவிதை இல்லை.... யாப்புத் தெரியாமல் கவிதை எழுத முடியாது என சுரேஷ் அண்ணன் சொன்னதை காப்பியக்கோ அவர்களும் சொன்னார்கள். கண்டிப்பாக யாப்புத் தெரிந்திருக்க வேண்டும் என்று சொன்னார்.

தற்போது கம்பராமாயணத்தைப் பற்றி எழுத ஆரம்பித்திருப்பதாகச் சொன்னார்.  குறிப்பாக தமிழ் மீது இலங்கைத் தமிழர்களுக்கு எப்போதும் கூடுதல் மரியாதை உண்டு... தமிழ் மீதான காதல் அவரின் பேச்சில் வழிந்தோடியது. இலங்கைத் தமிழ் கேட்க அழகாக இருக்கும் என்பதும் சிறப்பு.

இலங்கையின் இன்றைய நிலை குறித்த பேச்சு வரும்போது அது குறித்து ஏதோ பேச வந்தவர், கண்கலங்கினார்... என்னால் பேச இயலாது என்று சொல்லிவிட்டார்.

இலங்கை மக்களுக்காய் இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலியுடன் நிகழ்வு முடிந்தது.

பிரியாணியை ஒரு கட்டுக் கட்டி விட்டு... வீட்டுக்கும் கட்டிக் கொண்டு நடையைக் கட்டினோம்.

அடுத்தது எப்பவும் போல் கீழே வந்து டீச்சாப்பிட்டபடி ஒரு மணி நேரத்துக்கும் மேல் பேச்சு சிரிப்பும் கோபமும் நகர்ந்தது.

அமீரக வாழ்க்கையில் வேலை, அறை. வாசிப்பு, வலைப்பூவில் கிறுக்கல் என நகர்ந்து கொண்டிருந்த காலத்தை அமீரக எழுத்தாளர்  குழுமத்துக்குள் இணைந்த பின்தான் சற்றே வெளியிடத்தில் நகர்த்திச் செல்ல முடிகிறது. மாதத்தில் இரண்டு முறையேனும் சந்திப்பு என்றாகிவிட்டிருக்கிறது.

வேலையின் சுமை, குடும்பப் பிரச்சினைகள் என எல்லாவற்றையும் சுமக்கும் விடுமுறை தினங்கள் இப்போது கொஞ்சமேனும் ஆசுவாசப்படுத்திக் கொள்ளும், அந்த வலிகளில் இருந்து சிறிது விலகி இருக்கச் செய்யும் நாட்களாய் மாறியிருக்கிறது.

இந்தக் குழுமத்துக்குள்ளும் பிரச்சினைகள் இல்லாமல் இல்லை... அடித்துக் கொள்வதும் அணைத்துக் கொள்வதும் இங்கும் இருக்கு... நேரில் பார்க்கும் போது பாசமாய் கட்டியணைப்பதில் கரைந்து விடுகிறது அதுவரை அடித்து ஆடிய  அத்தனை பிரச்சினைகளும்...  அதுதானே வேண்டும்.

இந்தப் பிரியம் சாதி, மதம் பார்த்து வருவதில்லை... அதற்கும் மேலானது...  இந்த நட்பைத் தவிர, நேசத்தைத் தவிர வேறென்னதைச் சுமந்து செல்லப் போகிறோம்... எனக்கெல்லாம் எப்போது நட்பு அதிகம்... இப்போதும் ஊருக்குப் போனால் உறவுகளைப் பார்ப்பதைவிட நட்புக்களைப் பார்ப்பதுதான் அதிகம்...

இருக்கும் வரை அன்போடு இருப்போம் என்பதை ஒவ்வொருமுறையும் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறது அமீரக எழுத்தாளர் குழுமத்தின் நண்பர்களின் நேசம்.

எங்களை எல்லாம் இடங்களுக்குத் தேடி வந்து அழைத்துச் செல்லும் பால்கரசு எப்போதும் நன்றிக்குரியவர். அவர் இல்லையென்றால் துபாய்/ ஷார்ஜா என்று சென்று வருதல் என்பது கடினமே. இரவு ரெண்டு மணிக்கு அபுதாபியில் கொண்டு வந்து விட்டுவிட்டு அவர் முஸாபா செல்லுதல் என்பது நேசத்தின் அடையாளமே ஒழிய வெறொன்றும் இல்லை.

தொடரட்டும் இந்த நட்பும் பாசமும்.
-'பரிவை' சே.குமார்.

ஞாயிறு, 12 மே, 2019

காதலே... காதலே... (பிரதிலிபிக்கு எழுதிய கதை)

Image result for காதல்

"நீ அவளைக் காதலிக்கிறியா...?" அப்பாவிடமிருந்து இப்படி ஒரு கேள்வி என்னை நோக்கி வரும் என்பதை நான் எதிர் பார்க்கவில்லை.

பதில் சொல்லாது தரையைப் பார்த்தபடி நின்றேன்.

"உங்கிட்டதான் கேக்குறேன்... காது கேக்குமில்ல... கேட்டதுக்கு எனக்குப் பதில் இப்ப வரணும்..? இல்லைன்னா..." கோபத்தோடு பேசினார் என்பதைவிட கத்தினார் என்பதே பொருந்தும்.

அம்மா ஒரு பக்கம் பேசாமல் வாய் பொத்தி நின்றாள். எதாவது பேசினாள் என்றால் நீ வளர்த்த லட்சணம்தானே இதுன்னு தன் மீது பாய்ந்து விடுவார் என்பதை உணர்ந்தே ஒதுங்கி நின்றாள்.

அண்ணனோ தனக்கு இதில் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதைப் போல ஹெட்செட் மாட்டி பாட்டுக் கேட்டுக் கொண்டிருந்தான். அவன் அங்கு இருந்ததே அபூர்வம்... எப்பவும் அறைக்குள்ளயே அடைந்து கிடப்பதுதான் அவனுக்குப் பிடிக்கும். வீட்டில் இருந்தால் மொபைல்தான் அவனின் உலகம்.

அக்கா என்னை முறைத்துக் கொண்டு கதவோரத்தில் நின்றாள். அவள் அப்பா செல்லம் என்பதால் அவரிடம் திட்டே வாங்காதவள் என்ற பெருமை எங்கள் மூவரில் அவளுக்கு உண்டு.

எல்லாரையும் தலை தூக்கி ஒரு முறை பார்த்துவிட்டு நானும் அப்பா யாரையோ விசாரிக்கிறார் என்பதைப் போல அருகில் கிடந்த குமுதத்தின் அட்டைப் பட அஞ்சலியை ரசித்துக் கொண்டிருந்தேன்.

"என்னடா... தெனாவெட்டா உக்காந்திருக்கே... உன்னைத்தானே கேட்கிறேன்... என்னவோ எருமை மாட்டு மேல மழை பேய்ஞ்ச மாதிரி உக்காந்திருக்கே.... அவளை நீ விரும்புறியான்னு கேட்டேன்...? எனக்கு இப்ப பதில் தெரியணும்...பதில் சொல்லாம நீ இங்க இருந்து எந்திரிச்சிப் போகமுடியாது... சொல்லிப்புட்டேன்..." கர்ஜித்தார்.

'முதல்ல காதலிக்கிறியான்னு கேட்டீங்க... இப்ப விரும்புறியான்னு கேட்கிறீங்க.. உங்க வார்த்தையில் பிழை உள்ளது தந்தையே'ன்னு சொல்ல நினைத்தேன்... சொன்னா அவர் உட்கார்ந்திருக்கிற நாற்காலி எகிறி விழும்... எனக்கு அடி விழும் என்பதை அறிந்தவன் என்பதால் அதை எனக்குள்ளே சொல்லிக் கொண்டேன்.

இப்ப அவருக்கு ஏதாவது பதில் சொல்லியே ஆகவேண்டும்... தோளுக்கு மேல வளர்ந்துட்டேன்னோ என்னவோ இதுவரை கை ஓங்காமல் உட்கார்ந்த இடத்திலிருந்து கேட்கிறார்... எத்தனையோ தடவை பெல்ட் பிய்ந்து போற அளவுக்கு அடிச்சிருக்கார்...

சின்ன வயசுல ஒரு தடவை கோவிலுக்குப் பின்னால லதாவோட விளையாண்டுக்கிட்டு இருந்தப்போ அறியாத வயசுலங்கிறதைவிட ஆர்வக் கோளாறுல அவ மார்பை பிடிச்சதைப் பார்த்துட்டு இழுத்துக்கிட்டு வந்து கட்டி வச்சி உதைச்சவருதான் இவரு... எதையாச்சும் சொல்லித் தொலைக்கணுமே... இல்லைன்னு சொன்னா... நீ அவளை லவ் பண்றது எனக்குத் தெரியும்ன்னு ஆரம்பிப்பாரு... ஆமான்னு சொன்னா அவ என்ன ஆளுகன்னு தெரியுமான்னு கத்திக்கிட்டு இழுத்துப் போட்டு மிதிப்பாரு... இப்ப என்ன சொல்லுறது... சொல்லலைன்னா இங்க இருந்து போகவிடமாட்டாரு... ம்....' என்று யோசித்தபடி அஞ்சலியை அப்படியும் இப்படியும் திருப்பிப் பார்த்தேன்.

"பாருடி... எம்புட்டு நேரமாக் கத்துறேன்... பதில் சொல்றானா பாத்தியா... இப்பத்தான் அந்த நடிகையை அளவெடுக்குறான்... சொல்லுவானா... மாட்டானான்னு கேளுடி... செல்லங் கொடுத்து வளர்த்து கெடுத்து வச்சிருக்கேல்ல... மூத்தவனைப் பாரு... படிச்சி முடிச்சிட்டு வேலைக்குப் போறான்... இது மாதிரி எவ கூடவாச்சும் சுத்துனான்னு யாராச்சும் சொல்ல முடியுமா..?" என்றபடி அம்மா ஏன் ஒதுங்கி நிற்கிறாள் என அவளையும் சீனுக்குள் இழுத்துப் போட்டார்.

அப்பா சொன்னதும் காதில் மாட்டியிருந்த ஹெட்போனையும் மீறி மந்தகாசப் புன்னகையை என்னைப் பார்த்து வீசிவிட்டு மீண்டும் ராசாவுக்குள்ளோ ரஹ்மானுக்குள்ளோ ஐக்கியமானான் அண்ணன்.

"மூனையும் நாந்தானே வளர்த்தேன்... என்னமோ சனியன் இதுதான் இப்புடி வந்து பொறந்திருக்கு..." என்று ஆரம்பித்த அம்மா "அடேய் மூதேவி... அவரு கேட்டுக்கிட்டே இருக்காரு... நீ பேசாம உக்காந்திருக்கே.... அப்ப அவருக்கு என்ன மரியாதை இருக்கு... ஆமா இல்லைன்னு சொல்லித் தொலைய வேண்டியதுதானே..."

"என்ன சொன்னாலும் திட்டப் போறாரு... என்னத்தைச் சொல்லச் சொல்றே..?" சிரிக்காமல் கேட்டேன்.

சிரித்தால் அப்பா கையில் வைத்திருக்கும் காபி டம்ளர் குல்தீப் யாதவின் பந்து போல் என் முகத்தைப் பதம் பார்க்கலாம் என்பதை அறிந்தே வைத்திருந்தேன். சற்றே ஒதுங்கியும் அமர்ந்து கொண்டேன். அவர் வீசினால் வைடு பாலாகவும் வாய்ப்புண்டு இப்போது என்பதில் கொஞ்சம் நிம்மதி.

"எனக்கு அவளை இவன் விரும்புறானான்னு தெரிஞ்சாகணும்... அம்புட்டுத்தான்..." தீர்மானமாய்ச் சொல்லியவர் அக்காவிடம் "அந்த பெல்டை எடுத்துக்கிட்டு வா இங்க... இனி விசாரிக்கிற விதமா விசாரிச்சாத்தான் சரி வரும்" என்ற போது அவர் உக்கிரத்துக்குச் செல்கிறார் என்பதை உணர்ந்தேன்.

'ஆஹா... பதினெட்டாம் படிக்கருப்பன் தயாராயிட்டான்... எந்த நேரமும் இங்கு இடி முழங்கலாம்... ஆட ஆரம்பிச்சிட்டா அப்புறம் சிக்ஸும் போரும்தான்... கிரவுண்ட்டை ரணகளமாக்கிடுவாரு... மனுசன் அவ்வளவு சீக்கிரம் போல்ட் ஆகமாட்டாரு... ஆமா... இவரு இம்புட்டு உக்கிரமாகிற அளவுக்கு எவன் போட்டுக் கொடுத்திருப்பான்... அவன் மட்டும் கையில சிக்கினா மவனே தொலைஞ்சான்..' என்று மனசுக்குள் நினைத்தவன் "ஆமா..." என்றேன் சத்தமாக.

"ஆமான்னா.... என்ன அர்த்தம்..? பண்றேன்னு சொல்றியா பண்ணலைன்னு சொல்றியா...?" கர்ஜித்தார்.

'காதலிக்கிறியான்னு ஆரம்பிச்சீங்க... விரும்புறியான்னு கேட்டீங்க... நான் ஆமாங்கிறேன்... இப்ப பண்ணுறியாங்கிறீங்க... சீக்கிரம் முடிச்சி விடுங்க.. வேலை இருக்குல்ல...' இதெல்லாம் மைண்ட் வாய்ஸ்ங்க... சத்தமாச் சொல்லியிருந்தா சங்குதான்னு தெரியாமயா இருப்போம்.

அப்பாவின் கையில் பெல்ட் அமைதியாய் அமர்ந்திருந்தது... சில நாட்களுக்கு முன்னாலதான் புதுசு வாங்கியிருந்தார். எப்பவுமே சுத்தமான தோல் பெல்ட்த்தான் வாங்குவார். அடிச்சாருன்னா பிச்சிக்கும்ன்னு தெரியும். அவரோட யார்க்கர் பாலை எப்படித் தவிர்ப்பதுன்னு யோசிக்க ஆரம்பித்தேன்.

'பெல்ட்டையா எடுத்தாந்து கொடுக்கிறே... இரு... நம்ம செல்வி அத்தை மகன் வீட்டுக்கு அடிக்கடி வர்றதும் நீ குலையுறதும் எனக்குத் தெரியாதுன்னா நினைச்சே... இரு ஒரு நாளைக்கு ஆதாரத்தோட போட்டுக் கொடுக்கிறேன்...' என மனசுக்குள் திட்டியபடி அக்காவை முறைத்தான். அவள் நான் அடி வாங்குவதைப் பார்க்கும் ஆவலில் இருப்பதாய்க் காட்டிக் கொண்டாள்.

"அவரை வெறி ஏத்திப் பாக்காதே... அவரு வெறியானாருன்னா என்ன ஆகும்ன்னு உனக்கே தெரியும்ல்ல... கேட்டதுக்குப் பதில் சொல்லு.... அவளோட பேச மாட்டேன்னு சத்தியம் பண்ணிக் கொடு..." கோவில்ல சாமி ஆடுறவரைப் பார்த்து பக்கத்துல இருக்கவரு ஆத்தா உக்கிரமாயிருக்கான்னு ஏத்தி விடுற மாதிரி அம்மா அவ பங்குக்கு சாம்பிராணி போட்டாள்.

அப்பாவின் கண்கள் சிவப்பாக மாறியிருந்தது. எப்பவும் பந்து வீசலாம்... களத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

"அதான் சொன்னேன்ல ஆமான்னு..." கொஞ்சம் சத்தமாகச் சொன்னேன்... எனக்குப் பயமில்லை என்பதாய்க் காட்டிக் கொள்ள... ஆனால் உள்ளுக்குள் சோயிப் அக்தர் பாலை எதிர் கொள்ள இருக்கும் கும்ளேயின் மனநிலையில்தான் இருந்தேன்.

"என்னது ஆமாவா... உனக்கு முன்னாடி ரெண்டு பேரு இருக்குதுக... ரெண்டும் ரெண்டு டிகிரி படிச்சிருக்குக.. உங்கண்ணன் நல்ல வேலையில இருக்கான்... அக்கா வேலை தேடிக்கிட்டு இருக்கா... அதுகளே லவ்வுகிவ்வு சுத்தாம இருக்குதுக... உனக்கு இந்த வயசுல லவ்வு கேக்குதோ... லவ்வு..." எனக் கத்தியபடி எழுந்தார்.

'இப்பல்லாம் பள்ளிக்கூடம் படிக்கையிலையே லவ் பண்ணுதுக.. பப்ளிக்ல லிப் டு லிப் கிஸ் கொடுத்துக்கிட்டு நிக்கிதுக.. காலேசு படிக்கிற எனக்கு லவ்வு கேக்குற வயசில்லையாமே..' என நினைத்துக் கொண்டேன்.

பெல்டைக் கையில் பிடித்தபடி "படிக்க அனுப்புனா... காதல்... அதுவும் எவ கூட....ம்...." என்றவர் அதை கையில் லாவகமாச் சுற்றிக் கொண்டார்.

"கொக்கா மக்கா... குமுறப் போறாரு...' அடிபட்டுப் பிய்யிற இடம் வெளிய தெரியக்கூடாது என்பதில் கவனமாய் முதுகைக் காட்டியபடி, 'ஸ்டார்ட் மியூசிக்...' என மனசுக்குள் சொல்லிக் கொண்டேன்.

"இருங்க... வயசு வந்த புள்ளையை அடிக்க கை ஓங்காம... உக்காருங்க... அட உக்காருங்கன்னா...." எனக்கு விவரம் தெரிந்து அப்பாவை முதல் முறையாக அம்மா அடக்கி உட்கார வைத்தாள்.

யாருக்குமே அடங்காத அப்பாவும் முதல்முறையாக அடங்கிப் போனார். சை இத்தனை வருசமா இப்படிச் சொல்லாம வேஸ்ட் பண்ணிட்டோமேன்னு அம்மா நினைத்திருக்கக் கூடும்.

"டேய்... என்ன நெஞ்சழுத்தம் உனக்கு அவருக்கிட்டயே அவளை விரும்புறேன்னு தெனாவெட்டாச் சொல்லுறே.." அம்மா கோபமாகக் கேட்டாள்.

"அம்மா அவருதானே லவ் பண்ணுறியான்னு கேட்டார்... நான் பண்றேன்னு உண்மையைச் சொன்னேன்... இதிலென்ன தப்பு இருக்கு..."

"என்ன தப்பிருக்கா.... உனக்கு முன்னாடி ரெண்டு பேர் இருக்குதுகளே.... அதுக இப்புடியா தெருப் பொறக்குச்சுக... லவ் பண்றாராம் லவ்வு..." அம்மாதான் கத்தினாள்.

அப்பா பேசாமல் என்னை முறைத்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தார். அவருக்குள் பெல்ட்டுக்கு வேலை கொடுக்கும் ஆவல் அதிகமிருப்பது கண்ணில் தெரிந்தது.

"நானா அவங்க ரெண்டு பேரையும் லவ் பண்ணாதீங்கன்னு சொன்னேன்.... இந்த உம்முனா மூஞ்சிகளை யாருக்குப் பிடிக்கும்... அதுக்கெல்லாம் முகக்கலை வேணும்... எனக்கு அவளைப் பிடிச்சிச்சு... அவளுக்கும் என்னைப் பிடிச்சிச்சு... லவ் பண்றோம்... இதுல என்ன தப்பிருக்கு..." அப்பா அடங்கியிருக்கவும் பேச்சில் வேகத்தைக் கூட்டியதின் பலனை அடுத்த நொடியே உணர்ந்தேன்.

"அடங்க்......" என எழுந்தவர் அம்மாவும் அக்காவும் மறித்தாலும் அதையும் மீறி பெல்ட்டால் முதுகில் நாலைந்து அடி அடித்துவிட்டார்.

அடிபட்ட பின் எனக்கு வலியைவிட கௌரவமும் கோபமும்தான் அதிகமாகக் கல்லாக் கட்டியது.

"ஆமா... அவளைத்தான் லவ் பண்றேன்... அவளைத்தான் கட்டிப்பேன்... இப்ப அதுக்கு என்ன..." கத்தினேன். வயசின் வீரியம் முதல் முறை அப்பாவுக்கு முன் பொங்கியது.

என் சத்ததைக் கேட்டு காதிலிருந்த ஹெட்போனைக் கழட்டி வைத்துவிட்டு "அப்பா இதெல்லாம் திருந்தாது... நீங்க ஏன் வீணாவுல எனர்ஜியைப் போக்குறீங்க... அதுவா பட்டுத் திருந்தி வரும்... விட்டுட்டு வேலையைப் பாருங்க..." என அப்பாவை அடக்கினான் அண்ணன்.

என்னைத் திட்டினால் என்ன நடக்கும் என்பதை அறிவான் அவன். இரண்டு முறை அலுவலகத் தோழி ரம்யாவுடன் வண்டியில் போகும்போது பார்த்திருக்கிறேன். போட்டோவும் எடுத்து வைத்திருக்கிறேன். அது நட்பென்பதை அறிந்தவன்தான் என்றாலும் இங்கு ஆதாரத்துடன் வேறு விதமாகப் போட்டுக் கொடுக்கவும் தயங்கமாட்டேன் என்பதை அவன் உணர்ந்தே இருந்தான்.

அப்பாவை அடக்கியதில் தன் கடமை முடிந்ததென அறைக்குள் சென்று தாழிட்டுக் கொண்டான்.

"வாயை மூடிக்கிட்டு இருக்க மாட்டியாடா... அப்பாக்கிட்ட எதுத்துக்கிட்டு நிக்கிறே.... அப்பா.. நீங்க உக்காருங்கப்பா... அவன் என்ன சின்னப் பிள்ளையா.... பெல்ட்டெல்லாம் வச்சி அடிச்சிக்கிட்டு..." இருவரையும் சேர்த்துத் திட்டினாள் அக்கா.

'நீந்தானே பெல்ட்டை எடுத்துக் கொண்டு வந்து கொடுத்தே... இப்ப எங்கே அத்தை மகன் கதையை சொல்லிடுவேனோன்னு சப்பைக் கட்டு கட்டுறே...' என்று நினைத்தபடி அவளைப் பார்த்து அந்தச் சூழலிலும் சிரித்தேன். அவளுக்கு என் சிரிப்பின் பின்னணி புரிய வாயை மூடிக் கொண்டு வேறு பக்கம் பார்த்தாள்.

அதான் எல்லாம் முடிஞ்சிருச்சே.... எஸ்கேப் ஆவோம் என மெல்ல அங்கிருந்து எழுந்தேன்.

"அவளை இனிப் பார்க்க மாட்டேன்னு சொல்லி சத்தியம் பண்ணிட்டுப் போகச் சொல்லுடி அவனை..." அப்பா விடுவதாய் இல்லை.

"எதுக்கு சத்தியம் பண்ணனும்..? எதுக்கு அவளைப் பார்க்காம இருக்கணும்...? எனக்கு அவ முக்கியம்... என்னோட காதலை எல்லாம் உங்களுக்காக முறிக்க முடியாது... அடிச்சா பயந்திருவோமாக்கும்... அது அப்போ... இப்ப என்ன அவளைக் கூட்டிக்கிட்டா ஓடப் போறேன்... இந்த ரெண்டு முண்டங்களுக்கும் காலாகாலத்துல கல்யாணம் பண்ணி வையுங்க... என்னோட மனசுக்குப் புடிச்சவளை உங்க கௌரவம் கெடாம இவுக கல்யாணத்துக்கு அப்புறம்... என்னோட படிப்பு முடிஞ்சி... வேலைக்கும் சேர்ந்துட்டுத்தான் கட்டிப்பேன்...அப்ப சம்மதிக்கிறதும் சம்மதிக்காததும் உங்க விருப்பம்... சத்தியமெல்லம் பண்ண முடியாது..." சொல்லிக் கொண்டே வாசலுக்குப் போனேன்.

"இதெல்லாம் புள்ளையே இல்லை... இதெல்லாம் வாழ்க்கையில முன்னேறவா போவுது... அவ பின்னாடி சுத்தி கடைசியில தெருவுலதான் திரியப் போகுது"ன்னு அப்பா கத்திக் கொண்டிருந்தது வாசலுக்குக் கேட்டது.

"விடுங்க அவன் அப்படித்தான் பேசுவான்... நாளைக்கே இனி நான் அவளைப் பார்க்கமாட்டேன்னு சொல்லுவான் பாருங்க... அவன் நம்ம புள்ளைங்க..." அம்மா அப்பாவின் கோவத்தைக் குறைக்க முயற்சித்தாள்.

"அவன் எவளை விரும்புறான்னு தெரியுமாடி உனக்கு.... இதை நம்ம சாதி சனம் ஏத்துக்குங்கிறியா.. காறித் துப்பும் தெரியுமா... நாம இந்த ஊருக்குள்ளயே இருக்க முடியாது..." அப்பாவுக்கு கௌரவம் என்னும் கிரீடம் கீழே விழுந்து விடுமென இப்பவே பயம் வந்துவிட்டதை நினைத்து அந்தச் சூழலிலும் எனக்குச் சிரிப்பு வந்தது.

"அவ எவளாவோ இருக்கட்டும்.. நம்ம புள்ள அந்த இடையங்காளி புண்ணியத்துல நாளைக்கே அவகூட பேசுறதை நிறுத்திருவான் பாருங்க..." அம்மா அப்போதைய சூழலை மாற்ற அம்மனையும் துணைக்கு அழைத்தாள்.

அவர்களின் பேச்சுக்களைக் கேட்டபடி கொஞ்ச நேரம் வாசலருகே நின்றேன்.

வானம் இருட்டிக் கொண்டு எப்போதும் மழை வரலாம் என்பதாய் இருந்தது.

எங்கோ மழை பெய்கிறது போலும் மழை நேரத்து மண் வாசம் காற்றில் கலந்திருந்தது. அதைச் சுவாசித்தல் ஒரு சுகம்தான்... மூச்சை இழுத்து காற்றை நிரப்பிக் கொண்டேன். மனசுக்குள் ஏதோ விடை பெற்றது போலொரு விடுதலை.

வீட்டை ஒட்டி நிற்கும் மரங்களுக்குள் நுழைந்தேன். தென்னங்கீற்றும் தென்றல் காற்றும் கைகுலுக்க, மழைக்காற்று உடலைத் தழுவியதில் குளுமை இருந்தது.

அப்பா விளாசியதில் முதுகில் லேசாக பிய்ந்திருந்த இடத்தில் காற்றுப் பட்டதும் எரிந்தது.

'ஏய் லூசு ஏன் இப்படி அடி வாங்குறே...என்னைக் காதலிக்கலைன்னு பொய் சத்தியம் பண்ணியிருக்கலாமே...' என அவள் முன் உச்சி முடி களைத்துக் கேட்பது போல் மனக்கனவு எனக்குள்...

காற்று முடியைக் கலைத்திருந்தது... ரசித்துக் கொண்டேன்... இந்தக் காதல்தான் எத்தனை சுகமானது இந்த மண் மணக்கும் காற்றைப் போல.

ஏனோ அவளை அழைக்க வேண்டும் போல் தோன்ற...

அழைத்தேன்.

"என்ன இந்த நேரத்துல... அதுவும் லீவு நாள்ல ..." எதிர்முனையில் சிரித்தபடிக் கேட்டாள் அவள்.

"என்னமோ உனக்குப் போன் பண்ணனும்ன்னு தோணுச்சு.... அதான்... ஆமா... என்ன பண்ணுறே....?" .

"ம்... வீட்லதான் இருக்கேன்... சொல்லு..." என்றாள்.

"ஒண்ணுமில்லை... சும்மாதான்... அடிச்சேன்..." என்றேன்.

வீட்டு நிகழ்வுகளை அவளிடம் சொல்ல ஏனோ மனம் வரவில்லை... அவளை வருத்தப்பட வைப்பதில் மனசுக்கு விருப்பம் இல்லை.

"ம்... என் நினைப்பு உனக்கு வந்திருக்கு பாரு... அதான் ட்ரூ லவ்... இப்பத்தான் உனக்குப் போன் பண்ணனும்ன்னு நினைச்சேன்...."

"பாத்தியா மனசு ரெண்டும் ஒரே மாதிரி நினைக்கிது..." சிரிப்பை வரவழைத்துக் கொண்டு பேசினேன்.

"ம்..."

"என்ன ம்...?"

"நாம பழகுறது வீட்டுக்குத் தெரிஞ்சாச்சு..." என நான் மறைக்க நினைத்ததை விசும்பலுடன் மெல்லச் சொல்ல ஆரம்பித்தாள் மெஹருன்னிசா.

-'பரிவை' சே.குமார்.

நான் ஏன் எழுதுகிறேன்? (பிரதிலிபிக்கு எழுதியது)

ழுத்து எல்லாருக்குள்ளும் இருக்கக் கூடியதுதான்... என்னால் எழுத முடியும்... உன்னால் எழுத முடியாது... என்பதெல்லாம் உண்மையில்லை, எல்லாராலும் எழுத முடியும்... நாம் முயற்சிப்பதில்லை... அவ்வளவே.

நானெல்லாம் பிறவி எழுத்தாளன் கிடையாது... பள்ளிப்படிப்பு முடிக்கும் வரை எழுதவும் இல்லை... பள்ளிப் பருவத்தில் பலர் கவிதைகள் எழுதித் தள்ளுவார்கள்... சிலர் கதைகளைக் கண் முன்னே விரிப்பார்கள்... நமக்கு அதெல்லாம் வராதென ஒதுங்கியிருந்தவன் நான். ஐந்தாவதில் அழகாய் கவிதை எழுதியவனையும் பார்த்திருக்கிறேன்.

கல்லூரியில் படிக்கும் போது என் நண்பன் முருகன் அருமையாகக் கதை எழுதுவான்... கல்லூரிகளுக்கு இடையிலான போட்டிகள், துறைவாரியான போட்டிகளில் கதைகளுக்குப் பரிசும் பேராசிரியர்களிடம் பாராட்டும் பெறுவான். இரண்டாம் ஆண்டு படிக்கும்போது ஒரு மாலை நேரம் எங்கள் பேராசான் மு.பழனி இராகுலதாசனுடன் எப்பவும் போல் சைக்கிளை உருட்டிக் கொண்டு பேசிக் கொண்டு சென்றோம். இது தினமும் நடக்கும் செயல்தான்.

அப்போது என்னய்யா முருகன் கதையெல்லாம் எழுது பரிசுகளைக் குவிக்கிறாரு... ரொம்பச் சிறப்பா எழுதுறார்... நீங்களும் எழுதலாமே எனக் கேட்க, நானா எனச் சிரித்தபோது, எல்லாரும் எழுதலாம் இதில் நானா என்ற கேள்வி எதற்கு... நீங்க கதை எழுதுறீங்க என்றார்.

அதன் பின் நான் எழுதிக் கொண்டு போய்க் கொடுத்த காதல் கதை அபத்தம் என்று தெரிந்தும் நல்லாயிருக்கு இன்னும் எழுதுங்க என்றார். அவர் போட்ட விதைதான் அதன் பின் தொடர்ந்து எழுத வைத்தது. 

முதல் கவிதை தாமரையில் வந்தது. கதைகள் பத்திரிக்கைகளில் வர ஆரம்பித்தன... அதற்குச் சன்மானமாக 50 ரூபாய் கிடைப்பது பெரும் மகிழ்வைக் கொடுத்தது. எனது சிறுகதை பத்திரிக்கையில் வந்தால் அந்த மாத கலையிலக்கிய மன்றக் கூட்டத்தில் வாசிக்க வைப்பார். எது எழுதினாலும் திருத்திக் கொடுப்பார். அடிக்கடி மேடையேற்ற ஆசைப்படுவார். நான்தான் வெட்கத்தில் ஒதுங்கி நிற்பேன்.

வீட்டில் இருக்கும் போது கதை எழுதுகிறேன் என உட்கார்ந்தால் வயல்ல வேலை கிடக்கு, தம்பி இப்பத்தான் கதை எழுதுறேன்னு உக்காந்திருக்கு... இதுதானே நாளக்கி சோறு போடப்போகுது என அப்பா சத்தம் போடுவார். திட்டுக்கள்தான் அதிகம் வரும்... கதை பத்திரிக்கையில் வரும்போது மற்றவரிடம் சொல்லி மகிழ்வார். என்னை எழுத்தாளனாய் ஆக்கியதில் பெற்றோரைவிட என் கல்வித்தந்தைக்கே பெரும்பங்கு உண்டு.

கல்லூரிக்கால எழுத்தாளன் வாழ்க்கை அத்துடன் முடிவுக்கு வந்தது... எழுதும் எண்ணமில்லாமல் வாழ்க்கை நகர, திருமணத்துக்குப் பின் சென்னை வாழ்க்கை மீண்டும் எழுதும் எண்ணத்தை மனசுக்குள் மலர வைத்தது. அப்பப்ப கதைகள் எழுத ஆரம்பித்தேன்... பத்திரிக்கையில் வந்தது. நீண்ட கவிதைகள் எழுதிவதில் நாட்டம் குறைந்து ஹைக்கூ கவிதையில் நாட்டம் கூடியது.

வெளிநாட்டு வாழ்க்கையின் ஆரம்ப காலங்கள் வீட்டு நினைவுகளுடன் வெறுமையைச் சுமந்தன... எழுத்திலெல்லாம் நாட்டமில்லை... எதையோ இழந்தது போலான வாழ்க்கை... மகிழ்ச்சியில்லாத வாழ்க்கை... வெறுமையை வெறுக்க எதாவது செய்ய வேண்டும் என்ற சூழலில் படங்களாய் பார்த்துக் கழித்தவனுக்கு அதை விடுத்து வேறு பக்கமாக மனதைத் திருப்ப மீண்டும் எழுத ஆரம்பித்தேன்... ஒன்றுக்கு நான்கு வலைப்பக்கம் ஆரம்பித்து தொடர்ந்து எழுத ஆரம்பித்தேன். கதைகள், கவிதைகள், கட்டுரைகள், சினிமா என வெவ்வேறு விதமான களங்களில் எழுத ஆரம்பித்தேன்.

சிறுகதைப் போட்டிகளில் பரிசுகள்... மின்னிதழில் கதைகள், கவிதைகள் என என் களம் விரிந்தது. எனது கதைகளுக்கு என வாசிப்பவர்கள் தனியே இருந்தார்கள்... இருக்கிறார்கள் என்பது மகிழ்வைக் கொடுத்தது. எழுத்து என் வலியை, வேதனையை, வெறுமையைக் குறைத்தது. மனசுக்கு மகிழ்வைக் கொடுக்க ஆரம்பித்தது. எனது கதை, கட்டுரை என மின்னிதழ் நட்புக்கள் கேட்டு வாங்கிப் போடும் அளவுக்கு என் எழுத்து என்னை வளர்த்தது.

நிறைய எழுதினேன்... எழுதுகிறேன்... இப்போதெல்லாம் எழுதுவதென்பது அலுப்பாகத் தெரிவதில்லை... அது ஆனந்த அனுபவத்தையே கொடுக்கிறது. கதைக்கான கருவையோ... கதையின் போக்கையோ தீர்மானித்து எப்போதும் நான் எழுதுவதில்லை... என் எழுத்துத்தான் கதையின் போக்கையும் அதன் முடிவை தீர்மானிக்கிறது. எழுத வேண்டுமென அமர்ந்தால் எத்தனை பக்கம் என்றாலும் எழுதிவிட்டுத்தான் எழுவேன் என்பதைப் பெருமைக்காக அல்ல எழுத்து என்னை ஈர்த்து வைத்திருக்கிறது என்பதற்காகச் சொல்கிறேன்.

என் மகன் ஐந்தாவது படிக்கிறான்... சில நாள்கள் கதை எழுதினேன் என எதாவது எழுதி என்னிடம் வாசித்துக் காட்டுவான்... பெரும்பாலும் ஆங்கிலக் கதைகள்.. அது எப்படியான எழுத்தோ... அவனையும் கெடுங்க என அவனின் அம்மா திட்டினாலும் 'அருமை', 'செம' எனப் பாராட்டுவேன். சென்ற வாரத்தில் பள்ளியில் கொடுக்கப்பட்ட தலைப்புக்கு கதை எழுதி மூன்றாம் பரிசு பெற்றவன், அப்பாவுக்கு நான்தான் போட்டி என்று என் மகளிடம் சொல்லியிருக்கிறான். அதை நான் வரவேற்கிறேன்.

எனது எழுத்தை நல்லாயிருக்கு எனச் சொல்லி என்னை எழுத்தாளனாக்கிய எனது பேராசானும் தந்தையுமாகிய பேராசிரியர் பழனியைப் போல யாரேனும் உங்களுக்கு உரமாக, தூண்டுகோலாக இருக்கலாம். வெட்கமோ பயமோ இன்றி எழுதுங்கள்... ஒருநாள் உங்கள் எழுத்தும் பேசப்படும்.

நான் ஆரம்பத்தில் சொன்னது போல் எழுத்து என்பது எல்லாருக்குமானது... எல்லாராலும் எழுத முடியும்... ஆரம்பத்தில் ஒரு சில கதையோ... கட்டுரையோ... கவிதையோ... என்னடா எழுத்து இது என யோசிக்க வைக்கலாம். எழுத எழுத எழுத்து பட்டை தீட்டிய வைரமாகும். 

நீங்கள் நினைத்ததை எல்லாம் எழுத்தில் கொண்டு வரலாம். 

எழுத்து உங்களை கொண்டாட்ட மனநிலைக்கு கொண்டு செல்லும்... 

அது உங்களை மற்றவர்களால் கொண்டாடவும் வைக்கும்.

நான் எழுத ஆரம்பித்ததில் இருந்து தொடர்ந்து எழுதவில்லை என்றாலும் இப்போது தனிமை வாழ்க்கைக்கு மருந்தாக, வலி, வேதனை, வெறுமை, ஏக்கம், கவலை என எல்லாம் மறக்கடிக்கும் மருந்தாக இந்த எழுத்து இருக்கிறது என்பதே உண்மை. 

இன்றைய நிலையில் பலருக்கும் தெரிந்த எழுத்தாளனாய் என்னை ஆக்கி வைத்திருக்கிறது இந்த எழுத்து.

நன்றி.
-'பரிவை' சே.குமார்.