முந்தைய பதிவுகளைப் படிக்க...
66. பூகம்பம் ஆரம்பம்
முன்கதைச் சுருக்கம்
கிராமத்து ஏழைக் குடும்பத்துப் பையனான ராம்கி, கல்லூரி ரவுடி வைரவனின் தங்கை புவனாவைக் காதலிக்கிறான். சில காரணங்கள் இவர்களது காதல் வெளிச்சத்துக்கு வர இரண்டு பக்கமும் பிடி இறுகுகிறது. நாட்கள் நகர நகர ராம்கியின் அம்மா கொஞ்சம் இறங்கி வருகிறாள். புவனாவுக்கு அது கொஞ்சம் சந்தோஷத்தைக் கொடுத்தது. அண்ணன் வைரவனிடம் பேசலாம் என்ற முடிவுக்கு வந்து அதற்காக அவனிடம் பேச ஆரம்பித்தாள்.
இனி...
பர்சனலாப் பேசணும்ன்னு புவனா சொன்னதும் வைரவன் அவளை முறைத்துப் பார்த்தான்.
"என்ன... பேசணும்ன்னுதானே சொன்னேன்... அதுக்கு ஏன் இந்த மொறமொறைக்கிறே?"
"ம்... அப்படி என்ன நீ எங்கிட்ட பேசணும்?" கடுப்பாகக் கேட்டான்.
"அதான் பர்சனல்ன்னு சொன்னேன்ல்ல..."
"பர்சனல்ன்னா அப்புறம் எதுக்கு எங்கிட்ட பேசணுங்கிறே...? நீயே பேசிக்க வேண்டியதுதானே?"
"என்ன ஜோக்கடிக்கிறதா நினைப்பா... சரி... எப்ப பேசலாம் சொல்லு..."
"என்னடி நீ பேசணும்ன்னு சொல்லிட்டு என்னைய எப்ப பேசலாம்ன்னு கேக்கிறே... இது உனக்கு ஓவராத் தெரியலை..."
"எனக்கு பிரச்சினையில்ல... உனக்கு டைம் வேணுமில்ல..."
"ம்... இப்ப ப்ரீதான்... என்ன உனக்குப் பிரச்சினை... வழவழன்னு பேசமா அதை முதல்ல சொல்லு..."
"ஆமா இவரு ஊரு தலக்கட்டு... பஞ்சாயத்துல தீர்ப்புச் சொல்லப் போறாரு பாரு... பிரச்சினையைச் சொல்லவாம்... பிரச்சினையின்னு நான் சொன்னேனா... பேசணும்ன்னு சொன்னேன்..."
"சரி பேசு..."
"இங்கயா..." என்று இழுத்தவள் அம்மா தங்களைப் பார்க்கிறாளா என அடுப்படிப் பக்கம் நோட்டம் விட்டாள். இவர்களைச் சட்டை செய்யாது அவள் ஏதோ பண்ணிக் கொண்டிருந்தாள்...
"என்ன பதுங்குறே...?"
"பதுங்கவும் இல்ல... பாயவும் இல்ல... இங்க வேணாம்... நம்ம தோட்டத்துக்குப் போகலாமா? ப்ளீஸ் அண்ணா..."
"ஆத்தாடி அண்ணா மட்டும் போடாத தாயி... நீ அண்ணா போட்டா பெரிய ஆப்பா செதுக்கி வைச்சிருக்கேன்னு அர்த்தம்... ஆமா தோட்டத்துல போயி தனியாப் பேசுற அளவுக்கு பெர்சனலா... அப்படி என்னடி பெர்சனலு... ம்..."
"ம்... சொல்றதா இருந்தா இங்க சொல்லித் தொலச்சிருவேனுல்ல... பொதுவா போட்டு ஓடச்சா அதுக்குப் பேரு பெர்சனல் கிடையாது... வா... ப்ளீஸ்..."
"ம்... சரி போவோம்... பட் ஒன் கண்டிசன்..."
'என்ன தொர இங்கிலீஸ் பேசுது' என்று மனசுக்குள் நினைத்தவள் "எதாவது லாபாயிண்டெல்லாம் பேசிறாதே... எனக்கு பேசணும்ன்னு நினைச்சதெல்லாம் மறந்து போயிடும்..."
"ம்... நோ லா பாயிண்ட்ஸ்... பட்... அங்க நான் சுமோக் பண்ணுவேன்... அதை இங்க வந்து போட்டுக் கொடுக்கக் கூடாது...."
"ப்ப்பூ... இம்புட்டுத்தானா.... நான் சொல்லித்தான் தெரியணுமாக்கும்... அதான் எல்லாருக்கும் தெரியுமே... சரி வா..."
"எல்லாருக்கும் தெரியும்... பட் எனக்கு முன்னாடி சிகரெட் பிடிக்கிறான்னு போட்டுக் கொடுத்துடாதேன்னு சொன்னேன்.... ஓகே... வா போகலாம்..."
"அம்மா... நாங்க ரெண்டு பேரும் தோட்டத்து வரைக்கும் பொயிட்டு வாறோம்..."
"இருட்டப் போற சமயத்துல அங்க உங்களுக்கு என்ன வேல... உங்கப்பாரு வந்தா கத்துவாரு..." என்று அம்மா கத்திக் கொண்டிருக்கும் போதே வைரவனின் வண்டி கேட்டைக் கடந்திருந்தது.
"என்னடா... என்ன முடிவு பண்ணியிருக்கே..?" வண்டியில் போய்க்கொண்டிருக்கும் போது ராம்கியிடம் கேட்டான் சேவியர்.
"முடிவா... எதுக்கு?"
"மயிரு... எதுவுமே தெரியாத மாதிரியே கேளு... உங்க கல்யாணத்தைப் பத்தித்தான்..."
"இன்னும் முடிவு பண்ணலைடா..."
"என்னடா முடிவு பண்ணலை... படிப்பு முடியப் போகுது... அவனுக ஊர்ல இருந்து பேசுறப்பலாம் உன்னைய விட்டுட்டு என்னையப் போட்டு ராவுறானுக..."
"இல்லடா... புவனா பேசுறேன்னு சொல்லியிருக்கா... பேசுனாலா தெரியல..."
"இங்க பாருடா... படிச்ச காலமெல்லாம் முடிஞ்சி வேலை தேடுற காலம் நெருங்கிடுச்சு... அவனவன் வாழ்க்கையைப் பாக்க வேண்டிய நேரம் இது... சும்மா வீட்ல இருந்தா இதுவரைக்கும் எம்மவன் படிக்கிறான்னு பெருமையாச் சொன்ன பெத்தவங்க இன்னும் கொஞ்ச நாள்ல தண்டச்சோறு, தண்டம்ன்னு பேச ஆரம்பிச்சிருவாங்க... அவனுக ஊர்ல இருக்கும் போதே முடிவெடுத்தாத்தான் எந்தப் பிரச்சினை வந்தாலும் அதை நாம பேஸ் பண்ண முடியும்... இன்னைக்கு நம்ம பயலுகள்ல எங்கிட்ட மட்டும்தான் பணபலம் இருக்கு. இங்க நாலு பெரிய ஆளுகளைப் பழகி வச்சிருக்கேன்... உனக்கு நல்லாத்தெரியும்... என்னைய பொறுத்தவரை திருப்பூர்ல உங்களை வச்சி என்னால பாத்துக்க முடியும்... என்னால பணத்தைத் செலவு பண்ணமுடியும்... அம்புட்டுத்தான்... மத்தபடி எடுக்கிற முடிவை அண்ணாத்துரை ஊர்ல இருக்கும் போது எடுக்கிறதுதான் நல்லதுன்னு எனக்குத் தோணுது... பாத்துக்க..."
"நீ சொல்றது உண்மைதான்டா... மல்லிகா வீட்டுக்குப் புவனா வந்தா கம்பெனிக்கு கூப்பிடச் சொல்லியிருக்கேன்... அவ பேசுனதுக்கு என்ன ரிசல்ட்டுன்னு பாத்துட்டு முடிவெடுக்கலாம்டா..."
"இங்க பாரு... அம்மா கொஞ்சம் இறங்கி வந்திருக்காங்க... மறுபடியும் முருங்கை மரத்துல ஏறிடாம பாத்துக்க... பொம்பளப்புள்ள பேசுதுன்னு விட்டுட்டு இருக்காத... நீயும் கொஞ்சம் அதுக்கான முயற்சியில இறங்கு... புரியுதா..."
"ம்... சரிடா..."
"என்னடி சொல்லணும் இப்பச் சொல்லு... " என்றபடி சிகரெட்டை பற்றவைத்துக் கொண்டு தென்னை மரத்தில் சாய்ந்தபடிக் கேட்டான் வைரவன்.
"கருமம்... எனக்கு இந்த வாசமே பிடிக்காது... எனக்கு முன்னாடி ஊதுறே...?" புவனா கத்தினாள்.
"எல்லாத்துக்கும் ஒத்துக்கிட்டுத்தானே வந்தே... இப்பக் கத்துறே... பிடிக்காட்டி அந்தப்பக்கமா நின்னு சத்தமாச் சொல்லு நா மட்டுமில்ல... தோட்டத்துக்கு அந்தப்பக்கமா போறவங்களும் உன்னோட பெர்சனலைக் கேக்கட்டும்..."
"அண்ணா ப்ளீஸ்டா.. அப்புறம் குடிடா... "
"போச்சு... அப்பத்தா அவ வேலையைக் காட்டிட்டா... ஒரு சிகரெட்டு வேஸ்ட்..." என்றபடி தென்னை மரத்துக்கு ஓடிய தண்ணீரில் தூக்கிப் போட்டவன் "ம்... சொல்லு.... ஏய் இரு... இரு...வாயைக் கழுவிட்டு வாறேன்... அப்புறம் பேசுறப்போ நாத்தம் அடிக்குதுன்னு சொன்னாலும் சொல்லுவே..." என்றபடி அருகில் ஓடிவந்த தண்ணீரை மோந்து கொப்பளித்துவிட்டுச் சொல்லு என்றான்.
"இப்பவே சொல்றேன்... நான் சொல்றதைக் கேட்டு கத்தக்கூடாது..."
"பீடிகை போடாம சொல்லுடி... கத்துறது கத்தாதது அப்புறம்... ஆமா கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்துக்கு மேல சவ்வா இழுக்குறியே அப்புடி என்னடி பெர்சனலு... என்னோட நேரத்தை வேற வேஸ்ட் பண்ணிக்கிட்டு... சொல்லித் தொலை... எனக்கு டவுனுக்குள்ள முக்கிய வேலை இருக்கு... பசங்க எனக்காக காத்துக்கிட்டு இருப்பானுக..." என்றான்.
"ஆமா... ராம்கியைப் பத்தி நீ என்ன நினைக்கிறே?" முதல் ஏவுகணையை நேரடியாக இறக்கினாள். மனசுக்குள் 'தடக்... தடக்...' இருந்தாலும் முகத்தில் பயம் தெரியாமல் புன்னகை மாறாமல் கேட்டாள்.
"அவனப்பத்தி இப்ப என்ன பேச்சு... இதுல உன் பெர்சனல் இருக்கா...?"
"இருக்கா இல்லையான்னு அப்புறம் சொல்றேன்... முதல்ல நான் கேட்ட கேள்விக்குப் பதில்... ராம்கியைப் பத்தி என்ன நினைக்கிறேன்னு சொல்லு..."
"ம்... கஷ்டப்படுற பேமிலியில இருந்து வந்தவன்.... மத்தவங்களுக்கு உதவுறவன்... நல்லா படிக்கிறவன்... திறமைசாலி... எல்லாத்துக்கும் மேல என்னைய சாவுல இருந்து மீட்டவன்... "
"ம்... அப்ப உன்னைப் பொறுத்தவரை அவர் நல்லவர்தானே...?"
"ம்... ஆமா... அதுக்கென்ன இப்போ...?" என்றபடி அவளைப் பார்த்தான்.
"யாருக்கும் உதவி செய்யிற அவரு... தன்னோட உயிரைப் பத்திக்கூட கவலைப்படாமல் உன்னோட உயிரைக் காப்பாத்தியிருக்காரு.... அப்படிப்பட்டவர் உந்தங்கச்சியை கடைசி வரை நல்லபடியா வச்சிக் காப்பாத்துவாரா இல்லையா?" படபடவெனக் கேட்டாள்.
அவள் கேட்டது வைரவனுக்குப் புரியவில்லையோ அல்லது கவனிக்கவில்லையோ அவளிடம் "ம்... என்ன சொன்னே மறுபடியும் சொல்லு" என்றான்.
'கஷ்டப்பட்டு பேசுன வசனத்தை மறுபடி சொல்லச் சொல்றானே' என்று நினைத்தபடி "இல்ல... உன் உயிரைக் காப்பாத்துனவருதான் உந்தங்கச்சியோட உயிர்ன்னு சொன்னேன்" என்றவள் 'பார்றா நமக்கும் சூப்பர் டயலாக்கெல்லாம் வருது' என்று தன்னையே பாராட்டிக் கொண்டாள். 'பாராட்ட இதுவா நேரம் என்ன வெடிக்கப் போகுதே தெரியலையே' என்ற பயத்தோட அவனை நோக்க வாயில் சிகரெட்டை வைத்து லைட்டரை அழுத்தியபடி அவளைப் பார்த்தான். அவனது கண்ணில் கொலைவெறி தாண்டவமாடியது.
(புதன்கிழமை தொடரும்)
-'பரிவை' சே.குமார்.
3 எண்ணங்கள்:
நல்ல சஸ்பென்சாக போகிறதே...
வணக்கம்
நீண்ட நாட்களுக்கு பின் கதை தொடர்வது தொடருங்கள் அடுத்த பகுதிக்காக காத்திருக்கேன்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
ம்...........தைரியமா இல்ல அசட்டுத் தைரியமான்னே தெரியல,ஹ!ஹா!!ஹா!!!
கருத்துரையிடுக