மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 9 ஆகஸ்ட், 2014மனசின் பக்கம்: சாரலாய்... தூறலாய்... பெருமழையாய்...

மலான் விடுமுறையில் திடீரென ஊருக்குச் செல்லும்படி ஆகிவிட்டது.  ஒரு வாரம் ஊரில் இருந்தாலும் ஒரு சில குடும்பக் காரணங்களால் எங்கும் செல்ல இயலவில்லை. இந்தப் பயணம் அவசரமான பயணமாக அமைந்தது. சில பல கஷ்டங்களுக்கு இடையே கண்டிப்பாக செல்ல வேண்டிய காரணத்தால் விமான டிக்கெட் கிடைக்காத நிலையில் குடும்பம் நண்பரின் உதவியால் முதல் முறை துபாயில் இருந்து மதுரை விமான நிலையத்திற்கு ஸ்பைஸ்ஜெட்டில் பறக்கும்படியானது.  விமான நிலையத்துக்கு மாமாவுடன் வந்திருந்த விஷால் காரில் செல்லும் போது பேசிக் கொண்டே வந்தான். திரும்பி வரும்போது என்னை வழி அனுப்ப வந்த பெரிய மனுசனும் விஷால்தான். வெளியில் நின்று கையாட்டிக் கொண்டே நின்றான். இங்கு வந்தும் இன்னும் எழுத்தில் நாட்டம் வரவில்லை குடும்ப நினைவே குடி கொண்டிருக்கிறது.

ரு சிறுகதைப் போட்டியில் கலந்து கொண்டு பரிசும் கிடைத்து ஏழெட்டு மாசத்துக்கு மேலாகிவிட்டது. அந்தப் பணம் எனக்குத்தான் என என் மகள் கற்பனையோடு காத்திருந்தார்.... காத்திருக்கிறார். இந்த முறை போனபோது 'என்னப்பா... அந்தப் பணம் இன்னும் வரலை...' என்று கேட்டார். சென்ற முறை அவர் கேட்டு அவர்களுக்கு மின்னஞ்சல் செய்தபோது இன்னும் இரு தினங்களில் அனுப்புவோம் என்றார்கள். வரவேயில்லை... இந்த முறை கேட்கவே இல்லை... போட்டிகளை அறிவிக்கும் போது பரிசு பற்றி சொல்லிவிட்டு அதை இழுத்தடிப்பது எதற்காக என்ற காரணம் தெரியாத போது அவர்களிடம் மீண்டும் மீண்டும் பணம் வரவில்லை என்று அழுவது அழகல்லவே... விட்டுவிட்டேன். மகளிடமும் அதை மறந்துவிடச் சொல்லிவிட்டேன்.

ருக்குப் போகும்போது சிவகங்கை தாண்டி காளையார் கோவில் வரை பெய்த மழை தேவகோட்டைக்குள் எட்டிப் பார்க்கவே இல்லை. தினமும் மாலை இருட்டிக் கொண்டு  வானம் சில தூறல்களோடு கலைந்து போய் விடும். 'என்னன்னே தெரியலை... நம்ம ஊர்ப்பக்கம் மட்டும் மழையே பெய்யலை...' என்று புலம்பியவர்கள் மனதில் பால் வார்க்கும் விதமாக இரண்டு மூன்று நாட்களாக மழை பெய்யெனப் பெய்து கொண்டிருப்பதாக மனைவியுடன் பேசும்போது சொன்னார். ஊரில் பெய்த மழையால் எனக்குள்ளும் சந்தோஷச் சாரல்.

'கலையாத கனவுகள்' தொடர்கதை ஆரம்பிக்கும் போது 20, 25 பகுதிகளில் முடிக்க நினைத்து இப்போது 70 பகுதிகளைக் கடந்துவிட்டது. இவ்வளவு நீ.......ளமான கதையாக அமையும் என்று எதிர்பார்க்கவே இல்லை. தொடர்ந்து வாசித்து வரும் சகோதரர் யோகராசா அவர்களைப் போன்றோரின் பின்னூட்டம் தந்த ஊக்கமே கதையை தொடர வைத்தது. இன்னும் சில பகுதிகளோடு கதையை முடிக்க நினைத்து இறுதிக்கட்டம் நோக்கி நகர்த்த ஆரம்பித்திருக்கிறேன். பெரும்பாலும் அதிகபட்சமாக 70-75 பேர் வாசித்திருப்பார்கள். சமீபத்திய பகுதிகளை நூறைத் தொட்டன. ஆனால் ஒரே ஒரு பகுதியை மட்டும் இதுவரை 515 பேரால் வாசிக்கப்பட்டிருக்கிறது. எனக்கு இது எப்படி சாத்தியமானது என்று இன்று வரை விளங்கவேயில்லை.

தேவகோட்டை ரோட்டரி சங்கத் தலைவராகப் பொறுப்பேற்றிருக்கும் நண்பன் தனது பணியை சிறப்பாக செய்து வருகிறான். இந்த முறை ஊருக்குப் போனபோதும் அவனுடன் அதிகம் பேசமுடியாத அளவுக்கு தலைவர் ரொம்பப் பிஸி, விழாக்கள்... விழாக்கள் என ஓடிக் கொண்டேயிருக்கிறான். வீட்டில் நடந்த ஒரு விழாவில் கலந்து கொண்டவன் வெள்ளைச் சட்டை வேஷ்டியில் இருக்காமல் இது என்னடா ஆடை என (அவர் எப்பவும் கஞ்சி போட்ட ராம்ராஜ் பேப்பர் காட்டன் மட்டுமே அணிகிறார்) எனது மச்சானிடம் பணம் கொடுத்து ஒரு வெள்ளைக் காட்டன் சட்டை வாங்கிக் கொடுத்தான். அந்தச் சட்டையும் இப்போது என்னோடு அபுதாபியில்... எத்தனை வரவு செலவுகள் நட்புக்குள் வந்து வந்து போனாலும் எப்போது எதோ ஒரு அன்பு செலவழிக்காமல் இருந்து கொண்டேதான் இருக்கிறது.

நாம் மதிக்கும் சிலர் தனது சுய ரூபத்தைக் காட்டும் போது தூக்கிப் போட்டு மிதிக்க வேண்டும் என்று தோன்றினாலும் அவர் மீது வைத்திருந்த அன்பு அதைத் தடுத்து விடுகிறது. நாம் ஒதுங்கிப் போவதை அவர்கள் சாதகமாக்கிக் கொன்டு மீண்டும் மீண்டும் வந்து விழும் போது சேற்றில் விழுந்த எருமையின் அருகில் செல்லாமல் விலகும் நிலையைக் கடைபிடித்தாலும் சில நேரங்களில் தூக்கிப் போட்டு மிதித்து விடலாமா என்ற எண்ணம் தலை தூக்குகிறது. குடும்பம்... சொந்தபந்தம்... சமூகம்... என எல்லாவற்றையும் பார்த்து வாழப் பழகியதால் இவர்களைப் போன்றோரை விட்டு விலகி இருப்பது நலம் என முடிவெடுத்து அதை கடைபிடிக்க வைக்கிறது வாழ்க்கை... இப்படி ஒதுங்கி... அவரை ஒதுக்கி... நகர்த்த ஆரம்பித்திருக்கிறது சமீபத்திய நிகழ்வு ஒன்று.

க்டோபரில் தேவகோட்டை ரோட்டரி சங்கம் சார்பாக புத்தக கண்காட்சி நடத்தும் எண்ணம் இருப்பதாக நண்பன் சொன்னான். அதற்குள் எதாவது ஒரு புத்தகம் போடு என்றான். சிறுகதைத் தொகுப்பைக் கொண்டு வரும் எண்ணம் இருக்கிறது. நம்மூரில்... நண்பன் மூலமாக... நமது புத்தகம் வெளியிடப்பட்டால் சந்தோஷம்தானே...  நிறைவேறுகிறதா அல்லது எப்பவும் போல் காலம் கடத்துகிறதாவென பார்க்கலாம்...
-'பரிவை' சே.குமார்.

13 கருத்துகள்:


 1. சிறுகதைப் போட்டிப் பரிசுப் பணம் இதுவரை வரவில்லை என்பது வருத்தத்திற்குரியது. சிறுகதைத் தொகுதி விரைவில் வெளியிட வாழ்த்துகள் குமார்.

  பதிலளிநீக்கு
 2. ஒரு சகோதரனோடு அமர்ந்து மழைநாளில் பேசிகொண்டிருந்த அனுபவமாய் இருக்கிறது பதிவு!
  வாழ்த்துக்கள் அண்ணா!

  பதிலளிநீக்கு
 3. எதற்காகப் பரிசு அறிவிக்க வேண்டும் என்ற உங்கள் கேள்வி நியாயமானதென்றாலும் எதிர்பாராது இருப்பதே மேல் என்பது என் அனுபவம்.

  துபாயிலிருந்து மதுரைக்கு விமானப் பயணம் உண்டா? அடடா.. தெரியாமல் போனதே!

  கலையாத கனவுகள் நேரம் கிடைக்கும் பொழுது படிப்பதோடு சரி. இத்தனை அத்தியாயங்கள் எழுதும் உங்கள் முயற்சியை எண்ணி வியந்ததுண்டு.

  புத்தகம் கொண்டு வாருங்கள். அந்த அனுபவத்தையும் தெரிந்து கொள்வோம் :-)

  பதிலளிநீக்கு
 4. புத்தகம் ஒன்றினை விரைவில் வெளிகொண்டு வாருங்கள் நண்பரே

  பதிலளிநீக்கு
 5. // நியாயமானதென்றாலும் எதிர்பாராது இருப்பதே மேல் என்பது என் அனுபவம். - அப்பாதுரை //

  அப்போ பெண்கள் எதிர்பார்ப்பார்கள் என்கிறீர்களா அப்பாதுரை?

  பதிலளிநீக்கு
 6. தங்களின் தொடர்கதை நான் படிக்க ஆரம்பித்து பாதியோடு நிற்கிறது. மன்னிக்கவும் விரைவில் படித்து விடுவேன். சிறுகதை தொகுப்பு கொண்டு வாருங்கள். நீங்கள் விழாவை எங்கு வைத்தாலும் வந்து கலந்து கொள்ள ஆர்வமாய் இருக்கிறேன்

  பதிலளிநீக்கு
 7. வணக்கம்,குமார்!நலமா?///தொடர் வராதப்பவே ஏதோ என்று எண்ணியிருந்தேன்.வேறு இடம் மாற வேண்டும் என்றும் ஒரு தடவை சொன்ன ஞாபகம்.அதனால் தானோ என்று நினைத்திருந்தேன்.திடீர் பயணம் தான் காரணமானது தெரிந்தது,இப்போது.///உங்கள் "மனசு"எங்களுக்குத் தெரிந்தது தான்!என்ன செய்ய?வாழ்க்கை என்றால் ஆயிரம்,இருக்கும்!இருந்து விட்டுப் போகட்டுமே?

  பதிலளிநீக்கு
 8. குடும்பம்... சொந்தபந்தம்... சமூகம்... என எல்லாவற்றையும் பார்த்து வாழப் பழகியதால் இவர்களைப் போன்றோரை விட்டு விலகி இருப்பது நலம் என முடிவெடுத்து அதை கடைபிடிக்க வைக்கிறது வாழ்க்கை.//..

  நன்றாக சொன்னீர்கள்.

  உங்கள் மகளுக்காக விரைவில் சிறுகதை போட்டி நடத்தியவர்கள் பணத்தை அனுப்பவேண்டும்.

  விரைவில் உங்கள் புத்தகம் வெளிவர வாழ்த்துக்கள்.  பதிலளிநீக்கு
 9. சுவையான சிறு சிறு நினைவலைகள்! சிறுகதைப்போட்டியில் பரிசு அறிவித்து பரிசு தராமல் இருப்பது வேதனையே! சில இதழ்கள் இப்படித்தான் இருக்கின்றன! என்ன செய்வது! நன்றி!

  பதிலளிநீக்கு
 10. மதியம் நான் போட்ட கமெண்ட் எங்கே போச்சோ ?கூகுள் ஆண்டவருக்கே வெளிச்சம் !
  பரிசு தராமல் ஏமாற்றும் பத்திரிக்கை எதுவென்று தோல் உரித்துக் காட்டுங்கள் ,மற்றவர்களாவது ஏமாறாமல் இருக்கலாமே !
  புத்தக வெளியீடு கைக்காசை செலவழித்து செய்ய வேண்டிய விஷயம் ,யோசித்துச் செய்யுங்கள் !
  த ம 4

  பதிலளிநீக்கு
 11. தங்கள் முயற்சிக்கு எனது வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 12. அவர்கள் பணம் கொடுக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. சான்றிதழ் மட்டுமாவது கொடுக்கலாம்...

  கலையாத கனவுகள் கொஞ்சம் மட்டுமே படித்திருக்கிறேன்... முழுவதும் படிக்கவேண்டும்....

  பதிலளிநீக்கு

நட்பின் வருகைக்கு நன்றி..!

பகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...