மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 29 அக்டோபர், 2016

சிறுகதை : மனத்தேடல்

நேற்று எழுதிய 'உதிராத நேசம்' சிறுகதை குறித்து எனக்கும் நண்பன் தமிழ்க்காதலனுக்கும் நடந்த உரையாடலின் போது 'எருமை... (எப்பவும் ரொம்ப அன்பாய்த்தான் திட்டுவான்) ஆரம்பிக்கும் போது ஆஹா ரெண்டு பேரும் சந்தித்தால்... எப்பவும் போல் கலக்கலாய் எழுதியிருப்பான்னு நினைச்சிப் படிச்சா... அழுத்தமில்லாம முடிச்சிட்டியே... எப்பவும் போல் ஏன் நீ எழுதலை... இப்படி ஏன் எழுதுறே... சந்தித்துப் பேசினால் எப்படியிருக்கும்ன்னு ஏன் நீ யோசிக்கலை என்று சரமாரித் திட்டினான். சரி அவன் சொன்னது போல் அந்தப் பக்கமாப் பயணிக்கலாமேன்னு இன்று மதியம் எழுத ஆரம்பித்து முடித்து ஜட்ஸ்மெண்ட்டுக்கு அனுப்பினால் இதைத்தாண்டா எதிர்பார்த்தேன் என்று தீபாவளி மத்தாப்பாய் பாராட்டு மழைதான் போங்க... தலைப்பும் நண்பன் கொடுத்ததே... கதை பதிவதில்லை என்ற முடிவிருந்தாலும் அந்தக் கதையின் மாற்றுப் பாதை என்பதால் இதையும் இங்கு பகிர்கிறேன்.  நீங்களும் வாசிங்க... பிடிச்சாலும் பிடிக்காட்டியும் கருத்தைச் சொல்லுங்க... 

நேற்றைய கதையை வாசிக்காதவங்க வாசிங்க மேலே இருக்கும் இணைப்பில் போய் வாசிங்க....

**************


'அவளைப் போய் பார்க்கலாமா..?' என்ற எண்ணம் நேற்று மகேஷ் சொல்லிச் சென்றதிலிருந்து மனசுக்குள் சாரலாய் ஆரம்பித்து பெரும் தூறலாய் ஆக்கிரமித்திருந்தது.  'அவளைப் போய் பார்த்தால் என்ன சொல்வாள்..? ', 'பேசுவாளா... இல்லை பேசாமல் நகர்ந்து விடுவாளா...?', 'இன்னும் ஞாபகத்தில் வைத்திருப்பாளா..?' என்ற கேள்விகள் வரிசையாக நெஞ்சுக்குள் எழுந்து ஆழிப் பேரலையாய் உயர்ந்து உயர்ந்து தணிந்தது. 'இந்த வயசில் அவளைத் தேடிப் போவது சரிதானா...?' என்ற எண்ணம் வேறு மழைக்கால காளானாய் இடையிடையே பூத்துச் சிரித்தது.

'அவளைப் போய் பார்த்தால் பேசுவாளா..? இல்லை முகத்தில் அடித்தாற்போல் செய்து விடுவாளா..?' எத்தனை நேசத்துடன் அவளைக் காதலித்து கோழையாய் தூரதேசம் போனவன்தானே நான். படித்த டிகிரிக்கான வேலை கிடைக்காது என்று தெரிந்தும் டிகிரி படிக்க வேண்டும் என்பதற்காகவே படித்தவன்தானே நான்... மேலே படிக்க வேண்டும் என்றால் வானம் பார்த்த பூமியில் விவசாயத்தை நம்பி வாழும் குடும்பத்தில் குதிரைக் கொம்பாய் இருந்த காலம்... வயதுக்கு வந்த இரண்டு தங்கைகளை கரையேற்ற வேண்டும் என்றால் கடல் கடக்க வேண்டும் என்ற அப்போதைய கோட்பாட்டின்படி செல்வண்ணனோட ஏற்பாட்டில் சிங்கப்பூர் சென்று கஷ்டப்பட்டு இந்த இருபது வருடத்தில் நல்ல நிலையை அடைத்திருக்கிறேன்...  லிட்டில் இந்தியா பகுதியில்  நானும் நண்பன் பரக்கத்தும் சேர்ந்து ஹோட்டல் நடத்துக்கிறோம். எங்க ஹோட்டல் செட்டிநாட்டுப் பலகாரங்கள் ரொம்ப பிரசித்தம். அதுவும் ஞாயிற்றுக்கிழமை நம்மாட்கள் வந்து கூடும் போது பாக்கெட் பாக்கெட்டாக முறுக்கு, அதிரசம், வெள்ளைப் பணியாரம், கந்தரப்பம், மனோலம், ஓமப்பொடி எல்லாம் விற்றுத் தீர்க்கும். கடந்து சென்ற வருடங்களில் எத்தனையோ நல்லதையும் கெட்டதையும் பார்த்துவிட்டேன். தங்கைகளுக்கு நல்ல இடத்தில் திருமணம்... தம்பியை படிக்க வைத்து இன்று அவன் துபாயில் ஏதோ ஒரு கம்பெனியில் நெட்வொர்க் இஞ்சினியர்... குடும்பத்துடன் துபாயில் இருக்கிறான். அப்பா அம்மா இருவரையும் அடுத்தடுத்து இழந்தது எனது வாழ்வில் மறக்க முடியாத பெரிய இழப்பு. ம்ம்ம்.... ஏதோ ஒன்றை இழந்தால்தான் ஒன்றைப் பெற முடியும் என்பார்களே... அப்படித்தான் அவளை இழந்து என் மனைவியைப் பெற்றேன். எனக்கு காதலியாய்... தோழியாய்... தாயாய்... குருவாய்... மனைவியுமாய்...

என்னைக் காதலிப்பதாக நேரடியாக வந்து சொன்ன எங்கள் வகுப்புத் தோழி மல்லிகாவை ஏற்க முடியாமல் என் மனதுக்குள் இருந்தவள்தான் அவள்... வேறு வேறு துறையைச் சேர்ந்தவர்கள் என்றாலும் நானும் நண்பனும் இணைந்து நடத்தலாம் என்று ஆரம்பித்த கையெழுத்துப் பிரதியின் ஆசிரியர் குழுவில் இணைந்தாள். எழுத்தும்... இலக்கியம் சம்பந்தமான பேச்சுமே எங்களுக்குள் காதல் என்னும் தீபத்தை மெல்ல ஏற்றியது. இருவருக்குள்ளும் எரிந்த தீபத்தின் ஒளியை வெளியில் தெரியாமல்... சொல்லத் தைரியமில்லாமல் மறைத்தே நாட்களை நகர்த்தினோம்... ஒருநாள் பார்க்கவில்லை என்றாலும் அடுத்தநாள் நேற்று ஏன் வரலை என்ற கோபம் எங்களுக்குள் வெடித்த போது எங்கள் காதல் தீபத்தின் ஒளி மெல்ல வெளியே வெளிச்சத்தைப் பரவ ஆரம்பித்தது நண்பர்களின் செல்லத் சீண்டல்களுடன்.... மூன்றாண்டுகள் முடித்து எங்காவது வேலைக்குச் செல்ல வேண்டும் என்ற நிலையில் திருப்பூருக்குப் பயணித்தவனிடம் 'எங்க வீட்ல ரொம்ப நாள் வச்சிக்கமாட்டாங்க... மாமா ரெண்டு மாசத்துல சௌதியில இருந்து வர்றானாம்... அவருக்கு கட்ட பேச்சு நடக்குது... ப்ளீஸ்... அதுக்குள்ள எதாவது பண்ணு.... என்னையும் உங்கூட கூட்டிக்கிட்டுப் போகப்பாருன்னு சொன்னா.... பஸ் கிளம்பும் போது கண்ணீரோட நின்னா அன்னைக்குத்தான் அவளை கடைசியாப் பார்த்தேன்.... அப்புறம் அவ பிரண்ட் வீட்டுக்குப் போன் பண்ணி அவளை வரச்சொல்லி பேசினப்போ கல்யாணம் நிச்சயம் பண்ணப் போறாங்க... வா... வந்து கூட்டிக்கிட்டுப் போன்னு சொன்னா.... ஏதை வச்சிக் கூட்டிப் போவேன்... ஏதோ சம்பளத்தில் ஒரு வேலை.... விவசாயம் பொய்த்துப் போய் ரேசன் அரிசி சாப்பாட்டில் காலத்தை ஓட்டும் குடும்பம்... திருமண வயதில் தங்கைகள்... படிச்சி பெரியாளகணுங்கிற கனவோட தம்பி... இவற்றின் முன்னே என் காதல் முள் மீது போட்ட சேலையானது... மெல்ல எடுத்தாலும் இதயம் கிழிஞ்சிதான் போச்சு.

'ம்ம்ம்' என்ற பெருமூச்சோடு எழுந்தேன்... இருபது வருடங்களாக என் மனசுக்குள் வாழும் ஜீவன் இதோ ஒரு ஆறு கிலோ மீட்டர் தூரத்தில் அம்மா வீட்டுக்கு வந்திருக்கிறாள். சௌதியில் செட்டிலாகிவிட்ட அவள் மாமியார் (ஆயா) செத்தபோது வந்திருந்தாளாம் என் மனைவி சொன்னாள். என்னவளுக்கு எங்கள் காதல் கதை அட்சர சுத்தமாகத் தெரியும். நான் அவளிடம் எல்லாம் சொல்லிவிட்டேன்.... வாழ்க்கையில் ஒளிவு மறைவு எதுக்குங்க... அவளும் அது பற்றி எதுவும் சொல்லவில்லை... ஒரு சிரிப்பில் அதைக் கடந்து சென்றாள். இன்று வரை அது குறித்தான குத்தலோ... குடைச்சலோ இல்லை... என் உள்ளம் புரிந்தவள் என்னவள். இவள் கிடைக்க வேண்டும் என்பதால்தான் இறைவன் எங்கள் காதலைப் பிரித்தான் போல... சிரித்துக் கொண்டேன்.

போகலாம்... பார்க்கலாம்... பேசினால் பேசலாம்... இல்லேன்னா திரும்பி வரலாம்... வேறு என்ன செய்ய... திரும்பக் கிடைக்காமல் தொலச்சாச்சுல்ல... வாழ்க்கையில் தொலைத்த எல்லாத்தையும் தேடிப் போவதில்லையே.... அவளைத் தேடிப் போகணும்ன்னு மனசு சொல்லுது...  அம்மா வீட்டுக்கு வந்திருக்கிறாளாம்.... தீபாவளி முடிஞ்சிதான் போவாளாம்... எல்லாம் சொல்லிச் சென்றான் மகேஷ்.... மழையை ரசித்தபடி சன்னலோரம் அமர்ந்து காபி குடித்தபடியே கல்லூரியை முன்னிறுத்தி அவளைப் பற்றிப் பேசினோம்...  எத்தனை முறை மழை எங்களை நனைத்திருக்கும்... எல்லா முறையும் துப்பட்டாதானே குடையானது.... நினைத்தபோது மனசு சிலிர்த்தது... மனசுக்குள் அவளும் சிலிர்த்து எழுந்தாள்.  அவளைப் பார்த்து விட்டு வரலாம்... இந்த இருபது வருடத்தில் எத்தனையோ மாற்றங்கள் அவள் வாழ்விலும் உடம்பிலும் நிகழ்ந்திருக்கலாம்... என்னை இளமையில் இருந்து முதுமையின் வாசலுக்குக் கொண்டு சென்றிருக்கும் காலம் இன்னும் அவளை மட்டும் அப்படியேவா வைத்திருக்கப் போகுது என்று நினைத்தபடி கண்ணாடி முன் நின்று மீசையைத் தடவினேன்.. வெள்ளையும் கருப்பும் கலந்து சிரித்தது.

வண்டியை எடுக்கும் போது 'எங்கே இவ்வளவு அவசரமா...?' என்பது போல் பார்த்தாள் என்னவள்... 'காளாப்பூர் வரைக்கும் பொயிட்டு வாறேன்' என்றேன் மெல்ல... 'ம்... மகேஷ் அண்ணன் நேத்து அவ வந்திருக்கான்னு சொன்னதில இருந்து உங்க மனசு ஒரு நிலையில இல்லையின்னு எனக்குத் தெரியும்... எதுவும் தப்பாயிடாம... பொறுமையா எதைப் பேசணுமோ அதை மட்டும் பேசுங்க... அவ பேசுவா... கண்டிப்பா பேசுவா... காதலிச்ச மனசு கல்நெஞ்சாவா இருக்கப் போகுது... சீக்கிரம் வந்திடுங்க... என்னமோ ஏதோன்னு எனக்குப் பயமா இருக்கும்...' என்றாள் கண் கலங்க... 'ம்...' என்றபடி வண்டியை எடுக்க, 'அப்பா நானும் வாறேன்' என ஓடி வந்து ஏறினாள் என் பதின்ம வயது மகள் ஸ்வாதிகா. 'நீ எதுக்குடி அங்கல்லாம்...' என்ற மனைவியிடம் 'அவ வரட்டுமே... என்ன இப்ப... எனக்கும் பேச்சுத்துணையா இருப்பாளே...' என்றபடி வண்டியை எடுக்க, 'போம்மா... நான் அப்பாவோட போன உனக்கென்ன...? அவரோட வண்டியில சுத்தமுடியலையேன்னு ஆதங்கம்' என்றவள் என் கன்னத்தில் முத்தம் பதித்து இடுப்பைச் சுற்றி இறுக்கிப் பிடித்துக் கொண்டாள். காற்றில் எங்கிருந்தோ கரைந்து வந்தது ஆனந்தயாழை மீட்டுகிறாள் பாடல். ஏனோ மகள்களைப் பெற்ற அப்பாக்களை எல்லாம் யாழ் மீட்ட வைத்த முத்துக்குமார் முறிந்த யாழோடு வந்து போனான்.

'எப்படிப் பேசலாம்..?' 'எதில் ஆரம்பிக்கலாம்..?' 'அந்த நாள் நினைவுகளை மெல்ல மீட்டிப் பார்க்கலாமா...?' என்ற கேள்விகளுடன் பயணித்த எனக்கு ஸ்வாதிகாவின் கேள்விகள் கேட்கவில்லை... பச்சைக் கலர் வீட்டு வாசலில் வண்டியை நிறுத்தியபோது வாசலில் நின்ற அவளின் அம்மா மெல்ல ஏறிட்டுப் பார்த்துவிட்டு "யாரு...? தெரியலையே...?' என்றார். 'நாந்தான் இளங்கோ... உங்க மகளோட பிரண்ட்... வந்திருக்காங்களாமே...?' என்றேன் மெல்ல. பெயரைக் கேட்டதும் அவங்க முகம் மெல்ல மாறியதில் அறிந்தேன்... எங்கள் காதலை அவர் எப்போதோ அறிந்திருக்கிறார் என்பதை... ஒன்றும் சொல்லாமல் வழிவிட்டவர்... வீட்டிற்குள் போனதும் 'உக்காருங்க... குளிச்சிக்கிட்டு இருக்கா... வரச்சொல்றேன்... என்றபடி மறைய, நான் மெல்ல வீட்டை கண்களால் படம்பிடித்தேன்... கணவன் குழந்தைகளுடன் அவள் சிரிக்கும் போட்டோவில் ஏனோ கண் நிலைகுத்தி நின்றது.

சிறிது நேரத்தில் குளித்த ஈரத்தை நன்றாக துடைக்காமல் தலையில் தண்ணீர் வடிய வடிய நைட்டியில் வந்தவள் 'வாங்க' என்ற ஒற்றை வார்த்தை சொல்லி நகர, அவ அம்மா காபியோடு வந்தார். அவர் முகத்தில் இவன் எதற்காக இப்போது வந்தான் என்ற எண்ணம் பரவிக்கிடப்பதை அறிந்ததும் 'இல்லம்மா... சும்மாதான்... இருபது வருசத்துக்கு மேலாச்சு... நானும் சிங்கப்பூர்ல இருக்கதால இங்க வர்றப்போ மற்றவங்களை பார்க்கிறது சிரமம்தான்.... அதான் வந்திருக்காங்கன்னு கேள்விப்பட்டதும் பாக்கணும்ன்னு தோணுச்சு... நாங்களெல்லாம் காலேசுல ஒண்ணா பத்திரிக்கை நடத்தினோம்...' என்றேன். அவர் ஒன்றும் சொல்லாமல் தலையாட்டியபடி நகர, 'யாருப்பா... இவங்க...?' என்றாள் ஸ்வாதிகா... எப்படிச் சொல்வேன்.. 'ப்ரண்ட்' என்றேன் ஒற்றை வார்த்தையில்.

நெற்றியில் அழகாய் குங்குமம் வைத்து அதன் மேலே சின்ன திருநீற்றுக் கீற்று வைத்து எதிரே வந்து அமர்ந்தாள். கல்லூரிக்கு அவள் சின்னச் சைக்கிளில் வரும் அந்த நாள் நினைவு மெல்ல எட்டிப் பார்த்தது. சிறு கீற்றாய் திருநீறும்..  ஸ்டிக்கர் பொட்டுமாய் அவள் மனதிற்குள் மலர்ந்து மறைந்தாள். என்னைப் பார்த்தாள்... பின் நிலம் பார்த்தாள்... நான் அவளைப் பார்த்தேன்... அவள் பார்க்கும் போது சுவரைப் பார்த்தேன்... 'இங்க வா... உம்பேரு என்ன...?' என ஸ்வாதிகாவை இழுத்து அருகே வைத்து அணைத்துக் கொண்டாள். பெயரைச் சொன்னதும் 'என்ன படிக்கிறே...?' என்றாள் கன்னத்தில் இதழ் பதித்தபடி. என் மனசுக்குள் என்னவோ செய்தது. என்னைப் பார்த்து நல்லாயிருக்கியான்னு கூட கேக்கலையே... அவ எப்படிக் கேப்பா... நாம கேக்கணுமின்னு அவ நினைக்கலாம்ல்ல... என்று நினைத்தபடி 'எப்படியிருக்....கே...கீங்க...' என்றேன் ஒருமையை பன்மையாக மாற்றி. 'ம்... நல்லாயிருக்கேன்.... நீ.... நீங்க...?' என்றாள் அவளும் பன்மைக்குள் நுழைந்து. 'ம்...' என்றேன் ஒற்றை எழுத்தில். பின்னர் மீண்டும் மௌனயுத்தம். விநாடிகள் மெல்லக் கரைந்து நொடிகளைத் தின்றது.

'இவ மட்டும்தானா...?' என்று அவள்தான் மௌனயுத்தத்தை நிறுத்தினாள். 'ம்... இவதான்... இவமட்டுந்தான் இப்ப என் உயிர்...' என்று சொல்லிவிட்டு என்னை நானே மனசுக்குள் கடிந்து கொண்டேன். 'ம்... ஒரு உயிர் போனா... அடுத்த உயிர்தானே வாழ வைக்குது' என்றவள் 'நீ அப்பா செல்லமோ..?' என்றாள். 'ம்... ஆனா அப்பா என்னோட செல்லம்' என ஸ்வாதிகா சொன்னதும் மீண்டும் ஒரு முத்தம்... 'ம்... என்னோட பொண்ணு அப்பா செல்லந்தான்... பையனுக்கு நாந்தான் எல்லாம்... என்ன செல்லமா இருந்தாலும் பொண்ணுங்களுக்கு பிரிவுங்கிறது தவிர்க்க முடியாததுதான்... நினைவுகளோட பிரிவுகளைச் சுமக்க வேண்டிய பிறவி பெண்தானே...' என்று அவளாக சொல்லிக் கொண்டாள். அப்போதுதான் உள்ளே நுழைந்த அவளின் அப்பா 'யாரும்மா..? என்று கேட்க, 'ப்ரண்ட்ப்பா... காலேஜ்ல ஒண்ணாப் படிச்சோம்... நான் வந்திருக்கேன்னு நம்ம மகேஷ் சொல்லியிருக்கும் போல அதான் வந்திருக்கார்...' என்னை ஏற இறங்கப் பார்த்தார்... என்ன நினைத்தாரோ சிரித்தபடி நகர்ந்தார். அவள் 'யாழினி' என்றழைக்க பக்கத்து அறைக் கதவு நீக்கி ஸ்வாதிகா வயதொத்த அழகான பெண் எட்டிப் பார்த்து 'எஸ் மம்மி' என்றாள். 'இவ ஸ்வாதிகா... பின்னால தோப்புப் பக்கம் கூட்டிக்கிட்டுப் பொயிட்டு வா...' என்றதும் 'ஓகே மம்மி' என அவள் ஸ்வாதிகா கரம் பிடிக்க, என்னைப் பார்த்தவளிடம் போ என்று கண் ஜாடைகாட்ட அவளோடு நடந்தாள். ஸ்வாதிகா உருவத்திலும் உயரத்திலும் அவளைவிட சற்று கம்மி... கலரிலும்தான்.

'ம்... என்னைப் பாக்கணும்ன்னு இத்தனை வருசத்துக்கு அப்புறம் தோணியிருக்கே... நன்றி...' என்று அவள் சொன்னபோது அவள் முகத்தில் எழுந்த உணர்ச்சிகள் அவள் உடையாமல் கட்டுப்படுத்த முனைவதை காட்டியது. 'அப்படியில்ல... நான் இங்க வரும்போதெல்லாம் கேட்பேன்... நீ... நீங்க சௌதியில இருக்கதாச் சொல்வாங்க.... ஆமா அவரு வரலை..?' என்றேன் மெல்ல. என் குரல் உடைந்ததை அவளும் புரிந்துகொண்டாள். 'எப்பவோ உடைஞ்சிருந்தாலும் இன்னும் இருக்கே...?' என்று முணங்கியவள் 'இல்ல அவருக்கு லீவ் இல்லை.... நெக்ஸ்ட் மன்த் ஒன் வீக் வருவார்...' என்றாள். 'ம்...' என்றேன். 'ஏன் நீ... நீங்க இளைச்சிப் போயிருக்கீங்க..?' என்றாள் மெல்ல. 'ஹோட்டல் பிஸினஸ்... வேலை அதிகம்... இப்படி இருக்கிறதுதான் நல்லது.... இப்பத்தான் நாப்பதைத் தாண்டுறதுக்குள்ள அட்டாக் வருதே... நீ... நீங்க கூட ரொம்ப மாறிட்டீங்க....' என்றதும் அவள் சிரித்தாள். 'அப்படியேவா இருக்க முடியும்... மாற்றமில்லா வாழ்க்கை ருசிக்காதுல்ல... எத்தனை மாற்றங்களைக் கடந்து வந்தேன்... நான் நினைச்சி வச்சிருந்த வாழ்க்கை எனக்குக் கிடைக்கலை... கிடைச்ச வாழ்க்கை என்னை சந்தோஷமாத்தான் வச்சிருக்கு... ஆனாலும் நான் சுமந்த கனவுகள்... ஆசைகள்... எல்லாமே போச்சில்லையா...?' என்றவள் கண்ணைத் துடைத்துக் கொண்டாள். ஆதரவாய் அவள் கையைப் பிடிக்கணும் போல இருந்தது. வாழும் வாழ்க்கையும் வயதுக்கு வந்த மகளின் முகமும் தடுக்க, மனசுக்குள் தவித்தேன். 

'எதுக்கு நமக்குள்ள போலி மரியாதை... எங்கே நீன்னு சொன்னா வருத்தப்படு வோமோன்னு நானும் நீங்களும்....' சிரித்தாள் 'நீயும் பேசுறது நல்லாவாயிருக்கு...' என்றாள். 'இல்லை.. சுபா... அன்னைக்கு....' மெல்ல ஆரம்பித்தேன். 'முடிஞ்சதைப் பேசி இனி என்ன ஆகப்போகுது... ஆமா உன் மனைவிக்கிட்ட என்னைய பாக்கப் போறேன்னா சொல்லிட்டு வந்தே...?' விரக்தியாய் சிரித்தாள். 'ம்... அவளுக்கு எல்லாம் தெரியும்... உன்னோட போட்டோ அவகிட்ட பத்திரமா இருக்கு... அவ உன்னை மாதிரித்தான்...' என்றதும் சிரித்தவள் 'சந்தோஷமா இருக்கு.... ரொம்ப நல்லவங்க போல... என் கணவருக்கு எதுவும் தெரியாது... தெரிஞ்சிருந்தா உன் மனைவி மாதிரி இருந்திருக்கமாட்டார்... வாழ்க்கை நரகமாயிருக்கும்... எனக்குள்ள வச்சி எரிச்சிக்கிட்டு சிரிச்சிக்கிட்டு இருக்கேன்... சில நேரங்கள்ல அமைதியா இருக்கும்... சில நேரங்களில் ஆர்ப்பரிக்கும்... இன்னைக்கு நீ வந்து எண்ணெய் ஊத்தி அணையாம எரிய விட்டிருக்கே....? இனி அணையாது... நான் எரியும்வரை... 'என்றவள் மீண்டும் கண்களைத் துடைத்தாள். எனக்கு ஒன்றும் சொல்லத் தோணலை.

அப்புறம்  கொஞ்சம் அமைதி... கொஞ்சம் பேச்சு என நகர, ஸ்வாதிகா யாழினியோடு வர மெல்ல எழுந்தேன் 'இன்னும் ரெண்டு மாசம் இருப்பேன்' என்றபடி. 'நெக்ஸ்ட் மன்த் டுவெண்டி பிப்த் போறோம்... அதுக்குள்ள உன் மனைவியோட வந்திட்டுப் போயேன்... இந்தக் குட்டி என்னை ரொம்ப கவர்ந்துட்டா... உன்னைய மாதிரியே இவளுக்கும் நாசி... அழகாய்...' என்றபோது கண்ணை நோக்காமல் திரும்பிக் கொண்டாள்... சிலதுளி கண்ணீர் வந்திருக்கலாம். 'ஏம்ப்பா... இந்த ஆண்டி வீட்டுக்கு இதுவரை வந்ததில்லையே... இவங்க யார்...?' என்றபடி என் கைபிடித்த ஸ்வாதிகாவிடம் என்ன சொல்வது என யோசிக்க, 'உங்க அப்பாவோட டியர்....ரஸ்ட் பிரண்ட் நான்.. ஒண்ணாப் படிச்சோம்... நிறைய எழுதினோம்... பேசினோம்... ஆமா உங்கப்பாவோட ஆட்டோகிராப் புக்கெல்லாம் வீட்டில் இல்லையா... இருந்தா அதில் நானிருப்பேன்.... நான் இன்னும் என்னோட ஆட்டோகிராப் புத்தகத்தை பத்திரமா இங்க வச்சிருக்கேன்...' என்றாள்  அவளுக்கு எழுதிய  'வாழ்வின் கடைசிவரை இணைந்தே பயணிப்போம்' என்ற வார்த்தைகள் நெஞ்சில் குத்த, அவளை இறக்க முடியாமல் சுமந்து மெல்லப் படியிறங்கினேன்...  

ஸ்வாதிகாவுக்கு முத்தமிட்டு விடை கொடுத்தவள் 'பை... என்னோட நம்பர் இது...?' என்று நம்பரைச் சொல்லி 'சேவ் பண்ணிக்க.... போன் பண்ணிட்டு எல்லாரும் ஒரு நாள் வாங்க...' என்றபடி கை நீட்டினாள்... பற்றலாமா வேண்டாமா என்ற யோசனையோடு நிற்க, 'ஏய் நீ இன்னும் மாறலை...' என்று சொல்லிச் சிரித்தவளின் கண் மட்டும் அழுதது.

(படம் இணையத்தில் இருந்து எடுத்தேன்... நம்ம முத்துச்சிதறல் மனோ அம்மா வரைந்தது. நன்றி அம்மா... உங்களது ஒப்புதல் இல்லாமல் போட்டதற்கு திட்டாதீங்க...)
-'பரிவை' சே.குமார்.

வெள்ளி, 28 அக்டோபர், 2016

தீபாவளி சிறப்புச் சிறுகதை : உதிராத நேசம்

'அவளைப் போய் பார்க்கலாமா..?' என்ற எண்ணம் நேற்று மகேஷ் சொல்லிச் சென்றதிலிருந்து மனசுக்குள் சாரலாய் ஆரம்பித்து பெரும் தூறலாய் ஆக்கிரமித்திருந்தது.  'அவளைப் போய் பார்த்தால் என்ன சொல்வாள்..? ', 'பேசுவாளா... இல்லை பேசாமல் நகர்ந்து விடுவாளா...?', 'இன்னும் ஞாபகத்தில் வைத்திருப்பாளா..?' என்ற கேள்விகள் வரிசையாக நெஞ்சுக்குள் எழுந்து எழுந்து ஆழிப் பேரலையாய் நெஞ்சுக்குள் உயர்ந்து உயர்ந்து தணிந்தது. இந்த வயசில் அவளைத் தேடிப் போவது சரிதானா...? என்ற எண்ணம் வேறு மழைக்கால காளானாய் இடையிடையே பூத்துச் சிரித்தது.

இதுவரை அவளைப் பற்றிய நினைவில்லாமல் இருந்தேன் என்று சொன்னால் அது சுத்தப் பொய்... அடிக்கடி அவள் நினைவு மனசுக்குள்ள மல்லிப்பூ மாதிரி மலர்ந்து வாசம் வீசத்தான் செய்யும். அதுவும் 'மயங்கினேன் சொல்லத் தயங்கினேன் உனை விரும்பினேன் உயிரே' பாடலைக் கேட்டால் அவள் நினைவு எழுந்து கண் வழியாக நீராக வெளியேறும்... அதைக் கேட்கக் கூடாது என்று நினைத்தாலும் எப்படியும் தினமும் கேட்டு  விடும் பாடலாய் அது அப்போது.... என் தலையணை நனையாத நாளில்லை. வருடங்கள் கடக்க கடக்க... பாடலின் தாக்கம் கண்ணீர் வரவைக்கவில்லை... இருந்தால்தானே அழ.... ஆனாலும் அவள் நினைவுகள் தாலாட்டும் மயங்கினேன் சொல்லத் தயங்கினேனில்... இப்ப என்னோட செல்போன் ரிங்க்டோனே அந்தப் பாட்டுத்தான்... அவளுக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு அது... அவளின் நினைவுகள் என்னை மட்டுமே சிதைத்துக் கொண்டிருந்தது... என் குடும்பத்தை அது ஒரு போதும் சிதைக்கவில்லை... என் மனைவிக்கு நல்ல கணவனாய்... ஸ்வாதிகாவுக்கு நல்ல தகப்பனாய்த்தான் இதுவரை இருக்கிறேன்... இனிமேலும் இருப்பேன்.

அவளை கடைசியாப் பார்த்த 1996 - நவம்பர் ரெண்டாந்தேதி இன்னும் நினைவில்... அதை அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியுமா... சிவன் கோவில் வாசலில் விழுந்த அந்த இரட்டைத் துளி கண்ணீர்... இப்பவும் சிவனைப் பார்க்கப் போனால் துளிர்க்கிறது என்னுள்ளும்... அதன் பிறகு வாழ்க்கைப் பாதையின் வெவ்வேறு விதமான நகர்தலில் கடைசியில் நான் போய் நின்ற இடம் சிங்கப்பூரின் லிட்டில் இந்தியா... அதாங்க நம்மாளுங்க ஞாயிற்றுக் கிழமைகளில் கூடிக் களிக்கிற தேக்கா... வெள்ளியூர் வீரசாமி அண்ணனோட ஹோட்டல்ல கேசியரா இருந்தேன். ஞாயிற்றுக் கிழமை கடையில கூட்டம் அள்ளும்... அந்த வார மொத்த வியாபாரமும் ஒரே நாளில் கிடைக்கும்... குடும்பப் பிரச்சினைகளையும் தனிமையான வாழ்வு கொடுக்கும் வலியையும் தூக்கிச் சுமந்தாலும் அன்னைக்கு ஒருநாள் மட்டும்  அம்புட்டுப் பேரும் சந்தோஷமாத்தான் வருவானுங்க... சிக்கனும் பீர் பாட்டிலுமாய் அமர்க்களப்படுத்துவானுங்க.

ஆரம்ப காலங்கள்ல எனக்கு குடும்பப் பிரிவை விட அவளோட பிரிவு கொடுத்த வலி எதிலும் ஒட்டவிடலை... தேக்காவில் தேங்கி நின்ற ஞாயிற்றுக் கிழமை சந்தோஷம் எனக்குள் பரவவில்லை... சோகத்தின் சுவடுகள் என்னுள்ளே பதிந்து கிடந்தது. கடையில் உட்கார இடமில்லாமல் கூடும் கூட்டத்தைப் பார்த்து நான் தோசை மாஸ்டருக்கு உதவியாய் தோசை வார்க்க.... டீப் போட்டுக் கொடுக்க... சர்வராய் சுழன்று வேலை பார்க்க... காசையும் விட்டுவிடாமல் வாங்கிக் கொள்ள என பம்பரமாய் வேலை பார்த்ததால் முதலாளிக்கு என்னை ரொம்ப பிடிச்சிப் போச்சு. தன்னோட பிள்ளை மாதிரி வச்சிக்கிட்டார்.

வருடங்கள் கடக்க, ஞாயிற்றுக்கிழமை சந்தோஷம் எனக்குள்ளும் வந்து ஒட்டிக் கொண்டது. வீராசாமி அண்ணன் கடையைக் கொடுத்துட்டு ஊருப்பக்கம் போயி செட்டிலாயிடுச்சு... இப்ப அந்த ஹோட்டல்ன்னு நானும் நண்பனும்தான் வாங்கி நடத்துறோம்.  தேக்காவுல  2013 டிசம்பர் எட்டுல நடந்த பிரச்சினைக்குப் பின்னால பொது இடங்கள்ல தண்ணி அடிக்கவும் கூட்டம் கூடவும் தடை விதிச்சதால வியாபாரம் டல்லடிச்சது... அப்புறம் கொஞ்சம் கொஞ்சமாக சகஜ நிலைக்கு மாறி இப்ப ஓரளவுக்கு ஓடிக்கிட்டுத்தான் இருக்கு.

Image result for ஓவியர் ஷ்யாம்

வருசத்துக்கு ரெண்டு தடவை ஊருக்கு வந்திருவேன்... நண்பன் பார்த்துப்பான்... அவன் வரும்போது நான் பார்த்துப்பேன்.... எனக்கு நண்பனா வாச்சவன் பரக்கத், அறந்தாங்கிக்காரன்... சிங்கப்பூர் போனப்போ பழகினவன்தான்.... ஊயிரைக் கேட்டாக் கூட கொடுத்திருவான்... அப்படிப்பட்ட நட்பு... இந்த பதினைந்து வருசத்துல ரெண்டு குடும்பமும் ஒண்ணா மண்ணாத்தான் இருக்கோம். நான் ஊருக்கு வந்தா குடும்பத்தோட அவனோட வீட்டுல போயி ரெண்டு மூணு நாள் தங்குறதும்... அவன் வந்தா எங்க வீட்ல வந்து தங்குறதும் வாடிக்கை.... அப்படிப்பட்ட பந்தம் எங்களோடது...

அவன் மனைவி பாத்திமா... எனக்கு தங்கை இல்லாத குறையை நீக்கியவள். அண்ணா... அண்ணா... என அப்படி ஒரு அன்பு. ஸ்வாதிகா எங்க வீட்டு மருமகளாக்கும்... இம்தியாஸூக்குத்தான் கட்டணும்... மதம் கிடக்குது மதம் அது யாருக்குண்ணா வேணும்... அது நம்மளை ஒதுக்கும் முன்னால நாம அதை ஒதுக்கிட்டு சம்பந்தியாவோம் என்று சொல்வாள். நான் சிரித்துக் கொள்வேன்... சாதிக்காகவும் மதத்துக்காகவும்தானே நாம இதயங்களைப் பிரிக்கிறது மட்டுமில்லாம இப்பக் கழுத்தறுக்கவும் செய்யிறோம். நான் அவளை விட்டு விலகிய அந்த நவம்பர் 2 கூட சாதியைச் சுமந்த மனிதர்களால்தானே..?

கல்லூரியில்தான் அவள் பழக்கம்... என்னோட வகுப்புத் தோழி அல்ல அவள்... நாங்கள் நடத்திய கையெழுத்துப் பிரதியில் அவளும் ஒரு ஆசிரியை... அப்படித்தான் எங்களுக்குள் பழக்கம்.  எழுத்தின் வாசம் எங்களின் நேச விதையை துளிர்க்கச் செய்தது. என்னோட வகுப்புத்தோழி மல்லிகா எனக்கு லெட்டர் கொடுத்த போது எனக்குள் அவள் விருட்சமாய் வளர்ந்து நிற்க, மல்லிகா தோழியாகிப் போனாள். இப்போது சந்தித்தாலும் 'என்னைய நீ கட்டியிருக்கலாம்' என்று சொல்லிச் சிரிப்பாள். அவள் வாழ்க்கை குடிகாரனுக்கு வாக்கப்பட்டு சிரிப்பை மறந்து தினங்களை தின்று கொண்டிருப்பதாய் அவள் ஊர்க்கார நண்பன் மனசுக்குள் இறக்கிச் சென்றான் ஒரு மாலை நேரத்து  சங்கர் டீக்கடை டீயோடு...

இந்த இருபது வருசத்துல அதாவது 1996க்குப் பிறகு அவளை நான் பார்க்கவே இல்லை... 'என்னைய எங்கிட்டாச்சும் கூட்டிக்கிட்டுப் போ... இங்க இருந்தா எங்கப்பா எங்க மாமாவுக்கு கட்டி வச்சிருவாரு... நீ இல்லாம என்னால வாழ முடியாது... கேட்டா வேலையில சேர்ந்துட்டு கட்டிக்கிறேன்னு சொல்வே.... புரிஞ்சிக்க... காலேஜ் முடிச்சிட்டு எவ்வளவு நாளக்கி கல்யாணம் பண்ணிக்காம தள்ளிப் போட முடியும்...'ன்னு அழுதா. ஒரு வேலையும் இல்லாம அவளைக் கூட்டிக்கிட்டுப் போயி... யோசித்தேன்...

ஒரு முடிவுக்கும் வரமுடியாத ஒரு தினத்தில் இளமை வேகத்தில்  நேரே அவ அப்பாக்கிட்ட போனேன்... விஷயத்தைச் சொன்னேன்... 'அட துத்தேறி நாயே... உஞ்சாதி எங்கே... என் சாதியெங்கேன்னு கத்தினார்.... இப்பவா இருந்தா 'ஆமா சாதி எங்கே..?'ன்னு அவரோட சேர்ந்து தேடியிருப்பேன். ஆனா அன்னைக்கு முடியல... இழுத்துக்கிட்டுப் போனா படிக்கவச்சதுக்கு நல்ல பலன் கிடைச்சிருச்சுன்னு விவசாயியான அப்பாவும்... எங்களோட வாழ்க்கை இனி என்னாகும்ன்னு ரெண்டு தங்கைகளும்... பெத்த வயித்தை தரிசாக்கிட்டியேடான்னு அம்மாவும் சொல்வாங்களேன்னு காதலை தாடியில் தூக்கிட்டேன். 

நாலு நாளைக்கு அப்புறம் அதாங்க நவம்பர் 2ந்தேதி அவளை சிவன் கோவிலுக்கு அருகில் எதார்த்தமாய்ப் பார்த்தேன்... பாதுகாப்போட வந்திருந்தா... வலியோட சிரிச்சா.... 'காதல்ங்கிறது இவ்வளவுதான் இல்லே... எங்கப்பா சாதியைக் கேட்டா... நீ காதலைக் கொடுத்துட்டே இல்லே... அப்புறம் எதுக்கு காதலிச்சே... அவரை எதுத்து என்னைய கூட்டிக்கிட்டு போக உன்னால முடியலையில்ல... மூணு வருசம் உனக்காக வாழ்ந்தேனே... அதெல்லாம் பொய்யாப் போச்சுல்ல... எங்கயாச்சும் போயிருவோம்ன்னு சொன்னேனே... பயந்தவனுக்கு எதுக்கு காதல்... கத்திரிக்காய் எல்லாம்... எங்கப்பா சாதிச்சிட்டாரு... நீ சாகடிச்சிட்டே... சிறகொடிஞ்சது நாந்தானே... என்னோட தவிப்பு உங்களுக்குத் தெரியாது... தெரிஞ்சி நீங்க ரெண்டு பேரும் என்ன பண்ணப் போறீங்க... அடுத்த மாசம் கல்யாணம்.... எங்க மாமாதான் மாப்பிள்ளை... மனசை ஒடச்சிட்டு வாழச் சொல்றாங்க... நீயும் நல்ல பொண்ணாப் பாத்து கட்டிக்க... நல்லாயிரு...'ன்னு சொல்லிட்டு ரெண்டு சொட்டு கண்ணீரை தரையில விட்டுட்டு படக்குன்னு பொயிட்டா... பாவி மனசு பத்திக்கிட்டு எரிஞ்சிச்சு.... ராத்திரியெல்லாம் தூங்காம அழுதேன்... மறுநாளே மகேஷ் என்னைய சென்னைக்கு கூட்டிக்கிட்டு வந்திட்டான்... அப்புறம் அங்க இங்க சுத்தி சிங்கப்பூர்ல செட்டிலானேன். குடும்பம் குழந்தையின்னு வாழ ஆரம்பித்து வாழ்க்கையை கடந்து நாப்பதுகளைத்தாண்டி நிக்கிறேன்.

இந்த இருபது வருசத்துல எத்தனையோ முறை வந்திருக்கிறேன்... அவளைப் பார்த்ததில்லை... எங்கோ கணவனுடன் தூர தேசத்தில் இருக்கிறாள் என்று மட்டும் அறிந்து கொண்டேன். இந்த முறைதான் அவளும் தீபாவளிக்கு அம்மா வீட்டுக்கு வந்திருக்கிறாளாம்... நாப்பதுகளில் நிற்கும் அவள் தோற்றத்தில் நிறைய மாற்றம் இருந்தாலும் அந்த முகம் மட்டும் இன்னும் அப்படியே இருக்காம்... என்னை விட்டு வாழப் பிடிக்கலைன்னு சொன்னவளுக்கு ரெண்டு குழந்தைகளாம்... அவளை மறக்க முடியலைன்னு சொல்லும் எனக்கும் ஒரு பொண்ணு இருக்காளே.... வாழ்க்கை சிலதை மறந்து கிடைப்பதோடு வாழக் கற்றுக் கொடுத்து விடுகிறது.

எங்க கடையில் வேலை பார்க்கும் சூரி அண்ணனுக்கு இப்ப 55 வயசாச்சு.... பத்து வருசத்துக்கு முன்னால நம்ம பக்கத்து புரோட்டாக்காரர்ன்னு மாமனார் சொல்லி கடைக்கு கூட்டிப் போனேன்... எங்க கூடவே இருந்திட்டார்.... ஐந்து பிள்ளைகள்... அவருக்கும் அவர் மனைவிக்கும் ஒத்தே வராதாம்... எப்பவும் சண்டைதானாம்... கல்யாணமாகி ரெண்டு மூணு வருசத்துல ரெண்டு பேருக்கும் இடையில பேச்சு வார்த்தையே இல்லையாம்... கிட்டத்தட்ட பதினைந்து வருசமா பேசிக்கிறது இல்லையாம்... அந்த பதினைந்து வருசத்துல பொறந்தது நாலாம்... அவர் சொல்லும் போது சிரித்தாலும் வாழ்க்கை... எப்படியிருந்தாலும் ஒரு சில விசயங்களை வசமாக்கிக் கொடுக்கத்தான் செய்கிறது.

அவளை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் இன்னும் மனசுக்குள் ரெக்கை கட்டி பறந்து கொண்டிருந்தது... 'என்னங்க ஒரு மாதிரி இருக்கீங்க...? தலை வலிக்கிதா...? காப்பி கொண்டாரவா...?' ஆதரவாய் கேட்டபடி அருகே வந்தமர்ந்தாள் மனைவி... என் உயிர்... என்னை மீட்டெடுத்தவள்... எனக்காக... என்னை கேவலமாகப் பேசினார் என்பதற்காக... இவள்  அண்ணன் கூட பேசி ஆச்சு வருஷம் பத்து.... இந்த வருட தீபாவளிக்குத்தான் கூட்டிப் போய் ரெண்டு பேரையும் சேர்த்து வைக்கணும்ன்னு நினைத்திருக்கிறேன்... இந்த உறவு முறைகள் எல்லாம் மீண்டும் வரவா போகிறது. பொறந்துட்டோம்... நல்லதோ கெட்டதோ அனுசரிச்சிப் போவோமேன்னு வாழக் கத்துக்கிட்டேன்...

அவ என் அத்தை பெண்ணுதான்... மச்சான் என்னைத் திட்டியிருந்தாலும் எல்லாம் மறந்து நானும் ஸ்வாதிகாவும் அவங்க வீடு போவோம்... இவள் மட்டும் ஏனோ வர மறுத்துவிடுவாள். எனக்கானவள்... என்னை மட்டும் சுமக்கும் என் தாய்... அன்று அவள் சுமந்த இந்த உயிரை இப்போது இவள் சுமக்கிறாள் அவளைவிட இன்னும் தீவிரமாய்... மடியில் கிடக்கும் பதின்ம வயது மகள் என் மீசையில் விளையாடுகிறாள்... அவளின் ஞாபகத்துக்கு எண்ணெய் வார்ப்பது போல... அவளும் இப்படித்தான் பல சமயங்களில் அரும்பு மீசையில் குறும்பு செய்திருக்கிறாள். வளர்ந்தாலும் பெண் பிள்ளைகளுக்கு அப்பாவின் மீது அதீத அன்புதான்... வருடமெல்லாம் பார்க்கும் அம்மாவைவிட வருடத்தில் சில மாதம் வரும் அப்பா மீதே அன்பின் சாரல் பூவாய்த் தூவுகிறது என்பது மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டுமே தெரியும்...

நான் மகளையும் மனைவியையும் மாறி மாறிப் பார்த்தேன்... புரிந்து கொண்டவள் மகளை அப்பாவுக்கு தண்ணி எடுத்துக்கிட்டு வாம்மா என்று அனுப்ப, 'அவள் வந்திருக்காளாம்... மகேஷ் சொன்னான்' என்றதும்... 'ம் பார்க்கணுமா...?' என்றாள் என் உள்ளம் புரிந்தவளாக. இவளுக்கு எல்லாம் தெரியும்... என்னை நம்பி வந்தவளிடம் மறைப்பதால் என்ன லாபம்...? எல்லாம் சொன்னேன்... பெண் கேட்டது வரை... அத்தை மகள்தானே எல்லாம் அறிந்துதான் என்னைக் கைபிடித்தாள் என்றாலும் என் வாயால் சொன்னதால் இவளின் உலகம் சுருங்கி எனக்கு மட்டுமானது... இவளோட உலகத்தில் நான் மட்டுமே தஞ்சைக் கோபுரமாய் உயர்ந்து நின்றேன்... இதுவரை எந்தக் குத்தலும் குடைச்சலும் இவளிடம் இருந்து வந்ததில்லை.

'இருபது வருசமாச்சு... பாத்தா பேசுவாளா...? அவளைப் பாக்கப் போயி அவ பாக்கலைன்னா... பேசலைன்னா...  வேண்டாம் விடு... நினைவுகளோட வாழ்ந்துட்டுப் போறேன்... அதான் என்னைச் சுமக்க நீங்க இருக்கீங்களே ... என்னைத் தாலாட்ட வசந்தமாய் நீங்க வந்தாச்சுல்ல...' என்றதும் 'அதெல்லாம் பேசுவா... அவளுக்கும் ஒரு அழகான வாழ்க்கை இருக்கு... நீங்க எங்கிட்ட எல்லாம் சொன்னீங்க... சொல்லலைன்னாலும் எனக்கு தெரிஞ்சதுதான் உங்க வாழ்க்கை... ஆனா அவ சொல்லியிருக்க முடியுமா...? மாமாதான் கட்டிக்கிட்டாருன்னாலும் தெரிஞ்சிருக்குமா... தெரியாதான்னு தெரியலையில்ல... மனசுக்குள்ளயே போட்டு பூட்டி வச்சிருந்தான்னா.... பாவம்... வாழ்க்கை பூராம் வெந்து செத்துக்கிட்டுல்ல இருப்பா... போங்க போய் பார்த்துட்டு வாங்க... இறுதிவரை ரெண்டு பேரும் நினைப்போட வெந்து நோகாமல் நல்ல நட்பாய் தொடரலாமில்லையா...? அவளுக்கு மட்டுமில்லாம உங்க மனசுக்கும் ரிலாக்ஸா இருக்கும்... தீபாவளியையும் வருத்தமில்லா மனசோட சந்தோஷமாகக் கொண்டாடலாம்' என்றாள்.

இந்தாக் கிளம்பிட்டேன்... அவளுக்குப் பிடித்த இளம் பச்சை நிற சட்டையை மனைவி கொடுக்க, அதைத் தவிர்த்து என் மனைவிக்குப் பிடித்த வெளிர் ஊதாப் பனியனை போட்டுக் கொண்டேன்... என்னவள் சிரித்தாள்... 'உண்மையிலேயே  பேசாம விரட்டப்போறா' என்று நக்கலடித்தாள். வாழ்க்கையின் போக்கில் எனக்கு இதுதான் சரியெனப்பட்டது.  இன்னும் அவள் நினைவில் இருக்கோம்ன்னு அவளும் இவளும் நினைத்துவிட்டால்...? 

வண்டி போய்க் கொண்டிருந்தது அவள் வீட்டை நோக்கி... யாரோ அழைக்க 'மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்' என்றது பாக்கெட்டில் கிடந்த செல்போன்.

Image result for தீபாவளி வாழ்த்துக்கள்

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

-'பரிவை' சே.குமார்.

புதன், 26 அக்டோபர், 2016

தீபாவளி மாறிப்போச்சு (அகல் கட்டுரை)

கல் மின்னிதழ் தீபாவளி மலரில் எனது "தீபாவளி மாறிப்போச்சு" என்ற கட்டுரை வெளியாகியிருக்கிறது. தொடர்ந்து எனக்கு எழுத வாய்ப்புக் கொடுக்கும் அகல் மின்னிதழ் ஆசிரியர் சத்யா (கணேஷ்) அவர்களுக்கும் மற்றும் ஆசிரியர் குழுவுக்கும் நன்றி.

நான் எழுதிய கட்டுரையை அப்படியே இங்கு பகிர்ந்திருக்கிறேன்... ஒரு சில காரணங்களால்  சில வரிகளை அகலுக்காக எடுக்கும்படி ஆனது. அகலில் கட்டுரை வாசித்து அங்கும் இங்கும் உங்களுக்குத் தோன்றும் குறைகளை நிறையவும் நிறைகளை குறைவாகவும் சொல்லுங்கள். என்னைப் பட்டை தீட்டிக் கொள்ள உதவும்... நன்றி,

அகலில் வாசிக்க இங்கு சொடுக்கவும்...

Image result for தீபாவளி

தீபாவளி என்றதும் ஏக சந்தோஷம் வந்தது பள்ளிக்கூடத்தில் படிக்கும் நேரத்தில்... இப்போ தீபாவளி என்றதும் 'ஏன்டா நரகாசுரனைக் கொன்னீங்க...?' அப்படின்னு முகநூலிலும் வாட்ஸப்பிலும் கேட்பவர்களில் ஒருவராய்த்தான் மனசு இருக்கிறது. காரணம் இன்றைய பண்டிகைகளின் நிலமை மட்டுமின்றி எவரெஸ்ட்டாய் எகிறி நிற்கும் விலைவாசியும்... கலைஞர் தொலைக்காட்சியில் சொல்வது போல் விஷேச தினங்கள் எல்லாம் விடுமுறை தினங்களாய் மட்டுமே ஆகிவிட்டது வேதனை... விடுமுறை தினம் என கலைஞர் டிவி சொல்றது யாருக்கான பண்டிகைகளுக்கு என்பதை முன்னெடுத்தோம் என்றால் இங்கு ஒரு விவாத மேடை நடத்தலாம்... பட்டாசு வைக்கிறதைப் பற்றி பேசும் போது அது எதுக்கு நமக்கு. வாங்க மத்தாப்புக்களும் சங்கு சக்கரங்களும் மகிழ்வுக்கும் தீபாவளிக்குள் பயணிப்போம்.

இன்றைய பண்டிகைகள் எல்லாமே உறவுகளைத் தொலைத்த பண்டிகைகள்தான்... ஆம் கூட்டுக் குடித்தன கொண்டாட்டங்கள் குறைந்து வருடங்கள் பல ஆகிவிட்டன. கிராமங்களில் நம் தமிழர் திருநாளாம் பொங்கல் விவசாயம் வேரறுக்கப்பட்ட பின்னரும் கூட சிறப்பாக கொண்டாடப்படுவதால் தமிழனின் திருநாள் இன்னும் அறுவடையாகாமல் இருப்பது மகிழ்ச்சியே.... ஆனால் நகரங்களில் பொங்கல் என்பது சிலிண்டர் அடுப்பில் குக்கரில் வைத்துச் சாப்பிடுவதில் முடிந்து விடுகிறது என்பதை நாம் அறிவோம். அதேபோல்தான் தீபாவளியும் வெடிகளுக்காக மட்டுமே கொண்டாடப்படும் பண்டிகை என்ற நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டது. இன்றைய நிலையில் தீபாவளி என்பது ஒரு பண்டிகை தினம்... கடையில் வாங்கிய பதார்த்தங்களை சாப்பிட்டு... ரெடிமேட் உடைகள் அணிந்து... காசை கரியாக்கி... தொலைக்காட்சிகளில் புதைந்து கழித்து விடுகிறோம். மேலே சொன்ன  பள்ளி நாட்களுக்கு... அதாவது ஒரு இருபது... இருபத்தைந்து வருடங்கள் பின்னோக்கி ஒரு எட்டு போனோம் என்றால் எத்தனை மகிழ்ச்சியாய் பண்டிகை தினங்களை கடந்திருக்கிறோம் என்பதை அறியலாம். அவை கொடுத்த சந்தோஷத்தைப் பற்றி வீடியோ கேமில் வியாபித்திருக்கும் இன்றைய குழந்தைகள் அறிவார்களா..?

இன்றைக்கு பிரமாண்டங்களில் நுழைந்து பர்ஸைக் காலி பண்ணி துணிகளை அள்ளி வந்து விடுகிறார்கள் ஆனால் அன்று ஒரு மாதம் முன்பே துணி எடுத்து தையற்கடையில் தைக்கக் கொடுத்து விட்டு தையல்காரர் கொடுக்கும் அட்டையை சட்டையில் வைத்துக் கொண்டு பசங்களிடம் காட்டி மகிழும் சுகத்தில் ஆரம்பிக்கும் இன்பத் தீபாவளி. புதுத்துணிகளை வாங்கி... வெடி வாங்கி... அதையும் நாளைதான் போடணும் என்ற அப்பாவின் கட்டளைக்குப் பயந்து மஞ்சள் பைக்குள் இருந்து எடுத்து எடுத்துப் பார்த்து வைக்கும் சந்தோஷத்தில் தொடரும் மத்தாப்பூத் தீபாவளி. அதிகாலை எழுந்து பலகாரம் சுடும் அம்மாவுக்கு உதவி செய்கிறேன் என விறகடுப்பில் கொதிக்கும் எண்ணெச்சட்டிக்கு முன்னே அமர்ந்து இருப்பதில் விடியும் இனிப்புக் கலந்த தித்திப்புத் தீபாவளி. எந்தப் பக்கம் சூலம் எனப் பார்க்க 'திருவிழா சமயத்தில்... ' என வாய்க்குள் முணங்கியபடி விரலில் எண்ணிஅப்படியில்லை என்றால் ராணி முத்து முருகன் படம் போட்ட காலண்டரில் பார்த்து ஒவ்வொருவராய் நிற்க வைத்து தலையில் எண்ணெய் வைத்து உடம்பெல்லாம் வடிய வடிய தேய்த்து விட்டு, சீயக்காயுடன் கண்மாய்க்கு குளிக்க அனுப்புவதில் நீச்சலடிக்கிறது குதூகலத்  தீபாவளி... அப்புறம் புதுத்துணியில் மஞ்சள் வைத்து... சாமி கும்பிட்டு... பலகாரம் சாப்பிட்டு வெடியோடு மாரியம்மன் கோவிலில் பசங்களோடு சங்கமித்தால் பயிரைத் தழுவும் தென்றல் போல மழைக்கு முன்னே வரும் சாரம் போல சந்தோஷச் சிறகடிக்கும் இன்பத் தீபாவளி.

எண்ணெய் தேய்க்கிறதுன்னு சொல்லும் போது ஆரம்பத்தில் வடிய வடிய தேய்த்தாலும் கொஞ்சம் வளர வளர எண்ணெய் தேய்ப்பதிலும் சிக்கனம் கொண்டு வந்து தலைக்கு மட்டும் என்றாகிவிட்டது. இப்போது அதுவும் இல்லை... ‘எண்ணெய் தேய்த்து குளிச்சாத்தானா..?’ என்றபடி நரகாசுரனைக் கொன்றது எப்படி... எதனால் தீபாவளின்னு பேர் வந்தது... என நடிகர்களும் நடிகைகளும் விளக்கமாய்ச் சொல்லும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இருந்து கண்ணை எடுக்காமல் அமர்ந்து இருப்பதில்தான் இன்றைய தீபாவளி விடிகிறது. ‘அவனுக்கு எண்ணெய் ஒத்துக்காது..? நீங்க வேணுன்னா எண்ணெயில குளிங்க..’ என்ற குரல்களை இன்றைக்கு வீடுகள் தோறும் கேட்கலாம். அது எப்படி ஒத்துக்கும்... பிறந்த குழந்தைக்கு கண்ணில் நல்லெண்ணெய் ஊற்றி... உடம்பெல்லாம் எண்ணெய் தேய்த்து காலை வெயிலில் வைத்திருந்த காலம் அல்லவே இந்தக் காலம்..? எந்தப் பிள்ளைக்கு நல்லெண்ணெய் ஊற்றுகிறோம்... எந்தப் பிள்ளையை வெயிலில் காட்டுகிறோம்...டாக்டர்கள் இந்தச் சோப்பை போடுங்கள்... இந்த எண்ணெய் தேயுங்கள் என்று சொல்வதை மட்டுமே நாம் கேட்கிறோம். ஜான்ட்சன் பேபி சோப்பு போட்டா தோல் பிரச்சினை வரும்... அதனால் பியர்ஸ் போடுங்க... அதுவும் அதுல இந்தக் கலர் போடுங்கன்னு டாக்டர் சொல்றதை நம்பி பத்து வயசானாலும் பியர்ஸ்க்குள்ள இருந்து வராம இருக்கும் தாய்மார்களே அதிகம். இயற்கை வைத்திய முறைகளை மறந்து பணம் பார்க்கும் செயற்கையில் மாட்டிக் கொண்டு விட்டோம்... அப்புறம் எப்படி நமக்கு எண்ணெய் ஒத்துக் கொள்ளும்...?

நகரத்து தீபாவளிகள் எல்லாமே பலகாரம் சாப்பிட்டு... வெடி போட்டு... இந்தியத் தொலைக்காட்சிகளில் முதல்முறையாக போடும் படங்களைப் பார்த்து... கடையில் வாங்கிய பிராய்லரையோ அல்லது ஆட்டுக்கறியையோ சாப்பிட்டு... தூக்கம் போட்டு... இரவு நேரத்து வெடிகளை வைத்து... மீண்டும் தூக்கத்தில் கழிப்பதாய்த்தான் எப்பவும் கடந்து கொண்டிருக்கின்றன. இதே நிலமைதான் இன்று நகரத்தை ஒட்டியிருக்கும் கிராமங்களிலும் இருக்கின்றது. கேபிள் நுழையாத ஊர்களில் எல்லாம் டிஷ் ஆண்டனாக்கள் வந்ததன் விளைவு பண்டிகைகள் எல்லாம் சிறப்பு நிகழ்ச்சிகளுக்குள் அடங்கிப் போய்விட்டன. இதுதான் இன்றைய தீபாவளி என்றாலும் இன்னும் பல கிராமங்களில் பண்டிகை தினங்கள் எல்லாம் வீரியமாய் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன என்பதில் மகிழ்ச்சியே.

அன்றைக்கு புத்தாடையுடன் வெடிகளை தூக்கிக் கொண்டு கோவில்... குளக்கரை... என எல்லாரும் கூடி வெடித்து மகிழ்ந்த தினங்களே இன்னும் பசுமையாய்... மாட்டுச் சாணியில் அணுகுண்டு வைக்காமலோ... ஓணானைப் பிடித்து அதன் வாயில் சீனி வெடி வைக்காமலோ.... கொட்டாச்சிக்குள் அணுகுண்டு வைக்காமலோ... உக்கார்ந்திருப்பவனுக்கு அருகில் வெங்காய வெடி வெடிக்காமலோ... எரியும் விறகுக் கட்டையை எடுத்து வெடிப் போட்டபடி பொட்டுவெடியை அதில் வைத்து வெடிக்காமலோ...தீபாவளியைக் கடந்து வந்தேன் என்று சொன்னால் அவன் கிராமத்து வாழ்க்கையை அனுபவிக்காதவன் என்றே அர்த்தம். பாட்டிலில் வைத்து விட்ட ராக்கெட்டையும்... கையில் பிடித்து வீசிய அணுகுண்டையும் மறக்க முடியுமா..? தீபாவளி முடிஞ்சிருச்சு... இனி கார்த்திகைக்கு வெடி வெடிக்கணும் என வெடியை பத்திரப்படுத்தி வைத்துவிட்டு கோவிலைச் சுற்றிக் கிடக்கும் வெடித்த காகிதங்களை எல்லாம் அள்ளி ஓரிடத்தில் குவித்து வெடிக்காத வெடிகளை எல்லாம் அதில் போட்டு பற்ற வைத்து விட்டு வெடிக்க வைப்பதில் முடியும் ஒரு மாத காலமாக ஏங்கித் தவித்த இன்பத் தீபாவளி.

அன்றைக்கு எவ்வளவுக்கு எவ்வளவு சந்தோஷமாக கொண்டாடினோமோ அந்த தீபாவளி இன்று ஒரு பண்டிகை தினமாக மட்டுமே ஆகிவிட்டது. நர்காசுரனைக் கொன்ற தினம்தான் தீபாவளி என்பதை இன்றைய குழந்தைகள் அறிவார்களா..? கண்டிப்பாக அவர்களுக்கு வெடிப் போடும் நாள்... புதுத்துணி உடுத்தும் நாள்... இந்தியத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக ரஜினையோ... விஜயையோ... சிவகார்த்திகேயனையோ பார்க்கும் நாள் அவ்வளவே.

எனக்கு தீபாவளி என்றதும் அம்மா எடுத்து தைக்கக் கொடுக்கும் துணிகள் போக, பெரியண்ணன் தைத்துக் கொண்டு வரும் துணிகளும்... நாம வாங்கும் வெடிகளை விட, பெரியத்தான் கொண்டு வரும் வெடிகளும்... பத்தாவதுக்கு மேல்... திருமணம் வரை தீபாவளிக்கு இரண்டு தினங்கள் இரவு பகல்  தேவகோட்டையில் மாமா தையற்கடையில் துணி எடுத்துக் கொடுக்க நின்றுவிட்டு  நள்ளிரவில் மாமா தைத்துக் கொடுத்த சட்டையுடன்...  பூத்தூறலாய் தூவும் மழையில் நனைந்தபடி மூன்று கிலோ மீட்டர் நம்ம அட்லஸாரை ஓட்டிக் கொண்டு சென்ற தினங்களும்தான் ஞாபகத்தில் இருக்கின்றன.

அதெல்லாம் எப்பவும் சுமக்கும் இன்ப நினைவுகள்... இனி அது திரும்பக் கிடைக்கப் போவதில்லை... எல்லாப் பண்டிகைகளுமே இன்று நிறமும்  சுவையும் மாறிவிட்டன. அன்றைய தித்திப்புக்கள் எல்லாம் இன்றைக்கு இல்லை... விஷேச தினங்கள் எல்லாம் விடுமுறை தினங்களாய் கழிவது வேதனையே.... காலமாற்றத்தில் வறண்ட காவிரியைப் போல் விஷேச தினங்கள் எல்லாம் வறட்சியைத்தான் தன்னுள்ளே சுமந்து கடந்து கொண்டிருக்கின்றன... கடக்கின்றன. இனி வரும் காலம் பண்டிகைகள் தேவையா என யோசிக்க வைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

உறவுகள் தொடர்கதை என்பார்கள்... இன்றைக்கு எந்த விஷேசத்திலும் உறவுகளுக்கு வேலை இல்லை... கூட்டுக் குடும்பமாய் கொண்டாடிய தினங்கள் எல்லாம் தனிக் குடித்தனத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. தாத்தா, பாட்டி, மாமா, மச்சான், சித்தி, சித்தப்பா, அத்தை, அக்கா, தங்கை, அண்ணன், தம்பி என எல்லாருமாய் கொண்டாடிய தினங்களில் இருந்த சந்தோஷம் பணத்தின் பின்னே நகர்ந்து பாசங்களைத் துறந்து உறவுமுறை தெரியாத, நாம் சொல்லிக் கொடுக்காத குழந்தைகளுடன் கொண்டாடுவதில் தொலைந்து விட்டது. உறவுகளின் வேர் அறுந்து வெகு காலம் ஆகிவிட்டது. இணையங்கள் இல்லங்களை இணைத்து வைத்திருக்க உள்ளங்கள் விலகி நிற்கின்றன என்பதை நாம் அறிவோம் என்றாலும் காலத்தின் போக்கில் பயணிக்கும் நம்மால் எதையும் சிந்திக்கவும் செயல்படுத்தவும் முடியவில்லை என்பதே உண்மை.

இன்னைக்கு எத்தனையோ வகையான வெடிகளை வெடித்தாலும் அன்னைக்கு வாசலுக்கு வாசல் புஷ்வானம் சிதறும் போது பாவாடை தாவணிகள் மத்தாப்பாய் சிரித்த தினங்களை மறக்க முடியுமா..? கிராமத்துப் பண்டிகை தினங்களும் திருவிழாக்களும் பட்டாம்பூச்சிகளின் காலம் என்பதை மறுக்கத்தான் முடியுமா…?  ம்... அதெல்லாம் அப்போன்னு  பெருமூச்சு விடாதீங்க... வாழ்க்கை நகரும் பாதையில் சந்தோஷச் சாரலுடன் பட்டாம்பூச்சிகளுடன் வசந்தம் வீசியது படிக்கும் காலத்தோடு மறைந்து பெரும் மழையும் கடும் புயலுமாய் பயணிக்க ஆரம்பிக்கும் போது நினைவுகள் மட்டும்தானே தாலாட்டும்...

சீனப் பட்டாசுகளை வாங்காதீர்கள் என்று சொல்லிக் கொண்டுதான் இருக்கிறோம்... ஆனாலும் அதுவும் நன்றாகத்தான் விற்றுக் கொண்டிருக்கிறது. முடிந்தளவு நம்மூரு பட்டாசுகளையே வாங்கிப் பற்ற வையுங்கள்… பாதுகாப்பாய் வெடி வெடியுங்கள்.  வருடா வருடம் தீபாவளிக்கு முன்னரே சிவகாசியில் பட்டாசு ஆலை வெடிப்பது வேதனைக்குறியது. அதில் எத்தனை பேரின் தீபாவளி காணமால் போகிறதோ… தெரியவில்லை. பாதுகாப்பாய் தீபாவளி கொண்டாடுவோம்… வெடிகள் மட்டுமல்ல தீபாவளி…. சந்தோஷங்களும் நிறைந்த்துதான்.

தீபாவளியை கலைஞர் சொல்வது போல் விடுமுறை தினமாக எடுத்துக் கொள்ளாமல் ஒரு சந்தோஷ தினமாக...  உறவுகளின் அன்பில் திளைக்கும் தினமாக கொண்டாடுங்கள்... இவ்வளவு பேசுறியே... நீ எப்படி கொண்டாடப் போறேன்னுதானே கேக்குறீங்க... ஹி..ஹி... இங்க என்னங்க தீபாவளி... எப்பவும் போல அலுவலகத்தில்... பள்ளிக்காலத்தில் கொண்டாடிய தீபாவளி நினைவோட  அன்றைய தினத்தை கடந்து பயணிக்க வேண்டியதுதான்...


-'பரிவை' சே.குமார்.

சனி, 22 அக்டோபர், 2016

ஜலதீபத்தில் ஒரு பயணம்

சாண்டில்யனின் ஜலதீபம் வாசிப்பு அனுபவம் கடல்புறாவைப் போல் சுகமாய் இருந்தது. இடையிடையே தொய்வு ஏற்பட்டாலும் நிறுத்தாமல் வாசிக்க வைத்தது. கடல்புறாவில் ரெண்டு நாயகிகளுடன் பயணித்த கப்பல் இங்கு நான்கு நாயகிகளுடன் பயணிப்பதால் வர்ணனைகளுக்குப் பஞ்சமில்லை. அரசிளங்குமாரியான பானுதேவி, கப்பல் தலைவனின் வளர்ப்பு மகளான மஞ்சு, கணவனை இழந்து மற்றொருவனுக்கு மனைவியாகி கடல் போரில் அவனை இழக்கும் கேதரின், நர்சாக வரும் எமிலி... இப்படி நான்கு பேருடன் பயணிக்கிறது ஜலதீபம்.

Image result for ஜலதீபம்
(ஜலதீபம் படம் உதவி : கூகிள்)
மராட்டிய வீர சிவாஜியின் வழித்தோன்றல்களின் அரசாளும் உரிமையைப் பெறுவதற்கான போட்டிதான் கதைக்களம்.  ஷாஹூவுக்கும் தாராபாய்க்கும் அரசுரிமை தொடர்பான பிரச்சினை இருக்க, தஞ்சையில் பிறந்த மூன்றாவது வாரிசும் போட்டியில் இறங்கலாம் என கடத்தப்படுகிறான். அவன் எங்கிருக்கிறான்... என்ன ஆனான் எனக் கண்டுபிடிக்க வரும் தமிழனான இதயச்சந்திரன் வாழ்வில் குறுக்கிடும் நாலு பெண்கள்... அவன் சந்திக்கும் பிரச்சினைகள்... கடல்போர்... தரைப்போர்...வழக்கு... என ஒரு சின்ன ஒளியில் இருந்து மிகப்பெரிய வட்டத்தை ஆயிரம் பக்கங்களுக்கு மேல் சுவராஸ்யமாய் நகர்த்தியிருக்கிறார். 

மக்களால் 'ஸார்கோல்' என்றும் ஆங்கிலேயர் மற்றும் மராட்டியர்களால் 'கடற்கொள்ளையன்' என்றும் அழைக்கப்பட்ட மாவீரன் கனோஜி ஆங்க்ரே அரபிக் கடலில் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்து முதலில் ஷாஹூவிற்கு எதிராய்... தாராபாய்க்கு ஆதரவாய் நின்று பின்னர் பாலாஜி விஸ்வநாத் என்ற பேஷ்வாவின் முயற்சியால் மனம் மாறி மன்னர் ஷாஹூவிற்கு ஆதரவாக செயல்பட்டார் என்பது வரலாறு. இந்த வரலாற்றுடன் கற்பனைக் கதாபாத்திரங்களை உலாவவிட்டு அழகாய் நகர்த்தியிருக்கிறார் சாண்டில்யன்.

அந்தக் காலத்தில் பெண்கள் பார்த்ததும் காதல் வயப்பட்டார்கள் என்பதெல்லாம் ஏற்க முடியாததுதான் என்றாலும் எல்லாப் புதினங்களுமே இப்படித்தான் கதை சொல்கின்றன. பார்த்ததும் அவனை விரும்பி... அடுத்த நொடியே அவன் அணைப்புக்குள் எப்படி ஒரு பெண்ணால் இருக்க முடியும் என்ற யோசனை எழுந்தால் அதை எல்லாம் மூட்டை கட்டி விட்டு... காட்டுக்குள் பானுதேவியுடன்... கப்பலில் கேதரினுடன்... கல்பாறையில் மஞ்சுவுடன்... போர்க்களத்துக்கு செல்லுமிடத்தில் எமிலியுடன்... என எல்லாம் கடந்து பயணித்தால் ஜலதீபம் ரசிக்க வைக்கும்.

File:Murud Janjira Panoramic View.jpg
(ஜன்ஜீராக் கோட்டை) 
கடல்புறாவில் காட்டப்பட்ட கடல் போர் போல் இதில் அவ்வளவு அற்புதமாக வர்ணித்து எல்லாம் எழுதவில்லை... கடல்புறா சிறகு விரித்து போருக்கு தயாராவதை அவ்வளவு அழகாகச் சொல்லியிருப்பார்... இதில் ஜலதீபத்தின் போர் வர்ணனைகள் அவ்வளவாக ஈர்க்கவில்லை என்றாலும் கடல்போரைக் காட்டிலும் இதயச்சந்திரனும் அவனின் உபதளபதி சுகாஜியும் கல்யாண்கோட்டை என்னுமிடத்தில் பாஜிராவ் பிங்க்லேயின் தலைமையிலான ஷாஹூவின் தரைப்படையை இருபுறமும் இருந்து தாக்கி எப்படி வெற்றி பெற்றார்கள் என்பதை மிக அழகாக எழுதியிருப்பார்... நாமும் அந்த போர்க்களத்தில் இதயச்சந்திரன் கூட நின்றது போல் தோன்ற வைத்துவிடுவார். கனோஜி ஆங்க்ரே கரகரப்பான குரலுடன் கம்பீரமானவராக இருந்தாலும்... எத்தனை பேர் வந்தாலும் எதிர்த்து நிற்கும் வீரம் கொண்டவராக இருந்தாலும்... எதையும் முன்கூட்டியே சொல்பவராக இருந்தாலும்... பிறர் மனதுக்குள் என்ன இருக்கு என்பதைச் சொல்பவராக இருந்தாலும் பெண்கள் பற்றி அவர் பேசும் பேச்சுக்கள் மிகவும் வக்ரமானவை. இருந்தாலும் இறுதிவரை மிகச் சிறந்த வீரனாக திகழ்ந்திருக்கிறார்.

கொள்ளையரால் தாக்கப்பட்ட கப்பல் உடைந்து அடிபட்டு கரை ஒதுங்கும் இதயச்சந்திரனை பிரமேந்திர சுவாமியும் பானுதேவியும் காப்பாற்ற, பானு தேவி மேல் காதல் பிறக்கிறது. பானுதேவிக்கும் ஆசையிருந்தாலும் தன் அரசியல் லாபத்துக்கு அவனை பயன்படுத்த எண்ணி ஆங்க்ரேயின் எதிரியான ஸித்திகளிடம் தூது அனுப்ப, அவர்களின் கோரிக்கையை இதயச் சந்திரன் ஏற்க மறுக்க, அங்கிருந்து தப்பும் சூழ்நிலையில் ஆங்க்ரேயின் வளர்ப்பு மகள் மஞ்சு காப்பாற்றுகிறாள். அப்போதே மஞ்சு மீது காதல் வருகிறது... என்னய்யா இது தமிழ் சினிமா மாதிரி அப்படின்னு யோசிச்சா... நல்லவேளை அங்க கட் பண்ணி அரபிக் கடல்ல டான்செல்லாம் வைக்கலை... அந்த விதத்தில் நாம் தப்பித்தோம்.

ஆங்க்ரேயுடன் ஜலதீபத்தில் பயணிக்க ஆரம்பிக்கும் போது மஞ்சு மீது காதல் இன்னும் தீவிரமாக அவள் பிடிகொடுக்காமல் இழுத்தடிக்கிறாள். ஒரு நேரம் அன்பாய் பேச... ஒரு நேரம் முகத்தில் அடித்தாற்போல் பேச... இந்தப் பெண் காதலிக்கிறாளா இல்லையா என்ற தவிப்புடன் இருக்கும் இதயச்சந்திரன் கடல் போரில் கணவனைக் கொன்று சிறை பிடிக்கும் கேதரினை ஆங்கிலேயரிடம் ஒப்படைக்க ஆங்க்ரே மற்றும் மஞ்சு இல்லாது உப தளபதிகளுடன் தனியே பயணிக்கிறான். ஆங்கிலப் பெண் இந்தியனை திருமணம் செய்ய முடியாது... அப்படிச் செய்தால் ஒதுக்கி வைத்து விடுவார்கள் என்று சொல்லும் கேதரின், கணவன் இழந்த வலி மறையும் முன் இதயச்சந்திரனை கட்டிலில் வீழ்த்தப் பார்க்கிறாள். சில நேரம் சபலத்தில் அணைக்கும் அவன் பல நேரம் மஞ்சு நினைவில் அவளை ஒதுக்கி வைக்கிறான்.

Sarkhel Kanhoji Angre I.jpg
(கனோஜி ஆங்க்ரே . 1669 - 1729)
ஆங்கிலேயரிடம் ஒப்படைக்கச் சென்ற இடத்தில் அவளைக் காதலித்தவனுடன் மோதல், பானுதேவி சந்திப்பு மற்றும் அவளால் சிறைபிடிப்பு என பயணித்து எதிர்பாராத விதமாக ஆங்கில அதிகாரியால் சிறைபட்டு... அதிலிருந்து தலையில் அடியுடன்  அதே ஆங்கில அதிகாரி உதவியால் தப்பிவரும் இதயச்சந்திரனுக்கு காயத்துக்கு கட்டுப் போட உடன் வருகிறாள் நர்ஸான எமிலி என்ற ஆங்கிலப் பெண்... இவன் மீது அவளுக்கும் காதல்... மஞ்சுவுக்காக தன் காதலைத் துறந்து நர்ஸாகவே வாழ முடிவு செய்கிறாள் அவனிடம் இருந்து ஒதுங்கிக் கொள்கிறாள். மஞ்சு தனக்கு கிடைப்பாளா மாட்டாளா என்ற தவிப்பில் இருப்பவன் ஒரு முடிவோடு திருட்டுத்தனமாக கோவிலில் வைத்து தாலி கட்டி முதலிரவை பாறைகளில் முடித்து விடுகிறான். 

யாரைத் தேடி வந்தானோ அவனைக் கடத்திய நிம்கர், ஆங்க்ரேயிடம் தூதுவனாக இதயச்சந்திரனிடம் வர அவனை சிறைப்பிடித்தும் உண்மையை அறிய முடியாத நிலையில் யாருக்கும் தெரியாமல் அவனுடன் தமிழகம் செல்ல முயலும் போது பாலாஜி விஸ்வநாத்தின் திட்டத்தின்படி மஞ்சு மற்றும் பிரமேந்திர சுவாமிகளால் கைது செய்யப்படுகிறான். மஞ்சு கர்ப்பமாக இருப்பதால் இதயச்சந்திரனை எப்படி காப்பாற்றலாம் என ஆங்க்ரே தவிக்கிறார். இதயசந்திரன் எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல் அந்த வாரிசை காப்பாற்ற முடியாமல் இப்படி மாட்டிக் கொண்டோமே என்ற தவிப்பில் இருக்கிறான்.

உண்மைக்கு புறம்பாக செயல்படாத பாலாஜி ஆங்க்ரே முன் நிறுத்தப்படும் இதயச் சந்திரனுக்கு என்ன தண்டனை கிடைத்தது..?  தஞ்சையில் பிறந்த மூன்றாவது வாரிசை கண்டு பிடித்தானா..? அந்த வாரிசை யார் கடத்தி வைத்திருந்தார்கள்..? நிம்கர் என்ன ஆனான்...? அநாதையான மஞ்சுவுக்கு அப்பா - அம்மா யார்...? மஞ்சுவை தன் மகள் எனச் சொல்லிக் கொண்டு வருபவன் என்ன ஆனான்...? பிரமேந்திர சுவாமியின் அரசியல் பங்கீடு எதுவரை போகிறது...? என்பதை மிக அழகான கதை நகர்த்தலில் நம்மை கவரும் விதமான வர்ணனைகளுடன் சொல்லியிருக்கிறார் சாண்டில்யன். 

(கனோஜி ஆங்க்ரேயின் நினைவிடம், அலிபாக் - மகாராஷ்டிரா )
ஸ்வர்ண சதுக்கம், ஜன்ஜீரா, கொலாபா என கடலோரத் துறைமுகங்கள் சாண்டில்யனின் வர்ணனையில் நம்மை ஈர்க்கின்றன. நாலு பெண்கள் என்றாலும் கோபமும் தாபமுமாய் காதலனை எங்கே இழந்து விடுவோமோ என்று தவிக்கும் மஞ்சு மற்ற மூவரையும் பின்தள்ளி நம் மனசுக்குள் அமர்ந்து கொள்கிறாள். அதே சமயம் தன் காதலை தியாகம் செய்யும் எமிலியும் கவர்கிறாள்.

கடற்போர் சமயங்களில் இதயச் சந்திரன் கடல்புறாவின் கருணாகரப் பல்லவனைப் போல் செயல்படுகிறான். எப்படி கருணாகரப் பல்லவன் கவர்ந்தானோ அதே போல் இதயச்சந்திரனும் மனசுக்குள் நிற்கிறான். 

ஜலதீபம் ஒரு சுகமான வாசிப்பு அனுபவம்.

படங்கள் உதவி : விக்கிபீடியா
-'பரிவை' சே.குமார்.

புதன், 19 அக்டோபர், 2016

மனசின் பக்கம் : வாசிக்கிறது தப்பாய்யா...

ப்போ அலுவலகத்துக்கு 45 நிமிட பேருந்துப் பயணம்... அதிக நேரத்துடன் சோர்வும் சேர்ந்து கொள்கிறது. கணிப்பொறியில் இருந்த ஆளை புராஜெக்ட் இல்லாத காரணத்தால் களப்பணிக்குப் போகச் சொல்லிக்கிட்டு இருக்கானுங்க... வண்டியை ஓட்டணும்ன்னா போகத்தான் வேணும்... இப்ப அதுவல்ல கதை... இது வேற கதைக்கானது... அண்ணன் ஒருவர் அனுப்பிய சிறுகதைகளை மொபைலில் இணைய வசதி இல்லாததால் அலுவலகத்திலேயே தரவிறக்கம் செய்து பேருந்தில் வாசித்துக் கொண்டு வந்தேன். அருகில் இருந்தவர் வட இந்தியன் போல் தெரிந்தார்... என்னைப் பார்த்தார்....நான் வாசிப்பதைப் பார்த்தார்... வாசிக்கும் எழுத்தை அவரும் படிப்பது போல் கண்களை மேயவிட்டார்... ஒரு ஐந்து நிமிடம் பார்த்துக் கொண்டே இருந்தார்... என்ன நினைத்தாரோ தெரியலை... கஷ்டப்பட்டு பேண்ட்டில் இருந்து போனை எடுத்தார்... வேகமாக முகநூலை திறந்தார்.... ஹிந்தியில் எழுதியிருந்த பெரிய பகிர்வை வாசித்தார்... கையால் அதை மேலும் கீழும் இறக்கி ஏற்றினார்... அடுத்த ஐந்தாவது நிமிடம் அவன் இறங்க வேண்டிய இடம் வந்ததும் படக்கென்று போனை பேண்டுக்குள் போட்டபடி வண்டியை நிறுத்த பட்டனை அழுத்திவிட்டு என்னைப் பார்த்து 'எக்ஸ்கியூஸ் மீ' என்க, நான் ஒதுங்கி வழிவிட இறங்கி மறைந்து போனார். அட பஸ்ல படிச்சது தப்பாய்யா... அவருக்கு என்ன வயிற்றெரிச்சல்.... எரிஞ்ச வயிறு அஞ்சு நிமிஷத்துல எறங்கப் போறோம்ன்னு தெரிஞ்சும் எரிஞ்சது பாருங்க... அப்ப அவஎ எவ்வளவு கடுப்புல இருந்திருப்பாரு....

துவும் அலுவலகம் செல்லும் போது பார்த்ததுதான்... பேருந்தில் செல்லும் வழியில் கட்டிடப் பணி நடந்து கொண்டிருக்கிறது. அதன் தரைத்தளம் போக முதல் தளத்தை ஒட்டி சுற்றிலும் கம்பிச் சாரம் அமைத்து அதன் மீது பலகைகளைப் போட்டு பணியாளர்கள் பணி செய்து கொண்டிருந்தார்கள். ஒரு பணியாளர்... பார்க்கும் போது நம்மாளு மாதிரி இருந்தாரு... மேல நின்னு கீழ வச்சிருந்த குப்பைக்கான தொட்டியில் உடைத்த கற்களை வீசிக் கொண்டிருந்தார்... சாரம் அவ்வளவு வலுவில்லாமல் இருப்பது அதன் ஆட்டத்தில் தெரிந்தது. இவ்வளவு மோசமாக சாரம் போட்டிருக்கானுங்களே.... பாரம் தாங்காமல் விழுந்தால் என்னாகும் என்ற நினைப்போடு பேருந்து நகர அந்த மனிதரைச் சுமந்து பயணித்தேன். மறுநாள் பேருந்து அந்த இடம் கடக்கும் போது சுற்றிலும் இருந்த சாரம் ஒரு பக்கம் முழுவதும் சரிந்து கிடக்கிறது.... அவசரம் அவசரமாக பணியாளர்களும் அருகிருந்தவர்களும் பலகைகளை புரட்டிக் கொண்டிருந்தார்கள்... உள்ளே முதல் நாள் கல்லைத் தூக்கிப் போட்ட மனிதரும் மற்றவர்களும் கிடந்தார்களோ இல்லையோ... அந்த இடத்தை பார்த்ததும் மனசு வலித்தது.

பிரதிலிபி கொண்டாடி வரும் எழுத்தாளர் வாரத்தில் இந்த வாரம் எனக்கு வாய்ப்பளித்திருக்கிறார்கள். ஒரு வாரத்துக்கு அவர்களது முகப்புப் பக்கத்தை எனது பதிவுகள் அலங்கரிக்குமாம். அகலில் வெளியான காத்தாயி சிறுகதையை சிகரம் பாரதி அவர்கள் பகிர்ந்திருந்தார்கள். வெட்டி பிளாக்கர்ஸ் சிறுகதைப் போட்டியில் குலசாமி சிறுகதைக்கு ஆறுதல் பரிசு... ஜீவநதி சிறுகதையை ஆர்.வி.சரவணன் அண்ணன் திரைக்கதையாக எழுதித் தந்து பகிரச் சொன்னார்கள்... பாக்யா மக்கள் மனசு பகுதியில் தொடர்ந்து கருத்து வெளியாகிக் கொண்டிருக்கிறது.... பத்திரிக்கை ஆசிரியர் நண்பர் ஒருவர் கிருஷ்ண ஜெயந்திக்கு கட்டுரை ஒன்று கேட்டு வாங்கினார்... ஆனால் அதை மலரில் வெளியிட மறந்துவிட்டார்... இப்போது அதை தீபாவளி மலருக்கு பயன்படுத்திக்கிறேன்னு சொல்லியிருக்கிறார். இப்படி எல்லாமே என்னை ஊக்குவிக்கும் நட்புக்களால்தான் மட்டுமே சாத்தியம்.  


கொஞ்ச நாளாக ஏனோ நாவல் வாசிப்பில் இறங்கியாச்சு... அது குறித்து முகநூலில் அரட்டையும் களைகட்ட வாசிப்பில் ஆசை அதிகமாயிருச்சு... இப்போ நந்திபுரத்து நாயகி போய்க்கிட்டு இருக்கு... இன்னும் வாசிப்பில் இறங்க ஆசை... வேலைப்பளூவும் மனநிம்மதி இல்லாத சிலபல கஷ்டங்களும் தொடரவிடுமா தெரியவில்லை. இதற்கிடையே முகநூலில் நண்பர் ஒருவர் ஒரு பக்கம் வீரபாண்டிய கட்டப்பொம்மனை திட்டுறானுங்க... இன்னொரு பக்கம் வரலாற்று நாவலை வாசிக்கிறேன்னு கொல்றானுங்கன்னு ஸ்டேட்டஸ் போட்டிருக்காரு.... சாதி வளையத்துக்குள் சிக்காமல் தலைவர்களை சாதிக்குள் இழுக்காமல் ஏதோ வாசித்து நாலு பேரு கருத்துப் போர் நடத்துறது தப்பாய்யா.... வாசிக்கிறது தப்பாய்யா...

எல்லாருடைய பதிவுகளையும் வாசிக்கிறேன்... அலுவலகத்தில் வேலை இல்லாப் பிரச்சினை... அதனால் களப்பணிக்கு செல்ல வேண்டிய சூழல்... மேலும் காலை மாலை பேருந்துப் பயணம் என சோர்வு அதிகமாய்.... அது போக வீடு கட்ட வாங்கிய கடன் கண் முன்னே நின்று சிரிப்பதும் மனச்சோர்வுக்கு முக்கிய காரணம்... இருப்பினும் இரவு விளக்கு அணைத்த பின்னும் கணிப்பொறியில் களமாடி வாசித்து விடுகிறேன்.  கருத்து இட முடிவதில்லை.... கோபப்படாதீர்கள்.

இன்று 84வது பிறந்தநாள்  கொண்டாடும் புலவர் கவிதைகள் இராமாநுசம் ஐயா அவர்களை வாழ்த்தும் வயது எனக்கு இல்லை என்பதால் வணங்குகிறேன். அவரின் ஆசியும் அன்பும் அனைவருக்கும் கிடைக்கவும் நீண்ட ஆயுளோடு வளமும் நலமும் பெற்று வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

மனசின் பக்கம் தொடரும்...
-'பரிவை' சே.குமார்.

செவ்வாய், 18 அக்டோபர், 2016

குலசாமி (வெ.பி. சிறுகதைப் போட்டியில் ஆறுதல் பரிசு)

வெட்டிபிளாக்கர்ஸ் நடத்திய சிறுகதைப் போட்டியில் ஆறுதல் பரிசு பெற்றிருக்கிறது. 

போட்டியை மிகச் சிறப்பாக நடத்திய வெட்டிபிளாக்கர்ஸ் குழும நட்புக்களுக்கும், மாதங்கள் பல ஆனாலும் பொறுமையாய் வாசித்து கதைகளைத் தேர்ந்தெடுத்த நடுவர்களுக்கும் நன்றி. போட்டியில் கலந்து கொண்ட , வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

------------------------

பெண் குழந்தைகளின் பாசத்தில் அம்மாக்களைவிட அதிகமாகத் திளைப்பவர்கள் அப்பாக்கள்தான்... அதேபோல் அப்பாக்களின் அன்பில் சிறகடிப்பவர்கள் பெண் குழந்தைகள்தான். இது காலங்காலமாக தொட்டுத் தொடரும் ஒரு பாசப் பாரம்பரியம். பொதுவாக அம்மா மீது இருக்கும் பற்றுதல் அப்பா மீது இருப்பதில்லை என்று சொல்வதுண்டு.  ஆண் குழந்தைககள் அப்பாவை தூர வைத்துப் பார்க்கப் பழகிவிடுகிறார்கள்... ஆனால் பெண் குழந்தைகள் அப்படி அல்ல... அப்பா மீது அலாதி பாசம் வைத்திருப்பார்கள். அம்மாக்கள் தங்கள் பாசத்தை எந்த ஒரு எதிர்பார்ப்புமின்றி வெளிக்காட்டிக் கொள்வார்கள். அது கறந்த பால் போல் சுத்தமானது... கலப்படம் இல்லாதது.    

அதேபோல்தான் அப்பாக்களின் பாசமும்... அது தாய்ப்பாலைப் போன்றது... அது எளிதில் கிடைத்துவிடாது... அப்பாக்களும் எதையும் எதிர்பார்ப்பதில்லைதான்... ஆனாலும் பாசத்தை அவ்வளவு சீக்கிரத்தில் வெளிக்காட்டமாட்டார்கள்.  அப்பாக்களுக்கு தங்களின் மகன்கள் இளவரசர்களாய்த் தெரிந்தாலும் இளவரசிகளான மகள்களைத்தான் ரொம்ப பிடிக்கும். அதனால்தான் பெண் பிள்ளைகள் கடைசி வரை அப்பாக்களுடன் ஒட்டிக் கொள்கிறார்கள். வீட்டு ஆண்களிடம் சொல்ல முடியாத சில விஷயங்களை அம்மாவிடம் சொன்னாலும் ஒட்டுதல் என்னவோ அப்பாவிடம்தான்.  பெண் பிள்ளைகள் அப்பாவோடு  விரிசல்பட்டு நின்றாலும் என்றாவது ஒருநாள் விம்மி உடைந்து கண்ணீராய் வெளியேறிவிடும். இப்பல்லாம் நாப்கின் வேணுமின்னு அப்பாக்கிட்ட சொல்ற அளவுக்கு பொண்ணுகளையும். பொண்ணுகளுக்கு நாப்கின் மட்டுமின்றி உள்ளாடைகளையும் வாங்கிக் கொடுக்கிற அப்பாக்களையும் அதிகம் பார்க்க முடியுது... இது ஒரு நல்ல வளர்ச்சியின் அறிகுறிதான். யார்டா இது...? என்னடா அப்பா புராணம் பாடுதேன்னு நினைக்கிறீங்களா?

நான் புவனா... அரசுப் பள்ளியில் தலைமை ஆசிரியை.
மூன்று இளவரசர்களோடு பிறந்த ஒரே இளவரசி... இளவரசர்கள் எல்லாம் ஒரு கட்டத்தில் அப்பாவிடம் பேசுவதைத் தவிர்க்க ஆரம்பித்துவிடுவார்கள் என்பதை நாம் அறிவோம்... நம் குடும்பங்களிலும் அதை அனுபவிக்கிறோம்... அனுபவித்திருப்போம்... அதுதான் எங்கள் குடும்பத்திலும் நடந்தது. எனக்கு மேலே மூத்தவர்கள் இருவரும் பத்தாவது தாண்டும் போது அப்பாவின் கேள்விகளுக்கு ம்... ஆமா... சரி... என்ற வார்த்தைகளை பதிலாக்க கற்றுக் கொண்டு விட்டார்கள். அவர்கள் அம்மா செல்லம்... எது வேண்டுமென்றாலும் அம்மாவை நச்சரித்து... அவளின் முந்தானைக்குள் ஒளிந்து அப்பாவிடம் இருந்து பெற்றுக் கொள்வார்கள். அப்பாவிடம் தம்பி மட்டும் கொஞ்சம் ஒட்டுதலாய் இருந்தான். கல்லூரி சென்ற பிறகே அவன்ம்.. சரிக்குள் புகுந்து கொண்டான். அதெல்லாம் அந்தக்காலம்... இப்பல்லாம் அப்பாக்களோடு பசங்க ரொம்ப பிரண்ட்லியா இருக்காங்க... தண்ணி அடிச்சாலும் அளவோட வச்சிக்கனு சொல்ற அப்பாக்களை இன்னிக்கு பெரும்பாலான குடும்பத்துல பாக்கமுடியுதுன்னு நீங்க நினைக்கலாம்... ஏன் எங்கிட்ட சண்டைக்கும் வரலாம்... சினிமாவுல காட்டுற அப்பாக்கள் மாதிரி எங்கயோ ஒண்ணு ரெண்டு அப்பாக்களும் மகன்களும் இருக்கலாம்...   ஆனாலும் இன்னும் பல வீடுகள்ல அப்பா மகன் உறவுங்கிறது இந்தியா பாகிஸ்தான் மாதிரித்தான்.... சரி விடுங்க... நான் சொல்றது நாப்பது வருசத்துக்கு முன்னாடி இருந்த அப்பா மகன்கள் உறவு பற்றி... அப்பல்லாம் இப்படித்தான்...  மகன்கள் எல்லாம் மீசை முளைத்ததும் தனி ஒருவன் ஆகிவிடுவார்கள்.

எங்க அப்பா வேலுச்சாமி... எனக்கு அவருதான் குலசாமி... எப்பவும் நான் அப்பா செல்லம்... அம்மா என்ன சொன்னாலும்... என்ன செய்தாலும்... அப்பாவிடம் சொல்லும் முதல் ஆள் நாந்தான். உங்களுக்காகவே ஒரு டேப்ரெக்கார்டரை பெத்து வச்சிருங்க என அம்மா அடிக்கடி அப்பாவிடம் சொல்லிச் சிரிப்பாள். சின்ன வயசுல அப்பா தோள்ல குதிரை ஏறி உக்காந்துப்பேன்... நானும்ன்னு நச்சரிக்கிற தம்பியை விடவேமாட்டேன்... யார் சொன்னாலும் கேக்கமாட்டேன்... அப்பாதான் புவிச்செல்லம்... தம்பி பாவம்தானே... ஆளுக்கு ஒரு தோள்பட்டையில் உக்காந்துக்கங்கன்னு சொல்லவும் அரை மனசோடு ஒத்துப்பேன்... ஒண்ணாவது படிக்கும் போது அப்பாதான் குளிப்பாட்டணும்... ஸ்கூல்ல கொண்டு போய் விடணும்ன்னு அடம் பிடிப்பேனாம்... வானத்தைப் பார்த்துக் கொண்டு படுத்தபடி  அப்பா எனக்கு நிறையக் கதைகள் சொல்லியிருக்கார்... விண்மீன்களைக் காட்டி ஒவ்வொன்னும் ஒரு கதை சொல்வாரு... மூணாவது போகும் வரை எனக்கு அப்பா மேல படுத்தாத்தான் தூக்கம் வரும். ராத்திரியில் எந்திரிச்சி அப்பான்னு அழுதுகிட்டு அவரைத் தேடிப் பிடிச்சி தூங்கியிருக்கேன்.

அம்மாவும் அப்பாவும் ஆதர்ஷ தம்பதிகள்ன்னு சொல்வாங்களே... அப்படிப்பட்ட தம்பதிகள்... ரெண்டு பேருக்குள்ளயும் இப்ப தொலைக்காட்சிகள்ல சொல்றாங்களே கெமிஸ்ட்ரி அது நல்லாவே ஒத்துப்போகும்... அப்பாவோ அம்மாவைக் கேட்காம எதையும் செய்யமாட்டாரு...  அதேமாதிரி அம்மா  ஒரு சேலை வாங்குறதா இருந்தாக்கூட அப்பாக்கிட்ட கேட்டுட்டுத்தான் வாங்கும்... அவருக்கிட்ட கேக்காம வாங்கினால் திட்டமாட்டாருன்னு தெரியும்... இருந்தாலும் அந்த மனுசனுக்கு நாம குடுக்கிற மரியாதை இது... அவரு எதைச் செய்தாலும் எனக்கிட்ட கேக்கிறாருல்ல... அப்புறம் நா அவருக்கிட்ட கேட்கிறதுல என்ன தப்புங்கிறேன்னு பக்கத்து வீட்டு பார்வதி பெரியம்மாக்கிட்ட அம்மா அடிக்கடி சொல்றதை நான் கேட்டிருக்கிறேன்..

இதெல்லாம் நான் அஞ்சாவது போகும் வரைதான்... அதுக்கு அப்புறம் எல்லாம் மாறிடுச்சு... எல்லாம்ன்னா... அப்பாவுக்கும் அம்மாவுக்கும் இடையில் ஏதோ ஒரு புதிய பிரச்சினை... தினமும் சண்டை... சண்டை... அப்பா கத்துவாரு... அம்மாவும் கத்தும்... சில நாட்களில் அம்மாவுக்கு அடி.. உதை... எல்லாம் கிடைக்கும். அப்பல்லாம் அம்மா கன்னத்தை தடவிக்கிட்டே எங்ககிட்ட வந்து படுத்துக்கும்... ராத்திரி நான் எப்ப முழிச்சாலும் அம்மா விசும்புக்கிட்டு இருக்கும்... அம்மாவைப் பாக்கவே பாவமாயிருக்கும்... அம்மா அழாதே... அழாதேன்னு சொல்லிக் கட்டிப்பிடிச்சிப்பேன்... எனக்கும் அழுகை வந்திரும்... நாலைப் பெத்துட்டேனே... நடுத்தெருவுலயா விட்டுட்டுப் போகமுடியும்ன்னு புலம்பியபடி முந்தானையால அம்மா என் கண்ணைத் துடைச்சு மாரோட சேத்துக்கட்டிக்கும்... அப்பாவை எதித்துக் கேள்வி கேட்கணுமின்னு மனசுக்குள்ள கோபம் கோபமா வரும்... ஆனா காலையில அப்பா முகத்தைப் பார்த்ததும் கோபமெல்லாம் போயிரும். செல்லக்குட்டியின்னு அவர் கூப்பிட்டதும் அம்மா எனக்கு செல்லாக்காசாயிரும்... ஒரு சிலநாள் அப்பாட்ட ஏம்ப்பா... என்னாச்சுப்பா... அம்மாவை அடிக்காதீங்கப்பா பாவம்ப்பான்னு சொன்னா... டேய் இது சாதாரணச் சண்டைடா... அப்பா ரொம்ப டென்சனா வந்தேனா அதான்... அதெல்லாம் உனக்கு  புரியாதுடா...  நீ படிக்கிறதை மட்டும் பாருன்னு சொல்லி மழுப்பிடுவார். எங்களுக்கு ஒண்ணும் புரியாதுதான்... நாங்க நாலு பேரும் என்ன நடக்குதுன்னு கண்டுபிடிக்க முடியாம தவிச்சாலும் அம்மாவும் அப்பாவும் மட்டுமில்லாம தாத்தா பாட்டிக்கும் ஏதோ தெரிஞ்சிருந்தும்  எங்ககிட்ட எதையும் சொல்லவே இல்லை... நாளாக நாளாக அப்பா தினமும் வீட்டுக்கு  வர்றது நின்னுபோச்சு... வாரத்துல ரெண்டு மூணு நாள் வரவே மாட்டாரு... ஏம்ப்பா வரலைன்னு கேட்டா ஆபீஸ்ல வேலைடான்னு சொல்லி, அதுக்கு மேல ஒண்ணும் பேசாம கட்டில்ல படுத்துக்குவாரு... அவங்களுக்குள்ள கொஞ்சம் கொஞ்சமா பேச்சு வார்த்தை நின்னுபோச்சு... ரெண்டு பேருக்கும் நாந்தான் கேள்வி கேட்டு பதில் வாங்கிக் கொடுக்கிற ஆளாகிப் போனேன்.

அப்பாதான் எனக்கு சாமியின்னு இருந்தவளை அந்த சாமியை வேணான்னு தூக்கிப் போட வச்ச சம்பவம் நடந்தப்போ நான் ஒன்பதாவது படிச்சிக்கிட்டு இருந்தேன்.... அப்பல்லாம் ஸ்கூல்ல சினிமாவுக்கு கூட்டிப் போவாங்க... எங்க பள்ளிக்கூடத்துல இருந்து பக்கத்து டவுனுக்கு காந்தி படம் பாக்க கூட்டிக்கிட்டுப் போனாங்க... சினிமா பாத்துட்டு திரும்பும் போது ஒரு கடையில அப்பா நின்னாரு... அட அப்பா இங்க என்ன பண்றாங்கன்னு நினைச்சப்போ... அவருக்கு பக்கத்துல... அவரோட சிரிச்சுப் பேசிக்கிட்டு நின்னவங்களைப் பார்த்ததும் அப்படியே ஷாக் ஆயிட்டேன்... ஏன்னா அவங்க எங்களோட பேச்சுவார்த்தை இல்லாத எங்க சித்தி... அவங்களைப் பார்த்த்தும் அப்பாவைப் பார்க்காதது போலவே வந்துட்டேன்... ஆனா மனசுக்குள்ள அப்பாவும் சித்தியும் சிரிச்சிப் பேசிக்கிட்டு இருக்காங்களே ஏன்? காதலிச்சி கல்யாணம் பண்ணிக்கிட்டு போனதால யாரும் பேசுறதில்லையின்னும் சித்தப்பா ஒரு ஆக்சிடெண்டுல செத்ததுக்கு அப்புறமும் யாரும் அவங்களை சேத்துக்க விரும்பலைன்னும் அம்மா சொல்லியிருக்கே... சுத்தமா அத்துப்போன உறவுல்ல அது... அப்புறம் எப்படி அப்பா அவங்க கூட... இந்த சித்தியாலதான் ஆதர்ஷ தம்பதிகளோட வாழ்க்கை பாலைவனமாயிடுச்சா..? இவங்களாலதான் அவங்களோட கெமிஸ்ட்ரியில குளறுபடி வந்துச்சா..? அப்படின்னு மனசுக்குள்ள ஏதேதோ கேள்விகள் எழுந்து என்னைத் தின்னுக்கிட்டு இருந்துச்சு.

வீட்டுக்கு வந்ததும் வராததுமா அம்மாக்கிட்ட  அப்பாகூட நாம பேசாத சித்தி சிரிச்சிப் பேசிக்கிட்டு இருந்ததை நான் பார்த்தேன்... அவங்கதான் உங்க சண்டைக்கு காரணமான்னு கேட்டேன். நீ சின்னப்பொண்ணு அதெல்லாம் உனக்கு தேவையில்லாத விஷயம்ன்னு சொல்லி மழுப்பினாங்க... எதும்மா தேவையில்லாத விஷயம்... இந்நேரம் அண்ணனுங்க பார்த்திருந்தா அங்கயே பிரச்சினை ஆக்கியிருப்பானுங்க.... ஆனா அவரு ஏதோ தப்புப் பண்றாருன்னு என் மனசு சொன்னாலும் உங்ககிட்ட கேட்டுக்கலாம்ன்னுதான் வந்தேன்... அப்படியே அவருக்கிட்ட நான் கேட்டாலும் எப்பவும் போல எதாச்சும் ஒரு பதிலைச் சொல்லி என்னை ஏமாத்திடுவார்...  இத்தனை வருசமா நம்மளை அப்படித்தானே ஏமாத்திக்கிட்டு இருக்காரு... இங்க பாரும்மா நானும் ஒன்பதாவது படிக்கிறேம்மா...  மெச்சூர்ட் ஆன பொண்ணுதான்... என்னாலயும் ஓரளவுக்கு எது நல்லது கெட்டதுன்னு பிரிச்சிப் பார்க்கத் தெரியும்... அப்பாவுக்கும் உங்களுக்கும் பிரச்சினை வரக்காரணம் இதுதான்னு தெரியுது.... என்ன நடந்துச்சுன்னு சொல்ரியா... இல்லே நானே அவங்ககிட்ட கேட்டு தெரிஞ்சிக்கவான்னு மிரட்டலாய்க் கேட்டேன்.

அதற்கு பலன் இருந்தது... அம்மா மெதுவாகப் பேச ஆரம்பித்தாள்... சித்தியோட காதல்... ஆக்ஸிடெண்டுல சித்தப்பா இறந்தது... குழந்தையில்லாத கதையெல்லாம் மறுபடி சொன்னா.. யாருமில்லாத அனாதையா நின்னவளுக்கு எங்க எல்லாரோட எதிர்ப்பையும் மீறி உங்கப்பாதான் உதவி செய்தார். உதவப் போனவரை உரிமை ஆக்கிக்கிட்டா... இதுல அவளை மட்டும் குத்தம் சொல்லமுடியாது... உங்கப்பாவுக்கும் சபலம்... இதையெல்லாம் நான் உங்கிட்ட பேசக்கூடாதும்மா... புரிஞ்சிக்கிற வயசு உனக்கிருந்தாலும் அதைச் சொல்ற மனசு எனக்கில்லைம்மா... என்று நிறுத்தினாள். நான் மீண்டும் வற்புறுத்திக் கேட்கவும் அவரு தப்புப்பண்றாருன்னு தெரிஞ்சி கேட்டதாலதான் எங்களுக்குள்ள சண்டை... அடி... உதை... இது வீட்ல பெரியவங்களுக்கும் தெரிஞ்சி அதனால நிறைய பிரச்சினைகள்... ஆனா அதெல்லாம் உங்களுக்கு தெரியக்கூடாது... நீங்க படிச்சி பெரிய ஆட்களா வரணுமின்னு எல்லாருமே நினைச்சோம்... அதனால உங்களுக்குத் தெரியாம மறைச்சிட்டோம். உங்கப்பாவும் அவளை வெளியூர்லதான் வச்சிருந்தார் இப்பத்தான் பக்கத்து டவுன்ல கூட்டியாந்து வச்சிருக்கார். சொந்த பந்தத்துக்கு எல்லாம் தெரியும்... தெரிஞ்சி ஒரு பிரயோசனமும் இல்லை... யார் பேசினாலும் நான் ஒண்ணும் எவளையோ கூட்டியாந்து வச்சிக்கலை... சொந்த மச்சினிச்சியைத்தான் கட்டி வச்சிருக்கேன்... ஊருல உலகத்துல நடக்காதது மாதிரி பேசுறீங்கன்னு வாயை அடைச்சிருவாரு. இதனாலேயே சொந்தங்கள் அவர்கிட்ட பேசுறதில்லை அப்படின்னு சொல்லிட்டு அழுதாங்க.

அவங்க அழுகை ஓயட்டும்ன்னு காத்திருந்தேன்... மறுபடியும் அவங்களே தொடர்ந்தாங்க... உங்க சித்திக்கு ரெண்டு பசங்க இருக்கானுங்களாம்... வீராயி அக்கா பாத்துச்சாம்... அச்சு அசலா நம்ம மூத்தவன் மாதிரி இருக்கானுங்களாம்... இங்கபாரு இதை யார்க்கிட்டயும் சொல்லாதே... வீணாவுல மனசுக்குள்ள போட்டு வதைச்சிக்காதே... நல்லாப்படி... வெறியோட படி... நீங்க எல்லாரும் நாளைக்கு நல்ல வேலையில இருக்கதைப் பாத்தாலே போதும்... எனக்கு வேற எதுவும் வேண்டான்னு அம்மா முந்தானையில மூக்கைச் சிந்திக்கிட்டு அடுப்படிக்குள்ள பொயிட்டா.

சித்திகளோட அம்மா நிக்கிற போட்டோ வீட்ல இருக்கு... இந்தச் சித்தி அம்மா மாதிரியே இருப்பாங்க... அதான் அம்மா வாழ்க்கையையும் பங்கு போட்டுக்கிட்டாங்க போல... எனக்கு அழுகையா வந்திச்சி... சித்தி எப்படி இப்படி... ரொம்ப யோசிச்சேன்... சில இடங்கள்ல நடக்கத்தானே செய்யுது...  என்னோட பிரண்ட் வளர்மதியோட அப்பா அக்கா தங்கச்சி ரெண்டு பேரையும் கட்டிக்கிட்டவருதான்... ரெண்டு பேரும் மனசு ஒத்து ஒண்ணா வாழ்றாங்க... அது கௌரவமாத் தெரியுது... ஆனா இது..? அப்பாவோட சித்தி சிரிச்சிப்பேசி வாழுறா... அம்மாவோ நாலு வருசமா... பேசாம... சிரிப்பை மறந்துல்ல வாழ்றா... எல்லாத்தையும் மனசுக்குள்ள புதைச்சிக்கிட்டு எங்களுக்காக தன்னையே அழிச்சிக்கிட்டாளேன்னு தவிச்சேன்... 'சை... கேடு கெட்ட அப்பா' அப்படின்னு எனக்குள்ள இருந்து வார்த்தை வந்து விழுந்துச்சு... அந்த வார்த்தையோட என்னோட குலசாமி  மனசுக்குள்ள குலை சாஞ்சிருச்சு... அழுதேன்... அழுதேன்... அன்னைக்கு முழுவதும் அழுதேன். கூடப்பொறந்தவனுங்க என்னன்னு கேட்டப்போ ஒண்ணுமில்லேன்னு சொல்லிட்டேன். அப்படி ஒரு அழுகையை அதுக்கப்புறம் நான் அழுகவே இல்லை.

அடுத்தநாள் அப்பா வீட்டுக்கு வந்தாரு... செல்லக்குட்டி இந்தாங்கன்னு எங்கிட்ட திண்பண்டப் பையை நீட்டினாரு... அப்பான்னு கத்தி ஓடும் நான் ஒண்ணுமே சொல்லலை... அவரை பாக்க விரும்பாம கிச்சனுக்குள்ள பொயிட்டேன்... போடி போய் வாங்கு அப்படின்னு அம்மா சொன்னுச்சு... நான் மறுக்க... இங்க பாரு... நீ எதுவும் தெரிஞ்ச மாதிரி காட்டிக்காதே... இந்த வீட்ல அவருக்கு ஒரே ஆறுதல் நீதான்... நீயும் பேசலைன்னா அவரு இங்க வராமலே போயிருவா... அந்த மனுசனோட வாழத்தான் முடியாமப் போச்சு... அப்பப்ப பாக்கிற இந்த வாழ்க்கையாச்சும் எனக்கு கடைசி வரைக்கும் வேணும்டி... நீ பேசலைன்னா அவரு செத்துருவாருடி... போன்னு அம்மா சொன்னதும் போய் வாங்கினேன்... ஆனாலும் நேற்றுவரை நான் கொண்டாடிய அப்பாவை இப்ப என் மனசு கொண்டாட மறுத்துருச்சு.... அதிகம் பேசலை... ஏன்டா என்னாச்சுன்னு கேட்டாரு... ம்... தலைவலின்னு சொல்லி நகர்ந்தேன்... வா அப்பா மருந்து தேய்ச்சு விடுறேன்னு பாசத்தோட கை பிடிச்சி இழுத்தார்... எனக்கு பாசக்கார அப்பா தெரியலை... அம்மாவை... எங்களை... மோசம் பண்ணின அப்பாதான் தெரிந்தார்... வேண்டாம் மாத்திரை போட்டுட்டேன்னு சொல்லிட்டு அறைக்குள் போய் படுத்துக் கொண்டேன்.

நாட்கள் வாரங்களாகி... வாரங்கள் மாதங்களாகி... மாதங்கள் வருடங்களாக பயணிக்க அப்பாவோட பேசுறது குறைஞ்சிருச்சு... ஆனா அவரு எங்களுக்கு எந்தக் குறையும் வைக்கலை. அண்ணன் ரெண்டு பேரும் வக்கிலாயிட்டாங்க... என்னையும் ஆசிரியை ஆக்கிட்டாரு... தம்பியும் ஒரு வங்கியில நல்ல பதவியில இருக்கான். எல்லாருக்கும் நல்ல இடத்தில் கல்யாணம் பண்ணி வச்சாரு... அண்ணன்கள் இருவரும் டவுன்ல போயி செட்டிலாயிட்டாங்க... தம்பியும் தமிழ்நாடெல்லாம் சுத்தி வந்துக்கிட்டு இருந்தான்... அம்மாவும் அப்பாவுந்தான் பழைய வீட்டில் இருந்தாங்க... எங்க கல்யாணத்துக்குப் பிறகு அவங்க ரெண்டு பேரும் கொஞ்சம் கொஞ்சம் பேசிக்க ஆரம்பிச்சிருந்தாங்க...  எதுக்கு அவரோட பேசுறேன்னு சத்தம் போட்டதும்  இந்த வீட்டுக்குள்ள நான் மட்டுந்தான் கிடக்கேன்... எப்பவாச்சும் வர்ற மனுசனுக்கு சமைச்சிப் போடுறேன்... போட்டுட்டுப் போற துணிகளை துவைச்சிப் போடுறேன்... அவரு பண்ணினது தப்பா இருந்தாலும் இனி என்னத்தைடி கொண்டு போகப் போறோம்... நான் பேசலைன்னா அவரு வர்றது சுத்தமாக் குறைஞ்சிரும்... அப்புறம் நான் எதுக்கு நடைபிணமா வீட்டுக்குள்ள... இன்னும் கொஞ்சநாள்தானே எதுக்கு அந்த மனுசனை வதைக்கணும்.. அவருக்கு முன்னால பூவும் பொட்டோட மகராசியா போயிச் சேந்தாப் போதும் அப்படின்னு சொன்னுச்சு... இந்தப் பொம்பளைங்க எப்பவுமே இப்படித்தான்... அவங்க எடுக்கிற முடிவு எப்பவுமே சரியின்னு நினைப்பாங்க.... அதனால அம்மாக்கிட்ட நான் எதுவும் சொல்லலை... அதோட முடிவு சரியின்னுதான் தோணுச்சு... அப்பா போன் பண்ணினாலும் நான் ரொம்பப் பேச மாட்டேன்... அவரோட பேத்திக்கிட்ட கொடுத்துருவேன்.

அன்னைக்கு ஸ்கூல்ல இருந்து வந்ததும் அம்மா எனக்கு போன் பண்ணி உங்க சித்தி வந்திருந்தா... உங்கிட்ட பேசணும்ன்னு சொன்னா... இந்த வாரம் வாறியான்னு கேட்டதும் உனக்கென்ன பைத்தியமா...? அவளை எதுக்கு வீட்டுக்குள்ள விட்டே...? அவளோட எல்லாம் என்னால பேச முடியாதுன்னு கத்தினேன். ஏய் இப்படியே வாழ்ந்து என்னத்தை சாதிக்கப் போறோம்... அவ பண்ணுனது தப்புத்தான்... அதுக்காக... கடைசி வரை அவளை அப்படியே விட்டுட்டுப் போகணுமா என்ன... நாப்பது வருசமா உங்கப்பா கூட குடும்பம் நடத்திக்கிட்டு இருக்கா... அந்த வயசு... குடும்ப வாழ்க்கையை ஒரு வருசத்துல இழந்தவ... சபலப்பட்டுட்டா... அது தப்புன்னு எடுத்துச் சொல்ற நிலையில இருந்த உங்கப்பாவும் அதை ஏத்துக்கிட்டுத்தானே ரெட்டை வாழ்க்கை வாழ்ந்தாரு... அப்படிப் பார்த்தா இவரு மேலயும்தானே தப்பிருக்கு... இருந்து இவரை ஏத்துக்கலையா... இன்னும் சமைச்சிப் போட்டுக்கிட்டுத்தானே இருக்கேன்...  அதே மாதிரித்தான் அவளும்ன்னு எனக்கு கிளாஸ் எடுத்தா... உன்னை மாதிரி மனநிலை எனக்கு இல்லைம்மா... அவகிட்ட எனக்கு பேசப்பிடிக்கலை... எங்கம்மாவை ஒவ்வொரு ராத்திரியும் அழ வச்சவ அவ.... நீ வேணுமின்னா உன் தங்கச்சியை கூட்டி வச்சிக்க... எனக்கு அவ வேண்டாம்ன்னு சொல்லி போனை வச்சிட்டேன். அதன் பின் அம்மா சிலமுறை முயற்சித்தாள்... நாளைக்கு உம்புருஷன் செத்தா அவ நம்ம வீட்ல வந்து உக்காந்துக்கிறதுக்காக பேச நினைக்கிறா... எனக்கு விருப்பமில்லைன்னு சொல்லிட்டேன். பெரியண்ணனுக்கிட்ட அம்மா பேசப் போயி திட்டு வாங்கியிருக்கு... அது அண்ணன் சொல்லி எனக்குத் தெரிய வந்தது.

அந்தச் செய்தி வந்தபோது மனசு நொறுங்கினாலும் நம்பினவளை கழுத்தறுத்தவர்தானேன்னு நினைக்கத் தோன்றியது. ஊருக்கு வந்து சேர்ந்தபோது அண்ணன்களும் தம்பியும் வந்திருந்தார்கள்.  எனக்கு வீட்டிற்குள் கிடத்தப்பட்ட அப்பாவைப் பார்க்கும் போது பொங்கி அழத் தோணவில்லை... ஆனாலும் கண்ணீர் வடிந்து கொண்டிருந்தது. என் மகள் கத்தியதை பார்த்தவர்கள் மனசுக்குள் மகக்காரி கதறலையேன்னு நினைச்சிருப்பாங்க... எங்க அம்மாதான் கத்தினாள்... அவளோட பூவும் பொட்டு போயிருச்சே... கணவன்னு ஒரு சொந்தம் இதுவரைக்கும் வாழ்க்கையில சுகத்தைக் கொடுக்கலைன்னாலும் அவளோட பூவும் பொட்டுக்கும் காவலா இருந்ததே.... இனி அவளுக்குன்னு யார் இருக்கா...? அவ அழறது ஞாயந்தானே... புல்லானாலும் புருஷன் ஆச்சே... என்று என்னைச் சமாதானம் பண்ணிக் கொண்டாலும் என்ன சுகத்தைக் கொடுத்தார் அந்த மனிதர்...  தன் மனைவிக்கு துரோகம் இழைத்து இன்னொரு குடும்பம் வைத்திருந்தவர்தானே... இவள் எதற்காக இப்படி அரற்றுகிறாள் என கோபமும் எனக்குள் பொங்கத்தான் செய்தது. அந்தச் சூழல் கருதி எதுவும் பேசாமல் அம்மாவை அணைத்துக் கொண்டு அவளுக்கு அருகே அமர்ந்தேன்.

சித்தி  மகன்களோடு வந்தாள்... அவ இங்க வரக்கூடாதுன்னு அண்ணன்கள் தடுத்தார்கள்... எங்கக்கா வாழ்வை நாசமாக்கிய பாவி அவ... இங்க எதுக்கு வர்றான்னு எங்க மாமாவும் சத்தம் போட்டார். ஊர் பெரியவர்கள் அவளும் மனைவிதானே... அவளுக்கும் உரிமை இருக்குல்லன்னு சொல்லி சமாதானப்படுத்த, செய்தது தவறென்றாலும் அம்மாவைப் போல்தானே அவளும்... நாப்பது வருசமா அவருக்கு சந்தோஷத்தைக் கொடுத்தவதானே அவ... செத்துப்போன புருஷனைப் பாக்க முடியாம... வாழ்க்கை பூராம் நொந்து சாகணுமா என்ன... நாமதானே இன்னா செய்தாரை ஒறுத்தல் அப்படின்னு பாடம் நடத்துறோம்... அது பாடமா மட்டுமே இருக்கணுமா என்ன... அவ இங்க இருக்கதால யாருக்கு என்ன பிரச்சினை... அவளோட பேச முடியாதுன்னு சொன்னவளும் நாந்தான்... இப்ப அவ இருக்கட்டுமே... விடுங்கன்னு அண்ணனுங்ககிட்டயும் மாமாக்கிட்டயும் அவளுக்காக பேசியவளும் நாந்தான்... மனித மனம் விசித்திரமானதுதானே...

எல்லாம் முடிந்தது... அப்பா மண்ணுக்குள்ளே போயி இன்னைக்கு அஞ்சு நாளாச்சு... சித்தி பசங்க அப்பவே பொயிட்டானுங்க... சித்தி மட்டும் இருந்தா... அவ எங்கிட்ட பேச வந்தப்போ எல்லாம் நான் விலகிப் போய்க்கிட்டு இருந்தேன்... நான் மட்டுமில்ல உடன்பிறப்புக்களும்தான்... அவளுக்கு அங்கிருந்த ஒத்த உறவு அம்மா மட்டும்தான்.  பழைய நினைவுகள் கண்ணீராய் இறங்க தூணில் சாய்ந்து அமர்ந்திருந்த என்னருகில் வந்தமர்ந்த அம்மா மெல்ல அப்பாவைப் பற்றி பேச ஆரம்பித்தாள். உங்கப்பா சாகுற அன்னைக்கு முதல்நாள் ராத்திரி எங்கிட்ட நான் உனக்கு துரோகம் பண்ணிட்டேன்னு அழுதார்... எம் மக என்னைய இன்னும் தப்பாவே புரிஞ்சி வச்சிருக்கா... தப்பாவே என்ன நான் தப்புத்தானே பண்ணினேன்... அவகிட்ட மன்னிப்பு கேக்கணும்ன்னு புலம்பினாரு... அவ உங்க மக... அவ கோபம் நியாந்தானே... மன்னிப்பெல்லாம் வேண்டாம்... அவ ஒருநாள் உங்களைப் புரிஞ்சிப்பான்னு சொன்னேன்.  அன்னைக்கு ராத்திரியெல்லாம் தூக்கம் வராம புரண்டு புரண்டு படுத்தாருன்னு கண் கலங்கினாள்... அதான் பொயிட்டாருல்ல... இனி எதுக்கு அவர் புராணம் பாடுறேன்னு கத்த, சித்தி ஓடி வந்து அம்மாவை அணைத்துக் கொண்டாள்.

கொஞ்ச நேரம் அமைதி காத்த அம்மா மீண்டும் பேச ஆரம்பித்தாள்... அவள் வேதனையை எங்கிட்ட பேசுறது மூலமா தீர்த்துக்கப் பாக்குறாள்ன்னு தெரிந்ததும் பேசாமல் அமர்ந்திருந்தேன். மத்தியானம் நெஞ்சுவலிக்கிற மாதிரி இருக்குதுன்னு சொன்னாரு.... சுடுதண்ணி எடுத்துக்கிட்டு வாறேன்... உன்னைய கூப்பிடுவாரே செல்லக்குட்டியின்னு அதைச் சொல்லி செல்லக்குட்டி... அம்மாவிடம் விசும்பல்... குரல் கம்மியது... செல்லக்குட்டி அப்பா தப்புப்பண்ணிட்டேன்டா... என்னைய மன்னிச்சிடுடான்னு.... சத்தமா சொன்னாரு... அப்புறம் பேசவே இல்லை... கடைசியா பேசுனது அதுதான்... அவரோட பார்வை நிலைச்சிருந்த இடம்...  உத்திரத்துக்கு கீழே மாட்டியிருக்கிற நீ குப்புற படுத்திருக்கிற போட்டோ மேல.... அதற்கு மேல் பேச முடியாமல் அம்மா உடைந்தாள். அம்மா... அழாதேன்னு அவளை ஆறுதல் படுத்திய எனக்கு கண்ணீர் முட்ட ஆரம்பித்தது.

அப்பாவைக் கிடத்தியிருந்த திண்ணை பக்கம் சுவரோரம் பார்த்தேன்... போட்டோவில் காலையில் போட்ட மாலைக்குள் அப்பா சிரித்துக் கொண்டிருந்தார்... அருகே காமாட்சி விளக்கு எரிந்து கொண்டிருந்தது.... என்னோட குல தெய்வம்... மனசுக்குள்ள என்னையே வச்சிக்கிட்டு இருந்த எங்குலசாமி போட்டோவுக்குள்ள சிரிக்குதேன்னு நினைச்சப்போ என்னை அறியாமல் 'ஏம்ப்பா இப்படிப் பண்ணுனீங்க... எங்க பாசத்தைக் கொலை பண்ணிட்டீங்களேப்பா' என்று சத்தமாக்க கத்தினேன்... எனக்குள் உடைந்தேன்... அம்மா என்னை அணைத்துக் கொள்ள, அடைத்து வைத்திருந்த பாசம் உடைந்துக் கொண்டு பெருங்குரலாய் வெளியேறியது.

-முற்றும்- 
-'பரிவை' சே.குமார்.

ஞாயிறு, 16 அக்டோபர், 2016

மனசின் பக்கம் : குலசாமி காத்தாயி

வெட்டிபிளாக்கர்ஸ் நடத்திய சிறுகதைப் போட்டியின் முடிவுகள் தாமதம் ஆனாலும் நேற்று வெளியாகியிருக்கிறது. இந்த முறை நான் மிகுந்த சிரத்தையிலான கதையை எழுதவில்லை.... எழுதும் சூழலும் இல்லை... அப்பாவை மையப்படுத்தி எழுத வேண்டும் என்றதால் நானும் அப்பாவை மையப்படுத்தி ஒரு கதை எழுதினேன்... அந்தச் சமயத்தில் வீடு வேலை, பணச் சிக்கல் என நிறைய விஷயங்களால் சிதறடிக்கப்பட்ட மனசு ஒட்டாமல் இருந்த நிலையில்தான் கதை எழுதினேன். கதை குறித்து சொன்ன போது கூட நிஷா அக்கா இப்படி ஒரு கரு எதற்காக எடுத்தாய் என்றும் சொன்னார்கள். நான் எழுதி அனுப்பிய பிறகு கூட அது குறித்தான எண்ணமெல்லாம் இருக்கவில்லை. சென்ற முறை வெட்டிபிளாக்கர்ஸ் சிறுகதைப் போட்டியில் எனது 'நினைவின் ஆணிவேர்' சிறுகதை முதல் பரிசு பெற்றிருந்தது. இந்த முறை எழுதும் எண்ணமில்லாவிட்டாலும் அனுப்புவோமே என எழுதியதுதான் 'குலசாமி'. 

அண்ணன் கில்லர்ஜி அவர்கள் ஒரு கதை எழுதியிருந்தார்கள்.... மிகவும் நல்ல கதை... அவர் சொல்லாமலே அவரின் எழுத்தை வைத்தே கதையை பிடித்தேன். அவர் கதை பகிரப்பட்ட பத்துப் பதினைந்து நாளில் நான் அனுப்பினேன். என் கதையை அவர் கண்டுபிடித்து கேட்பார் என்று பார்த்தேன்.... அவர் கேட்கலை... நானும் சொல்லலை. அவரின் கதைக்கு பரிசு கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன்... ஒருவேளை அவர்கள் சொல்லிய வார்த்தைகள் கணக்கைவிட அதிகமாக இருந்ததால் தேர்வாகவில்லையோ என்னவோ...? எனக்கு மிகவும் பிடித்திருந்த கதை அது. என்னோட 'குலசாமி' ஆறுதல் பரிசுக்கு தேர்வாகியிருக்கு.  என்னோட கதைகளும் மற்றவர்களை கவரும் விதமாக இருப்பதில் சந்தோஷமே... இன்னும் சிறப்பாய் எழுத வேண்டும் என்ற ஊக்கத்தைக் கொடுக்கின்றன இது போன்ற தருணங்கள்... வெட்டிபிளாக்கர்ஸ் குழுமத்துக்கும் நடுவர்குழு உறுப்பினர்களுக்கும் எனது நன்றி. கதையை விரைவில் இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.

******
சிகரம் 3 என்ற தளத்தில் எழுதும் சிகரம் பாரதி அவர்கள் சிகரம் வலைமின்னிதழ் என்ற பகிர்வை அவ்வப்போது பகிர்வார். அதில் அவரைக் கவர்ந்த பதிவுகளை கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் என தரம் பிரித்து அவற்றின் இணைப்பைக் கொடுத்து பகிர்வார். சொல்லப் போனால் நமது வலைச்சரம் போன்றதொரு பணி... வலைச்சரம் மீண்டு(ம்) வர வேண்டும் என்ற ஆவல் எனக்கு அதிகம்... அதற்காக தமிழ்வாசியிடம் கூட பேசியிருக்கிறேன்... சரி விஷயத்துக்கு வருவோம்... சிகரம் 3 வலைமின்னிதழ் இந்த வார பகிர்வில் அக்டோபர் (1-15) அகல் மின்னிதழில் வெளிவந்து இங்கு பகிர்ந்து கொண்ட காத்தாயி சிறுகதைக்கு இடமளித்திருக்கிறார். சிறுகதையில் என்னுடன் 'சும்மா' வலையில் நல்லா எழுதும் தேனக்காவும் இடம் பிடித்திருக்கிறார். கவிதைகள் கட்டுரைகளில் எல்லாம் நான் விரும்பி வாசிக்கும் பதிவர்கள்... அவர்களுடன் எனக்கும் இடமளித்த பாரதி சாருக்கு நன்றி.

******
ரலாற்று புதினங்கள் வாசிப்பு அனுபவம் நல்லாத்தான் இருக்கு... அதுவும் இது குறித்து முகநூலில் தமிழ்வாசி, தினேஷ், கணேஷ்பாலா அண்ணா, நிஷா அக்கா மற்றும் முகநூல் உறவுகள் உள்ளிட்ட பிரபலங்களுடன் கருத்துப் பரிமாற்றம் என்பது நிறைய அறியத் தருகிறது. வரலாற்று புதினங்கள் பின்னால் போவதால் ஒன்றும் ஆகிவிடாது... உன் தேடல்களும் அது குறித்த விவாதங்களும் கற்பனை வரலாற்றில் சுழன்று கொண்டிருப்பதில் என்ன லாபம்..? உண்மையான வரலாற்றுத் தேடலில் இறங்கு என்றும் அது குறித்த நிறைய விளக்கங்களையும் கேள்விகளையும் முன் வைத்தான் என் நண்பன் தமிழ்க்காதலன்... உண்மைதான்... புதினங்கள் சுவைக்காக நாயகிகளை அதிகமாக்கி நகர்வலம் வருகின்றன... வரலாறுகளைத் தேடிப்படித்தால் என்ன என்ற எண்ணம் வந்திருக்கிறது. இங்கு எப்படி தேடுவது...? இணையத்தில் அதற்கான சாத்தியங்கள் இருக்கா...? என்ற யோசனையும் ஓடுகிறது.

******
நேற்று (15/10/2016) மறைந்த ஜனாதிபதி அப்துல்கலாம் அவர்களின் பிறந்தநாள்... அவரை நினைவில் நிறுத்தி... அதே நாளில் பிறந்தநாள் கொண்டாடும் அன்பின் ஐயா வலைப்பதிவர்களில் வித்தியாசமான எழுத்தால் கவரும் கரந்தை திரு. ஜெயக்குமார் அவர்களுக்கும் அன்புத் தம்பியும் கலியுகத்தில் கவிதையால் கலக்குபவருமான தினேஷ் குமார் அவர்களுக்கும் என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். முகநூலில் நேற்றே வாழ்த்தியாச்சு என்றாலும் 'மனசார' வாழ்த்த இங்கும் பகிர்ந்தாச்சு. 

-'பரிவை' சே.குமார்.