மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

திங்கள், 29 செப்டம்பர், 2014

மனசின் பக்கம் : கொஞ்சம் சிரிக்க மீதி சிந்திக்க

ன்று அலுவலகத்தில் என் மலையாளி நண்பன் அவனது செல்போனில் இருந்து ஒரு போட்டோ காட்டினான். அது சினிமாவில் வருவது போல் பிரமாண்ட வீடு. 'இது என்ட பாரியாளோட அச்சன் வீடு' என்று சொன்னதும் நம்ம வாய்தான் சும்மா இருக்காதே 'அப்புறம் என்ன பாரியா வீடுன்னா பர்த்தாவுக்குத்தானே... நீ கோடீஸ்வரனாக்கும்' என்று சொன்னதும் அவன் வேறு எதுவும் சொல்லவில்லை சிரிச்சிக்கிட்டே தோளில் கை போட்டபடி 'ஆமா... அம்பானி இந்தியன்கிறதுக்காக அவனோட சொத்துல பாதி எனக்குத் தருமா?' அப்படின்னு கேட்டுட்டு சீட்டுல போயி உக்காந்துட்டான். அதுக்கு மேல நான் ஒண்ணுமே பேசலை. என்னத்தை சொல்றது... பய சரியான கேள்விதானே கேட்டிருக்கான்.

குழந்தைகளுக்கு விடுமுறை என்பதால் மதுரை போயிருக்கும் மனைவி, அவர் அம்மாவுடன் போத்தீஸூக்கு தீபாவளிக்கு துணி எடுக்கப் போயிருக்கிறார். சரி நம்மாளுக்கு டிரஸ் எடுப்போமே என்று (எப்பவும் தீபாவளி, பொங்கலுக்கு நமக்கும் எடுத்து விடுவார்கள்) எனக்கு போன் செய்து கேட்டார். பின்னர் ஏங்க ஓட்டோவே (OTTO - கம்பெனி பெயர்) வாங்கிறவா... உங்களுக்கு அதானே பிடிக்கும் என்றார். மலையாளி சொன்ன பதிலை நினைத்து நம்ம சும்மா இருந்திருக்கலாம் என்னமோ தெரியலை இன்னைக்கு நம்ம நாக்கு நமநமத்துச்சு போல 'இங்க பாரும்மா ஓட்ட பேண்ட் வாங்காத... காசைக் குடுக்கிறதுதான் குடுக்கிறே... நல்லதாவே வாங்குன்னு சொன்னேன்...' இது தப்பா... உடனே 'அப்பா ஆரம்பிச்சிட்டீங்களா... எங்கடா இன்னும் குடும்பக் கிசும்பைக் காணாமேன்னு பார்த்தேன்... இது கடை... என்று சொன்னவங்க நம்ம பேச்சை ரசிச்சாங்கங்கிறது அங்கிட்டு சிரிச்ச சிர்ப்புல தெரிஞ்சிச்சு.. வீட்டுக்கு வந்து போன் பண்ணும் போது எதுவும் சொல்லலைன்னாலும் நா ஒண்ணு பெத்து வச்சிருக்கேன் அப்பனைத் தூக்கி சாப்பிட்டுடும் போல நக்கல் பேச்சில அப்படின்னு வாரிசை திட்டினாங்க... பயபுள்ள பேசுறதைப் பார்த்தா பெரிய இயக்குநரா வரும்போல... இப்பவே காட்சியோட கதை சொல்லுதுங்கிறேன்....


மது (முன்னாள்) முதல்வர் ஜெயலலிதா ஜெயிலுக்குப் போனது செய்த தவறுக்காகத்தான் என்பதை எல்லோரும் அறிவோம். ஆனால் கர்நாடகத்தானும் மலையாளியும் இந்தப் பேச்சுப் பேசக் காரணம் அவரது ஆளுமையின் மேல் உள்ள காழ்ப்புணர்ச்சிதான் என்பதை தயங்காமல் சொல்லலாம். இதில் அதிமுக அபிமானியாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. நான் எந்த அரசியல் கட்சியையும் சாராதவன்தான். கொஞ்ச நாள் விஜயகாந்த் மீது பற்றுதல் இருந்தது. இப்போ அதெல்லாம் கழுவி ஊத்தியாச்சு. சரி விஷயத்துக்கு வாரேன்... 'ஜெயலலிதா இப்போ ஜெயில் லலிதாவாக இருந்தாலும் சௌத்ல இருந்து குரல் கொடுத்த ஒரே முதல்வர், அவரது பதவி பறிப்பு சௌத்துக்கு மிகப்பெரிய இழப்பு' என ஒரு சேட்டன் என்னிடம் பேசும் போது சொன்னார். உண்மைதானே தெற்குப் பக்கம் இருக்கும் முதல்வர்களில் சிறந்த ஆளுமை இவர் மட்டும்தானே. கட்சி கலக்காமல் பார்த்தால் அவரது நேரடி ஆட்சி இல்லாமல் கட்டுப்பாட்டில் இருக்கப் போற ஆட்சியால் தமிழகம் ஒரு நல்ல ஆளுமையை இழந்திருக்கிறது என்பது தெரியும்.

ன்று ஒரு குறும்படம் பார்த்தேன். 'கொஞ்சம் கதை மீதி கவிதை', மிகச் சிறந்த குறும்படம். ரோட்டில் படம் வரைந்து அதன் மேல் விழும் காசுகளை வைத்து மகனை கல்லூரியில் படிக்க வைக்கும் அப்பா, கல்லூரியில் பணம் கட்டாமல் திட்டு வாங்கும் மகன் என இவர்களை மையப்படுத்தி நகரும் கதை, பத்தாயிரம் பரிசு தொகை கிடைத்தால் கல்லூரி கட்டணம் கட்டி விடலாம் என கல்லூரியில் நடக்கும் ஓவியப் போட்டியில் கலந்து கொள்கிறான் மகன், பார்த்து வரைய ஒரு பிச்சைக்காரரை  இரண்டாயிரம் ரூபாய்க்காக கூட்டி வருகிறார்கள். படம் வரைந்த அந்தப் பையன் ஜெயித்தானா? அந்தத் தந்தை தன் மகனின் கல்லூரி கட்டணத்தை எப்படிக் கட்டினார்? என்பதை மிகவும் அழகாகச் சொல்லியிருக்கிறார். ஆரம்பத்தில் சாதாரணமாக பார்த்த என்னை இறுதிக் காட்சி அழுக வைத்து விட்டது. அப்பா மீது பாசம் வைத்திருக்கும் எல்லாரும் அழுவது நிச்சயம். படம் முடிந்தும் எங்கள் படிப்புக்காக கஷ்டப்பட்ட எங்கம்மாவை நினைத்து எனக்கு கண்கள் குளமாகியே இருந்தது. அவர் எங்களுக்காக எங்களோடு பள்ளிக்கும் கல்லூரிக்கும் நடந்ததை மறக்கவா முடியும். அருமையாக கதை சொன்ன இயக்குநர் நித்திலன் அவர்களுக்கு ஒரு பூங்கொத்து. இணைப்பு கீழே... நீங்களும் பாருங்கள்... கண்டிப்பாக ரசிப்பீர்கள் அத்துடன் ஒரு துளியாவது கண்ணீர் சிந்துவீர்கள்.


ப்போ இன்று இதுதான் என்று இல்லாமல் நினைத்த நாளில் நினைத்ததை எழுதி வருகிறேன். அதையே இன்று இதுதான் என்று முறைப்படுத்தினால் என்ன என்று தோன்றுகிறது. மனசு பேசுகிறது, மனசின் பக்கம் / மனதில்பட்டது, வெள்ளந்தி மனிதர்கள், நண்பேன்டா, கிராமத்து நினைவுகள், தொடர்கதை சினிமா (பாடல்கள், விமர்சனம்), கவிதை/ சிறுகதை / கட்டுரை மற்றும் மற்றவை என நிறைய தலைப்புக்கள் இருப்பதால் ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொன்றாய் எழுதினால் இன்ன கிழமை இதுதான் என ஒரு ஒழுங்கு முறையில் கொண்டு வரலாம் என்ற எண்ணம் தோன்றுகிறது. செயல்படுத்த முடியுமா என்று தெரியவில்லை... முயற்சிக்கிறேன்.

லையாத கனவுகளுக்கு இருந்த வரவேற்பை விட 'வேரும் விழுதுகளும்' தொடர்கதையின் முதல் பகுதிக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்திருப்பது சந்தோஷத்தைக் கொடுத்துள்ளது. முக்கியமாக பின்னூட்டமிட்ட உறவுகள் அனைவரும் சொன்னது மண் மனம் கமழும் கதையாக இருக்கிறது என்பதுதான். எப்போதுமே எனது சிறுகதைகள் எல்லாவற்றிலுமே எங்க பக்கத்து பேச்சு வழக்குத்தான் இருக்கும். இதில் கிராமத்து வாடையை அதை அனுபவித்து வாழ்ந்தவன் என்பதால் அப்படியே கொண்டு வர நினைத்து முதல் பகுதியில் எழுதினேன். எல்லோரும் நல்லாயிருக்கு என்று சொல்வதைப் பார்க்கும் போது அடுத்தடுத்த பகுதிகளை சிறப்பாக நகர்த்த வேண்டுமே என்று பயமாக இருக்கிறது. என்னைப் பொறுத்தவரை இதுதான் கதைக் கரு என்று முடிவு செய்தவுடன் முழுவதும் எழுதிப் பழக்கமில்லை. சிறுகதைகளைக் கூட நான்கு ஐந்து நாட்கள் எழுதுவேன்... பின்னர் திருத்துவேன். தொடர்கதையின் ஒவ்வொரு பகுதியையும் பதிவிடும் முன்னர் எழுதி திருத்தி... உடனே பதிவிடுவேன். அதனால்தான் முதல் தொடர் அதன் போக்கில் போய் நீளமாகிவிட்டது. இதை நீளமாக கொண்டு செல்ல நினைக்கவில்லை. மொத்தமாக எழுதி வைக்கும் எண்ணம் இல்லை என்பதைவிட பழக்கம் இன்னும் வரவில்லை என்பதே உண்மை.. இருந்தாலும் சிவகங்கைச் சீமையின் பேச்சு வழக்கை கொஞ்சமும் குறைவில்லாமல் கதையில் தொய்வு வராமல் கொண்டு செல்ல வேண்டும் என்கிற போது குமாரு ஒரு கதை பத்தாதா... இப்ப எதுக்கு நீயே வாலண்டியரா போயி மாட்டியிருக்கேன்னு ஒரு பய மின்னல் அடிக்கடி மின்ன ஆரம்பிச்சாச்சு... வேரும் விழுதும் எப்படி போகப் போகுதுன்னு பாக்கலாம்.

து சிரிக்கவும் சிந்திக்கவும்...-மனசின் பக்கம் தொடரும்.
-'பரிவை; சே.குமார்.

சனி, 27 செப்டம்பர், 2014

தொடர்கதை : வேரும் விழுதுகளும் (பகுதி - 1)

னசு வலைப்பூவில் நான் எழுதிய முதல் தொடர்கதையான 'கலையாத கனவுகள்' அதிகம் பேரால் வாசிக்கப்படாவிட்டாலும் வாசித்தவர்கள் மத்தியில் ஓரளவுக்கு நல்ல தொடர்கதை என்ற பெயரைப் பெற்றது என்பதில் சந்தோஷமே. இது எனது இரண்டாவது தொடர்கதை. பெரும்பாலும் வலையுலகில் சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் போன்றவற்றை வாசிப்பதில் காட்டும் ஆர்வத்தை தொடர்களில் காட்டுவதில்லை என்பதில் நான் கூட விதிவிலக்கல்ல. சில தொடர்கள் தவிர மற்றவற்றை மாடு நுனிப்புல் மேய்வதுபோல் அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தான் வாசித்திருக்கிறேன். 

சரி விஷயத்துக்கு வருகிறேன். இந்தக் கதையை முதல் தொடர் போல் நீண்ட தொடராக கொண்டு செல்ல மாட்டேன் என்று நினைக்கிறேன். அது காதல்... தொடர்ந்து போய்க் கொண்டே இருந்தது... இது வாழ்க்கை... நீண்டு கொண்டே சென்றால் சப்பென்று ஆகிவிடும். கதையின் கருவைச் சொல்லி நண்பன் தமிழ்க்காதலனுடன் ஆலோசித்ததில் நான் சொன்ன தலைப்பைவிட அவன் சொன்ன தலைப்பே சிறப்பானதாகத் தெரிந்தது. இந்தத் தலைப்பு எனது கதையின் கருவுக்கு ஏற்ப நண்பன் சொன்ன தலைப்பு. நட்புக்குள் நன்றி எல்லாம் தேவையில்லை என்பதால் நண்பா... நல்ல தலைப்புடா என்று சொல்லி தொடரை ஆரம்பிக்கிறேன்... காலமும் நேரமும் ஒத்துழைத்தால் சனிக்கிழமைகளில் பகிரலாம் என்று நினைத்திருக்கிறேன். 

சரி வாருங்கள் வேரை நம்பி விழுதுகளா? விழுதுகளை நம்பி வேரா? என்பதை தொடரும் கதையோட்டத்தில் பார்ப்போம்.

வேரும் விழுதுகளும் - பகுதி -1 

ரண்டு நாட்களாகப் விடாது பெய்த பேய் மழை கொஞ்சம் குறைந்திருந்தாலும் இன்னமும் கருமேகம் கூடுவதும் லேசாகத் தூறுவதுமாகத்தான் இருந்தது. வாயில் நிஜாம் லேடி புகையிலையை அதக்கியபடி கட்டிலில் அமர்ந்திருந்த கந்தசாமி, புகையிலை எச்சில் ஒழுகாதவாறு முகத்தை சற்றே தூக்கி வாயை அஷ்ட கோணலாக்கி "மழ கொஞ்ச விட்டாப்ல இருக்குல்ல' என்றார்.

"அந்த போயிலய துப்பிப்பிட்டு வந்து பேசுறது. வாயில இருந்து மேலுல வடியணுமாக்கும்... எப்பப்பாரு அந்தக் கருமத்தை வாயில ஒதக்கிக்கிட்டு... ஆமா அதுல அப்புடி என்னதா இருக்கோ... தெரியல.. ஒண்ணு துப்பிப்பிட்டு பேசுங்க... இல்ல பேசாம அந்தக் கருமத்த மொண்ணு குடிச்சிட்டு மோட்டு வலயப் பாத்துக்கிட்டு வூட்டுக்குள்ளய கெடங்க..." கத்தினாள் காளியம்மாள்.

"ஒனக்கு என்னய திட்டுறதே பொழப்பாப் போச்சு... இந்த மழயில என்னய என்ன பண்ணச் சொல்லுறே..?" வாசலில் எச்சிலை புளிச்சென்று துப்பிவிட்டு பொண்டாட்டியைப் பார்த்துக் கேட்டார்.

"மழ விட்டு வெட்டரிச்சாப்புல இருக்கு... எல்லாரும் வயலு பக்கம் போயி தண்ணிய வெட்டி விட்டுக்கிட்டு திரியிறாய்ங்க... இவரு மோட்டு வலய எண்ணிக்கிட்டு கெடக்காரு... பொதி கட்டுன கருதுக்கு தண்ணி ரொம்ப நிக்காம கொஞ்ச வெட்டி விடாலுமுல்ல... வெடலப்பயலுக எல்லாம் மம்பட்டிய தூக்கிட்டு போயிட்டாய்ங்க... சொன்னா ரோசந்தான் வருது... எல்லாத்துக்கும் பொம்பள நானே பொயி நிக்கிறேன்... நீங்க இப்பத்தான் சமஞ்சிரிக்கீக... வூட்டுக்குள்ள இருங்க..."

"க்க்கும்... வால்வால்ன்னு கத்துறதை எப்பத்தேன் நிறுத்தப் போறியோ... அந்த வரப்புகளுல எளந்தாரிப் பயலுக நடந்து போயிருவானுங்க... என்ன மாதிரி கெழடுக வழுக்கி விழுந்துக்கிட்டு கெடக்கத்தான் வேணும்... இப்ப வரப்பா கட்டி வைக்கிறானுங்க..."

"வெவசாயம் பண்ணுறதுக்கு முன்னாடி ஊருக்கூட்டத்தைக் கூட்டி ஊடு வரப்பு எப்புடியோ போகட்டும்... நடபாத வரப்புகள நல்லாக் கட்டுங்கப்பான்னு எல்லாருமா ஒக்காந்து பேசணும்... அப்ப எல்லாரும் குண்டி வேட்டிய தட்டிக்கிட்டு பேசாம எந்திருச்சு வந்துருவீக... இப்ப நடக்க முடியல... குதிக்க முடியலன்னு சொல்லக்கிட்டு படுத்துக்கிடந்தா வந்திருமா..."

"இந்த வியாக்கியானத்துக்கு குறைச்சல் இல்ல... ஆமா நாந்தேங் கேக்குறேன்... இப்ப ஊருக்கூட்டமாவா நடக்குது... இளந்தாரிப்பயலுக ஆட்டமாவுல்ல போச்சு... இப்ப எதுக்கு ஊருக்கதை... இப்ப என்ன... தண்ணிய வெட்டி விட்டுட்டு வரணும்... அம்புட்டுத்தானே... இந்தாப் போறேன்.. சும்மா கத்தாதே..."

"ஆமா... நாங்கத்தித்தான் இவரு எல்லாஞ் செய்யிறாரு... பொயிட்டு வந்தா மாடுகள அவுத்து கொள்ளக்காட்டுப் பக்கமா கொண்டு பொயிட்டு வந்தா கொஞ்சங் காலாத்திட்டு வருங்க... அதுகளும் ரெண்டு நாளாக் கட்டிக் கெடக்குக... சதசதன்னு படுக்கக் கூட முடியாம நிக்கிதுக... ரெண்டு நாளா ஒழுத கசாலக்குள்ள மூத்தரமும் சாணியுமா மாடுகள பாக்கச் சகிக்கலை... தொறுத்தொறுன்னு தண்ணிக்குள்ள நின்னா காலுல புண்ணு கிண்ணு வந்து தொலைக்கப் போகுது... வெட்டரிச்சா கம்மாத் தண்ணிக்குள்ள விட்டு கழுவிக் கொண்டாரலாம்... எங்க வெட்டரிக்கப் போவுது... மறுபடிக்கும் இருட்டிக்கிட்டு வருது... இந்தாங்க... இத தலையில போட்டுக்கிட்டு போங்க... அப்புறம் எதுவும் எடுக்காம பொயிட்டு மழயில நனச்சிட்டு வந்து தும்மிக்கிட்டுக் கெடக்காம... அப்பவும் ஏ உயிருதா போகும்..." என சாக்கைக் கொடுத்தாள்.

சாக்கை கொங்காணி போலச் செய்து தலையில் போட்டுக் கொண்டார். தண்ணீர் எடுத்து புகையிலையைத் துப்பி வாயைக் கொப்பளித்தார். 'ம்ம்க்கும்' என ஒரு செருமல் விட்டபடி துண்டால் முகத்தைத் துடைத்டுவிட்டு ஏரவாரத்தில் தொங்கிய மண்வெட்டிய எடுத்து தோளில் போட்டுக் கொண்டு வயலுக்குக் கிளம்பினார்.

அதுவரை மௌனம் காத்த வானம் மீண்டும் லேசாக தூற ஆரம்பித்தது. 'இதுல போயி தண்ணி வெட்டி விடலயின்னா பயிரு முழுகிப் போயிடுமோ? கெழவி நயிநயின்னு நமுத்து எடுத்துருவா... லேசா மழ பேஞ்சா கொழுஞ்சி புடுங்கு... முள்ளு வெட்டுன்னு கொல்லுவா... நாத்துப் பாவிட்டா அப்புறம் அறுத்து வூடு வாரவரைக்கும் உண்டு இல்லன்னு பண்ணிருவா...' சத்தமாக முணங்கியபடி வரப்பில் மெதுவாக நடந்தார். 

"சித்தப்போவ்... என்ன தண்ணி வெட்டி விடப்போறியளா...? மேட்டுச் செய்யில நானு வெட்டி விட்டுட்டேன்... அம்மஞ் செய்யிப்பக்கமாத்தான் போறேன்... அப்புடியே பாத்துட்டு வாறேன்... மழ பெருசா வரும் போல தெரியுது.... எதுக்கு இப்ப வரப்புல கஷ்டப்பட்டு போறியா... நா பாத்துட்டு வாறே... வீட்டுக்குப் போங்க..." கணக்கஞ் செய்யி வரப்பில் இருந்து அவரின் அண்ணன் மகன் கண்ணதாசன் கத்தினான்.

"நீ வந்தியா... பாக்கலை... நீ வந்தது தெரிஞ்சா வந்திருக்க மாட்டே... சரிப்பா... வந்தது வந்துட்டே... வேப்ப மரத்துச் செய்ய பாத்துட்டுப் போயிடுறே... இல்லாட்டி உங்க சின்னாத்தா கத்த ஆரம்பிச்சிருவா..." பதிலுக்கு இவரும் கத்தினார்.

"ஆமா எப்பவும் அதுக்கு பயந்தே சாகுங்க... எப்பத்தாஞ் சித்தப்பா சின்னத்தாக்கிட்ட எதுத்துப் பேசியிருக்கீக... போங்க... போங்க... மழ பெருசா வரும் போல இருக்கு... வெரசா பாத்துட்டு வாங்க..."

"சரிப்பா..." என்றவர் 'இந்தக் கெழவி பதிமூணு வயசுல பாவடையைப் போட்டுக்கிட்டு இங்க வந்தா... ஆச்சு ரெண்டு பேருக்கும் அறுவதுக்கு மேல... அன்னைக்கு பேந்தப் பேந்தன்னு நின்னா... அடுத்தாளுக்கிட்ட பேசப்பயப்படுவா... இன்னக்கி இவகிட்ட பேச எல்லாரும் பயப்படுறானுங்க... ம்... காலந்தான் ஆளுகள எப்படி மாத்திடுது.... என்ன இருந்தாலும் அவ ஒருத்தி இல்லைன்னாலும் நம்ம பொழப்பு நாறிப் போயிடும்... அதுக்காக அவளுக்கு முன்னாடி நா போயிச் சேந்துடக்கூடாது கருப்பா... நா இல்லைன்னா அவ வண்டி ஓடாது... ஒரு பய எட்டிப் பாக்கமாட்டான்... கெழவிய சீரழிச்சிப் புடுவானுங்க... எங்கண்ணு முன்னால அவ பொயிட்டா எப்படியோ நானும் போயி சேந்துருவேன்...' என மனசுக்குள் நினைத்தவரின் கண்கள் ஏனோ கலங்க, மழை சடச்சடவென சற்றே பெரியதாய் விழ ஆரம்பித்தது.

(வேரும் விழுதுகளும் வளரும்)
-'பரிவை' சே.குமார்.

வெள்ளி, 26 செப்டம்பர், 2014

பாலு மகேந்திராவின் சந்தியா ராகம்


ல்லூரியில் படிக்கும் போது எங்கள் தேவகோட்டை திரையரங்குகளில் எந்தப் படத்தையும் வெளியாகிற அன்று திரையிடமாட்டார்கள். காரைக்குடிக்கு வந்து சென்ற பின்னர்தான் அங்கு வரும். இன்று நிலமை மாறிவிட்டது. அப்பொதெல்லாம் அடிக்கடி பழைய படங்களைப் போடுவார்கள். பழைய நல்ல படங்கள் மீது எப்போதும் எங்களுக்கு பார்க்கும் ஆவல் வருவதுண்டு. ரத்தக்கண்ணீர், மூன்றாம்பிறை எல்லாம் அப்படிப் பார்த்த படங்கள்தான். 

இயக்குநர் பாலு மகேந்திரா அவர்களின் படங்களை எல்லாம் தியேட்டரில் பார்க்கின்ற வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் சில படங்களை தூர்தர்ஷன் வாயிலாகவும் திரையரங்குகளில் பழைய படங்களை எப்போதாவது திரையிடும் போதும் பார்த்திருக்கிறோம். மற்றபடி நிறையப் படங்களை பார்க்கும் வாய்ப்பே கிடைக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அவர் ஒரு ஒளி ஓவியர் என்பது எல்லோரும் அறிந்ததே. வண்ண வண்ணப் பூக்கள் படத்தில் வரும் \இளம் நெஞ்சே வா...' பாடலில் அவரின் கேமரா கவிதை பாடியிருக்கும்.

அப்படிப்பட்ட கலைஞரின் காவியங்களை எல்லாம் பார்த்ததில்லை என்பதோடு இன்று ஜீ உமாஜி அவர்களின் வானம் தாண்டிய சிறகுகள் வலைப்பூவில் பாலுமகேந்திரா பற்றிய கட்டுரையை பார்க்கும் வரை பழசுகளை எல்லாம் தூசி தட்டிப் பார்க்கும் எண்ணம் இல்லை. தமிழ்ப்படங்களை விடுத்து தற்போது மலையாளத்தில் நல்ல கதையம்சம் உள்ள படங்களைப் பார்க்க ஆரம்பித்து இருப்பதால் அந்தக் கதையோட்டம் மிகவும் பிடித்துப் போய் அதற்குள் மூழ்கிவிட்டேன். அவரின் கட்டுரையில் இயக்குநரின் தேசிய விருது பெற்ற படமான சந்தியா ராகம் பற்றி சொல்லியிருந்தார். உடனே அதைத் தேடிப்பிடித்து பார்க்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.

இன்று விடுமுறை என்பதால் மதியம் பிரியாணி செய்து சாப்பிட்டோம். பெரும்பாலும் முன் தின இரவு அதிக நேரம் விழித்திருந்தாலோ அல்லது தலைவலி என்றாலோ மட்டும்தான் மதிய உறக்கம் இல்லை என்றால் இணையத்தில்தான் உலாவுவேன். தற்போது முகநூலில் கேன்டி & கிரஷ் கேம் பெரும்பாலான நேரத்தை விழுங்க ஆரம்பித்திருக்கிறது. அந்த போதையில் இருந்து வெளிவர மீண்டும் எழுத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறேன். எங்கள் அறையில் இணைய வழியில் படம் பார்ப்பது என்பது முழங்கால் வலியோடு மலையேறுவது போன்றது. நின்று நின்று பார்ப்பதற்குள் நித்திராதேவி வந்து அணைத்துக் கொள்வாள்.

இன்று சந்தியா ராகத்தை யூடியுப்பில் தேடி எடுத்து பார்க்க ஆரம்பித்தால் என்ன ஆச்சர்யம். சின்னப்பய குடுகுடுன்னு மலையேறுற மாதிரி படம் எந்தத் தடங்களும் இல்லாமல் ஓட ஆரம்பித்தது. கருப்பு வெள்ளைப் படமான சந்தியா ராகம் படம் தொடங்குவதே கவிதையாய்... ஒரு கிராமத்தில் மாடு கத்தும் பின்னணியில் நாட்டுக்கட்டு சேலை கட்டிய பெண்கள் தண்ணீர் தூக்கிக் கொண்டு போவது, நாற்று நடுவது, எருமைகள் தண்ணீரில் நீந்துவது, மாட்டு வண்டி, பேன் பார்ப்பது, கோழிக்குஞ்சுகள் என கேமரா கவிதைகளை உள் வாங்கியபடி சொக்கலிங்க பாகவதரின் வீட்டுக்குள் நுழைகிறது. கட்டிலில் இருந்து எழும் சொக்கலிங்கம் தனது காலை மெதுவாக அழுக்கி எழுந்து முகம் கழுவி மனைவி விசாலாட்சியை அழைக்கிறார்.

அப்படியே போகும் கதையில் குளிக்கப் போகும் சொக்கலிங்கப் பாகவதர் சின்னக் குழந்தையாய் மாறி தண்ணீருக்குள் கல்லை எடுத்து தவளை விடுவது (தண்ணீரின் மீது கல்லை செரட்டி எறிந்தால் அது தாவித்தாவி போகும்... அதனால் அதை தவளை என்போம்) பசங்க விளையாண்டு அப்படியே விட்டுச் சென்ற சில்லு நொண்டி கட்டத்தில் வேஷ்டியை மடித்துக் கட்டி நொண்டி அடித்துப் பார்ப்பதும் சிறுவர்களின் பம்பர விளையாட்டை ரசித்து அதை தனது கைகளில் எடுத்து விடச் செய்வது என கிராமத்துப் பெருசில் துள்ளல் பெருசாக வலம் வருகிறார். இவரைப் போன்று ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு துடுக்கான பெரிசு இருப்பார். எங்க ஊரிலும் எங்கய்யா ஒருத்தர் இருக்கார்... எல்லாவற்றிலும் கலந்து கொள்வார்.  நாங்கள் அவரை இளைஞர் மன்றத் தலைவர் என்றுதான் வைத்திருக்கிறோம்.


வீட்டுக்கு வருபவர் தனது மனைவி இறந்திருப்பது கண்டு அழுவதும், காரியங்கள் முடிந்ததும் தனக்கு குழந்தைகள் இல்லாததால் சிறிய வாடகை வீட்டில் மனைவி அர்ச்சனாவுடனும் மகள் வள்ளியுடனும் (பேபி ராஜலட்சுமி)  வாங்கும் சம்பளத்தில் இழுத்துக்க பறிச்சுக்க என்று வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கும் தம்பி மகனான ஓவியர் வீர சந்தானத்தைத் தேடி சென்னை வருகிறார். கிராமத்தில் ஆர்ப்பரிக்கும் காட்டருவியாக சுற்றியவர் சென்னைக்குள் நுழையும் போதே சிகரெட்டுப் பிடிக்கும் சிறுவர்கள், ஆட்டோக்காரனின் சாவு கிராக்கி என்ற வசனம் என எல்லாம் தாங்கி எதோ வாழ்க்கையை ஓட்டணுமே என வீட்டு விலாசத்தைக் கேட்டுக் கேட்டு வந்து சேருகிறார்.

அவர் அங்கு வந்த இரவில் அறைக்குள் கணவனிடம் தங்களது குடும்பச் சூழலில் மாமா இங்கே தங்கி விடுவாரோ என அர்ச்சனா கேட்பதும் அதன் பின்னான பேச்சில் கணவன் மனைவியிடம் கோபமாக பேசுவதைக் கேட்க நேரும் போது உடைந்து போகிறார். அர்ச்சனா அப்படிக் கேட்கும் போது இவரும் சராசரி மருமகள்தான் என்று நினைக்கும் போது அடுத்த நாள் கணவனின் பையில் இருந்து காசை எடுத்து விட, அதை அறிந்து அவன் வினவ பாவம் அவர் வந்திருக்காருல்ல... வாய்க்கு ருசியா எதாவது சமைக்க வேண்டாம் என்று கேட்கும் போது அவரின் நல்ல குணம் பதியப்படுகிறது.

பேத்தியுடன் சினேகம், பள்ளிக்கு கொண்டு விடுதல், பால் வாங்கி வருதல், வயித்துப் பிள்ளைக்காரியான மருமகளுக்கு கிணற்றில் தண்ணீர் இறைத்துக் கொடுத்தல், மருமகள் வாங்கிய கடனைக் கொடுத்தல் என தனது வாழ்க்கையை வாழும் அவருக்கு பேத்திக்கு வாங்கிக் கொடுக்கும் வடையால் பிரச்சினை வர, மருமகள் அவரைக் கண்டபடி திட்டி விடுகிறார். அன்றிரவே யாரிடமும் சொல்லாமல் அங்கிருந்து கிளம்பிவிடுகிறார். அவரைத் தேடும் படலத்துடன் அவர் காணாமல் போனதற்கு மனைவிதான் காரணம் என வீர சந்தானம் எரிந்து விழுவதுமாக கதை நகர்கிறது.

இதனிடையே முதியோர் இல்லம் செல்லும் சொக்கலிங்க பாகவதர் அங்கு மனநிறைவுடன் இருக்கிறார். மருமகளுக்கு கடிதம் எழுத, நிறைமாதக் கர்ப்பிணியான அவளோ அவரைத்தேடி அங்கு வருகிறாள். அவரிடம் தனது தவறுக்கு வருந்தி அழுது தன்னோடு வரும்படி கூப்பிடுகிறாள். தான் அங்கு சந்தோஷமாக இருப்பதைச் சொல்லி எல்லா இடமும் சுற்றிக் காட்டுகிறார். அப்போது ஒரு கிழவி மாமனாரை பக்கத்தில வச்சிக்காம துரத்திட்டிங்களேன்னு சொன்னதும் ஏய் உன்னைய வேணுமின்னா துரத்தியிருப்பாங்க... என்னைய எம் மருமக நல்லாத்தான் வச்சிக்கிட்டா.... நானாத்தான் வந்தேன்... ஆளைப்பாரு... நீ வாம்மா என்று அழைத்துச் சென்று அனுப்பி வைக்கிறார். மருமகளுக்கு குழந்தை பிறந்து இருக்கிறது என்று கேள்விப்பட்டு சந்தோஷத்தோடு ஓடி வந்து குழந்தையைப் பார்த்து அதன் கையில் தனது விரலை வைக்கிறார். அது அவரது விரலைப் பிடிப்பதோடு படம் முடிகிறது.

சொக்கலிங்க பாகவதர் கிராமத்து கிழவனாகவே வாழ்ந்திருக்கிறார். ஒவ்வொரு காட்சியிலும் அவரது நடிப்பு பிரமிக்க வைக்கிறது. வீடு படத்தை தூர்தர்சனில் பார்க்கும் போது ஒரு வீட்டையும் இந்தக் கிழவரையும் காட்டும் போது அந்த வயதில் இந்தாளையும் வீட்டையும் வச்சி படம் ஓட்டுறான் பாரு.... இந்தக் கிழவனை எங்க இருந்துடா புடிச்சானுங்க எனச் சொல்லியிருக்கிறோம். ஆனா இதில் காபி குடிக்கும் போது, மனைவி இறக்கும் போது, மருமகளிடம் மனைவியின் சமையல் பற்றி பேசும் போது, மகனிடம் கக்கூஸ் எங்கப்பா இருக்குன்னு கேக்கும் போது, மருமக திட்டும் போது, நாடக நாயகனாக நடித்துக் காட்டும் போது... என இப்படியே போதாமல் பல போதுகளைச் சொல்லிக் கொண்டே போகலாம். இவரை பாலுமகேந்திரா மட்டும்தான் அழகாக பயன்படுத்தியிருக்கிறார் என்று நினைக்கும் போது நல்ல கலைஞனை மற்றவர்களும் பயன்படுத்தி இருக்கலாமோ எனத் தோன்றியது.

வீர சந்தானம் சாதாரணக் குடும்பத்து நாயகனாக அருமையாக நடித்திருக்கிறார். சண்டை போட்டுப் படுத்திருக்கும் மனைவியின் மீது கையை வைக்கவும் அவர் விலகவும் அவரிடம் அவர் மெதுவாகப் பேசுவதும் பின்னர் மனைவிக்கும் குழந்தைக்கும் போர்த்தி விட்டுவிட்டு படுப்பதும் பெரியப்பாவைத் தேடித் திரிவதும், அந்தக் கோவத்தில் மனைவி சாப்பிட்டுச் செல்லச் சொல்லும் போது ஆமா அங்க உக்காந்திருக்கவன் உங்கப்பந்தானே என்று சொல்லிச் செல்வது என மிகையில்லாமல் நடித்திருக்கிறார்.


அர்ச்சனா... சொல்லவே வேண்டாம்... ஊர்வசி விருது பெற்றவரல்லவா... நடிக்கச் சொல்லியா தரவேண்டும். வரவுக்கும் செலவுக்கும் தட்டுத் தடுமாறி வாழ்க்கை நடத்தும் பெண்ணாக வாழ்ந்திருக்கிறார். கணவனிடம் எதாவது பழம் வாங்கிட்டு வாங்க என்று சொல்லும் போது காஷ்மீர் ஆப்பிள் வாங்கிட்டு வரவா... குடுக்கிற மூணு ரூபாயில பேச்சைப் பாரு... என்று அவன் சொல்லிச் செல்ல அப்படியே முகத்தில் ஒரு சின்ன புன்னகை அரும்ப விடுவார் பாருங்கள்... சான்ஸே இல்லை... இப்படி சீனுக்கு சீன் கலக்கியிருப்பார்.

டீக்கடையில் அமர்ந்து பேசும் போது பெரியவர்களை கவனிக்காத பிள்ளைகள் பற்றி பேச்சு வரும் போது வாழ்வின் வலியையும் அழகாகப் பதிந்திருக்கிறார் பாலுமகேந்திரா. கலர் படமாக இருந்தால் காட்சிப் படுத்துதலில் பார்வையாளனின் பார்வை கதாபாத்திரங்களை விடுத்து பின்னணிக் காட்சியில் போய்விடும் என்பதால் இது போன்ற படங்களை கருப்பு வெள்ளையில் வெளியிடவே பாலுமகேந்திரா விரும்பியதாக மாலியன் என்பவரின் கட்டுரையில் படித்திருக்கிறேன். அது உண்மைதான் போல... கருப்பு வெள்ளையில் அந்த மனிதர்களையும் அவர்களின் மனங்களையும் அருமையாகப் படம் பிடித்திருக்கிறார். படம் ஆரம்பித்து சில நிமிடங்களுக்குப் பிறகே பெயர் போடுகிறார். அப்படிப் போடும் போது 'எம்தோழனும் தந்தையுமாகிய பாலநாதனுக்கு சமர்ப்பணம்' என்று வெள்ளை எழுத்துக்களை கருப்புப் பின்னணியில் காட்டுகிறார்.

பின்னணி இசை எல். வைத்தியநாதன் என்று போடுகிறார்கள். குன்றக்குடி வைத்தியநாதனோ? பாலுமகேந்திரா என்னும் மகா கலைஞனின் இது போன்ற படங்களை தேடிப் பிடித்து பார்க்கும் ஆவலைத் தூண்டிவிட்டது இந்தச் சந்தியா ராகம்.

சந்தியா ராகம் கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஒரு படம்.
-'பரிவை' சே.குமார்.

வியாழன், 25 செப்டம்பர், 2014

வீடியோ : இது ஒரு பொன்மாலைப் பொழுது

ப்போதும் இசையை அனுபவிப்பது என்பது எல்லாருக்குமே அலாதியான விஷயம்தான். வயலில் நாற்று நடும் பெண்கள் கூட வேலையின் சுமை தெரியாமல் இருக்க நடவுப்பாடல்களைப் பாடியபடித்தான் நடுவார்கள். அம்மன் கோவில் திருவிழாக்களில் எல்லாம் குலவைப் பாடல்களுக்குப் பஞ்சமிருக்காது. அதே போல் மொளக்கொட்டுப் பாடலும் கேட்க இனிமையாக இருக்கும். எங்க அக்கா, அண்ணன்களின் குழந்தைகளுக்கெல்லாம் அம்மா தாலாட்டுப் பாடும் போது கேட்டு ரசிப்பதோடு நானும் சேர்ந்து பாடி இருக்கிறேன். ஏன் கிராமங்களில் இன்றும் கூட இறந்தவரின் உடலுக்கு முன்னர் ஒப்பாரிப் பாடல் பாடி நெஞ்சில் அடித்துக் கொண்டு அழுவார்கள். இதற்கு எங்கள் பக்கம் மாரடிக்கிறது என்று சொல்வார்கள்.

இப்போது அலுவலகப் பணி நேரத்தில் பெரும்பாலும் எனக்குத் துணையாக இருப்பது இங்கு பகிர்ந்திருக்கும் பாடல்களைப் போன்ற பாடல்கள்தான். இவையெல்லாம் எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத பாடல்கள். முக்கல் முனங்கல் இல்லாமல் வேற்று கிரக வாசிகளின் வார்த்தைகள் இல்லாமல் அடித்து நொறுங்கும் இசை இல்லாமல் அழகான வரிகளோடு இனிமையான இசையோடு லயித்துப் பாடும் பாடகர்களின் குரலில் என்றும் நம்மை கிறங்கச் செய்யும் பாடல்களாகத்தான் இவை இருக்கின்றன. நீங்களும் கேளுங்கள்... கண்டிப்பாய் ரசிப்பீர்கள்.

பாடல் : மண்ணில் இந்தக் காதல் இன்றி...
படம் : கேளடி கண்மணிபாடல் : கேளடி கண்மணி...
படம் : புதுப்புது அர்த்தங்கள்


\

பாடல் : அகரம் இப்போ சிகரம் ஆச்சு...
படம் : சிகரம்
பாடல் : ஜாதி மல்லிப் பூச்சரமே...
படம் : அழகன்
பாடல் : செம்பூவே பூவே...
படம் : சிறைச்சாலை
பாடல் : பூவே செம்பூவே...
படம் : சொல்லத் துடிக்குது மனசு
பாடல் : ராஜ ராஜ சோழன் நான்...
படம் : ரெட்டை வால் குருவி
ராஜாவின் இசை ராஜ்ஜியமும் வைரமுத்துவின் வைர வரிகளும் கலந்து கட்டி ஆடியிருக்கும் 'இது ஒரு பொன்மாலைப் பொழுது' எத்தனை முறை கேட்டாலும் அலுப்பதில்லை.  இன்றைய வீடியோப் பகிர்வில் எப்போதும் என் மனம் கவர்ந்த பாடல்களில் ஒன்றான நிழல்கள் படப்பாடல் இதோ


அலைகள் ஓய்வதில்லை படத்தில் ஜானகி அம்மாவின் வசீகரக் குரலில் வைரமுத்துவின் வைரவரிகளில் ராஜா புத்தும் புதுக்காலையை அவ்வளவு அழகாக வார்த்திருப்பார்... படத்தில் இந்தப் பாடல் இடம்பெறவில்லை.  ஆனால் ஆடியோவில் பட்டி தொட்டியெல்லாம் புத்தும் புதுக்காலை இப்போதும் ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது. அதே புத்தும் புதுக்காலையை மேகாவில் ராஜா மீண்டும் வார்த்தார். அந்த இசையும் பாடகி அனிதாவின் அழகான குரலும் புத்தம் புதிய காலைக்கு மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்திருக்கின்றன. இங்கே பழைய புத்தம் புதுக்காலை உங்கள் பார்வைக்காக.... இன்றைய பாடல் பகிர்வில் அனைத்துப் பாடல்களையும் ரசித்திருப்பீர்கள். மீண்டும் மற்றுமொரு பாடல் பகிர்வில் சந்திப்போம்.

-'பரிவை' சே.குமார்.

புதன், 24 செப்டம்பர், 2014

மனசின் பக்கம் : சினிமாப் பேச்சே வேலையாப் போச்சு

புதாபி அரசு அலுவலகத்தில் எங்கள் புராஜெக்ட் அடுத்த மாதம் முடிவடைய இருப்பதால் வேலைகளை முடித்துக் கொடுக்க வேண்டிய ஒரு நாளைக்கு 11 மணி நேர வேலை... காலை 5.30 மணிக்கு எழுந்து குளித்துக் கிளம்பி அலுவலகம் நோக்கி நடந்து... அலுவலகம் அடைந்து 7 மணிக்கு வேலை ஆரம்பித்தால் மாலை 6 மணிக்குத்தான் முடிகிறது. மாலையும் நடைதான்... இப்போது காலை மற்றும் மாலை நேரத்தில் வெயிலின் தாக்கம் மாறி இருக்கிறது... குளிர் காலத்தின் அடையாளமாக லேசான காற்றும் இருக்கிறது. அறைக்கு வந்ததும் ஊருக்கு ஸ்கைப்பில் கொஞ்ச நேரம் பேச்சு... பின்னர் சமையல்... வலைப்பூவில் கொஞ்ச நேரம் மேய்ச்சல் என என்று நாட்கள் நகர்ந்து போய்க் கொண்டிருக்கிறது. எனது அருகில் இருக்கும் மலையாள நண்பரிடம் மெதுவாக சினிமாப் பேச்சுக் கொடுத்தால் போதும் விடாமல் பேச ஆரம்பிப்பார்... வேலையின் கடுமை தெரியாது... பத்தாததுக்கு பாகிஸ்தானி வேறு எதற்கெடுத்தாலும் குட்டே.. ம்... குட்டே என்று சொல்லுவான். அவனை மலையாளத்தில் ஓட்டுவதே அந்த நண்பரின் வேலையாக இருக்கும்... அவனுக்குப் புரியாததால் மீண்டும் குட்டே என்பான். நாங்கள் சிரிப்பை அடக்க முடியாமல் திணறுவோம். இருந்தும் பெரும்பாலான பொழுதுகளை என கணிப்பொறியில் இருக்கும் 80-90 பாடல்கள் ஆக்கிரமித்துவிடும். எப்படி இருந்தாலும் மாலை ஆறு மணிக்கு இருக்கையில் இருந்து எழும்போது முதுகுவலி கொன்று எடுத்து விடுகிறது.

HOW OLD ARE YOU மற்றும் BANGALORE DAYS என்ற இரண்டு மலையாளப் படங்களைப் பார்த்தேன். இரண்டும் அருமையான படங்கள். அதிலும் HOW OLD ARE YOU சான்ஸே இல்லை... சூப்பர்ப்படம்... இரண்டு படங்களைப் பற்றியும் விமர்சனமில்லாத ஒரு பார்வை. 


HOW OLD ARE YOU : அயர்லாந்து செல்லும் கனவு கலைந்த 36 வயதான ஒரு பெண் தன் மகளாலும் கணவனாலும் உதாசீனப்படுத்தப்பட, கல்லூரியில் படிக்கும் போது உன்னிடம் இருந்த அந்த போராட்டக் குணம் எங்கே போச்சு என்று தோழி கனிகா கேட்க, அதன் பின் வீட்டு மொட்டை மாடியில் விளைவித்த காய்கறிகள் அவருக்கு மிகப்பெரிய வாய்ப்பைப் பெற்றுத்தர பக்கத்து வீட்டு மனிதர்களின் உதவியுடன் எல்லா வீடுகளிலும் தோட்டம் வைத்து அதில் ஜெயித்து எந்தக் குடியரசுத் தலைவரைப் நேரில் பார்த்த போது மயங்கி விழுந்து எல்லோராலும் கேவலப்படுத்தப்பட்டாரோ அவரோடு தில்லியில் விருந்து சாப்பிட குடும்பத்துடன் சென்று திரும்புகிறார். காவ்யா மாதவன் மீதான மோகத்தில் திலீப் விவாகரத்து செய்த பிறகு மஞ்சு வாரியர் நடித்திருக்கும் படம் என்பதால் அதிக எதிர்பார்ப்பு இருந்திருக்கும் அதை பூர்த்தி செய்யும் விதமாக மிகவும் அருமையாக நடித்திருக்கிறார்.


BANGALORE DAYS : உறவினராய் இருந்தும் படிக்கும் போதே நல்ல நண்பர்களாக வாழ்ந்த... வாழ்கிற இரண்டு ஆண், ஒரு பெண்ணின்  வாழ்க்கையை மையமாக வைத்து நகரும் கதை. பெங்களூர் போய் ஜாலியாகச் சுற்ற வேண்டும் என்ற கனவு கொண்ட மூவரில் ஒருவனுக்கு அங்கு வேலை கிடைக்கிறது. அந்தப் பெண்ணுக்கு பஹத் பாசிலுடன் திருமணம் முடிந்து அங்கு செல்கிறாள். மற்றவனோ ரேஸ் ஓட்டுபவர்களின் பைக் மெக்கானிக்காக பெங்களூர் வர, அவர்களது வாழ்வில் நடக்கும் நிகழ்வுகளும் பஹத் பாசிலின் முன்னாள் காதல் கதை... அதன் பின்னான நிகழவுகளும் என படம் அழகாக பயணிக்கிறது. நஸ்ரியா கலக்கியிருக்கிறார். பஹத் சொல்லவே வேண்டாம்... மனுசன் என்ன கதாபாத்திரமோ அப்படியே வாழ்ந்து விடுவார். துல்கர் சல்மான் இளமைத் துடிப்புடன் நடித்திருக்கிறார். குட்டனாக வரும் நிவினும் அருமையாக நடித்திருக்கிறார். 

திரு. கரந்தை ஜெயக்குமார் ஐயா, திரு. முத்து நிலவன் ஐயா, ஒரே ஒரு முறை மட்டுமே பேசி மீண்டும் பேச வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கும் திண்டுக்கல் தனபாலன் அண்ணா (இப்போ இவர் மதுரை பதிவர் சந்திப்பில் மிகவும் பிசியாக இருப்பதால் தொந்தரவு பண்ண வேண்டாம் என்ற நினைப்பு) என பலரோடு பேச வேண்டும் என்று நினைத்து வேலையின் காரணமாக தள்ளிப் போய் கொண்டே இருக்க இன்ப அதிர்ச்சியாய் மகேந்திரன் அண்ணா முகநூலில் எனது தொலைபேசி எண் கேட்டு அன்று மாலையே கூப்பிட்டார். அவர் அபுதாபியில்தான் இருக்கிறார் என்பது அவரிடம் பேசிய பின்னர்தான் தெரியும். விரைவில் சந்திக்கலாம் என்று சொல்லியிருக்கிறார். அந்த நாளை ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கிறேன். 

சில நாட்களுக்கு முன்னர் இருந்த மனநிலை மாறி இப்போது எப்போதும் போல் போய்க் கொண்டிருக்கிறது என்பது சந்தோஷமே. அந்த நிகழ்வுக்குப் பின்னர்தான் வாழ்க்கையை மட்டுமல்ல... சில மனிதர்களையும் படிக்க முடிந்தது. எத்தனை விதமான மனிதர்கள்... எப்படி எல்லாம் நடிக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள முடிந்தது, இப்படி ஒரு பாடத்தை மிகவும் கஷ்டமான சூழலோடு கொடுத்திருந்தாலும் வாழ்க்கைப் பாடம் கற்றுக் கொள்ள வைத்த இறைவனுக்கு நன்றி.

ன்று ஒரு நண்பர் போனில் கூப்பிட்டார். ஏறத்தாழ இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அலைனில் சந்தித்த தமிழர்தான் அவர்.  எனக்கும் அவருக்குமான தொடர்பு அங்கு இருக்கும் போது மட்டுமே இருந்தது. இன்று திடீரென அழைத்துப் பேசினார். எனக்கு யாரென்று தெரியாவிட்டாலும் அவருடன் பேசினேன். என் குரலை வைத்து கண்டு பிடிக்க முடியவில்லையா என்றார். இல்லை என்றதும் நான் இன்னார் எனச் சொல்லி பணி நிறைவு பெற்று விட்டதாகவும் வேறு வேலைக்கு முயற்சிப்பதாகவும் சொன்னார். எங்கள் கம்பெனியில் ஆள் எடுப்பதாகவும் நீங்கள் கொஞ்சம் எனக்காக உங்க மேனேஜரிடம் சொல்லுங்கள் என்றார். சரி என்று சொல்லி அவரின் பயோடேட்டா அனுப்பச் சொன்னேன். முக்கியமான விவரம் என்னவென்றால் மகன்கள் இருவரும் அரசு அலுவலகத்தில் பணி செய்யும் போதும் இன்னும் வேலை செய்ய வேண்டும் என்ற அவரின் எண்ணம் போற்றத்தக்கதுதான் என்றாலும் இந்த வயதுக்கு மேல் ஊரில் போய் இருந்து கொண்டு வாழ்க்கையை அனுபவிக்கலாமே என்பதுதான் எனது ஆதங்கம். ஒருவேளை இந்தப் பாலை மண் வந்தவர்களை அவ்வளவு சீக்கிரம் அனுப்பாது என்று நண்பர்கள் சொல்வது உண்மைதானே.... அப்பா... எப்படியும் சீக்கிரமே இங்கிருந்து ஓடிவிட வேண்டும் என இறைவனிடம் கேட்டுக் கொண்டே இருக்கிறேன்..

மீண்டும் ஒரு தொடர்கதை ஆரம்பிக்கலாம் என்ற எண்ணம் இருக்கிறது. விரைவில் தொடங்கலாம் என கதையை மனசுக்குள் அசை போட்டுக் கொண்டிருக்கிறேன். இந்த முறை கலையாத கனவுகளைப் போல நீண்ட தொடராக இல்லாமல் குறைந்த பகுதிகளில் முடித்து விடலாம் என்று நினைத்திருக்கிறேன். என்னது..? ஐயோ போதும்டா சாமின்னு சொல்றீங்களா..? இல்லையில்லை உங்களை விடுற மாதிரி இல்லை... விரைவில் தொடர்கதை ஆரம்பிக்கத்தான் போகிறேன்.. ஹா... ஹா... விடமாட்டோமுல்ல....

மனசின் பக்கம் தொடரும்...
-'பரிவை' சே.குமார்.

செவ்வாய், 23 செப்டம்பர், 2014

ஞாபகத்தில் வருகிறேனா?உன்னோடான காதல்
மனசுக்குள் இன்னும் 
மயிலிறகாய் வருடிக்
கொண்டுதான் இருக்கிறது...

நீ கொடுத்த வாழ்த்து
அட்டைகள் இன்னும்
என்னோடு வாழ்ந்து 
கொண்டுதான் இருக்கின்றன...

நானும் நீயும்
அமர்ந்து பேசிய 
நாவல் மரம்
இன்னும் காய்த்துக்
கொண்டுதான் இருக்கிறது...

பெய்யும் மழையெல்லாம்
உன் துப்பட்டா துவட்டிய
தலையை நனைத்துச்
செல்லத்தான் செய்கிறது...

குடைக்குள் நனையும்
காதலர்கள் எல்லாம்
நீ பிடித்த குடையையும்
நாம் நனைந்த மழை
நாட்களையும் நினைவில்
நிறுத்தத் தவறுவதில்லை...

இப்படி நாம் வாழ்ந்த
நிகழ்வுகளை எல்லாம்
எப்படியும் மீட்டிப் 
பார்க்கிறேன் தினம் தினம்...

எல்லாம் மறந்தாயா...
இல்லை மரிக்கச் செய்தாயா...
தெரியவில்லை...
இருந்தும் கேட்கிறேன்...
உன் ஞாபகச் சுவற்றில்
எப்போதேனும் நான்
வந்து போகிறேனா...?
-'பரிவை' சே.குமார்.

திங்கள், 22 செப்டம்பர், 2014

வெள்ளந்தி மனிதர்கள்: 3 . புலவர் அருள்சாமி

வெள்ளந்தி மனிதர்கள் வரிசையில் என்னால் மறக்க முடியாத... மறக்க நினைக்காத மனிதர்களைப் பற்றி பகிர்ந்து வருகிறேன். அந்த வரிசையில் மூன்றாவது பகிர இருப்பது எங்கள் அருள்சாமி ஐயாவைப் பற்றிய சில நினைவுகள்.

அருள்சாமி ஐயாவும் சவரிமுத்து ஐயாவைப் போல நான் படிக்கும் போது  தே பிரித்தோ மேல்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராய் பணியாற்றியவர்தான். அப்போது எனக்கு அவர் வகுப்பு எதுவும் எடுக்கவில்லை. அவருடன் எந்தவித தொடர்பும் இல்லை. பள்ளியில் திங்கட்கிழமை நடைபெறும் பிரேயரின் போது வாரம் ஒரு ஆசிரியர் பேசுவார்கள். அதில் ஐயாவின் பேச்சென்றால் மாணவர்கள் மிகவும் சந்தோஷமாகக் கேட்டு ரசிப்பார்கள். அந்தளவுக்கு நகைச்சுவையுடன் கருத்துக்கள் செறிந்து இருக்கும்.

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தில் இணைந்த போதுதான் ஐயாவும் பழக்கமானார். பெரும்பாலும் ஐயா யாருடனும் விரைவில் பேச மாட்டார். ஆனால் மேடையில் பேசினால் எல்லோரையும் ரசிக்க வைப்பார். அப்படித்தான் நாங்களும் ஐயாவுக்கு ரசிகரானோம். பின்னர் மாதாந்திர கூட்டங்களுக்கு வரும்போதெல்லாம் 'என்னய்யா... இன்னைக்கு நீங்க என்ன வாசிக்கிறீங்க கதையா? கவிதையா?' என்று கேட்பார். 'இல்லைய்யா... ஒண்ணும் வாசிக்கலை...' என்று சொன்னால் 'என்ன பிள்ளைகள் சின்னப்பிள்ளைங்க நீங்க வாசிச்சு நாங்க ரசிக்கணும்.. எப்பவும் நாங்கதான் வாசிக்கணுமா?' என்று கேட்டுச் சிரிப்பார்.

பழனி ஐயா வீடு எங்கள் வீடு போல் எப்போதும் அங்குதான் குடியிருப்போம்.  எப்போதும் ஐயா வீட்டில் பத்துப் பேருக்குக் குறையாமல் இருப்போம். சவரிமுத்து ஐயா வீட்டிற்கு எப்படியும் வாரத்தில் ஒரு நாளாவது நானும் முருகனும் போய்விடுவோம். ஆனால் அருள்சாமி ஐயா வீடு தேவகோட்டையின் கடைசிப் பகுதியில் இருந்தது. ரொம்பத்தூரம் போக வேண்டும் என்பதால் பெரும்பாலும் செல்வதில்லை. முருகன் தாமரை, சுபமங்களா, செம்மலர் ஏஜென்ஸியை பழனி ஐயாவிடம் இருந்து வாங்கினான். எனவே புத்தகங்கள் வந்ததும் ஒரு நாள் மாலை இருவரும் சைக்கிளில் தேவகோட்டையையே சுற்றி வருவோம். அப்படிப் போகும் போதுதான் தேனம்மை ஊரணி தாண்டி ஐயா வீடு செல்வோம். 

எங்களைப் பார்த்ததும் 'வாங்கய்யா... என்ன புத்தகம் வந்திருக்கா? அப்பத்தானே எங்க வீட்டுப் பக்கம் வருவீங்க?' என்றபடி வரவேற்பார். 'இல்லய்யா அப்படியே பாத்துட்டுப் போகலாம்ன்னு வந்தோம்' என முருகன் சிரித்தபடி சொன்னதும் 'ஆமாய்யா நீங்களும் அப்படியே பாத்துட்டுப் போகலாம்ன்னு வந்துட்டாலும்... சும்மா எதுக்குய்யா கதை விட்டுக்கிட்டு... உங்களுக்கு சவரிமுத்து ஐயா வீடும் பழனி ஐயா வீடும் மட்டும்தான் தெரியும்' என்பார். 'அப்படியெல்லாம் இல்லைய்யா...' என்றதும் 'சரி... சரி... உள்ள வாங்க எதாவது சாப்பிட்டுப் போகலாம்' என்று அழைத்து சோபாவில் அமர வைப்பார்.

வீட்டில் இருக்கும் போட்டாக்களை எல்லாம் காண்பித்து இது எங்க அக்கா, அங்க இருக்காக... இது அவுக... இது இவுக என அவரது குடும்பக் கதை எல்லாம் சொல்லி முடிப்பார். அதற்குள் அம்மா காபியோ, கூல்டிரிங்க்ஸோ கொண்டு வந்து கொடுப்பார். ஒவ்வொரு முறையும் எதாவது குடும்பக் கதை ஒன்று ஐயாவால் அம்மா வருவதற்குள் சொல்லி முடிக்கப்படும். அம்மாவோ அதிகம் பேசமாட்டார். வாங்கப்பா என்பதோடு சரி. குடித்து முடித்ததும் புத்தகத்தைக் கொடுத்துவிட்டு வர்றோம் ஐயா என்று கிளம்பும் போது 'வர்றதுதான் வாறீங்க ஒரு மத்தியானவேளையில் வந்தால் சாப்பிட்டுப் போகலாம்தானே... ஒரு நா.. ஒரு வாயி சாப்பாடு கூட சாப்பிடாம... இப்படி ஓடியாந்துட்டு ஓடுறீக...' என்று சொல்லிச் சிரிப்பார். 'நம்ம வீட்ல சாப்பிடுறதுக்கு என்னய்யா... இப்ப உக்காந்தா சாப்பாடு போட மாட்டீங்களா?' என்று முருகன் சொல்லவும் 'உனக்கு பேசவா சொல்லித் தரணும்... நீ பேசிச் சமாளிச்சிருவே... அவன் சிரிச்சே சமாளிச்சிருவான்... நல்ல செட்டுய்யா ரெண்டு பேரும்... ஆனா ஒண்ணுய்யா கடைசி வரைக்கும் ரெண்டு பேரும் இதே பாசத்தோட இருக்கணும்ய்யா' என்று சொல்லி வாசல்வரை வந்து வழியனுப்பி வைப்பார்.

ஒரே ஒருமுறை இருவரும் ஐயா வீட்டில் மதியம் சாப்பிட்ட நியாபகம் இருக்கிறது. செம்மலர், தாமரையில் எல்லாம் வரிகளை விடாது படித்து அடிக்கோடிட்டு அது குறித்து சிலாகித்துப் பேசுவார். பாரதி விழாவின் போது நாங்கள் வேலை செய்தால் தானும் வந்து அதில் இணைந்து கொள்வார். பெரும்பாலும் ஐயாக்களுடனான ஜாலியான பொழுதுகளில் அருள்சாமி ஐயா மெதுவாக சவரிமுத்து ஐயாவின் செல்லப்பிள்ளைகள் என்று சீண்ட ஆரம்பிப்பார், சவரிமுத்து ஐயாவோ பிள்ளைகள் எல்லோருக்கும் எல்லோருக்கும் செல்லம்தான்...  இதில் பிரித்துப் பார்க்க என்னய்யா இருக்கு என்று சிரித்துவிட்டு என்ன இருந்தாலும் இருக்க பிள்ளைகள்ல இந்த ரெண்டு பிள்ளைகளும் பேராசிரியரோட (பழனி ஐயா) பிள்ளைகள் அல்லவா என்று மேலும் கூடுதலாக இவர்கள் என் பிள்ளைகள் என்பதைவிட பேராசிரியரின் பிள்ளைகள் என்பதுதான் பொருத்தம் என்பது போல சொல்லி பழனி ஐயா முகத்தைப் பார்ப்பார். ஆனால் அவரோ எப்போதும் போல் வெண்தாடிக்குள் சாந்தமாய்ச் சிரிப்பார். அந்தச் சிரிப்பில் எல்லாப் பிள்ளைகளும் என்பிள்ளைகளே என்று சொல்வதாய் நமக்குத் தோன்றும்.

கலை இலக்கியப் பெருமன்றத்தில் இருக்கும் வரை அருள்சாமி ஐயாவுடனான தொடர்பு இருந்தது. பின்னர் சென்னை, அபுதாபி என்று வாழ்க்கைப் பயணம் தொடர்ந்த போது ஐயாவுடனான நெருக்கம் குறைந்தது. 'குமார் இப்போ எங்கே இருக்கிறார்? எப்படி இருக்கிறார்?' என சில முறை முருகனிடம் கேட்டிருக்கிறார். நான் செல்லும் போதெல்லாம் அவரை பார்க்க வேண்டும் என்று நினைத்து நினைத்து பார்க்காமல் திரும்புவதையே வாடிக்கையாகக் கொண்டிருக்கிறேன்.

எங்கள் அன்புக்குரிய அருள்சாமி ஐயா, தமிழாசிரியர் என்றாலும் ஆங்கிலப் புலமை அதிகம். நிறையப் படிப்பார்... நிறைய எழுதுவார். புத்தகங்கள் எல்லாம் போட்டிருக்கிறார். அதிகம் பேச மாட்டார் என்றாலும் நெருக்கமாகி விட்டோம் என்றால் அவருடன் நிறைய விஷயங்கள் குறித்து அதிகம் பேசலாம்... அதனால் அவருடன் பேசுவது என்றால் எல்லாருக்கும் பிடிக்கும். எல்லாருக்கும் பிடித்த அருள்சாமி ஐயா கடவுள் அருளால் சந்தோஷமாக இருப்பார் என்று நினைக்கிறேன். ஐயாவின் அன்பில் கொஞ்சக் காலம் வாழ்ந்தவன் என்ற சந்தோஷத்தோடு எப்போதும் அவரின் ஆசிகளை வேண்டி இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

அடுத்த பதிவில் எனது பேராசிரியர் கே.வி.சுப்பிரமணியன் (கே.வி.எஸ்) அவர்களைப் பற்றி பார்ப்போம்.

வெள்ளந்தி மனிதர்கள் தொடர்வார்கள்
-'பரிவை' சே.குமார்.

ஞாயிறு, 21 செப்டம்பர், 2014

நண்பேன்டா : டொமினிக்


ல்லூரிக்கால நட்பில் இன்னும் சில தோழர்களும் தோழியரும் இருக்கிறார்கள். அவர்களை எல்லாம் பின்னர் பார்க்கலாம்... இன்று எனது நட்பு வட்டத்தில் இன்றும் பாசத்துடன் எங்கள் இல்லத்தில் ஒருவனாய்... இருக்கும் எனது அன்பு நண்பன் டொமினிக் பிராங்ளினைப் பற்றிப் பார்க்கலாம்.

எனக்கு இவன் சிறுவயது நண்பனோ அல்லது கல்லூரிக் கால நண்பனோ கிடையாது. எம்.சி.ஏ. பண்ணும் போது எனக்கு நட்பானவன். தேவகோட்டையில் இருந்து புதுக்கோட்டை செல்லும் போது காரைக்குடியில் ஒரு குரூப் ஏறும். அதில் இவனும் ஒருவன். எங்கள் பேராசியையால் காரைக்குடி குரூப் என்று அன்போடு அழைக்கப்பட்டவர்கள் நாங்கள். ஆரம்பத்தில் சாதாரணமான நட்பாகத்தான் இருந்தது. பின்னர் பழகப்பழக எங்களுக்குள் ஒரு ஆத்மார்த்த நட்பு தொடர ஆரம்பித்தது.

மூக்கின் மீது கோபத்தைச் சுமந்து திரிபவன். எதற்கெடுத்தாலும் முன்கோபம் முந்திக் கொண்டு வந்துவிடும். கோபம் இருக்கும் இடத்தில்தான் குணம் இருக்கும் என்பார்களே அதற்கு இவன் மிகப் பொருந்துவான். எல்லோருக்கும் உதவும் மனம் கொண்டவன். நான்கு தங்கைகளுக்கு அண்ணனாக இருந்ததால் குடும்பப் பொறுப்பும் பாசமும் இவனிடம் அதிகம் இருந்தது. நாங்கள் படிக்கும் காலத்தில் இவனுக்கு அம்மாவும் தங்கைகளும்தான் உலகம். எப்பவுமே அவர்களைப் பற்றிய பேச்சும் நினைப்பும்தான் இவனிடம் இருக்கும்.

பொது அறிவுத் திறன் இவனிடம் அதிகம். எந்த ஒரு நிகழ்வானாலும் அதைப் பற்றி மிகத் தெளிவான விளக்கத்தைக் கொடுப்பான். டொமினிக், லஷ்மிகுமார் (சாமி - இவரைப் பற்றி மற்றொரு பகிர்வில்), கண்ணன், ஜாகீர், பூபாலன், சிதம்பரம் என ஒரு பெரிய பட்டாளமே எங்கள் குழுவில் இருந்தாலும் நான், சாமி, டொமினிக் என்ற பந்தம் இன்னும் இருக்கமாய் இருந்தது... இன்றும் இருக்கிறது. 

கடைசி செமஸ்டரில் புராஜெக்ட் சமர்பிக்க வேண்டிய கடைசி நாள் வரை நாங்கள் கல்லூரிப் பக்கம் போகவில்லை. கடைசி நாளன்று புதுக்கோட்டையில் சாமியின் நண்பரின் அச்சகத்தில் பிரிண்ட் எடுத்து பைண்டிங் பண்ணிக் ஐந்து மணிக்குள் கொடுக்க வேண்டும் என்ற கெடு இருக்கும் போது நான்கு மணிக்கு கல்லூரிக்குள் சென்றோம். அப்போது நாம எல்லாரும் ஒன்றாகச் சென்றால் மாலதி (பேராசிரியை) எதாவது சொல்லும். அதனால நான் முன்னால போறேன். நீங்க ரெண்டு பேரும் பின்னால வாங்கன்னு சொல்லிட்டு இவன் முன்னால் போய் கொடுக்க, மேடமோ என்ன சார் இப்பத்தான் நேரம் கிடைத்ததா? எங்க மத்தவங்களை எல்லாம் காணோம் என்று கேட்டு விட்டு காரைக்குடிக்கு குரூப் ஆட்டம் போட்டாலும் படிச்சிருவாங்க சார் என்று பக்கத்தில் இருந்த குற்றாலம் சாரிடம் சொல்லியிருக்கிறார்.

இவன் வந்து மேடம் நல்ல மூடுல இருக்கு நீங்க போங்க என்றதும் கொஞ்சம் நேரம் இடைவெளி விட்டு நானும் சாமியும் ஒன்றாகச் சென்றோம். எங்களைப் பார்த்ததும் 'வாங்க சார்....' என்றவர் என்ன சொல்லியிருப்பார்ன்னு நினைக்கிறீங்க... அதை சாமி பற்றி பார்க்கும் போது சொன்னால்தான் சிறப்பு. கொடுத்து விட்டு வந்ததும் மூவருமாகச் சிரித்துக் கொண்டோம். காரணம் புராஜெக்டை சிடியில் போட்டுக் கொடுக்கணும் என்று சொல்லியிருந்தார்கள். நாங்களும் கொடுத்தோம்... அப்போதுதான் கடையில் வாங்கி வந்த மொசர்பீர் சிடியை...  அதற்காகத்தான் சிரித்தோம்.

பின்னர் வாழ்க்கைத் துரத்தலில் இருவரும் கொஞ்சக் காலம் சென்னையில் குப்பை கொட்டினோம். அப்படியே குடும்பம் குழந்தைகள் என்ற வட்டத்துக்குள் வர வாழ்க்கை நகர ஆரம்பித்தது எங்கள் நட்பின் சுவாசத்தை இன்னும் அதிகமாக்கியபடி... தற்போது அவன் நாகர்கோவிலில் குடும்பத்துடன் இருக்கிறான். எப்போது தேவகோட்டை வந்தாலும் எங்க வீட்டுக்கு வந்துதான் செல்லுவான். 

சென்ற முறை நாங்கள் நாகர்கோவில் சென்று இரண்டு நாள் தங்கினோம். அந்த இரண்டு நாளும் மழை பெய்து கொண்டிருந்தாலும் எங்களை எல்லா இடங்களுக்கும் அழைத்துச் சென்றனர். லேசான மழைச் சாரலில் எங்கள் குடும்பமும் அவர்கள் குடும்பமும் டூவீலரில் கன்னியாகுமரி சென்று வந்தது மறக்க முடியாத நிகழ்வு. ஊருக்குப் போகும் போதெல்லாம் எப்படியும் இருவரும் சந்தித்து விடுவோம்.

என்னை இதுவரை பேர் சொல்லி அழைத்ததே இல்லை. மின்னஞ்சலோ, போனோ அல்லது நேரில் வந்தாலும் அழைப்பது என்னவோ 'வாத்தியாரே' என்றுதான். நல்ல படிப்பாளி, திறமை மிக்கவன், குடும்பப் பாசமுள்ளவன் தனது முன்கோபத்தால் பார்க்கும் வேலை எல்லாம் விட்டுவிட்டு வந்து விடுகிறான். நானும் இங்கு முயற்சிக்கிறேன் இதுவரை எதுவுமே அமையவில்லை. 

எங்களோடு எங்கள் இல்லத்தில் ஒருவனாகிப் போன நண்பன் டொமினிக் சிகரம் தொட... பிரச்சினைகள் சூழ்ந்த வாழ்வில் இருந்து மீண்டு நட்சத்திரமாய் ஜொலிக்க... காலம் வெல்ல வேண்டும் என இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

-நண்பேன்டா தொடரும்.
-'பரிவை' சே.குமார்.

சனி, 20 செப்டம்பர், 2014

கிராமத்து நினைவுகள் : எங்க வீட்டு நாய்


கிராமங்களில் எல்லாருடைய வீட்டிலும் ஆடு, மாடு, கோழி இவற்றுடன் நாயும் இருக்கும். நகரங்களில் வளர்க்கப்படும் நாய்கள் படுக்கை அறை வரை சென்று பக்கத்தில் படுப்பது போல் இல்லாமல் வீட்டுக்கு வெளியேதான் இவைகளின் வாழ்க்கை. இவைகளுக்கு என்று ஒரு தட்டு இருக்கும். அதில்தான் மூன்று வேலை சாப்பாடு இடப்படும். ஊருக்குள்  முகம் தெரியாத ஒருவர் நுழைந்து விட்டால் போதும் அதுவரை அடித்துக் கொண்டிருந்த நாய்கள் எல்லாம் ஒன்று கூடி அவரை உண்டு இல்லை என்று ஆக்கிவிடும்.

எங்கள் வீட்டிலும் ராணி, டைகர் என பல நாய்கள் இருந்தன. எங்காவது நாய் குட்டி போட்டால் போதும் அதை தாய் நாய்க்குத் தெரியாமல் எடுத்து வந்து வளர்க்க ஆரம்பிப்போம். நாய்க் குட்டியை எடுத்ததும் அதன் கால் நகங்களைத்தான் எண்ணுவோம், பதினெட்டு, இருபது நகங்கள் உள்ள நாய்கள்தான் அதிகம் கிடைக்கும். முகத்தில் வாயைச் சுற்றி கருப்பு இருந்தாலோ, கண்ணைச் சுற்றி கருப்பு இருந்தாலோ அது வேண்டாம் என்று ஒதுக்கி விடுவோம். 

எங்கள் வீட்டில் வளர்ந்த நாய்கள் எல்லாம் குரைக்கிற நாய் கடிக்காது என்ற பழமொழிப்படிதான் இருந்தன. யாரையும் வீட்டுக்குள் விடாது... பாம்பே வந்தாலும் குரைத்து எல்லோரையும் எழுப்பிவிட்டுவிடும். வீட்டு வாசலில் கட்டிக்கிடக்கும் மாடுகளுக்கும் கூண்டுக்குள் அடைத்துக்கிடக்கும் கோழிகளுக்கும் ஏன் எங்கப்பாவின் அட்லஸ் சைக்கிளுக்கும் இவைதான் காவல். எத்தனை விதமான நாய்கள்... எங்களோடு எப்படி எப்படி வளர்ந்தன.

நான் என்ன சொன்னேன்... ம்... குரைக்கிற நாய் கடிக்காது என்றுதானே... எவன் சொன்னான் நான் கடிப்பேன் என எங்கள் வீட்டுக்கு எங்க பெரிய அண்ணன் மூலமாக வந்ததுதான் ராஜா... பேருக்கு ஏத்த மாதிரி செவலை நிறத்துல... நல்ல உயரத்துல... கிண்ணுன்னு இருக்க ஒடம்போட எங்க வீட்ல வளர்ந்தவந்தான் ராஜா.

ஆரம்பத்துல குரைக்க மட்டும்தான் செய்தது.... அப்போ எல்லோருமே சின்னப் பசங்கதானே... அது வாசல்ல நிக்கும் போது கோவிலில் விளையாட வரும் மற்ற பசங்கள் கல்லை விட்டு எறிந்து அதை சூக்காட்டி... சூக்காட்டியே கோபம் தலைக்கேறி விரட்டிக் கடிக்க ஆரம்பித்தது. ஆரம்பத்தில் எப்போதாவது கடிக்க ஆரம்பித்த ராஜா அப்புறம் வர்ற ஆளை எல்லாம் கடிக்க ஆரம்பித்தது.

நாய் கடித்தால் அந்த வீட்டில் நீச்சத்தண்ணி வாங்கிக் குடிப்பது கிராமத்து வழக்கம். விஷம் விலகிவிடும் என்று சொல்வார்கள். அப்படி தினமும் யாராவது ஒருவருக்கு நீச்சத்தண்ணி கொடுக்க வேண்டியதாகி விட்டது. எல்லோரும் கடி நாயை வைத்திருக்கிறீர்கள் என்று சத்தம் போட ஆரம்பிக்க, அம்மாவோ அதை அடித்து விடலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டார்கள். ஆனால் அண்ணனுக்கு அதில் கொஞ்சமும் இஷ்டமில்லை. இஷ்டப்பட்டு வளர்த்த நாயை கண் முன்னே கொல்வதா என அம்மாவின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். 

எப்படியும் அதை வளர்க்க வேண்டும் என்று நினைத்தவர் மாடுகளுக்கு ஓடாமல் இருக்க கழுத்தில் ஒரு கட்டையைக் கட்டி இரண்டு கால்களுக்கும் இடையில் விட்டுவிடுவார்கள். அதை தொன்றிக் கட்டை என்று சொல்வார்கள். அவை ஓட ஆரம்பித்தால் அந்தக் கட்டை காலில் இடிக்கும் என்பதால் எங்கும் ஓடாது. அதுபோல் எங்கோ நாய்க்குப் போட்டிருந்தார்களாம். அதேபோல் ஒரு சின்னக் கட்டையை கட்டி விட்டார். இப்போது ஓடிப் போய் கடிக்க முடியாமல் குரைக்க மட்டும் ஆரம்பித்தது. எங்களுக்கு கொஞ்சம் சந்தோஷம். இனி ராஜா அமைதியா இருப்பான்னு நினைச்சிக்கிட்டோம்.  ஊருக்குள்ளும் தொன்றிக்கட்டை போட்ட நாய் திரியிதுன்னு சிரிக்க ஆரம்பிச்சாங்க.

ஆனா பாருங்க... கொஞ்ச நாள்தான் அப்புறம் இவனுக என்ன நமக்கு கட்டை கட்டி விடுறதுன்னு அதை வாயில கவ்விக்கிட்டு வீட்டுப் பக்கம் வர்ற ஆளுகளைத் துரத்த ஆரம்பிச்சிருச்சு. வீட்டுப்பக்கம் யாரு வந்தாலும் இதே நிலைதான். பின்னர் ஊரில் எல்லாரும் மீண்டும் கத்த ஆரம்பித்து விட்டார்கள். இனிமேல் இவன் வளர்க்க சரிப்பட்டு வரமாட்டன் என்பதால் அம்மா ஒரு ஞாயிற்றுக் கிழமை எங்க பெரியப்பா பையன் செல்வத்திடம் பிடித்துக் கொடுத்து விட்டார்கள். அத்தோடு எங்க வீட்டு ராஜாவின் கதை முடிந்தது. அதன் பின்னான நாட்களில் எங்க வீட்டில் நாய் வளர்க்கும் எண்ணமே தோன்றவில்லை.

இப்போ விஷாலுக்கு கோழி, நாய் எல்லாம் வீட்டில் வளர்க்க ஆசை. சில நாய்களை எடுத்து வந்து வளர்த்தார்கள். ஆனால் என்னவோ தெரியவில்லை எந்த நாயும் நீண்ட நாள் இருக்கவில்லை... சில இறந்து விட்டன... சில ஓடி விட்டன... இனி நாய் வளர்க்க வேண்டாம் என முடிவுக்கு வந்து விட்டார்கள்.

-கிராமத்து நினைவுகள் தொடரும்
-'பரிவை' சே.குமார்.

வெள்ளி, 19 செப்டம்பர், 2014

கலையாத கனவுகள் (81வது பகுதி இப்படி முடிந்திருக்கலாமோ?)

ராம்கி - புவனாவின் திருமணத்திற்குப் பின்னர் இப்போதைக்கு திருப்பூருக்கு வரவேண்டாம். உனக்கு இப்போதைக்கு வாழ்க்கையை நகர்த்த ஒரு வேலையை தேடிக்க, படிச்ச படிப்பும் அதற்கான முயற்சியும் தொடரட்டும்.... விரைவில் நல்ல வாழ்க்கை அமையும்... அதுவரை நான் உனக்குப் பணம் போட்டு விடுறேன்... நீ திருப்பூருக்கு வந்த யாராவது அங்க தேடி வருவாங்க... அப்புறம் தேவையில்லாம நீங்க பிரச்சினையைச் சந்திக்க வேண்டியிருக்கும்... இங்கயே இரு... சேகர் மூலமா ஏதாவது பண்ணிக்கலாம்... என சேவியர் சொல்ல அனைவரும் அதை ஆமோதித்தனர். சேகரும் அவனுக்கு ஒரு வேலை கிடைக்கிற வரை இங்க தாராளமா இருக்கட்டும்... எங்களுக்கு ஒரு பிரச்சினையும் இல்லை என்று சொல்லிவிட அவர்களை விட்டுவிட்டு நண்பர்கள் ஊர் நோக்கிப் பயணித்தார்கள்.

"இங்க பாருடா மச்சான்... எதாவது ஒரு வேலை ட்ரைப் பண்ணிக்கலாம்.. ஆபீஸ் பிரண்ட்ஸ்க்கிட்ட சொல்லியிருக்கேன். சீக்கிரம் பிடிச்சிடலாம்... இப்போதைக்கு சின்னதா ஒரு வாடகை வீடு... மூணு வேலை சாப்பாட்டுக்கான வருமானம் வந்தா போதும். சேவிங்கஸ் எல்லாம் தேவையில்லை." ராம்கியிடம் சொன்னான் சேகர்.

"இல்லடா... நகரத்து வாழ்க்கை... நீ வாங்குற சம்பளத்துல உங்க லைப்பை ஓட்டுறதே பெரிய விஷயம்... எதோ ரெண்டு மூணு நாள்ன்னா பரவாயில்லை... வேலை கிடைக்கும் வரையின்னா கஷ்டம்டா... உங்களைக் கஷ்டப்படுத்த விரும்பலை... எங்கிட்ட காசு இருக்கு... இப்போதைக்கு செலவுக்கு கஷ்டமில்லை... அப்படி வேணுமின்னா சேவியருக்கு போன் போட்டா அனுப்பப் போறான்... இங்க பக்கத்துல எதாவது சின்ன போர்ஷனா பாரு... நாங்க ரெண்டு பேரும்தானே.. அட்ஜஸ் பண்ணி வாழக் கத்துக்கிறோம்..."

"இல்லடா... இப்ப எதுக்கு... கொஞ்ச நாள் இங்க இருக்கலாமே?"

"பரவாயில்லடா... பக்கத்துலதான பாக்கச் சொல்றேன்..."

"இல்ல ராமு... நீங்க இங்க இருங்க... உனக்கு ஒரு நல்ல வேலை சீக்கிரம் கிடைக்கும்..." - இது காவேரி.

"இல்ல காவேரி... அவரு சொல்றதுதான் சரி... ஒண்ணா இருக்கதவிட கொஞ்சம் தள்ளி இருந்தா நமக்குள்ள எப்பவும் சந்தோஷம் இருக்கும். எங்கிட்ட எங்கண்ணன் கொடுத்த பணம் இருக்கு... அம்மா கொடுத்தனுப்பிய நகை இருக்கு... அப்புறம் என்ன... உங்கண்ணன் சம்பாரிச்சு வாங்கித் தரப்போறார்... சேகரண்ணா... ஒரு வீடு இந்த வீதியிலேயே கூட பாருங்க... ஒத்த ரூமா இருந்தாலும் போதும்..."

"அதுக்கில்ல அண்ணி... உங்க பணம் நகை எல்லாம் இருக்கட்டும்... இங்கயே இருங்க..."

"இல்ல காவேரி... அவங்க சொல்றது சரிதான்... எதுத்த வீட்டுல பின்பக்கமா ஒரு வீடு காலியிருக்குன்னு சொன்னாங்கதானே.... நீ அதை விசாரி... அதுல இப்போதைக்கு இருக்கட்டும்... பின்னால மச்சானுக்கு வேலை கிடைச்சதும் நல்ல வீடாப் பாத்து மாறிக்கலாம்..." என்றான் சேகர்.

"என்னண்ணே முடிவுல இருக்கீங்க... அத்தாச்சிய திருப்பூருக்கு அனுப்பியாச்சி... நாம அங்கயும் போகாம... ஒரு முடிவுக்கும் வராம இப்படியே இருந்தா என்ன அர்த்தம்... அவ வேற என்ன இங்க வரலையான்னு கடைக்கு போன் போட்டுக்கிட்டே இருந்திருக்கா..." புவனாவின் அப்பாவிடம் சித்தப்பா கேட்டார்.

"இதுல இனி முடிவெடுத்து என்ன பண்ணப் போறோம்... கழுத போனது பொயிட்டா பிடிச்சாந்து அவனை வெட்டி... அவளை வெட்டி... வேண்டாம் தொலஞ்சது தொலஞ்சதாவே இருக்கட்டும்...."

"என்னண்ணே நீங்களும் வைரவன மாதிரிப் பேசுறீங்க... அதுக்காக அந்த நாயை அப்படியே விட்டுறதா... நம்ம கௌரவம் என்னாகுறது?"

"கௌரவம்... ஆமா அது இப்ப எங்க இருக்கு? அதுதான் அவ போனப்பவே போச்சுல்ல... அம்புட்டுப்பயலும் நாக்கு மேல பல்லுப் போட்டுப் பேசலை... படிக்க வச்சே.. படிக்க வச்சேன்னு கத்துனானுங்களே... அப்பவே போச்சுப்பா எல்லாம்... இனி என்ன கௌரவம் இருக்கும்... வைரவன் தெளிவாப் பேசுறான்... அது மாதிரி நாமளும் இருந்துட்டுப் போவோம்..."

"அண்ணே...." இழுத்தார்.

"இங்க பாரு... அவளுக்கு அவனைப் பிடிச்சிருந்துச்சி பொயிட்டா... நாயி கஷ்டப்பட்டாலும் நஷ்டப்பட்டாலும் அவனுகிட்டதானே கெடக்கப் போறா... கண்ணைக் கசக்கிக்கிட்டு நம்ம முன்னால் வந்து நிக்கவா போறா... விட்டுட்டு வைரவனுக்கு நம்ம மச்சினன் மகளை கட்டி வைக்கிற வேலையைப் பாப்போம்..."

"முன்னால அவன ஆகாதுன்னு அடிச்சீங்க... இப்பப் போயி நின்னா ஒத்துப்பானா... எதாவது எடக்கு மடக்கா பேசினா..."

"ஏம்ப்பா வைரவன் எவளையும் கூட்டிக்கிட்டு ஓடிப் போகலையே... அவனுக்குள்ளயும் அந்தப்புள்ள மேல ஆசை இருக்கு... இனி கௌரவம் பாத்து என்னாகப் போகுது... அதுதான் போச்சே... போயி பேசுவோம்... அவனுக்கு எம்மேல மரியாத இருக்கு... அதுபோக அந்தத் தங்கச்சிக்கு வைரவனுக்கு கட்டத்தான் ஆசை... அதை ஜாடைமாடையா உங்கத்தாச்சிக்கிட்ட கூட சொல்லியிருக்கு... பேசிப்பாப்போமே..."

"சரிண்ணே... ஆனா இந்த விஷயத்தை அப்படியே விடச் சொல்றதுதான் நல்லாயில்ல..."

"எது நல்லது... எது கெட்டதுன்னு பாத்துப்பாத்து இப்ப தெருவில நிக்கிறோம்... விடு அவ எங்கயாவது வாழ்ந்துட்டுப் போகட்டும்...  கோவத்துல அவளைக் கொல்லணுமின்னு சொன்னேன்... ஆனா என்னோட ரத்தத்தை மண்ணுல சாய்க்க மனசு இடங்கொடுக்கலைப்பா... விட்டுடுவோம்..."

"சரிண்ணே... வாங்க திருப்பத்தூர் போயிட்டு காலையில வருவோம்..."

சில நாட்களுக்குப் பிறகு இளங்கோவைக் கடைவீதியில் வைத்துப் பார்த்த வைரவன் அவனிடம் பேசினால் வீண் வம்புதான் வரும் என பார்க்காதது போல் வண்டியை எடுக்க, "டேய் மாப்ள" என இளங்கோவே கூப்பிட வண்டியை நிறுத்தினான்.

"சாரி இளங்கோ... இப்படியெல்லாம் நடக்கும்ன்னு நெனக்கலை... உன்னை வேற கோபத்துல திட்டிட்டேன்..."

"விடுடா... என்னோட வீட்ல அப்படி ஒரு சூழல் இருந்திருந்தா நானும் அப்படித்தான் பேசியிருப்பேன்... உங்க கஷ்டமெல்லாம் புரியிது... இப்படிப் பண்ணிட்டாளேடா..."

"என்னடா பண்றது... எல்லாம் முடிஞ்சிருச்சு... எங்க குடும்ப மானத்தையே கெடுத்துட்டாடா... அந்தப்பயல எங்கயிருந்தாலும் தேடிப் பிடிச்சி...." ஆக்ரோஷமாகப் பேசிய வைரவனிடம் "வேண்டாம் மாப்ள... அவனைப் பிடிச்சித்தானே போனா... சந்தோஷமா இருந்துட்டுப் போகட்டும்... விட்டுடுங்க... எனக்கும் அப்போ கோவம் இருந்துச்சி... யோசிச்சா...அவங்க வாழ்க்கையை அவங்க தீர்மானிச்சதுல என்ன தப்பு... நீங்க பாத்திருந்தாக்கூடா அவன மாதிரி மாப்பிள்ளை கிடைக்கமாட்டான்... நான் எப்படிப்பட்டவன்னு தெரிஞ்சிதானே எனக்கு கட்டுறேன்னு சொன்னே... விடு வாழ்ந்துட்டுப் போகட்டும்..."

"என்னடா நீயா இப்படி..."

"மாப்ள எப்பவுமே வாழ்க்கை ஒவ்வொருத்தருக்கும் அதைப் புரிஞ்சு வாழ ஒரு சந்தர்ப்பம் கொடுக்கும்... இப்ப நான் அதை புரிஞ்சி வாழக் கத்துக்கிட்டேன்... அப்புறம் எனக்கும் சொந்தத்துல பொண்ணு பாத்துட்டாங்க... சீக்கிரம் பத்திரிக்கையோட வாறேன்..."

"அப்படியா சந்தோஷம்டா... புவனா போனதால அப்பா வருத்தப்பட்டுக்கிட்டு இருந்தாரு... அப்புறம் எங்க மாமா பொண்ணையே எனக்கும் பேசிட்டாரு... தேதி பாத்துக்கிட்டு இருக்காங்க... ரெண்டு பேரு கல்யாணமும் ஒரே நாள்ல வந்துடாமே..." சொல்லிச் சிரித்த வைரவன் கொஞ்ச நேரம் பேசிவிட்டுக் கிளம்பினான்.

காலம் தன் போக்கில் போய்க் கொண்டிருக்க, சில வருடங்கள் கழிந்தன. தனது மகன் நல்ல வேலையில் சேர்ந்து சந்தோஷமாய் இருக்கணும் என்ற நாகம்மாவின் கனவுப்படி ராம்கி எழுதிய் பி.எஸ்.ஆர்.பி. கை கொடுக்க வங்கியில் உத்தியோகம் கிடைத்தது. புவனாவுக்கும் படித்த படிப்புக்கு நல்ல வேலை கிடைத்தது. நல்ல வீடாகப் பார்த்து குடியேறி சந்தோஷமாக வாழ்ந்தார்கள். நாகம்மாவும் சில மாதங்கள் சின்ன மகனுடன் வந்து இருந்து செல்லப் பேரனைக் கொஞ்சி மகிழ்ந்து செல்வாள். ராம்கி இங்கயே இரும்மா என்று சொன்னாலும் எனக்கு உன்னைய மாதிரித்தான்டா மத்தவங்களும்... உனக்கென்ன உன்னைய பாத்துப் பாத்துக் கவனிக்க ராஜாத்தியாட்டம் எம் மருமக இருக்கா... நான் கொஞ்ச நாள் பெரியவமுட்டு புள்ளைகளையும், அக்காவுட்டு புள்ளைகளையும் பாக்க வேண்டாமா... என்று மறுத்துக் கிளம்பிவிடுவாள்.

புவனாவின் அம்மாவும் வைரவனும் எப்படியும் வாரத்தில் இருமுறை போனில் கூப்பிட்டுப் பேசி விடுவார்கள். புவனாவை நேரில் பார்க்க முடியவில்லையே என்றுதான் அம்மா எப்போதும் வருந்துவாள். அந்த வருத்தத்தைப் போக்கும் விதமாக முதல் முறை ராம்கி குடும்பத்துடன் ஊருக்கு வந்த போது அவளை தேவகோட்டையில் மல்லிகா வீட்டில் வைத்துப் பார்த்துப் பேசி உச்சி முகர்ந்தாள். அதன் பின்னான வருகைகளில் எல்லாம் அம்மா மகள் சந்திப்பு நிகழத்தான் செய்தது.

ராம்கியின் நண்பர்கள் அனைவரும் தங்கள் குடும்பம் குழந்தைகள் என வாழ்க்கையில் செட்டிலாகிவிட அவர்களின் உறவு போனில் தொடர்ந்தாலும் வருடம் ஒரு முறையாவது சந்திப்பில் தொடர்ந்து கொண்டுதான் இருந்தது. தனது மகளுக்கு திருமணம் முடித்து கல்லூரி ஆசிரியர் பணி நிறைவுக்குப் பின்னர் தமிழய்யா, சொந்தக் கிராமத்தில் போய் செட்டிலாகிவிட்டார். எப்போது ஊருக்குப் போனாலும் ஐயா வீட்டுக்குப் போய் வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர் ராம்கி - புவனா தம்பதியினர்.

சாப்பிட்டு விட்டு வாசலில் கயிற்றுக் கட்டிலில் அமர்ந்து வெற்றிலையை எடுத்துக் காம்பு கிள்ளி சுண்ணாம்பைத் தடவியபடி, "எல்லா விஷேசத்துலயும் அவ இல்லாதது உனக்கு வருத்தமாயில்லையா?" என்று கட்டிலுக்கு கீழே அமர்ந்திருந்த மனைவியிடம் மெதுவாக பேச்சை ஆரம்பித்தார் புவனாவின் அப்பா.

"எவங்க... நம்ம விசேசத்துக்கெல்லாம் வராதவ... நம்ம பாப்பாயி மவளா... அவ கெடக்கா...?" தெரியாதது போல கேட்டாள்.

"ஆத்தி.... ஒலக மகா நடிப்புடி... என்னமா ஆக்ட்டு கொடுக்கிறே..." என்று சிரித்தவர், "அதான் நம்ம... ம்... உம்மவளைத்தான் சொல்றேன்..."

"அதென்ன எம்மவ... உங்க மவ இல்லையா?"

"சரி... நம்ம மவ... அவ இல்லாம உன்னோட சந்தோஷம் போயிருச்சு இல்லையா?"

"அதான் வேண்டானுட்டுப் பொயிட்டாளே... அப்புறம் என்ன நம்ம மவ... அவளுக்காக சந்தோஷத்தைக் கெடுத்துட்டா... வைரவனோட வாழ்க்கையும் இருக்குல்ல..."

"இல்ல... ஏதோ இன்னைக்கு கேக்கணுமின்னு தோணுச்சு...

"என்ன தோணுச்சு... அவளைப் பத்தி இப்ப என்ன பேச்சு... தொலஞ்ச கழுத தொலஞ்சதாவே இருக்கட்டும்" கோபமாகப் பேசுவது போல் குரலை உயர்த்தினாள்.

" அடி ஆத்தி இம்புட்டுக் கோபமா எதுக்கு அங்க இங்க மறைஞ்சு மறைஞ்சு உம்மவள வரச்சொல்லிப் போயி பாக்குறே...?"

"என்ன... எப்ப.... நா... எங்க... அவள... யாரு... சொன்னா..." குழறினாள்.

"எல்லாம் எனக்குத் தெரியும்... விடு... மக பாசம்.... நானும் ஆரம்பத்துல கோபத்துலதான் அவளை வெட்டணுமின்னு சொன்னேன்... ஆனா இப்ப அவ நல்லா இருக்கா... அந்தப் பையன் அவள நல்லா வச்சிருக்கான்னு நாலு பேரு சொல்லும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு... ஏன் உந்தங்கச்சி புருஷன் கூட முன்னால அப்படி இப்படின்னு குதிச்சான்.. இப்போ யாரோ சொன்னாங்கன்னு நம்ம புள்ள ரொம்ப நல்லா இருக்காம்ண்ணேன்னு சொல்றான்... எல்லாரு சொல்லுறதையும் கேக்கும் போது எனக்கும் அவளப் பாக்கணும்... அவகிட்ட பேசணுமின்னு இருக்கு... ஆனா ஏதோ ஒண்ணு தடுக்குது... முடியல... நீ அவளைப் பாக்குறே... பேசுறேன்னு கேட்டப்போ எனக்கு கோபம் வந்துச்சு... நமக்கிட்ட மறச்சுட்டாளேன்னு ஆத்திரம் வந்துச்சு... அப்புறம் நிதானமா யோசிச்சா பெத்தவ மனசுல்ல எப்படி விட்டுக்கொடுக்கும்ன்னு நினைப்பு வர கோபமெல்லாம் போயிருச்சு... " என்று பேசிக் கொண்டே வந்தவர் "ஆமா பேரப்பய எப்படியிருக்கான்... நம்ம ஜாடையா இல்ல அந்தப்பையன் ஆளுக ஜாடையா.." ஆர்வமாய்க் கேட்டார்.

"அப்படியே நீங்கதான் போங்க... மக மேல இம்புட்டுப் பாசம் இருக்குல்ல... அப்புறம் எதுக்கு இன்னம் வீம்பு, அவகிட்ட பேசுறியளா... போனடிச்சித் தாறேன்... "

"ம்க்கும்.. வேணா..." மழுப்பலாய்ச் சொன்னார்.

"அட நம்ம மகதாங்க அவ... அந்தப் பையன் ரொம்ப நல்ல பையன்.. நல்ல உத்தியோகம்... நாம பாத்தாக்கூட இப்படி பாத்திருக்க மாட்டோம்... இப்ப நல்ல சந்தர்ப்பமுங்க... நம்ம வைரவன் காரைக்குடியில கட்டியிருக்கிற புது வீடு குடிபோறதுக்கு வரச்சொல்லி கூப்பிடுங்க... அப்பா எப்ப கூப்பிடுவாருன்னுதான் அவளும் இருக்கா... கண்டிப்பா வருவா..."

"ஆமா அவளைக் கூப்பிட்டு நடு வீட்ல நிக்க வச்சா நம்ம ஜாதிசனம் என்ன சொல்லும்... வேண்டாம் விடு..."

"என்னங்க சாதிசனம்... சாதிசனமுன்னு... நம்ம புள்ள நம்ம வீட்டுக்கு வர்றதுக்கு எவளைக் கேக்கணும்... நீங்க அவளக் கூப்பிடுங்க... சாதிசனம் எதாவது பேச வந்த நா பேசிக்கிறேன்..." என்றவள் வீட்டுக்குள் கணவனை அழைத்துச் சென்று போனை எடுத்து மகளின் நம்பரைச் சொடுக்கி கணவனிடம் கொடுத்தாள். 'நீ பேசு...' என சைகை செய்தார். 'இல்ல நீங்களே பேசுங்க...' என்றபடி அவரிடம் கொடுத்துவிட்டு அருகே அமர்ந்தாள்..

நீண்ட நேரம் அடித்த போன் எதிர்முனையில் எடுக்கப்பட உதடுகளை ஈரப்படுத்திக் கொண்டார். "அலோ... என்னம்மா... வீட்ல இருந்து பேசுறீங்க... இந்நேரத்துக்கு அப்பா வந்திருப்பாங்களே...? அலைச்சல்ல வந்து படுத்துட்டாரா?" என்றது எதிர்முனை, சில வருடங்கள் கழித்து மகளின் துள்ளலான குரலைக் கேட்டதும் அவருக்குப் பேச்சு வரவில்லை.

பதில் வராமல் அமைதி தொடர "அம்மா... அலோ... அம்மா... என்னாச்சும்மா... அலோ... அலோ... எதாவது பிரச்சினையா?" புவனாவுக்குள் ஒரு பதட்டம் வந்திருப்பது குரலில் தெரிந்தது.

"நான் அப்பா பேசுறேன்..." மெதுவாகச் சொன்னார்.

எதிர்முனையில் சிறிது மௌனத்துக்கு பின்னர் "அ... அப்பா.... அப்ப்ப்ப்பாவா... எப்படிப்பா... உண்மையா.... எங்கப்பாதானா.... என்ன மன்னிச்சிட்டிங்களா... அப்பா... சாரிப்பா... நா பண்ணுனது தப்புத்தானேப்பா... எம்மேல கோபம் போச்சாப்பா..." அதற்கு மேல் பேச முடியாமல் வெடித்து அழுதாள்.

புவனாவின் அருகே அமர்ந்திருந்த ராம்கி அவளது தோளை ஆதரவாய்ப் பற்றி தேற்ற, மகளின் குரலும் அவளின் அழுகையும் சில வருட வலிகளை உடைத்தெரிய, அவருக்குள்ளும் அழுகை உடைத்துப் புறப்பட்டது. எதற்கும் கலங்காத கணவனின் கண்ணீரைப் பார்த்ததும் 'என்ன இது சின்னப் பிள்ளையாட்டம்' என்றபடி அவரை அணைத்து ஆறுதல் சொல்ல... இருபக்க அழுகைகளையும் காதில் வாங்கியபடி ரிசீவர் காத்திருக்க... இனி தொடரப் போகும் சந்தோஷங்களை சுமந்த பௌர்ணமி இரவு விடியலை நோக்கி மெல்ல நகர்ந்தது.

-முற்றும்.
-'பரிவை' சே.குமார்.

புதன், 17 செப்டம்பர், 2014

சிங்கப்பூர் கிளிஷே இணைய இதழில் சிறுகதைசில வாரங்களுக்கு முன்னர் சிங்கப்பூரில் இருந்து தங்கை அனிதா சிறுகதை ஒன்று வேண்டும் அதுவும் உடனே வேண்டும் என்றார். எதற்காக கேட்கிறார் என்றெல்லாம் கேட்கவில்லை... அப்போது சில மன வருத்தமான நிகழ்வுகள் நடந்தேறி இருந்தன... அந்தச் சூழலில் எழுதும் எண்ணமும் இல்லை... சரி தங்கை கேட்டிருக்கிறார் என நான் முன்னர் எழுதிய கதையில் இரண்டை அனுப்பி வைத்திருந்தேன். எது பிடிக்கிறதோ அதை எடுத்துக் கொள்ளுங்கள் என்ற வாசகத்துடன்... அதன் பின் அது பற்றிய செய்திகள் இல்லை... இடையில் கதை நல்லா இருக்கா... இல்லையா என்று சொல்லுங்கள் என்றேன். இன்னும் பார்க்கவில்லை பார்த்து ரெண்டொரு நாளில் சொல்கிறேன் என்றார். பின்னர் அது குறித்தான பேச்சு இல்லை. இன்று அலுவலகம் சென்று வந்து  முகநூலைத் திறந்தால் அதில் ஒரு இணைப்பு முகவரி அனுப்பியிருந்தார். அதன் வழியாகச் சென்றால் 'சிங்கப்பூர் கிளிஷே' என்ற இணைய இதழில் எனது சிறுகதை வெளியாகி இருக்கிறது.  ரொம்பச் சந்தோஷமாக இருந்தது.


மனச்சுமை

“நிம்மதியில்லாம இப்படி ஒரு வாழ்க்கை தேவையா?” கத்தினான் பாலா.

“தேவையா… தேவையில்லையான்னு இப்ப.. இங்க.. நீயே ஒரு முடிவு எடு” பதிலுக்கு கத்தினாள் நந்தினி.

“செய்யிறதெல்லாம் செய்துட்டு என்னைய முடிவெடுக்கச் சொல்லு… நல்லாயிருக்குடி…”

“என்ன செஞ்சாங்க… எப்பவும் நிம்மதியில்ல… விடிஞ்சா எந்திரிச்சா சண்டை… சை… வாழுறதுக்கு சாகலாம்ன்னு இருக்கு…”  லேசாக விசும்பினாள்.

“உன்னைய சாகடிச்ச பாவம் எனக்கு வேண்டாம்… எனக்குந்தான் என்னைக்கு உன்னைய கட்டுனனோ அன்னைக்கு சந்தோஷமெல்லாம் செத்துப்போச்சு… இப்பல்லாம் விடிஞ்சாவே பயமா இருக்கு…”

“பெத்தவங்க… கூடப் பிறந்தவங்க எல்லாரையும் உதறிட்டுத்தான் உன்னோட பின்னால வந்தேன். ஆசை அறுபது நாள்… மோகம் முப்பது நாள்ன்னு எண்ணிக்கிட்டு இருந்தே போல… அப்ப ஆரம்பிச்சே… முடியவே இல்லை… உனக்கு மட்டுந்தான் விடிஞ்சாப் பயமா… எனக்குந்தான் விடியவே கூடாதுன்னு நெனைப்பு வருது…”

“நானுந்தாண்டி எல்லாத்தையும் விட்டுட்டு உன் பின்னாடி வந்தேன். காதலிக்குப் போது சாந்த சொரூபினியா இருந்தே… இப்ப கொல்லங்குடி காளி உங்கிட்ட தோற்றுப் போயிடுவா போ… ஆட்டம்… எல்லாத்துக்கும் ஆட்டம்… உக்கிரமால்ல இருக்கே… ஒரு நாளாச்சும் சிரிச்சுப் பேசி… ம்க்கும்… நடக்கலையே”

“அன்னைக்கு காமாட்சியா தெரிஞ்ச நான் இன்னைக்கு உனக்கு காளியாயிட்டேன்… ஆனா நீ மட்டும் சாட்சாத் அந்த ராமனாவே இருக்கே…நீ ராமனாவே இரு… நான் இப்ப காளியாவே இருந்துட்டுப் போறேன்…எனக்குத் தேவை நீ எடுக்கப் போற முடிவு…”

“ஏன் முடிவை நீயே சொல்லுவே…”

என்னங்க இங்கயே வாசிக்காம அந்த இதழில் போய் வாசியுங்கள்... என் கதை மட்டுமின்றி சில ஜாம்பவான்களின் எழுத்தையும் வாசிக்கலாமே... 
அதற்கு இங்கு சொடுக்குங்கள்...

***********
ப்புறம் இந்த வாரத்தில் தேனக்காவின் சாட்டர்டே ஜாலி கார்னர், சகோதரர்கள் கில்லர்ஜி மற்றும் அ.பாண்டியன் அளித்த விருதுகள், தற்போது 'சிங்கப்பூர் கிளிஷே' இணைய இதழில் சிறுகதை என சந்தோஷங்களை சுமந்து மகிழும் வாரமாக அமைந்திருக்கிறது. அதற்கு எல்லாருக்கும் நன்றி.

'கலையாத கனவுகள்' தொடர்கதை முடிவில் சில நண்பர்களுக்கு திருப்தி இல்லை எனச் சொன்னார்கள். இப்படி முடித்திருக்கலாமோ என எழுதி வைத்தாயிற்று... இன்னும் பதியும் எண்ணம்தான் வரவில்லை... காரணம் தொடர்ந்து வாசித்த சகோதரர்கள் யோகராஜா, ரூபன், பகவான்ஜி, சகோதரி மேனகா, ஐயா ஜெயக்குமார் அவர்கள் என எல்லாருமே முடிவு சரியென்றே சொல்லியிருந்தார்கள். இனியும் மாற்றத்தோடு பதியணுமா என்று எண்ணம்... பதியலாமா வேண்டாம என்பதை நாளை முடிவு செய்யலாம்.

'சிங்கப்பூர் கிளிஷே' இணைய இதழின் பொறுப்பாசிரியர் தங்கை அனிதாதான் என்பதை அந்த இதழை வாசிக்கும் போதுதான் அறிந்தேன்.... தங்கைக்கு வாழ்த்துக்கள்... எனது சிறுகதையையும் பதிவிட்டமைக்கு நன்றி.
-'பரிவை' சே.குமார்.

திங்கள், 15 செப்டம்பர், 2014

சந்தோஷ விரு(ந்)து

நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் எனக்கு விருது. இம்முறை எங்கள் தேவகோட்டைக்காரரான சகோதரர் திரு.கில்லர்ஜி அவர்களிடமிருந்தும் மணப்பாறை ஆசிரியர் அ.பாண்டியன் அவர்களிடமிருந்தும் 'VERSATILE BLOGGER' (பன்முகப் பதிவர்) விருது கிடைத்திருக்கிறது. மிக்க மகிழ்ச்சி... சந்தோஷம்... நன்றி.

இந்த வாரத்தில் எனக்கு இரட்டிப்பு சந்தோஷம் என்றுதான் முதலில் பதிவை ஆரம்பித்து முடித்திருந்தேன். இந்தப் பதிவை பகிரப் போகும் போது எனக்கு ஒரு பின்னூட்டம் வந்திருக்க... ஆர்வக் கோளாறில் அதை முதலில் திறந்து பார்த்தால்... அட நம்ம சகோதரர் ஆசிரியர் பாண்டியன் அவர்கள் ஒரு விருதை அளித்திருப்பதைத் தெரிவித்திருந்தார். இரட்டிப்பு சந்தோஷத்தோட மூன்றாவதாய் ஒரு சந்தோஷம்... சகோதரருக்கு நன்றி.

முதலாவது சந்தோஷம் சனிக்கிழமை அன்று தேனம்மை இலட்சுமணன் அவர்கள் தனது சும்மா வலைப்பூவில் சாட்டர்டே ஜாலிகார்னர் என்ற பகிர்வுல் என்னைப் பற்றி பகிர்ந்திருந்தார்.  இரண்டாவது மற்றும் மூன்றாவது சந்தோஷம்  என்னவென்றால் கில்லர்ஜி மற்றும் பாண்டியன் எனக்களித்த விருது.  

இங்கு ஒன்று சொல்லிக்க நினைக்கிறேன். தேனக்கா போன்ற செட்டிநாடு கண்டெடுத்த மிகச் சிறந்த எழுத்தாளரின் மனதில் தம்பியாய் இடம் பிடித்து அவரது வலைப்பூவில் எனக்கான... என்னைப் பற்றிய கட்டுரை வரவும்... எங்க தேவகோட்டைக்காரரான கில்லர்ஜி மற்றும் ஆசிரியர். பாண்டியன் மனதில் எனக்குக் கொடுக்கலாம் என்று தோன்றவும் காரணமாக அமைந்த என் தாய்த் தமிழுக்கு நன்றி. 

இணையத்தில் சுற்றி வரும் இந்த விருது நம்மைப் பற்றி மற்றவர்களிடம் கொண்டு செல்லும் ஊடகமாக அமையும் விதமாக விருது பெற்றவர்கள் செய்ய வேண்டியது என்ன செய்ய வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள்... அதன்படி நாமும் செய்ய வேண்டுமல்லவா... சரி என்ன செய்யணும்... ஒன்றன் பின் ஒன்றாக பார்ப்போம்...

முதல்ல என்னைப் பற்றி...

என்னைப் பற்றி நிறையத் தடவை சொல்லிட்டேன்... இருந்தாலும் சபை நாகரீகம் கருதி மறுபடியும் சொல்லிவிடுகிறேன்.. தேவகோட்டைக்கு அருகில் இருக்கும் சிறிய கிராமமான பரியன்வயலில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவன். எழுவரின் நான் ஆறாவது... அதனால் குமாரசாமி என நாமகரணம் சூட்டப்பட்டு பள்ளிப் பதிவேட்டில் குமார் ஆனேன். படித்தது... எம்.சி.ஏ.,  தற்போது ஊரில் இருக்கும் அன்பான மனைவி (நித்யா) அழகான, அறிவான செல்லங்கள் (ஸ்ருதி, விஷால்) பற்றிய முழுநேர நினைவுகளுடன் அபுதாபியில் கணிப்பொறியோடு காலம் கழிக்கிறேன்.   அப்பா, அம்மா, அண்ணன், அக்கா, தம்பி என இறைவன் கொடுத்த சொந்தங்களுடன் சச்சரவுகள் இல்லாமல் கடைசி வரை அன்போடு வாழ வேண்டும் என்று நினைப்பவன் சராசரி விவசாய குடும்பத்தான்.  

மற்றபடி கதை, கவிதை. கட்டுரைகள் எழுதுண்டு... நல்லா எழுதுவேனான்னு எல்லாம் கேட்கக் கூடாது... ஏதோ எழுதுவேன்... எழுத்துக்கு கிடைத்த அங்கீகாரமாக சீனா ஐயா வலைச்சரத்தில் எனக்கு இருமுறை ஆசிரியப் பணி கொடுத்ததும் பலரால் பலமுறை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டதும் மறக்க முடியாத நிகழ்வுகள். மனசு நாங்கள் கல்லூரியில் நடத்திய கையெழுத்துப் பிரதியின் பெயர். அதையே வலைப்பூவுக்கு வைத்தேன். ஊர்ப் பெயரைச் சொல்வதில் சந்தோஷம் கொள்பவன் என்பதால் பேருக்கு முன்னே 'பரிவை' என சுருக்கமாக வைத்து எழுத ஆரம்பித்தேன். தற்போது வலை நட்புக்களுக்கு 'பரிவை' சே.குமார் 'மனசு' குமாராயிட்டேன். 

நான் கிறுக்கிய சில கிறுக்கல்கள் அவ்வப்போது பத்திரிக்கைகளில் வந்திருக்கின்றன. இதற்கு மேல் சொல்ல இன்னும் அப்படி ஒன்று பெரிதாக சாதித்து விடவில்லை. சிலதைச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது இருந்தும் அதற்கான நேரம் இன்னும் வாய்க்கவில்லை... காத்திருக்கிறேன்... காலம் சொல்லும் பதிலுக்காக...

(அப்ப முதலாவது படியைத் தாண்டியாச்சு...)

இரண்டாவதாக தளத்தில் விருதை பதியணும்...

நட்பு கொடுத்த விருதுல்ல... பதிஞ்சிட்டாப் போச்சு... 

(ரெண்டாவது படியை சுலபமாய் கடந்துட்டோமுல்ல..)

மூன்றாவதாக முத்தாக வருவது விருதினைக் கொடுத்த தளத்தைப் பற்றி...

சகோதரர். திரு. கில்லர்ஜி, முகத்தில் விருமாண்டி மீசையுடன் வீரனாய் நிற்கும் இவருக்குள் பொதிந்து கிடக்கும் சோகங்களைப் படித்த போது மனசு வலித்தது. மிகப்பெரிய சோகத்தோடு விலை மதிப்பில்லா இரண்டு பொக்கிஷங்களைச் சுமந்து வாழும் இவர் பூவைப் பறிக்க கோடாரி எதற்கு என்று கேட்டு தனது வார்த்தைகளால் தமிழைத் தழைக்கச் செய்கிறார். 

சகோதரர். ஆசிரியர். அ.பாண்டியன் அவர்கள் சாதாரண வலிப்போக்கனாய் வாழ்க்கையை கடந்து செல்கிறேன் என்று சொல்லி துடிப்புடன் வீரிய விதைகளாய் பகிர்வுகளைப் பகிர்ந்து தமிழ் அரும்புகளை மலரச் செய்து கொண்டிருக்கிறார். 

இவர்கள் இருவரிடமும் நாங்கள் பெற்ற விருதுக்காக என் சார்பாகவும் நண்பர்கள் சார்பாகவும் மீண்டும் நன்றி.

(மூன்றாவதாய் சொன்னது உதட்டளவில் அல்ல... மனசுக்குள் இருந்து... 
அப்படா மூணாவது படியையும் தாண்டிட்டோமுல்ல......) 

இனி கடைசிப் படியான நாலாவது... 10 பேருக்கு விருதைப் பகிரணும்...

இங்கதான் சிக்கலே ஆரம்பம்... யாருக்கு கொடுத்தாங்க... யாருக்கு கொடுக்கலைன்னு கண்டுபிடிக்கிறதுதான் ரொம்பக் கஷ்டம்... ஏன்னா இந்த விருது வலைப்பூவில் சுத்தி வருது... வர்ற பதிவெல்லாம் விருது... விருதுன்னு வந்துக்கிட்டே இருக்கு... இவருக்கு கொடுக்கலாம்ன்னு மனசு நினைச்சா அவரு 'ஹையா விருது வாங்கிட்டேன்னு' பதிவை பறக்க விட்டுடுறாரு... தேடித்தேடி பிடிக்கலாம் என்றாலும் நான் நினைக்கும் சிலருக்கு கிடைத்திருக்கலாம்... சிலருக்கு கிடைக்காமலும் இருக்கலாம்.... 

அதனால... 

அதனால... 

அதனால.... 

அட எத்தனை அதனால... என்ன சின்னப்புள்ளத்தனமா இருக்கு... எங்களை வச்சி காமடி கீமடி பண்ணலையேன்னு வடிவேலு கணக்கா நீங்க பாக்குறது தெரியிது... இருங்க சொல்றேன்...

என்னைத் தொடரும் அந்த '311' பேருக்கும் இந்த விருதைச் சமர்ப்பிக்க்றேன்.... எல்லோரும் எடுத்துக்கங்க... 

விருது எடுங்க... கொண்டாடுங்க...

(நாலாவது படியில குதிச்சு ஓடி தப்பிச்சாச்சு... டேய் குமாரு ஓடிருலே...)

அட சொல்ல மறந்துட்டேனே... நன்றி மறப்பது நன்றல்லவே... எனவே  இதுவரை மனசில் வைத்து விருது கொடுத்த பிரம்மாக்களை மீண்டும் ஒரு முறை நினைவில் கொள்கிறேன்

விருது கிடைத்த வரிசையில்...
பத்மாக்கா, பா.ராஜாராம் சித்தப்பா, 'சிநேகிதன்' அக்பர், நண்பர் ஸ்டார்ஜன் (ஷேக்), மனோ அம்மா, சகோதரி ஆனந்தி, சகோதரர் அப்துல்காதர், ஜலீலா அக்கா, சகோதரி. பிரஷா, ஆசியா அக்கா, முனைவர் குணசீலன், ரமா அக்கா, சாகம்பரி அக்கா, நண்பர் எல். கே, ஐயா வை.கோ, தற்போது இந்த வரிசையில் அண்ணன் கில்லர்ஜி, சகோதரர். அ.பாண்டியன்.

அப்புறம் இந்தப் பகிர்வின் முடிவாய்...

ஏதோ எழுதினோம்... பத்திரப்படுத்தினோம்... பத்திரிக்கைகளுக்கு அனுப்பினோம்... என்று இருந்த எனக்கு இன்று வலைப்பூவின் மூலமாக உலகின் மூலை முடுக்கெல்லாம் உறவுகள்... அறிஞர்கள், புலவர்கள், பேராசியர்கள், தமிழாசிரியர்கள், ஆசிரியர்கள், ஐயாக்கள், அம்மாக்கள், அண்ணன்கள், அக்காக்கள், தங்கைகள், தம்பிகள், தோழன்கள், தோழிகள் என உறவுகளைக் கொடுத்தும்... சந்தோஷத்திலும் துக்கத்திலும் முகம் தெரியாமல் மனம் கொடுத்து வாழும் உறவுகளொடு என்னைப்  பயணிக்கவும் வைத்த இறைவனுக்கும் தமிழுக்கும் நன்றி. 

(உங்கள் பார்வைக்காக வைக்கப்பட்ட இந்த விருது இன்னும் சில தினங்களில் விருது அலமாரியை அலங்கரிக்கப் போய் விடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்) 

-'பரிவை' சே.குமார்.