மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

புதன், 10 செப்டம்பர், 2014

தொடர்கதை: கலையாத கனவுகள் - 81

முந்தைய பதிவுகளைப் படிக்க... 



81.  நிறைவாய் நிறைவு செய்வோம்...

முன்கதைச் சுருக்கம்

கிராமத்து ஏழைக் குடும்பத்துப் பையனான ராம்கி, கல்லூரி ரவுடி வைரவனின் தங்கை புவனாவைக் காதலிக்கிறான். பிர்ச்சினைகள், சந்தோஷம், போராட்டம் என அவர்களின் காதல் எல்லாவற்றையும் சந்தித்து புவனா குடும்பத்தில் ஏற்கமாட்டார்கள் என்பதால் ஊரை விட்டு ஓட முடிவு பண்ண அம்மா ஆசிர்வாதத்தில் அண்ணன் வழியனுப்ப ராம்கியின் நண்பர்கள் உதவியுடன் வீட்டை விட்டு வெளியாகி திருமணம் செய்து கொள்கிறார்கள்.

இனி...

ம்மாவின் குரலைக் கேட்டதும் புவனா பெருங்குரல் எடுத்து அழுதாள். அவள் அழுவதைப் பார்த்ததும் சுற்றியுள்ளவர்கள் ஒரு மாதிரி பார்க்க ஆரம்பித்தனர். கண்ணீரோடு "அம்மா..." என்று மீண்டும் அழைத்தாள். ராம்கி அவளது தோளில் ஆதரவாய்ப் பிடித்து 'புவி கண்ட்ரோல் யுவர் செல்ப்' என்று மெதுவாகச் சொன்னான். அதேநேரம் மகளின் குரலைக் கேட்டவளுக்கு தொண்டை அடைத்தது... கண்கள் நீரை வார்க்கத் தயாராயின... 'அம்மாடி..' எனச் சொல்ல வாயெடுத்து சூழல் கருதி "என்னப்பா... எதுக்கு வருத்தப்படுறே... நினைச்ச வாழ்க்கை கிடைச்சிருச்சில்ல.... இப்ப சந்தோஷம்தானே... பின்ன என்ன... " என்று மெதுவாகச் சொன்னாள்.

'யாருக்கா...? யாருக்கிட்ட பேசுறே...?' சித்திக்காரி கேட்பது புவனாவுக்குக் கேட்க, 'ஐய்யோ அம்மா மாட்டிருவாங்களோ?' என்ற பயத்தில் போனை வைக்கலாமா என யோசித்தாள். அவளது யோசனையின் ஊடே 'அது... நம்ம... வைரா... பிரண்டு...' என அம்மா மெதுவாக இழுப்பது கேட்டது.

'சித்தி... என்னோட பிரண்ட்... திடீர்ன்னு கல்யாணமாயிருச்சு... யாருக்குமே சொல்லலை... அம்மாக்கிட்ட ஆசி வாங்கணுமின்னு சொன்னான்.... உங்களுக்குச் சொல்லலையேம்மான்னு அம்மாக்கிட்ட வருத்தப்பட்டிருப்பான்... அம்மா... அவனுக்கு நம்ம சூழல் தெரியாது... அவன வாழ்த்திட்டு போனை வையுங்க... அப்புறம் பேசிக்கலாம்... ' என்ற வைரவனின் குரல் அவளுக்கு சற்று பயத்தைப் போக்கியது. வைரவன் என்றால் சித்திக்கு அலர்ஜி என்பதால் அம்மா மாட்டமாட்டாள் என சந்தோஷப்பட்டாள்.

"எல்லாம் நல்லா முடிஞ்சதுல்ல... நல்லாயிருங்க..." என அம்மா பொத்தாம் பொதுவாய் வாழ்த்த, "அம்மா, ராம்க்கிட்ட ஒரு வார்த்தை பேசுங்க.." என்றவாறு ராம்கியிடம் கொடுத்தாள்.

"அலோ... அ...ம்.... அத்தை எங்களுக்கு உங்க ஆசி வேணும்..."

"அதான் சொன்னேனா... நல்லாயிருங்கப்பா... வச்சிடுறேன்..." என போனைக் கட் பண்ணியவள் கண்கள் கலங்க அப்படியே சோபாவில் சரிந்தாள்.

"என்னாச்சு... யாரு போன்ல?" மனைவியைப் பார்த்துக் கேட்டார் புவனாவின் அப்பா.

"வைரவனோட பிரண்டு... திடீர்ன்னு கல்யாணம் முடிஞ்சிருச்சாம்.... ஆசி கேட்டான்... வாழ்த்திட்டேன்... நம்மபுள்ளையைத்தான் வாழ்த்த முடியலை... இப்படிப் பண்ணிட்டுப் பொயிட்டா.. யாரோ ஒரு புள்ளை எங்கிட்ட ஆசி கேட்டதும் என்னால அழுகையை அடக்க முடியலைங்க..." என்று அவரது கரம் பிடித்து அழுதாள்.

"இங்கரு... அவதான் நாம வேண்டான்னு பொயிட்டால்ல அப்புறம் என்ன... சனியன் தொலஞ்சதுன்னு விட்டுட்டு வைரவனுக்கு ஒரு கலியாணத்தைப் பண்ணி கவலையை மறக்கலாம்... நீ இன்னைக்கே உந்தங்கச்சியோட திருப்பத்தூரு போயிரு... இங்க இருந்த எல்லாத்தையும் நெனச்சி மனசைப் போட்டுக் குழப்பி உடம்புக்கு எதாவது இழுத்துப்பே... அவளுக்கு நீயோ நானோ வேண்டாம்... எனக்கு நீ வேணும்... புரியிதா?"

"உங்கள இங்க விட்டுட்டு... நா மட்டும் எப்படிங்க?"

"கொஞ்ச நாள்தானே... நானும் அவனும் இருந்துப்போம்... ஒரு வாரம் பத்து நாள் சீக்கிரம் ஓடிடும்... என்ன சரியா?"

"ம்..."

"ஏய் உங்கக்காவை கூட்டிக்கிட்டு நீ திருப்பத்தூருக்கு கிளம்பு... நானும் தம்பியும் அந்த ஓடுகாலி விஷயமாப் பேசிட்டு முடிஞ்சா சாயந்தரம் அங்க வாறோம்... இல்லேன்னா தம்பி நாளைக்கு காலையில வருவான்" என கொழுந்தியாளிடம் சொன்னார்.

"சரித்தான்.... வைரா...." மெதுவாகக் கேட்டாள்.

"அவன் அங்கெல்லாம் வரமாட்டான்... அவன் பாட்டுக்கு இங்க இருக்கட்டும்..."

"ம்..."

"ராம்.... அம்மா பேசினது எனக்குச் சந்தோஷமா இருக்கு?"

"உன்னோட சந்தோஷம் எனக்கு சந்தோஷத்தைக் கொடுக்குது... " என்றவாறு அவளை அணைத்தான்.

"அப்பா... இது ரோடு... வா காருக்குப் போவோம்... எல்லாரும் ஒரு மாதிரி பாக்குறாங்க... விட்டா இங்கயே... ம்ம்ம்ம்...." சிரித்தான் சேகர்.

"ஆமா இவரு செய்யமாட்டாரு.... புதுச்சோடியின்னா அப்படி இப்படித்தான்... விட்டுட்டு வாங்க... வருவாங்க... என்னமோ பாக்குறவங்கல்லாம் எதுவுமே செய்யாத மாதிரி..." சேகரை விரட்டினாள் காவேரி.

"ம்க்கும்... லவ்வும் போதே நாங்க இருக்கோமுன்னு கூடப் பாக்காம கட்டிக்கட்டிப் பிடிப்பான்... இனி லைசென்ஸ் கெடச்சாச்சு.... சும்மாவா இருப்பான்..." சரவணன் சீண்டினான்.

"விடுங்கடா... வாங்க கிளம்பலாம்..." அண்ணாத்துரை சொல்ல சேகர் வீடு நோக்கி சந்தோஷமாக கிளம்பினர்.

"டேய்... வைரவன் பேச்சைக் கேட்டு அவனைப் போடாம விட்டது தப்புடா... அவளைக் கெளப்பிக்கிட்டு அவன் பொயிட்டான்... இவன் என்னடான்னா எங்க வீட்டு விஷயத்துல மூக்கை நுழைச்சா வெட்டிடுவேன்னு கத்துறான்... முதல்ல இவனைப் போடணுன்டா.." உள்ளே இறங்கிய பீரின் வேகத்தில் இளங்கோ ஆத்திரத்தைக் கக்கினான்.

"எதுக்கு நீ இப்ப அவனைப் போடணும்... இவனைப் போடணுமின்னு கத்துறே... உனக்குன்னு ஒரு வாழ்க்கை இருக்கு... அதை வாழப்பாரு.. அதை விட்டுட்டு அடிதடி அது இதுன்னு கத்திக்கிட்டு... வக்கீல் இளங்கோவா இருக்கப்பாரு..."

"என்னடா காலேசு படிக்கும் போது அடிதடின்னு இருந்தே... இப்ப என்னடான்னா இப்படிப் பேசுறே...?"

"இங்க பாரு இளங்கோ.... அது அந்த வயசு அப்படி இப்படி இருக்கச் சொன்னுச்சு... இப்போ வாழ்க்கை நமக்கு கத்துக் கொடுத்துக்கிட்டு இருக்கு... நமக்கு கிடைச்ச வாழ்க்கையை நாம அனுபவிச்சி வாழணும்... காலேசுல இருந்த மாதிரி அடிதடின்னு இருந்தா காக்காசுக்கு மதிக்க மாட்டானுங்க... புரிஞ்சிக்க... ஏன் இந்த மணிப்பயல எடுத்துக்க... எத்தனை பேரை வெட்டினான்... இன்னைக்கு அடுத்த வேலை சாப்பாட்டுக்கு அம்மாவை எதிர்பார்க்கிறான்... அவனால சுயமா சம்பாரிச்சு சாப்பிட முடியுமா..? சொல்லு... போட்ட ஆட்டம் இன்னைக்கு எந்திரிக்க முடியாமக் கிடக்கான்... அவனைப் போடணும்... அவனைப் போடணுமின்னு நிக்கிறியே... அவன் என்ன நீ காதலிச்ச பொண்ணை இழுத்துக்கிட்டுப் போனானா... இல்ல உன்னோட முறைப்பொண்ணை இழுத்துக்கிட்டுப் போனானா... அந்த புவனாவை அவன் எத்தனை வருசமா காதலிக்கிறான்னு உனக்குத் தெரியுமில்ல... காலேசுல அவங்க காதலிக்கும் போது நீ ஏன் பிரச்சினை பண்ணலை... இல்ல இத்தன வருசமா அவங்க பழகுனாங்களே அப்பல்லாம் நீ எங்க போனே...? உன்னோட பழைய பகையைத் தீர்க்கணும்... அதுக்காகத்தானே வைரவனுக்கு வலை விரிச்சி நீ உள்ளே புகுந்தே,... ஆமா நான் தெரியாமத்தான் கேக்குறேன்... அந்த ராம்கி அடிச்சது எனக்குத் தெரிஞ்ச ஆட்களைத்தானே... உன்னையோ என்னையோ இல்லையே... இப்பக்கூட வைரவன் விடுன்னு சொல்லிட்டான்... விட்டுட்டு வேலையைப் பாக்க வேண்டியதுதானே... இன்னும் கொல்லுவேன்... கொல்லுவேன்னு திரியிறியே... அப்படி அவனைக் கொன்னுட்டா.... புவனா உங்கிட்ட வந்துருவாளா என்ன... இத்தனை வருசமா காதலிச்சி பெத்தவங்களைக்கூட விட்டுட்டு அவனோட போனவடா அவ... அவனுக்கு எதாவது ஆச்சுன்னா செத்துருவாடா.... செத்துருவா... இங்கபாரு... வைரவன் கூட உன்னால மோத முடியாது... நீ அடிக்கணுமின்னு நினைப்பே... ஆனா அவனோ வெட்டிட்டுப் போய்க்கிட்டே இருப்பான்... இதையெல்லாம் விட்டுட்டு உனக்குன்னு ஒரு வாழ்க்கை அமைச்சிக்கிட்டு நல்ல பேரோட வாழப்பாரு...."

"என்னடா இப்படிப் பேசுறே... என்னால புவனாவை மறக்க முடியாதுடா..."

"டேய் என்னவோ அவள விழுந்து விழுந்து காதலிச்சி உன்னைய விட்டுட்டு ஓடுன மாதிரி பீல் பண்ணுறே... அவ உன்னைய சட்டை பண்ணுனதே இல்லைங்கிறது உனக்கே தெரியும்... இதெல்லாம் ரொம்ப ஓவருடா... இந்தப் புவனா இல்லாட்டி இன்னொரு பாவனா... ஆமா வக்கீலுக்குப் படிக்கும் போது ஒருத்தி விழுந்து விழுந்து காதலிச்சாலே அவளை மட்டும் எப்படி மறக்க முடியுது... எல்லாம் புவனா போதை அப்படித்தானே.... நல்லா சரக்கடிச்சிட்டு மல்லாக்கப் படு... காலையில எழுந்திரிக்கும் போது எல்லாம் பறந்து போயிருக்கும்... உன்னோட வழியைப் பார்த்து வாழ்க்கையை நகர்த்து... எல்லாம் நல்லா இருக்கும்..."

"என்னவோ போடா... எல்லாரும் என்னென்னவோ பேசுறீங்க... அம்புட்டுப் பேரும் எப்படிடா இப்படி மாறுனீங்க... ஆளாளுக்கு அட்வைஸ் பண்ணுறீங்க... ஆனா எனக்குத்தான் புரியல.... சரி விடுடா... நீ சொல்றதும் சரிதான்... ரொம்ப நாளா காதலிச்சு கையை பிடிச்சிருக்காக... இல்லல்ல... ஓடிப்போயிருக்காக... அவளுக்காக எதுக்கு நாம கொல்லுறேன்னு திரியணும்... அந்த புவனா இல்லன்னா இன்னொரு பாவனா... கரெக்ட்டுடா.... கரெக்ட்டு... ஆனா... அவளை வெட்டணும்டா.. ஓடுகாலிச் சிறுக்கி சாதிக்கு சாணி பூசிட்டாடா... அப்புறம் அவனை வெட்டணும்... எவனை தெரியுமா.... அந்த வைரவனை.... மாப்ள... மாப்ளன்னு சொல்லி  மண்ணக் கவ்வ வச்சிட்டான்டா.... எம்புட்டு கனவோட இருந்தேன் தெரியுமா... புதுசா புல்லட் வாங்கி அதுல புவனா கூட சும்மா டபடபடபன்னு  ஊருக்குள்ள சுத்தணுமின்னு... எல்லாம் போச்சு... அந்த ராம்கி... அது என்ன ராம்கி... பந்தாவா சுருக்கி கூப்பிடுறானுங்களாம்... ஏன் ரம்...கியின்னு கூப்பிட வேண்டியதுதானே... சும்மா கிக்கா இருக்குமுல்ல... அவன எங்க பாத்தாலும் வெட்டணுன்டா..." குழறலாய் பேசிக்கொண்டே போனான்.

"சரி... எல்லாரையும் வெட்டலாம்... ரொம்ப ஓவராப் போயிருச்சு... இனி இங்க இருந்து சண்டையை விலை கொடுத்து வாங்கிருவே... வா வீட்டுக்குப் போவோம் காலையில ஒரு முடிவு எடுக்கலாம்..."

"சரி... ஆனா மாப்ள நா... ஸ்டெடியா இருக்கேன்... நீனும் வர்றே... அவங்களப் போடுறோம்.... வண்டி எங்க... நா ஓட்டுறேன்... நா...ஓட்டுறேன்..."

"ஓட்டலாம்... ஓட்டலாம்..." என்றவன் அருகில் இருந்தவனிடம் "டேய் மச்சான்... நா ஓட்டுறேன்... இவன நடுவுல வச்சி நீ பின்னால உக்காரு... எங்கிட்டாவது விழுந்து கிழுந்து தொலையப் போறான்... " எனச் சொல்லி  இளங்கோவை ஒருவழியாக சம்மதிக்க வைத்து நடுவில் அமர வைத்து  மெதுவாக வண்டியைச் செலுத்தினான்.

காலமாற்றம் வாழ்க்கை மாற்றத்தையும் கொடுக்கத் தவறவில்லை. எல்லாருடைய வாழ்விலும் ஏற்ற இறக்கங்கள் வந்து போய்க் கொண்டிருந்தது.

புவனாவைத் தேடும் பணியைத் தீவிரமாக்கிய அப்பாவும் சித்தப்பாவும் அவர்களைப் பற்றிய எந்த ஒரு தகவலும் கிடைக்காமல் சோர்ந்து போயினர். ஒரு கட்டத்தில் சனியன் தொலைஞ்சது தொலைஞ்சதா இருக்கட்டும் இனி அதைத் தேடி ஆகப்போறது என்ன என்று விட்டு விட்டார்கள். மகள் சந்தோஷமாக இருப்பதை அவ்வப்போது வைரவனும் வெளியில் சென்று எஸ்.டி.டி போட்டு பேசித் தெரிந்து கொண்ட அம்மாவோ, தன் மகள் மீண்டும் இந்த வீட்டிற்குள் வரும் காலம் விரைவில் வர வேண்டும் என்று கோயில் கோயிலாகப் போய்க் கொண்டிருந்தாள். வைரவனுக்கு கல்யாணமாகி பேரன் பேத்தி வந்ததும் மகள் நினைவை முற்றிலும் மறந்து அவர்கள் உலகத்தில் தாங்களும் வாழ ஆரம்பித்தார்கள்.

ல்லோரையும் வெட்டுவேன் என்று திரிந்த இளங்கோவை அவனது திருமணம் முற்றிலும் மாற்றியது. குடும்பம், மனைவி, குழந்தை என அவனது உலகம் சுருங்கிப் போனது. மல்லிகா தன் கணவனுடன் மதுரையில் இருந்தாலும் புவனாவுடன் தினமும் போனில் பேசுவதைத் தொடர்ந்து கொண்டிருந்தாள்.

சேகர் - காவேரி தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் பிறக்க மகிழ்ச்சியாய் குடும்பம் நடத்தினார்கள். ராம்கியின் அண்ணன் ஊரில் வந்து செட்டிலாகி அம்மாவை தன்னுடன் வைத்துக் கொண்டான். நாகம்மாவும் இடையிடையே தனது மகனைப் பார்க்கப் போய் வந்து கொண்டிருந்தாள்.

மிழய்யா தனது மகளுக்கு திருமணம் முடித்து வைத்து விட்டு தன்னுடைய பணி நிறைவுக்குப் பின்னர் சொந்த ஊருக்குப் போய்விட, ராம்கியின் நண்பர்களும் பணி நிமித்தம் குடும்பத்துடன் பல ஊர்களில் வாழ்ந்து கொண்டிருந்தனர். எல்லாருடைய உறவும் போன் மூலமாகத் தொடர்ந்தது.

ன் மகன் படித்து நல்ல நிலையை அடைய வேண்டும் என்ற நாகம்மாவின் கனவுப்படி ராம்கி எழுதிய பி.எஸ்.ஆர்.பி கை கொடுக்க வங்கிப் பணி கிடைத்தது. புவனாவும் ஒரு தனியார் அலுவலகத்தில் வேலை பார்க்க கும்பகோணம் பக்கம் வீடு வாங்கி  செட்டிலாகி விட்டனர்.

ருவரும் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து தங்கள் காதல் குறையாது வாழ்க்கையை ரசித்து வாழ்ந்து கொண்டிருந்தனர். அவர்களது அன்பான வாழ்க்கையின் பரிசாக ஆசைக்கு ஒன்று... ஆஸ்திக்கு ஒன்று என இரண்டு முத்துக்களைப் பெற்றெடுத்தனர். 

ராம்கியுடன் வாழ்வது சந்தோஷம் என்றாலும் தனது அப்பாவுடன் பேசும் நாள் விரைவில் வராதா என நாட்களை... வாரங்களை... மாதங்களை... வருடங்களை... கடத்திக் கொண்டிருந்தாள் புவனா. அவளது எண்ணம் ஈடேற நாமும் அவளுக்காக பிரார்த்திப்போம்.

(தொடர்ந்து 80 பகுதிகளையும் வாசித்து கருத்திட்ட அனைவருக்கும் நன்றி - மீண்டும்  ஒரு சிறிய தொடரில் சந்திப்போம்)

முற்றும்.
-'பரிவை' சே.குமார்.

திங்கள், 8 செப்டம்பர், 2014

மனசு பேசுகிறது : ராஜாவின் புத்தம் புதுக் காலை...


ளையராஜா தொன்னூறுகளுக்குப் பிறகு எத்தனையோ பாடல்களைக் கொடுத்திருந்தாலும் அப்போது கொடுத்த பாடல்களுக்கு இணையாகாது. ரஜினி, கமல் தவிர்த்து ராஜாவுக்கென்றே சில நடிகர்கள் இருந்தார்கள். அவர்களுக்காக அவர் அமைத்த மெட்டுக்கள் காலம் காலமாக வாழ்ந்து கொண்டிருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

ராஜாவின் இசை ராஜ்ஜியம் இந்த நடிகர்கள் மூலமாகத்தான் நடந்தது என சில குறிப்பிட்ட நடிகர்களைச் சொல்லலாம் அவர்களில் குறிப்பாக மோகன், முரளி மற்றும் ராமராஜனைச் சொல்லலாம். மோகனுக்கு ராஜா கொடுத்த அத்தனை பாடல்களும் காலத்தால் அழியாதவை. என்ன அருமையான பாடல்கள்... அதே போல் முரளி படங்களிலும் ராஜாவின் ராஜ்ஜியம் தொடர்ந்து கொண்டே இருந்தது.

மோகனுக்குப் பின் ராஜாவின் அரியாசனத்தில் அமர்ந்தவர் ராமராஜன்.  எத்தனை படங்கள்... எத்தனை பாடல்கள்... அத்தனையும் ராஜாவின் ராஜ்ஜியத்தில் பூத்த இசைப் பூக்கள்.. எப்பவும் ராஜாவுக்கு உய்யலாலா போட வைக்கும் பாடல்கள்.

(வானுயர்ந்த சோலையிலே...)

நான் விரும்பிக் கேட்கும் பாடல்களில் ராமராஜனும் மோகனும்தான் அதிகம் இருக்கிறார்கள். ஒவ்வொரு பாடலையும் எத்தனை முறை கேட்டாலும் தித்திப்புத்தான்... வயலினும் புல்லாங்குழலும் பெரும்பாலான பாடல்களில் உருகி வழிவதை இசையில் லயித்துக் கேட்கும் போது அறியமுடியும்.

ராஜா தொன்னூறுகளின் ராஜ்ஜியத்துக்குப் பிறகு நிறைய பாடல்கள் கொடுத்தார் ஆனால் ஒரு சில பாடல்களைத் தவிர மற்ற பாடல்கள் நினைவில் நிற்கவில்லை. அப்படிப்பட்ட சூழலில்தான் புத்தம் புதுக் காலையை மீண்டும் புதிதாக பருகக் கொடுத்திருக்கிறார்.

ஒரு மழைநாளில் ஜன்னல் ஓரத்தில் அமர்ந்து சூடான காபியை உதடுகள் உருஞ்சுவது தெரியாமல் பருகியபடி விண்ணில் இருந்து மண்ணோக்கி விரைந்து வரும் மழைத்துளியையும்... அந்த பெருமழையின் சங்கீதத் சத்தத்தையும் ரசித்தபடி நொடிகளைக் கடத்தும் வேளையில் ராசாவின் பாடல்களை மெல்லிசையாகக் கேட்டால் கிடைக்கும் சந்தோஷம் நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்தப் பாடலைக் கேட்கும் போது கிடைத்தது.


(இந்தமான் உந்தன் சொந்தமான்...)

நண்பர்கள் கூடச் சொன்னார்கள்... பாடலைக் கேட்கும் போது இருக்கும் ஈர்ப்பு படத்தில் பார்க்கும் போது காட்சி அமைப்பில் இல்லை என்று... இதற்கு மேல் என்ன காட்சி அமைப்பு வேண்டும்... பாடலின் ஆரம்ப வரிகள் இன்னிசைக் குழுவினர் பாடுவது போல் ஆரம்பித்து அப்படியே நாயகன் நாயகியைச் சுற்றி வருகிறது. காட்சிப் படுத்திய விதத்தில் வேண்டுமானால் கொஞ்சம் சறுக்கியிருக்கலாம்... ஆனால் சான்ஸே இல்லை... சூப்பர்... எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு.

நாயகி சிருஷ்டி... சத்தியமா இந்தப்புள்ளைக்கு திருஷ்டி சுற்றிப் போடணும்... தனது உணர்வுகளை மிக அழகாக அதே நேரம் மிகவும் மென்னையாக தனது முகத்தில் காட்டுகிறார். கன்னத்தில் விழும் குழி... அடா... அடா... அதுதான் அழகு... இனி பெரும்பாலான இளைஞர்கள் அந்தக் குழிக்குள் விழுவார்கள் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஸ்ரீதிவ்யா என்று அடித்துக் கொண்ட கோடம்பாக்கக் கூட்டம் சிருஷ்டியை சுற்றப் போவது நிச்சயம். நாயகன் அஸ்வினும் அலட்டலில்லாமல்... ஆர்ப்பாட்டமில்லாமல் அழகாக நடித்திருக்கிறார். 




என்ன இது... பட விமர்சனம் மாதிரி பாடல் விமர்சனமாயிரும் போலவே... ஆமா என்ன பேசினோம்... ஆங்..... சிருஷ்டி... சீச்சி... நாம ராஜா பற்றித்தானே பேசினோம்.. எத்தனை இசைராஜாக்கள் வந்தாலும் என்றுமே நான் ராஜாதான் என்று நிரூபித்திருக்கிறார்.

சமீப நாட்களில் இருந்த மனநிலையில் கொஞ்சம் மாறுதல் வந்திருக்கிறது. ஆனால் சிலரின் பேச்சுக்கள் மாற்றத்தையும் நீடிக்க விடாமல் செய்கின்றன என்பது வருத்தமே. இருப்பினும் ராஜாவின் ராகங்கள்தான் மனசுக்கு இப்போது இதமாய் இருக்கின்றன. 

'புத்தம் புதுகாலை...' வீடியோதான் இப்போது நான் விரும்பி அடிக்கடி பார்க்கும் பாடலாக மாறிப் போய் இருக்கிறது. ஆஹா... என்ன இசை... அப்படியே நம்மைத் தாலாட்டுகிறது... நீங்களும் கேட்டுப் பாருங்கள்.. நேற்றும்... இன்றும்... நாளையும்.. ராஜா... ராஜாதான்.


என்னைக் கவர்ந்த ராஜாவின் புத்தம் புதுக்காலை உங்களையும் கவர்ந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

மனசு தொடர்ந்து பேசும்.
-'பரிவை' சே.குமார்.

ஞாயிறு, 7 செப்டம்பர், 2014

தொடர்கதை: கலையாத கனவுகள் - 80

முந்தைய பதிவுகளைப் படிக்க... 


80.  மணக்கோலம்

முன்கதைச் சுருக்கம்

கிராமத்து ஏழைக் குடும்பத்துப் பையனான ராம்கி, கல்லூரி ரவுடி வைரவனின் தங்கை புவனாவைக் காதலிக்கிறான். பிர்ச்சினைகள், சந்தோஷம், போராட்டம் என அவர்களின் காதல் எல்லாவற்றையும் ஒரு நல்ல நாளில் நண்பர்கள் துணையுடன் வீட்டை விட்டு வெளியேறச் செய்கிறது. அதன் பின்னான பிரச்சினைகளைச் சுமந்து அன்றைய இரவு நகர்கிறது.

இனி...

ல்வேறு பிரச்சினைகளைச் சுமந்தபடி கழிந்த முதல் நாள் இரவு அனைவருக்கும் தூக்கமில்லா நீண்டதொரு இரவாக அமைந்தது.

மறுநாள் காலையில் சீக்கிரமே எழுந்த காவேரி எல்லோரையும் எழுப்பி வேகமாகக் கிளம்பச் சொன்னாள். ராம்கியும் புவனாவும் சேகர் எடுத்து வைத்திருந்த பட்டு வேஷ்டி சேலையைக் கட்டிக் கொண்டு கிளம்ப, காவேரியும் சேகரும் புத்தாடையில் ஜொலிக்க. மற்றவர்கள் சேவியர் கொண்டு வந்த ஆடைகளை அணிந்து கிளம்பினர். 

"ராம்..." அவன் தோள் சாய்ந்து அவனுக்கு மட்டும் கேட்கும்படி மெதுவாகக் கூப்பிட்டாள் புவனா.

"என்ன புவி..." ஆதரவாய்க் கரம் பற்றினான்.

"அம்மாவைப் பாக்கணும் போல இருக்கு..." கண் கலங்கினாள்.

"கொஞ்ச நாள்த்தாம்மா... எல்லாம் சரியாகும்... அப்புறம் உங்கம்மாவை இங்க கூட்டிக்கிட்டு வந்து வச்சிக்கலாம்."

"ம்..."

"டேய்... இப்ப என்ன தங்கச்சிக்கு அம்மா ஞாபகம்... அம்மாக்கிட்ட பேசிட்டா போச்சு..." என அவளது வருத்தத்தைப் போக்கும் விதமாக சேகர் சொன்னான்.

"அண்ணா... அம்மாக்கிட்ட நானா... போன் பண்ணி அப்பா எடுத்துட்டா..." பதட்டமாய்க் கேட்டாள்.

"முதல்ல காவேரியை பேச விடுவோம்... இந்த மாதிரி விஷயத்துல அவ கில்லாடி... அம்மா பேசினா நீ பேசலாம்...  இல்லைன்னா எதாவது சொல்லி மழுப்பிடலாம்..."

"எப்போ பேசலாம் அண்ணா... இப்பவா...?" ஆர்வமாய்க் கேட்டாள்.

"ரிஜிஸ்டர் ஆபீஸ் பொயிட்டு பேசலாம்..."

"தாங்க்ஸ் அண்ணா..."


தே நேரம்...

புவனா வீட்டை விட்டு ஓடிய செய்தி காட்டுத் தீ போல் பரவ சொந்தங்கள் எல்லாம் கேதம் கேட்க வருவது போல் வீடு தேடி வர ஆரம்பித்தனர். 'அடி ஆத்தி... பொட்டப்புள்ளய படிக்க வக்காதே... படிக்க வக்காதேன்னு சொன்னேனே... எஞ்சொல்லுப் பேச்சுக் கேக்கலையே... இப்ப நம்ம குடும்ப மானத்த சந்தி சிரிக்க வச்சிட்டுப் பொயிட்டாலே...' என புவனாவின் அத்தைகள், ஆயாக்கள் எல்லாம் வந்து கத்த ஆரம்பித்தார்கள்.

"ஏய்... இங்க என்ன எழவா விழுந்திருச்சி... வந்து கட்டிக்கிட்டு இருக்கீக... வந்தா பேசாம இருந்துட்டுப் போங்க... சும்மா கத்திக்கிட்டு..." வைரவன் கத்தினான்.

"அட ஏம்ப்பா ஒனக்கு இம்புட்டுக் கோவம் வருது... ஆத்தரத்துலதானே கத்துறோம்..." ரெண்டு மூணு சொந்தங்கள் ஒன்றாகக் கேட்டன.

"ஆத்தரமுன்னா அங்கிட்டுப் போயி கத்துங்க... இங்க கத்தக்கூடாது... ஆமா.. அம்மா... அம்மோவ்..." என உள்ளேயிருந்த அம்மாவைக் கூப்பிட்டு "இங்கேரு... இங்க இருந்தியன்னா எல்லாரும் வந்து உன்னையக் கொன்னுபுடுவாளுங்க... கொஞ்ச நாளைக்கி நீ சித்தி வீட்டுக்கு திருப்பத்தூருக்குப் போயிரு..." எனக் கத்தினான்.

அப்போது போன் மணி அடிக்க, அம்மாதான் எடுத்தாள்...

"யாரு... வைரவனா... இந்தாத்தான் இருக்கான்... வைரா... டேய் வைரா உனக்குத்தான்டா போன்..." என அவனைக் கூப்பிட்டுக் கொடுத்தாள்.

டபழனி ரிஜிஸ்டர் அலுவலகத்தின் முன் அனைவரும் நின்று கொண்டிருந்தனர்.

"அண்ணா... அம்மாக்கிட்ட பேசலாம்ன்னு சொன்னீங்களே...?" மெதுவாகக் கேட்டாள் புவனா.

"ஆமா... இங்க பக்கத்துல எஸ்.டி.டி. பூத் இருக்கான்னு பாருங்கடா... இருந்தா புவனாவை ரெண்டு வார்த்தை வீட்டுக்குப் பேசச் சொல்லலாம்... அப்படியே ராமு நீயும் அத்தைக்கிட்டயும் உங்க தமிழய்யாக்கிட்டயும் பேசி ஆசிர்வாதம் வாங்கிடு... என்ன..." என்றான் சேகர்.

"என்ன விளையாடுறியா? இப்ப யாரும் யாருக்கும் போன் பண்ண வேண்டாம்... முதல்ல கல்யாணம் முடியட்டும்... அப்புறம் கோயிலுக்குப் போகும் போது பேசிக்கலாம்..." கத்தினான் அண்ணாத்துரை.

"இல்லடா... தங்கச்சி பேசணும்ன்னு சொன்னுச்சு... அதான்..."

"ஒண்ணும் வேண்டாம்... வாங்க உள்ள போகலாம்..." என்றதும் எல்லாரும் பதில் பேசாமல் போக, புவனாவின் கண்களில் கண்ணீர் எட்டிப் பார்த்தது. அவளைப் பார்க்க மனமின்றி சேகர் முகத்தை வேறு பக்கமாக திருப்பிய படி நடக்க, 'இப்ப என்ன... கொஞ்ச நேரத்துல பேசலாம்... கல்யாணப் பொண்ணு சந்தோஷமா இருக்க வேண்டாமா?' என காவேரி அவளை ஆதரவாய் அணைத்துக் கொண்டாள்.


"நான் வைரவன் பேசுறேன்... நீங்க..?"

"என்ன மச்சான்... அதுக்குள்ள மறந்துட்டே..."

"இ... இளங்கோ..."

"அட ஞாபகத்துல இருக்கேனா.... அன்னைக்கே சொன்னேன்... அவனைப் போடுறேன்னு... அவனை விட்டுடுன்னு சொன்னே... இதுக்குத்தான் விடச் சொன்னியா... கிளிய கொத்திக்கிட்டு பொயிட்டானாமே... நேத்தே கொண்டு பொயிட்டானாமே..."

"இ..ள...ங்...கோ... அது..."

"என்னையவே ஏமாத்திட்டியே... "

"நான் உன்னைய ஏமாத்தனுமின்னு நினைக்கலை... இது நடக்கும்ன்னு எதிர்பாக்கலை... வீட்ல எல்லாரும் துக்கத்துல இருக்காங்க... சொந்தக்காரங்க வேற வந்திருக்காக... அப்புறம் பேசலாம்..."

"கட் பண்ணி விடப் பாக்குறியா? அவன எங்க இருந்தாலும் தேடிப் பிடிச்சி கண்டந்துண்டமா வெட்டிப் போட்டுட்டு அவள அள்ளிக்கிட்டு வாரேன்டா..."

"டேய்ய்ய்ய்ய்..."

"என்ன குரல் உயருது...?"

"அவங்க மேல கை வச்சே உன்னோட உடம்புல கை இருக்கும் ஆனா அதை ஆட்ட உயிர் இருக்காது..." பல்லைக் கடித்துக் கொண்டு மெதுவாகச் சொன்னான்.

"ஏ... ஏய்... என்னடா... இப்படி மாறிட்டே... நீதான் பேசுறியா... அவன் உந்தங்கச்சிய இழுத்துக்கிட்டுப் போயிருக்கான்... ஓ... நேத்தே பொயிட்டாங்க... இந்நேரம் பர்ஸ்ட் நைட்டே முடிச்சிருப்பாங்கன்னு விட்டுடலாம்ன்னு பாக்குறியா... பரவாயில்லை மச்சான்... எனக்கு எப்படியிருந்தாலும் ஓகே..."

"டேய்...மவனே... ஓவராப் பேசுறே... இனி எங்க விஷயத்துல குறுக்க வர நினைச்சே நாளைக்கு உன்னோட பொணத்துக்கு உங்கப்பன் கொள்ளி வப்பான்... புரியிதா... வைடா போனை... பேப்பயலே..." என்று கத்தினான்.

"யாருப்பா... அவள இழுத்துக்கிட்டு போனவனா...?" வேகமாக அருகில் வந்த அப்பா கேட்டார்.

"இல்லப்பா இவன் வேற... நம்ம புவி ஓடிட்டான்னு தெரிஞ்சதும் பழைய பகையை வச்சிக்கிட்டு கேலி பேசுறான்..." என்றபடி தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்தான்.

திருமணம் முடிந்தும் சேவியர் தான் கொண்டு வந்திருந்த மோதிரத்தைக் கொடுத்து ஒருவர் விரலில் ஒருவரை போட்டு விடச் சொன்னான். வடபழனி முருகனைத் தரிசித்துவிட்டு இதுவரை காதலர்களாக இருந்த இருவரும் கணவன் மனைவியாக நண்பர்கள் சூழ காரில் கிளம்பினர்.

"ராம் இப்பவாச்சும் அம்மாக்கிட்ட பேசலாம்..." என்றாள் புவனா.

"டேய் மாப்ள... புவி அவ அம்மாக்கிட்ட பேசணுமாம்... ஒரு எஸ்.டி.டிக்கிட்ட நிக்கச் சொல்லேன்"

"சரி..." என்றவன் ரோட்டின் இருபக்கமும் பார்வையை ஓடவிட்டு ஓரிடத்தில் காரை நிப்பாட்டச் சொன்னான்.

ராம்கி முதலில் அம்மாவுக்கு போன் பண்ணிப் பேசி விவரம் சொல்ல நாகம்மா அழுகையோடு இருவரையும் நல்லாயிருங்க என்று வாழ்த்தினாள். சீதாவும் தம்பிக்கு வாழ்த்தைச் சொன்னாள்.

அடுத்து தமிழய்யாவுக்குப் போன் செய்து இருவரும் பேச, ஐயாவும் அம்மாவும் இருவருக்கும் தங்கள் வாழ்த்தைச் சொன்னார்கள். கடைசி வரைக்கும் இருவருக்குள்ளும் சண்டை வராமல் இன்னைக்கு இருக்க காதலோட இருக்கணும் என்று அம்மா ராமிடம் சொன்னார்கள்.

அடுத்ததாக மல்லிகாவுக்குப் போன் செய்து சொல்ல, ஏய் ரெண்டு பேரையும் நான் மணக்கோலத்துல பாக்கணும்... ரெண்டு பேரும் இப்பப் போல எப்பவும் சந்தோஷமா இருக்கணுன்டா என வாழ்த்தினாள்.

அடுத்ததாக அண்ணிக்குப் பேச அவள் ரொம்பச் சந்தோஷப்பட்டாள்.

எல்லாரிடமும் பேசி முடித்ததும் புவனாவின் வீட்டுக்குப் போன் அடித்தார்கள். ராம்கிதான் ரிசீவரை காதில் வைத்திருந்தான். எதிர்முனையில் வைரவன் போனை எடுத்து 'அலோ' என்றான்.

"அ... அலோ... நான் ராம்... ராம்கி பேசுறேன்..." மெதுவாகச் சொன்னான். புவனா பதட்டத்தோடு அவன் கரம் பற்றி நின்றாள்.

எதிர்முனை சிறிது மௌனத்துக்குப் பின்னர் "ம்... சொல்லுடா... எதுவும் பிரச்சினையா... அப்படியெல்லாம் இல்லையில்ல... எல்லாரும் நல்லா இருக்காங்களா?" வைரவன் எப்பவும் போல் பேசினான்,

"ம்... எங்களுக்கு க... கல்யாணம் ஆயிடுச்சு... புவி...." மெதுவாக இழுத்தான்.

"ரொம்ப சந்தோஷம்..." என்றவன் கலங்கிய கண்ணைத் தொடைத்துக் கொண்டான். "அ... அம்மாக்கிட்ட பேசணுமா... இரு... இரு..... இந்தாக் கூப்பிடுறேன்..." என்றவன் 'அம்மா... என்னோட பிரண்ட் ஒருத்தன் உங்ககிட்ட பேசணுமாம்' எனக் கத்துவது கேட்க ராம்கி ரீசிவரை புவனாவிடம் கொடுத்தான்.

"யாருடா அது...?" என்றபடி ரீசிவரை வாங்கியவள் "அலோ... சொல்லுங்க தம்பி..." என்றதும் பசுவைக் கண்ட கன்று போல முகம் மலர "அம்மா..."  என்றழைத்த புவனா பெருங்குரலெடுத்து அழுதாள்.

-(புதன்கிழமை தொடரும்)
-'பரிவை' சே.குமார்.

வெள்ளி, 5 செப்டம்பர், 2014

வெள்ளந்தி மனிதர்கள் : 2 . புலவர் ம. சவரிமுத்து

ன்று ஆசிரியர் தினம். முதலில் என்னைச் செதுக்கிய, இன்னும் செதுக்கிக் கொண்டிருக்கும் ஆசிரியப் பெருமக்களுக்கும் வலையுலகில் என்னுடன் உறவில் இருக்கும் அன்பான ஆசிரியப் பெருமக்களுக்கும் எனது இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்களைக் கூறிக் கொள்கிறேன்.

ன்றைய வெள்ளந்தி மனிதர்களில் எங்கள் தமிழாசிரியர் ஐயா புலவர் ம. சவரிமுத்து அவர்களைப் பற்றிப் பார்ப்போம். சவரிமுத்து ஐயா எனக்கு அறிமுகமானது தே பிரித்தோ மேல் நிலைப் பள்ளியில் எனக்குத் தமிழாசிரியராய்... தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் எனக்கு அவர் தமிழாசிரியர் அவ்வளவே. எங்களுக்குள்ளான உறவு மாணவர் ஆசிரியர் என்ற முறையில்தான். அதற்குக் காரணம் அவருடன் பழகும் சந்தர்ப்பத்தை உருவாக்கவில்லை என்பதும் நான் அப்போது யாரிடமும் அதிகம் பேசுவதில்லை என்பதும்தான்.

கல்லூரிக்கு வந்து பழனி ஐயாவின் அறிமுகம் கிடைத்து கொஞ்சம் தமிழார்வம் எட்டிப் பார்க்க ஐயாவின் மாணவர்களாக தமிழ்நாடு பாரதி கலை இலக்கியப் பெருமன்றத்தில் நானும் முருகனும் உறுப்பினரானோம். அப்போதுதான் சவரிமுத்தையாவுடன் நெருக்கமாகப் பழகும் சூழல் அமைந்தது. என்னோட பிள்ளைகள் என்று அன்பாக அழைக்கும் அந்த மனிதருக்குள் எப்போதும் எங்கள் மீதான அன்பைக் கூட்டிக் கொண்டே போனது பின்னான நாட்கள்.

'என்ன தம்பிங்களா? இதைச் செய்யலாமா?' என்று வேஷ்டி சட்டையில் பாரதி விழா வேலைகளை இழுத்துப் போட்டு செய்வதில் ஐயாவுக்கு நிகர் ஐயாவே. ஐயா கலையிலக்கியப் பெருமன்றத்தின் தலைவராக இருந்த போது பாரதி விழாவுக்கு திரு. இறையன்பு ஐ.ஏ.எஸ். அவர்களை அழைத்திருந்தோம். அவரை மதுரையில் இருந்து காரில் அழைத்து வரும் பணியை எங்களிடம் ஐயா ஒப்படைத்திருந்தார். விழா முடிந்து திரும்பும் போது திரு. இறையன்பு அவர்கள் நான் பேசாமல் தனியாக போகமுடியாது என்னைக் கூட்டியாந்த அந்த ரெண்டு பேரும் என் கூட பேச்சுத் துணையாக மதுரைக்கு வரவேண்டும் என்று சொல்லிவிட்டார். 

ஐயாவுக்கோ எங்களை மீண்டும் அனுப்ப மனமில்லை.... மெதுவாக பிள்ளைகள் சில நாட்களாகவே பாரதி விழா வேலை பார்த்து... நேற்று உங்களை அழைக்க வந்து... இன்றெல்லாம் விழா நிகழ்வுகளில் அலைந்து ... ரொம்பச் சோர்வாக இருக்கிறார்கள் வேறு யாராவது உங்களுடன் வரட்டும் என்றார்கள். ஆனால் அவரோ இருவரும்தான் வேண்டும் என்று சொல்ல 'என்ன தம்பிங்களா... போகலாமா?' எனக் கேட்டு எங்களை அனுப்பி வைத்தார்.

எப்பவும் எங்கள் மீது அவருக்கு அலாதிப் பிரியம். வீட்டுக்குச் சென்றால் அம்மாவிடம் பிள்ளைகள் வந்திருக்கு... சாப்பிட எதாவது கொடுங்கள் என்று சொல்லிவிட்டு நம்ம வீட்டில் காய்த்த கொய்யா... நேற்று பரிச்சேன்... பிள்ளைகள் வருமே வந்தா சாப்பிடட்டும்ன்னு வச்சிருந்தேன்... இது நம்ம வீட்டு மாம்பழம் தம்பி... மரத்துலயே பழுத்தது... இப்பத்தான் பறிச்சி கழுவி வச்சிட்டு பிள்ளைங்க வந்தா சாப்பிடுங்கன்னு உங்கம்மாக்கிட்ட சொல்லிக்கிட்டு இருந்தேன். நீங்க வந்துட்டீங்க என்பார். அதற்குள் அம்மா மணக்க மணக்க காபியோடு வந்து விடுவார்.

ஐயாவின் குடும்பத்தில் அனைத்து விசயங்களும் எங்களுத் தெரியும். நம்ம பிள்ளைங்ககிட்ட சொல்றதுக்கு என்னன்னு நல்லதோ கெட்டதோ அனைத்தும் சொல்லிவிடுவார். ஐயாவின் மாப்பிள்ளைகள் எல்லாம் எங்களுக்கு ஐத்தான்தான்... உங்க பெரியத்தான் இப்பத்தான் வந்துட்டுப் போனாங்க... சின்னத்தான் அங்க போயிருக்காங்க எனச் சொல்வார். 

ஒவ்வொரு முறை ஊருக்குச் செல்லும் போதும் எங்காவது வெளியில் வைத்துத்தான் சந்திப்பேன். வீட்டுக்குச் செல்ல முடிவதில்லை. இந்த முறையும் அப்படித்தான்... சவரிமுத்து ஐயாவைச் சந்திக்கணும் என்ற நினைப்போடு தேவகோட்டை ராம்நகருக்கு ஒரு வேலையாகச் சென்றுவிட்டு விஷாலுடன் வண்டியில் வந்து கொண்டிருந்தேன். அப்போது எங்களுக்கு முன்னே ஒரு டிவிஎஸ் எக்ஸ்எல் போய்க் கொண்டிருந்தது. ஐயா மாதிரி இருக்கே என நினைத்து வண்டியின் வேகத்தைக் குறைத்து அருகே சென்று ஐயாதான் எனத் தெரிந்ததும் 'ஐயா' என்றேன். என்னைப் பார்த்ததும் 'அட இங்க பாரு எம்புள்ளையை... பேராண்டி வேற முன்னால உக்காந்திருக்காக' என்றபடி வண்டியை நிறுத்தி என்னை ஓரமாக வரச்சொல்லி காது கேட்பதற்கான கருவியை 'காது கேக்குறதில்லைய்யா' என்றபடி மாட்டினார்.

"ஐயா எப்படியிருக்கீங்க? அம்மா எப்படியிருக்காங்க? உங்களைப் பாக்கணுமின்னே நெனச்சிக்கிட்டு வந்தேன். இப்பவே பாத்துட்டேன்" என்றேன் சந்தோஷமாக. "நல்லாயிருக்கேன் தம்பி... நீங்கள்லாம் போனதும் என்னென்னமோ நடந்துருச்சி... எங்கப்பாரு தவறிப்பொயிட்டாக... உங்க அம்மாவுக்கு பிரஸ்ட் கேன்சர் வந்து ஒரு வருசம் நடைபொடையில்லாம இருந்துட்டாக... இப்போ பரவாயில்லை... பொற்கோ மனைவிக்கு பி.எட் காலேசில சேக்குறதுக்குத்தான் கேட்டுக்கிட்டு வாறேன்..." என குடும்ப நிகழ்வுகளை அதே பாசத்துடன் சொன்னார்.

பின்னர் "நான் மருமகளைப் பார்க்கும் போதெல்லாம் எம்புள்ள எப்ப வருதுன்னு கேப்பேன்... அவங்களும் என்னை எங்க பாத்தாலும் நா பாக்காட்டியும் ஐயான்னு வந்துருவாங்க... அடுத்த வாரம் பிள்ளைங்களுக்கு சின்னச் சின்ன போட்டிக வச்சிருக்கோம்... நீங்க ஊருக்குப் பொயிட்டாலும் மருமகள வந்து உதவச் சொல்லுங்கன்னு சொன்னார். சிறிது நேரம் அவரோடு பேசிவிட்டு வந்தேன்.

என் அன்பிற்குரிய சவரிமுத்து ஐயாவை எங்கள் தேவகோட்டையில் தெரியாதவர்கள் குறைவு. இன்றும் பாரதி கலையிலக்கியப் பெருமன்றத்தின் செயலாளராக தனது தமிழ்ப்பணியை ஆற்றி வருகிறார். ஐயாவைப் பொறுத்தவரை ஆரோக்கியமான விவதாங்கள் செய்வார். சில நேரங்களில் அவருக்கும் பழனி ஐயாவுக்கும் சில மனஸ்தாபங்கள் வந்து மறையும். ஐயா நிறையப் படிப்பார்.... எல்லோரிடமும் நிறைவாய் இருப்பார்... இதுதான் அவர்.

இங்கே ஐயா தவிர்த்து ஒரு செய்தி, என்னை மகனாய்ப் பாவிக்கும் எல்லாருக்கும் என் மனைவி மருமகளாய் ஆனது எனக்கு மிகுந்த சந்தோஷம். என்னைவிட எல்லோரிடமும் அன்பாய்ப் பழகும் என்னவள் எனக்குக் கிடைத்தது மிகப்பெரிய வரப்பிரசாதம். எல்லோரையும் வேண்டும் என நினைக்கும் என்னவளை விரட்டி விரட்டி காயப்படுத்தும் அவரின் உறவுகளை நினைத்து வேதனையோடுதான் சில வாரங்களாக நாட்கள் கடந்து செல்கின்றன. பழகிய பழக்கங்கள் எல்லாம் எங்களுடன் உறவு பாராட்டி அரவணைக்கும் போது உறவுகள் எல்லாம்...? சரி காலம் பதில் சொல்லும் என்ற நம்பிக்கையோடு இதை மறப்போம் என என்னவளிடம் சொல்லித் தேற்றி  வருகிறேன். அருகில் இருந்தால் அரவணைக்க முடியும்... தொலைதூர வாழ்க்கையில்... வார்த்தைகளைத்தானே வலிக்கு மருந்தாக இடமுடிகிறது. அந்த வார்த்தைகளைக் கூட நம்மோடு சிரித்துப் பேசி மகிழ்ந்து இருக்கும்  சில இரட்டை வேடாதாரிகள் வலியின் மீது வாரி இறைக்கும் கற்களாக ஆக்கிக் கொண்டிருப்பதுதான் வேதனை.

அடுத்த வெள்ளந்தி மனிதர்கள் வரிசையில் புலவர். அருள்சாமி ஐயா அவ்ர்களைப் பற்றி பார்க்கலாம்.


-வெள்ளந்தி மனிதர்கள் மனசில் தொடர்வார்கள்.
-'பரிவை' சே.குமார்.

புதன், 3 செப்டம்பர், 2014

மனசு பேசுகிறது : வாழ்க்கை கற்றுக் கொடுத்த பாடம்

"உள்ளொன்று வைத்து
புறமொன்று பேசும் 
மனிதர் உறவு 
கலவாமை வேண்டும்.

- வள்ளலார்

சில நாட்களாகவே மன அமைதியைக் கெடுக்கும் நிகழ்வுகள்... தொடரும் பிரச்சினைகள்... என நகர்ந்து கொண்டிருக்கிறது என்னைச் சுற்றிய உலகம். இவன் யார்...? இவர் யார்...? என எல்லாவற்றையும் விளக்கி சுற்றியுள்ள மனிதர்களைப் பற்றி புரிய வைத்துக் கொண்டிருக்கிறது வாழ்க்கை. விரத்தியின் பிடியில் வினாடிகள் கரைந்து கொண்டிருக்கின்றன. விடை கானாத கேள்விகள் விளைந்து கொண்டேயிருக்கின்றன. தேற்றுவாரின்றி தவிக்கும் இதயங்கள் இங்கொன்றும்... அங்கொன்றுமாய்... தனித்தனியே பயணித்துக் கொண்டிருக்கின்றன.

நாங்கள் எங்கள் பாதையில் பயணிக்கிறோம்... எங்களை எங்கள் வழியில் விடுங்கள் என்றாலும் சில எருமைகள் சேற்றை நம் மீது வாரி இறைப்பதாக நினைத்துக் கொண்டு தங்கள் மீதே வாரி இறைத்துக் கொள்கின்றன. உறவுகளாய் நினைத்த எல்லாம் இன்று உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுகின்றன. எத்தனை விதமான நாடகங்களை நடத்துகிறார்கள் இத்தனை நல்ல மனிதர்கள் என நினைக்கும் போது வருத்தப்படத்தான் முடிகிறது என்றாலும் வாழ்க்கையில் இப்படியும் சிலவற்றை சந்திக்க வேண்டியிருக்கும் என எங்கள் மனசுக்கு சொல்லிக் கொள்கிறோம்.

நமக்கு எல்லாரும் வேண்டுமென நினைத்தது எவ்வளவு தவறு என சில நாட்களாக நடக்கும் நிகழ்வுகளை வைத்து வாழ்க்கை கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. நமக்கு கெடுதல் செய்தவருக்கு நாம் நன்மை செய்வோம் என நினைத்து விலகிப் போனால் வீம்பாக வந்து மோதுகிறார்கள். இவர்களை என்ன செய்வது?

கூட இருந்து கொண்டு நல்லவன் போல் பேசி, சிரித்து கிடக்கிறவன் தள்ளிப் போய் குழி பறிக்கிறான். அவனை என்ன சொல்வது.? எப்படிப்பட்ட மனிதர்கள் இவர்கள்... இவர்களால் எப்படி இப்படியெல்லாம் நடிக்க முடிகிறது... நடந்து கொள்ள முடிகிறது என்று நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. என்ன மனிதர்கள் இவர்கள்...?

எல்லாருக்குமே எந்த விசயத்தையும் வெளியில் சொல்லாமல் நீங்க பண்ணியது சரியெனப் போயிருந்தால் சந்தோஷமாக இருப்பார்கள் என்பது இப்போது அவர்கள் நடந்து கொள்ளும் விதத்தில் புரிகிறது. நம்மிடம் பேசுவது ஒன்றாகவும் பிறரிடம் கூறுவது ஒன்றாகவும் இருக்கிறது. எதற்காக இவர்கள் இப்படியிருக்கிறார்கள் என்று புரியாமல் இருந்தது. இப்போது சில மனித மிருகங்கள் மூலமாக வாழ்க்கை எனக்கு கொஞ்சம் கொஞ்சமாக புரிய வைக்கிறது.

எந்தளவுக்கு நம்பினோமே அந்தளவுக்கு அவர்களின் சுயரூபம் தெரிய வரும்போது இப்படிப்பட்ட மனிதர்களை உயர்ந்த இடத்தில் வைத்திருந்தோமே என நினைத்து வெட்கப்பட வேண்டியிருக்கிறது... வேதனைப்பட வேண்டியிருக்கிறது. இவர்கள் சேற்றில் இருந்து எழுந்து வந்து எதோ தாங்கள் சந்தனத்தில் குளித்ததாகவும் நாங்கள் சேற்றை வாரி இறைத்ததாகவும் சொல்வதுதான் வேடிக்கை நிறைந்த வேதனையாக இருக்கிறது.

எது எப்படியோ இப்படிப்பட்ட மனிதர்களின் சுயரூபத்தைக் காட்டிய எனது இறைவனுக்கு நன்றி கூறிக் கொள்கிறேன். இனிமேலாவது இது போன்ற அற்பப் பதர்களிடம் இருந்து விலகி இருக்கலாம் அல்லவா.? வாழ்க்கை சில தினங்களாக கற்றுக் கொடுக்கும் பாடத்தில் அர்த்தம் நிறைந்து இருப்பதுடன் வாழவும் கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறது.

வலி நிறைந்த மனசுக்குள் எதுவும் தோன்றவில்லை என்பதால்தான் மனசு வலைத்தளத்தில் சில நாட்களாக எதுவும் எழுதுவதில்லை தொடர்கதையைத் தவிர... இன்று தொடர்கதையை எழுதி பதிவிடலாம் என்று நினைத்து அமர்ந்தபோது சுற்றம் செய்யும் துரோகங்கள் எல்லாம் வரிசையில் வந்து என்னை எழுதவிடாமல் செய்து விட்டன. என்ன செய்வது வாழ்க்கையில் எல்லாம் இருக்கும்... நாம்தான் கவனமுடன் கடந்து செல்ல வேண்டும்.

மனநிலையில் மாற்றம் வந்தால் தொடர்கதை நாளையோ அல்லது சனிக்கிழமையோ பதியப்படலாம்.

-மனசு தொடர்ந்து பேசும்.
-'பரிவை' சே.குமார்.