முந்தைய பதிவுகளைப் படிக்க...
முன்கதைச் சுருக்கம்
கிராமத்து ஏழைக் குடும்பத்துப் பையனான ராம்கி, கல்லூரி ரவுடி வைரவனின் தங்கை புவனாவைக் காதலிக்கிறான். சில காரணங்கள் இவர்களது காதல் வெளிச்சத்துக்கு வர இரண்டு பக்கமும் பிடி இறுகுகிறது. நாட்கள் நகர நகர ராம்கியின் அம்மா கொஞ்சம் இறங்கி வருகிறாள். புவனாவுக்கு அது கொஞ்சம் சந்தோஷத்தைக் கொடுத்தது. நாட்கள் நகர... தங்களது காதல் குறித்து வைரவனிடம் சொல்கிறாள். காதல் விவகாரம் பூதகரமாக ஒவ்வொரு பக்கமும் கிளம்ப, ஒவ்வொருத்தரும் ஒவ்வொருவிதமாக சிந்தித்து அடுத்த காரியங்களில் இறங்க.... தாங்கள் போட்ட திட்டப்படி புவனாவைக் கடத்தினர்.
இனி...
வைரவன் சொன்னதைக் கேட்டதும் "என்னடா சொல்றே..?" எனக் கத்தினார்.
"அண்ணே என்னாச்சு...?" அவரின் கோபத்தைப் பார்த்து அதிர்ச்சியாய் கேட்ட புவனாவின் சித்தாப்பாவிடம் "அந்தச் சிறுக்கி நம்மளை..." என ஆரம்பிக்க என்ன நடந்திருக்கும் என யூகித்த சித்தப்பா "அண்ணே... கடைத்தெரு... உணர்ச்சிவசப்படாதீங்க... வீட்ல போயி பேசலாம்..." என்று அடக்கினார்.
"என்னால முடியலப்பா... எப்படி வளர்த்தேன்... நேத்து வந்தவன் பெரிசின்னு கிளம்பிட்டாளே... இதுக்காகவா பாத்துப் பாத்துப் படிக்க வச்சேன்..." மெதுவாகப் புலம்பியபடி போனை வைத்தார்.
அதற்குள் பக்கத்துக் கடைக்காரர் "என்ன எதாச்சும் பிரச்சினையாண்ணே" என எட்டிப் பார்த்தார். உடனே திருப்பத்தூரார் "ஒண்ணுமில்லண்ணே ஊர்ல ஒரு இடத் தகறாரு... பங்காளி பிரச்சினை... அதான்..." என அதற்கு முற்றுப்புள்ளி வைத்தார். இவர்களின் பேச்சை வைத்து கடைப்பையன் பொண்ணு எஸ்கேப்பாயிடுச்சு போல என யூகித்து நமக்கென்ன வந்துச்சி என அதை மறந்து அவர்களைப் பார்த்தான்.
"டேய் கடையைப் பாத்துக்க... வீட்டுக்குப் பொயிட்டு வாறோம்... லேட்டான பூட்டிட்டு சாவியை எடுத்துக்கிட்டுப் போயிடு..." எனச் சொல்லிவிட்டு புவனாவின் அப்பாவை தனது பைக்கில் ஏற்றிக் கொண்டு வீட்டுக்குக் கிளம்பினார் சித்தப்பா.
"என்ன புவனா... எல்லாத்துக்கும் ஓகேன்னு சொல்லிட்டுத்தானே கிளம்பினே... இப்ப இப்படி தேம்பித் தேம்பி அழுறே... யாராவது பார்த்தா பிரச்சினையாயிடும்... நாங்க இதை உங்களுக்காகத்தான் பண்றோம்..." புவனாவிடம் மெதுவாகச் சொன்னான் அண்ணாத்துரை.
"அண்ணா... எங்கப்பாவை விட்டு நான் எங்கயும் போனதில்லை... ராம் மேல உள்ள காதல்ல வீட்டை விட்டு வந்துட்டேன்... ஆனா அப்பா... நான் வீட்டை விட்டு ஓடிட்டேன்னு தெரிஞ்சா... ஐய்யோ அவரோட நிலமையை என்னால நினச்சிக்கூடப் பாக்க முடியலைப்பா..." அழுகையோடு சொன்னாள்.
"இங்க பாரு... கொஞ்ச நாள்தான் கோபம் எல்லாம் அப்புறம் எல்லாம் சரியாயிடும். உங்களை உங்கப்பாவே வீட்டுக்கு வரச்சொல்லுவார். நீ வைரவன்கூட வண்டியில வரவும் நாங்கூட ஆடிப்பொயிட்டேன். ஆனா அவரு ரொம்பச் ஜென்டிலா உன்னை வழி அனுப்பலையா... அவரு எல்லாத்தையும் பார்த்து சரி பண்ணிடுவாருன்னு நம்பிக்கை இருக்கு... " என்றான் அறிவு.
"ஆமா அறிவு... எங்கண்ணன் எப்படி இப்படி மாறினான்னு எனக்குப் புரியவே இல்லை... எனக்கு பணமெல்லாம் கொடுத்தான்... பாத்துப் போடி... பத்திரமா இருடின்னு சொல்லி என்னோட கையைப் புடிச்சிக்கிட்டு கலங்கிட்டான்... அண்ணான்னு சொல்லி அவனோட நெஞ்சுல சாஞ்சு ஓன்னு கத்தணும் போல இருந்துச்சு.... ஆனா எல்லாத்தையும் அடக்கிக்கிட்டேன்... இம்புட்டுப் பாசத்தை மனசுல தேக்கி வச்சிக்கிட்டுத்தானே எங்கிட்ட அப்படியெல்லாம் நடந்துக்கிட்டான்... எங்கப்பா அம்மாவை நெனச்சா பாவமா இருக்கு.... எனக்கு இப்போ இந்தக் காதல் கத்திரிக்காயெல்லாம் வேண்டான்னு தோணுது... திரும்பிப் போயி எங்கப்பா மடியில விழுந்து அழணும் போல இருக்கு..." கண்ணீரோடு சொன்னாள்.
"இப்ப நீ திரும்பிப் போனா திருப்பாச்சி அருவாளால உன்னையை வெட்டி செங்கக் காலவாயில போட்டு எரிச்சிட்டு ஊருக்குப் பொயிட்டான்னு சொல்லிடுவானுங்க... ஏன்னா உங்க ஆளுங்க இந்த மாதிரி எத்தனையோ பண்ணியிருக்கானுங்க... இப்பக்கூட பனையூர்ல வரதட்சணைக் கொடுமையில புதுப்பொண்ணை சுண்ணாம்புக் காலவாயில போட்டு எரிச்சானுங்கதானே... கொஞ்ச நாள் பொறுத்துக்க அப்புறம் எல்லாரும் சந்தோஷமா இருக்கலாம்." என்றான் பழனி.
"டேய் அண்ணா... ராம்கிக்கு எல்லாம் சொல்லிட்டியா... சேவியர் எப்பக் கிளம்புறான்... அவன் மெட்ராசுக்கு வந்துருவானுல்ல.." என அண்ணாத்துரையிடம் கேட்டான் சரவணன்.
"எல்லாம் சொல்லியாச்சு... சேவியர் நேர சென்னை வந்துருவான்..." என்றவன் புவனாவிடம் திரும்பி "புவனா எதாவது சாப்பிடுறியா?" எனக் கேட்க, "எனக்கு ஒண்ணும் வேண்டாம்... நீங்க காபி குடிக்கிறதுன்னா குடிங்க" என்று புவனா சொல்ல கார் திருச்சி நகருக்குள் சீறிக் கொண்டிருந்தது.
வீட்டிற்குள் நுழைத்த புருஷனைக் கட்டிக் கொண்டு அழுதாள் புவனாவின் அம்மா. "வைரவா... எடுடா அந்த அருவாளை... அந்த தே... சிறுக்கி எங்க இருந்தாலும் வெட்டி வீசிட்டு வாறேன்... படிக்கப் போறேன் படிக்கப் போறேன்னு சொல்லி எங்கழுத்தை அறுத்துட்டாளேடா..." கோபத்தில் என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் கத்தினார்.
"அப்பா... உக்காருங்க... அம்மா அவருக்கு தண்ணி கொண்டாந்து கொடு... இப்ப எதுக்கு கத்துறிய... எம்மவ ஓடிப்பொயிட்டான்னு ஊருக்கு தெரியிற மாதிரி பண்ணுறதுக்கா... அவ பிளான் பண்ணிக் கிளம்பிட்டா... இதை எப்படி டீல் பண்ணனுமோ அப்படி டீல் பண்ணனும்... சும்மா கத்தி காரியத்தைக் கெடுக்கக்கூடாது..."
"என்னடா நீ என்னவோ வேற யாருவுட்டோ புள்ள ஓடிப்போன மாதிரி பேசுறே... போனது நம்ம புள்ள... தலகுனிவு யாருக்கு.... நமக்கு... கேவலப்படுத்திட்டுப் போயிருக்கா... இப்பத்தான் பொறுமையாப் பேசுறாரு... அன்னைக்கே எங்கிட்ட விட்டிருந்தா இத்தனை தூரம் வந்திருக்குமா... அன்னைக்கு நீதானே என்னைத் தடுத்தே...." சித்தப்பா முறுக்கினார்.
"யோவ்... அவரே நொந்து போயி இருக்காரு.. நீ அதுல இன்னும் கொஞ்சம் கீறி விடுறியா... அன்னைக்கு நீ அவனை அடிச்சதாலதான் அவ அந்தப் பயல தீவிரமா விரும்ப ஆரம்பிச்சிருக்கா... பேச வந்துட்டாரு... வெட்டுறேன்... குத்துறேன்னு குதிச்சியன்னு வச்சுக்கவே உன்னோட குதிகால் நரம்பை நா... வெட்டிப்புடுவேன்... நாந்தான் எப்படி செய்யணுமோ அப்படிச் செய்யணுமின்னு சொல்றேன்னுல்ல... அப்புறம் எதுக்கு குதிக்கிறே... குதிக்கிறதுக்கு இது ஒண்ணும் திருப்பத்தூர் பஞ்சாயத்து இல்ல... நம்ம குடும்பத்து மானம்... மரியாதை... குதிச்சா எல்லாம் வந்திருமா... சும்மா கத்திக்கிட்டு... எல்லாத்தையும் யோசிச்சிப் பேசணும்..." வைரவன் கோபத்தில் வார்த்தைகளை வீசினான்.
"டேய்... டேய்.... இப்ப என்னடா... அவன் உன்னோட சித்தப்பன்டா... உனக்கும் அவனுக்கும் ஆயிரம் பிரச்சினை இருக்கலாம்... இது நம்ம மானப் பிரச்சினை... அவன் சொல்றதுதான் சரி... நீ எதுக்கு தேவையில்லாம பேசுறே..."
"இல்லப்பா... அப்படி பண்றேன் இப்படிப் பண்றேன்னு இப்ப இந்த நிலமையில வந்து நிக்குது... அதான் கோபமாப் பேசிட்டேன்.. சாரி சித்தப்பா...."
"சரி... விடுடா... நா ஒண்ணும் நெனச்சிக்கல... அவன் குடும்பத்தை உண்டு இல்லைன்னு பண்ணனும்டா..."
"வேண்டாம் சித்தப்பா அவன் பண்ணுனதுக்கு அந்த அம்மாவும் கூடப் பொறந்தவங்களும் என்ன செய்வாங்க... அவ போனது போனதா இருக்கட்டும்... வெளிய தெரியாம தேடுவோம்... ஊர்ல யாராச்சும் கேட்டா... திருப்பத்தூர்ல இருக்கதா சொல்லிக்குவோம்..." என்று தொடர்ந்த பேச்சில் தானே எல்லாம் செய்வதாகச் சொல்லி அப்பாவையும் சித்தப்பாவையும் முடிந்தளவுக்கு புவனாவை தேடும் முயற்சியில் இருந்து மாற்ற நினைத்தான். ஆனால் இருவருக்கும் அவனது பேச்சில் உடன்பாடு இல்லை.
புவனாவின் அம்மாவும் அழுகையோடு "அந்தச் சிறுக்கி இனி செத்தா என்ன வாழ்ந்தா என்ன... எக்கேடோ கெட்டுப் போகட்டும்... அந்தச் சனியன் தொலஞ்சதுக்கு நாம ஏன் எழவு வீடு மாதிரி கெடக்கணும்... நாளைக்கி நல்ல ஆட்டுக்கறியா எடுத்தாந்து கொழம்பு வச்சி எண்ணய் தேச்சி தலமுழுகிட்டு சாப்பிட்டு நம்ம வேலயைப் பாப்போம்... இனி யாரும் அவளைத் தேடுறேன்னு சொல்லிக்கிட்டு எம்முன்னாடி வராதீக" என கத்தியபடி தலையை அள்ளி முடிந்து படக்கென்று எழுந்தவள் வைரவனைப் பார்த்து கண்ணால் எப்படி எனக் கேட்க, வைரவனும் சூப்பரம்மா என கண்ணாலே சொன்னான்.
"என்னடா எங்க வராங்களாம் எதாவது சொன்னாங்களா?" கேட்டவள் காவேரி.
"ம்... திருச்சி தாண்டிட்டானுங்களாம்... இப்பத்தான் காபி குடிச்சானுங்களாம்... அங்கன இருந்த எஸ்.டி.டி பூத்துல இருந்துதான் அண்ணாத்துரை அடிச்சான். புவிதான் ஒண்ணும் சாப்பிடலையாம்... ஒரே அழுகையா அழுகிறாளாம்... இந்த முடிவுக்கு ஒத்துக்கிட்டு இருக்கக்கூடாதோன்னு இப்பத் தோணுது... பாவம் நா இருந்தாலும் ஆறுதலா இருக்கும்... அதான் மல்லிகாவைக் கூட்டிக்கங்கடான்னு சொன்னேன்... பொம்பளப்புள்ள எல்லாம் வேண்டான்னு சொல்லிட்டானுங்க..." வருத்தமாய்ச் சொன்னான் ராம்கி.
"சரி விடு... எல்லாப் பொண்ணுங்களுக்கும் இருக்கதுதான்... உங்கூட வாழ்ந்துட்டா அப்புறம் எல்லாம் மறந்துடுவா... ஆனா ஒண்ணுடா அவளை கடைசி வரைக்கும் கண்கலங்காம பாத்துக்கடா... நீதான் வேணுமின்னு எல்லாத்தையும் உதறிட்டு வர்றா..."
"என்னடி நீ... எனக்கு அவதான் உலகம்... கையில வச்சி தாங்கிற மாட்டேனா..."
"இப்ப இப்படித்தான் சொல்வே... அப்புறம் சண்டை வந்தா அவளுக்குத்தான் போக்கிடமில்லையேன்னு படக்குன்னு எதாவது சொல்லச் சொல்லும்..."
"நான் அப்படி இல்லை... புவனாதான் நான்... நாந்தான் புவனா.... நீ பாக்கத்தானே போறே.. இப்ப எனக்கு என்னோட புவியைப் பாக்கணும் போல இருக்கு... எப்ப வருவான்னு இருக்கு... வந்தோடனே என்னைக் கட்டிப்பிடிச்சி அழுவாதானே..."
"இருடா... இருடா... எதுக்கு இப்படி.... அவ வரட்டும் கட்டிப்பிடிச்சு அழுகுறாளா... இல்ல கழுத்தை நெறிக்கிறாளான்னு பார்ப்போம்..." என்று சிரித்தாள் காவேரி.
வைரவன் சொன்ன ஐடியாவையும் மீறி எப்படியோ கசிந்து ஊருக்குள்ளும் செய்தி காட்டுத்தீயாய் பரவி புவனா வீட்டில் ஊரே கூடி சோகமாய் நிற்க...
ஆளாளுக்குப் பேசினாலும் எதையும் காதில் வாங்காமல் வைரவன் பிரச்சினையை எப்படி சமாளிப்பது என மனசுக்குள் வியூகம் அமைக்க...
நாகம்மாவும் சீதாவும் என்னாச்சோ ஏதாச்சோன்னு பதட்டத்தில் இருக்க... விவரம் அறிந்த முத்து மாமா வீட்டுக்குள் அங்கும் இங்கும் நடக்க...
புவனாவை எப்படியும் மனைவி ஆக்கிவிடலாம் என இளங்கோ கனவு கண்டு கொண்டிருக்க...
என்ன பண்ணுறானுங்களோ தெரியலையே... சரியா பண்ணியிருப்பானுங்களா... ஒரு போன் கூடவா பண்ணக்கூடாது என மல்லிகா நகம் கடிக்க...
இந்தப்புள்ளைங்க இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கக் கூடாது என தமிழய்யா தவிக்க...
புவனாவைச் சுமந்து கொண்டு மெட்ராசுக்குள் சீறிய கார் சேகரின் வீட்டு வாசலில் வந்து நின்றது.
-(சனிக்கிழமை தொடரும்)
-'பரிவை' சே.குமார்.
2 எண்ணங்கள்:
யப்பா.... படிக்கவே நமக்கும் என்ன ஆச்சோன்னு இருக்கு...இதோட சனிக்கிழமையா??..
ம்...........திக்...திக்......திக் குன்னு அழகா கதை போய்க்கிட்டிருக்கு.சுமுகமா,முடிஞ்சிடப் போகுது.
கருத்துரையிடுக