கல்லூரியில் படிக்கும் போது எங்களது பேராசான் மு.பழனி இராகுலதாசன் அவர்களில் தொடர் வற்புறுத்தலினால் எழுத ஆரம்பித்து, அதன் தொடர்ச்சியாய் பத்திரிக்கைகளுக்கு அனுப்பி அவை பிரசுரமாகி, அவ்வப்போது வரும் மணியார்டர் என நகர்ந்தாலும் பெரிதாய் எதுவும் எழுதிவிடவில்லை என்பதே உண்மை.
| கறுப்பி |
வலைப்பூ, மின்னிதழ்கள், இணைய இதழ்கள், போட்டிகள் என எழுதினாலும் புத்தகம் கொண்டு வரும் எண்ணமெல்லாம் மனசுக்குள் துளியும் இல்லை. முடிந்தவரை எழுதுவோம் என்ற எண்ணத்தோடு பயணித்தவனுக்கு 2019-ன் இறுதிதான் மறக்க முடியாத காலமாக மாறியது.
ஆம் அப்போதுதான் பிரபு, நெருடா இருவரும் முன்னெடுப்பில் எனது கதைகள் தசரதனுக்கு அனுப்பப்பட்டு, முதல் சிறுகதைத் தொகுப்பான 'எதிர்சேவை' 2020-ஜனவரியின் சென்னை புத்தகக் கண்காட்சிக்கு வெளியானது. தசரதன் யார், எப்படிப்பட்டவர் என்பது எதுவும் தெரியாது. எல்லாமே மின்னஞ்சல் வழிதான். தசரதன் என்ற பெயரைப் பார்த்ததும் கொஞ்சம் வயதானவராக இருப்பார் என்று நினைத்திருந்தேன். புத்தகத்தின் பெயர், அட்டைப்படம் குறித்துப் பேசும் போதுதான் அவர் நம்மைவிட இளையவர் என்பதே தெரிய வந்தது. 'எதிர்சேவை' என்பது எங்கள் குலதெய்வம் அழகரின் வைகை எழுந்தருளலில் மிக முக்கியமான நிகழ்வு. அதுவே முதல் புத்தகத்தின் பெயராய் ஆனதில் ஆனந்தம். அதைத் தொடர்ந்து இந்த ஆறு ஆண்டுகளில் பனிரெண்டு புத்தகங்கள் என்பது நானே எதிர்பாராதது.
| கறுப்பி புத்தகமாய் |
கறுப்பி எழுதி நாலைந்து வருடமாகிவிட்டது. அதற்கான விதை ஒரு திறப்பு விழா நிகழ்வுக்குப் பின் நண்பர்களுடன் கழித்த அந்த ஒரு நாளில்தான் மனசுக்குள் விழுந்தது. ஒரு சிறுகதையாக எழுத நினைத்ததை மெல்ல மெல்ல சிறு நாவலாக மாற்றினேன். இந்த நாவல் பேசும் களம் எனக்குப் புதிது என்பதாலும் கொஞ்சம் தூக்கலாகவே பாலியல் கலந்து எழுத வேண்டிய சூழலும் இருந்ததால் இதை முதலில் எனது நட்பு வட்டத்தில் மட்டுமே கொடுத்து வாசிக்கச் சொன்னேன். எல்லோருக்கும் மிகவும் பிடித்திருந்தது. உன் எழுத்தில் இருந்து மொத்தமாக மாறி, அட்டகாசம் பண்ணியிருக்கிறாய் என்றார்கள். அதன்பின் கலக்கல் ட்ரீம்ஸ் இணையப் பக்கத்தில் தொடராகக் கொண்டு வந்தோம். அப்போதும் நல்ல கருத்துகள் வந்தது. எழுத்தாய் மகிழ்ச்சிதான் என்றாலும் புத்தகமாக்கும் எண்ணம் ஏனோ ஏற்படவில்லை.
எப்பவும் சென்னை புத்தகக் கண்காட்சிக்கு எனக்கொரு புத்தகம் நீங்க எழுதணும் எனச் சொல்லும் தசரதன் இந்த முறை கேட்டபோது எதைக் கொடுப்பது என்ற யோசனைதான் முதலில் வந்தது. ஏனென்றால் சென்ற ஆண்டு (2025) நிறையப் பிரச்சினைகள் எழுத்தின் மீதான ஆர்வம் இல்லாமலேயே இருந்தது. போட்டிகளுக்கு அனுப்பியவை தவிர பெரிதாக எதுவும் எழுதவில்லை. பாலாஜி அண்ணன் கொண்டு வந்த 'உன்மத்தம்' கூட இரண்டாண்டுகளுக்கு முன் எழுதி வைத்ததுதான். அவர் எனக்கு ஏதாவது புத்தகம் கொண்டு வரணும் எனத் தினமும் கேட்டபோது கூத்து என எழுதி வைத்திருந்ததை பட்டி டிங்கரிங் பண்ணி உன்மத்தமாக்கிக் கொடுத்தேன். இப்ப தசரதனுக்கு என்ன கொடுப்பது என்ற யோசனை.
| கறுப்பியின் முதல் வாசகி |
இதில் மலாமாவின் கதை மேலே சொன்ன விதையில் விளைந்தது, அதில் எழுபது சதவிகிதத்துக்கு மேல் உண்மை நிகழ்வுகளே. யமுனாவின் கதை முழுக்க முழுக்க கற்பனைதான் என்றாலும் அப்படியான பெண்களை நான் இந்த ஊருக்கு வந்த புதிதில் நாங்கள் தங்கியிருந்த கட்டிடத்துக்கு அருகில் அடிமைபோல் தங்க வைத்திருந்த பெண்களைப் பார்த்ததை வைத்து, அது போன்ற பெண்களைப் பற்றி ஹோட்டலில் வேலை பார்த்த அண்ணன் ஒருவர் சொன்னதை வைத்து எழுதியது. லீமாவின் கதையில் வரும் மனிதர்களும் நிகழ்வுகளும் அன்றாடம் அலுவலகத்தில் பார்த்ததில் இருந்து என்றாலும் இதில் பாதிக்குப் பாதி கறபனையே. கதையின் சுவராஸ்யத்துக்காகத்தான் லீமாவும் சிவாவும் பேசுவதாய் சில செய்திகளை இணைத்துள்ளேன். மொத்தத்தில் கறுப்பி சற்றே வித்தியாசமான நாவல்தான்.
| படைப்புக்கள் வரிசையாய் |
எனக்கு 'கலையாத கனவுகள்' நாவலைப் புத்தகமாக்க வேண்டும் என்ற ஆசை. கலக்கலோ கேலக்ஸியோ கொண்டு வருவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. இத்தனை புத்தகம் போட்டுட்டீங்க, மற்றவர்கள் மாதிரி ஓடுற குதிரை பதிப்பகங்கள் பக்கமாய் போகலாமுல்ல என இப்போதெல்லாம் சிலர் அடிக்கடி கேட்கிறார்கள். விலாசமில்லாமல் இருந்தவனுக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் முகவரி கொடுத்தவர் தசரதன், தொடர்ந்து என் மீது சகோதர அன்பையும் உரிமையுடன் கேட்கும் உறவையும் வைத்துள்ளார். பாலாஜி அண்ணனைச் சொல்ல வேண்டாம், கேலக்ஸியின் பல வேலைகளை அவருடன் நான் செய்கிறேன். விண்மீன் மின்னிதழின் ஆசிரியராய் ஆக்கி வைத்திருக்கிறார். இந்த இரண்டு பேரின் உறவை இறுதி வரை என்னுடன் இறுத்தி, இறுக்கி வைத்துக் கொண்டால் போதும். அதை விட வேறென்ன வேண்டும்...? எழுதும் வரை இந்த இரண்டு பதிப்பகங்களில் தான் என் எழுத்துக்கள் புத்தகம் ஆகும்.
புத்தகக் கண்காட்சி வரும் ஜனவரி-21 ஆம் தேதி வரை நடைபெறும். கண்காட்சிக்குப் போகும் வாய்ப்பிருக்கும் நண்பர்கள் கலக்கல் ட்ரீம்ஸ் அரங்கிற்குச் சென்று கறுப்பியையோ மற்ற புத்தகங்களையோ வாங்கி கி வாசித்து உங்களின் கருத்துக்களைச் சொன்னால் மகிழ்வேன். கூடவே அப்படி வாங்கும் பட்சத்தில் ஒரு போட்டோ எடுத்து எனக்கு அனுப்பினால் சந்தோசம் அடைவேன்.
கேலக்ஸி பதிப்பக புத்தகங்கள் அனைத்தும் கலக்கல் ட்ரீம்ஸில் கிடைக்கும்.
நன்றி.
------------------------------------------------
கறுப்பி (நாவல்)
விலை : ரூ. 130
கலக்கல் ட்ரீம்ஸ் பதிப்பகம்
அரங்கு எண் : 237, 238
சென்னை புத்தகக் கண்காட்சி
ஒய்.எம்.சி.ஏ., நந்தனம்.
தொடர்புக்கு:
தசரதன்
செல் : 9840967484
-----------------------------------------------
-பரிவை சே.குமார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக