மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 19 ஜூலை, 2014

தொடர்கதை: கலையாத கனவுகள் - 70

முந்தைய பதிவுகளைப் படிக்க...



70.  ஆட்டத்தின் முடிவு ஆரம்பமோ..?

முன்கதைச் சுருக்கம்

கிராமத்து ஏழைக் குடும்பத்துப் பையனான ராம்கி, கல்லூரி ரவுடி வைரவனின் தங்கை புவனாவைக் காதலிக்கிறான். சில காரணங்கள் இவர்களது காதல் வெளிச்சத்துக்கு வர இரண்டு பக்கமும் பிடி இறுகுகிறது. நாட்கள் நகர நகர ராம்கியின் அம்மா கொஞ்சம் இறங்கி வருகிறாள். புவனாவுக்கு அது கொஞ்சம் சந்தோஷத்தைக் கொடுத்தது. நாட்கள் நகர... தங்களது காதல் குறித்து வைரவனிடம் சொல்கிறாள். வைரவனுக்காகவும் புவனாவை அடையவும் இளங்கோ ஒரு பக்கம் ராம்கியை கொல்ல அலைகிறான். மணி இந்த விவரத்தை புவனாவிடம் சொல்கிறான். இதற்கிடையே அக்காவைப் பார்க்கப் போன ராம்கி அம்மாவையும் அண்ணியையும் சேர்த்து வைக்கும் நோக்கில் அண்ணன் வீட்டுக்கு அம்மாவுடன் செல்கிறான்.

இனி...

பேரனை நோக்கி கை நீட்டிய நாகம்மாவிடம் அழுகவோ அடம்பிடிக்கவோ செய்யாமல் மூத்தவன் சிரித்தபடி அவள் கைகளுக்குள் சென்று இடுப்பில் சிக்கென்று அமர்ந்துகொள்ள, சின்னவன் தரையில் தவழ்ந்து வந்து அவளது காலைப் பிடித்தான். ராம்கிக்கு 'பசங்க அம்மா மனசை மாத்திருவாய்ங்க' என்று நினைக்கும் போது சந்தோஷமாக இருந்தது.

"அடி ஆத்தி... இந்தக் கூத்தைப் பாருங்க அத்தை... நாங்க அங்கிட்டு வர்றதில்ல... நீங்க இங்கிட்டு வர்றதில்லை... ஆனா உங்க பேராண்டிகளுக்கு ஆளைத் தெரிஞ்சிருக்கு பாருங்க..."

"பின்னே... என்ன இருந்தாலும் இது எங்க ரத்தம்டி..."

"சும்மாவா பெரியவங்க கதையாச் சொல்லிட்டுப் போனாங்க..."

"என்ன கதை... வயக்காட்டுல வரப்பு வழியா நடந்து போகும் போது மகவுட்டுப் புள்ளைய தூக்கி இடுப்பில வச்சிக்கிட்டு மகமுட்டுப் புள்ளய நடக்க விட்டுக் கூட்டிப் போனாளாம்... அவுக வயல்ல மாடு மேயுறதைப் பாத்துட்டு மகவுட்டுப் புள்ள சொன்னுச்சாம் ஆயா உங்க வயல்ல மாடு மேயுதுன்னு... மகமுட்டுப் புள்ள சொன்னுச்சாம் அப்பத்தா நம்ம வயல்ல மாடுன்னு அதத்தானே சொல்றே?" என்றபடி பேரன்களுடன் வீட்டுக்குள் நுழைந்தாள் நாகம்மா.

மருமகள் கொடுத்த காபியைக் குடித்துக் கொண்டே "இங்க பாருத்தா... நா அப்படியிப்படி எதுனாச்சும் பேசியிருப்பே... இல்லங்கள... அதெல்லாம் கோவத்துல விட்ட வார்த்தங்கதான்... அதையெல்லாம் மனசுல வச்சுக்காதே... எனக்கு மூணு பேரும் ஒண்ணுதான்... இன்னும் எம்புட்டு நாளு இருப்பேன்னு எல்லாம் தெரியாது... இதுல உங்கள ஒதுக்கி வச்சி நா என்னத்தைக் கொண்டுக்கிட்டுப் போகப்போறேன்... ராமுப்பயலும் இப்ப பெரிய மனுசனாட்டம் முடிவெடுக்கிறான்... அவன் பேசுறது அவுக அப்பனாட்டம் ரொம்பச் செரியா இருக்கு... நாளக்கி நா செத்த மூணு பேரும் நெறக்கச் செறக்க நின்னு தூக்கிப் போட்டீங்கன்னாப் போதும்... எதையும் மனசுல வச்சிக்காம நல்லது கெட்டதுக்கு வா... நாளு நாளக்கி அங்கன இரு... என்ன நா சொல்றது..."

"அத்தை என்ன மன்னிச்சிருங்க..." என்று அவளது கையைப் பிடித்துக் கொண்டு அருகில் அமர்ந்தவள், "நாந்தே... கேடு கெட்ட சிறுக்கி... கேப்பாரு பேச்சக் கேட்டுக்கிட்டு இப்பிடி பண்ணிட்டேன்... என்னதான் இருந்தாலும் பெரியவங்க பெரியவங்கதான்... பெருந்தன்மையா வந்து பேசுறீக... நானு பாத்தாலும் பாக்காத மாதிரி வரலையா... ஆனா உங்க மவனுக்கு எப்பவும் உங்க நெனப்புத்தான்... எல்லாத்துக்கும் காரணம் நாந்தே... என்ன மன்னிச்சிருங்கத்த..." என்று மருமகள் சொன்னதும் 'செரி விடு... இப்போத்தான் எனக்கு சந்தோசமா இருக்கு..." என்றாள் நாகம்மா.

"அப்புறம் ராமுக்கு கலியாணம் பண்ணிடலாம்ன்னு பாக்குறேன்... அவனுக்கும் ஒரு புள்ளயப் பிடிச்சிருக்கு... பெரியவங்க நல்ல முடிவா எடுத்து கூடிய சீக்கிரம் பண்ணி வச்சிட வேண்டியதுதான்..."

"வேற சாதிப் புள்ளயா...? நம்ம சேகரு கலியாணத்துக்கு வந்தப்போக்கூட முத்தத்த மெதுவாச் சொன்னுச்சு... அவுக அண்ணங்கிட்ட போன்ல சொன்னப்போ அந்தப்புள்ள அவனுக்குப் பொண்டாட்டியா வந்தா முதல்ல சந்தோசப்படுறவன் நாந்தேன்னு சொன்னாக... நா அப்புறம் ஆருக்கிட்டயும் இதப்பத்தி பேசலத்த... ஆமா அது ஒத்துவருமா... பெரச்சன கிரச்சன வராதுல்ல..."

"ம்... எப்புடி ஒத்துப்பானுங்க... பெரச்சனையெல்லாம் வரும்... பாக்கலாம்... மாரி என்ன நெனக்கிறாளோ... தெரியலயில்ல..."

"ம்... பெரிய பெரச்சனையின்னா ஊருச்சனம் நமக்கு சப்போட்டா நிக்குமா..."

"நிக்குமா நிக்காதா தெரியல... பெரியவுகள வச்சி பேசுவோம்... பாக்கலாம்...."

"அம்மா நீங்க அண்ணிக்கிட்ட பேசிக்கிட்டு இருங்க... நா பிரண்டப்பாத்துட்டு வந்துடுறேன்..."

"ஏய்யா... ஐயா வீடு பொயிட்டு வீடு போயிச் சேரலாமுல்ல... ஆடு மாடெல்லாம் பாக்கணும்... கோழிக்கெல்லாம் எர வக்கலை..."

"அம்மா அதெல்லாம் சுமதி அக்கா பாத்துப்பாங்க... அவுகளுக்கெல்லாம் நீங்க பாக்கலையா... அப்புறம் இந்த வெயில்ல போனா ஐயா இருக்காரோ என்னவோ... இங்கதானே சாப்பிட்டு வெயில் தாள போனமுன்னா பேசிட்டு அப்புடியே போயிடலாம்... முக்கியமான பிரண்டும்மா பாத்துட்டு உடனே வந்துடுறேன்...." என்றவன் பதிலுக்கு காத்திராமல் கிளம்பினான்.


"என்னடி ஆச்சி...  ஏ... ஒரு மாதிரி இருக்கே...?" என்று பதறிய அம்மாவிடம் "ஒண்ணுமில்லம்மா... எங்கூட படிச்ச பிரண்ட் ஒருத்திக்கு ரொம்ப முடியலையாம்... அதான்..." என்று பொய்யான பதிலைச் சொல்லிவிட்டு "அம்மா நா அவளப் போயி பாக்கணும்... மல்லிகா வீட்டுக்குப் போயிட்டு அவளோட போயி பாத்துட்டு வந்திடவா..."

"பாக்கணுந்தான்.... அதுக்காக இந்த நேரத்துலயா...?"

"என்னம்மா ராத்திரியா ஆயிப்போச்சு... மத்தியானந்தானே... பொயிட்டு வந்திடுறேன்... எங்கயும் ஓடிட மாட்டேன்... நம்புங்க..."

"இப்ப யாருடி நீ ஓடிப்போகப் போறேன்னு சொன்னா.... அப்பா சாப்புட வருவாரு... இந்தப் பயலும் சுத்திட்டு வந்தான்னா எங்க... என்னன்னு கேப்பாங்க... அதான்..."

"அம்மா சந்தேகமா இருந்தா மல்லிகா வீட்டுக்கு போன் பண்ணச் சொல்லுங்க... அங்கதான் இருப்பேன்... ஆனா உன்னோட சீமந்த புத்திரம் பேசுனான்னா நா பத்திரகாளியா மாறிடுவேன்... சொல்லிடுங்க..." என்றாள்.

"ஏண்டி அவன் மேல அம்புட்டுக் கோபம் உனக்கு..."

"என்னோட வாழ்க்கையில விளையாடுறான்..." என்றபடி சைக்கிளை எடுக்க 'வாழ்க்கையில விளையாடுறானா... என்ன சொல்லிட்டுப் போறா இவ' என நினைத்தபடி அவள் வாசலைத் தாண்டிச் செல்லும்வரை சைக்கிளின் பின்னே கண்களை பயணிக்கவிட்டாள்.

"என்ன இளங்கோ... என்னமோ கிழிச்சிருவேன்... அது இதுன்னே... பய இங்க வந்திருக்கானாமுல்ல... இதைவிட நல்ல சான்ஸ் கிடைக்காது... எப்ப போடப்போறே...?" சிகரெட்டை இழுத்தபடி வைரவன் கேட்டான்.

"இரு மச்சான்... அதுக்கு நேரம் வரணுமில்ல... திருமயத்துல ஒருத்தன் இருக்கானாம்... கமுக்கமா முடிச்சி கம்மாய்க்குள்ள தூக்கிப் போட்டுட்டு போய்கிட்டே இருப்பானாம்... பணம் அதிகமா எதிர் பார்ப்பானாம்... பேசச் சொல்லியிருக்கேன்... இன்னைக்கு நாளைக்கு பைனல் பண்ணிடலாம்..."

"என்னமோ போ... இங்க வச்சி போட்டுட்டுப் போறத விட்டுட்டு..."

"இல்லடா.... மணிப்பயலுக்கிட்ட பேசுனேன்... அவன் புத்தனாட்டம் எனக்கு அட்வைஸ் பண்ணுறான்... ரெண்டு பேரையும் வாழ விடுன்னு சொல்றான்... எனக்கென்னவோ இங்க வச்சி போடுறதைவிட திருப்பூர்ல வச்சிப் போடுறதுதான் சேப்புன்னு தோணுது... எவன் போட்டான்னு தெரியாது... சுலபமா இவங்கூட இருக்கானாமே சேவியரு... அவன மாட்டிவிட்டுட்டு தப்பிச்சிக்கலாம்..."

"என்னமோ சீக்கிரம் செய்யி... இல்லைன்னா எங்க சித்தப்பன் மாப்பிள்ளையோட வந்து நிப்பான்... புவனாவைப்பத்தி உனக்கு நல்லாத் தெரியும்... மாப்பிள்ளை பேசிட்டா அவங்கூட கிளம்பினாலும் கிளம்பிடுவா... பின்னால என்ன நடந்தாலும் அவ சைடு சேப்புன்னு நினச்சிப்பா... பாத்துக்க... அம்புட்டுத்தான் சொல்லுவேன்..."

"நீ கவலைப் படாதேடா... எல்லாம் நா பாத்துக்கிறேன்..." என்றான் இளங்கோ.

"சரி... சரி... அந்த தமிழ் வாத்தி நம்மளப் பாத்துக்கிட்டே வர்றான்... எதாவது பேசுவான்... அதுக்குள்ள கிளம்பிடலாம்..." என்று வைரவன் வண்டியை ஸ்டார்ட் பண்ண, "தம்பி வைரவா... இருங்க... உங்ககிட்ட பேசணும்" என்று சத்தமாகச் சொல்லியபடி தமிழய்யா வர, "சரி நீ கிளம்பு... என்னன்னு கேட்டுட்டு வாறேன்... எல்லாம் ஞாபகத்துல வச்சிக்க... ஓகே..." என்றபடி வண்டியில் இருந்து இறங்கி பவ்யமாக நின்றான்.

"என்னடி இந்த வெயில்ல விழுந்து வர்றே...? அப்படி என்ன தலைபோற காரியம்..." வேர்க்க விறுவிறுக்க வீட்டுக்குள் நுழைந்த புவனாவைப் பார்த்து மல்லிகா கேட்டாள்.

"தல போற காரியந்தான்... கொஞ்சம் தண்ணி கொடு..." என்றபடி அமர்ந்தாள்.

"இந்தாடி..." மல்லிகா கொடுத்த மண்பானைத் தண்ணீரைக் குடித்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு  "எங்கண்ணன் இளங்கோ மூலமா ராம்கியை கொல்ல ஆள் ஏற்பாடு பண்ணியிருக்கானாம்..."

"ஏய்.. என்னடி சொல்றே...? யாருடி சொன்னா... இது உண்மையா...?"

"ஆமா... உண்மைதான்.. மணிப்பய சொன்னான்... இளங்கோ இதைச் செஞ்சா எங்கண்ணன் என்னை அவனுக்கு கட்டி வைக்கிறானாம்"

"ஆ... ஆத்தி... எதுக்குடி இவனுகளுக்கு இம்புட்டு கொலைவெறி... வேணான்டி உங்கண்ணங்கிட்ட பேசி வீட்ல பாக்குற மாப்பிள்ளையை கட்டிக்கடி... ராம்கி உயிரோட இருக்கட்டும்..."

"என்னடி நீ... இப்படி பேசுறே.... இதுக்கா இம்புட்டு நாளும் காதலிச்சோம்... ராம்கி செத்தா நா உசிரோட அடுத்தவனுக்கு பொண்டாட்டியா இருப்பேன்னு நீயும் நினைச்சிட்டியா என்ன... இதை முதல்ல தடுக்கணும்டி... எங்கண்ணனுக்கிட்ட இதைப் பத்தி பேசினா சுதாரிச்சிக்குவான்... அண்ணாத்துரைக்கிட்ட பேசணும்... இல்ல சேவியர்கிட்ட பேசணும்...."

"அவங்ககிட்ட பேசி என்னடி பண்றது... எனக்குப் பயமா இருக்கு... ராம்கி வேற வந்திருக்கிறதா இப்பத்தான் சரவணன் போன்ல சொன்னான்..."

"என்னது... ராம்கி வந்திருக்கிறாரா? எப்போ..? எனக்கு ஏன் போன் பண்ணலை..?"

"யாருக்கிட்டயும் சொல்லாம திடீர்ன்னு வந்திருக்கான்... அண்ணாத்துரைக்கு மட்டுந்தான் தெரியுமாம்... எதுக்குன்னு தெரியலை... அவன் வந்தாத்தான் தெரியும்... ஆனா இப்போ நீ சொல்றதைப் பார்த்தா அவனா சதிவலையில வந்து மாட்டிக்கிட்டானோன்னு பயமா இருக்குடி... இரு அவன் வீட்டுக்கு போன் பண்ணிப் பார்க்கலாம்..."

"உங்கிட்ட சொல்லி எனக்குச் சொல்லச் சொல்வாரே... பின்ன ஏன் எதுவும் சொல்லாம..." புலம்பினாள். "இருடி... அவனுக்கிட்ட கேக்கலாம்..." என்றபடி போனடிக்க ரிங்க் போய்க் கொண்டே இருந்தது.

"சை எங்க போனாங்கன்னு தெரியலையேடி..." என்றபடி போனை வைத்துவிட்டு இருவரும் ஒன்றும் பேசாமல் அமந்திருந்தனர். அப்போது வாசலில் வண்டி வந்து நிற்கும் சப்தம் கேட்கவே "யாரு இப்ப?" என்றபடி மல்லிகா எழ, புவனாவும் அவளுடன் எழுந்து வாசலுக்கு வர அங்கே ராம்கி கேட்டைத் திறந்து உள்ளே வந்து கொண்டிருந்தான்.

(புதன்கிழமை தொடரும்)
-'பரிவை' சே.குமார்.

7 எண்ணங்கள்:

Menaga Sathia சொன்னது…

சூப்பரா போகுது..

Unknown சொன்னது…

நன்று.சில அதிர்வுகளுடன் தொடர்கிறது..........தொடரட்டும்!

Unknown சொன்னது…

மிக அருமை. பகிர்வினிற்கு நன்றி..!

நண்பர்கள் தின வாழ்த்து அட்டைகள், வாழ்த்துகள், எஸ்.எம்.எஸ்.களுக்கு:
Happy Friendship Day 2014 Images

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

அருமை
தொடர்கிறேன் நண்பரே
தம 2

கோமதி அரசு சொன்னது…

பசங்க அம்மா மனசை மாத்திருவாய்ங்க'//
பாட்டியின் கையில் ஒரு பேரனும், காலைக் கட்டிக் கொண்ட் பேரனும்
மகிழ்ச்சி தருகிறார்கள்.

புவனாவுக்கு மகிழ்ச்சி தானே!?
ராம்கியை பார்த்துவிட்டாளே!

Yarlpavanan சொன்னது…

சிறந்த பகிர்வு
தொடரட்டும்

kowsy சொன்னது…

கதை நன்றாகப் போகின்றது. மண்வாசனை பேச்சிலே பளிச்சிடுகின்றது