மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

புதன், 16 ஜூலை, 2014தொடர்கதை: கலையாத கனவுகள்

முந்தைய பதிவுகளைப் படிக்க...68.  முடிவை நோக்கி நகர்த்தும் காலம்

முன்கதைச் சுருக்கம்

கிராமத்து ஏழைக் குடும்பத்துப் பையனான ராம்கி, கல்லூரி ரவுடி வைரவனின் தங்கை புவனாவைக் காதலிக்கிறான். சில காரணங்கள் இவர்களது காதல் வெளிச்சத்துக்கு வர இரண்டு பக்கமும் பிடி இறுகுகிறது. நாட்கள் நகர நகர ராம்கியின் அம்மா கொஞ்சம் இறங்கி வருகிறாள். புவனாவுக்கு அது கொஞ்சம் சந்தோஷத்தைக் கொடுத்தது. நாட்கள் நகர... தங்களது காதல் குறித்து வைரவனிடம் சொல்கிறாள். வைரவனுக்காகவும் புவனாவை அடையவும் இளங்கோ ஒரு பக்கம் ராம்கியை கொல்ல அலைகிறான். மணி அவனைக் காப்பாற்ற புவனாவிடம் பேச முயல்கிறான்.

இனி...

திர்முனையில் புவனாவின் அப்பா குரல் கேட்டதும் மணி மெதுவாகப் பேசி அவர் கேட்ட குறுக்குக் கேள்விக்களுக்கெல்லாம் பதில் சொல்லி ஒரு வழியாக வீட்டு நம்பரை வாங்கி போன் செய்தான். எதிர்முனை குரலை வைத்து அது அவளின் அம்மா என்று முடிவு செய்து "புவனா இருக்காங்களா?" என்று கேட்டான்.

"இருக்கா... ஆமா நீங்க யாரு...?"

"அவங்க கூட படிக்கிறேன்... பாட சம்பந்தமா ரெண்டு வார்த்தை பேசணும்... கொஞ்சம் கொடுக்குறீங்களாம்மா?"

"ம்..." என்றவள் "புவனா... உனக்குத்தான் போன்..." என்று கத்திவிட்டு 'எப்பப் பார்த்தாலும் பயலுகதான் போனடிக்கிறானுங்க' என்று முணங்கியபடி நகர, "அலோ" என புவனாவின் குரல் ஒலித்தது.

அந்தக் குரலைக் கேட்டதும் மணிக்குள் அவள் மீதான காதல் மெல்ல எழும்பியது. கண்கள் கலங்க, பேசமுடியாமல் வாயை அடைத்தது.

"அலோ யாருங்க... ஒண்ணும் பேசாம இருந்தா யாருன்னு தெரியும்?"

"நா... நா... மணி பேசுறேங்க..."

"மணியா... எந்த ம... ஓ.... அவனா... உனக்கு என்ன வேணும்...?"

"இருங்க... கோபப்படாதீங்க... நான் இப்ப சொல்றதை மட்டும் கேளுங்க... உணர்ச்சி வசப்பட்டு பேசாதீங்க... ப்ளீஸ்.."

"ம்... சொல்லுங்க..."

"உங்க அண்ணனும் இளங்கோவும் சேர்ந்து ராம்கியை முடிக்கத் திட்டம் போட்டிருக்காங்க..."என்று அவன் சொன்னதும் புவனா சத்தமாகச் சிரித்தாள்.

"ஏங்க சிரிக்கிறிங்க...?"

"அப்புறம் சிரிக்காம... நீ நல்லவன் மாதிரிப் பேசுறே... ஆமா இந்தக் கதையை யாரு சொன்னா?"

"இது கதையில்லங்க... இளங்கோ எங்கிட்ட வந்து ராம்கியைப் போடணும்ன்னு சொன்னான்... நான் மறுத்துட்டேன்... ஆனா அவனுங்க யாரையாச்சும் ஏற்பாடு பண்ணுவானுங்க... இளங்கோ எம்புட்டுக்காசு வேணுமின்னாலும் கொடுக்கத் தயாரா இருக்கான். காரணம் என்னன்னு தெரியுமா? உங்கண்ணன் அவனுக்கு உங்களைக் கட்டித்தாறேன்னு சொல்லியிருக்கான்....இப்ப சொன்னதெல்லாம் எங்கம்மா மேல சத்தியாமா உண்மைங்க..." என்றவன் அவளது பதிலை எதிர்பார்க்காமல் "ராம்கியை  காப்பாற்றி உங்க காதலையும் காப்பாத்திக்கங்க... செஞ்ச பாவங்களுக்கு பிராயச்சித்தமா இதை உங்ககிட்ட சொல்றேன்... அவசரப்படாம முடிவெடுங்க..." என்றபடி போனை வைக்க, அப்படியே தலையில் கையை வைத்துக் கொண்டு சோபாவில் 'தொபுக்கடீர்' என விழுந்தாள்.

"அம்மா... சீக்கிரம் கிளம்புங்கம்மா... அக்கா வீட்டுக்கு பொயிட்டுத் திரும்பணுமில்ல..." பைக்கை ஸ்டார்ட் பண்ணியபடி கத்தினான் ராம்கி.

"இருடா... வாரேன்..." என்றபடி வந்த நாகம்மா "ஆமா அப்பவே கேக்கணுமின்னு நினைச்சேன்... இது ஆருவுட்டு வண்டிடா?"

"அண்ணாத்துரையோடது... அவங்க வீட்ல மூணு வண்டியிருக்கு... ஊருக்குப் போறவரைக்கும் இதை வச்சி ஓட்டச் சொல்லிக் கொடுத்தான்..."

"ம்... அம்புட்டும் தங்கமான புள்ளங்க..." என்றபடி வண்டியில் ஏறினாள்.

அம்மா இருப்பதால் வண்டியை மெதுவாக ஓட்டிக் கொண்டு போன ராம்கியின் மனசுக்குள் புவனா வந்து 'என்னடா... வந்து ஒரு போன் கூட பண்ணலை... ஏன்?' எனக் கேட்டுக் கொண்டே இருந்தாள். அம்மாவுக்குப் பயந்து அவளுக்கு போன் கூடப் பண்ணாதது மனசுக்கு வருத்தமாகத்தான் இருந்தது. மல்லிகாவிடம் கிளம்பும் போது போனில் சொன்ன செய்தியை புவனாவுக்கு சொல்லியிருப்பாள் என்பதால் மல்லிகா வீட்டிற்கு புவனா வந்தாலும் வரலாம். எப்படிப் போய் பார்ப்பது.... வரும் போது அம்மாவை எங்காவது இருக்கச் சொல்லிவிட்டு மல்லிகா வீட்டு வரைக்கும் பொயிட்டு வரணும் என நினைத்துக் கொண்டான்.

"என்னடா... ஒண்ணுமே பேசாம வாறே... என்னாச்சு..?"

"ஒண்ணுமில்லம்மா... சும்மாதான்..."

"ம்... அக்கா வீட்டுக்குப் பொயிட்டு வரும்போது அப்படியே தமிழய்யா வீட்டுக்குப் போகணும்... மறந்துடாதே..."

"அ...ஐயா வீட்டுக்கா... அங்க எதுக்கும்மா..?"

"சும்மாதான்... உன்னோட கலியாண விசயமாப் பேசணும்..."

"என்னோட கல்யாண விசயமா? இப்ப அதுக்கு என்ன அவசரம்?"

"இல்ல அந்தப் புள்ள படிப்ப முடிச்சிட்டா வேற யாருக்காச்சும் கட்டி வச்சிருவானுங்கள்ல..."

"எந்தப்புள்ள...?"

"அடேயப்பா... உனக்கு ஒண்ணுமே தெரியாதுல்ல... ரொம்ப நடிக்காத..."

"இ..இல்லம்மா... புவனா பத்தியா பேசினீங்க?"

"ஆமா.. சாதி சனம், ஊரு நாடுன்னு பாத்தா உன்னோட ஆசையை நிறைவேத்த முடியாதுல... அதான்... துணிஞ்சிட்டேன்... உங்க ரெண்டு பேருக்கும் கலியாணம் பண்ணி வைக்கலாம்ன்னு முடிவு பண்ணிட்டேன்..."

"உ...உண்மையாவாம்மா?"

"ஆமா... சீதையும் ரொம்பச் சொன்னா... யோசிச்சேன்... அதுதான் சரியின்னு பட்டது... நாம போயி பேசுறதைவிட படிச்சவங்க போனா எப்படிப் பேசணுமோ அப்படிப் பேசி சுமூகமான ஒரு முடிவுக்கு வர வைப்பாங்க... அதான் ஐயாவை விட்டு பேசச் சொல்லலாம்ன்னு..."

"அம்மா... ரொம்பச் சந்தோஷமா இருக்கு... நம்ம பக்கம் சரிம்மா... ஆனா அவங்க அவ்வளவு சீக்கிரம் ஒத்துக்கமாட்டாங்கம்மா..."

"பேசிப் பாப்போம்... வந்தா சரி... இல்லைன்னா இருக்கவே இருக்கா நம்ம சின்னத்த மவ... மெட்ராசுல படிச்சிட்டு எதோ வேலைக்குப் போறான்னு சொன்னாக... உனக்குச் சரியா வரும்... "

"என்னம்மா திடீர்ன்னு மாத்திப் பேசுறீங்க?"

"ஆமா... சரி வரலைன்னா அவங்க கூட மோதவா முடியும்... அப்புறம் அம்மா எடுக்கிற முடிவுதான்.... என்ன நாஞ்சொல்றது?"

"ம்..." என்றவன் அதற்கு மேல் பேசவே இல்லை. 

க்கா வீட்டில் பேசிக் கொண்டிருக்கும் போது...

"என்னத்தா... இப்பல்லாம் மாப்ள வந்தாத்தான் இங்கிட்டு வாறே... என்னாலயும் முன்ன மாதிரி எங்கயும் போகமுடியலை" என்ற முத்து மாமா, "மாப்ளக்கும் காலாகாலத்துல ஒரு கால்கட்டைப் போட்டுற வேண்டியதுதானே?" என்றார்.

"எண்ணன்னே பண்றது... எல்லாத்தையும் பாக்க வேண்டியிருக்குல்ல... ராமு கலியாண விஷயமா நானும் ஒரு முடிவெடுத்திருக்கேன்... நானே உங்கிட்ட பேசணுமின்னு நெனச்சேன்... நீங்க ஆரம்பிச்சிட்டீங்க... நீங்கதானே முன்னாடி நின்னு நடத்தப் போறீங்க..."

"என்ன பீடிகை போடுறே...?"

"பீடிகை இல்ல... அவன் விரும்புற புள்ளையே கட்டி வச்சிறலாம்ன்னு பாக்குறேன்..."

"என்னத்தா சொல்றே... அவங்களுக்கும்... நமக்கும்..." இழுத்தார்.

"புள்ளைங்க சந்தோசத்தைவிட வேற என்னண்ணே இருக்கு... பேசிப்பார்ப்போம்... இல்லேன்னா இவன் காலமெல்லாம் அவள நினைச்சு கட்டுனவளையும் சந்தோஷமா வச்சிக்கமாட்டான்..."

"சொல்றது சரிதான்... ஆனா... சரி சரி... நீ முடிவு பண்ணிட்டே... பேசிப்பாரு...  எல்லாம் நல்லா முடியும்.. அப்ப நீங்க பேசிக்கிட்டு இருங்க..." நான் கம்மாயில போயி ஒரு விழுக்காடு விழுந்துட்டு வாறேன்..." என்றபடி கிளம்பினார்.

க்கா வீட்டில் இருந்து திரும்பும் போது...

"அம்மா... நா ஒண்ணு சொன்னா கோவிச்சுக்க மாட்டீங்களே...?"

"என்ன...?"

"பிள்ளைங்க சந்தோஷம்தான் முக்கியம்ன்னு மாமாக்கிட்ட சொன்னீங்கள்ல..."

"ஆமா... அதுக்கென்ன இப்போ..."

"நான், அக்கா சரி... மூணாவதா அண்ணனோட சந்தோஷமும் முக்கியந்தானே..."

"வேற பேச்சு இருந்தாப் பேசு..." என்றாள் கோபமாக.

"இல்லம்மா... அண்ணன் என்ன செஞ்சுச்சு... அண்ணி... எல்லாப் பொண்ணுங்களும் மாதிரி தனியா இருக்கணுமின்னு ஆசைப்பட்டாங்க... சின்னவங்கதானே... விட்டுங்கம்மா... என்ன இருந்தாலும் அவங்களும் நம்ம வீட்டுப் பிள்ளைங்கதானே..."

"அதுக்காக..."

"அதுக்காக நாம இப்ப அண்ண வீட்டுக்குப் போயி அண்ணி குழந்தைகளை பாத்துட்டு அப்புறம் ஐயா வீடு போறோம்..."

"அதெல்லாம் ஒண்ணும் வேணாம்..."

"ப்ளீஸ்ம்மா... எனக்காக..." என்றபடி வண்டியைச் செலுத்தி அண்ணன் வீட்டு வாசலில் நிறுத்த உள்ளிருந்து வேகமாக வெளியே வந்த அண்ணி "வாங்க அத்தே... வா ராமு..." என்றவள் "டேய்... அப்பத்தா பாரு... " என மூத்தவனிடம் சொல்ல அவன் நாகம்மாவைப் பார்க்க... அவளின் கை அவனைத் தூக்க நீண்டது.

(சனிக்கிழமை தொடரும்)
-'பரிவை' சே.குமார்.

11 கருத்துகள்:

 1. ம்............என்ன நடக்கப் போகுதோ?////அவளின் கை அவனைத் தூக்க நீண்டது.பெரிய பையன்:தொடாதே!///அடுத்த பகுதிக்காக வெயிட்டிங்!

  பதிலளிநீக்கு
 2. சிறந்த பதிவு
  தொடருங்கள்
  தொடருகிறேன்

  பதிலளிநீக்கு
 3. பிள்ளைங்க சந்தோஷம்தான் முக்கியம் என தாய் நினைப்பது அருமை.

  // அப்பத்தா பாரு... " என மூத்தவனிடம் சொல்ல அவன் நாகம்மாவைப் பார்க்க... அவளின் கை அவனைத் தூக்க நீண்டது.//
  அப்பத்தா கைகளில் பேரன் வந்தானா?

  அடுத்தபகுதி படிக்க ஆவல்.

  பதிலளிநீக்கு
 4. This post is very simple to read and appreciate without leaving any details out. Great work! You completed certain reliable points there. I did a search on the subject and found nearly all persons will agree with your blog. Clash Of Clans Hack

  பதிலளிநீக்கு
 5. ஒரு சுயவிவரத்தை தேர்வு செய்க

  பதிலளிநீக்கு
 6. Get your free codes of xbox live codes here and makr your payable game absolutely free Thank you Can gold codes for xbox be free

  பதிலளிநீக்கு

நட்பின் வருகைக்கு நன்றி..!

பகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...