மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வியாழன், 30 ஏப்ரல், 2020

படித்ததில் ரசித்தது : கண்ணதாசன் கவிதை

காலத்தால் அழியாத செட்டிநாட்டுக் கவிஞன் கண்ணதாசன்... செட்டிய வீட்டில் மாமியார் மருமகள் சண்டை இருந்தாலும் வெளியில் தெரியாது... பெரிய பெரிய வீடுகளில் வாழும் அவர்கள் அப்படியெல்லாம் சண்டை போட்டுக் கொள்ளும் மனிதர்களாகவும் தெரிவதில்லை...


அதிகம் அதிர்ந்து பேசாத ஆச்சிமார்களே எங்கள் பகுதி நகரத்தார்கள். அப்படியிருக்க கவியரசு மாமியார் மருமகள் சண்டையை பெரிய மரபுக்கவிதையாக எழுதியிருக்கிறார்... இதை நண்பர் முகநூலில் பகிர்ந்திருந்த போது இப்படி எழுதியிருக்கிறாரே கண்ணதாசன் செய்யலாமா எனச் சில நண்பர்கள் கருத்திட்டு இருந்தார்கள்... ஆமா ஆச்சிமார்கள் பேரம் பேசுவார்களே ஒழிய இப்படிப் பேசுவார்களா எனத் தோன்றினாலும் கண்ணதாசன் எப்போதும் பார்த்த, கேட்டவற்றைத்தான் அதிகம் பாடலாக்கியிருக்கிறார் என்பதால் இதுவும் அவர் பார்த்ததாகவோ அல்லது கேட்டதாகவோ ஏன் இருக்கக் கூடாது.

கண்ணதாசன் | Tamil and Vedas

இதை முகநூலில் வாசித்ததும் ரொம்பப் பிடித்துப் போனது... அங்கும் பகிர்ந்தேன்... சரி யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்ன்னு இங்கயும் பதிஞ்சாச்சு... நமக்கும் ஒரு பதிவாச்சுல்ல... பகிர்ந்து கொண்ட நண்பர் காளிதாசுக்கு நன்றி.

செட்டிநாட்டு_மாமியார்_வாதம்
நல்லாத்தான் சொன்னாரு
நாராயணச் செட்டி!

பொல்லாத பெண்ணாக
பொறுக்கி வந்து வச்சாரு

வல்லூறைக் கொண்டு வந்து
வாசலிலே விட்டாரு

கல்லாப் பொறந்ததையும்
கரும்பாம்புக் குட்டியையும்

செல்லாப் பணத்தையும்
செல்ல வைச்சு போனாரு

ஊரெல்லாம் பெண்ணிருக்கு
உட்கார வச்சிருந்தா

தேரெல்லாம் ஓடிவந்து
திருவிழாக் கோலமிடும்.

எட்டுக் கண் விட்டெரிக்க
எந்தம்பி மகளிருக்க

குத்துக் கல்போலே ஒண்ணெ
கூட்டிவந்தோம் வீடுவரை!

ஆறாயிரம் வரைக்கும்
அள்ளி வச்ச சீதனமும்

ஆறு வண்டி சாமானும்
அடுக்கி வைக்க பாத்திரமும்

சொக்க வெள்ளிப் பால்குடமும்
சோதி மின்னும் ரத்தினமும்

பச்சரிசி மூட்டையுடன்
பருப்பு வகை அத்தனையும்

எட்டுக்கல் மூக்குத்தியும்
ஏழு பவன் சங்கிலியும்

கண்டசரம் தோடு
காப்பு வைர மோதிரமும்

கண்டாங்கிப் பட்டுவகை
காசியிலே நெய்த பட்டு

மெத்தையுமே பத்துவகை
விரிச்சு வைக்க கம்பளமும்

தேக்கு மரம் கடைஞ்சு
செஞ்சு வச்ச பீரோவும்

தந்திருப்பான் எங்க தம்பி
தன் மகளை தந்திருந்தா

வந்தாளே காலியம்மா
வாய்க்கரிசி இல்லாமல்

அப்பன் கொடுத்த சொத்து
ஆறுநாள் தாங்காது

கப்பலிலே வருகுதூணு
கதையா கதைபடிச்சான்

கண்ணா வளத்த பிள்ளை
காலேசிலே படிக்க வைச்சு

மண்ணாளும் ராசாபோல்
வளர்ந்ததடி என்வீட்டில்

பெண்ணா இவ சனியன்
புத்தி கெட்டு போனேனே

தம்பிமக சமைச்சா
சபையெல்லாம் வாசம் வரும்

அள்ளி இலையிலிட்டா
அடுக்கடுக்கா வெள்ளிவரும்

உண்ணவொரு கையெடுத்தா
உள்நாக்கில் நீர்வடியும்

கத்தரிக்காக் கூட்டுவச்சா
கடவுளுக்கே பசியெடுக்கும்

வெண்டைக்கா பச்சடியும்
வெள்ளரிக்கா தக்காளி

கிண்டி விட்ட கீரைக்கும்
கீழிறங்கும் தெய்வமெல்லாம்!

அப்படிக்கி சமைப்பாளே
அள்ளியள்ளி வைப்பாளே

அடுப்படிக்கு நான்போக
அவசியமே இல்லாமே

உட்கார்ந்த பாய்வரைக்கும்
ஓடிவந்து வைப்பாளே

இவளும் சமைச்சாளே
எல்லாந் தலையெழுத்து

முருங்கையிலே கீரை
முளையாய் முளைச்சதடி

விடிஞ்சா எந்திரிச்சா
வேறுகாய் இல்லையடி

குப்பையிலே கீரை
கொத்தாய் கிடைச்சதடி

அப்பா இவ எடுத்து
அகப்பையிலே கிண்டி விட்டு

சப்பாத்திக் கள்ளியை போல்
தையல் இலை போட்டு

வச்சாளே! சாமி இந்த
வலுசாரத் தந்தானே

வந்த நாள் தொட்டு
என் மகனைப் பிரிச்சு வைச்சா

எந்த நாள் பாவமோ
இப்ப வந்து சுத்துதடி

தலைக்காணி மந்திரத்தால்
தாயை மறக்க வச்சா

கொலைக்காரி வந்து எங்க
குடும்பம் பிரிச்சுவைச்சா

மலையரசி காளி எங்க
மாரியம்மா கேக்கோணும்

பலகாரம் தின்பதற்கும்
பசியே எடுக்கலைடி

ராசாக் கிளி போலே
நல்ல பிள்ளை பெத்தெடுத்தேன்

பேசாக் கிளியாச்சு
பெண்டாட்டி நினைவாச்சு

ஊசப் பணியாரம்
உளுந்த வடைக்கு ஊசலடி

பாருடாண்ணு சொன்னா
பாக்காம போறாண்டி

கேளுடாண்ணு சொன்னா
கேக்க மனம் இல்லியடி

எப்பவோ நானும்
இது வரைக்கும் வாழ்ந்தாச்சு

கொப்பாக எங்களைய்யா
கொடுத்தத நான் வச்சிருந்தா

இப்பாவி கையாலே
இழிசோறு திங்கணுமா

ஆத்தா கொடுத்தாளே
ஆறு தலைமுறைக்கு

ஐயா கொடுத்தாரே
ஐநூறு பொன் வரைக்கும்

பூமி கொடுத்தாரே
போட்டாக்க பொன் விளைய

சாமி கொடுத்ததுபோல்
தாய் தகப்பன் தந்ததெல்லாம்

பாவி மகன் வாழ
பகுந்து கொடுத்தேனே

நீட்டி படுக்கும்வரை
நிம்மதியா வாழ்ந்தேனா

ஊட்டி வளத்த பிள்ளை
ஒரு வார்த்தை கேட்டானா

எல்லாம் முடிஞ்சதடி
எமன் வந்தால் போதுமடி

பல்லாக்கு தூக்கி
பரிவாரம் தூக்கி வந்து

பச்சை மரம் வெட்டி
பட்ட விறகடுக்கி

வச்ச பின்னே மீண்டும்
வாழ வரப் போறேனா

கொள்ளி வச்சு தலமாட்டில்
குடமுடைக்க வந்த பிள்ளை

பள்ளி வரை என்னை
பாத்து வச்சு காத்தானா

தேவி விசாலாட்சி
தென்மதுரை மீனாட்சி

காவலுக்கு நீதான்
கடைசி வரை வேணுமடி

ஒரு மகளைப் பெத்தேனா
உதவிக்கு வேணுமின்னு

மருமகளை நம்பி நின்னேன்
மகராசி பேயானா

நல்லாத்தான் சொன்னாரே
நாராயணன் செட்டி!

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

செட்டிநாட்டு_மருமகளின் எதிர் வாதம்
அவ கெடக்கா சூப்பனகை
அவ மொகத்தே யாரு பாத்தா?

அவுக மொகம் பாத்து
அடியெடுத்து வச்சேன் நான்

பத்து வராகன்
பணங்கொடுத்தார் எங்கய்யா

எத்தனைபேர் சீதனமா
இவ்வளவு கண்டவுக?

ராமாயணத்திலயும்
ராமனுக்கு சீதைவந்தா

சீதனமா இவ்வளவு
சேத்துவச்சா கொண்டுவந்தா?

கப்பலிலே ஏத்திவச்சா
கப்பல் முழுகிவிடும்
அவ்வளவு சாமான்
அரிசி பருப்புவரை

மாவு திரிச்சுவச்சு
மலைமலையா அடுக்கிவச்சு

ஊறுகாய் அத்தனையும்
ஒண்ணு விடாமவச்சு

நாக்காலி முக்காலி
நாலுவண்டி ஏத்திவச்சு

பாயும் தலையணையும்
பலவகையா கட்டிவச்சு

ஆளு வீடடங்காத
அழகான பீரோவும்

கண்ணாடிச் சாமானும்
கனத்தவெள்ளி பாத்திரமும்

அம்மிகுழவி
ஆட்டுக்கல் அத்தனையும்

கட்டிகொடுத்து
என்னை கட்டிக்கொடுத்தாக

வைரத்தால் கண்டசரம்
வளைககப்பு மோதிரங்கள்

சிறுதாலி பெருந்தாலி
சுட்டியெல்லாம் செஞ்சாக

தூக்கமுடியாம
தூக்கு கழுத்தூரு

முந்நூறு பவுனுக்கு
முள்ளங்கி பத்தைப்போல

எங்கையா ஆத்தா
எனக்குக் கொடுத்தாக

ஒருவேளை சோத்துக்கும்
உதவியில்லை இவ்வீட்டில்

மாமியார் இண்ணு சொல்லி
மாரடிச்சு என்னபண்ண?

கல்யாணியாச்சியும்தான்
கட்டிவிட்டா தன் மகளை

ஒருபொட்டுதாலி
ஒருவேளைச் சாப்பாடு

அதுமாதிரி இவளும்
அடைஞ்சிருக்க வேணுமடி

சம்பந்தம் பண்ணவந்தா
சண்டாளி சூப்பநகை

வேறேவைக்க நாதியில்லை
வீடில்லை வாசலில்லை

சோறுவைக்க பானையில்லை
சொத்துமில்லை பத்துமில்லை

புள்ளைதான் பெத்துவச்சா
பெண்ணோடு சோறு வர

தலைகாணிமந்திரமாம்
சங்கதிய கேளுங்கடி

பெண்டாட்டி சொல்கேக்க
புத்தியில்லா ஆம்பிளையா?

வீட்டு மருமகளா
வெளக்கேத்த வந்தவளை

சக்களத்தி போல நெனைச்சு
சதிராடுகின்றாளே

எங்களுக்கும் அண்ணந்தம்பி
ஏழுபேரு இருக்காக

அவுகளுக்கு பெண்ணாட்டி
அணியணியா வந்தாக

எங்காத்தா ஒருவார்த்தை
எடுத்தெறிஞ்சு பேசவில்லை

என்னைப்போல் பெண்ணாக
எண்ணி நடந்தாக

சனியம் புடிச்ச
என் தலையில்வந்து உக்காந்தா

மாமியார்க்கரியின்னா
மனசிரக்கம் கூடாதா

சாமியாரா ஆக
தன்மகனை விட்டிருந்தா

நாம ஏன் இங்கவந்து
நாத்தசோறுங்கோணும்?

அவுகளுக்கு நாஞ்சொல்லி
அலுப்பா அலுத்துவிட்டேன்

செவிடா இருக்காக்
சேதிசொல்ல எண்ணமில்லே

பட்டதெல்லாம் போதும்
பகவானே இங்கவந்து!

சட்டியிலே பொட்டு
தாளிச்சு கொட்டிவிட்டா

வட்டியிலே போட்டு
ஒரு வாய்ச்சோறு வைக்கையிலே

கொட்டுகிறா கொட்டு
தேள்கூட கொட்டாது

அவளுக்கழுவேனா
அன்னாடம் புள்ளைகொண்ட

சீக்குக்கு அழுவேனா
தினமும் கவலையடி

கோட்டையூர் அம்மந்தான்
கூலிகொடுக்கோணும்

பொன்னரசி மலையரசி
பு த்தி புகட்டோணும்

எங்க சொகங்கண்டேன்
இங்குவந்த நாள்முதலா?

கடவுளுக்கு கண்ணிருந்தா
காட்டுவான் கண்ணெதிரே

வத்தக்குழம்பு
வறுத்துவச்ச மொளகாயும்

பத்தியம்போல் சாப்பிடத்தான்
பாவி இவ வீடுவந்தேன்

தம்பி மகளை எண்ணி
தாளமில்லே கொட்டுறா

நம்பி அவளும்வந்தா
நாயாப்போயிருப்பா

கும்பி கருகி
குடல்கருகி நின்னிருப்பா

வெம்பி வெதும்பி
வெளக்குமாறாயிருப்பா

தம்பி மகளாம்
தம்பிமக தெரியாதா?

நாமா இருந்தமட்டும்
நாலுழக்கு பாலூத்தி

தேனா கொடுத்து இவள
திமிர்புடிக்க வச்சிருக்கேன்

போனாபோகட்டுமிண்ணு
பொறுத்து கெடந்தாக்க

தானான கொட்டுகிறா
தடம்புரண்டு ஆடுகிறா

அவதலைய போட்டாத்தான்
ஆத்தா எனக்கு சொகம்

எப்பவருவானோ
எடுத்துக்கினு போவானோ

இப்பவா சாவா?
இழுத்து வலியெடுத்து

கெடையாகெடந்து
கிறுக்கு புடிக்காமே

சாகவே மட்டா
சத்தியமா நான் சொல்றேன்

எங்க கொலதெய்வம்
இருந்தா பழிவாங்கும்

பங்காளி மக்களெல்லாம்
பாக்க பழிவாங்கும்

படுத்துனா மருமகள
படுத்துட்டா இண்ணு சொல்லி

நடுத்தெருவில் நிண்ணு
நாலுபேர் சிரிப்பாக

பாக்கத்தான் போறேண்டி
பாக்கத்தான்போறேன்நான்

ஒருத்தனுக்கு முந்தானை
ஒழுங்காநான் போட்டிருந்தா

இருக்கிற தெய்வமெல்லாம்
எனக்காக கேக்கோணும்

அவகெடக்கா சூப்பநகை
அவமொகத்த யார்பாத்தா?

இந்தக் கவிதையைப் படிச்சிட்டு எத்தன ஆச்சிக கண்ணதாசனைத் திட்டினாங்களோ தெரியாது... இருந்தாலும் நல்லாத்தானே இருக்கு.

-'பரிவை' சே.குமார்.

5 எண்ணங்கள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

கவியரசருக்கு இவையெல்லாம் சாதாரணம்...

நம்ம பாதைக்கு வாந்துட்டீங்க... வருக... வருக...

வெங்கட் நாகராஜ் சொன்னது…

மாமியார் - மருமகள் சண்டை - நல்லாத்தேன் இருக்கு கண்ணதான் பாட்டும். ரசித்தேன் குமார்.

ஸ்ரீராம். சொன்னது…

ரசித்தேன் நானும்.

Unknown சொன்னது…

சண்டையில் கூட தமிழ் தாழ்ந்து விடக் கூடாது என்று கொண்டையில் வைத்து அடித்த கெட்டிமேளம் இந்த கவிதை

கணேசன் சொன்னது…

அருமை