மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 12 ஜூலை, 2014

தொடர்கதை: கலையாத கனவுகள் - 68

முந்தைய பதிவுகளைப் படிக்க...


68.  மாற்றம் என்பது மனதைப் பொறுத்தது

முன்கதைச் சுருக்கம்

கிராமத்து ஏழைக் குடும்பத்துப் பையனான ராம்கி, கல்லூரி ரவுடி வைரவனின் தங்கை புவனாவைக் காதலிக்கிறான். சில காரணங்கள் இவர்களது காதல் வெளிச்சத்துக்கு வர இரண்டு பக்கமும் பிடி இறுகுகிறது. நாட்கள் நகர நகர ராம்கியின் அம்மா கொஞ்சம் இறங்கி வருகிறாள். புவனாவுக்கு அது கொஞ்சம் சந்தோஷத்தைக் கொடுத்தது. நாட்கள் நகர... தங்களது காதல் குறித்து வைரவனிடம் சொல்கிறாள். இதனால் கோபம் அடைந்த வைரவன் ஒரு சந்தர்பத்தில் தனது பரம எதிரி இளங்கோவிடம் பேசும் சூழல் வர, ராம்கியை நான் போடுகிறேன் என்று சொல்லும் இளங்கோ அதற்கு கைமாறாக புவனாவைக் கேட்கிறான். ஊரில் நடப்பது தெரியாமல் ஊருக்குப் புறப்பட்டு வருகிறான் ராம்கி.

இனி...

மாஹா ஆர்.எக்ஸ்.100ஐ ஸ்டார்ட் பண்ணிய இளங்கோ தனது நண்பனை "ஏறுடா" என்றான்.

"எங்க மாப்ள? இப்ப எங்க போறோம்...?" என்றபடி ஏறியவனிடம் "மணிப்பயல பாத்துட்டு வருவோம்" என்றபடி ஆக்ஸிலேட்டரை முடுக்கினான்.

"என்னடா... திடீர்ன்னு எதிரிகூட நண்பனாயிட்டு வந்திருக்கே? அவனை எல்லாம் எப்பவுமே தூரத்திலதான் வச்சிருக்கணுமின்னு சொல்வே... எப்படிடா?"

"மாப்ள உனக்கே தெரியும்... அந்த புவனாக்குட்டி மேல எனக்கு ஒரு இதுன்னு... அந்தப் பய... அதான்டா ராம்கியோ மூர்த்தியோ... அவன் அவளை லவ்வுறான்னு தெரிய வந்தப்போ ஒரு கணக்குப் போட்டேன்... எப்படியும் வைரவனுக்கு இதுல இஷ்டம் இருக்காது... அந்த இடத்துல நாம புகுறணுமின்னு நினைச்சேன்... ஆக்சுவலா அன்னைக்கு நடந்த தண்ணிப் பார்ட்டிக்கு சொன்ன காரணம்தான் அந்த பயலோட பிறந்தநாள்... ஆனா செலவெல்லாம் நாந்தான்... வைரவனுக்கிட்ட வத்தி வச்சி அவனோட மனசுல எடம் பிடிக்கப் போனவனுக்கு அவன் பத்திக்கிட்டு வந்து நின்னதும் நிறையக் குடிச்சதால அதைக் கக்கினதும் லாபமாப் போச்சில்ல... இப்ப காலேசுல ஒழிக்க நினைச்சவனை சிலவருடங்களுக்குப் பின்னால மேல அனுப்பப்போறேன்... அப்புறம் என்னோட மனசுக்குள்ள ஒரு மூலையில நின்னு சிரிச்சிக்கிட்டு இருக்க புவனாவை அடையப்போறேன்... அதாவது ஒரே கல்லுல ரெண்டு மாங்காய் அடிக்கப்போறேன்... " என்று சத்தமாகச் சிரித்தான்.

"சரி மாப்ள... அப்ப பெங்களூர்ல நம்ம கூட படிச்ச ராதிகா, உன்னைய விரும்புனாளே... நீயும் அவளைக் கட்டிக்கிறதாச் சொன்னியே... அது?"

"என்னடா நீயி... அங்க படிக்க வரைக்கும் நமக்கு ஒரு துணை வேணாமா... அதுக்குத்தான் ராதிகா... அனுபவிச்சாச்சு... இனி அவளை கழட்டி விட்டுற வேண்டியதுதான்... வீட்ல ஒத்துக்கலை... தங்கச்சிக்கு மேரேஜ் பண்ணிட்டுத்தான் பண்ணனும்... கன்வின்ஸ் ஆவாங்களான்னு தெரியலை... நீ நல்லா பையனாப் பார்த்து கட்டிக்கிட்டு சந்தோஷமா இருன்னு சொல்லி அத்து விட்டுற வேண்டியதுதான்.... நமக்கா சொல்லக் காரணம் கிடைக்காது.... நம்புற மாதிரி பேசிக்குவோம்..."

"மாப்ள நீ சாதாரண வில்லன் இல்லடா... வில்லனுக்கு வில்லன்...." 

"இங்க பாருடா... எல்லாத்தையும் பேஸ் பண்ணத் தெரியலைன்னா வக்கீலுக்குப் படிச்சு என்ன லாபம் சொல்லு..." என்றவனின் வண்டி பஸ் நிலையத்தைக் கடந்தபோது அண்ணாத்துரை பைக்கில் யாருக்கோ காத்திருப்பதைப் பார்த்ததும் பைக்கைத் திருப்பிக் கொண்டு அவனிடம் வந்தான்.

"என்ன அண்ணாத்துரை எப்படியிருக்கே?"

"என்ன ஆச்சர்யமா இருக்கு ஒரு நாளும் இல்லாத திருநாளா எங்கிட்ட எல்லாம் பேசுறீங்க..." என்றான் அண்ணாத்துரை.

"ஏன் பேச மாட்டோமா... அப்ப மோதிக்கிட்டம்முன்னா அதுக்காக அப்படியேவா இருக்க முடியும்..."

"அது சரிதான்... படிப்பெல்லாம் முடிச்சிட்டிங்களா? இப்ப யார்கிட்ட பிராக்ட்டிஸ் பண்ணுறீங்க?"

"இன்னும் ரிசல்ட் வரலை... பிராக்டிஸ் போகலை... இனித்தான் போகணும்... சண்முகவேலு மாமாக்கிட்டதான் போகலாம்ன்னு இருக்கேன். ஆமா என்ன பஸ்ஸ்டாண்டுல நிக்கிறே?"

"ஏன்... நிக்கக்கூடாதா...?"

"அப்படிக் கேக்கலை... பூபாலண்ணன் வர்றாரா என்ன?"

"இல்ல... என்னோட பிரண்ட் வர்றான்... அதான்..."

"ம்...அதானே யாராவது வந்தாத்தானே இங்க நிக்க வேண்டிய சூழல் வரும்... அதான்... ஆமா யாரு... இப்பக் கூடப்படிக்கிறவனா?"

"இல்ல... உங்களுக்கு அவனை நல்லாத் தெரியுமே... உங்க ஆளுகளை பிரிச்சு மேஞ்சானே ராம்கி... அவந்தான் வர்றான்..." அண்ணாத்துரை எதார்த்தமாகப் பேச, வைரவனுக்கு கையில் லட்டைக் கொண்டு வந்து கொடுத்து தின்னு தின்னு என்று சொல்வது போல் இருந்தது.

"ராம்கியா... ஆமா அவன் திருப்பூர் பக்கம் இருக்கதால்ல கேள்விப்பட்டேன்... எத்தனை நாள் லீவுல வர்றான்... அந்தப் புள்ள... அட வைரவனோட தங்கச்சி... பேருகூட புவனாவோ கனகாவோ..."

"ம்... அது பேரு புவனா... பசங்களை ஞாபகம் இருக்கு... நீங்க விரட்டுன புவனா பேரு ஞாபகம் இல்லையாக்கும்... நடிப்பா?"

"சரி... சரி... அவங்க ரெண்டு பேரும் லவ்வு அது இதுன்னு கேள்விப்பட்டேனே..."

"அப்படியா... எங்களுக்குத் தெரிஞ்சு அந்த மாதிரி இல்லை... அவன் வர்றது அவங்க அம்மாவையும் அக்காவையும் பாக்க... ரெண்டு நாள் இருப்பான்... அப்புறம் போயிடுவான்... புவனா கிவனாவையெல்லாம் பாக்க வேண்டிய கட்டாயம் அவனுக்கில்லை.... இந்தத் தகவல் போதுமா இல்லை இன்னும் ஏதாவது வேணுமா?" என அண்ணாத்துரை கடுப்பாகக் கேட்கவும் வேண்டியது கிடைச்சாச்சு இனி தேவையில்லாம எதுக்கு பேச்சு என்று நினைத்தபடி "சரி வர்றோம்..." என்றபடி வண்டியை மணி வீடு நோக்கிச் செலுத்தினான்.

"அம்மா... நீ என்ன முடிவு பண்ணியிருக்கே?" தன்னிடம் போனில் கேட்ட சீதாவிற்கு என்ன சொல்வதென்று தெரியாமல் "அது... அது..." என இழுத்தாள் நாகம்மா.

"என்னம்மா இழுக்குறீங்க... எதுலயுமே தீர்மானமா ஒரு முடிவெடுங்க...?"

"அதுக்கில்ல நாம எப்படி அவங்ககிட்ட பொண்ணு கேக்கிறது... அதுவும் இல்லாம நம்ம சாதி சனம் என்ன சொல்லும்... நாளைக்கு ஊர்க்கூட்டம்... நாட்டுக்கூட்டமுன்னு போட்டா எல்லாப்பயலும் அவனுக பக்கம் சேந்துக்கிட்டு நம்மள நாறடிச்சிப்புடுவானுங்களே... முடிய அறுத்து கரும்பு(ள்)ளி செம்பு(ள்)ளி குத்தி கழுத மேல ஏத்தி கேவலப்படுத்துவானுங்களே..."

"அம்மா... எவனும் கேவலப்படுத்த வரமாட்டான்... அவனுக்கு அவளைப் பிடிச்சிருக்கு... அவளுக்கு அவனைப் பிடிச்சிருக்கு... ரெண்டு பேரும் மேஜர்... ஒத்து வந்தாப்பாப்போம்... இல்லைன்னா போலீஸ் ஸ்டேசனுக்குப் போயி கட்டி வைப்போம்... நம்ம சந்தோஷத்தைத்தான் அவன் பெரிசா நினைக்கிறான்... அவன் சந்தோஷத்துக்காக நாம இதைக்கூட செய்யலைன்னா எப்படிம்மா... சொல்லு..."

"சரி நா... எப்படி... அவங்ககிட்ட..."

"நீங்க வேண்டாம்... அவனோட ஐயாவையும் அம்மாவையும் பேசச்சொல்வோம்... அவனுக்காக அவங்க பேசுவாங்க... என்ன சரியா.."

"ம்... சரி... என்ன நடக்கணுமின்னு இருக்கோ அது நடந்துதானே ஆகணும்..." என்றவள் "சீதை... தம்பி வந்துட்டான் போல... வாசல்ல வண்டி வந்து நிக்கிற சத்தம் கேக்குது நா அப்புறமா கூப்பிடுறேன்..." என்றவள் மகளின் பதிலுக்குக் காத்திராமல் வாசலுக்கு ஓடினாள்.

"என்னண்ணே திடீர்ன்னு இந்தப்பக்கம்?" இளங்கோவைப் பார்த்து கட்டிலில் படுத்திருந்த மணி கேட்டான்.

"சும்மாதான் உன்னயப் பாத்துட்டு போகலாம்ன்னு..."

"ஏண்ணே காமெடி பண்றே?" என்று சிரித்தவன், "சொல்லு என்ன விஷயம்?"

"அது... உன்னால எனக்கொரு காரியம் ஆகணும்..?"

"என்னாலயா... படுக்கையில கிடக்கவன் என்ன செய்ய முடியும் சொல்லு?"

"நீ இருந்த இடத்துல இருந்தே என்ன வேணுமின்னாலும் செய்வே... எனக்கு ஒருத்தனைப் போடணும்?"

"போடணுமா...? யாரை...?"

"முன்னாடி நீ போடப் பொயிட்டு பிரண்டு வந்துட்டான்னு வந்தியே அந்த...." அவன் வார்த்தையை முடிக்குமுன்னர் "ராம்கியையா?" என்றான் மணி.

"ஆமா... அவனைத்தான்... உன்னை நம்பித்தான் வைரவனுக்கிட்ட நா போடுறேன்னு சொல்லிட்டு வந்திருக்கேன்... நீ உன்னோட பசங்ககிட்ட சொன்னா வேலை சுலபமா முடிஞ்சிடும்... எவ்வளவு கேக்குறியோ அதை நா இங்க கொண்டாந்து தந்திடுறேன்..."

"வைரவணும் நீயும் சேந்துட்டிங்களா? சந்தோஷம்ண்ணே... ஆனா இது வேண்டாண்ணே... இதுவரைக்கும் நான் எனக்குன்னு எதுவுமே செஞ்சுக்கலை... எல்லாமே உங்கள மாதிரி ஆளுகளுக்காகத்தான் செஞ்சேன்... நா பண்ணுன பாவந்தான் இன்னைக்கு எல்லாமே படுக்கையின்னு ஆயிப்போச்சு... இனி எனக்கு கலியாணம் காச்சி எதுவும் நடக்கும்ன்னு தெரியலை... என்னய பாவம் பண்ணக் கூப்பிடாதீங்கண்ணே..."

"என்னடா இப்படி மாறிட்டே... பணம்டா... பணம்டா... படுத்துக்கிட்டே சம்பாதிக்கலாம்... உன்னால குட்டிக்கரணம் போட்டாலும் இம்புட்டுப் பணம் சம்பாரிக்க முடியாது..."

"எதுக்குண்ணே எனக்குப் பணம்... தினம் தினம் செத்துக்கிட்டு இருக்க இந்த வாழ்க்கைக்கு எதுக்குப் பணம்... என்னடா இவனெல்லாம் வேதாந்தம் பேசுறானேன்னு பாக்குறியா... வரும் போது வாசல்ல பாத்திருப்பியே அம்மாவை... எப்படி இருந்தவங்க... இன்னைக்கு எப்படியிருக்காங்க பாத்தியா... எல்லாம் என்னையப்பத்தின கவலைதான்... நா ரவுடிப்பயலா இருந்தாலும் அவங்களுக்கு தங்கந்தானே... அடிபட்டதுக்கு அப்புறந்தாண்ணே அப்பா, அம்மா பாசமெல்லாம் எனக்குத் தெரிய ஆரம்பிச்சிச்சு... என்னய நினச்சே ரெண்டு பேரும் ஓடாப்பொயிட்டாங்க... மறுபடியும் வெட்டுக்குத்துன்னு இறங்கி எல்லார் தலயிலயும் மண்ணள்ளிப் போட விரும்பலைண்ணே.... அவனும் பாவண்ணே...புவனாவுக்காக நா கூட அவனைக் குத்தினேன்... விட்டிருந்தா கொன்னிருப்பேன்... அப்ப மூடனா மூர்க்கனா இருந்தேன்... மகனுக்காக வாழ்ற அந்த தாயை நான் எங்கம்மா மாதிரித்தான் பார்க்கிறேன்... வேண்டாண்ணே... ஒரு தாயோட வலிய பக்கத்துல இருந்து பாக்கும் போதுதாண்ணே அதோட அழுத்தம் புரியிது..."

"சரி... நீ ரொம்ப மாறிட்டேடா... சித்தாந்தம் எல்லாம் பேசுறே... உன்னோட சித்தாந்தமும் வேண்டாம்... வேதாந்தமும் வேண்டாம்... பணம் குடுத்த எத்தனையோ பேர் இதைச் செய்யக் காத்திருக்கானுங்க... நான் பார்த்துக்கிறேன்... நீ உடம்பைப் பார்த்துக்க.... வர்றமுடா..." என்றபடி கிளம்பினார்கள்.

'பாவம் ராம்கி... எப்படியாச்சும் அவனைக் காப்பாத்தணுமே..?' என்று நினைத்தவன் தன்னைக் கடந்து போன அம்மாவிடம் "அந்தப் போனை இங்கிட்டுக் கொடுத்துட்டு அப்பா போன் நம்பர் எழுதி வச்சிருப்பாங்கல்ல அந்த நோட்டையும் கொடுங்கம்மா..." என்றான்.

அம்மா எடுத்துக் கொடுக்க புவனாவின் அப்பா கடை நம்பரைத் தேடி, கருப்பையா பாத்திரக்கடை என்பதற்கு நேராக இருந்த நம்பருக்கு போன் செய்து ரீசிவரைக் காதில் வைத்தான். சற்று நேரத்தில் எதிர்முனையில் புவனாவின் அப்பா 'அலோ' என்றார்.

(புதன்கிழமை தொடரும்)
-'பரிவை' சே.குமார்.

4 எண்ணங்கள்:

Unknown சொன்னது…

ம்..........கெட்டவனெல்லாம் நல்லவனாறான்.கெட்டப்புறம் தான் தெரியுது வாழ்க்கை ன்னா என்னான்னு,மணி பாவ விமோசனம் தேடிக்கிறாரு,தொடரட்டும்.

Menaga Sathia சொன்னது…

மணி திருந்தியது கதைக்கு நல்ல திருப்பம்... சீக்கிரம் 2வரையும் சேர்த்து வைங்க ..

கோமதி அரசு சொன்னது…

நா ரவுடிப்பயலா இருந்தாலும் அவங்களுக்கு தங்கந்தானே.//

உண்மை.
தாய் பாசத்தை அழகாய் சொன்னீர்கள் குமார்.
கெட்ட்வன் நல்லவன் ஆவது தாய்க்கு மகிழ்ச்சிதான்.

தனிமரம் சொன்னது…

ம்ம் பாவம் புண்ணியம் எல்லாம் விதியின் வலியை அறியும் போது உணரமுடியும் தொடரட்டும் தொடர் !