மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 11 ஜனவரி, 2014தொடர்கதை: கலையாத கனவுகள்

முந்தைய பதிவுகளைப் படிக்க...---------------------------------

42.  கல்யாணத்துக்கு வந்தாளா?

முன்கதைச் சுருக்கம்: 

கிராமத்து ஏழைக் குடும்பத்துப் பையனான ராம்கி, கல்லூரி ரவுடி வைரவனின் தங்கை புவனாவுடன் நட்பாக பழகுகிறான்.  அண்ணனும் மச்சானும் சிங்கப்பூர் செல்ல, வாழ்க்கை கொஞ்சம் மாற்றமான பாதையில் செல்ல ஆரம்பிக்கிறது, மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைத்ததும் காதல் இன்னும் இறுக்கமாகிறது. சீதாவின் திருமணப்பேச்சு மீண்டும் சூடு பிடித்தது. அக்கா சீதாவின் திருமணத்திற்கு புவனா உள்ளிட்ட நண்பர்களை அழைத்திருந்தான்.

இனி...


ராம்கி அக்காவின் திருமணத்துக்காக வேகவேகமாக கிளம்பிக் கொண்டிருந்த புவனா வாசலில் வண்டி வந்து நிற்கும் சப்தம் கேட்கவும் தலையை சீவியபடியே வெளியே வந்து பார்த்தாள். வாசலில் திருப்பத்தூர் சித்தப்பா வண்டியை நிறுத்திக் கொண்டிருந்தார். 'என்னது இவரு என்ன திடீர்ன்னு வந்திருக்காரு?' என்று யோசிக்கும் போதே பின்னாலிருந்து "வாங்க.." என்று அழைத்தாள் அம்மா.

"வாங்க சித்தப்பா... சித்தி வரலை?" என்று கேட்டு வைத்தாள்.

"இல்லடா... ஒரு கலியாணத்துக்கு வந்தேன். அதான் அப்படியே உங்களையும் பார்த்துட்டு கலியாணத்துக்குப் போகலாம்ன்னு நேர இங்க வந்துட்டேன்..."

"உள்ள வாங்க..."

"ஆமா அண்ணன் இருக்காரா?"

"இருக்காக"

"என்ன செல்லம்... இன்னைக்கு காலேசா என்ன... சீக்கிரமே கெளம்பிக்கிட்டு இருக்கே?"

"இல்ல சித்தப்பா... பிரண்டோட அக்கா கல்யாணம்..."

"அப்படியா... எந்த மண்டபத்துல... நா உன்னைய விட்டுட்டுப் போறேன்..."

"இல்ல சித்தப்பா இது பக்கத்துல ஒரு கிராமத்துல நடக்குது... பிரண்ட்ஸ் எல்லாம் சேர்ந்து போறோம்... சைக்கிள்ல போயிருவோம்..."

"கிராமத்துலயா... அவங்க என்ன ஆளுங்க?"

"படிக்கிற இடத்துல ஜாதி பாத்தா சித்தப்பா பழக முடியும்...?" கோபமாகக் கேட்டாள்.

"இல்லத்தா... நம்மளவிட கீழ இருக்கவங்க வீட்டுல போயி சாப்பிட முடியுமா என்ன... நமக்குன்னு காலாகாலமா ஒரு மரியாதை இருக்குல்ல... சாமி கும்பிடுறேன்னு துண்டை எடுக்குறவனை நம்ம நடுவீட்டுல வச்சி சாப்பாடு போடுறோமா இல்ல அவனுக வீட்டுல போயி சாப்பிடுறோமா.... நல்லது கெட்டதுக்குப் போனா கை நனைக்காமத்தானே வாறோம்... இப்ப அவனுக கடையில கலரு வாங்கியாந்து கொடுக்கிறானுவ... வாங்கி குடிக்காம வச்சிட்டுத்தானே வாறோம்...."

"உங்களுக்கு சாதியும் மதமும் பெரிசு சித்தப்பா... படிக்கிற எங்களுக்கு மனசு மட்டும்தான் பெரிசாத் தெரியும்... தயவு செய்து உங்க சாதிப் பிரசங்கத்தை எங்கிட்ட திணிக்காதீங்க..." படபடவென்று பொரிந்தாள்.

"அவரு என்ன சொல்லிப்புட்டாருன்னு இப்படி குதிக்கிறே... அதுக்காக நமக்கிட்ட கைகட்டி நிக்கிறவுக வீட்டுல சாப்பிட்டு வருவியா... அது நம்ம கொலதெய்வத்துக்கு ஆகுமா?" பதிலுக்கு அம்மா பொரிந்தாள்.

"என்னம்மா கொலதெய்வம்.... நாம கும்பிடுற குலதெய்வம்தான் மத்த சாதிக்காரங்களுக்கும் குலதெய்வம்... நீங்க போடுற மாதிரித்தான் அவங்களும் படையல் போடுறாங்க... உங்க சாமி ஏத்துக்க மாட்டேன்னு சொன்னுச்சா என்ன... சும்மா சாமி குத்தம் அது இதுன்னு..."

"என்னம்மா புரட்சி எல்லாம் பேசுறே... ஒரு தராதரம் பார்த்து பழகணும்... அப்பத்தான் நம்ம சாதிக்குன்னு ஒரு மரியாதை இருக்கும்..."

"சாதி... மரியாதை.... எல்லாம் உங்க கூடவே இருக்கட்டும் சித்தப்பா தயவு செய்து எங்ககிட்ட புகுத்தாதீங்க... என்னோட பிரண்ட்ஸ் காத்திருப்பாங்க... நான் கிளம்புறேன்..."

"என்னடி வாய்க்கு வாய் பேசுறே... பெரியவங்க சின்னவங்க கிடையாது... ரொம்ப செல்லங்கொடுத்து மரியாதை இல்லாம பேசக் கத்துக்கிட்டிய..."

"விடுங்க அண்ணி... எங்கிட்ட பேசாம யார்கிட்ட பேசப்போகுது... பட்டி மன்றமெல்லாம் பேசுற புள்ள கருத்தாப் பேசுமில்ல..."

"வாப்பா... என்ன வந்ததும் வராததுமா எங்காத்தாக்கிட்ட என்ன வாக்குவாதம்... அவளும் சேந்துக்கிட்டு பேசுறா...?" என்றபடி வந்தார் புவனாவின் அப்பா.

"இல்லண்ணே... நம்ம புவனா கலியாணத்துக்குப் போறேன்னு சொன்னுச்சு... அதான் யாரு என்ன சாதியின்னு கேட்டேன்."

"என்னப்பா நீ... படிக்கிற பிள்ளைங்களுக்குள்ள என்ன சாதி வேண்டி இருக்கு. எல்லாம் ஒண்ணுகதான்... என்ன போற இடத்துல நாசூக்கா வரத் தெரிஞ்சிக்கிட்டா போதும்... சரி உள்ள வா... நீ போத்தா... போனமா வந்தமான்னு இருக்கணும்... செரியா?"

"சரிப்பா... சித்தப்பா, அம்மா பை" என்றபடி கிளம்பினாள். அவள் போனதும் காபி குடித்தபடி மூவரும் பேசிக்கொண்டிருந்தனர்.

"வைரா எப்ப வருவான்?" 

"அவனா... இந்த மாசம் வரலைன்னு சொல்லிட்டான்... அடுத்த மாசம் வருவான்னு நினைக்கிறேன்..."

"ஆமாண்ணே... காலேசு முடியப் போகுது... புவனாவை மேல படிக்க வச்சிக்கிட்டு இருக்கிறதைவிட பேசாமா நல்ல இடமாப் பாத்து கட்டி வச்சிரலாம்..."

"இல்ல அவளுக்கு படிக்க ஆசை... அதைக் கெடுக்கணுமா? ரெண்டு வருசந்தானே படிச்சா அவ லைப்புக்கு நல்லா இருக்குமில்ல..."

"அதுக்குச் சொல்லலை... காலாகாலத்துல கட்டி வச்சிட்டா கவலையில்லாம இருக்கலாம். ஏன்னா பொதுவுடமை பேசுறேன்னு சொல்லிக்கிட்டு இவ பாட்டுக்கு எதாவது பண்ணிக்கிட்டு வந்து நின்னா..."

"அவ என்னோட பொண்ணு... நெருப்பு மாதிரி..."

"இவுக எதாவது சொல்லிக்கிட்டுத்தான் இருப்பாக... நீங்க எதாவது நல்ல இடமா வந்தா பாருங்க தம்பி... முடிச்சிடலாம்... இவ பிரண்ட்டு அது இதுன்னு சுத்துறதைப் பார்த்தா எனக்கு கலக்கமா இருக்கு.... படிப்பு போதும்... இவுக படிச்சி என்ன கலெக்ட்டராவா ஆகப் போறாங்க..."

"அதுக்காக... அவசரமா கலியாணம் பண்ணனுமின்னு என்ன வந்திச்சு... ஆந்தலாப் பார்ப்போம்... நம்ம குடும்பத்துக்கு ஏத்த மாதிரி வரட்டும் பார்ப்போம்... அதுக்காக எவனுக்காவது கட்டி வைக்கணுமின்னு என்ன தலையெழுத்து வந்துச்சின்னேன்..."

"நானும் உடனே முடிக்கணுமின்னு சொல்லலை... அவ ஒரு பையன் கூட ரொம்ப குளோஸ்ஸா இருக்கான்னு சொல்லுறாங்க... அதான் எனக்கு பயமா இருக்கு..." படக்கென்று வாயைவிட்டு விட்டுவிட்டு விழித்தாள்.

"என்ன அண்ணி சொல்றீங்க... பய கூட பழகுறாளா... எந்தப் பய..?" திருப்பத்தூரார் திடுக்கிடலோடு கேட்டார்.

"இல்ல தம்பி... அவ பெரும்பாலும் பசங்க பொண்ணுன்னு பாக்காம பழகுறா... எல்லாரோடயும் பழகுறான்னு சொல்ல வந்தேன்... பயலுகன்னா நம்ம வைரவனுக்குத் தெரியாம இருக்குமா என்ன... " பேச்சை மாற்றப் பார்த்தாள்.

"பயலுக கூட பழகினா நாலு பேரு நாலுவிதமா பேச ஆரம்பிச்சிருவாங்க... நமக்குதான் அசிங்கம்..."

"ஏய்... அவதான் எதாவது பொலம்புறான்னா நீயும் சேர்ந்து பேசுறே... படிக்கிற இடத்துல பையன் என்ன பொண்ணு என்ன... பொண்ணுக மட்டும் படிக்கிற காலேசு பக்கத்துல இல்லை... அதான் இதுல சேர்த்தோம்.. படிக்கும் போது பேசத்தான் செய்வாங்க... நம்ம புள்ள மேல நமக்கு நம்பிக்கை இருக்கணும்... சும்மா மனசைப் போட்டுக் குழப்பாம நல்ல இடமா வந்தாப் பாரு... அவளுக்கு வியாழ நோக்கம் இருக்கான்னு நானும் சாதகத்தைப் பார்க்கிறேன்... சரி கடைக்கு கிளம்பணும் பேசிக்கிட்டு இருங்க... குளிச்சிட்டு வாறேன்..." என்றபடி புவனாவின் அப்பா உள்ளே சென்றார்.

"அண்ணி... என்ன அண்ணி எதாவது அப்படியிப்படி..."

"அதெல்லாம் இல்லப்பா... பிரண்ட்ஸ்ன்னு சொல்லிக்கிட்டு நிறைய பசங்க போன் பண்ணுறானுங்க அதான் எனக்கு வயித்துல புளியைக் கரைக்குது..."

"சரி அண்ணி... நான் விசாரிக்கிறேன்... அப்படி எதாவது இருந்தா எப்படி கட் பண்ணனுமோ அப்படி கட் பண்ணி விட்டுடலாம்..."

திருமண வீட்டில்...

எல்லோரும் பரபரப்பாகத் திரிய ராம்கி மட்டும் வாசலை வாசலை எட்டிப் பார்த்தான்.

"என்னடா மச்சான்... வாசலை வாசலை பாக்குறே.... மாப்பிள்ளை வீட்டாரெல்லாம் வந்தாச்சு.... தாலி கட்டப் போறாங்க... நீ யாரைத் தேடுறே...?" என்றான் சேகர்.

"இல்லடா... பிரண்ட்ஸ் வர்றேன்னு சொன்னாங்க... இன்னும் காணலை..."

"பிரண்டுகளைத் தேடுறியா... இல்ல.... தங்கச்சி இன்னும் வரலையே வருவாளா மாட்டாளான்னு தவிக்கிறியா?"

"அது..."

"தெரியும்... உள்ள ராசு மச்சான் எல்லா வேலையும் பாத்துக்கிட்டு இருக்காரு... அப்புறம் உன்னய காணோமுன்னு தேடப்போறாங்க... போ வந்துருவா..."

"ம்..." என்றபடி உள்ளே செல்ல எத்தனிக்க, "டேய் என்னடா வாசல்ல மசமசன்னு நிக்கிறே... தாலி கட்டப் போறாங்க... பெரியவன் அங்க நிக்கிறான்... நீ வர்றவங்களை வாங்கன்னு சொல்லாம பிராக்குப் பாத்துக்கிட்டு நிக்கிறே...?" என்றபடி அவனருகே வந்தாள் நாகம்மா.

"வாங்கன்னுதாம்மா சொல்லிக்கிட்டு இருக்கேன்..."

"சரி.... சரி... வர்றவங்களை எல்லாம் சாப்புடப் போகச்சொல்லு.. பந்தி போட்டு ஆளில்லாம ஒரு வரிசை கெடக்கு..." சொல்லியபடி வீட்டுக்குள் போனாள்.

உறவுகள் வரவும் போகவுமாக இருந்தார்கள். தாலி கட்டுவதற்கு தயாராகும் முன்னரே சேகரிடம் மொய் எழுதும் பெட்டி ஒப்படைக்கப்பட்டது.  'ஏம்ப்பா சாம்பார் வாளி யார்க்கிட்ட இருக்கு இங்கிட்டு வாங்கப்பா', 'அந்த கடைசி எலக்கு இட்லி வையிங்கப்பா', 'தம்பி இங்க கொஞ்சம் பொங்கல் வரட்டும்', 'யாருப்பா தண்ணி வச்சிருக்கிறது' என்ற கலவையான குரல்கள் பந்திக் கொட்டகையில் இருந்து வந்த வண்ணம் இருந்தது. தன்னைச் சுற்றி நடப்பவற்றைப் பற்றி யோசிக்காமல் வருபவர்களை வாங்க என்று வாய் சொன்னாலும் மனசு முழுவதும் புவி வருவாளாங்கிற கேள்வியோடு நின்றான்.

'கெட்டி மேளம்... கெட்டி மேளம்' என யாரோ சொல்ல தாலி கட்டுவதற்கான மேளச்சத்தம் கேட்கும் போது ராம்கியின் நண்பர்கள் குழு வந்திறங்கியது.

"வாங்கடா... வாங்கடா... என்ன இம்புட்டு நேரம்?" என்று அவர்களை உள்ளே அழைத்தவன் புவனாவைப் பார்த்ததும் "புவி... ரொம்ப சந்தோஷமா இருக்கு நீ வந்தது... எங்க வரமாட்டியோன்னு தவிச்சிப் பொயிட்டேன்..." என்றபடி அவள் கைகளைப் பற்றி சுற்றும் முற்றும் பார்த்து கையை விடுவித்தான்.

"ம்... நம்ம வீட்டுக் கல்யாணத்துக்கு நான் வராமலா?" என்றபடி அவனுக்கு இணையாக நடக்க, எங்கிருந்தோ வேகமாக அவனருகில் வந்த காவேரி, "என்னடா... சூப்பரான அண்ணியைத்தான் பிடிச்சிருக்கே.. வாழ்த்துக்கள்டா" என்று மெதுவாக சொல்லி "வாங்க அண்ணி" என்று புவனாவைப் பார்த்துச் சொல்ல, "என்ன ராம் எல்லார்க்கிட்டயும் சொல்லிட்டிங்களா?" என்று மெதுவாகக் கேட்டாள்.

"இல்ல இவளுக்குத் தெரியும்... இவதான் சேகரைக் கட்டிக்கப் போறவ..."

"ஓ... சேகர் அண்ணன் ஆளா... ஆமா அண்ணனைக் காணோம்?"

"அந்தா பாரு.... அந்தக் கூட்டத்துக்குள்ள மொய் எழுதிக்கிட்டு இருக்கான்... அப்புறம் பாக்கலாம்... சாப்பிட்டு வந்துடலாமே?"

"கொஞ்ச நேரம் ஆகட்டும்... கொஞ்ச நேரம் உக்காந்துட்டுப் போகலாம்..." என்றாள்.

"அடேய் அவ பின்னாடி திரியிறதுக்குத்தான் எங்களையும் அவ கூட வரச்சொன்னியாக்கும்..." பழனி கேட்க, "அதெல்லாம் இல்ல... நீங்க எல்லாரும் வந்ததுல ரொம்ப சந்தோஷம்..."

ராம்கிக்கு இணையாக புவனா நடந்து வர, எதார்த்தமாக பார்த்த முத்து இவளை எஙகயோ பார்த்திருக்கிறோமே என்று யோசிக்க அவளைக் கடந்து சென்ற நாகம்மாவை அருகே இழுத்து "அடியேய்... நம்ம பய கூட காரக்குடியில சிரிச்சி சிரிச்சி பேசிக்கிட்டு ஒரு வெள்ளத் தோலுக்காரி போனான்னு சொன்னேனே அவதான்டி இப்ப ராமுகூட ஜோடி போட்டு நடந்து வாரா..." என்று சொல்ல நாகம்மா வேகமாகத் திரும்பிப் பார்க்க அங்கே ராம்கியுடன் சிரித்துப் பேசியபடி புவனா நடந்து வந்து கொண்டிருந்தாள்.

(புதன்கிழமை தொடரும்)
-'பரிவை' சே.குமார்.

4 கருத்துகள்:

 1. அடியேய்... நம்ம பய கூட காரக்குடியில சிரிச்சி சிரிச்சி பேசிக்கிட்டு ஒரு வெள்ளத் தோலுக்காரி போனான்னு சொன்னேனே அவதான்டி இப்ப ராமுகூட ஜோடி போட்டு நடந்து வாரா..."////அய்யோ..................மாட்டிக்கிட்டமோ?

  பதிலளிநீக்கு
 2. ஆஹா திருப்பத்துடன் .தொடர்கின்றேன் தொடரட்டும் மனசு.....

  பதிலளிநீக்கு
 3. பொங்கல் நல் வாழ்த்துக்கள் நண்பரே

  பதிலளிநீக்கு
 4. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் தம்பி....

  பதிலளிநீக்கு

நட்பின் வருகைக்கு நன்றி..!

பகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...