மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

செவ்வாய், 14 ஜனவரி, 2014மனசு பேசுகிறது : ஜல்லிக்கட்டு


பொங்கல் என்றாலே ஜல்லிக்கட்டுத்தான்... தமிழ் சினிமாவில் வருவது போல் மாட்டை கண்ணாலோ... பாட்டாலோ... அல்லது அதட்டியோ அடக்க முடியாதும் வீரத்தால் மட்டுமே அடக்க முடியும் என்ற வீரவிளையாட்டு... மாட்டுப் பொங்கல் முடிந்ததும் அன்று மதியம் பெரும்பாலான ஊர்களில் மஞ்சு விரட்டோ, எருதுகட்டோ, வடமாடு மஞ்சுவிரட்டோ அல்லது எருதுகட்டோ நடத்துவார்கள். நாங்கள் மாட்டுப் பொங்கல் வைத்து கருப்பர் கோவிலில் சாமி கும்பிட்டு வீட்டுக்குத் திரும்பியதும் பொங்கல் விருந்தை உள்ளுக்குள் தள்ளிவிட்டு வேகவேகமாக சைக்கிளை மிதிக்க ஆரம்பிப்போம் மஞ்சுவிரட்டுப் பார்க்க...

முன்பு நடந்த வீர விளையாட்டுக்களை எல்லாம் அரசாங்கம் தடை என்ற பெயரில் தடுத்து விட்டது. பெரும்பாலான கிராமங்களில் நடத்தப்பட்ட  மஞ்சுவிரட்டுக்கள் இப்போது நிறுத்தப்பட்டுவிட்டன. எருதுகட்டு வடமாடு மஞ்சு விரட்டாகி இன்று வடத்தையும் காணோம்... மாட்டையும் காணோம்....

மாட்டைப் பிடித்து அடக்கி அதன் கழுத்தில் இருக்கும் துண்டை அவிழ்த்து தன் வீரத்தைக் காட்டிய காலமெல்லாம் போய்விட்டது. இப்பொழுதெல்லாம் அரசு நிர்ணயித்தபடி மாட்டின் திமிலைப் பிடித்தபடி குறிப்பிட்ட தூரம் வரைக்கும் போனாலே போதும் வீரனாகிவிடலாம். அதிலும் குறிப்பாக திமிலை ஒருவர் தொட்டுவிட்டால் மற்றவர்கள் ஒதுங்கிக் கொள்ள வேண்டும். இது தமிழர்களின் வீரவிளையாட்டு இது என்பதை நினைவில் கொள்ள மட்டுமே என்றாகிவிட்டது.

(சிராவயல் மஞ்சுவிரட்டு)

மாட்டுப் பொங்கலுக்கும் காளைமாடு வீட்டில் இருந்தால் அதைக் குளிப்பாட்டி புது மூக்கணாங்கயிறு போட்டு கழுத்தில் மணி கட்டி கொம்பில் வழுவழு என எண்ணெய் தேய்த்து பொட்டிட்டு வால் முடியை சீராக வெட்டி கழுத்தில் குற்றாலம் துண்டு கட்டி அப்படியே இரண்டு கொம்பையும் சேர்த்து ஒரு துண்டு கட்டி புதுக்கயிற்றில் பிடித்து பொங்கக்குழிக்கு கொண்டு செல்லும் போது இருக்கும் பெருமிதமும்... எங்கே என்னோட மாட்டை அவிழ்த்து விடுறேன் புடிச்சிப்பாருடா என்று சவால் விடும் நெஞ்சுரமும்... பொங்கல் குழி சுற்றி... மாட்டைத் தாண்ட விட்டு அவிழ்த்து விரட்டும் போது இருக்கும் சந்தோஷமும்... யாரிடமும் பிடிபடாமல் கழுத்தில் வீட்டில் கட்டிய துண்டும்.. கோவிலில் வாங்கிக் கட்டிய துண்டும் அப்படியே இருக்க வீர நடைபோட்டு வீட்டுக்குத் திரும்பும் மாட்டைப் பிடித்து அதன் முகத்தோடு முகம் வைத்து ஒரு சின்ன முத்தம் கொடுக்கும் போது இருக்கும் சந்தோஷமும் கொடுத்த ஆனந்தத்தை இப்போது மாடுகள் இல்லாமல் வருந்திக் கிடக்கும் கசாலைகளும்... மாட்டுக்கு தண்ணீர் வைக்க பயன்பட்ட கல்லினால் ஆன தொட்டிகள் பரிதாபமாய் கிடக்கும் காட்சிகளும் கொடுப்பதில்லை.

எங்கள் மாவட்டத்தில் முக்கியமான மஞ்சுவிரட்டு சிராவயல் மஞ்சுவிரட்டுத்தான். தேவகோட்டையில் இருந்து திருப்பத்தூருக்கு காரைக்குடி செல்லாமல் மானகிரி வழியாகச் சென்றால் சிராவயல் மஞ்சுவிரட்டுப் பொட்டலைப் பார்க்கலாம். இந்தப் பொட்டல் தற்போது தமிழ் சினிமாவிலும் வர ஆரம்பித்துவிட்டது. வாடி வாசலில் மாட்டை அவிழ்த்துவிட்டதும் அது கூட்டத்துக்குள் சீறிப் பாய்வதே அழகுதான். எங்கு பார்த்தாலும் மனிதத் தலைகளும்... கூட்டத்துக்குள் சீறி தப்பிக்க வழி தேடும் மாடுகளும் என ஒரு சிறப்பான நிகழ்வாக ஒவ்வொரு பொங்கலுக்கும் அரங்கேறும்.

சிராவயல் மஞ்சு விரட்டுக்குப் போவோமா என்று ஒரு குரூப் கிளம்புவது இன்றும் நடக்கத்தான் செய்கிறது. மஞ்சுவிரட்டில் மாடுகளை அவிழ்த்து விரட்டுகிறார்கள் என்றார்கள் எருதுகட்டில் நீண்ட வடத்தை ஒரு குழு பிடித்துக் கொண்டு ஓட பின்னாலயே மாடு ஓடி வரும். அதைப் பிடிக்க ஒரு குழு அதன் பின்னே விரட்டி வரும். குறிப்பிட்ட சுற்றுக்குள் மாட்டைப் பிடிக்க வேண்டும். இல்லையென்றால் மாடு பிடிபடவில்லை என்று அறிவித்து விடுவார்கள். வடத்தில் ஓடும்மாடு நின்று விளையாடும். 


எங்கள் ஊர்ப்பக்கம் ராமுக்காளை என்று ஒரு மாடு மிகவும் பிரபலம். அந்த மாட்டின் உரிமையாளர் ராமு என்று அழைத்தால் நின்று திரும்பிப்பார்க்கும்.... ராமு படுடா என்றால் படுக்கும்.... எழுந்திரி என்றால் எழுந்திரிக்கும். எப்பொழுதுமே எருதுகட்டாக இருக்கட்டும் ஜல்லிக்கட்டாக இருக்கட்டும்.. மாடுகள் விளையாடி முடிந்ததும் உரிமையாளர் கூட அருகில் போக பயப்படுவார்கள். அது பழகிய கயிற்றை அதன் மேல் வீசினால் மட்டுமே கோபம் குறைந்து சாந்தமாகும். அப்படியும் கோபம் குறையாத மாடுகளும் உண்டு. இந்த ராமுக்காளை எத்தனை கோபம் இருந்தாலும் படுடா என்றால் படுக்கும்... உரிமையாளர் அருகில் போய் அதை தடவிக் கொடுத்து பிடித்துச் செல்வார். எனக்குத் தெரிந்து எங்கும் பிடிபடாத மாடு இது.

மஞ்சு விரட்டு எருதுகட்டுக்கு பிரச்சினை வந்தபோது வடமாடு மஞ்சுவிரட்டு நடத்த ஆரம்பித்தார்கள். சுற்றி கம்பால் தடுப்பு அமைத்து நடுவில் மாட்டை வடம் போட்டு கட்டிவிடுவார்கள். ஒரு குழு களத்துக்குள் இறங்கி மாட்டை பிடிக்க முயலும். குறிப்பிட்ட நேரத்துக்குள் பிடிக்கவில்லை என்றால் மாடு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். ஆரம்பத்தில் அனுமதி கொடுத்த போலீஸார் பின்னர் இங்கும் பிரச்சினையை ஆரம்பிக்க இப்போது பலவித கட்டுப்பாடுகளுடன் ஆங்காங்கே மஞ்சுவிரட்டு என்ற ஜல்லிக்கட்டு நடக்கின்றது.இன்று வேலைக்குச் சென்று விட்டு வந்து மாலை எங்கள் அறையில் பொங்கல் வைத்து சாமி கும்பிட்டோம். ஊரில் உள்ள சந்தோஷம் இல்லை என்றாலும் மனசுக்கு மகிழ்வைத் தந்தது. அனைவருக்கும் உழவர்தின வாழ்த்துக்கள்.

மனசு தொடர்ந்து பேசும்...
-'பரிவை' சே.குமார்.

14 கருத்துகள்:

 1. அரசாங்கத்தின் கெடுபிடி தமிழனின் வீரத்திற்கு தந்த கெடுபிடிதான்.

  இனிய பொங்கல் வாழ்த்துக்கள் குமார்...

  பதிலளிநீக்கு
 2. இனிமையான நினைவுகள். ராமுக்காளை பற்றிய செய்திகளும், கோபம் குறையாத காளைகள் பற்றியுமான செய்திகள் புதிது. சிறுவயதில் மதுரையில் ஜல்லிக்கட்டு பார்த்திருக்கிறேன். நாங்கள் கலந்து கொண்ட மஞ்சு விரட்டு வேறு மாதிரி, அதில் மஞ்சுவை மட்டுமல்ல இன்னும் வேறு சிலரையும் விரட்டுவோம் - தினமும்! :)))

  பதிலளிநீக்கு
 3. ஜல்லிக் கட்டு செய்திகள்அருமை நண்பரே
  பொங்கல் வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 4. தித்திக்கும் இனிய உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 5. பொங்கல் பண்டிகையில் தங்கள் மனம்
  ஊரிலேயே தான் இருக்கும் என்பதை அறிய முடிகிறது

  உழவர் தின நல் வாழ்த்துக்கள் குமார்

  பதிலளிநீக்கு
 6. தங்களுக்கும், குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், தித்திக்கும் இனிய தைப் பொங்கல், உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 7. பெயரில்லா15/1/14, முற்பகல் 9:52

  இனிய பொங்கல் வாழ்த்துக்கள் சகோ.
  ம்ம்ம்...... விடாம அசலூரிலும் பொங்கி இருப்பது கண்டு எங்களுக்கும்
  சந்தோசம் பொங்கித்தான் வருது. காணொளி அருமை.

  பதிலளிநீக்கு
 8. எங்க பக்கம் ஜல்லிக்கட்டு கிடையாது! நேரில் பார்த்த உணர்வை ஏற்படுத்தியது கட்டுரை! இனிய பொங்கல்நல்வாழ்த்துக்கள்! நன்றி!

  பதிலளிநீக்கு
 9. பதிவை படிக்கும்பொதே மனம் இனிக்கிறது...பொங்கல் நல்வாழ்த்துக்கள் சகோ!!

  பதிலளிநீக்கு
 10. பகிர்வு அருமை!வீரம் விளைந்த மண்ணில் அரசு செய்யும் அலப்பறை.......ஐய்யகோ!

  பதிலளிநீக்கு
 11. எனக்கென்னமோ ஜல்லிக்கட்டுன்ற விஷயமே சின்ன வயசிலருந்து இப்ப வரை பிடிக்கறதில்ல... அதனால நேர்ல பாத்த அனுபவம் கிடையாது. இப்ப படிக்கறப்ப நினைவுகளின் அசைபோடலில் நானும் இணைந்து கொண்டது சுவாரஸ்யமாக இருந்தது பிரதர்!

  பதிலளிநீக்கு
 12. அதை பார்ப்பதற்கே துணிவு வேணும் அப்படியிருக்கையில் விளையாடுவதென்பது ஸ்சப்பா...

  பதிலளிநீக்கு
 13. இன்றைய சூழ்நிலையில் தமிழக இளைஞர்கள் போயும் போயும் மாடுகளிடம் வீரம் காட்ட வேண்டிய அவசியம் இல்லை என்றே படுகிறது !
  +1

  பதிலளிநீக்கு
 14. நல்ல பகிர்வு.....

  ராமுக்காளை எங்க ஊர் காளையை நினைவுக்கு கொண்டு வந்தது. பிறிதொரு சமயத்தில் பகிர்கிறேன்......

  பதிலளிநீக்கு

நட்பின் வருகைக்கு நன்றி..!

பகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...