மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

புதன், 1 ஜனவரி, 2014தொடர்கதை: கலையாத கனவுகள்

முந்தைய பதிவுகளைப் படிக்க...---------------------------------

39. திருமணபேச்சும் பயமும்...

முன்கதைச் சுருக்கம்: 

கிராமத்து ஏழைக் குடும்பத்துப் பையனான ராம்கி, கல்லூரி ரவுடி வைரவனின் தங்கை புவனாவுடன் நட்பாக பழகுகிறான்.  அண்ணனும் மச்சானும் சிங்கப்பூர் செல்ல, வாழ்க்கை கொஞ்சம் மாற்றமான பாதையில் செல்ல ஆரம்பிக்கிறது, மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைத்ததும் காதல் இன்னும் இறுக்கமாகிறது. இருவரும் சினிமாவுக்குச் சென்றது முதல் இவர்கள் மீது சந்தேகப் பார்வை விழ ஆரம்பிக்கிறது. போனில் வந்த செய்தி கேட்டு அதிர்கிறாள் நாகம்மா.

இனி...

ம்மா அதிர்ச்சியாய் போனில் பேச சீதாவும் ராம்கியும் பயந்து போய் அருகில் வந்து நின்றனர். அவள் பேசிவிட்டு வைக்கவும் "என்னம்மா... என்னாச்சு?" என்றாள் சீதா.

"உங்க மாமாவுக்கு நெஞ்சுவலியாம்... ஆசுபத்திரிக்கு கூட்டிக்கிட்டு போயிருக்காவளாம்... நா ஒரு எட்டு போயி பாத்துட்டு வந்துடுறேன்.. எனக்கு மனசு கெடந்து அடிக்கிது... ஆத்தி... ஆத்தா மாரி எங்கண்ணனுக்கு ஒண்ணும் ஆயிடக்கூடாது... அவரு நல்லாருக்கணும்... ஒனக்குப் பொங்க வைக்கிறேன்"

"அம்மா நானும் வாறேன்" என்றான் ராம்கி.

"அதுவும் நல்லதுதான்... சைக்கிள்ல கூட்டிக்கிட்டு போயிடுவேயில்ல... வெரசாக் கெளம்பு... பொயிட்டு வந்துடலாம். சீதை நீ மாடுகள அவுத்துக்கிட்டுப் போ... நாங்க வந்து கஞ்சி காச்சிக்கிறோம்... சரியா" என்றவள் வேகவேகமாக கிளம்பினாள்.

ருத்துவமனையின் வெளியே நின்ற சித்தப்பா மகனிடம் கேட்டு உள்ளே சென்றவள் முகம் செத்துப் போய் உக்காந்திருந்த அண்ணன் பொண்டாட்டியில் கைகளைப் பற்றிக் கொண்டு "என்ன அத்தாச்சி... என்னாச்சு...?" என்றாள் கண் கலங்கியது.

"காலையில நல்லாத்தான் எந்திரிச்சி வயக்காட்டுப் பக்கம் போனாவ... வந்து சாப்புட உக்காந்தவுக லேசா நெஞ்சை வலிக்கிற மாதிரி இருக்குன்னு சொன்னாவ... வேர்த்துக் கொட்ட ஆரம்பிச்சிருச்சு... எங்களுக்கு பயமாப் போச்சு... அதான் சின்னம்மான் மயனோட வண்டியில கூட்டிக்கிட்டு வந்துட்டோம்." அவள் பேசும் போதே கண்ணீர் வடிகால் தேட சேலை முந்தானையில் மூக்கைச் சிந்தினாள்.

"டாக்குட்டரு என்ன சொன்னாரு?"

"இது லேசான வலிதான் பயப்பட ஒண்ணும் இல்லைன்னு சொன்னாரு... ஊசி போட்டு மாத்தரை கொடுத்திருக்காரு..."

"இங்க இருக்கணுமின்னு சொன்னாரா?"

"இல்லயில்ல... கொஞ்ச நேரம் இருந்துட்டுப் போகச் சொன்னாரு... ஊசி மருந்துக்கு இவுக தூங்கிட்டாக... இவுக எந்திரிச்சிட்டா போயிடலாம்... வயசாயிக்கிட்டே போகுதுல்ல... இனி எல்லாம் வரத்தானே செய்யும்.."

"நா.. சேதி கேள்விப்பட்டதும் பதறிப் பொயிட்டேன்... என்னமோ ஏதோன்னு மனசு கெடந்து அடிச்சிக்க ஆரம்பிச்சிருச்சு... நல்ல நேரத்துக்கு உங்க சின்ன மாப்ள இருந்தான். சைக்கிள்ல வெரசா கூட்டிக்கிட்டு வந்துட்டான்."

பேச்சு தொடர்ந்து கொண்டே போக கனகு மெதுவாக கண்விழித்துப் பார்த்தார்.

"அண்ணே.." கண் கலங்கினாள் நாகம்மா.

"இப்ப எப்புடிங்க இருக்கு?" தோளில் கைவைத்து ஆதரவாய் கேட்ட மனைவியிடம் "பரவாயில்ல" என்றவர் "வாத்தா... உனக்கு யாரு சொன்னா... சின்னவன் பொண்டாட்டி சொல்லிட்டாளாக்கும்... கூடப்பொறக்காட்டியும் சின்னவன் மாதிரி பாசக்காரனை பாக்க முடியாது. அவனுக்கு அமஞ்சவளும் பாசக்காரியா வந்து வாச்சிருக்கா... வலி வந்ததும் கலங்கிப் பொயி நின்னா... ம்... பெத்த புள்ளையாட்டம்... வா... ராமு படிப்பெல்லாம் எப்படி போகுது.?"

"ஆமா அவ அழுதுக்கிட்டே சொன்னதும் நான் என்னமோ ஏதோன்னு கலங்கிப் பொயிட்டேன்... உங்க மாப்ள இருந்ததால வெரசாக் கூட்டியாந்துட்டான்... அவனுக்கென்ன படிப்பு நல்லாத்தான் போகுது... போற ரூட்டுத்தான் சரியாப்படலை..."

"என்ன..?" அவனைக் கேள்விக்குறியோடு பார்த்தார்.

"அம்மா... சும்மா எதாவது சொல்லமா இருங்க... அதெல்லாம் ஒண்ணுமில்ல மாமா... ஒழுங்காத்தான் படிக்கிறேன்... மறுபடியும் டாக்டரைப் பாக்கணுமா மாமா?" பேச்சை மாற்றினான்.

"தேவையில்லை"

"ஏங்க கெளம்பலாமா... இல்ல கொஞ்ச நேரம் பாத்துக்கிட்டுப் போகலாமா?"

"கெளம்பலாம்... கெளம்பலாம்... இங்க இருந்தா உடம்பு சரியில்லாத மாதிரித்தான் தோணும்... போயிரலாம்..."

"சரி... சின்னவுக வெளிய நிக்கிறாக... வாங்க போகலாம்..."

"சின்னவன் உள்ளூருலேயே இருக்கதால நல்லதாப் போச்சு... இல்லேன்னா கஷ்டந்தேன்..."

"அண்ணே.... நம்ம முத்து ஊருக்குப் போயிம் ரெண்டு வருசமாகப் போவுது... வரச்சொன்னா சட்டுப்புட்டுன்னு கலியாணத்தை முடிச்சிடலாம்..."

"ஏன் நான் செத்துப் போயிடுவேன்னு பயப்படுறியா?"

"ஏண்ணே... இப்படி பேசுறீங்க... நீங்க நூறு வருசம் இருப்பீக... அதுக்குச் சொல்லலை காலாகாலத்துல கலியாணத்தைப் பண்ணிட்டா அத்தாச்சிக்கு ஒத்தாசையா இருக்குமுல்ல..."

"சரி... நல்ல விசயம் பேசுறதுக்கு இது நேரமுமில்ல இடமுமில்ல... வீட்டுல போயி பேசலாம்..."

"இல்லண்ணே... நா இப்புடியே போறேன்... வீட்டுல போட்டடு போட்டபடி கெடக்கு... உங்க மருமக மாட்டை அவிழ்த்துக்கிட்டு போயிருப்பா... ரெண்டு நாச்சென்டு வாறேன்... சட்டுப்புட்டுன்னு ஒரு முடிவை எடுக்கலாம்..."

"சரி பொயிட்டு வா... வீட்டுல வச்சி பேசி இந்த வருசம் கலியாணத்தை முடிக்கப் பாப்போம்... அப்புறம் ராசுக்கு வேற கலியாணம் பண்ணனுமில்ல... ஆமா காலேசு முடிச்சிட்டு மேல படிக்கணுமில்லப்பா..." ராம்கியைப் பார்த்துக் கேட்டார்.

"ஆமா மாமா... காரைக்குடிலதான் சேரணும்..."

"ம்... நல்லா படிக்கணுப்பா... மத்த எதுலயும் கவனம் சிதறக்கூடாது... ஊருக்குல்ல நம்ம குடும்பமும் நல்லா இருக்கணும்... உங்காத்தா அதுக்குத்தான் கஷ்டப்படுறா..."

"நல்லா புத்தி சொல்லுங்கண்ணே... "

"அவன் நமக்கு புத்தி சொல்ற மாதிரி வளந்து நிக்கிறான்.. அவனுக்கு புத்தி சொல்லச் சொல்றே... அதெல்லாம் எம்மாப்ள நமக்கு பெருமை சேக்குற மாதிரி காரியந்தான் பண்ணுவான்...."

"ஏங்க காபி குடிச்சிட்டுப் போகலாமா?"

"ஆமா கொஞ்சம் சூடா குடிச்சா நல்லாயிருக்கும்... வாத்தா காபிய குடிச்சிட்டு நீங்க போங்க..."

"நம்ம காதல் பிரச்சினைகளைச் சந்திக்கிற நிலமைக்கு வந்திடும் போல ராம்..." கல்லூரி லைப்ரரியில் புத்தகங்களை சரி பார்த்தபடி மெதுவாகச் சொன்னாள் புவனா. லைப்ரேரியன் வெளியில் சென்றது அவர்களுக்கு பேசுவதற்கு சாதகமாக அமைந்தது.

"ஏன்.. மறுபடியும் எதாவது பிரச்சினையா...? அம்மா மறுபடியும் அடிச்சாங்களா என்ன... உன்னோட முகம் கூட சரியில்லையே"

"அடிக்கலாம் இல்ல... நாம சினிமா போனப்போ உண்டான சந்தேகம் இப்போ இன்னும் தீவிரமா இருக்கு... காரணம் யாருன்னு தெரியலை... எங்க போறதா இருந்தாலும் கேள்வி மேல கேள்வி கேக்குறாங்க... வைரவன் வேற சந்தேகத்தோட பாக்குறான்... பசங்ககிட்ட சொல்லி விசாரிக்க ஆரம்பிச்சிருக்கான்... அந்த ரவுடிப்பய மணி அப்பாகூட இப்ப எங்க கடைக்கு அடிக்கடி வாறதா அப்பா சொல்லிக்கிட்டு இருந்தாரு...."

"ம்... எங்க வீட்லயும் இதே நிலமைதான்... அம்மாவுக்கு சுத்தமா எம்மேல நம்பிக்கை இல்லை... முடியலைன்னு மாமாவைப் பாக்கப் போனா அவருக்கிட்ட சாடைமாடையா சொல்லப் பொயிட்டாங்க... நல்லவேளை நான் பேச்சை மாத்திட்டேன்...  மாமா வேற நம்மள பெருமைப்படுத்துற மாதிரித்தான் நடந்துப்பான்னு எனக்கு சப்போர்ட்டா சொன்னாரு..."

"ம்... இதுவரைக்கும் இல்லாத பயம் எனக்குள்ள இப்ப வந்தாச்சு... ரெண்டு குடும்பமும் ஒண்ணா நின்னு பண்ணி வைக்கிறதுங்கிறது நடக்கிற காரியம் இல்லை... நாமளா பண்ணிக்கிட்டாலும் அவங்களோட நம்பிக்கையை சிதைக்கிற மாதிரி ஆயிடும்... இன்னும் ரெண்டு வருசம் மாஸ்டர் டிகிரி முடிக்கிறவரை தெரியாம வச்சிக்கிட்டா அப்புறம் சமாளிக்கலாம். இருந்தாலும் இப்போ இருதலைக் கொள்ளி எறும்பாட்டம் தவிக்க வேண்டியிருக்கு "

"பயப்படாதே.... எல்லாம் நல்லதாவே நடக்கும்.... பெரியவங்களை எப்படியும் சம்மதிக்க வைப்போம்... முதல்ல படிப்பை முடிப்போம்..."

"ம்... மாஸ்டர் டிகிரி என்னை படிக்க வைப்பாங்களான்னு தெரியலை... அப்பாக்கிட்ட பெர்மிசன் வாங்கிடுவேன்னு நம்பிக்கை இருக்கு... அம்மாதான் பிரச்சினை... ஒருவேளை படிக்க வைக்கலைன்னா அதுக்கு அப்புறம் கல்யாண ஏற்பாடு பண்ணிருவாங்க... அப்படி ஒரு சூழ்நிலை வந்தா நாம எங்கயாவது ஓடிப்போயி மேரேஜ் பண்ணிக்கலாம்... உங்களைப் பிரிஞ்சு என்னால் ஒரு நொடி கூட இருக்கமுடியாது. எப்படியும் கூட்டிக்கிட்டுப் போயிடுவீங்கதானே?".

"ஓடிப்போயா...?" அதிர்ச்சியாய் கேட்டான் ராம்கி.

(சனிக்கிழமை தொடரும்)
-'பரிவை' சே.குமார்.

4 கருத்துகள்:

 1. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தவர், உறவினர், நண்பர்கள் யாவருக்கும்
  இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் சகோதரரே!

  இதற்கு முந்தைய பதிவில் வாழ்த்துக் கூற வந்தபோது உள்ளேவிடவில்லை உங்கள் வலை என்னை...

  மீளவந்தேன் வாழ்துவதற்கு!

  பதிலளிநீக்கு
 2. சகோதரரே!
  இங்கு வந்து உங்களை நான் வாழ்த்தும் சமயம் நீங்களும் அங்கு வாழ்த்துகிறீர்கள்..:)

  மிக்க மகிழ்வுடன் நன்றியும் சகோ!

  பதிலளிநீக்கு
 3. ம்...........ம்.......ஓடிப் போலாம் தான்!ஹ!ஹ!!ஹா!!!

  பதிலளிநீக்கு

நட்பின் வருகைக்கு நன்றி..!

பகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...