மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

ஞாயிறு, 12 ஜனவரி, 2014மனசு பேசுகிறது : முகநூல் குறித்த வருத்தங்கள்


ன்றைய வலையுலகில் முகநூல் முன்னணி இடத்தில் இருக்கிறது என்பதை மறுக்க முடியாது. தமது அன்றாட நிகழ்வுகளை எல்லாம் முகநூலில் நிலைத்தகவலாகப் போடுவோர் இன்று அதிகம் இருக்கிறார்கள். காலை எழுந்தது முதல் இரவு படுக்கப் போகும் வரை என்னனென்ன நிகழ்வுகளோ எல்லாம் பதிகிறார்கள் பாத்ரூம் சென்றதைத் தவிர.

பலர் நல்ல கருத்துள்ள நிலைத்தகவல்களைப் பகிர்கிறார்கள். வலைத்தளத்தில் எழுத விரும்பாத எத்தனையோ நண்பர்கள் கதை. கட்டுரை. கவிதை என தங்கள் எண்ணங்களை அழகாகப் பகிர்ந்து வருகிறார்கள். மிகச் சிறந்த கருத்துப் போரும் சிலரின் நிலைத்தகவல்களை மையமாகக் கொண்டு நடப்பது உண்மையிலேயே சந்தோஷப்பட வேண்டிய விஷயம்.

இன்று ஒரு சினிமா வெளியாகி பத்திரிக்கை விமர்சனங்களுக்கெல்லாம் காத்திருந்த காலமெல்லாம் மலையேறிவிட்டது. இப்போது முகநூல் நிலைத் தகவல்களும் , டுவிட்டர் செய்திகளும். வலைத்தள விமர்சனங்களும் படம் வெளியான அன்றே அதன் நிலை குறித்த கருத்தை உலகெங்கும் எடுத்துச் செல்கின்றன. பெரும்பாலும் முகநூல், டுவிட்டர், இணைய விமர்சங்கள் பார்த்து படத்துக்குச் செல்லும் நிலை வந்துவிட்டதால் எதிர்பார்ப்புடன் வெளியான படங்கள் எல்லாம் தோல்வியைத் தழுவுகின்றன.

மிகச் சிறந்த இலக்கியக் கட்டுரைகள், அழகிய போட்டோக்கள், ரசிக்க வைக்கும் நிகழ்வுகள் என எல்லாம் எல்லாப் பக்கவும் பயணம் செய்கின்றன. ஒருவரைக் காணவில்லையா, ரத்தம் வேண்டுமா, கஷ்டப்படும் சிறுவன் படிக்க வேண்டுமா... யார் எவர் என்று பார்ப்பதில்லை. தங்களது பக்கத்திலும் அதைப் பகிர்ந்து தங்களான உதவிகளைச் செய்கிறார்கள். இது போன்ற உதவிகளால் சில ஆயிரம் உதவியாக கிடைக்கும் இடத்தில் பல ஆயிரம் உதவியாக கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

இப்படி நல்ல நோக்கோடு பயணிக்கும் முகநூலில்தான் சாதியும், மதமும் இணைந்தே பயணிக்கிறது. பெரும்பாலோர் தங்களது சாதிப்பெயரையும் இணைத்தே முகநூலில் கணக்கு ஒன்றை ஆரம்பிக்கிறார்கள். இது தவறு என்று சொல்லவில்லை. அவரவர் விருப்பம்.... ஆனால் சாதிப் பெயரோடு வந்து அடுத்தவரை தாக்குவதுதான் மிகவும் வருத்தமான விஷயமாக இருக்கிறது.

ஒரு குறிப்பிட்ட மதத்தினர் அடுத்த மதத்தினரைப் புண்படுத்தும் விதமாக நிலைத்தகவல்களை தொடர்ந்து பதிந்து வருவது அவர்கள் வேண்டுமென்றே செய்கிறார்களோ என்றே தோன்றுகிறது. எல்லோரும் ஓர் குலம்... எல்லோரும் ஓர் இனம்... எல்லோரும் ஓர் நிறை... என்று படித்து இருக்கிறோம். ஆனால் அதை ஒரு பொதுவெளியில் பயன்படுத்த நாம் தவறி விடுகிறோம். இதற்கு நாம் மட்டும் காரணமல்ல... நாம் சார்ந்த சமூகமும்தான்.

என்னுடைய நட்பு வட்டத்தில் இருந்த மாற்று மதத்தைச் சார்ந்த நண்பர் ஒருவர் மிகச் சிறப்பான நிலைத்தகவல்களைப் பகிர்ந்து வந்தார். எனக்கு அவரது நிலைத்தகவல்கள் மிகவும் பிடிக்கும். இருந்தும் இடையிடையே அடுத்த மதத்தினரை கிண்டல் அடிப்பதையும் அவர்களுக்கு பிடிக்காத செயலை அவருக்கு மிகவும் பிடித்ததாகவும் சொல்லும் தகவல்களைப் பகிர ஆரம்பித்தார். ஆரம்பத்துல் நானும் படிப்பேன். இதுதான் இவருக்குத் தெரிந்தது என்று  அந்தத் தகவலை கடந்து செல்வேன். அதே அவர் நல்ல தகவல் போடும் போது கருத்துச் சொல்லத் தவற மாட்டேன்.

சில நாட்களுக்கு முன் மாட்டிறைச்சி பற்றி பகிர்ந்தார். சரி அவருக்கு பிடிச்சிருக்கு... என்று நினைத்துக் கொண்டேன். மீண்டும் இரண்டு தினங்களுக்கு முன்னர் மறுபடியும் மாட்டுக்கறி குறித்த நிலைத்தகவலுடன் மதத்தை கிண்டலும் அடித்திருந்தார். இவரது நிலைத்தகவலை ஓட்டி அதே பாணியில் அந்த மதத்து நண்பர்களின் கருத்துக்கள் வேறு. மாட்டை தெய்வமாக நினைக்கும் குலத்தில் பிறந்த எனக்கு இந்தத் தகவல் மிகவும் வருத்தத்தைக் கொடுத்தது. அங்கு இது தவறு என்று கருத்திட்டால் நாம் அசிங்கப்பட வேண்டியிருக்கும் என்று நன்றாகவே தெரிந்தது. காரணம் சாத்தான் ஓதிய வேதத்துக்கு பல ஓநாய்கள் கூட்டுக் கருத்து இட்டிருந்தன.  

இது குறித்து என் நண்பரிடம் வருத்தப்பட்ட போது அவர் ஒரு உயிரினத்தின் பெயரைச் சொல்லி அந்த கறி இதைவிட நல்லா இருக்கும் சாப்பிட்டிருக்கியான்னு கேட்டிருக்கலாமேன்னு சொன்னார். அதை நான் கேட்டிருந்தால் அந்த நண்பர் மட்டுமல்ல எனது நண்பர்களும் வருத்தப்பட்டிருப்பார்கள் எனவே அதெல்லாம் நமக்கெதுக்குன்னு உறவில் இருந்து விலகிவிட்டேன். ஆம் நல்ல கருத்துக்களுக்காக நட்பில் வைத்திருந்த அந்த நண்பரை எனது நட்பு வட்டத்தில் இருந்து எடுத்துவிட்டேன்.

இதேபோல் நேற்று நான் எழுதிய வீரம் விமர்சனம் குறித்த பகிர்வு நான் இணைந்திருக்கும் ஒரு குழுவில் பகிரப்பட்டிருந்தது. அதற்கு கருத்திட்ட ஒரு நண்பர் எனக்கு விஜய், சூர்யா, கார்த்தி போன்ற பச்சைத் தமிழர்களைத்தான் பிடிக்கும் என்று சொல்லியிருந்தார். நடிகர்களை பிடிக்கும் என்பது அவரவர் விருப்பம். அந்த விமர்சனத்தில் மேற்சொன்ன எந்த நடிகர் குறித்தும் கருத்து இல்லை. படம் பார்த்து எனக்குத் தோன்றிய விமர்சனம்தான் அது. அதில் படத்தின் குறைகளையும் சொல்லியிருந்தேன். 

மேலும் அவர் அஜீத், தனுஷ் பிடிக்காது என்று எழுதியிருந்தார். இதுவும் அவரது தனிப்பட்ட கருத்துத்தான். எனக்கு அஜீத்தைப் பிடிக்கும் உனக்கும் பிடிக்கணும் என்று எதுவும் சொல்லவில்லை. சரி இதுவும் ஏற்றுக் கொள்ள வேண்டிய கருத்துத்தான் என்று அடுத்த வரியைப் பார்த்தேன். மேற்சொன்ன இரண்டு நடிகர்களையும் புறம்போக்கு என்று சொல்லியிருந்தார். அடுத்த மனிதரை புறம்போக்கு என்று பொதுவெளியில் சொல்லும் எண்ணத்தையா நமது வளர்ப்பு முறை கொடுத்திருக்கிறது. ஒருவரை பிடிக்கும்... பிடிக்காது என்பதற்கான கருத்து நாசூக்காக இருந்தால் எல்லாருமே ஏற்றுக்கொள்வார்கள். ஆனால் மோசமான வார்த்தைகளை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கட்டாயம் இல்லையே. மோசமான வார்த்தைகளை பயன்படுத்துவதால் கிடைப்பது என்ன. அவருக்கு அங்கு பதில் சொல்லியிருந்தால் அது மிகப்பெரிய விவாதமாக அமைந்திருக்கும்.

சில நேரங்களில் ஒண்ணுமில்லாத கருத்துக்குக் கூட நண்பர்களுடன் சந்தோஷமான ஒரு கருத்துரையாடலைச் செய்கிறோம். நேற்றுக் கூட மனோ அண்ணா பஹ்ரைனில் இருந்து போட்ட கருத்தில் எல்லாருமாக அவருடன் ஜாலியான கருத்துக்களைப் பகிர்ந்து கலாய்த்துக் கொண்டிருந்தோம். எனக்கு விடுமுறை தினத்தில் நேரம் போனதே தெரியவில்லை. அது ஒரு சந்தோஷமான நேரம். இது போன்ற நேரங்களில் தேவையில்லாத கருத்துக்களைப் பகிர்ந்திருந்தால் அதனால் எல்லாருக்கும் மனவருத்தம் வரும் என்பது எல்லாருக்கும் தெரியும் என்பதால் நகைச்சுவையாக அந்த நேரத்தைக் கடத்திக் கொண்டிருந்தோம்.

இதில் இன்னொன்னு கண்டிப்பாக சொல்ல வேண்டும்... ஒரு பொண்ணு குட் மார்னிங் என்று போட்டால் நூற்றுக் கணக்கில் லைக்குகளும், கருத்துக்களும் வரும். இதையே ஒரு ஆண் சொன்னால் சீண்ட ஆள் இருக்காது. ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் அது நல்ல கருத்து என்று தெரிந்தால் உங்களது கருத்துக்களைப் பகிருங்கள்.கருத்துப் போர் செய்யுங்கள்... இங்க போனேன்...  அங்க போனேன் என்பதற்கெல்லாம் நேரத்தை வீணாக்காதீர்கள்.

நிறைய பெண்கள் முகநூலில் வரும் கருத்துக்களையும் பெயர்களையும் நம்பி அவர்களைத் தேடிப் போய் தங்களைத் தொலைத்து விட்டு வந்த செய்திகளையும் பார்க்கிறோம். முகநூலில் முகமறியாமல் பழகிவிட்டு தங்களை இழக்கும் இது போன்ற வேதனையான நிகழ்வுகள் இனியும் தொடர வேண்டாம். குழந்தைகளின் புகைப்படங்களைப் போடுகிறீர்கள்... நல்லது... எதற்கு உங்களது புகைப்படங்களையும் போடுகிறீர்கள். இணையத்தில் புகைப்படம் போடுமுன் சற்று சிந்தியுங்கள். தவறான செய்திகளுக்கு உங்களது போட்டோக்களையும் பயன்படுத்தலாம். இப்படி ஒரு நிகழ்வு நடந்து திருமண வாழ்க்கை முடிந்து போன சகோதரியின் செய்தியையும் சில நாட்களுக்கு முன்னர் பார்த்தேன். தவறு நம் பக்கம் இருக்கும் போது சமூகம் சரியில்லை என்று சொல்லாதீர்கள்.... முதலில் நம்ம பக்கத்தை சரி பண்ணுங்கள்... சமூகம் சரியாகும்.

நான் இதுவரை மதம் பார்த்தோ... சாதி பார்த்தோ... எவரிடமும் பழகியதில்லை. மனிதம் பார்த்துத்தான் பழகி வருகிறேன். அதனால்தான் எனக்கு இன்று உலகம் முழுவதும் ஐயா, அம்மா, அப்பா, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, தோழன். தோழி மற்றும் சார் என்று எத்தனையோ முகமறியா உறவுகள் கிடைத்திருக்கின்றன. இந்த உறவுகள் எப்போது நீடிக்க வேண்டும் என்பதே எனது ஆசை. என்னாலும் எனது மதம் குறித்தோ சாதி குறித்தோ எழுத முடியும்... அதற்கான சுதந்திரமும் இருக்கிறது. ஆனால் அது தேவையில்லை... இருக்கும்வரை உணர்வுள்ள மனிதனாக மதம், சாதி கடந்த உறவுகளோடு வாழவே ஆசைப்படுகிறேன்.

சமூக வலைத்தளத்தை பயன்படுத்தும் நண்பர்கள் தயவு செய்து அடுத்த மதத்தினரையோ சாதியினரையோ கேலி கிண்டல் செய்யும் பகிர்வுகளைத் தவிருங்கள். எல்லாரும் உறவுகள் என்ற நினைப்போடு கருத்துக்களைப் பகிருங்கள். அன்பான சமூகம் அருகில்தான் இருக்கிறது நாம்தான் மதங்களையும் சாதிகளையும் தூக்கிக் கொண்டு அதன் அருகில் செல்ல மறுக்கிறோம். பிறர் மனம் புண்படும்படியான செயல்களை தவிருங்கள்... உறவுகள் மேம்படும்.

-மனசு தொடர்ந்து பேசும்...
-'பரிவை' சே.குமார்.

14 கருத்துகள்:

 1. இடையிடையே இது போன்று அவசியம் நீங்க எழுத வேண்டும். உங்களின் உண்மையான திறமையே இதுபோன்ற சமயங்களில் தான் வெளியே தெரிகின்றது.

  சமூக வலை தளங்களை வேடிக்கை பார்க்கும் மனோநிலையில் அணுகவும்.

  பதிலளிநீக்கு
 2. நானும் நீங்கள் சொல்வது போல் நிறையபேரை பார்த்திருக்கேன்...

  அழகான ,அவசியமான கருத்தை தெளிவாக சொல்லிருக்கீங்க.இதுப்போல் நீங்கள் நிறைய எழுத வேண்டும்.

  பதிலளிநீக்கு
 3. நிஜம் தான் சிலர் விதண்டா வாதத்துக்கு இப்படி சீண்டுவார்கள்.அருமையான பகிர்வு.

  பதிலளிநீக்கு
 4. நல்ல கருத்துப் பகிர்வு!மாற்று மதத்தினருடன் நாம் எவ்வளவு தான் ஒட்டிப் போனாலும் சில சந்தர்ப்பங்களில்.................சரி விட்டு விடலாம்.(நானும் பட்டதால் இந்த ஆதங்கம்.)இப்போது சில நாட்களுக்கு முன் ஒட்டு மொத்தமாக காலி செய்து விட்டேன்.முக நூலிலிருந்தே விலகி விட்டேன்.ஒரு சிலருக்காக விலகி விட வேண்டுமா என்று கேட்டால்,என்னைப் பொறுத்த வரை "ஆம்" தான் என் பதில்!

  பதிலளிநீக்கு
 5. நல்லதொரு பதிவு. நல்லதும் அல்லாததும் இருக்கும் இடத்தில் நல்லதை மட்டும் எடுத்துக் கொண்டு அல்லாததை விட்டு விடுவோம்! நானும் முக நூலில் இருக்கிறேன். உங்கள் முகநூல் முகவரி என்ன குமார்?

  பதிலளிநீக்கு
 6. தெளிவான பகிர்வு பாஸ்....

  சமூக தளங்கள் இன்று அடித்துக் கொள்ளும் இடமாக மாறிவிட்டது...

  பதிலளிநீக்கு
 7. 24 மணி நேரமும் இருக்கிறார்கள் சிலர்... (நல்ல நமது வலைப்பதிவர்கள் உட்பட) மூழ்கி விட்டதும், பைத்தியம் ஆகிக் கொண்டிருப்பதும் பலர்...

  அண்ணன் ஜோதிஜி சொன்னது போல் நாம் நம்மை மாற்றிக் கொள்ள வேண்டியது தான்..

  பதிலளிநீக்கு
 8. ஜோதி ஜி சார் சொல்வது போல் நீங்கள்
  இது போல் நிறைய எழுதுங்கள் குமார்
  முக நூல் தற்போது நிலையை குறித்த அருமையான கட்டுரை இது எனக்கு கூட முக நூலில் சில விசயங்களில் உடன்பாடு இல்லை இருந்தும் சில நல்ல விசயங்களும் இருக்கின்றன என்பதால் உடன்பட வேண்டியிருக்கிறது
  இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 9. வணக்கம் சகோதரர்
  மிக சிறப்பான விடயத்தை அலசியுள்ளீர்கள். சமூக வலைத்தளங்கள் நமது நேரத்தை விழுங்கியும் கவனத்தையும் திசை திருப்பி விடும் ஆபத்து நிரம்ப உள்ளது. இருப்பினும் அன்னப்பறவை போல் நல்லதை மட்டும் நாம் பிரித்துக் கொள்ள வேண்டும். பகிர்வுக்கு நன்றி.
  -----
  தங்களுக்கும் இல்லத்தார் அனைவருக்கும் இனிய பொங்கல் மற்றும் தமிழர் திருநாள் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 10. நல்லன கொண்டு, அல்லாதனவற்றை நாம்தான் தள்ள வேண்டும் குமார்! எனக்கு எவரேனும் உறுததலாகப் பட்டால் அன்ஃபிரண்ட் செய்து விடுவேன். லகானை நம் கையில் தந்திருக்கிறார்களே... அதைப் பயன்படுத்திட்டாப் போச்சு! நல்ல அலசல்!

  பதிலளிநீக்கு
 11. மற்ற மதங்களை இழிவுபடுத்துவதிலிருந்து எதையும் சாதிக்க முடிவதில்லை. உங்களுடையது உங்களுக்கு அவர்களுடையது அவர்களுக்கு. ஒன்றையுயர்த்தி மற்றொன்றை தாழ்த்துவதிலேதான் பிரச்சனை ஆரம்பம். நல்ல பகிர்வு.

  பதிலளிநீக்கு

நட்பின் வருகைக்கு நன்றி..!

பகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...