மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

புதன், 22 ஜனவரி, 2014தொடர்கதை: கலையாத கனவுகள்

முந்தைய பதிவுகளைப் படிக்க...


                                             பகுதி-43      பகுதி-44                     
------------------------------------------------

45. நிலவரம் கலவரம் ஆகுமா?

முன்கதைச் சுருக்கம்

கிராமத்து ஏழைக் குடும்பத்துப் பையனான ராம்கி, கல்லூரி ரவுடி வைரவனின் தங்கை புவனாவுடன் நட்பாக பழகுகிறான்.  அண்ணனும் மச்சானும் சிங்கப்பூர் செல்ல, வாழ்க்கை கொஞ்சம் மாற்றமான பாதையில் செல்ல ஆரம்பிக்கிறது, மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைத்ததும் காதல் இன்னும் இறுக்கமாகிறது. ராம்கியின் அக்காவின் திருமணத்திற்கு புவனா வந்ததும் மீண்டும் அவர்களது காதலில் புயல் மையம் கொள்ள  இருபுறமும் விசாரணைகள் தொடங்கின.

இனி...

"டேய் சரவணா... இதுவரைக்கும் இல்லாத பயம் இப்போ வந்திருச்சுடா" என்றான் ராம்கி.

"என்னடா... என்ன ஆச்சு... புவனா வீட்ல எதுவும் பிரச்சினையா?" 

"ரெண்டு பக்கமுமே சந்தேகம் அதிகமாயிடுச்சு... புவி வீட்ல அவங்க சித்தப்பா அவகூட பழகுறது யாருன்னு விசாரிக்க ஆரம்பிச்சிருக்கார். அவளுக்கு நல்ல மாப்பிள்ளையா வந்தா கல்யாணம் பண்ணி வச்சிடலாங்கிற ஐடியாவுல இருப்பாங்க போல... அவங்கம்மா ஜாடைமாடையா பேசுறாங்களாம்... நம்ம வீட்டுலயும் அம்மாவுக்கு சந்தேகம்... சந்தேகம் என்ன உறுதியா நான் புவனாவை லவ் பண்ணுறது தெரிஞ்சாச்சு... மாமாவை விட்டு அறிவுரை சொல்லச் சொல்றாங்க... "

"காதல்ன்னா பிரச்சினை வரத்தான் செய்யும்... ஆனா அதை சமாளிக்கிறது எப்படின்னு யோசிக்கணும்..."

"இல்லடா... இப்போ இருக்கிற நிலமையில அவளை மேல படிக்க வைக்க மாட்டாங்கன்னு நினைக்கிறேன். கல்யாணம் பண்ணலாம்ன்னு யோசிக்கிறாங்களாம். அப்படி அவளுக்கு மாப்பிள்ளை பாக்க ஆரம்பிச்சிட்டாங்கன்னா அவளைக் கூட்டிக்கிட்டு போற மாதிரித்தான் இருக்கும்... என்ன செய்யிறதுன்னே தெரியலை..."

"என்னடா சொல்றே... நீ அவளைக் கூட்டிக்கிட்டுப் பொயிட்டா அவங்க ஆளுகளால நம்ம குடும்பத்துக்கு வர்ற பிரச்சினை சாதாரணமா இருக்கும்ன்னு நினைச்சியா... அவகிட்ட சொல்லி மேல படிக்கணுங்கிறதுல தீர்மானமா இருக்கச் சொல்லு... அப்படி அவ படிக்க ஆரம்பிச்சா ரெண்டு வருசம் அதுல போகும்... அப்புறம் ஒரு முடிவு எடுக்க சரியா இருக்கும்... இல்லேன்னா எடுக்கிற முடிவு ரெண்டு குடும்பத்தையும்... இல்ல நம்ம குடும்பத்தைப் பாதிக்காத முடிவா இருக்கணும்..."

"ம்... அதாண்டா பயமா இருக்கு.... ஆனா நான் இல்லேன்னா புவி செத்துருவாடா... அவளை ஏமாத்த என்னால முடியாதுடா...?"

"நான் அவளை ஏமாத்துன்னு சொன்னேனா... முடிவு எடுக்க வேண்டிய சூழல் வந்து எடுக்கிற முடிவு எதாயிருந்தாலும் அதுல இருந்து பின்வாங்காதே... நாங்க எங்களால ஆன உதவியைச் செய்வோம்..."

"ம்... அம்மா தேவையில்லாம பிரச்சினை ஆக்கிடுவாங்களோன்னு பயமா இருக்கு..."

"சரி இதை லூசுல விடு... பாத்துக்கலாம்... நான் கிளாஸ்க்குப் பொயிட்டு வாறேன்..." என்று சரவணன் சொல்லும் போது வைரவன் தனது பைக்கில் கல்லூரிக்குள் வந்து கொண்டிருந்தான்.

"என்னடா வைரவண்ணன் வாராரு..." என்று சரவணனிடம் கேட்டான் ராம்கி.

"என்ன அண்ணனா... மச்சான்னு சொல்லு முறையை மாத்தாதே..." நக்கலாக சரவணன் சொல்லவும் அவனை அடிக்க கையை ஓங்கினான்.

அவர்களைத் தாண்டிப் போன வண்டி சடக்கென்று நின்றது. வைரவன் அவர்களைத் திரும்பிப் பார்த்து "அட ராம்கியில்ல... என்னப்பா நல்லாயிருக்கியா... நம்ம பயலுகளைப் பார்த்துட்டுப் போகலான்னு வந்தேன்... அப்படியே உன்னையும் பாக்கணுமின்னு நினைச்சேன்... தோதா நீயே நிக்கிறே,,," என்றபடி இறங்கினான்.

"சரிடா... நீ அவருக்கிட்ட பேசிட்டுப் போ... நான் கிளம்புறேன். பர்ஸ்ட் பிரியேட் பரசுராம் சார்.... லேட்டாப் போனா ஆயிரம் கேள்வி கேட்டு காட்டுக்கத்தலா கத்துவாரு..." என்றபடி சரவணன் கிளம்பினான்.

"வாங்கண்ணே... எப்படியிருக்கீங்க..? படிப்பெல்லாம் எப்படிப் போகுது?"

"அதுக்கென்ன கழுத நல்லாத்தான் போகுது..."

"இங்க மாதிரித்தானா அங்கயும்..." கேட்டுவிட்டு நாக்கைக் கடித்தான்.

"சேச்சே... அதெல்லாம் இப்ப இல்லை... ரொம்ப மாறியாச்சு... காலம் எல்லாத்தையும் மாத்திடுதுல்ல... உங்கிட்ட கொஞ்சம் பேசணும்... கிரவுண்ட் பக்கமா போகலாமா?"

"இப்பவா... மத்தியானம் முதல் பிரியேட் கேவிஎஸ் சார்... " மெதுவாக இழுத்தான்.

"சொல்லிட்டு வா... கொஞ்ச நேரத்துல திரும்பிடலாம்"

"சரி..." என்றவன் டிபார்ட்மெண்ட் போய் அவரிடம் அனுமதி பெற்றுத் திரும்ப இருவரும் கிரவுண்டில் வேப்பமரத்தடியில் போட்டிருந்த கல்லில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது...

"ராம் நீ எங்க புவனாவைப் பற்றி என்ன நினைக்கிறே?" என்று மெதுவாகக் கேட்டான் வைரவன்.

"என்னண்ணே திடீர்ன்னு எங்கிட்ட அவங்களைப் பற்றி கேக்குறீங்க... அவங்க நல்ல திறமைசாலிண்ணே... எல்லாத் திறமையும் இருக்கு அவங்ககிட்ட..."

"ம்... இதில்லாம வேற..."

"வேறன்னா... புரியலையே..?"

"இல்ல அவளுக்கு நீ ரொம்ப நெருக்கமான பிரண்டுன்னு எனக்குத் தெரியும்... அவ படிப்பை விடு... பெர்சனலா அவளுக்கு யார்கூடவாவது நெருக்கமான பழக்கம்..."

"ப... பழக்கமா... நெ... நெருக்கமாவா?" மிடறு விழுங்கினான்.

"ம்... அதுக்கு நீ ஏன் பதட்டப்படுறே?"

"இல்ல எனக்குத் தெரிஞ்சு அவங்க எல்லார்க்கிட்டயும் நல்லாப் பழகுவாங்க... யாரோடயும் நெருக்கமா இருக்க மாதிரி தெரியலை..."

"யாரோடவும் இல்ல சரி... உங்கூட..?"

"அ... அண்ணே..." பதறினான்.

"ஏய்... ஏண்டா பதர்றே... சும்மாதான் கேட்டேன்..."

"இல்லண்ணே... எங்கிட்ட பிரியாப் பேசுவாங்க.... பட் அவங்களோட வேற எண்ணத்துல நானும் பழகலை... அவங்களும் பழகலை... அதான் நீங்க கேட்டதும் ஷாக் ஆயிடுச்சு... என்னண்ணே எதாவது பிரச்சினையா? யாராவது புவி...புவனாவை லவ் பண்ணுறேன் அது இதுன்னு டார்ச்சர் கொடுத்தானுங்களா?"

புவியை மனதுக்குள் பதிந்து கொண்டே "ஏய்... அதெல்லாம் இல்ல... சரி விடு...  அவளுக்கு கல்யாணம் பண்ணலாம்ன்னு ரெண்டு மூணு மாப்பிள்ளை பார்த்தோம்.. அவ ஒத்துக்க மாட்டேங்கிறா... அதான் கேட்டேன்... புவனா உன்னோட பிரண்ட்தானே... அவகிட்ட பேசிப் பாரேன்..." என்றபடி அவனது முகத்தைக் கூர்ந்து கவனித்தான்.

'புவி இதெல்லாம் சொல்லலையே... ஒருவேளை நம்மளை ஆழம் பார்க்கிறாரோ' என்று நினைத்தபடி "வெளாடாதீங்கண்ணே... அவங்க உங்க தங்கச்சி... நீங்க சொல்லிப் புரிய வைக்காம எப்பவாவது பேசுற என்னைப் போயி சொல்லச் சொல்றீங்க... நான் சொன்னா அவங்க கேப்பாங்களா என்ன" என்று சிரித்தான். அந்தச் சூழலை மாற்றுவதற்காக செயற்கையாகச் சிரிப்பது அப்பட்டமாகத் தெரிந்தது.

"சரி விடு... அவளுக்கு காதல் அது இதுன்னு எதாவது இருந்தா அதை எப்படி  டீல் பண்ணனுமோ அப்படி டீல் பண்ண எனக்குத் தெரியும்... சரி வா" என்றபடி எழுந்தவன் அவனுடனே நடந்தவன் மனதுக்குள் 'சித்தப்பா சொன்னது சரியாத்தான் இருக்குமோ?' என்று தோன்றியது.

"என்னடா ராம்கிய எதுக்குடா அந்த மணிப்பய கூட்டிக்கிட்டுப் போயிருக்கான்..?" என்றபடி வந்தான் அறிவு.

"என்னடா சொல்றே... அவன்தானேடா இவனை அடிக்கப் போனவன் அவனோட இவனெதுக்குப் போறான்... " கத்தினான் பழனி.

"அதுக்கு அப்புறம் ரெண்டு பெரும் பிரண்டாயிட்டானுங்க... " சாதாரணமாகச் சொன்னான் அறிவு.

"பிரண்ட்டா இருக்கட்டும்... எங்க போறோம்ன்னு நமக்கிட்ட சொல்லிட்டுப் போக வேண்டியதுதானே... அப்படி என்ன ரகசியம் பேசப் போறானுங்க..." கடுப்பில் கேட்டான் சேவியர்.

"டேய் எனக்கென்னமோ பயமா இருக்கு... மதியந்தான் ரெண்டு குடும்பத்துலயும் சந்தேகம் அதிகமாயிருச்சுன்னு சொன்னான்... அப்புறம் வேற வைரவன் வந்து அவனோட தனியாப் பேசினான்... என்ன பேசுனாங்கன்னு தெரியலை... அதுக்குள்ள இவன் வந்து கூட்டிக்கிட்டு போயிருக்கான்... என்னன்னு தெரியலை... ஏதோ சம்திங்க் ராங்டா.. எங்கிட்டுடா போனானுங்க..." சரவணன் பதட்டமாய் பேச அவர்களிடம் ஒரு பதட்டம் தொற்றிக் கொண்டது.

"அறிவு... கமான்... எங்கிட்டுப் போனானுங்க... சொல்லு..." பதறினான் அண்ணாத்துரை.

"பூங்காப் பக்கமாத்தான்டா அவனோட வண்டியில கூட்டிப் போனான்.... ராமோட சைக்கிள் இங்கதான் நிக்கிது..."

"சரி... வாங்க நிக்கிறதுக்கு நேரமில்ல... அவன் ஒரு ரவுடிப்பய... எதுக்கு கூட்டிப் போனான்னு தெரியாது... எதுக்கும் பாக்கலாம்..." என்று அண்ணாத்துரை அவசரப்படுத்த அனைவரும் பூங்கா நோக்கி விரைந்தனர்.

பூங்காவைத் தாண்டி யாருமில்லாத ஒரு இடத்தில் வண்டியை நிறுத்திய மணி நேரடியாகக் கேட்டான்.

"என்ன ராமகிருஷ்ணன்... உங்க காதலெல்லாம் எப்படிப் போகுது..?"

"என்ன காதலா... அட ஏங்க நீங்க வேற என்னைய மாதிரி கஷ்டப்படுற குடும்பத்துப் பயலுக்கு ரொம்பத் தேவை பாருங்க..."

"அட காதல் என்ன குலம், கோத்திரம்  வசதி பாத்தா வரும்... பிடிச்சா வந்துரும்... எந்த சாதிக்காரப் பயலா இருந்தா என்ன... குட்டியா இருந்தா என்ன..." நக்கலாகக் சொன்னபடி சிகரெட்டைப் பற்ற வைத்தவன் அவனிடம் நீட்டினான்.

"எனக்கு வேண்டாங்க... சம்பந்தமில்லாம கேள்வி கேக்குறீங்க..? இதுக்குத்தான் கூட்டியாந்திங்களா... நான் கிளம்புறேங்க... என்னோட பிரண்ட்ஸ் வெயிட் பண்ணுவாங்க..."

"இருங்க சார்... என்ன அவசரம்?"  

அவனது கேள்வியில் இருந்த எகத்தாளம் ராம்கிக்கு பயத்தைக் கொடுத்தது.

"ம்... சொல்லு... புவனாவை நீ காதலிக்கலை...?" என்று ஒருமையில் கேட்டபடி அவனை இழுத்து முகத்தில் புகையை ஊத புவனாவின் சித்தப்பா அவர்கள் அருகில் வந்து வண்டியை நிறுத்தினார்.

(சனிக்கிழமை தொடரும்)
-'பரிவை' சே.குமார்.

5 கருத்துகள்:

 1. ம்.............பிரச்சின பெரிசாயிடும் போல தான் தோணுது.கடவுள் காக்க!

  பதிலளிநீக்கு
 2. பொறுத்த இடத்தில் தொடரும் என்று போட்டால் இனி எப்ப அடுத்த அங்கம் என்று காத்திருக்கும் இசையும் ஒரு காதல்தான் போலும்!ஹீ தொடரட்டும் புவியின் சித்தப்பா என்ன சொல்லுவார் ....!

  பதிலளிநீக்கு
 3. விறுவிறுப்புக் கூடிக் கொண்டே போகிறது.
  த.ம.2

  பதிலளிநீக்கு
 4. வீண் துன்பங்கள் இன்றி நல்லது
  நடக்க வேண்டும்!..

  பதிலளிநீக்கு
 5. நீங்க கொண்டு போவதைப் பார்த்தால் புத்தகமாக்கினால் கூட 500 பக்கங்கள் வந்து விடும் போல. கலக்குங்க.

  பதிலளிநீக்கு

நட்பின் வருகைக்கு நன்றி..!

பகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...