மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

திங்கள், 27 ஜனவரி, 2014மண் பயனுற வேண்டும் - பாரதி விழா:3

பாரதி நட்புக்காக அமைப்பின் பொங்கல் சிறப்புப்  பட்டி மன்றமான இன்றைய வாழ்க்கை முறை நமக்கு தருவது நிம்மதியே / நெருக்கடியே என்பது குறித்த முந்தைய பதிவுகளைப்  பார்க்க... ஆறு பேச்சாளர்களின் பேச்சுக்களையும் விரிவாகச் சொன்னால் இன்னும் மூன்று பகிர்வு வந்துவிடும் இதுவே நிறைவுப் பகிர்வு என்ற எண்ணத்தில்தான் எழுதுகிறேன். என்னைக் கவர்ந்த சில நகைச்சுவைகளை மட்டுமே சொல்லி பதிவை முடிக்க நினைக்கிறேன்... பதிவின் நீளத்தைப் பொறுத்து நடுவரின் தீர்ப்பு தள்ளி வைக்கப்படும்.

நடுவர் தனது துவக்க உரையை முடித்ததும் நெருக்கடியே அணித் தலைவர் திரு. இராமச்சந்திரன் அவர்கள் தனது பேச்சை ஆரம்பித்தார். இன்றைய வாழ்க்கையில் எல்லாவற்றிற்கும் நெருக்கடி இருக்கத்தான் செய்கிறது என்றவர் எனது மனைவியும் பக்கத்து வீட்டு போலீஸ்காரர் மனைவியும் நான் அலுவலகம் போனதும் பேசிக்கொள்வார்கள் என்றதும் திரு.சுகிசிவம் அவர்கள் உங்களைப் பற்றியா என்று கேட்டார். இல்லையய்யா உலக விஷயங்களைப் பற்றித்தான் ஓபாமா மீண்டும் வெற்றி பெறுவாரா? ஈரான் ஈராக் பிரச்சினை எப்போ தீரும்? அப்படின்னு எல்லாம் பேசுவாங்க. ஒரு நாள் என் மனைவி அவரிடம் வாத்தியாரைக் கட்டி எதுக்கெடுத்தாலும் கையை நீட்டிடுறாரு நீங்க போலீஸ்காரரைக் கட்டியிருக்கிங்களே எப்படிக்கா என்று கேட்டிருக்கிறார். (இங்கு நிறுத்தி கல்யாணம் ஆன புதுசுல கையை நீட்டிருவேன். இப்பல்லாம் இல்ல... இப்ப ஆம்புலன்ஸ்ல போக எனக்குப் பயம் என்று சொல்லி அவையை சிரிக்க வைத்தார்) அதற்கு அந்தப் போலீஸ்காரரின் மனைவியோ வேகமாக அடிக்க ஓடிவருவாரு.... டக்குன்னு ஒரு அம்பது ரூபாயை எடுத்துக் கொடுத்ததும் பேசாம போயிடுவாருன்னு சொன்னுச்சு என்றார்.

நான் ஆங்கிலப் புரபஸர் என்பதால் உயிரைக் கொடுத்துப் பாடம் நடத்துவேன் சார், ஒரு முறை இப்படித்தான் ஷேக்ஸ்பியரை பற்றி சொல்லிக் கொடுத்தேன். வகுப்பு முடிந்து கேண்டீனுக்குப் போனா எனக்கு முன்னாடி இரண்டு பயலுக மாப்ள பாவம்டா நம்ம ராமச்சந்திரன் சார் எதுக்குடா இப்படி கத்துறாருன்னு கேக்குறான். அதுக்கு மற்றவன் எல்லாம் ஒருச்சாண் வயித்துக்காகத்தான் மாப்ள் என்கிறான். பாருங்க என்னோட வயித்தை அளந்து பார்த்திருக்கிறான் என்று சொல்லி நெருக்கடிக்கான காரணங்களை விளக்கினார்.

நிம்மதியே என்று பேச வந்த திரு.இராமலிங்கம் அவர்கள் எந்த வாழ்க்கையையுமே ரசித்து வாழ்ந்தால் நிம்மதி இருக்கும் அது அவருக்குத் தெரியலை என்றவர் பையன்கள் பற்றி நிறையச் சொன்னார். பசங்களைப் புரிஞ்சுக்கணும் சார்... பரிட்சையில 28 நாள் எந்த மாதத்தில் வரும் என்று கேட்டிருந்தேன் எல்லா மாதத்திலும் வரும் என்று எழுதியிருந்தான் என்று வரிசையாக நகைச்சுவையாகச் சொல்லிக் கொண்டே போனவர் அன்னைக்கு நான் பஸ்க்கு நிற்கிறேன் என்னோட மாணவன் ஒருவன் காண்டஸாக் கார்ல போறான் என்னைப் பார்த்ததும் என்ன சார் இங்க நிக்கிறீங்க வாங்க நான் கூட்டிக் கொண்டு போய் விட்டுட்டுப் போறேன்னு சொன்னான். உடனே நேற்றும் இந்தக் காரை இங்க பார்த்தேன் தம்பி என்றதும் கூப்பிட்டு இருக்கலாமே சார் ஏத்தியிருப்பேன்ல என்றான் என்று சொல்ல பார்வையாளர் மத்தியில் சிரிப்பு அலை எழ, எதிர் அணியினரும் சிரிக்க. உடனே தவறாகத்தான் நினைப்பார்கள் எதிரணியினர் என்று சொல்லி கைதட்டல் வாங்கினார்.

பின்னர் வீட்டில் நெருக்கடி இல்லையா என்று கேட்டார் அம்மாவுக்கும் பொண்டாட்டிக்கும் ஒரே விலையில எடுத்தாத்தானே பிரச்சினை. பொண்டாட்டிக்கு ஆயிரம் ரூபாய்ல எடுங்க. அம்மாவுக்கு 999 ரூபாயில எடுங்க. பொண்டாட்டிக்கிட்ட கொடுத்து இது உனக்கு எடுத்தது இது அம்மாவுக்கு, நீயே கொண்டு போய் அம்மாக்கிட்ட கொடுவே என்று சொல்லிப் பாருங்கள்... அப்படியே போய் அத்த இது உங்களுக்கு உங்க மகன் எடுத்தாந்தது என்று சொல்லி கொடுக்கும் போது கிடைக்கும் சந்தோஷம் நெருக்கடியை கொடுப்பதில்லையே என்றதும் குறுக்கிட்ட நடுவர் அவர்க்ள் இப்போ சண்டை வராதா? எனக்கு 999 அவளுக்கு ஆயிரம்ன்னு சண்டை வராதா என்றார். உடனே விலையைக் கிழித்துவிட்டுக் கொடுக்க வேண்டும் நடுவர் அவர்களே என்றார்.

அடுத்துப் பேச வந்த திருமதி. பிரேமா அவர்கள் ஒரு குழந்தை இருப்பதால் உறவுகள் இன்றி வளரும் நெருக்கடிக்கு ஆளாகிறார்கள் என்றார். இவரும் சேலை குடும்பம் என எல்லாம் சொல்லி சில இடங்களில் நகைச்சுவையாகவும் பேசினார். இவருக்குப் பதிலளிக்கும் விதமாகப் பேசிய திருமதி. சுந்தரவள்ளி நகைச்சுவையை அள்ளி வீசினார். அவரது கணவரை பனை மரத்துல மழை பெஞ்ச மாதிரி கலர்ல இருப்பாரு. கரண்ட் இல்லைன்னா அவரைத்தான் சிரிக்கச் சொல்லி தீப்பெட்டி எடுப்பேன் என்றார். 

உறவுகள் இல்லை... மாமா இல்லை சித்தப்பா இல்லைன்னு என்னோட அக்கா புலம்புனாங்க என்றதும் அவங்க உங்களுக்கு அக்காவா என்று நடுவர் கேட்கவும் ஆமா அவரு அண்ணன் இது ஐயா என சொல்ல எல்லாருக்கும் நான் தங்கச்சி என்றார். எங்களோட நண்பர்கள்தான் எங்க பையனுக்கு மாமா, சித்தப்பா எல்லாம்... இப்ப இங்க வந்திருக்கேன்... நீங்க எல்லாம் என் மகனுக்கு மாமா என்று சொல்லி கைதட்டல் வாங்கினார். 

பின்னர் பேசிய திரு மோகனசுந்தரம் பட்டிமன்றத்தின் மொத்தத்தையும் தன்பக்கம் திருப்பினார். பேசியது எல்லாமே நகைச்சுவைதான். நெருக்கடி என்பதற்கு ஏராளமான நகைச்சுவைகளை அள்ளி வீசினார். அலுவலகத்தில் சிக்கன் குனியா என்று சொல்லி விடுமுறை போட்டதாகச் சொன்னார். அதற்கு அவர் சொன்ன காரணம் என்னவென்றால் சென்ற முறை அபுதாபிக்கு கூப்பிட்ட போது அலுவலகத்தில் எல்லாரும் எதாவது வாங்கி வரச்சொன்னதால் இந்த முறை சொல்லவில்லை என்றார். மேலும் இங்கு வந்ததற்கு ஞாபகார்த்தமாக ஒரு திர்ஹம் கடையில மொத்தமாக் ஒட்டகம் வாங்கிக்கிட்டுப் போய் கொடுத்துட்டேன். அடுத்த நாள் போனா எல்லாரும் முறைக்கிறாய்ங்க... மேனேஜர் கூப்பிட்டு ஊர்ல இருக்கிறதுக்கு லீவு போட்டுட்டு எதுக்கு அபுதாபி போனேன்னு பொய் சொன்னே என்றபடி ஒட்டகத்தை திருப்பி அடிவயித்தைப் பார்க்கச் சொன்னார். அங்க  பார்த்தால் 'மேட் இன் இந்தியா'ன்னு போட்டிருக்கு.

கோயிலுக்குப் போனால் காசு கொடுத்தால் ஒரு மரியாதை இல்லைன்னா ஒரு மரியாதைதான். பெருமாள் கோயிலுக்குப் போனேன். அங்க நான் தீபத்தட்டுல ஒரு ரூபாய் போட்டேன். பக்கத்துல ஒருத்தர் நூறு ரூபாய் கொடுத்தார். அவரு தலையில பெருமாளுக்கே வைக்கிற மாதிரி வச்சாரு... எனக்கு வச்சாரு பாருங்க டங்குன்னு.. ஒண்ணாம் வகுப்புல தலையில கொட்டுன மாதிரி இருந்துச்சு. ஒரு தடவை என்னோட டைப்பிஸ்ட திட்டிட்டேன். உடனே அழுக ஆரம்பிச்சிருச்சு... அழுதாலும் பரவாயில்லைங்க வாயில துணிய வச்சிக்கிட்டே வெளிய போக எல்லாரும் என்னையவே பாக்குறானுங்க... அப்புறம் அந்தப் பொண்ணோட புருஷன் வந்து கேட்க நான் விளக்கினேன். சரி இனிமே இப்படி நடக்கக்கூடாதுன்னு சொல்லிட்டு என்னையப் பார்த்தான் பாருங்க அந்தப் பார்வையில நன்றி தெரிந்தது என்றார்.

வீட்டில் இருக்கும் பீரோவில் மேல் தட்டு பட்டுச் சேலைகளுக்கு அடுத்தது உடுத்துற சேலைகள். அதற்கு அடுத்தது பையனுக்கு. நமக்கு கீழ கொஞ்சம் இடம். பையன் அங்க இருந்து ஓடியாந்து என்னோட துணிக மேலதான் கால வச்சி ஏறி துணி எடுக்கிறான். செருப்புல பாத்த மூணு நாலு பேக்ல மூணு நாலு, நமக்கு பாத்ரூம் போனாலும் எங்க போனாலும் ஒரே செருப்புத்தான் என நகைச்சுவையாய் சொல்லிக் கொண்டே போனார்.

இறுதியாகப் பேச வந்த திரு.சிவக்குமார் அவர்கள் நிம்மதி குறித்து விளக்கமாகப் பேசினார். இவரது பேச்சில் ஆழ்ந்த கருத்துக்கள் இருந்தன நகைச்சுவை இல்லை. இராமச்சந்திரன் அண்ணன் நெருக்கடி நெருக்கடின்னு புலம்புறாரு. இவரு பட்டிமன்றத்துல மாதம் ஒரு லட்சம் சம்பாதிக்கிறாரு என்றதும் நீங்க ஒரு முடிவோடத்தான் வந்திருக்கீங்க போல என்றார் சுகிசிவம். தனது பேச்சைத் தொடர்ந்தவர், அண்ணன் குடும்பத்தால நெருக்கடி, மனைவியால நெருக்கடி என்று புலம்பினார். ஆனால் வந்ததில் இருந்து ஊருக்குப் போன் பண்ணி என்னம்மா பண்றே... வீட்டைப் பூட்டிக்க... பத்திரமா இருன்னு பேசிக்கிட்டே இருக்காரு. 

பிரேமா அக்காவும் ரொம்பத்தான் நெருக்கடி நெருக்கடின்னு புலம்பிட்டு உக்காந்திருக்காங்க. அவரு சிக்கன் குனியான்னு சொல்லிட்டு வந்தது எனக்கு காலையில தெரியும். அவரு கம்பெனியில இருக்கிற என்னோட நண்பனுக்கு போன் பண்ணி என்ன உங்களு அபுதாபிக்கு பேச வந்திருக்காருன்னு சொன்னதும் அவரு சிக்கன் குனியானுல்ல சொன்னாருன்னு சொன்னார். உடனே நடுவர் அவருக்கு ஊருக்குப் போனதும் சிக்கன் குனியா வந்துடும் என்றார். இவரு இங்க வர்றதுக்காக பொய் சொல்லிட்டு வந்திட்டு நெருக்கடி இருக்குன்னு சொன்னா எப்படி என நிம்மதிக்காக வாதிட்டார்.

எல்லாரும் பேசி அமர்ந்ததும் தீர்ப்புச் சொல்லும் விதமாக தனது பேச்சை ஆரம்பித்தார் நடுவர்....

மன்னிக்கனும் பதிவு நீண்டுக்கிட்டே போயிருச்சு... மூணு பதிவுன்னு சொன்னேன்... இப்போ மூணோட முடியலை... அதனால எல்லாரும் நடுவர் தீர்ப்புக்கு நாளை வரை காத்திருங்கள்...

நிறைவுப் பகுதி நாளை மாலை...
-'பரிவை' சே.குமார்.

6 கருத்துகள்:


 1. படிச்சுட்டேன். சுகி சிவம் என்ன சொன்னார்னு அடுத்த பதிவுல படிச்சுக்கறேன் குமார்!

  பதிலளிநீக்கு
 2. அருமை
  நடுவரின் தீர்ப்புக்காகக் காத்திருக்கிறேன்

  பதிலளிநீக்கு
 3. நடுவர் திரு சுகிசிவம் அவர்களின் தீர்ப்புக்காக நானும் காத்திருக்கிறேன்.....

  நல்ல தொகுப்பு - பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 4. // பதிவு நீண்டுக்கிட்டே போயிருச்சு..//

  ஆனாலும் அருமை.

  //மூணு பதிவுன்னு சொன்னேன்..//

  சொன்ன மாதிரியே நடக்குறது கொஞ்சம் கஷ்டம்!..

  //இப்போ மூணோட முடியலை.. அதனால எல்லாரும் நடுவர் தீர்ப்புக்கு நாளை வரை காத்திருங்கள்..//

  காத்திருக்கின்றோம்.

  பதிலளிநீக்கு
 5. ஹா... ஹா... ரசிக்க வைத்தது... தொடருங்கள்...

  பதிலளிநீக்கு
 6. காத்திருக்கிறோம்!சுவையாக இருக்கிறது./எழுதுகிறீர்கள்!

  பதிலளிநீக்கு

நட்பின் வருகைக்கு நன்றி..!

பகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...