மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

செவ்வாய், 28 ஜனவரி, 2014மண் பயனுற வேண்டும் - பாரதி விழா: 4

பாரதி நட்புக்காக அமைப்பின் பொங்கல் சிறப்புப்  பட்டி மன்றமான இன்றைய வாழ்க்கை முறை நமக்கு தருவது நிம்மதியே / நெருக்கடியே என்பது குறித்த முந்தைய பகிர்வுகளைப் பார்க்க... 

பாரதி-1            பாரதி-2             பாரதி-3 


நிம்மதியே என மூவரும் நெகிழ்ச்சியே என மூவரும் தங்களது கருத்துக்களை எடுத்து வைத்துவிட்டு அமர நடுவரின் தீர்ப்பைக் கேட்கும் ஆவலில் விழா அரங்கம் காத்திருந்தது. எல்லாரும் பேசிட்டாங்க...  இப்ப தீர்ப்புச் சொல்லும் இடத்திற்கு வந்தாச்சு. இதே கோர்ட்டா இருந்தா தீர்ப்பை ஒத்தி வச்சிட்டு அந்தப் பேப்பர்ல என்ன எழுதியிருக்குன்னு வீட்ல போயி படிச்சிப் பார்த்துட்டு அப்புறமா தீர்ப்புச் சொல்லலாம். ஆனா இங்க அப்படியில்லை... விவாதம் முடிந்ததும் தீர்ப்புச் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

'இரும்பைக் காய்ச்சி...' என்ற பாரதியின் பாடலைச் சொல்லி இரும்பைக் காய்ச்சச் சொன்ன பாரதிக்கு பால் காய்ச்சவே தெரியாது என்ற செய்தி எத்தனை பேருக்குத் தெரியும். ஒரு முறை செல்லம்மா ஊருக்குப் போயாச்சு. பால்க்காரம்மா பால் போட்டுட்டுப் போயாச்சு. தனியாப் படுக்க மகாகவிக்குப் பயம்... உடனே பாரதிதாசனை இரவு தங்க வரச் சொல்கிறார். போனவர் பாரதி படுத்திருக்க தானும் படுத்துவிடுகிறார். தனது தலைமாட்டில் ஏதோ நகர்வது போல் தெரிய விழித்துப் பார்த்தால் பாரதி அமர்ந்திருக்கிறார். என்ன விஷயம் கவிஞரேன்னு கேட்க, இந்த பாலைக் காய்ச்சிறது எப்படின்னு தெரியலை... அடுப்பே பற்ற வைக்க முடியலைன்னு சொன்னதும் அங்கே போய் பார்த்திருக்கிறார். சில பேப்பர்களைக் கொழுத்திப் போட்டிருந்திருக்கிறார். விறகு வைத்து எரிக்காமல் எப்படி பால் காய்ச்ச முடியும் என்றபடி விறகை வைத்துப் பற்ற வைத்திருக்கிறார் பாரதிதாசன். நீண்ட நேரம் போராடி ஒரு வழியாக பாலைக் காய்ச்சி இருக்கிறார்கள். இதை எழுதியது யார் தெரியுமா... பாரதிதாசன் தான். இருவரும் மிகப்பெரிய மகாகவிகள். ஆனால் இருவரால் பால் காய்ச்ச முடியவில்லை. பாலைக் கூட காய்ச்சத் தெரியாத மகாகவிதான் 'இரும்பைக் காய்ச்சி...' என்று பாடியிருக்கிறார்.

பொங்கல் என்றால் கடவுளுக்கு நன்றி சொல்வது என்று சிறப்பு விருந்தினர்கள் சொன்னார்கள். ஆம் நமக்கு கொடுத்த இறைவனுக்கு நன்றி சொல்லும் விதமாக நாம் பொங்கல் வைக்கிறோம். நமக்கு மேல உள்ளவங்களுக்கு நமக்கு கீழ உள்ளவங்களுக்கும் சொல்லணுமில்ல... அதுதான் மாட்டுப் பொங்கல். ஐந்தறிவு விலங்குக்குப் பொங்கல் வைத்தோம் பாருங்கள். அதுதான் தமிழனோட குணம். இது யாருக்கும் வராது. ஆனா உழைக்கிறவங்களோட கையில இருந்ததெல்லாம் கோயில்ல இருக்க சாமிகளுக்கு கொடுத்துட்டு அவங்களை மட்டும் கோயிலுக்குள்ளே போக விடாம வச்சிருக்கோம்.

இங்க வேலை பார்க்கிற எல்லாரும் வெயில்ல கஷ்டப்பட்டு ஊருக்கு மாசாமாசம் பணம் அனுப்பினாலும் நீங்க படுற கஷ்டம் அங்க இருக்க யாருக்கும் தெரியாது. ஒரு அறைக்குள்ள அஞ்சு பேரு ஆறு பேருன்னு இருந்துக்கிட்டு கஷ்டப்பட்டாலும் ஊர்ல எல்லாரும் நல்லாயிருக்கணுமின்னு நினைப்பீங்க. ஆனா ஒரு மாசம் பணம் அனுப்பலைன்னாலும் அப்பா என்னப்பா இன்னும் பணம் அனுப்பலை. இங்க செலவு கட்டுபடி ஆகலைன்னு பேச ஆரம்பிச்சிருவாரு. அப்புறம் என்னான்னா அப்பா கஷ்டப்படுறாரேன்னு கார் வாங்கிக் கொடுத்திருப்பீங்க... அதை தம்பிக்காரன் எடுத்துக்கிட்டுப் போயி எங்கயாவது மோதிருவான். அப்போ அப்பா நம்ம தம்பி காரை எடுத்துக்கிட்டுப் போனான்... மோதிட்டான்ப்பா என்று சொல்லும் போது அவனுக்கிட்ட எதுக்கு குடுத்தீங்க? என்று நீங்க கேட்டால் உடனே அப்பாக்காரர் அவன் உன் தம்பிதானே அவன் எடுக்கக்கூடாதான்னு கேட்டுட்டு பணங்காசு வந்ததும் உனக்கு சொந்தமெல்லாம் தூரப்போச்சு என்பார். இவனோட கண்ணீர் இவனோடதான்.

இங்க இருக்கிறவங்களுக்கு வருசத்துக்கு ஒரு மாசம் லீவு கொடுப்பாங்க.... அதிக நாள் இருக்க முடியாது. மாமனாருக்கு ஆகஸ்ட்ல அறுபதாம் கல்யாணம், அப்பாவுக்கு செப்டெம்பர்ல... இவன் இரண்டு விழாவுக்குமாக லீவை சரிபண்ணிக்க முடியாது. ஒருதடவை போனாலே செலவு அதிகமாகும். இரண்டு முறை போகமுடியாது. உடனே ஒருத்தர் கல்யாணத்துக்குப் போனா மத்தவங்க கல்யாணத்துக்குப் போக முடியாது. அதனால் நீ உங்கப்பா அறுபதுக்குப் போ... நான் எங்கப்பா அறுபதுக்குப் போறேன்னு சொன்னா அப்பத்தான் அவ அதெல்லாம் முடியாது எங்கப்பா கல்யாணத்துக்கு மாப்பிள்ளை வரலைன்னு வருத்தப்பட மாட்டாரா... கண்டிப்பா போறோம்ன்னு சொல்லிடும். அங்க போயிட்டு அப்பாக்கிட்டப் போயி இப்பத்தான் மாமனார் அறுபதுக்கு வந்தேன். உங்க அறுபதுக்கு இருக்க முடியாதுப்பா என்றால் நீ இருக்கலைன்னா நான் தூக்குல தொங்குறேன்னு சொல்லுவார். சரி இந்த மாமனாருக்குத்தான் அறிவு வேணாம். எங்கல்யாணத்துக்கு வரலைன்னாலும் பரவாயில்லை மாப்பிள்ளை உங்க அப்பா கல்யாணத்துக்கு வாங்கன்னு சொல்லியிருக்கலாம்ல. ஆனா சொல்ல மாட்டாரு... ஆட்டிவிட்டு வேடிக்கை பார்ப்பாரு. இல்ல இந்த ரெண்டு பயலுகளும் ஒரே நாள்ல ஒரு கோயில்ல வச்சா என்ன நடக்காதா. இருந்தாலும் வீண் பிடிவாதங்கள் நெருக்கடியைக் கொடுக்கும்.

மோகன சுந்தரம் நகைச்சுவையாய்ப் பேசினார். ஆனா அவரு சொன்னது எல்லாமே அவரோட கஷ்டங்கள்... வருத்தங்கள்... அவரோட வருத்தத்தைக் கேட்டு நாம எல்லாம் அழுது அது ஆறா ஓடுச்சா என்ன.... இல்லையே... நாம எல்லாரும் அவரு சொல்லச் சொல்ல சிரிச்சோம். அதுதான் இலக்கியம். எப்படிப் பேசினாலும் ரசிக்க வைக்கும். அவரு சொன்னாரு ஏழெட்டுச் செருப்பு, அஞ்சாறு பேக் எல்லாம் வச்சிருக்காங்க... நமக்கு ஒரே செருப்புத்தான் பக்கிங்ஹாம் போனாலும் பாத்ரூம் போனாலும் ஒரே செருப்புத்தான் அப்படின்னு சொன்னாரு... நமக்கு ஒரே செருப்புத்தான் அவங்ககிட்ட ஏழெட்டு இருக்கு ஆனா அவங்களுக்கு கணவன் ஒருத்தன்தான்... ஆனா நமக்கு என்றதும் அவையில் சிரிப்பொலி அடங்க அதிக நேரமானது. இதுக்கு அடுத்து நான் எதுவும் சொல்ல வேண்டியதில்லை என்றார்.

நெருக்கடிக்கும் நிம்மதிக்குமாக நிறைய விஷயங்களைப் பேசினார். சினிமாப் பார்க்கிறோம்... திரையில் மரம், செடி கொடி வீடுகள் எல்லாம் வருது... ஆடிப் பாடுகிறார்கள்... மின்சாரம் இல்லை என்றால் திரை கருப்பாகத்தான் இருக்கும்... அந்த மரம் செடி கொடிகளை எல்லாம் திரைக்கு கொண்டு வருவது புரோஜெக்டர்தான். எந்த ஒரு விஷயத்தையும் புரோஜெக்ட் பண்ணுங்கள் என்றவர் இங்கு பேச்சாளர்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்கிறேன். நீங்கள் பேசுவதைக் கேட்பவர்களை இம்ப்ரஸ் பண்ணப் பேசாதீர்கள்... உங்கள் மனதில் உள்ளதை எக்ஸ்போஸ் பண்ணுங்கள். அப்பொழுதுதான் நீங்கள் சொல்ல வந்ததை தெளிவாகச் சொல்ல முடியும் என்றார்.

நான் நிம்மதிதான் என்று தீர்ப்புச் சொன்னால் அப்ப நெருக்கடி இல்லையா என்ற கேள்வி எழும்... சரி நெருக்கடிதான் என்றால் அப்ப நிம்மதியே இல்லையா என்று கேள்வி எழும்... இரண்டும்தான் என்று சொல்ல இவ்வளவு நேரம் பேச வேண்டியதில்லை. உங்களது வாழ்க்கையில் எந்த ஒரு விஷயத்தையும் நீங்கள் எக்ஸ்போஸ் பண்ணுவதன் மூலமாக எது கிடைக்கிறதோ அதுதான் உண்மை. உங்களது வாழ்க்கை கொடுப்பது நிம்மதியா நெருக்கடியா என்பதை இந்த ஆறு பேரின் பேச்சில் இருந்தோ... எனது தீர்ப்பில் இருந்தோ சொல்வதென்பது சரியானதல்ல. அதை தீர்மானிக்கும் கருவி நீங்கள்தான்... உங்கள் பிரச்சினையை நீங்கள் எக்ஸ்போஸ் பண்ணுவதில்தான் நிம்மதியோ நெருக்கடியோ கிடைக்கும். எனவே தீர்ப்பை நீங்கள்தான் முடிவு செய்கிறீர்கள் என்று முடித்தார்.


விழாவில் சில துளிகள்:
 • நாம் பேசுவதைக் கேட்க திரண்டு வந்திருக்கும் இவர்கள் நமக்கு கை தட்டுகிறார்கள். அவர்களுக்கு நாம எழுந்து நின்று கை தட்டலாமே என்று நடுவர் சொன்னதும் பேச்சாளர்கள் எழுந்து நின்று கைதட்டினார்கள். பார்வையாளர்களும் எழுந்து நின்று கைதட்ட திரு. சுகிசிவம் அவர்கள் உங்களுக்கு நிகர் நீங்களே என்றார்.
 • எங்களுக்கு முன் வரிசையில் ஒருவர் மிகவும் ரசித்து எழுந்து எழுந்து கைதட்ட அவரருகில் இருந்தவர்கள் ஒவ்வொருவராக எழுந்து சென்றுவிட, ஒரு கட்டத்தில் அவருக்கு அருகில் கிடந்த சேரில் அவரை தள்ளி அமரச் சொன்னார் மனைவியோடு வந்த ஒருவர், நான் தள்ளி உக்காந்து கைதட்டும் போது பக்கத்துல இருக்கவங்க திட்டுறாங்க என்றவர் தனது கைதட்டலைத் தொடர்ந்தார்.
 • பேச்சாளர்களின் பேச்சைக் கேட்க விடாமல் குழந்தைகள் கத்தி விளையாட ஆரம்பித்தார்கள். பெற்றோர்கள் எவரும் சட்டை செய்யவில்லை. பேச்சை கவனித்துக் கேட்ட சிலர் சத்தம் போட, பாரதி அமைப்பினர் சிலர் சொல்லியும் குழந்தைகள் ஆட்டத்தைக் கைவிடவில்லை.
 • எங்கள் வரிசையில் இருந்த அம்மாவும் மகளும் அடிக்கடி எழுந்து போய் எதாவது வாங்கிய வண்ணம் இருந்தனர். அவர்களுக்காக என்னருகில் அமர்ந்திருந்த ஏழெட்டுப் பேர் கால்களை மடக்கி மடக்கி நொந்து போனோம்.
 • எப்பவும் போல் இந்த முறையும் நன்றியுரை சொல்லும் போது எல்லோரும் வெளியாகி இருந்தனர். தியேட்டரில் கடைசியாக தேசிய கீதம் போடுவது போல் ஆகிவிட்டது.
 • பேச்சாளர்கள் ஆறு பேருமே நடுவர் மணி அடித்தும் தொடர்ந்து பேசினார்கள். அவர்களின் பேச்சு ரசிக்கும் விதமாக இருந்ததால் இன்னும் கேட்கத் தூண்டியது. இடையில் திரு.சுகிசிவம் அவர்கள் மணி அடித்தால் பேச்சை நிறுத்த வேண்டும் என்று சொல்லியும் பார்த்தார் பலனில்லை.
 • சரியாக 7.15க்கு ஆரம்பித்த பட்டிமன்றம் 10.40 மணியளவில்தான் முடிந்தது. நீண்ட நேரம் மிக நல்லதொரு இலக்கியப் பேச்சை ரசிக்க முடிந்தது.


மனசின் மனசு:

அடுத்த விழாவில் திரு.சுகிசிவம் அவர்களை எதாவது ஒரு தலைப்பில் பேச அழைத்தால் அபுதாபி வாழ் தமிழர்களுக்கு  மிகச் சிறப்பான இலக்கியம் பருகும் வாய்ப்புக் கிடைக்கும். செய்யுமா பாரதி?

நன்றி:

விழாவை நடத்திய பாரதி நட்புக்காக அமைப்புக்கு...
படங்கள் கொடுத்து உதவிய சுபஹான் அண்ணனுக்கு...
இந்தப் பதிவுகளைத் தொடர்ந்து படித்து கருத்திட்ட உறவுகளுக்கு...

(இது பதிவு செய்து வைத்து கேட்டு எழுதிய பதிவு அல்ல... நிகழ்வின் போது கேட்டதை அசைபோட்டு எழுதியதுதான்... சில மாற்றங்கள் இருக்கலாம்... தவறான தகவல்கள் இருக்க வாய்ப்பில்லை அப்படியிருந்தால் சம்பந்தப்பட்ட அமைப்புச் சார்ந்த நண்பர்கள் தாராளமாக மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம்.)

****   வேலைப்பளுவின் காரணமாக இந்தப் பகிர்வே இரவில்தான் எழுத முடிகிறது. நண்பர்களின் தளங்களை வாசிக்க முடியவில்லை. இன்னும் இரு தினங்களில் தங்கும் அறை வேறு மாற்ற வேண்டும்... நேரம் கிடைக்கும் போது கண்டிப்பாக நண்பர்களின் தளம் வருவேன்... நன்றி.

**** இது 555.... நான் சிகரெட்டைச் சொல்லவில்லை... பதிவைச் சொன்னேன்... மனசில் இது 555...  இது சாத்தியமாகக் காரணம் நீங்களே... அதற்கும் நன்றி.

முற்றும்.
-'பரிவை' சே.குமார்.

8 கருத்துகள்:


 1. பால் காய்ச்சத் தெரியாத பாரதி தகவல் சுவாரஸ்யம்.

  சுவாரஸ்யமாகப் படித்தேன். தீர்ப்பைத்தான் உங்கள் கையில் விட்டு விட்டார். வெளிநாட்டில் நம்மவர்கள் படும் துயரங்கள் சொல்லி மனத்தைக் கவர்ந்து விட்டார்.

  பதிலளிநீக்கு
 2. ௫௫௫"வது பதிவா ?! வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 3. நியாயமான தீர்ப்பு. நிம்மதி கூட ஒரு சமயத்தில் நெருக்கடி ஆகி விடலாம். நல்லவிதமான பதிவு!.. அருமை!.

  பதிலளிநீக்கு
 4. சரியான தீர்ப்பு... மற்றவர்களுக்காக பேசாமல், உள்மனதிலிருந்து பேசினால்... ஏன் பகிர்ந்து கொள்வதும் கூட... என்றும் சிறப்பு தான்...

  விழாவில் நடந்த துளிகளுக்கும் நன்றி...

  வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 5. விழாவினை கண் முன் காட்சி படுத்தி விட்டீர்கள். குறிப்பாக சில துளிகள் மூலம். 555 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 6. அன்பு நண்பர் திரு.குமார் அவர்களுக்கு,

  முதலில் தங்களுக்கு பாரதி நட்புக்காக குழுவினர் சார்பாகா வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

  தங்களின் வலைத்தளத்தை நண்பர் சுபான் அவர்கள் மூலம் கண்டு படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

  கலைமாமணி சொல்வேந்தர் திரு சுகி சிவம் அவர்கள் தலைமையில் நடந்த பொங்கல் சிறப்புப் பட்டி மன்றமான "இன்றைய வாழ்க்கை முறை நமக்குத் தருவது நிம்மதியே ...!!! நெருக்கடியே...!!!
  என்ற நிகழ்ச்சியை காணாதவர்களும் தங்களின் எழுத்தின்மூலம் நேரில் கண்டது போன்ற ஒரு எழுத்தாக்கம்.உங்களின் ஞாபக சக்தியை கண்டு வியந்துபோகிறேன்.
  மேலும் அடுத்த விழாவில் திரு.சுகிசிவம் அவர்களை எதாவது ஒரு தலைப்பில் பேச அழைத்தால் அபுதாபி வாழ் தமிழர்களுக்கு மிகச் சிறப்பான இலக்கியம் பருகும் வாய்ப்புக் கிடைக்கும். செய்யுமா பாரதி? - என்று வினா எழுப்பியிருந்தீர்கள்.எங்களுக்கும் அந்த எண்ணம் இருக்கிறது.நேரமும் காலமும் ஒத்துழைத்தால் நிச்சயம் செய்வோம்.

  தங்களின் பணி மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.

  நட்புடன்,

  ஹலீல் ரஹ்மான்

  பாரதி நட்புக்காக

  பதிலளிநீக்கு
 7. பல ஸ்வாரசியமான நிகழ்வுகள்.

  தொடர்ந்து பட்டிமன்றத்தினை நாங்களும் பார்த்த உணர்வு. வாழ்த்துகள் குமார்.

  பதிலளிநீக்கு

நட்பின் வருகைக்கு நன்றி..!

பகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...