மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 29 மார்ச், 2014தொடர்கதை: கலையாத கனவுகள்

முந்தைய பதிவுகளைப் படிக்க...57.  வெளிச்ச முகம் தெரிகிறது

முன்கதைச் சுருக்கம்

கிராமத்து ஏழைக் குடும்பத்துப் பையனான ராம்கி, கல்லூரி ரவுடி வைரவனின் தங்கை புவனாவுடன் நட்பாக பழகுகிறான். மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைத்ததும் காதல் இன்னும் இறுக்கமாகிறது. சில காரணங்கள் இவர்களது காதல் வெளிச்சத்துக்கு வர இரண்டு பக்கமும் பிடி இறுகுகிறது. புவனா மேற்படிப்பு படித்தால் மட்டுமே காதலுக்கான காலத்தை நீட்டிக்க முடியும் என்ற நிலையில் பலவாறு யோசித்து அவளின் அம்மாவிடம் பேசி மனதைக் கரைக்கிறான். இது ஒரு பக்கம் இருக்க மணியை யாரோ தாக்கிவிடுகிறார்கள். நண்பர்கள் துணையுடன் அக்கா வீட்டிற்குச் செல்கிறான்.


"என்ன ஒரு மாதிரி இருக்கே... வந்தப்பவே கேட்டேன்... ஒண்ணுமில்ல சும்மாதான் மயக்கமா வந்துச்சுன்னு சொன்னே... முகமே சரியில்லையே..." என்றபடி மனைவி கொடுத்த காபியை உறிஞ்சியபடி கேட்டார் புவனாவின் அப்பா.

"அதான் சொன்னேன்ல திடீர்ன்னு மயக்கமா வந்திருச்சுன்னு... அதான் சோர்வா இருக்கு... அம்புட்டுத்தான்..." என்றபடி அவருக்கு அருகே அமர்ந்தாள்.

"இல்ல ஆத்தாளும் மகளும் எதாவது சண்டை கிண்டை போட்டியளோன்னு சந்தேகமா இருந்துச்சு..."

"ஆமா நாங்க சண்டை போட்டுக்கிட்டே இருக்கோம் பாருங்க... நா மயக்க வருதுன்னு உக்காந்ததும் அவதான் ஓடியாந்து தண்ணி கொடுத்து படுக்க வச்சி காலெல்லாம் பிடிச்சிவிட்டா..."

"அதானே... எம்மவ எங்காத்தா மாதிரியில்ல... நீ வேணுமின்னா அவகிட்ட நையி நையின்னு நிப்பே..."

"ஆமா மகள மட்டும் விட்டுக் கொடுக்க மாட்டீங்க... என்னங்க நம்ம புவனா விருப்பப்பட்டபடி படிக்கட்டுங்க... இப்ப கலியாணம் பண்ண வேண்டாங்க... அவளோட கனவை நாம ஏன் கலைக்கணும்"

"நாமன்னு என்னையும் சேத்துக்கிறே... நீயும் உன்னோட மவனுந்தான் மேல படிக்க வேண்டாம் படிச்சது போதும் கலியாணம் பண்ணி வைப்போமுன்னு குதிச்சீங்க... பத்தாததுக்கு திருப்பத்தூர்காரன்... அதான் ஒந்தொங்கச்சி புருஷன் அவனும் சேந்துக்கிட்டு பேசினான்... ஆனா இப்ப என்ன திடீர் ஞானோதயம்... எம்மவ பரிதவிச்சு காலெல்லாம் பிடிச்சு விட்டதாலயா?"

"அதெல்லாம் ஒண்ணுமில்ல... நம்ம சாதி சனத்துல யாரு பொட்டப்புள்ளங்கள அதிகம் படிக்க வைக்கிறாங்கன்னு பாத்தோம். அதுபோக படிச்ச படிப்புக்கு மாப்ள கிடைக்கிறது குதிரைக் கொம்பால இருக்கு... அதான் படிச்சது போதும் கலியாணம் பண்ணலாம்ன்னு சொன்னோம்... நல்லாப் படிக்கிறா... அவளுக்கும் மேல படிக்கணுமின்னு ஆசை... படிக்கட்டுமே..."

"ம்... அப்புறம் அந்தப் பயலால பிரச்சினை வராதா?"

"எ.... எந்தப் பய...?"

"இங்க பாருடா... தெரியாத மாதிரி நடிக்கிறா... ஒண்ணாப் படிக்கிற புள்ளக பேசத்தான் செய்யுங்க.... பழகத்தான் செய்யுங்கன்னு சொன்னேன்... நீங்க கேக்கலை.... உங்கொழுந்தன் அவனை ஆள் வச்சி அடிச்சிருக்கான்.... ம்... கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ஒரு போன் வந்துச்சுல்ல... அதுல வந்த செய்தி என்னன்னு தெரியுமா... நம்ம புவனாவை பொண்னு கேட்டானுங்கள்ல அந்த மணிப்பயல... எவனோ போட்டுட்டானுங்களாம்... ஆளு சீரியஸாம்... மதுரைக்கு கொண்டு போயிருக்கானுங்களாம். பிழைப்பானான்னு தெரியலையாம்... இது அடிதடி கத்திக் குத்துன்னு தொடரும்.... நம்ம பயல மதுரைப் பக்கம் போகச் சொல்லனும்... இது இங்க திரிஞ்சா அடிதடி அது இதுன்னு போக ஆரம்பிச்சிரும்... இதை எதுக்குச் சொல்ல வாறேன்னா என்ன மோட்டிவ்ல அவனை அடிச்சானுங்கன்னு தெரியாது. ஆனா அதுல நம்ம பொண்ணோட பேரு வந்துடக்கூடாது.... அதான்... அந்தப் பயகூட பழகுறதை பெரிசு பண்ணாம அவள படிக்க விடுறதா இருந்தா படிக்க வைப்போம்... இல்லேன்னா வந்திருக்க மாப்ளயில்ல நல்ல பயலாப் பாத்து கட்டிக் கொடுத்துருவோம்..."

"மணிப்பயல வெட்டிட்டானுங்களா?"

"அதை விடு அது வேற... நாங்கேட்டதுக்கு பதில் சொல்லு..."

"ம்... படிக்கட்டுங்க... அவனால தொந்தரவெல்லாம் வராது..."

"எப்படி இம்புட்டு தைரியமாச் சொல்றே...? உங்கிட்ட பேசினானா?"

"இ...இல்ல... பிரண்டாத்தானே பழகியிருக்காங்க... இனி ரெண்டு பேரும் ஒரு காலேசுக்கா போகப்போறாங்க... "

"சரி... படிக்கட்டும்.... அவ படிப்பு முடியிற வரைக்கும் கலியாணம் பண்ணனும், நல்ல மாப்ள வந்திருக்குன்னு எங்கிட்ட வந்து நிக்கக்கூடாது... செரியா?"

"ம்... அவ படிப்பு முடியிற வரைக்கும் எதுவும் பேசலை... "
"ம்... உன்னோட மவன் எங்கே?"

"எங்கிட்டோ போச்சு இன்னும் வரலை...."

"நா கிளம்பிப் போனதும் வந்தா மறுபடிக்கும் வெளிய போக விடாதே... எல்லாப் பக்கமும் கூகூன்னு கிடக்கு..."

"சரி..."


"என்னடா திடீர்ன்னு போன் பண்ணியிருக்கே? மல்லிகா ஆச்சர்யமாகக் கேட்டாள்.

"ஏன் நான் உனக்கு போன் பண்ண மாட்டேனா?" எதிர்முனையில் ராம்கி கோபப்படுவது போல் கேட்டான்.

"சரி... சரி... சும்மாதான் கேட்டேன்.... என்ன விஷயம் சொல்லு..."

"நான் புவியைப் பார்த்துப் பேசணும்.... நான் போன் பண்னினா எதாவது பிராப்ளம் வரும்... அதான்..."

"ஓ... எனக்கு இன்னும் இந்த வேலை இருக்கு போல.... சரி உனக்கு அப்படி என்ன அவசரம்?"

"முக்கியமா பேசணும்... ப்ளீஸ்ப்பா..."

"சரி... சரி... அவகிட்ட பேசிட்டு கூப்பிடுறேன்.. ஆமா மணியைப் பற்றி எதாவது செய்தி?"

"தெரியலை... சேகர் மதுரைக்குப் போயிருக்கான்... வந்தாத்தான் தெரியும்..."

"சரி... சரி... நீ எதுக்கும் பாத்து இரு..."

"எதுக்கு எல்லாரும் என்னையப் பயமுறுத்துறீங்க..?"

"பய முறுத்தலை.... உன்னைய அடிக்க ஆள் வச்சதா அண்ணாத்துரைதான் சொன்னான். அதான் சொன்னேன்..."

"சரி... சரி... ஆள் வச்ச அவனே எந்திரிப்பானான்னு தெரியல... என்னைய அடிக்கிறானுங்களாம்... விட்டுத்தள்ளு... நாஞ் சொன்னதை கொஞ்சம் உடனே ஏற்பாடு பண்ணு..."

"சரி.... அவ வீட்டுக்குப் பேசிட்டுக் கூப்பிடுறேன்..."

"ம்..."


"என்னடா மணி எப்படியிருக்கான்?" சேகரிடம் வினவினான் ராம்கி.

"சொல்ற மாதிரி இல்ல மச்சான்... அவனோட அப்பா அம்மா புலம்புறதைப் பாக்க சகிக்கலை... ஐசியூலதான் வச்சிருக்கானுங்க... பொழச்சாலும் எந்திரிச்சு நடமாட முடியுமான்னு தெரியலை... ஆனா அவன் மேல ஏவனோ இம்புட்டு வெறியா இருந்திருக்கான்... "

"ம்... இவனும் எத்தனை பேரை வெட்டியிருக்கான்... அந்தப் பாவமெல்லாம் சும்மாவா விடும்... ஆனா பெத்தவங்கதான் பாவம்..."

"அம்புட்டுத்தூரம் பழகிட்டு என்னோட மச்சான்னு தெரிஞ்சும் உன்னையுந்தானே மாப்ள குத்துனான்..."

"ஆமா... இப்பக்கூட புவனாவுக்காக என்னையப் போட முயற்சி பண்ணியிருக்கான்...."

"அது சரி.... அதான் கடவுள் அவனை எந்திரிக்க முடியாமப் பண்ணிட்டாரு...."

"ம்..."

"ஆமா அயித்தை எங்க?"

"அங்கிட்டுத்தான் உங்க வீட்டுப்பக்கமா போச்சு... எங்க பேசிக்கிட்டு இருக்கோ " என்று ராம்கி சொல்லும் போது போன் அடித்தது.

"இரு மச்சான் வாறேன்..." என்றபடி வீட்டிற்குள் சென்று போனை எடுத்தான்.

எதிர்முனை சொல்வதைக் கேட்டு "ம்... பேசிட்டியா.... வாறேன்னு சொன்னுச்சா?... ம்... நாளைக்கா.... உங்க வீட்லயா? சரி... ரொம்ப நன்றி மல்லிகா..." என்று போனை வைத்து விட்டு வந்தான்.

"யாருடா போன்ல... யார்ய் வாறேன்னு சொன்னா..." அடியும் புரியாமல் நுனியும் புரியாமல் சேகர் கேட்டான்.

"அதுவா... புவிய வரச்சொல்லச் சொன்னேன்..."

"எதுக்கு...?"

"கொஞ்சம் எங்க லைப்பைப் பத்திப் பேசத்தான்.."

"அது சரி... இப்ப என்ன அவசரம் வந்துச்சு... எல்லாப் பக்கமும் பிரச்சினையா கிடக்கும் போது கொஞ்சம் அடங்குடா..."

"இல்லடா அதுக்கிட்ட முக்கியமாப் பேசணும்..."

"வரச்சொல்லி பேசுற அளவுக்கு அப்படி என்னடா முக்கியமான விஷயம்... ?"

"பேசிட்டு சொல்றேன்டா... உனக்கிட்ட சொல்லமயா..." என்றதும் சேகர் 'ஆஹா.... கூட்டிக்கீட்டிக்கிட்டு ஓடலாம்ன்னு பிளான் பண்ணுறானோ... இவன் என்ன ஏழரையைக் கூட்டப் போறானோ தெரியலையே' என மனசுக்குள் நினைத்தபடி அவனைக் கலவரமாய்ப் பார்க்க ராம்கி மர்மமாய்ச் சிரித்தான்.

(புதன்கிழமை தொடரும்)
-'பரிவை' சே.குமார்.

3 கருத்துகள்:

நட்பின் வருகைக்கு நன்றி..!

பகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...