மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

செவ்வாய், 25 மார்ச், 2014

மனசு பேசுகிறது : எங்கள் வாழ்வின் ஸ்ருதி

(அன்பு மகளுக்காக)

களைப் பெற்ற அப்பாவாய் சந்தோஷிக்கும் மனிதர்களில் நானும் ஒருவன். முதல் குழந்தை ஆணாக இருக்க வேண்டும் என்றுதான் பெரும்பாலானோர் விரும்புவர். மனைவிக்கு ஆண் குழந்தை வேண்டும் என்றால் கணவனுக்கு பெண் குழந்தை பிறந்தால் நல்லது என்று தோன்றும். ஒத்த அலைவரிசை என்பது அற்பமாகத்தான் அமையும். அப்படி ஒரு ஒத்த அலைவரிசையில் நாங்கள் இருவரும் விரும்பியது பெண் குழந்தையைதான். எங்கள் மகளுக்கு அம்மாவின் வயிற்றுக்குள் இருக்கும் போதே பெயர் எல்லாம் தேர்வு செய்து வைத்துவிட்டோம். எண் கணிதப்படி எல்லாம் பெயர் தேர்வு செய்யவில்லை எங்கள் இருவரின் மனம் பொருந்தி வந்த பெயரையே மகளின் பெயராக தேர்வு செய்தோம்.

மதுரையில் பூமா மருத்துவமனையில் மனைவிக்கு லேசான வலி வந்ததும் சேர்த்து விட்டோம். இன்னும் வலி சரியாக வரவில்லை காலையில்தான் நல்லா வலி வரும் என்று சொல்லி இட்லி சாப்பிடச் சொன்ன மருத்துவர் அடுத்த சில நிமிடங்களில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவரை அவசரப்படுத்தி ஸ்கேன் எடுத்து உடனே ஆபரேசன் பண்ண வேண்டும் என்ற போது பட்ட வேதனையை இங்கு எழுத்தில் வடிப்பது என்பது இயலாத காரியம். எல்லோரும் ஒத்துக் கொண்டாலும் ஆளுக்கு ஒரு பக்கம் அழுது கொண்டிருக்கிறார்கள். என் மனைவி மாமாவின் செல்லம். ஹோட்டலுக்கு போய் விட்டு வருகிறேன் என்று அப்போதுதான் ஹோட்டலுக்குப் போன மாமா செய்தி அறிந்ததும் கடையைப் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு ஓடோடி வந்தார். 

மனைவியை உள்ளே கொண்டு செல்ல அங்கிருந்த மாடிப்படிகளில் அமர்ந்து தனியாளாய் கண்ணீருடன் நிமிடங்களைக் கடத்தினேன். சில நிமிட வேதனை கடத்தலுக்குப் பிறகு குழந்தை பிறந்திருக்கிறது என்று சொன்னார்கள். யாருமே குழந்தையைப் பார்க்கும் எண்ணத்தில் இல்லை. பெற்றவர்களோ மகளுக்கு என்ன ஆச்சு என்று பதறுகிறார்கள். நானோ மாடிப்படியிலே நிற்கிறேன் அழுகையோடு... உங்க பொண்ணு நல்லாயிருக்காங்க... குழந்தையைப் போயிப் பாருங்க என்றதும் எல்லாரும் சென்றார்கள். எனக்குள்ள குழந்தையைவிட என் மூத்த குழந்தையைத்தான் முதலில் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் இமயமலையாக உயர்ந்து நின்றது. மனைவியைப் பார்த்த பின்னே என் அன்பு மகளைப் பார்த்தேன்.

அழகிய பூவாய் துண்டில் சுற்றித் தூக்கிய அந்த முதல் ஸ்பரிசம் எத்தனை கோடிகளைக் கொட்டிக் கொடுத்தாலும் கிடைக்காது. தலை நிற்கவில்லை பார்த்துத் தூக்க வேண்டும் என்று சொன்னாலும் எப்பவும் தூக்கியே வைத்திருப்பேன். வளர வளர அப்பாவின் தங்க மீனானாள். நானோ அன்பு மகளின் செல்ல நாய்க்குட்டி ஆனேன். தத்தக்க பித்தக்க என்று நடக்க ஆரம்பித்த நேரம் கல்லூரிக்குக் கிளம்பும் போது பின்னாலே தொத்தி வர எனது வண்டியில் வைத்து ஒரு சுற்று சுற்றி விட்டுவிட்டுப் போக வேண்டும். மதியம் வரும் போது வாசலில் வண்டியை நிறுத்தும் போது சூடான சிமெண்ட் தரையில் குதித்து ஓடி வருவார்.

படுக்கும் போதும் அப்பா மேல்தான் படுக்க வேண்டும்.... குளிக்க வைக்க... பாத்ரூம் போக வைக்க... என எல்லாம் அப்பாவே செய்ய வேண்டும். சென்னையில் தினமணியில் இருந்த போது எல்.கே.ஜி. வேலம்மாளில் சேர்த்திருந்தோம். இரவுப் பணி முடித்து அதிகாலை வந்து படுப்பேன். பள்ளிக்குப் போக அம்மா கிளப்பினால் மெதுவாக என்னருகில் வந்து அப்பா... அப்பா என்று எழுப்ப ஆரம்பித்து விடுவார். அப்பா இப்பத்தாம்மா வந்தார் தூங்கட்டும் என்றாலும் கேட்காமல் உரசி உரசியே எழுப்பிவிடுவார். பின்னர் குளிக்க வைத்து பள்ளியில் கொண்டு போய் விட்டு விட்டு வந்துதான் தூக்கத்தைத் தொடருவேன்.

மூச்சுக்கு மூச்சு அப்பா... அப்பா... காலை எழுந்தது முதல் இரவு படுக்கும் வரை அப்பா... அப்பா... இப்போது வீட்டில் அக்காளுக்கும் தம்பிக்கும் அதிகமான சொற்போர் நடப்பது அப்பா புராணத்தால்தான்.... மே மாதம் வருகிறேன் என்று சொன்னதும் நாட்களை எண்ண ஆரம்பித்து விட்டார். அம்மா விழுந்து விழுந்து பார்த்தாலும் சொல்லும் செயலும் அப்பா என்றே பூத்துக் காத்திருக்கிறது எனது அன்பு ரோஜா. கல்யாணம் பண்ணிக் கொடுக்கப் போறேன் என்று சொன்னால் போதும் நா எப்பவும் உங்ககிட்டதான் இருப்பேன் என்று அழுக ஆரம்பித்து விடுவார். 

பள்ளி விடுமுறை என்பதால் மதுரைக்குச் சென்று விட்டார்கள். ஐயா வீட்டுக்குப் போனாலே ஆட்டம் போடத்தான் நேரம் இருக்கும் என்பதால் நானும் போன் செய்யவில்லை. நேற்று போன் பண்ணியபோது பேசிய மகள் ரெண்டு நாளாச்சுப்பா ஏன் பேசவேயில்லை என்று செல்லமாகக் கோபித்துக் கொண்டார். பிறந்த நாளுக்கு என்னடா வேணும் என்று கேட்டதற்கு எதுவுமே வேண்டாம் நீங்க வந்தாலே பிறந்தநாள் சூப்பரா இருக்கும்ப்பா என்று சொல்லிவிட்டு நீங்க எடுத்துக் கொடுக்கிற டிரஸ்தான் பிறந்த நாளுக்கு வேண்டும் என்று சொல்லி உறவினர் போகும் போது கொடுத்தும் விட்டாச்சு.

காலம் தான் எத்தனை வேகமாக ஓடுகிறது. நேற்றுத்தான் அந்த முதல் ஸ்பரிசத்தை அனுபவித்தது போல் இருக்கிறது. அதற்குள் ஒன்பது வருடங்கள் ஓடிவிட்டது. ஆம்... நாளை எங்கள் அன்பு மகளுக்குப் பிறந்தநாள்... எங்களுக்கு இறைவன் மிகப்பெரிய சந்தோஷத்தை... எங்களின் முதல் சொத்தைக் கொடுத்த நாள்... வேசமில்லா பாசமும் எதிர்பார்ப்பில்லாத நேசமுமாகப் போகும் எங்கள் வாழ்வு இப்படியே கழிய வேண்டும்... எத்தனையோ கஷ்டமான நேரங்களில் எல்லாம் எங்களை விழாமல் எழ வைத்ததவர் எங்கள் அன்பு மகள்.

இந்த நாளில் நான் என்ன சொல்லப் போகிறேன்... எப்பவும் சந்தோஷமா இருடா என்பதைத் தவிர்... நீங்களும் வாழ்த்துங்கள் எங்கள் அன்புச் செல்லத்தை...

-மனசு தொடர்ந்து பேசும்.
-'பரிவை' சே.குமார்.

17 எண்ணங்கள்:

ஆத்மா சொன்னது…

குழந்தைகள் இல்லா வீடு பாழடைந்த வீட்டைப்போன்றது என்பது என் எண்ணம்...

என்னுடைய மிக அழகான வாழ்த்தையும் சொல்லிவிடுங்கள்

துரை செல்வராஜூ சொன்னது…

அன்பான இல்லத்தில் அழகிய கண்கள் - பெண் குழந்தைகளே..

சீரோடும் சிறப்போடும் எல்லா நலனகளையும் பெற்று பல்லாண்டு பல்லாண்டு சிறப்புடன் வாழ அன்னை அபிராமவல்லி அருள்புரிவாளாக!..

வெங்கட் நாகராஜ் சொன்னது…

உங்கள் அன்பு மகளுக்கு இந்த மாமாவின் வாழ்த்துகள்........

வாழ்வில் எல்லா இன்பங்களும் கிடைக்க எனது பிரார்த்தனைகளும்....

மகிழ்நிறை சொன்னது…

மகள் வீடு வந்த தேவதையல்லவா?
வாழ்க ஸ்ருதி தமிழ் போலே!

Unknown சொன்னது…

அப்பா போல பொண்ணும் எல்லோருடனும் விகற்பமில்லா அன்போடும்,பண்போடும் பல்கலையும் பெற்றுப் பெரு வாழ்வு வாழ பெரியப்பா வின் மனமார்ந்த,வாழ்த்துக்கள்!

நிலாமதி சொன்னது…

வேஷமில்லா பாசமும் எதிர்பார்ப்பில்லாத நேசமுமாகப் போகும் எங்கள் வாழ்வு இப்படியே கழிய வேண்டும் என்னுடைய வாழ்த்தியும் அன்பு மகளுக்கு தெரிவித்து விடுங்கள்..

மன்னிக்கவும் மிக நீண்ட நாட்களுக்குப்பின் ...வருகிறேன்.

துளசி கோபால் சொன்னது…

அன்பு மகளுக்கு எங்கள் மனம் நிறைந்த இனிய பிறந்தநாள் வாழ்த்து(க்)கள்.

நம்ம வீட்டிலும் இப்படி மகள் அப்பாச் செல்லம்தான்.

அப்ப நான்?

கொடுமைக்கார அம்மா;-))))))))

தனிமரம் சொன்னது…

மகளுக்கு தனிமரத்தின் அன்பான வாழ்த்துக்களையும் சொல்லி விடுங்க சார்!

அருணா செல்வம் சொன்னது…

//எனக்குள்ள குழந்தையைவிட என் மூத்த குழந்தையைத்தான் முதலில் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் இமயமலையாக உயர்ந்து நின்றது. மனைவியைப் பார்த்த பின்னே என் அன்பு மகளைப் பார்த்தேன்.//

காதலுடன் கூடிய வரிகள்.

உங்கள் அன்பு மகளுக்கு என் வாழ்த்துகள் குமார்.

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

தங்களின் அன்பு மகளுக்கு
அன்பான பிறந்த நாள் வாழ்த்துக்கள்
நண்பரே

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

தங்களின் அன்பு மகளுக்கு
அன்பான பிறந்த நாள் வாழ்த்துக்கள்
நண்பரே

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

tha.ma.3

ஸ்ரீராம். சொன்னது…

உங்கள் அன்பு மகளுக்கு 'எங்கள்' வாழ்த்துகளும் குமார்...

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அன்பு மகளுக்கு எனது அன்பான வாழ்த்துக்கள் பல...

r.v.saravanan சொன்னது…

உங்கள் அன்பு மகளுக்கு மனம் நிறைந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் குமார்

J.Jeyaseelan சொன்னது…

இப்பொழுது போல எப்பொழுதும் மகிழ்வோடு இருக்க என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!!

இராஜராஜேஸ்வரி சொன்னது…

வேசமில்லா பாசமும் எதிர்பார்ப்பில்லாத நேசமுமாகப் போகும் வாழ்வ்வின் வசந்தத்திற்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்..!