மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

புதன், 26 மார்ச், 2014

தொடர்கதை: கலையாத கனவுகள்

முந்தைய பதிவுகளைப் படிக்க...


56.  சாண் ஏறினால் முழம் சறுக்குதே

முன்கதைச் சுருக்கம்

கிராமத்து ஏழைக் குடும்பத்துப் பையனான ராம்கி, கல்லூரி ரவுடி வைரவனின் தங்கை புவனாவுடன் நட்பாக பழகுகிறான். மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைத்ததும் காதல் இன்னும் இறுக்கமாகிறது. சில காரணங்கள் இவர்களது காதல் வெளிச்சத்துக்கு வர இரண்டு பக்கமும் பிடி இறுகுகிறது. புவனா மேற்படிப்பு படித்தால் மட்டுமே காதலுக்கான காலத்தை நீட்டிக்க முடியும் என்ற நிலையில் பலவாறு யோசித்து அவளின் அம்மாவிடம் பேசி மனதைக் கரைக்கிறான். இது ஒரு பக்கம் இருக்க அக்கா வீட்டுக்கு கிளம்பும் அவனை சரவணன் அவசரமாக அழைக்கிறான்.

இனி...

"என்னடா அவசரமா வரச்சொன்னே... அப்படி என்ன அவசரம்?" சரவணன் வீட்டிற்குள் நுழைந்ததும் அவனிடம் வினவினான் ராம்கி.

"வா அங்கிட்டுப் போய் பேசலாம்" என்று அவனைக் கூட்டிக் கொண்டு வீட்டிற்குப் பின்னே நிற்கும் மாமரத்தடிக்குச் சென்றான்.

"அப்படி என்னடா ரகசியம்? அக்கா வீட்டுக்கு வேற போகணும்"

"இருடா... அண்ணாத்துரையும் வர்றேன்னு சொன்னான்... உக்காரு..."

"என்னடா... என்ன பிரச்சினை... புவி வீட்ல எதுவும் பிரச்சினையா? எதுக்குடா மறச்சி மறச்சி பேசுறே? அண்ணா இப்பத்தான் எங்கிட்ட பேசினான்.... அப்ப எதுவும் சொல்லலை... அதுக்குள்ள என்னடா பிரச்சினை...? " என்றபடி மரத்தடியில் கிடந்த கயிற்றுக் கட்டிலில் அமர்ந்தான்.

"புவனாவுக்கெல்லாம் ஒரு பிரச்சினையும் இல்ல..."

"அப்புறம் என்ன சொல்லித் தொலைடா... சும்மா டென்சனை ஏத்திக்கிட்டு..." கடுப்பானான்.

"மணியைப் போட்டுட்டானுங்கடா..." மெதுவாகச் சொன்னான்.

"என்ன... என்ன சொன்னே..."? புரியாமல் கேட்டான்.

"மணியைப் போட்டுட்டானுங்கன்னு சொன்னேன்..."

"என்னடா சொல்றே...? எப்படா...? ஆளுக்கு என்னாச்சு...." பதட்டமாய் கேட்டான்.

"ரொம்ப சீரியஸாம்... மதுரைக்கு தூக்கிட்டுப் போயிருக்காங்களாம்... அண்ணாத்துரைதான் சொன்னான்... இப்ப வந்துருவான்... அவன் வந்தாத்தான் தெரியும்..."

"ம்... எதுக்குடா அவனை..." வார்த்தையை முழுங்கினான்.

"தெரியலை... ஆனா இன்னொன்னுடா..."

"என்ன..?"

"சொன்னதும் ஷாக் ஆயிடாதே... அவன் உன்னைப் போட ஆள் தயார் பண்ணி வச்சிருந்தானாம்..."

"எ...எ.....ன்....ன...டா..... சொ....ல்...றே....? எ... என்னையா....?? எ.... எதுக்கு...??"

"ம்... அவன் கட்டிக்க விரும்புற பொண்ண நீ பிக்கப் பண்ணுனா.... அதுக்குத்தான்..." நக்கலாகச் சொன்னான்.

"அதுக்காக என்னைய போடப்பாத்தானா... இதை யாரு சொன்னா...?"

"இரு இப்போ அண்ணாத்துரை வந்ததும் எல்லாம் விவரமாத் தெரியும்..." என்று அவன் சொல்லும் போதே "என்னடா மாப்ளையை பயமுறுத்துறியா?" என்றபடி வீட்டுக்குள் இருந்து கொல்லைப் பக்கமாக வந்த அண்ணாத்துரை கட்டிலில் அமர்ந்தான்.

"என்னடா மணிய..." மெதுவாக இழுத்தான்.

"ஆமா மாப்ள... ஆளை தாறுமாறாப் போட்டுட்டானுங்களாம்... ஆத்துப் பாலம் தாண்டி தனியா வண்டியில போய்க்கிட்டு இருந்திருக்கான்... வேவு பார்த்து வச்சிருந்திருப்பானுங்க போல சரமாரி போட்டுட்டானுங்களாம்... காலு கையெல்லாம் நல்ல வெட்டாம்..."

"அய்யய்யோ பாவம்... பிழைச்சிருவானா?"

"கஷ்டம்தானாம்... இங்க பாக்க முடியாதுன்னு சொல்லிட்டானுங்களாம்... மதுரைக்கு கொண்டு போயிருக்காங்களாம்... என்ன ஆகும்ன்னு தெரியல..."

"எதுக்குடா அவனைப் போயி..."

"மாப்ள எத்தனை குடும்பத்துப் பாவம்... அவனைச் சும்மா விடுமா..."

"அதுக்காக... பெத்தவங்க மனசு என்ன பாடுபடும்... யாருடா பண்ணியிருப்பா.."

"தெரியலை மாப்ள... ஆனா அவன் உன்னைய போட ஆள் ஏற்பாடு பண்னியிருக்கான்.... இந்த நேரத்துல அவனை யாரோ போட்டுட்டானுங்க... ஒருவேளை உனக்கு வேண்டியவங்க யாரோதான் பண்ணியிருக்கனும்..." சிரித்தபடி சொன்னான் அண்ணாத்துரை.

"அடப்போடா... சும்மா காமெடி பண்ணாம..."

"இல்ல மாப்ள... உன்னையப் போட ஆள் ஏற்பாடு பண்ணினது பசங்க மூலமா வைரவனுக்குப் போயாச்சாம்... ஒருவேளை வைரவன் ஆள் வச்சிப் பண்ணியிருக்கனும்... ஆனா கன்பார்ம் இல்ல..."

"வைரவனா.... அவரைப் பொறுத்தவரை என்னை போட்டுட்டா நல்லதுதானே... எதுக்கு எனக்காக அவனைப் போடணும்..."

"நீ தப்புக் கணக்குப் போடுறே மாப்ள... அவனைப் பொறுத்தவரை ஒரே கல்லுல ரெண்டு மாங்காய்... புரியலை... உன்னைய இப்போ சாகவிட்டா அவன் தங்கச்சியோட உயிருக்கு உத்திரவாதம் இல்லை.... இன்னும் ரெண்டு மூணு வருசம் படிச்சிட்டு அப்புறம் கல்யாணம்ன்னு நீங்க முடிவு பண்ணிட்டதாலா அவனுக்கு இப்போ பிரச்சினை இல்லை... இன்னும் மூணு வருசத்துல எப்படி வேணுமின்னாலும் மாறலாம்ல்ல... அதோட புவனாவை கல்யாணம் பண்ணனுங்கிறதுக்காக எந்த லெவலுக்கு வேணுமின்னாலும் போக நினைக்கிற மணியையும் சத்தமில்லாம ஒழிச்சிட்டா உன்னைய காப்பாத்தின மாதிரியும் ஆச்சு...  எப்பவும் பிரச்சினையா இருக்கிற மணியையும் ஒழிச்ச மாதிரி ஆச்சு... எப்படி அவனோட பிளான்..."

"என்னமோ நீ பிளான் போட்ட மாதிரி பேசுறே...?"

"நம்பத் தகுந்த தகவல்களை வச்சிப் பார்க்கும் போது எனக்கு  இப்படித்தான் தோணுது..."

"இங்க பாரு மாப்ள என்னைய மீறி எவனும் புவனாவைத் தொட முடியாது... தெரியுமில்ல..."

"அடியே... உன்னையவே தூக்குறதுக்கு ரெடியாயிருக்கானுங்க... புவனாவைக் கிழிக்க முடியாதாமுல்ல... உங்க காதலுக்கு வைரவன்தான்டா இப்போதைக்கு பாடிகாட்.."

"சும்மா வெளியில போயி அவருதான் பண்ணுனாருன்னு சொல்லிக்கிட்டு திரியாதியடா... எவனோ பண்ணப் போயி பாவம் அவருக்குப் பிரச்சினை வந்துடாம..."

"இங்க பாருடா அண்ணா.... மச்சானுக்கு சப்போர்ட்டை... அது சரி... இன்னும் தாலி ஏறலை அதுக்குள்ள மச்சானுக்காக நம்மளை திட்டுறான்டா..."

"விடுடா... விடுடா... புது மாடு வெறிக்கத்தான் செய்யும்... பழகப் பழக தெளிவாயிடும்... என்ன மாப்ள... இது எனக்கு ரொம்ப வேண்டிய ஆள் சொன்னது... ஆனா அவரே சந்தேகத்தோடதான் சொன்னாரு... நானும் மணியோட பிரண்ட்ஸ் எதிர் பார்ட்டிகள்ன்னு எல்லாப் பக்கமும் விசாரிச்சேன்... யாரு எதுக்குப் பண்ணினான்னே தெரியலை... அது போக வைரவன் பண்ணினாருன்னு எவனும் சொல்லலை... வைரவன் இம்புட்டுத் தூரம் போக மாட்டாருன்னு எனக்கும் தெரியும்... இதுல எதோ வேற முக்கியப் பிரச்சினை இருக்கலாம்... எப்படியும் வெளிய வந்திரும்... நீ கவனமா இரு மாப்ள... எப்ப எவன் கத்தியை சொருகுவான்னு தெரியாது..."

"என்னடா பயமுறுத்துறீங்க...?"

"இல்ல மாப்ள அவனைப் போட்டுட்டானுங்க... ஒருவேளை அவன் ஆள் ஏற்பாடு பண்ணியிருந்தா.... வாங்குன காசுக்கு வேலை பாப்பானுங்கள்ல... எனக்கு அரசல் புரசலா ரெண்டு நாளைக்கு முன்னாடியே தெரியும்... உங்கிட்ட சொல்ல வேண்டாம் பாத்துக்கலாம்ன்னு இருந்தேன்... ஆனா உனக்குப் போன் பண்ணிட்டு வச்சதும் இந்தச் செய்தி வந்தாச்சு... இனி நாம கவனமா இருக்கணும்... தனியா எங்கயும் போகாத... "

"இப்ப அக்கா வீட்டுக்குப் போறேன்..."

"அங்கெல்லாம் ஒண்னும் போக வேண்டாம்.... சொன்னாக் கேளு..."

"அடப்போங்கடா... அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேயி... எப்ப போகணுமின்னு இருக்கோ அன்னைக்கு போயித்தானே ஆகணும்... அடச்சி வச்சா போற உசிரு போகாதா என்ன... அக்கா வீட்டுக்குப் போகலைன்னா அம்மாவுக்கு யார் பதில் சொல்வா..."

"சரி நாங்களும் வாறோம்... அப்படியே மச்சானையும் பாத்துட்டு வரலாம்... அப்புறம் பேசாம திருப்பூர் பக்கம் சேவியர்கிட்ட போயிக்கிட்டு கரஸ்ல படிடா... அதுதான் நல்லது..."

"என்னடா சொல்றே... புவி காரைக்குடியில படிக்கலாம்ன்னு சொல்லுது..."

"இங்க பாரு... ரெண்டு வருசம் இங்க இருந்து ஒரே இடத்தில படிச்சு... சண்டை சச்சரவுகள்ன்னு இல்லாம..... அங்கிட்டுப் பொயிட்டியன்னா நல்லது கெட்டதுக்கு வரும்போது அவளைப் பார்த்துக்கலாம்... அதுதான் உன்னோட உயிருக்கும் பாதுகாப்பானது. அவகிட்ட விவரமா சொல்லு புரிஞ்சிப்பா... காதல் முக்கியம்ன்னா... அந்தக் காதல் நிலைச்சிருக்க உன்னோட உயிரும் முக்கியம்.... சரி வா அக்கா வீட்டுக்குப் போகலாம்..."

அவர்களுடன் குழப்பமான மனநிலையில் அக்கா வீடு நோக்கிப் பயணித்த ராம்கி, நண்பர்கள் விவரமாக எடுத்துச் சொல்ல, மனசுக்குள் எல்லாத்தையும் பற்றி யோசித்துப் பார்த்தான். அவர்கள் சொல்வதுதான் எல்லாத்துக்கும் நல்லது என்ற அவனுக்கும் தோன்றியது. எப்படியும் புவியை நேரில் பார்த்து விவரமாச் சொல்லி புரிய வைக்கணும் என்று நினைத்துக் கொண்டவன் "நீங்க சொல்ற மாதிரி செய்யிறதுதான் சரியின்னு படுதுடா...." என்றான்.

(சனிக்கிழமை தொடரும்)
-'பரிவை' சே.குமார்.

2 எண்ணங்கள்:

Unknown சொன்னது…

நன்றாகவே தொடர்கிறது.இப்போதைக்கு 'மாப்புளை' க்கு ஆபத்து விலகிடுச்சு,பாப்போம்!

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

அருமை
தொடர்கிறேன் நண்பரே
த.ம.2