மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 28 செப்டம்பர், 2013

தொடர்கதை : கலையாத கனவுகள்

முந்தைய பதிவுகளைப் படிக்க...******
17. மீண்டும் கூடல்

முன்கதைச் சுருக்கம்: 

கிராமத்து ஏழைக்குடும்பத்துப் பையனான ராம்கி, கல்லூரி ரவுடி வைரவனின் தங்கை புவனாவுடன் நட்பாக பழகுகிறான்.  அக்காவுக்கு விருப்பமில்லாத மாப்பிள்ளையை பேசி வைத்திருக்கும் அம்மாவுடன் மல்லுக்கு நிற்கிறான். கல்லூரியில் வைரவனைத் தாக்க வந்தவர்களுடன் ஏற்பட்ட தகராறின் காரணமாக கெட்டபெயர் ஏற்படுகிறது. அவனைப் பார்க்க வரும் புவனா, அவனுடன் மல்லிகா இருக்கவும் கோபமாகிறாள்.

இனி...

ராம்கி போறேன்னு சொன்னதும் படக்கென்று திரும்பியவள் "இப்ப மட்டும் எங்க அண்ணனுக்கிட்ட சொல்ல மாட்டாங்களா?" என்றாள்.

"இல்லைங்க... சும்மாவே பிரச்சினையாக் கிடக்கு... இதுல மேல மேல எதுக்கு பிரச்சினையின்னுதான்..."

"ஓ... என்ன பிரச்சினை..? யாரால பிரச்சினை..? என்னாலயா... இல்லையில்ல...  எங்கண்ணனை அடிச்சாய்ங்க... நீங்க திருப்பி அடிச்சீங்க... அதானே... அதுக்கும் எங்கூட பேசுறதுக்கும் என்ன பிரச்சினை..? அப்படின்னா அவகூட பேசினா மட்டும் பிரச்சினை இல்லையா?"

"அது எங்க கிளாஸ் பொண்ணு... அதனால..."

"அதனால... அப்ப அவகிட்ட பேசுவீங்க... எங்ககிட்ட பேசமாட்டீங்க... அப்புறம் எதுக்கு இங்க வந்தீங்க..?"

"அப்படியெல்லாம் இல்லங்க... ரொம்ப கோபமா இருக்கீங்க... நான் கோபமா பேசினதுக்கு சாரிங்க..."

"உங்களுக்கு அடிபட்டிருக்குன்னு தெரிஞ்சதும் நான் பட்ட வேதனை எனக்கு மட்டும்தான் தெரியும்... அழுகையோட பாக்க வந்தா தூக்கியெறிஞ்சு பேசுறீங்க... நான் என்னங்க பண்ணினேன்..." கண் கலங்கினாள்.

"அதான் சாரி சொல்லிட்டேன்ல.. கண்ணைத் துடச்சுக்கங்க..."

துப்பட்டாவால் கண்ணைத் துடைத்தபடி, "இப்ப அவ சொல்லித்தானே இங்க வந்தீங்க..?" அவனை ஓரக்கண்ணால் பார்த்தபடி கேட்டாள்.

"இப்ப எதுக்குங்க அவங்க மேல கோபப்படுறீங்க... அவங்க அப்படிப்பட்டவங்க இல்லை..."

"அவளுக்கு வக்காலத்து வாங்குறீங்க... என்னைய வருத்தப்பட வைக்கிறீங்க... சொல்லுங்க அவ என்ன சொன்னா..?"

"அவங்க உங்களுக்குத்தான் சப்போர்ட் பண்ணினாங்க... என்னைத் திட்டின்னாங்க.... இதுதான் உண்மை... சரி... சரி... கோபம் எதுக்குங்க... சாரிங்க... எப்பவும் போல நாம பிரண்டா இருப்போம்... சரி.. நான் வாறேன்..."

"நான் உங்ககிட்ட பேசணும்..."

"இப்ப பேசிக்கிட்டுத்தானே இருக்கோம்..."

"என்ன ஜோக்கா? சாயந்தரம் வெயிட் பண்ணுங்க... சரியா?"

"இல்லங்க... சாயந்தரம் ஒரு வேலை இருக்கு... நாளைக்குப் பேசுவோம்... ஐயா வீட்ல நாளைக்குச் சந்திப்போம்..."

"என்ன அத்துவிட்டுப் போறீங்களா? சரி... நாளைக்கு கண்டிப்பா ஐயா வீட்டுக்கு வாறீங்க... கதை எதாவது சொன்னா நா கொல்லங்குடி காளியாயிடுவேன்.... பார்த்துக்கங்க..."

"இப்பவே அப்படித்தான் இருக்கீங்க... இனி மாற என்ன இருக்கு" என்றான் மெதுவாக.

"என்ன..? சத்தமா சொல்லுங்க..."

"ஒண்ணுமில்ல சரியின்னு சொன்னேன்.... வரவா?"

"என்ன சொன்னீங்கன்னு தெரியும்... காளியா மாரியான்னு நாளைக்குத் தெரியும்...."

"மாரியாவே இருந்தால் அழகா இருக்கும்.. காளியான்னா இருக்க அழகும் போயிரும்..."

"என்னது...?" என்றவள் அவனை முறைப்பது போல் பார்த்தாள்.

"ஆத்தாடி... இப்பவே மாறிடாதீங்க... நான் வாறேன்..."

"ம்... அந்தப் பயம் இருக்கட்டும்..."


"அக்கா... அம்மா எங்கே?"

"அங்கிட்டுத்தான் இருந்திச்சு... யாரு வீட்டுக்காவது பேசிக்கிட்டு இருக்கப் போயிருக்கும்... பொங்கல் வருதுல்ல... சேலை துணி எடுக்கிறதைப் பத்தி பேசிக்கிட்டு இருக்கும்..."

"ம்... எனக்கு அண்ணங்கிட்ட சொல்லி ஜீன்ஸ் பேண்ட் வாங்கியாரச் சொல்லணும்... உனக்கு சுடிதார் வாங்கச் சொல்லுவோமா?"

"ஆமா... சுடிதார்தான் குறைச்சல்.... அடப்போடா..."

"ஏங்க்கா...... என்ன அலுத்துக்கிறே...?"

"பின்ன என்னடா.... பொங்கல் முடிஞ்சா என்னோட கலியாண வேலய ஆரம்பிச்சிடுவாங்கடா..."

"அண்ணன் வரட்டும்... எல்லாம் பேசிக்கலாம்... விடு... அம்மா டிரஸ் எடுக்கிற முடிவோட இருக்கா... இல்லையா?"

"எடுக்கணுமின்னு சொன்னுச்சு... அண்ணன் அனுப்பின காசு வச்சிருக்கும் போல... எனக்கு சேலையும் அதுக்கு சேலையும் எடுக்கிறேன்னு சொன்னுச்சு.... உனக்கு அண்ணன் எடுத்துக்கிட்டு வருமாம்..."

"ம்... அக்கா பொங்கலுக்கு பிரண்டெல்லாம் வரச்சொல்லனுக்கா... அம்மா திட்டுமோ..?"

"பசங்கன்னா திட்டாது... பொண்ணுங்கன்னா ஊரைக்கூட்டினாலும் ஆச்சர்யப்படுறதுக்கு இல்லை..."

"எல்லாரையும்தான் கூட்டியாரணும்..."

"தேவையில்லாத வேலை பாக்காதே... அப்புறம் அம்மா கொல்லங்குடி காளியா மாறினாலும் மாறிடும்... என்னோட கல்யாண விசயத்துல நீ எதிர்க்க ஆரம்பிச்சதும் உம்மேல ரொம்ப கோவமா வேற இருக்கு... எவளுகளையும் கூட்டிக்கிட்டு வந்திடாதே... சேகர் மாதிரி..."

"கொல்லங்குடி காளியா...?" கேட்டவன் மனதுக்குள் நாளைக்கு கதை சொன்னா நான் காளியா மாறிடுவேன்னு புவனா சொன்னது வந்து செல்ல சிரித்துக் கொண்டான்.

"என்னடா சிரிக்கிறே...?"

"இல்லக்கா... இன்னைக்கு காலேசுல ஒருத்தவங்க இதே வார்த்தைய சொன்னாங்க... அதான் இப்ப நீ சொன்னதும் சிரிப்பு வந்திருச்சு.... அம்மாவை சமாளிச்சிக்கலாம்.... ஆனா அவங்களை சமாளிக்க முடியாதுக்கா" 

"யார்டா அவ?"

"ஐய்யோ அக்கா... அவ இல்லை அவங்க... என்னோட புரபஸர்... ஒரு கொஸ்டின் கேட்டாங்க... யாரும் பதில்சொல்லலை... நாளைக்குச் சொல்லலைன்னா கொல்லங்குடி காளியா மாறிடுவேன்னு சொன்னாங்க..." ஒருவாறு சமாளித்து "இரு இந்தா வாறேன்..." என்றபடி கிளம்பியவன் மனசுக்குள் நாளை புவனா அப்படியென்ன முக்கிய விசயம்பேசப்போகிறாள் என்று நினைத்தபடி சேகரைத் தேடிப் போனான்.

(புதன்கிழமை தொடரும்)
-'பரிவை' சே.குமார்.

2 எண்ணங்கள்:

Unknown சொன்னது…

கொல்லங்குடி காளியா மாறிடுவேன்,ஹ!ஹ!!ஹா!!!

Unknown சொன்னது…

நம்ம சினிமாவிலே தலைப்புக்கும் ,கதைக்கும் பஞ்சமா இருக்கே ,நீங்கள் உங்கள் கதைகளுடன் சினி பீல்ட்டில்நுழைய முயற்சிக்கலாமே !
த.ம 2