மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

புதன், 4 செப்டம்பர், 2013வலைச்சரத்தில் தேரோட்டம்

ப்பொழுதும் நகரத்துத் திருவிழாக்களைவிட கிராமத்துத் திருவிழாக்கள் சற்றே கூடுதல் சந்தோஷத்தைக் கொடுக்கும் என்பதை எல்லோரும் அறிவோம்... உறவுகளுக்குச் சொல்லி ஊரில் எல்லோரும் ஒன்றாகக்கூடி கொண்டாடும் திருவிழாக்கள் என்றால் சந்தோஷத்திற்கு கேட்கவே வேண்டாம். அதுவும் ‘ஊர் கூடித் தேரிழுத்தால்...’ என்ற பழமொழிக்கு ஏற்ப சுத்துப்பட்டு கிராமங்கள் எல்லாம் ஒன்று கூட கண்டதேவி தேரோட்டம் மிகச்சிறப்பாக நடக்கும்.
(கண்டதேவி தேர்)

வருடா வருடம் ஆனி மாதம் தேரோட்டம் நடக்கும். பத்து நாட்கள் திருவிழா... தினமும் கலை நிகழ்ச்சி... அதிகாலை சாமி திருவீதி உலா... ஒன்பதாம் நாள் தேரோட்டம்... சின்னத்தேர் பெரியதேர் என இரண்டு தேர்கள்... முன்னே சப்பரத்தில் சில சாமிகள்... என தேரோட்டம் சுற்றியுள்ள கிராம மக்கள் எல்லாம் ஒன்று கூட சிறப்பாக நடைபெறும். நாங்கள் பள்ளியில் படிக்கும் போது தேரோட்டம் என்பது மிகப்பெரிய விழா. அன்று பள்ளிகளுக்கு விடுமுறை, சொந்தங்களுக்கு எல்லாம் சொல்லி வீட்டில் ஆட்டுக்கறி அல்லது நாட்டுக்கோழிக்கறிக் குழம்பு வைத்து சாப்பிட்டு மதியம் மூணு மணிக்கெல்லாம் தேர் பாக்க கிளம்பிவிடுவோம். அப்போது பெரியவர்கள் தேரோட்டக்காசு என்று எல்லாருக்கும் கொடுப்பார்கள். எங்கள் ஊரும் கண்டதேவியும் அருகருகே என்பதால் ஐந்து நிமிட நடையில் வந்துவிடலாம். தூரத்து ஊரில் இருப்பவர்கள் எல்லாம் வண்டி கட்டி வருவார்கள்.

கோவிலின் முன்பாக அலங்கரித்த தேர் உயரமாக நிற்பது பார்க்க கண்கொள்ளாக்காட்சியாக இருக்கும். அதன் முன்னே குதிரைகள் பாய்ந்து வருவதுபோல் பொம்மை கட்டிவைத்திருப்பார்கள்... நான்கு நாட்டார்கள் பிடித்து இழுக்க வேண்டிய வடங்கள் வீதியில் போடப்பட்டிருக்கும். நான்கு நாட்டாருக்கும் மாலை மரியாதை செய்தபின்னர் அவர்களுக்கு உரிய வடத்தில் நாட்டார்கள் வந்து நிற்க, நாட்டம்பலங்கள் வடங்களில் நின்று துண்டைச் சுற்றி இழுக்கச் சொல்ல பெரியவர், சிறியவர், இளைஞர் என எல்லாருமாக சப்தம் எழுப்பியபடி இழுப்பார்கள்.. (நானும் வடம்பிடித்து இழுத்திருக்கிறேன்) இடையிடையே தேரை நிறுத்தவும் வேகத்தைக் கட்டுப்படுத்தவும் கட்டை போடுபவர்கள் முன் சக்கரங்களின் அருகே கயிரைப் பிடித்தபடி வருவார்கள். நான்கு வீதியிலும் ஆங்காங்கே நின்று கிளம்பும் போது குலுங்கிச் செல்வது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.

ஆனி மாதம் மாம்பழ சீசன் என்பதால் தேரோட்டம் என்றால் மாம்பழத்திற்குப் பஞ்சம் இருக்காது. தேர் கிளம்பிய இடத்தை வந்தடைவதை 'நிலைக்குத்துதல்' என்று சொல்வோம். தேர் நிலைக்குத்திருச்சா என்று தேர் பார்த்து செல்லும்போது எதிர்படும் எல்லாரும் கேட்பார்கள். நிலையை அடைந்ததும் மாம்பழங்களை அள்ளி வீசுவார்கள். அதைப் பிடிக்க ஒரு கூட்டம் கூடிவிடும். தேரோட்டம் பார்த்து திரும்பும் போது மாம்பழம், பொரி உருண்டை என எல்லாம் வாங்கி வருவோம்.

முன்பெல்லாம் ரோடு சரியில்லாமல் இருந்ததால் தேர் சில நேரங்களில் பதிந்து கொள்ளும். இழுத்துப் பார்த்து முடியவில்லை என்றால் அடுத்த நாள் மீண்டும் இழுப்பார்கள். ஆனால் தற்போது ஊரணியைச் சுற்றி நான்கு வீதிகளும் தார் ரோடாக இருப்பதால் கடகடவென நிலையை வந்து சேரும்.

எங்களுக்கு எல்லாம் சந்தோஷத்தைக் கொடுத்த தேர்த் திருவிழா, கடந்த சில வருடங்களாக வடப்பிரச்சினையால் தடைபட்டுக் கிடக்கிறது. ஒவ்வொரு வருட ஆனிமாதமும் இந்த வருடம் தேரோட்டம் நடக்குமா என்று ஏங்க வைத்துக் கடந்து செல்கிறது. இனி தேரோட்டம் காணும் நாள் வருமா என்பது கேள்விக்குறியே..

தொடர்ந்து படிக்க இங்கே சுட்டுங்கள்...

குறிப்பு : வலைச்சரப் பணிகளால் தங்களின் வலைப்பூ பகிர்வுகளுக்கு வர நேரமில்லை... விரைவில் வந்து படிக்கிறேன்... தொடர்ந்து வாருங்கள்... விரைவில் வருகிறேன்...

நன்றி,
-'பரிவை' சே.குமார்.

6 கருத்துகள்:

 1. இந்த தேர் விழாவில்தான் அடிக்கடி கலவரம் வருவதாக ஜூனியர் விகடனில் படித்த நியாபகம் உண்மையா குமார் ?

  பதிலளிநீக்கு
 2. //ஆட்டுக்கறி அல்லது நாட்டுக்கோழிக்கறிக் குழம்பு////தேரோட்டத்துக்கு மாமிசம் சாப்புட்டுப் போவீங்களா?ஐய்யய்யோ!(கண்ணப்பரே,சாமிக்கு 'மாமிசம்' படைச்சாருன்னு சொல்லுறீங்களா,அதுவும் சரி தான்!)

  பதிலளிநீக்கு
 3. ஆனிமாதமும் இந்த வருடம் தேரோட்டம் நடக்குமா என்று ஏங்க வைத்துக் கடந்து செல்கிறது. இனி தேரோட்டம் காணும் நாள் வருமா என்பது கேள்விக்குறியே..//

  அடுத்த வருடம் தேரோட்டம் காணும் நாள் வர வேண்டும். உற்றம், சுற்றத்தோடு மகிழும் நாளும் வரவேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
  தேரோட்ட நினைவுகள் அருமை.

  பதிலளிநீக்கு
 4. பூவையின் எண்ணங்களை வலைச் சரத்தில் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி. என் மற்ற பிரதான பதிவு gmb writes -க்கும் வந்து படித்து கருத்திட அழைக்கிறேன். நன்றி

  பதிலளிநீக்கு
 5. ஆரோக்கியமான எழுத்துமுறை உங்களுடையது. நன்றாக, அழ‌காக எழுதுகிறீர்கள். வாழ்த்துகள். கருத்தபசு சே.குமார், வம்சியில் என்னோடு சேர்ந்து வந்தவர், வாருங்கள் சேர்ந்து பயணிப்போம்.
  அன்புடன்
  கே.ஜே.அசோக்குமார்.

  பதிலளிநீக்கு

நட்பின் வருகைக்கு நன்றி..!

பகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...