மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

திங்கள், 16 செப்டம்பர், 2013கிராமத்து நினைவுகள் : கும்பாபிஷேகம்...

(அம்மன் கோவில் கட்டிடப் பணியின் போது... கும்பாபிஷேக போட்டோஸ் இன்னும் வரவில்லை... வந்ததும் அது ஒரு பதிவுதான்... போங்க...)

இன்று காலை எங்கள் ஊர் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் மிகச் சிறப்பாக நடந்து முடிந்திருக்கிறது. நாம் போகவில்லையே என்ற மன வருத்தம் அதிகமாக இருந்தது... என்ன செய்வது... வெளிநாட்டு வாழ்க்கையில் எல்லா விசேசங்களுக்கும் செல்வது என்பது இயலாத ஒன்று என்பது தெரிந்ததுதானே...

எங்கள் ஊர் மாரியம்மன் கோவில் சின்ன மண்மேட்டில் எங்கள் தாத்தாக்களால் ஏற்ப்படுத்தப்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக மாறி ஓட்டுக் கொட்டகையில் மேலே அம்மன் மேடையும் கீழே ஆட்கள் அமரும்படியான இடமுமாகத்தான் இருந்தது. பின்னர் கடந்த முறை கும்பாபிஷேகம் செய்யும் போது அம்மன் மட்டுமே இருக்கிறது முருகரையும் பிள்ளையாரையும் இருபுறமும் வைக்க வேண்டும் என்று ஏகமனதாக முடிவெடித்து அம்மன் மேடையில் இருந்து முன்புறக் கொட்டகைக்கு இறங்கும் இரண்டு படிகளின் இருபுறமும் பிள்ளையார் முருகனுக்கு சிறிய அறைபோல் அமைக்கப்பட்டது. அப்படியேதான் கடந்த வருடம் நான் ஊருக்குச் செல்லும் வரை இருந்தது.

எல்லா ஊரிலும் அம்மன் கோவிலை அழகாகக் கட்டிவிட்டார்கள். நம்ம ஊரில் மட்டும் இன்னும் பழைய ஓட்டுக் கொட்டகையில் ஓடெல்லாம் உடைந்து பார்க்க ரொம்ப மோசமாக இருக்கிறது என்று ஆளாளுக்கு பேச ஆரம்பித்தோம். ஆனால் யார் மணி கட்டுவது என்பதில்தான் பிரச்சினை... நீண்ட காலமாக இப்படியே ஓடிக் கொண்டிருந்தது. கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பார்கள் இருக்கும் கோயிலை பராமரிக்காமல் வாழ்வது என்பதும் அதே போன்றதுதான் என்பதை உணர்ந்தும் பணம் என்னும் இடத்தில் எல்லாரையும் யோசிக்க வைத்தது.

விவசாயம் பொய்த்துப் போன ஊரில்... இளைஞர்கள் எல்லாம் பொழைப்புத்தேடி சென்றுவிட்ட ஊரில்... வயதானவர்கள் மட்டுமே இருக்கும் ஊரில்... ஒரு கோவில் காரியம் பார்ப்பதென்பது சாதாரண விஷயமில்லையே... சின்னக் கோவில் கட்டுவதாக இருந்தாலும் லட்சங்கள் வேண்டுமே... என்ற தயக்கம் இருந்தாலும் கடந்த முறை பொங்கலுக்கும் போயிருந்த போது எல்லாருமாக பேசி, நாங்கள் எது சொன்னாலும் அதை நடத்துமிடத்தில் இருப்பவர் எங்க சித்தப்பா என்றால் அதில் குதர்க்கம் விளைவிக்க நினைப்பவரும் ஒரு சித்தப்பாவே... ஆமா குட்டீண்டு ஊருக்குள்ளே... ஒரே இனத்துல பெரியப்பன் சித்தப்பன்னு உறவுகளோட இருக்கிற பூமிதான் எங்க ஊரு... அடிச்சிக்கிட்டாலும் பிடிச்சிக்கிட்டாலும் எங்களுக்குள்தான்.

சித்தப்பாவை எங்கள் பக்கம் இழுத்து கோவில் கட்ட வேண்டும் என்று தூபம் போட்டோம்... காசு வேணும்டா... இதெல்லாம் லேசுப்பட்ட காரியமில்லடா என்றார். சீட்டடித்து வசூல் பண்ணுவோம் என்றதற்கு நம்ம கோவிலுக்கு எதுக்கு வசூல் பண்ணனும் என்று மறுத்தார். குடி வரி என்ற நிலை மாற்றி திருமணமானவர்கள் தனி வரி கொடுக்க வேண்டும் என்று வைத்திருந்தோம். அதன்படி ஆளுக்கு ஐயாயிரம் என்று முடிவெடுத்து வசூலித்து பூமி பூஜை போட்டு, மச்சானுக்குத் தெரிந்த ஸ்தபதியைக் கூப்பிட்டு வேலையை ஆரம்பித்தோம். எங்கள் வீட்டுக்கு முன் இருந்த ஓட்டுக் கொட்டகை கோபுரமாக உயரத் தயாரானது. அம்மன் எங்கள் வீட்டுக்கு மிக அருகில் சிறிய கொட்டகைக்குள் தஞ்சமானாள்.

வேலை நடக்கும் போது பணப்பற்றாக்குறையால் மீண்டும் ஐயாயிரம் போட்டோம். அப்புறம் இளைஞர் மன்றத்தின் (நாங்கதான்... ) நச்சரிப்பால் நன்கொடை சீட்டு அடித்து எல்லாரும் வசூல் பண்ண கொடுத்துவிட்டோம். இதையெல்லாம் ஊரில் இருந்த மச்சானும் என் வயதொத்த சித்தப்பாக்களும்தான் செய்தார்கள்... நாங்கதான் வெளிநாடுகளில் இருக்கிறோமே... எனக்கு வந்த சீட்டெல்லாம் யாரிடமும் வசூல் பண்ண முடியாமல் தூங்கியது. கும்பாபிஷேகத்திற்கு முன்னர் அவரவர் மனசுக்குப்பட்ட தொகையுடன் திருப்பிக் கொடுக்கச் சொன்னார்கள். எனது தற்போதைய சூழலில் அதிகம் கொடுக்க முடியவில்லை. ஆனால் கண்டிப்பாக எதாவது செய்வேன் என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு சொற்பத்தொகையைத்தான் கொடுக்கச் சொன்னேன்.

கடந்த ஒரு வருடமாக எல்லாருமாக கஷ்டப்பட்டார்கள் என்றால் எங்க சித்தப்பாதான் பொறுப்பாக கோவில் கட்டி முடிக்கும் பணியை பார்த்துக் கொண்டார். செவ்வாய் என்றாலும் அவர்தான் கத்த வேண்டும். படிக்கும் காலத்தில் திருவிழா நடத்தாமல் பிரச்சினையில் கிடந்தபோது நாங்கள் எடுத்த முயற்சியிலும், மார்கழி மாதம் சாமி கும்பிட நாங்கள் ஆரம்பித்த போதும் எங்களுடன் பயணித்தவர்கள் இளைஞர் மன்றத் தலைவர் என்று நாங்கள் அன்புடன் அழைக்கும் இளையர் வீட்டு ஐயா (ஊரில் எல்லா வீட்டுக்கும் ஒரு பெயர் உண்டு), எங்க சித்தப்பா, அப்பா, எங்க சின்னய்யா, மாமா இப்படி சிலர்தான். அதில் சித்தப்பாதான் எல்லாவற்றிலும் துணை நின்றார். எங்களை எதற்காகவும் விட்டுக் கொடுக்கமாட்டார்.

நாங்கள் அவரை முன்னிறுத்தி ஆரம்பித்து வைத்தோம். இன்று நாங்களெல்லாம் இரை தேடி பல இடங்களுக்குச் சென்றாலும் அவர் அதை நிறுத்தாமல் நடத்தி வருகிறார். திருவிழாவிற்கு நாங்கள் எல்லாருமே ஊருக்கு வந்துவிடுவோம். எங்க சித்தப்பா தலைமையாசிரியராய் இருந்து ஓய்வு பெற்றவர். மூக்கு மேல கோபம் வரும்... இடது கையால் அறைந்தால்.... நானும் சின்னப் பிள்ளையில் வாங்கியிருக்கேன்.. அட இதெல்லாம் சகஜமுங்க... ஆனா பாருங்க ஒரு முறை கணிப்பொறி வகுப்பு ஆரம்பிக்க அவர் பள்ளிக்கு நானும் முருகனும் தம்பதி சகிதமாக போனோம். எதோ வாங்கி வர ஒரு பையனை அனுப்பினார். அவன் ஏதோ காரணத்தால் திரும்பி வந்து, சைக்கிளில் நின்றபடி விளக்கம் சொன்னான்... விட்டாரே பார்க்கலாம்... சைக்கிள் அங்கிட்டுப் போய் விழ, என் மனைவி ஆத்தாடி... சின்னமாமாவுக்கு இம்புட்டுக் கோபம் வருமா என்று பயந்து ஒடுங்கிவிட்டார். அப்படி ஒரு கோபக்காரர்.... ஆனால் ஊர் விஷயத்தை இழுத்துப் போட்டுப் பார்ப்பார். அவரிடம் இருக்கும் ஊர் பணக்கணக்கு வழக்கைப் பறிக்க ஒருத்தர் தொடர்ந்து முயற்சித்து தோல்வியில் பிதற்றிக் கொண்டு திரிகிறார். நாங்கள் அவரைக் கண்டு கொள்வதேயில்லை. சித்தப்பாவின் சேவைக்காக இரவு பொன்னாடை போர்த்தி சிறப்பித்தார்களாம்.. கண்டிப்பாக செய்ய வேண்டியதுதான்... சிறப்பாக இந்த விழா நடைபெற முக்கிய காரணகர்த்தா அந்த சுப்பையா வாத்தியார்தானே... 

எங்கள் அம்மன் ரொம்ப கோபக்காரி என்பார்கள். வேகமானவள் என்பார்கள்... எங்களைப் பொறுத்தவரை அவள் எங்களைக் காக்கும்.... அரவணைக்கும் அன்னைதான்... எங்களிடம் உக்கிரம் காட்டியதில்லை... இங்கு நான் அம்மை வந்து தனியாக தவித்த போது அவள் என் மீது கொண்ட அன்பினால் அதிகம் என்னை கஷ்டப்படுத்தவில்லை என்பதை நன்றாக உணர்ந்தேன். எங்களின் ஆசை அவளுக்கு ஒரு நல்ல கோவில் வேண்டும் என்பதே. அந்த ஆசை நிறைவேறி அழகானதொரு கோவிலுக்குள் மீண்டும் அவளை அமர வைத்திருக்கிறோம். அவளுக்கான திருவிழாக்கள் எந்தத் தங்குதடையுமின்றி சிறப்பாக வருடம் தோறும் நடக்கவேண்டும்... நடக்கும்... அம்மனின் அருள் எல்லோருக்கும் கிடைக்கட்டும்...
-'பரிவை' சே.குமார்.

13 கருத்துகள்:

 1. ஊர்கூடிச் செய்த நல்ல செயல் நல்லபடியா நிறைவேறினதில் சந்தோஷம்..

  பதிலளிநீக்கு
 2. ஊர் கூடித் தேர் இழுக்கணும் என்பது உண்மைதான்!

  உங்கள் சித்தப்பாவுக்கு எங்கள் இனிய பாராட்டுகளும் அன்பும்.

  //கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டும் என்பார்கள் //

  இந்த வேண்டும் என்பது வேண்டாம் என்று இருக்கணும்:-)

  சாமி சமாச்சாரம் என்பதால் மற்ற சில தட்டச்சுப் பிழைகளைத் தள்ளி விட்டேன்:-)

  பதிலளிநீக்கு
 3. வணக்கம்
  சே.குமார்(அண்ணா)

  அம்மா கோபக்காரி என்று பதிவில் சொல்லி விட்டிங்கள் அதனால் கருத்துப் போடுகிறோம் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றதற்கு எனது வாழ்த்துக்கள்
  பதிவு அருமை

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 4. ஆசிரியர் சுப்பையா அவர்களின் பணி போற்றப்பட வேண்டிய பணி. போற்றுவோம் வாழ்த்துவோம்

  பதிலளிநீக்கு
 5. கிராமத்து கோவில் பற்றிய நினைவுகள் - எங்களையும் அங்கே சென்று சேர்த்தது. கும்பாபிஷேகம் புகைப்படங்களையும் கிடைத்தபின் பகிர்ந்து கொள்ளுங்கள்.....

  பதிலளிநீக்கு
 6. # கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டும் என்பார்கள் #
  திருத்தம் செய்யுங்கள் குமார் !

  பதிலளிநீக்கு
 7. கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்..

  கோவில் சிறப்பாக அமைந்ததற்கு வாழ்த்துகள்..!

  பதிலளிநீக்கு
 8. அப்படியே எங்க ஊர் நியாபகம் வருகிறது........உங்கள் பதிவை வடிக்கும் போது

  பதிலளிநீக்கு
 9. அம்மனின் அருள் நம் அனைவருக்கும் கிடைக்கட்டும் என வேண்டுவோம்

  பதிலளிநீக்கு
 10. தம்பி அங்க இருந்தாலும் எண்ணம் முழுவதும் அம்மன் கோயில் கும்பாபிசேகத்தில் இருக்கிறது. அம்மனின் அருள் தொடர்ந்து கிடைக்கட்டும். அப்படியே உங்க ஊர் குட்டீஸ் எல்லாம் வரவேற்பதுபோல் போஸ்டர்ல இருக்காங்க சொன்னியே முடிஞ்சா அதையும் போடு..வருங்கால வருத்தப்படாத வாலிபர்களைப் பார்ப்போம். :)

  பதிலளிநீக்கு

நட்பின் வருகைக்கு நன்றி..!

பகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...