மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

செவ்வாய், 10 செப்டம்பர், 2013தொடர்கதை : கலையாத கனவுகள்

முந்தைய பதிவுகளைப் படிக்க...

           பகுதி-1        பகுதி-2        பகுதி-3       பகுதி-4        பகுதி-5     
           பகுதி-6        பகுதி-7        பகுதி-8        பகுதி-9       பகுதி-10   
           பகுதி-11
******


12. சண்டை ஆரம்பம்.

முன்கதைச் சுருக்கம்:

கல்லூரிக்குப் போகும் கிராமத்து மாணவனான ராம்கி, அங்கு கல்லூரி ரவுடியான வைரவனின் தங்கை புவனாவுடன் பழக நேர, அவளை மனதுக்குள் விரும்ப ஆரம்பிக்கிறான். இதனிடையே அவனது அம்மா, தனது அண்ணனின் மகனான ஊதாரி முத்துவுக்கு மகளைக் கட்ட வைக்க நினைக்க, ராம்கி எதிர்க்கிறான். எதிர்க்கிறான். மற்றொரு கிளைக்கதையாக ராம்கியின் மச்சானான சேகருக்கும் சேகரின் அத்தை மகளுக்கும் காதல் என்ற வதந்தியும் ஊருக்குள் பரவிவருகிறது. கல்லூரியின் சார்பாக் போட்டிகளில் கலந்து கொண்டு திரும்பும் போது பேருந்தில் புவனாவின் அருகில் அமர்ந்து பேசிக்கொண்டு வருகிறான் ராம்கி.

இனி...

வளருகில் அமர்ந்து செல்வதே அவ்வளவு சந்தோஷமாக இருந்தது ராம்கிக்கு... எங்கோ பறக்கிறது போல இருந்தது. இவளே வாழ்க்கை முழுவதும் தன்கூட பயணப்பட்டால் எவ்வளவு சந்தோஷமாக இருக்கும் என்று நினைக்கும் போதே அவனது மனசு சந்தோஷத்தில் குதித்தது.

"என்ன... பேசாமா வாறீங்க?" புவனாவின் கேள்வியில் நினைவுகளைத் துறந்து சுயத்துக்குத் திரும்பினான்.

"இ...இல்ல... ஒண்ணுமில்லேங்க..."

"ஆமா... எதுக்கு காலையில விட்டுட்டு வந்தீங்க... பேசக் கூடாதுன்னுதான் நினைச்சேன்... பார்க்க பாவமா இருந்துச்சு அதான் பேசிட்டேன்..."

"ம்... உண்மையைச் சொன்னா உங்கண்ணனுக்குப் பயந்துதான் அவங்ககூட கிளம்பி வந்தேன்... ஆனா நீங்க பேசலைன்னதும் நாங்க ஒதுங்கித்தானே இருந்தோம்... பேசலைன்னு முகத்தை எல்லாம் தூக்கி வச்சிக்கலை... சும்மா சொல்லாதீங்க"

"அதான் பார்த்தோமே... தியேட்டர் இருட்டுக்குள்ள சாரி சொன்னது யாரு...?"

"அது பிரண்ட்லியா சொன்னது..."

"ஆமா... இந்த தாவணி நல்லாவா இருக்கு?"

"..." பேசாமல் இருந்தான்.

"என்ன பதிலைக்காணோம்... இருட்டுக்குள்ள மட்டுதான் சொல்லுவீங்களா?"

"எதுக்குங்க... சொன்னா யார் கேட்டான்னு சொல்லுவீங்க... எனக்குத் தேவையா..?"

"அது சரி... முன்னெச்சரிக்கையா?"

"இப்பக் கேட்கிறேன்... உங்களுக்கு மஞ்சள் கலர்தான் பிடிக்குமா?"

"அப்படியெல்லாம் இல்ல... நல்லா இருந்துச்சு சொன்னேன்... அம்புட்டுத்தான்..."

"ம்.... கட்டுரைப் போட்டியில ஜெயிச்சது டிரீட் எதுவும் இல்லையா?"

"இதுக்கு ட்ரீட்டா... அப்படின்னா நீங்களுந்தான் கவிதை போட்டியில ஜெயிச்சீங்க..."

"நான் ட்ரீட் தாறேன்.. என்ன வேணுமின்னாலும் கேளுங்க..."

"அப்ப நானும் தாறேன்...  நீங்க உங்களுக்கு என்ன வேணுமுன்னு கேளுங்க..."

"அட இங்க பார்றா... சரி... எனக்கு என்ன வேணுமின்னு எப்ப கேட்டாலும் வாங்கித் தர ரெடியா இருங்க..."

"சரி... ஆமா கட்டுரைப் போட்டியில நீங்க பரிசு வாங்குவீங்கன்னு நெனச்சேன்... "

"..." பதில் சொல்லாமல் சிரித்தாள்.

"என்னங்க சிரிக்கிறீங்க..?"

"இல்ல நான் ஒழுங்கா எழுதியிருந்தா நீங்க பரிசு வாங்கி இருக்கமுடியாது... அதனாலதான்..."

"அப்படி மட்டும் எங்களை எடை போட்டுடாதீய்ங்க... நாங்க கிராமத்துக்காரய்ங்க... எதுலயும் இறங்க மாட்டோம்... இறங்கிட்டா முடிக்காம விடமாட்டோம்... போட்டியின்னு வந்துட்டா நின்னு விளையாடிப் பார்ப்போம்... தெரிஞ்சுக்கங்க..."

"ம்... நாங்களும் கிராமத்துக்காரிதான்.. என்னமோ நீங்க ஜெயிக்கணுமின்னு நெனச்சு ரொம்ப பிரிப்பேர் பண்ணலைங்கிறது உண்மைதான்... இருந்தாலும் திறமையானவங்களுக்கு பரிசு கிடைக்கிறதுதானே சந்தோஷம்"

கண்டக்டர் அவர்கள் அருகில் வரவும் பேச்சை நிறுத்தி இருவருக்கும் டிக்கெட் எடுத்தான். அதன் பிறகு கொஞ்ச நேரம் அமைதி, மீண்டும் பேச ஆரம்பித்தனர். பேருந்து நிறுத்தத்தில் இறங்கி அவள் ஐயாவீட்டுக்குப் போய் வைரவனுக்கு போன் பண்ணி வரச்சொல்லி போய்விடுவதாகச் சொல்லவும் ராம்கி சைக்கிளை தனது ஊரை நோக்கி மிதிக்கலான். இந்த நாள் அவன் வாழ்வில் மறக்கமுடியாத நாள், அதுவும் தான் நேசிக்கும் பெண்ணின் அருகில் அமர்ந்து அவளுடன் பேசிக்கொண்டிருந்தது என திரும்பத் திரும்ப மனசுக்குள் ஓடிக்கொண்டே இருந்தது. அவனை சொல்லவொண்ணாச் சந்தோஷத்தில் ஆழ்த்தியது.

"என்னடா மச்சான்... கட்டுரைப் போட்டியில பிரைஸ் கெடச்சதா?" கண்மாய்க்கு குளிக்கப் போகும்போது சேகர் கேட்டான்.

"ஆமாடா... நைட்டு லேட்டாயிடுச்சு... அதான் வீட்டுப் பக்கம் வரலை... முதல் பரிசுடா"

"அட்ரா... தூள் மச்சான்... நாந்தான் அப்பவே சொன்னேன்ல... இன்னைக்கு காலேசுல எல்லாருக்கும் விஷயம் தெரிஞ்சு நீ பெரியாளாயிடுவே... ம்... உங்க கிளாஸ்ல எத்தனை உனக்குப் பிராக்கெட் போடப் போகுதோ தெரியலை..."

"சும்மா காலையிலேயே ஏதுக்குடா இப்படி பேசுறே?  வேற எதுவும் பேச மாட்டியா... ஐயா சொல்லிக் கொடுத்தார்... பத்தாததுக்கு புவனா வேற புக்ஸ் எல்லாம் கொடுத்து ஹெல்ப் பண்ணினாங்க... எல்லோரோட உதவியால முதல் பரிசு வாங்க முடிஞ்சது.. அம்புட்டுத்தான்..."

"ஆமா... அந்தப் புவனாவை ஆஹா... ஒஹோன்னே எதாவது பிரைஸ் வாங்கினாளா?"

"அவங்க கட்டுரைப் போட்டி சரியாப் பண்ணலையின்னு தோணுது.... எதுக்குன்னு தெரியலை... கவிதையில அவங்கதான் முதலிடம்..."

"அது சரி... அப்ப அவகிட்ட சரக்கிருக்கு... பேசாம அவளை அமுக்கிடு மச்சான்..."

"சும்மா போடா... பிரண்டா பழகுறாங்க... அவங்கிட்ட எதாவது சொல்லப் போயி அசிங்கப்பட்டு நிக்கணுமா?.... சரி வா குளிக்கிற வேலையைப் பார்ப்போம்... இன்னைக்கு கொஞ்சம் சீக்கிரம் போகணும்... நைட்டு ஐயா வீட்டுக்குப் போகலை... போகும் போது பொயிட்டு அவங்க ஆசி வாங்கிக்கிட்டு காலேசுக்குப் போகணும்..."

"சரி சரி... எனக்கும் இன்னைக்கு காரைக்குடி பாண்டியன்ல புதுபட ரிலீஸ் இருக்கு..."

"நீ திருந்தவேமாட்டே... அரியரெல்லாம் எப்படிடா கிளியர் பண்ணப் போறே?"

"மாப்ளே பேப்பருக்கு இவ்வளவுன்னு கொடுத்துப் பாசாகி வெளிய போனவனெல்லாம் இன்னைக்கு பெரிய ஆளு... கரச்சுக் குடிச்சவனுக்கெல்லாம் இன்னமும் கரைகஞ்சிதான் தெரிஞ்சுக்க... உனக்குப் புரியிறமாதிரி சொல்லணுமின்னா, நம்ம கோர்ட்டுக்குப் போனியன்னா, உங்க காலேசுல ஊதாரியா, ரவுடியா சுத்துவனெல்லாம் காசைக் கொடுத்து பேப்பரை முடிச்சிட்டு வெளிய போயி எப்படியோ பி.எல் பண்ணிட்டு இல்லேன்னா பெங்களூருப்பக்கமா போயி எல்.எல்.பி. முடிச்ச்சிட்டு இங்க வந்து கருப்புக் கெவுனை மாட்டிருறான்... போய் பாரு அம்புட்டுப் பேரும் வக்கீலு..,. அவனுக்கிட்ட கேசுக்கு வாறவன் யாருன்னு பார்த்தியன்னா வெளியுலகம் தெரியாம புத்தகத்தைக் கட்டிக்கிட்டு படிச்சுட்டு வேலைதேடி அலைஞ்சிக்கிட்டு ஊருல எதாவது பிரச்சினையில மாட்டிட்டு இவங்கிட்ட வந்து நிப்பான்... தெரிஞ்சுக்க..."

"இப்ப எதுக்கு இதெல்லாம்... எனக்கு வேலை கெடைக்காம திரியப் போறேன்னு சொல்லாம சொல்லுறியா?"

"அட இல்ல... தலைவர் மாதிரி உண்மையைச் சொன்னேன்... சரி உனக்குத்தான் கவிதைக்காரிய சுத்துற வேலை வந்தாச்சுல்ல.."

"இப்ப கொல்லப் போறேன் பாரு... வாடா... குளிக்கலாம்..."


"டேய் ராம்கி..." வைரவனின் குரல் வர ரோட்டோரத்தில் நின்ற மாமரத்துப் பக்கம் திரும்பிப் பார்த்தான். அங்கே வைரவன் பைக்கை நிறுத்தி அதில் சாய்ந்தபடி சிகரெட் குடிச்சிக்கிட்டு இருந்தான்.

சைக்கிளில் இருந்து காலை ஊன்றியபடி "என்னண்ணே?" என்றான்.

"இங்க வாடா போகலாம்..."

"லைப்ரரியில கொஞ்சம் புக்க கொடுக்கனும்... சீக்கிரம் போனா முடிச்சிட்டு கிளாஸ் போக சரியா இருக்கும்... அதான்..."

"அட ரெண்டு நிமிசம் வந்துட்டுப் போடா..."

சைக்கிளை விட்டு இறங்கி உருட்டிக்கொண்டு அவனிடம் போக, "சிகரெட் பத்தவச்சுப் பாறேன்..." என்று பாக்கெட்டை நீட்டினான்.

"வே...வேண்டாண்ணே..."

"ம்... பரிசு வாங்கிட்டியாமே... புவனா கதைகதையா சொன்னா..."

"ஆமாண்ணே... எல்லாரும் உதவினதால நல்லா பண்ணி ஜெயிக்க முடிஞ்சது...."

"ம்... எனக்குப் பயந்து இங்க இருந்து பொண்ணுங்க கூட  போகாம பசங்கல்லாம் தனியாப் போனீங்களாம்..."

"அ... அப்படியில்லை... முன்னாடி வந்துட்டோம்... சரி போகலாமுன்னுதான்..."

"ம்... உனக்குப் பயந்து சாகுறாங்கடான்னு சொல்லிச் சிரிக்கிறா... நா என்ன உங்களுக்கு எமதர்மனாவாத் தெரியிறேன்... இதுவும் நல்லதுதான்... பொது இடத்துல பொண்ணுங்க கூட பேசிக்கிட்டு போனா நாலு பேரு நல்லவிதமா பேசுவான்.... நாலு பேரு நாக்குமேல பல்லப் போட்டுப் பேசுவான்..."

"ம்... சரிண்ணே... நான் கிளம்புறேன்" என்று சைக்கிளை எடுக்கும் போது,

"டேய் இவந்தாண்டா வைரவன்" என்று கத்தியபடி மூன்று நான்கு பேர் வண்டியில் வந்து இறங்கினார்கள். ரோட்டில் போன பசங்களெல்லாம் அதிர்ச்சியுடன் என்ன நடக்கப் போகுதோ என்று பார்க்க ராம்கி சைக்கிளை உருட்டாமல் நின்றான்.

அவர்கள் வைரவனை நெருங்கி வர "பாஸ் என்ன வேணும்... நாந்தான் வைரவன்..." என்றபடி சிகரெட்டை தரையில் போட்டு செருப்பால் மிதித்துக் கொண்டே கேட்டான் வைரவன்.

"நீ என்ன பெரிய புடுங்கியா? எங்காளு மேல கை வச்சிருக்கே... காலேசுல நீ ரவுடித்தனம் பண்ணுறியா.... கோத்தா..."

"டே பேசிக்கிட்டு நிக்கிறதுக்கா வந்தே... போடுடா அவனை மயிராண்டி... லெச்சர் கொடுக்குறாரு..." என்றபடி வைரவன் அருகில் வந்தவன் அடித்திருந்த சாராய வாசம் ராம்கிக்கு குடலைப் புரட்டியது.

"பளார்" என வைரவன் கன்னத்தில் அரை விழுக, வைரவன் அவர்களைத் திரும்பித் தாக்க, அடிதடி ஆரம்பமானது...ரோட்டில் போன மாணவ மாணவிகள் ஸ்தம்பித்து நின்றார்கள். எங்கிருந்தோ ஓடிவந்த  வைரவனின் நண்பன் ஒருவன் 'விடுங்கடா அவனை' என இருவரை எட்டி மிதித்தான். ஒருவன் இடுப்பில் இருந்து கத்தியை எடுத்து வைரவனை நோக்கிப் பாய, சைக்கிளைப் போட்டுவிட்டு அவனது கையை எட்டிப் பிடித்த ராம்கி, பின்னால் வந்தவனை விஜயகாந்த் பாணியில் காலால் எட்டி உதைக்க கத்தியைப் பிடித்த கைக்குச் சொந்தக்காரன் கைவலியால் கத்தியை கிழே விட்டுவிட்டு கதறினான்.

(சனிக்கிழமை தொடரும்)
-'பரிவை' சே.குமார்.

4 கருத்துகள்:

 1. கதை நல்ல விறு விறுப்பாய் போகுது.

  பதிலளிநீக்கு
 2. ஆஹா..............ராம்கி கதாநாயகன் ஆயிட்டாரு.மச்சினனைக் காப்பாத்தக் கெளம்பிட்டாரு!!!

  பதிலளிநீக்கு
 3. வாங்க கோமதி அக்கா..

  தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 4. வாங்க யோகராஜா..

  தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு

நட்பின் வருகைக்கு நன்றி..!

பகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...