மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

ஞாயிறு, 22 செப்டம்பர், 2013குடும்ப விளக்கு

காலை எழுந்தது முதல் பணம் கேட்டு நச்சரிக்கும் கணவனுடன் சண்டையிட்டாலும் சமையல் வேலையில் மும்மரமாக இருந்தாள் மரகதம்.

"ஏண்டி, இப்ப பணம் தருவியா... இல்லயா..?"

"உனக்கு எதுக்குய்யா காசு... குடிக்கவும் சீட்டாடவுமா... சல்லிக்காசு எங்கிட்ட இல்ல... போய்யா..."

"நான் குடிப்பேன்... கும்மாளம் அடிப்பேன். உனக்கென்னடி... அது என்ன உங்க அப்பமுட்டு காசா... எம்மக சம்பாரிக்கிறது..."

"மக சம்பாரிக்கிறது... தூ... வெக்கமாயில்ல... பொம்பளப்புள்ள சம்பாத்தியத்துல தண்ணியடிக்க... நீ எல்லாம் ஒரு ஆம்பிள்ளை..."

"ஆமாண்டி... நா ஆம்பிள்ளாதான். அதனாலதான் மூணு புள்ளைய பெத்தேன்..."

"புருசன் குடிகாரனா இருந்தாலும் நாங்களும் சபலப்படுறதாலதான் நீங்க அப்பன். நாங்க முடியாதுன்னு சொன்னா... "

"ஏய்... இங்க பாரு... உன்னோட பேசிக்கிட்டு இருக்க நேரமில்லை... 100 ரூவா கொடு."

"முடியாதுய்யா... எம்மக வெளி நாட்டுல கஷ்டப்பட்டு சம்பாதிக்கிற பணம். அதை குடிக்க நான் தரமாட்டேன். "

"என்னடி ரொம்ப பேசுற... தே... மகளே" என்றபடி அவளை ஒரு அறை அறைந்துவிட்டு "எவனாவது வாங்கிக் கொடுப்பாண்டி... அடிச்சிட்டு வந்து உனக்கு கச்சேரிய வச்சுக்கிறேன்..." என்றபடி கிளம்பினான்.

'நல்லவேளை சின்னவளுங்க ரெண்டு பேரும் காலேசுக்கு பொயிட்டாளுங்க. ம்... பெரியவ பாவம், படிக்காம வெளிநாட்டுல பொயி வீட்டு வேலை செய்து பணம் அனுப்பி இவளுகளை படிக்க வைக்கிறதோட குடும்பத்துக்கும் அவதான் இப்ப எல்லாமே... அவளுக்கும் காலாகாலத்துல கல்யாணத்தை முடிக்கனும்.ம்... குடிச்சே அழிக்கிற இந்த ஆளை நம்பி மூணு பொட்டப் புள்ளைங்களையும் எப்படி கரையேத்தப் போறேன்னு தெரியல... எல்லாம் அந்த மாரி செயல்...' மனசுக்குள் புழுங்கியபடி வழியும் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு வேலையை தொடர்ந்தாள்.

"மரகத அத்தை உங்களுக்கு போன் வந்திருக்கு." என்று வாசலில் நின்று கத்தினான் பக்கத்து வீட்டு பையன்.

"இந்தா வாறேம்பா..." என்றபடி அடுப்பை அணைத்துவிட்டு முகத்தை துடைத்துக் கொண்டு, 'தேவியத்தான் இருக்கும். வேற யாரு நமக்கு பண்ணப்போறா...' என்று மனசுக்குள் நினைத்தபடி பக்கத்து வீட்டை அடைந்தாள்.

"வாங்க மதினி. தேவிதான். இப்ப கூப்பிடுவா... ஆமா... என்ன காலையிலயே சண்டையா...?"

"அது எப்பவும் நடக்கிறதுதானே...ம்... நான் வாங்கி வந்த வரம் அப்படி. அப்புறம் என்ன சொல்ல... அடிபடுறதும்... மிதிபடுறதும்... என்னோட காலம் புரவும் தொடர்கதைதான்... "

போன் மணியடிக்க... "மதினி உங்களுக்காத்தான் இருக்கும் எடுங்க..."

"அலோ..."

"அம்மா... நான் தேவி பேசுறேன்... எப்படிம்மா இருக்க."

"ம்... நல்லா இருக்கேம்மா... நீ எப்படி இருக்கே..."

"எனக்கென்னம்மா... நல்லாயிருக்கேன்... அப்பா, தங்கச்சிங்க..?"

"ம்... நல்லா இருக்காங்க... எப்பம்மா வருவ?"

"என்னம்மா... வந்து என்ன பண்றது..? இன்னும் ரெண்டு, மூணு வருசம் ஆகட்டும்... நாம நல்லா வரணும்மா... அதுதான் எனக்கு முக்கியம். ஆமா... என்னம்மா குரல் ஒரு மாதிரி இருக்கு எதாவது பிரச்சினையா?"

"இ.. இல்லம்மா... அதெல்லாம் ஓண்ணுமில்ல..."

"பொய் சொல்லதம்மா... உன் குரலே காட்டுதே... அப்ப சண்டை போட்டாரா... அடிச்சாரா..? உண்மைய சொல்லுங்க..."

"அது எப்பவும் நடக்கிறதுதானே... அதவிடு... உனக்கும் கல்யாணம் பண்ணனும்... வயசாகுதுல்ல..."

"கல்யாணமா?" வெறுமையாக சிரித்தவள், "அம்மா... முதல்ல தங்கச்சிங்க படிக்கட்டும். அவளுகளுக்கு கல்யாணம் பண்ணி வச்சுட்டு நான் பண்ணிக்கிறேன். ''

"என்னம்மா... அவளுகளுக்கு இப்ப என்ன அவசரம்...?"

"அம்மா... எங்களுக்கு நல்ல தாயை கொடுத்த கடவுள் தகப்பனை தப்பா கொடுத்துட்டான். அதோட விட்டிருந்தாலு, பரவாயில்லை... மூணு பேரையும் பொம்பளைப் பிள்ளையா வேற படைச்சுட்டான். அண்ணனோ தம்பியோ இருந்த அவங்க பாப்பாங்க... இப்ப அவளுகளுக்கு என்ன விட்டா செய்ய யார் இருக்கா... ம்... சொல்லுங்க. அவளுகளுக்கு எல்லாம் நல்லபடியா முடியட்டும். என்னோட வாழ்க்கையைப் பற்றி அப்புறம் பார்க்கலாம்."

"ம்... நீ சொன்ன கேட்கவா போறே..."

"அம்மா... செலவுக்கு பணம் அனுப்பியிருக்கேன். அப்பா பணம் கேட்டா கொடு. என்னமோ பண்ணித் தொலையட்டும்.நீயாவது அடி வாங்காம இருப்பேயில்ல."

"பணம் கொடுத்தா மட்டும் மாறப் போறாரா... அது சாதிப்புத்தி சவக்காரம் போட்டு கழுவினாலும் போகாது. அதை விட்டுத்தள்ளளு"

"பணம் வந்ததும் முதல்ல ஒரு செல்போன் வாங்கிக்க."

"நானா... செல்போன்... சரிதான்... அதையும் உங்கப்பன் தூக்கி வித்துப்புட்டு தண்ணியடுச்சுட்டு சீட்டாடிட்டு வந்துருவான். வீட்டுப் போனுக்குத்தான் கணேச மாமா இந்த மாசம் பணம் கட்டி வாங்கித்தாரேன்னு சொல்லி இருக்கு."

"சரிம்மா... உடம்பை பார்த்துக்கம்மா... நான் அப்புறம் பேசுறேன்..."

"சரிம்மா".

கடல் கடந்த தேசத்தில் கண்ணீரோடு போனை வைத்த தேவி, 'என்னை மன்னிச்சுடுங்கம்மா... உம் பொண்ணு வீட்டு வேலை பாக்கலைம்மா... தினம் தினம் ஒருத்தனுக்கு வீட்டுக்காரியா இருக்காம்மா. ஏஜெண்டை நம்பி வந்து மோசம் பொயிட்டேம்மா. இங்க வந்து சேர்ந்ததும் டான்ஸ் கிளப்புல் வேலையின்னு சொன்னான். இப்ப தினமும் ஓருத்தனுக்கு முந்தி விரிக்க சொல்லுறான்... எனக்கு தினம் தினம் முதலிரவுதாம்மா... என்னய மாதிரி நிறையப்பேர் உண்டு. எல்லோருமே மனசுக்குள்ள் வேதனையோட உங்ககிட்ட சிரிச்சுப் பேசுறோம்... என்ன செய்ய எங்க நிலமை தெரிஞ்சா நீங்க தாங்கமாட்டிங்களே. அதான் இதுவரைக்கும் சொல்லலை. இனியும் சொல்ல மாட்டேன்... ' வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டாள்.

"என்னடி தேவி... என்னாச்சு... குடும்ப நினைப்பா...? நமக்கெல்லாம் துக்கமும் கூடாது.. தூக்கமும் கூடாது... இன்னைக்கு எவனோ அவனை சந்தோஷப் படுத்தினாத்தான் ஊர்ல உள்ளவங்க வயிரு நிறையும்... வா... மாமா வந்துட்டான் போல... கதவு திறக்கிற சப்தம் கேட்குது." என்று தோழி ஒருத்தி ஆறுதல் சொல்லியபடி அவளை அழைக்க, முகத்தை துடைத்துக் கொண்டு கிளம்பினாள்.

(2010 - ல் சிறுகதைகள் தளத்தில் கிறுக்கியது சில மாற்றங்களுடன் மீண்டும்...)

-'பரிவை' சே.குமார்

9 கருத்துகள்:

 1. கடல் கடந்த தேசத்தில் பலரின் வாழ்க்கை இப்படி இருப்பது வேதனை... உண்மை...

  பதிலளிநீக்கு
 2. அவள் ஒரு தொடர்கதை படம் உங்களை மிகவும் பாதித்து இருக்கும் போலிருக்கிறதே ,குமார் !

  பதிலளிநீக்கு
 3. இதுதான் வெளிநாட்டின் வேலை செய்பவர்களின் நிலை..கடைசி வரிகள் படித்ததும் பாரமா இருக்கு!!

  பதிலளிநீக்கு
 4. நல்ல நடை.. சுஜாதா நடித்த பழைய படம் நினைவிற்கு வந்தது...

  பதிலளிநீக்கு
 5. வேலை தேடி வெளிநாடு சென்று ஏமாறும் அபலைகளின் துன்பத்தை சொல்லும் சிறப்பான கதை! நன்றி!

  பதிலளிநீக்கு
 6. மனதை கனக்க வைத்து விட்டது கதை.
  இதுக்கு தீர்வு இல்லையா!

  பதிலளிநீக்கு
 7. கருத்திட்ட அனைவருக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 8. முடிவு கனத்துத்தான் போனது.

  பதிலளிநீக்கு

நட்பின் வருகைக்கு நன்றி..!

பகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...