மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 7 செப்டம்பர், 2013வலைச்சரத்தில் கிராமத்து வைத்தியம்

ன்னடா கிராமத்து வைத்தியத்தைப் பத்தி சொல்லப் போறானேன்னு நினைக்கிறீங்களா... கழுத்து வலிக்கு படியை வைத்துப் படுத்தால் நல்லது என ராஜராஜேஸ்வரி அக்கா சொல்லியிருந்தாங்க. உண்மைதான்... அப்படியெல்லாம் ஊரில் இருக்கும் போது செய்து சரி பண்ணியிருக்கிறோம். சில வருடங்களுக்கு முன்பிருந்த கிராமத்து வைத்திய முறைகள் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து விட்டன.

கழுத்து வலி வந்தால் தலையணை வைக்காமல் நிலைப்படிக்கல்லில் தலைவைத்துப் படுக்கச் சொல்வார் அம்மா. அப்படி செய்தால் காலையில் எழுந்திருக்கும் போது வலி பறந்து போயிருக்கும். வறட்டு இருமலாக இருக்கிறதா கொஞ்சம் மிளகை எடுத்து காரம் அதிகமாக தெரியாமல் இருக்க அரிசியுடன் சேர்த்து மென்று வாய்க்குள் வைத்துக் கொள்ளச் சொல்வார்கள். மூச்சுக்குத்துப் பிடித்துக் கொண்டால் எங்க ஊர் மெய்யரு வீட்டிற்கு வந்து முதுகில் உலக்கையை வைத்து உருட்டி ஒரு சொம்பில் தண்ணீர் எடுத்து கந்தர் சஷ்டி கவசமோ மாரியம்மன் தாலாட்டோ கொஞ்சம் வாய்க்குள் முணுமுணுத்து அந்த சொம்பை ஒரு சாப்பாட்டுத் தட்டில் கவிழ்த்து வைத்துவிடும், தட்டோடு ஒட்டிக் கொண்டிருக்கும் சொம்பு தட்டை விட்டுப் பிரியும் போது மூச்சுக்குத்தும் பறந்துவிடும்.

எங்க வீட்டில் எங்க அக்காக்கள், அண்ணன்களின் பிள்ளைகள் எல்லாருக்கும் பிறந்திருக்கும் போது காலையில் உடலெல்லாம் நல்லெண்ணை தேய்த்து கண்ணுக்குள் எண்ணைய் ஊற்றி வெயிலில் கொஞ்ச நேரம் வைத்திருப்பார்கள். காலையில் வேப்பிலைக் கொழுந்தைப் பறித்து நன்றாக இடித்துச் சாறெடுத்து ஒரு சங்கு புகட்டி விடுவார்கள். ஆனால் எனது குழந்தைகள் பிறந்த போது இந்தச் சோப்புதான் பயன்படுத்த வேண்டும் என மருத்துவர்கள் குறித்துக் கொடுத்துவிட்டார்கள். பாட்டி வைத்தியம் எல்லாம் கிடைத்தாலும் இன்றைய சூழல் அதை விரும்பவில்லை.

நாங்கள் பள்ளியில் படிக்கும் போது... நாங்கள் என்றால் நான், எங்க அக்கா, தம்பி... ஞாயிற்றுக்கிழமை காலை எழுந்ததும் அம்மா மூவருக்கும் அரைடம்ளர் வீட்டில் ஆட்டி எடுத்த வேப்பெண்ணையை குடிக்கச் சொல்லிக் கொடுப்பார். வாயில் ஊற்றிவிட்டு சீனியை அள்ளி கொட்டிக் கொள்வோம். குடிக்கவில்லை என்றால் அடிதான். மாதம் ஒருமுறை தமிழ் மருந்துக்கடையில் பேதி மாத்திரை வாங்கிக் கொண்டு வந்து கொடுத்து ஊரணிக்கும் வீட்டுக்கும் நடக்க வைத்துவிடுவார்கள். பாவக்காய், பூண்டுக் குழம்பெல்லாம் சாப்பிட்டே ஆகவேண்டும். இப்ப எனது பிள்ளைகள் இரவில் நூடுல்ஸ் சாப்பிடுகிறார்கள்.

பழைய சாதம், வெங்காயம், எருமைத் தயிர் இருந்தால் போதுமெனக்கு... கல்யாணத்துக்கு முன்பு வரை நானும் அம்மாவும் மட்டுமே வீட்டில் எனக்காக காலையில் பலகாரம் போடமாட்டார்கள். அவனுக்கு கஞ்சிதான் பிடிக்கும் என்று அவர்களும் எனக்காக கஞ்சி குடிப்பார்கள். ஆனால் இப்போ இங்கு கஞ்சி வைக்க முடிவதில்லை... ஊருக்குப் போனாலும் ஒட்டல் முதலாளி மகள் காலை இரவு டிபன் போட்டு நம்மையும் அதையே சாப்பிட வைத்துவிடுவார். கஞ்சி என்றால் நல்லா வளர்த்திருக்காங்க கஞ்சி கஞ்சியின்னு அப்படின்னு சொன்னதும் இட்லியோ தோசையோ கஷ்டப்பட்டு உள்ள போகும். ஒரே சந்தோஷம் பாப்பாவும், விஷாலும் அப்பா போல கஞ்சிப் பிரியர்கள்தான்... விஷால் சோறு மோரு என்று அடம் பண்ணி சாப்பிட்டு விடுவான்.

வலைச்சரத்தில் தொடர்ந்து படிக்க இங்கே சுட்டுங்கள்...

நன்றி.
-'பரிவை' சே.குமார்.

2 கருத்துகள்:

 1. கிராமத்து கை வைத்திய நினைவலைகள் அருமை.
  கழுத்துவலிக்கு படியை வைத்து படுப்பது போல் ஒப்போது டாக்டரிடம் சென்றால் டர்க்கி டவலை படி போல் உருட்டி சுருட்டி தலை வைத்து படுங்கள் தலையணை வைத்துக்கொள்ளாதீர்கள் என்கிறார்கள்.
  மூச்சுப்பிடிப்புக்கு மஞ்சள் தண்ணீர்கரைத்து வைத்தசொம்பில் யாருக்கு மூச்சு பிடிப்போ அவர்கள் பெயரைச்சொல்லி அதை விளக்கில் காட்டி எரித்து அதை சொம்பில் போட்டு ஒரு தாம்பாளத்தில் கவிழ்த்து வைத்துவிடுவார்கள். சிறிது நேரத்தில் மூச்சுபிடிப்பு போய் விடும் என்பார்கள். பலதடவை உணர்ந்து இருக்கிறேன்.

  எங்கள் வீட்டில் தேங்காய் எண்ணெயில் மிளகு, சீரகம் போட்டு காய்ச்சி அதை குழந்தை உடலில், தலையில் தேய்த்து இளம்வெயிலில் சிறிது நேரம் படுக்க வைத்து பின் குளிப்பாட்டுவார்கள்.

  குளித்தபின் உரை மருந்து கொடுப்பார்கள் உரை மருந்து டப்பாவில், சாதிக்காய், கடுக்காய், மாசிக்காய், பெருங்காயம், வெள்ளைபூண்டு, மிளகு, அதிமதுரம், சாரணவேர், கஸ்துரி மாத்திரை, கோரசனை, வசம்பு எல்லாம் இருக்கும் அதில் எல்லாவற்ரையும் உரை கல்லில் ஒரு இழுப்பு லேசாக உரைத்து அதை சங்கில் புகட்டுவார்கள். அதிமதுரகட்டையில் சிறிது தங்ககம்பியை உள்ளே நுழைத்து அடித்து வைத்து இருப்பார்கள் உரை மருந்தில் அதையும் சேர்த்து உரைத்து கொடுப்பார்கள்.
  இப்போது டாகடர்கள் கொடுக்க கூடாது என்கிறார்கள்.

  குளிப்பதற்கு பச்சை பயிறு, பூலங்கிழங்கு, கஸ்துரி மஞ்சள், போட்டு திரித்த பொடிதான் குழந்தைகளுக்கு இப்போது அதுவும் கிடையாது.
  குளித்த பின் சோற்றுகற்றாழையை விளக்கெண்ணெய் தடவி விள்க்கெண்ணெய் ஊற்றிய விளக்கில் காட்டி சூடு படித்து அதில் படிந்த கருமையை புருவத்தில் தடுவார்கள் புருவம் நன்கு வளரும்.
  சாந்து பொட்டு வீட்டில் அரிசி, ஜவ்வரிசி கறுக்கி செய்வார்கள் அழகான பள் பள பொட்டு கிடைக்கும் வீட்டிலேயே அதைதான் நெற்றி, கன்னத்தில் வைப்பார்கள்.

  வளர்ந்த குழந்தைகளுக்கு வார வாரம் வேப்பம்கொழுந்து அரைத்து உருட்டி கொடுப்பார்கள் நாக்கில் படாமல் முழுங்கிய பின் வெல்லகட்டி கொஞ்சம் கொடுப்பார்கள்.
  சுண்டைக்காய், பாவற்காய், மணதக்காளிகாய் எல்லாம் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வைத்தார்கள்.
  பூண்டு, சேர்த்து அரிசி பால் கஞ்சி வாரம் ஒருமுறை அதற்கு சுண்டல் தொட்டுக் கொள்ள, வெல்லகட்டி தொட்டுக் கொண்டு சுண்டலுடம் கஞ்சி குடிக்க தேவா அமிர்தமாய் இருக்கும்.
  .
  ஓமம் , துளசி எல்லாம் சளி, மந்ததிற்கு வீட்டில் கொடுக்கும் கை வைத்தியம்.

  இப்போது அதெல்லாம் மலரும் நினைவுகளாய் ஆகி விட்டது.

  பதிலளிநீக்கு
 2. இப்ப எங்க சார் இதெல்லாம் பண்ணுறாங்க.கழுத்துப் பிடிப்புன்னா(சுளுக்கு)டாக்டர் கிட்ட போயி மாத்திரை வாங்கிட்டு வந்தாலே ஜென்ம சாபல்யம் தான்,ஹ!ஹ!!ஹா!!!

  பதிலளிநீக்கு

நட்பின் வருகைக்கு நன்றி..!

பகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...