மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 14 செப்டம்பர், 2013

தொடர்கதை : கலையாத கனவுகள்

முந்தைய பதிவுகளைப் படிக்க...

           பகுதி-1        பகுதி-2        பகுதி-3       பகுதி-4        பகுதி-5     
           பகுதி-6        பகுதி-7        பகுதி-8        பகுதி-9       பகுதி-10   
           பகுதி-11      பகுதி-12
******
13. தீர்ப்புக்கள் திருத்தப்படுமா?

முன்கதைச் சுருக்கம்: 

கிராமத்து ஏழைக்குடும்பத்துப் பையனான ராம்கி, கல்லூரியில் வைரவனின் தங்கை புவனாவுடன் நட்பாக பழகுகிறான். காதலில் விழுந்தானா இல்லையா என்று போய்க் கொண்டிருக்கும் வாழ்க்கையில் கல்லூரிகளுக்கா கட்டுரைப் போட்டிக்குச் சென்று முதல் பரிசை வெல்கிறான். திரும்பும்போது அவளுடன் சேர்ந்து அமர்ந்து பஸ்ஸில் பயணிக்கிறான்.  வைரவனைத் தாக்க வந்தவர்களை திருப்பி அடித்து மற்றவர்களுக்கு ஹீரோ ஆகிறான். கல்லூரி அவனுக்கு வில்லன் ஆகுமா?

இனி...

ராம்கியின் பிடிக்கு கதறியவனின் கையை விட்டு அப்படியே பிடித்துத் தள்ளினான். ராம்கியின் வேகத்தை வைரவனும் மற்றவர்களும் வியப்பாய் பார்த்துக் கொண்டிருக்க, திடீரென கீழே கிடந்த கத்தியை எடுத்த ஒருவன் வேகமாக வைரவனை நோக்கி வீச, கையால் தடுத்தவனின் கையைப் பதம் பார்க்க ரத்தம் கொட்டியது. வைரவனின் கையில் ரத்தத்தைப் பார்த்த ராம்கி ஆவேசமாக அவனை எட்டி உதைய, மற்றொருவன் கீழே கிடந்த கல்லை எடுத்து எறிய அது ராம்கியின் தலையை பதம் பார்த்தது.

சண்டையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மாணவர்கள் பிரின்ஸ்பாலின் ஸ்கூட்டர் வரவும் வேகமாக நகர்ந்தார்கள். சண்டையிட்டவர்களும் சற்று நிறுத்த, தனது வண்டியை நிறுத்தி "என்ன வைரவா... என்ன பிரச்சினை இங்கே?" என்றார்.

"ஒ.. ஒண்ணுமில்ல சார்..." என்றான் ரத்தம் வடியும் கையை மறைத்தபடி.

"என்ன ஒண்ணுமில்ல... டேய் நீ யார்டா....எந்த இயர்டா... தலையில ரத்தம் வருது.... ரெண்டு பேரும் அடிச்சிக்கிட்டீங்களா... என்ன வைரவா... ரோட்டுல ரவுடித்தனம் பண்ணிக்கிட்டு..."

"இவன் ஒண்ணும் பண்ணலை சார்... யாரோ திடீர்ன்னு வந்து என்னோட மோதினாங்க.... அதுல இவன் தலையில அடிபட்டிருச்சு..."

"காலேசுக்குள்ள ரவுடித்தனம் பண்ணுனீங்க இப்ப தெருவுக்கு வந்துட்டீங்க... ஆஸ்பத்ரி போயி கட்டுப்போட்டுக்கிட்டு என்னைய வந்து பாருங்க போங்க" என்றபடி வண்டியை எடுக்க, அப்போதுதான் வந்த ராம்கியின் நண்பர்கள் வைரவன் கையில் ரத்தத்துடனும் ராம்கி தலையில் ரத்தத்துடனும் நிற்க, இருவருக்கும் இடையில் அடிதடி நடந்திருக்குமோவென நினைத்துப் பதறினர்.

"என்னடா ஆச்சு... எதுக்குடா உன்னைய அடிச்சாரு..." கோபமாய்க் கேட்டான் பழனி.

"இல்லடா... அதெல்லாம் இல்ல... இது வேற..." சூழ்நிலையை விளக்க மனமின்றி பொதுவாகச் சொன்னான் ராம்கி. அதை விளக்கும் நிலையிலும் அவன் இல்லை. பிரின்ஸ்பால் என்ன சொல்வாரோ என்ற பயமே அவனது பேச்சில் தொக்கி நின்றது,

"என்னடா ஒண்ணுமில்ல... இவரு தங்கச்சிகூட பேசக்கூடாதுன்னு சொன்னாரு... கேட்டியல்ல... இப்ப என்னவாம்... ரவுடித்தனத்தை உங்கிட்ட காட்டுறாரா?" வெடித்தான் அண்ணாத்துரை.

"ஏய் என்ன... உதை வாங்கமா போகமாட்டியளா?" கர்ஜித்தான் வைரவனின் நண்பன்.

"டேய்... அவனுங்க பிரண்ட் தலையில அடிபட்டிருக்கவும் கோபமாக கேட்கிறாய்ங்க... விடு... யார் பார்த்தாலும் நாங்க ரெண்டு பேரும் சண்டை போட்டதாத்தான்  நினைப்பாய்ங்க... அண்ணாத்துரை யாரு தெரியுமில்ல... நம்ம பூபாலன் அண்ணன் தம்பி... இங்க பாரு அண்ணா... எங்க ரெண்டு பேருக்கும் எந்தப் பிரச்சினையும் இல்ல... நானும் ராம்கியும் பேசிக்கிட்டு இருக்கும்போது யாரோ நாலு பேரு... அவனுங்களை அந்த இளங்கோதான் அனுப்பியிருப்பான்... அதை நான் டீல் பண்ணுற விதமாப் பண்ணிக்கிறேன்... ம்... நாலு பேரு என்னைய அடிக்க வந்தாய்ங்க... என்னைய கத்தியால குத்த வந்தப்போ ராம்கி அவனுங்களை அடிச்சான்... அதான்... புரியுதா..."

"மசுரு... எப்பவும் எங்களுக்கு நின்னுதானே வருவே... என்ன அவசரமா புடுங்குற வேலையிருக்குன்னு இப்பல்லாம் எங்களை விட்டுட்டு வாறே..." கோபமாய் கத்தினான் சரவணன்.

"இல்லடா... லைப்ரரி புக் கொடுக்க வேண்டி இருந்துச்சு.... அதான் சீக்கிரம் வந்தேன்... அண்ணன் கூப்பிட்டு நேத்துப் போனதைப் பற்றி கேட்டார்... அப்பத்தான் நாலு பேரு வந்து... இப்படியாயிருச்சு..."

"சரி பழனி நீ இவனோட சைக்கிளை எடுத்து அந்தா அந்த வீட்ல போட்டுட்டு புக்ஸையும் டிபன் பாக்ஸையும் எடுத்துக்கிட்டுப் போ... நாங்க ஆஸ்பத்ரிக்குப் பொயிட்டு வாறோம்... வாடா... உக்காரு... வாங்கண்ணே.... முதல்ல ஆஸ்பத்ரி போவோம்..."

வைரவனும் நண்பணும் பைக்கில் போக, மற்றவர்கள் சைக்கிளில் கிளம்பினார்கள். சாப்பாடு கொட்டிக் கிடந்த டிபன்பாக்ஸில் மிச்சமிருந்த சாப்பாட்டையும் கொட்டிவிட்டு மூடி புத்தகங்களையும் எடுத்துக் கொண்டு சைக்கிளை அருகிலிருந்த வீட்டில் வைத்துவிட்டுக் கிளம்பினான் பழனி.

"என்னடா அவளை லவ்கிவ் பண்ணித் தொலைக்கிறியா?" கடுப்பாகக் கேட்டான் சரவணன்.

"அப்படியெல்லாம் இல்லடா..."

"என்ன மயித்துக்கு அவனுக்கிட்ட உறவு கொண்டாடுறே... அவனுங்க ஒரே சாதிக்காரனுக... இன்னைக்கு அடிச்சிக்குவானுங்க... நாளைக்கு சேர்ந்துக்குவாய்ங்க.. " என்று பேச்சை நிறுத்தி அண்ணாத்துரை பக்கம் திரும்பி "சாரி மச்சான்... நீயும் அவனுக சாதியின்னாலும் உன்னைய அப்படி நெனக்கலை... கோபத்துல சொல்லுற மாதிரி ஆயிடுச்சு... கோவிச்சுக்காதே..."

"இதுல கோபப்பட என்ன மச்சான் இருக்கு... இதானே உண்மை... ராம்கி... இனி அவனுக டார்கெட் நீயாத்தான் இருக்கும்... தேவையில்லாம இதுக்குல்ல மாட்டிட்டே... எவனோ என்ன ஆனா உனக்கென்ன...  எங்க அண்ணோட அடிச்சுக்கிட்டு கத்திக்குத்து... போலீசு கேசுன்னு திரஞ்ச போஸ் தங்கச்சியத்தான் எங்கண்ணனுக்கு கட்டணுமின்னு ரெண்டு குடும்பமும் பேசிக்கிறாங்க... இப்ப அண்ணனும் போசும் மச்சான் போட்டுக்கிறாங்க... தெரியுமா... சரவணன் சொல்றது சரிதான்... இன்னைக்கு அடிச்சுக்கிட்டு நாளைக்கு கூடிப்பாய்ங்க... உன்னோட குடும்பச் சூழலை நெனச்சுப் பாத்து எதுலயும் எறங்கனும்... மச்சான்னு காப்பாத்தியிருந்தியன்னா நாளைக்கு அவனோட தங்கச்சிய நீ லவ் பண்றேன்னு தெரிஞ்சா இப்ப எதிரியா இருக்க இளங்கோகூட சேர்ந்து உன்னைய போட்டுடுவான் இந்த வைரவன்... புரிஞ்சுக்க..." உண்மையை எடுத்துச் சொன்னான் அண்ணாத்துரை. அவனைப் பெருமையாகப் பார்த்தான் சரவணன்.

"இல்லடா... வைரவன்னு இல்ல யாரா இருந்தாலும் பாத்துக்கிட்டு எப்படிடா இருக்க முடியும் சொல்லுங்க... கண் முன்னாடி குத்த வாறாங்க... சும்மா விலகிப் போகச் சொல்லுறீங்க... அப்படி குடும்பத்துல பிறக்கலைடா நான்...  பாக்கத்தான் பொசுக்குன்னு இருப்பேன்... விவசாயம் பார்த்து உரமேறிப் போன உடம்புதாண்டா இது... எதா இருந்தாலும் சந்திக்கிற சக்தி எனக்கிட்ட இருக்குடா..."

"இந்தப் பிரச்சினை இத்தோட முடியாது... இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ தெரியாது... சரி... சாயங்காலம் அம்மாகிட்ட என்ன சொல்லப்போறே... கட்டோட போன அம்மாவுக்கு உயிரே போயிடுமேடா..."

"அதான்டா யோசனையா இருக்கு... அம்மா ரொம்ப வருத்தப்படும்... அதைவிட சீதா அழுதுடுமுடா... சின்ன முள்ளு கால்ல குத்தினாலே... வலிக்குதாடா வலிக்குதாடான்னு கால்லையே தடவிப் பாக்கும்... தலையில அடிபட்டு கட்டோட போனா... ம்... சரவணா அம்மாகிட்ட கீழ விழுந்துட்டதா சொல்லிடுறேன்...உங்ககிட்ட கேட்டாலும் அதையே சொல்லிடுங்கடா..."

"சரி... இனி புவனாவோட பார்வை உன்மேல ரொம்ப நெருக்கமாகலாம்... தவிர்க்கப்பாரு அம்புட்டுத்தான் நான் சொல்வேன்..." என்றான் அண்ணாத்துரை.

"இப்ப எதுக்குடா அவங்களை இழுக்கிறே... அவங்களுக்கு ரவுடித்தனமே பிடிக்காது... அப்புறம் எப்படி இந்த புது ரவுடியைப் பிடிக்கும்... சரி அதை நான் பாத்துக்கிறேன்."

"ம்... இனி கவனமா இரு எல்லா விசயத்துலயும்... எங்களை விட்டுட்டு தனியா எங்கயும் போகாதே... எது வேணுமின்னாலும் நடக்கலாம்..."

"ம்..."

ஆஸ்பத்ரியில் இருந்து திரும்பிய இருவரும் பிரின்ஸ்பால் அறைக்கு முன்னர் நின்றனர். அதற்குள் இந்த விசயம் கல்லூரி முழுவதும் பரவியிருந்தது. மாணவர்கள் ஆங்காங்கே கூட்டமாக நின்று பேசிக் கொண்டிருந்தார்கள். வைரவனை ஆள் வைத்து அடித்தது இளங்கோதான் என்று பரவலாகப் பேசிக் கொண்டார்கள். கல்லூரி வளாகத்துக்குள் இளங்கோவோ அவனின் நண்பர்களோ இல்லவே இல்லை.... எங்கோ போனார்கள்... அவர்கள்தான் இதற்கு காரணமா என்பது எதுவும் தெரியாமலேயே பேச்சில் அவர்களது பெயர் அடிபட்டுக் கொண்டிருந்தது.

முதல்வர் அறைக்குள் எல்லாத்துறைத் தலைவர்களும் கூடி பேசிக்கொண்டிருந்தனர். வாசலில் நின்று கொண்டிருந்த பியூன் முருகனிடம் மெதுவாக வைரவன் பேச்சுக் கொடுத்தான்.

"என்னண்ணே.... என்ன சொல்லுறாய்ங்க..."

"என்னத்தை பேசப்போறாங்க... எப்பவும் போலத்தான்....சஸ்பெண்ட் பண்ணுவாங்க... இரு உள்ள பொயிட்டு வாறேன்..."

"ம்... மெதுவா பாத்துட்டு வா..."

உள்ளே சென்று சிறிது நேரத்தில் வெளியே வந்த முருகன், "வைரவா... உன்னைய சஸ்பெண்ட் பண்ண எல்லாரும் ஒத்துக்கிட்டாங்க போல... இவனைப் பற்றித்தான் இப்போ பேசுறாங்க... கேவிஎஸ் நல்லாப் படிக்கிற பையன்... இதுவரைக்கும் எந்தப் பிரச்சினைக்கும் போகாதவன்... அவனை மன்னிச்சு விடுங்கன்னு சொல்லுறாரு... சஸ்பென்ஸனுக்கு ஒத்துக்க மாட்டேங்கிறாரு... தமிழய்யா வேற சப்போர்ட் பண்ணுறாரு... மத்தவங்க காலேசுக்கு வெளிய பண்ணின ரவுடித்தனத்தால காலேசுக்கு கெட்ட பேரு நடவடிக்கை எடுத்தாகணுமின்னு நிக்கிறாங்க... பார்ப்போம்..."

காரசாரமான விவாதம் முடிந்ததும், இருவரையும் பிரின்ஸ்பால் அழைப்பதாக உள்ளேயிருந்து வந்த ரமேஷ் சொல்ல, இருவரும் உள்ளே சென்றனர்.

"வைரவா... உன்னால காலேசுக்கு கெட்ட பேருதான்... நீ படிக்க வந்த மாதிரி தெரியலை...எப்பவும் அடிதடி... சண்டைதான்.... இல்லேன்னா குடிச்சிட்டு வந்து கிளாஸ்ல ஆட்டம் போடுறது... உங்க துறைத்தலைவரே உன்னய  பதினைந்து நாள் சஸ்பெண்ட் பண்ணனுமின்னு சொல்லிட்டாரு..."

"சார்... என்னய அடிக்க ஆள் அனுப்பினது அந்த இளங்கோதான்... அவனை விட்டுட்டு எனக்கு மட்டும் எதுக்குத் தண்டனை..."

"இங்க பாரு... அவன் பண்ணினான் இவன் பண்ணினான்னு யூகத்துல எல்லாம் நடவடிக்கை எடுக்க முடியாது... நீ தப்புப் பண்ணுனதை நானே பார்த்தேன்... பதினைந்து நாள் காலேசு வளாகத்துக்குள்ள உன்னையப் பாக்கவே கூடாது... சரியா?"

வைரவன் பேசாமல் நிற்க, "நீ பர்ஸ்ட் இயர்தானே?" என்றார் ராம்கியைப் பார்த்து.

"ம்..."

"நல்ல பையன்.... படிக்கிற பையன்... அப்படின்னு எல்லாம் உங்க புரபஸர் உனக்கு சர்டிபிகேட் கொடுக்கிறாரு... தமிழய்யாவும் உனக்கு சப்போர்ட் பண்ணுறாரு.. ரவுடித்தனம் பண்ணுனா தண்டனை கொடுத்தாத்தான் திருந்துவீங்க... ஆனா இந்தா நிக்கிறான்பாரு எத்தனைதடவை தண்டனை கொடுத்தாலும் மறுபடியும் அருவாளோ கத்தியோ எடுத்துக்கிட்டு எவனையாவது அடிச்சிக்கிட்டுத்தான் இருப்பான் ... இவன் திருந்தமாட்டான்.,.. இந்தா பாரு சர்க்குலர் ரெடியா இருக்கு... நேத்து கட்டுரைப் போட்டியில முதல் பரிசு வாங்கி காலேசுக்கு பெருமை சேர்த்து இருக்கே... இப்பத்தான் தமிழய்யா சொன்னாரு... ஆனா இன்னைக்கு ரவுடித்தனம் பண்ணிக்கிட்டு ரோட்டுல சண்டை போட்டிருக்கே... ம்... படிக்கிற பயலுக்கு கையில புத்தகம்தான் இருக்கணுமேயொழிய கத்தி, கம்பெல்லாம் வரக்கூடாது... தெரியுதா..."

"புரியுது சார்... ஆனா கண்ணு முன்னாடி ஒருத்தரை கத்தியால குத்தப் போறாங்க... எல்லாரு மாதிரியும் பாத்துக்கிட்டுப் போறவனா எங்க வீட்ல என்னைய வளக்கலை... அதான் தடுத்தேன்..."

"எப்படி சூழல்ல இதெல்லாம் செய்யணுமின்னு தெரிஞ்சிருக்கணும்... முதல் முறை நீ வந்திருக்கே... ஆசிரியர்கள் வேற உனக்கு சப்போர்ட் பண்ணுறாங்க... அதனால உன்னைய சஸ்பெண்ட் பண்ணலை... ஆனா உங்கப்பாவை கூட்டிக்கிட்டு என்னைக்கு வாறியோ அன்னைக்கு வகுப்புக்குள்ள போகலாம்..."

"சார்... எனக்கு..."

"என்ன... இதுதான் எங்க முடிவு... மாத்தெல்லாம் முடியாது..."

"இல்ல சார்... அவருக்கு அப்பா தவறிப் பொயிட்டாரு... அம்மா மட்டும்தான்..." ஐயா மெதுவாகச் சொன்னார்.

"ஓ.... சாரி... அம்மா வளக்குற பிள்ளை குடும்பத்தை பத்தி நெனைக்க வேண்டாம்... சரி நாளைக்கு அம்மாவை கூட்டிக்கிட்டு வா..."

"ம்..."

"சரி நீங்க போகலாம்... என்னைக்கு அம்மாவோட வாறியோ அப்ப கிளாஸ்க்குப் போகலாம்... வைரவா நீ பதினைந்து நாள் இந்தப் பக்கம் வரக்கூடாது... சரியா..." என்று பிரின்ஸ்பால் கேட்க, தலையை ஆட்டிவிட்டு இருவரும் வெளியே வந்தனர். அவர்களுக்காக காத்துக் கொண்டிருந்த நண்பர்கள் அவர்களைச் சூழ்ந்து கொண்டு என்னாச்சு என வினவ, வைரவன் விளக்கமாய் சொன்னான்.

"சாரிடா..." ராம்கியின் கைகளைப் பிடித்துக் கொண்டான் வைரவன்.

"எதுக்குண்ணே...?"

"என்னாலதானே உனக்கு இந்தப் பேரு..."

"விடுங்கண்ணே... யாரா இருந்தாலும் நான் பாத்துக்கிட்டு வந்திருக்கமாட்டேன்... ஆன எங்க அம்மாகிட்ட அடிதடி சண்டையின்னு சொல்லி இங்க கூட்டியார முடியாது. அதோட கனவு நொறுங்கிப் போச்சேன்னு ஒப்பாரி வச்சிடும்... எப்படிச் சொல்லிக் கூட்டியாந்து நான் கிளாஸ்க்குப் போவேன்னு தெரியலை.... அதான் எனக்குப் பயமா இருக்குண்ணே..."

"நீ வீட்ல சொல்ல வேண்டாம்... அம்மாதானே வேற வழி இருக்கு..."

"எப்படிண்ணே... என்ன வழி இருக்கு?"

"இங்க யாருமே அப்பா அம்மாவைக் கூட்டியாறது இல்லை... எல்லாருக்குமே வாடகை அப்பா அம்மாதான்... எங்கப்பாவை பெரும்பாலும் எல்லாருக்கும் தெரியும். ஆனா எனக்கு அப்பாவா வர்றது எங்ககூரு முத்துச்சாமி அண்ணந்தான்... ஆனா யாரும் எதுவும் கேக்க மாட்டாங்க... உனக்கு ஒரு அம்மாவை நாளைக்கு நான் ரெடி பண்றேன்... பேசாம வீட்டுக்குப் போ..."

"இரவல் அம்மாவா... சரியா வருமா...?"

"அவங்க நடிப்பு தத்ரூபமா இருக்கும். நாளைக்கு காலையில பத்துமணிக்கு காலேசுக்கு வெளிய உங்கம்மா காத்திருப்பாங்க... சரியா?"

"சரிண்ணே... பிரச்சினை வராதுல்ல..."

"அதெல்லாம் வராது... கொஞ்சம் ஒவர் ஆக்டிங்கா இருக்கும்... பொறுத்துக்கணும் சரியா?"

"சரி..." 

இனி கல்லூரியில் இருக்க வேண்டாம் வீட்டுக்குப் போகலாம் என நண்பர்களிடம் சொல்லிக் கொண்டு சைக்கிளை எடுத்தவன் மனசுக்குள் நடந்த சண்டையும் அதன் பின்னான நிகழ்வுகளும் மாறி மாறி காட்சிகளாய் வர, சை... என்று தன்னைத்தானே நொந்துகொண்டான். அவனது சைக்கிள் கல்லூரியை விட்டு வெளியே செல்ல, புவனாவின் சைக்கிள் வேகமாக உள்ளே நுழைந்து கொண்டிருந்தது.

(புதன்கிழமை தொடரும்)
-'பரிவை' சே.குமார்.

1 எண்ணங்கள்:

Menaga Sathia சொன்னது…

போன பாகமும்,இந்த பாகமும் இப்பதான் படித்தேன்,விறுவிறுப்பா அருமையான எழுத்து நடையில் இருக்கு..அடுத்து என்ன நடக்குமோ??