மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 12 செப்டம்பர், 2015

குலவைப் பாட்டு

(இணையத்தில் சுட்ட படம் - எந்த ஊர் திருவிழா என்பது தெரியாது)

கிராமியப் பாடல்களில் தாலாட்டுப் பாட்டுக்கு அடுத்து நாம் பார்க்க இருப்பது குலவைப்பாடல். இந்தக் குலவைப்பாடல் என்பது ஒரு பெண் பாடல் சொல்ல அவள் முடிக்கும் போது மற்றவர்கள் சேர்ந்து வாய்க்குள் நாக்கைச் சுழற்றி ஒருவித ஒலி எழுப்புவார்கள். அந்த ஓலி கேட்பதற்கு அவ்வளவு அழக்காக இருக்கும். குலவைப் பாடல் சொல்லும் பெண் பெரிய பாடகி அளவிற்கு பாடவில்லை என்றாலும் ராகத்தோடு பாடும்போது அந்தக் குரலும் ரசனைக்குரியதாகத்தான் இருக்கும்.

குலவைப் பாடல்கள் பெரும்பாலும் நாற்று நடவின் போதும் திருவிழாவின் போதும் பாடப்படும். முன்னெல்லாம் வயல்களில் விவசாய நேரத்தில் ஆங்காங்கே குலவைப் பாடல் கேட்கும். வயலில் நாற்று நடும்போது குனிந்தபடியே நடவு செய்யும் பெண்கள் தங்கள் மீது அடிக்கும் வெயிலில் உக்கிரத்தில் முதுக்குப்படை தீயாய் எரிவதையும் குனிந்தே நிற்பதால் இடுப்பில் ஏற்படும் வலியையும் மறக்கவே இந்தப் பாடல்களைப் பாடுவார்கள். அவர்க்ள் பாட ஆரம்பிக்கும் முன்னர் ரோட்டோரத்தில் வயலென்றால் ரோட்டில் ஒரு துண்டை விரித்து அதன் மீது ஒரு நாற்று முடியை வைத்து குலவை போட ஆரம்பிப்பார்கள். இதுவே ரோட்டோரத்தில் இல்லாத வயலென்றால் வரப்பில் இதுபோல் வைப்பார். அதைத் தாண்டிப் போகும் எல்லாரும் காசு போடவேண்டும் என்பது கிராமங்களில் எழுதப்படாத சட்டம்.

நடவு செய்யும் போது அந்த நிலத்தின் உரிமையாளர் காபி, பலகாரம் கொடுக்க வரும் போது 'ஏய் ஐயா வாராரு... குலவையைப் போடுங்கடி... ஏய் வைராத்தா நீதான் கணீருன்னு பாடுவே... சட்டுன்னு பாடுல' அப்படின்னு சொல்லவும்... 'மவராசன் செய்யில... மணிக்கையால் நடவுங்க... ஐயா வருவாங்க... அம்பது நூறு தருவாங்க'ன்னு சும்மா எடுத்துவிடும். உடனே எல்லாரும் சேர்ந்து 'உலுலுலு...'ன்னு சத்தம் கொடுப்பார்கள். அவர் சிரித்துக் கொண்டு பத்தோ இருபதோ போட்டுவிட்டுப் போவார். இப்படி வருவோர் போவோரிடம் எல்லாம் காசு பார்த்துவிடுவார்கள்.

"மவராசன் வாராக...
மண்ணெல்லாம் பொன்னாக...
நாத்து நடும் எங்களுக்கு
சோறு மட்டுமில்லாம...
பொருளாவும் கொடுக்கும்
புண்ணியராம் எங்க ஐயா.."

அப்படின்னு அந்த நிலத்துக்காரரை மவராசன், புண்ணியவான், உத்தமன் என்றெல்லாம் வர்ணித்துப்பாடி காசு வாங்குவார்கள். அதே போல் ஆடு, மாடு எல்லாத்தையும் பாட்டுல கொண்டு வருவாங்க...

"ஆனைகட்டி தாளடிக்க
ஆறுமாசம் செல்லும்
மாடுகட்டி தாளடிக்க
மறுவருசம் செல்லும்
குதிரை கட்டி தாளடிக்க
கோடிநாள் செல்லும்"

அப்படின்னும் பாடுவாங்க. இப்பல்லாம் கிராமங்களில் விவசாய் முறை மாறியாச்சு. பல கிராமங்களில் விவசாயமே இல்லை என்பதுதான் இன்றைய நிஜம். அப்பல்லாம் நாற்றங்காலில் நாற்றுப்பாவி அது வளர்ந்ததும் அதைப் பறித்து முடிபோட்டு நூறு நூறாக எண்ணி குப்பம் கணக்கில் எண்ணி வைப்பார்கள். அன்று மாலையோ அல்லது மறுநாள் அதிகாலையோ நாற்று முடிகளை எல்லாம் வரப்பில் அடுக்கி நீர் இறங்க வைப்பார்கள். அடுத்த நாள் காலை எந்த வயலில் முதல் நடவோ அந்த வயலுக்கு எத்தனை குப்பம் தேவையோ அதை கூடைகளில் அள்ளிக் கொண்டு போய் நடுவதற்கு தோதாக வயலெங்கும் இறைத்து வைக்க வேண்டும். நடவுப் பெண்கள் வருவார்கள்... நடுவார்கள் பாடல் பாடுவார்கள்... நமக்கும் கேட்பதற்கு சந்தோஷமாக இருக்கும்.

இன்றைக்கோ நிலமை வேறு... நாற்றுப் பாவி நடுவதெல்லாம் இல்லை... நடவுக்கு ஆள் கிடைப்பது கஷ்டம்... எனவே இன்று மழை பெய்ததும் வயலில் டிராக்டர் வைத்து ரெண்டு மூணு ஓட்டு ஓட்டிட்டு விதைத்து விடுவார்கள். அதில் களை எடுப்பதற்கு அதிகமாக செலவு செய்வார்கள். அதனால் இன்று நடவுப் பாடல் எல்லாம் காணாமல் போய்விட்டது.

இதே குலவைப் பாடல் கிராங்களில் இருக்கும் அம்மன் கோவில் திருவிழாவில் பெண்களால் பாடப்படும். கரகம் எடுத்து வரும் போது, தீபம் பார்க்கும் போதெல்லாம் குலவை போடுவார்கள். நடவைப் போலத்தான் இங்கும் ஒரு பெண் பாட்டுப்பாட மற்றவர்கள் குலவை போடுவார்கள். குலவைப் பாடல்கள் பலருக்கு சாமி வரவைத்து விடும். ஆத்தா குலவை போடுங்கத்தா என்று யாராவது சொன்னால் போதும் பெரியவர்கள் போடுகிறார்களோ இல்லையோ சின்னப் பெண்கள் கணீர்க்குரலில் பாட ஆரம்பித்துவிடுவார்கள்.

'தெற்குத் தெருவிலே
தேரோடும் வீதியிலே
தேங்காய் குலைபறிச்சு
வாறாளாம் மாரியாத்தா'  

என்று பாடி முடிக்கும் போது சுற்றியிருப்பவர்கள் 'உலுலுலு' அப்படின்னு குரல் எழுப்புவார்கள்.  இப்பல்லாம் எங்க ஊரில் கூட குலவை போட பெண்கள் யோசிக்க ஆரம்பித்து விட்டார்கள். 'ஆத்தா குலவை போடுங்கத்தா' என்று பலமுறை கத்தினாலும் இப்ப மக்கள் பாட்டை ஆரம்பிப்பதில்லை. எங்க ஊருக்கு இப்ப மொளக்கொட்டுப் பாட்டுச் சொல்ல ஒருவர் வருவார். இப்பெல்லாம் அவர்தான் குலவைப் பாடலும் சொல்லுகிறார். மொளக்கொட்டுப் பாட்டைப் பற்றி அடுத்து ஒரு பதிவு தேற்றிக்கலாம்.

சென்ற முறை மனைவியின் அம்மா ஊருக்கு திருவிழாவுக்குப் போனபோது ஒரு சின்னப் பெண் மைக் எல்லாம் இல்லாமல் கணீர்க்குரலில் குலவைப்பாடல் சொல்லியது. பார்க்க ஆச்சர்யமாகவும் கேட்க சந்தோஷமாகவும் இருந்தது. இன்னும் குலவைப் பாடல் இளவயதினரிடமும் தொற்றிக் கொண்டிருப்பது மிகுந்த சந்தோஷத்தைக் கொடுத்தது. 

'மதுவாம் மதுக்குடமாம்
மதுக்கேத்த தெம்மாங்காம்
மதுவ இறக்கி வைக்க
மனங்குளிர்வா மாரியாத்தா...'

***

'எல்லாரு வீட்டுலயும் எண்ண
ஊத்தி விளக்கெறியும்
மாரியாத்தா வாசலிலே
எளநித்தண்ணி நின்னெறியும்...'

இப்படி நிறையப் பாடுவார்கள்... இவையெல்லாமே அம்மனுக்கு காப்புக்கட்டி தினம் கரகம் எடுத்து கொண்டாடும் அந்த நாட்களில் பாடப்படும் பாடல்கள்... இசையில்லாமல் ஊரே கூடியிருக்க... ஒற்றைக் குரலெடுத்து அழகாய் பாடும் போது பின்பாட்டாய் குலவைச் சத்தம் ஆத்தாளை மட்டுமல்ல நம்மளையும் குளிரச் செய்யும்.

************

ம் குடும்பத் திருவிழாவாம் வலைப்பதிவர் திருவிழா குறித்து  முத்துநிலவன் ஐயா தளத்தில் பகிர்ந்திருக்கும் பகிர்வில்...

வரும் 11-10-2015 ஞாயிறு 
வலைப்பதிவர் திருவிழா-2015

புதுக்கோட்டையில் 
சிறப்பான ஏற்பாடுகள் 
நடந்து வருகின்றன.

புதுக்கோட்டைப் பதிவர்கள் 
நிதி உதவி செய்வதில் முந்திக்கொண்டு
விழாவுக்காக 
உடல் உழைப்பையும் தந்து வருகிறார்கள்..

மற்ற மாவட்டப் பதிவர்களும் இதில் பங்கேற்க வேண்டுகிறோம்.

இதைத் தொடர்ந்து வாசிக்க இங்கு சொடுக்குங்கள்.
-'பரிவை' சே.குமார்.

18 எண்ணங்கள்:

ஸ்ரீராம். சொன்னது…

சுவாரஸ்யமான பதிவு. முள்ளும் மலரும் படத்தின் 'ராமன் ஆண்டாலும்' பாடலில் இதுபோன்ற குலவைப் பாடல் வரும் இல்லையா?

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

குலவைச் சத்தம் அறிந்தேன் நண்பரே
நன்றி
தம +1

கரூர்பூபகீதன் சொன்னது…

கிராமத்து ராகத்துக்கு தனி ரசனை உண்டு நல்ல ஆக்கம்! நன்றி நண்பரே

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

மண் மணக்கும் பாடல்கள்...

சசிகலா சொன்னது…

குலவைச் சத்தம் காதில் கேட்டபடி இருக்கு சகோ. அந்த சத்தமெல்லாம் இனியெங்கே கேட்கப்போகிறோம். அருமையான பகிர்வு. இது போன்ற பாடல்கள் கிடைத்தால் பதியுங்கள்.

KILLERGEE Devakottai சொன்னது…

அருமையான பதிவு படம் இணையத்தில் சுட்டாலும் தேவகோட்டை அழகாபுரி மேலத்தெருவில் சுட்டதைத்தானே போட்டு இருக்கின்றான் மூணாவதா வர்ற கத்திரிப்பூப் போட்ட ரவிக்கை நம் மொடிச்சியமாள்தானே...
தமிழ் மணம் 7

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அண்ணா...
ஆமா அதிலும் வரும்... ஆனால் அது மொளக்கொட்டு பாட்டு போல் இருக்கும்... லாலல்லா...லாலல்லா... லாலலா...லாலல்லான்னு வருமே அதுதானே...

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க நண்பரே...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சகோதரி...
ஒரு பாட்டும் கிடைக்கலைங்க... குலவைப் பாட்டுன்னு தேடினா நான் வலைச்சரத்தில் பகிர்ந்த பாட்டுத்தான் வருது...
இனி கிராமத்து மனிதர்களிடம் கேட்டுத்தான் பதியணும்...
கிடைத்தால் கண்டிப்பாக பகிர்கிறேன்.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Yarlpavanan சொன்னது…

'எல்லாரு வீட்டுலயும் எண்ண
ஊத்தி விளக்கெறியும்
மாரியாத்தா வாசலிலே
எளநித்தண்ணி நின்னெறியும்...'
என அருமையான பாடல்களை
அறிமுகம் செய்துள்ளீர்கள்!

செவி வழி வந்த
நாட்டுப் பாடல்கள்
ஊர்ப் (கிராமியப்) பாடல்கள்
மறைந்து விடாமல் பேண வேண்டுமே!

துரை செல்வராஜூ சொன்னது…

பாரம்பர்யக் குலவை..
பண்பாட்டுக் குலவை!..

வயற்காட்டில் நடந்து சென்றதைப் போல் உணர்வு!..

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

குலவைச்சத்தம் மனதிற்கு சுகம் தரும். இவ்வாறான பல நல்ல பண்பாடுகளை விட்டுவிட்டு நாம் எங்கோ சென்றுகொண்டிருக்கிறோம் என்பது வேதனைக்குரியதே.

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

மண்ணின் மணம் இங்கு வரை அடிக்கின்றது! குமார்!

கீதா: எங்க ஊர்ல நாற்று நடவு, எல்லாம் இருந்த காலம் உண்டு ஆனா யாரும் பாடியதே இல்லை...ஆனால் ஏதாவது விழா என்றால்....குலவைஉண்டு...ரொம்ப ..கேரளாவில் கூட உண்டு..

சென்னை பித்தன் சொன்னது…

கிராமிய மணம் கமழ்கிறது

கோமதி அரசு சொன்னது…

மொளக்கொட்டு திருவிழா மதுரையில் மீனாட்சி அம்மன் கோவிலில் நடந்தது நானும் போய் பார்க்கவேண்டும் என்று நினத்தேன் முடியவில்லை.
எங்கள் பக்கம் கல்யாணம், மற்றும் நல்ல விஷேங்களுக்கு குலவைஇடும் வழக்கம் உண்டு.

கோமதி அரசு சொன்னது…

பதிவும் பகிர்ந்த பாடல்களும் மிக அருமை.