மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 5 அக்டோபர், 2013

தொடர்கதை : கலையாத கனவுகள்

முந்தைய பதிவுகளைப் படிக்க...

******

19. சந்தோஷமும் வருத்தமும்

முன்கதைச் சுருக்கம்: 

கிராமத்து ஏழைக்குடும்பத்துப் பையனான ராம்கி, கல்லூரி ரவுடி வைரவனின் தங்கை புவனாவுடன் நட்பாக பழகுகிறான்.  அக்காவுக்கு விருப்பமில்லாத மாப்பிள்ளையை பேசி வைத்திருக்கும் அம்மாவுடன் மல்லுக்கு நிற்கிறான். கல்லூரியில் வைரவனைத் தாக்க வந்தவர்களுடன் ஏற்பட்ட தகராறின் காரணமாக கெட்டபெயர் ஏற்படுகிறது. அவனைப் பார்க்க வரும் புவனா, அவனுடன் மல்லிகா இருக்கவும் கோபமாகிறாள். அவளைப் பார்த்துப் பேசி சமாதானமாக அவனுடன் மனம் விட்டுப் பேச வேண்டும் என்கிறாள். எப்பவும் போல் சேகருடன் பேசிவிட்டு வீட்டு வருகிறான்.

இனி...

சேகர் வீட்டில் இருந்து திரும்பியவனை "எங்கடா போனே?" என்றாள் நாகம்மா.

"சேகரைப் பார்க்கப் போனேன்...."

"எப்பப் பார்த்தாலும் அவன் கூட என்ன பேச்சு..."

"பேசினா என்னம்மா... சும்மா வாம்மா..."

"அதானே... அவனப் பத்தி சொன்னா மட்டும் கேக்க மாட்டே..."

"அம்மா பொங்கல் டிரஸ்..."

"ம்... எனக்கும் சீதைக்கும் மட்டும் இங்க எடுக்கப்போறேன்... உனக்கும் அண்ணனுக்கும் அவன் எடுத்துக்கிட்டு வாறேன்னு சொல்லியிருக்கான்..."

"அம்மா எனக்கு ஜீன்ஸ் பேண்ட் வேணும்..."

"சரி நாளைக்கு அண்ணனுக்குப் போன் பண்ணிச் சொல்லிடு... "

"ம்... அம்மா... என்னோட பிரண்ட்ஸ் எல்லாம் பொங்கலுக்கு இங்க வாறேன்னு சொல்றாங்கம்மா..."

"பொங்கலுக்கா... சீதை கலியாணத்துக்கு கூட்டியாரலாமுல்ல..."

"இல்லம்மா... பொங்கலுக்கு வந்தா அவங்களுக்கு வித்தியாசமான அனுபவமா இருக்கும்ல்ல..."

"ம்... சரி கூட்டியா... ஆனா அந்த சேகரு மாதிரி பொம்பளப்புள்ளங்களை கூட்டியாந்திராதே... எல்லாரும் ஒரு மாதிரி பேசுவாளுங்க,,,,"

"எப்புடிம்மா.... கிளாஸ்ல எல்லாரும் வாறாங்கன்னா பொண்ணுங்களும் வருவாங்க... எப்படி வேணாங்கிறது..."

"என்னடா... சொல்றே... பொண்ணுங்களைக் கூட்டியாறியா?"

"ம்... எல்லாரும் வாறேன்னு சொல்றாங்கம்மா... மத்தவங்க வீட்டுக்கு நாங்க பொயிட்டு வந்திருக்கோம்.."

"என்னடா நீயி... அக்கா கலியாணமின்னா பரவாயில்லைடா.. ஆனா பொங்கலுக்கு வந்தா ஊரு ஒரு மாதிரி பேசுமுடா..."

"ஏம்மா கூடப் படிக்கிறவங்கதானேம்மா... வந்தா என்ன தப்பும்மா..."

"அதுக்கில்லடா... ஊருக்குப் பயந்து சொல்றேன்... எவளாவது நாக்குமேல பல்லப்போட்டு எதுனாச்சும் பேசுவா... அதான்..."

"சரிம்மா... நான் கூட்டியாரலை..." என்றவன் பேசாமல் உட்கார்ந்திருக்க "என்னடா... என்னாச்சி..." 

"ஒண்ணுமில்லம்மா... விடு..."

"எதுக்கு இப்ப மொகத்தைத் தூக்கி வச்சிக்கிட்டு இருக்கே... இப்ப என்ன பெரண்டக் கூட்டியாரணும் அம்புட்டுத்தானே... கூட்டியா... ஆனா ஊருல நாலு பேரு நாலுவிதமா பேசுற மாதிரி வச்சுடக்கூடாது... சரியா?"

"ம்... சரிம்மா...ரொம்ப தாங்க்ஸ்ம்மா..." என்றபடி அவள் மடியில் படுத்துக் கொண்டான்.

"என்னடா... அம்மாவுக்கு கொலயடிச்சிட்டியா?" என்றபடி அருகில் வந்து அமர்ந்தாள் சீதா.

"உனக்கென்னடி எம்மவனே விழுந்து அடிபட்டுக் கிடக்கான்... எனக்கெதுக்கு கொலயடிக்கனும்... எம்புள்ள தங்கம்டி... அவனால எந்தப் பிரச்சினையும் வராது. தெரிஞ்சிக்க..."

"அப்ப என்னாலயும் அண்ணனாலயும் பிரச்சினை வருங்கிறியா?"

"பின்னே... இந்தா இவனக் கட்டிக்கன்னு சொன்னா அழிச்சாட்டியம் பண்ணுறியல்ல..."

"அம்மா..."

"என்னடா... எதுக்கு இப்போ ஒம்மான்னு கத்துறே,,,?"

"அதுதான் அண்ணன் வரட்டுன்னு சொல்லிட்டிங்கல்ல... அப்புறம் எதுக்கு அதுகிட்ட கோபப்படுறீங்க... அதை விடுங்கம்மா... அம்மா... அக்காவுக்கு ஒரு சுடிதாரு எடுத்துக் கொடுங்கம்மா..."

"சுடிதாரா...? கல்யாணத்துக்கு நாலு நல்ல சீலய போடணுமில்ல... இப்புடி வாங்கினாத்தானே உண்டு..."

"சேலையும் வாங்குங்கம்மா... எல்லாப் புள்ளங்களும் சுடிதார் போடுதுக... ஒண்ணு இதுக்கும் வாங்கிக் கொடுக்கலாம்ல..."

"என்ன அக்காவுக்கு வக்காலத்து பலமா இருக்கே.... சரி.... சரி... வாங்குவோம்..."

"இன்னிக்கு எங்கம்மா நல்ல மூடுல இருக்காங்க... எது கேட்டாலும் கிடைக்கும் போல..." என்றவனின் காதைப் பிடித்து திருகி "என்ன கேட்டாலும் ஆமாம் போட நான் என்ன கிறுக்கச்சியா...?" என்றாள்.

"சும்மா சொன்னேன்மா.."

"அம்மா... இவன் எதுக்கோ அடிப்போடுறான்... பாத்துக்கங்க..."

"ஏன்டி உனக்கு வக்காலத்து வாங்குறான்... நீ போட்டுக் கொடுக்கிறியா?"

"நல்லா கேளுங்கம்மா... " 

அவர்களின் பேச்சு சிரிப்பும் சந்தோஷமுமாகப் போய்க்கொண்டிருந்தது.


"வாங்க ஐயா... பொன்னி ராமுத்தம்பி வந்திருக்கு பாரு..." என்றார் தமிழய்யா.

"வாப்பா... இப்ப தலை எப்படியிருக்கு..?"

"இப்ப பரவாயில்லம்மா..."

"எதுக்கு ரவுடிகளுக்கெல்லாம் சப்போர்ட் பண்ணிக்கிட்டு நீ ரவுடின்னு பேர் வாங்கனும்..."

"இல்லம்மா... ஒருத்தரை அடிக்கும் போது எப்படிம்மா பாத்துக்கிட்டுப் போறது..."

"அதுக்காக நல்லவன்னா பரவாயில்லை... பல பேரை அடிக்கிற ரவுடிப்பய அவன்... அவனுக்காக எதுக்கு நீ போகனும்..."

"இல்லம்மா... நான் பேசிக்கிட்டு இருக்கும் போது அடிக்க வந்தாங்க... அவரு நம்ம புவனாவோட அண்ணன்... இன்னைக்கு ஏன்டா அவனுக்காக நீ சண்டைக்குப் போனேன்னு எல்லாரும் கேக்குறீங்க... நான் பாட்டுக்கு எவனோ சாவட்டுன்னு வந்திருந்தா புவனாவோட அண்ணனை அடிச்சிருக்காங்க நீ பாட்டுக்கு வந்துட்டேன்னு கேக்கமாட்டீங்களா?"

"புவனாவுக்காக சண்டைக்குப் போனாலும் உனக்கு கெட்டபேர்தானே...?"

"இருக்கட்டும்மா... ஒருத்தரை காப்பாத்தினேன்னு சந்தோஷப்பட்டுகலாம்ல..."

"ம்... இரு காபி கொண்டு வாரேன்..."

"ஏந்தம்பி நல்ல புள்ளையின்னு பாத்தா நீங்களும் அப்புடித்தான் இருக்கீங்க..."

"என்னய்யா... நான் என்ன பண்ணினேன்..."

"அம்மான்னு சொல்லி ஒருத்தரை கூட்டியாந்து எல்லாரையும் ஏமாத்திட்டதா நினைச்சிக்கிட்டு இருக்கீங்க.... எல்லாருக்குந் தெரியும்... எதுக்கு இப்படியெல்லாம்..."

"இல்லய்யா... அம்மாவுக்கு தெரிஞ்சா ரொம்ப வருத்தப்படுவாங்க... அதான்  இப்படி..."

"இது நல்ல பழக்கமில்லையில்ல... அப்ப நீங்க மறுபடியும் தப்புப் பண்ணுவீங்கன்னு நினக்கத் தோணுதுல்ல..." என்றபோது புவனா வந்திறங்கினாள்.

"என்ன இரண்டு பேரும் சொல்லி வச்சு வாறீங்களா..?"

"அப்படியெல்லாம் இல்லய்யா..." வேகமாக மறுத்தான் ராம்கி.

"என்னய்யா காரசாரமா பேசிக்கிட்டு இருந்தீங்க... நான் வந்ததும் பேச்சு மாறிடுச்சு..."

"அதெல்லாம் இல்ல புவனா... தம்பி அம்மாவை கூட்டியாந்ததைப் பத்தி பேசிக்கிட்டு இருந்தோம்..."

"அதான் நானும் கேக்கனுமின்னு நினைச்சேன்... அது இவரு அம்மாவெ இல்ல... எங்க ஊர்ல கல்லறுக்கிற பொம்பளை..." என்றதும் ராம்கி பேசாமல் தலை குனிந்து அமர்ந்திருந்தான்.

"சரி புவனா... விடுங்க... அம்மா வருத்தப்படுவாங்கன்னு பண்ணிட்டார். நீங்க பேசிக்கிட்டு இருங்க... நான் முத்தையா ஐயாவை பாக்க வாறேன்னு சொல்லியிருந்தேன். பொயிட்டு வாறேன்... பொன்னி இரண்டு காபி கொண்டு வா... புவனாவும் வந்திருக்காங்க..." என்றபடி ஐயா எழுந்து செல்லவும். புவனா அந்தச் சேரை இழுத்து ராம்கிக்கு அருகில் போட்டு அமர்ந்தாள்.

(புதன்கிழமை தொடரும்)
-'பரிவை' சே.குமார்.

6 எண்ணங்கள்:

கவியாழி சொன்னது…

தொடர் வெற்றிகரமாக சிறக்க வாழ்த்துக்கள்

இளமதி சொன்னது…

சகோ.. அழகாகக் கதை செல்வது இடையிடையே பார்க்கவே தெரிகிறது...

இருந்தும் முன் கதைகளையும் படித்திட எண்ணியும் நேரம் ஒதுக்க முடியவில்லை...

எப்படியும் படிப்பேன்.. வாழ்த்துக்கள்!
தொடருங்கள்!

த ம.3

Unknown சொன்னது…

ஒவ்வொரு பகுதிகளையும் படித்து முடிய,அடடா முடிஞ்சிருச்சேன்னு............எதிர் பார்ப்பைக் கூட்டி.........நன்றாக இருக்கிறது,தொடரட்டும்!

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க கவியாழி அண்ணா....
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி அண்ணா.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சகோதரி இளமதி...
படித்து உங்கள் மேலான கருத்தைச் சொல்லுங்கள்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

வாக்களித்தமைக்கு ஸ்பெஷல் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சகோ. யோகராஜா
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.