மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

திங்கள், 28 அக்டோபர், 2013

தொலைக்காட்சிகளில் தமிழ்

விஜய் சூப்பர் சிங்கரில் சென்ற வாரத்தில் 'என்றென்றும் ராசா' என்கிற தலைப்பில் போட்டியாளர்கள் பாடினார்கள். அதில் சிலவற்றை வீடியோப் பகிர்வில் பகிர்ந்திருந்தேன். அதற்கு எனது அருமை அண்ணன் திரு. ஜோதிஜி அவர்கள் கொஞ்சம் கோபமாகவே பின்னூட்டம் இட்டிருந்தார்கள். அதற்கு நான் என் பதிலும் அளித்திருந்தேன். அந்தப் பதிலைப் பார்த்ததும் அண்ணன் தனது ஆதங்கத்தை மீண்டும் கீழ்க்கண்டவாறு பதிந்திருந்தார்கள்.

குமார் என்னோட வருத்தமும் ஆதங்கமும் என்ன தெரியுமா?
இந்த நிகழ்ச்சி போன்ற பல நிகழ்ச்சிகளில் பங்கு பெறும் இளையர்களைப் பற்றியே. இந்த நிகழ்ச்சியை தொடக்கத்தில் நானும் விரும்பிப் பார்த்தேன். சில வருடங்களில் பலரும் வளர்ந்துவிட்டனர். சில பிரபல பாடகர் என்கிற ரீதியில். ஆனால் பெண் குழந்தைகள் வர வர ஒப்பனைகளில் கவனம் செலுத்துவதும், பாடல்களுக்கு தேவையில்லாத பாவனைகள், ஆட்டம் என்று டிஆர்பி ரேட்டிங் என்பதை காரணத்தில் வைத்து அவர்களை பாடுவதை விட பல விசயங்களில் ஒரு ரசிக்கக்கூடிய பொம்மை போல மாற்றி விடுகின்றார்கள். ஒரு கிராமத்தில் இருக்கும் தகப்பன் தாய் இந்த நிகழ்ச்சியைப் பார்த்தால் இந்த நிகழ்ச்சிக்கு நீதிமான்கள் பேசும் பேச்சை கால் வாசி தமிழ் முக்கால்வாசி ஆங்கிலத்தை எப்படி புரிந்து கொண்டு தங்கள் குழந்தைகளின் திறமையை வளர்க்க வேண்டும் என்று நினைப்பு வரும்?

நம் ஊரில் அல்டாப்பு என்போமே அது போலத்தான் இது போன்ற நிகழ்ச்சிகள் என்பது என் கருத்து.

அண்ணனின் கருத்து முற்றிலும் உண்மைதான். டி.ஆர்.பி. ரேட்டிங்கிற்காக அவர்களது சிகை அலங்காரம் முதல் உடை வரை இவர்கள்தான் முடிவு செய்கிறார்கள். மேலும் தமிழ்த் தொலைக்காட்சி என்ற பெயர்தானே ஒழிய சூப்பர் சிங்கர் போன்ற நிகழ்ச்சிகளில் 75% ஆங்கிலம்தான் பேசப்படுகிறது. தமிழில் பேசுவதை பெரும்பாலும் தரக்குறைவாகவே நினைக்க ஆரம்பித்துவிட்டார்கள். இது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மட்டுமின்றி பொது இடங்களிலும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

இங்கும் அப்படித்தான்... ஒரு மலையாளி மலையாளியைப் பார்த்தால் மலையாளத்தில்தான் பேசுவான். ஆனா நம்ம ஆளுக இருக்கானுங்களே அப்பா... அதுவரைக்கும் வீட்டுக்கோ நண்பர்களுக்கோ பேசிக்கொண்டிருப்பார்கள். நாம் அருகில் போய் விசாரித்தால் இதயம் படத்தில் வரும் நகைச்சுவைக் காட்சிதான் அரங்கேறும். ஒண்ணு இங்கிலீஸ்ல என்னன்னு கேட்பான்... இல்லேன்னா இந்தி, மலையாளத்துல கேட்பான். தப்பியும் தமிழுக்கு வரமாட்டான்... நாம நீங்க தமிழா... அப்படின்னு இடையில் விட்டுப் பார்த்தால் 'யா... ஐம் ப்ரம் திருச்சி...' அப்படின்னுதான் சொல்லுவான். என்னமோ தெரியலை.... தமிழ் பேசினா ஊரைவிட்டு விரட்டிருவாங்கன்னு நினைச்சுக்குவாய்ங்க போல...

சரி, கதைக்கு வருவோம்... சென்ற வாரத்தில் நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக வந்த இயக்குநர் மிஷ்கின் பேசியதில் 90% ஆங்கிலம்தான்... என்னோட படத்தை பாருங்கள் தமிழ் மக்களேன்னு ஊர் ஊரா போஸ்டர் ஓட்டப் போவோம்... படத்துக்கு அழகிய தமிழில் பேர் வச்சு வரிவிலக்கும் வாங்கிக்குவோம்... ஆனா பேசும் போது மட்டும் தமிழை வேப்பங்காயாகப் பார்ப்போம். இளையராசாவைப் பற்றி பேசிய அனைத்தும் இங்கிலீஸ்தான்... அப்புறம் எப்படி இதைப் பார்க்கிற பாமரனுக்கு இளையராசாவைப் பற்றி என்ன சொன்னார்ன்னு தெரியும். இதைத்தான் அண்ணன் தனது ஆதங்கத்தில் சொல்லியிருக்கிறார். கிராமங்களில் இருக்கும் வயதானவர்கள் இதுபோன்ற நிகழ்ச்சிகளைப் பார்த்தால் என்ன புரியும் சொல்லுங்க... ஒரு மண்ணும் புரியாது... நாங்க சின்னவயதில் வீட்டில் எதாவது சொல்லிச் சிரிப்போம். அப்போ எங்க தம்பி எதையும் கவனிக்காமல் எதாவது பண்ணிக்கிட்டு இருப்பான்... ஆனா நாங்க சிரிக்கும் போது அவனும் சிரிப்பான்... இப்ப ஏன்டா சிரிச்சேன்னு கேட்டா நீங்க சிரிச்சீங்க நானும் சிரிச்சேன்னு சொல்லுவான். இது அடிக்கடி நடக்கும்... அதே நிலைதான் இந்த பீட்டர் இங்கிலீஸ் நிகழ்ச்சிகளில்... எல்லாரும் சிரிச்சா நாமளும் சிரிச்சு வைக்க வேண்டியதுதான்.

தமிழ் பேச்சு எங்க மூச்சுன்னு ஒரு நிகழ்ச்சி ஆங்கிலமோ வடமொழிக் கலப்போ இல்லாமல் அழகிய தமிழில் பேசுவார்கள். தமிழ்க்கடல் நெல்லைக் கண்ணன் அவர்கள் சில வாரம் கலந்து கொள்ளவில்லையாம். அவருக்குப் பதிலாக நடுவராக வந்தவர்கள் சுத்த தமிழில் பேச முடியாமல் ஆங்கிலம் கலந்து பேசியதாக நண்பர் ஒருவர் முகனூலில் எழுதியிருந்தார். பேசுபவர்களுக்கு மட்டுந்தான் தமிழ் மூச்சா இருக்கனும்... நடுவர்களுக்கு இல்லை என்று முடிவு செய்திருப்பார்கள் போல.

இந்த சூப்பர் சிங்கர் சீசனிலும் மலையாளிகளுக்குத்தான் மரியாதை. நடுவர்களாக இருப்பவர்களுக்கு தமிழ்நாடு சோறு போட்டாலும் தங்களோட மண்ணின் பாசம் அதிகமாகவே இருக்கிறது என்பது அடிக்கடி அப்பட்டமாகத் தெரிகிறது. சென்ற வாரம் கணேஷை நீக்கியதும் அப்படித்தான் நினைக்கத் தோன்றியது.  இந்தச் சுற்றில் எப்படிப் பாடுகிறார்கள் என்பதை வைத்து முடிவெடுக்காமல் சென்ற சுற்றுகளில் உனக்கு அது சரியில்லை... இது சரியில்லைன்னு... பத்து நிமிட அறிக்கை வாசிச்சு போகச் சொல்லிட்டாங்க. ஆனா அவன் சொன்னான் பாருங்க அதுதான் சூப்பர்... எனக்கு எது சரியின்னு தெரியுதோ அதை நான் செய்வேன். நல்லாயில்லையின்னு யார் சொன்னாலும் பரவாயில்லை... என்னோட பாணியில நான் பாடுவேன்னு சொன்னான்... அம்புட்டுத்தான் நடுநாயக இசைத் தூண்கள் ஒன்றும் பேசவில்லை.

மொத்தத்தில் பெரும்பாலான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஆங்கிலக் கலப்போடுதான் நடத்தப்படுகின்றன. தொடர்ந்து பார்க்கும் நிகழ்ச்சிகளாக எதுவுமே இல்லை என்பதே வருத்தமான விசயம்தான். இதிலும் குறிப்பாக குடும்ப நிகழ்வுகளை... நாலு சுவற்றுக்குள் வைத்து பேச வேண்டியதை உலகமே பார்க்கும்படி அழுகை, அடிதடி என பரபரப்பு நிகழ்ச்சியாக்கி தங்கள் தொலைக்காட்சியின் டி.ஆர்.பி. ரேட்டிங்கில் முன்னேற்றம் காண எல்லாத் தொலைக்காட்சிகளும் போட்டாபோட்டி போடுகின்றன. இதில் பலிகடாக்கள் பெரும்பாலும் அன்றாடங்காச்சிகளே.

சரிங்க பேசினா இன்னும் நிறைய பேசலாம்... ஆங்கிலக் கலப்பில்லாமல்... சினிமா சம்பந்தான நிகழ்ச்சிகள் இல்லாமல் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி நடத்திக் கொண்டுதான் இருக்கிறது என்பது நமக்கெல்லாம் தெரியும். ஆனால் தமிழ் எங்கள் மூச்சு என்று சொல்லிக் கொண்டு ஆங்கிலம் கலந்து விளம்பர இடைவேளையாய் தமிழ் பேசும் நடுவர்களைக் கொண்டு நிகழ்ச்சி நடத்தும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத்தானே நாம் எல்லோரும் பார்க்கிறோம்.. ஆடவே தெரியவில்லை என்றாலும் கேரளத்திலிருந்து வந்த முன்னாள் நடிகை ஆஹா.... ஒஹோ... பென்டாஸ்டிக்... மார்வலஸ்... எக்ஸலண்ட்... கீப் இட் அப்ன்னு கத்தும் போது ஒரு மயிர்ச்சிலிப்போடு நாமும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்...

(மனசு மற்றுமொரு தலைப்பில் பேசும்)
-'பரிவை' சே.குமார். 

8 எண்ணங்கள்:

கவியாழி சொன்னது…

உண்மையான ஆதங்கம்

துரை செல்வராஜூ சொன்னது…

நல்லவேளை.. நான் இந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதைத் தவிர்த்து வெகு நாட்கள் ஆகின்றன.அவன் ஆங்கிலத்தில் பேசுறானா.. மலையாளம் கலந்து பேசுறானா - என்பது குறித்து எந்த பதற்றமும் கிடையாது. தமிழை வளர்ப்பதாகச் சொல்லி தன்னை வளர்த்துக் கொண்டவர்கள் மத்தியில் - எத்தனைத் தமிழர்கள் - தொலைக் காட்சி இணைப்பைத் துண்டித்துக் கொள்ளத் தயாராக இருக்கின்றார்கள்!.

பெயரில்லா சொன்னது…

வணக்கம்
மனதில் உள்ள ஆதங்கம் எழுத்தாக உருப்பெற்று எழுதிய விதம் அருமை வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

ஸ்ரீராம். சொன்னது…

நான் இந்த நிகழ்ச்சிகளைப் பார்ப்பதில்லை. முன்னர் ஒரு நிகழ்ச்சியில் வெளி நாட்டிலிருந்து வந்து கலந்துகொண்ட ஒரு தமிழ்ச் சிறுமிதான் முதல் பரிசு வாங்குவாள் என்று நினைத்திருக்க, முந்தின சுற்றிலேயே அவள் வெளியேற்றப் பட்டதற்கான காரணம் அவள் இவர்கள் சொன்ன 'உடையை' அணியவில்லை என்பதால் கேள்விப் பட்டேன். அந்தப் பெண் இப்போது சினிமாவில் பாடத் தொடங்கி விட்டதாகவும் அறிந்தேன்.

நீக்கப்பட்ட கணேஷ் சொன்னதாக நீங்கள் சொல்லியிருக்கும் வரிகளைப் படித்தபோது கணேஷ் மேல் மதிப்பு ஏற்பட்டது. என்ன பாசிட்டிவ் அப்ரோச்! அழுது, முகம் மற்றும் மனம் சுருங்கி வெளியேறாமல் கம்பீரமாக வெளிவந்திருக்கிறார்.

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

வந்தாரை வாழவைக்கும் தமிழ்
என்று கூறி கூறி
அனைவரையும் வாழவைத்தோம் ஆனால்
நாமும் வாழ வேண்டும் என்பதை
மறந்தே போனோம்

அ.பாண்டியன் சொன்னது…

சரியான ஆதங்கத்தையே நண்பர் ஜோதிஜி அவர்கள் வெளிப்படுத்தியுள்ளார். அதற்காக ஒரு பதிவும் இட்டு அலசிய தங்களுக்கு பாராட்டுகளுடன் கூடிய நன்றிகள் முதலில். ஊடங்களின் தமிழ் கேலிக்கூத்து. அவர்களாக மாற போவதில்லை. தொடர் கண்காணிப்பு மூலம் அரசு நடவடிக்கை எடுத்தால் நன்றாக இருக்கும்..

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

எல்லாம் பணம் படுத்தும் பாடு...

இந்த பீட்டர் இங்கிலீஸ்காரர்கள் தான் தமிழ் வளர்க்க பாடுபடுவதாக சொல்வார்கள்...

வெங்கட் நாகராஜ் சொன்னது…

தொலைக்காட்சி பார்ப்பதில் அத்தனை விருப்பமில்லை. பார்க்கும் சமயத்திலும் பிடிப்பதில்லை....

நல்ல பகிர்வு.