மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

செவ்வாய், 22 அக்டோபர், 2013சினிமா : பயணங்கள் முடிவதில்லைநீண்ட நாட்களாக பார்க்க வேண்டும் என்று நினைத்திருந்த பயணங்கள் முடிவதில்லை படத்தை இந்த விடுமுறையில் பார்த்தேன். இதற்கு முன்பு முழுப்படத்தையும் பார்த்ததில்லை. கொஞ்சம் கொஞ்சமாக பார்த்திருக்கிறேன். பலமுறை முயன்றும் படத்தைப் பார்ப்பதற்கான சந்தர்ப்பம் சரிவர அமையவில்லை. இந்த விடுமுறையில் எங்கும் செல்லவில்லை என்பதால் பல படங்களையும் சூப்பர் சிங்கர் போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் பார்க்க நேர்ந்தது, அப்படிப் பார்க்கும் போது பயணங்கள் முடிவதில்லையையும் பார்க்க முடிந்தது சந்தோஷமே. 

பள்ளியில் படிக்கும் காலத்தில் ஊர்த் திருவிழாவில் பயணங்கள் முடிவதில்லை பாடல்களை அடிக்கடி போடச் சொல்லி வற்புறுத்தியதுண்டு. அனைத்தும் அருமையான பாடல்கள்... எப்பொழுதும் கேட்கத் தூண்டும் பாடல்கள்... பாடல்களுக்காகவே படம் பார்க்க வேண்டும் என ஆவலைத் தூண்டிய படங்கள் நிறைய... அதில் இதுவும் ஒன்று.

இயக்குநர் ஆர்.சுந்தர்ராஜன் இயக்கிய இந்தப்படம் 1982-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 26ஆம் தேதி வெளிவந்து வெள்ளிவிழாக் கொண்டாடியது.  நாயகனாக வெள்ளி விழா நாயகன் மோகனும் நாயகியாக பூர்ணிமா ஜெயராமும் நடித்திருக்கின்றனர். ராஜேஷ், பூர்ணம் விசுவநாதன், ரஜனி (பூர்ணிமாவின் தோழி), கவுண்டமணி, செந்தில் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இசைஞானி இளையராஜா இசையில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், எஸ்.ஜானகி பாடல்களைப் பாடியிருக்கிறார்கள்.

கதை என்று பார்த்தால் அதிகமான படங்களில் பார்த்ததுதான். அநாதையான நாயகனும் அவனது நண்பனும் ஒரு அறை எடுத்து தங்கியிருக்கிறார்கள். அருகில் இருக்கும் தோழியின் வீட்டிற்கு வரும் நாயகி அங்கு ஒரு கவிதை எழுத அது பறந்து சென்று நாயகனுக்கு அருகில் விழுகிறது. அதை எடுத்துப் பாட, நாயகி காதலில் விழுகிறார். அதை வெளிக்காட்டாமல் அவருக்கு தன்னை யாரென்று சொல்லாமல் அவரைப் பெரிய ஆளாக ஆக்க முயற்சிக்கிறார். அதில் வெற்றியும் கண்டு காதலைச் சொல்லி அவருடன் சுற்றுகிறார். கல்யாணம் செய்து கொள்ளலாம் என்று நினைக்கும் போது மதுரை சென்று திரும்பிய நாயகன் அவரை வெறுக்கிறான். அவரைப் பார்ப்பதைத் தவிர்க்கிறான். நாயகியிடமே உன் கல்யாணம் என்றால் காசே வாங்காமல் பாடுவேன். உன் தோழி கல்யாணத்துக்கு எனக்கு பதினைந்தாயிரம் கொடுத்தால்தான் பாடுவேன் என்று சொல்லி அவரின் மனதைப் புண்படுத்துகிறார். இதற்கிடையே நாயகிக்கு அத்தை மகனான டாக்டர் ராஜேஷூடன் திருமணம் செய்ய நிச்சயம் பண்ணுகிறார்கள். சாலையில் டாக்டரைச் சந்திக்கும் நாயகன் அவரை நாயகி வீட்டில் கொண்டு வந்து விட ,இவள்தான் அவனைக் காதலிப்பவள் என்று அறியாமல் உண்மையைப் போட்டு உடைக்க, தன்னை அவன் வெறுத்து ஒதுக்குவதற்கான காரணத்தை அறியும் நாயகி உயிரை மாய்த்துக் கொள்ளும் முடிவை எடுக்க, நாயகனும் தனது கடைசி நேரத்தை நெருங்க இருவரும் இணைந்து மரணத்தை தழுவுவதாக கதை முடிகிறது.

நாயகன் மோகன் படங்களில் பாடல்கள் மிகவும் அருமையாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதற்கு முக்கிய காரணம் ராஜாதான். பாடல்களை எஸ்.பி.பி. பாடினாலும் படத்தில் மோகன் பாடுவது போலவே உருகி  மருகி பாடுவார். எல்லாப் படத்திலும் அப்படித்தான் மோகனே பாடுவது போல்தான் தெரியும்.

நாயகி பூர்ணிமா தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். நாயகியின் அப்பாவாக வரும் பூர்ணம் விசுவநாதன், பிளாட் ஓனராக வந்து 'இந்த சென்னை சிட்டியில...' என்று வசனம் பேசும் கவுண்டமணி, நாயகனின் நண்பனாக வந்து சில இடங்களில் சிரிக்க வைத்து குணச்சித்திரமாக மாறிப் போகும் எஸ்.வி.சேகர், இரண்டு இடங்களில் வரும் செந்தில் என எல்லாரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்தில் செந்தில் சொந்தக் குரலில் பேசவில்லை. சுந்தர்ராஜனே பேசியிருப்பார் போல் தெரிகிறது. 

தனது பாட்டைப் பாடியவனை தங்கள் ஊர் திருவிழாவில் பாடவைக்க நாயகி எடுக்கும் முடிவுக்கு உடனே அப்பா சரி சொல்வது என்பது படத்திற்கு மட்டுமே பொருந்தும். திருவிழா என்றால் ஊர் கூடி அதை வைக்க வேண்டும் இதை வைக்க வேண்டும் என்று பேசி சண்டை போட்டு கடைசியில் ஒத்துக் கொள்வார்கள். இன்று வரை பெரும்பாலான கிராமங்களில் இப்படித்தான் நடக்கிறது.
பாட வருபவன் தனியாளாக எந்த ஒரு இசைக்கருவியும் இல்லாமல் திருவிழாவில் பாடுவது என்பது எங்கும் நடக்காது... அதன் தொடர்ச்சியாக ரேடியோவில் பாட வைப்பது... அப்புறம் அதை தனது பிஸியான காலகட்டத்தில் வீட்டில் அமர்ந்து தொலைக்காட்சியில் பார்க்கும் கங்கை அமரன் பாட அழைப்பது என எல்லாமே நம்ப முடியாத நிகழ்வுகள்தான்.

இறுதிக் காட்சியில் ரத்த வாந்தி எடுத்து சாகக் கிடக்கும் ஒருவன் காரை ஓட்டிக்கொண்டு நாயகி வீடு வரை வருவது என்பது சினிமாவில் மட்டும்தான் முடியும். எத்தனை குத்து குத்தினாலும்... எத்தனை முறை சுட்டாலும் சாகாமல் வசனம் பேசும் கதாநாயகர்கள் இருக்கும் போது இதுவும் சாத்தியமே.

மேலே சொன்ன அனைத்தும் இந்த சினிமாவில் மட்டுமே சாத்தியம்.

படத்தில் நிறைய இடங்கள் சினிமாத்தனமானவை என்றாலும் சாதாரணக் கதையை அருமையான பாடல்களுடன் அழகாக நகர்த்திச் சென்று எல்லாரையும் கவர்ந்து விடுகிறார் இயக்குநர் சுந்தர்ராஜன். இவர் நிறைய நல்ல படங்களைக் கொடுத்தவர். தனது படங்களில் எல்லாம் ராஜாவின் இசைதான் ஒலிக்க வேண்டும் என்று நினைத்து அதைச் சாத்தியப்படுத்தியவர். தற்போது இயக்கியிருக்கும் படத்துக்கும் இளையராஜாதான் இசையமைக்க வேண்டும் என்று அவரையே இசையமைக்க வைத்துள்ளார். பின்னணி இசையில் ராஜாவின் ராஜ்ஜியம்தான்.

'ராகதீபம் ஏற்றும் நேரம்', 'மணியோசை கேட்டு எழுந்து', 'வைகறையில் வைகைக் கரையில்', 'ஏய் ஆத்தா ஆத்தோரமா', 'இளையநிலா பொழிகிறது', 'தோகை இளமயில்' என பாடல்கள் அனைத்தும் என்றும் எப்பொழுதும் கேட்கலாம். மொத்தத்தில் குறைகள் இருந்தாலும் எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கத் தூண்டும் காலத்தால் அழியாத படமாக பயணங்கள் முடிவதில்லை அமைந்துவிட்டது என்பது எல்லாரும் அறிந்ததே.
-'பரிவை' சே.குமார்.

18 கருத்துகள்:

 1. உங்கள் பார்வைக்கு மாற்றுக் கருத்து இல்லை!///எத்தனை குத்து குத்தினாலும்... எத்தனை முறை சுட்டாலும் சாகாமல் வசனம் பேசும் கதாநாயகர்கள் இருக்கும் போது....///ஹ!ஹ!!ஹா!!!நம்ம சாபக்கேடு!///சில மொக்கைப் படங்களும்,அந்தக் காலத்தில் சக்கை போடு போட்டதற்கு ராசையா(இளையராஜா)வின் இசையும் காரணமே!

  பதிலளிநீக்கு
 2. கோவைத்தம்பியின் படங்கள்
  இளையராஜா எனும் மாபெரும் தூண் கொண்டு
  நிறுத்தப்பட்ட படங்கள்..
  திரை இசையின் பொற்காலம்..
  இன்னும் எத்தனை தலைமுறைகள் கடந்தாலும்
  காலத்தால் அழியாத பாடல்கள்.
  விமர்சனம் நன்று சகோதரரே...

  பதிலளிநீக்கு
 3. அருமையான படத் தேர்வு .எனக்கு மிக மிகப் பிடித்த படங்களில் இதுவும் ஒன்று .இந்தப் படத்தினை நீங்கள் சொல்வது போன்று தான் ஒரு முறைக்குப் பல முறை
  நானும் பார்த்து மகிழ்ந்துள்ளேன் .பொதுவில் மோகன் நடித்த படங்கள் அனைத்தும் எனக்கு மிகவும் (இதயக் கோவில் ) பிடிக்கும் .இளையாராஜா ஐயாவின் பாடல்கள் எப்போதுமே மனதோடு ஒட்டிக் கொள்ளும் .மோகனும் அவரது இப் பாடகளுக்குத்
  தன் ஒட்டுமொத்த உணர்வினையும் வெளிக்காட்டி நடித்திருப்பது மிகவும் மனத்தைக் கவரும் படி தான் உள்ளது .அருமையான பகிர்வு .வாழ்த்துக்கள் சகோ சிறப்பான
  பகிர்வுக்கு .

  பதிலளிநீக்கு
 4. அத்தனை முறை பார்க்க முடியாது. ஆனால் கேட்க முடியும். பாடல்கள் அத்தனையும் அருமையான பாடல்கள். இதே கால கட்டத்தில்தான் கிட்டத்தட்ட இதே கதையம்சம் கொண்ட வாழ்வே மாயம் படமும் வெளி வந்து அதுவும் வெற்றி பெற்றது.

  பதிலளிநீக்கு
 5. பாடல்கள் எனக்கும் பிடித்த பாடல்கள். படம் முழுதும் பார்த்ததில்லை.... :)

  பதிலளிநீக்கு
 6. இனிமையான பாடல்கள்... எத்தனை முறை வேண்டுமேனாலும் பார்க்கலாம்... இப்போது தான் முழுதாக பார்த்துள்ளது வியப்பு தான்...! கவுண்டரின் ரகளை இந்த படம் முதல் தான் மிகவும் பிரபலம்...

  பதிலளிநீக்கு
 7. பாட்டு மட்டும் இல்லேன்னா, இது பப்படம் தான்.

  பதிலளிநீக்கு
 8. 1982களில் - எல்லோருடைய மனங்களையும் கவர்ந்த பாடல்களுடன் கூடிய படம். வித்தியாசமாக கவுண்டமணி அறிமுகம் ஆகியிருப்பார். முடிவு ரணப்படுத்தியதால் - ஒரு தடவையோடு சரி.. ஆனால் பாடல்கள் இன்றும் எனது ஒலிப்பேழைகளில்!...

  பதிலளிநீக்கு
 9. அருமையான படம் அருமையான பாடல்கள் இதை பற்றிய அருமையான பகிர்வு ரசிக்க முடிந்தது தொடர்ந்து இது போல் நம் நெஞ்சம் தொட்ட படங்கள் பற்றி எழுதுங்கள் குமார்

  பதிலளிநீக்கு
 10. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு

 11. வாங்க சகோ. யோகராஜா..
  தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  வாங்க மகேந்திரன் அண்ணா...
  உங்கள் கருத்து முற்றிலும் உண்மை.
  தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 12. வாங்க அம்மா...
  தாங்கள் சொல்லியிருக்கும் கருத்துக்கள் முற்றிலும் உண்மை.
  தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  வாங்க ஸ்ரீராம் அண்ணா...
  பாடல்களுக்காக பார்க்கலாமே...
  தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 13. வாங்க வெங்கட் அண்ணா...
  தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  வாங்க தனபாலன் சார்...
  தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 14. வாங்க சக்கரகட்டி...
  தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  வாங்க செங்கோவி...
  தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 15. வாங்க துரை அண்ணா...
  தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  வாங்க சரவணன் அண்ணா...
  தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 16. வாங்க செந்தில் அண்ணா...
  சினிமாவுக்கு மட்டுந்தான் கமெண்ட் வரும் போல...
  தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு

நட்பின் வருகைக்கு நன்றி..!

பகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...