மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 12 அக்டோபர், 2013

தொடர்கதை : கலையாத கனவுகள்

முந்தைய பதிவுகளைப் படிக்க...-----------------------------------------------------------------------

21. சொல்லிட்டாளே அவ காதலை...

முன்கதைச் சுருக்கம்: 

கிராமத்து ஏழைக்குடும்பத்துப் பையனான ராம்கி, கல்லூரி ரவுடி வைரவனின் தங்கை புவனாவுடன் நட்பாக பழகுகிறான்.  அக்காவுக்கு விருப்பமில்லாத மாப்பிள்ளையை பேசி வைத்திருக்கும் அம்மாவுடன் மல்லுக்கு நிற்கிறான். கல்லூரியில் வைரவனைத் தாக்க வந்தவர்களுடன் ஏற்பட்ட தகராறின் காரணமாக கெட்டபெயர் ஏற்படுகிறது. அவனுடன் தனியாகப் பேச ஐயா வீட்டுக்கு வரச் சொல்லும் புவனா அங்கும் பேச முடியாமல் போகவே சோகமாக கிளம்புகிறாள்.

இனி...


"ராம் ஒரு நிமிடம்" என புவனா அழைத்ததும் நின்று திரும்பிப் பார்த்தான்.

"சாரி"

"எதுக்கு?"

"இல்ல உங்ககிட்ட நிறைய பேசணுமின்னு நினைச்சுத்தான் இங்க வரச்சொன்னேன்... ஆனா பேசத்தான் இல்ல... அதுக்குத்தான்..."

"இதுக்கு எதுக்கு சாரி... இன்னைக்குப் பேசாட்டி இன்னொரு நாள் பேசினாப் போகுது... தினமும் பார்க்கிறோம்... அப்ப பேசிக்கலாம்... இதுக்காக முகத்தை சோகமா வச்சிக்கிட்டு சாரி எல்லாம் சொல்லிக்கிட்டு என்னாச்சுங்க உங்களுக்கு"

"ஒண்ணுமில்ல... சாரி சொல்லணுமின்னு தோணுச்சு... அதான் சொன்னேன்..."

"அதுக்காக இவ்வளவு சோகமா...? சும்மாவே சகிக்காது... சோகமா இருந்தா முடியலைடா சாமி..."

"என்ன சொன்னீங்க... சகிக்கலையா... கொழுப்பா..?" அடிக்கக் கையை ஓங்கினாள்.

"இதுக்குத்தான் சொன்னேன்... உங்களுக்கெல்லாம் சோகம் செட்டாகாது... இப்படி இருந்தா ஒகே..."

புவனா கையைத் தூக்குவதைப் பார்த்தபடி வந்த ஐயாவின் மனைவி "என்ன ரெண்டு பேரும் இன்னும் சண்டையை விடலையா?" என்றார்.

"இல்லம்மா... சும்மாதான்... கிளம்புறோம்மா..." என்றாள் புவனா.

"வர்றேம்மா... சரி புவனா வாறேன்..." என்றபடி சைக்கிளை எடுத்தான். எதுவும் பேசாமல் நின்று கொண்டிருந்தாள். அவன் கிளம்பிச் சென்ற சிறிது நேரத்தில் தனது சைக்கிளைத் தள்ளியபடி காம்பவுண்டை விட்டு வெளியே வந்தவள் அங்கே ராம்கி நின்று கொண்டிருப்பதைப் பார்த்ததும் பிரகாசம் ஆனாள். அதைக் காட்டிக் கொள்ளாமல் "என்ன போகலையா?" என்றாள்.

"இல்லை..."

"என்னாச்சு... சைக்கிள் பஞ்சரா...?"

"இல்ல உங்க முகமே சரியில்லை... அதான் என்னமோ மனசு கேட்கலை..."

"ஆத்தாடி... எனக்காக வருத்தப்படுறீங்க... ஆச்சர்யமா இருக்கு... கிளம்புங்க... ரோட்ல நாம பேசிக்கிட்டு நின்னா யாராவது பாத்துட்டு எங்க அண்ணன்கிட்ட சொல்லிட்டா பிரச்சினையாயிடும்... கிளம்புங்க..."

"பிரண்டோட பேச எதுக்குப் பயப்படணும்..? நான் பேசுறது விருப்பமில்லைன்னா கிளம்புறேன்..." என்றபடி பெடலை மிதித்தான்.

"அலோ... சொன்னதும் கிளம்புறீங்க... நீங்கதானே பேசப் பயப்படுவீங்க..."

"இப்ப பயப்படலையில்ல..."

"இப்ப ரவுடியில்ல... அதான் தைரியம் வந்திருச்சு..."

"சரி... ரவுடிக்கிட்ட என்ன பேச்சு.... நீங்க கிளம்புங்க..."

"ஸ்... அப்பா... கோபத்தை மூக்கு மேல வச்சிருப்பீங்களோ...? சரி வாங்க... பேசிக்கிட்டே போகலாம்..."

"சரி சொல்லுங்க... என்ன பேசணும்?"

"இதுக்குத்தான் நின்னீங்களா..?"

"ஆமா... உங்க முகமே சரியில்லை... அப்படியே விட்டுட்டுப் போக மனசு வரலை... என்னமோ தெரியலை நீங்க சோகமானதும் எனக்கு மனசு சரியில்லை... அதான்..."

"அய்யோடா... எப்பவுல இருந்து இப்படி... பரவாயில்லையே... நான் என்னமோ நெனச்சேன்..."

"எங்களுக்கும் மனசு இருக்கு... சொல்லுங்க..."

"ம்... சரி... வாங்க பேசிக்கிட்டே போகலாம்... ஆமா என்னப்பத்தி என்ன நினைக்கிறீங்க..?"

"உங்களப்பத்தியா... ம்... கல்லூரியின் பிரபல ரவுடியின் தங்கையாக இருந்தாலும் தவறு என்றால் முதல் ஆளாக தட்டிக் கேட்பவர், நல்ல படிப்பாளி, சிறந்த எழுத்தாளர்... எல்லாத்தையும்விட ரொம்ப துணிச்சலான பொண்ணு...."

"அம்புட்டுத்தானா... வேற..."

"வேற... ம்... இதுக்கு மேல ஒண்ணுமிருக்க மாதிரி தெரியலை..."

"உண்மையிலேயே அவ்வளவுதானா..?"

"என்னங்க நீங்க திரும்பத் திரும்ப கேட்கிறீங்க... பாத்தீங்களா இதை சொல்ல மறந்துட்டேன்... நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க.... அதுவும் அந்த மஞ்சள் சுடியில தேவதை மாதிரி இருப்பீங்க..."

இதைக் கேட்டதும் சிரித்தாள். அதானே பார்த்தேன்... எந்தப் பொண்ணுதான் தான் அழகின்னு சொல்லலைன்னு வருத்தப்படமாட்டாங்க... இதுக்குத்தானே அம்புட்டுத்தானா... அம்புட்டுத்தானான்னு கேட்டீங்க... இப்ப சந்தோஷமா..."

"உதைக்கப் போறேன்..." என்று கையை ஓங்கினாள். இவர்கள் இருவரும் பேசிக் கொண்டு போவதை போவோர் வருவோர் எல்லாம் ஒரு மாதிரி பார்த்துக் கொண்டு போக "என்னங்க எல்லாரும் ஒரு மாதிரி பார்க்கிறாங்க..." மெதுவாகச் சொன்னான் ராம்கி.

"பாக்கட்டும்... அதுக்கென்ன... இப்போத்தானே பயப்படமாட்டேன்னு சொன்னீங்க..."

"இல்ல சொன்னேன்... என்ன பேசணுமின்னு சொல்லவேயில்லை..."

"சொல்றேன்... என்னைப் பற்றி வேற ஒண்ணுமே நினைக்கலையா... இல்ல மறைக்கிறீங்களா?"

"...."

"என்ன பதில் வரலை... என்னாச்சு..?"

"உண்மையைச் சொல்லப் போனா மனசுக்குள்ள நிறைய இருக்கு... ஆனா குடும்பம் வாழ்க்கையின்னு போகும் போது நாம நினைப்பைவிட அதுதான் முக்கியமாப்படுது... எதுக்கு விடுங்க..."

"என்னன்னு சொல்லலாமே...?"

"ஒண்ணுமில்ல.. லேடீஸ் பர்ஸ்ட்... நீங்க என்ன பேசணும்... சொல்லுங்க..."

"அடேயப்பா... என்னமா பேச்சை மாத்துறீங்க... ம்.... சரி ராம்... எனக்குள்ள ஒரு மாற்றம்... என்னமோ தெரியலை நீங்க எங்கூடவே இருக்கணுமின்னு தோணுது..." பேச்சை நிறுத்தி அவனைப் பார்த்தாள்.

எதுவும் பேசாமல் வந்து கொண்டிருந்தான். "என்னாச்சு... நேரடியாவே கேட்கிறேன்... என்னை உங்களுக்குப் பிடிக்கலையா?... ப்ளீஸ் சொல்லுங்க..."

"அப்படியெல்லாம் இல்லைங்க..."

"அப்புறம் என்ன... நான் உங்களை விரும்புறேன்... உங்க மனசுல உள்ளதை சொல்லலாமுல்ல..."

"அது... எங்க குடும்பம் என்னை ரொம்ப நம்புது.... நாந்தான் குடும்பக் கஷ்டத்தைப் போக்கப் போறவன்னு அம்மா நினைச்சிக்கிட்டு இருக்காங்க... அது போக நீங்க வேற சாதி, நான் வேற சாதி, உங்க அண்ணனுக்குத் தெரிஞ்சா பெரிய பிரச்சினை வரும்... அது போக காலேசு படிக்கும் போது சுத்திட்டு அப்புறம் குடும்பச் சூழல் அது இதுன்னு விலகிப் போறது கஷ்டமா இருக்கும் இல்லையா..?"

"இங்க பாருங்க... நான் கடைசி வரைக்கும் நீங்க எங்கூட இருக்கணுமின்னு நினைக்கிறேன்... உங்களோட வளர்ச்சிக்கு நான் உறுதுணையா இருப்பேன். சாதி, மதம் பார்த்து லவ் வந்தா அதுக்குப் பேரு லவ் இல்லைங்க... அப்பா, அம்மா, அண்ணன், தம்பி, அக்கா, தங்கச்சி எல்லாரும் வேணுந்தான்... அதே மாதிரி நம்மளோட வாழ்க்கையை நாமளே தீர்மானிக்கணுங்கிறது என்னோட எண்ணம். அப்புறம் நாம் பேச்சிலர் டிகிரி முடிச்சிட்டு மாஸ்டர் டிகிரி பண்ணி வெளியாக இன்னும் வருசமிருக்கு... அதுக்கு அப்புறம் என்னால எப்படியும் போராடியாவது உங்களை அடைய முடியும்ன்னு நம்பிக்கை இருக்கு... உங்களுக்கு எப்படி..?"

"என்னாலயும் முடியும்... இருந்தாலும் யோசனையா இருக்கு.... இது சரிப்படுமா தெரியலை..." அவள் மீதான காதலைச் சொல்லத் தவித்த மனசை அடக்கி குடும்பச்சூழலே அவனுக்குள் எழுந்து நின்றது. இருந்தாலும் ஒரு பொண்ணே தைரியமா சொல்லும் போது இப்படி கோழையா நிக்கிறேனேன்னு அவன் மீது அவனுக்கே கோபம் வந்தது. 

"அப்ப யோசிச்சு சொல்லுங்க... ஆனா நல்ல முடிவா இருக்கட்டும்... நான் கிளம்புறேன்..."

"பு... புவனா..." என்றான்.

என்ன என்பது போல் அவனை ஏறிட்டாள். அவளைப் பார்த்தபடி " எத்தனை எதிர்ப்பு வந்தாலும் நான் உன்கூட இருப்பேன்" என்றான்.

"ஓ.... தாங்க்ஸ் காட்..." என்று கத்தினாள். மற்றவர்கள் திரும்பிப் பார்ப்பதைப் பற்றி கவலைப் படாமல் சைக்கிளை நிறுத்தி அவனருகில் வந்து அவனது கையைப் பிடித்து "ஐ லவ் யூ ராம்" என்றாள். அவளின் ஸ்பரிசம் அவனுள் மின்சாரமாய் பாய... "புவனா... நான் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறேன்..." என்றவன் " புவனா... இது நமக்குள்ள இருக்கட்டும்... இப்போதைக்கு யாருக்கும் தெரியாம இருக்கது நல்லதுன்னு நினைக்கிறேன்... என்ன சொல்றீங்க..."

அவன் கையை விடாது "ம்... எனக்கு அம்புட்டு சந்தோஷமா இருக்கு... எப்படிச் சொல்றதுன்னு தவிச்சேன்... அப்புறம் இதை ஏத்துக்காம நம்ம பிரண்ட்ஷிப்பையே கட் பண்ணிட்டீங்கன்னா என்ன பண்றதுன்னு தவிச்சேன்.... இன்னைக்கு ஐயா வீட்ல சொல்ல முடியலையேன்னு தவிச்சேன்... நீங்க கிளம்பியதும் இன்னும் கொஞ்ச நேரம் பேசி எப்படியாவது கேட்டிருக்கலாமோன்னு தவிச்சேன்... இதுவரைக்கும் தவிச்ச தவிப்புக்கு இப்போ சந்தோஷமா இருக்கேன்... தாங்க்ஸ் ராம்... ஐ ஆம் வெரி ஹாப்பி..." முகமெல்லாம் சந்தோஷமாகச் சொன்னவள் "இன்னும் எதுக்கு வாங்க போங்கன்னு.. வா போன்னு சொல்லுங்க.. இல்லைன்னா புவனான்னு கூப்பிடுங்க..."

"ம்... இன்னைக்கு ரொம்ப சந்தோஷமான நாள்... சரி நீ கிளம்பு... நல்லா இருட்டிருச்சு... நாளைக்கு காலேசுல பார்ப்போம்..."

"சரி... பை ராம்... சுவீட் ட்ரீம்ஸ்..."

"டேக் கேர் புவி... பை...."  என்றபடி அவன் கிளம்ப, அவன் புவி என்று அழைத்தது அவளுக்குள் சந்தோஷச் சாரலைத் தூவிச் செல்ல மகிழ்வுடன் சைக்கிளை மிதித்தாள்.

ராம்கி வீட்டிற்குச் சென்றதும்....

"என்னடா... எங்குட்டுப் போயி சுத்திட்டு வாறே... இம்புட்டு நேரமா?"

"ஐயா வீட்டுக்குப் போனேம்மா... கொஞ்சம் லேட்டாயிருச்சு..."

"அங்க அப்புடி என்னதான் இருக்கோ... எப்பப்பாரு ஐயா வூடு... ஐயா வூடுன்னு... பொம்பளப்புள்ளைங்களும் வருதுகளோ..?"

"அம்மா..." கத்தினான்.

"எதுக்குக் கத்துறே... எந்த வேலை கிடந்தாலும் ஐயா வூடு ஐயா வூடுன்னு கெளம்பிடுறியே அதான் கேட்டே..."

"போங்கம்மா... சும்மா நீங்க வேற... படிக்கிறதுக்குதான் போறோம்..."

"படிச்சாச் செரி... அண்ணன் லட்டரு போட்டிருக்கான்... உத்தரத்து மேல இருக்கு பாரு..."

"என்ன எழுதியிருக்கு?"

"பொங்கலுக்கு அடுத்த செவ்வாக்கெழம வருறானாம்... ஒன்னய பஸ்சு டேண்டுல வந்து நிக்கச் சொல்லியிருக்கான்..."

"பொங்கல் வந்துருச்சில்ல... ம்... அதெல்லாம் அவரு எப்பவும் வாற டயத்துக்கு கரெக்டா போயி  நின்னுடுவேன்" என்றபடி கடிதத்தைப் படித்தான். 

தே நேரம் புவனா வீட்டில்...

"இப்ப கை எப்புடிடா இருக்கு? " என்றபடி வைரவனுக்கு அருகில் வந்து அமர்ந்தாள் புவனா.

"இப்ப பரவாயில்லைடி... ஐயா வீடு போனியோ... இம்புட்டு லேட்டா வந்திருக்கே..?"

"ஆமா"

"ராம்கி வந்திருந்தானா?"

"என்ன திடீர்ன்னு அவனைப் பத்திக் கேட்கிறே..?"

"சாயந்தரமான அங்கதான் இருப்பானாம் அதான் கேட்டேன்..."

"வந்திருந்தான்... ஐயாக்கிட்ட பேசிக்கிட்டு இருந்தான்.... அதுக்கென்ன..." படக்கென்று கேட்டாள்.

"இப்ப எதுக்கு கோபப்படுறே... வந்தானான்னுதானே கேட்டேன்... சாயந்தரம் ஆஸ்பத்ரி போறேன்னான்... கட்டை அவிழ்த்துட்டாங்களான்னு கேட்க கேட்டா இம்புட்டு கோபம் வருது..."

"இல்ல கட்டுப் போட்டிருந்தான்... நான் எதுவும் கேட்டுக்கலை..."

"சரி... அவனோட ரொம்ப பிரண்ட்லியா இருக்காதே... நாளைக்கு பசங்க வேற மாதிரி பேச ஆரம்பிச்சிடுவாங்க..."

"அட்வைஸா... அது சரி... நீ முதல்ல இந்த ரவுடித்தனத்தை விட்டுட்டு கிடக்க அரியர்சை முடிக்கப் பாரு..." என்றபடி எழுந்தவள் 'பேசக்கூடாதா இப்ப அவன் என்னோட ஆளு..." என்று நினைத்து சத்தமாகச் சிரிக்க அவளின் சிரிப்புக்கு அர்த்தம் புரியாமல் வைரவன் அவளை ஒரு மாதிரிப் பார்த்தான்.

-(புதன் கிழமை தொடரும்)
-'பரிவை' சே.குமார்.

8 எண்ணங்கள்:

பெயரில்லா சொன்னது…

வணக்கம்
சே.குமார்(அண்ணா)
தொடருங்கள்..........கதை அருமை
வாழ்த்துக்கள்.

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

துரை செல்வராஜூ சொன்னது…

நண்பர்களின் எழுத்து எனும் பாசவலைக்குள் என்னையும் இணைத்தமைக்கு நன்றி.. இடையில் வந்தேனா!.. இந்த கலையாத கனவுகளை சற்று ஓய்வு கிடைத்ததும் வாசிக்க வேண்டு,. தவிர - தங்களின் நடை நன்றாக இருக்கின்றது. வாழ்க.. வளர்க!..

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

அருமை, தொடர்கிறேன்

Unknown சொன்னது…

ச்சீ............இந்தப் பொண்ணுங்களே இப்புடித்தான்.ஒரு ரகசியத்தக் காப்பாத்தத் தெரியல.கெக்கே,பிக்கே ன்னு என்ன சிரிப்பு?இப்ப பாரு......அண்ணன் கிட்ட மாட்டிக்கிட்டு முழிக்கப் போகுது.

இராஜராஜேஸ்வரி சொன்னது…

அருமையான கதை..

விஜய தசமி நல்வாழ்த்துக்கள்

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ரூபன்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.


வாங்க செல்வராஜூ அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சகோ யோகராஜா...
தொடர்ந்து கருத்துக்களை அளித்து வரும் தங்களுக்கு நன்றி.
என்னதான் இருந்தாலும் விரும்பியன் காதலை ஏற்றுக்கொண்ட சந்தோஷத்தில் என்ன செய்வது என்று தெரியாதல்லவா...
விடுங்க பொட்டப்புள்ள பொயிட்டுப் போகுது...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஜெயக்குமார் அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க இராஜராஜேஸ்வரி அம்மா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.