மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

ஞாயிறு, 15 செப்டம்பர், 2013

மனசு பேசுகிறது : நட்புக்கள்

இந்த நட்புக்களுக்குள் இருக்கும் ஒரு வேசமற்ற பாசம் உறவுகளுக்குள் இருப்பதில்லை. உறவுகளிடம் பேசும் போது உதடு சிரித்தாலும் உள்ளுக்குள் சில கசப்புக்கள் கொதித்துக் கொண்டுதான் இருக்கும். இங்கு நாம் உறவுகளைப் பற்றிப் பேசப் போவதில்லை. நட்புக்களைப் பற்றி மட்டுமே பேசப் போகிறோம்.

அவனும் நானும் கல்லூரிக்கு வருவதற்கு முன்னர் பார்த்திருக்கிறோம். பழகியதில்லை... கல்லூரியில் இருவரும் வேறு வேறு துறையில் படித்தாலும் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரண்டு வகுப்புக்களுக்கு மட்டும் எங்களது வகுப்புக்களை மற்றொரு வகுப்புடன் ஒன்றாக இணைத்து வைத்து நடத்துவார்கள். அதில்தான் அவனுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு ஏற்பட்டது. பின்னர் இருவரும் ஒன்றானோம். படிப்பு முடிந்தும் அது தொடர்ந்ததற்கு முக்கிய காரணம் இருவரும் வேலை தேடி வெளியில் செல்லாமல் படிப்புக்காக ஊரிலேயே இருந்ததால் ஐயா வீடு, தாமரை, செம்மலர், சுபமங்களா விநியோகம்  என இருவரும் சைக்கிளில் சுற்றிக் கொண்டே இருப்போம்.

பின்னர் அவனது காதல் சில பிரச்சினைகளால் அடிதடி வரை போனபோது அவனுக்கு பின்னால்... அவனுக்கு உறுதுணையாய் நான் இருந்தேன். காதல் பிரச்சினையில் அவனை சிங்கப்பூருக்கு அனுப்பினார்கள். எப்பவாவது கடிதம் போடுவான். அவங்க வீட்டுக்கு அருகில் இருக்கும் தீயணைப்பு நிலையத்துக்கு என்றாவது போன் பண்ணுவான். அவங்க அப்பா, அம்மா பேசும் போது சிலசமயங்களில் நானும் பேசுவேன். அப்படியே ஓடிக் கொண்டிருந்தது.

மீண்டும் திரும்பி வந்தபோது என்னுடன் பழையபடி நட்பு பாராட்டினான். அவனது திருமண வேலைகளில் எனக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்தான். எல்லா வேலைகளையும் நண்பர்களுடன் சேர்ந்து பார்த்தோம். திருமணத்தன்று மொய் எழுதும் பணியை என்னிடம் ஒப்படைத்தான். எனக்கு வேலைகள் இருந்ததால் எனது நண்பர்களிடம் கொடுத்துவிட்டேன். அவர்களும் ரொம்ப சிரத்தையுடந்தான் செய்தார்கள். அவனின் அப்பா வும் சில உறவுகளும் கல்யாண வேலை என அடிக்கடி பணம் கேட்டு வாங்க, எப்படியோ கணக்கை விட்டுவிட்டார்கள்.

எல்லாம் முடிந்து தொகையை கூட்டும் போது ஐயாயிரம் ரூபாய்க்கு மேல் குறைந்தது. நண்பர்களுக்கு வருத்தம் எப்படி விட்டோம் என்று புலம்ப ஆரம்பித்தார்கள். என்னிடம் கொடுத்து  எப்படியாவது ரெடி பண்ணி நாளைக்கு கொடுத்துடுவோம்... நாளைக்கு கணக்குப் பார்ப்போம் என்றனர். நானும் மணமக்களுடன் வீட்டுக்குப் போன என் கையில் பெட்டி. அதை எதுக்கு தூக்கிக்கிட்டே திரியிறே... அங்கிட்டு வச்சிட்டு வாடா என்றான். இல்லடா என்று சொல்லி விவரம் சொன்னேன். சரி அதுக்கு அவனுக பணம் போடுறாங்களாமா... நல்லா இருக்கு கதை... சும்மா உள்ள வையிடா என்றான். ஆனா அவனோட அப்பா, நான் சொன்னதைக் கேட்டாரா இல்லையான்னு தெரியலை... ஆனா கணக்குப் பாக்கனுமின்னு ஒத்தைக் காலில் நின்றார். கணக்குப் பார்த்தால் யார் வாங்கினார்கள் என்பது தெரியாது... எழுதிய நண்பர்கள்தான் அசிங்கப்படணும்... என்ன செய்வது என்று யோசித்தபோது 'குமார் மேல எனக்கிருக்க நம்பிக்கை மாதிரி எழுதின நண்பர்கள் மேலயும் இருக்கு... அடிக்கடி பணம் வாங்குன நீங்க எவ்வளவு வாங்குனீங்கன்னு தெரியுமா... தெரியாதுல்ல... எல்லாம் என்னோட காசுதானே... இதுல கணக்குப் பாக்க என்ன இருக்கு எதுவா இருந்தாலும் நாந்தானே பாக்கணும்... அப்புறம் பார்த்துக்கிறேன்னு சொல்லி சாமி அறையின் மேல் இருக்கும் பரணில் தூக்கிப் போட்டுவிட்டான். கடைசி வரை கணக்குப் பார்க்கவே இல்லை.

அப்படிப்பட்ட நட்பில் சில காலம் விரிசல் வந்தபோது இருவரும் அதிகம் சந்திக்க வாய்ப்பில்லை... இப்போது மீண்டும் அதே பழைய பாசத்துடன் குடும்ப உறவு வழுத்திருக்கிறது. என் மகன் மாமா என அவனுடன் ஒட்டிக் கொள்கிறேன்.

என்னுடன் தம்பியாகப் பழகி, எனக்கு கஷ்டங்களில் எல்லாம் தோள் கொடுத்துக் கொண்டிருக்கிறான் ஒருவன். பாப்பா வயிற்றில் இருக்கும் போது என் மனைவி அடிக்கடி மயங்கி விழுந்து என்னைப் பயமுறுத்திவிடுவார். உறவுகள் உதவி இன்றி தனியாளாய் தவிக்கும் போது இரவு 12 மணியாக இருந்தாலும் ஹாஸ்பிடல் போகணுமின்னு போன் செய்தால் அந்த இரவிலும் பணத்துடன் வந்து குளுக்கோஸ் ஏறும் வரை என்னுடன் ஹாஸ்பிடலில் விடியவிடிய  இருந்து செல்வான். இன்றும் என் மனைவி எந்த உதவி என்று போன் பண்ணினாலும் இந்தா வாறேன் அண்ணி என்று ஓடோடி வருகிறான்.

மற்றொருவன் இணையம் மூலமாக நெருங்கினான். நான் ஒருமுறை ஊருக்குச் சென்ற போது தீடீரென என்னைச் சந்திக்க வந்தான். முன்பின் பார்க்காத முகமறியாத நட்பு.... என்னுடம் ஒரு தினம் இருந்தான். அவனை நன்றாக கவனிக்கவில்லையே என்ற கவலை எனக்குள் இன்றும் உண்டு. இருந்தும் அவன் இப்பவும் என்மீது பாசமாய் இருக்கிறான். உரிமையோடு பேசுகிறான்..

இதேபோல் நிறைய நட்புக்கள்... எங்கிருந்தோ வந்து ஒன்றாகப் படித்து ஒன்றாக சாப்பிட்டு... உறங்கி... சந்தோஷப்பட்டு... எல்லாமாக இருந்த நட்புக்கள் எல்லாம் எங்கெங்கோ சென்றாலும் மனசுக்குள் நட்பின் வேரை ஆழமாக ஆழமாக ஊன்றி வைத்திருக்கிறார்கள். எப்போது அவர்களைப் பார்த்தாலும் துளிர்த்துவிடும். எனது நண்பர்களைப் பற்றி நண்பேன்டா என்ற தலைப்பில் ஒவ்வொருவராய் வலம் வரச் செய்யலாம் என்று இருக்கிறேன்...

-மனசு தொடர்ந்து பேசும்...
-'பரிவை' சே.குமார்.

12 எண்ணங்கள்:

Unknown சொன்னது…

நண்பர்களைப் பற்றி தீயாய் எழுதுங்க குமாரு !நாங்களும் நாலு நல்லவங்களை தெரிஞ்சுக்குவோம்!

கோமதி அரசு சொன்னது…

நட்பு வாழ்க!

இராஜராஜேஸ்வரி சொன்னது…

மனசுக்குள் நட்பின் வேரை ஆழமாக ஊன்றி வைத்திருக்கும் நட்பினைப்பற்றிய அருமையான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

உயிர் காப்பான் தோழன்
என்று கூறுவார்கள்
நட்பிற்கு ஈடு இணை
ஏதுமில்லை இவ்வுலகில்
நன்றி

வெங்கட் நாகராஜ் சொன்னது…

உங்கள் நட்புகளைப் பற்றி பகிர்ந்துகொளவது குறித்து மகிழ்ச்சி.

நட்பு பற்றிய உங்கள் கருத்தும் நன்று.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

நட்பை துயரத்தில் கண்டு கொள்ளலாம்... தொடருங்கள்...

மனோ சாமிநாதன் சொன்னது…

நட்பு என்பதுமே நல்ல வகையில் சுயநலக்கலப்பு எதுவுமின்றி, வேஷங்கள் எதுவுமின்றி அமைய வேண்டும்! அப்படி அமையப்பெற்ற‌வர்கள் கொடுத்து வைத்தவர்கள்!!

இளமதி சொன்னது…

மிகமிக அருமையான பகிர்வு.

தொடருங்கள்....

வாழ்த்துக்கள்!

அனிதா ராஜ் சொன்னது…

மிகவும் அருமையாக இருந்தது படிப்பதற்கு.......

தங்கை பதிவியிலிருந்து தோழியா மாறிடலாமுனு முடிவே பண்ணிட்டேன்.

”தளிர் சுரேஷ்” சொன்னது…

நட்பை சிறப்பிக்கும் நல்லதொரு பகிர்வு! நன்றி!

SNR.தேவதாஸ் சொன்னது…

வாழ்க்கைத் துணையை பழகி பார்த்து தேர்ந்தெடுக்க முடியாது.
ஆனால் நட்பை பழகி பார்த்து தேர்ந்தெடுக்கலாம்.
பல முரண்பாடான கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு அதையும் கடந்து மனது பக்குவம் அடைந்து அதன் பின்னும் நிற்கும் நட்பு குடும்ப உறவாக மாறிவிடும்.பெரும்பாலும் ஒரு நட்பை உடைப்பது பொருளாதாரம் தான்.
தங்களது நட்பு அதையும் உடைத்து நீடித்து இருப்பது மிகுந்த மன நிறைவு உள்ள விசயம்.
வாழ்க வளமுடன்
கொச்சின் தேவதாஸ்

கலையன்பன் சொன்னது…

நண்பர்களைப் பற்றி சொல்லப் போறீங்க...
அதற்கான முன்னூட்டமே நல்ல நட்புகளை
ஆவலுடன் எதிர்பார்க்க வைத்துவிட்டது.